JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

PK 13 a 14

அத்தியாயம் 🌾 13 :
தன்னுடைய அறையின் வாயிலில் வந்து நின்ற மலரை முகி கண்களில் தெறிக்கும் ஆச்சரியத்தோடு பார்த்து சிலையென நின்றான்.
மலர் அவனிடம் வந்திருப்பதை அவனால் நம்ப முடியவில்லை.
'உண்மையில் மலர் தான் தன் கண் முன் நிற்கின்றாளா?' தன்னைத்தானே கிள்ளி பார்த்துக்கொண்டான்.
அதுவரை தயக்கத்துடன் முகியை நிமிர்ந்தும் பாராது வாயிலில் நின்றிருந்தவள், கண் இமைக்கும் நொடியில் பாய்ந்து வந்து முகியை அணைத்து அவன் நெஞ்சத்தில் முகம் புதைத்திருந்தாள்.
"முகி மாமா..."
இதனை சுத்தமாக முகியால் நம்ப முடியாமல் போனது. முகியை பார்ப்பதற்கே முகம் மறுப்பவள் இன்று அணைத்து நின்றாள் அவனின் நிலையை சொல்லவும் வேண்டுமா?
உறைநிலையில் இதயத்தின் துடிப்பை உறைய வைத்துக் கொண்டிருந்தான்.
சட்டையைத் தாண்டி நெஞ்சை தீண்டிய ஈரத்தில் தன்னிலை மீண்டவன்,
"டேய் மலர்... என்னாச்சுடா?" என்று வினவியவன், தன் விரல் கொண்டு அவளின் முகம் உயர்த்தினான்.
"நான் மாமா சொல்லலாமா?"
அவளின் கேள்வியில் என்றோ முட்டாள் தனமாக தான் நடந்துகொண்டதை எண்ணி இப்போது வருந்தினான். காலம் கடந்து மன்னிப்பை யாசித்தான்.
"சாரிடாம்மா."
நேற்றிலிருந்து தன்னை மீறி நடந்த நிகழ்வுகளால் தன் உணர்வுகளை காட்டிட முடியாது, உள்ளுக்குள் அழுத்தி வைத்ததன் விளைவு... தன் கட்டுப்பாடுகளை உடைத்து சேர வேண்டிய தோள் சாய்ந்தாள்.
அவளது பக்கம் சொல்லி அழக்கூட ஆளின்றி தவித்தவள், தனக்கான இடத்தை தேடியே முகியிடம் வந்திருந்தாள்.
முகியின் மீது இன்னமும் சொல்லிக்கொள்ள முடியா வருத்தம் அவளுள் உள்ளதுதான். இருப்பினும் தவிக்கும் அவளின் மனம் அமைதி வேண்டி தேடியதும் அவளவனைத்தான்.
அடுத்து என்னவென்று யோசிக்கும் திறனின்றி, மனதோடு போராடிக் கொண்டிருந்தாள்... இந்நொடி, தனக்கானவனிடம் தஞ்சம் கொண்டுள்ள அந்த நாழிகை அனைத்தும் இதமாக மாறுவதை பாவையவள் உணர்ந்தாள்.
பார்க்கும்போதெல்லாம் முறைத்துக்கொண்டும், காதலை சொல்லும் போதெல்லாம் சுட்டு எரிப்பதுமாய் இருந்தவள் தனது ஆறுதல் தேடி முகியை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள்.
மற்ற விடயமென்றால் கயலின் மடி சாய்ந்திருப்பான். ஆனால், இதில்... தன்னை ஆளாக்கி பார்க்க நினைக்கும் அக்காவிற்கு நல்லதென்று ஒன்றும் செய்யாமல்... அவளில்லாமலே தன் வாழ்வின் முக்கிய நிகழ்வை தானே நடத்திக்கொண்டதில் இருக்கும் குற்ற உணர்வால் கயலை நெருங்க அவனால் முடியவில்லை.
அதனால் அவனுமே வெளியில் தன்னை சாதரணமாகக் காட்டிக்கொண்டாலும்... உள்ளுக்குள் தவித்துதான் இருந்தான். இப்போது மலரின் அணைப்பில் தன்னை தேற்றிக் கொண்டான்.
முகியின் மன்னிப்பு அவளை சுயம் மீட்டது.
அவனிலிருந்து விலக பார்த்தவளை தடுத்தவன்,
"இப்படியே இருடா ப்ளீஸ்! மனம் லேசான ஃபீல்." அதற்கு மேல் அவளால் விலக முடியுமா என்ன? மீண்டும் அவனை நெருங்கி அணைப்பை இறுக்கினாள்.
"என் சாரியை அக்செப்ட் பண்ணிட்டியா மலர்?"
முதல் அணைப்பு. தன் மனம் கவர்ந்தவனுடன். அவனே வேண்டிய பிறகு தள்ளியிருக்காது அவனுடன் ஒண்டியவள், அவளவனின் வாசத்தில் கிறங்கி நிற்க, முகி கேட்டது புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.
"அம் ரியலி சாரி மலர். அப்போ... இப்போ. இரண்டுக்கும் சாரி."
"தெரியல... மன்னிச்சிட்டானா, இல்லையா! ஆனால் எனக்கு இந்நேரம் உங்களைத்தான் தேடுது" என்றவளின் அணைப்பு இறுகிக்கொண்டே செல்ல இருவரின் நினைவுகளும் கடந்த காலம் நோக்கி சென்றது.
அப்போது மலர் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். முகி கல்லூரியில் இரண்டாம் வருடம்.
அப்போதெல்லாம் முகியும் மலரும் நன்றாக பேசுவார்கள். விடுமுறைக்கு வரும்போது ஒன்றாக அமர்ந்து விளையாடி பொழுதினை போக்கியிருக்கின்றனர்.
கயலுக்கு மலரை பிடிக்கும். அதோடு தங்கள் வீட்டிலேயே இருப்பதால், முகிக்கும் மலரை பிடிக்கும் என்பதைவிட பிடிக்காமலிருக்க காரணம் ஒன்றும் இல்லை.
அந்த வருடம் முதல் செமெஸ்டர் விடுமுறையில் முகி தன்னுடைய நண்பர்களை கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தான். அவர்கள் அனைவரும் நகரத்தின் செழுமையில் வளர்ந்தவர்கள்.
