JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Siranjeevitham - Episode 9

JLine

Moderator
Staff member
சிரஞ்சீவிதம்

அத்தியாயம் 9

கோயம்புத்தூர்..

கோவை அவிநாசி சாலையில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருந்த “AJN Pvt Ltd” அலுவலகத்தின் முன் நிருபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைச் சுமந்தக் வாகனங்கள் நிறைந்து வழிந்தன.

கேரளா மாநிலம் மட்டும் அல்லாது இளம்பெண்கள் இருவரின் அகால மரணங்கள் இந்தியா முழுவதையும் புரட்டிப் போட்டிருக்க, குற்றவாளிகளைக் கண்டுப்பிடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்த தடயவியல் நிபுணர் அமரைச் சந்திக்கவே இவ்வளவு பெரிய கூட்டம்.

கடந்த பல நாட்களாக அவனைச் சந்திக்க எவ்வளவோ முயற்சித்தும் அனுமதி வழங்கியிராதவன் ஒரு வழியாக இன்று காலை அனைவரையும் ஒரு சேர சந்திப்பதாகவும், நேர்காணலை தனது அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்க, அவனைப் பேட்டி எடுக்கவே இத்தனை கூட்டம்.

காலை மணி 10.15

அனைவரையும் உள்ளே வரப் பணித்த வரவேற்பாளர்கள் ஏற்கனவே அமர் செய்த ஏற்பாட்டின் படி அவர்களை வரிசையாக இருக்கைகளில் அமரச் செய்ய, நிமிடங்கள் சில கழித்துப் பளீர் வெண்மை நிற ஃபார்மல் ஷர்ட்டும், அதற்கேற்றார் போல் காக்கி பேண்டும் [Gucci Double G shirt & Gucci khaki Web straight -leg pants] அணிந்து வெளி வந்தவனைக் கண்டதுமே அங்குப் பெரும் சலசலப்பு கிளம்பியது.

அமரை ஒரு சிலரே நேரில் பார்த்திருக்கின்றனர்.

அதுவும் கடந்த சில மாதங்களுக்கு முன் வரகனாம்பட்டியில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓட்டினை ஆராய்ச்சி செய்வதற்கு அவன் அந்தக் கிராமத்திற்கு விஜயம் செய்திருந்த நேரத்தில், அவனைச் சந்தித்திருந்த பத்திரிக்கையாளர்களைத் தவிர அவன் தன்னை மற்றவர்களிடம் அவ்வளவாக வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

ஆயினும் அவனை நேரில் பார்த்திராததே ஒழிய ஏற்கனவே சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அவன் பிரபலம் ஆகியிருந்ததால் அவனைப் பற்றி அறிந்திருந்தனர் அங்கு வந்திருந்த அனைவருமே.

“வெல்கம் எவ்ரிஒன்..”

ஆணழகர்களின் சுயரூபமாக, நெடுநெடுவென்று ஆறடி இரண்டு அங்குல உயரத்தில் திடகாத்திரமான தேகத்துடனும், களையான முகத்துடனும், விநாடிகளுக்குள் எதிரில் நிற்போரின் ஆழ்மனத்திற்குள் ஒளிந்திருக்கும் இரகசியங்களை ஆராய்ந்து அறிந்துவிடும் கூரிய பார்வையுடனும் கம்பீரமான குரலில் அனைவரையும் வரவேற்றவனின் கவர்ச்சி, பெண்களை மட்டுமல்ல ஆண் நிருபர்களையும் கவரவே செய்தது.

தன்னைக் கண்டதும் முகம் மலர கண்கள் அகல விரிய அமர்ந்திருந்தவர்களைக் கண்டு மென்னகைப் புரிந்தவன் கேள்விகள் கேட்கலாம் என்பது போல் தலையசைக்க, அடுத்த விநாடி சடசடவெனக் கேள்விக்கணைகள் வீசப்பட்டன.

சிறிது சத்தமாகவே அவர்களைக் கண்டு சிரித்தவன்,

“எனக்குத் தெரிஞ்சு இந்தக் கேசைப் பற்றி எல்லாத் தகவல்களையும் நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.. இருந்தாலும் நேரிடையாகவே என்கிட்ட இன்னும் சில தகவல்கள் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு விரும்பினீங்க.. அதற்காகத்தான் நானே உங்களை எல்லாம் வரவழைச்சிட்டேனே, அப்புறம் எதுக்கு அவசரம்?” என்று கூற, தாங்களும் மெல்ல சிரித்தவர்கள் ஒவ்வொருவராகத் தங்களின் கேள்விகளைக் கேட்கத் துவங்கினர்.

“அமர் சார்.. நீங்களே சொன்னது போல் ஓரளவுக்கு எங்களுக்கு இந்தக் கேசைப் பற்றிய இன்ஃபர்மேஷன் வந்திருக்கு.. ஆனாலும் போலீஸார் கண்டு பிடிக்க முடியாத ஒரு கொலையை, கொலையாளிகளுக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கும் இடையேயான தொடர்பை ஃபாரன்ஸிக் டிப்பார்ட்மெண்டை சேர்ந்த நீங்க கண்டுப்பிடிச்சிருக்கீங்க.. தெட் இஸ் வெரி இண்டெரஸ்டிங்.. என்ன தான் காவல் துறையினர் மூலமாக அவற்றை நாங்கள் தெரிந்துக் கொண்டாலும், still they are black and white for us.. அதான் இன்னும் டீடெய்ல்டா உங்கக்கிட்ட இருந்து விஷயத்தைத் தெரிஞ்சுக்கலாம்னு வந்திருக்கோம்.. அதாவது ஆரம்பத்தில் இருந்தே, நடந்தது எல்லாத்தையும் நீங்க கொஞ்சம் விவரமா சொல்லணும், ப்ளீஸ்..”

ஒரு இளம் பெண் நிருபர் கேட்டதும் அவளை நோக்கி திரும்பிய அமர் சட்டெனத் தன் முகத்தில் இருந்த புன்னகையைத் தொலைத்தவனாக, “அப்படின்னா ப்ரீத்தியோட டெட் பாடியைக் கண்டு பிடிச்சதில் இருந்து நான் சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க?” என்றான்.

அவன் கூறியது தான் தாமதம், மீண்டும் நிருபர்களின் பக்கம் இருந்து சலசலவெனச் சப்தம் துவங்கியது.

“யெஸ் சார், எங்களுக்கும் அது தான் வேணும்.. இரண்டு வருஷங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சவக்குழியை, அவளுடைய பிரேதத்தை எப்படி நீங்க கண்டுப்பிடிச்சீங்க?”

