JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 53 & 54

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 53 & 54

53

அடுத்து வந்த வாரங்களில் பெரியாண்டபுரத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. எரிந்து சாம்பலான இருபத்தியோரு வீடுகளில் இருபது வீடுகள் கூரைவேயப்பட்டு, பழைய நிலைக்கு வந்து விட்டன. ஒரு சிலர் கடன் வாங்கவேண்டிய தேவை ஏற்பட்டது என்றாலும், பெருவாரியான மக்கள் கடன் வாங்காமலே சமாளித்துவிட்டார்கள். கூரை சரிசெய்யப் படாத ஓரே வீடு சங்கரலிங்கத்தின் மனைவி, வேலம்மாளின் வீடு மட்டும்தான். சங்கரலிங்கம் உயிருடன் இருந்திருந்தால் அவன் வீடுதான் முதலில் சரிசெய்யப் பட்டிருக்கும்.

உண்மையில் வேலம்மாளுக்கு இருக்க காரைவீடு இருந்தது, ஆகவே அவளுக்கு எரிந்துபோன கூரைவீடு தேவைப்படவில்லை. அதைவிட அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு விட்டது. சங்கரலிங்கம் இருந்த வரை அவனுக்காக வாழ்ந்தாள் என்பதைவிட, அவன் சொன்னதைச் செய்தாள் என்பதே சரி. ஒரு குழந்தை இருந்திருந்தால் அதன்மேல் அன்பைச் செலுத்தியிருப்பாள். ஊரில் சங்கரலிங்கம் பெண்டாட்டி என்ற அவப்பெயர் வேறு. இனி இருந்தென்ன போயென்ன, என்ற மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டாள் வேலம்மாள்.

இருப்பினும் அவள் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். சங்கரலிங்கம் இருந்தவரை அவனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாவிடினும் அவன் மறைந்தபிறகாவது நல்லதைச் செய்துவிட்டுச் சாவோம் என முடிவெடுத்தாள். முன்னொருநாள், திடீரென்று ஒரு நாள் அங்கயற்கண்ணியைத் தன் கணவன் சொந்த ஊருக்கே கூட்டி வந்து குடி வைத்தபோதும் வேலம்மாள் அங்கயற்கண்ணியின் மேல் கோபம் கொள்ளவில்லை. அவளுக்குத்தெரியும் எல்லாம் சங்கரலிங்கத்தின் திருவிளையாடல்தான் என்று. அவனிடம் தன் சொல் எடுபடாது என்பதால் பாவம் ஒரு ஏழைப் பெண்ணிடம் சண்டை போடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது என்று அந்தப் பேச்சையே அவள் எடுக்கவில்லை.

சங்கரலிங்கத்திற்கு ஒரு மனைவி இருப்பாள் என அங்கயற்கண்ணி முன்பே யூகித்திருந்தாலும் அப்போதுதான் அவளைப் பற்றிக்கேள்விப்பட்டாள். அவள் இந்த ஊரில் இருப்பது தெரிந்திருந்தால் இங்கு வராமல் இருந்திருப்பாளோ என்னவோ. தெங்காசியில் இருந்து அவசரமாகக் கிளம்பிய பொழுது இவற்றைப் பற்றிச் சிந்திக்க அவளுக்கு நேரம் எங்கே இருந்தது. ஆனால் இங்கு வந்தபின் அவளால் அதைப் பற்றி ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆக, சங்கரலிங்கத்தின் மனைவியும், அவனால் ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அங்கயற்கண்ணியும் ஒரே ஊரில், ஒரு தெரு தள்ளித்தான் வாழ்ந்தார்கள். இதுவரை அவர்களைப் பிரித்து இரு துருவங்களாக வைத்திருந்த சங்கரலிங்கம் மறைந்தபின் அவர்களைப் பிரித்து வைத்த சக்தி இல்லாமல் போகவே, இருவரும் அவரவர் விருப்பப்படி செயல்பட வாய்ப்பு ஏற்பட்டது.

வேலம்மாள் தன் மனதில் அங்கயற்கண்ணியைச் சந்திக்கவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் அங்கயற்கண்ணியே அவள் வீடுதேடி வந்தாள். அவளைக்கண்ட வேலம்மாள், “வா, வா, நானே ஒன்ன வந்து பாக்கணும்மிண்ணு நினைச்சேன், கும்பிடப்போன தெய்வம் குறுக்கவந்தது போல நீயே வந்திட்ட,” என்று அன்பாக வரவேற்றாள்.

