JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

PK 11 a 12

அத்தியாயம் 🌾 11 :
"என்ன முடிவு பண்ணியிருக்க?" சரளாவின் எண்ணப்படி கோவிலுக்கு சென்று இருவரையும் இறைவனின் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு, பொங்கல் வைத்து வந்த பின்னரும் மலர் அவளின் வீட்டிலேயே இருக்க கயல் நேரடியாகவே மலரிடம் அவளின் எண்ணத்தை அறிய வினவினாள்.
"என்னை அவங்க கூப்பிடலக்கா. அம்மாவும் போன்னு சொல்லலை. எனக்கும் என்ன செய்யணும் தெரியல."
முகி வந்து அழைத்ததையெல்லாம் மலர் அறிந்திருக்கவில்லை.
மகள் பழைய கலகலப்பு இல்லாது, தங்களிடமே பேசாது ஏதோ நினைவிலேயே வலம் வந்து கொண்டிருப்பதால் மகளை எப்படி போவென்று சொல்வதென தெரியாது சரளாவும் மகளை அவள் போக்கில் விட்டுவிட இன்று கயல் கேள்வி கேட்கும்படி ஆனது.
"அது வந்து கயல் நான் தான் அவள் வெசனத்துல இருக்காளேன்னு அப்படியே விட்டுட்டேன்."
மக்களுக்காக சரளா பரிந்து வந்தார்.
"சரி அதையெல்லாம் விடுங்க... உனக்கு முகியோடு வாழ சம்மதமா?"
"..." மலர் ஏதோ சொல்ல வாய் திறக்க,
"எங்கள் யாருக்காகவும் யோசிக்காமல் உனக்காக என நினைத்து மட்டும் பதில் சொல்லு. விருப்பமில்லாமல் வாழும் வாழ்வு நரகத்திற்கு சமம்.
பிடித்தால் தான் உணவையே ஒரு வாய் அதிகம் உண்ண முடியும். பிடிக்காமல் தண்ணீர் குடித்து விழுங்கிவிடலாம் என்பது நடு ஆற்றில் நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் நிலை தான்.
முகி கட்டியது தாலியா இல்லை வெறும் கயிறு தானான்னு நீதான் முடிவு பண்ணனும்" என்றிருந்தாள் கயல்.
ஏற்கனவே முகியின் மீது காதல் கொண்டிருப்பவள் வேண்டாமென்றா சொல்லுவாள். ஆனால் என்னவோ ஒன்று தடுக்க மலரின் மனம் ஊமையாய் கதறியது.
முகி மலரின் பதிலை எதிர்பார்த்து அவளையே பார்த்திருந்தான். மனதில் அதீத ஏக்கம்.
'உன்னோடு வாழ முடியாதென்று சொல்லிவிட்டால் அவளை விட்டுவிடுவாயா?' மனதின் கேள்வி மொத்தமாய் காதல் நெஞ்சத்தை உலுக்க வேகமாக சரளாவின் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான்.
தம்பியின் வேதனை கயலுக்கும் புரிந்தது. அதே சமயம் புரிந்துகொள்ள வேண்டியவளோ சிலையென நின்றிருந்தாள்.
மலரின் நீண்ட அமைதி கயலுக்கு, 'அவளுக்கு விருப்பமில்லாததை சொல்லத் தயங்குகிறாளோ?' என தவறாக பட...
"உன்னால் முடியாதென்றால் நீ உன் விருப்பம்போல் இரு மலர். இதை நினைத்து உன்னை வருத்திக்கொள்ளாதே!" என்று மலருக்கு ஆதரவாக பேசும்போதே,
'இவள் இல்லையென்றால் முகிக்கு ஏற்படும் வருத்தத்தை எப்படி போக்குவேன்' என உள்ளுக்குள் வேதனை கொண்டாள்.
மகளின் அமைதி சரளாவிற்கே அவளின் வாழ்க்கையை நினைத்து பயத்தை தோற்றுவித்தது.
எவ்வளவு நேரம் நின்றாலும் மலர் பேசப்போவதில்லையென அறிந்த கயல் எதுவும் சொல்லாது வெளி செல்ல முயல...
"எனக்கு முகி மாமான்னா ரொம்ப இஷ்டம்க்கா" என்ற மலரின் மெல்லிய ஒலி அவளை தடுத்து நிறுத்தியது.
"அப்போ என்னோடு நம்ம வீட்டுக்கு வறியா?"
கயலின் கேள்வியில் மலரின் தலை சம்மதம் தெரிவிக்க அப்போதுதான் மாணிக்கத்திற்கும் சரளாவிற்கு சீரான மூச்சு வந்தது.
"அமைதியா இருந்து பயமுறுத்திட்டியே மலர்" என்ற கயல் தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.
என்னதான் மிக நெருக்கத்தில் இருக்கும் பக்கத்து வீடென்றாலும், மணம் முடிந்த பின்னர் கணவன் வீட்டில் பெண் இருப்பதுதானே முறை. அதனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய உடைமைகளுடன் கயலின் வீட்டு வாசலில் அடி வைத்தவளை அங்கேயே நிற்க சொல்லிய கயல், முகியின் அறையை நோக்கி சத்தம் கொடுத்தாள்.
மலரின் யோசனையான முகத்தில் மூழ்கியிருந்தவன், 'தன்னுடன் இருப்பது அவளுக்கு அத்தனை கடினமானதா?' என தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருக்க செவி தீண்டிய கயலின் குரலில் வீட்டிற்கு வெளியில் வந்தவனின் விழிகளில் சந்தோஷ மின்னல்.
மலர்ந்த புன்னகையை இதழோடு மறைத்தவன்... உண்மையில் உள்ளுக்குள் குத்தாட்டம் ஆடினான்.
தன்னை ஏற்கமாட்டாளோ என்று பயந்திருந்தவனுக்கு அவனவளின் வருகை பேராழி இன்பம் தந்தது.
"சும்மா பார்த்துட்டே நிக்காதடா! வந்து மலர் பக்கத்துல நில்லு" என்றவள் இருவரையும் சேர்த்து நிற்க வைத்து ஆலம் சுற்றி வீட்டிற்குள் அழைத்துச்சென்று மலரை தன் பெற்றோரின் புகைப்படம் முன்பு விளக்கேற்ற சொல்லியவள் இருவரையும் அணைத்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினாள்.
