JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Siranjeevitham - Episode 17

JLine

Moderator
Staff member
சிரஞ்சீவிதம்

அத்தியாயம் 17

எந்தப் பிரபஞ்சத்தில் பிறந்திருந்தாலும் பெண்களுக்கு அவர்கள் வயிற்றில் வளரும் கரு என்றால் உயிர் தானே?

தங்களது உயிரையும் இழக்கத் துணிவார்களே தவிர அவர்களது குழந்தையை இழக்க மனம் வருமோ? அது அவளது கருவில் உருவாகியதாக இருந்தாலும் சரி, தத்து எடுத்த குழந்தையானாலும் சரி.

அனைத்துமே குழந்தை தானே என்பதை அன்று அப்பிரபஞ்சத்திலும் நிரூபித்தாள் அஹானா.

மறு நிமிடமே ஜீவனின் உடலிற்குள், குறிப்பாக அவனது மூளைக்குள் புகுத்தப்பட்ட ப்ரோக்ராம்களை லெவின் செயல்படுத்த ஆரம்பிக்க, ஜீவனது கரத்தை இறுக்கப் பற்றியவளாய்,

“சாரி ஜீவன்.. உங்களை இது போன்ற ஆராய்ச்சிக்கு உட்படுத்தினதே ரொம்பத் தப்பு.. இப்ப என்னைக் காப்பாற்ற எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறீங்க?” என்று கூறிய அஹானா, அவனது உடலிலும் பார்வையிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்ததைக் கண்டதில் அவனை விட்டு சட்டென அகன்றாள்.

“அஹானா.. இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஜீவன் ஒரு சைபோர்க்காக [cyborg] மாறிட்டு வருகிறார்.. நான் ஏற்கனவே சொன்னது போல் இதற்கு முன் வேற்றுக்கிரகவாசிகளை வைத்து நாங்க செய்த சோதனைகள் வெற்றியில் முடியவில்லை, ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதைத் தவிர வேற வழியில்லாததால் இப்படிச் செய்ய வேண்டியிருக்கு.. இப்போ இருக்கிற ஜீவன், முழுசா சைபோர்க்காக மாறியதும் பழைய ஜீவன் மாதிரியே இருப்பாரான்னு எனக்குத் தெரியலை.. அதனால் எதுக்கும் நீ மறைந்துக் கொள்.. மாயனை நாங்க அழிச்சதற்குப் பிறகு உன்னை வந்து பார்க்கிறோம்.. ஒரு வேளை மாயன் என்னையும் ஜீவனையும் அழிச்சிட்டால், அவனிடம் இருந்து தப்பிக்கிறதுக்கான ஆயத்தத்தை முடிந்தவரை இப்பவே செய்துவிடு..”

படபடவென்று பேசிய லெவின் சில நிமிடங்களிலேயே ஜீவனை முழு இயந்திர மனிதனாக மாற்றிவிட்ட அதே வேளையில், பல மணித்துளிகளாக அவர்கள் இருந்த அறையின் கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்த மாயனும் தன் செயலில் வெற்றிக் கண்டான்.

அவர்களின் அறைக் கதவு உடைக்கப்பட்டது.

மூச்சுவிடும் அவகாசம் கூட இல்லாது அவ்விடத்தில் இருந்து ஓடியவளாக அஹானா தன்னை மறைத்துக் கொள்ள, அறை கதவுத் திறந்ததுமே உள்ளே நுழைந்த மாயனை பெரும் வியப்புக்குள்ளாக்கினான் ஜீவன்.

‘இது எப்படி நடந்தது? அதுக்குள்ளேயே ஒரு மனிதனை, அதுவும் வேற்று உலக மனிதனை சைபோர்க்காக மாற்றிவிட முடியுமா?’

மாயனின் சிந்தனைகளை அவனது இயந்திர மூளை அலையலையாக டேனியலிற்கு அனுப்ப, இந்தச் சில நாட்களுக்குள்ளேயே ஒரு வேற்று கிரகவாசியைத் தங்களின் உலகைச் சார்ந்தவனாக மாற்றிய லெவினை நினைத்துப் பிரமித்துப் போனாலும், விடாது போராடத் துணிந்தவனாக,

“மாயன், என்ன ஆனாலும் சரி.. எனக்கு அஹானாவும் வேணும்.. ஜீவனும் வேணும்..” என்று டேனியல் முடித்துக் கொள்ள, அங்கு இரண்டு மனித இயந்திரங்களுக்கிடையே மகாப் பெரிய போர் ஒன்று நடந்தது.

அவ்விடத்தில் நடந்த அனைத்துக் காட்சிகளையும் கடலுக்கடியில் தனது அறையில், மிதந்து கொண்டிருக்கும் திரையில் பார்த்துக் கொண்டிருந்த டேனியலை ஜீவனின் ஒவ்வொரு செய்கையும், அவன் சண்டையிடும் விதமும், மாயனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவன் முறியடித்துத் துவசம் செய்யும் நேர்த்தியும் மிதமிஞ்சிய வியப்பில் ஆழ்த்தியது.

டேனியல் அவனுடைய உலகத்து மனிதர்களைச் சந்தித்து இருக்கின்றான்.

அந்த மனிதர்கள் உருவாக்கிய இயந்திரங்களைக் கண்டிருக்கின்றான்.

மனிதர்களையும் இயந்திரங்களையும் கலந்த ரோபோக்களைப் பார்த்திருக்கின்றான், படைத்தும் இருக்கின்றான்.

ஏன் மாயனைப் போன்ற சைபோர்க்குகளை உருவாக்கியிருக்கின்றான்.

ஆனால் இது போன்ற ஒரு நுண்ணிய அறிவாற்றலை, சடுதியில் தன்னை நிலைப்படுத்திச் சண்டையிடும் ஸ்திரத்தன்மையை அவன் பார்த்ததில்லை.

கவனம், ஆவேசம், ஆயுதங்களையும் உபகரணங்களையும் கண்ட நொடியே அதன் செயல்பாட்டைத் துல்லியமாகக் கணித்து, அதன் வேகத்தைப் பயன்படுத்தி அவற்றை உபயோகப்படுத்தும் புத்திசாலித்தனத்தைக் கண்டதில்லை.

