JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Siranjeevitham - Episode 15

JLine

Moderator
Staff member
சிரஞ்சீவிதம்

அத்தியாயம் 15

நெடு நெடுவென்று ஏறக்குறைய ஏழு அடி உயரத்துடன் மிடுக்காக நடந்து கொண்டிருந்த மாயன் திடுமெனப் பதுங்க, அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஜீவனுக்கு மாயனின் அசாத்திய உயரமும், மறைந்து ஒளியும் அவனது செய்கையும் வித்தியாசமாகப் பட்டது.

பதுங்கிப் பாய்வதும், துப்புத் துலக்குவதும், எதிர்பாராமல் உருவாகும் அசந்தர்ப்பமான சூழ்நிலைகளைப் புத்திசாலித்தனமாகக் கையாளும் வித்தைகளும் தன் இரத்தத்தில் ஊறியது போல் ஜீவனின் மூளை வேலை செய்யத் துவங்கியது.

‘யார் இவன்? வானத்தை இடித்துவிடுவது மாதிரியான உயரத்துடன் இருக்கான்.. இதுல ரொம்ப நேரமா இவளைப் பின் தொடர்ந்து போற மாதிரியும் தெரியுது, ஆனால் ஏதோ வேற உலகத்துல இருக்கிற மாதிரி எதையும் உணராதவளாக அந்தப் பொண்ணு பாட்டுக்கு நடந்து போயிட்டு இருக்காளே!’

வியந்தவாறே தானும் பதுங்கத் துவங்கியவனாய், தான் இருப்பது பிரபஞ்சத்தின் எந்தப் பகுதி என்பதை அறியாவிட்டாலும் ஏதோ பழகிய இடம் போல் செயல்படத் துவங்கியவன், மாயனே அறியாது அஹானாவின் இடத்தை அடைந்தான்.

இலேசாக இருள் படர்ந்திருக்கும் ஒரு திருப்பத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டவனாக அவள் எதிர்பாராதவண்ணம் அவள் அருகில் வந்தவன் அவளது வாயைப் பொத்தி மறைவான இடத்திற்குக் கொண்டு செல்ல, திடுமெனத் தன் பார்வையில் இருந்து மறைந்துவிட்ட அஹானாவைக் காணாது ஒரு கணம் திடுக்கிட்டான் மாயன்.

ஏற்கனவே மன உளைச்சலில் சிக்கியிருந்தவள் தன் வாயைப் பொத்தியவாறே தன்னை இழுத்து ஒரு தூணிற்குப் பின் சென்று மறைந்து கொண்டிருக்கும் ஜீவனின் செய்கையில் அதிர்ந்தவளாய், அவன் கையைத் தன் முகத்தில் இருந்து வேகமாக எடுக்க விழைய, அப்பொழுது தான் அவனது முகத்தைப் பார்த்தாள்.

‘இவன்.. ஹாஸ்பிட்டலில் பார்த்தோமே.. அவனா? அவன் எப்படி இங்க வந்தான்? என்னை ரொம்ப நாளா ஃபாலோ பண்ணிட்டு இருக்கானா? அதான் அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் வந்து என்னிடம் பேச்சுக் கொடுத்தானா?’

விநாடிகளுக்குள் அவனை அடையாளம் கண்டு கொண்டவளின் மனம் நிமிடத்துக்கும் கீழான நேரத்தில் இத்தனை கேள்விகளை எண்ணி முடித்திருக்க, தன்னிடம் இருந்து விடுதலைப் பெற அவள் எடுக்கும் முயற்சிகளை அலட்சியமாய் அடக்கிய ஜீவன், தலையைச் சற்றே அசைத்து சற்று மங்கலான வெளிச்சம் உள்ளப் பகுதியை சுட்டிக் காட்டினான்.

அங்கு மாயன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே ஒரு சில நொடிகள் நின்றவன் பின் விடுவிடுவென்று நடந்து அடர்ந்த இருளுக்குள் மறைந்து போனான்.

அவனைக் கண்டதும் திக்கென்று ஆனது அஹானாவிற்கு.

"இவன்.."

இன்னமும் ஜீவனின் கரத்தால் அடைக்கப்பட்டிருக்கும் வாயைத் திறக்க முடியாது மெள்ளத் திறந்து இரகசியமாய் அவள் முனக, தன் கையை அழுந்த மூடியிருந்த அவளது இதழ்களில் இருந்து எடுத்த ஜீவன்,

“இவனே தான்.. நீ காரில் இருந்து இறங்கியதுல இருந்து உன்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான், ஆனால் நீ கவனிக்காமல் நடந்து போயிட்டே இருக்க.. நம்ம பின்னாடி யார் வர்றாங்கன்னுக் கவனிக்காமல் போறது எவ்வளவு ஆபத்துன்னு தெரியாதா? அப்படி என்ன வேற ஏதோ ஒரு உலகத்துல இருக்கிற மாதிரி ஆழ்ந்த சிந்தனை வேற..” என்றான் கிசுகிசுக்கும் சாரீரத்தில் அவளைக் கடிந்து கொள்ளும் தொனியில்.

ஜீவனின் கேள்விக்குப் பதில் அளிக்காது புருவங்களைச் சுருக்கியவளாய் அவனை ஒரு சில கணங்கள் பார்த்தவள்,

“அப்ப நீங்க யாரு? நீங்களும் என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தீங்களா, என்ன?” என்றாள் மெல்லிய குரலில்.

இதே கேள்வியைத் தானே கடந்த சில நாட்களாகத் தன்னையே கேட்டுக் கொண்டிருக்கின்றான் அவன்.

தன்னைப் பற்றித்தான் அவனுக்குத் தெரியவில்லையே ஒழிய, மற்ற அனைத்தையுமே அவனது மூளை ஏதோ ஒரு ஆசானைப் போன்று அவனே உணராத வகையில் அவனுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு தான் இருந்தது.

“நான் யாருன்னு அப்புறமா சொல்றேன்.. முதல்ல அவன் எங்கன்னுப் பார்ப்போம்... உன்னைத்தான் அவன் ஃபாலோ பண்ணிட்டே வந்தான், நான் உன்னைப் பிடிச்சு இழுத்துட்டு மறைஞ்சதும் கொஞ்ச நேரம் உன்னைத் தேடிட்டு இருந்தவன் பிறகு என்ன நினைச்சானோ வேறு பக்கம் நடந்து போயிட்டான்..” என்றவன் அவளது கரத்தை இறுக்கப் பற்றியவாறே இருள் பகுதியை விட்டு மெதுவாக வெளியே வர, அதற்குள் ஆராய்ச்சி மையத்திற்குள் நுழைந்திருந்தான் மாயன்.