அங்கயற்கண்ணி வேலம்மாளைப் பார்த்திருக்கிராள், நேருக்கு நேர் நின்று பேசுவது அதுதான் முதல்தடவை. வேலம்மாளின் அன்பான வரவேற்பு அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது.

வேலம்மாள், “என்னம்மா தெகைச்சுப் போயிட்ட. வா, வந்து இப்பிடி உக்கார்,” என்றாள்.

அங்கயற்கண்ணிக்கு எப்படி வேலம்மாளை அழைப்பது என்றுகூடத் தெரியவில்லை. அவள் அதைப்பற்றி அதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. வேலம்மாள் அன்பாக அழைக்கவும் அங்கயற்கண்ணி, அவளை அறியாமலயே, “சரிக்கா. எப்பிடி இருக்கேகண்ணு பாத்திட்டு போகலாம்முண்ணு வந்தேன்,” என்றாள்.

வேலம்மாள், “அப்பிடியே கூப்பிடு. என்ன அக்காண்ணுதான் கூப்பிடணும். இருக்கேன். என்னல்லாம் நடந்துபோச்சு. எதுக்கும் ஒரு முடிவு வேணும்பாக, அதுமாதிரித்தான், ஒரு முடிவு வந்திருச்சுண்ணு நெனச்சிக்கிட வேண்டியதுதான்,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “ஆமாக்கா, நம்ம கையிலயா இருந்திச்சு நம்ம வாழ்க்க? காத்து அடிச்ச பக்கம் பறந்தோம். நம்ம தலவிதி அப்பிடி,” என்றாள்.

வேலம்மாள், “ஆமா, என்னோட வாழ்க்கைதான் இப்பிடி பாழாப்போச்சிண்ணா, ஓம் வாழ்கையும்மில்ல வீணாப்போச்சு. சரி எனக்குத்தான் பிள்ள இல்ல, ஒம் பிள்ளயாது தக்கப்பிடாது,” என்று அங்கலாய்த்தாள்.

பெருமூச்சுவிட்ட அங்கயற்கண்ணி, “அதெல்லம் பழங்கத. இனி நாம என்ன செய்யணும்மின்னுதான் நாம யோசிக்கணும்,” என்றாள்.

வேலம்மாள், “ஆமா நீ சொல்லுததுதான் சரி. அதுக்குத்தான் ஒன்ன நானே பாக்க வரணும்மின்னு நெனச்சேன்,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “நான் ஒரு முக்கியமான சமாச்சாரத்தச் சொல்லணும்மின்னுதான் வந்தேன். நம்ம கததான் இப்பிடி. சரி நமக்கு கைகால் இருக்கு. பிள்ளயா குட்டியா, நாம போன அன்னைக்கு யாரு கவலப் படப்போறா? ஆனா இந்த வெள்ளச்சாமி பெண்டாட்டி என்ன செஞ்சா? ரெண்டு பிள்ளகள வச்சிக்கிட்டு திண்டாடிக்கிட்டு வாரா. போதாக்கொறைக்கு அவளுக்கு கையும் காலும் வாதத்தில அடிபட்டு வௌங்கமாட்டெங்குது. அதான் அவளைப் போயி பாத்து ஆறுதலாப் பேசிட்டு வந்தா நல்லதுன்னு நெனச்சேன்,” என்றாள்.

வேலம்மாள், “நானும் அதத்தான் நெனச்சேன். அவ பாவம். ஒரு தப்பும் செய்யல. அவளைப் பாத்து அவளுக்கு ஏதாவது ஒதவி செய்தாத்தான் என் நெஞ்சு ஆறும். பாழாப்போன மனுசனால எத்தனபேருக்குச் சங்கட்டம்,” என்று தன் கணவன் செயலை நினைத்துக்கொண்டாள்.

அங்கயற்கண்ணி, “ஆமாக்கா அவ மேல ஒரு தப்பும் இல்ல ஆனா அவதான் தண்டனைய அனுபவிக்கா,” என்றாள்.

வேலம்மாள் தன் சமையல் அறைக்குள் நுழைந்து, “இங்க வா,” என்று அங்கயற்கண்ணியை அழைக்க, அவளும் தொடர்ந்தாள். அரிசி இருந்த சாக்கு மூட்டையில் இருந்து நான்கு பக்கால் அரிசியை அளந்து, ஒரு ஓலைப்பெட்டியில் போட்டாள். அடுத்து ஒரு படி பருப்பை எடுத்து ஒரு துணிப்பையில் போட்டாள். பின், அங்கயற்கண்ணியைப் பார்த்து, “தாயி நம்ம ரெண்டுபேரும் இப்பமே பச்சையம்மாள பாத்து இத குடுத்திட்டு வருவோம். அவ குடும்பத்துக்கு வேணுமிங்க எல்லா ஒத்தாசையும் செய்வோம்,” என்றாள்.

