JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

PK 23, 24, 25

Priyadharshini.S

Active member
அத்தியாயம் 🌾 23 :
கயலின் அடக்கிய கண்ணீர் மெல்லிய நீர் படலமாக பார்த்திபனின் விழித்திரையில் பதிந்தது. அவளின் சோகம் அவனையும் தாக்கியது.
சிறுவயதில் கேட்ட அழகரின் கண்ணா என்கிற விளிப்பு, இப்போது அவனின் ஞாபக அடுக்கில் ஒலித்து மறைந்தது. கலங்களாக அவரின் தோள்மீது சென்ற பயணம் நெஞ்சை ரணமாக்கியது. அவரைப்பற்றிய நினைவு சிறிதுமின்றி இருந்த தன் நினைவலைகளை தனக்குள்ளே நிந்தித்து வெறுத்தான்.
அப்போது அவனும் நான்கு வயது பாலகன் தானே! சிறுவயதில் வளரும் சூழ்நிலை மாற்றம் நம்மை வழிநடத்துபவர்களாலேயே நம் நினைவுகள் நினைவாக அல்லது மறதியாக மாறுகின்றன. இங்கு அழகரின் நினைவுகள் பார்த்திபனுக்குள் மீட்கப்படாத ஸ்வரமாய் புதைந்து போனது தேவராஜின் ஆத்திரத்தால்.
மேற்கொண்டு கயல் பேசிட தாய், மகன் இருவருக்கிடையே கனத்த மௌனம். உணர்வுகளின் பிடியில் சிக்கி சுழன்றன. அங்கையின் கண்கள் சோகத்தை வெளிப்படுத்தின என்றால், பார்த்திபனின் வருத்தம், தன்னவளை நினைத்த சோகம் அவனின் மனதை எரிமலையாய் வெடித்து சீதறச்செய்தது.
கண்களில் பனித்த நீரை கன்னம் வழிந்திடாது இமை சிமிட்டி உள்ளே அடக்கியவள்,
"அப்போ நான் பள்ளி இறுதி வருடத்தில் இருந்தேன்" என்க, இங்கு அங்கை உள்ளுக்குள் குமுறினார்.
'அந்த வயதில் தாய் தந்தையை இழந்த என் மக்கள் என்ன கஷ்டம் அனுபவித்தார்களோ.' ஊமையாய் அரற்றினார்.
அந்த இடத்தில் தொகுப்பாளினி கயலின் பேச்சினை இடைவெட்டி,
"உங்களுக்கு சொந்தமென்று யாருமில்லையா?" எனக் கேட்டாள்.
விரக்தியாக புன்னகை ஒன்றை சிந்திய கயல்,
"எனக்கொரு அத்தை இருக்காங்க. அவங்க பெயர் அங்கை. அது மட்டும்தான் தெரியும். அவங்களை நான் போட்டோவில் தான் பார்த்திருக்கேன்" என்றாள்.
அதனைப்பற்றி மேற்கொண்டு பேச விருப்பமில்லை என்பதைப்போல் அங்கையை பற்றி அவள் கேட்டதற்கு பதில் சொல்லாது அடுத்ததை பேசினாள். அதில் ரத்தினத்தைப்பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை.
அந்நிலையில் துணையாக இருந்த சரளா மற்றும் மாணிக்கதைப்பற்றி கூறியவள், மாணிக்கத்தை தன் தந்தைக்கு நெருக்கமானவர் என்றுதான் அறிமுகம் செய்தாளே தவிர, வீட்டில் வேலை செய்தவர் என்று குறிப்பிடவில்லை.
அந்த இடத்தில்... 'தான் செய்ய வேண்டியதை மாணிக்கம் செய்திருக்கிறாரே' என்று அவர்மீது நன்றி பெருகியதுஅங்கைக்கு.
வேலைக்காரன் என்று சொல்லாது, அப்பாவின் நெருங்கிய நண்பர் என்ற முறையில் மாணிக்கத்தை கயல் குறிப்பிட்டதிலேயே மாணிக்கம் அவர்களை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதை அங்கையால் புரிந்துகொள்ள முடிந்தது.
"அந்த வயதில் யாரை நம்பறது தெரியல, தம்பியை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு இருப்பதை உணர்ந்தேன். ரிசல்ட் வந்துச்சு மேல என்ன படிக்கலாம் யோசித்தப்போ, சரளா அக்கா தான்... இவ்வளவு நிலத்தையும் நீதான் பதுகாக்கணும், அதனால் அதையே பாடமா படின்னு சொன்னாங்க. அதனால் தான் வேளாண்மைத்துறையில் படித்து பட்டம் வாங்கினேன்" என்று கயல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
"படிப்புல தங்கமெல்லாம் வாங்கியிருக்கு" என்று மாணிக்கம் இடைப்புகுந்துக் கூறினார்.
"வாவ்... கோல்ட் மேடலிஸ்ட்டா" என்று ஆச்சர்யமாகக் கேட்ட தொகுப்பாளினி,"காங்கிராட்ஸ்" என்றாள்.
"அப்போ படிச்சிட்டே விவசாயம் செய்தீர்களா?"
"இரண்டாம் வருடம் படிக்கும் போதுதான் நாமே விவசாயம் செய்தால் எப்படி இருக்குமென்று நினைத்து செய்தேன்."
"கிட்டத்தட்ட பத்து ஏக்கருக்கு மேல் எப்படி மேனேஜ் செய்தீர்கள்?"
"நான்னா நான் மட்டுமில்லை... மாமாவும், சிவா அண்ணாவும் எனக்கு பின்னால் துணை நின்றார்கள். அவர்கள் இல்லைன்னா இதெல்லாம்" என்றவள் சுற்றி தன் பசுமை போர்வையை கை காண்பித்தாள்.
"அதோடு மூன்று போகம் நெல்லிற்கு நான்கு ஏக்கர் மட்டும் வைத்துக்கொண்டு மற்றதையெல்லாம் பூக்கள், பழங்கள், காய்கள் தோட்டம் போட்டு அதிகம் வேலையில்லாமல் பார்த்துகிட்டோம்" என்றாள்.
"முதலில் ரொம்பவே சிரமமாகத்தான் இருந்தது. அப்போலாம் அப்பா அம்மா கூட இல்லைன்னு நினைச்சு அழாத நாளில்லை. அந்நாளில் எல்லாம் எனக்கு அப்பாவா அண்ணாவா நல்ல ஃபிரண்டா இருந்தது என்னோட முகி... முகிலன்" என்று தன்னுடைய தம்பியையும் அங்கு பெருமைப்படுத்தினாள்.
இறுதியாக, "இன்னும் மூன்று வாரத்தில் நெல்லெல்லாம் அறுப்புக்கு ரெடியாகிடும்... அதற்கடுத்த வாரம் மீனெல்லாம் பிடிச்சு மார்க்கெட்டுக்கு அனுப்பிடலாம். இந்தமுறையில் லாபம் தான். நஷ்டமென்று எதுவுமில்லை" எனக்கூறி "விவசாயம் அழிவை நோக்கி வேகமாக போயிட்டிருக்கு... அதை தடுக்க ஏதாவதொரு வகையில் முயற்சிப்போம்" என சொல்வதோடு அந்நிகழ்வு முடிவடைந்தது.
நடுவில் உணர்ச்சிவசப்பட்டாலும் தான் பேச வேண்டியதை எவ்வித தடையுமின்றி கயல் பேசியிருந்தாள்.
'தன்னவள் அவ்வளவு கஷ்டத்தையும் தனி ஆளாக அனுபவித்த சமயம், தான் ஜாலியாக பணத்தின் செழுமையில் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்திருக்கின்றோமே' என்று உள்ளுக்குள் எழுந்த பெரும் வேதனையை அப்படியே விழுங்கினான்.
அது அவனின் தவறல்ல இருப்பினும் உடனிருக்கும் வாய்ப்பையும் அந்த காலம் தனக்கு தரவில்லையே என்று நெஞ்சம் விம்மினான்.
'இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகிறது... இனி கயலின் ஒவ்வொரு சந்தோஷத்திற்கும் தான் காரணமாக இருக்க வேண்டும். எந்தவொரு துன்பமும் தன்னைத் தாண்டித்தான் தன்னவளை நெருங்கிட முடியும்' என்று மனதில் உறுதியெடுத்தவன் முகத்தை இரு உள்ளங்கையினால் அழுத்தி தேய்த்து தன்னை சமன்படுத்தி அருகிலுள்ள அன்னையை ஏறிட, அவர் அவ்விருக்கையிலேயே மயங்கி சரிந்திருந்தார்.
"மாம்."
அதிர்வில் உறைந்து நின்றது ஒரு கணம் தான். உடனடியாக தன்னை மீட்டெடுத்தவன், அங்கையை தூக்கிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான். செல்லும் வழியிலேயே, அவர்களின் குடும்ப மருத்துவர் மற்றும் நண்பருமான ஜோனுக்கு அழைத்து விவரம் சொல்லியிருக்க... அனைத்தும் தயாராக ஆயத்தமாகியிருந்தது. அங்கைக்கு விரைந்து மருத்துவம் பார்க்கப்பட்டது.
மருத்துவர் சிகிச்சை முடித்து வெளியில் வரும்வரை ஒருவித பதட்டம் பார்த்திபனை சூழ்ந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக பயம் என்பதை அறிகிறான்.
'அன்னை இல்லையென்றால்?'
அதனை அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
இந்த வயதிலும் அன்னைமடி வேண்டுமென்று மன்றாடி நின்றவனுக்கு, அக்கணம் தன்னவளின் வேதனை முற்றும் முதலும் உணர்வதாய்.
