JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

Meera (Mithra) - Episode 8

JLine

Moderator
Staff member
மீரா (மித்ரா)

The Eternal Echoes of Her Heart!

அத்தியாயம் - 8

**********************

யாரோ தொடர்ந்து “மித்ரா… மித்ரா…” என்று அவளையே உரிமையோடு அழைப்பது போலத் தோன்றியதில் அங்கு ப்ரைவேட் ஜெட் விமானத்தில், ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்து அமர்ந்திருந்த மித்ரலட்சுமி தன்னையும் அறியாது சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அதே நேரம் திறந்திருந்த அறை வாயிலுக்கு அருகே நின்றவாறே அஸாரிடம் பேசிக் கொண்டிருந்த ஆர்யா அவளது அரவத்தில் திரும்பிப் பார்த்தான்.

அவளும் அக்கணம் அவனை நோக்கித் திரும்பிப் பார்க்க, கண்கள் சுருங்க ஒரே ஒரு விநாடி அவளைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ அறைக்கதவை மூடிவிட்டு அஸாரை நோக்கித் திரும்பினான்.

"சார்... நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுடுறேன் சார்.. ஆனால் அந்த ஆருஷ்?"

"அவனைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ முதலில் அந்தப் பெரிய வீட்டைவிட்டு இவளுடைய மாமன்களைக் குடும்பத்துடன் காலி பண்ண ஏற்பாடு செய். இவள் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பப் பூவசரம்பட்டிக்குப் போகக் கூடாது."

"ஆனால்.."

"ஆனால் என்ன?"

"நீங்க அவங்கக்கிட்ட காட்டின உங்க அப்பாவுடைய உயில் நிஜமானது இல்லைன்னு கண்டுப்பிடிச்சாங்கன்னா அவங்க பிரச்சனை பண்ணுவாங்களே சார்? அதுவும் அந்தப் பசங்க?"

"இவ்வளவு வயசாகியும் என் டாட் கூடப் பிறந்தவங்களுக்கே பண ஆசை போகலை. அப்படின்னா அவனுங்க சின்னவயசு தான, அதுதான் குதிக்கிறானுங்க. எனிவேய்ஸ் அந்த ஆருஷ் செய்ய நினைச்சதை நான் செய்ய மாட்டேன். ஒரு ரூபாய் கூட அந்தச் சொத்துகளில் இருந்து அவனுங்க எவனுக்கும் போகக் கூடாது."

ஆர்யா திமிருடன் கூற, சற்றே அவனைக் கூர்ந்துப் பார்த்த அஸாரின் மனதில் தோன்றியதோ இதுவே!

பல்லாயிரம் கோடிகள் சொத்துகளுக்கு வாரிசான இவருக்கு, சுவாமிநாதன் பிள்ளை தன் மகன் மகாதேவனுக்கு எழுதி வைத்த சொத்துகள் ஒரு பொருட்டே இல்லை. அப்படியிருக்க, ஏன் அவர்களிடம் இவ்வளவு கடுமையாக நடக்க வேண்டும்? இதையெல்லாம் தூக்கி எறிந்துவிடலாமே!

எண்ணியவனுக்கு அதைக் கேள்விகளாகக் கேட்க மட்டும் துணிவு வரவில்லை.

அஸாரின் சந்தேகங்கள் அவன் முகத்திலேயே தெரிந்துவிட, அவனைக் கூர்ந்து நோக்கியவனாய், "என் தாத்தாவுடைய சொத்து என் கால் தூசிக்கு பெறாதுன்னு எனக்கும் தெரியும் அஸார். ஆனா அது என் டாட்-க்குச் சொந்தமான சொத்துகள். அதை நான் என் கைவிட்டு போக விடமாட்டேன்." என்று ஆழ்குரலில் அழுத்தமாகக் கூறினான்.

அவனது தொனியில் அஸாருக்கே சற்று அச்சமாய்த் தான் இருந்தது. அதே சமயம் சிறிது விசித்திரமாகவும் இருந்தது.

வெளியே காட்டாவிடினும் இவரது தந்தை மகாதேவன் மீது இவருக்கு அதிகப் பிரியம் தான். ஆனாலும் அவரது விருப்பத்தை மீறி இஷானி மேத்தாவைத் திருமணம் புரிவதற்கு இவராகவே ஏற்பாடுகளைச் செய்தவர்.

அப்படி இருக்கத் திடுமென உறவே ஆனாலும், முன்பின் அறியாத ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியிருக்கின்றார்.

அவன் அப்பொழுதும் பதில் பேசாது யோசனையில் ஆழ்ந்து கொண்டிருக்க, ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவனாய் அவனது தோளை ஆர்யா தொட்டதில் சுயநினைவிற்கு வந்தவன், "சாரி சார்.." என்றான்.

