JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

Meera (Mithra) - Episode 5

JLine

Moderator
Staff member
மீரா (மித்ரா)

The Eternal Echoes of Her Heart!

அத்தியாயம் - 5

**********************************************

அவரச சிகிச்சைப் பிரிவிற்குள் உயிரற்ற சடலமாகப் படுத்திருந்த தந்தையின் முகத்தை ஒரு சில நொடிகள் ஆழ்ந்துப் பார்த்த ஆர்யாதித்யா, தந்தையின் மார்பினைப் பிடித்தவாறே கதறிக் கொண்டிருந்த அன்னையின் தோள்களைப் பற்றினான்.

ஆயினும் ஆறுதலாய் அவன் ஒரு வார்த்தை பேசவில்லை.

அதற்குள் விவரம் அறிந்து அவசரசிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தவர்களாய் அதிதியும் அகல்யாவும் தந்தையை நோக்கி ஓடி வர, அவருக்கு அருகில் அன்னையைத் தன் மார்பில் சாய்த்தவாறே நின்றிருந்த தம்பியின் புருவங்கள் தீவிரமாய் முடிச்சிட்டு இருப்பதைக் கண்டு ஒரு கணம் தடுமாறி நின்றார்கள்.

அவனது முகத்தில் வருத்தத்தையும் மேலோங்கி ஏதோ ஒரு உணர்வு இருந்தது. ஆயினும் அக்கணம் அதைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லை என்பது போல் அழுது கதறியவாறே அன்னையை அணைத்துக் கொண்டார்கள்.

அடுத்தச் சில மணி நேரங்களில் மகாதேவனின் சடலம் அவர்களது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. அதனை அடுத்து அவர்களது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அங்குக் குழும, சடங்குகளும் சாங்கியங்களும் தொடர்ந்தன.

மறுநாள் மாலை அவரது உடல் இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆர்யாதித்யாவின் கரங்களால் தீ மூட்டப்பட்டதில் அவரது உடலும் இவ்வுலகத்தை விட்டு கறைந்து மறைந்தது.

அத்துடன் இணைந்து நாட்களும் மறைய, ஆர்யாதித்யாவும் அலுவலக வேலைகளில் மூழ்கிப் போக, மகாதேவன் இறந்துக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஒரு நாள் அவனது அலைபேசிக்கு அழைத்தார் சந்தியா.

கடந்த மூன்று மாதங்களாக ஏதோ நடைப்பிணம் போல் வாழ்ந்து வந்த அன்னையிடம் இருந்து, அலுவலகத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே திடுமென அழைப்பு வந்ததும் கண்கள் இடுங்க பேசியை உயிர்ப்பித்தான் ஆர்யாதித்யா.

"யெஸ் மாம்.."

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஆர்யா."

"சொல்லுங்க.."

"நீ உடனேயே வீட்டுக்கு வா.."

"Why mom? ஏதாவது பிரச்சனையா?"

"இல்லை, ஆனா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசணும்."

"மாம், இப்போ தான் நான் ஆபிஸுக்கு வந்தேன். இன்னைக்கு நிறைய க்ரிட்டிக்கல் மீட்டிங்க்ஸ் இருக்கு. நான் லஞ்ச் டைம் வரட்டுமா?"

"இல்லை ஆர்யா, இப்பவே நான் உன்னைப் பார்க்கணும். உன்கிட்ட பெர்சனலா சில விஷயங்கள் பேசணும்."

"மாம், இப்போ தான் மணி எட்டு ஆகுது. இன்ஃபேக்ட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நான் வீட்டில் இருந்தே கிளம்பி வந்தேன். அப்பவே பேச வேண்டியது தானே? ஆபிஸுக்கு வந்ததற்கு அப்புறம் திடீர்னு கூப்பிட்டு வீட்டுக்கு உடனே வா-ன்னு சொன்னால் என்ன அர்..?"

ஆர்யாதித்யா முடிக்கவில்லை, அதற்குள் மறுமுனையில் பட்டென்று தொலைபேசி வைக்கப்பட்டது.

இந்நாள்வரை தன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் எவரும் இது போல் பாதியில் தொடர்பை முறித்துக் கொண்டதில்லை, அவனது தந்தை உட்பட.

ஆனால் இன்று அவனது அன்னை இவ்வாறு தொலைபேசியைப் படாரென்று வைத்ததில் ஒரு நொடி குழம்பினாலும், தந்தையின் இறப்பு இந்தளவிற்கு அன்னையைப் பாதித்திருக்கின்றது என்று நினைத்தவனாய் ஆர்யாதித்யா அதைக் கண்டு கொள்ளாது விட்டுவிட்டான்.

அத்துடன் அவனுமே தொழில் நிர்வாகச் சந்திப்புகளில் மூழ்கிப் போக, அவன் வீட்டிற்குத் திரும்பும் பொழுது நள்ளிரவு கடந்திருந்தது. மறுநாள் வழக்கம் போல் விடிவதற்கு முன்பே எழுந்தவனாய் உடற்பயிற்சிகளை முடித்தவன் அலுவலகத்திற்குக் கிளம்ப, ஆனால் அவன் அன்னை அவனைச் சந்திக்க விரும்பியதை மறந்து போனான்.

அன்றும் அவனது அலுவலக வேலைகள் அவனை ஆட்கொண்டது.

அதே போல் மறுநாளும். ஆக அவன் அன்னை அவனைச் சந்திக்க விரும்பி இன்றோடு இருநாட்கள் முழுமையாகக் கடந்து போயிருந்தன.

அவர் அவனை அழைத்துச் சரியாக மூன்றாம் நாள், முக்கிய மீட்டிங் ஒன்றினை முடித்துவிட்டு தன் அறைக்கு வந்தவன் தன் இருக்கையில் அமர்ந்து கணினியில் கண்களைப் பதித்தவனாய் ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ, சொல்லி வைத்தார் போன்று அதே காட்சிகள் நிழலாய் அவன் கண்களின் முன்னே படர்ந்தன.

ஆயினும் இந்த மூன்று மாதங்களில் இன்னமும் பல படிகள் அதிகரித்து என்னென்னவோ புதுப்புதுக் காட்சிகள் அவனை ஆக்கிரமித்துக் கொள்ள, தளர்ந்தவனாய் கைகள் இரண்டையும் தலைக்குப் பின் கோர்த்தவனாய், "ஷிட்.. திரும்பவுமா.." என்றவாறே இருக்கையில் தலை சாய்த்த நேரம் அவனது அலைபேசி அலறியது.