"சரிடா ரெண்டு பேரும் பத்திரமா இருங்க. நான் கரும்பு கொல்லைக்கு போறேன். இன்னைக்கு கடைசி நாள். கறி விருந்துக்கு வேறு அங்கு ஏற்பாடாகுது" என்றபடி மலர் நகர, முகியுடன் தனித்து இருக்க வேண்டியதை எண்ணி விதிர்விதிர்த்த மலர்...
"அக்கா நானும் வறேன்" என்றும்,
"நீ வா மலர்" என்று முகியும் ஒரே நேரத்தில் சொல்ல இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த கயல்,
"நீயெதுக்கு அவளை கூப்பிடற, நாளைக்கு காலேஜ் போகணும் ரெண்டு பேரும். நீ சென்னை போக தின்க்ஸ் பேக் பண்ணு. நீ அந்த ரூமுக்கு போ மலர்" என்று முகியுடையது அல்லாத மற்றொரு அறையை மலருக்கு காண்பித்து...
"முதலில் படிப்பை முடியுங்க. அப்புறம் தான் கணவன் மனைவி காதலெல்லாம்" என முகியை பார்த்து அழுத்தமாகக் கூறியவாறு சென்றாள்.
கயல் சென்றதும் விட்டால் போதுமென்று மலர் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
மலருடன் உடனடியாக வாழ்கையை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் முகிக்கு கிடையாது. முதலில் அவள் அவனின் காதலை ஏற்று கணவனாக அவன் அவளின் மனதில் தடம் பதித்த பின்னரே வாழ்வின் ஆர்ம்பம் அமைய வேண்டுமென்று நினைத்திருந்தவனக்கு அவளுடன் பேச கூட முடியாது, இருவரும் இரு துருவமாக தனித்து இருக்க போவது முகியின் முகத்தில் அப்பட்டமான பிடித்தமின்மையை காட்டியது.
எப்படியும் முகி கல்லூரி சென்றுவிட்டாள் அவளுடன் இருக்க போவதில்லை தான் ஆனால், இன்று தனித்து தன்னுடன் இருப்பவளிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டும். அவளின் மனதை தன்புறம் சற்றேனும் சாய்க்க வேண்டுமென எண்ணியிருக்க அதற்கு வாய்ப்பின்றி போனது.
'போச்சு... அவ்வளவு தான். காலேஜ் போயிட்டால் திரும்பிவர நான்கு மாதம் ஆகும். அதுவரை அவளின் இந்த விலகளோடு எப்படிடா முகி இருக்க போகிறாய்?' தன்னைத்தானே கேட்டவாறு மெத்தையில் விழுந்தவன் திறந்திருக்கும் தனது அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு அறை வாயிலில் பார்வையை வைக்க அங்கு அவனவள் நின்றிருந்தாள்.
கயல் சொல்லிய பிறகு மலர் தன்னுடைய அறைக்கு வருவாளென்று முகி சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வேகமாக எழுந்தவன், "வா மலர்" என்று அவளை உற்சாகத்தோடு உள் வரவேற்றான்.
அறையினுள் நுழைந்த மலர், முகி கொஞ்சமும் நினைத்திடாத ஒன்றை செய்தாள்.
******
கரும்பு வெட்டுவது முடியும் நாள் தங்களது வசதிக்கேற்ப வேலை செய்தவர்களுக்கு விருந்து வைப்பர். ஒருசிலர் விளைச்சலில் பதியும் கண் திருஷ்டிற்காக ஆடு அல்லது கோழி வெட்டி சமைத்து போடுவர்.
அந்த வகையில் கரும்பின் இறுதி லோடு ஏற்றிக்கொண்டிருக்க, தென்னந்தோப்புக்கு அடியில் சமையல் வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. அந்த நாள் கரும்பு வெட்டுதலில் ஈடுபட்டவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
"அண்ணா மதியம் விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பியதும் இன்னைக்கே வேலையை தொடங்கிடலாம்" என்ற கயலின் கூற்று புரிந்த சிவா, தங்களின் புது முயற்சிக்காக தாங்கள் தேர்ந்தெடுத்திருந்த கழனிக்கு நீர் பாய்ச்ச சென்றான்.
அடுத்த ஒருமணி நேரமும் மின்னலென விரைய தென்னந்தோப்பு கீழே, பேச்சும் சிரிப்புமாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்தனர்.
"என்னடா கரும்பு வெட்டி முடிச்சிட்டாள் போலிருக்கே! அந்த பண்ணையில ஒரே சத்தமா இருக்கு. கறி குழம்பு வாசம் இங்கு வரை வீசுது" என்ற ரத்தினம்,
"எத்தனை லோடு வந்துச்சாம்" என்று தன்னுடைய ஆளிடம் வினவினார்.
கரும்பு ஏற்றிச் சென்ற ட்ராக்டர் கணக்கை அவன் சொல்ல...
"அவளால் மட்டும் எப்படிடா இந்தளவுக்கு விளைச்சல் கொண்டுவர முடியுது" என்று அப்பட்டமாக தன் பொறாமையை வெளிக்காட்டினார் ரத்தினம்.
"இப்போ ஏதோ புதுசா மீன் வளர்க்க போறாளாம்." அரைகுறையாக கிடைத்த தகவலை ரத்தினத்திடம் கூறினான் ஒருவன்.
"என்னது மீன் வளர்க்கவா?" என்று யோசனையைக் காட்டிய ரத்தினம், "எங்கு குளம் வெட்ட போறா? இல்லை குட்டை அமைக்க போறாளா?" என்று அதனைப்பற்றி தெரிந்துகொள்ள கேட்டார்.
"அது தெரியலங்க... ஆனால் கூடவே நெல்லும் நட போறதா, அவள் பண்ணையில வேலை செய்யுறவங்க பேசிக்கிட்டாங்க" என்ற ரத்தனத்தின் ஆள் கேலியாக சிரித்தான்.
"எதுக்குடா சிரிக்குற?"
"அது ஒன்னுமில்லைங்க... நெல்லும் மீனும் எப்படிங்க ஒன்னா வளர்க்க முடியும். படிச்ச புள்ளைன்னு பார்த்தால் இப்படி வெவரம் தெரியாம இருக்குதுங்களே!" என்றான் அவன்.
ஆனால் ரத்தினத்திற்கு இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு முறை அறுவடையின் போதும், ரத்தினம் மற்றும் கயலின் மூட்டைகளின் எண்ணிக்கையில் தான் அனைவரின் கண்ணும் இருக்கும். போட்டியே அவர்கள் இருவருக்கும் தான். யார் முன்னென்று அறிய அவர்களை விட அவ்வூர் மக்களுக்குத்தான் அதிக ஆர்வம்.
