



















































































Teaser 1
மீனாக்ஷி - சக்திவேல்
Brutality of criminals needs a brutal police officer!
பல நூற்றாண்டுகளாகக் கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் முத்து நகரம் - 'Pearl City' என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம்.
கி.பி.7-ஆம் நூற்றாண்டு மற்றும் 9-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிவசம் இருந்துவந்த இந்நகரத்தில் துறைமுகம் ஒன்று நிறுவப்பட்டது.
பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாக விளங்கிய அத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கம் கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
அப்பேற்பட்ட துறைமுகம் வழியாக இரு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து சரக்குப் பெட்டகம் மூலம் கடத்தி வரப்பட்ட ஏறக்குறைய இருபது டன் போதைப் பொருட்களை, மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது, அந்நகர மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக நகரத்தில் இளைஞர்களின் மத்தியில் போதை மருந்து அதிகளவில் புழங்குவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் வர, இதனில் சரக்குப் பெட்டகத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் காவல்துறையினருக்கு கிடுக்கிப்பிடி போட, அதனைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிற்காகச் சென்னையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டான், சக்திவேல் IPS. அன்று தான் Addl SP [Additional superintendent of police] ஆகப் பதவி ஏற்றிருந்த இருபத்தி ஒன்பது வயது இளைஞன்.
"உங்களைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை சார். அந்தளவுக்குத் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, நம்ம நாடு முழுவதுமே மிகவும் பிரபலமாகப் பேசப்படும் போலீஸ் ஆஃபிசர் நீங்க. இப்போ எங்க மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்திருக்கீங்க. நீங்க இங்க வரப் போறீங்கன்னுத் தெரிஞ்சதுமே எந்தளவுக்கு எங்களுக்கு, ஐ மீன் பொதுமக்களில் ஒருவனான எனக்குச் சந்தோஷம் ஏற்பட்டுச்சோ, அதே அளவுக்குத் தப்பான அரசியல் பண்ற அரசியல்வாதிகளுக்கும், பணம் ஒன்றே என்னுடைய அடித்தளம் அப்படின்னு திமிரோட பல கொடூரமான குற்றங்கள் செய்துட்டு வர கோடீஸ்வர கிரிமனல்ஸுக்கும் அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கி இருக்கீங்க சார் நீங்க."
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நின்றிருந்த இளம் நிருபர் ஒருவருடய பேச்சைக் கூர்மையான பார்வையுடன் கேட்டுக் கொண்ட சக்திவேல், பதில் எதுவும் கூறாது, ஆமோதிப்பாய் மெள்ள தலையசைத்தான்.
அங்குக் குழுமியிருந்த அனைவருக்குமே தெரியும், இவன் அதிகம் பேசாதவன். வார்த்தைகளைவிடச் செயல்களில் நம்பிக்கை வைத்திருப்பவன்.
'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்' என்பதையே தன் வாழ்க்கையின் முதல் குறிக்கோளாக வைத்திருக்கும் இவனே ஆக்ரோஷத்தின் மறுபெயர் என்றும் அனைவருமே அறிந்திருந்தனர்.
ஆயினும் அந்த இளம் நிருபருக்கு அருகில் நின்றிருந்த மற்றுமொரு பத்திரிக்கையாளர் துணிச்சலுடன்,
"சார், இந்திய தேசம் முழுவதுமே இப்போ போதை என்கிற அரக்கன் கைகளில் சிக்கி இருக்கு, அதில் தூத்துக்குடியும் விதிவிலக்கல்ல. ஆனால் திடீர்னு ஏன் உங்களை இங்கு மாற்றம் செய்திருக்காங்க? இங்க இருக்கும் போலிஸ் ஆஃபிசர்ஸால் இந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியலையா? அவர்களது தகுதி அந்தளவிற்குக் குறைந்துவிட்டதா, என்ன?" என்றார்.
அவர் நக்கலாக வினவ, அதுவரை சற்று இளகுவாக முகத்தை வைத்திருந்த சக்திவேலின் முகம் இறுக்கமாய் மாறினாலும், நெற்றிப்பொட்டை தடவியவனின் உதடுகளில் புன்னகைத் தோன்றியது.
சிரிப்பென்பதே அறியாதவனின் இள நகையையும், அவனது நெற்றிப்பொட்டு தடவலையும் கண்டதில் அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்குமே பயம் பிறந்தது.
