JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 25

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை

அத்தியாயம் 25

வருணின் அலுவலகம்.

தனது மேஜையின் மீது கிடந்த பத்திரிக்கையில் [Magazine] பதிக்கப்பட்டிருந்த செய்தியையே பார்த்துக் கொண்டிருந்த வருணின் உள்ளம் பெரும் எரிச்சலில் மூழ்கி இருந்தது.

CEO of Desai Group of Companies, Varun Desai Weds Sithara Chauhan, daughter of Minister Muhesh Chauhan

கடந்த சில நாட்களாகவே தொழில் சம்பந்தப்பட்ட மீட்டிங்குகளுக்கும் பார்ட்டிகளுக்கும் சென்றாலும், அவனைத் துரத்திய கேள்வி, எப்பொழுது உங்களுக்கும் அமைச்சரின் மகள் சிதாராவுக்கும் திருமணம் என்பது தான்.

தனது தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை அறவே வெறுத்து வந்தவனுக்கு, இப்பொழுது மீண்டும் மீண்டும் இதே கேள்வியும் செய்தியும் எங்குச் சென்றாலும் விடாமல் தொடர்ந்து வந்ததில் கோபம் உச்சாணியைத் தொட்டுக் கொண்டிருக்க, அவ்வேளையில் அலறியது அவனது அலைபேசி.

எடுத்துப் பார்த்தவனுக்கு வியப்பு எய்தியது, காரணம் அழைத்தது அவனது தந்தை.

அவர் கடைசியாக அவனை அழைத்திருந்தது ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு.

அதாவது என்று அவன் தன் ஒற்றை விரலின் அசைவிற்குக் கீழ் தங்களின் நிறுவனங்கள், தொழிற்கள், ஸ்தாபனங்கள் என்று அனைத்தையும் கொண்டு வந்திருந்தானோ, அன்று தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்த அவனிடம் பேசியவர் தான்.

அதற்குப் பிறகு அவனது அலைபேசி எண்களையே அவர் மறந்திருந்தார் என்று சொல்லலாம்.

தந்தையின் பெயரை அலைபேசியில் பார்த்தவன் யோசனையில் நெற்றிச் சுருங்க அழைப்பை உயிர்ப்பிக்க, ஏற்கனவே கோபத்தில் இருந்தவனின் ஆங்காரத்தை மென்மேலும் தூண்டிவிட்டது அவரது கேள்வி.

"வருண்.."

"ம்ம்ம்.."

"என் காலை அட்டெண்ட் பண்ண மாட்டன்னு நினைச்சேன்."

"ம்ப்ச்.. சொல்லுங்க?"

"உனக்கும் சிதாராவுக்கும் மேரேஜ் நடக்கப் போகுதுன்னு வந்துட்டு இருக்கிற நியூஸ்..."

அவரை முடிக்கவிடவில்லை அவன்.

"அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே. என்னைக் கேட்காதீங்கன்னு."

"சரி, நீ சொன்னது மாதிரி மினிஸ்டர் முகேஷ் சௌஹானிடமே பேசிட்டேன். இது பற்றி நீ அவர்கிட்ட எதுவும் பேசலைன்னு சொல்றாரு. ஆனால் நீ இந்த நியூஸை மறுக்கவும் இல்லைன்னு சொன்னாரு."

"அப்படின்னா அது தான் உண்மைன்னு வச்சிக்கங்க.."

"அப்போ உனக்கும் சிதாராவுக்கும் கல்யாணம்னு சொல்லு. என்னை அழைப்பியா, இல்லை நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் முடிச்சிட்டு இங்க வருவீங்களா?"

அவரது கேள்விக்குப் பதிலளிக்காது பட்டென்று அழைப்பைத் துண்டித்தவனின் மனமும் தந்தையின் பேச்சில் இரும்புக் கோட்டையைப் போன்று இறுகித்தான் போனது.

ஏன் இப்படி ஒரு புரளி? யாரால் இருக்கும்? இந்தியா முழுக்கப் பரபரப்பா பேசுற அளவுக்கு எல்லா மீடியாஸுக்கும் யார் இப்படி ஒரு பொய்யான தகவலை வெளியிட்டது?

கடந்த சில நாட்களாக இதே தகவலை பற்பல ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் ஒளிப்பரப்புவதைக் கேள்விப்பட்டு எரிச்சலுற்றிருந்தவனின் மனம் ஓய்ந்து போனது போல் இருக்க, அவனது புத்தி எடுத்துச் சொல்லியது, ஆர்யனைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது என்று.

ஏனெனில் இந்தளவிற்குத் தன்னைப் பற்றிய ஒரு புரளியை துணிச்சலுடனும், எவருக்கும் சந்தேகம் வராதளவிற்கும் பரப்பும் சாமர்த்தியம் அவனுக்கு மட்டுமே இருக்கின்றது.

வருணின் அறிவு எண்ணிக் கொண்டிருக்க, மனமோ வேறு ஒரு கேள்வியைத் தொடுத்ததில் இருக்கையில் இருந்து விருட்டென எழுந்து நின்றான்.

இந்த விஷயம் எல்லாருடைய காதுக்கும் போயிருக்கும்? அப்படின்னா??

ஏதேதோ சந்தேகங்களையும் திகைப்பையும் அவ்வினா எழுப்பியதில் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அல்லாடியது.

ஒரு கையால் கழுத்தை அழுந்த தடவியவனாய் அங்குமிங்கும் நடந்தவனுக்கு இதை இப்படியே விட்டுவிட்டால் அது யாருக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனால் தான் எதிர்பார்ப்பது நடக்காமல் போகவும் வாய்ப்பிருக்கின்றது என்று புரிபட்டதுமே, அடுத்துச் செய்ய வேண்டியது என்னவென்றும் தெளிவாகத் தெரிந்துப் போனது.

அலைபேசியை எடுத்தவன் அழைத்தான், சிதாராவின் தந்தையை.

"நானே உங்களைக் கூப்பிடனும்னு நினைச்சேன் மாப்பிள்ளை, நீங்களே கூப்பிட்டுட்டீங்க."

வடநாட்டவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வளர்ந்திருந்ததால் பெருமிதத்துடன் அவர் மாப்பிள்ளை என்று அழைக்க, ஆனால் அவரின் விளிப்பில் கொந்தளித்தவன் மேஜையின் மேல் இருந்த பத்திரிக்கையைச் சுவரை நோக்கி வீசி எறிந்தான்.

அதனது சத்தத்தில், “மாப்..” என்றவரை முடிக்கவிடாது, "இப்படி ஒரு ரூமர் எப்படிக் கிளம்பினதுன்னு தெரியலை." என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.

"இட்ஸ் ஒகே மாப்பிள்ளை. ரூமரா இருந்தாலும் என்ன, நடக்கப் போறதை தானே மீடியாஸ் சொல்லிருக்கு. அதைத்தான் உங்க அப்பாவிடம் நானும் சொன்னேன் மாப்பிள்ளை. ஏன்னா நீங்களும் இந்த வதந்தியை மறுக்கலையே."

மறுபடியும் மாப்பிள்ளையா?

உள்ளுக்குள் சலித்துக் கொண்டவாறே அதுவரை இருந்து வந்த கொஞ்ச நஞ்ச பொறுமையையும் தூக்கி எறிந்தவனாய், "மாப்பிள்ளைன்னு கூப்பிடறதை முதலில் நிறுத்துங்க." என்றான் சற்றுக் கடினமான தொனியில்.

திடுக்கிட்டது முகேஷ் சௌஹானிற்கு.

"ஏன்? ஏன் அப்படிச் சொல்றீங்க?"

"ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு கேட்டால் என்ன பதில் சொல்றது?"

"உங்களுக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணமுன்னு ஏற்கனவே முடிவு செய்தது தானே? ஒரு அசம்பாவிதத்தால் நிச்சயதார்த்தம் நின்னுப்போயிடுச்சு. அதுக்காக அந்த நல்ல காரியம் திரும்பவும் நடக்கவே நடக்காமல் போயிடுமா என்ன?"

"அது நடக்காதுன்னா சொல்றதுக்குத் தான் கூப்பிட்டேன்."

ஏறக்குறைய சம்மட்டியால் தன் தலையில் அடித்தது போல் உறைந்து போனார் முகேஷ்.

"ஏன் நடக்காதுன்னு சொல்றீங்க?"

"எனக்கு அதற்கான விளக்கம் கொடுக்க எல்லாம் இப்போ நேரமில்லை. நீங்களே நாளைக்கே எல்லா மீடியாஸையும் கூப்பிட்டு இது பொய்யான தகவல், வருண் தேஸாய்க்கும் என் பொண்ணுக்கும் கல்யாணம் நடக்காதுன்னு அறிவிச்சிடுங்க.."

