மீரா (மித்ரா)
The Eternal Echoes of Her Heart!
அத்தியாயம் - 7
********************************
'ஆர்யாதித்யா தேவன்.. சிவ கோத்திரம்.... அஷ்வினி நட்சத்திரம்..'
விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து தனது காரில் ஏறிய ஆருஷின் கண்கள், வெளியே சாலையில் எறும்பு போல் ஊர்ந்து கொண்டிருந்த பலதரப்பட்ட வாகனங்கள் மேல் பதித்திருந்தாலும் அவனது எண்ணங்கள் மட்டும் அங்கில்லை.
அவனது அமைதியைக் கண்டு கலக்கமுற்றவனாய் ஆருஷின் புறம் திரும்பிய மனோஜ், "சார்.." என்றான் சற்றுத் தயக்கமான குரலில்.
"ம்ம். சொல்லு."
"எப்படிச் சார் உங்க ரெண்டு பேருடைய கோத்திரமும் நட்சத்திரமும் இப்படி ஒத்தது மாதிரியே இருக்கு? ஐ மீன், இது மாதிரி ஒரே கோத்திரத்தோட நட்சத்திரத்தோட இந்த உலகத்துல வேற யாருமே பிறக்கும் வாய்ப்பே இல்லைன்னு நான் சொல்ல வரலை, ஆனாலும்.."
தயங்கியவாறே முடிக்காது மனோஜ் பேசியதைக் கேட்டதும் அணிந்திருந்த சட்டையின் மேல் பட்டனைக் கழட்டியவாறே அதனைத் தளர்வாக்கிய ஆருஷ் , "வூஃப்." என்று ஊதினான்.
அநியாயத்திற்குப் பதற்றமாகவோ அல்லது கோபமாகவோ இருக்கும் போது அவன் செய்யும் செய்கைகளே [mannerism] இவை. இதனில் 'டை' அணிந்திருந்தால் அதைக் கழட்டிக் கூட எறிந்துவிடுவான்.
"சரி அதைவிடுங்க. ஆனால் ஏன் திடீர்னு ஆர்யாதித்யாவோட கோத்திரம் பற்றி எல்லாம் விசாரிக்கச் சொன்னீங்க?"
"அதான் நீயே சொல்லிட்டியே."
"சார், ஆனால் அவருதும் உங்களதும் ஒரே மாதிரி இருக்கும்னு நீங்க எதிர்பார்த்தீங்களா? அல்லது உங்களுக்கு இது முன்னாடியே தெரியுமா? இதுல உங்க ரெண்டு பேரோடைய பேர் கூடக் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கு.."
மனோஜின் பேச்சில் ஆருஷின் கோபம் இன்னமும் அதிகரித்தது.
"என்ன பேச்சு இது மனோ? அவன் என்ன என் கூடப் பிறந்தவனா அவனைப் பற்றி எல்லாமே எனக்குத் தெரிஞ்சிருக்கிறதுக்கு. ஒருவேளை எனக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தால் நான் ஏன் அவனைப் பற்றி விசாரிக்கச் சொல்லப் போறேன்? இதுலெ ரெண்டு பேருடைய பேரும் ஒரே மாதிரி இருக்குன்னு குழம்பிக்கிற. எங்க ரெண்டு பேருக்குள்ள உறவு வகையில் ஏதாவது தொடர்பு இருந்திருந்தால் நான் உன்கிட்ட சொல்லி இருக்க மாட்டேனா?"
தனது மடத்தனத்தைப் புரிந்துக் கொண்டவன் போல் மனோஜ் அமைதியாக, ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் கழித்து அவர்களது கார் அலுவலகத்தை அடைந்தது.
காரை விட்டு இறங்கியவனாய் அலுவலகத்தில் தன்னறைக்குள் விரைந்தவனது மூளை ஏதோ புதுவித திட்டங்களில் ஆழ்கின்றது என்பதை உணர்ந்து கொண்ட மனோஜ் அவனுக்கு எதிரில் வந்து அமர்ந்தவன், " சார், அவரைப் பற்றிய முழுச்சரித்திரமும் வேணுமா சார்?" என்றான் அமைதியாக.
அதனில் தலை நிமிர்ந்த ஆருஷ், "யெஸ். அவனைப் பற்றி மட்டுமல்ல. அவனுடைய குடும்பத்தில் இருப்பவங்க அத்தனை பேருடைய விவரங்களும் எனக்கு வேணும். ஒரு விஷயம் கூடத் தவறவிட்டுடக் கூடாது.." என்றான் இறுகிய குரலில்.
மனோஜ் அறையைவிட்டு வெளியேற, மேஜையின் மீது இருந்த தனது பேனாவை சுழற்றியவாறே அமர்ந்திருந்த ஆருஷிற்குத் தோன்றியதெல்லாம் ஒன்று மட்டுமே.
மித்ரலட்சுமிக்கும் எனக்கும் அந்த ஆர்யாதித்யாவுக்கும் இடையில் என்னவோ இருக்கின்றது. எங்கள் மூவரையும் தொடர்பு படுத்திய நிகழ்வுகளே என் மனக்கண்கள் முன் காட்சிகளாய் விரிகின்றன.
ஆனால் அவை அனைத்துமே இன்றைய காலகட்டத்தில் நிகழ்வது போல் அல்ல! ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன், இராஜாக்களும் இராணிகளும் இந்த உலகத்தை ஆண்டு வந்த காலத்தில் நடைபெற்றது போலவே இருக்கின்றன!
அப்படி என்றால் ஏதோ ஒரு காலத்தில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாய் நாங்கள் பிறந்திருந்தோமா? விட்டகுறை தொட்ட குறை என்று சொல்வார்களே...
அதாவது பூர்வ ஜென்ம உறவுகளின் தொடர்ச்சியாக இப்பிறவியில் சில தொடர்புகள் ஏற்படும் என்றும், முற்பிறவியில் விட்டுச் சென்ற கடமைகள் இப்பிறவியில் நிறைவேற்றப்பட வேண்டுமெனில் மீண்டும் பிறப்போம் என்று கேள்விப் பட்டிருக்கின்றேனே. அது போலவா இது?