அதுவும் இல்லாது, மாநிறத்திற்கும் சிறிது கீழான நிறத்தைக் கொண்டிருந்தவனின் இரும்பு தோள்களும் அகன்ற மார்பும் அவனது காக்கி சட்டைக்கு எதிராகப் புடைக்கும் விதத்திலேயே தெரிந்தது, அவனுக்கு இந்தக் கேள்விப் பிடிக்கவில்லை என்று.
"There is no reduction in their qualifications. But the brutality of criminals increased."
அவன் பதிலளித்தும் விடாது அந்தப் பத்திரிக்கையாளர் மீண்டும் கிண்டலாக,
"குற்றவாளிகளின் கொடூரம் அதிகரித்திருக்குன்னு சொல்றீங்க, அப்படின்னா அதுக்காகத் தான் உங்களை இங்க மாற்றம் செய்திருக்காங்கன்னு சொல்றீங்களா? I mean brutality of criminals needs a brutal police officer? இல்லை பாம்பின் கால் பாம்பறியுங்கிற மாதிரியா?" என்றார்.
[குற்றவாளிகளின் மிருகத்தனத்திற்குச் சரிசமமாக ஒரு மிருகத்தனமான போலீஸ் தேவை]
அவரது கேள்விக்கு ஒரே ஒரு விநாடி நிதானித்தவன், "பாம்பின் கால் பாம்பு அறியும். அதுக்கு உண்மையான அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சுட்டு வந்து பிறகு என்னிடம் கேள்விக் கேளுங்க."
என்று மட்டும் கூறிவிட்டு விடுவிடுவெனக் காவல்துறை தலைமை அலுவலகத்தினை நோக்கி நடந்தவனின் மிடுக்கான நடையும், அதீத வேகமும், பாறையாய் இறுகிப் போயிருந்த முகமும் அங்குக் குழுமியிருந்த மற்ற காவலர்களுக்கும் ஒருவித கலக்கத்தைக் கொணர்ந்தது.
"இனி தூத்துக்குடியில் அதகளம் தான்.."
__________________________________________
ஏறக்குறைய 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காளியம்மன் கோவிலை நோக்கி மின்னல் வேகத்தில் பைக்கை செலுத்திய சக்திவேலின் எண்ணம் முழுவதுமே, பாலாவிடம் கேட்க நினைத்துக் கேட்காமல் விட்ட கேள்வியிலேயே நிலைத்திருந்தது.
'வேலையாட்கள் உட்பட எல்லாருமே கோவிலுக்குப் போயிருக்காங்கன்னா, அப்போ அவ?'
கோவிலை அடைந்ததுமே அங்கு இடித்துத் தள்ளும் மக்கள் கூட்டத்தைச் சிரமப்பட்டு விலக்கியவாறே கார்த்தி வந்து கொண்டிருக்க, அவனுக்கு அருகில் பட்டுப்புடவை அணிந்த தேவதையென நடந்து வந்து கொண்டிருந்த மீனாக்ஷியைக் கண்டதில் சக்திவேலின் கண்கள் வியப்பில் விரிந்தன.
உடல் முழுவதும் வரிக்கோடுகளாய் சரிகைகள் இழையோடி இருக்க, அடர் மெரூன் நிறத்து பட்டுப்புடவைக்குத் தங்க நிற கரை எடுப்பாயிருக்க, மெரூன் நிறத்தில் ரவிக்கையும் அணிந்தவளாய், இருபக்கங்களிலும் மல்லிகைச் சரங்கள் அசைந்தாட நடந்து வந்தவளின் பேரழகில் மீண்டும் மயங்கிப் போனான் அந்தக் கட்டிளங் காவலதிகாரி.
'இவ எந்தக் கலர்ல சாரி [saree] கட்டினாலும் பொறுத்தமா இருக்கும் போல?'
மெல்ல அவன் வாய் முனகியது.
ஆயினும் இவர்கள் இருவர் மட்டும் தனியாக எங்குச் செல்கின்றார்கள் என்ற சந்தேகம் தோன்ற, அவர்களை நோக்கி நடந்தவனைக் கவனியாது கார்த்தியும் மீனாக்ஷியும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சில அடிகள் இடைவெளியில் "கார்த்தி" என்றழைத்தவனின் சத்தம் கேட்காமல் போக, வாயில் இருவிரல்களை வைத்துச் சத்தமாக விசில் ஊதியவனின் செய்கையில், விசில் சத்தம் வந்த திசையை நோக்கி பலர் திரும்பினர்.
அவர்களில் மீனாக்ஷியும் ஒன்று.