"நீ ரொம்ப யோசிக்காத அஸார். உன்னால கண்டுப்பிடிக்க முடியாது, Come on, I'll explain."

சிறிதே புன்னகையுடன் கூறியவனாய் விமானத்தில் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்றவன் இருக்கையில் சாவகாசமாகக் கால் மேல் கால் போட்டவாறே அமர, எப்பொழுதாவது இப்படிப் புன்னகைக்கும் ஆர்யாவைக் கண்டு இரசித்தவனாய் அவனுக்கு எதிராய் அஸார் உட்கார்ந்தான்.

நண்பன், தனிப்பட்ட செயலாளன், சில நேரங்களில் ஓட்டுநன் என்று அனைத்துமாய் ஆர்யாவிற்கு உறுதுணையாய் எப்பொழுதும் இருக்கும் அஸாரிடம் மட்டும் ஆர்யா சில விஷயங்களை மனம் விட்டுப் பேசுவான்.

"இன்னைக்கு மார்னிங் நம்ம அட்டர்னி [Attorney] என்னிடம் ஒரு விஷயம் சொன்னார் அஸார். அதுக்குப் பிறகு தான் நானே இந்த முடிவு எடுத்தேன்."

அவனாகவே தொடரட்டும் என்பது போல் அஸார் அமைதியாகிவிட, அன்று விடிந்தும் விடியாததுமாய் டெல்லியில் இருந்து சந்தியா கிளம்பியதும், உடனே ஆர்யாவை தொடர்புகொண்ட அவர்களின் தலைமை வழக்கறிஞர் ராகவ் கூறிய தகவல்கள் ஆர்யாவின் மனதை ஒரு சில நிமிடங்களில் இறுக்கமாக்கின.

அந்த முடிவு அவன் வாழ்க்கையின் பாதையையே மாற்றிவிடக்கூடும் என்று அறிந்திருந்த போதும், வழக்கம் போல் அசாதாரணத் தைரியத்துடன் வரப் போகும் எதிர்ப்புகளை எல்லாம் துச்சமாகக் கருதியவனாய் அவன் சில உறுதியான முடிவுகளை எடுத்திருந்தான்.

இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் தன் வாழ்க்கையே புரட்டிப் போடக்கூடிய அளவுக்கு முடிவுகளை எடுக்க அவனைத் தள்ளியது என்ன?

அப்படியென்ன தகவலை அவர்களின் தலைமை வழக்கறிஞர் ராகவ் கூறினார்??

*****************************

மகாதேவன் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.

என்ன நினைத்தாரோ தங்கள் நிறுவனங்களின் தலைமை வழக்கறிஞர் ராகவையும், தனது தனிப்பட்ட செயலாளரான மணிமாறனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு தான் பிறந்து வளர்ந்த பூவரசம்பட்டிக்குத் திடீரெனச் சென்றார் மகாதேவன்.

கடந்த சில நாட்களாக அவரது மனதிற்குள் ஒரு நெருடல்.

அது ஒரு நாள் இரவு அவரது தங்கை சுஜாதா கண்களில் நீரோடு அவரது கனவில் வந்ததில் இருந்து ஏற்பட்ட உறுத்தல்.

நான்கு அண்ணன்களோடு பிறந்த சுஜாதாவிற்கு, இரண்டாவது அண்ணன் மகாதேவனின் மீதுதான் எப்போதும் அளவில்லா பாசம் இருந்தது. பெரிய அண்ணன் நடேசனுடன் அவள் பேசுவது அவசியம் ஏற்பட்டால்தான். மற்ற அண்ணன்களான சிங்காரவேலன் மற்றும் பிரபாகரனின் முன்னால் நிற்கவே அவள் தயங்குவாள்.

அவர்களின் கடுமையான குணமும் கூர்மையான பேச்சும் சுஜாதாவிற்கு ஒருபோதும் பிடித்ததில்லை. அதோடு, பணமே அனைத்திற்கும் மேலானது என்பது போல் தந்தையிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம், அவர்கள்மீது சிறு வயதில் இருந்தே அவளுக்குள் ஆழமான வெறுப்பையும் உருவாக்கியிருந்தது.

இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் மகாதேவன் மட்டுமே. ஆனால் திருமணத்திற்குப் பிறகு வடநாட்டிலேயே தங்கிவிட்டதால், சுஜாதா பெரும்பாலும் தனிமையில் தள்ளப்பட்டவளாகவே வாழ்ந்தாள். அத்தகைய நாட்களில்தான் கல்லூரியில் சந்தித்த ராம்குமாரை அவளது மனம் எளிதாக ஏற்றுக் கொள்ள, அந்தச் சந்திப்புக் காதலாக மலர்ந்தது.

