JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

Meera (Mithra) - Episode 12

JLine

Moderator
Staff member
மீரா (மித்ரா)

The Eternal Echoes of Her Heart!

அத்தியாயம் - 12

********************

கட்டிலில் சாய்ந்திருந்த ஆர்யா மெள்ள கண்களை மூட, இறுக்க மூடிய கண்களின் பின்னாலும் தெரிந்த மித்ரலட்சுமியின் உருவத்தில், அந்த இருள் கூட அவனுக்கு அமைதியை தரமறுத்தது.

அவளது கலங்கிய கண்கள்! நடுங்கிய உதடுகள்! தன்னை விட்டு விலக முயன்ற அவளது துடிப்பு! அனைத்துமே மாற்றி மாற்றிக் காட்சிகளாகத் தோன்றியதில் ஆணவனின் உள்ளத்தில் ஒரு குழப்பக் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அதற்கு மேல் தாங்க முடியாது, "Damn it…” என்றவாறே எழுந்து அமர்ந்தவன், “இது நான் இல்ல… இது நிச்சயமாக நான் இல்ல…” என்று தனக்குத் தானே பேசி தன்னையே நம்ப வைக்க முயன்றான்.

ஆனால் 'அப்படின்னா நீ யார்?' என்று உள்ளுக்குள் ஒரு குரல் கம்பீரமாய் ஒலித்து அவனை அடக்கியது!

அந்தக் குரலை பலமுறை அவன் கேட்டிருக்கின்றான், ஆனால் நேரிடையாக அல்ல, மானசீகமாக! கடந்த சில மாதங்களாக அவன் மனக்கண்களின் முன் தோன்றும் காட்சிகளில் இரத்தக்களறியில் போர்களத்தில் மடிந்துப் போகும் இளம் வீரன் ஒருவனின் ஆளுமையான குரல் அது.

அதனில் திடுக்கிட்டவன் கண்களை விழிக்க, அந்தக் கேள்வியும் அந்தக் குரலும் அவனை அலைக்கழிக்கத் துவங்கியது.

வாழ்நாளில் எதையும் இப்படி நெடுநேரமாய், அதுவும் மனக்குழப்பத்துடன் ஆர்யா சிந்தித்ததே இல்லை. அவன் முடிவெடுத்தால் அதுவே இறுதி முடிவு. அவனது உணர்ச்சிகள் அவனை எள்ளளவும் ஆட்சி செய்ய அவன் விட்டதே இல்லை.

ஆனால் இப்பொழுது ஒரு பெண், அதுவும் அவன் வாழ்நாளில் முதன்முறையாகச் சந்தித்த பெண்.. அதுவுமின்றி அவன் விருப்பமில்லாமல் நடந்த ஒரு நாடகத் திருமணத்தில் அவனுடன் இணைந்தவள். அவனது மனதை இவ்வளவு எளிதாகக் குழப்பிவிடும் சக்தி அவளுக்கு இருக்கின்றதா?

தாங்க இயலாத கோபத்தில் கட்டிலைவிட்டு எழுந்து நின்றவன் குறுக்கும் நெடுக்குமாக அறை முழுமையிலும் நடக்க, தன்னைத் தானே நொந்து கொள்ளும் இயலாமை அவனை மேலும் மேலும் ஆத்திரப்படுத்தியது.

அதே நேரம் அவனது அடிமனத்தில் சில நியாயங்கள் அவனுக்குள் அவன் விரும்பாமலேயே ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்ததை அவன் அந்த நேரம் உணரவில்லை.

பூவரசம்பட்டியில் மித்ரலட்சுமியை பார்த்த முதல் நொடியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் துவங்கி, இன்று காலை அவள் அருகில் நெருங்கியபொழுது ஏற்பட்ட அமைதியின்மையும், அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்த பொழுது தோன்றிய பரவசமும், சற்று முன் அவளைத் தழுவிய அந்தக் கணங்களில் ஏற்பட்ட அந்தப் புதிய நெருக்கமும் உரிமை உணர்வும் எங்கிருந்து வந்தது?

இவை எதுவும் சாதாரண ஈர்ப்பு அல்லவே!