அங்கு வாகனங்களுக்கு நடுவில் நின்றவாறே விசில் ஊதுபவனின் தோற்றத்தில், அக்கணம் வரை அமைதியாய் மூழ்கியிருந்த பக்தி கடலில் இருந்து அவளது மனம் பதைபதைப்புடன் அரக்கப்பரக்க வெளி வந்தது.
'ஐயோ! இவரா?'
உள்ளம் கூப்பாடுப்போட தனக்கு வெகு அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் கார்த்தியை அழைத்தவள், "உங்க அண்ணா வந்திருக்காங்க.." என்றாள்.
"பாலா அண்ணாவா, எங்க?"
தேடியவன் சற்றுத் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் சக்திவேலைக் கண்டதும் புருவங்கள் சுருங்க யோசனையுடன் வேக நடை நடந்து தமையனை அடைந்தான்.
புன்சிரிப்புடன், "என்ன அண்ணா கோவிலுக்கு எல்லாம் வந்திருக்கீங்க?" என்று கூற, "வீட்டுச் சாவியை நான் எடுத்துட்டு வரலை. வீட்டுலயும் ஒருத்தரும் இல்லை, என்னை என்ன பண்ணச் சொல்ற?" என்று கசந்தவாறே பேசுபவனின் பார்வை மீனாக்ஷியின் புறம் திரும்பியது.
அவனது கூர்மையான கண்களைத் தாங்க இயலாதவளாகத் தலைக்கவிழ, அவளின் செய்கை ஐயுறவை வரவழைக்க,"கோவிலுக்குச் சாமிக் கும்பிடத்தான வந்தீங்க, அப்புறம் இங்க என்ன பண்றீங்க?" என்று சக்திவேல் அதிகாரமாய்க் கேட்டதில் இவனிடம் என்ன சொல்வது என்று மீனாக்ஷி பரிதவித்துப் போனாள்.
"அம்மா தான் - ண்ணா மீனாவுக்கு உடம்பு சரியில்லை, நீ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போன்னு சொன்னாங்க."
"உடம்பு சரியில்லையா? ஏன் அது வீட்டிலேயே தெரியலையா?"
மீண்டும் மீனாக்ஷியின் புறம் திரும்பியவன் சற்று அதட்டலாகவே கேட்க, 'ஆத்தா, உன்னைப் பார்க்க எவ்வளவு ஆசையா நான் வந்தேன், இப்படிச் செஞ்சிட்டியே. இப்ப இவர்கிட்ட நான் என்ன சொல்றது?' என்று உள்ளுக்குள் புலம்பியவளாகக் கைகள் இரண்டையும் பிசைந்து கொண்டு நிற்க, சக்திவேலிற்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது.
"கார்த்தி, நீ கோவிலுக்குப் போ. நான் இவளை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்."
"இல்லைண்ணா, பரவாயில்லை. கோவிலுக்கே வராதவரு முதல் தடவையா வந்திருக்கீங்க. இப்படிச் சாமியைக் கும்பிடாம பாதியிலேயே போக வேண்டாம். நான் போய் மீனாவை வீட்டில் விட்டுட்டு வந்துடறேன்."
"கார்த்தி, நான் சாமிக் கும்பிட இங்க வரலை. நீ போய் வீட்டுச்சாவியை வாங்கிட்டு வா. நான் இங்கேயே வெயிட் பண்றேன்."
சட்டமாய்க் கூறுபவனை எதிர்த்துப் பேசத் திராணியற்று கூட்டத்திற்குள் திரும்பவும் கலந்த கார்த்தி அன்னையைக் கண்டுப்பிடித்து விஷயத்தைக் கூற, தாடையில் கைவைத்தார் முத்தம்மாள்.
"என்னது? வேலு வந்திருக்கானா, அதுவும் கோவிலுக்கா?"
"ம்மா, ரொம்ப ஆச்சரியப்படாதீங்க. உங்க மூத்த மகன் சாமிக் கும்பிட வரலை.."
"அதான் தெரிஞ்ச விஷயமாச்சே, ஆனால் இவ்வளவு தூரம் எதுக்கு வந்திருக்கான்?"
"வீட்டுச் சாவிய அவர் எடுத்துட்டு வரலையாம். பண்ணை ஆளுங்க, வேலைக்காரவங்கன்னு எல்லாரையும் நீங்களும் லீவு கொடுத்து அவங்கவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டீங்க. அதான் வீட்டைத் தொறக்க முடியாம சாவிய வாங்க இவ்வளவு தூரம் வந்திருக்காரு."