முதலில் தனியொரு பெண்ணாக விவசாயம் செய்யப்போவதாக சொல்லிய கயலை அனைவரும் பரிதாபமாகத்தான் பார்த்தார்கள். ஆனால் அவளின் உழைப்பில் அதிசயித்து தான் போனார்கள். யாரும் எதிர்பாராத உழைப்பு அவளிடம்.
கடந்த இரண்டு வருடத்தில் கயல் ஐந்து முறை நெல் அறுவடை செய்திருக்கின்றாள். அதில் முதல் முறை மட்டுமே, உழைப்பில் முதல் அடி என்பதால் தட்டுத்தடுமாறி நின்றாள். அடுத்தடுத்த முறை ரத்தினத்தை விட தன் விளைச்சலை அதிகமாக உயர்த்திக்காட்டி... விவசாயம் பெண்களாலும் முடியுமென்று நிரூபித்துக் காட்டினாள்.
அன்று முதல் ரத்தினம் கயலை முந்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் கயல் விவசாயத்தில் காட்டும் வழிமுறைகளை தன் கண்காணிப்பின் மூலம் தெரிந்துள்ள ரத்தினம் இம்முறையும் அவள் பெரிதாக ஒன்றை செய்ய இருக்கிறாள் என்று எண்ணினார்.
அவரால் அவருடைய ஆளைப்போன்று அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
'சரி செய்யட்டும் பார்ப்போம்' என்று இருந்தார்.
பொறாமை இருந்த போதும் முதலில் இருந்த பழிவாங்கல் இப்போது ரத்தினத்திடம் இல்லை. ஆனால் தன்னுடைய போட்டியாக அவர் கருதுவது கயலை மட்டுமே.
"ஆளெல்லாம் கலைஞ்சிட்டங்களா?"
வயலுக்கு நீர் பாய்த்து முடித்த சிவா கயலிருக்கும் இடம் வந்தான்.
"இல்லைண்ணா... கூலி கொடுத்து அனுப்பனும். நீங்க சாப்பிடுங்க நான் கணக்கை முடிச்சிட்டு வறேன்" என்றவள் சிவாவிற்கு இலையில் உணவினை பரிமாறிய பின்னரே ஆட்கள் இருக்கும் இடம் சென்றாள்.
பேசியதை விட ஆளுக்கு ஐம்பது ரூபாய் அதிகமாகவே கயல் கொடுக்க... எல்லோரும் நிறைவுடன் அங்கிருந்து சென்றனர்.
"விவசாயத்தில் போட்ட முதல் எடுக்கவே அரும்பாடு பட வேண்டியதா இருக்கு. இதில் ஆள் விலையை ஐம்பது ரூபாய் ஏற்றினாள் மற்ற விவசாயிகள் என்ன பண்ணுவாங்க.
நீ கொடுத்தால் அடுத்த பண்ணையிலும் அதைத்தானே எதிர்பார்ப்பானுங்க."
தனக்கு பின்னால் கேட்ட குரலில் கயல் திரும்பி பார்க்க, அங்கு ரத்தினம் நின்று கொண்டிருந்தார்.
"நூறு நாள் வேலை ஆரம்பித்ததுல இருந்து விவசாய கூலிக்கு யார் வரா? நெல்லை மட்டும் மிஷின் வச்சு அருத்தால் போதுமா. மற்ற பயிரெல்லாம் ஆளு வச்சு தானே அறுவடை பண்ண முடியும்.
சுலபமா கிடைக்கிற கூலியை விட்டுட்டு எனக்காக வந்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க நான் கொஞ்சம் அதிகமா கொடுத்தேன். அவ்வளவுதான். நாளை பின்ன கூப்பிட்டால் ஆள் வரனுமா இல்லையா? ஆள் விலையை ஏற்றும் எண்ணம் எனக்கில்லை."
ரத்தினத்தின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்தாள் கயல்விழி.
"என்னவோ... உனக்கு மட்டும் தான் விவசாயம் பண்ண முடியுமுன்னு ரொம்ப தான் ஆடுற."
"வயசுல மூத்தவருன்னு பார்க்கிறேன். இல்லை எனக்கும் திருப்பிக் கொடுக்கத் தெரியும். வார்த்தை வித்தியாசம் எல்லாம் என்கிட்ட வேண்டாம்" என்ற கயல் ரத்தினத்திடம் தேவையில்லா பேச்செதற்கென்று நகர,
"உன் தம்பியை கொஞ்சம் உசாரா இருக்க சொல்லு, சிங்காரம் மகனை காலையில நம்ம ஊர் எல்லையில் பார்த்தேன்" என்ற ரத்தனத்தின் வார்த்தையில் அதிர்வுடன் திரும்பி நின்றாள்.
"என்ன சொல்றீங்க?"
தம்பியை நினைத்து கயலுக்கு கலக்கமாக இருந்தது.
"ஏய்... எதுக்குத்தா இப்படி பீதியாவுற, அவன் சிங்காரத்துகிட்ட எதுவும் சொல்லல போலிருக்கு. சொல்லியிருந்தால் சிங்காரம் இந்நேரம் வரை உன் தம்பியை விட்டு வைத்திருக்க மாட்டான். இந்த பய வேறெதோ திட்டத்தோடு இருக்குது. அதான் ஊருக்குள்ள வேவு பார்க்க வந்திருக்கான் போல. சூதானமா இருக்க சொல்லணும் தோணுச்சு அவ்வளவுதான்" என்ற ரத்தினம்,
"உன்னை தைரியமான பொண்ணுன்னு நினைச்சாக்கா, தம்பின்னதும் இப்படி வெம்புற" என்றார்.
"புதுசா கரிசனம் காத்து வாங்குது." அந்நேரம் சிவா அங்கு வந்தான்.
"நான் கொஞ்சம் கேட்டவன் தாம்ல... நான்னு சுயநலமா இருக்கவன் தான், எனக்கு போட்டியா யாரும் வரக்கூடாதுன்னு நினைக்கவன் தான், என்னைவிட வயசில் பல வருசம் சின்னது, எனக்கு போட்டியான்னு சில குடைச்சல் கொடுக்கத்தான் செய்வேன். அதெல்லாம் போட்டியாத்தான். அதுக்குன்னு பழிவாங்க அடிதடி, கொலைன்னு இறங்குற ஆளில்லை.
