JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

PK 21

Priyadharshini.S

Active member
அத்தியாயம் 🌾 21 :
"ஷீ இஸ் மைன். மை லவ்."
பார்த்திபனின் குரலே டெல்லின் காதுக்குள் ஒலித்தது.
சாதாரணமாக யாரோ பெண்களை பார்ப்பதற்கே அத்தனை முறை முறைப்பவன், அவனவளை என்ன வார்த்தையெல்லாம் சொல்லிவிட்டான் டெல்வின்.
'டேய் டெல்லு நீ செத்தடா.' உள்ளுக்குள் கதறினான்.
தன் பயத்தை வெளிக்காட்டிடாது டெல் பார்த்திபனின் அருகில் வர,
அவள் என்னவள் என்று எத்தகைய அழுத்தத்துடன் கூறியிருந்தானோ... அதே அழுத்தம் மற்றும் விறைப்புத்தன்மையுடன் நின்றிருந்தான்.
கால்களை அகட்டி தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவனின் இறுகல் நிலை டெல்லிற்கு கிலி பிடிக்க வைத்தது.
"சாரி... பா... பார்த்..."
"ஜஸ்ட் ஷட்டப். யூ இடியட்." வேங்கையென உறுமினான்.
பயத்தில் பின்னால் சென்றிருந்தான் டெல்.
"அந்த அக்கௌன்ட் நேம் என்ன?"
"...?"
பார்த்திபன் எதை கேட்கிறான் என்று புரியாது திருத்திருத்தான்.
"முழிக்காதடா... நடிக்க உனக்கு சொல்லியாத் தரணும். அப்படியே நீ எனக்கு பயந்துட்டாலும்." நெற்றியை தேய்த்தவாறு தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தான்.
அவனின் பயம் அவனுக்குத்தானே தெரியும்.
மேசையில் தனக்கு முன்னிருந்த செயற்கையான ஷோ ப்ரூட்ஸ் பாஸ்கெட்டில் இருந்து ஒவ்வொரு பழங்களாக எடுத்து எடுத்து வைத்தவன், "நீ பார்த்துட்டு இருந்த இன்ஸ்டா அக்கௌன்ட்?" என்றான்.
"பெ... பெண்..." சொல்லுவதற்கே டெல்லின் நா தந்தியடித்தது.
பார்த்திபனின் ஒற்றை பார்வை டெல்லை திணற வைத்தது.
"பெண் விவசாயி." சொல்லிய டெல் தன்னுடைய அலைபேசியில் அக்கணக்கை காட்டினான்.
"என்னுடைய இன்ஸ்டா நீதானே ஹேண்டில் பண்ற?"
பார்த்தி அவ்வாறு கேட்டதும், அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்துகொண்ட டெல்... பார்த்திபனின் இன்ஸ்டா கணக்கைத் திறந்து, கயலின் காணொளியை காணுமாறு செய்தான்.
அலைபேசியை கையில் வாங்கிய பார்த்திபன், மேசையிலிருந்த லேப்டாப்பை டெல்லின் முன் நகர்த்தி வைத்தான்.
என்ன வேலையென டெல் கேட்கவில்லையேத் தவிர அவனின் கண்கள் அதனை பிரதிபலித்தன.
"லாஸ்ட் ஃபோர் இயர்ஸ் வாரியர் அக்கௌன்ட் செக் பண்ணு. எல்லாம் க்ளியரா இருக்கணும்."
டெல்லால் உள்ளுக்குள் கதறத்தான் முடிந்தது. பின் அவனிடம் முடியாதென்றா சொல்ல முடியும். இது எதற்கான தண்டனையென உணர்ந்தே இருந்தான்.
தன்னுடைய இருக்கையில் சென்றமர்ந்த டெல்லின் முகத்தை பார்த்த பார்த்திபனுக்கு சிரிப்பாக இருந்தது. ஆனால் அவன் சிரிக்கும் மனநிலையில் இல்லை.
மொத்தமாக கயலில் மூழ்கியிருந்தான்.