சமநிலை, சுயக்கட்டுப்பாடு, உணர்திறன் என்றனைத்தையும் ஒருவனிடத்தில் அவன் அதிநிச்சயமாய் எதிர்பார்க்கவே இல்லை.

அப்படி என்றால் யார் இந்த ஜீவன்?

இவன் வாழ்ந்த உலகத்தில் இது போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட மனிதர்கள் இருக்கின்றார்களா?

அவர்களுடன் நமது தொழில்நுட்பத்தையும், மென்பொருளையும், இயற்பியல் கோட்பாடுகளையும் இணைத்தால், வல்லவனுக்கும் வல்லவனாக மாறிவிடக் கூடிய அதிசயமான சைபோர்க்குகளை என்னால் உருவாக்கிவிட முடியும்.

அவர்களைக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை மட்டும் அல்ல, ஜீவன் என்ற இந்த மனிதன் வாழ்ந்து வந்த உலகத்தையும் என்னால் ஆட்சி செய்ய முடியும்.

அந்தச் சில கணங்களுக்குள் டேனியலின் மூளை திட்டங்களைத் தீட்டி முடித்திருந்தது.

ஆனால் அதற்குள் அங்கு மாயன் ஏறக்குறைய தோல்வியைக் காணத் துவங்கியிருந்தான்.

“மாயன், அவனை ஒண்ணும் செய்யாத.. அவனை விட்டுடு.. அவன் உயிரோட எனக்கு வேணும்.. அஹானாவை மட்டும் என்கிட்ட கொண்டு வா.. பிறகு அவனைப் பார்த்துக்குவோம்..”

டேனியலின் கட்டளைக்குச் சட்டெனக் கட்டுப்பட்டது அந்த மனித இயந்திரம்.

ஜீவன் தன்னைப் பிடிப்பதற்குள் சடுதியில் அவ்விடத்தில் இருந்து மாயமாய் மறைந்துப் போனவன் தன்னை மறைத்துக் கொண்டவனாக அந்த ஆய்வகத்தில் ஆங்காங்கு மிதந்து கொண்டிருக்கும் திரைகளில் ஒளிரும் வடிவங்களைக் கூர்ந்துக் கவனிக்க, அவனது மூளைக்குள் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் அழகாய் அஹானா ஒளிந்திருந்த இடத்தைக் கண்டறிந்தது.

மீண்டும் அதே மெல்லிய நகை அவனது முகத்தில்.

விருட்டென்று தான் மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளி வந்தவன் அஹானா இருக்கும் இடத்தை நோக்கி ஓட, அந்நொடி வரை அவனைக் காணாது தேடிய ஜீவனும் லெவினும் அவனது எண்ணம் புரிந்தவர்களாய் அவனை வழி மறைக்க, தனது கரத்தில் சுமந்திருந்த ஆயுதத்தைக் கொண்டு லெவினைத் தாக்கியவன் அவர் கீழே விழுந்ததும் அவரைக் காப்பாற்ற விழைந்த ஜீவனைப் புறக்கணித்தவனாய் அஹானா இருந்த இடத்தை அடைந்தான்.

அவள் என்னத்தான் தப்பிக்க நினைத்தாலும் மாயனின் இயந்திர பார்வையில் இருந்து அவளால் தப்பித்துக் கொள்ள முடியாது போனது.

அதே சமயம் லெவினின் உயிரைக் காக்க வேண்டிய அவசியத்தில் அஹானாவைக் காப்பாற்ற இயலாது ஜீவன் தவிக்க, தன்னை மாயனிடம் இருந்து தற்காத்துக் கொள்ள ஓடிய அஹானாவைப் பிடிக்க எண்ணிய மாயனின் இரும்புக் கரம் எதிர்பாராத விதமாக அவளது வயிற்றில் வேகமாய்ப் பட்டதில் அவளது கரு கலைந்து போனது.

ஏறக்குறைய இருபது வருடங்களாக அந்த உலகத்தின் பல ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு நிறுவனங்களின் அதிபர்கள் கண்டறிய முயற்சித்து, இறுதியாக நோயலும் லெவினும் சேர்ந்து கண்டிப்பிடித்த அவர்களது 'சயோனிக்கல் ஜெனமிக் சீக்வென்ஸ்'-ன் அடிப்படையே கலைந்து போனது.

அனைத்தும் ஒரு சில விநாடி நேரங்களில் நடந்து முடிந்துவிட, வயிற்றைப் பிடித்தவாறே அலறியவளாகக் கீழே விழும் அஹானாவை தன் கரங்களில் பிடித்த மாயன் ஒரு குழந்தையை ஏந்துவது போல் இலகுவாகக் கைகளில் ஏந்தியவனாய் அவ்விடத்தை விட்டு வெளியேறும் நேரம், ஜீவனிடம் அவர்கள் சென்று கொண்டிருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினார் லெவின்.

“ஜீவன், அஹானாவைக் காப்பாத்து..”

அலறியவாறே மயக்கத்தைத் தழுவியவரை கண்டு ஒரு கணம் திகைத்தாலும் அதற்குள் அந்தக் கட்டிடத்தின் வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்த மாயனிற்கு முன் அசுர வேகத்தில் வந்து நின்றான் மனித இயந்திரமான ஜீவன்.

“அவளை விட்டுடு..”

கரகரத்தக் குரலில் அவன் கூறுவதைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டாலும் இகழ்ச்சி நகையைச் சிந்தியவனாக அலட்சியமாக அஹானாவை தூக்கியவாறே மாயன் அவ்விடத்தை விட்டு நகர எத்தனிக்க, மீண்டும் அங்கு ஒரு இயந்திர போர் துவங்கியது, முன்னரை விட மிக உக்கிரமாக.

ஆனால் இந்த முறை அந்தப் போர் வெகு நேரம் நீடிக்கவில்லை.

மாயனின் ஒவ்வொரு பாகத்தையும் தாக்கத் துவங்கிய ஜீவன் அவனைக் கட்டுப்படுத்தும், அவனுக்கு உத்தரவுகளை இடும் பாகங்கள், அவனது நிலை குறித்த தரவுகளை அவனது எஜமானனுக்கு அனுப்பும் சென்சார்கள், மாயனின் நிலையின் காட்சி சித்தரிப்பை உருவாக்கும் கேமராக்கள், எதிராளியின் அருகாமையை உணரும் வெப்பநிலை மற்றும் எடையைக் கண்டறியும் வெப்பமானிகள், அளவீடுகள் என்று அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கத் துவங்க, இறுதியில் தொய்ந்து விழுந்தது மாயன் என்ற அந்தச் சைபோர்க்.