“ஐயோ! அவன் எங்கப் போனான்? திடீர்னு டிஸப்பியர் ஆகிட்டானே?”

“நான் பார்த்த வரைக்கும் இப்படித் திடீர் திடீர்னு மறைஞ்சு போறது உங்க நாட்டில் ரொம்பச் சகஜம் போல இருக்கு..”

“எங்க நாடா?”

“ஆமா, ஆனால் என்ன நாடுன்னு தான் எனக்குத் தெரியலை..”

“ம்ப்ச்.. என்ன சொல்றீங்க நீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலை.. முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க?”

“அது தெரிஞ்சிருந்தா நான் ஏன் இப்படிப் பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கப் போறேன்.. சரி, முதல்ல அவன் எங்க போனான்னு கண்டுப்பிடிப்போம், பிறகு மற்றதைப் பார்க்கலாம்..”

கூறியவாறே ஜீவன் நடக்கத் துவங்க, அவனது பேச்சில் குழம்பிப் போனாலும் வேறு வழியின்றி அவனைப் பின் தொடர்ந்தவளுக்கு, இந்த 34 ஏக்கர் பரப்பளவு கொண்ட கட்டிடத்திற்குள் எங்குச் சென்று மாயனைக் கண்டுப்பிடிப்பது என்ற பெரும் சந்தேகம் தான் மிஞ்சியது.

“இது ரொம்பப் பெரிய பில்டிங்.. எங்கன்னு அவனைப் போய்த் தேடுறது?”

“எனக்குத் தெரிஞ்சு உங்க நாட்டிலேயே இது தான் நம்பர் ஒன் ரிசேர்ச் செண்டர் ஆக இருக்கணும், அப்படின்னா எத்தனையோ பாதுகாப்புகள் செய்யப் பட்டிருக்கணும்.. அதனால் கண்டிப்பா அவனுக்கு எந்த ஒரு கட்டிடத்திற்குள்ளும் நுழையறது அவ்வளவு ஈஸியா இருக்காது தானே?”

அவனது கேள்வியில் திடுக்கிட்டவளாய் திகைத்துப் போய் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

‘எங்க நாட்டிலா? நாடு அப்படின்னா? திரும்பத் திரும்ப அதே மாதிரியே பேசுறாரே, அப்போ இவர் யார்? எங்கு இருந்து வந்திருக்கிறார்?’

ஜீவனைப் பற்றிய இந்தச் சிந்தனைகள் தோன்றிய மறுவிநாடியே ஏதோ புரிவது போல் இருக்க, அவன் யாராக இருக்கும் என்று ஓரளவிற்கு உணர்ந்துக் கொண்டதில், அதிர்ச்சியில் அவளது மனம் தடம் புரள ஆரம்பித்தது.

ஆனால் அதனை வெளியில் கூறாது,

“இது ஆய்வகங்கள், பிரேத பரிசோதனை அறைகள், ஆராய்ச்சி மற்றும் அறுவை சிகிச்சை அறைகளுக்கான கட்டிட ஆய்வகங்கள், அதனுடன் தொடர்புடைய தளவாட இடங்கள் என்று தனித்தனியாகப் பிரிச்சுக் கட்டப் பட்டிருக்கும் கட்டிடம்.. இந்த உலகத்திலேயே நம்பர் ஒன் ரிசேர்ச் செண்டருன்னு பெயர் எடுத்திருக்கும் கட்டிடம் தான் இது.. புதுமையான தொழில்நுட்பங்களை யூஸ் பண்ணி இதற்குள் ஈஸியா உள்ள நுழைய முடியாத அளவுக்குத் தீவிர பாதுகாப்புகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கு தான்.. ஆனால் அதெல்லாம் இவனுக்குச் சாதாரணம்..” என்றாள்.

“எனக்குப் புரியலை.. அவ்வளவு ஈஸியா இங்க நுழைய முடியும்னா அப்ப அவன் யாரு? உனக்கு ஏற்கனவே அறிமுகமானவனா? தெரிந்து தான் உன்னைப் பின் தொடர்ந்தானா?”

“இந்தக் கேள்விக்கெல்லாம் பிறகு பதில் சொல்றேன், முதலில் அவன் எங்க இருக்கான்னு தெரியணும்..”

“அவன் உன்னைத் தேடி தான் வந்திருக்கான்னா கண்டிப்பா நீ போக வேண்டிய இடத்துக்குத் தான் அவன் போயிருப்பான்... என்னை அங்க கூட்டிட்டுப் போ..”

“நீங்க யாருன்னே எனக்குத் தெரியலை.. எப்படிச் செக்யூர்ட் ப்ளேஸுக்கு உங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்றீங்க?”

“அடியேய்! என் பொறுமையைச் சோதிக்காதே.. ஏற்கனவே இந்த இடத்தைக் கண்டு பிடிக்கிறதுக்கு நான் பட்டக் கஷ்டத்தில் என் மூளையே வெடிச்சு சிதறிடும் போல இருக்கு.. இதுல நீ வேற திரும்பத் திரும்ப நான் யாருங்கிற கேள்வியையே கேட்டு கேட்டு குடைஞ்சிட்டு இருக்காத.. ஆகாயத்தையே இடிச்சிடற மாதிரி நெடுநெடுன்னு உயரமா இருக்கிற இவன், நான் உன் வாயை மூடி மறைவிடத்துக்குக் கூட்டிட்டு வந்ததைக் கவனிக்காததே பெரிசா தெரியுது எனக்கு.. இதுல இங்கயே நின்னு பேசிட்டு இருந்தோம் அவ்வளவு தான்.. அதனால் அவனை முதல்ல கண்டுப்பிடிப்போம்.. பிறகு எல்லாத்தையும் தெளிவா பேச்சிக்கலாம், வா..”

கூறியவன் அவளது கரத்தை இறுக்கப் பற்றியவாறே அவள் காட்டும் திசையில் அந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் மரபியல் ஆராய்ச்சி ஆய்வகத்தினை நோக்கி நடக்க, அவர்கள் ஆய்வகத்தினை நெருங்கிய வேளை அந்தக் கட்டிடத்திற்குள் இருந்து வீல்லென்ற அலறல் சத்தம் செவிகளைக் கிழிப்பது போல் கேட்டது.

அந்த மரண ஓலம் அஹானாவை நடுநடுங்கச் செய்தது.

“ஐயோ! அது ஒலிவியாவோட குரல்.. இந்நேரத்துல அவ இங்க என்ன பண்றா?”