ஆனாலும் அவன் அதை எடுத்துப் பார்த்தான் இல்லை.

'இது என்ன காட்சிகள்? திரும்பத் திரும்ப இதே மாதிரி காட்சிகள் என் கண்முன்னே வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட காட்சிகளாய் இருக்கின்றதே!'

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே திரும்பவும் அலைபேசி அலறியது.

மீண்டும் மீண்டும் கைப்பேசி அடிக்கவும் சலிப்புடன் நிமிர்ந்தவன் அதன் திரையைப் பார்க்க, 'Mom' என்று வார்த்தை திரையில் மிளிர்ந்ததும் அலைபேசியை உயிர்ப்பித்தான்.

"நான் ரெண்டு நாளுக்கு முன்னேயே உன்னைப் பார்க்கணும்னு சொன்னேன் ஆர்யா."

"யெஸ் மாம், ஆனால் நான் அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ நீங்க தூங்கிட்டீங்க."

"ஸோ, நான் இந்த ரெண்டு நாளும் எங்க இருந்தேன், எப்போ வீட்டுக்கு திரும்பி வந்தேன்னு உனக்குத் தெரியாது, ரைட்?"

"வாட்? ரெண்டு நாளா நீங்க வீட்டுல இல்லையா?"

அவனது கூற்றில் மறுமுனையில் பெருமூச்சுச் சத்தம் கேட்டது.

அதனில் அவனுக்குச் சற்றே கோபம் எழ, "ப்ச். சரி சொல்லுங்க, எங்கப் போனீங்க?" என்றான்.

"நீ உடனேயே வீட்டுக்கு வா."

கூறிய சந்தியா படாரென்று அழைப்பைத் துண்டிக்க, இதென்ன புதுப்பழக்கம் என்று எண்ணியவாறே தலையை அழுந்த கோதி தன்னைச் சமன்படுத்தியவனாய் இருக்கையில் இருந்து எழுந்தவன் தனது ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியாவை கிளப்பினான்.

வழிநெடுக்க அவனது அன்னையின் விசித்திர பழக்கத்திலேயே மனம் மூழ்கி இருக்க, இதனில் அவனது தந்தையின் மரணத்திற்கு முன் தன்னை அவர் கண்ட நிமிடத்தில் அவர் முகத்தில் தவழ்ந்த நிம்மதியும், பின் நெடுமூச்சும் ஆர்யாதித்யாவின் கண்முன் விரிய, ஒருவேளை இவை ரெண்டுக்கும் இடையில் சம்பந்தம் எதுவும் இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றியது.

அடுத்தச் சில மணித்துளிகளில் அவனது கார் அவர்களது அரண்மனையைப் போன்ற வீட்டினை அடைய, அவனுக்காகத் திறக்கப்பட்ட பிரதான வெளிவாயிலின் வழியாய் நெருப்பைப் போல் உள் நுழைந்த அவனது ரோல்ஸ் ராய்ஸ் கீறிச்சென்ற சத்தத்துடன் ப்ரேக்கிட்டு கராஜினுள் நிற்க, அந்தச் சத்தத்திலேயே அவனது வருகை சந்தியாவிற்குத் தெரிவிக்கப்பட்டது.

காரைவிட்டு இறங்கியவன் விடுவிடுவென வீட்டிற்குள் நுழைய, "மேடம் உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க சார்.." என்று பயபக்தியுடன் கூறினார் மகாதேவனின் செயலாளர் மணிமாறன்.

அவரைத் திரும்பிப் பார்த்தவன் பதிலொன்றும் கூறாது வேக நடையுடன் அன்னையின் அறையை அடைய, அவனுக்காகக் காத்திருந்த சந்தியா அவன் உள் நுழைந்ததும் தானாகவே கதவை மூடியவர், "நீ, ஐ மீன் நாம ரெண்டு பேரும் தமிழ்நாட்டில் இருக்கும் பூவரசம்பட்டிக்கு போகணும் ஆர்யா..." என்றார்.

"What? பூவசரம்பட்டி?"

"யெஸ், பூவசரம்பட்டி, உங்க அப்பா பிறந்த ஊர்."

"யெஸ், எனக்கும் அது தெரியும், but நாம எதுக்கு அங்க போகணும்?"

அவனது கேள்விக்கு, "உன் அப்பா.. " என்று எதுவோ சொல்ல வந்தவர் சட்டென நிறுத்தி பின் தன்னைச் சமன்படுத்தியவராய், "ஆர்யா, நான் உன்னுடைய அம்மா தானே?" என்றார் அமைதியாக.

"மாம், நான் என்ன சின்னப் பையனா, இது மாதிரி பஸில் [puzzle] வச்சு பேசுறதுக்கு?"

"நீ சின்னப் பையன் இல்லைன்னு உன்னைப் பெற்றவள் எனக்கும் தெரியும் ஆர்யா."

"தென், எதுக்கு இது மாதிரியான சில்லியான கொஸ்டின்ஸ் எல்லாம் கேட்குறீங்க?"

"இது சில்லியான கொஸ்டின் இல்லை ஆர்யா. எனிவேய்ஸ், நாம உடனேயே பூவசரம்பட்டிக்கு போகணும், அவ்வளவு தான்?"

"சரி, திரும்பவும் கேட்குறேன், எதுக்கு?"

அவனது கேள்வியில் அவனைச் சில நொடிகள் கூர்ந்துப் பார்த்தவர் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேற, அங்கு நின்று கொண்டிருந்த மணிமாறனைப் பார்த்தவராய், "நாங்க இப்பவே பூவரசம்பட்டிக்கு போகணும். ஜெட்டை ரெடி பண்ணுங்க மணி.." என்றார்.

அவரும் சரி என்பது போல் ஆமோதித்தவர் உடனேயே வெளியேற, அவர்களின் செயல்களில் ஆர்யாவிற்குக் குழப்பம் தான் வந்தது.