ஆருஷ் யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம் தஞ்சாவூரில் இருக்கும் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் தனது திருமணத்தைப் பதிவு செய்து கொண்டிருந்த ஆர்யாவின் கண்கள், தன்னருகில் நின்றவாறே பதிவேட்டில் நடுங்கும் விரல்களுடன் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கும் மித்ரலட்சுமியின் மீது பதிந்து, பின் தன்னைக் குழப்பமும் வியப்புமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அன்னையின் மீது நிலைத்தது.
புரிந்தும் புரியாமலுமாய் அவனைப் பார்த்திருந்தவரைக் கண்டு அவனது இதழ்கோடியில் புன்னகை நெளிந்தது! ஒற்றைப் புருவம் உயர்ந்தது!
அது சந்தியாவின் அடிவயிற்றில் மிகப்பெரிய பயப்பந்தை உருளச்செய்தது.
***************************
சில மணி நேரங்களுக்கு முன்.
'He landed' என்ற தகவலை அலைபேசியில் பார்த்ததுமே அப்பொழுதும் நம்ப முடியாது அமைதியாக அமர்ந்திருந்த சந்தியாவிற்கு ஆர்யா வருவதற்குத் தாமதாகவும் சஞ்சலமாக, அதற்குப் பின்தான் அவர் அடுத்த அஸ்திரத்தை எடுத்தார்.
பெரியவர் நடேசனின் மனைவி ரமாதேவியும், இளையவர் சிங்காரவேலனின் மனைவி பார்வதியும் நல்லவர்கள் என்றாலும், கணவர்களின் சொல் மீற முடியாதவர்கள். மித்ரலட்சுமி இல்லையெனில் பாட்டி சாவித்திரியை யார் பார்த்துக்கொள்வர் என்ற நிலையில், அந்த நேரத்தில் ஆருஷ் பணப்பலத்துடன் வந்து மித்ரலட்சுமியை பெண்கேட்க, அவர்களது திருமணத்திற்குப் பிறகு பாட்டியை மகாராணி போல் பார்த்துக்கொள்வோம் என்று வீட்டார் வாக்குறுதி அளித்தனர். அவர்களின் நோக்கம் 'சொத்து' என்பதைக் கவனித்து ஆருஷிற்குச் சிரிப்பு தான் வந்தது.
அவர்களைப் பெற்றவர்களை அவர்கள் பார்த்துக்கொள்ள ஒரு திருமணம் நடைபெற வேண்டுமா? சிரித்துக் கொண்டாலும் தன் தேவை நிறைவேறினால் போதும் என்பது போல் அவன் மகிழ்ச்சியுடன் இரகசியமாய்த் திருமண ஏற்பாட்டைக் கவனித்தான்.
ஆனால் நடந்ததோ வேறாயிற்றே!
என்னுடன் அழைத்துச் சென்றாவது சாவித்திரியை நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சந்தியா எவ்வளவோ எடுத்துக் கூறியும் மித்ரலட்சுமியின் மாமன்கள் சம்மதிக்கவில்லை.
இதனில் அந்தச் சத்யன் வேறு பெரும் அழிச்சாட்டியம் செய்ய, ஐயோ என்று மானசீகமாய் அவர் தலையில் அடித்துக் கொண்ட நேரம் தான் ஆர்யா பூவரசரம்பட்டியின் அந்தப் பெரிய வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தது.
அவன் உள்ளே நுழைந்ததும் தன்னிச்சையாகப் பெரியவர் நடேசன் எழுந்து நின்று அவனை வரவேற்றதும், அவனைக் கண்டதுமே மித்ரலட்சுமியின் கையைப் படக்கென விட்ட சத்யனின் தோற்றமும் சந்தியாவிற்கு ஒரு துளி நம்பிக்கையைக் கொடுத்தது தான்!!
ஆயினும் ஆர்யாவைத் தொடர்ந்து வழக்கறிஞர்களும், சட்ட ஆலோசகரும், குறிப்பாக நிர்வாக அதிகாரிகளும் நுழைய, அதனை எதிர்பாராத அவருக்கு அவனது திட்டம் புரிபடவில்லை.
டில்லியில் தன்னுடன் வருமாறு எவ்வளவோ கேட்டும் வர மறுத்த ஆர்யா திடீரெனப் பூவரசம்பட்டிக்கு வந்ததே ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்றால், அவனது பிரத்தியேக வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வந்தவன் சில நிமிடங்களிலேயே அனைவரும் அதிர்ச்சியடையும் அளவில் மித்ரலட்சுமியின் கழுத்தில் தாலிகட்டியது.
இதைச் சந்தியாவே எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் மற்றவர்களின் நிலை!!
வீட்டிற்குள் நுழைந்த ஆர்யா அன்னையைப் பார்த்தவாறே ஒற்றைப் புருவ ஏற்றலுடன் அவருக்கு அருகில் வந்தவன் சாய்விருக்கையில் கால் மேல் கால் போட்டவனாய் மிடுக்காய் உட்கார, அவனது வழக்கறிஞர்களும், சட்ட அலுவலரும் சில கோப்புகளையும் ஆவணங்களையும் நடேசனிடம் கொடுத்தார்கள்.
அதனை வாங்கிப் பிரித்துப் பார்த்தவரின் கண்கள் அகன்று விரிய, அவரையே பார்த்திருந்த சிங்காரவேலன் அந்த ஆவணங்களைக் கையில் வாங்கினார்.
அவருக்கு அடுத்து நின்ற அவரது மகன் சத்யன் தந்தையை நெருங்க, இருவருமே ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் ஆர்யாவை நோக்கினர்.
ஆயினும் அப்பொழுதும் அவன் வாய் திறந்து பேசினான் இல்லை.
அதற்குள் அவர்களை நெருங்கிய அதியமான் ஆவணங்களை வாங்கிப் படிக்க, இவ்வாறு ஒவ்வொருவராய் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, "How long am I supposed to wait for this crap?" என்று இகழ்ச்சியாய் கூறியவனின் செய்கையில் அனைவருமே கொந்தளித்துப் போனார்கள்.