அவனது உயிரற்ற நிலையை உறுதிப்படுத்திக் கொண்டவாறே அஹானாவைத் தேடி சுற்றும் முற்றும் துலாவிய ஜீவன், அந்த அறையின் ஒரு மூலைக்குத் தூக்கி வீசப்பட்டிருந்தவளை, கருக் கலைந்ததில் வலியால் துடித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு அதிர்ந்தவனாய் அவளை நோக்கி ஓடியவன், அவளின் முகத்தை ஏந்தியவாறே, “அஹானா.. அஹானா, என்னைப் பாரு...” என்று கத்த, “ஜீ. ஜீ.. ஜீவன், எனக்கு ஒண்ணும் இல்லை, நீங்க லெவினைப் பாருங்க.. அவருக்கு எதுவும் ஆகக் கூடாது...” என்றாள், சன்னமான குரலில்.

ஒரு வேளை லெவின் இறந்துவிட்டால் பிறகு ஜீவனைப் பழைய நிலைக்கு மாற்ற இயலாது.

கடந்த சில நாட்களாகத்தான் ஜீவனைத் தெரியும் என்றாலும் இயந்திர மனிதனாக மாற ஒருகாலும் சம்மதிக்கக் கூடியவன் அல்ல அவன் என்பதும், இன்று இவ்வாறு அவன் தன்னையே மாற்றிக் கொண்டிருப்பது என் உயிரைக் காக்க தான் என்பதும் அஹானாவிற்கு நன்றாகவே புரிந்தது.

இந்த நிமிடம் அவளுக்குத் தன்னை விட ஜீவனின் நிலையே பெரிதாகத் தோன்றியது.

"ஜீவன், லெவினை செக் பண்ணணும் வாங்க.."

பதறியவளாய் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு மெள்ள எழுந்தவள் லெவின் கிடக்கும் இடத்தினை நோக்கி ஓட, அவளைப் பின் தொடர்ந்த ஜீவனும் லெவினை அடைந்தவன் அவரது உயிரை காக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டான்.

அவனது மூளையில் புகுத்தப்பட்டிருந்த நிரல்கள் [programmes] அவனுக்குப் பெரும் உபயோகமாக இருக்கச் சற்று நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவனால் லெவினைக் காப்பாற்ற இயன்றது.

“தேங்க்ஸ் ஜீவன்..”

“சார் ப்ளீஸ், என்னைப் பழைய படி மாற்றுங்க.. என்னால் மனிதத்தன்மையே இல்லாத ஒரு இயந்திரமா வாழ முடியாது.. ப்ளீஸ்..”

கரகரக்கும் குரலில் ஒரு இயந்திரம் பேசுவது போல் அவன் பேசினாலும், அதற்குப் பிறகு இருக்கும் வேதனை லெவினுக்கு நன்றாகவே புரிந்தது.

தங்களின் ஆராய்ச்சிகள் வெற்றி அடைவதற்கு இவனை, வேறு உலகத்தில் இருந்து வந்திருக்கும் இந்த அப்பாவி மனிதனைப் பலிக்கொடுப்பதா?

முடிவெடுத்தவராய் மீண்டும் நீர் திரையைத் தனக்கு முன் உருவாக்கியவர் எண்களையும் வடிவங்களையும் முன் போல் வடிவமைக்க, சிறிது சிறிதாகப் பழைய நிலைக்கு மாறத் துவங்கினான் ஜீவன்.

*********************************

லெவின் அமைத்துக் கொடுத்த அஹானாவின் புது இல்லம்.

படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த அஹானாவின் விழிகளில் இருந்து வழியும் நீர் மட்டும் நின்றபாடில்லை.

அவளது கண்களும், கண்ணீரும் மீண்டும் எதனையோ ஜீவனுக்கு நினைவுப்படுத்த, ‘இது போல் கண்ணீர் வழியும் கண்களை நான் எங்கோ பார்த்திருக்கின்றேனே.. இதே போல் ஒரு அழகிய முகமும் என்னை வேதனையுடன் பார்த்திருந்த காட்சியும் எனக்குள் உருவாகின்றதே.. யார் அவள்? நான் முன் இருந்த உலகத்தைச் சார்ந்தவளா?’ என்ற சிந்தனைகள் அவன் உள்ளத்தில் தோன்றி மறையத்தான் செய்தன.

ஆயினும் இது போன்ற சிந்தனைகளுக்கு இப்போது நேரமில்லை.

நான் ஒரு வேளை எனது உலகுக்குத் திரும்பிச் செல்ல முடியாது போகலாம்.. ஆனால் இப்போது எனக்கு இருக்கும் ஒரே கடமை அஹானாவை அந்த மறைந்திருக்கும் எதிரியிடம் இருந்து காப்பாற்றுவது தான்.

தீர்க்கமாய் முடிவெடுத்தவன் அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைத் தன் கையில் எடுத்துக் கொள்ள, அந்நாள் வரை ஒரு அனாதையைப் போல் வளர்ந்தவள், வளர்ப்புப் பிள்ளையாகப் பல வீடுகளில் வாழ்ந்தவளுக்குத் திடீரெனக் கிடைத்த இந்தப் பாசமும் கவனிப்பும் அளப்பரிய நிம்மதியைக் கொடுத்தது.

எக்காரணம் கொண்டும் ஜீவனை நான் இழக்க மாட்டேன் என்ற அசாத்திய பிடிவாதத்தையும், அவன் எந்த உலகத்தில் இருந்தும் வந்திருக்கலாம், ஆனால் அவன் இனி என்னவன் என்ற உரிமையையும் அவளுக்கு அவளே எதிர்பாராவண்ணம் கொடுத்தது.

***************************************

நம் பூமியில் மட்டும் தான் காலம் நகர வேண்டுமா? எந்தப் பிரபஞ்சமாக இருந்தாலும் காலம் என்ற ஒன்று இருக்கத்தானே வேண்டும்.