வெடித்து கத்த வேண்டும் போலிருந்தது. அழுத்தத்தில் நடுங்கிய விரல்களை கோர்த்து கட்டுப்படுத்தியவன், மருத்துவரின் வரவிற்காகக் காத்திருந்தான்.
"ஹேய் யங் மேன்... ஆர் யூ ஓகே" என்ற மருத்துவர், "நவ் ஷீ இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட், பட் கண் திறக்க டைம் ஆகும்" என்றார்.
"எதனால் மயக்கமானங்க அங்கிள்?"
"ஹார்ட் அட்டாக். இது பர்ஸ்ட் டைம் அப்படிங்கிறதால, ரிஸ்க் இல்லை. மன அழுத்தத்தால் வந்திருக்கு. ஹேப்பியா வச்சிக்கிட்டாலே போதும்" என்றவர் அவனின் தோளில் தட்டிவிட்டுச் சென்றார்.
ஹார்ட் அட்டாக் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை.
அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது, கணவனுக்காக இருபத்தி நான்கு வருடங்கள் உள்ளுக்குள்ளே மறைத்து வைத்த அழுத்தம் இன்று தன் அண்ணனின் இறப்பைத் தெரிந்துகொண்டதில் மூச்சடைக்க வைத்திருக்கிறதென்று.
விடயமறிந்து மருத்துவமனை வந்த தேவராஜிற்கு அதுவரை இருந்த மொத்த திடமும், பார்த்திபனின் ஓய்ந்தத் தோற்றம் கண்டு முற்றும் முழுதாக வடிந்தது.
அவர் மகனின் தைரியம் அவர் அறியாததா? அவனே இப்படி நிற்கும்போது அங்கையின் நிலை? அவரால் அடுத்த அடி எடுத்து வைக்க இயலவில்லை. கால்கள் தள்ளாடின. அழுந்தி ஊன்றி நிற்க முடியவில்லை. தேவராஜின் ஒட்டு மொத்த உலகமும் அங்கை தானே! வெறும் கையோடு நிற்கிறார் என்று தெரிந்தும் அமைதியாக அவருடன் வாழ்க்கை பயணத்தை துவங்கியவர். தேவராஜின் முதுகெலும்பு அங்கை.
மனைவியின் படுக்கை நிலை தேவராஜின் மனத்திடத்தை ஆட்டம் காண வைத்தது.
'அவளுக்காக நகை பணம் என்று வாங்கி குவித்திருந்தாலும், அவளின் விருப்பத்தை இதுவரை கேட்டதில்லையே!' கண்கள் கலங்கும் போலிருந்தது.
தேவராஜன் மனைவியிடம் விருப்பத்தை ஏன் கேட்கவேண்டுமென நினைக்கும் பெண் அடிமைவாதியல்ல.
அங்கையின் விருப்பம் என்னவென்று அவர் அறியாததா!
எங்கே உன் விருப்பம் என்னவென்று கேட்டால், கிராமத்திற்கு செல்ல வேண்டுமென அங்கை கேட்டுவிடுவாரோ என்று பயந்தே இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அக்கேள்வியை அவர் மனைவியிடம் கேட்டதில்லை.
ஆனால், இப்போது... அந்த ஆசையையாவது நிறைவேற்றி கொடுக்க வேண்டுமென முடிவு செய்த பின்னரே... திடமாக அடி வைத்து மகனிடம் சென்றார்.
"பார்த்தி..."
அமைதியாக திரும்பி பார்த்தவன், தந்தையை அணைத்துக் கொண்டான். நான்கு வயது சிறுவனாக ஆதரவு தேடினான்.
மகனின் மனம் புரிந்த தேவராஜ் தன்னுடைய துக்கத்தை விழுங்கிக்கொண்டு ஆறரை அடி ஆண் மகனின் முதுகு வருடி தேற்றினார்.
"மேடம் கண் முழிச்சிட்டாங்க." நர்ஸ் வந்து சொல்லியதும்... இருவரும் அங்கை இருந்த அறைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் செல்லும்போது பல வயர்களுக்கு நடுவில் அங்கை படுத்தெல்லாம் இருக்கவில்லை. எழுந்தமர்ந்திருந்தார்.
கணவரின் முகத்தை அங்கை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
மகனை மட்டும் விழி உருளை அசைத்து பார்த்தவர், "வீட்டுக்கு போகலாம் கண்ணா" என்றார்.
அங்கையின் கண்ணா என்கிற அழைப்பு தேவராஜை அதிர வைத்தது.
"உன் அண்ணன் தான் பார்த்தியை கண்ணா என்றழைப்பான். நீ அப்படி செல்லும்போதெல்லாம் எனக்கு அவன் செய்த துரோகம் தான் நினைவிற்கு வருகிறது." என்று அழகர் அவ்வாறு சொன்னாரோ அன்று முதல் அங்கையும் கண்ணா என்ற விளிப்பை நிறுத்தியிருந்தார்.
ஆனால் இன்று அங்கை அப்படி அழைத்தது... ஹார்ட் அட்டாக் அவருக்கு சாதாரணமாக வரவில்லை என்பதை உணர்த்தியது.
'என்னவோ நடந்திருக்கு?' அவரின் எண்ணமெல்லாம் அங்கில்லை.
"நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட்டில் இருக்கணும் அங்கிள் சொல்லிருக்காறு மாம். ஒரு டூ டேஸ் இங்கிருந்துட்டு போகலாம்."
மழலைக்கு சொல்லுவதைப்போன்று பொறுமையாகக் கூறினான்.
"வீட்டுக்கு போகணும்." பல வருடங்களுக்குப் பிறகு பிடிவாதம் பிடித்தார் அங்கை.
"பார்த்தி சொல்லுவதை கேளு அங்கை."
தேவராஜின் பக்கம் அங்கை திரும்பக்கூட இல்லை.
அந்நேரம் அங்கு வந்த ஜோன், "என்ன தேவராஜ், மிஸ்ஸஸ் தேவராஜ் என்ன சொல்றாங்க?" எனக் கேட்டார்.
"மாம் வீட்டுக்கு போகணும் சொல்லுறாங்க அங்கிள்." பார்த்தி பதில் கூறினான்.
"யா... போகலாமே" என்றவர், ஹார்ட் பீட் ரேட், ரத்த அழுத்தம் எல்லாம் தானே செக் செய்து... "அவங்களுக்கு இப்போ அமைதியான சூழல் தான் அவசியம் பார்த்தி, அவங்க இருக்க இடம் அவங்களுக்கு பிடிச்ச இடமாக இருந்தால் இன்னும் பெட்டர்... சோ நீங்க கூட்டிட்டு போகலாம். டேப்லெட்ஸ் மட்டும் ஒன் மந்த்ஸ் கன்ட்னியூ பண்ணுங்க. நெக்ஸ்ட் மந்த்ஸ் ஒரு செக் வச்சிக்கலாம்" என்றார்.
அதற்கடுத்து அப்போதே ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் முடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
இருக்கையில் அமர்ந்த அங்கை பின்னால் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டார்.
"மாம் ரூமுக்கு போங்க. படுத்து ரெஸ்ட் எடுங்க."
பட்டென்று கண் திறந்தவர்,
"உனக்கு முன்பே தெரியுமா?" எனக்கேட்டு பார்த்திபனின் சட்டையை பிடித்து உலுக்கினார்.
தெரியாதென இட வலமாக தலையசைத்தான்.
"அன்னைக்கு வீடியோ காண்பித்த அப்போகூட நீ சொல்லலையே! ஏன்டா ஏன்?" பார்த்திபனின் நெஞ்சிலேயே சரமாரியாக அடித்தார். சாய்ந்து கதறினார். வெடித்து அழுதார்.
அன்னையின் கதறல் காண பொருக்காதவன், அவரை அணைத்துக் கொண்டான்.
"மாம்... காம் டவுன்... சில் " என்று பலவாறு பேசி அவரின் அழுகை ஓயும் வரை அமைதி காத்தான்.
ஏன்? எதற்கு இந்த அழுகையென்று தேவராஜிற்கு ஒன்றும் புரியவில்லை. மௌனமாக வேடிக்கை பார்த்தார். மனைவியின் பாராமுகம் அவரை எட்ட நிறுத்தியிருந்தது.
"பார்த்தி என்னடா... என்ன தான் நடக்குது?"
"என்ன நடந்தால் உங்களுக்கென்ன. உங்களுக்கு உங்களுடைய வரட்டு பிடிவாதமும் ஒன்னுத்துக்கும் ஆகாத முன் கோபமும் தானே முக்கியம். அதனால் இன்று நான் இழந்தது என்ன தெரியுமா?" அங்கை வெடித்து சிதறியிருந்தார். முதல் முறையாக கணவரிடம் கேள்வி கேட்டார்.
"மாம்... மெதுவா பேசுங்க!" கோபத்தில் எங்கே மீண்டும் ஏதாவது அனர்த்தம் நேரிட்டுவிடுமோ என்று பார்த்திபன் பயந்தான்.
மகனின் தோளில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தார் அங்கை. இத்தனை வருட வேதனையை ஒரே நாளில் அழுது கரைத்திட முயன்றார்.
"டேய்... என்னடா... என்ன பிரச்சனை. அங்கை ஏன் இவ்வளவு எமோஷனலா இருக்கா?"
"அவங்களுடைய துக்கத்தொட வெளிப்பாடு டாட் அது."
"என்ன சொல்லுற பார்த்தி. எனக்கு புரியல?"
"என்ன புரியனும் உங்களுக்கு. அன்னைக்கு எவ்வளவு கெஞ்சியிருப்பர். புரிஞ்சிக்கோடா, என்னை பேச விடுன்னு. நீங்க கேட்டீங்களா? இப்போ நீங்க கேட்பதற்கு மட்டும் நாங்க பதில் சொல்லணுமா? எதுவும் உங்களுக்கு புரிய வேண்டாம். சொன்னால் புரிய போவதுமில்லை" என்ற அங்கை, "கடைசியாய் ஒருமுறை கூட என் அண்ணனின் முகம் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. இதெல்லாம் விதின்னு நான் சொல்ல மாட்டேன். மொத்த காரணமாகவும் என் முன்னால் நீங்க நிற்கும் போது விதியோடு சதின்னு என்னால் ஏற்க முடியவில்லையே!" அழுதபடி தன் அறையில் புகுந்து கொண்டார்.
"கடைசியாய் ஒருமுறை என் அண்ணனின் முகம் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லையே!" அங்கையின் குரல் தேவராஜின் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. மனிதர் தள்ளாடியபடி பொத்தென்று இருக்கையில் விழுந்தார்.
"டாட்..."
"அம் ஓகே!"
"அழகர்... என் அழகர் இப்போ உயிரோடில்லையா?" திரும்ப திரும்ப முணுமுணுத்தார்.
அரற்றியபடியே இருந்தார். பார்த்திபனை பேசவே விடவில்லை. அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அவர் கேட்கவேயில்லை. அதையுமீறி அவன் பேசியதெல்லாம் அவரின் கருத்தில் விழவில்லை.
தந்தைக்கும் ஏதேனும் நேர்ந்திடுமோ என்று அஞ்சியவன், அவருக்கு முன்னால் இருந்த கண்ணாடி டீபாயினை அடித்து நொறுக்கினான். அதன் சத்தத்தில் நிகழ் மீண்ட தேவராஜ், "பார்த்தி... பார்த்தி... ஒருமுறை ஒரே முறை அழகரை பார்க்க என்னை கூட்டிட்டு போ" என்று கெஞ்சினார்.
"அவர் இறந்து செவன் இயர்ஸ் ஆகுது டாட்."
மொத்தமாக இடிந்து விட்டார். இப்போது புரிந்தது அங்கையின் வார்த்தைகளுக்கான அர்த்தம்.
அந்நேரம் அழகர் செய்த துரோகம். தேவராஜின் ஆத்திரம் எதுவும் அவருக்கு நினைவில்லை. எல்லாம் அழகரின் இறப்புக்கூட அறிந்திடாத பாவியாக இருந்திருக்கின்றேனே என்று மருகினார். வயது முதிர்ந்த நிலையில் பக்குவம் அடைந்தார். ஒன்றுமில்லாததை பேசி சரி செய்திருந்தால் ஒன்றாக இருந்திருக்கலாமே. இப்போது தோன்றியது. தனக்கு ஒன்றென்றால் முன்னால் வந்து நிற்கும் அழகரை இப்போது அவரின் மனம் வெகுவாகத் தேடியது.
'உன் தேவராஜ் அழுகுறேன் அழகர். கண்ணீர் துடைக்க வரமாட்டியா?' ஊமையாகக் கதறினார்.
'இப்போதே மொத்தமாக அழுது விடட்டும்' என்று நினைத்த பார்த்திபன்...
"அத்தையும் உயிரோடு இல்லை டாட்" என்றவன், கயல் மற்றும் முகிலனை பற்றியும்... இன்று டிவியில் கயல் சொல்லியதை எல்லாம், அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், தனக்குத் தெரிந்த எல்லாம் கூறிட மனிதர் நொறுங்கிப்போனார்.
"அய்யோ... அய்யோ..." தலையில் அடித்துக்கொண்டார். அக்கணம் அவருக்குள்ளிருக்கும் கிராமத்தான் வெளியில் வந்திருந்தான்.
அப்போதிருந்த இளகிய மனம் அவரை உமிழ்ந்தது.
தன்னுடைய முன் கோபத்திற்கு கிடைத்த தண்டனையென்று வருந்தினார்.
அவரின் கதறல் கேட்டு ஓடி வந்த அங்கை மனைவியாய் அவரை மடி தாங்கினார்.
"அய்யோ அங்கை என் அழகர், அவன் பெத்த மக்கள்... அய்யோ அங்கை, என்னை மன்னிச்சிடு அங்கை. ஒருமுறை நீ சொல்வதை கேட்டிருக்கலாமே?" அவரின் அழுகையை நிறுத்தவே முடியவில்லை.
"நீ சொல்லியது போல் நான் தான் காரணம். அவனை பார்க்கக்கூட கொடுத்து வைக்கவில்லையே!" தரையில் அடித்துக்கொண்டு அழுதார்.
அப்போதுதான் தேவராஜின் மனமும் அங்கைக்கு புரிந்தது.
அழகர் மீது அவர் வைத்த பாசத்தை கோபம் திரைக்கொண்டு மறைந்திருக்கிறது என்பதை. அதனை விலக்க தானவது முயன்றிருக்க வேண்டுமென்று காலம் கடந்து யோசித்தார்.
'கணவரின் பேச்சினை அப்படியே கேட்டு இருந்திருக்கக்கூடாதோ!' தன் தவறை இப்போது ஆராய்ந்தார்.
தாய் தந்தையின் கண்ணீர் பார்த்திபனையும் விழிநீர் சிந்த வைத்தது.
'தானும் சோர்ந்து போனால் அவர்களை யார் தேற்றுவார்' என்று தன் துக்கம் மறைத்து அவர்களை ஆறுதல் படுத்தி தேற்ற முயன்றான். இறுதியில் ஓரளவு வெற்றியும் பெற்று, அவர்களை உண்ண வைத்து, அங்கைக்கு மருந்து கொடுத்து... இருவரும் உறங்கிய பின்னரே தன்னறை வந்தான்.
வந்தவனின் மனம் முழுவதும் கயலின் நினைவே.
அப்போதே அவளிடம் பேசிடும் வேகம். தன் கைச்சிறைக்குள் அவளை பொதிந்து பாதுகாத்திடும் வேட்கை. முடியாத தன்னிலையை அறவே வெறுத்தான்.
தன்னவளை நினைத்த தன் சோகத்தை எல்லாம்... பால்கனி இரும்பு கம்பியை பிடித்த பிடியின் அழுத்தத்தில் காண்பித்தான்.
உள்ளுக்குள் கூடிய வேதனை கண்களில் பிரதிபலித்தது. ரத்தமென சிவந்தது. கட்டுப்படுத்த முடியாது வாய் திறந்து சத்தமிட்டு கத்தினான். இருளை கிழித்துக்கொண்டு அவனின் குரலில் திசையெங்கும் எதிரொலித்தது.


அத்தியாயம் 🌾 24 :
"மீனெல்லாம் குளத்துக்கு போயிட்டால் வத்தவாய்க்கால் பிடித்து நெல்லு அறுத்தடலாம் கயல்." அன்று காய்கறித் தோட்டம் சீரமைத்துக் கொண்டிருந்தனர். காய்ப்பு முடிந்துவிட்டதால், பழைய செடிகளை அகற்றி, புதிய செடிகள் பதியம் வைத்துக்கொண்டு இருந்தனர்.
கைகள் அதன் போக்கில் வேலை செய்தாலும், அடுத்து என்பதை வாய் பேசிக்கொண்டே இருந்தது. மனம் திட்டங்கள் வகுத்துக்கொண்டே இருந்தது.
"ஆமாம் சிவாண்ணா, கதிர் சாய இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள வயல் காயணும்" என்று பதில் அளித்த கயலின் குரலில் ஏதோ யோசனை.
"என்ன கயலு யோசிக்குற..."
"சுற்றி மீன் வளர்ப்புக்காக வெட்டிய ரெண்டடி ஆழம் இருப்பதால், வண்டி விட்டு அறுக்க முடியாதுண்ணா." இப்போதெல்லாம் கையால் அறுப்பது என்பது முற்றிலும் குறைந்து விட்டது. மொத்தத்தில் கையறுப்பு இல்லை என்பதே சரியாக இருக்கும். அதனால் கூலிக்கு ஆட்கள் வருவார்களா என்ற பெரும் யோசனை அவளுள். யோசனையை மீறி சிறு கவலை. அது அவளது முகத்திலும், சோர்ந்து ஒலித்த குரலிலும் தெளிவாகத் தெரிந்தது.
"நீயெதுக்கு கண்ணு வெசனப்படுற, வண்டிலாம் இப்போ பத்து பாஞ்சி வருசமத்தானே! அதுக்கு முன்னடிலாம் கையாலத்தான இருக்கும். வண்டி வந்த பிறகு, எங்களுக்குத்தான் நெல்லறுப்பு வேலை போய், நெல்லு அடிக்குற வேலையும் இல்லாமல் அதுக்கும் வண்டி வந்து வெறும் வைக்க அல்லுற வேலை தான் கிடைக்குது" என்று ஒரு வரிசையில் செடி பதியமிட்டபடி இருந்த பெண்மணி ஒருவர் கூற, "நாங்க அறுப்புக்கு வறோம் கயலு நீ கவலைப்படாத" என்று மற்றொரு ஆள் கூறினார்.
இன்றும் கிராமத்தில் மட்டுமே, கேட்பதற்கு முன் உதவிக்கு கரம் நீட்டும் குணம் அரிதாகக் காணப்படுகிறது.
அப்போதெல்லாம் நெல் அறுவடை என்பதே ஒரு திருவிழாத்தான். மூன்று நாள் கொண்டாட்டம் அது. முதல் நாள் காலை துவங்கும் நெல் அறுப்பு, பாட்டு, பேச்சு, கிண்டல், கேலிகளுக்கு நடுவில் பெண்கள் நெல் அறுக்க, ஆண்கள் அதனை கட்டுகட்டி களம் கொண்டுவந்து சேர்க்க மாலை கவிழ்ந்திடும்.
அடுத்த நாள் கட்டி வைத்த கதிர்களையெல்லாம், வைக்கப்பிரி கொண்டு திரித்த கயிறாள் கதிரை சுற்றியெடுத்து கைகளால் லாவகமாக சுழற்றி, முதுகுக்கு பின்னால் உயர்த்தி பிடித்து, முன்னிருக்கும் கல்லில் அடித்து, நெல் மணி சிந்தி மண் சேரும் காட்சியை பார்க்க கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லோரும் கூடி செய்திட்ட விவசாயம் இன்று செய்வதற்கு ஒருவர்கூட முன் வருவதில்லை என்பதே கசப்பான உண்மை.
மூன்றாம் நாள் அடித்து சேர்த்த நெல்மணிகளை, காற்று வரும் வேகம் அறிந்து, அதற்காக காத்திருந்து, முரம் வைத்து தூற்றி தூசிகளகற்றி மூட்டைகள் பிடித்து அடுக்கி வைக்கும்போது வரும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. வார்த்தைகளற்ற பூரிப்பு. கண்கள் நிறைந்திடும்.
அத்தோடு வேலை செய்தவர்களுக்கு பணத்தோடு, அவர்கள் செய்த வேலைகளுக்கு தகுந்தவாறு இத்தனை மூட்டை, இத்தனை மறக்கால் என்று உடனளிக்கும் நெல்லினை கொடுக்கும்போது கொடுப்பவருக்கும் வாங்கும்போது வாங்குபவருக்கும் இடையில் தோன்றும் மன நிறைவு வேறெதிலும் கிடைத்திடாது.
விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல, அது இயற்கைக்கும் மனிதனுக்கும் நடுவில் இருக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம். தாய்க்கும் சேய்க்கும் உள்ள தொப்புள் கொடி உறவை போன்றது.
தான் சிறுவயதில் பார்த்திட்ட நெல் அறுவடை நாளை நினைத்து பார்த்த கயலுக்கு அன்றைய நாள் திரும்ப வருமா என்றொரு ஏக்கம் இருக்கத்தான் செய்தது.
காலம் மாறுகையில் நாமும் மாற வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் நம் மனதினை, நம்மோடு பிணைக்கப்பட்டவைகளை ஒதுக்கி மறந்து சுயம் தொலைத்து ஒரு வளர்ச்சி வேண்டுமா?
வளர்ச்சி என்பது பழையதை அழித்து மேலேறுவதில்லை, பழையதை விட்டுத்தராது உடன் வைத்து புதியதிற்கு இணை சேர்த்து முன்னேறுவது. இங்கு புதிதென்று ஒன்று வந்துவிட்டால் பழையதுக்கு மதிப்பென்பதை விட, நினைவென்பதே காணாமல் போய்விடுகிறது என்பதே நிஜம்.
அப்படித்தான் நம் விவசாயமும் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறது.
கயலால் உள்ளுக்குள் புலம்பத்தான் முடிந்தது.
'தன்னால் முடிந்தவரை உயிர் போகும் நிலை வந்தாலும், விவசாயத்தை விட்டுக்கொடுத்திடக் கூடாது' மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
"அப்புறம் என்ன கயலு அடுத்தவாரம் அறுத்துடலாமா?"
நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின்னர் நெல் அறுப்பிற்காக அரிவாள் பிடிக்கப்போகும் மகிழ்வு அந்த பெண்மணியிடம் இப்போதே தெரிந்தது.
"திரும்பத் திருவிழாதான்." உரமிட்டுக்கொண்டிருந்த மாணிக்கம் உற்சாகமாகக் கூறினார்.
"முகியையும் மலரையும் வர சொல்லணும் சிவாண்ணா. பார்த்து ரொம்ப நாளுச்சு. அவனுக்கும் இதெல்லாம் பிடிக்கும்ல" என்று தம்பியை பார்த்திடாத ஏக்கத்தோடு கயல் கூற, அதனை சிவா தலையாட்டி ஆமோதித்தான்.
"இப்போ மீனெல்லாம் எப்படி கயலு குளத்துக்கு போகும். மீனை பிடிச்சு குளத்துக்குள்ள விடுணுமா?"
"ரெண்டு வேலையாவுள்ள இருக்கும் போல, இப்போ ஒருவாட்டி பிடிச்சு... அப்புறம் ஒருவாட்டி பிடிக்கணுமா?"
ஒருவர் கேள்விகேட்க, இன்னொரு பெண்மணி சந்தேகமாகக் கேட்டார்.
"அச்சோ பொன்னி அத்தை, இப்போ எரியில தண்ணீ குறைய ஆரம்பிச்சா, மீனெல்லாம் தண்ணியிருக்க குட்டைய நோக்கித்தானே போகும். அது மாதிரித்தான். வயலுக்கு அந்தப்பக்கமிருக்க அதாவது நாம வெட்டி வைச்சிருக்க குளத்து பக்கம் வரப்பை வெட்டி வச்சிட்டு கழனிக்குள்ள தண்ணி போற மடையை அடைச்சிட்டா போதும். உள்ள தண்ணி வத்த வத்த மீனெல்லாம் தானா குளத்துல இறங்கிடும்" என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
"படிச்ச புள்ள அதான் இவ்வளவு அறிவு." கேட்டுக்கொண்டிருந்த காத்தாயி வாய் மேல் கை வைத்தார்.
"உன்னையும் நீ செய்யுற விவசாயத்தையும் பார்க்கும்போது எம் புள்ளையையும் விவசாயம் படிக்க வைக்கணும் தோணுது தாயீ." வீரம்மாள் அக்கா நெகிழ்ந்து கூறினார்.
'இந்த வார்த்தைதான் தன் முயற்சிக்கு உண்டான உண்மையான வெற்றி' என்று அத்தனை உவகை அடைந்தாள் கயல்.
அத்தகைய விகசிப்பான முகத்தைக் கண்ட சிவா... அதனை உடனே படம் பிடித்து முகிக்கு அனுப்பி வைத்தான்.
என்னதான் கயலை தனித்துவிட்டு அவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அவளின் சிறு அசைவையும் சிவாவின் மூலம் நன்கு தெரிந்து வைத்திருந்தான் முகி.
அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த முகி, வாட்ஸப்பில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டதும் எடுத்து திறந்து பார்த்தவனின் முகத்திலும் கயலின் சந்தோஷ முகம் கண்ட சந்தோஷம்.
"என்ன டாக்டர் சார் இவ்வளவு நேரம் காலேஜூக்கு போக நேரமாச்சுன்னு அந்த குதி குதிச்சிட்டு இருந்தீங்க. இப்போ என்னடான்னா போனை பார்த்து பல்பு எரிஞ்சிட்டு நிக்குறீங்க." கல்லூரிக்கு கிளம்பித் தயாராக வந்த மலர் அவனை சீண்டினாள்.
அலைபேசியை மலரின் முகத்திற்கு நேராகக்காட்டிய முகி, "அடுத்த வாரம் எப்படியாவது ஊருக்கு போகணும் மலர். அன்னைக்கு டிவியில் கயல் அப்பா அம்மாவைப் பற்றி சொல்லும்போது உள்ளுக்குள்ள எவ்வளவு உடைஞ்சான்னு என்னால பீல் பண்ண முடிந்தது. அப்போ அவளோடு இல்லையேங்குற ஆதங்கம் கயலை நேரில் பார்த்தால் தான் தீரும்" என்று சொல்லியவனும் அன்றைக்கு நிகராக இன்றும் உடைந்தான்.
"அய்யோ லூசு மாமா. இதுக்கெல்லாமா கண்ணை கசக்குவாங்க. வேணுன்னா லீவ் போட்டு இன்னைக்கே கிளம்புவோம்" என்றவள் முகியின் கண்களை தன் துப்பட்டா நுனி கொண்டு துடைத்தாள்.
"இப்போ போனால் சுருக்க வரணும் மலர். அடுத்தவாரம் ரெண்டு நாள் லீவ் வருது. வியாழன், வெள்ளி. புதன் நைட் கிளம்பிடலாம்" என்றவன் அப்போது தான் உணர்ந்தான் தன்னிருவரின் நெருக்கத்தையும். முகியின் கலங்கிய விழிகளை துடைப்பதற்காக மலர் அவனை நெருங்கியிருந்தாள்.
அதனை உணர்ந்த மலரும் அவஸ்தையாக நெளிய...
"இது வேலைக்காகது. நீ நல்ல பையனை கெடுக்க பாக்குற" என்றவாறு பேக்கினை எடுத்து தோளில் மாட்டியபடி வேகமாக வெளியில் சென்றான் முகி.
"மக்கு மாமா. கிட்ட வந்தால் அப்படியே கிஸ் அடிக்காமல். பயந்து விழுந்தடிச்சு ஓடுது. இதுகிட்ட நானெப்படி குப்பை கொட்ட போறேன்னு தெரியலையே ஆண்டவா" என்று இரு கையையும் மேல்நோக்கி விரித்து புலம்பிய மலர் வீட்டை பூட்டிவிட்டு, காத்திருந்த முகி தயாராக ஸ்டார்ட் செய்து வைத்திருந்த இருசக்கர வண்டியில் அவனுக்கு பின்னால் அமர்ந்தாள்.
"மலர் கீப் டிஸ்டன்ஸ். ரெண்டடி தள்ளியே உட்காரு" என்றான்.
"நான் அதுக்கு கீழத்தான் விழனும்" என்று நொடித்தவள், இருபக்கமும் காலிட்டு அவனின் முதுகோடு ஒட்டி அமர்ந்தாள்.
'மனுஷனை படுத்தி எடுக்கனே பண்றாள்.' அவனால் உள்ளே சூடாகத்தான் முடிந்தது.
முதலில் அமைதியாக தானுண்டு தன் வீட்டு வேலை படிப்பென இருந்த மலர் நாளுக்கு நாள் முகியிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருந்தாள். வெளிப்படையாக காதலை அவனுக்கு உணர வைக்க முயன்றாள்.
முன்பு அவள் பின்னால் காதலை வேண்டி முகி வந்தபோதெல்லாம் தெரியாத ஒன்று இப்போது அவனின் அவசியமான விலகளில் அவளுக்குத் தெரிந்தது.
'தான் வேண்டுமென்றே அவனை ஒதுக்கியபோது அவனுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்' என்ற குற்றவுணர்வு முகியின் மீது நாளுக்கு நாள் காதலை அதிகரிக்கச் செய்ய... அவளின் சீண்டலில் முகி தான் திண்டாடி நிற்கின்றான்.
அவனால் அவளை கடிந்துகொள்ளவும் முடியவில்லை, அவளின் சேட்டைகளை ரசிக்காமலும் இருக்க முடியவில்லை. அல்லாடிக் கொண்டிருக்கின்றான்.
இப்போதும் அவனை அல்லாட வைத்துக் கொண்டிருந்தவள், அவனின் இடையில் கை வைக்க...
"மலர் டோன்ட் டச்" என்று அலறினான். ஒரு நொடி வண்டி ஆடி, சாலையில் சீரானது.
"நீ போற வேகம் பயமா இருக்கு மாமா. அதான் உன்னை பிடிச்சிகிட்டேன்." அப்பாவியாக அவள் கூறுவது அவனுக்கு தலையில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
அவனின் அவஸ்தை அவனுக்கு.
"யாரு நானு... ரொம்ப ஸ்பீடா போறேன்." அவ்வளவு நக்கல் அதில்.
"ஆமாம் மாமா" என்றவள் அவனை இன்னும் நெருங்கி அமர்ந்தாள்.
"மலர் ப்ளீஸ் டி. நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்குடி. அதுவுமில்லாமல் இப்போதாண்டி உனக்கு இருபது வயசே ஆகுது. கொஞ்சம் பொறுமையா இருடி." கிட்டத்தட்ட கண்ணாடியில் தெரிந்த அவள் முகம் பார்த்து வண்டியை ஓட்டியவாறு கெஞ்சினான்.
"அது தாலி கட்டுறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கணும்" என்று வேகமாகக் கூறியவள், "இப்போலம் உன்னை இன்னும் நிறைய பிடிக்குது மாமா" என்று இறங்கிவிட்ட குரலில் கூறினாள்.
கேட்டவனுக்கு சிவ்வென்று இருந்தாலும், 'சிறுபெண்ணின் மனதை சலனப்படுத்துகிறோம்' என்று எண்ணினான்.
"நான் இருபது வயசு சின்னப்பொண்ணில்லை மாமா. உன் பொண்டாட்டி" அழுத்தமாகக் கூறினாள்.
"சரி... காலேஜ் வந்திடுச்சு இறங்கு" என்றவன், "என்னை ரொம்ப சோதிக்குற மலர். படிப்பு முடியுற வரை வேற நினைப்பே இருக்கக்கூடாது" என்றான் அவள் சொல்லிய அதே அழுத்தத்துடன்.
"இதுகெதுக்கு கல்யாணம் கட்டணும். இப்போ உள்ளே போனதுமே, அவ அவளும் அவ அவ ஜோடியோடு காதலுன்னு சுத்திட்டு இருப்பாளுக. நான் மட்டும் லைசன்ஸ் வச்சிருந்தும் ஒரு பார்வைக்கே ஏங்கி போய் கிடக்குறேன்" என்று புலம்புவதைப்போல் வேறெங்கோ பார்த்துக்கொண்டே அவனிடம் கூறினாள்.
"சரி நீ படிக்க வேணாம். ஊருக்கு கிளம்பு. என்கூட இருந்தத்தானே கண்ட நினைப்பு வருது. என்னைவிட்டு போ." அவன் சீரியஸாகத்தான் சொல்லுகிறான் என்பது அவனது முகத்திலேயே தெரிந்தது.
"மாமா..." அவளுக்கு கண்ணில் குளம் கட்டிவிட்டது.
"பின்ன என்னடி. எனக்கும் ஆசையெல்லாம் இருக்கு. உன்னைவிட அதிகமா இருக்கு. உன் காதலை விட என் காதலுக்கு காலம் அதிகம். எதிர்பார்க்காமல் கல்யாணம் ஆகிப்போச்சு. அதுக்காக உடனே வாழ்ந்து ஆகணும் அவசியமில்லை. ரெண்டு பேருக்குமே வாழ்க்கையோட பக்குவத்தை தெரிஞ்சுக்குற சரியான வயசில்லை. எனக்கு இருபத்தி ரெண்டு இப்போதான் முடியப்போகுது. அதுக்குள்ள எப்படி மலர்."
'எல்லாம் இப்போதே பேசிவிட வேண்டும். இனியும் மலரின் காதல் விளையாட்டில் அவஸ்தை அடைய முடியாது' என்று நினைத்தவன் இருக்கும் இடம் மறந்து அவளுக்கு புரிய வைக்க பேசிக்கொண்டிருந்தான்.
"புரியுது மாமா. நீங்க சொல்லுறவரை இனி உங்கக்கிட்ட பேச மாட்டேன்." கண்ணில் நிறைந்துவிட்ட நீரை அவனுக்கு காட்டிடாது தலை கவிழ்ந்தவாறு சொன்னாள்.
"பேசக்கூடாதுன்னு நான் சொல்லல மலர்."
அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
"இப்போவே கல்யாணம் பண்ணிக்கிட்டு இதுக என்ன பண்ணப்போகுதோ தெரியல."
"அன்னைக்கு ஆறுதலுன்னு கயல்கிட்ட நம்மவூர் கிழவி பேசனதுதான் மலர் என்காதில் கேட்டுட்டே இருக்கு."
அன்று அவர்களின் மறுத்திருமணம் கோவிலில் நடந்தபோது ஒரு பாட்டி கயலிடம் பேசியதை முகியும் கேட்டிருந்தான். இப்போது அதைத்தான் அவளிடம் கூறினான்.
"இந்த கல்யாணத்தால நாம் படிப்பை விட்டுட்டோம். வாழ்க்கையை தொலைச்சிட்டோம் அப்படின்னு யாரும் சொல்லிடக்கூடாது மலர்."
முகியின் வார்த்தைகள் அவளை யோசிக்க வைத்தது. தான் சிறுபிள்ளையாக அவனுடன் விளையாடிவிட்டோம் என்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது.
"அந்த கெழவி அப்படி சொன்னதை நான் கேட்காமல் இருந்திருந்தாலும், நான் இப்படித்தான் இருந்திருப்பேன் மலர். ஏன்னா வாழ்க்கையை நாம் தொடங்க இது சரியான காலமில்லை.
முன்னால் உன் பின்னால் சுற்றிய போது மட்டும் அந்த வயது, காலமெல்லாம் சரியா இருந்தததான்னு நீ கேட்கலாம். ஆனால் அப்போ எனக்கு நீயும் என்னை விரும்பிறியான்னு தெரிஞ்சிக்கணும் அப்டின்னு ஒரு நோக்கம் இருந்துச்சு. ஆனால் இப்போ அது எனக்கில்லை.
ஏன்னா நீ என்னை எவ்வளோ லவ் பண்றன்னு என்னால் பீல் பண்ண முடியுது மலர்.
அதே மாதிரி உன்னால என் லவ் பீல் பண்ண முடிஞ்சா மட்டும் போதும். இப்போதைக்கு இந்த பீல் ரெண்டு பேருக்கும் போதும்.
ஒவ்வொருமுறையும் வார்த்தையால் சொல்லிகிட்டே, செயலால் உணர்த்துகிட்டே இருக்கணும் அவசியமில்லை" என்றவன்,
"ஐ லவ் யூ டி" என்று அவளின் தலையில் கை வைத்து ஆட்டினான்.
"போயா... இப்படி நீயே டெம்ப்ட் பண்ணிட்டு... அப்புறம் முழு நீளத்துக்கு வசனம் பேசுவ. எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே இரு" என்றவள் அவன் பேசியதால் உண்டான தெளிவுடன் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு அவனை சகஜமாக்கிட விளையாட்டாய் பேசியபடி ஓடிவிட்டாள்.
*******
"நீயும் வா கண்ணா."
அங்கை இரண்டு நாட்களாக பார்த்திபனுடன் மன்றாடிக் கொண்டிருக்கிறார். அவனும் மறுத்துக் கொண்டிருக்கிறான்.
"மாம் ப்ளீஸ். ட்ரை டூ அண்டர்ஸ்டேண்ட் மை சிட்டுவேஷன்." கிட்டதட்ட தாயிற்கு புரிய வைத்திட சற்று குரல் உயர்த்தினான்.
"அங்கை விடும்மா. அவனுக்குத்தான் வேலையிருக்கே. முடிந்ததும் வரப்போகிறான்." கணவரின் சமாதானத்தையெல்லாம் அங்கை ஏற்கவேயில்லை.
"மாம் டாடும் உங்கக்கூட வராங்க. அவரும் இல்லாமல் எல்லாம் நான் தான் பார்க்கணும்." ஆயாசமாகக் கூறினான்.
"டெல்கிட்ட கொடுத்துட்டு வா. பொறுப்பு எல்லாத்தையும். அவன் பார்த்துப்பான்."
"மாம்... " பார்த்திபன் முடியாது பற்களை கடித்தான்.
கயலைப்பற்றி தெரிந்துகொண்ட பின்னர்... வீட்டின் சூழல் சற்று மாற்றம் பெற்றதும், "உன் வேலையெல்லாம் முடிஞ்சிட்டால் என்னை இந்தியா கூட்டிட்டு போ கண்ணா" என பார்த்திபனிடம் கேட்டிருந்தார் அங்கை.
அவரின் குரலே அவரின் இத்தனை வருட ஏக்கத்தை அவனுக்கு பறைசாற்றியது.
அங்கை கயலை பார்க்கத்தான் இந்தியா கூட்டிபோகச் சொல்கிறார் என்பதை அறிந்தவன், 'தன்னால் தான் நினைத்ததும் முடியவில்லை தன்னுடைய அன்னையாவது தன்னவளை காண நேரிடட்டுமே' என்று சிந்தித்தவன்,
"டாட் இப்போதும் உங்களுக்கு இந்தியா போக கஷ்டமா இருக்கா?"என்று தேவராஜனிடம் நேரடியாகக் கேட்டான்.
அவர் அழகரின் நினைவில் சோகம் சுமந்த விழிகளுடன் இல்லையென தலையாட்டிட, அடுத்த ஒரு வாரத்தில் அவர்களை மொத்தமாக இந்தியா செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான்.
தேவராஜ் கூட, "எங்களை கயல் ஏற்றுக்கொள்வாளா என்றே தெரியவில்லை. இதில் இங்கிருந்து மொத்தமா எங்களை அனுப்பி வைக்கின்றாயே பார்த்திபா, நாங்களெப்படி திருப்பி வருவது" என்று வினவினார்.
"கயல் ஏத்துக்கலானாலும், அவளை ஏத்துக்க வைக்க வேண்டியது தான் இனி உங்களுடைய வேலை. கயல் நம்மை தேடியதை பார்த்தால், அவள் ஏத்துக்குவான்னு தான் தோணுது. இனியும் யாருமில்லைன்னு என் கயல் பீல் பண்ணக்கூடாது டாட்" என்றவனிடத்தில் ஏதோ ஒன்று. அதனை தேவராஜனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
"திறப்பு விழா முடிந்ததும் நான் வறேன். அப்படி கயல் உங்களை அந்நியமா பார்த்தால், சென்னை வீட்டில் தங்குங்க" என்றவனிடம், "முதல் முதலாகப் போகிறோம் நீயில்லாமல் எப்படி?" என அவனில்லாமல் போகமாட்டோமென்று அடம் பிடித்த அங்கையை சரிகட்டி விமானம் ஏற்றிய பின்னரே மூச்சுவிட்டான்.
நான்கரை மணிநேரத்தில் இந்தியா சென்றிடுவார்களென்று கையிலிருந்த ரோலக்ஸை திருப்பி பார்த்தவன், சென்னை சென்று அவர்கள் கயல் வீட்டிற்கு செல்லும் வரையிலான அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக செய்திருந்தான்.
கயல் ஏற்பாளா? பாராமுகம் காட்டுவாளா?


அத்தியாயம் 🌾 25 :
ஆயிற்று நெல் அறுவடை முடிந்து இரண்டு நாட்கள்.
தனக்காக உதவிய அனைவருக்கும் பழைய முறையில் கூலியோடு சேர்த்து நெல்லையும் கொடுத்தாள் கயல். விதை நெல்லுக்கென நான்கு மூட்டைகளை நிறுத்தியவள், வீட்டுத் தேவைக்காக பத்து மூட்டை நெல்லுக்கு அனுப்பினாள்.
மற்ற அனைத்தையும் விற்று வந்த பணத்தை அப்படியே முகியின் வங்கி கணக்கிற்கு எப்போதும்போல் அனுப்பி வைத்து விட்டாள்.
கயல் தனக்கென்று எதையும் சேர்க்கவில்லை. அவளுக்கு எல்லாம் முகி தான். அதனால் அவளது உடமைகளும் அவனுக்கே உரித்தானது அவளிடம். முகியும் கயல் செய்வதை ஆமோதித்ததில்லை. ஆனால் அவள் அனுப்பும் தொகையில் தனக்கு வேண்டுமளவு வைத்துக்கொண்டு மீதியை அவளுக்கே அனுப்பி விடுவான். கயலுக்கும் தம்பி கையால் வாங்கிக்கொள்வது அவ்வளவு நிறைவு.
"எனக்கு வேண்டுமென்றளவு மட்டும் போடு கயல்." ஒருமுறை சொல்லியதற்கு, "அம்மா , அப்பா இருந்திருந்தால் அவங்ககிட்ட தானே முகி கொடுத்திருப்பேன். அதேபோல் தான் இதுவும்" என்று அவனின் வாயினை அடைத்து விட்டாள்.
அந்த வட்டத்தில் கயல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதால், அவளின் பயிர்களுக்கு மவுசு அதிகம். நெல் அறுக்கும் போதே, வியாபாரிகள் அவளைத்தேடி வந்துவிடுவர். இன்னும் சிலபேர் தாமே மூட்டை பிடித்துக்கொள்வதாகச் சொல்லி அனைத்தையும் அவர்களே செய்து கயலின் கையில் பணத்தை கொடுத்துவிடுவர்.
ஆதலால் கயலுக்கு வியாபாரியைத் தேடி பிடித்து விற்கும் அலைச்சல் இல்லை.
"அடுத்த போகம் நெல் விவசாயம் செய்யும் போது, நாங்களும் இந்த முறையில் பயிர் செய்கிறோம்" என்று கயலிடம் ஒருசிலர் முன் வந்தனர்.
அனைவருக்கும் இதிலுள்ள நெளிவு சுலிவுகளையெல்லாம் சொல்லித் தருவதாக கயல் சொல்ல, அவர்களுக்கும் கயலை போல் மகிழ்வு உண்டானது.
இதில் ரத்தினம் தன்னிடம் உள்ள மொத்த ஏக்கரில் முக்கால் பகுதியை இம்முறையில் பயிர் செய்யப்போவதாக சொல்ல... கயலுக்கே ஆச்சரியம் தான்.
அந்த ஊரே இந்த விடயத்தில் ஒன்றாக நின்றனர்.
"சின்ன பொண்ணு, அவளே விவசாயத்துக்காக பாடுபடும்போது, காலம் காலமாக விவசாயம் பார்த்த நாமும் விரும்பி செய்வோம்" என்று விவசாயம் விடுத்து மற்ற தொழிலுக்கு போன நடுத்தர வயதினோர்... இனியும் இதில் கஷ்டப்பட முடியாதென்று விவசாயத்தை விட முடியாது விட்ட மூத்த தலைமுறையினரும் முன் வந்தனர்.
கயல் ஆசைப்பட்டது இதைத்தான்.
தன்னால் ஒரு நாலு பேராவது விவசாயம் செய்ய முன் வர வேண்டுமென ஆசைப்பட்டாள். ஆனால், அக்கிராம மக்கள் பெரும்பாலானோர் வந்தது கயலுக்கு பேருவகையை அள்ளித்தந்தது.
"ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா."
முதல் முறையாக தன்னுடைய மகிழ்வை வாய் வார்த்தையாக சிவாவிடம் பகிர்ந்து கொள்கிறாள்.
"உன் நல்ல மனசுக்கு நீ ஆசைப்பட்டது கண்டிப்பா நடக்கும் கயல்" என்ற சிவாவிற்கும் கயலின் மகிழ்வு ஒட்டிக்கொண்டது.
கயல் இல்லையென்றால் அவனில்லையே. அதனால் கயல் எதுவாக இருக்கிறாளோ அதுவாக சிவா பிரதிபலித்தான்.
"நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. நாளைக்கே மீன்பிடி வச்சுக்கலாம். இன்னைக்கு சாயங்காலம் சுற்றி இருக்கும் கிராமத்திலும் இங்கு மீன் பிடி நடக்குதுன்னு தண்டோரா போட சொல்லணும். நீங்க அதை கொஞ்சம் தண்டோரா போடும் மாரிமுத்துகிட்ட சொல்லிடுங்க." கயல் எப்போதும் இப்படித்தான். ஒன்று முடிந்தால் அடுத்து என்று முன்னே போய்க்கொண்டே இருப்பாள். கொஞ்ச நேரமும் சோம்பி உட்கார்ந்திட மாட்டாள்.
உழைப்பு மட்டுமே தன்னை உயர்த்தும் என்பதில் அதீத நம்பிக்கை உடையவள்.
"வியாபாரியிடம் சொல்லி சந்தையில் விற்பனை செய்யலாமே கயல். இப்போதுதான் நம்மவூர் ஏரியில் மீன்பிடி நடந்ததே. மக்களே நேரடியாக வந்து வாங்குவார்களா?" சிவா தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள்.
"வியாபரியை தேடிப்பிடித்து சந்தை படுத்துவது கொஞ்சம் அலைச்சலான வேலை. அதோடு முதல்முறை, நாம் இப்படி செய்வது இதனை விளம்பரப்படுத்துவதைப்போல் இருக்கும். அடுத்தடுத்து நாம் இதை செய்யும்போது, வியாபாரி நம்மைத்தேடி வருவாங்க" என்றாள்.
கயல் சொல்லுவது சிவாவுக்கும் சரியெனப்பட கயல் சொல்லியதை செயல்படுத்த சென்றான்.