நம்மவூர் பிள்ளைக்கிட்ட நான் எடைஞ்சல் கொடுப்பேன். அதுக்காக வெளியூர் ஆளு வந்தால் பார்த்துகிட்டு இருக்கணும்மா?" என்றவர், "போடா" என்றுவிட்டு சென்றுவிட்டார்.
ரத்தினம் நடந்து செல்ல... பின்னால் தென்பாண்டிச் சீமையிலே பாடல் ஒலிப்பதை போலிருக்க,
"இவரு நல்லவரா? கெட்டவரா?" என்று கயல் அப்பாவியாய் வினவ,
"தெரியலையேம்மா" என்றான் சிவா.
அடுத்த நொடி நகைச்சுவையை விடுத்த கயல் தீவிரமானாள்.
"அவன் என்ன பிரச்சனை பண்ணுவான்னு தெரியலையே கயலு." சிவாவும் யோசித்தான்.
"மலருக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு, அவனுக்கு கோபம் இருக்கும். அதுக்கு காரணமான முகிக்கிட்டதான் அவன் கோபத்தை காட்டுவான்னு நினைக்குறேன். கல்யாணம் ஆன பெண்ணை தொல்லை செய்ய மாட்டான்" என்ற கயலுக்கு தெரிந்திருக்கவில்லை, ரகு அவ்வளவு நல்லவனில்லை என்று.
"எதுக்கும் முகியை கொஞ்சம் சூதானமா இருக்க சொல்லணும் கயல்" என்ற சிவாவின் கூற்றிற்கு,
"முகி நாளைக்கு சென்னை கிளம்பிடுவாண்ணா. அதுக்கு அப்புறம் வர மாதங்கள் ஆகும். அதுக்குள்ள அந்த ரகு கோபம் குறையுதா பார்ப்போம்" என்றவள் நடக்கப்போகும் விபரீதம் அறியாது தன் புது முயற்சியில் கவனமானாள்.
******
"லூங் என்னை உரசிக்கிட்டே இருக்க. இது உனக்கு நல்லதில்லை."
தன் முன் கால் மேல் காலிட்டு அமர்ந்து தன்னையே எச்சரிக்கும் பார்த்திபனை சுவாரசியமாக பார்த்திருந்தார் லூங்.
"தொழில் போட்டியில் இதெல்லாம் சாதாரணம் தானே பார்த்திபன்." லூங் பார்த்திபனை பற்றி முழுவதும் தெரியாமல் சுரண்டி விட்டார். அதனின் பலனை இனி அவர் முற்றும் முழுதாக அனுபவிக்கப் போகிறார். பாவம்.
ஏற்கனவே கயலைப்பற்றி மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியாது தான் திரும்பி வந்ததற்கு லூங்கின் செயல் தான் காரணமென்ற நிலையில் முன்பைவிட அதிகமாக கோபமிருக்க, இனி தந்தையின் முன்னால் நண்பன் என்கிற பாவ மன்னிப்பு கூட பார்த்திபனிடத்தில் லூங்கிற்கு இருக்கப்போவதில்லை.
பார்த்திபனின் அருகில் நின்றிருந்த டெல்வினிற்கு, 'சிங்கத்தை சொரிஞ்சுவிட்டுடியே' மொமண்ட் தான்.
"இங்கப்பாரு பார்த்திபன், நீ என் என்னை மாட்டிவிட இருந்தாய். அதான் உனக்கு முன்பு நான் முந்திக்கொண்டேன்" என்ற லூங் அட்டகாசமாக சிரித்து வைத்தார்.
'இவரு அடங்கமாட்டார் போலவே!' டெல்வின் மைண்ட்வாய்ஸ்.
"ஹோ, டிட் ஃபார் டேட்."
அவ்வளவு தான் என்பதைப்போல் பார்த்திபன் எழுந்து கொண்டான். அமைதியாக வெளியேறும் பார்த்திபனின் முதுகை வெறித்த லூங்கிற்கு அவனை கணிக்க முடியவில்லை.
நியோவின் ஃபார்மை அதிரடியாக எரித்ததால், தன் பெயர் வெளியில் வந்துவிடக் கூடாதென்று லூங் கொஞ்சம் பொறுமை காப்பான் என்று நினைத்தே சற்று அசட்டையாக... பிரச்சினை என்றதும் இந்தியா சென்றிருந்தான் பார்த்திபன்.
அங்கு வேலையை முடித்தவன், தான் எதிர்பாராத ஒன்றும் நல்லவிதமாக கிடைக்க மறுநாள் தன் கிராமம் செல்லவிருந்தான்.
அன்றைய இரவு டெல்வினிடமிருந்து அழைப்பு வரவும் சொல்லப்பட்ட செய்தியில் பார்த்திபனுக்கு கொஞ்சமே கொஞ்சம் அதிர்வுதான். அவனால் சமாளிக்கக்கூடிய ஒன்று தான். இருப்பினும் தி வாரியர் என்கிற பெயருக்காக அவன் தந்த உழைப்பு. அதனை வீணாக்க விட்டுவிடுவானா என்ன?
திரும்ப இந்தியா வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று அச்சமயம் கயலின் எண்ணங்களை ஒதுக்கி வைத்தவன், இரவோடு இரவாக சென்னையில் சிங்கப்பூர் நோக்கி தனி விமானம் மூலம் கிளம்பியவன் நான்கு மணி, இருபது நிமிடத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தான்.
பின் இரவில் வந்தவன் நேராகச் சென்றது, தலைமையான தி வாரியருக்குத்தான்.
அங்கு சென்ற பின்னர் தான் லூங் செய்த செயலின் வீரியம் பார்த்திபனுக்கு புரிந்தது.
அத்தியாயம் 🌾 12 :
"ரிசப்ஷனில் வேலை செய்யும் அத்தனை பேரையும் மீட்டிங் ஹாலில் ஆஜற்படுத்து."
டெல்வினிற்கு உத்தரவிட்ட பார்த்திபன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கினான்.
'நாளை இந்த செய்தி மீடியாக்களில் வந்தால் ஒட்டுமொத்தமாக தி வாரியரின் பெயர் சருக்கிவிடும். முதல் கரும்புள்ளி. அதற்கு காரணமான லூங்கை விட்டுவிடாதே!'
பார்த்திபனின் மூளையும் மனமும் ஒருங்கே கூவிக்கொண்டது.
"டெல்வின்."
மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்த டெல்வின் பார்த்திபனின் அறைக்குள் வந்து முழுதாக பத்து நிமிடங்கள் கடந்திருக்க, ஏதோ முடிவு செய்துவிட்ட குரலில் நண்பனை அழைத்தான்.
"எஸ் பாஸ்."
"கொஞ்சம் ஃப்ரியா மூவ் பண்ணலாம் டெல். ரொம்ப ப்ரஷரா இருக்கு." சிறிது சிறிதாக அவன் உருவாக்கிய சாம்ராஜ்யம். அவனின் முதல் குழந்தை. அதனின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அதற்கு அடித்தளமிட்ட தேவராஜைவிட பார்த்திபனுக்கு அதிக பங்கிருக்கிறது. அதனால் இதனை சாதாரணமாக பார்த்திபனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டுமென பிரச்சனையின் தீவிரம் புரிந்ததும் திட்டங்களை வகுத்திருந்தாலும், அனைத்தும் நல்ல முறையில் செயல்பட வேண்டுமென சற்று பதட்டம் கொண்டவனுக்கு அந்நேரம் ஆறுதல் தேவைப்பட தோழனின் தோள்களில் சாய நினைத்தான்.
"சொல்லுடா... நான் என்ன செய்யணும்?"
தானிப்போது அவனுக்கு நண்பனாக தேவைப்படுகிறோம் என்று புரிந்துகொண்ட டெல் பார்த்திபனின் தோளில் கரம் பதித்து வினவினான்.
பார்த்திபன் தன் திட்டங்களைக் கூற டெல்வினிற்கு உதரல் எடுத்தது.
"இது சரியா பார்த்தி?"
"அப்போ அவன் செய்தது மட்டும் சரியா?" பார்த்திபனிடத்தில் சத்தமில்லாத அழுத்தமான கோபம்.
"அங்கிள் ஃபீல் பண்ணுவார் டா!"
"இவ்வளவு நாள் டாட்'காக மட்டும் தான் அந்த லூங்கை விட்டு வைத்திருந்தேன். இனியும் பொறுமை காக்க என்னால் முடியாது" என்று சீரிய பார்த்திபன், "நான் சொன்னதை செய்" என்றான். அவ்வளவு உறுதி அவனிடத்தில்.
"இந்த வயதில் இப்படியொரு அவப்பெயர் அவருக்கு தேவையா? அவரின் குடும்பத்தை நினைத்தாவது விட்டுவிடலாம்." டெல்வினிற்கு இதை செய்வது சரியா என்கிற குழப்பம்.
"ஹா... ஹா..." சத்தமாக சிரித்தான் பார்த்திபன்.
அச்சிரிப்பிற்கான அர்த்தம் டெல்லுக்கு விளங்கவில்லை.
"இந்த வயதில் அவர் செய்யக்கூடிய செயலும் இதுவல்லவே! தேவைப்படுமென்று தான், லூங் என்னுடன் முதலில் மோதியதும் அவனின் அடி முதல் நுனி வரை தெரிந்துகொண்டேன். அதில் அவனின் பல ரகசியங்களும் அடக்கம்.
இப்போது இதை நான் செய்யவில்லை என்றால் நாளை மீடியாக்களுக்கு நம் வாரியர் தான் பேசுபொருள்" என்று விளக்கமளித்த பார்த்திபன்,
"மீடியாக்களும் மக்களும் இப்போதெல்லாம் இந்தமாதிரி பெரிய இடத்து கிசுகிசுக்கள் தான் அதிகம் லைக் பண்றாங்க டெல்" என்று ஒருவித முகச் சுழிப்புடன் கூறினான்.
"அதென்னவோ உண்மைதான்" என்ற டெல்லும், பார்த்திபன் சொல்லியதை செய்திட அங்கிருந்த லேப்டாப்பின் முன் அமர்ந்தான்.
டெல்வின் செய்யட்டுமென்று நகர்ந்து வந்த பார்த்திபன், நகரத்தின் ஊடங்கங்கள் அனைத்திற்கும் தானே நேரடியாகத் தொடர்பு கொண்டு தி வாரியரின் பெயர் வெளியில் வராமலிருக்க அனைத்தையும் செய்தான்.
இதில், இதுபோன்று தங்களுக்கு மீண்டுமொரு நல்ல ஹாட் நியூஸ் கிடைக்காது என்று யோசித்தவர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதோடு,
"இன்னும் அரை மணி நேரத்தில் இதைவிட சூப்பரான ஹாட் நியூஸ் உங்களுக்கு கிடைக்கும்" என்றுகூறி தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான்.
மீடியக்களுக்கு டி.ஆர்.பி தானே முக்கியம். அதற்காகத்தானே இன்று நடந்ததை இல்லையென்றும், இல்லாததை இருக்குமென்றும் மாற்றி மாற்றி சமூகத்தை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருசிலர் உண்மையாக இருந்தாலும் அவர்களெல்லாம் அந்தக் கூட்டத்திலிருந்து தனித்து வெளியே தெரிவதில்லையே. இங்கு அதனை தனக்கு சாதகாமாக பயன்படுத்திக் கொண்டான் பார்த்திபன்.
காய்களை அழகாக லூங்கின் பக்கம் திருப்பிய பார்த்திபனுக்கு அப்போதுதான் மனம் சமன்படுவதைப் போலிருந்தது.
"வாட் ஹெப்பன் டெல்."
டன் என்பதைப்போல் டெல்வின் பெருவிரலை உயர்த்திக் காண்பித்தான்.
விஷமமாக புன்னகைத்த பார்த்திபன், மீட்டிங் ஹாலை நோக்கிச் செல்ல, டெல் பின் தொடர்ந்தான்.
பார்த்திபனை கண்டதும் அனைவரும் தன்னைப்போல் இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர்.
முதன்மையாக தன்னுடைய இருக்கையில் தோரணையாக அமர்ந்தவன், கூலர்ஸை கழட்டிவிட்டு நேர்பார்வையாக அங்கு நின்றிருந்த பதினோரு பேரையும் குத்தி கிழித்தான்.
"யார் அவங்களுக்கு பாஸ் கொடுத்தது?"
கர்ஜனையாக அவ்வறையில் பார்த்திபனின் குரல் எதிரொலித்தது.
ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டனரேத் தவிர, யாரும் வாய் திறக்கவில்லை.