ஏறக்குறைய அங்குக் குழுமியிருந்த அனைவருமே ஒரே குரலில் வினவிய வினாவின் சாராம்சமே இது.

தன் தொண்டையை இலேசாகச் செருமிக் கொண்ட அமர் ஒரு முறை அங்குக் கூடியிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட நிருபர்களைப் பார்த்தவன்,

“இந்தக் கேஸ் எப்படி ஆரம்பிச்சதுன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்.. யெஸ், தமிழ்நாட்டில் இருந்தும், கேரளாவைச் சேர்ந்த பாலக்காடில் இருந்தும் ஆறு மாணவிகள் நெல்லியம்பதி ஃபாரஸ்டிற்குச் சுற்றுலா போன போது தான் எதிர்பாராத அந்தக் கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்தன.. அந்தச் சம்பவங்களின் விளைவுகளால் இறந்தவர்கள் இரு இளம் பெண்கள் என்றும் உங்களுக்குத் தெரியும்.. அவர்களில் ஒருவர் தான் ப்ரீத்தி என்கிற பத்தொன்பது வயது கல்லூரி மாணவி.. எனக்கு இந்தக் கொலையில் முதல் எவிடன்ஸாகக் கிடைச்சது ப்ரீத்தி அணிந்திருந்த உடையின் ஒரு சிறு பாகம் தான்.. அன்று அந்த அசம்பாவிதம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்த இன்னொரு மாணவியின் கையில் எதேச்சையா சிக்கியது தான் அந்தத் துணி.. அதில் ஒரு பகுதியைக் கொண்டு தான் நான் என் இன்வெஸ்டிகேஷனையே துவங்கினேன்.. அதுக்காக க்ரைம் நடந்த நெல்லியம்பதிக் காட்டுக்கு நான் போன போது அங்கு அதே துணியின் இன்னொரு பகுதிக் கிடந்ததைப் பார்த்தேன். ஸோ, பெண்கள் சொன்ன க்ளூஸில் [clues] இருந்தும், உடைப்பகுதியில் இருந்தும் அது தான் க்ரைம் நடந்த இடம்னு எனக்கு ஓரளவு உறுதியாகிடுச்சு.. ஆனால் கொலை செய்யப்பட்ட ப்ரீத்தியோட உடல் அங்க தான் புதைக்கப்பட்டிருக்கணும்னு அவசியம் இல்லை, இருந்தாலும் அங்க இருந்து என்னுடைய ஆராய்ச்சியைத் துவங்கினேன்.. நான் எதிர்பார்த்தது போல க்ரைம் நடந்த இடத்தில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் ப்ரீத்தியின் பிரேதம் புதைக்கப்பட்டிருந்தது.." என்று அமர் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே மற்றுமொரு நிருபர் கையை உயர்த்தினார்.

அவரது நோக்கம் புரிந்து, "யெஸ்?" என்று அமர் வினவ,

"இரண்டு வருஷங்களுக்கு முன் ப்ரீத்திக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப் பட்டாங்கன்னு சொல்றீங்க.. ஆனால் இரு வருஷங்களுக்கு முன் ஒரு உடல் புதைக்கப்பட்ட இடத்தை வேற எந்த அடையாளமும் இல்லாமல் எப்படி உங்களால் கண்டு பிடிக்க முடிஞ்சது? அதைக் கொஞ்சம் விவரமா எடுத்துச் சொல்றீங்களா மிஸ்டர் அமர்? " என்றார் அந்நிருபர்.

"ஷ்யூர்.. நிலத்திற்கு அடியிலோ அல்லது மண்ணிற்கு மேலிலோ இருக்கும் மனித எச்சங்களைக் கண்டறிவதற்குப் பல முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன...உண்மையில், மனிதர்கள் இறக்கும் அந்த நிமிடத்தில் துவங்கி, உடலின் அனைத்து பாகங்களும் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் கரைந்து போகும் வரை சடலங்களின் சிதைவு நடைபெறுகின்றது… ஒரு சடலம் மண்ணின் உயிரியல் மற்றும் வேதியியலில் குறிப்படத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப் பட்டிருக்கின்றது… தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, பூமியின் நிலத்தை ஊடுருவக்கூடிய ரேடார் சாதனங்களைப் பயன்படுத்திக் கல்லறைகளைக் கண்டுப்பிடிக்கலாம் [Ground Penetrating Radar]..

‘GPR’ என்பது மருத்துவ அல்ட்ராசவுண்ட் போன்றது… அதாவது உயர் அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகளை உருவாக்கி அவ்வலைகள் நிலத்தை ஊடுருவி மண்ணிற்குக் கீழே புதைக்கப்பட்டிருக்கும் சவங்களின் படத்தை நமக்குக் காட்டும்..பொதுவாக, ஒருவருக்கும் தெரியாத வகையில் இரகசியமாகப் புதைக்கப்பட்ட சடலங்களை, அதாவது அவர்களின் கல்லறைகளின் [clandestine graves] தேடல் இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது...

முதல் நிலை மண்ணிற்குள் முடிந்தவரை சிறியதாக ஊடுருவிக் கண்டுப்பிடிக்கலாம்.. மிகவும் பொதுவான முறைகளில் புவி இயற்பியல் நுட்பங்கள் [Geophysical techniques] அடங்கும்.. அதாவது அந்த உபகரணங்கள் மண்ணில் ஏற்படும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களைக் கண்டறிய உதவும்… குறிப்பாகச் சொல்லணும்னா ஒரு குற்றத்தைக் கண்டுப்பிடிக்கத் தடயவியல் தஃபோனமியை [Forensic taphonomy] உபயோகப்படுத்தலாம். Hence the science must be admissible in a court of law, regardless of whether it is presented at trial or not."

[எனவே விஞ்ஞானம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டாலும் சரி, சமர்ப்பிக்கப் படாவிட்டாலும் சரி, அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்]

எளிமையாக அதே சமயம் எவ்வாறு இது போன்ற குற்றங்களைக் கண்டுப்பிடிப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் உதவுகின்றது என்பதை அமர் விளக்கவும் அங்குக் கூடியிருந்த நிருபர்களுக்குப் பெரும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

"சரி பிரேதத்தைக் கண்டு பிடிச்சிட்டீங்க, ஆனால் அது ப்ரீத்தியோட பிரேதம் தான் எப்படிக் கண்டுப்பிடிச்சீங்க?"