தன் அன்னையை வேகமாய்த் தொடர்ந்தவன், "மாம்.." எனவும், அவனைத் திரும்பிப் பார்த்த சந்தியா, "பூவரசம்பட்டியில் ஒரு கல்யாணம் நடக்கப்போகுது. அது நடக்குறதுக்குள்ள நாம போகணும் ஆர்யா." என்றார் இறுகிய தொனியில்.

"பூவரசம்பட்டியில் கல்யாணமா? அதுவும் நம்ம ப்ரைவேட் ஜெட்டில் போற அளவுக்கு அது என்ன அவ்வளவு பெரிய முக்கியஸ்தர்களின் வீட்டுக் கல்யாணமா? அப்படி அந்தக் கல்யாணத்துல நாம கலந்துக்கிடணும்னு அவசியமா என்ன?"

"இல்லை.."

"பிறகு எதுக்கு மாம் நாம போகணும்?"

"நாம போறது கல்யாணத்தில் கலந்துக்கிறதுக்காக இல்லை ஆர்யா.."

"Then?"

"அந்தக் கல்யாணத்தை நிறுத்துறதுக்காக.."

அவரது பதிலில் ஆர்யாதித்யாவின் கால்கள் சட்டென நடையை நிறுத்தின.

பெரும் எரிச்சலுடன், "மாம் ஒரு கல்யாணத்தை நிறுத்தணும்னா நம்ம ஆட்களிடம் சொன்னால் போதாதா? அவங்க நிறுத்திடுவாங்களே.. நாம எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்??" என்றான்.

"அது எனக்கும் தெரியும் ஆர்யா, ஆனால் அந்தக் கல்யாணத்தை நிறுத்த நம்மால் மட்டும் தான் முடியும்."

"கொஞ்சம் புரியற மாதிரி சொல்றீங்களா?"

"எல்லாத்தையும் நீ அங்க வந்து புரிஞ்சிப்ப"

"சாரி மாம். என்னால் முடியாது. ஒரு சாதாரணக் கல்யாணத்தை நிறுத்துற வேலைக்கெல்லாம் என்னால் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. நீங்க போங்க, உங்களுக்குத் தேவைப்படுற உதவிகளைச் செய்ய நான் என் ஆட்களை அனுப்புறேன்."

கூறியவனாய் மடமடவென நடந்தவன் வீட்டை விட்டு வெளியேற, ஆயினும் தனது காரை செலுத்திக் கொண்டிருந்த ஆர்யாவின் உள்ளுணர்வு உன் அம்மா சொல்வதைக் கேள் என்பதைக் கட்டளைப் போல் அவனுக்குப் பிறப்பித்தது.

யாரை நம்புகிறானோ இல்லையோ விவரம் தெரிந்த நாளில் இருந்தே தனது உள்ளுணர்வுகளை (Intution/Instinct) நம்பி வெற்றிக் கண்டிருந்தவன் அவன்.

ஆனால் ஏனோ அன்று அவ்வுணர்களை மதியாது அந்நேரத்திலும் அலுவலகத்தை நோக்கி விரைய, மகனின் பிடிவாதமும் அழுத்தமும் நன்கு புரிந்ததிருந்ததில் வேறு வழியின்றிச் சந்தியா மட்டும் மறுநாள் விடிந்தும் விடியாதமுமாய்ப் பூவசரம்பட்டிக்கு பயணித்தார்.

ஏறக்குறைய ஐந்து மணி நேர விமானப்பயணம் முடிய, திருச்சி விமான நிலையத்தில் அவர்களது விமானம் தரையிறங்க, அந்நிமிடம் அவருக்கு வந்த தகவலை கண்டு அதிர்ந்து போனார்.

'இது எப்படி ஒரு கல்யாணத்தை இவ்வளவு ரகசியமா ஏற்பாடு செய்ய முடியும்? அதுவும் இவ்வளவு ஆட்களை நான் ஊருக்குள் அனுப்பி வைத்திருக்கும் பொழுது?'

மனம் பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தது.

ஆயினும் யோசித்துக் கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல என்று எண்ணியவராய் விமான நிலையத்தில் இருந்து விடுவிடுவென வெளிவர, அடுத்த ஒரு மணி நேரத்தில் அசுரவேகத்தில் அவர்களது கார், தஞ்சாவூரில் கட்டப்பட்டிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நோக்கி பறந்தது.

காலை மணி பதினொன்று.

"இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"

"இன்னும் அஞ்சு நிமிஷத்துல போயிடலாம் மேடம். பத்தே முக்காலில் இருந்து பதினொன்றே முக்கால் வரை முகூர்த்த நேரம்னு சொல்லிருக்காங்க. ஆனால் இன்னும் தாலி கட்டவில்லை மேடம். அதற்குள் நாம போயிடலாம்."

மணிமாறன் கூறியதும், "எப்படி மணி இந்த விஷயம் உங்களுக்குத் தெரியாமல் போச்சு? அந்த வீட்டு மேலே ஒரு கண்ணு வச்சிக்கங்கன்னு அவ்வளவு ஸ்ட்ரிக்டா சொன்னேனே, எப்படி இப்படி மிஸ் பண்ணினீங்க? நம்ம ஆளுங்க எல்லாம் என்ன பண்றாங்க? அந்தப் பையனையும் ஒரு நிமிஷம் விடாமல் வாட்ச் பண்ணுங்கன்னு சொல்லிருந்தேனே. திறமையான ஆட்கள் எல்லாம் செட் பண்ணிருக்கேன் மேடம், அவங்க கண்ணுல இருந்து அவன் தப்ப முடியாதுன்னு சொன்னீங்க. பிறகு எப்படி இந்தக் கல்யாணம்?" என்றார் கண்டிப்பான குரலில்.

"மேடம், கண்கொத்திப் பாம்பு மாதிரி பார்த்துட்டு தான் இருந்தோம், ஆனால் இது எப்ப ப்ளான் பண்ணினாங்க, எப்படி இப்படித் திடுதிப்புன்னு கல்யாணத்துக்கு அரேஞ்ச் பண்ணினாங்க, அதுவும் ரெண்டே நாளில் அப்படிங்கிறது ரொம்ப ஆச்சரியமாத் தான் இருக்கு மேடம். இதுல அந்தப் பையன் இங்க ஊருக்குள் நுழையவே இல்லைன்னு வேற சொன்னாங்க, ஆனால்.."