ஆனாலும் அவர்களால் அவனை எதிர்த்து பேச முடியவில்லை. அந்தளவிற்கு அவனது பகட்டான தோற்றமும் அந்தஸ்தும் அவர்களது தைரியத்தை முடக்கி போட்டிருந்தது.
நேரம் கடக்க, அவர்கள் ஒவ்வொருவரின் முகமும் பேயறைந்தது போல் மாறிக் கொண்டே போக, ஒன்றும் புரியாமல் என்ன என்பது போல் ஆர்யாவின் தலைமை வழக்கறிஞரை பார்வையாலேயே வினவினார் சந்தியா.
ஆனால் அவர் பதில் கூறாது ஆர்யாவைப் பார்க்க, நிதானமாக எழுந்து நின்றவன், "நீங்க படிச்ச வரைக்கும் போதும், இப்போ உங்க எல்லாருக்குமே நான் எதுக்கு இங்க வந்திருக்கேன்னு புரியும்னு நினைக்கிறேன்." என்றான்.
ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி ஆண்கள் அனைவரின் அடிநெஞ்சையும் கலக்கச் செய்திருக்க, இதனில் இப்பொழுது எழுந்து நின்றவனின் கம்பீரம் அவர்களை ஒரு அடி பின் எடுத்து வைத்து நகரச் செய்தது.
"இது என் டாட், ஐ மீன் உங்க தம்பி மகாதேவன் இறப்பதற்கு முன் எழுதி வைத்த உயிலின் ஒரு பகுதி. இதுக்கு முன் இதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் இப்போ உங்கக்கிட்ட அதைக் கொடுத்தேன்."
ஆர்யா பேசப்பேச அவர்களது கனவுகளும் பேராசையும் ஆட்டம்காண ஆரம்பித்தது.
அவர்களின் அதிர்ச்சி கலந்த முகத்தை உள்ளுக்குள் இரசித்தவனாய் தனக்கருகில் நிற்கும் வழக்கறிஞரிடம் கையை நீட்ட, அவர் அவன் கைகளில் வைத்த சில கோப்புகளை நடேசனிடம் கொடுத்தான்.
அதை அவர் பிரித்துப் படிக்க ஆரம்பிக்க, "திரும்பவும் ஒவ்வொருவரா தனித்தனியா படிக்க ஆரம்பிச்சீங்கன்னா, அதைப் பார்த்துட்டு நிற்க எனக்கு நேரம் இல்லை. ஸோ, நீங்க சத்தமாவே படிக்கலாம்." என்றான் அதிகாரத்துடன்.
அவனை ஓர் விநாடி நிமிர்ந்துப் பார்த்த நடேசன் சிங்காரவேலனிடம் அந்தக் கோப்பைக் கொடுக்க, சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார் சிங்காரவேலன்.
“இந்த வரிகள் அனைத்தும் என் சொந்த விருப்பத்திலும் முழு அறிவுடனும் நான், மகாதேவன், எழுதுகின்றேன்...
மித்ரலட்சுமியின் கல்யாணத்தில் என் சொத்துகளை அவளுக்கும் அவள் கணவருக்கும் தர வேண்டும் என்று நான் என் அப்பாவிடம் சொல்ல நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை. அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, எனக்கும் பூவரசம்பட்டிக்குமான தொடர்பும் முற்றிலுமாய் அறுந்துப்போனது. ஆனால் கடந்த சில மாதங்களாக எனக்குள் ஒரு புது நெருடல். என் தங்கை சுஜாதா இறந்ததற்குப் பிறகு அவளது மகளான மித்ரலட்சுமி பூவரசம்பட்டியில் உறவுகளுடன் இருந்தாலும், அவள் சந்தோஷமாக இருக்கிறாளா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. அதனால் அவளைப் பார்க்க நான் சென்றபோது, வீட்டில் என் தம்பிகள் இல்லாமல் அவர்களது மனைவிகள் ரமாதேவி மற்றும் பார்வதி மட்டுமே இருந்தனர்."
அதைச் சிங்காரவேலன் படிக்க, அவரையும் சேர்த்து அவ்வீட்டின் அனைத்து ஆண்களும் வெடுக்கென்று பெண்களின் புறம் திரும்பினார்கள்.
அதைக் கண்டதும் ரமாதேவிக்கும் பார்வதிக்கும் தலையே கிறுகிறுவென்று சுற்றியது.
அங்கு நடப்பதைப் பார்த்து எரிச்சலுடன் சிங்காரவேலனின் முகத்திற்கு முன் ஆர்யா விரல்களால் சொடுக்கிட, அவரது முகம் சிவந்து போனது.
"இங்க என்ன ஸ்டேஜ் ட்ராமாவா நடக்குது?"
சிரிக்காமல் நக்கலாய் வினபுவனைக் கண்டு முகம் சுருங்கியவர் அவன் ஒற்றைப் புருவ ஏற்றத்தைக் கண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.
"அந்த வீட்டில் மித்ரலட்சுமி சந்தோஷமாக இல்லை, வேலைக்காரி போல நடத்தப்படுகிறாள் என்று தெரிந்ததும் நான் ஒரு முடிவு எடுத்தேன். அவளின் சொத்துகளுக்காக அவர்கள் அவளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்வார்கள் எனப் புரிந்தது. அதனால், அவள் என் மகன் ஆர்யாதித்யா தேவனைத் திருமணம் செய்தால்தான் சொத்துகள் அவளுக்குக் கிடைக்கும் என என் உயிலை மாற்றிப் பதிவு செய்தேன்."
அதைப் படித்து முடித்ததுமே அவனது திட்டம் அங்கு இருந்த அனைவருக்குமே புரிந்து போனது.
அதோடு ஆர்யா நிற்கவில்லை. தன் அருகில் நின்றிருந்த அதிகாரியை ஒரு கணம் திரும்பிப் பார்த்தான். அவர் புன்னகையுடன் தலையசைத்தவுடன், தனது பாக்கெட்டிலிருந்து தாலியை எடுத்து மித்ரலட்சுமியை நோக்கி முன்னேறினான்.