ஏற்கனவே சற்று தள்ளியே நின்று பழகியிருந்த சிங்காரவேலனும் பிரபாகரனும், ஜாதி மறந்து நடந்த அந்தத் திருமணத்திற்குப் பிறகு இன்னும் கடுமையானவர்களாக மாறினர். வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கக் கூடாது என்று கடுங்கட்டளையிட்ட அவர்கள், சுஜாதாவை முற்றிலுமாய் ஒதுக்கினர்.

மாமனாரும் மாமியாரும் கூட அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத சூழலில், கணவருடன் தனிமையில் வாழ்ந்து வந்த சுஜாதாவின் மனதில் ஒரே ஒரு ஆசை மட்டும் உயிராய் இருந்தது.

அது மகாதேவனை மீண்டும் ஒருமுறை காண வேண்டும் என்பதே. ஆயினும், ஏனோ அவரைத் தொடர்பு கொள்ளும் துணிவு மட்டும் அவருக்கு வரவில்லை. 'ஒருவேளை அவரும் என்னை ஒதுக்கிவிட்டால்? இல்லை, என்னுடன் பேசவே மறுத்துவிட்டால்?' என்ற அந்தச் சந்தேகம் தினமும் அவளை உள்ளுக்குள் தின்றது.

அந்த எண்ணமே அவளை உறவுகளை விட்டுப் பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்க, ஒருநாள் எப்படியாவது கடவுளின் அருள் தன்னை நோக்கி திரும்பி, மகாதேவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற மெல்லிய நம்பிக்கை அவ்வப்பொழுது தோன்றுகையில் ஒரு சிறு நப்பாசையுடன் சுஜாதா காத்திருந்தாள்.

ஆனால் அந்த நம்பிக்கையின் நடுவே, அடுத்தடுத்து நிகழ்ந்த கணவன் மற்றும் தந்தையின் மரணங்கள் அவள்மீது பேரிடியாக விழுந்தன.

வேறு வழியின்றிப் பிறந்து பத்து நாளே ஆன பெண் குழந்தையுடன் அதே அண்ணன்களுடன் அவள் வசிக்கத் துவங்க, அதன் பின் தொடங்கியது முடிவில்லாத வேதனையின் நாட்கள்.

ஆனால் இன்று அவரது மகள் ஒரு வேலைக்காரியைப் போல் நடத்தப்படுவதை அரூபமாக இருக்கும் சுஜாதாவும் பார்த்தாரோ என்னவோ அண்ணன் மகாதேவனின் கனவினில் அழுத முகத்துடன் வர, அடுத்தச் சில நாட்களில் தலைமை வழக்கறிஞர் சகிதமாகப் பூவரசம்பட்டிக்கு விரைந்தார் மகாதேவன்.

அங்கு அந்தப் பெரிய கிராமத்து வீட்டின் வாயிலில் நீர் தெளித்துக் கொண்டிருந்த மித்ரலட்சுமியைப் பார்த்தவர் அசந்து போனார்.

தங்கை சுஜாதாவை அச்சு அசலாகக் கொண்டு பிறந்திருப்பளின் முகத்தைக் கொண்டே அவள் யாரென்று அவரால் கணிக்க முடிந்தது. ஆயினும் அவளது அலங்கோலத்தைக் கண்டதுமே அவருக்கு நெருடியது.

முகம் மட்டும் தெய்வீகக்களையுடன் பளபளக்க, பழைய ஆடை உடுத்தி வேலைக்காரியைப் போல் நின்றிருந்த சின்னவளின் தோற்றத்தைக் கண்ட அவரது நல்ல மனம் தவியாய் தவித்துப் போனது.

அடுத்த விநாடியே ஏதோ முடிவெடுத்தவர் போல் காரில் ஏறி அமர, ஆயினும் அவரது பாசத்தில் திளைத்திருந்த ஸ்வாசம், காற்றோடு கலந்து அவளையும் வந்தடைந்ததோ என்னவோ மறுபக்கம் திரும்பி நின்றிருந்த மித்ரலட்சுமியின் முகம் மகாதேவனின் கார் நின்றிருந்த புறம் எதேச்சையாகத் திரும்பியது.

சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்கள் சற்றுத்தொலைவில் நிற்கும் காரின் மீது படிய, ஏனோ தன்னை அவளிடம் இருந்து மறைத்துக் கொண்டவரின் உருவம் அவளுக்குச் சரிவரத் தெரியவில்லை.

அவருக்கு அருகில் அமர்ந்த மணிமாறன் காரணம் கேட்க,

"அதுதான் என் தங்கை மகள் போலத் தெரியுது மணி. அச்சுஅசலா அவளை மாதிரியே இருக்காள். ஆனால் அவள் உடுத்தி இருக்கும் ட்ரெஸைப் பார்த்தியா? எவ்வளவு வசதியான குடும்பம் எங்களுடையது. ஆனால் அவள் இருக்கும் நிலையைப் பார்த்தால் அந்த வீட்டுப் பொண்ணு போலவே இல்லை....