வீடியோவில் தெரியும் ஒவ்வொன்றையும் உண்ணிப்பாகக் கவனித்தான். அவனுக்கோ பச்சையென்றால் அருவருப்பு. ஆனால் அங்கு காணும் எங்கும் பச்சை கம்பளம் விரித்துவிட்டது போலிருந்தது. இயற்கை அழகை வெறுப்பவன் அல்ல. அதனை ரசிக்கும் மனமும் நேரமும் அவனிடமில்லை.
அங்கை காட்டும் போது தெரிந்திடாத கயலின் அழகு இப்போது பார்த்திபனின் கண்களை நிறைத்தது.
தாவணிப்பாவாடையில் கிராமத்து அழகு கொள்ளை கொண்டது அவனை. ஏற்று சொருகிய பாவாடையில் சூரிய ஒளியில் வெண்சங்கென மிளிர்ந்த கனுக்காலுக்கு மேலான வாழைத்தண்டு கெண்டைக்காலும், தாவிணி சொருகிய வெண்பஞ்சு இடையும் அவனுள் ரசனையாய். அவனின் முகத்தில் அவனையும் மீறிய ஒன்று. டெல் பார்ப்பதற்கு முன் சுதாரித்தான்.
பிறருக்கு எப்போதும் தான் காட்சிப்பொருளாவத்தில் உடன்பாடில்லை. இருகையிலிருந்த எழுந்தவன்,
"டெல் கான்சல் தி டுடே கமிட்மெண்ட்ஸ்" என்றவன், வாரியரில் இருக்கும் தன்னுடைய சூட்டிற்கு சென்றான்.
அங்கும் அவனுள் கயலின் ஆதிக்கம்.
சில நிமிடங்களுக்கு கயலை மட்டுமே பார்த்திருந்தவன், அவனுடன் இருக்கும் ஒவ்வொருவரையும் அவதானிக்கத் தொடங்கினான்.
பார்த்திபனுக்கு கயலுடன் சேர்ந்து அவளுக்கு துணையாக அனைத்தும் செய்து கொண்டிருந்த சரளா மற்றும் மாணிக்கத்தை யாரென்று அவனுக்குத் தெரியவில்லை.
அவர்கள் அழகர் மற்றும் மீனாட்சியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் டிடெக்ட்டிவ் கொடுத்த பழைய புகைப்படத்தில் இருக்கும் அவர்களின் தோற்றத்தோடு இவர்கள் சற்றும் பொருந்தவில்லை.
'யாராக இருக்கும்?' யோசித்தாலும் அடுத்ததாக அவனின் பார்வை பதிந்தது. சிவத்தின் மேல்.
'கயலுக்கு தம்பின்னு தானே சொன்னான். இவன் அவளுக்கு அண்ணா மாதிரி இருக்கான். ஒருவேளை நம்ம ஆளு ஒழுங்கா சாப்பிடறது இல்லையோ!' என்றவனின் மனம் கயலை அங்கமங்கமாக பார்வையால் வருடினான்.
சேற்றில் உழைக்கும் உடல் தேவையற்ற சதைகளின்றி அளவாக செதுக்கி வைத்த சிற்பம் போலிருந்தவளின் மீது காதல் பெருகியது.
சிறிது நேரத்திற்கு பின்னர்... லைவ்வில் டிஸ்பிளே ஆகும் கருத்துகளில் அவனின் பார்வை செல்ல ரத்த அழுத்தம் எகுறியது.
நல்லது இருக்கும் இடத்தில் கெட்டதும் இருக்கும் தானே. அதேபோல் பாராட்டி கருத்திட்ட பலபேருக்கு நடுவில் தேவையில்லா கருத்துக்களும் பல வந்தன.
அதில் கயலைப்பற்றியும் அவளின் அழகைப்பற்றியும் விமர்ச்சித்து இருக்க எரிமலையின் சீற்றம் அவனிடம்.
'செய்வதை இப்படி விளம்பரப்படுத்த வேண்டுமா' என்று கொதித்தான். இது முகிலன் செய்த ஏற்பாடென்று தெரியாது கயலை மனதிற்குள் வருத்தெடுத்தான்.