முடிக்காமல் நிறுத்தியவரை ஒரு முறைத் திரும்பிப் பார்த்த சந்தியா ஆழ்ந்த மூச்சுடன், "அட்லீஸ்ட் தாலி கட்டும் முன்னராவது போக முடியுமான்னு பாருங்க.." எனும் பொழுதே அவர்கள் கார் அந்தப் பிரம்மாண்ட திருமண மண்டபமான ஸ்ரீ மஹாலின் முன் வந்து நின்றது.

அவரது கார் மண்டபத்திற்குள் நுழைந்த கணம் ஏதோ தோன்ற அதுவரை கண்களில் நீர்திரள தலையைக் கவிழ்ந்தவளாய் அமர்ந்திருந்த மித்ரலட்சுமி விருட்டென நிமிர்ந்து நோக்கினாள்.

அதே நேரம் அவளின் அதிர்வில் அவளை நோக்கித் திரும்பிப் பார்த்தான் அவளுக்கருகில் மணமகனாக அமர்ந்திருக்கும் ஆருஷ். ஆயினும் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மீண்டும் அவள் தலைக்கவிழ, அதுவரை அதனைக் கவனிக்காது இருந்தவனுக்கு, ஏறிட்டுத் தன்னை நோக்கி பின் தலைகவிழ்ந்தவளின் விழிகளில் கோர்த்திருந்த கண்ணீர் குழப்பத்தைக் கொணர்ந்தது.

எதற்கு இந்த அழுகை? இந்தத் திருமணம் இவளுக்குப் பிடிக்கவில்லையா?

எண்ணியவனுக்குச் சென்ற மாதம் மித்ரலட்சுமியை தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பூவசரம்பட்டிக்கு சென்ற நாள் நினைவிற்கு வந்தது.

வீட்டு வாயிலில் பல லட்சங்கள் பெறுமான கார் வந்து நின்றதுமே வியப்புடன் வெளியே வந்த, மித்ரலட்சுமியின் மூத்த மாமனின் மகன் அதியமான் ஆருஷைக் கண்டதும் பிரமித்து நின்றான்.

அவனது பிரமிப்பைக் கண்டு புன்னகைத்தவாறே அவனைக் கடந்து வீட்டிற்குள் நுழைந்த ஆருஷ், பெரியவர்களைப் பார்த்துக் கைக்கூப்பியவனாய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அவனது AA Group of Companies மிகவும் பிரபலமானது என்பதால் அதியமானையும் விடப் பிரமித்தவர்களாய் அவனை அமரச் சொல்லி அவன் வருகையைப் பற்றி விசாரித்தவர்கள் அவன் பேசியதைக் கேட்டதும் அதிர்ந்துப் போனார்கள்.

"இல்லைங்க, எங்க வீட்டுப் பொண்ணை வெளியாட்களுக்குக் கொடுக்கிறது இல்லைன்னு முடிவு செய்திருக்கோம். என் மகன் அதியமான் லட்சுமிக்கு முறைப்பையன். அதனால் அவனுக்குத் தான் அவளைக் கட்டி வைக்கிறதா இருக்கோம்."

இது மூத்தவர் நடேசனின் பேச்சு.

அவர் முடிப்பதற்குள் தொடர்ந்தவராய், "என் பையன் சத்யன், அவனும் லட்சுமிக்கு முறைப்பையன் தான். லட்சுமி விருப்பப்பட்டால் சத்யனுக்கு அவளைக் கல்யாணம் செய்துக்கொடுக்க நாங்க முடிவு பண்ணிருக்கோம்." என்றார் மித்ரலட்சுமியின் அடுத்த மாமன் சிங்காரவேலன்.

ஆக இவர்களை மீறி மித்ரலட்சுமியின் கழுத்தில் தாலிக்கட்டுவது என்பது சற்றுக் கடினம் தான்.

ஆனாலும் இங்கு வருவதற்கு முன்பே இந்தக் குடும்பத்தைப் பற்றி மட்டுமல்லாது, அவர்களின் சரித்திரத்தையே ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுடன் வந்திருந்த ஆருஷ் சில நிமிடங்கள் யோசித்தவன் தனது பிஸ்னஸ் மூளையை உபயோகிக்க ஆரம்பித்தான்.

"உங்களுடைய விருப்பமும் திட்டங்களும் எனக்குத் தெரியும். அதற்காக உங்களை நான் குறை சொல்ல முடியாது. அதற்கான உரிமையும் எனக்கு இப்போ கிடையாது. ஆனால் என்னால் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் திடமாய் உறுதியளிக்க முடியும். அதாவது எனக்கு மித்ரலட்சுமியை மட்டும் நீங்க கொடுங்க. அவள் பெயரில் இருக்கும் எந்தச் சொத்தும் எனக்கு வேண்டாம். அதை விளக்கமா எழுதிக் கொடுத்த பிறகே நான் உங்களுடன் தாம்பூலத்தட்டு மாத்துவேன், போதுமா?"

அவனது கூற்றுக்கு ஆரம்பத்தில் தாம்தூம்மென்று குதித்தவர்கள் பிறகு அவன் மேற்கொண்டு தனது சொத்துகளில் சிலவற்றை அவர்கள் அனைவருக்கும் சரிசமமாய்ப் பிரித்துக் கொடுக்கின்றேன் என்று கூறியதும் அவர்களது நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.

அதுமட்டுமல்லாது மித்ரலட்சுமியின் பெயரில் அவளது மாமன் மகாதேவன் எழுதி வைத்திருந்தாகக் கேள்விபட்ட சொத்துகளும், தற்பொழுது அவர்கள் வசிக்கும் பெரிய வீட்டையும் அவர்களுக்கே விட்டுக்கொடுப்பதாய் ஆருஷ் கூற, அதற்குப் பிறகு அவர்களது வாயில் இருந்து வார்த்தைகள் எதுவுமே வெளிவரவில்லை.

அந்தளவிற்கு அவர்கள் உள்ளுக்குள் புளகாங்கிதம் அடைந்து இருந்தார்கள்.

அதனை உணர்ந்துக் கொண்டவன் அழகாய் காய்களை நகர்த்தினான்.