"சரி, இந்தா சாவி.." என்றவர் சாவி இருக்கும் சுருக்குப் பையைப் பிரித்தவாறே, "மீனா எங்க கார்த்தி, உன் கூடத்தான வந்தா." என, அவரது கேள்விக்கு இளைய மகன் கூறிய பதிலில் முத்தம்மாள் நெஞ்சில் கைவத்தார்.
"என்னது? மீனாவை அவன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றானா?"
"ஆமா, பார்த்து, நீங்க அதிர்ச்சியில மயங்கி விழுந்திடாதீங்க?"
"உங்க அண்ணனைப் பத்தி தெரிஞ்சும் அவன் கிட்ட மீனாவ விட்டுட்டு வந்தியா?"
"உங்க மகன் பேச்ச இதுவரை இந்தத் தூத்துக்குடி முழுக்க யாராவது தட்டிப் பேசி இருக்காங்களா, நான் பேசுறதுக்கு? அதான் வேற வழியில்லாமல், பதில் பேசாமல் மீனாவ அவர்கிட்ட விட்டுட்டு வந்துட்டேன். துக்கனியூண்டு சாவியால் இப்போ எவ்வளவு பிரச்சனைப் பாருங்க.."
சலித்துக் கொண்டவனாக அவரிடம் இருந்து சாவியைப் பிடுங்கி வாங்கினான்.
"கார்த்தி, எதுக்கும் நீயே மீனாவை.."
அவரை முடிக்கவிடவில்லை கார்த்தி.
"இந்தாங்க என் செல்ஃபோன். நீங்களே உங்க மகனைக் கால் பண்ணி சொல்லிடுங்க.."
"அந்தத் தைரியம் எனக்கிருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன்."
"அதான, அப்ப எங்களுக்கு மட்டும் எங்கன இருந்து வரும் தைரியம்? சின்ன வயசில் இருந்தே அண்ணா வீட்டுக்குள்ள வரும் போதே ஏதோ பூச்சாண்டி வராருங்குற மாதிரி எங்க எல்லாருக்கும் பயம் காட்டி வளர்த்துட்டீங்க. திடீர்னு அவரை எதிர்த்துப் பேசுங்கன்னு சொன்னா நாங்க எப்படிப் பேசுறது?"
கூறியவாறே மீண்டும் கூட்டத்திற்குள் முண்டியடித்துக் கொண்டு வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்குக் கார்த்திச் செல்ல, அங்குப் பைக்கில் சாய்ந்தவாறே இரு கைகளையும் வயிற்றுக்குக் குறுக்கால் கட்டியவனாய் நிற்கும் சக்திவேலுவிற்குச் சில அடிகள் தள்ளி, பயத்துடன் சுற்றிலும் பார்த்தவாறே நிற்கும் மீனாக்ஷியைப் பார்த்தவனுக்குப் பரிதாபமாகிப் போனது.
_________________________________________________
திருவிழாவுக்கு என்று கூடியிருந்த மக்கள் கூட்டத்தையும் வாகனங்களையும் கடந்து வெளிவருவதற்குள் ஏறக்குறைய மணி இரவு ஒன்பதை நெருங்கியிருந்தது.
பைக்கைக் கிளப்பும் முன் மீனாக்ஷியை ஏறி அமருமாறு சக்திவேல் கூற, அப்பொழுது தான் அந்தப் பைக்கை ஊன்றிப் பார்த்தவளுக்குப் பகீரென்று இருந்தது.
காரணம் அது சூப்பர் ஸ்போர்ட் ஃபேரிங் ரக வகை மோட்டார் பைக்.
அதுவும் அல்லாது பைக்கை ஓட்டுபவரை விடப் பின்பக்கம் அமரும் இருக்கையானது [high pillion rider seat] மிகவும் உயரமாய் அமைக்கப்பட்டு இருந்தது
'கடவுளே! இதுல எப்படி உட்கார்ந்து போறது?'
அவளாக நினைத்துக் கொண்டவாறே நிற்க, தான் ஏறி அமர்ந்த சக்திவேல் இன்னமும் நின்றுக் கொண்டிருப்பவளைத் திரும்பிப் பார்த்தவனாய், "என்னாச்சு?" என்றான்.
"பைக்?"
"பைக் தான், நான் என்ன காருன்னா சொன்னேன்?"
"இல்ல, இதுல எப்படி உட்காருவது?"
"எப்படின்னா?"
இதற்கு மேல் இவனிடம் என்ன பேசுவது என்று யோசித்தவளாய் பின்பக்க இருக்கையை ஒரு முறை ஆழ்ந்துப் பார்த்தவள் பின் பெருமூச்சுவிட்டவளாய் எப்படியோ பைக்கில் ஏறி அமர்ந்தவளுக்கு அடுத்தக்கட்ட குழப்பம் உருவானது.