டில்லியில் நான் செட்டிலானதற்குப் பிறகு பூவசரம்பட்டிப் பக்கமே நான் வராமல் இருந்தது ரொம்பத் தப்பா ஆகிருக்கு. எங்க அப்பாவுடைய மரணத்திற்குப் பிறகாவது நான் இங்க வந்திருக்கணும், என் அம்மாவையாவது நான் சந்திச்சிருக்கணும். என் அப்பாவுக்குச் சளைச்சவன் நானில்லைங்கிற மாதிரி வெட்டி கௌரவம் பார்த்துட்டு நான் இந்தக் கிராமத்தையே என் நினைவுகளில் இருந்து ஒதுக்கி வச்சிருந்தேன்.

பிறகு தொழிற்களையும் என் நிறுவனங்களையும் வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்திட்டு, என்னைப் பெற்றவளையோ, என் கூடப் பிறந்தவளையோ நான் பார்க்காமல் விட்டுட்டேன். ஆனால் அதெல்லாம் எவ்வளவு பெரிய தவறுன்னு இப்ப புரியுது!" என்றவர் நெஞ்சமே பிளந்துவிடுவது போல் ஆழ முச்செடுத்தார்.

பிறகு, "மணி, முதலில் அங்க நடப்பதை நான் முழுமையா தெரிஞ்சிக்கணும். பிறகு என் தங்கை மகளை நான் சந்திக்கின்றேன்." என்றவர் ஏனோ அங்கிருந்து கிளம்ப மனமே வராதது போல் காத்துக்கிடந்தார்.

அதற்குள் வீட்டிற்குள் சென்றுவிட்ட மித்ரலட்சுமி சில மணித்துளிகளில் புதிதாக உடையுடுத்தி வெளியே வர, அவளின் சில நிமிடங்களுக்குள்ளான மாற்றங்களில் அதிசயித்தவர் அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, அவள் காலையில் வழக்கமாய்த் தரிசிக்கும் அம்பாளை சந்திக்கக் கோவிலுக்குச் செல்கின்றாள் என்பதை அறிந்து கொண்டார்.

பின் அவ்வீட்டு ஆண்களும் வெளியேறியதும் தன்னிடம் தெரிவிக்கவும் என்று மணிமாறனிடம் கூறியவர் மறைவாய் காரை நிறுத்துமாறு பணித்துவிட்டு அப்படியே ஓய்ந்துப் போய் இருக்கையில் தலை சாய்த்துக் கண்களை மூட, சில நிமிடங்களிலேயே மூத்தவர் நடேசனையும் சேர்த்து, அனைத்து ஆண்களும் வெளியே சென்றுவிட்டனர் என்ற தகவல் வந்தது.

அதனைத் தொடர்ந்து தான் பிறந்து வளர்ந்த அந்தக் கிராமத்து பெரிய வீட்டிற்குள் பல வருடங்களுக்குப் பிறகு அடி எடுத்து வைக்க, அவரைத் திடுமென எதிபாராத வகையில் கண்டதும் வியந்து போனார் ரமாதேவி.

"எப்படி இருக்கீங்க அண்ணி?"

அவர் விளித்ததும் ரமாதேவிக்கு அடுத்து நின்றிருந்த பார்வதி மூத்தவரைத் திரும்பிப் பார்க்க, "நீங்க எப்படி.." என்று முடிக்க முடியாது தவித்துப் போனார் ரமாதேவி.

அதற்குள் அவர் யார் என்று புரிபட, விடுவிடுவென அவரை நெருங்கிய பார்வதி, "நான் உங்க தம்பி சிங்காரவேலனுடைய மனைவி பார்வதி. வாங்க, வந்து உட்காருங்க." என்று பணிவுடன் வரவேற்றார்.

அமர்ந்ததும் வீட்டைச் சுற்றி மகாதேவன் பார்க்க, பழைய நினைவுகளில் அவரது மனம் மூழ்கத் துவங்கியது.

திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமின்றி என் சாவிற்குக் கூட நீ வரக்கூடாது என்று சுவாமிநாதன் பிள்ளை கூறியதும், அதற்குப் பிறகு தங்கை சுஜாதா மரணத்தைப் பற்றி அறிந்ததுமே அவர் நடேசனுக்கு அழைக்க, அவரும் மகாதேவன் வருவதை விரும்பவில்லை என்று கோபத்துடன் கூறியதும் நியாபகத்திற்கு வந்தது.

அதற்குப் பிறகு பூவரசம்பட்டியைப் பற்றியே அவர் மறந்து போனார் என்று சொல்லலாம்.

குற்ற உணர்ச்சி கொல்ல, பற்பல எண்ணங்களுடன் சுற்றிலும் கண்களால் துலாவ, அவ்வீட்டில் ஒரு இடத்தில் கூட அவரது புகைப்படம் எதுவுமே இல்லை என்று கவனித்ததில் அவருக்கு வேதனையான ஒரு சிரிப்பு வந்தது.

