JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சதுரங்கம் 10

Subageetha

Well-known member
ரத்னாவுக்கு திருமணத்திற்கு முன்னரே பெரிய அளவில் நிச்சயம் செய்ய வேண்டும் என்று திலகாவும் அவள் கணவரும் ஆசை பட்டதால், சிவனும் சரி சொல்லிவிட்டார். நிச்சயதார்த்தம் திருசூரில் நடந்தால் உறவினர் பலர் வர முடியும் என்று திலகா சொன்னதால் விட்டுபோன பல சொந்தங்களை தேடி சிவன் கிளம்பிவிட்டார். அவர்கள் தமிழ்நாடு வந்து பதினான்கு வருஷங்கள் ஓடிவிட்டது.
மொத்த குடும்பமும் சந்தோஷமாக கிளம்பிவிட்டது..தங்கள் உறவுகளை பார்க்கவென.

அன்னபூரணி-அருணாச்சலத்தை அழைக்க வந்த சிவனிடம் தாங்கள் இருவராலும் வர முடியாது என்றாலும், "ரத்னாவின் திருமண செலவு மொத்தமும் எங்களுடையது. கவலை படாதீர்கள்!சிவம்.மாப்பிள்ளை வீட்டில் கேட்கும் சீருக்கு தயங்க வேண்டாம்.."என்று சொல்லி அனுப்பி வைத்தாள் அந்த மகராசி .
வீட்டில் வந்து மனைவியிடம் சொல்லி சொல்லி மாஞ்சு போனார் சிவன். அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தனது மூன்று பெண்களில் இருவருக்கு இவ்வளவு சீக்கிரம் திருமண நிகழ்வு கூடி வரும் என கனவிலும் அவர் நினைத்து பார்க்கவில்லை. மூன்றும் பெண்களாய் பிறந்தவுடன் சிவன் கொஞ்சம் பயந்துதான் போனார். மூவரையும் படிக்க வைத்து எப்படி கரையேற்ற போகிறோம், நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கப் போகிறோம்?என்பது போன்ற கவலைகள் அவரையும் அவர் மனைவியையும் பயம் கொள்ள செய்த விஷயங்கள்.

இப்பொழுது இவ்வளவு சுலபமாய் ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்பது அவர் யோசிக்காத ஒன்று.

அன்னபூரணி சொன்னதாக கணவன் சொன்னவற்றை கேட்ட பாறு குட்டிக்கும் கூட மனதில்தான் தன் மூத்த பெண்ணின் வாழ்க்கையும் கூட நன்றாக அமைந்து விடும்! என்ற நம்பிக்கை இலேசாக துளிர்விடத் தொடங்கியது.
மருமகளாக வர இருக்கும் பெண்ணின் தங்கைக்கு இவ்வளவு செய்பவர்கள், மருமகளை எப்படி போற்றி வைத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய கற்பனை அவளின் கண் முன் படமாய் விரிந்தது. மனதை வாழ்த்திக் கொண்டிருக்கும் பாரம் இறங்குவது போன்ற உணர்வு சிவனின் மனைவிக்கு.

ஆனால் அவளும் கூட யோசிக்காமல் விட்ட ஒரு விஷயம் அருணாச்சலம் எந்த இடத்திலும் தன் வாயை திறக்கவே இல்லை என்பதை.

அருணாச்சலம் சொல்லிதான் அன்னபூரணி வர முடியாது என்று சொன்னாள்.
தனது நிலையில் இருந்து இறங்க அருணாச்சலத்தின் மனம் ஒப்பு கொள்ளவில்லை. அதையே மனைவியிடம் சொன்னார்.
'நாம வரணும்னு அவங்களுக்கு இருந்தா இங்கனயே வச்சிருக்க மாட்டாங்க?
நம்மோட பணம், அந்தஸ்து இதெல்லாம் விட்டு அங்க போயி நிக்க முடியுமா? அவங்க
இந்த கல்யாண செலவே நாமதான் செய்ய போறோம். அந்த மரியாதை இல்லயே!
நீயும் வர முடியாதுன்னு சொல்லிரு அன்னம்.'என்ற
கணவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த அன்னத்திற்கு இந்த அருணாச்சலம் புதிது. அவரது 'தான் 'எனும் அகங்காரம் இதுவரை அன்னம் அறியாதது.