சற்றுக் கனமாக இருந்த அரிசிப் பெட்டியை அங்கயற்கண்ணி எடுத்துக்கொண்டாள், வேலம்மாள் பருப்பு இருந்த பையை எடுத்துக்கொண்டாள். பின் இருவரும் பச்சையம்மாள் வீட்டை நோக்கி நடந்தனர்.

பச்சையம்மாள் வீட்டை அடைந்து, அவள் மாடுகட்டும் தொழுவைத்தாண்டி அவள் வீட்டு வாசலில் நின்றார்கள் இருவரும். கைகால் முடக்குவாதத்தில் அவதிப்பட்டு, கட்டிலில் படுத்திருந்த பச்சையம்மாளுக்கு இவர்கள் நிற்பது தெரியவில்லை. அவளுடைய பிள்ளைகள் விளையாடப் போய்விட்டார்கள், இல்லையேல் சொல்லியிருப்பார்கள்.

ஆகவே வேலம்மாள் வாசல் படியில் நின்றவாறே, “பச்ச, ஏ பச்ச,” என்று அழைத்தாள்.

கட்டிலில் இருந்து வெகு பிரயாசப்பட்டு மெல்ல அமர்ந்தாள் பச்சையம்மாள். வெளியே சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருக்கவே அவளுக்கு வாசலில் நிற்பவர்களின் நிழல்தான் தெரிந்தது, யார் என்று அடையாளம் தெரியவில்லை. “யாரு, உள்ள வாங்க யாராயிருந்தாலும்,” என்றாள்.

வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் பச்சையம்மாளின் வீட்டுக்குள் நுழைந்து கட்டிலின் அருகில் சென்றனர்.

அவர்களைப் பார்த்த பச்சையம்மாள், “நீங்க ரெண்டுபேருமா? வாங்க வாங்க,” என்று வரவேற்றாள். பின், “எனக்கு கை கால் வௌங்கல, தப்பா நெனைக்காதேக,” என்றாள்.

வேலம்மாள், “சரி பச்ச எங்களுக்குத்தெரியும். நீ உக்காந்திரு. நீ எப்பிடி இருக்கன்னு பாத்திட்டு போகலாம்ன்னு வந்தோம்,” என்றாள்.

பச்சையம்மாள் அழுதுவிட்டாள், “எப்பிடித்தா சொல்ல? நெனச்சா என் ஒடம்பெல்லாம் பதறுது. எப்பிடித்தான் இந்த ரெண்டு பிள்ளைகளையும் காப்பாத்தப் போறனோ. அந்த பெரியாண்டவனுக்குத்தான் வெளிச்சம்,” என்றாள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.

அங்கயற்கண்ணி அவள் அருகில் அமர்ந்து, அவளை அன்பாகத் தழுவி, “அழாத பச்ச, நாங்க இருக்கோம். அத சொல்லதுக்குத்தான் நாங்க ரெண்டுபேரும் இங்க வந்தோம். அக்கா ஓனக்கு அரிசியும் பருப்பும் கொண்டாந்திருக்காக,” என்றாள்.

வேலம்மாள், “ஆமா பச்ச. நடந்தது நடந்து போச்சு. இனிமே நீ எதுக்கும் கவலப் படாத. நாங்க இருக்கோம். ஒனக்கும் ஒம் பிள்ளைகளுக்கும் ஒரு கொறையும் வராமப் பாத்திக்கிடுதோம்,” என்றாள்.

பச்சையம்மாளுக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. யார் தன்னை எதிரியாக நினைப்பார்கள் என்று நினைத்தாளோ, அவர்களே அவள் வீடு தேடி வந்து, “நாங்கள் உன்னையும் உன் குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிறோம்,” என்று சொல்கிறார்கள். இது என்ன கனவா என்று நினைத்து, தன்னைச் சுற்றிலும் பார்த்துக்கொண்டாள் பச்சையம்மாள்.

அங்கயற்கண்ணி, “ஒன்னால சமையல் பண்ண முடியலண்ணா ஒம் மகங்கிட்ட சொல்லிவிடு, நான் வந்து சமையல் பண்ணி வச்சிட்டு போறேன். இல்லாட்ட எங்க வீட்டில சாப்பிடு,” என்றாள்.