"வழக்கமா பெண்கள் தான் சீர்வரிசை கொண்டு வருவாங்க. ஆனால் மித்ரலட்சுமிக்காக நான் உங்களுக்குச் சீர் தரேன். மாப்பிள்ளைவீட்டுச் சீர்வரிசை. அதாவது நான் உழைச்சு சம்பாரிச்ச என் சொத்துகளில் இருந்து சில சொத்துகளை உங்கள் பெயரில் நான் மாற்றிக் கொடுக்கின்றேன்.. அவை பல லட்சங்கள் பெறும்."

நடேசன் அமைதியாக இருந்தார் என்றால், சிங்காரவேலன், பிரபாகரன் ஆகியோர்களின் முகங்கள் மட்டும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் பிரகாசமடைய, இறுதியில் அனைவரும் சந்தோஷமாய் ஒப்புக்கொள்ளும் வகையில் அத்திருமணத்திற்கான அடித்தளத்தை அழகாய் இட்டான் ஆருஷ்.

"உங்க விருப்பப்படியே உங்களுடைய பெயரிலேயே நான் சொத்துகளை மாற்றி எழுதுறேன். ஆனால் ஒரு கண்டிஷன். அந்தச் சொத்துகள் அனைத்துமே நான் மித்ரலட்சுமியின் கழுத்தில் தாலிக்கட்டியதற்குப் பிறகு தான் உங்களுக்குச் சொந்தமாகும். ஒருவேளை எங்க கல்யாணம் நடக்கலைன்னா அந்தச் சொத்துகளுக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒகே?"

"ஆஹா, அதற்கு என்ன? கண்டிப்பா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும்."

ஒரே குரலில் சிங்காரவேலனும் பிரபாகரனும் கூற, இளைய தலைமுறையான அதியமான் கூடப் பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தவாறே ஆருஷின் கட்டளைகள் அனைத்திற்கும் சம்மதித்தான்.

ஆனால் ஏனோ சத்யனின் முகம் பேயறைந்தது போல் மாறியதை அவர்கள் அனைவருமே கவனிக்கவில்லை.

மனதிற்குள் என்னவோ தோன்ற அவன் புறம் திரும்பிய ஆருஷிற்கு முகத்தைக் காட்ட விரும்பாத சத்யன் சட்டென முகத்தை மறுபக்கம் திருப்பியவன், அடுத்த நொடியே அருகில் இருக்கும் அறைக்குள் சென்று மறைந்தான்.

அவனது செய்கை உறுத்தலாக இருந்தாலும் பெரியவர்களின் சம்மதத்தில் வெற்றி நிம்மதியில் களிப்படைந்த ஆருஷும் ஒன்றை மறந்து போனான். பணத்தாசை பிடித்த அந்தக் குடும்பத்து ஆண்களும் ஒரு விஷயத்தை மறந்துப் போனார்கள்.

அது, அத்திருமணத்தில் மித்ரலட்சுமிக்கு விருப்பம் இருக்கின்றதா இல்லையா என்பதைக் கேட்க மறந்தார்கள்.

அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தையும், பாட்டி சாவித்திரியின் படுக்கை அறைக்குள் இருந்தவாறே கேட்டுக் கொண்டிருந்த மித்ரலட்சுமிக்கு அது திருமணப் பேச்சுவார்த்தையாகத் தெரியவில்லை. மாறாக ஏதோ ஒரு தொழில் ஒப்பந்தம் போலவே தெரிந்தது. அதனில் அவள் குடும்பத்தினர் மேல் மட்டுமல்ல, ஆருஷை நினைத்தும் வேதனை பெருகியது.

ஆக, இந்த உலகத்தில் உள்ள மொத்த ஆண்வர்க்கமே இப்படித்தானா?

மௌனமாய் அவள் உருக, ஆயினும் அவளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது அன்றில் இருந்து ஆருஷ் கூறிய அனைத்திற்கும் வேகவேகமாய்த் தலையை ஆட்டியவர்கள் திருமணத்திற்கான ஏற்பாட்டைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டார்கள்.

ஆயினும் இடையில் ஏற்பட்ட சிற்சில தடங்கள்களில் சற்றுத் தடுமாறியவர்கள் ஆருஷின் திட்டத்தின் படியும் அவன் கொடுத்த தைரியத்தின் படியும் அவன் இரகசியமாய் ஆட்டுவித்த ஆட்டங்களுக்கு ஏற்றவிதமாய் ஆட, இதோ இன்னும் சில நிமிடங்களில் ஆருஷ் மித்ரலட்சுமியின் கழுத்தில் ஆசைஆசையாய் மாங்கல்யத்தை அணிவிக்கப் போகின்றான்.

அப்படியான தருணத்தில் இதென்ன மித்ரலட்சுமின் கண்களில் கண்ணீர்!!

பழைய நினைவுகளுடன் தற்பொழுதைய சூழ்நிலையை நினைத்தவனுக்கு ஏதேதோ விசித்திரமான எண்ணங்கள் பிறக்க, ஆயினும் வார்த்தைகளற்று மௌனமாய் அமர்ந்திருந்தவன் ஐயர் கூறிய சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் செய்து கொண்டிருந்தான்.

நிமிடங்களும் கடக்க, ஏறக்குறைய ஆயிரம் விருந்தினர்கள் கலந்துக்கொள்ளும் அளவிற்கு ஜெகஜ்ஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான ஸ்ரீ மஹாலில் நூற்றுக்கும் குறைவான நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கூடியிருந்தனர். ஆயினும் அப்பொழுதும் திருமண மண்டபமே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்க, முகூர்த்த நேரம் நெருங்கியதை அறிவித்த ஐயர் திருமாங்கல்யத்தைத் தாம்பூலத்தில் வைத்து ஆசீர் வாங்கிவருமாறு அதனைச் சிங்காரவேலனின் மனைவி பார்வதியிடம் கொடுத்தார்.

தாம்பூலத்தைத் தன் கையில் வாங்கிய பார்வதி மணவறைக்குக் கீழ் அமர்ந்திருக்கும் விருந்தினர்களிடம் அதனை எடுத்துச் சென்றவர் பெரியவர்கள் ஒவ்வொருவரிடம் ஆசீர் வாங்க, அனைவரும் மாங்கல்யத்தைத் தொட்டு ஆசீர்வாதம் செய்த நேரம், தங்களது ஆட்கள் பின் தொடர திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சந்தியா.