"என்ன தான் சூழ்நிலைகளும், சாட்சியங்களும், அந்தப் பிரேதம் புதைக்கப்பட்டிருந்த இடமும், அது ப்ரீத்தியோட உடலாகத் தான் இருக்க வேண்டும்னு எடுத்துச் சொன்னாலும், கோர்ட்டுக்கு அது போதாது.. நான் கண்டுப்பிடிச்ச உடல், அதாவது மனித உடலோட மிச்சங்கள் ப்ரீத்தியோடது தான்னு தகுந்த ஆதாரங்களுடன் நான் கோர்ட்டுக்கு ப்ரூவ் பண்ணணும்.. ஸோ, பிரேதம் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுத்து வந்த மண்ணையும், அங்கு நான் கண்டெடுத்த சில செடிகளையும், அதாவது எலும்புக் கூடுகளுக்கு நடுவே முளைச்சிருந்த தாவரங்களையும் கொண்டு, அந்த உடல் எப்பப் புதைக்கப்பட்டிருக்கும்னு என்னால் தெளிவாகக் கண்டு பிடிக்க முடிஞ்சது.. அது மாதிரி ஆதாரங்களைத் தான் நாங்கள் மௌனமான சாட்சிகளுன்னு [silent witness] சொல்லுவோம்.. அண்ட் ஆல்ஸோ, டி.என்.ஏ டெஸ்ட் பண்ணுவதற்கு எலும்புகள் தான் சிறந்த ஆதாரம்ன்னு [best source] உங்களுக்குச் சொல்லணும்னு அவசியம் இல்லை.. எங்களுக்குக் கிடைச்ச எலும்புகளை வைச்சு அது ப்ரீத்தியோடது தான்னு எங்களால நிரூபிக்க முடிஞ்சது."

“அமர் சார், இதற்கு முன்னும், அதாவது வரகனாம்பட்டியில் கண்டுப்பிடிக்கப் பட்ட குனால் என்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட காலத்தைக் கூட இதே போல் தாவரங்களை வைச்சு நீங்க சரியா கணிச்சுக் கூறியதா கேள்விப்பட்டோம், அது எப்படிச் சாத்தியம்?”

“இதற்கு உதாரணமா நான் அமெரிக்காவில் நடந்த ஒரு கொலை வழக்கை பற்றிச் சொல்லலாம். பல மாதங்களாகக் காணாமல் போய்த் தேடப்பட்ட கேய்லி அந்தோணி அப்படிங்கிற ஒரு குழந்தையோட வழக்கு தான் அது.. அந்தக் குழந்தையோட சடலத்தை அது புதைக்கப்பட்டுப் பல மாசங்களுக்குப் பிறகு தான் கண்டுப்பிடிச்சாங்க.. அந்தக் குழந்தையைக் கொலை செய்தவர்கள் ப்ளாஸ்டிக் மற்றும் சலவைத் துணிகளை வைக்கும் பைகளைக் கொண்டு அந்தக் குழந்தையோட உடலை சுற்றி புதைச்சிருந்தாங்க.. புதைச்சிருந்தாங்கன்னு சொல்றதை விட, அந்தக் குழந்தையைப் பைகளில் சுற்றி மரங்களும் அடர்ந்த புதர்களும் நிறைஞ்ச ஒரு இடத்தில் [Field] போட்டிருந்தாங்கன்னு தான் சொல்லணும்.. கொலையாளி யாருங்கிறதைக் கண்டுப்பிடிக்கிறதை விட, அந்தக் கண்டுப்பிடிக்கப்பட்ட பிரேதம் யாருடையது, அந்தக் குழந்தை எப்போ இறந்தது அப்படிங்கிறதைத் தான் காவல்துறையினர் முதலில் கண்டுப்பிடிக்க வேண்டி இருந்தது.. அச்சமயத்தில் இந்த வழக்கின் முதல் பெரிய குழப்பமே மருத்துவ ஆய்வாளர் மற்றும் தடயவியல் மானுடவியலாளர் [Forensic anthropologist]இரண்டு பேராலுமே குழந்தையின் மரணம் நிகழ்ந்த நாளையும் நேரத்தையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.. அப்ப தான் என்னைப் போல் ஒரு தடயவியல் பாட்டனிஸ்டின் உதவியைக் காவல் துறையினர் நாடினர்.. குழந்தையின் எலும்புகளுக்கு இடையில் முளைத்திருந்த தாவரங்களின் வேர்களை வைத்துத் தோராயமாக, அதாவது அந்தக் குழந்தை இறந்து நான்கில் இருந்து ஆறு மாதம் வரை ஆகியிருக்கும்னு அந்தத் தடயவியல் பாட்டனிஸ்ட் கண்டுப்பிடிச்சுக் கூறினார்…”

"வேர்களை வைத்தா?"

"யெஸ், வேர்களின் நீளம், தடிமன் மற்றும் எத்தனை வேர்கள் அங்கு முளைச்சிருந்தன அப்படிங்கிற தகவல்களின் அடிப்படையில் குழந்தை இறந்த காலத்தை அவர் கணிச்சுக் கூறினார்."

[Source : Casey Anthony & Caylee Anthony Case]

"சரி பிரேதம் ப்ரீத்தியோடது தான் ப்ரூவ் பண்ணிட்டீங்க.. ஆனால் கொலைகாரர்களை எப்படிக் கண்டுப்பிடிக்க முடிஞ்சது?"

மற்றுமொரு பெண் நிருபரின் கேள்விக்கு நிதானமாக அமர் பதலளிக்கத் துவங்கியதில், அந்நாள் வரை புரிந்தும் புரியாமலுமாக இருந்து வந்த அந்த வழக்கின் சில அடிப்படையான விஷயங்கள் அங்குக் கூடியிருந்த நிருபர்களுக்கு அன்று தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.

"அது தான் இந்தக் கொலையில் எங்களுக்கு ரொம்பச் சவாலான விஷயம்.. இந்த இரண்டு வருஷமா ப்ரீத்தியும் சந்தோஷும் ஓடிப் போயிட்டதாகத் தான் எல்லோரும் நம்பியிருக்காங்க, அதாவது நம்ப வைக்கப்பட்டிருக்காங்க.. அதனால் சந்தோஷ் எங்க இருக்கான்னுத் தெரியாமல் ப்ரீத்திக்கு நேர்ந்த கொடுமைக்கான காரணம் என்னன்னு எங்களால் கண்டுப்பிடிக்க முடியாதுன்னு தான் முதலில் எல்லாருமே நினைச்சோம், அதுக்காக ஒரு ஷ்பெஷல் ஃபோர்ஸ் டீமையே உருவாக்கினாங்க.. ஆனால் சந்தோஷ் இருக்கிற இடமே எங்களுக்குத் தெரியலை.. அப்படின்னா ப்ரீத்தியை கொலை செய்தவங்களே ஏன் சந்தோஷயும் கொலை செய்திருக்கக் கூடாதுன்னு நான் யோசிச்சிட்டு இருந்தப்ப தான் எனக்கு ஒரு தடயம் கிடைச்சது.. அது நிகித்தாவின் வீட்டின் முன் புறம் இருந்த தோட்டத்தில் இருந்து கிடைச்சது.."