நமக்கு 365 நாட்கள், 52 வாரங்கள், 24 மணி நேரங்கள், 60 விநாடிகள், 1000 நுண்ணொடிகள்.. மற்ற பிரபஞ்சங்களும் காலத்தை இதே விதமாகக் கணக்கிட வேண்டும் என்ற அவசியமில்லை தான்.

ஆயினும் நேரம் என்ற ஒன்று இருக்க வேண்டுமல்லவா?

[ஒரு வேளை நேரத்தை நாம் அளவிடக் கூடிய கணக்கீடைப் போல் அவர்களதும் இல்லாது இருந்தால்.. எப்படி இருந்தால் என்ன, நம் உலகைப் போல் அங்கும் காலமும் நேரமும் கணக்கிடப்படுகின்றதாக எண்ணிக் கொள்வோம் வாசக நட்புக்களே.]

நாட்கள் நகர, இன்றோடு மாயனும், அஹானாவின் வயிற்றில் வளர்ந்து வந்த கருவும் அழிந்து ஒரு மாதக் காலமாகியது.

ஆயினும் அஹானாவால் மட்டும் அந்த இழப்பில் இருந்து வெளி வரவில்லை.

"மீண்டும் அந்த ஆராய்ச்சியைத் துவங்கிவிடலாம், கலங்காதே!" என்று பலமுறை லெவின் கூறியும் அவளால் அவ்வளவு எளிதாக அதனை எடுத்துக் கொள்ள இயலவில்லை.

அதற்கு இரு காரணங்கள்.

ஒன்று நோயலையும் சேர்த்து அவளுடைய குழுவினர் அனைவரும் இறந்துவிட்டனர்.

இரண்டு, தன் உயிரையும் சேர்த்து, தன்னை மட்டுமே உலகம் என்று இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவனையும் அவள் காப்பாற்ற வேண்டும்.

ஏற்கனவே தெரிந்த எதிரியான டேனியல் அவனைத் தேடிக் கொண்டிருக்கின்றான், ஆனால் தெரியாத எதிரிகள் எத்தனை பேர் தேடிக் கொண்டிருக்கின்றார்களோ?

அன்று காலை வழக்கம் போல் முன்னதாகவே எழுந்துவிட்ட ஜீவன் அஹானாவின் அறைக்குள் நுழைய, விழிகளில் இருந்து வழியும் கண்ணீரைக் கூடத் துடைக்காது அழுதவாறே கட்டிலில் படுத்திருப்பவளைக் கண்டு அவனது மனமும் வேதனையடைந்தது.

அவளது அருகில் வந்து அவன் அமர, தன்னிச்சையாக அவனது மடியில் தலை வைத்துக் கொண்டவளின் முடியைக் கோதியவாறே, “இப்படியே எவ்வளவு நாள் அழுதுட்டு இருக்கப் போற அஹானா?" என்றான் மென்மையாக.

அவள் பதில் பேசவில்லை.

“அஹானா, இந்த ஒரு மாசமா நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிட்டேன், ஆனால் நீ அழறதையும் நிறுத்தலை, நடந்த எதனையும் மறக்கவும் மாடேங்கிற.. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சிக் கிடந்தால் எப்படி? வா, இன்னைக்கு எங்காவது வெளிய போயிட்டு வரலாம்..”

வெளியில் சென்றால் தன் உயிருக்கு என்ன விதமான ஆபத்துக்கள் இருக்கின்றது என்று தெரிந்து தான் அவன் கூறுகின்றான் என்பதைப் புரிந்துக் கொண்டாலும், மெல்ல அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள், “நீங்க இந்த வீட்டுக்குள்ள இருக்கிற வரைக்கும் தான் உங்களுக்குப் பாதுகாப்பு ஜீவன்..” என்றாள்.

“ம்ப்ச்.. அதைத்தான் நீயும் லெவினும் மாற்றி மாற்றிச் சொல்லிட்டு இருக்கீங்க.. ஆனால் எத்தனை நாளு இப்படியே வீட்டுக்குள்ள முடங்கிட்டு இருக்கிறது? நீ இப்படியே இருந்தால் கண்டிப்பா டிப்ரஷனில் தான் முடியும்.. பாஸிட்டிவ்னு ஒண்ணு இருக்கிற மாதிரி நெகட்டிவின்னு ஒண்ணு இருக்கு அஹானா.. அதனால் என்னதான் நீங்க ப்ரெயின் சிப்ஸ் அப்படி இப்படின்னு பேசிட்டு இருந்தாலும், நீ இருக்கிற இதே நிலையில் தொடர்ந்து இருந்தன்னா, கண்டிப்பா அது உன் மூளையைப் பாதிக்கத் தான் செய்யும்.. Come on, let's go out..”

“இல்லை, எனக்கு என்னைப் பற்றிக் கவலையில்லை. உங்களைப் பற்றித் தான், நான் உங்களை இழக்கத் தயாரா இல்லை..”

தன் முடிவே இறுதியான முடிவு என்பது போல் அழுத்தமான தொனியில் கூறியவள் அவனைவிட்டு எழுந்துக் குளியல் அறைக்குள் நுழைய, ஆழ இழுத்து மூச்சு விட்டவனுக்கு அவளை எப்படிச் சமாளிப்பது என்று மட்டும் தெரியவில்லை.

நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள் சமையல் அறைக்குள் புக, அவளைப் பின் தொடர்ந்து வந்தவன், அவளுக்கு வெகு அருகே பின்னால் நின்றவாறே அவளது தோள்கள் இரண்டையும் மிருதுவாகப் பற்றினான்.

“நானும் இப்படியே இருந்துட முடியாதில்லையா அஹானா?”

“அதாவது என்னை விட்டுட்டு போறதுக்கு ரெடியா இருக்கீங்க, அப்படித்தானே? அதைத்தானே சொல்றீங்க?”

“ம்ப்ச்.. அப்படிச் சொல்லலை.. ஆனாலும்..”

முடிக்காது இழுத்தவனை நோக்கித் திரும்பியவள் விநாடி நேரம் அவனது கண்களை ஆழ்ந்துப் பார்த்தவாறே அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

“ஜீவன், நான் இந்தக் குழந்தையை என் வயிற்றில் சுமக்க ஏன் ஒத்துக்கிட்டேன் தெரியுமா?”