அவன் செய்யப் போகும் செயலை உணர்ந்த சத்யனும் அதியமானும் ஆக்ரோஷமாக முன்னேற முயன்ற தருணத்தில், அவர்களின் வழியை மறித்து அஸார் நின்றான். அவனது அசாதாரண உயரமும் திடகாத்திரமான தோற்றமும் அவர்களை ஒரே நொடியில் தடுமாறச் செய்ய, அந்த இடைவெளியில் சந்தியாவை நோக்கிப் பார்த்த மித்ரலட்சுமிக்கு, அவரது மெதுவான தலையசைவில் மறைமுகமான சம்மதம் தெளிவாயிற்று.
அவள் மௌனமாக, அவளை நோக்கி மெதுவாக நெருங்கிய ஆர்யா திருமாங்கல்யத்தை இரு கரங்களிலும் ஏந்தினான்.
தங்கத்தாலி கோர்க்கப்பட்ட அந்த மஞ்சள் கயிறு அவனது விரல்களில் தவழ்ந்தபடி, ஆருஷ் வாங்கிக் கொடுத்த, பல லட்சங்கள் விலைபெறுமான பட்டுப்புடவையில் பிரமிக்க வைக்கும் வகையில் பேரழகுடன் நின்றிருந்தவளது கழுத்தைத் தீண்டிய அந்தக் கணத்தில் இருவரின் உடலிலும் மின்னல் பாய்ந்தது போன்ற ஓர் உணர்வு பரவியது.
ஆர்யாவின் இதயம் காரணமறியாமல் வேகமெடுத்துத் துடித்தது.
இந்த ஸ்பரிசம் ஏனோ அவனுக்குப் புதிதாகத் தோன்றவில்லை!
அதே நொடி, மித்ரலட்சுமியின் விழிகளும் தன்னிச்சையாக மூடிக்கொண்டன. மனதின் ஆழத்தில் மறைந்து கிடந்த ஏதோ ஓர் நினைவு, மங்கலான நிழலாய் வந்து மறைந்தது. காலத்தின் திரைக்குப் பின்னால் மறைந்திருக்கும் எதுவோ இருவரையும் மீண்டும் இணைத்துவிட்டதுபோல, சொல்ல முடியாத ஒரு நெருக்கம் அவர்கள் இருவரையுமே சூழ்ந்தது.
அந்த விசித்திரமான உணர்விலிருந்து மீளாமலேயே, ஆர்யா மிகுந்த நிதானத்துடன் அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான். அந்த மூன்று முடிச்சுகளையும் அவன் போட்ட ஒவ்வொரு நொடியிலும், இருவரின் ஆன்மாக்களுக்குள் ஏற்கனவே மறந்தும் மரணித்தும் போயிருந்த ஓர் உறவு மீண்டும் உயிர்ப்பெடுக்கத் தொடங்கியது என்பதை அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை.
அங்கு மேளதாளங்களின் முழக்கம் இல்லை, மங்கல வாத்தியத்தின் இசை இல்லை, மணமக்கள் மாலைகள் கூட மாற்றிக்கொள்ளவில்லை. இருந்தாலும், காலம் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த ஒரு பந்தம் மீண்டும் உயிர்பெறும் நொடி அது என்பது போல், அந்த அமைதியே மித்ரலட்சுமியின் உள்ளத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடி கலங்கச் செய்தது.
ஆர்யா அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்த அந்தக் கணத்தில் மெள்ள நிமிர்ந்து அவனை மித்ரலட்சுமிப் பார்க்க, ஒரு கணம் இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று கலந்தன. அந்தப் பார்வையில் புதிதாய் சந்தித்த இரு மனிதர்களின் அந்நியத்தன்மை நிச்சயமாய் இல்லைவே இல்லை. ஆனால் எங்கோ, எப்போதோ, பல யுகங்களுக்கு முன்பே தொடங்கிய ஒரு பந்தத்தின் மங்கலான பரிச்சயம் மட்டும் இருக்க, காரணம் புரியாத அந்த உணர்வு இரு இளம் இதயங்களையும் ஒரே நேரத்தில் வருடிச் சென்றது.
அதே விநாடி, வேறு இரு இடங்களில், இருவேறு மனிதர்களின் உடல்கள் தங்களையும் அறியாது திடுக்கிட்டன.
ஒன்று ஆருஷ்!
மற்றொன்று பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தன் அறையில் அமர்ந்து கோப்புகளில் கண்களைப் பதித்திருந்த இன்னொரு இளைஞன்!
வெடுக்கென்று எழுந்தவன் என்ன நினைத்தானோ தனக்கு முன் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களையும் சிதறி அடிக்க, திடீரென்று நள்ளிரவைக் கடந்த நேரத்தில் இப்படி ஒரு சத்தம் கேட்டதைக் கண்டு அவனது அறைக்குள் நுழைந்த அவனது தந்தை அதிர்ந்துப் போய் நின்றனர்.
அவனது முகம் செக்கச்சிவந்து இருந்தது! ஆக்ரோஷமும் ஏறக்குறைய இரத்த வெறியும் தெறித்ததில் அவன் கண்களும் சிவந்திருந்தன.
முதன் முறையாக மகனின் இத்தகைய மாற்றத்தைக் கண்ட அவனது தந்தை அவனை நெருங்கவே பயந்தவராய் உறைந்துப் போய் நிற்க, அவர் அறைக்குள் வந்திருப்பதையே அறியாதவன் போல் கேசத்தை அழுந்த கோதியவாறே அங்குமிங்கும் நடந்தவன் சட்டென நின்றிவனாய் விசுக்கெனத் தந்தையின் முகம் நோக்கினான்.
அவர் திடுக்கிட்டுப் பார்க்க, "டாட், நான் இப்பவே இந்தியா போகணும்." என்றான்.
அதே வேளை பூவரசம்பட்டியில், பெரிய வீட்டில், மாங்கல்யத்தை அணிவித்து முடித்த ஆர்யா ஒரு கணம் மித்ரலட்சுமியின் முகத்தை ஆழமாக நோக்க, ஏனோ அந்த விழிகளில் இருந்து விலக அவனது இரும்பு மனம் மறுத்தது.
சொல்ல முடியாத ஓர் ஏக்கம் இருவரின் பார்வையிலும் மின்னிய அடுத்த நொடியே தன்னையே கட்டுப் படுத்திக்கொண்டவன் மெதுவாக அவளை விட்டு விலகினான்.