"ஒட்டுமொத்தமாக இவங்க எல்லோருக்கும் டெர்மினேஷன் கொடுங்க" என்று டெல்லிடம் கூறியவன், "இவர்களுக்கு அடுத்திருக்கும் அனைவரையும் வரச்சொல்லுங்க, அதில் பாஸ் செக்கிங், கார்ட்ஸ், மெனஜர்ஸ் எல்லோரும் இருக்கணும்" என்ற பார்த்திபன் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லி காவல் துறையின் உயர் அதிகாரியை காண விரைந்தான்.
செல்லும் வழியில் தேவராஜ் பலமுறை அவனை அழைத்தும் பார்த்திபன் அதனை ஏற்கவில்லை.
தந்தை மட்டுமில்லை என்றால் எப்போதோ அந்த லூங்கை தொழில் உலகில் அழித்திருப்பேன். எல்லாவற்றிற்கும் நட்பு என்று தேவராஜ் முன்நின்றது தான் காரணம். அதனால் தான் அவன் தன்னையே ஆட்டம் காண வைக்க நினைதானென்று பார்த்திபனின் மொத்த கோபமும் தந்தையின் பக்கம் திரும்பியிருந்தது.
பார்த்திபனின் பணம் அவனை எவ்வித தடையுமின்றி நேரடியாக காவல்துறை முதன்மை அதிகாரியை காண வழி செய்தது.
பார்த்திபன் யாரென்று அறிந்த அதிகாரி,
"நிச்சயம் இதனை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை" என்று தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
"எத்தனை கிராம்ஸ்?" அவரின் நம்பகத்தன்மை தன்னை பாதிக்கவில்லை என்பதைப்போல் தான் வந்த விடயத்தில் கண்ணாய் இருந்தான் பார்த்திபன்.
தொழில் உலகின் சக்ரவர்த்தி பார்த்திபன். பல அரசியல்வாதிகள் அவனின் கைகளில். சட்டதிட்டங்கள் அங்கு கடுமையானதாக இருப்பினும், பார்த்திபனை பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை.
ஆதலால் பார்த்திபனுக்கு பதில் அளித்தார். பதில் கொடுக்க வேண்டிய இடத்திலும் அவர் இருந்தார்.
"சிக்ஸ் கேஜிஸ்."
"ம்." சில நொடி அமைதி.
"மீடியாக்கு நாங்க நியூஸ் கொடுக்கல."
"ஐ க்னோவ்."
"நியாயமாக பார்த்தால் தி வாரியரின் நிர்வாகி என்ற அடிப்படையில் உங்களுடைய அப்பாவை கைது செய்திருக்க வேண்டும். நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். அதான்."
எதனை எதிர்பார்த்து லூங் அதனை செய்தானோ, அது நடைபெறாமல் இருப்பதற்கு காரணத்தை அவர் கூறினார்.
"அவங்க யார் பெயரை சொல்கிறார்கள்?"
"மிஸ்டர். தேவராஜ் பெயரில் நீங்க சொல்லித்தான் கடந்த இரண்டு வருடங்களாக செய்வதாக..."
"ஹோ..."
அவர் வாக்கியத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் பார்த்திபனிடத்தில் பிரதிபலிப்பு.
"நான் அவங்களை மீட் பண்ணணுமே!"
காவல்துறை அதிகாரி தயக்கம் காட்டினார்.
"யாரை உங்கக்கிட்ட பேச சொல்லணும். பிரசிடெண்ட் ஒகேவா?"
"நோ... நோ... சார். ஐ க்னோவ் யூர் பவர். நானே அழைத்து செல்கிறேன்."
அவரே ஒரு செல்லிற்குள் பார்த்திபனை கூட்டிச்சென்றார்.
இரு ஆண்கள் அங்கு விசாரணைக்கு போடப்பட்டிருந்த இருக்கையில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் உடலில் சில அடிகளின் தடம் பதிந்திருந்தது.
"நல்ல கவனிப்பு." கூறியவன், அவர்களுக்கு முன்னிருந்த மேசையில் குதித்து அமர்ந்தான். ஆஜானுபாகுவான அவனின் தோற்றத்தில் அவர்களுக்கு பயந்து வந்தது.
"உங்க பெயர்?"
அவர்கள் இருவரும் அதிகாரியை பார்த்தனர்.
"கேள்வி கேட்டது நான்." நிசப்தமான அவ்வறையில் பார்த்திபனின் குரல் ஓங்கி ஒலித்தது.
"நீங்க யாரு?"
பார்ப்பதற்கு போலீஸ் போன்ற தோற்றம் பார்திபனிடத்தில் இல்லை என்பதால் இருவரும் ஒன்றாக வினவினர்.
அவர்கள் கேட்டதற்கு அட்டகாசமாக சிரித்த பார்த்திபன்,
"ஆர் யூ நோட் இட்?" எனக் கேட்டான் அதிகாரியிடம்.
அவரும் பார்த்திபன் கேட்பது புரிய ஆமென்று தலையசைத்தார்.
"சரி சொல்லுங்க உங்களை ட்ரக்ஸ் சப்ளை பண்ண சொன்னது யார்?"
ஆம் தி வாரியரில் உள்ள மது கூடத்தில் பார்த்திபனின் பெயரை கொண்டு போதை மருந்து விநியோகம் நடைபெறுகிறது என்ற தகவலின் அடிப்படையில் காவல் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்ய, எவ்வித சிரமமின்றி அவர்கள் இருவரும் சிக்கினர்.
கையில் ஆறு கிலோ பவுடர் போதை மருந்து வைத்திருந்தனர்.
பெரிய பெரிய ஹோட்டல்களில் விருந்தினர்கள் போன்று வந்து இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் சகஜம் என்பதால் அங்கு வைத்து எவ்வித விசாரணையுமின்றி அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க முதலில் சொல்ல மாட்டோமென்று பிடிவாதமாக இருந்தவர்கள், போலீசின் அடிக்கு பயப்படுவதைப்போல் நடித்து பார்த்திபனின் பெயரை கூறியிருந்தனர்.
பார்த்திபனின் ஒழுக்கத்தை பற்றி மீடியாக்களில் அவனைப்பற்றி வரும் பல கட்டுரைகள் மூலம் அறிந்திருந்த அதிகாரி மீண்டும் தன்பானியில் விசாரிக்க, இறுதிவரை அவர்கள் சொல்லியது என்னவோ பார்த்திபனின் பெயரை மட்டும் தான்.
அப்போதே காவல் நிலையத்திலிருந்து டெல்வினிற்கு செய்தி கசிந்தது.
