JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Siranjeevitham - Episode 16

JLine

Moderator
Staff member
சிரஞ்சீவிதம்

அத்தியாயம் 16

அஹானாவிற்கும் ஜீவனிற்கும் என்று லெவின் ஏற்பாடு செய்திருந்த இரகசிய இல்லம்.

ஒரு அணுக்கூட அவருடைய அனுமதி இல்லாது நுழைய முடியாத அளவிற்கு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வீடு.

மருத்துவமனையை விட்டு ஜீவன் வெளியில் வந்து ஏறக்குறைய இரு மாதங்கள் கடந்திருந்தது, ஆனால் அதற்குள் அவன் கண்டிருந்த காட்சிகளும், அனுபவித்திருந்த விசித்திரமான அனுபவங்களும் ஏராளம்.

ஸ்கைப்பாடின் வழியாக இரகசிய வீட்டிற்கு ஜீவனை அழைத்துச் சென்ற அஹானா வீட்டின் வாயிலை அடைந்ததுமே கதவு தானாகத் திறக்கப்பட்டது.

அவளை வரவேற்ற இயந்திர மனிதன் முதல், அவளது தனியறையில் நீரை ஒத்தது போன்று தளதளத்து மிதக்கும் திரைகளும், வீட்டிற்குள் உள்ள அனைத்துப் பாகங்களும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டது போல் இயங்குவதும், சென்சார்களின் மூலம் அவளது விருப்பத்திற்கு ஏற்ற உணவுகள் இயந்திரங்களில் உருவாகுவதும், அதற்கேற்ற சமையல் பொருட்களைக் கணித்து அதனை இயந்திரத்திற்கு அனுப்பும் குளிர்சாதனப் பெட்டிகளும் ஜீவனைப் பெரும் மயக்கத்தில் ஆழச் செய்திருந்தன.

இதனில், அவ்வப்பொழுது அவர்களைக் கடந்து செல்லும் மேகங்கூட்டங்களுக்கு இடையில் அவனைத் திடுக்கிடச் செய்யும் அளவிற்கு ஓடும் ஹைப்பர்சானிக் இரயில்களும் [Hypersonic tube trains], பறக்கும் தட்டை விமானங்களும், வானில் மிதந்து கொண்டிருக்கும் ஸ்கைப்பாடுகளும், ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவில் உருவாக்கப்பட்டிருந்த கணினிகளும், அவனைத் தான் இருப்பது வேறு ஒரு உலகம் என்ற முடிவிற்குக் கொண்டு வந்தது.

ஆயினும் தன்னை ஆய்வு செய்த லெவின் தன்னைப் பற்றி என்ன கூறினார் என்பதை மட்டும் எவ்வளவோ முறைக் கேட்டும் பகிர மறுத்துவிட்ட அஹானாவின் மீது கொலைவெறியில் இருந்தான் அவன்.

அவ்வப்பொழுது தன்னை இல்லத்தில் விட்டுவிட்டு அவள் எங்கோ வெளியில் செல்வதும், வீட்டிற்குள் தனக்கு வேண்டியதை மனதிற்குள் தான் நினைத்து முடிக்கும் முன் தன் முன் நீட்டும் மனித ரூபத்தில் நடமாடும் ரோபோக்களும், 'குளிருவது போல் இருக்கின்றது' என்று அவன் எண்ணும் முன்னரே வீட்டின் வெப்பநிலையை மாற்றும் இயந்திரங்களும்,

நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் இப்படி எதுவுமே இல்லாது சூரிய சக்தி மூலம் இயங்கும் இயந்திரங்களும், அவ்வப்பொழுது திரைகளில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் செய்திகளில் காணப்படும் கடலுக்கடியில் இருக்கும் குடியிருப்புகளும் என்று அனைத்து விஞ்ஞானத் தொழில்நுட்ப அதிசயங்களும் அவனை ஒரு பெரும் அச்சத்திற்குள் ஆழ்த்தியிருந்தது.

ஒவ்வொரு நாளும் நரகத்தைப் போல் கடத்தியிருந்தவன் இதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று தோன்ற, அன்று மாலை வீட்டிற்குத் திரும்பிய அஹானாவிடம் அந்நாள் வரை அடக்கி வைத்திருந்த ஆவேசத்துடன் வெடிக்கத் துவங்கினான்.

“அஹானா, உன்னால் எனக்கு உதவி செய்ய முடியலைன்னா சொல்லிடு, நான் கிளம்புறேன். என்னால் இந்த வீட்டுக்குள்ள இப்படி ஒண்ணுமே புரியாமல் அடைஞ்சுக் கிடக்க முடியாது?”

“எங்க போவீங்க ஜீவன்?”

“நான் எங்க இருந்து வந்தேனோ அங்கேயே.”

“எங்க இருந்து வந்தீங்களா? அது எந்த இடம்?”

“இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச இடம்னா, அது நான் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிட்டல் தான். இந்த ஒரு மாசமா என்னால் ஓரளவுக்கு என்னைச் சுற்றி நடக்கின்ற விஷயங்களைப் புரிஞ்சுக்க முடியுது. அதை வச்சு நான் ஹாஸ்பிட்டலில் செக் பண்ணினா நான் எங்க இருந்து வந்தேன், என்னுடைய பூர்வீகம் என்னன்னு என்னால கண்டு பிடிக்க முடியும்னு தோணுது. எனக்குத் தெரிஞ்ச வரை அங்க இருக்கும் டாக்டர்ஸுக்கு நான் யாருன்னு தெரிஞ்சிருக்கிற வாய்ப்பு இருக்கு, ஆனால் ஏதோ காரணத்துக்காகத் தான் அவங்க அந்த உண்மையை என்னிடம் இருந்து மறைச்சிருக்காங்க. அவர்களிடம் திரும்பவும் விசாரிச்சேன்னா நான் எங்க இருந்து வந்தேங்கிற உண்மையை அவர்கள் என்னிடம் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கு.”

அவனைச் சுற்றி இருக்கும் ஆபத்தினை முழுமையாகப் புரிந்துக் கொள்ளாது சிறுபிள்ளைத்தனமாய் உளறுபவனைக் கண்டு பரிதாபமாய் இருந்தது பெண்ணவளுக்கு.

“நிச்சயமா உங்களால் முடியாது ஜீவன். அப்படியே நீங்க வெளியில் போனீங்கன்னாலும் உங்களைப் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கு."

“ம்ப்ச். புத்திக் குழம்பி ஏறக்குறைய பைத்தியம் பிடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கேன். இதுக்கு மேல என்ன பெரிய ஆபத்து இருக்க முடியும் அஹானா? தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சிக்க. இங்க எல்லாமே எனக்குப் புதுசு மாதிரி தெரியுது. அதே சமயம் சில நேரங்களில் சில விஷயங்களை நான் எங்கோ பார்த்தது மாதிரியும், எனக்குப் பழக்கப்பட்ட மாதிரியும் தெரியுது. ”

அவனது பேச்சிற்கு இடையூறு செய்யாது அவனுக்கருகே நிதானமாக அமர்ந்தாள்.

“நான் இருந்த உலகத்தில் இதெல்லாம் இன்னும் வரலை அஹானா. இன்னும் சொல்லப் போனால் ஏதோ டைம் ட்ராவல் மிஷினில் ஏறி எதிர்காலத்துக்கு வந்துட்டோனோன்னு கூடத் தோணுது.”

ஆராய்ச்சி மையத்தில் சந்தித்ததில் இருந்து அவனை ஆழ்ந்து கவனித்துக் கொண்டு வந்தவளுக்கு ஒரு நேரம் இயல்பாக இருக்கும் அவன் மறுநேரம் முற்றிலும் முரணாக நடப்பதில் இருந்து ஆரம்பத்தில் அவளும் குழம்பித் தான் போயிருந்தாள்.