ஏனெனில் அந்தப் பைக்கில் பின்பக்கம் அமருபவர் பிடிப்பதற்கு என்று [passenger grab handle/rail ] கைப்பிடி அமைக்கப்படவில்லை.
வழக்கமாய் இரு சக்கர வாகனங்களில் கைப்பிடிகள் இருக்கும், ஆனால் ஏனோ பாலா அதனை வேண்டாம் என்று கூறி சில மாற்றங்களைத் தனது பைக்கில் தானே செய்திருந்தான்.
'நான் செத்தேன்.'
மீண்டும் மனதிற்குள் புலம்பியவளாய் திருதிருவென்று முழித்தவாறே அமர்ந்திருக்கப் பைக்கை சக்திவேல் சீறிக் கிளப்பியதுமே தடுமாறிப் போனவளாய் அவனது முதுகின் மேல் மோதினதில் அவளின் நிலைப் புரிந்தது.
"ஹேண்டில் ரெயில் பின்னாடி இல்லையா?"
"ம்ம்ம்?"
"நீ பிடிச்சிக்கிற மாதிரியான கைப்பிடி பின்னாடி இல்லையா?"
"இல்லை.."
அவளது பதிலில் விநாடிகள் சில அமைதியானவன் அவளின் புறம் தன் கையை நீட்டினான்.
எதற்கு என்பது போல் அவள் பார்க்க அவளது முகம் நோக்கித் திரும்பியவன், "உன் கையைக் குடு." என்றான்.
"எதுக்கு?"
"ம்ப்ச். குடுன்னு குடு."
சலித்துக் கொண்டவனாய் கூற, அப்பொழுதும் அவள் அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவனே அவளது வலதுக் கரத்தைப் பற்றியவன் தனது இடுப்பைச் சுற்றி வளைத்துப் பிடிக்குமாறு வைத்துக் கொண்டான்.
"இல்லை, நான் வேற எங்கேயாவது பிடிச்சிக்கிறேன்"
"எங்க?"
"எங்கேயாவது.."
கூறியவளாய் அவனது இடுப்பில் இருந்து கையை அகற்ற எத்தனிக்க, தனது வயிற்றோடு அவளது கரத்தை அழுத்திப் பிடித்தவனாய், "பின்னாடி ஹேண்டில் ரெயில் இல்லைன்னா, வேறு எங்கேயும் உன்னால் பிடிச்சிக்க முடியாது." என்றான் ஆழ்குரலில்.
"பரவாயில்லை, நான் சமாளிச்சிக்கிறேன்.."
"படுத்தாதடி, அதான் பார்த்தானே, பைக்கை ஸ்டார்ட் பண்ணியவுடனே தடுமாறி என் மேல் மோதினியே. அதுலேயே தெரியலையா?"
'ஐயோ! டி எல்லாம் போடுறாரே. இது வேறா?'
எண்ணியவளாய் வேறு வழியின்றி மௌனமாகிவிட, அவன் பைக்கை மீண்டும் சீறிக் கிளப்ப, அது தந்த அதிர்வில் சட்டையோடு சேர்த்து அவனது வயிற்றை இறுக்கக் கெட்டியாய் பிடித்தவளின் செய்கையில் சக்திவேலின் உதடுகளில் சின்னச் சிரிப்பு தோன்றியது.
இரவு மணி ஒன்பதை நன்றாகவே கடந்திருக்க, திருவிழாக் கூட்டத்தைவிட்டு வெளிவந்ததுமே மருதூர்குளத்திற்குச் செல்லும் கிளைச்சாலையை அவர்களின் பைக் தொட, அச்சாலை வெறிச்சோடிக் கிடந்தது.
நெருப்பு போல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த பைக்கின் சத்தத்தைத் தவிர வேறு எந்த ஓசையும் இல்லாத சுற்றுப்புறச் சூழலில் இருவரின் மனங்களையும் ஆட்கொண்டிருந்த சிந்தனைகள் வெவ்வேறு.
நெடுஞ்சாலையில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்த சக்திவேலின் எண்ணங்கள் முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்த சிந்தனையோ, இது வரை அவன் வாழ்நாளில் பார்த்திருக்கும் சிற்பங்களையும் சிலைகளையும் ஏகமாய் மிஞ்சிவிடும் பேரழகிய இளம் பெண்ணொருத்தி அவனுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றாள்.