“ம்ஹூம்…”

“சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்தவ நான். நான் எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பெண். எனக்குக் கூடப் பிறந்தவங்கன்னு யாருமே கிடையாது. அதனால் சின்ன வயசிலேயே வெவ்வேறு வீடுகளில் நான் வளர்க்கப்பட்டேன். ஆனாலும் அவங்க வீட்டில் எல்லாம் நான் அவங்களுடைய மகளா வளர்க்கப் படலை. ஏதோ ஒரு ரோபோவைப் போலத் தான் என்னை ட்ரீட் பண்ணினாங்க. அப்பவே என் மனசுக்குள்ள ஒரு வெறித் தோணும்.. எனக்குன்னு யாருமே இல்லைங்கிறதால தான என்னை ஒரு உயிரா நினைக்காமல் இயந்திரமா நினைச்சு வளர்க்கிறாங்க. எனக்குன்னு ஒரு ஸ்திரமான நிலையை, ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கணும்னு அப்பவே, அந்தச் சின்ன வயசிலேயே நான் முடிவெடுத்தேன். அப்ப தான் நான் ஒலிவியாவை சந்தித்தேன்…”

கூறியவள் சற்று நேரம் எதுவும் பேச இயலாது தொண்டை அடைக்க அவன் நெஞ்சில் மேலும் தலையை அழுத்தமாகப் புதைத்துக் கொள்ள, ஜீவனின் கரங்கள் இவளை இறுக்கமாக வளைத்துக் கொண்டன.

பேச்சற்று மௌனியாக இருந்தவளுக்கு அவகாசம் கொடுத்து அவனும் அமைதியாக இருக்க, நொடிகள் சில கழித்து ஒரு வழியாகத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவள் மேலும் தொடர்ந்தாள்.

“நானும் ஒலிவியாவும் மீட் பண்ணிய போது எனக்குப் பண்ணிரெண்டு வயசு… யாருமே இல்லாத அனாதையா வளர்ந்து வந்த எனக்கு அவளுடைய நட்பு பெரிய ஆறுதலா இருந்தது.. என்னுடைய நல்லது கெட்டது எல்லாத்திலேயும் அவள் பங்கெடுத்துக்கிட்டா.. அப்படியே நாட்களும் கடந்தது.. என்னுடைய பதினைந்தாவது வயதில் திடீர்னு ஒரு நாள் என்னை ஒரு இடத்துக்கு வரச் சொன்னா.. அங்க தான் நான் யாதவைப் பார்த்தேன்.. அவனை எனக்கு அறிமுகப்படுத்தினா.. அப்பத்தான் தெரிந்தது நோயலுடைய ஆராய்ச்சி மையத்தில் யாதவ் வேலை செய்யறான்னு.. என்ன வேலைன்னு ஆரம்பத்தில் புரியலை, பட் என்னை ஒரு நாள் நோயலிடம் அறிமுகப்படுத்தி வச்சாங்க.. அங்க தான் நான் அவங்க செய்து வந்த ஆராய்ச்சிகளைப் பற்றித் தெரிஞ்சிக்கிட்டேன்.. நோயலுடன் சேர்ந்து யாதவ், மியா, லோகன்னு இன்னும் பல பேர் அவருடைய ரிசேர்ச் இன்ஸிடிட்டியூட்டில் படிச்சிட்டு இருந்தாங்க.. அவர்களுடன் என்னையும் சேர்ந்துக்கிட்டார் நோயல்.. நாள் ஆக ஆக நோயலுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிட்டது.. என்னுடைய தைரியம், எதையும் கற்றுக்கொள்ள வேணும்கிற ஆர்வம், இந்த உலகத்திற்கு நான் யாருன்னு காட்டணுங்கிற நோக்கில் நான் உழைக்கிற என்னுடைய வெறி, எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டார்.. அதனால் என்னை அவருடைய சில ஆராய்ச்சிகளில் பயன்படுத்த துவங்கினார்..

ஆரம்பிச்ச நாளில் இருந்து நோயலுடன் நான் இருந்ததினால், தனிமையில் அவருடன் இருக்கும் வாய்ப்பு அதிகம்.. அப்பத்தான் இந்த ‘xenos astrophysics‘ ப்ராஜக்ட்டை பற்றியும் நோயல் எனக்குச் சொன்னார்.. என் மேல் அதிக நம்பிக்கை வைச்சதினால் அந்த ஆய்வு அறிக்கைகள், ஆவணங்கள் எல்லாத்தையும் என்னைப் படிக்க வைத்தார்.. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைன்னாலும் ஏனோ நான் அதைப் பற்றித் தெரிஞ்சிக்கிறது நல்லதுன்னு அவர் ஃபீல் பண்ணினார், இது எனக்கும் நோயலுக்கும் லெவினுக்கும் மட்டுமே தெரியும்.. ஒருவேளை நீங்களோ அல்லது உங்களை மாதிரி ஒரு மனிதர் இங்கு வருவார், அவர் என்கிட்ட வந்து சேருவாருன்னு அவரு கணிச்சிருப்பாரான்னு எனக்குத் தெரியலை.. அஃப் கோர்ஸ், அப்படிக் கணிச்சிருக்க வாய்ப்பே இல்லை, ஆனால் அப்ப அவர் எனக்கு அறிமுகப்படுத்திய அந்த ஆராய்ச்சி இப்ப எவ்வளவோ உதவுது இல்லையா?

இவ்வளவு என் மேல் நம்பிக்கை வைச்ச நோயலுக்கும் லெவினுக்கும் நான் ஏதாவது செய்யணும்னு ஒரு உத்வேகம் என் மனசுக்குள்ள எப்பவும் இருந்துட்டே இருக்கும்.. அப்ப தான் ஒருவரும் முன் வர பயப்படுகின்ற சில ஆய்வுகளில் ஒரு ‘human subject’ ஆக, ‘study participant’ ஆக இருக்க ரொம்பத் துணிச்சலுடன் நான் சம்மதிச்சேன்.. அதன் மூலம் தான் இந்தச் 'சையோனிக்கல் ஜெனோமிக் சீக்வென்ஸ்' ப்ராஜக்ட் எனக்குக் கிடைச்சது..