அவரது சிந்தனைகளைப் புரிந்து கொண்டது போல் பெண்கள் இருவரும் அமைதியாக இருக்க, "என் அம்மாவை நான் பார்க்கணும்." என்றார்.

அவரைப் பாட்டி சாவித்திரியின் அறைக்குப் பார்வதி அழைத்துச் செல்ல, அறைக்குள் நுழைந்த மகாதேவனின் கால்கள், வெறும் எலும்புக்கூடு ஒன்று படுத்துக்கிடப்பது போல் கிடந்த தாயின் பரிதாப தோற்றத்தைக் கண்டதும் தடுமாறின.

மகன் வந்த தகவலை அறிந்து சாவித்திரி கண் விழிக்க, அவரது படுக்கையில் அமர்ந்த மகாதேவனின் கண்களில் நீர் தேங்கியது.

இருவரும் ஒரு சில நிமிடங்கள் பார்வையாலும் சிறுசிறு வார்த்தைகளாலும் தங்களது ஆழ்மனதில் அத்தனை நாட்களும் சிக்கியிருந்த ஏக்கங்களைப் பரிமாறிக் கொள்ள, தங்களையே பச்சாதாபத்துடன் பார்த்திருந்த பார்வதியிடம் 'மற்றவர்கள் எங்கே?' என்று சாவித்திரி சைகையில் கேட்டார்.

"லட்சுமி கோவிலுக்குப் போயிருக்கா அத்த. அவ கோவிலுக்குப் போனால் எவ்வளவு நேரம் கழிச்சு வருவான்னு உங்களுக்குத் தான் தெரியுமே. மற்றபடி ராணி அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கா அத்த. போய் ரெண்டு நாள் ஆச்சு. ஆம்பளைங்க எல்லாரும் வெளிய போயிட்டாங்க."

அவளது பதிலில் நிம்மதி பெருக, அறைக்கதவை தாளிடுமாறும், தங்களுக்குத் தனிமைக் கொடுக்குமாறும் பார்வதியிடம் தெரிவித்தார் சாவித்திரி.

அவர் வெளியேறியதுமே தனது தலையணைக்கு அடியில் எப்பொழுதுமே வைத்திருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்த பாட்டி அதனை மகாதேவனின் கையில் வைத்தார்.

அதில் பாட்டி சாவித்திரிக்கு அருகில் அவரை அணைத்தவாக்கில் அதே கட்டிலில் அழகிய சின்னப்புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் மித்ரலட்சுமி.

"இவ யாருன்னு தெரியுதா மகா?"

"ம்மா. அப்படியே சுஜாதாவை உரிச்சு வச்சிட்டு பிறந்திருக்காம்மா அவ பொண்ணு."

அவரது பதிலில் இழுத்து நெடுமூச்சுவிட்ட சாவித்திரி தனது மொத்த திடத்தையும் ஒன்றுக்கூட்டி பேசத் துவங்கினார்.

"இத்தனை நாள் ஏன் என்னை வந்து பார்க்கலை மகா? உங்க அப்பாவோட இறப்புக்கு கூட நீ வரலை. அதுக்கான காரணத்தை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது. ஆனா நீ உயிரையே வச்சிருந்த உன் ஒரே தங்கை சுஜாதா, அவ என்ன ஆனாள், எப்படி இறந்துப் போனாள்ன்னு நீ தெரிஞ்சுக்கக் கூட முயற்சிக்கலைன்னு நான் எத்தனையோ நாள் நினைச்சு வேதனைப்பட்டிருக்கேன் தெரியுமா? நடேசன் உன்னை வரக்கூடாதுன்னு சொன்னது எனக்கு நியாபகம் இருக்கு, இருந்தாலும் இது உன் வீடும் இல்லையா? உன்னால எப்படி மகா இந்தளவுக்கு இரும்பா மாற முடிஞ்சது?"

"ம்மா.."

தொண்டை அடைக்க மகாதேவன் அம்மா என்று அழைத்ததைக் கண்டு பாட்டியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"சரி, அதை விடு.. அதெல்லாம் முடிஞ்சு போன காரியங்கள். அதை எல்லாம் பற்றிப் பேசி இனி பிரயோஜனமில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை நான் உன்னிடம் பேசியே தீரணும்."

ஒரு தாயின் வேதனையான உள்ளத்தைச் சாந்தப்படுத்த எவராலும் முடியாது, அது அவர் பெற்ற பிள்ளையானாலும்!

அதிலும் பெற்றவளையே கைவிட்டவனாய் மன்னிக்க முடியாத பெருந்தவறுகளை இழைத்திருக்கும் என்னால் அவரது மனதை ஆற்ற முடியுமா?

புரிந்தது மகாதேவனுக்கு, ஆனால் காலம் கடந்து புரிந்து என்ன பயன்?