பிடித்திருந்த ஜீவனின் கரத்தை உதற முயற்சித்தவளாக மறு கரத்தினைக் கொண்டு ஆய்வக கட்டிடத்தின் அருகில் இருக்கும் தொடுதிரையில் கிறுக்கியவளாய் அறைக்கதவை படபடக்கும் தேகத்துடன் நடுங்கியவாறே திறக்க எத்தனிக்க, அவ்வறைக்குள் நின்றிருந்த மாயனின் முகம் கதவின் புறம் கேட்ட ஓசையில், சப்தம் வந்த திசையை நோக்கி நிதானமாகத் திரும்பியது.

மனத்திற்குள் எதுவோ எச்சரிக்கை உணர்வினை உருவாக்க, பிடித்திருந்த கையில் மேலும் இறுக்கத்தைக் கூட்டிய ஜீவன்,

"அஹானா, இப்போ ஆய்வகத்துக்குள்ள போவது புத்திசாலித்தனம் இல்லை, இங்க வா..” என்றவாறே விடுவிடுவென்று அந்தக் கட்டிடத்தின் மறு பக்கத்திற்கு அவளை இழுத்துக் கொண்டு ஓடியவன், “இந்தப் பில்டிங் உள்ள போயிடலாம், இதைத் திற..” எனவும்,

“இங்க எல்லாம் போறதுக்கு எனக்குப் பெர்மிஷன் இல்லை.. அந்தக் கட்டிடத்தில் இருக்கும் லேபாரட்டரிக்குள்ளவும், ரிசேர்ச் சம்பந்தமான இடங்களுக்குள்ள போறதுக்கு மட்டும் தான் எனக்குப் பெர்மிஷன் இருக்கு..” என்ற நேரம் அவர்கள் இருந்த பகுதியை தெளிவாக அறிந்து கொண்டது போல் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் மாயன்.

“ம்ப்ச்.. அஹானா, அவன் இங்க தான் வந்துட்டு இருக்கான்.. எங்கேயாவது நாம் மறையலைன்னா அந்தப் பொண்ணு நிலைமை தான் நமக்கும்.. வேற எந்தப் பில்டிங்குக்குள்ள போறதுக்கு உனக்குப் பெர்மிஷன் இருக்கோ அங்க போ.."

அவன் கூறி முடிக்கவில்லை, இப்பொழுது அவனை இழுத்துக் கொண்டு செல்வது அஹானாவின் முறையானது.

எங்கெங்கோ சுற்றி சுற்றி அவனைப் பிடித்துக் கொண்டு ஓடியவள் மறையும் வழியறியாதுத் திகைக்க, “அஹானா, எப்படியாவது அதே கட்டிடத்திற்குள், ஐ மீன் அந்த ரிசேர்ச் லெபாரட்டரிக்கு போக முடியுமா? அதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா?” என்றான் ஜீவன்.

“ம்ம், இருக்கு..” என்றவளாய் மூச்சிறைக்க மீண்டும் ஓடியவள் அடுத்தச் சில மணித்துளிகளில் ஒலிவியா கொலை செய்யப்பட்டுக் கிடந்த அதே ஆய்வகத்தை அடைந்தாள்.

மீண்டும் அந்தப் பெருங்கட்டிடத்தின் அருகில் இருந்த இயந்திர தொடுதிரையில் எதனையோ கோடுகளாய் வரைந்தவள் அறைக்குள் நுழைய, அங்கு ரத்த வெள்ளத்தின் நடுவில், உயிரற்ற சடலங்களாய் கீழே கிடந்தவர்களைக் கண்டதில் சகலமும் ஒடுங்கிப் போனது அஹானாவிற்கு.

“ஐயோ! என்னது இது?? என்னை மட்டும் தான் நோயல் வரச் சொன்னாருன்னு நினைச்சேன், இதென்ன எல்லாருமே இங்க வந்துருக்காங்க.. ஹில்டன் எப்போ இங்க வந்தார்? எப்படி இது நடந்தது?”

நெஞ்சம் வெடிக்கக் கதறி அலறத் துவங்கியவளின் வாயை மீண்டும் கெட்டியாக மூடியவன், முகம் இறுக சுற்றும் முற்றும் விழிகளால் துலாவியவனாய், “அழறதுக்கு இது நேரம் இல்லை அஹானா? அவன் எப்போ வேணாலும் இங்க வரலாம், வா..” என்றவாறே மறைவான ஒரு இடத்தினைத் தேட,

ஆங்காங்கே இருக்கைகளும் சிறு மேஜைகளும் மட்டுமாய்ப் போடப்பட்டிருந்த அந்தப் பரந்து விரிந்திருந்த இடத்தில் மறைவதற்கான இடமே இல்லாதுப் போக, அதிர்ந்தவனாய் பெருமூச்சு விட்டவாறே மீண்டும் விழிகளால் துலாவிய நேரம் ஜீவன் எதிர் நோக்கியது போல் விட்டத்தைத் தொட்டு நிற்கும் பெரும் தூண் ஒன்று கண்ணில் பட்டது.

ஓட்டமும் நடையுமாக அவளையும் இழுத்துக் கொண்டு சென்றவன் அவளுடன் இணைந்து தூணிற்குப் பின் பதுங்கினான்.

விநாடிகள் நிமிடங்களாகக் கடந்தன.

ஏறக்குறைய பத்து நிமிடங்களாக அங்கு மறைந்தவாறே அமர்ந்திருந்தவர்களில் ஜீவனின் புத்தி இது போன்ற தருணங்களுக்கு நன்கு பழகியது போல் விழிப்புணர்வுடன் எதற்கும் தயாராக இருக்க, மாயன் அந்த ஆய்வகத்தின் பக்கம் மீண்டும் வராதுப் போனதில் அஹானாவின் உள்ளத்திற்குள்ளோ சற்றே நிம்மதி படர்ந்தது என்றே சொல்லலாம்.

ஆனால் அந்தப் பத்து நிமிட நேரமும் அவளது விழிகளில் இருந்து வழியும் கண்ணீர் துளிகள் மட்டும் நிற்கவே இல்லை.

அவளின் மெல்லிய விசும்பல் ஓசையில் அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவளது அழுகை மனதைப் பிசைந்தது.

“எதுக்கு இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பண்ணணும், இப்போ இத்தனை உயிர்களை இழக்கணும்? இப்படி உயிருக்குப் பயந்துக்கிட்டு ஓடி ஒளியணும்.. இதெல்லாம் தேவையா?”