ஏற்கனவே தங்களது இடத்தில் இப்படியொன்று நடந்துவிட்டதே, போலீஸ் வந்து சென்றது தெரிந்தாலே பார்த்திபன் அனைவரையும் தன் கோபத்தால் வதைத்திடுவான் என்று பயந்திருந்த டெல்... இப்போது தான் கேட்ட செய்தியில் இதனை பார்த்தியிடம் எப்படி சொல்வதென்று தயங்கி தடுமாறி, 'சொல்லாமல் இருக்க முடியாது... இரவிற்குள் சரிசெய்திட வேண்டும் இல்லையென்றால் பார்த்திபன் ஊரில் இல்லாததால் அவருக்கு பதிலாக தேவராஜ் கைதாகலாம்... அதோடு வாரியரின் மீது கரும்புள்ளி விழுந்திடும்' என அனைத்தையும் அலசி ஆராய்ந்ததோடு இப்போது பார்த்திபன் இங்கிருப்பது அவசியம் என்பதை உணர்ந்து ஒருவாறு தைரியத்தை வரவழைத்து அவனிடம் சொல்லிவிட, துரித நிலையில் வந்து சேர்ந்த பார்த்திபன் தன் வழியில் நேர்ந்திருக்கும் தவறை சரி செய்து கொண்டிருக்கிறான்.
மீண்டும் தன் வினாவை பார்த்திபன் அழுத்தி கேட்க...
"எங்க பாஸ் பார்த்திபன். அவர் சொல்லித்தான் செய்தோம்" என்று அவனிடமே கூறினர்.
"யா... வெல்" என்ற பார்த்திபன், "நீங்க உங்க பாஸை நேரில் பார்த்ததில்லையா?" என்க அவ்விருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தனர்.
"இதுவரை பார்த்தில்லையென்றால் இப்போ பாருங்களேன்" என்ற பார்த்திபன் மேசையிலிருந்த எழுந்து கால்களை அகட்டி வைத்து தோரணையாக நின்றான்.
அவனின் கண்களில் தெரிந்த தணலில் இருவரின் தொண்டைக்குழியும் பயத்தில் ஏறி இறங்கியது. நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. சிங்கத்திடம் சிக்கிக்கொண்ட உணர்வு.
பார்த்திபன் நேரடியாக வருவானென்பதோடு அவன்தான் பார்த்திபனென்று அவர்கள் நினைக்கவில்லை. அப்பட்டமாக பயம் கண்ணில் தெரிந்தது.
காவல்துறை அதிகாரியே அவன்முன் அமைதியாக நிற்க, தற்போதுதான் பார்த்திபனின் உயரம் அவர்களுக்கு புரிந்தது.
பார்த்திபன் எத்தகைய உயரமான இடத்தில் இருக்கின்றான் என்பது தெரிந்ததும் அவனின் காலினைக் கட்டிக்கொண்டு இருவரும் தங்களை விட்டுவிடுமாறு மன்றாடினர்.
"சரி சொல்லுங்க... நடந்தது என்ன?"
ஒரு நொடி தயக்கம் காட்டியவர்கள், லூங்கின் காரியதரிசி சொல்லியதை தாங்கள் செய்ததாகவும், போலீசிடம் மாட்டிக்கொண்டால் பார்த்திபனின் பெயரை சொல்லிவிட சொல்லியதையும் அவர்கள் ஒன்றாககூற அதனை அதிகாரி பதிவு செய்துகொண்டார்.
"சாரி மிஸ்டர்.பார்த்திபன்."
உண்மை அறிந்ததும் அதிகாரி தன் மன்னிப்பை வேண்டினார்.
"அடுத்த என்ன?" பார்த்திபன் அர்த்தமாக வினவினான்.
"எங்கள் கடமையை செய்கிறோம்" என்றவரின் பதிலுக்கு,
"ஒருத்தரை மாட்டிவிட சிக்ஸ் கேஜிஸ் கொக்கைன் யூஸ் பண்ணியிருக்காங்க, அதுக்கு அவங்களுக்கு எப்படி ட்ரக்ஸ் கிடைச்சிருக்கும்" என்று சந்தேகம் எழுப்புவதைப்போல் லூங்கின் மறைமுக இருட்டு உலகை மாட்டிவிட்டுச் செய்தான்.
"இந்த கோணத்தில் விசாரிப்பதாக" அதிகாரி சொல்லியதும்,
"இச்செய்தி நாளை அனைத்து மீடியாக்களிலும் வெளியாகியிருக்க வேண்டும். லூங் என்ற பெயர் அனைவரின் வாயிலும் விழுந்திருக்க வேண்டும்" என்ற பார்த்திபன் தன் பழியைத் தீர்த்துக் கொண்டதற்கான சந்தோஷத்தை முழுவதுமாக அனுபவிக்க லூங்கை காணச் சென்றதோடு இன்னும் தன்னைக் காத்துக்கொள்ள எந்தவொரு அடியும் எடுத்து வைக்கவில்லை என்பதான மாயத் தோற்றத்தை காட்டிவிட்டு வந்தான்.
வாரியருக்குள் நுழைந்தவனுள் புது ரத்தம் பாய்வதைப்போலிருந்து.
போதைப்பொருள் விநியோகம் என்பது சாதரணமல்லவே. லூங் எண்ணியதைப்போல் நடந்திருந்தால், இந்நேரம் பார்த்திபன் சிறையில். வாரியரின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். நினைக்கவே வலி தந்தது.
"பார்த்தி...?"
லாபியிலேயே சிலையென நின்றிருந்தவனை உலுக்கி நிகழ் அழைத்தான் டெல்.
"ஜஸ்ட் எமோஷன்ஸ் டா" என்றவன், "ஹவ் இஸ் சோசியல் மீடியா?" எனக் கேட்டான்.
"சும்மா அதிருது."
டெல்லின் பதிலில் பார்த்திபனின் உதடு நெலிந்தது.
"இது பர்த்தாது..." எனக்கூறியவன், "லூங்கை பார்க்கணுமே!" என்றான்.
"அதற்கு அவசியமே இல்லை. அவரே வராரு."
"இஸ் இட்" என்ற பார்த்திபன் திரும்பி பார்க்க... அதீத சீற்றத்துடன் பார்த்திபனை நெருங்கிய லூங், அவனின் கழுத்தில் கை வைக்க போக லாவகமாக நகர்ந்தான்.
"நான் யார் கையிலும் அவ்வளவு எளிதில் சிக்கமாட்டேன் மிஸ்டர்.லூங்." பார்த்திபனின் வார்த்தைகள் நிறைய அர்த்தங்களை கொடுத்தன.