"தோட்டத்திலா? அப்போ நிகித்தாவுக்கும் சந்தோஷோட மறைவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?"

"நிச்சயமா இல்லை.."

"அப்படின்னா அவங்கத் தோட்டத்தில் என்ன தடயம் கிடைச்சது?"

"பாலக்காடு விக்டோரியா கல்லூரியின் தாவரவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் சுரேஷ், ஒரு அதிசய தாவரத்தைக் கண்டுபிடித்த ஆராய்ச்சிக் குழுவுக்குத் தலைமை தாங்கினார்... அந்தத் தாவரத்தின் பெயர் எலியோகார்பஸ் காட்கிலி [Elaeocarpus Gadgili].. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட ஒரு புதிய தாவர இனம் இது... இவற்றின் விதைகள் புதக்கப்பட்ட 75 நாட்களுக்குப் பிறகு அவை முளைக்க ஆரம்பித்தன... இந்தச் செடிகளில் நல்ல வாசனைக் கொண்ட வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும்.. அந்தச் செடி நிகித்தாவின் வீட்டில் இருந்தது.. நிகித்தாவின் பெற்றோரிடம் விசாரிச்ச போது அது எப்படி அங்க வந்ததுன்னே அவங்களுக்குத் தெரியலை.. அந்தச் செடிதான் குற்றவாளிகளைக் கண்டுப்பிடிக்க எனக்குப் பெரும் உதவியா இருந்தது..

நெல்லியம்பதி காட்டுல இருக்கும் அந்தச் செடி நிகித்தாவுடைய வீட்டில் முளைச்சிருக்குன்னா, அன்னைக்கு, அந்த க்ரைம் நடந்த போது அந்த இடத்தில் இருந்தவங்க வீட்டிலேயும் அது முளைச்சிருக்க வாய்ப்பிருக்குன்னு நான் முடிவு செஞ்சேன்... அதன் படி நாங்க முதலில் எங்களுடைய இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிச்சது ரிஷியின் வீட்டில், ஆனால் அங்க அந்தச் செடிக்கான அறிகுறியே இல்லை.. அதற்குப் பிறகு ரிஷியின் நண்பர்கள் அனைவரின் வீட்டிலேயும் தேடிப் பார்த்தோம், எங்குமே இல்லை.. ஆனால் சந்தோஷின் வீட்டில் இருந்தது... ஸோ, ப்ரீத்தியோட கொலையில் நிச்சயமா சந்தோஷிற்கும் பங்கு இருக்குன்னு அப்ப ப்ரூவ் ஆகிடுச்சு... ஆனாலும் கொலையாளிகளை எங்களால் கண்டு பிடிக்க முடியலை..

அதைத் தொடர்ந்து எங்களுடைய சந்தேக வட்டத்திற்குள் இருக்கும் எல்லாருடைய வீட்டிலேயும் தேடினோம், அதுல ஒருத்தன் தான் பிரசாந்த்.. ஏற்கனவே பிரஷாந்தின் 'பிரான்னாஸ்' அணியோட சந்தோஷ் சேர்ந்துட்டான்னு ரிஷியோட ஃப்ரெண்ட் ஆனந்தும் போலிஸ்கிட்ட சொல்லிருக்கான்.. ஸோ, பிரஷாந்தோட வீட்டுக்குப் போனப்போ அங்க நான் அதே செடியைப் பார்த்தேன்... அதே போலப் பிரஷாந்தோட நண்பர்களான வினய், மனீஷ், தீபக்குடைய வீட்டிலும் அந்தச் செடியைப் பார்த்தோம்.. ஆனால் அவங்கக் கூட்டாளிகளான சுதிர் மற்றும் அருணின் வீட்டில் அந்தச் செடிகள் இல்லை… அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு செடியின் விதைகளோ அல்லது மகரந்தமோ இடம் மாறுவதற்கு வழிகள் சில இருக்கு.. குறிப்பாகச் சொல்லணும்னா ஒரு மனிதனுடைய காலணிகளில் ஒட்டியோ அல்லது அவர்களது உடையில் ஒட்டியவாறே அவை இடம்பெற வாய்ப்புகள் இருக்கு, ஆனால் அதே சமயம் அப்படி இடமாறும் எல்லா விதைகளும் எல்லா இடங்களிலும் முளைப்பதில்லை.. அது போலச் சுதிர் மற்றும் அருணின் வீட்டில் அவைகள் வளரவில்லை அப்படிங்கிற முடிவிற்கு அந்தச் சமயத்தில் நாங்க வர வேண்டியதாகிடுச்சு.."

"அமர் சார், அந்தச் செடி அவங்க வீட்டில் வளர்ந்ததால் அவங்க தான் கொலைக்காரர்களுன்னு எப்படி நீங்க சொல்ல முடியும்? அந்தக் கொலை நடந்த நெல்லியம்பதிக் காட்டுக்கு அவங்க எப்ப வேணாலும் போயிருக்கலாமில்லையா? அதே போல் கொலை நடந்ததற்குப் பிறகு பிரசாந்தின் வீட்டிற்கும், அவனுடைய நண்பர்களின் வீட்டிற்கும் சந்தோஷ் போயிருக்கலாமில்லையா? அப்படிப் போகும் போது அந்தத் தாவரத்தின் மகரந்தம் அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் விழுந்திருக்கலாம் இல்லையா?”

தெளிவாகக் கேட்ட ஒரு இளம் நிருபரைக் கண்டு மெல்லியதாகப் புன்னகைப் புரிந்த அமர் ஆமோதிப்பது போல் தலையசைத்தவன்,

"கொலையாளிகளையும் ப்ரீத்தியையும் இணைக்கிறதுக்கு எனக்கு இன்னும் தடயங்கள் தேவைப்பட்டது.. அப்ப தான் stinging nettle அப்படின்னு சொல்லப்படுற வேறு ஒரு தாவரம் எனக்குப் பெரும் உதவியாக இருந்தது… தமிழில் ‘செந்தட்டி’ அல்லது ‘சிறுகாஞ்சொறி’ ன்னு இந்தத் தாவரங்களைச் சொல்வோம்.. இதனுடைய இலையோ அல்லது காய்களோ ஒரு மனுசனோட உடம்பில் பட்டாலே ஒரு வித நமைச்சலையோ அல்லது அரிப்பையோ கொண்டு வரும்.. பொதுவாக வேலி ஓரங்களிலோ, ஒதுக்குப் புறங்களிலோ அல்லது புதர்களிலோ இந்தச் செடி முளைச்சிருக்கும்… அதுல கருப்பு இலைகளைக் கொண்ட செடியை கருப்பு காஞ்சொறி செடின்னு சொல்றோம்.. ப்ரீத்தியோட பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டு பிடிக்கிறதில் எந்த அளவுக்கு இந்தச் செடி எனக்கு உதவியதோ அதே மாதிரி அவளைக் கொன்ற கொலைகாரர்களைக் கண்டு பிடிக்கவும் இந்தச் செடி முக்கியத் தடயமாக எனக்கு உதவியது."

"அரிப்புச் செடின்னு சொல்வாங்களே, அந்தச் செடியா?"

"யெஸ், அதில் ஒரு வகைத் தான் இது..."

"அதை வச்சு எப்படிக் கொலைகாரர்களைக் கண்டுப்பிடிச்சீங்க?"

"எப்படி நிகித்தாவுடைய வீட்டில் எலியோகார்பஸ் காட்கிலிங்கிற தாவரத்தைக் கண்டுப்பிடிச்சேனோ அதே போல் மீனலோச்சினி, மித்ரலோச்சினி அவங்களுடைய வீட்டில் இந்தக் கருப்பு நிற காஞ்சொறிசெடியைக் கண்டு பிடிச்சேன்.. ஆகக் கொலைகாரர்களைக் கண்டுப்பிடிக்க இப்ப எனக்கு உறுதுணையா இருக்கப் போவது ஒண்ணே ஒண்ணு தான் அப்படின்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சிடுச்சு.. அது ப்ரீத்தி இறந்த அன்று அணிந்திருந்த சுடிதாரின் ஒரு பகுதி.. அதுல இந்தச் செடியோட சம்பந்தப்படுற மாதிரி ஏதாவது தடயம் இருக்கான்னு மீண்டும் டெஸ்ட் பண்ணினப்போ இந்தச் செடியோட மகரந்தம் இருந்துச்சு.. அதோட கம்பேர் பண்றதுக்கு எங்களுக்குப் பிரசாந்த் மற்றும் அவனுடைய நண்பர்களுடைய ஆடைகள், அதாவது க்ரைம் நடந்தப்ப அவங்க அணிஞ்சிருந்த உடைகள் தேவைப்பட்டது.. கோர்ட்டிடம் சேர்ச் வாரண்ட் [search warrant] பெற்று போலீஸின் ஸ்பெஷல் ஃபோர்ஸ் டீமோட பிரஷாந்த் மற்றும் அவனுடைய நண்பர்களுடைய வீட்டில் சோதனையிட்டோம்..

அப்போ பிரஷாந்தின் ஒரு சட்டையில் ப்ரீத்தியோட சுடிதாரில் கண்டெடுக்கப்பட்ட செடியோட மகரந்தம் இருந்தது... வழக்கமா இது மாதிரி க்ரைம்களில் ஈடுபடுறவங்க அவங்கப் போட்டிருக்கிற உடைகளை அழிச்சிடுவாங்க, ஆனால் ஒரு வேளை இரத்தம் போன்ற எந்தக் கறைகளும் படவில்லை என்றாலோ அல்லது குற்றம் நடக்கும் போது அவங்களுடைய துணிகளுக்கு எந்தவித சேதமும் இல்லை என்றாலும் அந்தத் துணிகளைத் தூக்கி எறியவோ அல்லது அழிக்காமலோ இருக்கவும் வாய்ப்பு இருக்கு.. சிலருக்கு இது போன்ற கொடூரங்களில் ஈடுபடும் போது அவங்க அணிந்திருந்த உடைகளைப் பாதுகாப்பாக, நினைவுப் பொருளாக [souvenir] வைத்திருக்கும் பழக்கமும் இருக்கும்.. ஆனால் அவங்கக் கண்ணுக்கே தெரியாமல் செடிகளின் மகரந்தங்கள் மாதிரி சில சாட்சியங்களும் தடயங்களும் அந்த உடைகளில் ஒளிந்திருக்கும் வாய்ப்பு இருக்கு.. ஃபாரன்சிக் எவிடன்ஸா அதே மகரந்தங்கள் எங்களுக்கு உதவி செய்தது.. நான் ஏற்கனவே சொன்னது போல் சைலன்ஸ் விட்னஸ்.."

அவன் இவ்வளவு எடுத்துக் கூறியும் அந்நிருபர்களில் ஒருவருக்கு இன்னமும் சிறிது விளக்கம் தேவைப்பட்டது போல், "சார், இன்னும் ஒரு கேள்வி.. மகரந்தத்தை வச்சு எப்படிச் சார் பிரஷாந்த் தான் கொலைக்காரன்னு முடிவு செஞ்சீங்கன்னு சொல்றீங்களா?" என்றார் சற்று தயக்கத்துடன்.

அவரின் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவனாக,

"இதைக் கேட்கிறதில் எதுக்குத் தயக்கம்? எதையும் தெளிவா தெரிஞ்சிக்கிறதில் தப்பே இல்லை..“ என்றவனாய் மேலும் விளக்கத் துவங்கினான், அந்த இளம் தடயவியல் நிபுணன்.

“இதற்கும் அறிவியல் தான் சான்று.. தடயவியல் சான்றுகளுக்கான மிக முக்கியமான பண்பு என்னவென்றால், அவை சிக்கலான உருவவியல்களைக் [Morphology] கொண்டுள்ளன… பாலினாலஜிஸ்ட், அதாவது மகரந்த தானியங்கள் மற்றும் பிற வித்திகளை, குறிப்பாகத் தொல்பொருள் அல்லது புவியியல் வைப்புகளில் புதைக்கப்பட்டிருப்பவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களிடம் பிரஷாந்த், ப்ரீத்தியின் ஆடைகளைக் கொடுத்தோம்… அதை வைத்து அவர்கள் ஆராய்ச்சி செய்ததில் பிரஷாந்தின் ஆடைகளில் பதிந்திருந்த மகரந்தம் எந்தச் செடிக்குச் சொந்தமானதுன்னு கண்டுப்பிடிச்சாங்க.. அது நான் ப்ரீத்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து எடுத்து வந்திருந்த செந்தட்டிச் செடியோட சரியா ஒத்துப் போச்சு.. அதாவது இன்னும் விளக்கமா சொல்லணும்னா, பிரஷாந்தோட ஆடைகளில் படிந்திருந்த மகரந்தத்தோட parent plant க்ரைம் நடந்த இடத்தில் இருந்த செடிதான்னு ப்ரூவ் ஆனது.. அதை வச்சு கொலைக்கும் பிரஷாந்திற்கும் நேரடித் தொடர்பு இருக்குன்னு முடிவு செய்தோம்.. அதற்குப் பிறகு பிரஷாந்தை அரெஸ்ட் செய்வதற்கான வாரண்ட் எங்களுக்குக் கிடைச்சது.. பிறகு நடந்தது எல்லாம் உங்கள் எல்லாருக்குமே தெரியும்..

எங்க தான் மட்டும் போலீஸ்ல மாட்டிக்கிட்டா என்ன ஆவோமோன்னு பயந்துப் போய் அவன் நண்பர்கள் எல்லாத்தையும் காட்டிக் கொடுத்தான் பிரஷாந்த்.. அதற்குப் பிறகு அவர்கள் மறைச்சு வைச்சிருந்த செல்ஃபோன்ஸ் லேப்டாப்ஸ் எல்லாத்தையும் கைப்பற்றினோம்.. ப்ரீத்தியோட பிரேதம் கண்டுப்பிடிக்கப் பட்டுச்சுன்னு தெரிஞ்ச உடனேயே எங்க மாட்டிக்குவோமோன்னு பயந்து அவங்க தங்களிடம் இருந்த வீடியோஸ் மற்றும் ஃபோட்டோஸ் எல்லாத்தையும் அழிச்சிருந்தாங்க.. அது எல்லாத்தையும் திரும்ப எடுத்தோம். அதில் அவங்க இது வரை செய்த எல்லாக் குற்றங்களும், ப்ரீத்தியின் கற்பழிப்பு கொலை, நிகித்தாவை பல முறை அவர்கள் அனைவரும் சேர்ந்து பலவந்தப்படுத்தியது உட்பட எல்லாமே நிரூபணம் செய்யப்பட்டது.. நீதிமன்றமும் அவங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிருக்கு.. அதே போல் ரிஷியின் 'ஹெல்ரைஸர்' அணி செய்த அக்கிரமங்களும் வீடியோக்களாகச் சந்தோஷின் உதவியால் பிரஷாந்தின் ஃபோனிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது, அவற்றையும் நாங்க எடுத்தோம்.. அதன் படி அவர்களுக்கும் தண்டனை தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.."

"ப்ரீத்தியோட கொலைக்கும் நிகித்தாவோட தற்கொலைக்கும் மட்டும் தான் 'பிரான்னாஸ்' அணிக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கு… ஆனால் காணாமல் போன சந்தோஷ் காணாமலேயே இருக்காரே.. அவர் உயிரோட இருக்காரா, இல்லை தலைமறைவாகி இருக்காரா? பிரஷாந்தும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து சந்தோஷையும் கொலை செய்துட்டார்களா அப்படிங்கிற எந்தத் தகவலுமே தெரியலையே.. இதுக்கு உங்களால் பதில் கொடுக்க முடியுமா?"

"அதற்குக் காரணம் இன்னமும் சந்தோஷின் இருப்பிடம் தெரியவில்லை.. அதாவது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது எங்களுடைய கணிப்பு, ஆனால் அவருடைய உடலை எங்களால் கண்டுப்பிடிக்க முடியலை.."

"உடல் இல்லாவிட்டாலும் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை விதிக்கலாம், இல்லையா?"

“யெஸ், முடியும். ஆனால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு பிரஷாந்த் மற்றும் அவனுடைய நண்பர்கள் சந்தோஷைக் கொலை செய்தார்கள் அப்படின்னு வழக்கறிஞர்கள் நிரூபிக்க வேண்டியிருந்தது... அதுவும் இல்லாமல், அவர்கள் கொலை செய்தார்கள் அப்படின்னு மட்டும் நிரூபிக்கிறது சட்டத்திற்குப் போதாது, சந்தோஷ் கொலை செய்யப்பட்டுத் தான் இறந்தான் அப்படின்னும் வழக்கறிஞர்கள் [prosecutors] நிரூபிக்கணும்.."

"ஒரு வேளை சந்தோஷ் கொலை செய்யப்பட்டு, அவனது உடலை வேறு இடத்தில் புதைச்சிருந்தால்? அதாவது கொலை நடந்தது ஒரு இடம், ஆனால் சந்தோஷின் உடல் புதைக்கப்பட்டிருப்பது வேறு இடம்னு சொல்ல முடியாதா?"

"அது முடியும்… உடலை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தியதையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியும்.. ஆனால் அந்த விஷயத்தில் பிரஷாந்திற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்களால் எதையும் நிருபிக்க முடியலை..அதாவது பிரஷாந்திற்கும் சந்தோஷிற்கும் ஏதாவது பிரச்சனைகளோ அல்லது சண்டையோ அவன் காணாமல் போவதற்கு முன்னாடி நடந்ததற்கான சாட்சியங்கள் இருந்திருக்கணும்.. அல்லது சந்தோஷை எங்காவது பதுங்கியிருந்து தாக்குவது மாதிரியோ அல்லது சந்தோஷின் விருப்பத்திற்கு மாறாக ஏதாவது வாகனத்திற்குள் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றுவது போன்ற சி சி டிவி காட்சிகளோ கிடைச்சிருந்தாலும் 'பிரான்னாஸ்' டீம் தான் சந்தோஷைக் கொலை செய்திருக்கும் வாய்ப்பு இருக்குன்னு நிரூபிச்சிருக்கலாம்… ஆனால் அது போல எந்தத் தடயங்களும் இல்லை.. ஸோ, சந்தோஷின் டெட் பாடி கிடைச்சால் ஒழிய இப்போதைக்குப் பிரஷாந்தின் 'பிரான்னாஸ்' அணி சந்தோஷை கொலை செய்திருக்கின்றார்களுன்னு தீர்ப்பு வழங்க முடியாது.."

"ஒரு வேளை சந்தோஷின் உடல் கிடைச்சிட்டால்? ஏற்கனவே 'பிரான்னாஸ்' அணிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கு.. ஸோ, இதுக்கு மேல என்ன தண்டனை அவர்களுக்குக் கொடுக்க முடியும்?"

"அதுக்கு மேலே தண்டனை இல்லை, ஆனால் என்ன தான் சந்தோஷும் ப்ரீத்தியின் மரணத்துக்குக் காரணமாக இருந்தாலும், அவருடைய பெற்றோருக்கு அவர் மகன் தான், அவருடைய மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுப்பிடிப்பது அவரது பெற்றோருக்கு ஒரு மன அமைதியைக் கண்டிப்பாகக் கொடுக்கும்.. அதற்காகவாவது சந்தோஷின் உடல் கண்டிப்பாகக் கண்டுப்பிடிக்கப்படணும்.."

"அப்படிக் கண்டுப்பிடிச்சால் உங்களால் அவருடைய மரணத்துக்குக் காரணம் யாருன்னு நிருபிக்க முடியுமா?"

"சந்தோஷ் உயிருடன் இருக்காரா அல்லது இறந்துட்டாரான்னு இன்னும் ஒருவருக்கும் தெரியலை.. ஆனால் இறந்திருக்கும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகத் தான் காவல் துறையினர் சொல்றாங்க.. அந்த அடிப்படையில் இந்தப் பதிலைச் சொல்றேன்.. ஒரு வேளை சந்தோஷ் கொலை செய்யப்பட்டிருந்தால், அவர் கெட்டவராகவே இருந்திருந்தாலும் அவருடைய மரணத்துக்குக் காரணமானவங்க யாராக இருந்தாலும், கொலையாளிகளைக் கண்டுப்பிடிப்பதற்கு என்னால் ஆன முயற்சியை நான் கண்டிப்பாகச் செய்வேன்.."

அவன் கூற கூற ஆச்சரியமாகவும் அதே சமயம் வேதனையுடனும் இரு பெண்களின் மரணங்களைப் பற்றியும், கொலைகாரர்களின் கொடூரமான செய்கைகளையும் கேட்டுக் கொண்டிருந்த நிருபர்களில் வயதில் மூத்த ஒருவர் இறுதியாக ஒரு கேள்வியை எழுப்பினார்.

"அமர் சார், தற்கொலை செய்து கொண்ட நிகித்தாவைப் பற்றி ஒரு கேள்வி.."

"யெஸ், ப்ளீஸ்.."

"ஏன் நிகித்தா ஏறக்குறைய நான்கு மாதங்கள் வரை காத்திருந்து பிறகு தற்கொலை செய்துக்கிட்டாங்க? சொல்றதுக்குக் கஷ்டமா இருந்தாலும், வேறு வழி இல்லை, ஐ மீன், கடைசியா அந்தப் பசங்க அவங்களைப் பாலியல் கொடுமை செய்த உடனேயே இது போல் நடந்திருந்தால் அட்லீஸ்ட் போஸ்ட்மார்ட்டம் ரிஸல்டிலேயாவது அந்தப் பெண்ணிற்கு நடந்த கொடுமைகள் வெளி வந்திருக்குமே? அதை வைத்து அவங்களை வன்கொடுமை செய்தது யாருன்னு கண்டு பிடிச்சிருக்கலாமே, அதே போல் ப்ரீத்தியைப் பற்றியும் தெரிஞ்சிருக்குமே.. காவல் துறையினரும் தடயவியல் நிபுணர்களாகிய நீங்களும் இந்த அளவிற்குக் கஷ்டப்பட்டிருக்கணும்னு அவசியமே இல்லையே.. "

"யெஸ், ஆனால் அதற்குக் காரணம் முடிந்தவரை 'பிரான்னாஸ்' டீமிடம் இருந்து தப்பிக்கணும்னு அவ முயற்சி செய்திருக்கா.. அதற்காக அவள் எடுத்த ஆயுதம் ப்ரெக்னென்சி.. அதாவது நான்கு மாதங்களுக்கு முன் 'பிரான்னாஸ்' டீம் அவளைத் தங்களோட இடத்துக்கே வரவழைச்சி வன்கொடுமை செய்திருக்காங்க.. அதில் அவள் ரொம்ப உடைஞ்சி போயிருக்கணும்.. அதனால் அதற்குப் பிறகு அந்தப் பசங்க அவளை மீண்டும் தொந்தரவு செய்த நேரத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், வீட்டில் இருக்கிறவங்களுக்குத் தெரியாமல் அபார்ஷன் செய்யப் போவதாகவும் சொல்லிருக்கா.. பின்னர் மீண்டும் அவனுங்க கூப்பிட்டதுக்கு அபார்ஷன் செய்ததில் உடல்நிலை ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு, இதற்கு மேல் அவளால் தாங்க முடியாதுன்னு கதறி இருக்காள்.. அதனால் கொஞ்சம் அவளை விட்டுப்பிடிக்கலாம்னு அவனுங்களும் விட்டுட்டானுங்க.. ஆனால் உண்மையில் அவள் கர்ப்பமாகவும் இல்லை, அபார்ஷனும் பண்ணலை.. அவனுங்கக்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக அவள் அப்படிப் பொய் சொல்லிருக்கலாம்.. கர்ப்பமாக இருந்து அபார்ஷன் செய்திருந்தால் கண்டிப்பா அட்டாப்ஸியில் தெரிஞ்சிருக்கும்.. ஆனால் அட்டாப்ஸி ரிஸல்டில் அப்படி எதுவும் இல்லை.. ஸோ, தன்னைத் தற்காத்துக் கொள்ள அவள் கூறிய பொய்யை நம்பி கொஞ்ச நாள் அமைதியா இருந்தவனுங்க, மீண்டும் அவளைத் தொந்தரவு செய்ய ஆரம்பிச்சிருக்கானுங்க.. இதற்கு மேல் தாங்க சக்தி இல்லாததால் தான் அவள் தற்கொலை முடிவை எடுத்திருக்கணும்.. இது எங்களுடைய கணிப்பு.."

இதற்கு மேல் கேட்பதற்கு ஒன்றும் இல்லாத அளவிற்குத் தெளிவாக அனைத்து விளக்கங்களையும் கொடுத்தவன் ஒரு வழியாக நேர்காணலை முடித்துவிட்டு கிளம்ப ஆயத்தமான பொழுது முதல் கேள்வியைத் தொடுத்த அதே பெண் நிருபர் மற்றொரு வினாவைத் தொடுத்தாள்.

“அமர் சார்.. இதுவரை ப்ரீத்தி நிகித்தா கேஸஸ் பற்றிப் பேட்டிக் கொடுத்தீங்க.. இன்னும் ஒரே ஒரு கேள்வி சார்… ப்ளீஸ்..”

அவள் என்ன கேட்க வருகின்றாள் என்று அமருக்குப் புரிந்து போனது.

“ம்ம்ம்.. கேளுங்க.. ஆனால் என்னுடைய பெர்சனல் விஷயத்தைத் தவிர.."

“சாரி சார், அது பற்றித் தான் கேட்க விரும்புறேன்.. இதுவரை உங்களுடைய இண்டெர்வியூஸ் எவ்வளவோ நான் பார்த்திருக்கேன், எப்பவும் நீங்கள் பங்கேற்ற வழக்குகள், உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இது பற்றி மட்டுமே தெரிவிச்சிருக்கீங்க.. ஆனால் உங்க ஃபேமிலியைப் பற்றி ஒண்ணுமே சொன்னதில்லையே.. உங்க பேரண்ட்ஸ், உடன் பிறந்தவங்க...”