வினவியவனின் கையை வெடுக்கென்று உதறியவள் மாயன் வரும் சுவடே தெரியாதுப் போனதில் அவன் சென்றுவிட்டதாய் எண்ணி எழுந்து நிற்க,

“அவன் இங்க எங்க வேணாலும் இருக்கலாம், கொஞ்சம் பொறுமையா இரு அஹானா.." என்ற கணம் அஹானாவின் பொறுமை எல்லையைத் தாண்டிக் கடக்கத் துவங்கியது.

“ம்ம்ம்… இப்படியே உட்கார்ந்து இருந்தால் அவன் எல்லா இடத்திலேயும் தேடிட்டுக் கடைசியா பொறுமையா இங்க வந்து நம்ம பிடிச்சிப்பான்.. அவனை என்ன மனுஷன்னு நினைச்சீங்களா? அவன் நம்மைப் பிடிச்சா என்னா ஆகும்னு தெரியுமா? இதோ இவங்க நிலைமை தான்.."

"இவ்வளவு விவரமா பேச தெரியுதுல்ல, அவன் உன்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தானே அப்ப மட்டும் எங்க போச்சு இந்த விவரம்? என்னவோ பார்க்ல நடந்து போற மாதிரி கேஷுவலா போயிட்டே இருக்க.. நான் மட்டும் வரலைன்னா உன் கதி.."

"சரி, அதுக்காக இங்கேயே இருந்தோம்னா அப்ப மட்டும் நம்ம நிலைமை மாறப் போகுதா?"

“நீ சொல்றதும் சரி தான், அவனைக் கண்டுப்பிடிக்க ஏதாவது வழியிருக்கான்னு சொல்லு..”

“இருக்கு.. இங்கேயே இப்படியே உட்கார்ந்தால் அதை எப்படி நான் சொல்றது.. வாங்க..”

வெடுக்கென்று கூறியவாறே விடுவிடுவென்று நடந்தவளாய் அந்த ஆய்வகத்தின் மற்றொரு அறைக்குள் நுழைந்தவள், அங்குத் தண்ணீரைப் போன்று மிதந்து கொண்டிருந்த திரையில் சில எண்களையும் கோடுகளையும் விரல்களால் வரைய, அந்த ஆராய்ச்சி நிலையத்தின் மொத்த வரைபடமே காணொளிக் காட்சியாக அந்த மகாப் பெரிய திரையில் பளபளவென்று மிதந்தவாறே ஓளிரத் துவங்கியது.

“இது என்ன? ஏதோ தண்ணீரைப் போல எல்லாமே மிதக்குது.. கடவுளே! இன்னும் கொஞ்ச நாள் இந்தப் பேர் தெரியாத நாட்டில் நான் இருந்தேன், தெரு தெருவா பித்துப்பிடிச்சு அலையத் தான் போறேன்..”

தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்தவள் ஏதோ ஒரு அர்த்தத்துடன் அவனது கண்களைக் கூர்ந்து நோக்க,

“ம்ப்ச்.. தயவு செய்து நான் பேசுறதைக் கண்டுக்காத.. என் நிலைமை அப்படி, அதை விளக்கிச் சொல்ற நிலைமையில் இப்போ நாம இல்லை.. முதல்ல அவன் எங்க இருக்கான்னுக் கண்டு பிடி.." எனும் போதே அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் நிற்க வைக்கப்பட்டிருந்த தானியங்கி காருக்குள், ஏதோ இரகசிய பாஷையில் பேசிக் கொண்டே ஏறிக் கொண்டிருந்தான் மாயன்.

அக்காட்சியும் அவர்களுக்கு எதிரில் இருந்த நீர்த்திரையில் தெளிவாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“அவன் இங்க இருந்து கிளம்பற மாதிரி தெரியுது அஹானா..”

“யெஸ், அவன் யார் கிட்டேயோ பேசிட்டே போறான், இங்க இருந்து கிளம்பறதுக்கு அவனுக்கு ஆர்டர் வந்துருக்கணும்னு நினைக்கிறேன்...”

“எப்படி, உன்னைத் தேடாமல் அவன் போறான்? யார் அவனுக்கு ஆர்டர் கொடுத்திருப்பாங்க?”

“அது..." என்று ஏதோ கூற வந்தவள் இவன் யார் என்றே தெரியாதபட்சத்தில் எதனையும் ஆராயாமல் இவனிடம் பேசிவிடக் கூடாது என்ற முடிவுடன் அந்த ஆராய்ச்சியின் பங்குத்தாரரான 'லெவின் சயின்ஸ் பார்க்' நிறுவனத்தின் அதிபர் லெவினை அழைத்து விவரங்களைக் கூற ஆரம்பிக்க, ஹில்டன், நோயல், கெவின், ஒலிவியா, லோகன், யாதவ் மற்றும் மியாவின் படு கொலைகள் அந்தப் பிரபஞ்சத்தையே ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டது.

********************************

உருண்டை வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த, பெருங்கடலின் மேற்பரப்பில் இருந்து ஏறக்குறைய 3000 மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்தக்கடல் கட்டிடத்தின் இரண்டாவது தளம்.

சீபாட் [seapod] வழியாகப் பயணப்படுபவர்கள் புறப்படுவதற்கும், வருகைத் தருவதற்கும் ஏற்ற வகையில் கட்டப்பட்டிருந்த இரண்டாவது தளத்திற்கு, சுழல் சுழலாக அமைக்கப்பட்டிருந்த பாதையின் வழியாக உருண்டை வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த சீபாட் மூலம் வந்திறங்கினான் மாயன்.

மனிதனையும் இயந்திரங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட, மனித தோல் கொண்டு போர்த்தப்பட்ட சைபார்க், மனித நேயம் என்பதையே அற்ற அந்த இயந்திர மனிதன்.

தனக்காகக் காத்திருந்த டானியலின் முன் வந்து நின்றவன் அமைதியாக இருக்க, அவனை வினாடிகள் சில பார்த்த டானியல்,

“அவன் பெயர் ஜீவன்.. சைபார்கோ அல்லது ரோபோவோ கிடையாது, சுத்தமான மனிதன்.. இன்னும் சொல்லப் போனால் அவன் இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த மனிதனே அல்ல.. இந்த உலகத்துக்கு ஏற்றவாறு சிறிதே மாற்றியமைக்கப்பட்ட மூளையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மனிதன், வேற்றுலக ஜீவராசி [Alien].. அவன் இங்கு வந்து சரியா பதினான்கு நாட்கள், ஐந்து மணி நேரங்கள், நாற்பத்தி மூன்று நிமிடங்கள், ஐம்பத்தி ஐந்து விநாடிகள், இருபது நுண்ணொடிகள் ஆகியிருக்கு.." என்றதுமே மாயனுக்குப் புரிந்து போனது.