ஆனால் 'இந்தக் மேரேஜ், மனைவிங்கிற இந்த உறவு, எல்லாமே ஒரு arrangement தான். அதற்கு மேல் எதுவும் இல்ல.' என்று திரும்பத் திரும்ப மனம் அசைப்போட, வலது கை முஷ்டியை இறுக்கியவனாய் முழு ஆவேசத்துடன் சுவரில் ஓங்கிக் குத்தினான்.

அவனது வலிமையான தேகத்தின் தாக்கத்தில் கனமான அந்தச் சுவரில்கூடச் சிறிய விரிசல் விட, ஆனால் ஓங்கி குத்தியதில் ஏற்பட்ட வலி கூட அவனுக்கு ஆறுதலாய் இருக்க, ஆயினும் அவனது உள்ளத்துக் கதறல்களை மேலும் வீரியமாக்கும் வகையில் அதே வார்த்தைகளே அவனுக்குப் பொய்யாகத் தோன்றின.

என்னத்தான் தன்னையே சமாதனப்படுத்த முயன்றாலும், சற்று முன் நடந்ததை எவ்வளவு மறக்க முயன்றாலும், மித்ரலட்சுமியின் கண்களில் தெரிந்த வலி அவனை விட்டு நீங்க மறுத்தது.

“என்னையே என்னால புரிஞ்சுக்க முடியல,” என்று கடித்த பற்களுக்குள் முணுமுணுத்தவனாய் கட்டிலில் தொப்பென்று விழுந்தவன், சிறிது சத்தமாக, “Enough… இதுக்கு மேல நான் அவள் இருக்குமிடம் கூடப் போகக் கூடாது. கூடிய சீக்கிரம் அவளுடைய மாமன்களை விரட்டி அடிச்சப் பிறகு இவளையும் இந்த வீட்டைவிட்டு மட்டும் இல்ல, என் வாழ்க்கையைவிட்டும் வெளியேற்றனும். அது வரை நான் என்னைக் கன்ட்ரோல் பண்ணிக்கணும்.” என்றவனாய் தனக்குத்தானே உறுதிமொழி எடுத்துக் கொண்ட அதே நேரம், மற்றொரு அறையில் கதவை தாழிட்டவளாய் மித்ரலட்சுமி சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.

அவளது இதயம் படபடவெனத் துடித்ததில் மார்பு வேகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

தன் மார்பினை மெல்ல நீவியவள் குனிந்துக் கைகளைப் பார்க்க, இன்னும் ஆர்யாவின் தொடுதலின் வெட்பம் அவளது தோலில் பதிந்திருப்பது போல் உணர்ந்ததில் கண்களை இமைக்கக் கூட அவளுக்கு மனம் இடங்கொடுக்கவில்லை.

பல நிமிடங்கள் உறுத்து கரங்களையே பார்த்திருந்தவளின் உள்ளமோ, 'என் விருப்பமே கேட்காமல் நடந்த கல்யாணம் இது. நான் ஒத்துக்கவே இல்லாத உறவு இவருடையது. அப்படி இருக்கும்போது எப்படி நான் இதுக்குச் சம்மதிச்சேன்?' என்று வேதனையில் உழன்றதில் கண்ணீர் தானாகவே அவளது கண்களில் திரண்டது.

அதே நேரம் இன்னொன்றும் அவளுக்கு உறுத்தியது.

துவக்கத்தில் அவனைவிட்டு நகரப் போராடியவள் சற்று நேரத்தில் எல்லாம் அவனது ஒவ்வொரு செய்கைக்கும் இசைந்தவளாய் அவனுக்குள் உருகி நின்றாள்.

நெடு நேரம் தொடர்ந்த அந்த ஸ்பரிச வேட்டையில் அவள் அவனைத் தள்ள கூட முயற்சிக்கவில்லை. ஏறக்குறைய அவளைக் கட்டிலில் கிடத்த அவன் எத்தனித்த வேளையிலேயே சுயநினைவுப் பெற்றவளாய் அவனைத் தள்ளிவிட்டாள்.

இது பொய்யும் அல்ல, கற்பனையும் அல்ல! உண்மை!!

இந்த உண்மைகள் அவளை உடைத்துப் போட, அதே நேரம் அவளது விரல்கள் தானாகவே அவளது கழுத்தைத் தொட்டதில் காலையில் அவன் அணிவித்த மாங்கல்யம் அவளது கைக்கு வித்தியாசமாய் ஆறுதலாக இருக்க, அந்தப் பரவசம் அவளது மூச்சையே ஒரு நொடி நிறுத்தியது.

