JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

PK 22

அத்தியாயம் 🌾 22 :


"லொகேஷன் இங்கவே செட் பண்ணிக்கோங்க!" தொகுப்பாளினி காமிரா மேனிடம் சொல்லிக்கொண்டிருக்க, கயல் அங்கு வந்தாள்.

வீட்டிற்கு முன்னிருக்கும் பெரிய வாய்க்காலில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

"அங்கு வயலுக்கு போயிடலாமே!" கயல் யோசனையாகக் கூறினாள்.

"உங்களைப் பற்றிய அறிமுகத்திற்கு வீட்டிலிருந்து ஷூட் செய்தால் தான் நல்லாயிருக்கும் மேம்." அந்நிகழ்ச்சி இயக்குனர் சொல்ல, "இந்த இன்டெர்வ்யூவுக்கு காரணமே நாங்க செய்யும் விவசாயம் தான். அதனால் அங்கு வயலில் வைத்து எடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே!" என கயல் மேலும் தன் கருத்தைக் கூறினாள்.

"ஆமாங்க எங்க கயல் சொன்னா அது சரியாக இருக்கும்" என்று கையில் இளநீருடன் வந்த சிவா, அவர்களிடம் கொடுத்தவாறே கயலின் கூற்றை வழி மொழிய, "வீட்டிலென்றால் நிழலில் முடிந்துவிடும், வயல்... அடிக்குற வெயிலுக்கு..." தொகுப்பாளினி சொல்லாமல் விட்டது கயலுக்கு புரிந்தது.

"ஹோ ஏசியிலே வேலை பார்க்குறவங்க போலிருக்கு." சரளா மாணிக்கத்தின் காதில் கிசுகிசுத்தார்.

அது சிவாவின் காதிலும் விழுந்தது.

"ஏசி போடாமலே உங்களுக்கு ஊட்டியை காட்டுறேன் வாங்க" என்று சிவா பிடிவாதமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்களை கயலின் பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.

ஐந்து நிமிடங்கள் நடக்கும் தூரத்திலேயே இருந்தது.

செல்லும் வழி முழுக்க பசுமை தான். பச்சை நிறம் கண்களுக்குள் குளிர்ச்சியாய் இறங்கியது.

"வாவ்...

சூப்பரா இருக்கு."

வந்தவர்கள் ஒன்றாகக் கூறினர்.

"நம்ம வயல் பக்கம் இன்னும் சூப்பரா இருக்கும். வாங்க."

சிவா வேக எட்டுக்களில் முன்னேற அவர்களும் அவனுடன் சென்றனர்.

கயலின் பண்ணை முதலில் பூந்தோட்டத்திலிருந்து ஆரம்பமானது. அனைத்து வகையான மலர்களும் இருப்பதால் பல வண்ணங்களில் அவ்விடமே ரம்மியமாகக் காட்சியளித்தது.

"பூவெல்லாம் வியாபாரம் செய்றீங்களா?"

"மொத்தமா வியாபாரி வந்து வாங்கீப்பாங்க. நாம் சந்தைக்கு போவணும் அவசியமில்லை."

"இந்த இடமே அப்படியே சில்லுன்னு இருக்கு. வெயிலே தெரியல."

"இன்னும் உள்ள போனால் இதைவிட குளுகுளுன்னு இருக்கும்."

அவர்கள் கேட்பதற்கெல்லாம் சிவம் பதில் சொல்லிக்கொண்டே நடந்தான்.

"எல்லாமே போட்டிருக்கீங்க. இதெல்லாம் எப்படி மேனேஜ் செய்யறீங்க?" என்ற நிகழ்ச்சி இயக்குனர், "அப்படியே இங்கிருந்தே கவர் பண்ணிக்கோங்க" என காமிரா மேனிடம் கூறினார்.

"நீங்க அந்த வரப்பில் அமர்ந்து ஷோக்கான இன்ட்ரோ ஷூட் பண்ணிக்கோங்க" என்று தொகுப்பாளினியிடம் கூற, அங்கே காய்கறித்தோட்டம் கடந்து தென்னந்தோப்பு ஆரம்பமாகும் வரப்பில் முதல் கட்டத்தினை படம் பிடித்தனர்.

அவர்கள் கயலை கேள்வி கேட்டு பதிவு செய்ததைவிட, அந்த இயற்கை கொஞ்சும் அழகைத்தான் அதிக நேரம் பார்த்து ரசித்ததோடு படமும் எடுத்தனர்.