ஏன் அஹானாவையும் அவளது கருவையும் அழிக்காவிட்டாலும் பரவாயில்லை, உடனடியாகத் திரும்பி வருமாறு தன்னை டானியல் பணித்திருந்தான் என்பது இப்பொழுது அந்த இயந்திர மனிதனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“இப்போ புரியுதா, ஏன் உன்னால் அவனை நெருங்க முடியலைன்னு.. அஹானாவை அவன் காப்பாற்றும் போது ஏன் உன் கண்கள் மறைக்கப்பட்டதுன்னு? ஏன் உடனடியா அங்கு இருந்து திரும்பி வான்னு நான் சொன்னேன்னு.. நீ இது வரை பார்த்த மனிதர்கள் போலவோ அல்லது இயந்திரங்கள் போலவோ அல்ல அவன்.."

"உங்களுடைய படைப்புக்களிலேயே மிகுந்த சக்தி படைத்த இயந்திர மனிதன் நான் தான்னு எப்பவும் சொல்வீங்க, ஆனால் என்னையே ஏமாற்றி, என் கண்களில் இருந்து தப்பித்து இருக்கும் பெரும் சக்தி படைத்த மனிதனா அவன்? அது எப்படிச் சாத்தியம்?"

"பெரும் சக்தின்னு சொல்ல முடியாது மாயன்.. ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல் அவன் இந்த உலகத்தைச் சார்ந்தவன் இல்லை.. ஆனால் நீ இந்த உலகத்தைச் சார்ந்த மனிதர்களின் மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்டவன்.. உங்கள் இருவருக்கும் வேறு பாடுகள் இருக்கு.. அதை நான் கண்டுப்பிடிக்கணும், அதுக்கு அவன் எனக்குத் தேவை.. ஆனால் உன்னால் இப்போ அவனைப் பிடிக்க முடியாது, அதில் சிக்கல்கள் இருக்கலாம், அதனால் தான் உன்னை உடனடியா இங்க வரவழைச்சேன்..”

கூறிய டானியலின் முகம் அவனுக்கு எதிரில் இருந்த திரையை நோக்கித் திரும்ப, மருத்துவமனையில் படுத்திருந்தது முதல் அஹானாவைக் காப்பாற்றியது வரையிலான ஜீவனைச் சேர்ந்த காட்சிகள் காணொளிகளாகத் தோன்றிக் கொண்டே இருக்க, ஆனால் எப்படித் தோண்டியும் மருத்துவமனைக்கு ஜீவன் வந்து சேர்ந்த காட்சியோ, சம்பவங்களோ டானியலின் பார்வைக்கு முன் வரவில்லை.

ஆயினும் அதனை அசட்டை செய்தவனாய் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பதையும், ஜீவனால் தான் அடையப் போகும் பெரிய வெற்றியையும் நினைத்ததில், அந்தப் பிரபஞ்சத்தில் இரண்டாவது இடத்தை நிரப்பியிருக்கும் 'ஆர்த்தர் பயோம்' என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிபனின் முகம் வெற்றிக்களிப்பில் மின்னியது.

"இந்த ஜீவனை வைச்சு என்ன செய்யப் போறீங்க?"

"இவன் ஒரு ஏலியன் [Alien] மாயன்.. இது வரை நம்ம பிரபஞ்சத்து மனிதர்களைக் கொண்டு தான் விஞ்ஞானிகள் இயந்திரங்களை உருவாக்கி இருக்கின்றார்கள்.. ஆனால் இது வரை வேற்றுலகத்து ஜீவராசியை வைத்து இயந்திர மனிதர்களை ஒருவரும் உருவாக்கியது இல்லை.. ஆகையால் இவனே எனது புதிய ஆராய்ச்சிக்கு வித்து.."

"அப்படின்னா அஹானா? என்ன தான் நோயலையும் ஹில்டனையும் நான் கொலை செய்துவிட்டாலும், இன்னமும் லெவின் உயிரோடு தான் இருக்கான்.. அவனும், அஹானாவும் உயிரோடு இருக்கும் வரை உங்களால் மரபணு ஆராய்ச்சியில் ஜெயிக்க முடியாதே.”

“யெஸ், ஆனால் அஹானாவே இந்த ஜீவனை நம்மிடத்துக்குக் கொண்டு வருமாறு செய்கின்றேன்.. ஒரு சேர இருவரும் என்னிடம் வந்து அகப்பட்டுக் கொள்ளப் போறாங்க.. அதற்குப் பிறகு, இந்த டானியல் யாருன்னு இந்தப் பிரபஞ்சம் மட்டும் அல்ல, இன்னும் எத்தனையோ பிரபஞ்சங்களுக்கு நிரூபிக்கிறேன்.. இந்த ஜீவன் மூலமாகவே அவனுடைய உலகத்துக்குள் என் இயந்திரங்களையும், இயந்திர மனிதர்களையும் அனுப்பி அந்த உலகத்தையும் என் கைக்குள் அகப்படுத்த போகின்றேன்.. ஆனால் அதற்கு முன் அவன் எந்த உலகத்தில் இருந்து இந்தப் பிரபஞ்சத்திற்குள் வந்தான்னு நான் கண்டுப்பிடிக்கணும்.."

கூறிய டானியல் தனது கடல் வீட்டிற்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சி அரங்கத்திற்குள் நுழைந்தவன், அந்நாள் வரை அவன் உருவாக்கியிருந்த நூற்றுக்கணக்கான இயந்திரங்களைக் குடைந்தெடுத்து பார்த்தும் ஜீவனின் ஆதிமூலத்தை மட்டும் அவனால் கண்டறிய முடியவில்லை.

ஆயினும் ஜீவனால் அவன் அடையப் போகும் பெருமையையும் புகழையும் எண்ணியவன் தனது திட்டங்களை வெகு நேர்த்தியாகத் தீட்டத் துவங்கினான்.

****************************

“You have to help me Ahaana.. ப்ளீஸ்.. என்னால் இப்படியே இருக்க முடியாது.. என்ன நடக்குது இங்க? நான் எங்க இருக்கேன்? என்னைப் பற்றித் தெரிஞ்சிக்காமல் இனி என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது, please help me.."

ஏறக்குறையக் கெஞ்சத் துவங்கியனை சற்றுப் பொறுமாறு ஆசுவாசப்படுத்தியவள் தங்களது ஆராய்ச்சியின் கூட்டாளியான லெவின் சயின்ஸ் பார்க் நிறுவனத்தின் அதிபர் லெவினை சந்திக்கும் முயற்சியில் இறங்க, அவள் கூற கூற ஏதோ புரிவது போல் இருந்ததில் ஜீவனையும் உடன் அழைத்து வருமாறு பணித்தார் லெவின்.