பெண்கள் என்ன செய்தாலும் பேசு பொருளாவது நம் நாட்டில் மட்டும் தான்.
தவறாக கருத்துக்கள் பதிவு செய்த ஒவ்வொருவரையும் கன்னம் கன்னமாக அறையும் வேகம். ஆனால் அது முடிந்திடாதே. பொதுவெளியில் நாம் ஒன்று செய்யும் போது நல்லது வருமளவிற்கு கெட்டதும் வருமென்று தெரிந்திடாதவனா அவன்.
அடுத்து கயல் விவசாயம் பற்றி பேசிய பேச்சினை கேட்டவன், மெச்சுதலாய் புருவம் உயர்த்தி பார்த்தான்.
'வெரி க்ளவ்ர்.' தன்னைப்போல் அவனின் மனம் சொல்லிக்கொண்டது.
அதன் பின்னர் வரப்பில் நடந்த கயல், நீரில் இறங்கிய கயல், அங்கிருந்தோரை வேலை வாங்கிய கயல், நாற்றினை கையில் பிடித்திருக்கும் கயல், என பார்த்திபனின் உலகமெங்கும் கயல் கயல் கயல்.
இறுதியாக வயலில் ஒரு சிலிர்ப்புடன் மீன்களை விட்ட கயலின் அதி ஒளிர்வு முகம் பார்த்திபனின் நெஞ்சில் நீங்காது நிறைந்தது.
மீன்களை கைகளில் அள்ளும்போது அவள் கூச்செறிந்தது அவனால் இங்கு உணர முடிந்தது. கயலுக்கு விவசாயம் எத்தகைய பிடித்தமென்று அந்நொடி உணர்ந்தான்.
அது ஒன்று மட்டும் பார்த்திபனுள் சிறு கசப்பாய் தேங்கியது.
மீன்களை வயல் நீரில் விட்டதும் கயல் "முகி வா" என்றழைக்க பார்த்திபனின் சிதறிய கவனம் காட்சியில் பதிந்தது.
முகிதான் கயலின் தம்பியென்று தெரிந்துகொண்ட பார்த்திபன், சிவா, மாணிக்கம், மற்றும் சரளா யாரென்று தெரியாது குழம்பினான்.
'ஊரே கூடியிருக்கிறது. அவளின் பேரண்ட்ஸ் எங்கே?' கேட்டுக்கொண்டவனுக்கு பதிலில்லை.
'பார்த்த நாள் முதல் புரியாத புதிராக இருக்கிறாள்.'
'எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியா செல்ல வேண்டும்.' நினைக்க மட்டுமே முடிந்தது. அவன் நினைத்த காலத்தைவிட காலம் தாழ்த்தியே இருந்தது அவனின் இந்திய பயணம்.
ஹோட்டல் திறப்பு விழா வேலை பார்த்திபனின் நாட்களை காவு வாங்கியது.
பகலில் வேலை வேலையென ஓடுபவன் இரவில் கயலின் நினைவுகளுடன் வதைந்தான்.
நாளுக்குநாள் அங்கையின் தொல்லை வேறு அதிகமாயிற்று. பார்த்திபனுக்கு அன்னையை சமாளிப்பதுதான் கடினமாக அமைந்தது.
'கயல் யாரென்று தெரியாத போதே இவ்வளவு படுத்தி வைப்பவர், அன்று வீடியோவில் பார்த்த பெண்தான் கயலென்று தெரிந்தால் என்னவெல்லாம் செய்வாரோ' என்று பயந்தே சொல்லாமல் விடுத்தான்.
இப்படியே போனால் கயலை நேரில் சந்திக்கவே முடியாது போல் என்று தோன்றத் தொடங்கியது. ஆனால் சிறப்பான தருணத்தில் இருவரையும் நேருக்கு நேர் சந்திக்கும் வகையில் விதி வழி செய்கிறது என்பதை அவன் அறியவில்லை.