தென்னந்தோப்பின் அக்கரைக்கு பக்கம், மீன் வளரும் நெல் வயலுக்கு கீழே சில அடிகளுக்கு பிறகு ஓடும் சிறு ஓடையும் பதிவாகுமாறு நிகழ்ச்சியினை பதிவு செய்தனர்.

"இந்த இடமே ரொம்ப அழகா இருக்கு. ஸச் அ நைஸ் பிளேஸ். ரொம்ப ப்லஸன்ட்டா இருக்கு." வந்தவர்கள் சொல்ல கயலிடம் சிறு புன்னகை.

"இந்த வயதிலேயே விவசாயத்தில் நீங்க செய்திருப்பது பெரிய ஆச்சரியம். அதைவிட உங்களுடைய பதிலும் ஆச்சரியம் தருமளவிற்கு இருந்தது."

தொகுப்பாளினி கூறிட, கயலிடம் புன்னகையுடன் அதே அமைதி.

"நீங்க எப்பவும் இப்படித்தானா, ரொம்ப சைலன்ட்டா?" அதற்கும் புன்னகைதான்.

"உங்களுடைய சிரிப்பே பத்தி சொல்லுதுங்க" என்று அப்பெண் சிரிக்க... "இது எப்போங்க டிவியில் வரும்?" என்று சிவம் கேட்டான்.

"இந்த வார இறுதியில் இளம் சாதனையாளர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும்." இயக்குனர் பதில் கொடுத்தார்.

"அந்த மீன் வயலை நல்லா படம் பிடிச்சீங்களா?" சரளா வெள்ளந்தியாக வினவினார்.

"நிகழ்ச்சிக்கு முதன்மையே அதானே. நிறையவே எடுத்துட்டோம்" என்ற காமிரா மேன்... தென்னந்தோப்பு பக்கத்திலேயே அந்த ஓட்டுவீடும், மீன் நீந்ததுவதற்கு அமைத்த அந்த சின்ன குளமும் தான் ஹைலைட் " என்றார்.

பேசியவாறு வேலைகள் முடித்து கயலின் இல்லம் வந்திருந்தனர்.

வந்திருந்த நால்வரையும் சாப்பிட வைத்துதான் அனுப்பி வைத்தனர்.

அவர்கள் சென்றதும் கயல் முகிக்கு அழைத்து விட்டாள்.

கல்லூரியில் இருந்ததால் இடைவேளையில் அழைப்பதாக தகவல் அனுப்பியவன் சொல்லியது போலவே அழைக்கவும் செய்தான்.

முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்ற கயல்,

"முகி" என்று விளித்தாள். அதில்தான் எவ்வளவு துள்ளல். எத்தனை மகிழ்வு.

தாம் செய்யும் காரியத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம் எத்தகைய நிறைவை கொடுக்கும் என்பதை கயல் முழுமையாக அன்றுதான் உணர்ந்தாள். அந்நிறைவை தன் சகோதரனுக்கும் குரல்வழி கடத்தினாள்.

"இன்னும் நிறைய உயரத்துக்கு உன்னுடைய செயல் உன்னை இட்டுச்செல்லும் கயல்." மனமார வாழ்த்தினான் முகி.

"எனக்கு இதுவே ரொம்ப சந்தோஷமா இருக்கு முகி. உலகம் முழுக்க இதை பார்ப்பாங்கல... நம்ம விவசாயத்தில் இப்படியொரு முறை ஆதிகாலம் தொட்டே இருக்குன்னு நம் மக்களுக்கு தெரிந்தால் போதும். அத்துக்காகத்தானே இந்த முயற்சியே" என்றவள், "நீ பக்கத்திலிருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியா இருந்திருக்கும்" என்றாள்.

"எனக்கு லீவ் கிடைக்கலடா. விடு இப்போ என்ன நான் டிவியில் பார்த்துக்கப்போறேன். அதுக்கு ஏன் சோககீதம் வாசிக்கிற" என்று கயலின் மனதை மாற்றும் வகையில் பதில் பேசினான் முகிலன்.

இந்த மாதிரி கயல் நெகிழும் தருணங்களில் எல்லாம் முகி கயலுக்கு அண்ணனாகிவிடுவான்.

"இந்த வீக் எண்ட் வரும் சொன்னாங்க."

"சரிடா" என்ற முகி "நல்ல வாய்ப்பு. மிஸ் பண்ணிட்டியே நினைச்சேன். ஆனால் திரும்ப சேனல் ஹெட் பேசுவாங்க எக்ஸ்பெக்ட் பண்ணல கயல்" என்றான்.