"ம்மா, சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?"

"நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது மகா, ஆனால் இனி இந்தச் சின்னப் பொண்ணைப் பார்த்துக்குறது உன் பொறுப்பு. இந்த வயசான கிழவிக்காக இந்தப் பொண்ணு இங்க படாதப்பாடு பட்டுட்டு இருக்கா. தங்கச்சி பொண்ணுன்னு கூடப் பார்க்காம ஒரு வேலைக்காரியையும் விடக் கேவலமா நடத்துறானுங்க உன் கூடப் பொறந்தவனுங்க. ஏன்டா கடவுள் என் உசுறை எடுக்க மாட்டேங்குறான்னு நான் வேதனைப்பட்டாலும், ஒருவேளை நானும் போயிட்டால் இந்தப் பொண்ணோட நிலைமை என்னாகும்னு நான் பயந்து நடுங்கிட்டு இருக்கேன்..."

இடையிடையே தடுமாறினாலும், நிறுத்தி மூச்சு வாங்கி நிதானித்துப் பின் தொடர்ந்தார்.

"இவளோட எதிர்காலத்தை நினைச்சு நான் கண்ணீர் வடிக்காத நாளே இல்லை மகா. ஆனால் இப்போ தான் தெரியுது, உன்னை நான் பார்க்கணும், உன் கையில் இவளை நான் ஒப்படைக்கணும்னு தான் அந்தக் கடவுள் என்னை இவ்வளவு நாளா எடுத்துட்டு போகாம வச்சிருக்கான்னு. நீ சரியான நேரத்துல தான் மகா இங்க வந்திருக்க. தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு. இவளை நீ உன் கூடக் கூட்டிட்டு போயிடு. இனியும் இவளை இங்க விட்டு வைச்சா அவனுங்க இவளை என்ன பாடு படுத்துவானுங்களோ தெரியாது. அதுவும் அந்த அதியமானையும் சத்யனையும் நினைச்சா எ.. என் உடம்பே ப..பதறுதுப்பா.."

தடுமாறும் குரலில் அவர் கெஞ்ச கெஞ்ச மகாதேவனின் உள்ளம் உடைய ஆரம்பித்தது.

"ம்மா.."

கண்களில் நீர்திரள இதயமே வெடித்துவிடுவது போல் தோன்றியதில் மெதுவாக மார்பை நீவியவராக எதுவுமே பேச இயலாதவராய் அவர் மெல்லிய குரலில் மீண்டும் அன்னையை அழைக்க, "மகா, உனக்கு ஆம்பளைப் புள்ளைங்க இருக்காங்களா?" என்றார் சாவித்திரி, அந்த மெலிந்த குரலில் அவ்வளவு ஏக்கத்தைச் சுமந்து.

அவர் கேட்க வருவது மகாதேவனுக்குப் புரிந்தது.

"இருக்கான்மா. ஒரு பையன் இருக்கான். ஆர்யாதித்யா தேவன். என் பிஸ்னஸ் எல்லாத்தையும் அவன் தான் பார்த்துக்குறான். இன்னும் அவனுக்குக் கல்யாணம் ஆகலை. அவனைவிட மித்ரலட்சுமி குறைஞ்சது ஏழெட்டு வயசு சின்னவளாத் தான் இருக்கணும்."

அன்னையின் ஏக்கம் புரிந்து அவர் பேச, மகனது பதிலில் பாட்டியின் கண்களில் கண்ணீர் புரண்டது.

அவரது கண்ணீருக்குப் பின் இருக்கும் விண்ணப்பம் புரிய, நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். நீங்க தைரியமா இருங்க. என் மகன் வாழ்க்கையில் அவனே விரும்பினாலும் இனி வேறு பெண் வரமாட்டாள். என் உயிரைக் கொடுத்தாலாவது நீங்க விரும்புவதை நான் செய்து முடிப்பேன் என்று வார்த்தைகளின்றி அவரது ஆழ்மனம் மானசீகமாய் வாக்குக் கொடுத்தது.

ஆனால் அவர் உயிர் இந்தப் பூவலகத்தில் ஜீவித்தவரை அவரால் அக்காரியத்தைச் செய்து முடிக்க முடியாமல் போயிற்று!

அவ்வளவு எளிதில் இறங்கி வருபவனா அவரது மகன்!!

பின்னாளில் அவர் எவ்வளவோ மறைமுகமாக முயன்றும் அது முடியாமல் போகும் சூழ்நிலை உருவாக, தனது அன்னைக்குக் கொடுத்த வாக்கு நிறைவேறாமல் போயிவிடுமோ என்று மனதிற்குள் புதைந்துக் கிடந்த ஏக்கங்களோட நாட்களைக் கழித்தவரின் உயிர், அவரது ஆழ்மனதின் விருப்பம் ஒருநாள் நிறைவேறப் போவதை அறியாமல் அவரைவிட்டு சென்றதை நாம் அறிவோம்!