அதுவும் அவனது உடலோடு ஒட்டி அமர்ந்திருப்பவளின் கரம் வேறு அவனை இறுக்கப்பற்றி இருக்க, அவளது ஸ்பரிசத்தில் அவன் வாழ்நாளில் அதுவரை உணராத சிலிர்ப்பை உணர்ந்துக் கொண்டிருந்ததில் மனமும் வெகுவாய் சுகத்தில் இலயித்திருந்தது.
ஆனால் மீனாக்ஷியின் உள்ளமோ அதற்கு நேர்மாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.
தன்னை இவர் கண்ட நாள் முதல் ஏதோ பரம எதிரியைப் பார்ப்பது போலவே வெகு கோபமாய் நடந்து கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட தன்னை நடுவீதியில் தள்ளிவிட முடிவெடுத்தவர் போல் வீட்டைவிட்டுத் துரத்த அன்று தன்னைத் தரதரவென்று இழுத்துச் சென்றார்.
அன்று மட்டும் இவரது அப்பா மார்த்தாண்டம் ஐயா வரவில்லை என்றால் இந்நேரம் என் நிலை?
யாருமற்ற அநாதையாய் தெருவில் திரிந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! வாழ வழியில்லாது இந்த அநியாய உலகில் தனித்து வாழும் தைரியுமும் இல்லாது தற்கொலை வரை சென்றிருந்தாலும் அதிசயம் இல்லை!
அப்படி இருக்க ஏன் இந்தத் திடீரென்ற இளகியத்தன்மை??
நிமிடங்கள் மறைந்துப் போக, ஏறக்குறைய அரைமணி நேரம் கடந்திருக்க, கடந்த பல வருடங்களாகக் கொலைகள் கொள்ளைகள் என்று அநேகமாக அனைத்து பகல்களும் இரவுகளும் கடந்து போயிருந்ததில், வாழ்க்கையில் ஒரு சலிப்பு வரவிருந்த சூழ்நிலையில், இன்றைய இரவு சக்திவேலின் மனதிற்கு ரம்யமாகவே இருந்தது.
அதனில் அவ்வப்பொழுது மேடுபள்ளமாய் இருந்த சாலைகளில் பைக்கை செலுத்துப் பொழுது இறுக்கப் பற்றும் மீனாக்ஷியின் கரங்களில் சலசலக்கும் வளையல்களின் சத்தம் அவனது செவிக்கு மட்டுமல்ல, அவனது கரடுமுரடான இதயத்திற்கும் சங்கீதமாய் ஒலித்தது.
ஏகத்திற்கு அச்சூழ்நிலையை ரசித்தவனின் புத்தி இந்தச் சாலைக்கு முடிவே இல்லாதது போல் இந்தப் பயணம் நீண்டு இப்படியே சென்று கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று சிந்திக்க ஆரம்பிக்க, சொல்லி வைத்தார் போன்று அவனது அலைபேசி சிணுங்கியது.
சட்டென்று பைக்கின் வேகத்தைக் குறைத்தவன் சாலையின் ஒரு பக்கம் நிறுத்தியவாறே அலைபேசியை எடுத்துப் பார்க்க, அழைத்தது யுகேந்திரன்.
"நான் இந்தக் காலை அட்டெண்ட் பண்ணணும், இறங்கு.."
கூறியவனாய் அவள் இறங்கியதும் தானும் இறங்கிய சக்திவேல் சில அடிகள் தொலைவு சென்றவன் அலைபேசியை உயிர்ப்பித்துப் பேசத் துவங்கினான்.
"யெஸ் யுகா.."
"ஷக்தி, எங்க இருக்க?"
"மருதூர்குளத்துக்குப் போயிட்டு இருக்கேன்."
"இன்னமுமா? அப்பவே கிளம்பின?"
நண்பனின் கேள்விக்குச் சுருக்கமாய் சக்திவேல் விளக்கம் கொடுக்க, அதிசயத்தில் கண்கள் விரிய, "அப்போ உன் கூட மீனாக்ஷியும் இருக்கான்னு சொல்லு." என்றான்.
"ம்ம்ம்.."
"ஐயோ!."
"இப்போ எதுக்கு இந்த அநியாய அதிர்ச்சி?"
"அதிர்ச்சி இல்லை. சர்ப்ரைஸ்.."
"சரி அது எதுக்கு இப்போ?"
"நான் நினைக்கவே இல்லை ஷக்தி, நீ இந்தளவுக்குப் படிஞ்சுப் போவன்னு."
"அடேய்.."
"ஒகே ஒகே.. பொண்ணுன்னா பேயும் இறங்கும்னு படிச்சிருக்கேன். அதுவும் எனக்குத் தெரிஞ்ச வரை அந்த மீனாக்ஷி செம்ம அழகுன்னு வேற கேள்விப்பட்டிருக்கேன். ஸோ.."