முதலில் தெரியாது முடியாதென்றாலும், முகி சொல்லிய பிறகு வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டோமே என்று கயல் வருந்த செய்தாள் தான். ஆனால் அடுத்த இரு தினங்களில் நிகழ்ச்சி தலைமையாளர் அழைத்து பேசவும், அதனைப்பற்றி முழுதாக அனைத்தும் கேட்டறிந்து கயல் ஒப்புக்கொள்ள, அடுத்த நாளே இன்டர்வ்யூவ் என்று வந்துவிட்டனர்.

கயல் ஸ்டுடியோவிற்கு வர மறுப்பு தெரிவித்ததால் தான் கயலின் வீட்டிற்கே வந்தனர்.

"ஸ்டுடியோவிற்கு வந்தால் நான் மட்டும்தான் தெரிவேன். நான் செய்தது தெரிய வேண்டுமென்றால் நீங்கள் தான் என்னிடம் வர வேண்டும்" என்று தன்மையாகவே கயல் சொல்ல, அவர்களுக்கும் அதுவே சரியெனப்பட சம்மதம் வழங்கினர்.

இந்த ஐடியாவும் கயலுக்கு முகிதான் அளித்தான்.

"அவங்க சென்னை ஸ்டுடியோவிற்கு வர சொல்றாங்க முகி" என்று சிறுமியாகக் கூறியவளிடம், இவ்வாறு சொல்லி கேளு கயலென்று சொல்லித்தந்ததொடு, "அங்கு வைத்து எடுத்தால் தான், உன் செயல் வெறும் பேசல்ல என்று எல்லோருக்கும் தெரியும்" எனக்கூறி தன்னுடைய தமக்கையை வழி நடத்தினான்.

அது நல்ல முறையில் முடிந்தது அவனுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

"என்ன கேள்வியெல்லா கேட்டாங்க நீ கேட்கவேயில்லையே!" குறையாகக் கேட்ட கயலிடம், "இப்போ நீயே எல்லாம் சொல்லிட்டா, நான் டிவியில் எதை பார்ப்பதாம்" என்று கிண்டலாக தான் கேட்காததற்கு காரணம் வழங்கினான்.

"சமாளிக்காத..."

"ஹா ஹா ஹா..."

"ஸ்டார்டிங்கில் பயமா இருந்துச்சு முகி. அப்புறம் சரியாகிருச்சு" என்றவள், "அப்பா அம்மா பற்றி கேட்கும்போது கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்" என்று இறங்கியக் குரலில் தெரிவித்தாள்.

"இட்ஸ் ஓகேடா. அவங்களுக்கு நம்முடைய எமோஷன்ஸ் கூட வியாபாரம் தான். அதைவிடு. நீ சொல்ல வேண்டியதை சரியா சொல்லிட்டல... அவ்வளவுதான்" என்று கயலுக்கு அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை வார்த்தைகளால் கொடுத்த முகி, வகுப்பு இருப்பதாகவும் மாலை வீட்டிற்கு சென்று பேசுவதாக சொல்லி வைத்துவிட்டான்.

கயலுக்கு இப்பொழுதே சாதித்தவிட்ட உணர்வு. ஆனால் செல்லும் தூரம் நிறைய இருப்பதாகவேத் தோன்றியது.

அவள் சென்றடையும் தூரம்... அவளின் காதல் யுத்தத்திற்கு ஆரம்பமாகப்போவதை அவள் அறியவில்லை.

*********

அடுத்த வாரத்தோடு புதிய ஹோட்டலின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும். அதற்கு பின்னான திறப்பு விழாவிற்கான ஏற்பாட்டில் இந்த வாரம் முழுக்க பார்த்திபன் காலில் ஜெட்டினைக் கட்டிக்கொண்டு தான் சுற்றியிருந்தான்.

இனி அனைத்தும் டெல் பார்த்துப்பான் என்று மனம் சமன் செய்த பின்னரே அந்த வாரத்தின் இறுதி நாளில் சற்று ஓய்வாக வீட்டு கார்டனில் காலை ஓட்டத்தை ஓடிக்கொண்டிருந்தான்.

அங்கிருந்த பெஞ்சில் வைக்கப்பட்டிருந்த அவனின் மொபைல் விடாது அழைத்துக் கொண்டிருக்க... பாதி ஓட்டத்தில் வந்து எடுத்தவன், 'இத்தனமுறை எதுக்கு விடாது அடிச்சிட்டே இருக்கான்' என்று எண்ணியபடியே டெல்லின் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"பாஸ்..."