இந்திய தேசத்தின் வருவாயையே ஆட்டிப் படைக்குமளவிற்குப் பெரும் தொழிலதிபன் என்று பெயர் எடுத்திருந்தாலும், ஹவாலா போன்ற மோசடிகளிலும், சட்டத்திற்குப் புறம்பான பல இருள் உலக வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பவன் என்று தெரிந்தே வருணை தன் மகளுக்கு மணமுடிக்க விரும்பியிருந்தார் அமைச்சர் முகேஷ்.

ஆனால் அவன் மீது அவருக்கு ஒரு விஷயத்தில் மட்டும் அளப்பறிய பெருமையும் நம்பிக்கையும் இருந்தது.

இத்தகைய வில்லாதி வில்லன் பெண்கள் என்றால் மட்டும் ஒரு அடிக்கு பத்து அடிகள் தள்ளி நிற்பான் என்று நன்கு அறிந்திருந்ததில், சிதாரா மட்டுமே அவனறிந்த பெண்ணாக இருப்பாள் என்ற ஒரு கர்வம் எப்பொழுதுமே அவருக்கு இருந்து வந்தது.

ஆனால் அதுவும் சுக்குநூறாக உடைந்து போனது, ஒரு பெண்ணை இவன் கடத்திக் கொண்டு போய் மாசக்கணக்காக அடைத்து வைத்திருக்கின்றான் என்பதையும், அந்தப் பெண் SSP ஷிவ நந்தனுக்கு மிகவும் வேண்டப்பட்டவள் என்ற விஷயத்தையும், அவருக்கு வெகு பழக்கப்பட்ட உயர் காவலதிகாரி ஒருவர் மூலம் அரசல்புரசலாகக் கேள்விப்பட்ட போது.

ஆயினும் அவனிடம் நேரிடையாக இதைப் பற்றிப் பேசும் தைரியம் மட்டும் அவருக்கு வரவே இல்லை.

சில நாட்கள் அதைப் பற்றி யோசித்தவர் வருணுக்கு இருந்து வந்த ஆதிக்கத்தையும் அந்தஸ்த்தையும் மட்டும் கணக்கில் கொண்டு மற்ற அனைத்தையும் துச்சமெனக் கருதியவராய் திருமணத்தை முடித்துவிடப் போராடிக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒரே பதிலில் போட்டு உடைத்தது போல் திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூறிவிட்டவனை அதற்கு மேலும் வற்புறுத்துவது என்பது அவரது கனவிலும் கூட நடக்காத காரியம்.

இரண்டாம் முறையும் தன் ஒரே செல்ல மகளுக்கு நடக்கவிருந்த நல்ல காரியம் நின்றுப் போனதில் அவளும் காயப்படுவாள் என்று எண்ணியிருக்க, ஆனால் அவளோ வருணின் முடிவைக் கேள்விப்பட்ட கணமே அதற்கு நேர்மாறாக நிம்மதி பெருகும் இதயத்தோடு வானுக்கும் மண்ணுக்குமாகக் குதித்திருந்தவள் அழைத்திருந்தாள், அவளது மனம் கவர்ந்தவனை.

***********************************

மும்பை.

ஷிவ நந்தனுக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த பங்களா.

இருள் ஏறியிருந்த பொழுதும் உறக்கத்தைத் தழுவாத புழுக்கமான மனத்துடன் கண்களை மூடியவனாய் கட்டிலில் படுத்திருந்தவனின் அலைபேசி சிணுங்க, எடுத்துப் பார்க்காது தலையை மட்டும் திருப்பிப் பார்க்க, அதனில் ஒளிர்ந்த எண்ணை கண்டதும் கண்கள் இடுங்கின.

அழைத்தது சிதாரா.

அவனுமே அவளின் திருமணச் செய்தியைக் கேள்விப்பட்டதில் கடந்த சில நாட்களாகத் தூக்கம் இல்லாது தவித்து வந்திருந்தான்.

இதனில் திடுமென அழைத்திருப்பவளின் பெயரைக் கண்டதும் கடுமை கிளர்ந்தெழுந்ததில் அழைப்பை எடுக்காது மீண்டும் கண்களை மூட, விடாது அடித்துக் கொண்டிருந்த பேசியின் சத்தம் ஏகப்பட்ட எரிச்சலைக் கொணர்ந்தது.

வேண்டா வெறுப்பாய் அழைப்பை எடுத்தவன் எடுத்ததுமே, “எதுக்குடி இப்போ கூப்பிடுற?” என்று கர்ஜிக்க, மறுமுனையில் இருந்தவளுக்கு அவனது கோபத்தின் காரணம் புரிந்திருந்ததில் அவளுமே பொறுமையாகப் பதிலளித்தாள்.

“சாரி.. டிஸ்டர்ப் செய்துட்டேனா?"

"அதான் தெரியுதுல்ல, சீக்கிரம் சொல்லு."

நீண்ட நாட்களுக்குப் பின் அழைத்ததும் எங்குத் தன் மீது அவன் அன்பு மழை பொழிந்து விடுவானோ என்று அவள் கனவெல்லாம் காணவில்லை. ஏனெனில் அவர்கள் இருந்த சூழல் அப்படி.

ஆனால் அதற்காக இப்படியா வெடிப்பது??

அவளின் மனமும் வாடித்தான் போனது.

காட்டுக்கத்தல் கத்தியவனின் சாரீரித்தில் செவிப்பறையே கிழிந்துவிடுவது போன்று இருக்க, ஒரு பக்க காதை அழுந்த மூடியவள், "ஏன் இப்படிச் சத்தம் போடுறீங்க?" என்றாள் சட்டெனக் குரல் தழுதழுக்க.

அவளின் அழுகுரல் அவனையும் என்னவோ செய்தது.

ஆயினும் இன்னும் சில நாட்களில் அவனுடைய பரம எதிரியான வருணுக்கு மனைவியாகப் போகிறவள்.

அவளிடம் இனி என்ன பேச்சு என்பது போல் அவன் அமைதியாக இருக்க, "லைன்ல தான் இருக்கீங்கன்னு தெரியுது. சரி, நான் எதுக்குக் கூப்பிட்டேன்னு சொல்.." என்றவளை அவன் முடிக்கவிடவில்லை.

"உனக்கும் அவனுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு சொல்ல கூப்பிட்டு இருக்க. அதானே? இல்லை ஏற்கனவே எங்க நிச்சயதார்த்தத்தை நீங்க நிறுத்திட்டீங்க. அது மாதிரி கல்யாணத்தையும் நிறுத்திடாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கக் கூப்பிட்டியா?”

இப்பொழுது அவனது குரல் அமைதியாக இருந்தாலும் அதன் பின் எரிமலையை ஒத்த அக்னி அவனுக்குள் எரிந்து கொண்டிருப்பது பெண்ணவளுக்குப் புரிந்தது.

அது தான் அவனது ஆவேசத்திற்குமான காரணம்.

ஆனால் அவனுக்கும் அவளுக்கும் இடையில் அன்று நடந்த நிகழ்வுகளைச் சுத்தமாக மறந்துவிட்டவனாய் பேசுபவனிடம் அதற்கு மேல் விளக்கம் அளிக்க விருப்பமில்லை.

"ஆமா. எனக்கும் அவருக்கும் நின்னுப்போன கல்யாணத்தைத் திரும்பவும் நடத்திடலாமுன்னு முடிவு செஞ்சிருக்காங்க. அதான் உங்கக்கிட்ட சொல்லலாம்னு கூப்பிட்டேன். ஆனால் வந்து கல்யாணத்தை நிறுத்திடாதீங்க. என்ன?"

அவள் மட்டும் அவனது எதிரில் அக்கணம் இருந்திருந்தால், சிறு கடுகுப் பட்டாலே தெறித்துவிடும் அளவிற்கு அவன் முகம் சூடான எண்ணெயாய் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அரண்டுப் போயிருப்பாள்.

“ஸோ, அதுக்குத் தான் கூப்பிட்ட..”

“யெஸ்..”

“யார் யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்னடி? அதை நிறுத்தறதைத் தவிர எனக்கு வேற வேலை இல்லையா, என்ன?”

“அப்ப சரி.. எங்க கல்யாணத்துக்கு வந்து எங்க ரெண்டு பேரையும் மனசார ஆசிர்வதிச்சிட்டு போங்க.”

அதற்கு மேலும் தாங்க இயலாதவனாய் விநாடிகள் நேரம் கண்களை மூடி தன்னைச் சமன்படுத்தியவன், "கண்டவங்க கல்யாணத்துக்குப் போறதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை.." என்றான் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தத்துடன்.

"ஆமா ஆமா.. உங்களுக்கு என்கவுண்டரில் ஆளுங்களைப் போட்டுத் தள்ளுறதுக்கே நேரம் பத்தாது, இதுல என் கல்யாணத்துக்கு வரதுக்கு எல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கப் போகுதா, என்ன? நீங்க ஒண்ணும் வர வேண்டாம். நான் வேணா எங்க கல்யாண ஃபோட்டோஸை உங்களுக்கு அனுப்புறேன். நல்லா ரசிச்சுப் பாருங்க.."

கூறியவளாய் அவன் பதிலுக்குக் கூடக் காத்திருக்காது அலைபேசியைத் துண்டித்துவிட, பிடித்திருந்த அலைபேசியைத் தூர வீசுவதற்குக் கரத்தை உயர்த்தியவன் பற்களைக் கடித்துக் கொண்டு தன் ஆங்காரத்தை அடக்கினான்.

ஏற்கனவே உறக்கம் வராது பெரும்பாடுப்பட்டுக் கொண்டிருந்தவனை அவளது கிண்டலான பேச்சு சீண்டிவிட்டது.

கதிரவன் எழும் வரை கண்களை மூடாது படுத்திருந்தவன் ஒரு வழியாய் எழுந்து அலுவலகத்திற்கு செல்லும் நோக்கில் தயாரானவனாய் பால்கனிக்குச் சென்று காஃபியை பருகிக் கொண்டிருக்க, அந்த இனிப்பான செய்தியை அஷோக் பகிர்ந்ததில் வியப்பில் உயர்ந்தன அவனது புருவங்கள்.

ஷிவாவே எதிர்பாராதவண்ணம் அன்று அதிகாலையிலேயே பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வந்திருந்தது அச்செய்தி.

'தொழிலதிபர் வருண் தேஸாயிக்கும் அமைச்சர் முகேஷின் மகள் சிதாராவிற்கும் நடைப்பெற இருந்த திருமணம் மீண்டும் நின்று போனது.'

தேனாய் வந்து அவனது இதயத்தைத் தித்திக்கச் செய்ததுதான் அந்தச் செய்தி. இதற்காகத் தான் நேற்று இரவு அழைத்திருந்தாளோ!!

அவளின் விருப்பம் புரிந்தது, ஆயினும் அதற்குப் பிறகும் சிதாராவிடம் பேச அவன் முயற்சிக்கவில்லை.

காரணம் துர்கா.

சிதாராவின் திருமணம் நின்று போனது, ஆனால் அதனால் எனக்கு என்ன பயன்?

என்னால் அவளைத் திருமணம் செய்து கொள்ள இயலுமா? அது நடக்கக் கூடிய காரியமா? அப்படியே அதை என்னால் சாதிக்க இயலும் என்றாலும், பிறகு துர்காவின் நிலை.

அவனது உள்ளம் இரண்டுங்கெட்டான் நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் மீண்டும் அழைத்தாள் சிதாரா.

ஆயினும் அவளது அழைப்பை ஏற்க விரும்பாது அவன் விடாக்கண்டனாய் வலம் வந்து கொண்டிருக்க, மனதிற்குள் ‘நீயா நானா பார்த்துக் கொள்கின்றேன்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டவள், ஒரு நாள் அவனின் அலுவலகத்திற்கே சென்று அவனைத் திகைக்கச் செய்தாள்.

தந்தையின் அரசியல் பலத்தை உபயோகித்துக் காவல்துறை தலைமையகத்திற்கே சென்றவள் ‘Senior Superintendent of Police Shiva Nandhan IPS’ என்ற பெயர் பலகையைக் கண்டு அறைக்கதவை தட்டிவிட்டு அவனது அனுமதிப் பெற்றவளாய் உள் நுழைய, யாரோ என்று நினைத்தவனாய் ஏறிட்டு நோக்கியவனின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.

“நீ என்ன பண்ற இங்க?”

“உங்களைப் பார்க்கிறதுக்குத் தான் வந்தேன்.”

“அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் என்னைச் சந்திக்க முடியாது, தெரியாதா?”

“எங்க அப்பா கேபினெட் மினிஸ்டர், அது உங்களுக்குத் தெரியாதா?”

இவளிடமா என்று எண்ணியவாறே 'வூஃப்' என்று ஊதியவனாய், “சரி, இப்போ எதுக்கு இங்க வந்த?" என்றான்.

"எத்தனை தடவைக் கால் பண்ணினேன், ஏன் எந்தக் காலையும் அட்டெண்ட் பண்ணலை? "

"கொஞ்சம் பிஸி.."

"அட்லீஸ்ட் ஒரு ஐம்பது தடவையாவது கூப்பிட்டு இருப்பேன். எல்லா நேரமும் பிஸியா இருந்தீங்களா, என்ன?"

"ரொம்ப exaggerate [மிகைப்படுத்துதல்] பண்ணாதே. ஐம்பது தடவை எல்லாம் கூப்பிடலை.”

“சரி, நாற்பது.. முப்பது.. இருபது..”

“அடியே விஷயத்துக்கு வாடி.."

"உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்."

"அதான் வந்துட்ட இல்ல, சொல்லு.."

சலிப்புடன் கூறியவனைக் கூர்ந்துப் பார்த்தவள் அமைதியாய் அவனுக்கு எதிராக இருந்த இருக்கையில் அமர்ந்தவளாய்,

"நானும் என்னைக் கண்ட்ரோல் பண்ண எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டேன், ஆனால் என்னால் முடியலை.” என்றாள் சற்றே தலை கவிழ்ந்து.

“என்ன முடியலை?”

அவனது வினாவிற்கு அவளால் உடனடியாகப் பதில் அளிக்க முடியவில்லை.

தயக்கமும், அவன் என்ன சொல்வானோ என்ற கலக்கமும் அவளை மூழ்கடித்து இருக்க, அவளின் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்தவனாக, "என்ன முடியலைன்னுக் கேட்டேன்." என்றான் சிறிது உரத்தக் குரலில்.

"எனக்கு.."

"ம்ம்.. உனக்கு?"

“எனக்கு.. எனக்கு நீங்க வேணும் ஷிவா.."

இன்னமும் தலையை நிமிர்த்தாது மெல்லிய குரலில் கூறுபவளின் உள்மனதில் இருக்கும் ஏக்கங்களும் ஆசைகளும் புரியாதவனா அவன்.

அவனுக்குமே அதே ஏக்கங்கள் தானே!!!

நீண்ட மூச்செடுத்தவன், "அது நடக்காது சிதாரா.." என்றான் சட்டென்று.

அவனது பதிலில் விலுக்கென்று நிமிர்ந்தவள், "ஏன்?" என்றாள்.

"நடக்காதுன்னு நடக்காது தான்."

"துர்காவா?"

அதற்கு அவன் பதில் கூறவில்லை.

மௌனமாய் அவன் அமர்ந்திருக்க,

"எனக்கு உங்க நிலைமை புரியுது, ஆனால்..” என்றவளை முடிக்கவிடவில்லை அவன்.

“ஆனால் எல்லாம் இல்லை.. நடக்காதுன்னா நடக்காது, அவ்வளவு தான்.”

“என்னால் உங்களை மாதிரி இருக்க முடியாது.”

“வேற வழியில்லை. இருந்து தான் ஆகணும்.”

“முடியாது..”

“ஏன்டி இப்படி இம்சை பண்ற?"

"நீங்க சலிச்சிக்கிட்டாலும் பரவாயில்லை. நான் திரும்பத் திரும்ப உங்களைப் பார்க்க வருவேன். வந்துட்டே தான் இருப்பேன். வந்து இதே கேள்வியைக் கேட்டுட்டேத்தான் இருப்பேன்."

"உன்னை இந்தப் பில்டிங்குள்ளேயே அனுமதிக்கக் கூடாதுன்னு நான் ஆர்டர் போட்டால் உன்னால் இங்க வர முடியாது."

"அப்படின்னா கால் பண்ணிட்டே இருப்பேன். இல்லை மெசேஜஸ் அனுப்பிட்டே இருப்பேன். என் மனசுக்குள்ள இருக்கிறதை சொல்லிட்டே தான் இருப்பேன்."

"எவ்வளவு நாளு?"

"நீங்க என்னை ஏத்துக்குற வரை.."

"அப்படின்னா, கடைசி வரை இதையே சொல்லிட்டு இரு.."

"கண்டிப்பா, இதைக் கேட்டு கேட்டு நீங்களே அலுத்துப் போய் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சம்மதம் சொல்றீங்களா இல்லையான்னு பாருங்க?"

வெறும் பேச்சிற்காக அவள் சொல்லவில்லை என்பதைப் பல முறை நிரூபிக்க, தனது கையறுநிலையை நினைத்து நொந்துப் போனவனாக ஒரு நாள் பெரும் வருத்தத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி, "இதுக்கு மேல என்னைக் கூப்பிடாத சிதாரா. எஸ்பெஷலி இந்த விஷயம் பற்றி.." என்றான் தன் வேதனையைத் தெளிவாய் மறைத்து.

"ஏன் கூப்பிட்டால் என்ன பண்ணுவீங்க? என்கவுண்டரில் என்னையும் போட்டுத் தள்ளிருவீங்களோ மிஸ்டர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்."

"ம்ப்ச்.. முதல்ல இந்த என்கவுண்டரை விடுடி.."

சலித்துக் கொண்டவனாய் அலைபேசியைத் துண்டித்துவிட்டவன், அதற்குப் பிறகு அவள் அழைக்கக்கூடாது என்று அவளது அலைபேசி எண்ணையும் முடக்கி வைத்தான்.

ஆனால் அதற்கு எல்லாம் சளைப்பவளா அவள்?

அவன் தன் எண்ணை ப்ளாக் செய்துவிட்டான் என்பதை அறிந்தவள் அவளின் காதுகளை அவ்விஷயம் எட்டியதுமே இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்து நின்றவனை அடக்குவதற்கு எடுத்த ஆயுதம் அவளது பிடிவாதத்தின் உச்சம்.

ஷிவ நந்தன் வேலை விஷயமாகச் சென்னைக்குப் பயணம் செய்யப் போவதை அறிந்துக் கொண்டவள், அவன் கிளம்பும் முன்னரே விமானத்தில் சென்னையை நோக்கிப் பறந்திருந்தாள்.

***********************

ஷிவாவின் இல்லம் - சென்னை

ஏறக்குறைய நள்ளிரவைத் தொட்டிருக்க, நெடு நாட்களுக்குப் பிறகு பெற்றோரின் வீட்டிற்கு விஜயம் செய்திருந்த ஷிவாவிற்குத் திகைப்பாக இருந்தது, முன்னறையில் தனக்காக உறங்காது காத்திருக்கும் தந்தையைக் கண்டதும்.

“வா ஷிவா.. “

"ஏன் தூங்காம இப்படி உட்கார்ந்திருக்கீங்க?"

"உனக்காகத் தான் காத்துட்டு இருக்கோம்."

இருக்கோம் என்று பன்மையில் அவர் கூறியதும் அன்னையை எதிர்பார்த்து அறை முழுவதையும் பார்த்தவன், "வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா? யாரெல்லாம்? ஏன்?" என்றான் குழப்பத்துடன்.

"சாவித்திரி.."

சிறிது சத்தமாக அவர் அழைக்கவும் உள்ளறைக்குள் இருந்து வெளிவந்த அன்னையைக் கண்டு அவரை நோக்கிச் செல்ல காலடி எடுத்து வைத்தவன் சட்டென நின்றான், அவருக்குப் பின் மறைந்தும் மறையாமலும் நின்றிருந்தவளைக் கண்டு.

அவனுக்கு ஐயோ என்று இருந்தது.

'இவ எப்படி இங்க?'

மனதுக்குள் நினைத்தவன் எதுவும் பேசாது அவ்விடத்திலேயே நின்றுவிட, தனக்குப் பின் நிற்கும் சிதாராவின் கைப்பற்றி அழைத்து வந்த சாவித்திரி அவனுக்கு முன் அவளை மெள்ள நிறுத்தினார்.

"இந்தப் பொண்ணை உனக்குத் தெரியுமா ஷிவா?"

"நம்ம நாட்டுல இவளைப் போலக் கோடிக்கணக்கில் பொண்ணுங்க இருப்பாங்க, அவங்க எல்லாரையும் என்னால் தெரிஞ்சு வைச்சிருக்க முடியுமா?"

வெடுக்கென்று வெளிவந்த அவனது பதிலில் அவன் அன்னைக்கே திக்கென்று இருந்தது.

"ஷிவா.."

மெள்ள அழைத்த தேவேந்திரனின் குரலில் ஒரு முறை அவரைத் திரும்பிப் பார்த்தவன் விழிகள் இடுங்க சிதாராவின் முகம் நோக்கி, "இங்க என்ன பண்ற?" என்று கத்தியதில், அவனது அதட்டலில் திடுக்கிட்டு தூக்கி வாரிப்போட்டது சிதாராவிற்கு.

பெற்றோருக்காவது இவன் அடங்குவான் என்று எதிர்பார்த்து அவர்கள் வீட்டிற்கே அடைக்கலம் தேடி வந்தவளுக்கு அவனது ஆங்காரம் பெரும் கலக்கமாகிப் போனது.

இதனில் அவன் சத்தத்தில் ஸ்தம்பித்தவர்களாய் உறைந்து போய்ப் பெரியவர்கள் நின்றதில், இவன் என்ன இவர்களுக்கு முன்னரே இந்தக் கத்துக் கத்துகின்றான் என்று திகைத்து தான் போனாள்.

“கேட்டுட்டே இருக்கேன்ல. இங்க என்னடி பண்ற?”

திரும்பவும் கேட்டவனுக்குப் பதில் அளிக்காது அவள் சிலையாகி நிற்க, அதற்குள் வெளுக்கத் துவங்கிய அவளின் வதனத்தைப் பார்த்தவன் அவளின் கரத்தை இறுக்கப் பற்றியவனாய் விடுவிடுவென அழைத்துச் சென்றான் தன் அறைக்கு.

அவன் ஒரு அடி எடுத்து வைத்தால் தான் நான்கு அடிகள் எடுத்து வைக்க வேண்டுமோ என்பது போல் அவன் வேக நடைக்கு ஈடுகொடுக்க இயலாது தடுமாறி நடந்தவள், அவன் இரண்டு இரண்டு படிகளாக மாடிப்படிகளில் ஏறத் துவங்கியதும் தடுக்கிக் கீழே விழப்போனாள்.

"ஷிவா.."

ஒரு சேர அவனது பெற்றோர்கள் அலற, சடுதியில் அவளது இடையை வளைத்துப் பிடித்தவன் அப்பொழுதும் வேகத்தைக் குறைக்காது தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவனது ‘டி’ என்ற விளிப்பும், அவளை உரிமையாய் இழுத்துக் கொண்டு செல்பவனின் வேகத்தையும் கண்டு மலைத்தவர்களாய் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்ட தேவேந்திரனுக்கும் சாவித்திரிக்கும் ஏதோ புரிவது போன்று இருந்தது.

"என்னங்க இந்தப் பொண்ணை இவன் இப்படி இழுத்துட்டுப் போறான்? யார் இந்தப் பொண்ணு? அது இங்க வந்ததில் இருந்து கேட்குறோம், உங்க மகன் வந்து சொல்லுவாருன்னு சொல்லுச்சே ஒழிய யாருன்னு சொல்லவே மாட்டேனுடுச்சே.."

"ம்ம்.. இந்தப் பொண்ணை மாதிரி கோடிக்கணக்குல பொண்ணுங்க இருப்பாங்க, அவங்களை எல்லாம் தெரிஞ்சு வைச்சுக்க முடியுமான்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டானே உன் மகன். ஆனால் அந்தக் கோடிக்கணக்கான பொண்ணுகளில் இது மாதிரி உரிமையோட எந்தப் பெண்ணையாவது போடி வாடின்னு பேசுவானா, இல்லை இப்படி அவன் ரூமுக்கு தரதரன்னு இழுத்துட்டுப் போவானான்னு நாளைக்கு நீயே அவனிடம் கேள்.."

“நான் கேட்டதும் அப்படியே எனக்குப் பதில் சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.”

“நீ கேட்டுட்டாலும்..”

அலுத்துக் கொண்டவராய் தேவேதிரன் தன் படுக்கை அறைக்குள் நுழைந்தவர் அமைதியாகக் கட்டிலில் படுக்க, ஒரு அன்னையாய் மட்டும் அல்லாது ஒரு பெண்ணாய் சிதாராவின் நிலையை நினைத்து சாவித்திரிக்கு தான் திக் திக்கென்று இருந்தது.

"ஏற்கனவே கொஞ்ச நாளா அவன் அவனா இல்லை. இதுல யார் பெத்த பொண்ணோ இந்தப் பொண்ணு வேற இப்ப இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டு நிக்குது.."

புலம்பியவராய் அவரும் கணவரைப் பின் தொடர்ந்தவர் என்ன நினைத்தாரோ திரும்பவும் முன்னறைக்கு வந்தவராய் அங்கேயே அமர்ந்துவிட, அவர் பயந்தது போலவே நடந்து கொண்டிருந்தது ஷிவாவின் அறைக்குள்.

"எந்தத் தைரியத்துல நீ இப்படி என்னைத் தேடி வந்திருக்க? அதுவும் இந்த நேரத்துல."

"ஏன்? இந்த நேரத்துக்கு என்ன?"

"மணி என்ன தெரியுமா?"

"அல்மோஸ்ட் மிட்நைட்.."

"ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு இப்படி ஒருத்தரைத் தேடி வருவாங்களா?"

"ஏன், நீங்க என்ன என்னைப் பலவந்தப்படுத்தவா போறீங்க?"

அவளது பதில் அவனது ஆங்காரத்தை மென்மேலும் அதிகப்படுத்தியது.

"ஓங்கி அறைஞ்சேன்னா பாரு.."

கையை உயர்த்தியவன் அவளின் மிரண்டக் கண்களைப் பார்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவனாய், "ஏன்டி என்னை இப்படிப் படுத்தி எடுக்குற?" என்றான் எரிச்சலுடன்.

“நான் என்ன பண்ணினேன்?”

“சிதாரா.. ப்ளீஸ்..”

“ஒழுங்கா நான் கூப்பிட்ட போது பேசி இருந்தீங்கன்னா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன், இல்ல?”

“ஏற்கனவே சொன்னேனடி, நான் ரொம்பப் பிஸின்னு..”

“ஹலோ மிஸ்டர் ஷிவ நந்தன். நீங்க என் நம்பரை ப்ளாக் பண்ணியது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா?”

“அடியேய்..” என்று சற்றுச் சத்தமாகக் கத்தியவன், “சரி, நீ எதுக்கு இங்க வந்த, அதைச் சொல்லு..” என்றான் வலுக்கட்டாயமாகப் பொறுமைக் காத்து.

“நான் ஏன் இங்க வந்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்.. நீங்க என்னை ஏத்துக்குற வரை நான் உங்களை விட மாட்டேன்னு அன்னைக்கே சொல்லிட்டேன்."

"ம்ப்ச், என்னால் உன்னை ஏத்துக்க முடியாதுன்னு நானும் ஏற்கனவே பல முறை சொல்லிட்டேன் சிதாரா..."

"அப்படின்னா அன்னைக்கு ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க?"

"என்னைக்கு?"

மிகவும் சலிப்புடன் வந்தது அவன் குரல்.

"கட்சிரோலி காட்டுக்குள்ள நாம் மாட்டிக்கிட்ட அன்னைக்கு.. அன்னைக்கு நைட்."

"அப்போ நிலை வேற.."

"நாம் இருந்த சூழ்நிலையை சொல்றீங்களா? அப்போதைய சூழ்நிலைக்கும் இப்போ இருக்கிற சூழ்நிலைக்கும் என்ன வித்தியாசம்? அப்படி என்ன சூழ்நிலை மாறிடுச்சு?"

"சிதாரா. சூழ்நிலை வேற மனநிலை வேற. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு, அதைப் புரிஞ்சுக்க."

"சரி, ஆனா ஏன் திரும்பத் திரும்ப வருணை நான் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சேன்னு கேட்டுட்டே இருந்தீங்க?"

"அது அன்னைக்கு நைட் நீ ரொம்பப் பயந்து போயிருந்த, அதான் உன்னை அமைதிப் படுத்துறதுக்காக அதைப் பற்றிப் பேசினேன்."

"நிஜமாவா?"

"இதுல பொய் சொல்றதுக்கு என்ன இருக்கு?"

"நான் உங்களை நம்ப மாட்டேன்.."

"அது உன் இஷ்டம்."

"நான் அன்னைக்குக் கொஞ்சம் பயந்து போய் இருந்தேன் தான், ஆனால் அதுவும் அந்த ஓநாய்களுக்கும் பாம்புகளுக்கும் மிருகங்களுக்கும் தான். அதுக்காக நீங்க என்னை அப்படிக் கட்டிப்பிடிச்சிட்டு ஆறுதல் சொல்லணும்னு அவசியம் இல்லை."

அவளது பதிலில் அன்று அவர்கள் இருவரும் இருந்த நிலை, அதுவும் அவளின் ஆடை அநியாயத்திற்குக் கிழிந்த நிலையில் அவனது நெஞ்சில் புதைந்தவாறே அவள் அமர்ந்திருந்த தோற்றம் மனக்கண்களின் முன் படர, தன்னைத்தானே சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவனின் வேதனை வீறுகொண்டு கிளம்ப, அவனது வலி ஆவேசமாய் வார்த்தைகளில் வெடித்தது.

"நீ பேசியது போதும்டி. கிளம்பு.."

"நிச்சயமா கிளம்புவேன், ஆனால் நீங்க எனக்கு வேண்டிய பதில் சொல்லிட்டா."

ஆங்காரமாய்த் தனது நெற்றியைத் தேய்த்துக் கொண்டவனாகக் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தவாறே, "உனக்குக் கொஞ்சம் கூடப் பயமே இல்லையா?" என்றான் ஏறக்குறைய மணி நள்ளிரவைத் தொட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு.

"ஏன் பயப்படணும்?"

"ஏன் பயப்படணுமா? இப்போ மணி என்னன்னு தெரியுமா? அதுவும் நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு உனக்குக் கொஞ்சமாவது புரியுதா?"

"எல்லாம் புரியுது.. புரியாம போறதுக்கு நான் ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்லை."

"ஆமா, இதை வேற அடிக்கடி சொல்லு. ஆனால்"

முடிக்காமல் விட்டவனின் பார்வை அவனையும் அறியாதுப் போகும் இடத்தைக் கண்டு, "பேச்சு ஒண்ணைச் சொல்லுது, ஆனால் பார்வை மட்டும் வேற சொல்லுது." என்று மெதுவாக முனகியவாறே அணிந்திருந்த துப்பட்டாவை சரிப்படுத்த, அவளின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததும் சட்டெனத் தலையை மறுபக்கமாகத் திருப்பிக் கொண்டான்.

அவனின் தன்னிச்சையான செய்கையில் கிறங்கியவளாக அவன் எதிர்பாராதவண்ணம் பின்னால் இருந்து அவனை இறுக்க அணைத்துக் கொள்ள, இந்த எதிர்பாராத முற்றுகையில் ஒரு விநாடி திணறித்தான் போனான் அந்தக் காவலதிகாரி.

“ஏய், என்னடிப் பண்ற?”

கூறியவனாய் தனது இடுப்பை வளைத்துப் பிடித்திருப்பவளின் கரங்களை அகற்ற முனைய, விடாது மேலும் அவனை இறுக்கியவள், "எனக்கு உங்களைப் பற்றி நல்லா தெரியும் மிஸ்டர் ஷிவ நந்தன்.." என்றாள் அவனது பரந்த முதுகில் தலை சாய்த்து.

"சிதாரா.. நிச்சயமா என்னைப் பற்றி உனக்குத் தெரியலை.. என்னோட நிலையும் உனக்குப் புரியலை."

"சரி, உங்களோட நிலை என்னன்னு சொல்லுங்க, புரிஞ்சிக்க ட்ரை பண்ணுறேன்."

“உனக்கே தெரியும்?”

"என்னது?”

"எனக்கும் துர்காவுக்கும் கல்யாணம் பண்றதா பேசியிருக்காங்கன்னு தெரியுமில்லையா?"

"எனக்கும் வருணுக்கும் தான் நிச்சயம் பண்ணினாங்க, ஆனால் அது முறிஞ்சுப் போயிடலையா?"

"உன் விஷயம் வேற, என்னுடையது வேற."

"இல்லை, ரெண்டு பேருடையதும் ஒண்ணு தான்.”

"எப்படி?"

"என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு சொன்னது வருண். அதே போல் துர்கா.."

அவள் முடிக்கவில்லை, சட்டென்று அவளது கரங்களை விலக்கியவன் அவளைத் தனக்கு முன் நிறுத்தியவனாய் கூர்ந்துப் பார்த்தவாறே, "வாட்?" என்றான் ஆராயும் விழிகளுடன்.

"நான் துர்காக்கிட்ட பேசினேன் ஷிவா. "

அவளது கூற்றில் ஷிவாவின் இதயம் பலமாய்த் துடிக்க ஆரம்பித்தது.

"எப்போ?"

“எங்கக் கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு வருண் எங்க அப்பாக்கிட்ட சொன்ன அன்னைக்கு..”

“என்ன பேசின?”

"நம்ம கல்யாணத்தைப் பற்றிப் பேசினேன்."

"என்னடி சொல்ற?"

அவனது அலறலில் அந்த அறையில் உள்ள அனைத்துப் பொருட்களுமே கிடுகிடுத்தது போல் இருந்தது.

"யெஸ்.." என்றவள் எதற்கும் அவனை விட்டு சில அடிகள் தள்ளி நிற்பதே நல்லது என்பது போல் பின்னோக்கி நகர்ந்தவளாய் தனக்கும் துர்காவிற்கும் நடந்த உரையாடல்களைக் கூறத் துவங்கினாள்.

முகேஷ் சௌஹான் பத்திரிக்கையாளர்களை அழைத்துத் திருமணத்தை நிறுத்த சொன்ன அன்றைய இரவு.

"சிதாரா.. ஷிவா மாமாக்கிட்ட எப்பவுமே துர்கா உனக்குத் தான்னும், அதே போல் என்னிடம் மாமா உனக்குத்தான்னும் பேசிப் பேசியே எங்க ரெண்டு பேர் மனசிலேயும் எங்க வருங்கால வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்களைப் பதிய வச்சிட்டாங்க எங்களைப் பெத்தவங்க. ஆனால் எங்களுக்கு இடையில் அத்தை மகள், மாமன் மகன் அப்படிங்கிற உறவையும், அதனால் ஏற்பட்ட அன்பையும் தாண்டி வேற ஏதாவது இருந்துச்சான்னு கேட்டால் எனக்குத் தெரியலைன்னு தான் சொல்லுவேன். ஆனால் இப்போ உன்னைப் பார்க்கும் போது தான் புரியுது, எங்களுக்குள்ள இருந்தது காதல் இல்லை. வெறும் பாசம் மட்டும் தான்னு. அதனால் உனக்கும் ஷிவா மாமாவுக்கும் கல்யாணம் நடக்குறது தான் அழகு. இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏன்னா கண்டிப்பா நீ என் மாமாவுக்கு ஒரு நல்ல மனைவியா இருப்ப. உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டா அவரும் நிச்சயமா சந்தோஷமா இருப்பாரு."

"அப்போ உனக்கு என் மேல் கோபம் இல்லையே துர்கா?"

"என்னப்பா இப்படிக் கேட்குற? இதுல கோப்படுறதுக்கு என்ன இருக்கு?"

"அப்போ உன்னுடைய கல்யாணம் துர்கா?"

"இப்போ கல்யாணம் செய்துக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை."

"ஏன் துர்கா, வருண் உன்கிட்ட தப்பா..?"

அவளால் தான் துவங்கிய கேள்வியையே முடிக்க முடியவில்லை.

"நிச்சயமா இல்லை?"

"அப்போ ஏன் கல்யாணம் செய்துக்கிறதுல விருப்பம் இல்லைன்னு சொல்ற?"

"இப்போதைக்கு இல்லைன்னு தான் சொன்னேன்."

மீண்டும் மீண்டும் துர்காவின் திருமணத்தைப் பற்றிப் பேசிய சிதாராவிற்கு அவளது வார்த்தைகளின் பின் இருக்கும் அர்த்தங்கள் ஏதோ ஒரு செய்தியை உணர்த்துவது போல் இருந்தது.

இறுதியில் சில கணங்கள் அமைதியாக இருந்தவள் என்ன நினைத்தாளோ சட்டென அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டாள்.

"துர்கா, நான் உன்னை ஒண்ணு கேட்பேன். தப்பா எடுத்துக்க மாட்டியே.."

"ம்ப்ச்.. என்ன கேள்வி இது? எதுவானாலும் கேளு.."

“ப்ராமிஸ்..”

“ஐயோ! என்ன இது? கேளுப்பா..”

"உனக்கும் வருணுக்கும் இடையில் ஏதாவது?"

முடிக்காது விட்ட தோழியின் வினாவிற்கும் சந்தேகத்திற்கும் பின் இருக்கும் பொருள் புரிந்தும் அமைதிக் காத்தாள் துர்கா.

அவளின் மௌனம் எதனையோ உணர்த்தியது சிதாராவிற்கு.

தனக்கும் தோழிக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் கூறியவள், கடைசியில் தான் கேட்ட கேள்வியையும் அதற்கு மௌனத்தையே பதிலாகக் கொடுத்த துர்காவின் மறுமொழியையும் மட்டும் ஷிவாவிடம் கூறவில்லை.

சிதாராவின் பேச்சைக் கேட்டவாறே அறையின் ஒரு பக்கம் இருந்த ஜன்னலின் அருகே சென்ற ஷிவா அதன் திரைச்சீலையை விலக்கியவனாய் கறுப்பு ஆகாயத்தில் வெள்ளியாய் மினுமினுக்கும் நிலவினைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனது புத்தி பல திக்குகளில் பயணிக்கும் சமயம் அழைத்தது அவனது அலைபேசி.

அழைத்தது துர்கா.

இந்த நேரத்தில் எதற்கு அழைக்கின்றாள் என்று எண்ணியவனாய் அலைபேசியை உயிர்ப்பிக்க, "மாமா, இப்போ உங்கக்கூடச் சிதாரா இருக்கான்னு நினைக்கிறேன்." என்றாள் தயங்கிய குரலில்.

"அவ இங்க வரப் போறது உனக்குத் தெரியுமா?”

“தெரியும் மாமா..”

“ஆக, ரெண்டு பேரும் சேர்ந்து திட்டம் போட்டு தான் எல்லாம் நடக்குது?”

“அது..”

“சரி, எதுக்குக் கூப்பிட்ட?”

"மாமா.. நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும் மாமா."

அவளது கூற்று அதுவரை சற்று அமைதியாக இருந்த அவன் மனத்தில் குழப்பத்தைக் கிளறிவிட்டதில் அது சினமாக வெளிவந்தது.

"ஏன்?"

பட்டென்று கத்தியவன், "ரெண்டு பேரும் பேசி வச்சிட்டு எதுவும் கேம் விளையாடுறீங்களா?" என்று பொரியத் துவங்க, ஷிவாவின் முகத்தையே பார்த்திருந்த சிதாராவின் முகம் வாடத் துவங்கியது.

எதுக்கு இப்படிக் காய்கின்றான் என்ற எண்ணம் எழ, "ஷிவா, நாங்க ஒண்ணும் கேம் எல்லாம் விளையாடுலை.." என்றாள் மெல்லிய குரலில்.

அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன் அத்தை மகளிடம் தான் கேட்ட வினாவிற்கான விடையை எதிர்பார்த்து நிற்க, மாமனின் கோபத்திற்கானக் காரணம் துர்காவிற்குப் புரிந்தது.

தனது பரம எதிரியால் கடத்தப்பட்டு ஏறக்குறைய இரு மாதங்களுக்கு மேலும் ஒருவருக்கும் தெரியாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தவளை, தனக்காக நிச்சயம் செய்திருந்தவளை வேண்டாம் என்று சொல்வதற்கு அணுவளவும் இடம் கொடுக்க இயலாது மனம் தவித்திருந்தவன் இப்பொழுது குற்ற உணர்வில் மேலும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றான் என்று.

"மா.. மா.. "

அதுவரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவள் திக்க ஆரம்பிக்க, அவளின் அச்சம் புரிந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், "ம்ம்...." என்றான்.

"தயவு செஞ்சு நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க மாமா..”

“சொல்லு.”

“அவ உங்களை ரொம்ப லவ் பண்றா மாமா?"

"அப்போ நீ?"

திடுமெனக் கேட்டவனின் கேள்விக்குப் பதில் கூற இயலாது விழித்தவள் மௌனமே மொழியானது போல் அமைதியாகிவிட, அவளின் உள்ளம் புரிந்ததில், "உன் கல்யாணம் துர்கா?" என்றான் கேள்வியை வேறு விதமாக மாற்றியவனாய் சற்றுச் சாந்தமான தொனியில்.

"கண்டிப்பா நான் கல்யாணம் செய்துக்குவேன் மாமா. நிச்சயமா.. ஆனால் இப்போ இல்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.."

கூறியவள் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் அவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியவளாக,

"சீக்கிரம் உங்க கல்யாணத்தை நான் பார்க்கணும் மாமா. ஆசையா இருக்கு. நான் அந்த நல்ல செய்திக்காகக் காத்துட்டு இருப்பேன். வச்சிடுறேன் மாமா.." என்றவளாய் பட்டென்று அலைபேசியைத் துண்டிக்க, ஒரு விநாடி கண்களை அழுந்த மூடித் திறந்தான் ஷிவா.

"பேசிட்டீங்களா? இப்போ புரியுதா?"

"ஆனாலும் இன்னமும் ஒரு குழப்பம் இருந்துட்டே இருக்கு சிதாரா?"

"என்ன குழப்பம்?"

"ஏன் துர்கா கல்யாணம் வேண்டாமுன்னு சொல்றா?"

"அவளுக்குப் பிடிக்கலை, அதான் வேண்டாம்னு சொல்றா."

"என்னை அவளுக்குப் பிடிக்கலைன்னு சொல்றியா?"

"ம்ப்ச், அப்படிச் சொல்லலை. ஆனால் அவ இப்போ இருக்கிற மனநிலையில் அவளுக்குக் கல்யாணமே பிடிக்கலைன்னு சொல்றேன்."

"ஆனாலும் என்னால் வருணை பற்றி நினைக்காமல் இருக்க முடியலை."

"ஏன்?"

"ஏன்னா? இதென்னா கேள்வி?"

"அந்தக் குழப்பத்துக்குக் காரணம் வருண் இல்லை. நீங்க இன்னும் துர்காவை நம்பலைன்னு அர்த்தம்?"

"ம்ப்ச். என்ன சொல்ற?"

"பின்ன? உங்க போலீஸ் மூளை எப்பவுமே எல்லாரையும் தப்புத்தப்பா நினைக்கச் சொல்லுது. அதான். நாம் என்ன இன்னும் இராமாயணக் காலத்துலேயே இருக்கோம், சந்தேகம்னா உடனே தீக்குளிக்கிறதுக்கு. இல்லை வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து தான் எல்லாப் பொண்ணும் நாங்க இன்னும் கன்னியா தான் இருக்கோம்னு ப்ரூவ் செய்யணுமா?"

அவளது பேச்சில் அருவருப்பாய் உணர்ந்தவன் மீண்டும் சாளரத்தினை நெருங்கியவனாய் அதன் வழியாய் சந்திரனைப் பார்த்தவாறே அமைதியாகிப் போக, மௌனத்திலும் அவனது ஆத்திரம் புரிந்தவளாய் அவனை நெருங்கியவள் அவனது தோளைத் தொட்டவாறே,

"கேட்கும்போதே உங்களுக்குக் கோபம் வருதே. அவளை நினைச்சுப் பாருங்க. ஒரு பொண்ணுக்கிட்ட எத்தனை முறைதான் நீங்க எல்லாம் இதே கேள்வியைக் கேட்பீங்க.." என்றாள் மூச்சடைக்க.

மெள்ள அவளை நோக்கித் திரும்பியவன், "வருண் அவளைத் திருப்பி அனுப்பிய அன்னைக்கு அவளுடைய உடம்பில் காயங்கள் இருந்தது சிதாரா. உனக்குத் தெரியுமா?” என்றான் சந்தேகக் கண்களுடன்.

அவன் கூறியதுமே திடுக்கிட்டது பெண்ணவளுக்கு.

"காயமா? அதைப் பற்றித் துர்கா என்னிடம் ஒண்ணும் சொல்லலையே. அவளைப் பார்க்கலாம்னு ட்ரை பண்ணினேன், ஆனால் அவள் தான் வேண்டாம், நானே உன்னைக் கூப்பிடுறேன், அப்போ வான்னு சொல்லிட்டாள். அதனால் காயங்களைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே.."

பதற்றத்துடன் கூறியவளிடம் ஷிவா விளக்க, பெருமூச்செடுத்தவள்,

"ஒரு வேளை நாம் மாட்டிக்கிட்ட மாதிரி துர்காவும் ஏதாவது காட்டு மிருகங்கக்கிட்ட மாட்டியிருக்கலாம். அதுங்கக்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு முயற்சி செய்யும் போது அது மாதிரி காயங்கள் பட்டிருக்கலாம், இல்லையா?" என்றாள் அவன் முகத்தையே பார்த்தவாறே.

"அப்படின்னா எதற்காகவோ அவ அங்கிருந்த தப்பிக்க நினைச்சிருக்கணும், ரைட்?"

"இருக்கலாம், ஆனால் அதுக்காக அவ வருண்கிட்ட இருந்து தான் தன்னைக் காப்பாத்திக்கத் தப்பிச்சிருக்கணும்னு அவசியம் இல்லையே. ஏதோ ஒரு காரணத்துக்காக அவள் தப்பி இருக்கலாம், அப்போ அவள் காட்டுக்குள் சிக்கி இருக்கலாம். அவள் உடலில் பட்ட காயங்களைப் பார்த்ததினால் தானோ என்னவோ வருணே அவளைத் திரும்ப அனுப்பி வச்சிருக்கலாம்..”

அதையே தானே துர்காவும் ஷிவாவிடம் கூறி இருந்தாள்.

அப்பொழும் திருப்திப்படாதது போல் அமைதியாய் நின்றவன் மீண்டும் ஜன்னலின் புறம் திரும்ப,

"அதுவும் இல்லாமல் துர்காவை தேடும் போது நானும் வருணை வாட்ச் பண்ணிட்டு தானே இருந்தேன். அவரை ஒரு வொய்ட் காலர் க்ரிமினலுன்னு வேணா சொல்லலாமே தவிர, அவர் நிச்சயமா ஒரு womanizer [பெண்பித்தன்] இல்லை.." என்று கூறியதுமே எரிச்சலுடன் அவளை நோக்கித் திரும்பியவனின் வேகத்தில் கலக்கியது ஒரு விநாடி.

"அவனைப் பத்தி அவ்வளவு நல்லா தெரியுமோ? அப்போ அவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே. ஏன் என்னைத் தொந்தரவு பண்ணிட்டு இருக்க?"

அவனது அப்பொதைய எரிச்சலின் காரணம் புரிந்ததும் பனிச்சாரல் ஒன்று மேனி முழுவதும் வீசிட, சட்டென அவனைக் கட்டியணைத்தவள் குதிக்காலை ஊன்றி எம்பியவளாக அவன் எதிர்பாராதவண்ணம் கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்திட, இப்பொழுது திகைப்பது அவனது முறையாயிற்று.

“ஏய். என்னடி பண்ற?”

"தேங்ஸ் மிஸ்டர் ஷிவ நந்தன்.."

"எதுக்கு?"

"என் லவ்வை அக்ஸெப்ட் பண்ணியதுக்கு?"

"நான் எப்போடி அக்ஸெப்ட் பண்ணினேன்?"

"இதோ இப்பத்தான். இன்னும் சொல்லப் போனால் ரெண்டு தடவை அக்ஸெப்ட் பண்ணிட்டீங்கன்னே சொல்லலாம்.”

“வாட்?”

“யெஸ்.. முதல் முறை நான் வருணைப் பற்றிக் கொஞ்சம் நல்லவிதமா பேசும் போது அநியாயத்துக்குக் கோபம் வந்ததே, அப்போ. செக்கெண்ட் டைம், இப்படிக் கிஸ் பண்ணியும் ஒண்ணும் சொல்லாமல் இருக்கீங்களே, இப்போ. சரி சொல்லுங்க, எப்போ நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம்?"

அவனையும் அறியாது அதுவரை சுருங்கியிருந்த புருவங்கள் தானாக விரிவதையும், சஞ்சலத்துடன் இருந்த அவனது தீட்சண்ய கண்கள் சாந்தமானதையும் பார்த்தவளுக்கு நிம்மதி படர,

"உங்க நிலைமை எனக்கு நல்லாப் புரியுது ஷிவா. இது மாதிரியான நிலைமையில் துர்காவைத் தனியா விட்டுட்டு நீங்க மட்டும் கல்யாணம் செய்துக்கிறதுல உங்களுக்கு விருப்பம் இல்லை. அந்த அளவுக்கு உங்க மனசு குற்ற உணர்வால் காயப்பட்டிருக்கு. ஆனால் அதே சமயம் நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். எப்பவும் போலீஸ் பார்வையில் இருந்தே எல்லாத்தையும் பார்க்கக் கூடாது. ஒரு சாதாரண மனிதனோட பார்வையில் பார்த்தீங்கன்னா, அவளுடைய முடிவு சரின்னு உங்களுக்குத் தெளிவா புரியும். அவ விருப்பத்தை நீங்க மதிக்கவும் ஆரம்பிப்பீங்க." என்றாள் ஆறுதலாய்.

"ஆனால் அவளை விட்டு நான் உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டால் ஏற்கனவே தப்பா அவளைப் பேசுறவங்க இன்னும் அதிகமா பேச ஆரம்பிப்பாங்க சிதாரா."

"ஊர் வாயை மூட முடியுமா? அதுவும் இன்னமும் கிராமத்தில் மட்டுமல்ல, சிட்டியிலும் கூட பல மக்கள் இது போலத்தான் இருக்காங்க. ஆனா அதுக்காக மற்றவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நினைச்சு நம்ம வாழ்க்கையை நாம் அமைச்சிக்கிட்டால், நாம் நம்ம வாழ்க்கையை சரியா வாழவில்லைன்னு தான் அர்த்தம். ஏன் நாம் அடுத்தவங்க எதிர்பார்க்கிற மாதிரி வாழணும்?"

அவளது கேள்வி நியாயமானதுதான்.

ஆனால் அதற்கு என்ன பதில் கூறுவது என்று கலங்கியவனாக அமைதிக் காத்திட, அவனது எண்ணத்தை வேறு விதமாகப் புரிந்துக் கொண்டவளாக, "உங்களை நான் கல்யாணம் செய்துக்கிறதுக்காக இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா?" என்றாள் நெஞ்சம் அழுந்த, சட்டென விழிகளில் நீர் திரள.

அவளின் கண்ணீர் என்னவோ செய்யப் பேச்சை மாற்றும் முயற்சியில், "உங்க அப்பாவை பற்றி யோசிச்சியா சிதாரா?" என்றான் இறுகிய குரலுடன்.

இன்னமும் தெளிவில்லாத அவன் முகத்தைக் கண்டு மனம் சுனங்க, "அப்பா சம்மதிச்சிட்டாங்க." என்றாள்.

"சம்மதிச்சிட்டாரா? எப்படி?"

"எப்படின்னா? எங்க அப்பா நான் வருணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னப்போ, வருணைப் பற்றி நல்லா தெரிஞ்சும், அவங்களுக்காக, நான் அவங்க மேல் வச்சிருந்த பாசத்தினால், மறுத்து எதுவும் பேசாமல் சம்மதம் சொன்னேன். இப்போ வருணே எங்க கல்யாணத்தை நிறுத்திட்டாரு. அதனால் அப்பாக்கிட்ட போய் நான் உங்களைக் கல்யாணம் செய்துக்க விரும்பறதா சொன்னதும், என் விருப்பத்துக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லிட்டார்.”

"ஆனால் நானும் உங்க அப்பாவும் வெவ்வேறு எக்ஸ்ட்ரீம்ஸ் சிதாரா."

அவன் என்ன கூற வருகின்றான் என்று அவளுக்குப் புரிந்தது.

இந்தளவிற்காவது இறங்கி வந்திருக்கிறானே என்று மனமகிழ்ச்சியில்,

"எனக்குத் தெரியும். நீங்கள் கிழக்குன்னா அவர் மேற்குன்னு. ஆனால் ஷிவா உங்களுடைய எந்தவித நடவடிக்கையிலும் தலையிட மாட்டாருன்னு நான் என் அப்பாக்கிட தெளிவா சொல்லிருக்கேன். அதனால் நீங்க எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வருவதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை." என்றாள்.

"ஆனால் நான் நிச்சயம் தலையிடுவேன் சிதாரா. அவர் தப்பு செய்கிறாருன்னு தெரிஞ்சா நிச்சயம் விடமாட்டேன்."

"தெரியுமே"

"அப்புறம் ஏன் பொய் சொன்ன?"

"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாமுன்னு சொல்லிருக்காங்க இல்லையா, அதான் எனக்கு ஐநூறு உங்களுக்கு ஐநூறுன்னு சம பங்காப் பிரிச்சிக்கிட்டேன். அதுல நான் என் சார்பா கொஞ்சம் பொய்களை ஏற்கனவே சொல்லிட்டேன்.."

“என்னையும் உன்னுடன் ஏன்டி சேர்த்துக்குற? அது சரி, கொஞ்சம் பொய்கள் சொல்லிருக்கேன்னு சொல்ற. வேற என்னென்ன பொய் சொல்லிருக்க?"

"இதோ சென்னை வரை வந்திருக்கேனே, இதுவே அவங்களுக்குத் தெரியாது. ஃப்ரெண்ட்ஸோட டூர் போறேன்னு பொய் சொல்லிட்டு தான் வந்திருக்கேன்."

“ஏன் உங்க அப்பா நீ எங்க இருக்கன்னு கண்டுப்பிடிக்கவே மாட்டாரா?"

“அதெல்லாம் கண்டு பிடிச்சிருப்பாரு இந்நேரம். ஆனால் சென்னையில் நீங்க இருக்கிறதும் அவருக்குத் தெரிஞ்சிருக்குமே. அதனால் ஒண்ணும் சொல்ல மாட்டாரு..”

அவள் கூறியதும் சட்டெனச் சன்னமாய்ச் சிரித்து வைத்தான் அந்த இளம் காவலதிகாரி.

அவனது மலர்ச்சியில் தானும் மகிழ்ந்தவளாய் மீண்டும் எம்பியவள், மற்றொரு கன்னத்திலும் முத்தம் பதித்தவாறே,

"சீக்கிரம் நாள் குறிங்க மிஸ்டர் ஷிவ நந்தன் ஐ.பி.எஸ்.. அப்புறம் அந்த வருண் மாதிரி வேற யாராவது வந்து என்னைத் தூக்கிட்டுப் போயிடப் போறாங்க.." என்றவளாய் அவன் சுதாரிக்கும் முன் அறையை விட்டு ஓடிவிட, அடுத்தச் சில நாட்களிலேயே ஸ்ரீமதியையும் சென்னைக்கு அழைத்து வந்த ஷிவா தனது விருப்பத்தைக் கூறினான்.

அவருக்கு மனமில்லாவிட்டாலும் தேவேந்திரனின் மீது இருக்கும் மதிப்பிலும், ஷிவாவின் மேல் இருக்கும் நம்பிக்கையிலும் அவரும் சிதாரா ஷிவாவின் திருமணத்திற்கு அரைமனதாக இருந்தாலும் சம்மதித்துவிட, அவர்களது திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது.

********************************

இதற்காகத் தான் இவை எல்லாமே நடந்ததா?

பிராப்தத்தின் மேலும் பிராப்தவசத்தின் மேலும் அந்நாள் வரை நம்பிக்கையற்றவனாய் இருந்தவனுக்கும் ஏனோ அதெல்லாம் உண்மையோ என்றே தோன்றியது, மணமேடையில் மணமகனாய் பட்டு வேஷ்டியில் கம்பீரமாய் அமர்ந்திருந்த கணம்.

மனம் உவகையில் திளைக்க, தனக்கு மனைவியாய் சில நிமிடங்களில் தாரை வார்க்கப்படப் போகும் பெண்ணவளை திரும்பிப் பார்த்தவன் அழகாய் மெல்ல புன்னகைத்தான்.

அவனது மகிழ்ச்சி அவளையும் எட்டியதோ நிமிர்ந்து நோக்கியவளுக்கு அவனின் மலர்ச்சி பெரும் வியப்பாய் இருக்க, மீண்டும் தலை கவிழ்ந்தவள் அவனை மேலும் நெருங்கி அமர்ந்தாள்.

அவளின் செய்கையைக் கண்டு சிரித்துக் கொண்டவராய், "கெட்டி மேளம், கெட்டி மேளம்.." என்று புரோகிதர் கூற, தனக்கென்றே பிறந்திருந்த சிதாராவின் செங்கழுத்தில் மாங்கல்யத்தைப் பூட்டிய ஷிவ நந்தனின் கண்கள், கீழே நின்றிருந்தவளின் மீது படிந்தது.

அங்கு விருந்தினர்களின் மத்தியில் முன் வரிசையில், சந்தோஷத்தின் நீர் மணிகள் விழிகளில் நிரம்ப, மணமக்களின் மீது தூவுவதற்கு அட்சதையைப் பிடித்திருந்த கையை உயர்த்திய துர்காவின் உதடுகளில், தன்னை ஏறிட்டு நோக்கும் மாமனின் பார்வையை எதிர்கொண்டதில், அவன் சொல்ல நினைப்பது புரிந்ததில், ஆத்மார்த்தமான முறுவல் ஒன்று பூத்தது.

'உன் கழுத்தில் நான் தாலிக்கட்டாமல் இருக்கலாம் துர்கா. ஆனால் எப்போ உன்னைக் குழந்தையா என் கையில் அத்தைக் கொடுத்தாங்களோ அப்பவே உனக்குப் பாதுகாப்பாளனா நான் மாறிட்டேன். நிச்சயமா உனக்கு நல்ல வாழ்க்கையை நான் அமைச்சுக் கொடுப்பேன்.'

அவன் மனம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள, புத்தம் புதிய மாங்கல்யம் ஜொலிக்கத் தன் அருகில் அமர்ந்திருக்கும் மனையாளின் புறம் திரும்பியவனின் உதடுகளும் முறுவலில் விரிந்தன.

எத்தனை இன்னல்கள்? எவ்வளவு எதிர்பாராத நிகழ்வுகள்? கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத எத்தனை சோதனைகள்? ஒரு திருமணம் முடிவதற்குள்!!

அரிமாக்களின் வேட்டை

தொடரும்...
 
Last edited:

Vidhushini

New member
அப்போ வருண்-சிதாரா திருமணம் பற்றிய வதந்தி பரப்பியது, ஆர்யன் இல்லைனா மிர்சா சகோதரர்களா இருக்கணும். இதனால் நடந்த நல்லவிஷயம், ஷிவா-சிதாரா கல்யாணம்❤️

inbound8514507659815663337.jpg

இனி அடுத்த epi & இன்னொரு twist-க்கு waiting @JB @JLine sis....
 
Last edited:

saru

Member
Lovely update
Munvarisai la Durga va Ida yosikala hooon
Sivu sithara kalyanam mudinchiruchi
Vadanthi parapunadu misa gang ah
Durga kalyanam nee ta nadathi vaipa sivu adum Varun kooda
Ana adukulla ennenna nadaka podo
 
Already guessed ShivThara only got married… ❣️❣️❣️
Congratulations Police couple…
Mukesh Chauhan kum Shiv kum ulla bond eppadi irukkum nu parkka aasaiya irukken…

And Varun…. What a thought… Durga news parthuttu kavalai paduwa nu udane news ah publish pannittan… 👏🏻👏🏻👏🏻🤣🤣🤣
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top