ஆக, நான் இவரை நேசிக்கின்றேனா? இவரை நான் பார்த்து ஒரு நாள் கூட ஆகவில்லை, அப்படியெனில் எப்படி நான் இவரை நேசிக்க முடியும்?

அந்தச் சின்னப் பெண்ணால் விடை மட்டும் கண்டறிய முடியவில்லை.

அதற்குள் ஏறக்குறைய கதிரவனும் ஆகாயத்தை நோக்கி தன் கதிர்களை மெள்ளமாய் விரிக்கத் துவங்க, எழுந்தவள் கட்டிலில் விழுந்தவளாய் விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு கிடக்க, சில மணி துளிகள் கழித்துக் கண்கள் தாமாக மூடின.

ஆனால் திடுமென மீண்டும் 'மித்ரா' என்று யாரோ தன்னை அழைப்பது போல் தோன்ற, திடுக்கிட்டவள் எங்கு ஆர்யா மறுபடியும் அறைக்குள் வந்துவிட்டானோ என்ற அச்சத்தில் அரக்கப்பரக்க எழுந்து அமர, சுற்றுமுற்றும் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

தன்னை அந்நாள் வரை மித்ரா என்று அழைத்திருந்தது இருவரே.

ஒன்று ஆருஷ். அவன் இங்கு வருவதற்குச் சாத்தியமே இல்லை.

அடுத்தது சற்று முன்னர்த் தன்னை ஆட்கொள்ள முயன்றுவிட்டுப் பின் தன் தவறை உணர்ந்தது போல் ஆங்காரத்துடன் இந்த அறையைவிட்டுச் சென்றிருந்த அவளது கணவன் ஆர்யாதித்யா. அவன் இப்பொழுது இங்கு இல்லை!

அதுவுமில்லாது இப்பொழுது என்னை மித்ரா என்று அழைத்துக் கொண்டிருப்பது புத்தம் புதிதாக, இதுவரை நான் கேட்டிராத குரலாகத் தெரிகின்றதே. அக்குரலுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லையே!

இது எப்படிச் சாத்தியம்?

ஒருவர் இருவராகப் பின் அவர்களே மூவராக, ஏதேதோ காட்சிகள், ஆனால் மூவருக்கும் ஒரே முக அமைப்புகள். கடவுளே! என்ன இது?

பெருங்குழப்பத்தில் மனம் ஆழ, பதில் தெரியாது தத்தளித்தவளாகக் கைகள் இரண்டையும் கன்னத்திற்குக் கீழ் கொடுத்து ஒருக்களித்து மீண்டும் வெகுசிரமப்பட்டு விழிகளை மூடியவளுக்கு ஏனோ அனைத்துமே கனவாக இருக்க வாய்ப்பே இல்லையென்றே தோன்றியது.

அமைதியை நாடிய மனதைக் கட்டுப்படுத்த வழியறியாமல் பிடிவாதமாய் உள்ளத்தைச் சாந்தப்படுத்த முயற்சிக்க, ஆனால் அந்த வீட்டில் உறங்க துடித்த இரு இளம் இதயங்களின் மேலும் நித்திராத் தேவி சிறிதும் இரக்கம் காட்டவில்லை.

அவள் இரக்கம் கொள்ளாதது இந்த இரு உள்ளங்களிடம் மட்டுமா? இல்லை.. நெடுந்தூரத்தில் மேலும் இரு இதயங்கள் தவித்துக் கொண்டிருந்தன.

ஒருவன் தன் உணர்வுகளை மறைக்கப் போராடினான் - ஆர்யாதித்யா

மற்றொருவன் தோல்வியை ஏற்றுக்கொள்ள மனம் விரும்பாது அலைப்பாய்ந்து கொண்டிருந்தான் - ஆருஷ் ஆதித்யா

ஒருத்தி தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளப் பயந்தாள் - மித்ரலட்சுமி

புதியவனோ, அந்த விமானத்தில் அமைதியின்றித் திணறிக் கொண்டிருந்தான்- அவன்??

உறக்கமில்லாது அவர்கள் தவித்த அந்த இரவு அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றும் ஆரம்பமாக உருவாகிக் கொண்டிருந்ததை அவர்கள் அறியாமல், அன்றைய ஒரு நாள் நிகழ்வில் தத்தளித்திருந்தார்கள்.