அதே நேரம் பெரியவர்களின் ஆசீரோடு மங்கலவாத்தியங்கள் முழங்க, மித்ரலட்சுமியின் கழுத்தில் அணிவிக்க மாங்கல்யத்தைக் கையில் எடுத்த ஆருஷின் கண்கள், வாயிலின் அருகே நின்றிருந்த சந்தியாவின் மீது நிலைத்தன.

நிலைத்தது நிலைத்தப்படியே இருந்தது!

"மாங்கல்யத்தைக் கட்டுங்கோ.." என்று ஐயர் கூறியும் கட்டாது சந்தியாவையே வெறித்துப் பார்த்தவனாய் அமர்ந்திருந்தவனது அமைதி மித்ரலட்சுமிக்குச் சந்தேகத்தைக் கொணர, தலைகுனிந்து அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

குழப்பத்தில் முகம் சுருங்க இடுங்கிய கண்களுடன் வாயிலைப் பார்த்திருந்தவனது பார்வையைப் பின் தொடர்ந்து தானும் நோக்கியவள் மணவறையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த சந்தியாவைக் கண்டதும் வியந்துப் போனாள்.

'இவங்க எங்க இங்க?'

மனம் கேள்விக் கேட்க, மங்கலவாத்தியங்கள் பெரும் சத்தத்துடன் இசைத்துக் கொண்டிருந்தாலும், அட்சதை தூவ மஞ்சள் அரிசியுடன் உற்றார் உறவினர்கள் நின்றவாறே காத்திருந்தாலும், ஏனோ மாங்கல்யத்தை அணிவிக்க இயலாதது போல் திடுக்கிடலுடன் அமர்ந்திருந்த ஆருஷிற்கு, மணமேடையைச் சந்தியா நெருங்கியதும் புரிந்துப்போனது.

மேடையில் அமர்ந்திருந்தவனது அதிர்ச்சி புரிந்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டவராய், "நான் சந்தியா, மித்ரலட்சுமியின் தாய் மாமன் மகாதேவனின் மனைவி." என்றார்.

அவரது வார்த்தைகளில் மணமேடையில் அமர்ந்திருந்த ஆருஷ் எழுந்து நிற்க, அதற்குள் சிங்காரவேலனும், பிரபாகரனும் அவரைச் சூழ்ந்து கொள்ள, மணமேடையில் ஏறிய சந்தியா தன் கையில் பிடித்திருந்த கோப்புகளில் இருந்து சில காகிதங்களை எடுத்தவர் அதனை ஆருஷிடம் நீட்டினார்.

என்ன என்பது போல் யோசித்தவாறே அதனை வாங்கிப் புரட்டிப் பார்த்தவன் குழப்பத்துடன் மீண்டும் சந்தியாவை ஏறெடுத்து நோக்கினான்.

"ஆருஷ் ஆதித்யா. ஏ.ஏ க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் நிறுவனர்.. உங்க வசதிக்கு இதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் இதோ நிற்கிறாங்களே, என் கணவரின் உடன் பிறந்தவர்கள், இவர்களுக்கு இது ரொம்ப முக்கியம். மித்ரலட்சுமிக்கு சேர வேண்டிய சொத்துகள், ஐ மீன், இவர்கள் இப்போ வசிக்கும் அந்த வீட்டையும் சேர்த்துச் சொல்றேன், எல்லாமே என் கணவர் மகாதேவனுக்குத் தான் சொந்தம். அதைப் பற்றி என் மாமனார் சுவாமிநாதன் பிள்ளை எழுதிய உயிலின் காப்பித் தான் இது. அதாவது என் கணவர் மகாதேவன், அவருக்கு வரப்போகும் சொத்துகளை மித்ரலட்சுமியின் அம்மா சுஜாதாவிற்குத் தான் எழுதிக் கொடுக்கப் போவதாகவும், சட்டப்படி அந்தச் சொத்துகள் சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு மித்ரலட்சுமிக்குத் தான் வரணும் என்று சொன்னதாக மட்டும் தான் உயிலில் எழுதியிருக்கு, ரைட்?"

கூறியவர் சற்று நிறுத்தி, மணமேடையில் இன்னமும் அதிர்ச்சியுடன் உட்கார்ந்திருந்த மித்ரலட்சுமியை நோக்க, அவரைப் பார்த்தவாறே அவள் மெல்ல எழுந்து நிற்க, அவளைக் கூர்ந்துப் பார்த்தவாறே சந்தியா தொடர்ந்தார்.

"ஆனால் அப்போ என் கணவர் ஒரு கண்டிஷனையும் என் மாமனார் சுவாமிநாதன் பிள்ளையிடம் குறிப்பிட்டிருந்தார். அது என்னன்னு உங்க யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா சுவாமிநாதன் பிள்ளை அதை அவருடைய உயிலில் எழுதவில்லை."

கூறியவராய் அருகில் நின்றிருந்த மித்ரலட்சுமியின் மாமன்களைப் பார்க்க, அரண்டுப் போனவர்களாய் அவர்கள் ஒருவருக்கொருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

"என் கணவர் மகாதேவன் மூலம் சுஜாதாவிற்குச் செல்லும் சொத்துகளைச் சுஜாதாவால் விருப்பம்போல் விற்கவோ, தானமாக வழங்கவோ முடியாது. அதுமட்டுமல்ல, அவர்கள் வசித்து வந்த பெரிய கிராமத்து வீடும் என் கணவருடைய கட்டுப்பாட்டிலேயே தான் இருக்கும். அவர் விரும்பினால் மட்டுமே அது சுஜாதாவிற்கோ, அவளுக்குப் பிறகு அவளது மகளான மித்ரலட்சுமிக்கோ உரிமையாகச் செல்லும். மேலும், அந்தச் சொத்துகள் குடும்பத்திற்குள்ளேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, பிற்காலத்தில் சுஜாதாவின் மகளுக்குக் கூட அவளது கணவரின் சம்மதமின்றி அவற்றை விற்கவோ, வேறு யாருக்கும் மாற்றிக் கொடுக்கவோ உரிமை இருக்கக் கூடாது என்று என் கணவர் தெளிவாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அத்துடன் அவர் இன்னொன்னையும் சொல்லி இருந்தார். அது சுவாமிநாதன் பிள்ளைக்கு மட்டும் தான் தெரியும்."