"என்னை மொத்தமா காலி பண்ணிட்டல..." ரணமான குரல், கோபத்தில் கொந்தளித்தது.
"நீங்க காலி பண்ண நினைத்தது இந்த பார்த்திபனை." தீ ஜூவாலை என தகித்த முகம்... புன்னகையில் தோய்ந்திருந்தது. அது பகை முறித்த வெற்றிக்கு சான்று.
"தொழிலில் வீழ்த்த நினைத்த என்னை, என் மரியாதை கௌரவத்தின் மீது கைவைத்து மொத்தமாக சாய்ச்சிட்டல."
"அஃப்கோர்ஸ்... நீங்க தொட நினைத்தது என்னை. இதுவே என் இடத்தில் குறைவு தான். போதாதென்றால் இன்னும் செய்யட்டுமா?"
"டேய்..." பாய்ந்திடும் வேகத்தில் கத்தியவர், அங்கிருப்போர் அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து... அங்கிருந்து வெளியேறினார்.
"இவர் தானே லூங். அந்த வீடியோவில் இருந்தது." ஒருவர் மற்றொருவரிடம் கேட்டது, அவர்களை கடந்து சென்ற லூங்கிற்கு தெளிவாகவே கேட்டது.
"இவருக்கே இவருடன் இருந்த பெண் வயதில் பிள்ளைகள் இருப்பார்கள் போலவே."
அந்த வார்த்தையில்... யாரோ பலம் கொண்டு மண்டையில் ஓங்கி அடித்த உணர்வு அவருக்கு.
அவர்கள் பேசியது பார்த்திபனுக்கும் தெளிவாகக் கேட்க... அவன் எதிர்பார்த்ததுதானே, முகத்தில் தோன்றிய புன்னகையை மறைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்.
லூங் அதீத போதையில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்டுத்தீப்போல் ஊடகங்களிலும் இணையத்திலும் பரவியது. அதற்கு காரணம் பார்த்திபனே. தன் நிழலையே பிறர் தொட அனுமதித்திடாதவன் தன் சாம்ராஜ்யத்தை தொட நினைத்தால் விட்டுவிடுவானா?
எந்த மீடியாவில் தன்னுடைய பெயரை பரவச்செய்து சந்தோஷம் காண லூங் விழைந்தானோ அதையே திரும்பி அவனுக்கு அளித்திருந்தான் பார்த்திபன்.
விடயம் இணையத்தில் எளிதாக மூலை முடுக்கிலும் பரவியிருக்க... வீடியோவை வைத்தே அவருக்கு எப்படி போதைப்பொருள் கிடைத்தது எனும் வகையில் அவரது தொழில் இடங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்து சோதனை செய்ய, அண்டர் டார்க்கில் ட்ரக்ஸ் உலகின் தாதா லூங் என்பது தெரியவர, அதற்கு சாட்சியாக தி வாரியரில் கைது செய்யப்பட்ட இருவரும் இருக்க லூங் எளிதாக மாட்டிக்கொண்டர்.
தன் பொருள் வைத்தே சிக்குண்டார்.
போதைப்பொருள் கடத்தலில் வெளிவருவது மிகக் கடினமென்று அவருக்கும் தெரியும். அதனாலேயே பார்த்திபனை அவ்வழக்கில் சிக்க வைக்க நினைத்து திட்டம் போட்டார். அவரின் திட்டம் அவருக்கே வினையாக முடிந்தது.
இந்த வயதில் பெண்ணுடன் அவர் போட்ட ஆட்டத்தை கண்ட அவரின் குடும்பம் மொத்தமாக அவரை ஒதுக்கி வைத்தனர். அதன் விளைவு அவரை வெளியில் எடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை.
பார்த்திபன் நடத்திய இந்நிகழ்வால் லூங்கை விட அதிகம் பயந்தது நியோ மற்றும் வில் தான்.
பார்த்திபன் இந்தளவிற்கு இறங்கி அடிப்பான்... ஒருத்தரின் வாழ்வையே நிர்மூலம் ஆக்குவான் என்று நினைத்துக்கூட பார்த்திடாத இருவருக்கும் லூங்கின் நிலையை பார்த்து தங்களுக்கு அவன் கொடுத்த பதிலடி எவ்வளவோ தேவலாம் என்பது தான்.
"இனி அவன் பக்கமே திரும்பாதே!"
நியோ தன் தம்பி வில்'லை எச்சரித்தவனாய்.
வில்லும் அரண்டு போயிருக்க... பார்த்திபனிடம் ஒதுங்கியே இருக்க அந்நொடி முடிவெடுத்திருந்தான்.
"டேய் பார்த்தி காலையிலிருந்து நூறு முறையாவது அங்கிள் கால் பண்ணியிருப்பாருடா... நீ எடுக்கலன்னு என்னை திட்டுறாருடா." அப்பாவியாகக் கூறினான் டெல்.
"மீட்டிங் ஹாலில் எல்லோரும் ரெடியா?"
"கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமா உனக்குத்தான் வெயிட்டிங்" என்ற டெல் மீட்டிங் ஹால் நோக்கிச் செல்ல... பத்து நிமிட இடைவெளியில் பார்த்திபன் உள் நுழைந்தான்.
அனைவரும் அவனின் வருகையில் மிரண்டிருந்தனர்.
"இவ்வளவு பெரிய விடயம் நடந்திருக்கு. அதற்கு நீங்களெல்லாம் என்ன பதில் சொல்லப்போறீங்க?" அதிரடியாக வினவினான்.
பாஸ் செக்கிங்... செக்யூரிட்டி... மேனேஜர்ஸ் என அனைவரும் கை காட்டியது, பாதுகாப்பு பிரிவில் இருக்கும் எச்.ஆர்'ஐ.
அடுத்து அவருக்கு என்ன நடந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ!
தவறு என்றால் பார்த்திபனின் அகராதியில் தண்டனை என்பது நிச்சயம். மன்னிப்பே கிடையாது.
அனைவரையும் தன் விரல் நுனியில் ஆட்டுவிப்பவன்... அவனை ஆட்டுவிக்கும் கண்ணாட்டியின் விழி அசைவிற்கு ஆடயிருக்கிறான்.
ஆட்டுவிக்கும் இடத்தில் இருப்பவரும் ஓர் நாள் அடங்கித்தான் ஆகவேண்டும் என்பதை அனுபவித்து தெரிந்துகொள்ளவிருக்கிறான்.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top