அந்தவூர் பெரிய தனக்காரர் ரத்தினம் என்பதால் அவரிடம் சொல்லி, அவர்தான் தண்டோரா போட அனுமதி கொடுக்க வேண்டும். சிவா விடயத்தை சொல்லியதுமே மாரிமுத்துவை அழைத்து சொல்ல... அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் ரத்தினமே கொடுக்க... அதனை மறுத்த சிவா, "கயல் கொடுத்துவிட்டிருக்குங்க" என்றபடி சட்டை பையிலிருந்து பணத்தை எடுத்து மாரியிடம் கொடுத்தவன்... வந்த வேலை முடிந்ததெனக் கிளம்பிவிட்டான்.
******
சென்னையிலிருந்து கயலின் கிராமம் நோக்கி அந்த கார் பயணித்துக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட ஏழு மணி நேராமாக இல்லாத ஓர் கலக்கம், தயக்கம், வருத்தம் எல்லாம் அவர்களை தற்போது சூழ்ந்தது.
நான்கரை நேர பயணமாக சென்னை வந்து சேர்ந்த அங்கை, தேவராஜன் தம்பதியினர் அங்கிருக்கும் தங்களுடைய கெஸ்டவுஸிற்கு சென்று சேர, அடுத்த இரண்டு மணி நேரத்தில், இப்போதே கிராமத்திற்கு செல்ல வேண்டுமென அங்கை அடம் பிடிக்க, நாளை போக வேண்டிய அவர்களின் பயணம் இன்றே ஆரம்பமானது.
அண்ணன் உயிருடன் இல்லை. அண்ணியும் இல்லாமல் தன்னுடைய அண்ணனின் மக்கள் எப்படியெல்லாம் தவிக்கின்றனரோ என்ற எண்ணமே அங்கையை இருக்க விடவில்லை.
அவர்கள் தங்களை ஏற்கின்றனரோ இல்லையோ, ஒரே ஒருமுறை கண்ணால் கண்டு விட்டால் போதுமென்று உள்ளே மௌனமாக கதறியபடி இருந்தார் அங்கை.
பார்த்திபனுக்கு அழைத்து தாங்கள் வந்துவிட்டதையும், இன்றே கிராமத்திற்கு சென்று கொண்டிருப்பதையும் தெரிவித்த தேவராஜன் இருக்கையில் சாய்ந்து கொண்டார். அவரின் மனம் முழுக்க சொல்லவண்ணா துயரம் ஆழ்கடலென ஆர்பரித்திருந்தது.
தன் தவறால் தான் அழகரின் இறுதி காரியத்தில் கூட அவனின் முகம் காண தனக்கு கொடுத்து வைக்காது அந்த இறைவன் தன்னை தண்டித்துவிட்டதாக முழுதாய் நம்பினார். அந்த எண்ணம் அழகரின் மீது தவறு இருக்காதென காலம் கடந்த நம்பிக்கையை அவருள் விதைத்தது.
தேவராஜனால் அங்கையின் முகத்தை காண முடியவில்லை. விட்டால் இப்போதே அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து விடும். அக்கண்ணீரை காணும் சக்தியில்லாமல் மனைவியிடம் ஒரு வார்த்தைகூட பேசாது மௌனமாக இருந்தார்.
துக்கம் அங்கையின் நெஞ்சத்தை அடைப்பது போலிருந்தது.
"என் பசங்க ஏத்துபாங்களாங்க?"
உதடு துடிக்க தன் கையினை இறுக்கமாக பற்றியபடி வினவிய மனைவியின் முகத்தை ஏறிட்ட தேவராஜன்,
"என்ன நடந்தாலும், எல்லாம் நான் சரி செய்கிறேன் அங்கை" என்று மனைவிக்கு ஆறுதல் அளித்தார்.
என்ன முயன்றும் அங்கைக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. டிரைவர் இருப்பதால் சதமில்லாது கேவியபடி வந்தார்.
கயல் பேட்டியளித்த சேனலின் தனிப்பட்ட ஆப்பில் தேவராஜன் அதனை பார்த்திருந்தார். கயலின் நெகிழ்வான பேச்சில், 'தாங்கள் உடனிருந்திருந்தால் பிள்ளைகளுக்கு இத்தனை வேதனை இருந்திருக்காதோ' என்று அவரால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அந்த வீடியோவின் தாக்கத்தால் அப்படியே கண்களை மூடிக் கொண்டார்.
பிரதான சாலையிலிருந்து அவ்வூருக்கு செல்லும் கிளை சாலையில் வண்டி திரும்பியதும், அங்கையின் உடல் அதிர்ந்து இயல்புக்கு மீண்டது.
பழைய நினைவுகள் எல்லாம் ஆதி முதல் அந்தம் வரை இருவரின் மனதிலும் உலா வந்தன. சந்தோஷத் தருணங்களின் சுவடுகள் எத்தகைய இன்பத்தைக் கொடுத்ததோ அதைவிட பல மடங்கு வலியை, இங்கிருந்து சென்ற இறுதி நாட்கள் கொடுத்தன.
சென்று கொண்டிருந்த வண்டி சிறு ஆட்டத்தோடு நின்றது.
வண்டியின் குலுக்களில் நினைவு மீண்டு கண் திறந்த தேவராஜன், வண்டி செல்லாததை அறிந்து என்னவாயிற்று என்று வினவிட, வண்டியை திரும்ப திரும்ப ஸ்டார்ட் செய்ய முயற்சித்த டிரைவர், காரிலிருந்து கீழிறங்கிய வண்டியின் எஞ்சின் பகுதியை திறந்து எதையோ ஆராய்ந்தார்.
"சார் மெக்கானிக் வந்துதாங்க சரி செய்ய முடியும் என்ன பிரச்சனை தெரியலங்க" என்றார்.
அடுத்து இங்கிருந்து எப்படி செல்வது என்று தேவராஜன் யோசனையில் இருக்க...
"சார் ஒரு டாக்சி வருது லிப்ட் கேட்கட்டுமா?" என்க தேவராஜன் சரியென்றார்.
வந்து கொண்டிருந்த டாக்சி அவர்களை நெருங்கியதும் டிரைவர் கைகாட்டிட, நின்றது.
டிரைவர் பக்கம் வந்தவர், "பெரியவங்க ரெண்டு பேர்... வண்டி நின்னுபோச்சு கொஞ்சம் டிராப் பண்ணிட முடியுமா?" என்று தன்மையாகக் கேட்டார்.
"சவாரி இருக்குங்க" என்றுகூறிய டாக்சி டிரைவர், பின்னால் இருக்கையை திரும்பி பார்த்தார்.
அங்கு அமர்ந்திருந்த முகி, "இந்த பக்கம் வண்டிங்க வரது கஷ்டம் தான். அவங்களையும் கூப்பிடுக்கலாம். எங்களுக்கு பிரோப்ளேம் இல்லை" என்றான்.
அறுவடைக்கே முகி வருவதாக இருந்தது. ஆனால் அவனால் வார நாளில் விடுப்பு கிடைக்காததால், மீன் பிடிப்பிற்கு கண்டிப்பாக வந்துவிடுவதாக கயலிடம் சொல்லியிருந்தான். அதற்காகவே இன்று அவனின் வருகை.
முகி சம்மதம் சொல்லியதும், தேவராஜனும், அங்கையும் முகிக்கும் மலருக்கும் நன்றிகூறி டாக்சியில் ஏறிக்கொள்ள, அவர்களது டிரைவர் லக்கேஜினை கொண்டு வந்து பின்னால் டிக்கியில் வைத்தார்.
தேவராஜன் முன்னால் அமர்ந்திருக்க, அங்கை மலரின் பக்கத்தில் அமர்ந்தார். கார் பயணிக்கத் தொடங்கியது.
திடீரென தீவிரமாக மாறிய முகியின் முக மாற்றத்தில், "என்ன மாமா என்ன யோசனை?" என்ற மலரிடம்... "இவங்களை ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு மலர்" என்றார்.
"ஊருக்கு புதுசு போலிருக்கு மாமா. பார்க்கவே ரொம்ப பெரிய இடமா தெரியுது. இவுங்களை எங்க நீ பார்த்திருக்க போற?" என்று மலர் முகியின் யோசனையை தடை செய்தாள்.
"நீங்க அந்த ஊர் தானாம்மா?"
அமைதியாக வருவது அங்கையின் மனதை பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றிட, அழுகை வரும் போலிருந்தது. மூன்றாம் மனிதர்கள் முன்பு அழுதுவிடுவோமோ என்கிற பயத்தில் மனதினை மாற்றும் பொருட்டு அங்கை மலரிடம் பேச்சுக்கொடுத்தார்.
"ஆமாங்க."
"புதுசா கல்யாணம் ஆனவங்களா? பார்த்தாலே தெரியுது" என்ற அங்கையின் பேச்சிற்கு மலரிடம் சிறு வெட்கப் புன்னகை.
அவள் சொல்லாமலே அங்கை தான் கேட்டது சரியென புரிந்துகொண்டார்.
"தம்பி என்ன பண்றீங்க? பார்க்க ரொம்ப அமைதியா தெரியுறீங்க?"
முகியை திரும்பி பார்த்த தேவராஜன் இயல்பாகக் கேட்டிருந்தார். முகியின் முகம் மனதிற்கு நெருக்கமாகத் தோன்றியதால் இருக்கலாம்.
"டாக்டர் அங்கிள்" என்று பதில் சொல்லிய முகியின் முகம் மீண்டும் யோசனையில் மூழ்கியது.
தெரியாதவர்களிடம் சட்டென்று யாரெனக் கேட்டிட அவனுக்கு வரவில்லை. அதனால் அவர்கள் யாராக இருக்குமென்று உள்ளத்தோடு உழன்றபடி இருந்தான்.
அதனால் டிரைவர் தேவராஜனிடம் எந்தபக்கம் செல்ல வேண்டுமென்று கேட்டதையோ, அவர் சொல்லிய வழியையோ முகி கவனிக்கவில்லை என்றால், மலர் இன்னும் வெட்கத்திலிருந்து மீளாததால் அவளின் உலகம் வேறெங்கோ பயணித்துக்கொண்டிருக்க... அவர்களின் பேச்சு அவளின் கருத்தில் பதியவில்லை.
கயலின் வீட்டிற்கு முன் வண்டி சென்று நின்றது.
பெரிய வாய்க்கலை தாண்டாது சாலையிலேயே வண்டி நிற்க, நிகழ் திரும்பிய முகி வண்டியிலிருந்து கீழிறங்கி... "நான் வழி சொல்லவேயில்லையே! சரியா வந்துட்டீங்க" என்று டிரைவரிடம் கேட்டதோடு, வாலட்டிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்தவாறே... "இவங்களை அவங்க சொல்லும் இடத்தில் இறக்கிவிடுங்க" என்றவன் வாய்க்கலின் மீதிருந்த சிறு மர பாலத்தில் நடந்து செல்ல... மலர் அவன் பின் சென்றாள்.
முகி இறங்கியது முதல் பேசியதையெல்லாம் கேட்ட... அங்கைக்கும் தேவராஜிற்கும் புலன்கள் செயலிழந்த நிலை.
கயலை டிவியில் தெளிவாக பார்த்திருக்கின்றனர். ஆனால் முகியை எங்கும் பார்த்திரததால் அவன் யாரென்று அவர்களால் யூகிக்க முடியவில்லை.
"ஒருவேளை முகியாக இருக்குமோ!" இருவரும் ஒரு சேர கேட்டுக்கொண்டனர்.
"போனால் தெரிந்திடும் அங்கை" என்ற தேவராஜனும் மனைவியுடன் இறங்கிட டாக்சி கிளம்பியது. அது சென்ற புழுதி அடங்கும் வரை சாலையிலேயே நின்றிருந்தவர்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு கடினப்பட்டு கால்களை நகற்றி அடி வைத்தனர்.
ஒவ்வொரு அடிக்கும் இதயம் டொம் டொம்மென்று அதிர்ந்தது. அது தன் உறவுகளை எதிர்கொள்ளப்போகும் அச்சத்தின் வெளிப்பாடு.
"எதுவாக இருந்தாலும் சமாளித்துதான் ஆகணும் அங்கை" என்றவர் மனைவியின் கரம் பற்றி அழைத்துச் சென்றார்.
வாய்க்காலினை கடந்து வீட்டிற்கு முன்னிருந்த பெரிய சமதள பரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களின் பார்வை அவ்விடத்தையே அலசியது.
வீட்டைச் சுற்றி பசுமை மட்டுமே. அன்று போலவே இன்றும் அதன் பழமையை சுமந்து நின்றது.
பின்னபக்கமிருந்து வீட்டைச் சுற்றியவாறு பக்கவாட்டில் முன் பகுதிக்கு வந்த கயலுக்கு சற்று நேரத்திற்கு முன்பு உள் சென்ற முகி மற்றும் மலரின் வருகை தெரியவில்லை.
கையிலிருந்த களைக்கொத்தியை திண்ணையில் வைத்தவள் பின்பக்கமிருக்கும் தோட்டத்தை சீரமைத்திருப்பாள் போலும். ஏற்றி சொருகியிருந்த பாவாடையை இறக்கிவிட்டவள் அப்போதுதான் வீட்டின் முன் நின்றிருந்த இருவரையும் கவனித்தாள்.
தேவராஜனால் அங்கையை நிமிர்ந்து பார்த்திட முடியவில்லை. அழகரையே பார்ப்பதைப்போல் இருந்தது. அங்கைக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கயல் என்கிற அழைப்பு குரல்வளைத் தாண்டி வெளியேறிட சண்டித்தனம் செய்தது. கண்கள் குளம் கட்டி நிற்க... கயலென்று உதடுகள் மெல்ல அசைந்தன.
கயல் இருவரையும் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள்.
வீட்டிற்குள் சென்ற முகி உள்ளே கயல் இல்லையென்றதும்... பின்பக்கம் சென்றவன் அங்கும் இல்லையென முன்னால் வந்தான். அவன் பின்னால் சென்றபோதுதான் கயல் முன்பகுதிக்கு வந்திருந்தாள்.
உள்ளிருந்து வந்த முகிக்கு முதுகுக்காட்டி நின்ற கயலிடம்,
"கயல் இங்கு இருக்கியா? உன்னை வீடு முழுக்க தேடிட்டு வறேன்" என்றபடி வந்தவன் தங்களுக்கு முன் நின்றிருந்தவர்களை பார்த்து...
"நீங்கி போக வேண்டிய இடத்துக்கு போகலையா? டிரைவர் உங்களையும் இங்கேயே இறக்கிவிட்டுட்டாரா?" என்று கேட்டவன், "இங்கிருந்து ஊருக்குள் போக இன்னும் அரை கிலோமீட்டர் இருக்குமே! நீங்க யார் வீட்டுக்கு வந்தீங்க?" என்றான்.
இருவரும் அமைதியாகவே நின்றிட...
"இவங்க கார் வழியில் ரிப்பேராகி... நான் வந்த டாக்சியில் தான் கயல் வந்தாங்க. நம்மவூருக்கு தான் யார் வீட்டுக்கோ வந்திருக்காங்க" என்று கயலிடம் சொல்லியவனுக்கு மூவரின் அமைதியும் குழப்பத்தைக் கொடுத்தது. அதனை அவன் முகம் தெளிவாக பிரதிபலிக்கவும் செய்தது.
நிமிடங்கள் கடந்திட,
தன்னை மீட்டுக்கொண்ட கயல் பொங்கிய உணர்வுகளை அடக்கியவாறு... கண்ணிலிருந்து வழிந்த நீரை அவசரமாக துடைத்திட,
"ஏய் கயல், இப்போ எதுக்கு அழற" என்ற முகியை தவிர்த்தவளாக...
"உள்ள வாங்க அத்தை, மாமா நீங்களும் வாங்க" என்று வரவேற்றவளின் அழைப்பு இருவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திட... அவர்களின் அருகில் வந்தவள் அங்கையின் கையிலிருந்த பேக்கினை தான் வாங்கிக்கொண்டாள்.
முகியின் குழப்பம் அதிகரித்தது.
தம்பியை பார்த்தவள், "என்னடா பார்த்திட்டு நிக்குற மாமா கையிலிருக்கும் பையை வாங்கு" என்றாள்.
"ஆங்... ஹான்..." என்று திணறிய முகி வேகமாக வந்து, "பையை கொடுங்க மாமா" என்று தேவராஜனிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
"நாங்க யாருன்னு தெரியுதாப்பா?"
தேவராஜன் முகியிடம் கேட்டிட, அவனோ விழித்தவனாக தன் தமக்கையை பார்த்தான்.
கயல் மாமா என்று அடையாளப்படுத்தியதால் அவனும் மாமா என்று சொல்லியிருந்தானே தவிர அவர்களை அவனுக்குத் தெரியவில்லை.
அவனின் பார்வையை வைத்தே உணர்ந்து கொண்ட தேவராஜன், கயலை ஆதுரமாக நோக்கிட...
"எனக்கு நல்லாவே தெரியுது மாமா" என்றதோடு முகியிடம், "அங்கை அத்தை, தேவராஜன் மாமா" என்று அறிமுகம் செய்தாள்.
முகி ஆச்சர்யம் மேலோங்க பார்த்திட...
அங்கை கயலை வாரி அணைத்துக் கொண்டார்.
வீட்டில் மாட்டியிருக்கும் புகைப்படத்தை தினமும் சில நிமிடங்களாவது பார்த்தபடி நின்றிருக்கும் கயலுக்கு அவர்களை கண்டதும் அடையாளம் தெரிந்தது. இத்தனை வருடங்கள் கழித்து வந்தவர்களின் மீது கோபமென்று எதுவுமில்லையென்றாலும் சிறு வருத்தம் எழத்தான் செய்தது. ஆனால் தன் முகத்தில் அவ்வருத்தம் தெரிந்தால் அவர்கள் வருந்துவரென்று சாதாரணமாகவே அழைத்திருந்தாலும் அவளுக்குள்ளிருந்த அழகரின் ஒற்றைத் தங்கை, தன் தந்தையின் நண்பர் என்கிற பாசம் தானாக எழத்தான் செய்தது.
அங்கையின் அணைப்பிலிருந்த கயலால் அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாது கண்களில் திரண்ட ஆனந்த கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது.
"இப்போதான் உங்களுக்கு எங்க நினைவு வந்ததா அத்தை?"
கேட்கக்கூடாதென்றுதான் நினைத்தால், ஆனால் மனதில் தங்கிய நீண்ட வருட வருத்தம் அவளையுமறியாது வெளி வந்திருந்தது.
கயலின் ஒற்றை கேள்வி...
தங்களை அவள் எந்தளவிற்கு தேடியிருக்கிறாள் என்பதை தேவராஜனுக்கும், அங்கைக்கும் உணர்த்திட தங்களின் பெரிய தவறு புரிந்து மன்னிப்பு கேட்கக்கூட முடியாதிருக்க... அங்கை கண்ணீரோடு கயலின் நெற்றில் முத்தம் பதித்து,
"இந்த அத்தையை மன்னிச்சிடுடா" என்று கயலின் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து அழுகையில் கரைந்தார்.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top