“என்னால் ஓரளவுக்கு எல்லாத்தையும் கணிக்க முடியுது லெவின். ஆனால் எப்படி இத்தனை கட்டுப்பாடுகள், இயந்திரங்கள், பாதுகாப்பு அமைப்புக்களையும் மீறி மாயனால் நம்ம இடத்துக்குள்ள நுழைய முடிஞ்சது?"

கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும் அஹானாவிற்குப் பதிலளிக்காது மாறாக லெவினின் பார்வை தன் மீதே நிலைத்து நிற்க, அவரது பார்வையில் இருப்பது வியப்பா, ஆராய்ச்சியா, கலக்கமா என்பதைக் கணிக்க முடியாது குழம்பிப் போனான் ஜீவன்.

அவரது வியப்புப் புரிந்தும் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து பேசத் துவங்கினாள் அஹானா.

“இது மாதிரியான சந்தர்ப்பங்களில் நம்ம ஆய்வகத்தைப் பாதுகாக்க எவ்வளவு மெஷின்ஸ், கம்ப்யூட்டர்ஸ், ரொபாட்டிக்ஸ், ப்ரோக்ராம்ஸ்னு செஞ்சிருக்கோம்... இது எல்லாத்தையும் மீறி ஒருத்தன் உள்ள புகுந்துருக்காங்கிறதை மட்டும் என்னால் இன்னும் நம்ப முடியலை.. அவன் இங்க நுழையும் போதே கண்டிப்பாக நோயலுக்குத் தெரிஞ்சிருக்கணும்.. அதுவும் அவன் நம்ம ஆராய்ச்சி மையம் நோக்கி வருவதை நமது பாதுகாப்பு இயந்திரங்கள் நிச்சயமாக நோயலுக்குத் தெரியப்படுத்தி, அவரை அலெர்ட் செய்திருக்கணும்.. இருந்தும் அவர் எப்படிக் கவனிக்கத் தவறினார்? ஏன் அவர் அவனைத் தடுக்கவில்லை? இந்தக் கேள்விகள் தான் என் புத்தியை அலைக்கழிச்சிட்டே இருக்கு லெவின்..”

பொறுமையாகவே பேசத் துவங்கியவள் இறுதியில் அழுத்தமான குரலில் முடித்தாள்.

அவளது கோபம் புரிந்து தன்னுணர்வுக்கு வந்தது போல் தலையைச் சிலுப்பியவாறே சற்றே தொண்டையைக் கனைத்த லெவின், மீண்டும் ஒரு முறை ஜீவனின் மீது பார்வையைச் செலுத்திவிட்டு அஹானாவின் புறம் திரும்பினார்.

“டானியலால் எந்நேரமும் ஆபத்து வரும்னு நானும் நோயலும் எதிர்பார்த்திருந்தோம் அஹானா.. அதுவும் மரபணு ஆராய்ச்சியில் [genomic research ] உலகத்திலேயே ரெண்டாவது இடத்துல இருக்கிற அவன் கம்பெனியோட சேராமல், மூணாவது இடத்தில் இருக்கிற எங்க நிறுவனத்துடன் சேர நோயல் முடிவு செய்தப்பவே அவனுடைய எதிர்ப்பை நாங்க பார்த்துட்டோம்... ஆரம்பத்தில் இருந்து அவனுடைய அனைத்து சதித் திட்டங்களையும் நாங்க முறியடிச்சிட்டு தான் வந்தோம், அது உங்கள் எல்லாருக்குமே தெரியும்.. ஆனால் நாங்களே எதிர்பாராத வகையில் அவன் நம்முடைய நெட்வொர்க்குள்ள நுழைஞ்சிருக்கான்.. அதாவது ஷான் இறந்ததுமே இனி தானே நேரிடையாக இதில் இறங்கணும்னு முடிவு செஞ்சு நம்ம கணினி கட்டமைப்புக்கு உள்ளேயும், வலையமைப்புக்கு உள்ளேயும் அவன் எந்த வழியிலோ புகுந்திருக்கான்.. அவனுடைய இடத்தில் இருந்தே நோயலின் நிறுவனத்தினுடைய மெஷின்ஸ், கம்யூட்டர்ஸ், ரோபாட்டிக்ஸ் எல்லாத்திலேயும் ஏறக்குறைய கால் பகுதி, ஒருவரும் அறியாத வகையில் அவனுடைய ப்ரோக்கிராமினால் தவறாகச் செயல்பட வைச்சிருக்கான்.. அதனால் மாயன் வரும் போது அவன் போக வேண்டிய இடத்துக்கு இந்தக் கட்டிடங்களே அவனுக்கு வழிவிட்டு இருக்கு.."

“ஆனால் மாயன் ஏன் என்னை ஒண்ணும் செய்யலை லெவின்?"

“அதுக்குக் காரணம் ஜீவன்.. இவர் உன் கூட இருந்ததினால் மாயனால் உனக்கு ஆபத்து நேரிடலை..”

அவர் கூறுவதன் அர்த்தம் அஹானாவிற்குப் புரிந்தாலும், ஏதோ ஒரு மாய உலகத்திற்குள் வந்துவிட்டதைப் போல் அவர்கள் பேசுவதைப் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த ஜீவன், லெவினின் பதிலில் தான் ஒரு கடவுள் போல் அங்குச் சித்தரிக்கப்பட்டதை உணர்ந்து மென்மேலும் வியப்பில் ஆழ்ந்தான்.

“சார், நான் எப்படி அஹானாவைக் காப்பாற்ற முடியும்? நீங்க சொல்றதை பார்த்தால் இந்த உலகத்தில் இருக்கிற எந்த இடத்துக்குள்ளும், யாரும் எப்பவும் நுழைஞ்சிட முடியுங்கிற மாதிரி தான் தெரியுது.. அந்த அளவுக்கு டெக்னாலஜிங்கிற பேர்ல ஏறக்குறைய ஒரு இயந்திர உலகத்தைப் படைச்சி வைச்சிருக்கீங்க.. ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ், கம்யூட்டர் விஷன், ரோபாட்டிக்ஸ், நியூரல் நெட்வொர்க்குன்னு மட்டும் இல்லாமல், மனிசனுக்குச் சொல்லித் தர வேண்டியதை எல்லாம் மிஷினுக்குச் சொல்லிக் கொடுத்து, அதுங்க கண்ட்ரோலில் மனுசங்க உலா வர மாதிரி எல்லாத்தையும் உருவாக்கி வச்சிருக்கீங்க.. இப்படி இருக்கும் போது நான் எப்படி அஹானாவைக் காப்பாற்றி இருக்க முடியும்.. ஏதோ தண்ணீருக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கிறவங்க தெளிவா தெரியற மாதிரி நாங்க ரெண்டு பேரும் மறைஞ்சிருந்த இடம் மாயனுக்குத் தெரிஞ்சிருக்கணுமே.. இருந்தும் எப்படி எங்களை அவனால் கண்டு பிடிக்க முடியலை? இல்லை நாங்க இருக்கிற இடம் தெரிஞ்சும் எங்களை எதுவும் செய்யாமல் போய்விட்டானா? ஏன்?”

அவனது கேள்விகளுக்குப் பதில் கூறாது அஹானாவிடம் தனிமையில் பேச விரும்புவதாக லெவின் கூற, சம்மதித்தவனாய் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்த ஜீவனின் மனக்கண்களில் தோன்றிய அசாத்திய இயந்திர மனிதனாகிய மாயனின் உருவம் கலக்கத்தையே கொணர்ந்தது.

"மனுசனா மிஷினான்னு தெரியாத அளவுக்கு ரோபோக்களைக் கூட அழகா படைச்சு வச்சிருக்கானுங்க... பார்க்க அழகா இருக்கிற ரோபோக்கள் நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமா கொலைகளை செய்யுதுங்க.. இதுல ஆராய்ச்சியாம், அறிவியல் திருப்புமுனையாம்.. மனுசங்களே இல்லாமல் குழந்தை பெத்துக்குறாங்களாம்.. என்ன உலகமடா இது?"

வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தவன் எதுவும் செய்யும் வழியறியாது அமைதியாக அமர்ந்திருக்க, நிமிடங்கள் சிலவற்றுக்குப் பிறகு அவன் இருந்த அறைக்குள் நுழைந்த லெவினின் விண்ணப்பத்திற்கு வேறு வழியின்றி 'தான் யார்?' என்ற விடையறியும் நோக்குடன் பணிந்தான்.

அஹானாவின் அறிவுரையின் படி லெவினின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவன் இதற்கென்றே பிரத்யேகமாக உபயோகப்படுத்தப்படும் ஆய்வகத்தில் ஒரு படுக்கையில் படுக்க, அங்கு அவனது உடல் முழுவதிலும் பல வித இயந்திரங்களும் மின்சார ஒயர்களும் கணினிகளும் இணைக்கப்பட்டு, ஒரு புது வித ஆராய்ச்சிக்கு அவன் உட்படுத்தப்பட்டான்.

'அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! குழப்பத்திற்கு மேல் குழப்பம்! இதில் திரும்பவும் ஆராய்ச்சியா? அதுவும் என்னை வைத்தேவா?'

எண்ணியவாறே அஹானாவின் மீது இருந்த ஒரே நம்பிக்கையில் படுக்கையில் படுத்திருந்தவன் சடுதியில் மயக்கத்தைத் தழுவினான்.

நிமிடங்கள் கடந்தும் இன்னமும் ஏதோ கோமாவில் இருப்பது போல் கிடந்த ஜீவனைப் பார்த்தவாறே,

"நான் எதிர்பார்த்தது தான் அஹானா.. ஏற்கனவே சில தடவை இது மாதிரியான நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டிருக்கோம்.. இப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கான்னுக் கூட ஆச்சரியப்பட்டிருக்கோம் இல்லையா? ஆனால் அதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் அரசாங்கம் சில ஆராய்ச்சிகளைக் கைவிட்டிருக்கு.. சில ஆய்வுகள் பெரும் தோல்வியிலும் முடிஞ்சிருக்கு.. அதே மாதிரியான ஒரு நிகழ்வு தான் இப்போ ஜீவன் விஷயத்திலேயும் நடந்திருக்கு.." என்றார், ஆச்சரியத்தில் நெற்றியைத் தடவியவாறே.

அவரது வார்த்தைகளைக் கேட்ட அஹானாவிற்கு ஜீவனின் ஆதி மூலம் தெள்ளத்தெளிவாகப் புரிந்து போனது.

அதே போல் அனைவரையும் கொன்று போட்டிருந்த மாயன் ஏன் தன்னையும் ஜீவனையும் மட்டும் ஒன்றும் செய்யாது விட்டுவிட்டுப் போனான் என்பதும் விளங்க ஆரம்பித்தது.

ஆக, ஜீவனின் உயிருக்கு எந்நேரம் வேண்டுமானாலும் ஆபத்து வர நேரிடும் என்பதை உணர்ந்துக் கொண்டவள் வேதனையுடன் அவனை நோக்கினாள்.

"ஏதோ ஒரு காரணத்தினால் தான் இவர் உன்னைத் தேடி வந்திருக்கார் அஹானா.. ஆனால் எப்போ இவர் இங்க வந்தார்? இவர் மூளையில் சர்ஜரி செய்தது யார்? அவர்களிடம் இருந்து இவர் எப்படித் தப்பி வந்தார்? ஏன் நாம் யாருமே இவரைப் பற்றிக் கேள்விப்படலைங்கிறது தான் என் குழப்பமே.. எனிவேய்ஸ், தெரிஞ்சோ தெரியாமலோ இவரால் நமக்கு நன்மை விளைஞ்சிருக்கு.. இவரைப் பற்றித் தெரிஞ்சு தான் உன்னைக் கொல்லாமல் மாயனும் விட்டுட்டுப் போயிருக்கான்.. அதற்குக் காரணமும் டானியலாகத் தான் இருக்கணும்.. எப்படியும் உன்னையும் ஜீவனையும் பிடிப்பதற்கு மாயனை திரும்ப அனுப்புவான் டானியல்.. அதற்குள் யாருமே உட்புக முடியாத பாதுகாப்பான இடத்துக்கு உங்களை நான் கொண்டு போயிடணும்.. இப்போதைக்கு நான் சொல்ற இடத்தில் நீங்க ரெண்டு பேருமே தங்கி இருங்க.. எல்லா ஏற்பாடுகளையும் முடிச்சிட்டு நான் உன்னைக் கால் பண்றேன், அப்ப இவரை என்னிடம் கூட்டிட்டு வா.."

அவர் எதற்காக ஜீவனை மீண்டும் அழைத்து வரச் சொல்கின்றார் என்பதைப் புரிந்துக் கொண்டவளின் மூச்சு நெடுமூச்சாக வெளி வந்தது.

"அப்படின்னா, இவரை?"