அதில் நாங்க உருவாக்கிய மனிதக் கருவை சுமக்கிற வாய்பை நானாக முன் வந்து ஏற்றுக்கொண்டேன்.. இப்படி ஒரு சைண்டிஃபிக் ப்ரேக் த்ரூ என்னால் நடக்க வேணுங்கிற வெறியும் அதற்குக் காரணம்.. இந்தப் பிரபஞ்சம் இருக்கிற வரை என்னுடைய பெயரும் இருக்கும்.. நான் யாரு, என் சக்தி என்னன்னு காட்டிட்டோம்கிற பெருமையுடன் நான் வாழ்ந்து முடிச்சிடுவேங்கிற எண்ணத்தில் இருந்தேன்.. ஆனால் அதற்கு ஏற்பட்ட முதல் அடி என்னைக் காதலிக்கிறதா சொல்லி என்னை ஏமாற்றிய ஷான்.. அவனை நான் காதலிக்கவில்லை, ஆனாலும் எனக்குப் பாதுகாப்பா இருப்பான்னு நினைச்சு திருமணத்துக்கும் சம்மதம் சொன்னவ நான்.. ஆனால் அவன் டேனியல் அனுப்பின ஆள்னு என்னால் நம்பவே முடியவில்லை.."

சற்று நிறுத்தியவள் நீண்ட மூச்சு விட்ட தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பிறகு தொடர்ந்தாள்.

"ரெண்டாவது அடி, நோயல் மற்றும் என்னுடைய டீம் மேட்ஸ் மரணம்.. இன்னமும் அவர்களின் மரணத்தை என்னால் ஜீரணிக்கவே முடியலை.. மூன்றாவது அடி என் வயிற்றில் வளர்ந்த கரு கலைந்தது.. இதெல்லாம் நான் வாழ்க்கையில் ரொம்பவே தோற்றுப் போயிட்டனோங்கிற ஏமாற்றத்தை எனக்குக் கொடுக்குது ஜீவன்.”

அவளது ஆதங்கம் புரிந்தது.. அவளது ஏமாற்றம் புரிந்தது.. அவளது வலியும் வேதனையும் புரிந்தது.

ஆனால் அவளை ஆறுதல் படுத்தும் வழி மட்டும் தான் அவனுக்குப் புரியவில்லை..

ஏனெனில் எங்கு இருந்து அவனுக்குப் புலப்பட்டதோ, ஆனால் இந்த ஆராய்ச்சியை அவனால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.

அவளது அழுகை மேலும் பெருக, வேறு வழியின்றி அவளைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

சற்று நேரம் மௌனமாக இருந்தவன் அவளை அணைத்தவாறே முன்னறையில் இருந்த இருக்கையில் அமரச் செய்து அவளுக்கு வெகு அருகில் அமர்ந்து கொள்ள, அவனது தோள் வளைவுக்குள் தானாகப் புகுந்துக் கொண்டவள்,

“அதனால் தான் சொல்றேன் ஜீவன்.. ஏற்கனவே பல ஏமாற்றங்களினால் தவிச்சிட்டு இருக்கேன், இதுல உங்களையும் இழந்துட்டேன்னா அப்புறம் நான் வாழறதில அர்த்தமே இல்லை..” என்றாள் தத்தளிப்புடன்.

“உன்னுடைய தவிப்பும் வேதனையும் எனக்குப் புரியுது அஹானா.. ஆனால் நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு.. எனக்கு எப்படி இதெல்லாம் தோணுதுன்னு சரியா தெரியலை.. ஒரு வேளை நான் வந்த உலகம் உங்க அளவுக்கு அறிவியலில் முன்னேற்றம் அடையலையோ என்னவோ, எனக்குத் தெரியலை.. பட் நீங்க செய்யற இந்த ஆராய்ச்சி முற்றிலும் இயற்கைக்குப் புறம்பானதுன்னு மட்டும் எனக்குத் தோனுது.”

“புரியலை ஜீவன்..”

“This is an unethical research.. அதாவது ஒரு நெறிமுறையற்ற ஆராய்ச்சி.. இதற்கு எவ்வாறு உங்க அரசாங்கம் அனுமதி அளித்தது?"

“அப்படி இல்லையே ஜீவன். இயந்திரங்களை எப்போ நாங்க படைக்க ஆரம்பிச்சோமோ, அப்பவே மனிதர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சிடுச்சு. அதனால் மனிதர்களை உருவாக்குவது எங்க அரசாங்கத்தின் தலையாயப் பணி, கடமை, நோக்கம். ஆனால் அதே சமயம் பிறக்கும் குழந்தைகள் எந்த ஒரு மரபணுக் கோளாறுகளும் இல்லாமல் பிறக்கணும். அதே போல் இந்த உலகம் இன்னும் கொஞ்ச நாளில் மனிதர்களை முழுக்க இழக்க ஆரம்பிச்சிடும், அப்ப ஆண்களோட பற்றாக் குறையோ அல்லது பெண்களோட பற்றாக்குறையோ ஏற்பட நூறு சதவிகிதம் வாய்ப்பு இருக்கு..

இப்போ மனிதர்களால் கட்டுப்பட்டிருக்கும் மாயனைப் போன்ற சைபோர்க்ஸ், ரோபாட்ஸ் எல்லாம் இன்னும் சில காலங்களிலேயே மனிதர்களைக் கட்டுப்படுத்த துவங்கும்... பிறகு அவர்களை அவை அழிக்கவும் செய்யும்.. அப்படின்னா மனிதர்களே இல்லாது, வெறும் இயந்திரங்கள் மட்டுமே வாழற பிரபஞ்சமா எங்களுடைய பிரபஞ்சம் மாறும்.. பிறகு என்ன நடக்கும்? இயந்திரங்கள் இயந்திரங்கள் தானே, Transhumanism, அதாவது மனித நேயமற்ற தன்மை கொண்ட இயந்திரங்கள் என்ன செய்யும்? அதுங்களுக்குள்ளேயே போர் தொடுக்கத் துவங்கும்.."

அவள் கூற கூற அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் தனது மார்பில் சாய்ந்திருப்பவளைக் குனிந்துப் பார்த்தவனாய், "அதாவது Depersonalized Warfare ஆரம்பிக்கும் அப்படிங்கிற?" என்றான்.