கயலைப்பற்றி மேற்கொண்டு என்னவெல்லாம் அறிய முடியுமென்று முகிலனின் மற்ற சமூக வலைதள பக்கங்களை ஆராய, அவை யாவும் பிரைவசி பிரிவிற்குள் பதுங்கியிருந்தது. அதைத்தாண்டி அவனால் அறிய முடியும். ஆனால் அவனின் மனம் அதற்கு இசையவில்லை.
"பார்ப்போம் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் உன்னை சந்திப்பது இப்படி இழுக்குதுன்னு." புகைப்படத்தில் அவளிடம் கேட்டுக்கொண்டவனுக்கு மனதோடு அத்தனை பேராவல்.
**********
"கயல் அன்னைக்கு கோவிலுக்குன்னு பூ வாங்கிட்டுப் போனாங்களே, அவங்களுக்கு இனி வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி பூ வேணுமா?"
"சரிண்ணா கொடுத்திடலாம்." சிவாவிற்கு பதில் வழங்கிய கயல் வயலில் நீந்திக்கொண்டிருந்த மீனை கண்களில் பொங்கும் கனிவுடன் பார்த்திருந்தாள்.
நெற்கதிரெல்லாம் பால் வைக்க தொடங்கியிருந்தது. மீன்களும் நன்கு வளர்ச்சியைக் காட்டின.
தன்னுடைய வயலை நெற்கதிரொடு, நீந்தும் மீன்களையும் சேர்த்து வீடியோ எடுத்த கயல் அதனை முகிலனுக்கு அனுப்பி வைத்தாள். அடுத்த நிமிடமே அதனை பார்த்துவிட்டவன், தமக்கைக்கு வீடியோ கால் செய்துவிட்டான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முகிலனும், மலரும் வீட்டில் தான் இருந்தனர்.
நடவு முடிந்து நான்கு நாட்களில் சென்னை சென்ற முகி இரு படுக்கறை கொண்ட சிறிய அளவில் வீட்டை ஒன்றை வாடகைக்கு எடுத்து, தேவையான பொருட்களை வாங்கி வீட்டினை ஒழுங்கு செய்தவன், அடுத்த வாரத்தில் மலருடன் தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்தான். அவனின் குடும்பம் என்பதில் சிவமும் அடக்கம். நல்ல நேரத்தில் பால் காய்ச்சி குடி புகுந்தான்.
முகி வீடு பார்த்து செட்டில் செய்யும் இடைப்பட்ட காலத்தில் மலர் தன்னுடைய மாற்று சான்றிதழை தற்போது படித்துக்கொண்டிருக்கும் கல்லூரியிலிருந்து வாங்கியிருந்தாள்.
அந்த வருடத்திற்கான இறுதி தேர்வு எழுதி முடித்திருந்ததால், விடுமுறை நாட்களில் மாற்று கல்லூரிக்கு ஏற்பாடு செய்து விடலாமென முகி நினைத்திருந்தான். அதன்படி அவர்கள் வீட்டிலிருந்து இருபது நிமிடத் தொலைவிலேயே இருக்கும் கல்லூரியில் இடம் கிடைத்திட கடைசி வருடத்தினை மலர் அங்கு தொடர்கிறாள்.
இருவரும் ஆளுக்கொரு அறையில் தான் தங்கியிருக்கின்றனர். இருவருக்கும் படிப்பு முடிந்து, கயலின் திருமணமும் முடிந்து கிராமத்தில் செட்டில் ஆனப்பிறகு தான் தாம் வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமென்று சென்னை வந்த அன்றே குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர், தனித்திருந்தால் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணமின்றி மலரை தனி அறையில் தான் தங்க வைத்தான்.
அதில் தன் தம்பியை நினைத்து கயலுக்கு பெருமை.
"ரொம்ப வளர்ந்துட்டடா முகி" என்ற கயலுக்கு ஒரு புன்சிரிப்பையே பதிலாகக் கொடுத்தான் முகி.
திரையில் தெரிந்த தம்பி மற்றும் அவனின் மனைவியின் முகத்தைக் கண்ட கயலுக்கு கண்ணீர் பனித்தது. இதுநாள் வரை படிப்பென்று முகி தூரமிருந்தபோது தெரியாத ஒன்று, இன்று அவன் மனைவியுடன் தனியாக இருப்பது அவனின் குடும்பத்தில் தானில்லை என்ற எண்ணத்தை கயலுக்கு கொடுத்தது.
"சாரி கயல்... இன்னும் டூ இயர்ஸ்க்கு நான் இங்குதான் இருக்க முடியும்" என்று தமக்கையின் வருத்தம் உணர்ந்து சொல்லிய முகி... "நீ ஓகே சொல்லு நான் பிஜி டிராப் அவுட் பண்ணிட்டு இப்போவே உன் கிட்ட ஓடி வந்துவிடுகிறேன்" என்றான். முகியின் குரல் தழுதழுத்தது.
கயலின் அருகிலிருந்த சிவாவுக்கும், முகியின் அருகிலிருந்த மலருக்கும் அய்யோ என்றிருந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக நடக்கும் பேச்சு வார்த்தை தானே! கேட்கும் அவர்களுக்கு கேலியாக இருந்தாலும், கயலுக்கும் முகிக்கும் இந்த தூரம் பெரியதாகத்தான் தெரிகிறது.
"காலையில் உன் கையால் குடிக்கும் டீயை ரொம்ப மிஸ் பண்றேன் முகி." கயல் முகம் சுருங்கியது.
"நீ ஊட்டி விடாமல் சாப்பாடு உள்ளேயே போக மாட்டேங்குது கயல்." முகியும் சோகத்தில் தேய்ந்தான்.
'அடப்பாவி இப்போ தானடா சன்டே பிரியாணியை மொக்கு மொக்குன்னு மொக்குன.' மலர் வாய் பிளந்தாள்.
"முகி இந்த வாரம் வந்துட்டு போயேன்."
"இந்த வீக்கெண்ட் ஹாஸ்பிடல் கமிட்மெண்ட் இருக்கு கயல்." கயல் கேட்டும் செல்ல முடியாத கவலை அவனுள்.
முகி தனியார் மருத்துவமனை ஒன்றில் பகுதி நேரமாக பிராக்டிஸ் செய்கிறான். வார நாட்களில் இரவு பணியில் இருந்தாலும், வார இறுதியில் பகலில் கன்செல்டிங் செய்தான்.
'இப்படியே விட்டால் இருவரும் மாற்றி மாற்றி சோகம் கீதம் வாசிப்பர்' என நினைத்த சிவா, கயலிடமிருந்து அலைபேசியை வாங்கி பேக் காமிராவிற்கு மாற்றி, "மீனெல்லாம் எப்படி வளர்ந்திருக்கு பாரு முகி. நெல்லும் இந்தமுறை ரொம்ப நல்லாவே வந்திருக்கு. விளைச்சல் நிறைய இருக்கும் போல" என்று உற்சாகத்தோடு கூறினான்.
சிவா காட்டியதை பார்த்த முகிலுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது. மலரும் மலர்ந்த முகத்துடன் அனைத்தையும் பார்த்தாள்.
"எனக்கு இப்போவே ஊருக்கு போய் எல்லாம் நேரில் பார்க்கணும் போலிருக்கு." மலர் சொல்லிய நிலையில் தான் முகியும் இருந்தான். ஆனால் அவனால் நினைத்ததும் அங்கு செல்ல முடியாதே. படிப்பு ஒருபக்கம், வேலை ஒருபக்கம் அவனை இழுத்தது.
"என்னால் தான் வர முடியல."
தம்பியின் குரலில் தெரிந்த வருத்தத்தில், அலைபேசியை பிடுங்கிய கயல்...
"உன்னால் முடியலன்னா படிப்பை மட்டும் பார் முகி. பிராக்டிஸ் அப்புறம் பண்ணலாம். எல்லாம் நான் பார்த்துகிறேன்" என பரிவுடன் கூறினாள்.
"இதுவரை நீதானே கயல் எல்லாம் பண்ண... இப்போவாவது நானே பண்ணிக்கிறனே!" என்றவன், "கடந்த ஒன் மந்த்தா தானே பிராக்டிஸ் பண்றேன். அத்தோடு படிப்பு. கொஞ்சம் திணறலாத்தான் இருக்கு. போக போக சரியாகிடும். எனக்கும் பழகணுமே!" என்றான்.
கயல் என்ன சொன்னாலும் கேட்கும் முகியை இதில் மட்டும் இறங்க வைக்க முடியவில்லை. அப்படியிருந்தும் முகியின் வங்கி கணக்கிற்கு கடந்த இரண்டு மாதங்களாக எப்பவும் போன்று பணம் அனுப்பித்தான் வைத்தாள்.
இருவருமே ஒருவருக்கொருவர் சொல்வதை கேட்கப்போவதில்லையென, அவன் வேலைக்கு போவதையும், இவள் பணம் அனுப்புவதையும் நிறுத்தவில்லை.
"அடுத்த மாசம் கதிர் அருத்தடலாமா கயல்?"
"ம்... அருத்தடலாம் முகி. இந்தமுறை எப்பவும் போடுமளவை விட உரம் கம்மியாத்தான் போட்டிருக்கு. களையெல்லாம் மீனுக்கே உணவா போயிடுவதால் சிரமம் அதிகமில்லை" என்றாள்.
"ஆமாம் ஆமாம். நம்ம நெல் வளர்ச்சியை பார்த்து ரத்தினமே இம்முறையில் விவசாயம் பண்ண எனக்கும் உதவி பண்ணுன்னு வந்து கேட்டுட்டுப்போகிறார்" என்று சிவா சொல்ல...
பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பெயரைக் கூறிய கயல், "அதிலிருந்து ஏதோ பேட்டி எடுக்க வறேன்னு போன் வந்துச்சு முகி. நான் தான் இன்னும் ஒரு மாசத்தில் அறுப்பு இருக்கு இப்போ முடியாது சொல்லிட்டேன். அதோடு இந்த டிவி அதெல்லாம் நமக்கெதுக்கு" என்றாள்.
"இதை ஏன் முன்னடியே சொல்லல நீ. எப்போ கான்டெக்ட் பண்ணாங்க?" என்று படப்படத்தான் முகி.
"ஹேய் முகி ரிலாக்ஸ். நேத்து தான்டா பண்ணாங்க."
"கயல் அது எவ்வளவு பெரிய சேனல் தெரியுமா? அதுல மட்டும் உன்னோட இந்த முயற்சி டெலிகாஸ்ட் ஆனா, உலகம் முழுக்க இன்னும் ரீச் ஆகும். விவசாயத்தில் புதுசா ஏதாவது பண்ணி, எல்லோருக்கும் தெரியப்படுத்தணும், விவசாயம் அடுத்த கட்டத்திற்கு போகணும், விவசாயம் கஷ்டமில்லை, வெறும் கடன் மட்டும் கொடுப்பதில்லை, விவசாயம் தான் எல்லாம் அப்டிங்கிற உன் எண்ணம் வெற்றி அடையும்" என ஒரே மூச்சில் பேசினான்.
"இதை நான் யோசிக்கல முகி" என்ற கயல், "இன்னொருமுறை யாராவது வந்தால் பார்த்துக்கலாம்" என்க, "இப்படி நல்ல வாய்ப்பை இழந்துவிட்டாயே!" என அப்பவும் முகி வருத்தமாகக் கூறினான்.
ஆனால் அதே சேனலில் கயலின் இந்த புதியமுறை விவசாயம் பற்றி அவள் பேச போவதை பார்த்து, அவளின் சூழல் அறிந்து இரண்டு ஜீவன்கள் துடிக்க இருக்கின்றன.
இதுவரை கணவரின் பேச்சுக்கு மறுவார்த்தை பேசிடாதவர் ஆடித்தீர்க்க இருக்கிறார்.
காதலில் கசிந்து கொண்டிருப்பவன், தன்னவளின் துக்கமறிந்து துடிக்கவிருக்கிறான்.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top