முடிக்காது விட்டவளின் தோள் பற்றிய லெவின்,

"யெஸ் அஹானா.. ஜீவன் இங்க இருக்கிறது நல்லதில்லை.. அவர் அவருடைய உலகத்திற்கே போகணும்.. அதற்கான முயற்சியில் நான் சீக்கிரம் இறங்கணும்.. ஐ மீன் டானியல் அடுத்த அடி எடுத்து வைக்கும் முன் நான் ஜீவனைக் காப்பாற்றி இருக்கணும்.. ஆனால் என்னால் அது முடியுமான்னு தெரியலை, but I will try my best.." என்றதில்,

சலனமற்ற முகத்துடன் துயில் கொண்டு இருப்பது போல் அமைதியாகப் படுக்கையில் படுத்துக் கிடந்தவனை, ஜீவன் என்று அழைக்கப்பட்ட 'அமர ஜீவனை' நோக்கி திரும்பிய அஹானாவின் வதனத்தில், ஏனோ சொல்ல முடியாத ஒரு ஏமாற்றம் படர்ந்தது.

அமரஜீவன் [AJN] - சிரஞ்சீவிதம்

The Journey of an Immortal

தொடரும்..

References:

Genomics Research Laboratory - மரபியல் ஆராய்ச்சி ஆய்வகம்

A cyborg, a portmanteau of cybernetic and organism—is a being with both organic and biomechatronic body parts..Merging man and machine is called transhumanism

Hanson Robotics most advanced human-like robot, Sophia, personifies our dreams for the future of AI. As a unique combination of science, engineering, and artistry, Sophia is simultaneously a human-crafted science fiction character depicting the future of AI and robotics, and a platform for advanced robotics and AI research.

Sophia is a realistic humanoid robot capable of displaying humanlike expressions and interacting with people. It's designed for research, education, and entertainment, and helps promote public discussion about AI ethics and the future of robotics.What is Artificial Intelligence

 

Chitra Balaji

Active member
Woooooow super Super mam.... Eppadi ஜீவன் அங்க வந்தான் அங்க irukaravanga ke theriyala..... யாரு avanuku treatment koduthathu..... Eppadi அந்த David kita irunthu thappikka போறாங்க....
 

Nuha

Member
Wow wow wow ... Absolutely Amazing👏👏😯😯😯👌👌👌👌🤩 technical உலகத்துல கூட எங்கள் பரபரப்பாக வே வச்சிற்கீன்க. cyborg மாயன் பக்ரப்ப ஹாலிவுட் movie pakre Mathiri இருக்கு. அகானா க்கு ஜீவா யாரு மு எப்டி புரியுது.
அமரஜீவன் AJN ..great Amar ah ஜீவா nu கூப்பிட்ட நினைவுகள் மீனா ஓடாதே இல்லையா!! .. //(இல்லை அமர் ஓட father thaan intha அமரஜீவனா வேறு உலகத்தை சார்ந்த அஹன.. இவர் pair ah இவரு கூட நம்ம உலகத்துக்கு வந்துட்டாள்ளா?? அமர் சொன்ன அம்மா அஹானa thanae. கடல் உலகத்தில இருந்து நம்ப உலகத்துக்கு வந்த ahanaa வயிற்றில இருந்து பிறந்தவன் அமர்!! அதான் sea la விழுந்ததும் அவனுக்கு edum ஆவல பிழசிட்டான்?? இருக்குமோ Grandfather paradox Mathiri la போகும் என் guess la🤭 தீய வைக்க) apo epdi Injuries oda Jeevan admit aahirpaan hehe 😁செம்ம turnings!!!... 🤩❤️ இது அமர் தான் என்றால் நம்ம உலகத்தில இருந்து teleport ahi கடல் வழியாக கடல் கீழ இருக்கும் உலகத்துக்கு Poitaanaa அமர்.. apo avanukaaava Inga meenaa irukka!!! ஜீவா வை பிரியும் ஏமாற்றம் ஏன் அஹானாக்கு வருது. அஹனாக்கும் மீனாக்கும் என்ன connection Ava பயந்த பொண்ணு இவ தைரிய பொண்ணு வேற?? 🤔
ஜீவன் ஓட தின்கிங் வேற லெவல் மாஸ்! அங்க வாழும்... ஆராய்ச்சி புகழ் nu overthinking la மழுங்க பட்டு கிடக்கும் scientific உலகத்து மக்கள விட அமர் ஓட கணிப்புகள் செம்ம matured ah தெளிவா irukku (botanist! Ache) . He is very correct oru clone ah thaan உருவாக்க பாக்குறாங்க துணை தேவல நா மானுடமே மொத்தமா காணாம போய்டும். இதுல avangakullayae போட்டி அதுல வில்லன் வேற. Ahanaa ஓட டீம் மொத்தமா இறந்தது வருத்தம் தான் except antha head. Avar
konjam நல்லவர் போல திருப்பி anupivida நினைக்கிறார் ஜீவன. ஆனா அந்த டேனியல் க்கு திமிரை பாருங்க நம்ம உலகுக்கும் technology Ah thara poraaraam. Intha உலகமே technology la அடிபட்டு தான் பொய்டடு இருக்கு. அவர் நினைச்சது நடந்ததா அவ்ளோ தான். Like namma Futureself thaan namma present ah அழிச்சி futureah mathaa ninaikuthu. 🙊 கொடுமை கொடுமை..

Vera level Technologies.. technical narration was fabulous really really really mind blowingggg.!!! Jenu unga brain குள்ள epdi எவ்ளோ விசயம் வச்சிற்கீன்க. அதை எப்டி தெளிவா படம் போட்டு காட்டுரீங்க. ஒரு highclass sci-fi movie partha feel thaan varuthu.. congratulations 😘😘😘
 

saru

Member
Lovely update dear
Amarajeevan hoom
Amarah normal mode ku mathamudiuma
Adukulla ena ena lam varapodo hoom
Deniel summa irupana erkanave work start sedutan
 

Lucky Chittu

New member
Eppadiyo jeevan avanoda ulaguthu thirumba pona nallarkkum. Sekiram help pannanum. Nice amarajeevan. Waiting for the next episodes mam
 
Inconceivable!!! 🫣🫣🫣
Ippo (Amar)Jeewan irukkirathu vera oru universe la???

Ahana kku ‘naadu’ naale ennanu theriyala…

Maayan kannukku Jeewan theriyala because Jeewan is a human…

Ippo Jeewan paadhukaappa Earth ku vandhu seruwana??? Ahana kku avan mela soft corner irukku… appo ava Meena illaiya??? ☹️☹️😞
 

Thani

Member
ஜீவனை பாதுகாப்பா அனுப்பி வைப்பாங்களா ????இல்ல மாயனிடம் சிக்குவாங்களா???
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top