அவன் விலகிய பிறகும், அவனது விரல்கள் தன்னைத் தீண்டிக் கொண்டிருப்பது போன்ற சூடான ஒரு உணர்வு மித்ரலட்சுமியின் உள்ளத்தில் இன்னும் உயிர்ப்புடன் இருக்க, காரணம் புரியாத அந்தப் பரிச்சயம், பல பிறவிகளைக் கடந்தும் அழியாமல் இருந்த ஓர் உறவின் மெல்லிய தடம்போல் அவளது மனதை வருடிச் சென்றது.
அந்த நேரத்தில், பெரியவர்களின் எதிர்ப்பை மகாதேவன் எழுதி வைத்திருந்த பத்திரங்களும் உயிலும் மௌனமாக்க, சிறியவர்களின் ஆத்திரத்தை அஸாரின் கம்பீரமான இருப்பே அச்சமாக மாற்றியது. அந்த மௌன அழுத்தங்களின் நடுவில், யாருடைய முழு மனச்சம்மதமும் இன்றி ஒரு திருமணம் அரங்கேறியது!
ஆயினும் இப்பொழுதும் மணமகளாய் புத்தம் புதுத் தாலியை சுமந்து கொண்டிருந்த மித்ரலட்சுமியின் மனதையோ சம்மதத்தையோ தெரிந்துக்கொள்ள அங்கு எவருமே முன்வரவில்லை.
மீண்டும் அவள் விருப்பமறியாது ஒரு திருமணம் ஒப்பந்தம்!
ஆனாலும் தலைகுனிந்து அந்தத் திருமாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டவளின் மனதின் ஆழத்தில், விளக்க முடியாத ஒரு அமைதி மெதுவாகப் பரவியது மட்டும் உண்மை. அது இந்தப் பிறவியில் கிடைத்த நிம்மதியல்ல! மாறாகப் பல ஜென்மங்களாகத் தொலைந்து போயிருந்த ஏதோ ஒன்றை மீண்டும் தொட்ட உணர்வைப் போன்றது.
ஏனோ, வாழ்நாளில் முதன்முறையாக ஆர்யாவைப் பார்த்தாலும் அவன் அருகில் நிற்கும்போது மனம் காரணமின்றிப் பாதுகாப்பாக இருப்பதுபோல் தோன்றியது.
அந்த உணர்விற்கான காரணம் அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அவளது ஆன்மா மட்டும் அதை ஏற்கெனவே அறிந்திருந்தது. மாறாக அந்த நிம்மதி உணர்வுக்கு அவள் தெள்ளத்தெளிவாய் தவறான ஒரு காரணத்தை அவளாகவே உருவாக்கிக் கொண்டாள்.
அது திருமண மண்டபத்தை விட்டு வெளியேறியபோது, சந்தியாவின் வார்த்தைகள் அவளுள் உறுதியான நம்பிக்கையை விதைத்தனவே. 'இனி பூவசரம்பட்டியில் நடக்கப் போகும் எந்த விஷயத்திலும் உனக்குக் கொஞ்சமேனும் சந்தேகம் வந்தால், நீ என் முகத்தைத் திரும்பிப் பாரு. அப்போ நான் என்ன சைகை செய்யறேனோ அதைக் கொஞ்சம் கூட யோசிக்காமல் பின்பற்று. நிச்சயமா அது உனக்கு நல்லதையே கொண்டு வரும்..' என்ற அவரது வாக்குறுதியே அந்த நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தது என்று அவள் எண்ணிக்கொண்டாள்.
மாங்கல்யம் அணிவிக்கப்பட்டதுமே, சுயநினைவுக்கு வந்தவர்களைப் போல் அதியமானும் சத்யனும் அஸாரைத் தள்ளிக்கொண்டு முன்வந்து பேச முற்பட, "ஷ்ஷ்..." என்று அவர்களை அடக்கிய ஆர்யா, தன்னுடன் வந்த அதிகாரி ஒருவரைத் திரும்பிப் பார்த்தான்.
அதற்குள் அவரும் யாரையோ அலைபேசியில் அழைத்தவர் பேசி முடித்ததும், "சார், ரெஜிஸ்டர் ஆஃபிஸில் ரெடியா இருக்காங்க. நாம இப்பவே இங்க இருந்து கிளம்பலாம்.." என்றதும் அதியமானையும் சத்யனையும் நோக்கினான் ஆர்யா.
"இதைக் கேட்கத்தான் இப்படி அஸாரைத் தள்ளிக்கொண்டு வந்தீங்களா? யெஸ், இன்னும் சில நிமிடங்களில் எனக்கும் மித்ராவுக்கும் நடந்த திருமணம் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும். அதற்குப் பிறகு சட்டப்படி இவள் என் மனைவி. இதற்கு மேல் ஏதாவது விளக்கம் வேண்டுமா?"
அவன் கூறியதும் அதியமானும் சத்யனும் மட்டுமல்ல மித்ரலட்சுமியுமே அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டு நோக்கினாள்.
ஆண்கள் அவனை அவ்வாறு பார்த்ததன் காரணம் வேறு. ஆனால் மித்ரலட்சுமி அவனை அதிர்ச்சியுடன் பார்த்ததன் காரணம் அவன் அவளை அழைத்த விதம்.
மித்ரா!!
அகன்ற கண்களை மேலும் அகல விரித்து அவள் தன்னைப் பார்ப்பதைக் கண்டு ஒரு நொடி தாமதித்த ஆர்யா பின் சட்டென அவளது கரத்தைப் பற்றியவன் வாயிலை நோக்கி நடக்க, அவனை நெருங்கினார் நடேசன்.
"கொஞ்சம் நில்லுப்பா."
நின்றவன் என்ன என்பது போல் அவரைத் திரும்பிப் பார்க்க, "இப்படித் திடுதிடுப்புன்னு வந்து எங்க வீட்டுப் பொண்ணுக் கழுத்துல தாலியையும் கட்டிட்டு அவளைக் கூட்டிட்டுப் போனா என்ன அர்த்தம்பா?" என்றார் சற்று அழுத்தமான குரலில்.