********************************************

அத்துடன் நாட்களும் நகர ஆரம்பித்தன.

ஆர்யாவிற்கும் மித்ரலட்சுமிக்கும் திருமணம் நடந்து ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், நான் ஏன் அன்று அவளது அறைக்குச் சென்றேன் என்று இந்நிமிடம் வரை ஆர்யா குழம்பியிருந்தான் என்றால், எனக்கும் அவளுக்கும் திருமணமே நடைப்பெறாத நிலையில் நான் ஏன் அவள் என் வீட்டிலேயே இருப்பது போல் அவள் பெயர் சொல்லி அழைத்தேன் என்று ஆருஷ் விடையறியாமல் திகைத்து இருந்தான்.

ஆயினும் ஒரு வாரம் முழுவதும் கடந்தும், ஆர்யாவிற்கும் ஆருஷுக்கும் கேள்விகள் மட்டும் பெருகிக் கொண்டே இருக்க, அவர்கள் தேடிய பதில்கள் மட்டும் கிடைக்கவில்லை.

அதே சமயம் ஆர்யாவின் திருமணம் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து கொதித்துக் கிடந்த இஷானி மேத்தாவின் மனம் அதற்கு மேல் தாங்க இயலாது திணறிக் கொண்டிருந்தது. அவனைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு முறையும் அவள் கண்களில் பொறாமையும் கோபமும் கலந்த தீப்பொறிகள் மின்னின.

“அவன் எப்படி இப்படி முடிவு எடுத்தான்??”

தனக்குத்தானே பல நூறுமுறைகள் அவள் கேட்டுக் கொண்டிருக்க, பள்ளிக்காலங்கள் தொட்டு அவனைப் பற்றி அறிந்திருந்தாலும், புத்திசாலித்தனமாக விடையளிப்பதற்குப் பதிலாக அவளது மூளை அவளுக்குள் இருந்த உணர்ச்சிகளை ஆக்ரோஷமாகத் தூண்டி எழுப்பிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், மகளின் தவிப்பைக் காண இயலாத இஷானியின் தந்தை, இறுதியாக ஆர்யா உண்மையிலேயே தனது மனைவியை நேசிக்கிறானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், பிறகு அவன் விஷயத்தில் ஒரு முடிவு எடுப்போம் என்று எண்ணியவராய் கடுமையான ஒரு திட்டத்தைத் தீட்டினார் என்பதை நாம் அறிவோம்.

அதற்காக அவர் தீட்டிய திட்டம் மித்ரலக்ஷ்மியை காயப்படுத்துவது, அதுவும் அதை ஒரு விபத்து போலக் காட்டுவது.

அவரது கட்டளையின் படி அவரது அடியாட்கள் ஆர்யாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆர்யா அவன் மனைவியான மித்ரலக்ஷ்மியிடம் எந்த அக்கறையும் காட்டவில்லை என்பதைத் திருமணம் முடிந்த மறுநாளில் இருந்து ஏறக்குறைய இருபத்தி நான்கு மணி நேரமும் அவன் அலுவலகத்தில் செலவிடுவதிலேயே உறுதிப்படுத்தப்பட்டது.

அப்படி என்றால் அவன் விரும்பி அவனது திருமணம் நடைப்பெறவில்லை.

ஆக மித்ரலட்சுமி இல்லையென்றால் என் மகள் இஷானிக்கு ஆர்யாவின் வாழ்க்கையில் இணையும் வாய்ப்பு இருக்கின்றது. விவரம் அறிந்த விநாடியில் இருந்து நீண்ட நேரம் யோசித்த அமித் மேத்தாவிற்கு ஒரு வழித் தெரிந்தது.

அதன்படி அவர் தீட்டிய திட்டத்தையும் செயலாற்ற துவங்கினார்.

ஆனால் அது ஆர்யாவை அவனுடைய மனையாளைவிட்டு பிரிப்பதற்குப் பதிலாக, காதலே இல்லாது அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தவனுக்கு மனைவியின் மீது தீராத காதலை உருவாக்கப் போகின்றது என்பதை அறியாது.