முடிக்காது இழுத்தவளை ஆழமாய்ப் பார்த்தவாறே ஆழ இழுத்துத் தன்னைச் சமன் படுத்திக் கொண்டவனாய்,

“கேட்காதீங்கன்னு சொல்லியும் கேட்குறீங்க.. எனிவேய்ஸ், எனக்கு என்னுடைய அம்மா முகம் மட்டும் தான் நியாபகத்தில் இருக்கு.. அதற்குப் பிறகு நான் வளர்ந்தது எல்லாம் என்னுடைய கார்டியனுடைய ஆதரவில் தான்.. அம்மா கூட என்னுடைய பெற்றவங்க [birth mother] கிடையாது.. இன்னும் சொல்லப் போனால் நீ ஆகாயத்தில் இருந்து திடீர்னு குதிச்சு வந்தவன்டா, அப்படியே என் கையில் குழந்தையா வந்தவன்டான்னு அடிக்கடி விளையாட்டா சொல்வாங்களே தவிர, நான் யார், என்னுடைய பையலாஜிக்கல் பேரண்ட்ஸ் யார் அப்படிங்கிற எந்த விஷயமும் எனக்குத் தெரியாது.. எனக்குத் தெரியக் கூடாதுங்கிறதில என்னுடைய அம்மா ரொம்ப மெனக்கெட்டாங்க, அதைப் புரிஞ்சிக்கிட்டு நானும் அவங்களிடம் அதைப் பற்றிப் பேசியதில்லை.. இப்போ என் அம்மா உயிருடனும் இல்லை..” என்றவன் இதற்கு மேல் இதனைப் பற்றிப் பேச விருப்பம் இல்லாதவன் போல் எழுந்து நின்றான்.

அவனிடம் விடைபெற்ற நிருபர்கள் அவனது அலுவலகத்தினை விட்டு வெளியேறிய சில நாட்களில் பிரஷாந்தின் 'பிரான்னாஸ்' அணிக்கு தூக்குத் தண்டனைக்கான தேதியும் மற்றும் பல பெண்களைக் கடந்த பல வருடங்களாகக் கற்பழித்து வன்கொடுமை செய்திருக்கும் ரிஷியின் 'ஹெல்ரைஸர் 'அணிக்கு ஆயுள் தண்டனைப் பற்றிய அறிவிப்புகளும் பத்திரிக்கைகளில் அலற ஆரம்பத்தது.

இவற்றின் மூலம் மீண்டும் அமரின் புகழ் இந்தியா முழுவதுமாகப் பரவத் துவங்கியது.

ஆனால் இதுவே தனது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை, மாற்றமுடியாத ஒரு தாக்கத்தை உண்டு பண்ணப் போகின்றது என்பதை அமர் அப்போது அறிந்தான் இல்லை.

Watch for the ace of spades, which is the sign of death!

- Robert Louis Stevenson

சிரஞ்சீவிதம் தொடரும்


References:

1. Forensic Taphonomy: Forensic Taphonomy is the study of how organic remains pass from the biosphere to the lithosphere, and this includes processes affecting remains from the time of death of an organism (or the discard of shed parts) through decomposition, burial, and preservation as mineralized fossils or other stable biomaterials.

2. Bone is one of the best sources of DNA from decomposed human remains.

3.Stinging nettle - In India, it is widely distributed and is found in every state especially in areas with heavy rainfall. In Kashmir, is found everywhere in all seasons as an unwanted weed.

4. The study of pollen grains and other spores, especially as found in archaeological or geological deposits. Arguably the most important attribute for forensic evidence is that they have complex morphologies that can lead palynologists back to the parent plant they came from and allow them to create a unique picture of the location a crime may have occurred.

5. Case Studies:

In May 1978 the body of the kidnapped Italian Prime Minister, murdered by the Red Brigades, was found in a car parked in the center of Rome. This paper discusses the findings from the investigations conducted on the evidence found on Mr. Moro's clothes, shoes (beach sand, bitumen, vegetals and polyester fragments),அ and on the car. To get a comprehensive picture of the characteristics of the various pieces of evidence, use was made of a multiple-technique approach. The sand was identified as coming from the seashore close to Rome. A tract of shore with a limited number of roads leading to the beach was defined as compatible with the textural and compositional characteristics of the sand. The study of the vegetal fragmenta suggested that they had been picked up in a period of time close to the killing. Thermosetting polyester, of the type used in boat manufacturing was found under the fenders, in the tires and inside the car, as well as under Mr. Moro's shoes, supporting proximity of a beach. Pollen analysis showed that adhesion of volcanic soil to the car fenders antedated adhesion of the sand.

6. https://www.casemine.com/judgement/in/5609aaf8e4b014971140b5d7

Supreme Court of India

Vemireddy Satyanarayan Reddy And ... vs The State Of Hyderabad on 14 March, 1956 [Equivalent citations: 1956 AIR 379, 1956 SCR 247]

A person may be present, and, if not aiding and abetting, be neither principal nor accessory; as, if A, happens to be present at a murder and takes no part in it, nor endeavours to prevent it, or to apprehend the murderer, this course of conduct will not of itself render him either principal or accessory.
 
Last edited:

Selvi

Member
Hi Maam, very knowledgeable epi. This shows you have done a lot of research. Thanks for sharing the knowledge through your novel, looking forward to more.
 

Thani

Member
அமருக்கு என்ன பிரச்சனை வரபோகுதோ...
பிரசாந்த் குரூப்புக்கு தண்டனை கிடைத்தது விட்டது 👍
சூப்பர் சூப்பர் ❤️
 

Chitra Balaji

Active member
Woooooow woooww mam.... Neriya information solli இருந்திங்க semma mam evvallavu vishayam இருக்கா இதுல chance ah illa semma...
 

Very informative episode 👌🏻👌🏻👌🏻
I remembered Amar whil watching Forensic Crime thriller movie.. 💞💞💞
‘GPR’ I have heard about it… The same way is used to measure the depth of Ocean also right???

Wow… I didn’t expect the verdict to be executed so soon… 🥳🥳🥳 Amar you rock man… 🔥🔥🔥

Any suspenses behind Amar’s parents???

Omg!! Last lines… will it affect Amar’s love life with Meena??? 🙄🙄🙄
 

saru

Member
Wooow semma
Santhosh chepter apdiye tan iruku
Enna nadakapodu
Amar oda perants patri triyapoda
amar life la enna trupam
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top