ஆனால் அக்கணம் அவளது எண்ணம் முழுவதுமே மாயனும், நோயல், ஹில்டன் உட்பட அவளது குழுவினரின் அகால மரணங்களும் ஆட்கொண்டிருக்க, இதனில் தன் உயிருக்கு மட்டுமல்ல, தன் கருவில் வளரும் அறிவியலையே திசை மாற்றி அமைக்கப் போகும் குழந்தைக்கு நேரிடப் போகும் ஆபத்தும் அவளை ஜீவனைப் பற்றிய சிந்தனைகளில் இருந்து சற்று விலகியிருக்கவே செய்தது.

ஆனால் லெவினின் உதவியோடு அவனை முற்றிலுமாக ஆராய்ச்சி செய்திருந்தவளுக்கு அவன் யார், எங்கிருந்து வந்திருக்கின்றான் என்பது ஓரளவிற்குப் புரிய ஆரம்பித்திருந்தது.

அதாவது அவனது பிறப்பும், அவன் வாழ்ந்த நிலையும் தெரியாவிட்டாலும் அவனது தற்போதைய நிலைமைக்கான காரணம் தெரிந்திருந்தது.

ஆயினும் இந்நாள் வரை அவள் அதனைப் பற்றி மூச்சுவிட்டாள் இல்லை.

தனது புலம்பலைக் கேட்டும் ஒரு வார்த்தைக் கூடப் பேசாது தன்னையே கூர்ந்துப் பார்த்திருப்பவளை கண்டு ஆழ இழுத்து மூச்சுவிட்டவன் அவளை மேலும் நெருங்கி அமர்ந்தவனாய், அவளது கரங்களை உரிமையுடன் பற்றிக் கொண்டவாறே தொடர்ந்தான்.

"எல்லாமே புதுசா தெரியற நேரத்தில் சில விஷயங்கள் மட்டும் எப்படிப் பழகின மாதிரி தெரியுது? அது தான் என் குழப்பமே. உன்னை முதன்முதலில் ஹாஸ்பிட்டலில் பார்க்கும் போது உன்னை எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்தது. அதே மாதிரி நான் ஃபர்ஸ்ட் கண் விழிச்சப்ப அந்த டாக்டர்ஸ் பேசிய பாஷை எனக்குச் சுத்தமா புரியலை, ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் மயக்கத்தில் இருந்து முழிச்சப்போ எல்லாமே புரிஞ்சது. அதைவிடப் பெரிய அதிசயம், ஹாஸ்பிட்டலை விட்டு நான் யாருக்கும் தெரியாமல் வெளியே வந்தது. எங்க இருக்கேன்னே தெரியாமல் முழிச்சிட்டு இருந்த எனக்கு வெளியே வந்ததுமே அப்படியே அந்த ஹாஸ்பிட்டலோட Blue print -எ [கட்டுமானத் திட்டத்தின் வரைபடம்] தெரிஞ்சமாதிரி இருந்தது. என்னையும் அறியாமல் என் மூளை இந்தப் பக்கம் திரும்பு, அந்தப் பக்கம் போ, அங்க போகாதே ஆட்கள் இருக்காங்கன்னு எனக்குக் கட்டளைப் போட்டுட்டே இருந்த மாதிரி இருந்தது. அதே மாதிரி தான் ஹாஸ்பிட்டலுக்கு வெளியே வந்த நான் அந்நாள்வரை வெறும் நிழலா பார்த்திருந்த ஸ்கைப்பாட்டை என்னால் சுலபமா ஓட்ட முடிஞ்சது. அதனால் தான் என்னால் உங்க ரிசேர்ச் செண்டரைத் தேடி சரியா வர முடிஞ்சது. இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? இல்லை ஒரு வேளை நான் இங்கேயே பிறந்து வளர்ந்தவனா? ஏதோ ஒரு விபத்தில் எனக்குப் பழைய நியாபகம் எல்லாம் அழிஞ்சிடுச்சா? குழப்பத்தில் என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு அஹானா.”

மனம் தாங்காது அரற்றிக் கொண்டிருந்தவனை நன்றாகப் புரிந்துக் கொண்டவள் போல் அவனது கரங்களை எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டவளாக,

“ஜீவன், உங்க குழப்பத்துக்கு எல்லாம் ஒரே பதில் நீங்க இந்த உலகத்தைச் சார்ந்தவர் இல்லை. ஆனால் எந்த உலகத்தில் இருந்து வந்திருக்கீங்கன்னு மட்டும் எனக்குத் தெரியலை. அதே மாதிரி இந்த உலகத்தில் நீங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் உங்களைச் சுற்றி பெரிய ஆபத்துச் சூழ்ந்திருக்கு. எந்த நேரமும் உங்க உயிருக்குக் கூட ஆபத்து நேரிடலாம்." என்றதுமே அந்தப் புத்தம் புதிய அண்டசராசரம் முழுவதுமே ஒரு சுற்று சுற்றி நிற்பது போல் தோன்றியது ஜீவனுக்கு.

“வேற உலகமா? நீ என்ன சொல்ற அஹானா?”

“அண்டவெளியில் பல பிரபஞ்சங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கக் கண்டுபிடிச்சு இருக்கோம் ஜீவன். இணை பிரபஞ்சங்கள், பிற பிரபஞ்சங்கள், மாற்றுப் பிரபஞ்சங்களுன்னு நிறையப் பிரபஞ்சங்கள் இருப்பதாக எங்களுடைய விஞ்ஞானிகள் பல ஆதாரங்களுடன் நிரூபிச்சிருக்காங்க. அங்கு இருந்து எங்க உலகத்துக்குள்ள வந்த சிலரை, அதாவது வேற்றுக் கிரகவாசிகள் சிலரை எங்களுடைய விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சு அவங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இருக்காங்க, ஆனால் அந்த ஆராய்ச்சிகள் அனைத்துமே தோல்விகளில் தான் முடிஞ்சிருக்கு...

காரணம் எங்க உலகத்துக்குள்ள வந்த ஒவ்வொருத்தரும் வெவ்வேறு உலகத்தைச் சார்ந்தவங்களா இருந்தாங்க. எங்களைப் போல் அச்சு அச்சலா மனித ரூபத்தில் இருக்கும் இருவர், அதாவது உங்களை மாதிரியே மனிதர்கள் இரண்டு பேர் வந்தாங்க. இன்னொரு சமயம் மனிதர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லைங்கிற தோற்றத்தில், அதாவது கால்களே இல்லாது பறக்க கூடிய உருவ அமைப்பில் ஒருவர், அதே போல் மனிதர்களையும் விலங்குகளையும் கலந்த மூவர்னு இப்படி வேற்று உலகவாசிகள் எங்க உலகத்திற்கு வந்ததிருக்காங்க. அவர்களைப் பிடிச்சாச்சு, ஆனால் ஒரே ஒரு பெண்ணைத் தவிர. அவள் பாதிப் பெண்ணாகவும் பாதிப் பறவையாகவும் இருந்தாகப் பார்த்தவங்க சொன்னாங்க. ஆனால் அவளை மட்டும் பிடிக்க முடியலை, அதற்குள் மாயமாய் மறைஞ்சு போய்விட்டான்னு சொன்னாங்க. ஆனால் மற்றவர்களைப் பிடிச்சு அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினாங்க, ஆனால் துரதிர்ஷடவசமா, அந்த அனைத்து ஆராய்ச்சிகளும் தோல்வியில் முடிஞ்சிட்டது."

கூறியவளின் முகம் ஏறக்குறைய வெளிரிப் போயிருந்தது.