அதுமட்டும் அல்ல, அன்று அவர் மட்டுமல்ல, வேறு எவருமே எதிர்பாராத விதத்தில் அவர்களது வாழ்க்கையில் ஒருவன் புகப் போகின்றான் என்பதையும், அவனால் பலரது விதி கோர ஆட்டம் ஆடப்போவது என்பதையும் ஒருவரும் அறியவில்லை!

முடிவு நம் நாயக(ர்கள்) நாயகிக்குச் சுபமாக இருக்குமா?

******************************

ITC Maurya

2026-ஆம் ஆண்டில், புதுத் தில்லியில் முன்னணி வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்களுக்கான மிக முக்கிய நிகழ்வாக, தேசிய அளவிலான மற்றும் பெருந்தொழில் வளர்ச்சி மீது கவனம் செலுத்தும் நிகழ்ச்சி ஒன்று நகரத்தின் மிகப் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலான ITC Maurya-வில் நடைபெறவிருந்தது.

புதுதில்லி மட்டுமல்லாது, இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் இருக்கும் முன்னணி தொழிலதிபர்கள், பெருநிறுவன தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் விழாவின் அழைப்பிதழ்கள் சென்றிருந்தன.

அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது மேத்தா குடும்பம்.

அதேப்போல் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த Dev Technologies-ன் சார்பாகச் சந்தியா உட்பட ஆர்யாதித்யா தேவனுக்கும், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் A.A. Group of Companies-ன் அபார வளர்ச்சியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வந்த ஆருஷ் ஆதித்யாவிற்கும், அந்த நிகழ்விற்கான சிறப்பு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தன.

அதன்படி அனைவருமே கூட்டத்திற்குச் செல்ல முடிவெடுத்திருந்தனர்.

அதே சமயம் அந்த அழைப்பிதழ் ஆர்யாவின் வீட்டில் புயலை கிளப்பியது.

கணவன் மகாதேவனின் உடல்நிலை சரிவின் நேரம் ஆர்யா தொழிற்களில் முக்கியப் பங்கு வகிக்க ஆரம்பிக்க, அதன்பிறகு தொழில் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டாமல் விலகியே இருந்த சந்தியா, ஏனோ அந்த அழைப்பிதழைக் கண்டதும் விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்தார்.

அவர் மட்டும் அல்ல, மருமகள் மித்ரலட்சுமியையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பினார்.

அதற்குக் காரணம் இந்த வீட்டிற்குப் புதிதாக வந்திருந்த மருமகள் மித்ரலட்சுமியும் அந்த உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அவரது விருப்பத்தைக் கேட்டதும், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் உடனே எதிர்த்தான் ஆர்யா. அன்னையிடம் தனது மறுப்பை அடாவடியாக வெளிப்படுத்தியவன், அதற்கான காரணங்களைச் சொல்லத் தொடங்க, இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தை மெதுவாக வாக்குவாதமாக மாறியது.

முதலில் அமைதியாகத் தொடங்கிய அந்த உரையாடல், நொடிகள் செல்லச் செல்ல அதன் தீவிரத்தை இழக்காமல் கடுமையாக வெடித்தது.

ஆனால் அந்த அறையில் நடந்து கொண்டிருந்த அந்த மோதலின் ஒவ்வொரு வார்த்தையும், அவர்களுக்குத் தெரியாமல் வேறொரு அறையில் இருந்த மித்ரலட்சுமியின் காதுகளையும் சென்றடைந்ததை அவர்கள் உணரவில்லை. அபிலாஷுடன் விளையாடிக் கொண்டிருந்தவள், ஆரம்பத்தில் அது சாதாரணமான உரையாடல் என்றே நினைத்திருந்தாள்.

ஆர்யாவின் குரலில் இருந்த இறுக்கமும், சந்தியாவின் வார்த்தைகளில் இருந்த வருத்தமும் மித்ரலட்சுமியின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் தெளிவாக அவளிடம் சென்றடைய, தங்கள் இரகசியம் பாதுகாப்பில் இருப்பதாக நினைத்த இருவருக்கும் தெரியாமல், அந்த வார்த்தைகள் அவளது மனதை வெகுவாய் காயப்படுத்தின.