அவரையும் விட அழுத்தமாக, "உங்க வீட்டுப் பொண்ணா? அப்போ நான் யார்?" என்றதில் நடேசனுக்குப் பேச்சு மறந்து போனது.
"நான் உங்க தம்பி மகாதேவனுடைய மகன். உங்க மகன் அதியமானுக்கும், இந்தச் சத்யனுக்கும் இவ மேல எவ்வளவு உரிமை இருக்கோ, அதே உரிமை எனக்கும் இருக்கு. இன் ஃபேக்ட், இப்போ அதையும் விட அதிகமா இருக்கு.. புரியுதுன்னு நினைக்கிறேன்?"
கூறியவனாய் வாயிலைக் கடக்க, அதற்கு மேல் அங்கு இருப்பவர்களுக்குப் பேச எதுவும் இல்லையென்பதால் நெஞ்சம் புடைத்துக் கொண்டு திமிறினாலும் ஊமையானது போல் அவர்கள் நிற்க, அவர்களின் தடுமாறிய நிலைக்கண்டு நிம்மதி பெருமூச்சுடன் மகனையும் அவனது மனைவியையும் தொடர்ந்தார் சந்தியா.
அவர்களை முந்திக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய அஸார் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவரின் கதவை திறந்துவிட, ஆயினும் காரில் ஏறாது நின்ற மித்ரலட்சுமியைத் திரும்பிப் பார்த்த ஆர்யாவிற்கு அவளது தெளிவில்லாத முகம் பறைசாற்றியது அவளது கவலையை.
"இனி உன் அம்மம்மா இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை. அவங்க உயிருக்கும் ஆபத்து வரப் போறதில்லை. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாகிவிட்டது. நீ காரில் ஏறுவதற்கு இந்த விஷயங்கள் போதுமா, இல்லை இன்னும் எதுவும் இருக்கா?"
அவனது பேச்சில் அரண்டுப் போனவளாய் அவள் பார்க்க, பிடித்திருந்த அவளது கரத்தினில் அழுத்தத்தைக் கூட்டியவனாய், "ஏறு மித்ரா." என, அவன் காரில் ஏறி அமர்ந்ததுமே வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்து அவனருகில் அமர்ந்தாள்.
அவர்களுக்கு அடுத்து சந்தியா அமர்ந்ததும், கார் அங்கிருந்து புறப்பட்டது.
சில நொடிகள் இடைவெளிவிட்டு அவர்களைச் சத்யன் பின்தொடர, ரியர் வியூ கண்ணாடியில் அவனது பைக்கைக் கவனித்த அஸார், பின் இருக்கையில் இருந்த ஆர்யாவிடம் கண்களாலேயே தகவலைப் பகிர்ந்தான்.
அமைதியாக அலைபேசியில் சில கட்டளைகளை ஆர்யா தட்டிய அடுத்த நிமிடமே சத்யனின் பைக்கிற்கும் ரேஞ்ச் ரோவருக்கும் நடுவே இரண்டு பிரம்மாண்டமான வாகனங்கள் புகுந்து, அவன் வழியை இயல்பாகவே மறைத்தன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆர்யாவின் காரைத் தவறவிட்ட சத்யன் எரிச்சலுடன் தன் நண்பனுக்கு அழைத்தவன் தஞ்சாவூரில் அமைந்திருக்கும் துணை பதிவாளர் அலுவலகத்திற்கு உடனே விரையுமாறும், வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் அங்கு வந்தால் தன்னிடம் தகவல் தெரிவிக்குமாறும் கூறினான்.
அவனும் உடனேயே துணை பதிவாளர் அலுவலகத்தை நோக்கி விரைந்தான்.
ஆனால் ஆர்யாவின் ரேஞ்ச் ரோவர் சென்றதோ வேறு ஒரு பாதை. அடுத்து அவர்களது கார் நின்றது ஒரு கட்டிடத்திற்கு முன்.
அது என்ன என்று சந்தியா குழப்பத்தில் இருக்க, "எங்களுடைய மேரேஜை ரிஜிஸ்டர் செய்ய வேண்டாமா?" என்றவாறே காரை விட்டு இறங்கினான் ஆர்யா.
ஆக, "He is landed.." என்று அலைபேசியில் தகவல் வந்ததும் இவனது வரவை நான் எதிர்நோக்கி இருக்க, ஆனால் ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் கடந்து இவன் வந்தது இந்த ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தானா என்று சந்தியாவிற்குத் தோன்றியது. அதனில் ஒரு சிறு நிம்மதியும் படர்ந்தாலும் ஏனோ அங்கு ஏதோ தவறான சில விஷயங்கள் நடக்கின்றன என்பதைப் போல் அவரது உள்ளுணர்வு குடைந்தது. காரணம் அது வழக்கமாகத் திருமணங்கள் பதிவு செய்யப்படும் துணை பதிவாளர் அலுவலகம் போலவே இல்லை.
ஒரு பக்கம் ஒரு மனைவியாய் கணவன் மகாதேவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவருக்குத் தோன்றினாலும், ஒரு அன்னையாய் மகனது உண்மையான சுயரூபம் தெரிந்திருந்ததில் மித்ரலட்சுமியின் நிலையை நினைத்து அவருக்குள் பயம் உருவாகி இருந்தது.
அவ்வளவு சீக்கிரத்தில் முன்பின் அறியாத ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுபவனா அவரது மகன்.
அதுவும் இஷானி மேத்தா போன்ற கோடீஸ்வரியுடன் கூட ஒரு ஒப்பந்தம் போல் அவனது தொழிற்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகத் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டவன் இவன். இவன் இவ்வாறு அவளை விடுத்துப் பூவசரம்பட்டியில் பிறந்திருக்கும் ஒரு சாதாரணப் பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொள்வானா?
ஆக, இதற்குப் பின் வேறு ஏதோ மறைவான காரணம் இருக்கின்றது?
சந்தியாவிற்குப் புரிந்தது.. இருந்தும் எப்படியோ ஒரு சின்னப் பெண்ணை அக்கிரமமான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி ஆகிவிட்டது.