டெல் கத்தியதில் பார்த்திபனின் காது2 கிழிந்தது.

"டேய்... எதுக்குடா இந்த கத்து கத்துற" என்றவன் காதினை தேய்த்துவிட்டுக்கொண்டான்.

"என்ன அபிசியல் டாக்கா... ஆபீஸ் வரட்டுமா?" டெல் பாஸ் என்றழைக்கவும் தொழில் சம்மந்தப்பட்டதாக இருக்குமோ என அவ்வாறு கேட்டான்.

"அதெல்லாம் இல்லைடா" என்று மறுத்த டெல், "டுடே ஈவ்வினிங் ஃபைவ் ஓ க்ளாக் உன் ஆளு வராங்கடா" எனக் கூறினான்.

"என் ஆளு..." டெல் சொல்லுவது புரியாது இழுத்த பார்த்திபன், புரிந்ததும்... "கயலா? எங்கே? எப்போ?" என்று ஆச்சரியமாக வினவினான்.

கடந்த இரண்டரை மாதங்களாக அவளை பார்த்திட தவிக்கும் அவனின் ஏக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.

"நேரில் இல்லைடா." டெல் சொல்லியதும் பலூனிலிருந்து இறங்கிய காற்றாக பார்த்திபனின் முகம் சுருங்கியது.

"அப்புறம் எதுக்குடா பொய் சொன்ன?" எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனின் பேச்சில் சோகம் தென்பட்டது.

அதனை கண்டுகொண்ட டெல், 'தேவையில்லாமல் வருத்தப்பட வைத்துவிட்டோமே' என்று எண்ணி, கயல் பேட்டியளித்த நிகழ்ச்சி மற்றும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விடயத்தைக் கூறியவன் நேரத்தையும் சொல்ல... பார்த்திபன் கேட்டுக்கொண்டான்.

சுரத்தே இல்லாமல் பதில் சொல்லியவனிடம் அதீத ஆர்வம். அது ஏனென்று அவனுக்கேத் தெரியவில்லை.

'உன்னைப்பற்றி இப்படித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமோ!' அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

காதலை சொல்லி... காதலை ஏற்று... காதலினால் அவன்மீது கொண்ட நம்பிக்கையால் அனைத்தும் அவளாக அவனிடம் சொல்ல வேண்டும். இல்லையா, இவனாக அவளைப்பற்றி ஒவ்வொன்றையும் நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவனின் ஆசை ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பை ஒதுக்க அவன் விரும்பவில்லை.

அறையில் தனியாக பார்ப்பதற்கு மனம் ஏதேதோ எண்ண சுழல்களில் அலைவதால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்திற்கு சரியாக கூடத்திலிருக்கும் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்தான்.

அங்கு அவனுக்கு முன்பே அங்கை அமர்ந்திருந்தார்.

"என்ன மாம் இந்நேரம் டிவி பார்க்குறீங்க? டாட் இல்லையா?" என்று ஒன்றும் அறியாதவன் போல் வினவினான்.

"நீதானே திறப்பு விழாவிற்கு யாரையோ கூப்பிடணுமுன்னு அப்பாவை அனுப்பி வைத்தாய்?" என்று மகனை முறைத்துக்கொண்டு பதில் கேள்வி கேட்டார்.

"சாரி மாம். ஜஸ்ட் பர்காட்" என்று வேண்டுமென்றே அசடு வழிந்தான்.

"சரி இன்னும் என்னுடைய பர்ஸ்ட் கேள்விக்கு பதில் சொல்லலையே நீங்க?" என்றான்.

"அன்னைக்கு இன்ஸ்டாவில் ஒரு பொண்ணு காட்டினேனே அந்தப் பொண்ணு பேட்டிக்கொடுக்குதுடா" என்று முகமெல்லாம் ஒளிரக் கூறினார்.

"பேட்டிக் கொடுக்குற அளவுக்கு பெரிய ஆளா?" கேட்க வேண்டுமென்றே கேட்டான்.

"விவசாயம் பண்றதெல்லாம் சும்மாவா என்ன" என்ற அங்கையின் முகத்தில் அன்று வீடியோவில் கயலின் முகத்தில் கண்ட அதே பிரகாசம்.

"அந்தபொண்ணைப்பற்றி சொல்லும்போது உங்க ஃபேசில் என்ன எக்ஸ்ட்ரா லைட்?"