அருணாச்சலம் ஒன்றை வசதியாக மறந்து போனார். அது, எப்படி இவர்கள் சிவனின் வீட்டிற்கு மூத்த பெண் வழியாக சம்மந்தி ஆக போகிறார்களோ, அதேபோல் ரத்னாவின் வழியாக சம்பந்தி ஆகப்போகும் திலகா குடும்பத்திற்கும் சிவன் மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும்.
இதுதான் உலக வழக்காக கருதப்பட்டு வருகிறது.
மேலும் திலகா சிவனின் சொந்த தங்கை. சிவனின் பூர்வீகமும் கேரளம் தான். என்னதான் தமிழ்நாட்டில் அவர் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டிருந்தாலும், அவரது பூர்வீக ஊர் பற்றிய பாசம் என்றுமே குறையப்போவதில்லை.
அப்படி இருக்கும் பொழுது அவரை தடுத்து நிறுத்துவதிலோ, இல்லை ...அருணாச்சலத்தின் மரியாதை காரணமாக தமிழ்நாட்டில்தான் சிவனின் இரண்டாவது பெண்ணின் நிச்சயத்தை நடத்த வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் சரியாகும்?

எப்போது இவர் இப்படி மாறினார்?முன்னெல்லாம் யாராவது தன்னை அழைத்தால் முடியாது என்றாலும் தன்மையாகவே கூறிவிடுவாரே...
இதுபோன்ற 'தான்' என்னும் அகங்காரம் இதற்கு முன்பு அவரிடம் இல்லை.
புதிது புதிதாய் வரும் பதவியும் அந்தஸ்தும் அவரை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிக் கொண்டு வருகிறது. அவரது பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது.
மது பாட்டில்களை கைகளால் தொட்டிராதவர் வாரத்தில் இரண்டு முறையாவது தள்ளாட்டத்துடன் வீட்டுக்கு வருகிறார். அதுவும் யாராவது கொண்டு வந்து விட்டால் உண்டு. இல்லையென்றால் எங்கு மது அருந்துகிறாரோ அங்கேயே அந்த இரவை கழித்து விடுவார். மறுநாள் காலையில் போதை தெளிந்த பின்தான் வீட்டிற்கு வரவு.

அருணாச்சலம் புது பணக்காரர் இல்லை. மிஞ்சிய சொத்து அவருக்கு தலைமுறைகளாக உண்டு. ஆனால் இவ்விதமான புது நடத்தை சரி இல்லையே? என்று யோசித்த அன்னத்திற்கு,
இவர் எப்படி தன் மகனை திருத்த முடியும் என்ற கேள்வியும் சேர்ந்து நொறுங்க செய்தது.
இன்று வரை அருணாச்சலத்திடம் மாறாதது அவர் தன் மனைவி மீது வைத்திருக்கும் அன்பும் காதலும்தான். அதுவும் என்றாவது மறைந்துவிட்டால் ஒருவேளை அது அன்னத்தின் இறுதி நாளாக இருக்கலாம்.

அன்னம் தன் எண்ணங்களை மனதிற்குள் வைத்துக்கொண்டு வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள்.

குருவை பொருத்தவரை அதற்கு லேசாக ஒரு சிறு நம்பிக்கை வெளிச்சமாக தெரிகிறது. அது உமா மீதான அவனது பார்வை. உமாவை பார்த்துவிட்டு வந்த நாளிலிருந்து குரு அவனாக இல்லை. முன்புபோல் அடிக்கடி வீட்டில் இல்லாமல்
எங்காவது காணப் போவதும் இல்லை. முன்புபோல் வசூலாகும் பணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு கெட்ட பழக்கங்களில் வாரி விடவும் இல்லை.
உமாவின் அழகு அவன் கட்டிப்போட்டு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி எது வேண்டும்? த
ான் எடுத்த முடிவு சரிதான் என்று மனதை தேற்றிக்கொண்டு கல்யாணத்திற்கு தேவையான மற்ற ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கி விட்டாள் அன்னபூரணி.

தன் மருமகளுக்கு தேவையான வீட்டில்
உடுத்திக்கொள்ளும் வகையான புடவைகளை மட்டும் அன்னபூரணி தேர்ந்தெடுத்தாள். பணக்கார வீடுகளுக்குத் தேவையான ஆடம்பரமும் பவிசும் அணியும் ஆடை அணிகலன்களிலிருந்தே தொடங்குகிறத, என்பது இன்றுவரை அன்னத்தின் எண்ணமாக இருக்கிறது. அவளின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே தலைமுறை தலைமுறையாக பணக்காரர்கள். இவ்வளவு கீழே இறங்கி உமாவை தேர்ந்தெடுத்திருப்பது குருவின் நடத்தை காரணமாகத்தான். இல்லாவிட்டால், தங்களுக்கு சம அந்தஸ்துடைய வீட்டிலிருந்து பெண் எடுத்திருப்பார்கள். ஆனால் தனது புத்திரசிகாமணியின் லட்சணம் தெரிந்தும் சிவன் பெண் தர ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் தான்.

வீட்டிற்கு ஜவுளி காரரை வரவழைத்து அன்னபூரணி புடவைகளை தேர்ந்தெடுக்க தொடங்க, அங்கு வந்த குருவும் தானே தன் வருங்கால மனைவிக்கு தேர்ந்தெடுப்பதாய் கூறி அவளை மனதில் காட்சியாய் கொண்டுவந்து அவளின் நிற அமைப்பிற்கும் உருவத்திற்கும் ஏற்றவாறு புடவைகளைத் தேர்ந்தெடுத்தான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்த அன்னபூரணிக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி கொண்டாட்டம். ஒரே ஒரு நொடி தன் பிள்ளை திருந்தி விட்டான் நினைத்து விட்டாள்.
ஆனால் புடவை காரரின் முன்னேயே இந்த புடவைகளுக்கு ஏற்ற சரியான அளவில் ரவிக்கைகளையும் தானே வந்து எடுப்பதாக கூறிய குருவைப் பார்த்து ஒரு பெண்ணாக அன்னபூரணிக்கு கோவம் வந்துவிட்டது. அப்படி என்றால் குரு அந்தப் பெண்ணை பார்த்த பார்வை எத்தகையது என்று கூசிப் போனாள் அன்னம்.
ஆனால் ,வாய் திறந்து மகனிடம் ஏதாவது கேட்கப்போய் நீங்கள் தானே பார்த்து வைத்தீர்கள்! இந்த பெண்ணை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டால்...? என்றுமே பாம்பு தன் குணத்தை மாற்றிக் கொள்வதில்லை என்ற எண்ணம் மனதில் ஓட எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு விட்டாள்.
அவளைப் பொறுத்தவரை உமா உடனான குருவின் வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் நன்றாக சென்றாலே போதும். மத்த எல்லாமே தானாகவே சரியாகிவிடும்.

குருவின் மனசு முழுதும் உமாவின் முகமே. அவளை விட்டு இன்னொரு விஷயம் அவன் புத்திக்கு ஏறவில்லை. அவளது இளம் முகமும் அதில் இருக்கும் ஒன்றிரண்டு பருக்களும் தந்தமும் சந்தனமும் சேர்ந்த நிறமும், அவளின் ஐந்தரை அடி உயரமும், இள ரோஜா நிற உதடுகளும் அவனது 'பகலின் தூக்கத்தையும் இரவின் வேலைகளையும் ' கெடுக்க போதுமானதாக இருந்தது.
இதுவரை அவன் அணுகும் பெண்கள் அவனின்
'வா 'எனும் ஒற்றை சொல்லில் அவன் மடியில் வந்து அமர்ந்து கொண்டு தான் பழக்கம். இவள் ஒருத்தி மட்டும் தான் விலகி நிற்கிறாள்.
விலகி நிற்பவளை என்னை விலக்கி வைப்பவளை என் இரு கரம் கொண்டு அணைக்கும் நாள் எந்நாளோ என்று அவன் தேகம் முழுவதும் பரபரப்பு.
அவளைப் பார்த்துவிட்டு வந்த அந்த நாளுக்கு பிறகு, அவன் மனது வேறு எந்த பெண்ணினிடமும் செல்லவில்லை.
ஆனால் ஒரே ஒரு முகம் மட்டும் மாறி மாறி அவன் கண்களின் மேல் நிழல் உருவாய் வந்து சென்றது. அந்த உருவத்தை நினைத்து லேசாக சிரித்துக் கொண்டான்.

தனது திருமணத்தை ஏன் நம் பெற்றோர் எவ்வளவு தள்ளி வைத்து இருக்கிறார்கள? என்று அவனுக்கு கோபமாய் வந்தது.

உமா தன் தங்கையின் திருமணத்திற்கு பிறகுதான் 'தான்'திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னதுதான் காரணம் என்று தெரிந்து கொண்டவன் மனதில் நக்கலாய் நினைத்து கொண்டான்.

"நம்மள விட காசு பணம் எதிலுமே சரிசமம் இல்லாதவர்களுக்கு இவ்வளவு மானமும்
ரோசமும் எங்க இருந்துதான் வருதோ" என்று.
மாமனார் ஆகப்போகும் சிவன் மீது அவனுக்கு எந்த மரியாதையும் இல்லை. அதேபோல் உமாவின் அழகு மட்டும் தான் அவள் பால் அவனை சுண்டி இழுக்கிறது. வெறும் புற அழகை மட்டும் வைத்து தான் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது.

ரத்னாவின் நிச்சயதார்த்தம் திருச்சூரில் என்பதால் மொத்த குடும்பமும் திருச்சூர் நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்தது. பயணத்தில்
இரண்டு மூன்று முறை சங்கரன் உமாவின் நம்பருக்கு அழைத்து, ரத்னாவிடம் பேசிக்கொண்டே வந்தான்.
இருவரும் சளைக்காமல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து உமாவின் மனதிற்குள் லேசான ஏக்கமும், கூடவே 'ரத்னாவை சங்கரன் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்தவித காரணம் கொண்டும் ரத்னா மீண்டும் குருவின் கண்களில் பட்டு விடக்கூடாது 'என்று தவிப்பாய் இருந்தது. தன்னை பார்க்க வந்த பொழுது குருவின் கண்களில் ரத்னா பட்டதையும் அவளை அவன் கண்கள் போதையாய் பார்த்ததையும் கண்டு கொண்டு இருந்தாள் உமா. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த ரத்னாவின் திருமணம் நடக்க வேண்டும். தெய்வமே என் தங்கையை காப்பாற்று... என்று அவள் மனம் முழுவதும் பிரார்த்தனைகள்.
சங்கரனுக்கு ரத்னாவின் மீதிருக்கும் பாசம் நேசம் அக்கறை போன்ற எந்த மென்மையான உணர்வுகளும்
குருபரனுக்கு தன்மீது கிடையாது என்பது உமாவுக்கு நிச்சயம்.

அவனுடன் வண்டியில் செல்லும்போது அவன் பார்வை தன் மீது படிந்த விதம் அவளுக்கு திரௌபதி துகிலுரிப்பு படலத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது நினைத்தாலும் உடம்பு முழுவதும் அருவருப்பு. அவனை திருமணம் செய்து கொண்டு இந்த உணர்வை வாழ்நாள் முழுவதும் எப்படி சகிக்க போகிறோம் என்ற ஆயாசம் அவளுக்குள். வேண்டாம்' என்று சொல்லிவிட்டு தப்பிக்க இயலாது. இந்த வாழ்வு என்னை ஏன் புரட்டிப் போடுகிறது. 'ரயிலில் இருந்து குதித்து விடலாமா' என்று கூட அவளுக்கு ஒரு முறை தோன்றியது தான்!அப்படித்தான் ஏதாவது செய்து கொண்டால் மணப்பெண்ணாக ரத்னாவை பலியிட்டு விடுவார்களோ என்ற பயம் வேறு. அதனாலேயே தன்னை அடக்கி கொண்டாள்.

அவர்களுக்கு சம்மதம் சொல்லியாகிவிட்டது. தந்தைக்கும் இதில் பூரண சம்மதம். முதலில் வேண்டாம் என்று சொன்ன அம்மா கூட இப்போது ஒப்புக் கொண்டார்கள்.

திருமணம் இப்போது வேண்டாம் என்று சண்டை போட்ட ரத்னாவுக்கு இப்போது சங்கரனிடம் முழு ஈடுபாடும் வந்தாயிற்று.
என் ஒருத்தியின் வாழ்க்கை எப்படி எழுதப்பட்டிருந்தாலும் வீட்டில் மற்றவர்கள் சந்தோஷமாய் இருப்பது போதும் எனக்கு என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஆனால், குருபரன் இவ்வளவு காட்டுத்தனமாக வைத்திருக்கும் காம உணர்வு காதலாக மாறும் எனில் உமாவின் வாழ்க்கையில் நிச்சயம் தென்றல் வீசும்.

கண்டதும் காதல் எப்போதும், எல்லா நிலையிலும் வருவது இல்லை. "காம உணர்வு மட்டுமே கோடிக் கணக்கான திருமண உறவுகளை காதல் -நேசம் என்று கொண்டு செல்கிறது.
இன பெருக்கம் செய்து வாழ்க்கை சுழலில் இருவரும் ஒன்றாக நீந்தி ஒருவரான பின் முதிர்ந்த வயதில் நீயில்லா உலகில் நானில்லை எனும் நிலைக்கு கொண்டு செல்லும் முதல் படி காமம். இதில் தவறு ஒன்றும் இல்லை. உலகின் ஆதி மொழி காமம்."

இவை எல்லாம் சரிதான். உமா குருவின் மோகத்தை தூண்டிவிட்டு, காமத்திற்கு இரை போட்டு தன் காதலால் ஜயிப்பாளா...
இல்லை அவனது மோகத் தீயில் எரிந்து சாம்பல் ஆவாளா?

ஆட்டம் தொடரும்.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top