“தோல்வின்னா, புரியலை அஹானா.”

அவனது வினாவிற்குப் பதிலளிக்காது விநாடிகள் சில மௌனமாக இருந்தவள் நெடுமூச்சு விட்டு கூறினாள்.

"அவர்களில் சிலர் ஆராய்ச்சிகள் துவங்கி சில நாட்களுக்குள்ள இறந்துட்டாங்க. சிலர் ஏறக்குறைய ஆராய்ச்சிகள் முடிவும் தருவாயில் இறந்துட்டாங்க, ஆக ஆராய்ச்சிகளில் உட்படுத்தப்பட்ட எந்த வேற்று கிரகவாசிகளும் இப்போ உயிரோட இல்லை. ஒவ்வொருத்தரா இறந்துட்டாங்க.”

அவள் கூறி முடிப்பதற்குள் அதிர்ந்து அரண்டு போய் இருக்கையில் இருந்து எழுந்தேவிட்டான் ஜீவன்.

“அஹானா.”

“யெஸ் ஜீவன். இது எங்க பிரபஞ்சம் பூராவும் அறியப்பட்ட விஷயம். அதனால் தான் என் உயிருக்கு எந்த அளவுக்கு ஆபத்து இருக்கோ அதைவிடப் பல மடங்கு உங்க உயிருக்கு ஆபத்து இருக்குங்கிறதை உணர்ந்து தான் உங்களைப் பாதுகாப்பா வச்சிருக்க லெவின் ஏற்பாடு செய்திருக்கார்.”

அவள் பேச பேச பல விஷயங்கள் புரிபடுவது போல் தோன்றியது, ஜீவன் என்றழைக்கப்பட்ட, வேறு ஒரு உலகத்தில் அமரஜீவன் என்று நாமம் தரிக்கப்பட்டு அவனது அன்னையால் மட்டுமே ஜீவன் என்றும், பிறரால் அமர் என்றும் அழைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனுக்கு.

“கொஞ்சம் கொஞ்சமா எனக்குப் புரியற மாதிரி இருக்கு அஹானா. என் பெயர் கூட எனக்குச் சரியா தெரியலை, ஆனால் ஜீவன்னு யாரோ என்னை அடிக்கடி கூப்பிட்டது போல் மட்டும் தோனுச்சு. அப்படின்னா நான் எங்க இருந்து வந்தேன்னோ அந்த உலகத்துல என் பெயர் ஜீவனா இருக்கலாம். ஆனால் கண் முழுச்சவுடனே பெயரை மட்டும் நியாபகத்தில் வைத்திருந்த நான் எப்படி உங்களுடைய மொழியைப் புரிஞ்சிக்கிட்டேன்? வாழ்நாளில் பார்த்தே இராத வாகனங்களையும் பொருட்களையும் எப்படி உபயோகிக்க ஆரம்பிச்சேன்?"

"அதற்குக் காரணம் அந்த ஹாஸ்பிட்டலில் இருந்த டாக்டர்ஸ். நீங்க தூக்கத்தில் இருக்கும் போதோ அல்லது உங்களைக் கோமாவில் இருக்கச் செய்தோ, உங்களது மூளைக்குள் ஒரு சிப்பை [chip] பொருத்தி இருப்பாங்க. அது நீங்கள் தூக்கத்தில் இருந்தால் கூட உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உங்கள் மூளை உண்ணிப்பா கவனிச்சிட்டே இருக்கக் கட்டளைக் கொடுக்கும். அதே போல் உங்களுடைய சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும். நீங்க இது வரை பார்க்காத, பழகாத விஷயங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்த மாதிரியும், பழகின மாதிரியும் எடுத்துக் காட்டும். உதாரணத்துக்குச் சொல்லணும்னா நீங்க சொன்னது போல் இங்க இருக்கும் ஒரு பொருளை நீங்க அதுவரை உபயோகப்படுத்தியே இருக்க மாட்டீங்க, ஆனால் இந்தச் சிப்பை உங்க மூளைக்குள்ள வச்ச உடனேயே உங்களால் அந்தப் பொருளை பழக்கப்பட்டது போல் எளிதா உபயோகப்படுத்த முடியும். அதே மாதிரி ஒரு இடத்தை நீங்க அப்ப தான் முதன்முதலா பார்த்திருப்பீங்க, ஆனால் ஓரளவுக்கு அந்த இடத்தைப் பற்றிய விஷயங்களும், அங்கு எந்த ரூமுக்குள் போவது, எங்க திரும்புவது, எந்தப் பாதை வழியா போனால் வெளியேறலாங்கிற மாதிரியான விஷயங்களையும் அந்தச் சிப் உங்களுக்குச் சொல்லித்தரும். இதுவும் எங்களுடைய படைப்பு தான்..

இது மாதிரி பல சிப்புக்கள் உடம்பில் பொருத்தப்படும். உதாரணத்துக்கு, எப்ப நமக்குப் பசிக்கும், எப்படியான உணவுகள் அப்போதைய நிலையில் நமக்குச் செரிக்கும் [Digest] இப்படியான தகவலை நமக்குச் சொல்றதுக்கான சிப் நம் வயிற்றில் பொருத்தப்படும். ஆனால் லெவின் உங்களை ஆராய்ச்சி செய்த பொழுது வெறும் மூளைக்கான சிப்ஸ், அதுவும் முதல்படின்னு நாங்க சொல்ற அளவுக்கான சிப்ஸ் தான் பொறுத்தப்பட்டிருந்தது. ஒரு வேளை உங்களைத் தங்களது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளணும்னு அந்த டாக்டர்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனம், அடிப்படை விஷயங்களை மட்டும் உங்களுக்குப் புரிய வைத்தால் அப்போதைய நிலைக்குப் போதும்னு முடிவெடுத்து அந்தச் சிப்ஸை மட்டும் பொருத்தியிருக்கலாம்."

அவள் பேசிக் கொண்டே இருக்க, போதும் போதும் என்றானது ஜீவனுக்கு.

இருந்தும் இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளும், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் நிறைய இருப்பதால், மேற்கொண்டு தனது சந்தேகங்களை வெளிப்படுத்தத் துவங்கினான்.

"அப்படின்னா உன் முகம் ஏற்கனவே அறிமுகமான முகம் போல் எனக்குத் தோன்றியதற்கான காரணமும் என் மூளையில் பதிக்கப்பட்டிருக்கும் அந்தச் சிப்ஸ் தானா?"

"முழுக்க அப்படிச் சொல்லிட முடியாது ஜீவன். உங்கள் உலகத்தில் இதைப் பற்றிப் பேசியிருக்காங்களான்னு எனக்குத் தெரியலை. ஆனால் எங்க உலகத்தில் இதைப் பற்றி நிறையவே ஆராய்ச்சிகள் செய்திருக்காங்க. மல்டிவேர்ஸ், டாட்டர் யுனிவேர்ஸ், பேரலல் யுனிவெர்ஸ் இப்படின்னு பல அண்டங்கள் இருக்கிறதா நாங்க கண்டுப்பிடிச்சோம், ஆனால் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்ட எங்க விஞ்ஞானிகளால் அந்தப் பிரபஞ்சங்களுக்குப் போவது எப்படி, அது என்ன மாதிரியா இருக்கும், அங்கும் எங்களைப் போன்றவர்கள் வாழ்கின்றார்களா அப்படிங்கிற விஷயங்களைக் கண்டுப்பிடிக்க முடியலை...

ஆனால் சில நிறுவனங்கள் இரகசியமா அது மாதிரியான ஆராய்ச்சிகளில் இறங்கியதாகவும், சில விஞ்ஞானிகள் அண்டை வெளியில் இருக்கும் பிரபஞ்சங்களுக்குப் பயணித்ததாகவும், ஆனால் அவங்க யாரும் திரும்பி வரலைன்னும் சொல்றாங்க.. இவை எல்லாம் எந்த அளவுக்கு உண்மைன்னு யாருக்கும் தெரியாது..

அதாவது கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீன் துகள்கள், இன்னும் கண்ணுக்குத் தெரியாத பால்வெளி மண்டலங்கள் இதை அனைத்தையும் சேர்த்து தான் பிரபஞ்சம்னு சொல்வோம். எடுத்துக்காட்டுக்கு இவை அனைத்தையும் சேர்த்தது ஒரு பிம்பம் அப்படின்னு எடுத்துக்கங்க.. அதே மாதிரி பல பிம்பங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? அது போலத் தான் இப்போ நாம் இருக்கிறது ஒரு பிரபஞ்சம். இதே மாதிரியான ஒரு பிரபஞ்சத்தில் இருந்து, அங்க இருக்கும் ஒரு உலகத்தில் இருந்து நீங்கள் இங்க வந்திருக்கலாம்...

இன்னும் சொல்லப் போனால், நோயலுடைய மற்றுமொரு நிறுவனம் 'நோயல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்காஸ்மிக்'. அந்த நிறுவனத்தில் நடக்கும் ஆராய்ச்சிகளில் முக்கியமான ஒன்று பிற பிரபஞ்சங்களையும், அவற்றில் வாழும் உயிரினங்களையும் பற்றிக் கண்டு பிடிப்பது தான். அதனைப் பற்றிய சில ஆய்வறிக்கைகளை அவருடைய விஞ்ஞானிகள் அரசாங்கத்திற்குச் சமர்ப்பிச்சிருக்காங்க. அதுல சில நேரங்கள் மாற்றுக் கருத்துகள் உருவாகும். அப்படிப்பட்ட நேரங்களில் நான் நோயலுடன் டிஸ்கஸ் பண்ணியிருக்கேன், அப்ப அவர் என்கிட்ட சொன்ன ஒரு விஷயம், டாட்டர் யுனிவெர்ஸ் மாதிரி ஃபேமிலி யுனிவெர்ஸ்ன்னு ஒண்ணு இருக்க வாய்ப்பிருக்கு. அதாவது அப்படியே இதே அண்டத்தை ஒத்தது போல் வேறு சில அண்டங்களும் இருக்க வாய்ப்பிருக்கு. இங்க நான் இருக்கேன் அப்படின்னா, அந்த அண்டத்திலும் நான் இருக்கலாம். இதே உருவத்துடன் கூட இருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லிருக்காரு.

அதே போல் நீங்க, உங்க உலகத்தில், எங்கேயாவது என்னைப் பார்த்திருக்கலாம். இதே உருவத்துடன் நான் அங்கேயும் இருந்திருக்கலாம், அங்க நீங்க என்னுடன் பழகியிருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்குரிய பெண்ணாக நான் இருந்திருக்கலாம். ஏன், நான் உங்கள் மனைவியாகவோ, காதலியாகவோ கூட வாழ்ந்து வந்திருக்கலாம். அதனால் தான் என்னைப் பார்த்தவுடன் உங்களுக்கு அறிமுகமான முகம் போல் என் முகம் தோன்றியிருக்கு. “

அவள் கூற கூற, இதற்கு மேல் விளக்கம் இன்று போதும் என்பது போல் எழுந்தவன்,

“போதும் அஹானா, இப்போதைக்கு இது போதும். நான் கொஞ்சம் யோசிக்கணும். நீ சொல்ற மாதிரி வேற்று உலகத்தில் இருந்து நான் வந்தது உண்மைன்னா, கண்டிப்பா நான் அங்க போகணும். நான் அங்க என்னவா இருந்திருப்பேனோ? என்னை நம்பி யார் யாரெல்லாம் இருந்திருப்பாங்க? திடீர்னு ஒருத்தன் இப்படி வேறு ஒரு உலகத்திற்குள் நுழைஞ்சிருக்க முடியாது, அப்படின்னா எனக்கு என்ன நேர்ந்தது? இப்படி எதிர்பாராத விதத்தில் நான் காணாதுப் போயிட்டால் அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு யோசிக்கும் போதே எனக்கு இன்னமும் தலையைச் சுத்துது.” என்றவன் அதற்கு மேல் தாங்க சக்தி இல்லை என்பது போல் படுக்கை அறைக்குள் புக, ஆயினும் என்ன முயற்சித்தும் அலறிக் கொண்டிருந்த அவனது புத்தியை மட்டும் அவனால் அடக்க இயலவில்லை.

வேற்று உலகங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்க, எங்கோ கேள்விப்பட்டது போலவோ அல்லது பார்த்தது போலவோ சில பெயர்களும், விஷயங்களும், படக் காட்சிகளும் அவனது புத்தியில் அலை போல் மோதிக் கொண்டிருந்தது.

‘Bing Bang Theory’, ‘Cosmic inflation theory’, ‘Infinite, Daughter, Bubble, Parallel, Mathematical Universes', ‘Law of universal gravitation’

இவ்வார்த்தைகளை எங்கேயோ கேள்விப்பட்டதைப் போன்று இருந்ததில் படுக்கையில் சாய்ந்திருந்தவாறே தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தவனின் புத்திக்கு அஹானா கூறிய ஒரு சில வார்த்தைகள் எதிரொலி போல் ஒலிக்க, சடாரென்று எழுந்து அமர்ந்தான்.

“கால்களே இல்லாது பறக்க கூடிய உருவ அமைப்பில் உள்ள ஜீவராசிகள்.. அதிலும் பாதி மனித உடலையும் பாதிப் பறவையின் உடலையும் கொண்ட ஒரு பெண்.”

அஹானாவின் இந்த வார்த்தைகள் அவனது செவிப்பறையில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது.

"அப்பேற்பட்ட அண்டங்களும், கிரகங்களும் இருக்க வாய்ப்பு இருக்கின்றதா? அங்கு இருந்து ஜீவராசிகள் இங்கு வந்திருக்கின்றனர் என்றால் அது போன்ற அண்டங்களும் இருக்கும் போல் தான் தெரிகிறது."

அவனது மூளை பல திக்குகளில் தனது சிந்தனைகளைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தது.

ஆயினும், 'நான் யார் என்ற விஷயம் மட்டும் இன்னும் என் புத்திக்கு ஏன் எட்டவில்லை? எனது பூர்வீகம், நான் பிறந்து வளர்ந்த கதை, எனது அனுபவங்கள், நான் சந்தித்த என்னுடன் வாழ்ந்த மனிதர்கள் என்று எதனைப் பற்றிய விவரங்களும் எனக்குத் தெரியவில்லையே. அது ஏன்? என்ன விந்தை இது?’ என்று யோசிக்க யோசிக்கத் தலையே வெடித்துவிடுவது போல் தோன்ற அஹானாவின் உதவியுடன் தூக்கத்திற்கான மருந்துக்களை உட்கொண்டவன் ஆழ்துயிலிற்குச் சென்றான்.


****************************************


அந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நோயல், ஹில்டன் மற்றும் அவர்களது குழுவினரான ஐந்து இளம் விஞ்ஞானிகளின் அகால மரணங்களைப் பற்றிய விவாதங்களிலேயே மூழ்கியிருந்தது.

எங்குத் திரும்பினாலும் இதனைப் பற்றியே பேச்சிருக்க, ஆனால் கடலுக்கடியில் தனக்கென்று ஒரு இராஜ்யத்தை அமைத்து வாழும் டானியலின் கூரறிவு மட்டும் ஜீவனைப் பற்றி ஆராயும் திட்டத்தில் ஆழ்ந்திருந்தது.

“நோயலுடைய கம்பெனி வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது எனக்குத் தெரியும் மாயன், ஆனால் அதற்கு அவன் செலவு செய்த நேரமும் உழைப்பும் ரொம்ப அதிகம். அரசாங்கமும் என்னவோ நோயலையும் ஹில்டனையும் மட்டுமே நம்பினது போல் அவர்களது திட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருந்தது. எங்க அப்பாவும் வேற்று உலகங்களைப் பற்றி ஆராய்வது வேஸ்டுன்னு விட்டுட்டார், ஆனால் என்னால் அப்படி இருக்க முடியலை. அதனால் தான் நானும் அவர்களைப் பற்றிய ஆராய்சிகளை ரகசியமாக அவ்வப்பொழுது துவங்கினேன். ஆனால் எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. நோயல் மாதிரி மிகப் பெரிய விஞ்ஞானியாலேயே கண்டுப்பிடிக்க முடியாத விஷயத்தை நீ எப்படிக் கண்டு பிடிக்கப் போகின்றாய், அது உன்னால் எப்படி முடியும்னு என்னை அவமதிச்ச என் அப்பா அதற்கு மேல் அந்த ஆராய்ச்சிகளில் நான் ஈடுபடுவதை அனுமதிக்கலை. ஆனால் இப்போ என் அப்பா உயிரோடு இல்லை...

என் விருப்பப்படி என் ஆராய்ச்சிகளை மீண்டும் நான் துவங்கணும். நான் யாருன்னு இந்த உலகத்துக்கு ப்ரூவ் பண்ணணும். இந்த உலகத்திலேயே மிகப்பெரிய அண்ட அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களில் என்னுடைய நிறுவனம் தான் முதலிடத்திற்கு வரணும், அதற்கு ஜீவன் எனக்கு வேணும் மாயன். எப்படியாவது அவனை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துடு, ஆனால் உயிருடன்.”

ஏறக்குறைய தொண்டைக் கிழிய கத்திய எஜமானனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ஜீவனைத் தேடும் முயற்சியில் அந்த இயந்திர மனிதன் ஈடுபட்டதில், அடுத்தச் சில நாட்களிலேயே ஜீவனின் இருப்பிடம் கண்டு பிடிக்கப்பட்டது.

*********************************************

அன்றைய விடியல் தனது வாழ்நாளில் பெரும் சோகத்தைத் தன் கண்முன் கொண்டு வரப் போகின்றதை, தனது நெடுங்காலக் கனவு சடுதியில் கலையப் போகின்றது என்பதை அறியாதவளாக விழித்த அஹானா, லெவின் அழைத்து வரச் சொன்னதாக ஜீவனிடம் தெரிவித்தாள்.

“என்னை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வர வழைச்சிருக்காரா அஹானா?”

“தெரியலை ஜீவன், அதைப் பற்றி அவர் பேசலை. அதுவும் இல்லாமல் இங்க எங்களது அரசாங்கத்திடம் சொல்லாமல் நாங்க இது போன்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது ரொம்பப் பெரிய குற்றம். இன்னும் சொல்லப் போனால் உங்களை யாருக்கும் தெரியாமல் இப்படி மறைச்சு வச்சிருக்கிறதே தப்பு.”

“புரியுது அஹானா. ஆனால் எனக்கு இருக்கிற ஒரே ஒரு சந்தேகம் இது தான். நீங்க எல்லாம் சொல்றதை வச்சுப் பார்த்தால், என்னைப் பார்த்த நிமிஷமே நான் அடிபட்டு கிடந்த அந்த ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸுக்கும் என்னைப் பற்றித் தெரிஞ்சிருக்கணுமே, ஏன் அவங்க யாருமே என்னைப் பற்றி உங்க அரசாங்கத்திடம் தெரிவிக்கலை.”

“நான் சொன்னது போல் வேற்றுக் கிரகவாசிகளைக் கண்டு பிடிக்கிறதுக்குன்னு இங்க ஏகப்பட்ட ரிசேர்ச் செண்டர்ஸ் இருக்கு ஜீவன். அதுல ஒன்றுக்கும் அவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம். அந்த நிறுவனத்தோட இணைஞ்சு அந்த டாக்டர்ஸ் மறைமுகமா வேலை செய்துட்டு இருக்கலாம். அதனால் யாருக்கும் தெரியாமல் உங்களை வைச்சு அவர்கள் ஆராய்ச்சியைத் துவங்க எண்ணி இருக்கலாம். அதனால் தான் உங்களுடைய மூளைக்குச் சிப்ஸ் வைப்பது மாதிரியான ஆப்ரேஷன்களை அவர்கள் செய்திருக்கணும். ஆனாலும் எப்படி நீங்க அங்க இருந்து தப்பிச்சிங்க, அவர்களால் எப்படி நீங்க வெளியேறுவதைக் கண்டுப்பிடிக்க முடியாது போனதுங்கிறது தான் எங்களுடைய பெரிய ஆச்சரியமே. எனிவேய்ஸ், லெவின் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாரு, கிளம்புங்க."

அவன் தோள் பற்றி விளக்கம் அளித்தவள் லெவின் செய்திருக்கும் மனித இயந்திரங்களுடன் வெகு பாதுகாப்பாய் 'லெவின் சயின்ஸ் பார்க்' நிறுவனத்தை நோக்கி தானியங்கி காரில் செல்ல, அவர்களைத் தொடர்ந்து மாயனின் வாகனமும் அஹானாவோ லெவினோ அறியாத வகையில் வெகு ஜாக்கிரதையாய்த் தொடர்ந்தது.

************************************************

“வெல்கம் ஜீவன். எப்படி இருக்கு எங்க உலகம்?”

இது எல்லாம் எங்கள் உலகத்தில் சர்வ சாதாரணம் என்பது போல் புன்னகையுடன் வரவேற்ற லெவினை நம்பிக்கையற்றப் பார்வையுடன் பார்த்த ஜீவன், அவர் பணித்தது போல் அவருக்கு அருகில் போடப்பட்டிருந்த ஆய்வு படுக்கையில் படுக்க, அவனது கரத்தினை இறுக்கப் பற்றிக் கொண்டாள் அஹானா.

“நீங்க பயப்படுறது எனக்குப் புரியுது ஜீவன், ஆனால் லெவினை நீங்க நிச்சயமா நம்பலாம். நான் ஏற்கனவே சொன்னது போல் அரசாங்கத்துக்குத் தெரியாமல் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைச் செய்யக் கூடாது, ஆனால் அப்படி உங்களைப் பற்றிய விஷயங்கள் வெளியே தெரிஞ்சால் நீங்க இந்த அரசாங்கத்துக்குச் சொந்தமாகிடுவீங்க. பிறகு உங்களுக்கு என்ன வேணாலும் நடக்கலாம், அதான் இங்க உங்களை இரகசியமா ஆராய்ச்சி செய்யறதுக்குக் கூட்டிட்டு வந்திருக்கோம். என் மேலயும், லெவின் மேலேயும் நம்பிக்கை வைங்க.”

வந்திருப்பதோ வேறு உலகத்தில் இருந்து!

இதில் கடந்த இரு மாதங்களாகத் தான் அஹானா என்ற இந்தப் பெண்ணையே தெரியும்.

இதில் இவள் மேல் நம்பிக்கை வைப்பதென்றாலும் பரவாயில்லை, மனிதர்களே அல்லாது செயற்கையாகக் குழந்தைகளை உருவாக்கும் வித்தையில் முக்கிய ஆளான இந்த விஞ்ஞானியின் மீது எப்படி நம்பிக்கை வைப்பது என்ற ஐய்யுறவுத் தோன்றினாலும், ஏனோ அஹானாவால் மட்டுமே தன்னைக் காப்பாற்ற முடியும் என்ற அளப்பரிய நம்பிக்கையில் லெவினின் ஆராய்ச்சிக்கு மீண்டும் பணிந்தான் ஜீவன்.

அவனைப் பற்றிய ஆராய்ச்சிகளை லெவின் இரகசியமாகத் துவங்கிய அதே நேரம் சரியாகக் கணித்தது போன்று மாயனின் கார் அந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதிக்குள் நுழைந்தது.

ஆயினும் அவன் ஆய்வுக் கூடத்திற்குள் புகுவதற்கு முயற்சிக்கவில்லை.

நேரம் செல்ல செல்ல அஹானாவின் உள்ளம் நிலை கொள்ளாது தவித்துக் கொண்டிருந்தாலும், அவளது கரங்களும் மூளையும் மட்டும் லெவினின் கட்டளைகளுக்குச் செவ்வனெப் பணிந்து கொண்டிருந்தது.

மணித் துளிகள் சில நீடித்த அந்த ஆய்வில் எதிர்பாராத விதமாகச் சில விஷயங்களைக் கண்டுப்பிடித்த லெவின் அஹானாவிடம் பகிர, அவர் கூறிய தகவல்களைக் கேட்டு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், ஒரு பக்கம் திகைப்பாகவும் உணர்ந்தாள் அவள்.

“யெஸ் அஹானா. இதே மாதிரி வேற்றுக் கிரகவாசி ஒருவர் நம்ம உலகத்திற்கு வந்தது உனக்குத் தெரியும். அவரை நோயலின் ஆராய்ச்சி மையத்தில் வைத்து தான் ஆய்வு செய்தாங்கன்னும் உனக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனால் ஏதோ ஒரு தவறு நடந்து அவர் இறந்துட்டாருன்னு உலகுக்கு அறிவிக்கப்பட்டாலும் அது என்ன தவறுன்னு வெளி உலகத்துக்கு நோயல் சொல்லவில்லை. ஐ மீன் ஒரு பொய்யான தகவலை மட்டும் தான் நோயல் சொன்னாரு, உண்மையை மறைச்சிட்டார்.”

“வாட்??? அது எப்படிச் சாத்தியம் லெவின்? எப்படி அவரால் உண்மையை மறைக்க முடிந்தது?”

“நடக்க இயலாத, நடக்கச் சாத்திய கூறே இல்லைன்னு நினைச்ச எத்தனையோ விஷயங்களை எவ்வளவோ ரிசேர்ச் செண்டர்ஸும், இன்ஸ்டிடியூட்ஸும் நடத்திக் காட்டலையா? அதே மாதிரி தான். எப்படி ஒரு விஷயத்தை வெளி உலகுக்குத் தெரியப் படுத்துவதுன்னு நோயலுக்குத் தெரியுமோ, அதே போல் ஒரு விஷயத்தை எப்படி ஒருவருக்கும் தெரியாமல் மறைப்பதுன்னும் அவருக்கு நல்லாவே தெரியும். இவ்வளவு நாள் நம்ம ஆராய்ச்சியைப் பற்றி, அதாவது சையானமிக்கல் ஜெனமிக் சீக்வென்ஸ் ஆராய்ச்சியைப் பற்றி நம்மால் இரகசியமாக வைக்க முடிந்தது, இல்லையா? அது மாதிரி தான் இதுவும். ஆனால் எப்போ நானும் நோயலும் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோமோ, அப்பவே எங்க உயிருக்குக் கூட ஆபத்துக்கள் வர வாய்ப்பிருக்குன்னு புரிஞ்சது. அதனால் தான் நாங்க ரெண்டு பேரும் ஒரு முடிவெடுத்தோம். எங்களுடைய ஆராய்ச்சிகளில் சிலவற்றை நாங்கள் எங்களுக்கு இடையில் பகிர்ந்துக்கணும், ஒருத்தர் இல்லைன்னாலும் மற்றொருத்தர் அந்த ஆராய்ச்சியைத் தொடரணும்னு முடிவு செஞ்சோம். அதில் ஒண்ணு தான் நோயலின் செனோஸ் வானியற்பியல் பகுப்பாய்வு."

"எனக்குக் குழப்பமா இருக்கு லெவின். என்னிடம் எவ்வளவோ விஷயங்களைப் பகிர்ந்துக்கிட்ட நோயல் ஏன் இது பற்றி என்னிடம் எதுவும் சொன்னதில்லை?"

"அதற்குக் காரணம் உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை அஹானா. உன் மேல் அவருக்கு இருந்த அளவுக் கடந்த நம்பிக்கையே. ஐ மீன், உன் உயிரே போனாலும் அவருடைய ஆய்வுகளைப் பற்றி நீ வெளியே சொல்லமாட்டன்னு நோயலுக்குத் தெரியும். அப்படின்னா உண்மைகளை யார் கேட்டாலும் அதனை வெளியிடறதுக்குப் பதில் நீ உன் உயிரை விடத் துணிஞ்சிருவேங்கிற பயத்தில் தான் அவர் உன்னிடம் இது பற்றிச் சொல்லவில்லை. அந்த அளவுக்கு அவர் உன்னை நேசிச்சார்."

பெற்றவர்கள் இல்லை என்று பல வருடங்களை அழுகையிலும் வேதனையிலும் கடந்து வந்தவளிற்கு இப்பொழுது நோயலைப் பற்றி லெவின் கூறியதும் மனம் மேலும் பாரமாகத் துவங்கியது.

ஆழ இழுத்து பெருமூச்சு விட்டவளை ஆறுதல் படுத்துவது போல் அவளது முதுகை தடவிய லெவின் தொடர்ந்தார்.

"அந்த வேற்று கிரகவாசியின் மரணத்திற்குப் பிறகு நோயல் அதனைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் அன்று நீ ஜீவனை என்னிடம் அழைத்து வந்ததற்குப் பிறகு கடந்த சில நாட்களாக நான் நோயலோட ஆய்வறிக்கைகளைக் ஆராய்ந்துட்டு வரேன். அதோட தொடர்ச்சியா நான் செய்த சில ஆய்வுகளின் படி கண்டுப்பிடிச்சதைத் தான் இப்போ உன்னிடம் பகிர்ந்து கொண்டேன், ஆனால் இன்னும் இந்த ஆய்வு முடிவடையவில்லை. இன்னும் நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதுவரைக்கும் இதனைச் சீக்ரெட்டாக வைக்க வேண்டியது நம் கடமை. ஒரு வேளை என்னுடைய ஆராய்ச்சி முடிவடையறதுக்குள்ள எனக்கு ஏதாவது நடந்துட்டால் நீ ஜீவனைப் பத்திரமாக அவர் உலகத்துக்கு அனுப்ப முடியுமான்னு பாரு. ஏன்னா இப்போ இருக்கிற நிலையில் இந்த உலகத்தில் அவரால் survive பண்ண முடியாது [தொடர்ந்து வாழ இயலாது]. அவர் இங்கேயே வாழணும்னு முடிவடுத்தால் அவரை இந்த உலகத்துக்கு ஏற்றவாறு நாம் மாற்ற வேண்டும். அதற்குப் பிறகு தான் இந்த உலகம் அவருக்குப் பாதுகாப்பானதுன்னு நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அது வரை ஜீவனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.”

அவர் கூறி முடிக்கவும், ஜீவன் கண் விழிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

அதே கணம் சொல்லி வைத்தார் போன்று அவர்கள் இருந்த ஆய்வுக் கூடத்து அறைக்குள் நுழைந்தான் மாயன்.

ஏழு அடி உயர மனித இயந்திரம்.

ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன் நோயலின் ஆராய்ச்சி நிலையத்தில் பார்த்து, தான் அதிசயத்துப் போன மனித இயந்திரத்தை மீண்டும் கண்டதில், அதிர்ச்சியில் படுத்திருந்த ஆய்வுப் படுக்கையில் இருந்து விருட்டென எழுந்த ஜீவனுக்கு, தன்னைக் கண்டதும் மெல்லியதாக ஒரு புன்சிரிப்பை வீசிய மாயனின் தோற்றம் பெருந்திகிலைக் கொணர்ந்தது.

அன்று இவனால் என்னைச் சரியாக அடையாளம் காண இயலவில்லை, ஆனால் இன்று முடிகின்றது.

அதற்குக் காரணம் இவனது படைப்பாளியாக இருக்குமோ?

ஜீவனின் உள்ளத்திற்குள் தோன்றிய கேள்வியை அவன் கூறாமலேயே புரிந்து கொண்டது போல் மீண்டும் ஒரு மென்னகை மாயனின் உதடுகளில்.

மனித தோல் கொண்டு போர்த்தப்பட்டிருந்த வலிமையான அவனது தேகமும், இரும்பு மனிதன் நான் என்பதைச் சொல்லாமல் சொல்லிய அவனது நரம்புகள் புடைத்த புஜங்களும், மனிதர்களுக்கு இணையாக அழகாய் சிலும்பிக் கொண்டிருந்த அவனது பழுப்பு நிறக் கேசமும் அந்த இயந்திர மனிதனை ஆணழகனாகவே எடுத்துக் காட்டியது.

ஆயினும் அவனது வெள்ளை வெளேர் முகத்தில் பளபளக்கும் பச்சையும் நீலமும் கலந்த கண்களும், உதடுகளை விரிக்காது இகழ்ச்சியாய் அவன் சிந்தும் புன்னகையும் ‘என் உருவத்தைக் கண்டு ஏமாந்துவிடாதே!’ என்று எச்சரிப்பது போலே தோன்றியது.

“லெவின், இவன் டானியலோட ஆள். இவன் தான் நோயலும் ஹில்டனும், மற்ற எல்லாருமே சாகுறதுக்குக் காரணமானவன். இவன் எப்படி இங்க வந்தான் லெவின்? எங்க பாதுகாப்புக்காக எங்களுடன் வந்த உங்களுடைய ரோபோக்கள் எங்க? எல்லாச் செக்யூரிட்டியையும் மீறி இவன் எப்படி இங்க வந்தான்??”

தொண்டை வெடிக்க, மார்பு துடிக்கக் கத்திய அஹானா ஜீவனின் கையைப் பற்றி இழுத்தவாறே மறைவிடத்தினை நோக்கி ஓட, ஒரு விநாடி திகைத்து நின்று பிறகு அஹானாவின் பின் ஓடிய லெவினைக் கண்டு சிறிது சத்தமாகவே சிரித்தவாறே அவர்களை நிதானமாய்த் தொடர்ந்தான் மாயன்.

உங்களைப் பிடிப்பதில் எனக்குச் சிரமமே இருக்கப் போவதில்லை என்பது போல் வெகு அலட்சியமாய் அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்தவன் அவர்களை நெருங்குவதற்குள் லெவினின் கட்டளைப்படி ஒரு அறையை அடந்தனர் மூவரும்.

“அஹானா, ஜீவன்.. இந்த ரூமுக்குள்ள போங்க.”

அலறிய லெவின் அஹானாவும் ஜீவனும் நுழைந்ததும் அங்கு நீர் திரையில் சில எண்களைப் படபடவென அழுத்தியதில் சப்தமேதும் இல்லாது அந்த அறைக் கதவுகள் மூடப்பட்டன.

அந்த அறையைச் சுற்றிலும் தண்ணீரில் மிதப்பதைப் போல் சிறிதும் பெரிதுமாய்த் திரைகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்ததையும், அவ்வப்பொழுது மின்னல்களைப் போன்று கீற்றாய் வெளிச்சம் பளிச் பளிச்சென்று அறை முழுவதுமே மின்னியதையும், கண்களுக்கு முன் எண்களும் ஏதேதோ வடிவங்களும் வளைந்தும் நெளிந்தும் தோன்றியும் மறைந்தும் கொண்டிருந்ததில், அது அவர்களது ஆய்வகத்தின் மிகவும் முக்கியமான அறை என்று உணர்ந்து கொண்டான் ஜீவன்.

“ஜீவன், இந்த ரூமில் இருக்கிற வரை அவனால் இதுக்குள்ள நுழைய முடியாது. பட் நான் இங்கேயே இருக்கவும் முடியாது. அவனை எப்படியும் அழிச்சு தான் ஆகணும்.”

“எப்படி லெவின்?”

“என்னால் மட்டும் தனியா அவனை அழிக்க முடியும்னு தோணலை. நம்முடைய எல்லா மனித இயந்திரங்களையும், பாதுகாப்பு இயந்திரங்களையும் அவன் அழிச்சிட்டு தான் நம்ம ஆய்வு கூடத்திற்குள்ளேயே நுழைஞ்சிருக்க முடியும், அப்படின்னா அந்த அளவுக்கு அவன் சக்தி படைச்சவன். அதனால் அவனை அழிக்கிறதுக்கு நீங்க எனக்கு உதவி செய்யணும் ஜீவன்?”

“நானா?”

“யெஸ், அஹானாவை என்னால் இதற்கு உபயோகப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால் அவள் வயிற்றில் வளரும் கரு அழிஞ்சிடும். அப்படி நடந்தால் எங்க ஆராய்ச்சியே தோல்வி அடைஞ்சிடும். அதுவும் இல்லாமல் முதலில் அவன் உங்களை எப்படியாவது அவன் கைக்குள் அகப்படுத்த நினைப்பான். அதனால் நான் உங்களைத் தான் முதலில் மாற்ற வேண்டும். பிறகு நான் என்னை மாற்றிக் கொள்கிறேன்.”

“மாற்றுவதா?”

புரியாமல் விழித்தவனின் தோள் பற்றியவர்,

“இன்னைக்கு உங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினதில் சில ப்ரோக்ராம்ஸை நான் உங்களுக்குள் புகுத்தி இருக்கேன். அதை நான் இன்னும் ஆக்டிவேட் செய்யலை, செய்தால் என்ன ஆகுமோ, இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சிகளைச் செய்துட்டு பிறகு ஆக்டிவேட் செய்யலாமான்னு நினைச்சேன். ஆனால் இப்போ அதற்கு நேரமில்லை. எப்படியும் அவனிடம் இருந்து நாம் தப்பிக்கணும். நீங்க மனிதனாக மட்டும் இருந்தால் அது சாத்தியம் இல்லை.” என்றதில், பெரும் பதற்றத்துடன் இருந்தாலும் அவர் என்ன கூற வருகின்றார் என்பது ஜீவனுக்குத் தெளிவாகப் புரிந்து போனது.

ஆயினும் வேறு வழியில்லை.

தனக்காக இல்லாவிடனும் தனது வலது கரப் புஜத்தை அவளது இரு கைகளாலும் இறுக்கப் பற்றிக் கொண்டு, அச்சத்தில் மேனி நடுங்கியவாறே தன்னை ஒட்டிக் கொண்டு நிற்கும் அஹானாவிற்காவது தான் இதைச் செய்தே ஆக வேண்டும்.

“இதுல யோசிக்க அவசியம் இல்லை லெவின். கமான் ஆக்டிவேட் செய்யுங்க.”

“ஜீவன், இந்த விஷயத்தில் தான் நிறையத் தடவை நோயல் தோற்றுவிட்டார். அந்த ப்ரோக்ராம்ஸை நான் ஆக்டிவேட் செய்தால் உங்களுடைய மூளை இதயம் உட்பட உடலின் உறுப்புகள் அதனைத் தாங்கும் சக்தி இல்லாது அழிந்துவிடவும் வாய்ப்பிருக்கு. என்னால் முடிஞ்சவரை அந்தக் கோட்ஸை நான் மாற்றியிருக்கேன், ஆனால் இது வரை நான் அதை டெஸ்ட் பண்ணியதில்லை."

அவர் என்ன கூற வருகின்றார் என்பது புரிந்துக் கொண்டவனாய் பேசத் துவங்கும் முன், அவனது கரத்தை மேலும் அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டவளாய்,

"இதில் தவறு ஏதேனும் நடந்தால் உங்க உயிருக்கு உத்தரவாதமில்லை ஜீவன். I mean you might die." என்று நடுங்கும் குரலில் தடுமாறியவாறே கூறும் அஹானாவைத் திரும்பிப் பார்த்தான்.

அவளது கலங்கிய கண்களும் துடிக்கும் உதடுகளும் வதங்கிய முகமும் யாரையோ நினைவு படுத்த, எதற்கும் துணிந்தவனாய் லெவினை நோக்கியவன், “Come on Levin. I am ready.” என்றதுமே மீண்டும் அந்த நீர் திரைகளில் எண்களை அழுத்த துவங்கினார் லெவின்.

வேறு ஒரு உலகத்தில் மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழ்ந்து வந்த ஜீவன் (அமரஜீவன்), அந்தப் புதுப் பிரபஞ்சத்தில் அடுத்தச் சில விநாடிகளில் இயந்திர மனிதனாக உருப்பெற்றான்.

சிரஞ்சீவிதம்..

The Journey of an Immortal!

தொடரும்...


References:

Noel xenos astrophysics analysis - நோயலின் செனோஸ் வானியற்பியல் பகுப்பாய்வு

MULTIVERSE EXPLAINED IN TAMIL | பல்லண்டம் (Multiverse):

5 Types Of Universes :- Infinite Universes, Bubble Universes, Parallel Universes, Daughter Universes, Mathematical Universes.

The multiverse is an architecture of puzzles and paradoxes. Other universes are all around us; we can’t see or touch them.

Theoretical physics suggests a multiverse is a hypothetical grouping of multiple universes. This means that our Universe could be just one tiny universe in a much larger multiverse where many, possibly even infinite universes, are contained.

Eternal cosmic inflation theory-> This theory starts with the Big Bang. It is suggested that as our universe expanded into existence, it started off rapidly, then slowed—like when you inflate a balloon. This rapid expansion created our universe, but also other universes in a vast bubble-like multiverse. While parts of the universe stopped the extremely rapid “inflationary” expansion and “budded off” to become normal space, large parts of the universe have continued to inflate even now. Those inflating portions keep spawning new bubble universes. It will never stop—with uncounted trillions of new universes budding off every second.Some of the bubbles in the multiverse are still hot and expanding quickly, while others, like our own universe, have slowed and cooled to allow for the formation of stars, planets, galaxies, etc. The universal laws of physics that we know and understand in our own universe may not be applicable to other universes. It’s possible they would differ from bubble to bubble.

Examples:

The Green Children of Woolpit: Legendary Visitors from Another World -> https://www.ancient-origins.net/myths-legends-europe/green-children-of-woolpit-002347

Four girls, returning from a Utah rodeo in May of 1972, were plucked from this universe and thrust into a world of bizarre terror.-> https://beforeitsnews.com/beyond-sc...s-sucked-into-alternate-universe-1700705.html

 

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,

சென்ற அத்தியாயத்தில் இருந்து சிரஞ்சீவிதம் கதையின் சாராம்சம் புரிந்திருக்கின்றும் என்று நம்புகின்றேன்.

12 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்து நாட்டின் ஸஃபோல்க் என்ற இடத்திற்கு அருகேயுள்ள வுல்பிட் என்ற ஊரின் வயல் ஓரத்தில், அறுவடை நேரத்தில், ஓநாய்களைப் பிடிக்கத் தோண்டப்பட்ட சில அகழிகளுக்கு அருகில், பச்சை நிற தோலுடன் ஒரு சிறுவனும், சிறுமியில் அழுது கொண்டே அமர்ந்திருப்பதாகக் கேள்விப்பட்டு மக்கள் ஓடிச் சென்று பார்த்திருக்கின்றனர். நம் உலகத்துக்கு அறிமுகம் இல்லாத பொருட்களைக் கொண்டு அவர்களின் ஆடைகள் செய்யப்பட்டிருக்கின்றது. அவர்கள் பேசும் பேச்சு வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்குப் புரியவில்லை.

இறுதியில் அவர்கள் வில்கேஸில் உள்ள உள்ளூர் நில உரிமையாளர் ரிச்சர்ட் டி கெய்னின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர். குழந்தைகள் பட்டினியாக இருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்படும் எந்த உணவையும் சாப்பிட மறுத்திருக்கின்றார்கள்.
இறுதியில், கிராம மக்கள் சமீபத்தில் அறுவடை செய்த அவரைகளைக் கொண்டு வந்து கொடுத்திருக்கின்றனர். அதை அந்தக் குழந்தைகள் சாப்பிட்டு இருக்கின்றனர். வெறும் அவரைகளை மட்டும் உட்கொண்டு வாழ்ந்து வந்த சிறுவர்களில், அந்தச் சிறுவன் சில நாட்களிலேயே இறந்து போயிருக்கின்றான். அந்தச் சிறுமி மட்டும் எப்படியோ பிழைத்திருக்கின்றாள்.

பிற்காலத்தில் அந்தக் கிராம மக்கள் பேசும் மொழியைக் கற்றுக் கொண்டவள், தானும் தனது சகோதரனும் வாழ்ந்த ஊரில் சூரிய ஒளியே இல்லை என்றும், பூமிக்கடியில் இருக்கும் ஒரு புதிய இடத்திலிருந்து (வேற்று உலகம்?) இங்கு வந்ததாகவும் அப்பெண் கூறி இருக்கின்றாள்.. இச்சிறுவர்களின் ஞாபகமாக இன்றும் அவ்வூரின் வரவேற்புக் கம்பத்தில் இருவரின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அதுவும் அச்சிறுவர்களின் உருவங்கள் பச்சை நிறத்தில் இருப்பது போன்று!

உலகில் இது போன்ற சம்பவங்கள் சில நடந்துள்ளன. இவை அனைத்தும் உண்மையா என்பது நமக்குத் தெரியாது.. ஆனால் எப்பவோ எங்கேயோ படித்த இந்தப் பச்சை நிறக் குழந்தைகள் சம்பவம் (கதை?) எனக்குள் சில நேரங்களில் தோன்றிக் கொண்டே இருக்கும்..

அப்பத் தான் ஏன் நாம் வேற்றுலகக் கதை ஒன்று எழுதக் கூடாதுன்னு தோன்றியது.. அதில் இருந்து பிறந்தது தான் சிரஞ்சீவிதம்.. ஆனால் அதனை வெறும் வேற்றுலகக்கதையாகச் சொல்லாமல், என்னுடைய style -ல் சொல்லாம் என்று முடிவெடுத்தேன்.. ஆனால் நானே எதிர்பாராத அளவில் சிரஞ்சீவிதத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றது..

Thanks! Thanks! Thanks to you all and tons of hugs! 💘💘🤗🤗


JB
 

Selvi

Member
Ayioh, until I have forgotten Jeevan's girlfriend's name on earth. Now I am totally into other worlds.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top