வேலம்மாள், “நான் எதுக்கு இருக்கேன்? குத்துக்கல்லுக் கணக்கா குத்தவச்சிக்கிட்டு இருக்கவா? எனக்கும் சொல்லிவிடு, நானும் வந்து கூடமாட வேல செய்திட்டு போறேன், ஒதவிசெய்த புண்ணியம் எனக்கும் கிடச்சிட்டுபோட்டும்,” என்றாள்.

பச்சையம்மாள் தன் கவலையை மறந்து சிரித்துவிட்டாள். இதற்குமுன் அவள் சிரித்து பல ஜென்மங்கள் ஆகிவிட்டன போன்று அவளுக்குத் தோன்றியது. சங்கரலிங்கம் கொலை நடந்து, அவள் கணவன் தலைமறைவானபின், அன்றுதான் அவள் உள்ளம் குளிர்ந்தது. வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் காட்டும் அன்பும் பரிவும், அவர்கள் பொருளாலும் உழைப்பாலும் செய்யத் தயாராய் இருந்த உதவியை விட, மிகப்பெரிய உதவியாய்ப் பட்டது பச்சைக்கு.

அந்த ஆனந்தத்தில் பச்சையம்மாள் எழுந்து நின்றுவிட்டாள். அவள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளிகள் இருவரையும் பார்த்து, “உக்காருங்க, இருந்து காப்பி குடிச்சிட்டுத்தான் போவணும்,” என்று பிடிவாதமாய் அடுப்பை பற்றவைத்து, விரைவில் தேனீர் வழங்கினாள்.

மிக நெருங்கிய நண்பர்களைப்போல் வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் பச்சையம்மாளின் வீட்டில் அமர்ந்து தேனீர் அருந்திய பின், வெகு நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பிரியா விடைபெற்றுச் சென்றனர். அன்றிலிருந்து அடிக்கடி வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் தனியாகவோ இருவரும் சேர்ந்தோ பச்சையம்மாள் வீட்டுக்கு வந்து ஏதாவது கொடுத்துவிட்டு, இருந்து சமையல்வேலை முதல், வீட்டைக் கூட்டிப் பெருக்குவது வரை, செய்துவிட்டுச் சென்றனர். சில நாட்கள் பச்சையின் வேண்டுகோளுக்கு இணங்கி இருவரும் அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.




54

அங்கயற்கண்ணி வேலம்மாளுடன் புதிய உறவைத் தொடங்கியிருந்தாலும் தன் பழைய நண்பர்களான மைதிலியையும் தங்கச்சாமியையும் மறக்கவில்லை. அவர்களையும் அடிக்கடி சந்தித்து வந்தாள். ஆனால் கொலை நடந்த சமயத்தில் தங்கச்சாமியிடம் கொண்டிருந்த இரவு நேரச் சந்திப்புகளைத் தொடரவில்லை. மைதிலியை பகல் நேரத்தில் தனியாகவும், மாலை வேளைகளில் மைதிலி தங்கச்சாமி இருவரையும் சேர்த்தும் சந்தித்தாள். அவர்கள் இருவரும் பயந்து கொண்டுதான் இருந்தனர். முக்கியமாக மைதிலி முற்றிலும் மாறுபட்டிருந்தாள். அவள் கணவனை ஒரு தெய்வமாகவே மதித்தாள். அவன் ஊர்மாட்டை மேய்த்துச் சம்பாதிக்கும் வருமானத்தில் அவனையும் அவர்கள் குழந்தைகளையும் சிறப்பாகக் கவனித்துக்கொண்டாள்.

கொலை நடந்து சில வாரங்கள் கடந்துவிட்டன. ஒரு வெள்ளிக்கிழமை தங்கச்சாமியையும் மைதிலியையும் அவர்கள் வீட்டில் சந்தித்தாள் அங்கயற்கண்ணி. இப்பொதெல்லாம் மைதிலிகூட, ஓரளவுக்குச் சிரித்து பழக ஆரம்பித்திருந்தாள்.

ஆனால் எந்நேரமும் போலீஸ் தங்கச்சாமியை மறுபடியும் கூப்பிட வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. ஆகவே போலீஸ் ஜீப் வந்தால் இன்னும் அவள் நெஞ்சு படபடக்கத்தான் செய்தது.

சில நாட்களுக்கு முன் போலீஸ் ஜீப் வந்து கிராம்ஸ் வீட்டுமுன் நிற்பதாகக் கேள்விப்பட்டு, தான் பயந்தது ஞாபகம் வந்தது மைதிலிக்கு. நல்ல வேளை அவள் வீட்டுக்கு அன்று அங்கயற்கண்ணி வந்திருந்தாள். அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டதை நினைத்துக் கொண்டாள் மைதிலி.

மைதிலி, “நல்ல வேளை நீங்க அன்னைக்கு வந்தீக. நான் ரெம்ப பயந்திட்டேன்,” என்றாள்.

அன்று தங்கச்சாமி மாடு மேய்க்கப் போய்விட்டு ஊர் திரும்பவில்லை. ஒரு வேளை அவன் வருவதற்குத்தான் போலீஸ் காத்திருக்கிறதோ என நினைத்தாள் மைதிலி. பின் ஜீப் தீயில் பாதிக்கப் பட்ட வீடுகளைப் பார்வையிடப் போனபொழுதும் எங்கே தன் வீட்டுக்கு வந்துவிடுவானோ அந்த ஏட்டு என்று பயந்தாள். அவள் பயந்த மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. தங்கச்சாமி ஊர் திரும்புவதற்குள் போலீஸ் ஜீப் போய்விட்டது.

ஆனால் இரண்டு நாள் கழித்து மீண்டும் ஜீப் வந்தது. ஊரில் கொலை சம்பந்தப்பட்டவர்களைப் பார்க்கவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் விரும்பியதால், எஸ்.ஐ. அவரை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்தார். வந்தவர் சில நபர்களைச் சந்தித்துவிட்டு தங்கச்சாமியின் வீட்டின் முன் ஜீப்பை நிறுத்தினார். அப்பொழுதுதான் அங்கயற்கண்ணி மைதிலியின் முன் திண்ணையில் அமர்ந்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். எஸ்.ஐ.யும் இன்ஸ்பெக்டரும் வருவதைக் கண்ட மைதிலி பதை பதைத்தாள். அங்கயற்கண்ணி அமைதியாய் நின்று கொண்டிருந்தாள்.

அங்கயற்கண்ணியைப் பார்த்த எஸ்.ஐ., ஒரு நொடி தாமதித்தார். பின் இன்ஸ்பெக்டரின் காதில், “ரெண்டு நாள் முன்னாடி பேசுனோம்ல சார், எஸ்.பி சமாச்சாரம்,” என்று கிசுகிசுத்தார்.

இரண்டு பெண்களில் அவள் யார் என்று தெரியாவிட்டாலும் அதற்குமேல் இன்ஸ்பெக்டர் ஏதும் பேசவில்லை. எஸ்.ஐ. மட்டும் மைதிலியைப் பார்த்து, “ஏம்மா ஒன் வீட்டுக்காரன் எங்க?” என்றார்.

மைதிலி நடுங்கிக்கொண்டே, “மாடு மேய்க்கப் போயிருக்காக,” என்றாள்.

“புது இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு அதான் பாத்திட்டுப் போக வந்தோம். சரி சரி, இன்னொரு நாள் வாரோம்,” என்ற எஸ்.ஐ. திரும்பி இன்ஸ்பெக்டரோடு ஜீப்பில் ஏறிக்கொண்டார்.

ஜீப் ஊரைக்கடந்தபின்தான் மைதிலிக்கு போன உயிர் திரும்பிவந்தது. ஜீப் போனபின் மைதிலிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வெகு நேரம் கழித்துத்தான் அங்கயற்கண்ணி மைதிலியின் வீட்டிலிருந்து சென்றாள். ஆனால் தங்கச்சாமி அப்போதும்கூட வீடு திரும்பவில்லை.

அந்த வெள்ளியன்று அதையெல்லாம் நினைவுகூர்ந்து மைதிலி பேசிக்கொண்டிருந்தாள். அப்போது தங்கச்சாமியின் வாடிய முகத்தைக்கண்ட அங்கயற்கண்ணி, “அய்யா நீங்க ஒண்ணும் பயப்படவேண்டாம். இனி போலீஸ் ஒங்களத் தேடி வராது,” என்றாள்.

தங்கச்சாமி, “சொல்லமுடியாது. ஒருத்தன பிடிச்சு கேஸ் போட்டாத்தான் ஊர்ல மத்த ஆளுக நிம்மதியா மூச்சு விடலாம்,” என்றான்.

அவன் பேச்சைக் கேட்ட மைதிலி அழ ஆரம்பித்துவிட்டாள். அங்கயற்கண்ணி, மைதிலியை தன் தோளில் ஆதரவாக அணைத்துக்கொண்டாள். மைதிலி பார்க்காத வகையில் தங்கச்சாமியிடம், ‘இப்படியெல்லாம் பேசவேண்டாம்’ எனக் கண்ணால் சைகை செய்தாள். அவனும் புரிந்துகொண்டவன் போல் லேசாகத் தலை அசைத்தான்.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top