இப்போதைக்கு அது போதும். மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவராயப் பெருமூச்செடுத்தவர் ஆர்யா அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்ததும் தானும் அவனைப் பின் தொடர, அடுத்தச் சில மணித்துளிகளில் அரசாங்க அதிகாரி போல் இருந்த ஒருவரின் தலைமையில், ஆர்யாதித்யா மித்ரலட்சுமியின் திருமணம் சட்டரீதியாக அங்குப் பதிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில், உண்மையான துணைப் பதிவாளர் அலுவலக வாசலில் இதே மாதிரியான வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் ஒன்று நிற்பதாகவும், அலுவலகத்தின் உள்ளே ஏதோ ஒரு திருமணப் பதிவு நடந்து கொண்டிருப்பதாகவும் சத்யனின் நண்பன் தெரிவித்தான். அதுமட்டுமல்ல, உள்ளே செல்ல முயன்ற தன்னைக் காவலர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியவனின் தகவல், ஆர்யா தன் திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தைச் சத்யனின் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது.
அந்தத் தகவல் சத்யனை கடுப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்ல, உடனே வீட்டினருக்கு அழைத்து விவரத்தைத் தெரிவித்தான். அதே தகவல் மனோஜின் மூலமாக ஆருஷின் செவியையும் எட்டியது.
அதைக் கேட்ட மறுநொடியே பேரதிர்ச்சியில் உறைந்தவன், தன் முன்னிருந்த கணினியை ஆத்திரத்தோடு தூக்கி எறிய, அசுர வேகத்தில் பறந்த அது அறையின் ஒரு பக்க ஜன்னல் கண்ணாடியை நொறுக்கிச் சிதறடித்தது. அதோடு நிற்காமல், மேசையிலிருந்த பொருட்கள் அனைத்தையும் ஒரே வீச்சில் தரையில் சிதறவிட்டவன், கொந்தளிப்பின் உருவமாய் நின்றான்.
அவனது வெடித்துச் சிதறும் கோபத்தைக் கண்டு மனோஜ் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவன் தடுமாற்றத்துடன், "சார்.. சார்.. ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப்.." என்றான்.
அவனை அமைதிப்படுத்த மனோஜ் எவ்வளவோ முயற்சி செய்தும், ஆருஷின் ஆக்ரோஷம் மட்டும் துளியும் தணியவில்லை. அவனுள் கொந்தளித்துக் கொண்டிருந்தது வெறும் கோபமல்ல.. பல காலங்களாக அடக்கி வைக்கப்பட்ட ஏதோ ஒரு வலி உயிர்த்தெழுந்ததுபோல இருந்தது.
ஆருஷின் அந்த ருத்ரதாண்டவத்தைப் பார்த்த மனோஜின் மனதில் ஒரு உண்மை மின்னலாய் வெட்டியது.
மித்ரலட்சுமியை மணக்க வேண்டும் என்ற அவனது பிடிவாதம், முதல் பார்வையில் தோன்றிய காதலோ, கணநேர ஈர்ப்போ அல்ல. அந்தப் பெண்ணின் மீது அவனுக்கிருந்தது காரணமே விளங்காத ஒரு உரிமை! காலத்தைக் கடந்த ஒரு தேடல்!
இவ்வளவு நாள் இவர் பிதற்றிக் கொண்டிருந்தது போல் இவர் கண்ட காட்சிகளுக்கும் மித்ரலட்சுமிக்கும் நிச்சயமாய்த் தொடர்பு இருக்கின்றது. ஒருவேளை, பல ஜென்மங்களுக்கு முன்பே தொடங்கிய பந்தம் இப்பிறவியிலும் இவரை அவளிடமே இழுத்துச் சென்றிருக்கலாம். இல்லையென்றால் அவளை இழக்க நேர்ந்த செய்தி மட்டும் ஏன் இவருக்குள் இத்தனை பேரழிவை எழுப்ப வேண்டும்?
ஆக, இது மித்ரலட்சுமி மீது கண்டதும் வரும் காதல் அல்ல! இது ஏதோ ஒரு வெறி!
மீண்டும் ஆருஷை அமைதிப்படுத்த நினைத்து, "சார்.. சார்.. ப்ளீஸ் சார்.. " என்று மனோஜ் கெஞ்ச ஆரம்பிக்க, ஆயினும் அடங்காதவனாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆருஷ் இறுதியாய் மேஜையின் முன் நின்றவன் இரு கரங்களையும் அதன் மீது அழுந்த ஊன்றியவாறே முன்னோக்கி சாய்ந்தவனாய், "மனோ, எனக்கு அவள் வேணும்.. அதுக்கு என்ன செய்வியோ எனக்குத் தெரியாது, ஆனால் எனக்கு என் மித்ரா வேணும்.." என்றதில் ஒரு நிமிடம் பேச்சிழந்தான் மனோஜ்.
"சார், அந்தப் பொண்ணு இப்போ இன்னொருத்தனுடைய மனைவி.."
"I don't care."
"சார், நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க... ப்ளீஸ்."
மனோஜின் கெஞ்சல் ஆருஷின் கோபத்தைத் தணிக்கவில்லை.. மாறாக, அதை மேலும் மேலும் தூண்டிவிட்டது.
மீண்டும் அறை முழுவதும் ஆக்ரோஷமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன், தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் தவிக்க, இதுவரை எந்தச் சூழலிலும் நிதானம் தவறாத தன் முதலாளி, முதன்முறையாகச் சுயக்கட்டுப்பாட்டை இழந்து இப்படித் தத்தளிப்பதைக் கண்ட மனோஜ் அச்சத்தில் ஸ்தம்பித்துப் போனான்.