"அதென்னவோ எனக்கு அந்தப்பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குடா" என்ற அங்கை "இந்தப்பொண்ணு பெயரும் கயல் தான்டா" என்றதோடு, "உன் ஆளு இவளை மாதிரியே ரொம்ப அழகா இருப்பாளா" எனக் கேட்க...

'சரிதான்' என நினைத்தவன், 'நீங்களும் இப்படியே உங்க மருமகளைப் பற்றி முழுசா தெரிஞ்சிக்கோங்க' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன், "டைம் ஆகிடுச்சுன்னா அந்த சேனல் வையுங்க, என்னதான் உங்க ஆளு பேசியிருக்கான்னு பார்ப்போம்" என்றான். அப்போதும் அவளை தெரியாததைப்போலவேக் காட்டிக்கொண்டான்.

இன்னும் சற்று நேரத்தில் அங்கை அவனை போட்டு உளுக்கவிருக்கிறார் என்பதை அறியாது நிகழ்ச்சியை பார்க்க ஆயத்தமாகினான்.

"இந்த வாரம் வளரும் இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் நாம் பார்க்க இருப்பது... விவசாயத்தில் புதுமையாக செய்து உலகறியச் செய்ய வேண்டுமென்ற துடிப்புமிக்க இளம் பெண் விவசாயி கயல்விழி. இரண்டு மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இவரின் விவசாயமுறை ட்ரெண்டிங்கில் வந்தது நாம் அறிந்தது தான். அதனைப்பற்றி மேலும் நிறைய தகவல்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம் வாங்க" என்று தொகுப்பாளினி நிகழ்ச்சியின் ஆரம்பித்தில் பேசி முடிக்க, கயலின் பண்ணையைச் சுற்றி காமிரா பதிவு செய்த காட்சி ஒரு சுற்று வந்தது.

அதில் தெரிந்த தோட்டங்கள், வாழை, தென்னை, வயல் என எல்லாம் பார்த்த அங்கை... "உங்க மாமா பண்ணையும் இப்படித்தான் எல்லாமே இருக்கும்" என்று மகனிடம் கூற, அவரை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தவன் தனக்குள் சிரித்தும் கொண்டான்.

பண்ணையை சுற்றி காட்சிகள் ஓடியதும், நீண்ட வரப்பில் தாவணிப்பாவாடையில் கயல் நடந்து வருவதைப்போல் அவளின் அறிமுகம் இருந்தது.

எவ்வித ஒப்பனையுமின்றி மிக எளிமையானத் தோற்றத்திலும் பார்த்திபனின் மனதை மொத்தமாகக் களவாடினாள்.

'கார்ஜ்ஜியஸ்.' அவன் மனம் அடித்தது. கண்களின் கருவிழி அவளின் நடைக்கேற்ப அசைந்தது.

அப்படியே அங்கு வரப்பில் நடந்துகொண்டே பேட்டி போன்று இல்லாமல் ஒரு உரையாடல் போன்று நிகழ்ச்சி தொடர்ந்தது.

"வணக்கம் மிஸ். கயல்விழி." அவளும் தன்னுடைய இருகரம் குவித்து காமிராவை பார்த்து வணக்கம் வைத்தாள்.

அடுத்தடுத்து கயலின் விவசாயத்தை பற்றி கேள்வி கேட்க... அதற்கெல்லாம் கயல் கொடுத்த பதில்களுக்கு கைத்தட்ட வேண்டும் போலிருந்தது. அங்கை தன்னையும் மீறி ஒருசில இடங்களில் கைத்தட்டியிருந்தார்.

பார்த்திபன் மிக அமைதியாக பார்த்திருந்தான். அவனின் மனவோட்டம் அவன் மட்டுமே அறிந்தது.

அடுத்து மீன் மற்றும் நெல் வயலோடு கயலையும் சேர்த்துக் காட்டியவர்கள், இந்தமுறை விவசாயத்தைப்பற்றி விரிவாக சொல்லச்சொல்லிக் கேட்க, எல்லாம் கயல் தெளிவாக விளக்கமாகக் கூறினாள்.

தொகுப்பாளினியிடம் உயர்வாக ஒரு பார்வை.

"நீங்க படித்ததே வேளாண்மையைப் பற்றித்தான் இல்லையா?" எனக் கேட்டவர், "உங்களுக்கு எப்படி வேளாண்மையை கல்வியாக எடுத்து படிக்க வேண்டுமென்று தோன்றியது?" எனக் கேட்டார்.