அன்று மாலை பள்ளிக்கு சென்று வந்த மலர் கண்டது,
முகியின் நண்பர்களில் இருவர், அங்கிருந்த ஆட்டுக்குட்டியை வீட்டிற்கு முன் ஓடும் பெரிய வாய்க்காலில் தூக்கி போடுவதும், அது ஏற முடியாது வரப்பு ஏறி நிற்கவும் மீண்டும் அதை அவர்கள் தூக்கி போடுவதுமாக இருந்தனர். அத்தோடு கொட்டமடித்து சிரிப்பு வேறு.
அதனை கண்டதும் மலருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ,
அவ்விருவரின் முன் நின்று புசுபுசுவென மூச்சினை வெளியேற்றி... "ரெண்டு பேருக்கும் அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா?" எனக் கேட்டாள்.
"ஏய் யாருக்கிட்ட..." என்று எகுறிய ஒருவன், மலரை அடிக்க கை ஓங்க, அவன் உணரும் முன் கையினை தடுத்து அவனை அடித்திருந்தாள் மலர்.
"யாரு நீ?" எனக்கேட்டு இன்னொருவன் அருகில் வர அவனை பிடித்து வாய்க்காலில் தள்ளியிருந்தாள். அவனின் கையிலிருந்த ஆட்டை வேகமாக உருவியிருந்தாள்.
"இப்போ எப்படியிருக்கு?" என்று நக்கலுடன் மலர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே...
"மலர்" என்ற முகியின் குரல் கர்ஜனையாக அவளின் பின்னால் ஒலித்தது.
மெல்ல சாவதினமாக திரும்பியவள்,
"என்ன மாமா" எனக் கேட்டாள்.
"எதுக்கு என் ஃபிரண்டை தண்ணியில தள்ளுன?"
"என்னது உங்க பிரண்டா?"
"ஆமாம்."
"உங்களுக்கு இந்த மாதிரி ஃபிரண்ட்ஸ்லாம் இருக்காங்களா?" என்று கேட்டவளின் குரலில் என்ன இருந்ததோ. ஆனால் முகியின் அருகில் மலரிடம் அரை வாங்கி நின்றவனுக்கு அவளின் வளைந்த இதழ்கள் ஏளனம் செய்வதுபோல் இருந்தது.
"யாருடா மச்சி இந்த பிசாசு... பெரியவங்குற மரியாதை கொஞ்சமும் இல்லாமல் இப்படி பேசுறாள்.
உன்னை மாமான்னு வேற சொல்லுறாள்.
உன் மாமன் மகளா இந்த பஜாரி. உங்க வீட்டில் மற்ற பொண்ணுங்களும் இவள் மாதிரி தானா? எனக்குலாம் ஃப்ரியா கொடுத்தாலும் இப்படியொரு மாமா பொண்ணு வேண்டவே வேண்டாம். மாமாவாம் மாமா, அப்படி சொல்ல நல்லாவா இருக்கு. இதுவே பேபி, ஹனி, டியர், டார்லிங் இப்புடி சொன்னால் செம கிக்... படிச்சாலும் வில்லேஜ் பீப்பிள் மாறுவதில்லை. சரியான பட்டிக்காடு" என்று மூச்சு விடாது தன் ஆத்திரம் மொத்தத்தையும் வார்த்தையில் காண்பித்தான் அவன்.
அவனின் வார்த்தைகள் முகிக்கு அவமானமாக இருந்தது. தன் நண்பனின் முன்னால் இப்படி நடந்துகொண்டாளே என மலரின் மீது சினம் கொண்டான்.
வாய்க்காலில் வீழ்ந்தவன்,
"டேய் என்னை தூக்கி விடுங்கடா" என்று கதற, அவனை முகி கை பிடித்து இழுக்க... நன்கு பெருத்திருந்த அவனை மெல்லிய உடல்வாகு கொண்ட முகியால் இழுக்க முடியவில்லை... அவனின் பலம் முகியை அவன் பக்கம் இழுக்க வரப்பு சகதி வழுக்கி முகியும் நீருக்குள் விழுந்தான்.
"அய்யோ முகி மாமா" என்று அலறிய மலர் தனக்கு முன்னால் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமின்றி மலரையும் முறைத்துக்கொண்டு நின்றவனை, மற்றைய பக்கம் ஒரே தள்ளாக தள்ளிவிட்டு, "கை கொடுங்க மாமா" என்று தன் கையை நீட்டினாள் முகியிடம்.
மலர் இவர்களிடம் பேச போனதால் தான் எல்லாம் என்றதோடு அவனின் நண்பன் வேறு சற்று கீழிறக்கி பேசியிருக்க, அந்த மொத்த கோபமும் முகிக்கு மலரிடம் திரும்பியது.
"யாருக்கு யாருடி மாமா. உங்க அப்பாவை நான் மாமா சொன்னால் நீயெனக்கு மாமா பொண்ணாகிடுவியா? எங்கம்மா உங்கப்பாவுக்கு தங்கச்சியாக இல்லாத போது நானெப்படிடி உனக்கு மாமா ஆவேன். இனியொரு முறை சொல்லிப்பார், வாய் சுண்ணாம்பு இல்லாமலே சிவந்திடும்" என்று நடந்தது அறியாது வார்த்தைகளைக் கொட்டினான்.
"நடந்தது என்னன்னு தெரியாமல் நீபாட்டுக்கு பேசாத மா..."
மாமா என்கிற வார்த்தையை முகி முடிக்கக்கூடயில்லை.
அவளைத் திட்டிக்கொண்டே கரையில் ஏறி நின்றவன், மீண்டும் அவள் மாமா என்று சொல்ல வர அவளின் கன்னத்திலேயே அறைந்திருந்தான்.
"திரும்ப மாமா சொல்ற நீ" என்றவன் அவளின் கழுத்தை பிடித்து நெரித்து "அவன் என்ன வேணா செய்திருக்கட்டும். அதுக்கு நீ அவனைத் தள்ளிவிடுவியா?" என்று சீறினான்.
தொண்டையில் முகியின் கை அழுதத்தைக் கூட்டிட, கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் தொட்டது.
"ச்சீய்..." என்று உதறியவன் வேகமாக தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டான்.
சற்று நிதானத்திற்கு வந்த பின்பே, மலர் தெரியாதவர்களிடம் அப்படி நடந்துகொள்பவள் இல்லையென்ற எண்ணம் தோன்ற, தன் நண்பனிடம் நடந்தை கேட்டான். தங்கள் பக்கமிருக்கும் தவற்றை மறைப்பதற்காக முதலில் சொல்ல மறுக்க... அடுத்து முகியின் முறைப்பில் சொல்லிவிட்டான்.
முகி தன் கன்னத்தில் தானே ஒன்று போட்டான்.
'ஆச்சோ உண்மை தெரியாது ரொம்ப பேசிட்டேனே!' என்று உண்மையிலேயே வருந்தியவன், மலரிடம் மன்னிப்பு வேண்டிட அவ்ளோ கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப்போல் அவனை பார்திருந்துவிட்டு, முகி மன்னிக்கோரி சொல்லியதும் அவ்வளவு தான் பேசிவிட்டாயா என்பதைப்போல் சாதாரணமாக அவனை கடந்து விட்டாள்.
ஒரு கட்டத்தில் சிறு பெண்ணிடம் அதற்கு மேல் இறங்கிப்போக அவனின் ஈகோ இடமளிக்கவில்லை.
அத்தோடு முகியின் பக்கம் பார்வையை நகர்த்துவதற்க்குக்கூட மலர் தன் கண்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அவனிருக்குமிடத்தில் தன் பெயர் நுழைவதைக்கூட மலர் விரும்பவில்லை.
மொத்தமாக முகியை ஒதுக்கி வைத்தாள். தள்ளி செல்ல செல்ல, மனதால் அவனை நெருக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அந்நெருக்கத்தின் காரணம் சரியான தருணத்தில் புரிந்திட, தன்னோடு தன் ஆசைகளை மறைத்துக்கொண்டாள்.
இருவரும் நினைவிலிருந்து மீள, முகி தான் பேச்சினைத் துவங்கினான்.
அவளின் கன்னங்களை தன்னிரு கைகளிலும் ஏந்தி... "ஐ லவ் யூ மலர். லவ் யூ சோ மச்" எனக்கூறி அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
உச்சி முதல் பாதம் வரை ஓடி மறைந்த சிலிர்ப்பை முதல்முறை உணர்கிறாள். காதலின் ஒற்றை முத்தத்திற்கே தொய்ந்து அவன்மீது சரிந்தாள்.
"மலர்... டேய் மலர்..." பதறியவனாய் முகிலன்.
"ஒன்னுமில்லை மாமா. இப்படி உங்கள் பக்கத்தில், உள்ளுக்குள்ள குட்டியா எதுவோ பண்ணுது." சொல்லியவளின் முகம் நாணத்தால் ரத்த நிறம் பூசியது.
"டூ யூ லவ் மீ?"
அவனது கேள்வியில் பட்டென்று அவனிடமிருந்து விலகியவள்...
"முதலில் டாக்டர் ஆகுங்க சார். அப்புறம் சொல்லுறேன்" எனக்கூறி வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்.
மலர் தன்னை மன்னித்துவிட்டாளா தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டாளா என்று தெரியாத போதும்... அதற்கு அவள் விடை கூறிடாத போதும் இருவருக்குள்ளும் முன்பிருந்த விலகல், தூரம் இப்போதில்லை. அதனை மலரே முன்வந்து சரி செய்திருந்தாள்.
காதலே அவனாக இருக்கும்போது, கல்யாணமே நடந்து முடிந்திருக்க... அவனுடன் தான் வாழ்வு என்றிருக்க, என்றோ நடந்த அர்த்தமற்ற விடயத்திற்கு வெறுப்பை இழுத்து பிடிப்பது சரியல்ல என்று சிந்தித்ததாலே எவ்வித தயக்கமுமின்றி முகியிடம் மனம் அமைதி வேண்டி தஞ்சம் புகுந்திருந்தாள்.
காதல் முழுமையாக பகிரப்படவில்லை என்றாலும், இந்நொடி இருவருக்குள்ளும் ஒரு மென்மையான இதம் இதமாக பரவி... சந்தோஷம் முகிழச் செய்தது.
காதல் கொண்ட மனங்கள் இன்பத்தின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைத்த வேளையில் துன்பத்தை பரிசளிக்க தீயாக திட்டம் வகுத்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
நாளை முகி சென்னை கிளம்பிச் சென்ற வேளையில்... மலரின் நிலை அவன் நினைத்தும் பார்க்காததாக இருக்கப்போகிறது.
*****
"நான் உழுகுறேன் கயல்."
நெல் அறுவடை செய்திருக்கும் இரண்டு ஏக்கர் வயலை தன் புது முயற்சிக்கு பயன்படுத்த கயல் முடிவு செய்திருந்தாள்.
அதன்படி முதல் வேலையாக நிலத்தை உழுது சமன்செய்ய வேண்டும்.
டிராக்டர் வீட்டிலிருக்க அதனை கொண்டு தான் உழுவதாக சிவா சொல்லவும் கயல் மறுத்துவிட்டாள்.
"வேறெப்படி கயல்?"
"முன்னோர்கள் வழி தான் அண்ணா இதுக்கு பெஸ்ட்." எதையோ முடிவு செய்தவளாகக் கயல் கூறினாள்.
"எனக்கு புரியல கயலும்மா."
"எல்லாமே இயற்கை வழியில்." அவளின் பதிலில் அவன் தான் குழம்பி நின்றான்.
"இப்பவும் நாம் இயற்கை விவசாயம் தானே கயல் செய்கிறோம்." புரியாது கூறினான்.
"ஆமாண்ணா... ஆனால் இந்தமுறை எல்லாமே... சின்ன விடயம் கூட இயற்கையை சார்ந்ததாக மட்டும் தான் இருக்க வேண்டும். அதன் முதல் அடியை டிராக்டர் விடுத்து நம்ம மாடு வைத்தே உழுவப் போகிறோம்" என்றாள்.
"இப்பவே மணி மூனு ஆச்சு. டிராக்டர் வச்சு உழுதாலே ஒரு மணி நேரமாகும்" என்ற சிவாவின் கூற்றை மறுத்த கயல்,
"இப்படி அவசரத்துக்கு செயற்கை வழியில் போய் தான்... இயற்கை முறை முழுதாய் அழியும் நிலையில் இருக்குண்ணா.
அப்போல்லாம் மாடுகள் இல்லாத வீடே இல்லை... இப்போ கோழிகள் கூட அரிது தான்.
ஆடு மாடெல்லாம் நாம எதுக்கு வளர்த்தோம். முக்கிய காரணம் அதுகளோட கழிவு, சிறந்த இயற்கை உரம். அதை மட்டுமே போட்டு விவசாயம் பார்த்த நம் முன்னோர்கள் நம்மைவிட அதிக விளைச்சல் செய்தது எப்படி? இயற்கை. அது கொடுக்கும் எல்லாமே! ஆனால் நாம் தான் இயற்கையை புரிந்துகொள்ளாமல் இருக்கோம்.
இப்போலம் மகசூல் குறைய காரணமே செயற்கை உரங்கள் தான். இதில் அமோக லாபம் வர, அதிக உரம் போடணும். இதை நான் சொல்லலை, விவசாயத்தை ஏட்டு கல்வியில் படித்தவன் சொல்லுறான். அவனுக்கு தெரிந்தது வெறும் எழுத்து அறிவுதான். ஆனால் நம் முந்தைய தலைமுறையினர் எதை படிச்சு விவசாயம் பண்ணாங்களாம்? அவங்களோட முறையில் வயிறு வாடாமல் சாப்பிடலையா என்ன? இப்போலம் யாருண்ணா முன்னோர் சொன்ன முறையில் விவசாயம் பார்க்கின்றனர்...
அ**ன்னு ஒருத்தரை கூட்டிட்டு வந்து வயலை காட்டுறாங்க. அவங்க இந்த நெல்லை போடு மூட்டை கணக்கு அதிகம் வருன்னு, ஹைபிரிட் விதையை கொடுக்குறாங்க. அது முளைக்கவே தகிடத்தத்தோம் ஆடுது. அப்படியே முளைச்சாலும், வளர வளர அந்த நோய் இந்த நோயின்னு புதுசு புதுசா நோய்வாய்படுது. அதுக்கும் அவனே அந்த உரத்தை போடு இந்த உரத்தை போடுன்னு எழுதித்தறான். அந்த உரம் பூச்சியை அழிக்குதோ இல்லையோ பயிரை நல்லா அழிக்குது. அத்தோடவா நிக்குது, அந்த உரம் மண்ணை சூடாக்கிடுது. சூடான மண்ணு மலட்டுத்தன்மையை சீக்கிரம் அடைஞ்சிடும். அப்புறம் என்ன செலவு பண்ணாலும் அந்த மண்ணுல வைக்குற பயிர் பதுறாத்தான் போகும். அடுத்தடுத்து பயிர் வைக்கவே முடியாத அளவுக்கு மண் தன்னோட சக்தியை இதுக்கு காரணம் யாரு? நாம் தான். நாம் மட்டும் தான்.
நாம் என்ன செய்கிறோமோ அதை பலமடங்கு திருப்பி தரும் ஆற்றல் இந்த இயற்கைக்கு உள்ளது. அது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும்.
'நீ எதை விதைக்கின்றாயோ அதையே அறுவடை செய்கின்றாய்.'
ஒரு பயிர் வளர மண்ணு, விதை, தண்ணீர், உரம் இது மட்டும் போதாதுண்ணா. மண்ணுக்குள்ள இருக்க மண் புழு மிக முக்கியம். அடுத்தது பறவைகள். மண் புழு மண்ணோட வளத்தை மேம்படுத்தும். பறவைகள் பயிரை அழிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொண்டு பயிர்களை பாதுகாக்கும். பயிர்களுக்கு சிறந்த காவல்காரன் பறவைகள் தான். பறவை இல்லனா மகர்ந்தச்சேர்க்கை இருக்காது. அது இல்லன்னா, விளைச்சல் இருக்காது. இப்போ இதையெல்லாம் சொன்னால் என்னதைத்தான் கேலி செய்து சிரிப்பாங்க" என்றவள் தான் அணிந்திருந்த பாவாடையை ஏற்றிக் கட்டிக்கொண்டு, நீர் நிறைந்த வயலில் காலினை வைத்தாள்.
முதலில் சாதரணமாகத் தொடங்கிய கயலின் பேச்சு இறுதியில் அதீத ஆதங்கத்தோடு நிறைவடைந்தது. அவ்வளவு வருத்தம் அவளுள். இன்று அது சிவாவின் பேச்சினால் சற்று வெளியே வந்தது.
கேட்ட சிவாவிற்கே மலைப்பாக இருந்து.
அவனுக்கே விவசாயத்தில் இவ்வளவு இருப்பது தெரியாது. கயல் சொல்லுவதை ஆர்வத்தோடு செய்திடுவானே தவிர, எதையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ள மாட்டான்.
ஆனால் கயலின் பேச்சினால் இன்று அவனுக்கே விவசாயம் அவ்வளவு பிடித்தது.
விவசாயின் இறப்பு எதற்கு என்கிற காரணமே இங்கு பலருக்கு புரிவதில்லை. அவன் கடனுக்காக இறக்கும் கோழையல்ல. தன் உணர்வோடு கலந்திருக்கும் விவசாயத்தை தன்னால் பாதுக்காக்க முடியவில்லை என்கிற அவனின் குமுறலே அவனின் இறப்பிற்கு காரணம்.
நமக்கு எது உகந்ததோ, ஏற்றதோ அதுவே இங்கு நமக்கு சரியானது. இது புரியும் வரை கயலைப்போல் நாமும் விவசாயம் காப்போம் என்று கொடி மட்டுமே பிடிப்போம்.
'இங்கு பேச்சைவிட, செயலே சிறந்து.'
கயலை நினைக்கையில் சிவாவிற்கு அவ்வளவு பெருமையாக இருந்தது.
ஏரில் மாடுகளை பூட்டிக்கொண்டிருந்த கயலிற்கு உதவ வேண்டும் என்பதை மறந்து மெச்சுதலாய் புருவ தூக்களுடன் தனக்கு விவசாயம் கற்றுத்தந்த கயலையே பார்த்திருந்தான் சிவம்.
விவசாயத்தை உயிர் மூச்சாய் நினைக்கும் கயலும், சேற்றில் கால் வைப்பதையே முகம் சுளிக்கும் பார்த்திபனும் இணைவது எவ்வழியிலோ?அத்தியாயம் 🌾 14 :
அன்றைய நாள் கயலுக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்தோடும் ஆரம்பித்தது.
தான் நினைத்ததை செய்யும் சந்தோஷம் முழுமையாக அவளின் முகத்தில் தென்பட்டது.
ஒரு ஜோடி மயிலை காளையை சிவா இழுத்துவர, அதனை கயல் ஏரில் பூட்டினாள்.
மயிலை பார்ப்பதற்கு பனங்காய் நிறத்தில் அடர் இருளில் கூட பளபளப்புடன் காணப்படும். கூர்மையான கொம்புகளுக்கு நிகராக அதன் விழிகள் இருக்கும்.
நேற்று இரு குண்டுகள் உழுதிருக்க... மீதமிருக்கும் மற்ற குண்டுகளை இப்போது உழுதிட தாயாராகினாள் கயல். குண்டு என்பது வயலில் ஒரு சதுர பரப்பினைக் குறிக்கும் கிராமத்து சொல்.
பாவாடையை முட்டிவரை உயர்த்தி சொருகியவள், மாட்டின் கயிற்றை கையில் இறுக பற்றினாள். ஏரின் கூர் முனையை நிலத்தில் அழுந்த குத்தி நின்றவள், வானத்தில் தெரியும் வெய்யோனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் மனதிற்குள் வேண்டியவளாக, ஏரினை சேற்றில் குத்தி நகர்த்தினால். மாடுகள் இரண்டும் கயலின் கையின் அசைவுகளுக்கு ஏற்ப அசைந்து கொடுக்க... ஏர் லாவகமாக சேற்றினை பிரட்டி போட்டது. நீரில் குளிர்ந்த மேற்பரப்பு களிமண் ஏரின் உதவியால் உள்ளே இறங்க, உள்ளே இருக்கும் இறுகிய மண் மேலே வந்து, மாடுகளின் மிதியால் மென்மை அடைந்து... பயிரிடும் முறைக்கு ஏற்றவாறு மெல்ல மெல்ல மாறியது.
கயலின் வேலையில் ஒரு ஆத்மதிருப்த்தி இருப்பதை சிவாவால் உணர முடிந்தது.
நேற்றை கயல் எவ்வாறு நெல் வயலில் மீன் வளர்ப்பு முறைக்கு ஏற்றவாறு வயலை உழுதால் என்பதை கூர்ந்து பார்த்திருந்த சிவா...
அவர்களது வீட்டில் உழவுக்காக வளர்க்கப்படும் மற்றொரு ஜோடியான குடைக்கொம்பனை இழுத்து வந்து ஏரில் பூட்டி தானும் மற்ற வயலில் இறங்கி உழுவலை ஆரம்பித்தான்.
சமமான வயலினை நன்கு சமன் செய்து அதன் பரப்பை விரிவுபடுத்தி... வரப்பின் ஓரம், நான்கு பக்கங்களும் உட்புறம் நான்கு அடிக்கு இரண்டடி ஆழம் செய்து... மையத்தில் நாற்று நடுவதற்கு ஏற்ப நிலத்தினை உழுது தயார் செய்தனர்.
அதற்கே அன்றைய பொழுது பாதிக்குமேல் அவர்களின் நேரத்தை விழுங்கியது.
"ரொம்ப தீவிரமான வேலையாக இருக்கிறதே!"
ரத்தினம் காலையிலிருந்து தன்னுடைய பண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றார். உழுத பிறகு நிலத்தின் அமைப்பே வேறு மாதிரியிருக்க... ஒரு ஆர்வத்தில் அவர்களிடம் வந்து பேசினார்.
"நினைத்ததை அடைய இந்த தீவிரம் இருக்கத்தானே வேண்டும்" என்ற கயலின் பேச்சிலிருந்த மகிழ்ச்சியை அவளின் முகமே ரத்தினத்திற்கு காட்டிக்கொடுத்தது.
"ஏதோ செய்யுறது நல்லா வந்தால் சரி" என்றவர், "ஆமாம் இதுல எப்படி மீன் வளர்த்து லாபம் பார்க்க போகிறாய்?" எனக் கேட்டார்.
"எந்தவொரு செயலுமே முதல்முறையே வெற்றி பெருமென்று சொல்லிட முடியாதே! முதலில் முயற்சி செய்வோம், பின் வளர்ச்சியை பார்ப்போம்!" என்ற கயல் மடையை மாற்ற மண்வெட்டியோடு கீழே குனிந்தாள்.
சில நிமிடங்கள் அவள் மண்வெட்டி பிடிக்கும் தோரணையை எப்போதும்போல் வியந்து பார்த்தவர்,
"இதுல நீ ஜெயிச்சிட்டால்.. இந்தமுறை விவசாயத்தை எனக்கும் சொல்லிக்கொடு. நானும் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சுக்கிறேன்" என்றார்.
"இதுலையும் போட்டியா?" சிவா தான் வேகமாகக் கேட்டிருந்தான்.
"போட்டி இருந்தால் தான்டா, செய்யுற வேலையில சுவாரஸ்யம் இருக்கும்" என்றவர் அங்கிருந்து சென்றார்.
"இவரை புரிஞ்சிக்கவே முடியல கயல்."
"புரிஞ்சிக்க முடியாதளவுக்கு அவர் கெட்டவரில்லை" என்ற கயலுக்கு மட்டுமே தெரியும் அவரின் பழிவாங்கல் குணம் மறைந்ததற்கான காரணம்.
ரத்தினத்திற்கு அவரின் மனைவியென்றால் அதீத காதல். ஒரு விபத்தில் அவருக்கு ரத்தம் தேவைப்பட, அந்நேரம் சரளாவிற்கு முடியவில்லையென மருத்துவமனை சென்றிருந்த கயல் அதனை அறிந்து தானாக முன்சென்று அவருக்கு ரத்தம் அளித்ததோடு, அதனை யாரிடமும் சொல்லிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டாள். சரளா பரிசோதனைக்காக சென்றிருந்த நேரம் கயல் ரத்தம் அளித்ததால், அவருக்கும் அவளின் செயல் தெரியாது.
மருத்துவர்கள் எவ்வளவு சொல்ல மறுத்தும்... "தானம் செய்தவர் தன் பெயரை வெளியில் சொல்வதை விரும்பவில்லை" என்று சொல்லியும் ரத்தினம் பிடிவாதமாக நின்று... "என் உயிரையே மீட்டுத் தந்திருக்கிறார். அவருக்கு ஒரு நன்றிகூட நேரில் சொல்லவில்லை என்றால் என் மனமே என்னை சாடும்" என்றுக்கூற...
"உங்க ஊர் தான் அந்தப்பொண்ணு. பெயர் கயல்விழி" என்றார் செவிலி.
அப்பெயரில் ரத்தினம் மனதால் பெரும் அடி வாங்கினார்.
எத்தனை இன்னல்களை கயலுக்கு ஏற்படுத்திருப்பார். அதனையெல்லாம மறந்தவளாக அவள் செய்த உதவி அவரின் மனத்திலிருக்கும் பழிவாங்கலை காணாமல் போகச் செய்தது.
செய்த உதவியை சொல்லிகாட்டிடாத அவளின் பண்பு... அவரிடம் அவளை உயர்த்திக் காட்டியது.
இதுவரை தான் செய்த கெட்டதெல்லாம் கயலிடம் நேராகச் சென்று நன்றி உரைத்திட தடையாக இருக்க... கயலுக்கு தான் கொடுக்கும் இடைஞ்சல்களை நிறுத்திக் கொண்டார்.
இப்போது கயல் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.
ஒருசில அடியோடு வலி தான் மனிதனை நல்வழி படுத்துகுறது.
"என்ன கயல் போற அவரையே பார்த்திட்டு இருக்க?"
"ஒன்னுமில்லைண்ணா."
"வேலை முடிஞ்சிட்டால் ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம், அந்தி வேளை ஆரம்பிக்க போவுது." உணவு கொண்டு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இருவரும் வயலை கட்டிக்கொண்டு அழுவது சரளாவிற்கு கடுப்பாக இருக்க உரக்க குரல் கொடுத்தார்.
சாப்பிட அமர்ந்த கயல்...
"மலர் வந்துட்டாளா?" என்று வினவினாள்.
"இன்னும் வரல, அவளை கூப்பிடத்தான் மாமா(மாணிக்கம்) போயிருக்காங்க."
"ம்." என்ற கயல், தொட்டி சுவற்றின் மீதிருந்த அலைபேசியை எடுத்து மணியை பார்த்தாள். அது மூன்று என்று காட்டியது.
முகிலனுக்கு அழைத்தவள் அவன் சென்னை சென்றுவிட்டதை அறிந்துகொண்டு அழைப்பைத் துண்டித்தாள்.
"கரும்பு ஏஜெண்ட் நாளைக்கு பணம் தருவதாக சொன்னார். அதை அவரை நேரில் பார்த்து வாங்கி பேங்கில் போட்டுடுங்கண்ணா" என்ற கயலுக்கு மனதில் ஏதோ நெருடுவதை போலிருந்தது.
அவளின் மனம் மலரின் முகத்தையே அடிக்கடி அவளுக்குக் காட்டியது.
என்னவென்று புரியாத போதும் ஏதோ தவறாக நடக்க இருப்பதாக அவளின் உள்ளுணர்வு கூறியது.
உடனடியாக மாணிக்கத்தை அழைத்தவள், "மலரை பார்த்துட்டீங்களா?" என எடுத்ததும் வினவினாள்.
அவளின் நடவடிக்கைகளை அவதானித்தபடி இருந்த சரளவுக்கு பதட்டம் கூடியது.
"ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்காம் கயலு. இப்போதான் போன் போட்டு சொன்னது. நான் வெளியில் தான் நிக்குறேன்" என்றார் மாணிக்கம்.
'தேர்வு நேரத்தில் என்ன ஸ்பெஷல் கிளாஸ்' என எண்ணிய கயல்...
"அண்ணா ஏதோ தப்பா இருக்கு. கிளம்புங்க" என்றவள் சரளா என்னவென்று கேட்க பதில் சொல்ல மறுத்தவளாக சிவாவை அழைத்துக்கொண்டு மலரின் கல்லூரி நோக்கி பயனமானாள்.
கயலின் உள்ளுணர்வு சரியா? மலருக்கு என்ன நேர்ந்திருக்கும்?
*******
சீலிங்கை வெறித்தவாறு, காலினை தரையில் ஊன்றி உடல் மட்டும் மெத்தையிலிருக்குமாறு படுத்திருந்த பார்த்திபனின் விழிகளின் காட்சிகள் அங்கில்லை. அவனின் விழித்திரையை கயலின் முகம் நிறைத்திருந்தது.
அப்போதுதான் உடற்பயிற்சி செய்து முடித்திருப்பான் போலும் உடல் முழுக்க வியர்வை
கயலை பார்த்த கணம்... தன்னை ஊடுருவும் காந்த விழி மலர்களில் மொத்தமாக தலைகுப்புற கவிழ்ந்திருந்தான்.
விழிகளின் முகம் தெரியாத போதே... அவிழிகளுக்குள் சிக்கித் தொலைந்து கொண்டிருந்தவன், அதனின் மதி முகத்தில் தன்னை தொலைத்திட்டான்.
"டேமிட்... என்னை என்னவோ பண்றா(ள்).
கயல்ல்ல்ல்ல்ல்ல்..."
நினைத்தவுடன் அவளை சென்று பார்க்கும் தூரத்தில் அவனில்லை. கடல்கடந்து அவனின் சுவாசம் அவளைத்தேடி சுழன்றது.
அவனுடைய மென்பொருள் நிறுவனத்தில் புதிய ப்ரொஜெக்ட் ஒன்று சைன் ஆகியிருக்க, அதற்காக தன்னுடைய மொத்த நேரத்தையும் செலவழித்தான். அவ்வேலை அவனை விழுங்கிக்கொண்டது என்பதே சரியாகும்.
அமெரிக்க நிறுவனம் தொடர்புடையது. அதனை முடித்தால் மேலும் பல மில்லியன் டாலர்ஸ் சுழலும் ப்ரொஜெக்ட்ஸ் அவனின் நிறுவனத்திற்கு கிடைக்கும். அதற்காகவே இரவு பகலின்றி திரிந்தான்.
இதற்கிடையில் தி வாரியரின் பணியும் சேர்ந்து அவனுக்கு சுமை அதிகரித்தது. என்னதான் டெல் பக்க துணையாக இருந்தாலும், தன்னுடைய வேலையை தான் தான் செய்ய வேண்டும். தன்னுடைய வெற்றி அனைத்திற்கும் தானொருவனே காரணமாக இருக்க வேண்டுமென்ற அவனின் குணம், நிற்க நேரமின்றி அவனை ஓட வைத்தது.
இதற்கிடையில் கயலின் நினைவு என்று சொல்வதைவிட... ஒவ்வொரு நொடியும் அவளின் ஆக்கிரமிப்பு பார்த்திபனின் இதயத்தில் அதிகமாகிக்கொண்டே சென்றது.
தன்னவள் தன்னுடைய மாமன் மகள், அதிலும் தன்னுடைய அம்மாவிற்கு எல்லாமுமாக இருந்த அவரின் அண்ணனின் மகள் என்பதில் பார்த்திபனுக்கு அத்தனை மகிழ்வு. உடனடியாக அன்னையிடம் சொல்லி, அவரின் முகத்தில் தோன்றும் ஒளியை, ஆனந்தத்தை பார்த்திட அவனின் மனம் துடித்த போதும் பொறுமை காக்கின்றான்.
இன்னும் அவனுக்கு தெரியாத பல, அவனது குடும்பத்தில் உள்ளது. அனைத்தையும் முதலில் பார்த்திபன் தெரிந்துகொள்ள வேண்டும்.
தாய்மாமனின் மீதான தந்தையின் கோபம் அறிந்து, அழகரின் மீது தவறில்லை எனும்பட்சத்தில் அதனை தீர்க்க வேண்டும்.
'என்னவாக இருக்கும்?'
எப்படியும் தேவராஜ் சொல்லப்போவதில்லை. அங்கை தான் சொல்ல வேண்டும்.
நினைத்த நொடி தன் அன்னையைத் தேடிச் சென்றான்.
ஆம் கட் டீஷர்ட் அணிந்து உடலில் வியர்வையோடு கலைந்திட்ட கேசத்தோடு அப்படியே வந்திருக்கும் மகனைக் கண்டு என்னவோ ஏதோவென்று பதறினார் அங்கை.
எப்போதும் பார்த்திபன் இப்படி வருவதில்லை. அதுவும் சமையற்கட்டின் பக்கம் திரும்பியது கூட இல்லை. அவன், இப்படி கிச்சனிற்குள் வந்ததோடு... அங்கை செய்து கொண்டிருந்த ஸ்டவ்வினை அணைத்துவிட்டு,
"நீங்க பார்த்துக்கோங்க" என்று மெய்ட் இடம் சொல்லிவிட்டு, "வாங்க மாம்" என கைபிடித்து அழைத்துச் செல்லும் மகனின் செயலில் ஒருவித கலக்கத்தோடே அங்கை சென்றார்.
மொட்டை மாடிக்கு அழைத்து வந்தவன், அங்கை வளர்த்து வரும் செடிகள் அடங்கிய தோட்டத்திற்கு நடுவிலிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமர வைத்து...
"மாம் இந்த செடிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் பிரியம் ஆழமானதென்றால் நான் கேட்பதற்கு யோசிக்காது பதில் சொல்ல வேண்டும்" என்றான்.
அவனது அத்தகைய பேச்சே அவருக்கு கலக்கத்தைக் கொடுத்தது.
"நான் கேட்டதற்கு பிறகு, சொல்ல முடியாதென்று பின்வாங்காக் கூடாது!" ஒருவித அழுத்தம் அவனின் குரலில்.
"என்ன கேட்கப்போற?"
"கேக்குறேன் மாம். அதுக்கு முன்னாடி எனக்கு உறுதி கொடுங்க!"
"என்னடா பார்த்தி இது. நீ கேட்டு நான் எதை சொல்லாமல் இருந்திருக்கிறேன்." மகன் ஏதோ வில்லங்கமாகக் கேட்கப்போகிறான் என்று அவருக்கு தெரிந்துபோனது. அதிலிருந்து தப்பும் மார்க்கமின்றி போக, எதுவாக இருந்தாலும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று மனதை திடப்படுத்தினார்.
"எல்லாமே சொல்லிடுவீங்க அப்படின்னா... என்கிட்ட ஏன் மாம் இதுவரை நம்ம ஊரைப்பற்றி, முக்கியமாக மாமாவைப்பற்றி சொல்லவில்லை? நான் இருக்கும்போது அவர்களைப்பற்றி பேசியதுகூட இல்லை, ஏன்?"
இன்று அனைத்தும் தனக்கு தெரிந்தாக வேண்டுமென்கிற தீவிரத்துடன் தாயை பார்த்திருந்தான்.
"என்னுடைய மகனுக்கு உறவென்றால் அது நீயும் நானும் தான். அப்படியொரு சொந்தம் இருக்கிறதென்று அவனுக்கு உன் மூலமாகத் தெரிந்தால், அன்று முதல் அவனுக்கு அன்னை மட்டும் தான். தகப்பனாக நான் இருக்க மாட்டேன்." பல வருடங்களுக்கு முன்பு முகம் தீ கங்குகளாய் மாறியிருக்க, தியாகராஜன் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் கர்ஜனையாக அங்கையின் காதில் ஒலித்தது.
"என்னால் சொல்ல முடியாது சின்னத்தங்கம்." சேலை தலைப்பினை வாயில் வைத்துக்கொண்டு விசும்பினார்.
"இப்படி அழுது என்னிடம் இப்போதும் மறைத்துவிடலாமென்று நினைக்காதீர்கள் மாம்." பார்த்திபனுக்கு பொறுமை எங்கோ ஓடிப்போகும் நிலை. முயன்று தன்னை கட்டுக்குள் வைத்திருக்கிறான்.
அங்கை வாய் திறந்திடவே பெரிதும் தயங்கினார்.
"உங்க அப்பா?" கேள்வியாக இழுத்தார்.
"உங்க அண்ணனுக்கு எத்தனை பிள்ளைகளென்று தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசையில்லையா மாம்." எங்கு அடித்தால் அன்னை வாய் திறப்பார் என்பதை சரியாக யூகித்து குளத்தில் (மனதில்) கல் (வார்த்தைகளை) எறிந்தான்.
"பார்த்திபா..." மேடையிலிருந்து எழுந்து விட்டார்.
மெல்ல அவரை நோக்கியவன், "எதுக்கு மாம் இவ்வளவு தவிப்பு. உங்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டாம் தானே! இல்லையென்றால் இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்திருக்க மாட்டீர்கள்" என்று அங்கையின் இதயத்தில் மெல்ல ஊசியை இறக்கினான்.
"உனக்குத் தெரியுமாப்பா?" அங்கையின் கண்களில் அழுகையும் ஏக்கமும் போட்டிபோட்டது. உணர்வின் பிடியில் சுழன்றார்.
பார்த்திபன் தலையை மட்டும் ஆட்டினான்.
"ஆனால் நீங்க அதை தெரிந்துகொள்வதற்கு முன்னர் எனக்கு எல்லாம் தெரிய வேண்டும்" எனக்கேட்டான்.
'இது தன் மகனுக்கு அனைத்தும் தெரிய வேண்டிய நேரம். அவன் மூலம் தங்கள் குடும்பம் ஒன்று இணைவது காலத்தின் கட்டாயம்' என்று மனதோடு உணர்ந்தவர், கடந்த காலத்தை மகனின் கைகளில் ஒப்படைத்தார்.
இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு,
**********
முன் அந்தி வேளையிலும் அவ்விடம் அத்தனை இருளாகக் காட்சியளித்தது. மூடிய சன்னலின் வழியே கீற்றுப்போல் வெளிச்சம் பாய்ந்தது.
அறை முழுவதும் பழுதடைந்த மரப்பொருட்கள் நிரம்பியிருந்தன. நடுவில் மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் இடமிருக்க, அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் வாய், கண்கள், கை அனைத்தும் கட்டப்பட்ட நிலையில் மலர்.
'தான் கல்லூரியில் தான் இருக்கின்றோம்.' ஆனால் எங்கு எந்த கட்டிடத்திலென்று அவளால் கணிக்க முடியவில்லை.
தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்தவள் யாரோ தன் பெயர் சொல்லி அழைக்க பின்னால் திரும்பி பார்த்தது மட்டுமே நினைவிருக்க, அரை மயக்கத்தில் யாரோ தன்னை தோளில் சாய்த்து நடத்தி செல்வதும்... பின் ஓர் அறையில் கட்டியதும் முழு சுயம் மீண்ட பின்னர் புரிந்தது.
'யாராக இருக்கும்?' யோசித்தவளின் புருவ மத்தியில் சுருக்கங்கள்.
அப்போதுதான் யாரோ தன்னை தன் முகத்திற்கு அருகே உற்று பார்ப்பதாக அவளின் உள்ளுணர்வு சொல்ல...
வறண்ட இதழ்களை நா கொண்டு ஈரம் செய்து... செருமிய குரலில் "யாரது?" என்றாள்.
"உனக்கு புருஷனாகப் போகிறவன்." பட்டென்று கேட்ட குரலில் உடல் தூக்கிப்போட மிரண்டாள் மலர்.
"ரகு..."
"எஸ். என் குரலை வைத்தே கண்டுபிடிச்சிட்டியே! அந்தளவுக்கு மாமா உன் மனசில் இருக்கேன் போல." ஒருவித எள்ளல் அவனிடம்.
"ச்சீய்... இதை சொல்ல உனக்கு நா கூசவில்லை. இப்போ, நான் இன்னொருவரின் மனைவி." ரகுவின் வார்த்தைகள் மலரை சீற வைத்தது.
"ஹா... ஹா... ஹா..." வெடிச்சிரிப்பு சிரித்தான்.
"நான் ஆசைப்பட்டதெல்லாம் சொல்வதற்கு முன்பே என் அப்பா நிறைவேற்றிவிடுவார். அதனால் எதையும் தட்டி பரித்தோ, போராடியோ அடைந்து எனக்கு பழக்கமில்லை. அதனால் நீயா என்கிட்ட வந்திடு" என்றான்.
"போடா... பொ***."
"ஏய்!" மலரின் முடியை கொத்தாக பற்றியவன், "அடித்து கனிய வைக்கும் பழத்திற்கு ருசி அதிகமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை அப்படியொரு ருசியை உணடதில்லை. இன்று அதற்கு வாய்ப்பு கிடைக்குமென்றால் நான் விட்டுவிடுவேனா என்ன?" என அவளின் உடலை குரூர விழிகளுடன் ரசித்தான்.
அதனை கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் மலரின் பெண் மனதால் உணர முடிந்தது. அருவருத்துப்போனாள்.
"அப்படி பார்க்காதடா நாயே!"
"நீ செமய இருக்கத் தெரியுமா?" மலரின் அழகில் கிறங்கிப்போனான்.
"எனக்கு பெண்கள் புதிது அல்ல. ஆனால் உன்னை மட்டும்தான் கட்டி குடும்பம் நடத்தனுமுன்னு தோணுச்சு. அதுக்கு அவன்(முகி) வழியில்லாமல் செய்துவிட்டான்." கோபத்தில் தன் தொடையில் தட்டிக்கொண்டான்.
"அவனை கொல்லும்வெறி எனக்குள் இருக்கிறது. அதற்கு முன்பு நான் ஆசைப்பட்ட உன்னை..."
அவன் மேலும் என்ன சொல்லியிருப்பானோ, தனக்கு முன்னால் ஒரு அடி இடைவெளியில் நின்றிருந்தவனை கட்டப்படாத தன்னுடைய காலால் எட்டி உதைத்தாள்.
"உன் கால் படக்கூட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்." மயக்கமான குரல்.
பெண்ணவள் கூசிப்போனாள்.
"அய்யோ இப்படியெல்லாம் பேசிடாதே!" மன்றாடினாள்.
"அந்த முகிலனை வீழ்த்தும் வரை நான் எதையும் நிறுத்தமாட்டேன். அவனை என் அப்பாவிடம் சொல்லி போட்டுத்தள்ள எனக்கு ஒரு நொடி ஆகாது. ஆனால் அதை நான் தான் செய்ய வேண்டும். அதனால் தான் அவன் இன்னும் உயிருடன் இருக்கின்றான்.
நீ எனக்கு உடன்படவில்லை என்றால் அடுத்த அரை மணி நேரத்தில் அவன் எங்கிருந்தாலும் கொன்று புதைத்திடுவேன்."
ரகுவின் ஆவேசப் பேச்சில் ஸ்தம்பித்த நிலையில் மலர்.
"அவரை... அவரை ஒன்றும் செய்து விடாதே!" கெஞ்சினாள். கதறினாள்.
"அப்போ எனக்கு சம்மதம் சொல்லு."
மலரிடம் முகியின் நலனை எண்ணி பயம். அந்த பயம் மலரை ரகுவிடம் கட்டுப்படுத்திடுமா?"
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top