அவர் நிறுத்த, இதென்ன கிணறு வெட்ட பூதம் கிளம்புகின்றதே என்பது போல் விழிகள் பிதுங்க மாமன்கள் பார்த்திருக்க, சிறிது புன்னகையுடன், "அதையும் என்னன்னு நானே சொல்றேன். ஒருவேளை மித்ரலட்சுமியின் கல்யாணம் அவ விருப்பப்படி நடக்கலைன்னா அந்தச் சொத்துகள் எல்லாமே என் கணவரையே வந்து சேரும்." என்று அவர் கூறியதுமே கிடுகிடுத்துப் போனார்கள் அவர்கள்.

ஏனெனில் என்னத்தான் ஆருஷ் பல இலட்சங்கள் பெருமான நிலங்களை அவர்களுக்குக் கொடுத்திருந்தாலும், மகாதேவனின் பெயரில் அவரது தந்தை எழுதி வைத்த சொத்துகள் பன்மடங்கு பெருகி பற்பல கோடிகளைத் தொட்டிருந்தது.

பேச நாவு எழாது அவர்கள் தடுமாற, சூழ்நிலையின் விகாரத்தைப் புரிந்து கொண்ட ஆருஷின் மனக்கண்களின் முன் சற்று முன் மித்ரலட்சுமியின் கண்களில் தான் பார்த்த கண்ணீர் மீண்டும் வந்துப்போனது.

சொத்துகள் பற்றிக் கவலையில்லை! ஆனால் ஒருவேளை இவள் இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினால்?

யோசித்தவனுக்கு அவளிடம் அவளது விருப்பம் பற்றிக் கேட்காமல் திருமணத்தை முடிவு செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது. என்ன புத்திசாலியான தொழிலதிபனாக இருந்தும் என்ன பிரயோஜனம்? சில நேரங்களில் நாம் சாதாரணமாக எண்ணி விடும் காரியம் நம்மை எழ முடியாதளவிற்குக் கவிழ்த்துவிடுமே!!

இதயம் அதிர அந்த அதிர்ச்சியைக் கண்களும் வெளிப்படுத்த, சட்டென மித்ரலட்சுமியின் புறம் திரும்பியவன் அவளது கரத்தை பற்றியவனாய், "எது நடந்தாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் யோசிச்சு முடிவெடு மித்ரா." என்றான் கரகரப்பான குரலில்.

அதுவரை அவன் மித்ரலட்சுமியுடன் பேசியதில்லை. இதுவே முதன்முறையாகப் பேசுகின்றான்.

அப்படி இருக்க, அந்நாள்வரை அவளைச் சுற்றி உள்ளவர்கள் அவளை லட்சுமி என்றே அழைத்திருக்க, புதிதாகத் தன்னிடம் பேசுபவனோ 'மித்ரா' என்றழைத்ததில் அவள் மேனி முழுவதையும் ஒரு நடுக்கம் ஆட்கொள்ளத் துவங்கியது.

அவனது குரலும், தன்னை விளித்த விதமும் எப்பவோ எங்கேயோ கேட்டது போல் இருக்க, நெஞ்சம் அழுந்துவதைத் தாங்க முடியாதது போல் விழிகளில் இன்னமும் நீர்த்தேங்க, வியப்பும் அதிர்ச்சியும் கலந்தவளாய் அவனை நோக்கினாள்.

அவளது கண்களில் திரும்பவும் கண்ணீரைக் கண்டவன் அடுத்த விநாடியே அவளைவிடுத்து சந்தியாவின் அருகில் சென்றவனாய், மித்ரலட்சுமியின் மாமன்களின் முகம் பார்த்தவாறே, "அந்தச் சொத்துகளின் மதிப்பு எவ்வளவோ அதையும் விட அதிகமாய், I mean, நான் என் சொத்துகளின் ஒரு பகுதியையே உங்களுக்குக் கொடுத்துடுறேன்.. முதலில் கல்யாணம் முடியட்டும்.." என்றான்.

"கொஞ்சம் இருங்க ஆருஷ்.. அதுக்குள்ள எதுக்கு இந்த அவசரம்?"

மிடுக்குடன் கம்பீரமாய்க் கேட்டார் சந்தியா.

அவர் எங்கு வருகின்றார் என்று ஒரு தொழிலதிபனாய் ஆருஷிற்குத் தெள்ளெனப் புரிந்தது. ஆயினும் அவனால் அக்கணம் எதுவும் செய்ய முடியவில்லை!

காரணம், வந்திருந்த விருந்தினர்களின் பார்வையும் கவனம் முழுவதுமே அவர்களின் மேல் தானே இருந்தது. அதுவுமின்றித் தேசம் முழுக்கவும் அறிந்த பிரபலமான தொழிலதிபன் வேறு! இந்நேரம் அவனது திருமணத்தை விருந்தினர்களில் யார்யார் அலைபேசியின் மூலம் காணொளிக் காட்சிகளாகப் படம்பிடித்துக் கொண்டிருக்கின்றார்களோ? விருப்பம் இல்லாத பெண்ணின் கழுத்தில் தாலிக்கட்டுவது வேறு சட்டப்படி குற்றமாயிற்றே.

அனைத்தையும் புரிந்துக் கொண்டவனாய் வேறு வழியின்றி அவன் மௌனியாக, மெதுவாய் மித்ரலட்சுமியை நெருங்கிய சந்தியா அவளது கரத்தைப் பற்றினார்.

"நான் கேட்குற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லு மித்ரலட்சுமி. அது போதும்."

அவள் நீர்திரளும் விழிகளுடன் அவரையே பார்த்திருக்க, "உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா?" என்றார்.

அவர் கேட்டு முடித்ததும் சில நொடிகள் அமைதியாய் நின்றவள் பின் குழப்பத்துடன் ஆருஷைத் திரும்பிப் பார்க்க, அவள் சம்மதிப்பாய் தலை அசைப்பாள் என்று அந்த நொடி கூட ஆர்வத்துடன் பார்த்திருந்த ஆருஷின் ஆழ்மனது அவளது மௌனத்தைக் கண்டு துடிக்க ஆரம்பித்தது.

ஆனால் அவள் சம்மதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்பதை அவன் கவனிக்கத் தவறினாலும் சந்தியாவின் கவனத்தில் இருந்து அது தப்பவில்லை.