“இந்த ஈவென்ட் பற்றி எல்லாம் அவளுக்கு என்ன மாம் தெரியும்? எதுக்கு அவளையும் கூடக் கூட்டிட்டுப் போகணும்ன்னு இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீங்க? உங்களை மட்டும் தான் இன்வைட் பண்ணிருக்காங்க. ஸோ, நீங்க மட்டும் வாங்க, போதும்.”

ஆர்யா ஆங்காரத்துடன் கூற, "இந்த ஈவென்ட் பற்றி அவளுக்கு இப்போ தெரியாது ஆர்யா, ஆனால் அவள் உன்னுடைய மனைவி. அதுவும் சட்டப்படி நீ திருமணம் செய்து கொண்டவள்." என்று அவனது அதிகாரத்திற்கு ஈடான குரலில் விடையளித்தார் சந்தியா.

"வாட்?"

சட்டப்படி என்ற வார்த்தையை உபயோகித்ததுமே அவனது கோபம் மென்மேலும் எகிர, அதனை உள்ளுக்குள் இரசித்தவராய் உண்மையை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும் என்று அவரது மகனின் அடங்காத்தனம் புரிந்தும் முயற்சித்தார் அந்தப் பெண்மணி.

"அவ கழுத்துல தாலிக்கட்டின கையோட நீ தானே அவளை ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு கூட்டிட்டுப் போன ஆர்யா? அங்க எல்லாரும் பார்க்க நீ தானே உங்க கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்த?"

ஏனோ 'எல்லாரும் பார்க்க' என்ற வார்த்தைகளுக்கு அவர் அதிகமாக அழுத்தம் கொடுத்தார் போன்று ஆர்யாவிற்குத் தோன்றியது. அதனில் அவனது கண்கள் இடுங்க, ஏற்கனவே சுவரில் குத்தியதில் காயம் ஏற்பட்டிருந்த அவனது வலதுக் கை முஷ்டியும் இறுகியது.

அவனது உடல்மொழியைக் கூர்ந்து கவனித்தவராக மானசீகமாகப் புன்னகைத்துக் கொண்டவர், "லட்சுமி உன் வாழ்நாள் முழுக்க உன் கூடப் பயணிக்கப் போறவ ஆர்யா. இப்போதில் இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டால் தானே நல்லது." என்றார்.

அவர் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்தவனுக்கு அவரது எண்ணம் புரிந்தார் போல் இருந்தது.

"யெஸ், நான் அவ கழுத்தில் தாலிக்கட்டினேன். ரிஜிஸ்டர் ஆஃபிஸில் எங்க மேரேஜை ரிஜிட்டர் பண்ணினேன். But மேரேஜ் அப்படின்னா என்னன்னு உங்களுக்குத் தெரியும். நிச்சயம் மித்ரா என் மனைவியாக ஆகிட முடியாது மாம்.."

அமைதியாக, ஆனால் வெகு இறுக்கத்துடன் ஆழ்ந்த குரலில் பேசியவனின் ஒவ்வொரு சொல்லும் அடுத்த அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மித்ரலட்சுமியின் மனதின் ஆழத்தில் சென்று கீறிக் கொண்டிருந்தது.

அதேபோல், அனைவரும் அவளை ‘லட்சுமி’ என்று அழைத்துக் கொண்டிருக்க, அவன் மட்டும் அவளை ‘மித்ரா என்று அழைப்பது, ஆர்யாவே அறியாத அளவில் அவள் மீது அவனுக்குள் இருக்கும் உரிமையின் சிறு வெளிப்பாடாகச் சந்தியாவின் மனதிற்குத் தோன்றியது.

அந்த எண்ணமே அவருக்கு ஒரு சிறு நம்பிக்கையைத் தந்தது போல அவனை விடாமல் மீண்டும் கேட்டார்.

"ஏன் ஆர்யா?"

"மாம், இந்தப் பேச்சை இதோட விட்டுடுங்க."

அவரைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும், இத்தனை பொறுமையுடன் அவன் பதிலளித்திருக்க மாட்டான் என்பது அவனது அழுத்தமான குரலில் தெரிந்த கடினத்திலேயே வெளிப்பட்டது.

ஆயினும் அவனைவிடச் சந்தியாவிற்கு மனதில்லை.

"ஒருவேளை அமித் மேத்தாவும் அந்த விழாவிற்கு வருவதனால் லட்சுமியைப் பற்றி அவருக்குத் தெரிஞ்சுப் போயிடும்னு நினைக்கிறியா? அமித் மேத்தாவுடன் சில நேரங்களில் இஷானியும் பிஸ்னஸ் மீட்டிங்க்ஸ் அட்டெண்ட் பண்ணுவான்னு நீயே சொல்லிருக்க, ஸோ, ஒருவேளை அவளும் அங்க வந்துட்டால் உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துடும்னு பயப்படுறியா?"

பயப்படுறியா என்று வார்த்தை அநியாயத்திற்கு அவரது மகனது கோபத்தைக் கிளறிவிடும் என்று சந்தியாவிற்கு நன்றாகவே தெரியும்.

இருந்தும் அவர் அவனது உணர்வுகளைச் சட்டை செய்யாது பேச, அதனில் அவர் எதிர்பார்த்தது போல் ஆங்காரம் உள்ளுக்குள் வெடிக்க, சந்தியாவை நெருங்கி நின்றவனாய் அவரது கண்களை ஆழ்ந்துப் பார்த்தவாறே, "பயப்படுறேனா? நான் இதுவரை பயந்து நீங்க பார்த்திருக்கீங்களா?" என்றான் தாடை இறுக.

அவரும் சளைக்காது அவனது கூரிய விழிகளை ஆராயும் நோக்கோடு பார்த்தவராய், "Then, லட்சுமியை நான் நிச்சயம் விழாவுக்குக் கூட்டிட்டு வருவேன். மற்றது எதுவாக இருந்தாலும் வழக்கம் போல் நீ தைரியமாய் ஃபேஸ் பண்ணு ஆர்யா." என்றார் சிறிது புன்னகையுடன்.

இஷானியைப் பற்றி அரசல்புரசலாக அவ்வீட்டின் வேலையாட்களின் மூலம் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தில் வேதனையில் சிக்கி இருந்த மித்ரலட்சுமிக்கு, இப்பொழுது தாய்-மகன் இருவரும் அதைப் பற்றி விவாதித்ததில் உண்மை வெளிவர, அதற்கு மேல் அவளால் அறைக்குள் அடைந்து கிடக்க முடியவில்லை.

இதனில் அவர்களின் விவாதம் ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் இணைந்ததைக் கண்டு சளைத்துப் போனவளாய் மெதுவாகத் தானிருந்த அறையைவிட்டு வெளியில் வந்தவள் சற்றுத் தொலைவில் நின்றவாறே அவர்களைப் பார்க்க, அவள் அமைதியாக நின்றாலும், அவளது அமைதிக்குள் எத்தனை வலிகள் புதைந்திருந்தன என்பதை அவளைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாது.

ஆர்யா சொன்ன வார்த்தைகளின் கனம் மித்ரலட்சுமியின் இதயத்தை மீண்டும் மீண்டும் உடைத்துக் கொண்டிருந்தது.

ஆக இவர் என் கழுத்தில் தாலிக்கட்டியதும் பொய். அன்றிரவு என் அறைக்கு வந்து என்னை முத்தமிட்டதும் பொய். என்னை இவர் உரிமையுடன் அணைத்ததும் பொய். இவை அனைத்துமே ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக மட்டுமே நடந்திருக்க வேண்டும். அதை அறியாது முழித்துக் கொண்டிருக்கும் என் நிலையைக் கண்டால் எனக்கே பாவமாக இருக்கின்றதே.

மருமகளின் வருகை அறிந்து அவள் புறம் சந்தியா திரும்ப, அங்கு மனம் போன போக்கில் சிந்தித்தவளாய் விழிகள் கலங்க தங்களது வாக்குவாதங்களைப் பார்த்திருந்தவளின் வருத்தம் தோய்ந்த முகம் அவரை என்னவோ செய்தது.

ஆயினும், அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.

என் மகனால் நீ காயப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆனால் நீ அவனுக்கு ஈடாக நிற்க வேண்டும். வாழ்க்கையில் மட்டும் அல்ல, தொழிலிலும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்ட சந்தியா, அதைச் செயல்படுத்தும் விதமாகவே மித்ரலட்சுமியையும் அந்த விழாவிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவளுக்கு நிகழப்போகும் கொடூரத்தை அறியாது!

***************************

நிகழ்ச்சி நாள்..

The ITC Maurya Hotel

புதுத் தில்லியிலுள்ள ITC மௌரியா, சாணக்யபுரியின் தூதரகப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும்.

அங்கு நடக்கவிருப்பது, உலகளாவிய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் புதுமைப் படைப்பாளர்கள் ஆகியோர் நேர்த்தியான ஆடம்பரச் சூழலில் ஒன்றுகூடும் ஒரு உயர்மட்ட வணிக மாநாடு.

நேர்த்தியான அலங்காரங்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பலுக்கும் மத்தியில், மென்மையான மஞ்சள் விளக்குகளால் அந்த ஹோட்டலின் மாநாட்டு அரங்கம் ஒளிர, ஆங்காங்கே சிரிப்புகளும், கேமரா கிளிக்குகளும் இணைந்துக் கலந்த ஒரு பரபரப்பான சூழல் உருவாகி இருந்தது.

இந்தியாவின் தூண்கள் என்று போற்றப்படும் பெரும் நிறுவனங்களின் CEO-க்கள், நிர்வாக இயக்குனர்கள், தலைமை ஊழியர்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை நிருபர்கள், ஊடக புகைப்படக்காரர்கள் என்று அனைவரும் பரபரப்புடன் இருக்க, அறைக்குள் நுழைந்தான் அவன்.

ஆறடி இரண்டங்குல உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்தவனின் சிவந்த நிறமும், வசீகரிக்கும் முகவடிவும் அவனது தோற்றத்திற்குத் தனிக் கவர்ச்சியை அளித்தன.

ஆனால் மற்றவர்களை அவன் புறம் திருப்பியது, ஒருவரை பார்த்தால் அவரது உள்ளத்தின் அடி ஆழம் வரை சென்று அனைத்தையும் வாசித்துவிடும் அவனது கூர்மையான கண்களே.

அவனது நடையில் ஒரு நிமிர்வு தெரிய, அதில் வெளிப்பட்ட தன்னம்பிக்கையுடன் கூடிய ஆணவம் அவன் நுழைந்த கணமே அரங்கம் முழுவதையும் ஒரே விநாடியில் அமைதிப்படுத்தியது.

அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை, ஆனால் கேமராக்களின் ஒளிச்சுடர்கள் அவனைத் தேடி திரும்பின.

அங்கே இருந்த பலர் அவனைப் பார்த்ததுமே எழுந்து நிற்க, சிலர் மரியாதையுடன் தலையசைக்க, சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள, அமித் மேத்தா தானே எழுந்து வந்து அவனது கரத்தைப் பற்றிக் குலுக்கி வரவேற்றார்.

ஏனெனில் இந்த மாநாட்டிற்கு அவனது வருகை சாதாரணமானதல்ல. பலமுறை அழைத்தும் மறுத்திருந்தவனை, இறுதியில் சம்மதிக்க வைத்தது அமித் மேத்தாவின் தனிப்பட்ட முயற்சிதான்.

அதுவும் ஒரு தொழில் சார்ந்த அழைப்பாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் முன்னணி தொழில்துறையின் அடுத்தக் கட்டத்தைப் பற்றிய இந்த முக்கியமான சந்திப்பில் அவனது பங்கேற்பு அவசியம் என்று அவர் கருதியிருந்தார்.

அவன் வருகைக்குக் காரணம் நான் தான் என்று அமித் மேத்தா நினைத்துக் கொள்ள, ஆனால் அதற்குக் காரணம் யார் என்பதை அவன் மட்டுமே அறிவான்.

அவன் சாதாரண மனிதன் அல்ல.. அதிகாரம், செல்வாக்கு, பணபலம் இவை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உலகின் முன்னணி தொழில் சாம்ராஜ்யங்களில் ஒன்றான J.T Valcor Group-ன் மேனேஜிங் டைரக்டர், ஜேடன்.

ஜேடன் தருண் வால்கோர்!

சில மாதங்களுக்கு முன்னர்த் தான் 29 வயதைத் தொட்டிருந்த இளைஞன்.

தொடரும்...
 
Last edited:
Omg…!!! Jedan Tharun Valcor…
Ivan than antha third person ah…
Aarya vs Tharun
Aarya vs Aarush

Business dealing???
 
Madam your stories are very interesting. It drives me crazy about next episode every time. Waiting for your next epi...
 

Members online

No members online now.

Latest Updates

Top