“யெஸ்.. கண்டிப்பா.. இயந்திர மனிதர்களை நிறைய உருவாக்குவதினால் வரும் நன்மைகளுக்குச் சரிசமமா கெட்டதும் இருக்குன்னு நம்புறவ நான்.. அதனால் இந்த இயந்திரங்களால் தனிமனிதப் போர் கண்டிப்பா ஆரம்பிக்கும்.. அதாவது எந்த ஒரு புத்தம் புதிய டெக்னாலஜியை உருவாக்கும் போதே, அதனால் ஏற்படும் எதிர் விளைவுகளையும், அதைச் சமாளிக்கும் விதத்தினையும் கண்டுப்பிடிப்பாங்க எங்களது விஞ்ஞானிகள்...

ஒரு ரோபோவைக் கண்டு பிடிக்கும் போது, அது எந்த அளவுக்கு மனிதர்களுக்கு உதவியா இருக்க முடியும்னு யோசிக்கிறவங்க, அதே ரோபோ மனிதர்களை டேக் ஓவர் பண்ணினால், அதாவது மனிதர்கள் கட்டளைப்படி நடக்காது அவை தானா சிந்திக்கத் துவங்கினால் என்ன ஆகும்னு யோசிக்காத ஒரு விஞ்ஞானி இருக்க முடியாது.. அது மாதிரி தான் இதுவும்..

எங்களுடைய உடம்பில் மூளைத் துவங்கி ஒவ்வொரு பாகமும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கு, அதாவது பையாலாஜிக்கலா இல்லை நான் பையாலாஜிக்கலா [Biological or non-biological]. தெளிவா சொல்லணும்னா இப்போ உங்களுடைய உடலின் பாகங்களை இணைப்பது தோல், தசைநாண்கள், மூட்டுகள், தசைநார்கள், இரத்த நாளங்கள், அணுக்கள் தான்னு நானும் லெவினும் கண்டு பிடிச்சிருக்கோம். ஆனால் எங்க உலகத்தில் அது மட்டும் இல்லை. எங்களுடைய உலகத்தில் ஒரு மனிதனை உருவாக்குவது வேண்டுமானால் இன்னொரு மனிதனாக இருக்கலாம், ஆனால் அதற்குப் பிறகு அவனைச் செயல்படுத்த வைக்கிறது டெக்னாலஜி.. மாயனைப் போல்..

மனிதர்களின் அனைத்து உணர்ச்சிகளும், அதாவது அன்பு, பாசம், காதல், நெகிழ்ச்சி, பெருமை, வெட்கம், கோபம், மகிழ்ச்சி போன்ற நல்ல உணர்ச்சிகளை அழிச்சிட்டு, வெறும் நெகட்டிவ் உணர்ச்சிகளான கோபம், ஒருவனை அழிக்கணுங்கிற வெறி, ஆவேசம், கர்வம் இவற்றை மட்டும் இயந்திரத்தின் மூளைக்குள்ளே செலுத்த முடியும்.. உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அவன் உடலுக்குள் புகுத்தி மரணத்தைக் கூடத் தோற்கடிக்க முடியும். ஆனால் நல்ல வேளை இது நாள் வரை அது மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கலை.

பட், இரகசியமா டேனியல் மாதிரியான ஆளுங்க அந்த ஆராய்ச்சிகளைச் செய்து, அதில் வெற்றியும் காண வாய்ப்பிருக்கு. ஒருவேளை அந்த மாதிரியான சூழ்நிலை உருவாகி, எங்க இருந்து வேணும்னாலும், அதாவது கடலுக்கடியில் இருந்து கூட மனிதர்களின் பிரசன்னமே இல்லாது போர் ஆயுதங்களை எங்களுடைய உலகத்தின் மேல் வீச முடியுங்கிற சூழ்நிலைகள் உருவாகியது என்றால் என்ன ஆகும்? எங்களுடைய உலகம் முழுதுமா அழிஞ்சிடும்.. அதற்காகத் தான் இந்த ஆராய்ச்சியே.. So this is not an unethical solution, this is an evolution.” என்ற நீண்ட விளக்கத்தைக் கூறி முடிக்க, ஜீவனின் புத்தியை இப்பொழுது ஆக்கிரமித்து இருந்தது ஒரே ஒரு கேள்வி.

"அப்படின்னா எதுக்கு டேனியல் உன்னைத் தேடி மாயனை அனுப்பணும்? நான் புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் மாயனுக்கு உன்னைக் கொல்லணுங்கிற திட்டம் இல்லை, உன்னைத் தூக்கிட்டுப் போகணுங்கிற திட்டம் மட்டும் தான் இருந்தது.. அப்ப உன்னை வச்சி டேனியல் என்ன செய்ய நினைத்திருப்பான்?"

"டேனியலோட அப்பாவுக்கு இயந்திரங்களை மட்டும் கண்டுப்பிடிக்கிற திட்டம் கிடையாது, மனிதர்களையும் உருவாக்கணும்.. இது தான் அவருடைய லட்சியம்.. ஆனால் டேனியல் அப்படி அல்லன்னு நோயல் என்னிடம் சொல்லிருக்காரு.. அவனுக்கு மனிதர்களையும் உருவாக்கணும், ஆனால் சாதாராண குழந்தைகளை இல்லை.. பிறப்பதற்கு முன்னரே அந்தக் கரு அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வர மாதிரியான குழந்தைகளை உருவாக்கணும்.. அதற்காகத் தான் எங்களுடைய ஆராய்ச்சியின் போதே எங்களிடம் இருந்து ஆவணங்களைத் திருட அவன் எவ்வளவோ முயற்சித்தான்.. காரணம் கடந்த இருபது வருடங்களாக நோயலின் நிறுவனம் போராடி பாடுபட்டு இந்த ஆராய்ச்சிகளை முழுமையா வெற்றிகரமாக முடிச்சிருக்காங்க.. ஸோ, செயற்கையா ஒரு மனிதனை எவ்வாறு உருவாக்குவது அப்படிங்கிற ஒரு முடிவிற்கு நோயல் மற்றும் லெவினின் நிறுவனம் வந்தாச்சு.. அந்த முடிவினை தன் கையில் எடுத்து அதில் சில மாற்றங்களைச் செய்து, அந்த மனிதன் பிறக்கும் போதே தனது கட்டளைக்கு அடி பணிபவனா, அதாவது டேனியல் அப்படிங்கிற ஒரே ஒரு மனிதனுக்கு மட்டும் அடி பணிபவனா உருவாக்கணுங்கிறது தான் அவன் திட்டம்னு நோயல் எங்களிடம் சொல்லிருக்காரு.. அதற்காகத் தான் அவன் என்னைக் கடத்த நினைச்சது.. என் வயிற்றில் இருக்கும் கருவிற்குள் அவன் தனது ப்ரோக்ராம்ஸை புகுத்தினால் அவன் எதிர்பார்க்கும் மனிதன் உருவாகும் வாய்ப்பு இருக்கு..”