பூவரசம்பட்டியில் பெற்றவளிடம் சத்தியம் செய்த அன்றே மித்ரலட்சுமியை அழைத்துச் சென்றுவிட மகாதேவனின் மனம் துடியாய் துடிக்க ஆரம்பித்தது.

ஆயினும் அத்தகைய பிரம்மாண்டமான தொழில் ஸ்தாபனங்களை உருவாக்கிய மகாதேவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

அவரது உடன்பிறந்தவர்கள் தங்களது அன்னையை இப்படி வீட்டில் வைத்திருப்பது கூட மித்ரலட்சுமிக்காக மட்டுமாகத் தான் இருக்கவேண்டும். இல்லையெனில் அவரை இந்நேரம் ஏதாவது ஆசிரமத்திலோ அல்லது முதியோர் இல்லத்திலோ கொண்டு போய் விட்டிருப்பார்கள்.

அதே சமயம் அவரது அன்னையை டில்லிக்கு அழைத்துச் செல்கின்றேன் என்று கூறினாலும் மூன்று பிள்ளைகளும் ஒன்றாய் கூடி மறுத்துவிடுவர் என்று அதிநிச்சயமாய் அவருக்குத் தெரியும்.

சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டவராய் எப்படியும் மித்ரலட்சுமியை என் வீட்டிற்கு நான் அழைத்துச் செல்வேன் என்று வாக்களித்தவர், தான் இங்கு வந்ததையோ, அன்னையைச் சந்தித்ததையோ யாரிடமும், மித்ரலட்சுமி உட்பட, சொல்ல வேண்டாம் என்று இரண்டு அண்ணன் மனைவிகளிடமும் வேண்டிக் கொண்டவர் பாரமான நெஞ்சுடன் அமைதியாய் அன்றே தில்லிக்கு திரும்பினார்.

அன்று இரவே தலைமை வழக்கறிஞர் ராகவிடம் சில விவரங்களைப் பற்றி விவாதித்தவர் அதனை எக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லக்கூடாது என்று தனது செயலாளர் மணிமாறனிடம் சத்தியம் பெற்றுக் கொண்டார்.

மகாதேவன் எழுதிய உண்மையான உயில் அவரது இறப்பிற்குப் பிறகு அவரது மனைவியிடமும் வாரிசுகளிடமும் தெரிவிக்கப்பட்டாலும், ஏனோ பூவரசம்பட்டியைப் பற்றி மட்டும் ஒருவரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்தனர் தலைமை வழக்கறிஞரும், மணிமாறனும்.

ஆனால் அதுவும் இன்று காலை வரை தான் தலைமை வழக்கறிஞரால் அப்படி இருக்க முடிந்தது.

அன்று காலை, சந்தியா மணிமாறனுடன் இணைந்து பூவரசம்பட்டிக்கு கிளம்பியதுமே வழக்கறிஞர் ராகவ் ஆர்யாவை அழைத்தவர் பல விஷயங்களை அவனிடம் வெளிப்படையாகப் பேசினார். அதனில் பூவரசம்பட்டிக்கு மகாதேவன் சென்றதையும், அங்கு அவரது அன்னையைச் சந்தித்தவர் பின் திரும்பும் பொழுது பெரிதும் உடைந்துப் போயிருந்ததையும் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

அதே போல் மித்ரலட்சுமியை எப்படியாவது அங்கு இருந்து மீட்க வேண்டும் என்று பெரும் போராட்டம் செய்த மகாதேவன் அதனைச் சரிவரச் செயல்படுத்த முடியாமல் போன வேதனையும் அவரது இதய அழுத்தத்திற்குக் காரணம் என்றும் தெளிவாக அவனிடம் விவரித்தார்.

ஆனால் ஏனோ மித்ரலட்சுமி மீது ஆர்யாவிற்குத் துளியளவும் பரிதாபம் வரவில்லை.

அது அவளது தலையெழுத்து என்று வழக்கம் போல் எண்ணினானோ என்னவோ, ஆனால் தந்தை மகாதேவனின் இறப்பிற்குக் காரணமான அவரது உடன்பிறப்புகளின் அட்டூழியத்தைக் கேட்ட ஆர்யாவின் உள்ளம் பாறையாய் இறுகிப் போனது.

அதற்குப் பிறகே சில விஷயங்களை ஆராய்ந்த ஆர்யா இறுதியாகத் தந்தையின் உயிலில் ஒரு மாற்றம் செய்ய உத்தரவிட்டான்.

அதாவது உயிலின் கடைசிப்பகுதியில் 'மித்ரலட்சுமியை என் மகன் ஆர்யாதித்யா தேவனே மணக்க வேண்டும், பிறகு அவளது சொத்துகள் இருவருக்கும் சேர வேண்டும்' என்று மகாதேவன் எழுதியதாக மாற்றி அமைக்கச் செய்தான்.