"இதுக்கு பதில் சொல்லணும் அப்படின்னா நான் என் குடும்பத்தைப்பற்றி சொல்ல வேண்டியிருக்கும்" என்றாள்.

"தாராளமாக சொல்லலாம். இந்த கேள்வி முடிச்சிட்டு கடைசியா உங்க பேமிலியைத்தான் கேட்கணும் இருந்தேன்" என்று தொகுப்பாளினி ஊக்குவிக்க சில கணங்கள் கயலிடம் அழுத்தமான மௌனம்.

அவளின் நுண்ணுணர்வுகளையும் காமிரா தெள்ளென உள்வாங்கியிருந்தது.

கண்களை மூடி ஆழ மூச்சிழுத்தவளின் தோற்றம்... ஏதோ ஒரு பெரும் வேதனையை அவள் தன்னகத்தே புதைத்து வைத்துள்ளாள் என்பதை பார்த்திபனுக்கு உணர்த்தியது.

'அது எத்தகைய பெரிய வலியாக இருந்தாலும் இனி உனக்கு நானிருக்கிறேன்' என்று அந்நொடி அவன் மனம் தன்னைப்போல் உறுதி பூண்டது.

தொண்டையை செறுமி தனகுள்ளிருக்கும் துக்கத்தை விழுங்கிய கயல், மெல்ல தன்னுடைய கிராமத்தின் பெயரை சொல்ல இங்கே அங்கையினுள் ஓர் அதிர்வு.

அதனை பார்த்திபனால் உணர முடிந்தது. அன்னையை நெருங்கி அமர்ந்துகொண்டான்.

"என் அப்பா பெயர் அழகர். அவருக்கு விவசாயம் தான் எல்லாம். அவருடைய உலகம் உயிர் என்றே சொல்லலாம். விளைச்சலில் ஏதாவது சந்தேகமென்றால், இந்த போகம் என்ன பயிர் செய்யலாம், இந்த பூச்சிக்கு என்ன மருந்திடலாம் என்று எல்லாம் அவர்கிட்ட தான் சுற்றியிருக்க கிராமத்திலிருந்து வந்து கேட்பாங்க." அதனை ஒருவித கர்வத்தோடு சொல்லியிருந்தாள்.

அதே கர்வம் இங்கு அங்கையிடம். நான் அழகரின் தங்கை என்ற எண்ணத்தில் நன்கு நிமிர்ந்து அமர்ந்தார்.

"அவருடைய உலகத்தில் அடுத்த இடம் எங்க குடும்பத்துக்குத்தான். அப்பான்னா அப்படித்தான் இருக்கணும். அப்படி எங்களை வளர்த்தார். அப்படிப்பட்ட அப்பா, யாருக்குமே கிடைத்திடாத அப்பா... ஒருநாள் என்னையும் என் தம்பியையும் விட்டுட்டு போயிட்டார்." சரேலென கயலின் இடதுபக்க கண்ணிலிருந்து கண்ணீர் கன்னம் வழியே உருண்டோடியது. ஓடிய வேகத்தில் கண்களை அழுந்த துடைத்தவள், "அப்பாக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும். அதான் போகும்போது அம்மாவையும் கூட்டிட்டு போயிட்டாங்க" என்று சொன்னவளின் கண்களில் தாய் தந்தையின் காதல் வாழ்க்கையை உடனிருந்து கண்ட மகிழ்ச்சியின் ஒளி.

கயல் அழகர் இப்போது உயிருடன் இல்லையென்பதை சொல்லியதும் பார்த்திபன் அங்கையின் புறம் வேகமாகத் திரும்பியிருந்தான்.

அவனுக்கே இவ்விடயம் இப்போதுதான் தெரியும். இருப்பினும் அன்னைக்காக தன்னை சடுதியில் மீட்டு அவரிடம் கவனம் வைத்தான்.

ஆனால் அவரோ கல்லென இறுகியிருந்தார். முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை. வெறுமையானத் தோற்றம். உடல் இரும்பென விரைத்திருந்தது. கயல் அடுத்து மீனாட்சியும் இல்லையென்றதும் அவரது உடலில் ஒரு நடுக்கம் ஓடி அடங்கியது அவ்வளவே. ஆனால் பார்வையின் கருவிழி மட்டும் தொலைக்காட்சியில் தெரிந்த கயலின் முகத்திலிருந்து சற்றும் உருளவில்லை.

நிலைகுத்திய பார்வை அது.
 

Members online

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top