முடிக்காது இழுத்தவனைக் கண்டு சலித்தவனாய், "சரி நீ எதுக்குக் கூப்பிட்ட, அதை முதலில் சொல்லு.." என்றவாறே சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த மீனாக்ஷியின் புறம் சக்திவேலின் பார்வை சென்றது.
அடர்ந்த இரவு.. ஆயினும் சாலையின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளின் வெளிச்சம் இரவைக் கிழித்துக் கொண்டு பெண்ணவளின் மீது வீசியதில், அவளின் செவ்வர்ண நிறம் தங்கமாய் ஜொலித்தது.
இதனில் அவள் அணிந்திருந்த மெரூன் நிறம் அவளின் சந்தன மேனியை இன்னமும் எடுப்பாய் காட்ட, அவளது தேகத்தில் நிலைத்த கண்களை அகற்ற முடியாமல் தினறிப் போனான் சக்திவேல்.
"சக்தி, ஆர் யு தேர்?"
"வாட்?"
"பேசிட்டு இருந்தவன் திடீர்னு பேச்சை நிறுத்திட்ட, அதான் கேட்டேன்."
நண்பனின் கேள்விக்குத் தன் வழக்கமான மேனரிசமாய் நெற்றிப்பொட்டைத் தடவியவாறே புன்னகைத்தவனின் கண்கள் மீண்டும் மீனாக்ஷியிடமே சென்றன.
அதே நேரம், அவசரமாய் வீசிய காற்றின் வேகத்தில் மரங்கள் அசைந்தாட, அதன் சிலிர்ப்பில் உருகியவனின் தேகத்தைச் சட்டெனச் சிலிர்க்கச் செய்தது, தென்றலின் வீச்சில் பெண்ணவளின் புடவை கலைந்து அவளின் மெல்லிய இடை வெட்டவெளிச்சமாய்த் தெரிந்ததில்.
அவனையும் அறியாது பெருமூச்சுவிட்டவன், சற்று சத்தமாய், "Hourglass body.." என்றுவிட, மறுமுனையில் கலுக்கென்று சத்தமாய்ச் சிரித்து வைத்தான் யுகேந்திரன்.
"இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?"
"நீ என்ன சொன்னன்னு உனக்குத் தெரியுதா?"
"என்ன சொன்னேன்?"
"சேன்ஸே இல்லை ஷக்தி. நீ ஒரு Additional Superintendent of Police- ங்கிறதையே எனக்கு மறக்கச் செய்துட்ட."
"என்னடா சொல்ல வர்ற?"
"ஒண்ணுமில்ல, நீ கண்டினியூ பண்ணு.."
"எதை?"
"ம்ம், இப்ப வரை நீ எதைச் செய்துட்டு இருந்தியோ அதை."
கிண்டலாகப் பேசுபவனிடம் அதற்கு மேல் பேச்சை வளர்க்காது அழைப்பை முடித்த சக்தி ஆயினும் அலைப்பேசியைக் கீழிறக்காது, அதே நேரம் பார்வையை மீனாக்ஷியிடம் இருந்தும் அகற்றாது நின்றவன் இன்னமும் அவளை ரசிப்பதை நிறுத்தவில்லை.
அக்கணம் ஒரு அசம்பாவிதம் அங்கு நிகழ இருந்தது.
சாலையின் ஒரு ஓரத்தில் பைக்கை நிறுத்தியிருந்தவர்கள் சில அடிகள் தொலைவில் நின்றிருந்தனர்.
அவர்களைக் கவனியாது அதிவேகமாய் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று முன் சென்ற பேருந்தை முந்தும் நோக்கில் இன்னமும் வேகமாய் வர, நொடி நேரத்தில் மீனாக்ஷியின் புறம் மின்னலென அது பாய்ந்தது.
சடுதியில் நிலைமையை உணர்ந்து கொண்ட சக்திவேல், "மீனா.." என்று கத்தியவனாய் அவளை நெருங்கியவன் அவளைப் பிடித்துத் தன் புறம் இழுக்க, புழுதிப் பறக்க லாரியும் பேருந்தும் அவர்களைக் கடந்து போனதில் தடதடத்துப் போனாள்.
"இவ்வளவு பெரிய லாரி வருது, உன் கண்ணுக்கு அது தெரியலை. நகராமல் அப்படியே நின்னுட்டு இருக்க."
அதட்டும் குரலில் அவன் கடுகடுக்க, அதிர்ச்சியில் நிலைக்குலைந்துப் போயிருந்தவளாய் அவனது உடலை வளைத்துப் பிடித்தவாறே பரந்த மார்பில் முகம் புதைத்திருந்தவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
"மீனா.."
அவளது பதற்றம் புரிந்து குரலைத் தணித்தவனாய் மெல்ல அழைக்க, அவனது மார்பில் இருந்து முகத்தை நிமிர்த்தியவள், "நான் லாரியைக் கவனிக்கலை.." என்றாள் தழுதழுக்கும் குரலில்.
அவளது விழிகளில் திரண்டிருந்த நீர் சக்திவேலை என்னவோ செய்தது.
கொடூரமாய்க் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் எத்தனையோ மனிதர்களையும், அவர்களுக்கு அருகே கதறி அழுது கொண்டிருக்கும் உற்றார் உறவினர்களின் கண்ணீரையும் சகஜமாய்க் கடந்திருந்தவனுக்கு அவளின் அழுகை வித்தியாசமாய்ச் சஞ்சலத்தைக் கொணர்ந்தது.
தன்னையும் அறியாமல் அவளை இன்னமும் அதிகமாய் அழுத்தி அணைத்தவனாய் சற்று நேரம் நிற்க, ஒருவழியாய் படபடப்புக் குறைய ஆரம்பித்ததும் தான் அவளுமே உணர்ந்தாள், இன்னமும் தன்னைவிடாது இறுக்கிப் பிடித்திருப்பவனின் அழுத்தத்தை.
சட்டென அவனை விட்டு அகன்றவள் அமைதியாய் தலைக்கவிழ்ந்தவாறே நிற்க, "போலாமா?" என்றவனின் கேள்வியில் ஆமாம் என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.
பைக்கில் ஏறியவன் அவள் அமர்ந்தும் அதனைக் கிளப்பாது இருக்க, என்னவென்பது போல் ஏறிட்டு நோக்கியவளின் புறம் வலக்கையை நீட்டினான்.
அவனது செய்கையின் அர்த்தத்தை உணர்ந்துக் கொண்டவளாக அவளாகவே அவனது இடுப்பை வளைத்து மென்மையாகப் பிடித்துக் கொள்ள, பைக் கிளம்பியது.
இரவு மணி பத்தை நெருங்கியிருந்த வேளையில், செவ்வானச்சூரியன் உறங்கச் சென்றுவிட்டிருக்க, கருப்பு வெற்றிடமாய்க் கிடந்த ஆகாயத்தில் சிறுக்கோலப் புள்ளிகளாய் விண்மீன்கள் கண்சிமிட்ட, அந்த இரவு வரமாய் அமைந்தது போல் இருந்தது சக்திவேலிற்கு.
பனி பொழியும் அமைதியான இரவில் சில்லென்று குளிர்காற்று இதமாய் முகத்தில் வீசியது.
பளிச்சிடும் வர்ணஜாலத்தை அள்ளிவீசுவது போல் அடர்ந்த மெரூன் நிறத்தில் பட்டுடுத்தி அமர்ந்திருக்கும் பாவையின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச் சரங்கள் அசைந்தாடியதில், வாகனத்தின் கண்ணாடியில் தெரிந்த ஏகாந்தத்தை ரசிக்க ஆரம்பித்தது ஆண்மகனின் இதயம்.
எத்தனை கொடுத்தாலும் திரும்ப வாங்க முடியாதளவிற்கான இனிமையான நினைவுகளைச் சுமந்த இரவாக அது அமைய, மனதினில் மகிழ்ச்சிப் பொங்கியதில் இதயம் முதன்முறையாகக் கவிப்பாட, இளைமையின் வேகத்தை மிஞ்ச முடியாது அமர்ந்திருந்தவனுக்கு அவ்வப்பொழுது தனது முதுகில் அழுந்த பதிந்து மோதி நகரும் அவளின் அங்கலாவண்யங்கள் வேறு சொல்ல இயலாத இனிய சித்திரவதையை அளித்தது.
அதே நேரம் அவன் மருதூர்குளத்திற்கு வரும் வேளை அவனது காரில் ஒலித்த பாடலின் வரிகளும் இச்சூழ்நிலைக்கு அற்புதமாய்ப் பொருந்தியது போல் இருந்ததில் சின்னப் புன்னகையால் அவனது இதழ்கள் மலர்ந்தன.
வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே
ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே
எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே
வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
மீனாக்ஷி - சக்திவேல்
விரைவில் உங்களைச் சந்திக்க வருவார்கள்!
Thanks
JB




















































































Last edited: