JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

Meera (Mithra) - Episode 4

JLine

Moderator
Staff member
மீரா! (மித்ரா)

Eternal Echoes of Her Heart!

அத்தியாயம் - 4

__________________

அன்றைய இரவு!

சமையற்கட்டில் பாட்டி சாவித்திரிக்கு மட்டும் அல்லாது அந்தக் குடும்பத்தினருக்கும் சேர்த்து இரவு உணவை மித்ரலட்சுமி சமைத்துக் கொண்டிருக்க, அவளுக்கு உதவிக் கொண்டிருந்தனர் மூத்தவர் நடேசனின் மனைவி ரமாதேவியும், அவ்வீட்டின் மூன்றாவது வாரிசு சிங்காரவேலனின் மனைவி பார்வதியும்.

பாட்டிக்கு ஏற்ற வகையில் ராகிக் கஞ்சியை மித்ரலட்சுமி செய்து கொண்டிருக்க, பாசத்துடன் அவளது தோளில் கை வைத்தார் ரமாதேவி.

விசுக்கென அவரை அவள் திரும்பிப் பார்க்க, "என்னடா, பயந்துட்டியா?" என்றார் மென்மையுடன்.

"இல்லத்த."

மெல்லிய புன்சிரிப்பை அவள் உகுக்க, சாட்சாத் அம்பிகையின் முகவடிவுடன் களையான இலட்சணத்துடன் பிறந்திருக்கும் சிறியவளின் தலைமுடியைக் கோதியவர், "நீ பொறந்ததில் இருந்து எல்லாரும் உன்னைப் பயமுறுத்தியே பழக்கப்படுத்திட்டாங்க. அதான் எதுக்கெடுத்தாலும் பயப்படற.." என்றவராய் ஆழ பெருமூச்செடுத்தவர் கனிவுடன் தொடர்ந்தார்.

"அதியமானும் சத்யனும் உன்னை ரொம்பத் தொந்தரவு செய்றாங்கன்னு அத்தை சொன்னாங்கடா. கேட்குறதுக்கே மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் பெத்ததுதான் அப்படி இருக்குதுன்னா, இதோ உன் சின்ன அத்த பார்வதி, வாயில்லா பூச்சி, அது மகன் பண்றதும் அழிச்சாட்டியமா இருக்கே."

அவர்களின் பேச்சைக் கேட்டதில் அவர்களை நெருங்கிய பார்வதியும், "ஆமாக்கா. எனக்கும் இதே கவலைத் தான். ஏன் தான் இந்த ஆம்பளைங்க எல்லாம் இப்படி இருக்காங்கன்னே தெரியலை. ராத்திரி தூங்கி மறு நா காலையில் கண்ணு முழுக்கிறதே கடவுளோட அனுக்கிறஹம்ன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா என் வீட்டுக்காரர் இருக்காரே! இந்தச் சின்னப் பொண்ணு பேருல இருக்கிற சொத்தையும், அதை எப்படிக் களவாடுறதையும் பத்தி திட்டமிடுறதலேயே நாள் முச்சூடும் செலவழிச்சிட்டு, பிறகு தூக்கத்துலேயேயும் அதையே நினைச்சிட்டு இருப்பார் போல. காலையில் கண்ணை முழிச்சதையுமே அதைப் பத்தியே பேசுறார். அதுக்கு ஒத்து ஊதுற மாதிரி என் புள்ள சத்யனும். கூடப்பிறந்த தங்கையோட மக வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்காம அவ சொத்தை மட்டும் நினைச்சிட்டு சுத்திட்டு இருக்கிற என் வீட்டுக்காரரும் சரி, அவரை மாதிரியே பொறந்திருக்கிற என் மகனும் சரி, இவங்க ரெண்டு பேரும் எப்போ திருந்த போறாங்களோ?" என்றார் வருத்தத்துடன்.

"இவங்க தான் இப்படி இருக்காங்கன்னா, நம்ம கொழுந்தன் அந்தப் பிரபாகரனும் அவன் பொண்டாட்டி ராணியும் ஏன் இப்படி இருக்காங்க? ஏற்கனவே அதியமானும் சத்யனும் பண்ற தொல்லையே பெரும் தொல்லையா இருக்குன்னா, இதுல ஏதோ ராணியோட சொந்தக்காரன்னு ஒரு பையனை கொண்டு வந்து அறிமுகப்படுத்தினாங்களே. கடவுளே! அவன் ஆம்பளையா பொம்பளையான்னு கண்டு பிடிக்க முடியாதளவிற்கு அவனுடைய பேச்சு போக்குவரத்து எல்லாமே அசிங்கமா இருந்துச்சு. அந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போற அளவுக்குப் பண ஆசை ஒரு மனுஷனை தடம் மாற வைக்குமான்னு யோசிச்சதுலேயே தலை சுத்திப் போச்சு. இதுல என்னைக்கு அந்தப் பையனைப் பார்த்தேனோ அன்னைக்கு ராத்திரியில் இருந்து சரியா தூக்கம் கூட வர மாட்டேங்குது பார்வதி.."

பெரியவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டு குறுமுறுவல் பூத்தவாறே, "என்னுடைய ரெண்டு செல்ல அத்தைகளோட கவலையும் எனக்குப் புரியுது. ஆனால் அதுக்காக இன்னைக்கு நைட் டிஃபன் கெட்டுப் போக விடலாமா? இங்க பாருங்க, எவ்வளவு நேரமா இட்லி அடுப்புலேயே கிடக்குது. நீங்க அதைப் பாருங்க, நான் அம்மம்மாவுக்குக் கஞ்சியைக் குடுத்துட்டு வரேன்." என்றவளாய் கஞ்சியை ஒரு சின்னப் பாத்திரத்தில் ஊற்ற ஆரம்பித்தாள் மித்ரலட்சுமி.

அவளது பேச்சு இரு பெண்களின் கண்களையுமே கலங்கச் செய்தது.

அவளது அன்னைச் சுஜாதாவுடன் கூடப் பிறந்த ஆண்கள் தீய மனதுடன் இருந்தாலும், அவர்களை மணந்துக்கொண்டு இவ்வீட்டிற்கு வந்த இவர்கள் இருவரும் அவள் மேல் தீராத பாசம் கொண்டிருந்தனர்.

கணவர்களின் பேச்சை மீற முடியாவிட்டாலும், தனிமையில் இருக்கும் சமயத்தில் எல்லாம் அவளைத் தங்கள் மகள் போல் பாவிக்க அவர்கள் ஒருநாளும் தவறியதே இல்லை. இன்றும் அவளது அப்பாவித்தனமான பேச்சைக் கேட்டதில் தான் அவர்களது விழிகளில் நீர் சுரந்தது.

இந்தச் சின்னப் பெண்ணின் மனம் முழுக்கவும் அன்றன்றைக்கு ஏற்படும் புதுக் காயங்களும், என்றுமே ஆறாத வடுக்களுமே நிறைந்திருக்கின்றதே!

ஆயினும் அவற்றை அவளது ஆழ் மனதில் புதைத்துப் பழகியவளாய் சடுதியில் அனைத்தையும் மறந்தவளாய் நடமாடுவதைக் கண்டு பெரியவர்களுக்கு வேதனைப்பட மட்டுமே முடிந்தது. அவர்கள் இருவரையும், பாட்டி சாவித்திரியையும் தவிர மித்ரலட்சுமியின் மீது கரிசனம் கொண்டவர்கள் அந்த வீட்டில் எவருமே இல்லை.

அவ்வப்பொழுது அவள் நினைத்துக்கொள்வது உண்டு.

இங்கு இருக்கும் அனைவருமே என் பெயரில் இருக்கும் சொத்துகளின் மீதே குறிவைத்துக் காரியங்களை ஆற்றுகிறார்களே, ஆனால் ஒருவேளை வடநாட்டில் குடியேறிவிட்ட மாமா மகாதேவன் மட்டும் இங்கு இருந்திருந்தால், என்னை நல்லபடியாகக் கவனித்திருப்பாரோ என்று.

ஆனால் தாயுடன் கூடப்பிறந்த மற்ற மாமன்கள் மட்டும் ரொம்ப நல்லவர்களாக இருக்கின்றார்களா என்ன?

ஆக இது என் தலைவிதி என்று அவள் நொந்து கொண்ட அதே சமயம் புதுத் தில்லியில் டேவ் டெக்னாலஜிஸின் நிறுவனர் மகாதேவன் தன் வீட்டிலேயே கட்டப்பட்டிருக்கும் தனது அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்.

************************************

புதுத் தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிருத்விராஜ் சாலை, அந்நகரத்தின் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றாகும் என்பதை மறுக்க முடியாது.

எல்.கே. அத்வானி, அதுல் புஞ்ச், ரேணுகா தல்வார், ஆர்.பி. கோயங்கா போன்ற முக்கியப் பிரமுகர்களுக்குச் சொந்தமான ஆடம்பரமான பங்களாக்கள் அமைந்துள்ள பிருத்விராஜ் சாலையின் சுற்றுப்புறத்தில் ஸ்பெயின், வெனிசுலா மற்றும் மெக்சிகோவின் தூதரகங்கள் உள்ளன.

அப்படியான ஒரு ஆடம்பரமான பகுதியில், அடர்ந்த குல்மோஹர் மரங்களுக்கு மத்தியில் வெகு பிரம்மாண்டமாய்க் கட்டப்பட்டிருந்த அந்த மூன்றடுக்கு மாளிகையின் சொந்தக்காரர் டேவ் டெக்னாலஜிஸின் நிறுவனர் மகாதேவன்.

புதுத் தில்லியில் இருக்கும் Faculty of Management Studies (FMS) கல்லூரியில் வணிக நிர்வாகம் [MBA] படிப்பதற்குத் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெயர்ந்தவர், அங்குத் தன்னுடன் படித்த வடநாட்டுப் பெண்ணான சந்தியாவின் மீது காதல் கொண்டார்.

தனது குடும்பத்தினர், குறிப்பாகத் தந்தை நிச்சயம் தனது காதலை அங்கீகரிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவராய் எவரிடமும் சொல்லாமல் சந்தியாவைப் பதிவு திருமணம் செய்து கொண்டவர், திருமணத்திற்குப் பிறகே தன் குடும்பத்தினரிடம் தகவலைத் தெரிவித்தார்.

அத்துடன் அவருக்கும், அவரது பெற்றோர், உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான உறவுகள் முறிந்துப் போயின.

புதுத் தில்லியில் தங்களின் மணவாழ்க்கையைத் துவங்கிய மகாதேவன் - சந்தியா தம்பதியினருக்கு பெரிய இடைவெளியே இல்லாது அடுத்தடுத்துப் பிறந்தது மூன்று பிள்ளைகள்.

மூத்தவள் அதிதி தேவன், திருமணம் முடிந்து மூன்று வயது குழந்தை அபிலாஷ் மற்றும் கணவனுடன் தில்லியிலேயே வசிப்பவள்.

இரண்டாவது அகல்யா தேவன். அவளும் திருமணம் முடிந்து தன் கணவன் மற்றும் இரு வயது குழந்தையுடன் மும்பையில் வசிப்பள்.

மூன்றவதாகப் பிறந்தவன் தான் ஆர்யாதித்யா தேவன்.

கல்லூரி படிப்பு முடிந்ததுமே சுயமாய் "டேவ் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கிய மகாதேவன் சில மாதங்களிலேயே, கணினி வன்பொருள் மற்றும் மென்பொருளில் உருவாகிக் கொண்டிருந்த வாய்ப்புகளை உணர்ந்து, துணை நிறுவனங்களான டேவ் இன்ஃபார்மெட்டிக்ஸ் மற்றும் டேவ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றைத் துவங்கினார்

காலம் செல்லச் செல்ல, அந்தச் சிறிய விதைகள் வலுவான மரங்களாக வளர்ந்ததில் டேவ் டெக்னாலஜிஸ் இந்தியாவின் முன்னணி கணினி உற்பத்தியாளர்களில் ஒன்றாக உயர்ந்ததோடு, மென்பொருள் சேவையில் பெரும் இலாபம் ஈட்டும் நிறுவனமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

2020-களில் அதன் சந்தை மதிப்பு இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் வரிசையில் சேர்ந்தது.

சில ஆண்டுகளில் தனது மகன் ஆர்யாதித்யா தேவனிடம் நிறுவனங்களின் பொறுப்பை மகாதேவன் ஒப்படைக்க, ஆர்யாதித்யாவின் திறமையான தொழில் உத்திகளால் டேவ் டெக்னாலஜிஸ் ‘Fortune Global 500’ பட்டியலில் 'மேத்தா' குழுமத்திற்கு அடுத்த இடத்தைப் பெற்றது.

அதன் பிறகு ஆண்டு வருவாய் பல நூறு பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியபோது, ஆர்யாதித்யா தங்களது தொழில் சாம்ராஜ்யத்திற்கே அரசனாக மாறினான்.

அந்நேரம் பெரிய பொறுப்புகளில் இருந்து மகாதேவன் முழுமையாய் விடைபெற்று தனது தொண்டு நிறுவனங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, மனதில் எந்தவித அழுத்தமோ, கவலையோ, பதற்றமோ இல்லாது அமைதியாக அவர் தன் வாழ்நாளை கழித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் என்ன நேர்ந்ததோ அன்று இரவு திடீரென்று தன் அலுவலகத்தில் மயங்கி சரிந்தார்.

அப்பொழுது இரவு எட்டு மணி.

கீழே விழுந்தவர் விழுந்தபடியே கிடக்க, இரவு உணவை உண்ண அவர் டைனிங் ரூமிற்கு வரவில்லை என்பதை அறிந்த அவர் மனைவி சந்தியா அவரைத் தேடி அவரது அறைக்குச் சென்றார்.

அங்குத் தரையில் சுயநினைவற்றுக் கிடக்கும் கணவரைக் கண்டவருக்கு அண்டசராசரமே சுழலுவது போல் இருந்தது.

"மகா!" என்று அலறியவராகக் கணவரை நோக்கி ஓட, அவரது சத்தத்தில் அவரைத் தொடர்ந்து ஓடிய பணியாளர்களும் வேலைக்காரர்களும் தரையில் கிடந்த பெரிய முதலாளியைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர்.

சில நிமிடங்களிலேயே மகாதேவனைச் சுமந்துச் சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவமனையை நோக்கி சைரன் சத்தங்கள் அலற பறக்க, அந்நேரமும் முக்கியமான தொழில் சம்பந்தப்பட்ட மீட்டிங் ஒன்றில் கலந்திருந்த மகன் ஆர்யாதித்யாவை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துப் போனார் சந்தியா.

"மாம், இன்னுமா ஆர்யாவைப் பிடிக்க முடியலை?"