இருந்தும் இது எனக்கான சந்தர்ப்பம் என்று எண்ணியவராய் மெல்லமாய்ப் புன்னகைத்த சந்தியா விருந்தினர்கள் கூட்டத்தை நோக்கித் திரும்பினார்.

கைகள் இரண்டையும் குவித்து, "மன்னிச்சிக்கங்க! இந்தக் கல்யாணம் நடக்காது. மணப்பெண்ணான மித்ரலட்சுமிக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைங்கிறது இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஸோ, இது ஒரு கட்டாயக் கல்யாணம்." என்று அவர் கூறிய நேரம் சற்றே திடுக்கிடலுடன் அவரை நோக்கித் திரும்பினாள் மித்ரலட்சுமி.

அவள் மனம் என்ன விரும்புகின்றது என்றே தெரியாத நிலையில் அவள் தத்தளித்திருந்தாள்.

நிச்சயமாக, தன் சம்மதத்தைப் பெறாமல் ஏற்பாடு செய்யப்பட்ட கட்டாயத் திருமணமே, சில நொடிகளுக்கு முன் ஆருஷும் தானும் இணைவதற்காக நடைபெறவிருந்தது. அது இப்பொழுது தடைப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்க, ஆனாலும் ஏன் என் மனம் ஏதோ ஒரு திகிலில் ஆட்கொண்டிருப்பது போல் தவிக்கின்றது.

அதற்கான காரணம் அப்பொழுது அந்தப் பேதைக்குப் புரியவில்லை.

தொடர்ந்த சந்தியா, "அதுவும் ஒரு வியாபாரம் போல் சொத்துகளைக் கொண்டு பேரம் பேசி முடிவு செய்த கல்யாணம் இது. அதில் மணப்பெண்ணுக்கு உடன்பாடில்லை அப்படின்னா இந்தக் கல்யாணத்தை நடத்துவது பெருந்தவறு.." என்றவர் ஆருஷின் முகம் நோக்கினார்.

திடுக்கிடலுடன் அவரைப் பார்த்திருப்பவனின் மனம் எண்ணியது அவருக்கும் புரிந்தது.

அதே சொத்துகளை மித்ரலட்சுமியின் மாமன்களிடம் காட்டித்தானே அவரும் திருமணத்தைத் தடை செய்வது. ஆனால் அவனால் அங்குச் செய்ய முடிந்தது எதுவுமே இல்லையே!!!!

விருந்தினர்களுக்கு இடையே பெரும் சலசலப்புத் தோன்ற, அச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக உபயோகப்படுத்த துணிந்த சந்தியா, மித்ரலட்சுமியின் வலதுக் கரத்தைப் பிடித்தவாறே மணமேடையை விட்டு கீழிறங்க, அதே நேரம் அவரது அலைபேசி அலறியது.

புதிய எண்ணை பார்த்தவாறே மண்டபத்தின் வாயிலை நோக்கி நடக்க, நின்று பின் மீண்டும் அலறிய அலைபேசியை உயிர்பித்தவராய் காதில் வைக்க, "லட்சுமி.. நான் அ.. அ.. அம்மம்மா பேசுறேம்மா. என்னை இந்தச் ச.. சத்யன் ரொம்பக் கொடுமைப் படுத்தறான்மா." என்றதில் அங்குப் பூவசரம்பட்டியில் நடந்து கொண்டிருக்கும் கொடுமை சந்தியாவிற்குப் புரிந்தது.

"நான் மித்ரலட்சுமி இல்லை.."

"தெரியுங்க.. சாரி சாரி, நான் உங்களை அப்படிச் சொல்லக்கூடாது. அதாவது மகாதேவன் பெரியப்பாவின் மனைவி நீங்க. ஸோ, பெரியம்மான்னு தானே நான் உங்களைக் கூப்பிடணும். இருந்தாலும் இங்க வீட்டுல நடந்துட்டு இருப்பது உங்களுக்குப் புரியுதுன்னு நினைக்கிறேன். இந்நேரத்துல நீங்க கல்யாணத்தை நிறுத்தி இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால் சொல்றேன், ஒழுங்கா அந்த லட்சுமியை இங்க கொண்டு வந்து விட்டுட்டு நீங்க உங்க ஊரைப் பார்க்க போயிடுங்க. இல்லைன்னா இந்தக் கெழவிக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல சங்கு ஊத வேண்டியது தான்." என்றான் எகத்தளமாய்.

அதனில் சந்தியாவின் ஒற்றைப் புருவம் உயர்ந்தது.

உன் வயதிற்கே நீ இவ்வளவு விளையாடும் பொழுது, நான் என் வயதிற்கும் அனுபவத்திற்கும் எவ்வளவு விளையாட முடியும்?

யோசித்தவராய், "இன்னும் கொஞ்சம் நேரத்துல நாங்க அங்க வருவோம். ஐ மீன், உனக்கு வேண்டியவங்களைக் கூட்டிட்டு நான் அங்க வருவேன். ஒருவேளை அவங்க மட்டும் தான் அங்க வரணும்னு, நான் வரக்கூடாதுன்னு நீ கண்டிஷன் போட்டால், நீ இப்போ என்னைக் கூப்பிட்டதற்கான காரணத்தை நான் அவங்கக்கிட்ட சொல்ல மாட்டேன். But, அவங்களையும் அழைச்சிட்டு என் ஊருக்கு நான் போயிட்டே இருப்பேன், புரியுதா? ஏன்னா கொஞ்ச நேரம் முன்னாடி என் கிட்ட நீ பேச வச்சியே ஒரு பெண்மணி, அவங்களைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஸோ, நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ அதைத் தாராளமா செஞ்சுக்கோ.." என்றவர் அலைபேசியை அணைத்தவராய் மித்ரலட்சுமியுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

தொடரும்.
 
Last edited:
So engaging! Your writing makes it easy to imagine every scene.
சந்தியா ivlo years varama ipo yen பூவரசம்பட்டிக்கு vanthanga? Yen மித்ரா marriage ah stop pannitanga?
What ஆருஷ் will do now?
 
Santhiya enna plan ungaluthu
Mahadevan periya aaal pola pondatikita ellam sollitara
Mitra arus ku tan nu thonuthu ana
Aarya vidanume
Ennavagumo
 
Top