காரணம் மித்ரலட்சுமியைத் திருமணம் செய்துக்கொள்ளப் போவது AA Group of Companies-ன் நிறுவனர் ஆருஷ் ஆதித்யா என்று தெரிய வந்ததில். அவனது அந்தஸ்தும் வசதிவாய்ப்பும் தெரியும் என்பதால் நிச்சயமாக அவன் மித்ரலட்சுமியின் சொத்துகளுக்கு ஆசைப்படப் போவதில்லை.

அப்படியெனில் அவன் அந்தச் சொத்துகளை மகாதேவனின் உடன்பிறப்புகளுக்கே தாரைவார்த்துக் கொடுத்திருந்தாலும் கொடுத்திருக்கலாம்.

ஆனால் என் தந்தையை ஏற்றுக் கொள்ளாத பணத்தாசை பிடித்த அந்த ஈவு இரக்கமற்ற மனிதர்களை, என் தந்தையின் மரணத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்தவர்களை நான் பழிவாங்க வேண்டும்.

ஒரு பைசா அவர்களுக்குக் கிடைக்காத வகையில் அவர்களை நடுவீதியில் நிற்க வைக்க வேண்டும். இதை என்னால் வெகு எளிதாகச் செய்ய முடியும், ஆனால் அதற்கு அவகாசம் இல்லை.

இன்னும் சில மணி நேரங்களில் மித்ரலட்சுமி ஆருஷின் மனைவியாகிவிடுவாள். அதைத் தடுக்க என் அம்மா சென்றிருந்தாலும் ஒருவேளை அவரால் முடியவில்லை என்றால்?

ஆக அதற்குள் நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

நிமிடங்களுக்குள் சடச்சடவென முடிவெடுத்தவனின் திட்டமே அது. ஆனால் அவனையும் அவனது தலைமை வழக்கறிஞர் ராகவையும் தவிர, மணிமாறன் உட்பட, வேறு ஒருவரும் அறியாதது ஒன்று.

அது மித்ரலட்சுமியின் கழுத்தில் அவன் மாங்கல்யத்தை அணிவித்தது வேண்டுமென்றால் உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு சட்டரீதியாக அவன் அவர்களது திருமணத்தைப் பதிவு செய்தது பொய்.

அனைத்துமே ஒரு நாடகம்!

அது உண்மையில் திருமணத்தைப் பதிவு செய்யும் அலுவலகமே அல்ல. அனைத்துமே அவன் தத்ரூபமாக இருக்குமளவிற்கு ஏற்பாடு செய்த இடங்கள். மணிமாறனுக்குச் சந்தேகம் தோன்றினாலும் இறந்துப் போன என் முதலாளியின் ஏக்கமும் கனவும் எப்படியாவது நிறைவேறினால் சரி என்று அவர் ஒதுங்கிக் கொள்ள, சந்தியாவும் தற்பொழுதைய சூழ்நிலையில் அதியமான் சத்யன் போன்ற இளம் மிருகங்களிடம் இருந்து மித்ரலட்சுமி தப்பித்தால் போதும், மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அதைப்பற்றி அவனிடம் விசாரிக்காது அரை மனதுடன் விட்டுவிட்டார்

ஆனால் மித்ரலட்சுமி?

தன் கழுத்தில் தாலிகட்டியவன், தன்னை ஒரு சிறையில் இருந்து விடுவித்தவன் இவன். அதுவும் இவனது அன்னையே சம்மதம் என்று கூறிய பிறகு இனி என் வாழ்நாள் அமைதியாகக் கழியும் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

ஆனால் அவன் ஆடிய ஆட்டமும், நகர்த்தும் காய்களும் தன்னை ஒரு சதுரங்க வேட்டைக்குள் சிக்கிவிட்டிருப்பது தெரிய வந்தால் அந்த இளம் பெண்ணின் நிலை??

தொடரும்.
 
Aarya ipo mithra va vachu vilaiyada thana seiran.
Apo antha veetla irunthavangalukum ivanukum perusa difference illaiye
Mithra voda manakashtangalukkana places mattum maariruku
Intha aarush and aarya ivanungalukulla enna relation?

Eagerly waiting for the next episode
 
Aarya ipo mithra va vachu vilaiyada thana seiran.
Apo antha veetla irunthavangalukum ivanukum perusa difference illaiye
Mithra voda manakashtangalukkana places mattum maariruku
Intha aarush and aarya ivanungalukulla enna relation?

Eagerly waiting for the next episode
Yes, he does not care about Mithra, all he is trying to do is to avenge his father's death! :-)
 
Aarya, Aarush introduction kuduthinga, innoruthan yaru villaian ah ila innoru hero va, first of all intha Aarya ve villanism panran mitra ku
 
Top