மூத்தவள் அதிதியின் கேள்விக்கு, "அவன் ஃபோனை அட்டென்ட் பண்ணவே மாட்டேங்குறான்.." என்றார் சந்தியா.

"அவன் பிஏ-வை பிடிக்கிறது தானே?"

"அவனும் ஃபோனை எடுக்கலை."

"ம்ப்ச். முதலாளிக்கு ஏத்த பிஏ.."

இரண்டாவது மகள் அகல்யா சலித்துக் கொண்டாள்.

"சரி, நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க?"

"நாங்க அல்மோஸ்ட் ஹாஸ்பிட்டலை நெருங்கிட்டோம் மாம்.."

மூத்தவள் கூற, "எங்க ஃப்ளைட் கிளம்பப் போகுது மாம். ரெண்டரை மணி நேரமாவது ஆகும் நாங்க டெல்லி வரதுக்கு. ஆனால் நீங்க பயப்படாதீங்க. அதான் அதிதி உங்கக்கூட இருப்பாங்களே. நாங்களும் மூணு மணி நேரத்துல உங்க கூட இருப்போம்." என்றாள் சிறியவள்.

அதே போல் சில மணித்துளிகளிலேயே மூத்தவளின் காரும், மகாதேவனைச் சுமந்து சென்ற ஆம்புலன்சும் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையை அடைந்தன.

அங்கு மகாதேவனுக்குரிய சிகிச்சைகள் துவங்க, பல நிமிடங்களுக்குப் பிறகு அவசரசிகிச்சைப் பிரிவை விட்டு வெளியே வந்த மருத்துவர், மகாதேவனுக்கு ஏற்பட்டிருப்பது கடுமையான மாரடைப்பு என்று கூறினார்.

முப்பத்திரெண்டு வருட திருமண வாழ்வு. அதுவும் இல்லாது கல்லூரிக் காலத்திலேயே மகாதேவனின் மீது காதல் கொண்டு, தன் குடும்பத்தினரையும் பகைத்துக் கொண்டு அவரைத் திருமணம் செய்து கொண்ட சந்தியா இன்று வரை கணவன் மட்டுமே எனக்குப் போதும் என்று அளப்பறிய காதலுடன் வாழ்ந்து வருபவர். கணவருக்காகவே தனது தாய்மொழியைவிட்டுத் தமிழ் மொழியைக் கற்று வீட்டிலும் அதே மொழியைப் புலங்கச்செய்தவர்.

மென்மையான உள்ளம் கொண்டிருப்பவர், ஆயினும் மகாதேவனின் கண்டிப்பான வழிநடத்தலின் படி தொழில் நிர்வாகத்தையும் படித்து அவருக்கு இருபது வருடங்களுக்கு மேல் தொழிலில் ஒரு கூட்டாளர் போன்று உதவி செய்து வருபவர்.

ஆக மென்மையும் கண்டிப்பும் கலந்த ஒரு அன்னையாக உருமாறியிருப்பவர். (மலரினும் மெல்லியவள் ஸ்ரீயை உதாரணமாகக் கொண்டு இவரை உருவாக்கி இருக்கின்றேன் :-))

ஆனால் இன்று கணவனது உடல்நிலையைக் கண்டு சகலமும் தனது கால்களுக்கு அடியில் நழுவிப் போவதைப் போல் உணர்ந்ததில் அவர் தடுமாற, அவருக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த மகள் அதிதி தேவன் அவரைத் தாங்கிப் பிடித்தாள்.

மகள்களின் கணவர்கள் அவர்களுக்குத் துணையாக இருக்க, அவசர சிகிச்சைப் பிரிவு கதவுகளின் மேலேயே கண்களைப் பதித்தவராய் நாற்காலியில் அமர்ந்தவரின் எண்ண ஓட்டங்கள் முழுவதுமே கணவரின் மீதே இருந்தன.

அதே நேரம் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டு, ஆனால் எடுக்கப்படாமல் அமைதியாய் அடங்கி ஒடுங்கியது ஆர்யாதித்யாவின் அலைபேசி.

மகாதேவனின் சிகிச்சைகள் தொடர, ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் கடந்து மீட்டிங் முடிந்த நிலையில் அறையைவிட்டு வெளியேறிய ஆர்யாதித்யா தன் அலைபேசியைப் பார்க்க, பேசியின் திரை முழுக்க நிரம்பியிருந்த 'மிஸ்ட் கால்'களைப் பார்த்ததில் அவனது புருவங்கள் இடுங்கின.

அனைத்துமே அவனது தமக்கைகள், அவர்களது கணவர்கள் மற்றும் அன்னையிடம் இருந்து வந்த அழைப்புகள்.

என்னத்தான் அதிதியும் அகல்யாவும் அவனது கூடப்பிறந்தவர்கள் என்றாலும் ஆர்யாதித்யா என்று வரும் பொழுது அவனிடம் இருந்து ஒரு சில அடிகள் தள்ளி நின்றே பேசுபவர்கள் அவனது அக்காக்கள்.

அது அவன் வளர்ந்த பிறகு தோன்றிய பழக்கம் அல்ல.

பாலகனாக இருந்த காலத்திலேயே ஏதோ அரசனைப் போன்ற கம்பீரத்துடன் வளர்ந்து வந்தவனிடம் ஒருவித ஆணவமும் ஆளுமையும் இருந்ததைக் கண்டு அவன் பெற்றோர் உட்பட அனைவருமே வியந்துப் போயினர். கூடப்பிறந்த அக்காக்கள் என்றாலும் கூட அவர்கள் அவனுக்கு உதவிப் புரிய முனைந்தால் தன் சின்னக் கைகளாலேயே அவர்களை விலக்கிவிட்டு அவனாய் அனைத்து வேலைகளையும் பிடிவாதமாய்ச் செய்யும் பொழுது அவர்கள் பிரமித்துப்போவர்.

'இது எப்படிச் சாத்தியம்? இவ்வளவு பிடிவாதமும் திமிரும் ஒரு சின்னக் குழந்தைக்கு இருக்குமா?' என்று அவர்கள் பெற்றோரைப் பார்த்து திகைப்புடன் கேட்பர்.

அப்பொழுது எல்லாம் மகாதேவனுக்கு அவரது தாத்தாவும், கொள்ளு தாத்தாவும் தான் நியாபகத்திற்கு வருவர். அரசர்களையும் சிற்றசர்களையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்ட ஆளுமைமிக்கக் குடும்பமாயிற்றே.

அப்படியான குடும்பத்தின் வாரிசான ஆர்யாதித்யா எப்படி இருப்பான் என்ற பெருமிதத்தில் அவனைத் தடுக்காது அவனை அவன் வழிக்கே விட்டுவிட்ட மகாதேவன், தக்க நேரத்தில் டேவ் டெக்னாலஜிஸின் மொத்த நிர்வாகத்தையும் அவன் கையில் ஒப்படைத்தார்.

ஆனால் அவர் அறியாதது! அவனது கம்பீரத்திற்கும் அதிகாரத்திற்கும் திமிருக்கும் காரணம் அவரது பரம்பரை அல்ல. அதன் காரணம் வேறு!

"மாம்?"

"என்ன ஆர்யா, எத்தனை தடவை உனக்குக் கால் பண்றது?"

"என்ன மாம் இது? இம்பார்ட்டன்ட் மீட்டிங்ஸில் இருந்தால் நான் எந்தக் காலையும் அட்டென்ட் பண்ண மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா? சரி சொல்லுங்க, டாட் இப்போ எப்படி இருக்கார்?"

அழைப்புகள் எடுக்காத ஆர்யாதித்யாவிற்கு அவரது குடும்பத்தினர் விஷயத்தைக் குறுந்தகவல் மூலம் பகிர்ந்திருந்தனர்.

அதைப் படித்துவிட்டுத்தான் அவன் அழைத்ததே என்று புரிந்திருந்தாலும், இதென்ன, தந்தைக்கு வந்திருப்பது கடுமையான மாரடைப்பு என்று தெரிந்தும் இவ்வளவு சாதாரணமாகக் கேள்வி கேட்பது.

இது தான் சந்தியாவிற்கு அக்கணம் தோன்றியது.

ஆயினும் இது என்ன முதல் தடவையா அவன் இவ்வாறு நடந்துக்கொள்வது என்று நினைத்தவராகப் பெருமுச்சுவிட்டுப் பின் நடந்ததைக் கூற, முதல் தடவையாக வந்திருந்த மாரடைப்பு என்றாலும் மிகவும் அபாயகரமான மாரடைப்பு [massive heart attack] என்று மருத்துவர் கூறியதை சந்தியா விளக்கினார்.

சூழ்நிலையின் விகாரம் புரிந்ததில் அந்நிமிடமே மருத்துவமனைக்கு விரைந்தது, அன்றாடம் அலுவலகத்திற்கு ஆர்யாதித்யா எடுத்துச் செல்லும், அவனது இரண்டாவது ஃபேவரைட் வாகனமான, வெண்மை நிற ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா கார் [rolls-royce arcadia droptail white].

அன்றிரவு நடக்கப் போகும் நிகழ்வுகள் அவனது தலையெழுத்தையே மாற்றப்போவதை அறியாது

***************************

இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை புதுத் தில்லியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனை ஆகும்.

மிகப்பெரிய அந்த மருத்துவமனையின் பார்க்கிங் கராஜிற்குள் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா கார் நுழைந்த மறுநிமிடமே அவனை நோக்கி ஓடி வந்தார், மகாதேவனின் தனிப்பட்ட செயலாளர், ஐம்பது வயதைக் கடந்திருந்த மணிமாறன்.

அவரைப் பார்த்தவாறே காரை நிறுத்திய ஆர்யாதித்யா காரில் இருந்து இறங்கியவன், "இங்க என்ன பண்றீங்க?" என்றான் அடிக்குரலில்.

அவன் எதற்கு அப்படிக் கேட்கின்றான் என்று மகாதேவனின் தனிப்பட்ட செயலாளருக்குப் புரிந்தது.

"சார், நீங்க வந்ததுமே உங்களை மகாதேவன் சாரிடம் கூட்டிட்டு வரணுங்கிறது மேடத்துடைய கட்டளை சார். அதுக்காகத் தான் உங்களுக்காக இங்க காத்துட்டு இருக்கேன்." என்று அவர் ஹிந்தியில் கூறினார்.

வழக்கம் போல், "ஏன், எனக்கு ஐ.சி.யு எங்க இருக்குன்னு விசாரிச்சிட்டு வரத் தெரியாதா?" என்று கடுகடுத்தவன் விடுவிடுவென மருத்துவமனையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட கால்களையுடைய அவனது நடைக்கு ஈடுசெய்வது போல் அவனை ஓட்டமும் நடையுமாக அவர் பின் தொடர, சில மணித்துளிகளில் மகாதேவன் அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சைப் பிரிவை இருவருமே அடைந்தனர்.

அங்கு அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த அதிதியும் அகல்யாவும் ஆர்யாதித்யாவை கண்டதும் அமர்ந்திருந்த இருக்கைகளில் இருந்து வெடுக்கென எழுந்தனர்.

"How is he?"

இருவரையும் பார்த்து அவன் வெகு நிதானமாய்க் கேட்க, அவனது பரபரப்பின்மை அவர்களது உள்ளத்திற்குள் கோபத்தைக் கொண்டு வந்ததில் இரு பெண்களுமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதனில் சலித்துக் கொண்டவனாய், "என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் இப்படி ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கிட்டால் என்ன அர்த்தம்?" என்றான் கடுப்பாய்.

அதனில் அவர்களுக்கு இன்னமும் கோபம் வந்தது.

அதன் காரணமாக அவர்களது முகம் மாற, அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக அவர்களை நெருங்கிய அவர்களது கணவர்கள் இருவரும் அவர்களை ஆசுவாசப் படுத்தியவர்களாய் ஆர்யாதித்யாவிற்குப் பதில் அளித்தனர்.

"மேஸிவ் அட்டாக்குன்னு சொன்னாங்க ஆர்யா. அதற்கான ட்ரீட்மென்டையும் செய்துட்டு இருக்கோம்னு சொன்னாங்க, ஆனால் என்னாச்சுன்னு தெரியலை, திடீர்னு ஃப்யூ மினிட்ஸுக்கு முன்னால் ஆன்ட்டியை மட்டும் உள்ள வரச் சொன்னாங்க. அவங்களும் போயிருக்காங்க, but உள்ளே என்ன நடக்குதுன்னு எங்களுக்குத் தெரியலை. எங்களையும் உள்ளே விட மாட்டேங்குறாங்க. நீங்க வேணும்னா கேட்டுப்பாருங்க.."

மூத்தவள் அதிதியின் கணவன் கூற, அதற்கு, "ஆமா, நீங்க கேட்டால் நிச்சயம் உங்களை உள்ள போக அனுமதிப்பாங்க.." என்று ஆமோதித்தான் அகல்யாவின் கணவன்.

அக்காள்களின் கணவர்கள் இருவருமே அவனை விட வயதில் பல வருடங்கள் மூத்தவர்கள் தான்.

ஆயினும் ஏனோ திருமணம் ஆனதில் இருந்தே, அவனது மிடுக்கையும், டேவ் டெக்னாலஜிஸின் கீழ் இருக்கும் அனைத்து நிறுவனங்களையும் அசாதாரணச் சாமர்த்தியத்துடன் ஒற்றை ஆளாக நிர்வகித்து வரும் அவனது கம்பீரத்தையும் பார்த்து மரியாதையுடன் பன்மையில் அவனை அழைத்தே பழகி இருந்தார்கள்.

அதே தொனியில் இப்பொழுதும் வெகு அமைதியாய் பேச, அவர்களது மனைவிகளுக்குத் தான் ஆற்றாமையாக இருந்தது.

'நாம என்ன சூழ்நிலையில் இருக்கோம், ஆனா கொஞ்சம் கூடப் பதட்டப்படாமல் இதென்ன கூலா டாட் எப்படி இருக்காங்கன்னு கேள்வி?' இது மூத்தவள் அதிதியின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

'இந்த லட்சணத்துல இவனைவிட எவ்வளவு பெரியவங்க இவங்க ரெண்டு பேரும், ஆனால் என்னவோ இவனுக்குக் கீழ வேலைப் பார்க்குற மாதிரி என்ன இப்படி மரியாதையுடன் இவன்கிட்ட பேசுறது? என்று யோசித்த சின்னவள் அகல்யாவின் எண்ணமோ, இப்படி உலகத்துல இருக்குற எல்லாரையும் கன்ட்ரோலில் வச்சிருக்க உன்னையும் கன்ட்ரோல் பண்ற ஒரு சிஷுவேஷன் வரும், அப்ப பார்க்கலாம்.. என்று இருந்தது.

அதே நேரம் அவசரசிகிச்சை பிரிவு அறையின் வாயிற்கதவைத் திறப்பதற்கு ஆர்யாதித்யா எத்தனித்த நேரம், சொல்லி வைத்தார் போல் கதவு திறந்தது.

அதனுள் இருந்து வந்த செவிலியப் பெண், "இங்க ஆர்யாதித்யா தேவன்னு யாராவது இருக்காங்களா?" என்றதுமே மகாதேவனின் செயலாளர் மணிமாறன் அவளை வேகமாய் நெருங்கினார்.

"இவர்தான் மிஸ்டர் ஆர்யாதித்யா தேவன்..."

"சார், உங்க அம்மா உங்களை உடனடியா உள்ளே கூட்டிட்டு வரச்சொன்னாங்க?"

"ஏன்?"

செவிலியப்பெண் பதற்றமாய்ப் பேசினாலும் பதற்றமில்லாது வினபுவனை வியப்புடன் பார்த்தவள், "நீங்க வாங்க, அவங்க உங்கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்வாங்க.." என்றவளாய் அவன் அவசரசிகிச்சை பிரிவு அறைக்குள் நுழைந்ததும் கதவை மூடினாள்.

அவளது வழிகாட்டுதலின் படி ஆர்யாதித்யா நடக்க, அங்கு ஒரு அறையில், ஏறக்குறைய முழு உடம்பையும் மறைக்கும் அளவிற்கு மருத்துவ உபகரணங்கள் பொறுத்தப்பட்டிருக்க, சுயநினைவில்லாதது போல் படுத்திருந்த மகாதேவனைக் கூர்யப் பார்வையுடன் பார்த்தவனின் கண்கள் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அன்னையின் மேல் படிந்தது.

அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவராய் எழுந்து நின்ற சந்தியா கணவரின் தலையை மென்மையாகக் கோதினார்.

அதனில் கண்களை வெகுச்சிரமப்பட்டு விழித்த மகாதேவனின் பார்வை எதிரில் நின்ற மகன் மீது படிய, அவனைக் கண்ட விநாடி அவரது விழிகளில் ஏதோ புரிந்துக்கொள்ள முடியாத ஒரு பளபளப்பு தோன்றியது.

ஒரு சில கணங்கள் அவனையே பார்த்திருந்தவரின் உதடுகளில் திடுமென வித்தியாசமாய் ஒரு புன்னகை. இறுதியாக ஆழ இழுத்து பெருமூச்செடுத்தவரின் இதயம் அடுத்த நிமிடமே அமைதியாக அடங்கியது.

அவரது உயிரும் இந்த உலகத்தைவிட்டுப் பிரிந்தது.

அதாவது உனக்காகத்தான், உன்னைப் பார்ப்பதற்கு மட்டும் தான் என் உயிர் இவ்வளவு நேரமும் காத்துக்கிடந்தது. இப்பொழுது உன்னைப் பார்த்துவிட்டேன். அதுவும் இல்லாது நீயே புரிந்துக் கொள்ளாத, அறிந்துக்கொள்ளாத ஒன்றையும் என் மனதளவில் மானசீகக் காட்சிகளாக நான் கண்டு கொண்டேன் என்பது போல் ஒரு திருப்தியுடன் மகாதேவனின் உயிர் சுவர்க்கத்தை நோக்கிச் சென்றது.

அக்கணம் கூட அவர் தனது பிரியமான மகள்களைத் தேடாது மகனைக் கண்டது மட்டும் போதும் என்பது போல் இறந்து போனது ஆர்யாதித்யாவிற்கு விசித்திரமாய் இருந்தது.

அதே நேரம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 110 நிமிடங்கள் தொலைவில் உள்ள, மார்க்யூ ஒன் மோட்டார் கிளப்பில் [Marque One Motor Racetrack & Club] தனது ஃபேவரைட்டான அடர் நீல நிற பகானி ஸோன்டா ஹெச்பி பார்ஷெட்டா [pagani zonda hp barchetta] காரை செலுத்திக் கொண்டிருந்த ஆருஷிற்குத் திடுமென உள்ளம் திடுக்கிட்டது.

அதன் அதிர்ச்சியில் அவனையும் அறியாது அவனது பாதம் ப்ரேக்கை வேகமாய் அழுத்தியதில் அவனது பகானி ஸோன்டா பார்ஷெட்டாவும் கீறிச்சிட்டு நின்றது.

காரை சடாரென்று நிறுத்தியவன் தன் பின்னே வரும் கார்களும் தன்னைப் போல் தடுமாறுவதை உணர்ந்து மீண்டும் சீறிக்கிளப்பியவன் ஒரு வழியாகப் பந்தயத்தை முடிக்க, அவன் காரை விட்டு இறங்கியதும் ஓடி வந்தவனாய் அவனருகில் வந்து நின்றான் அவனது பி.எ மனோஜ்.

"என்ன சார்? திரும்பவும் அந்த மித்ரலட்சுமி நியாபகமா?"

அவனது கேள்வியில் மெள்ள திரும்பியவன் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டைக் கழட்டியவாறே, "வாட்?" எனவும். "ஒண்ணுமில்லை சார்.." என்றான் சிறு சிரிப்புடன்.

"என்னை என்ன எப்பவும் அந்த மித்ரலட்சுமியைப் பற்றி மட்டுமே சிந்திச்சிட்டு இருக்கிறவன்னு நினைச்சியா?"

"ஓ, கேட்டுடுச்சா?"

"ம்ப்ச்.."

"சாரி சார். நான் உங்களை அப்படி எல்லாம் நினைப்பேனா?"

"அப்புறம் எதுக்கு அப்படிக் கேட்ட?"

"சார், இதுவரைக்கும் எத்தனையோ முறை இந்த ரேஸ் ட்ராக்கில் நீங்க ட்ரைவ் பண்ணிருக்கீங்க. ரேஸும் பண்ணிருக்கீங்க. ஆனால் இது மாதிரி நீங்க ஸ்டம்பில் [stumble] ஆனது கிடையாது. இதுதான் முதல் தடவை இப்படி நீங்க ட்ராக்கில் திடீர்னு காரை நிறுத்தினது. ஒருவேளை நீங்க அன்னைக்குச் சொன்னது போல் மித்ரலட்சுமி, சின்னம், இளவசரசன், ராஜ்யம்னு ஏதாவது உங்களுக்குத் தோன்றி இருக்கும், அதான் காரை இப்படிச் சரெட்டுன்னு நிறுத்திட்டிங்களோன்னு தோணுச்சு, அதான் கேட்டேன்."

அமைதியாகக் கூறும் அவனைப் பார்த்தவனாய் தனது கைகளில் அணிந்திருந்த க்ளவுஸ்களைக் கழட்டியவாறே அவனை உற்றுப்பார்த்த ஆருஷ், "தெரியலை மனோ. ஆனால் என் கண்முன் வந்துப்போகும் காட்சிகள் எல்லாத்துக்கும் தொடர்புள்ள ஒரு பொருள், எப்படியும் என் கைக்கு வந்துச்சேரும்னு கொஞ்சநாளா என் மனசுக்குள்ள ஒரு வீரியம் உருவாகிட்டு இருந்தது. ஆனால் என்னவோ தெரியலை திடீர்னு அந்தப் பொருள் என் கையைவிட்டு போகுமான சூழ்நிலையும் உருவாக வாய்ப்பு இருக்கு, அந்த வாய்ப்பை சில நிமிடங்களுக்கு முன் யாரோ உருவாக்கிக் கொடுத்துட்டு போயிட்டாங்க, அப்படிங்கிற மாதிரி எனக்குத் தோணுச்சு. I mean எனக்குப் பிடிச்ச ஒண்ணை என்கிட்ட இருந்து பிரிக்க முயற்சி செய்யும் ஒருத்தரோட இதயம் தன் துடிப்பையே நிறுத்தின மாதிரி எனக்குத் தோணுச்சு, அதனால் என் நெஞ்சுக்குள் ஒரு வலி! அந்த அதிர்ச்சியில தான் என்னையும் அறியாமல் நான் காரை சடன்னா நிறுத்திட்டேன். ஆனால் அதுக்கும் மித்ரலட்சுமிக்கும் சம்பந்தம் இருக்கான்னு கேட்டால், தெரியலைன்னு தான் சொல்வேன்." என்றான் குழப்பத்துடன்.

அவன் கழட்டிக் கொடுக்கும் கையுறைகளையும் மற்ற உபகரணங்களையும் வாங்கிய மனோஜிற்கும், அந்தப்பெண் மித்ரலட்சுமியைக் கண்டதில் இருந்து இந்நிமிடம் வரை இது போல் பேசிக் கொண்டிருக்கும் தன் பாஸை என்ன செய்வது என்று சத்தியமாய்த் தெரியவில்லை.

அதே போல் அதிசயமாய்ப் பல மாதங்களுக்குப் பிறகு தங்களது சந்திப்பிற்கு அனுமதி வழங்கி இருந்த ஆர்யாதித்யாவுடன் ஆன சந்திப்பை ஆருஷ் கடைசி நேரத்தில் ரத்து செய்திருந்ததில் இருந்தே, ஆர்யாதித்யாவின் கோபத்தைச் சம்பாதித்து இருந்ததில், ஆருஷை நினைத்து அவன் பெருங்கவலை கொண்டிருந்தான் என்பதிலும் சந்தேகம் இல்லை!!

தொடரும்..
 
Last edited:
Enna???? Meeting cancelled a... Rendu hero um meet pannum podhu pori parakkun parthene.. just missu..
 
Yov mahadeva antha ragasiya ta jollitu poirukalamla
Ipo engaluku tan kuzhapam

Pona piravila Aru kita irunthu mitra va prikanenachayo

Apo aarya aarush munnadi friend or brothers
 
Top