அவள் சொல்வது இப்போது ஜீவனுக்கு நன்றாகவே புரியத் துவங்கியது.

இது தான் இந்த உலகம்.. இந்த உலகத்திற்குத் தேவையான ஒன்றைத் தான் இவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றார்கள்.

அதே போல் அவளைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தும் அவனுக்குத் தெள்ளத்தெளிவாகப் புரிந்து போனது.

"இப்போ உன் கரு கலைஞ்சிடுச்சு, அது மாயனுக்கும் தெரிஞ்சிருக்கணும்.. இருந்தும் அவன் ஏன் உன்னைத் தூக்கிட்டுப் போக நினைச்சான்?"

"இப்போ உயிரோடு இருக்கிறவர்களில் இந்த ஆராய்ச்சியைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை எனக்கும் லெவினுக்கும் மட்டுமே தெரியும்... ஆனால் லெவினை விட நான் அவனுக்கு ரொம்ப உபயோகமா இருப்பேன்.. காரணம் நான் ஒரு பெண்.. அதுவும் இல்லாமல் இது நாள் வரை எங்களுடைய ஆராய்ச்சியின் கருவை சுமந்திருந்தவள் நான்.. இனி வேறு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவள் வயிற்றில் ஒரு அதிசய கருவை உருவாக்குவதை விட, என் வயிற்றில் உருவாக்குவது அவனுக்கு எளிது.. ஸோ, நான் மட்டும் தான் அவனுக்குத் தேவை.. என்கிட்ட இருந்து ஆராய்ச்சியைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு என்னையே திரும்பவும் அவன் ஆய்வுக்கு உட்படுத்துவான்.."

“சரி, இப்போ உன்னுடைய அடுத்த ஸ்டெப் என்ன?”

“நான் திரும்பவும் அந்த ஆராய்ச்சியைத் துவங்கணும் ஜீவன்.. இந்த முறை நானும் லெவினும் மட்டும் தான்..”

அவள் எவ்வளவு பெரிய அபாயத்தை நோக்கி மீண்டும் பயணிக்கப் போகின்றாள் என்பது புரிந்தது, ஆனால் இது இவளின் உலகம்.. இந்த உலகத்திற்கு என்ன தேவையோ அதனைக் கொடுக்க நினைக்கின்றாள்.. இதற்கு நான் மறுப்புத் தெரிவிப்பது முறையல்ல.

“சரி, இது தான் உன் முடிவுன்னா, நானும் உன் கூட இருக்கேன் அஹானா.. என்னால் என்ன முடியுமோ நான் செய்யறேன்..”

“ஜீவன்..”

“யெஸ், இப்போ இருக்கின்ற சூழ்நிலையில் திரும்பி எங்க உலகத்துக்கு என்னால் போக முடியுமான்னுத் தெரியலை.. அதே போல் உன்னைத் தனியா இந்த உலகத்தில் விட்டுட்டுப் போறதும் என்னால் முடியாது.. நீ இது வரை பட்ட கஷ்டமெல்லாம் போதும், இனி நான் உனக்காக இருக்கப் போறேன்.. என் உலகத்தில் எனக்காக யாரு இருக்காங்கன்னு எனக்குத் தெரியலை.. எனக்குன்னு யாராவது காத்துட்டு இருக்காங்களா, என்னைத் தேடிட்டு இருக்காங்களான்னும் எனக்குத் தெரியலை.. ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கு.. அதுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கணும்., There had to be a greater purpose to all of this, a reason why I ended up in this world.. [இவை அனைத்திற்கும் ஒரு பெரிய நோக்கம் இருக்க வேண்டும், நான் இந்த உலகிற்கு வந்து சேர்ந்ததற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்]. அதனால் இனி நான் உனக்குப் பாதுகாப்பா இருப்பேன் அஹானா.. உனக்காக மட்டும் தான் நான்..”

தன் வார்த்தைகளைத் தான் காப்பாற்றப் போகின்றோமா இல்லையா என்பதையே அறியாது, இது தான் தன் இறுதி நாட்களைக் கழிக்கப் போகும் பிரபஞ்சமா என்பதை உணராது, அமர் என்று நம் பூமியில் அழைக்கப்பட்டவன், ஜீவன் என்று அவ்வுலகத்தில் பெயர் கொண்ட அமரஜீவன், அஹானாவிற்கு வாக்களித்தான்.

சிரஞ்சீவிதம்

The Journey of an Immortal!

தொடரும்..


References:

Cybernetic Enhancement:

According to Oxford Reference, a cyborg is a hybrid: half human and half machine.

17 Disadvantages of Digital Technology -> https://turbofuture.com/misc/Disadvantages-of-Digital-Technology

 

saru

Member
Dai amaraa poomila unakaga oru jeevan kaathutrukuya
Pottu nu vaaku koduthu pota
Vaala kapatha mudiumnu thonala parkalam
 
Wow… Jeewan won over Mayan.. I wonder how comes those doctors haven’t found Jeewan yet??? Coz, already their programmed chip is inside Jeewan’s body right??? So they could have easily detected him right???

Enthiran movie comes into my mind… Robots can go beyond their masters 😐😐😐

Jeewan Ahana vayum kootitte pogalame Earth ku… wanna see the face off in between Meena and (A)haana 🤭🤭🤭

Heaven ku poga vendiya Amar vazhi maari vera Universe ku vanduttan pola… He is destined to be ended up here…
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top