ஆயினும் அவனை இவ்வாறு விட்டுவிடுவது நல்லது அல்ல என்று உணர்ந்தவனாய்,
"சார்.. இது தப்பு சார். அவர் தாலி கட்டாதவரை சரி. இப்போ சூழ்நிலை மாறிடுச்சு. அதுவும் இல்லாமல் ஆர்யாதித்யா இப்போ அவருடைய ப்ரைவேட் ஜெட்டில் டெல்லி போயிட்டு இருக்கார். எனக்கு வந்த தகவல் படி, அந்த ஜெட்டில் இருக்குற அவருடைய ப்ரைவேட் ரூமை ஃபர்ஸ்ட் நைட் ரூம் மாதிரி டெக்கரேட் பண்ண சொல்லி ஏற்கனவே கட்டளை போட்டிருக்காராம். அதே மாதிரி தஞ்சாவூரிலிருந்து ஃப்ளவர்ஸ், அதுஇதுன்னு ஒரு ஃபர்ஸ்ட் நைட் ரூமை டெக்கரேட் பண்ணத் தேவையான எல்லாத்தையும் அவருடைய ஆட்கள் வாங்கியிருக்காங்க. அதைக் கேட்டப்போ தான் எனக்கு அவருடைய திட்டமே புரிஞ்சது. அவர் எதிர்பார்த்த மாதிரியே ரூமையும் ரெடி பண்ணிருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஜெட் இப்போ டெல்லியை நோக்கி போயிட்டு இருக்கு. அப்படின்னா.." என்றவனை ஆருஷ் முடிக்கவிடவில்லை.
வெகுண்டெழுந்த ஆருஷ், அறையின் ஓரத்தில் இருந்த கனமான மர அலமாரியைப் பிடித்து ஒரே இழுப்பில் சாய்க்க, அதில் இருந்த கோப்புகளும் பொருட்களும் பலப்பக்கம் சிதறி கடைசியில் தரையில் விழுந்தன.
அப்பொழுதும் பெருங்கடலின் அலைகளுக்கு நடுவில் சூராவளியாய்ச் சீறிக்கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னை முற்றிலும் இழந்தவனாய் அவன் அங்கிருந்த மேசையையும் ஒரே உதையில் கீழே தள்ளினான். அந்த அதிர்ச்சியூட்டும் செயலில் உறைந்து நின்ற மனோஜ் சப்தநாடியும் ஒடுங்கிப் போனான்.
"சார்.." என்று அவன் பதற, "NOOOOOOOOOOO! எனக்கு அவள் வேணும். என் மித்ரா எனக்கு வேணும்.." என்ற திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்ல, அங்கு ப்ரைவேட் ஜெட் விமானத்தில், விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்து அமர்ந்திருந்த மித்ரலட்சுமி தன்னையும் அறியாது நிமிர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
யாரோ தொடர்ந்து “மித்ரா… மித்ரா…” என்று அவளை உரிமையோடு அழைப்பது போல ஒரு குரல் அவள் மனதுக்குள் இடைவிடாமல் எதிரொலித்தது. அந்த ஒலி ஒவ்வொரு முறை எழும்போதும், அவளது சிந்தனை மென்மேலும் புரியாத புதிராய் குழப்பங்களின் மத்தியில் சிக்கிக் கொண்டது.
அதே நேரத்தில், அன்று காலை திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவள் கண்முன் மின்னலாய் வெடித்தன. “எது நடந்தாலும் பரவாயில்லை… ஆனால் எதையும் யோசிச்சு முடிவெடு மித்ரா…” என்று ஆருஷின் குரல் உறுதியாய் ஒலித்தது. அதே நொடியில், “எனக்கும் மித்ராவுக்கும் நடந்த கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணப் போறேன்… அதுக்குப் பிறகு சட்டப்படி இவ என் மனைவி. போதுமா?” என்று ஆர்யா கூறிய கம்பீரமான வார்த்தைகள் அவளுள் மோதின.
இவ்வளவு நாள் இந்த உலகத்தில் அவளை யாரும் 'மித்ரா' என்று அழைத்ததே இல்லை. ஆனால் ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு மனிதர்கள், அதுவும் சாதாரணமாக அல்ல, உரிமையோடு, தீர்மானத்தோடு அவளை அப்படிப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
அவர்கள் யார்?
தனக்கும் அவர்களுக்கும் இடையில் என்ன பந்தம்?
என் கழுத்தில் தாலி கட்டி இருக்கும் ஆர்யாதித்யா, நான் முன்பின் பார்த்திராத இவராவது என் மாமன் மகன் என்ற உறவுடையவர். ஆனால் அந்த ஆருஷ் ஆதித்யா, அவர் யார்? அவள்மீது அவருக்கு இருக்கும் இந்த உரிமை எங்கிருந்து வருகிறது?
ஆர்யாதித்யா - ஆருஷ் ஆதித்யா! இருவரின் பெயர்களிலேயே தெரியும் அந்த வித்தியாசமான ஒற்றுமை, ஒரே நூலில் கட்டப்பட்ட இரண்டு முனைகள் போல [Two ends tied by the same thread ] அவர்களுக்குள் ஏதோ மறைமுகத் தொடர்பு இருப்பதுபோன்ற எண்ண ஓட்டங்களை அவளது இதயத்தில் அதிர்வாய் மோதச் செய்தது.
அப்படியெனில், இந்த 'மித்ரா' என்ற அழைப்பின் பின்னால், எங்கள் மூவருக்கும் இடையே ஏதோ புரியாத, விசித்திரமான பிணைப்பு இருக்கிறதா?
குழப்பத்தில் தலையையே துளைக்கும் வலிதான் ஏற்பட்டதே ஒழிய அவளது கேள்விகள் ஒன்றுக்கும் விடை மட்டும் புலப்படவில்லை!!
தொடரும்..
References
Two ends tied by the same thread is a poetic or philosophical phrase that means two separate things, people, or situations are fundamentally connected, sharing the same origin, destiny, or underlying purpose. It symbolizes unity, interdependence, and an unbreakable link.
ஒரே நூலால் பிணைக்கப்பட்ட இரு முனைகள் என்பது ஒரு கவித்துவமான அல்லது தத்துவார்த்தமான சொற்றொடராகும்; இது, தனித்தனியான இரு விஷயங்கள், நபர்கள் அல்லது சூழல்கள் ஆகியவை அடிப்படையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, ஒரே தோற்றம், விதி அல்லது அடிப்படை நோக்கத்தைப் பகிர்ந்து கொள்வதைக் குறிக்கிறது. இது ஒற்றுமை, பரஸ்பரச் சார்பு மற்றும் உடைக்க முடியாத பிணைப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது.

Last edited: