JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 59 & 6o

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 59 & 60

59

எஸ்.ஐ. இளங்கோ இரண்டாவது முறையாக நீலாம்பரி எஸ்ட்டேட்டுக்குச் சென்று, விரால்ராசுவுக்கும் சங்கரலிங்கத்தின் கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்பது பற்றித் தீவிரமாக விசாரித்தும், ஒரு துப்பும் கிடைக்காததால் வெறும் கையோடு திரும்பினார். உடனே எஸ்.ஐ. இளங்கோவும், இன்ஸ்பெக்டர் ராஜாவும் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் டீ.எஸ்.பி மாதவன் நாயரின் அறிவுரைப்படி நடந்துகொள்வது என முடிவுசெய்தனர்.

அடுத்த நாளே, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் இரண்டுபேரும் மஃப்டியில், சாதாரண மனிதர்கள் போல் வேட்டி சட்டை அணிந்து, தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு இலஞ்சி வரை பேருந்தில் சென்று அங்கிருந்து இரண்டுமைல் தூரத்தில் உள்ள கீழப்பாறையை நோக்கி நடந்து சென்றனர். வழியில் யாராவது கேட்டால் கிராம்ஸ் என்றழைக்கப்படும் கிராம அதிகாரியை, பார்க்க வந்திருப்பதாகப் பேசி வைத்துக்கொண்டனர்.

ஏட்டு தனியே ஜீப்பை ஓட்டி வந்து இலஞ்சியில் காத்திருந்தார். 107ம் மஃப்ட்டியில், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் போன அதே பேருந்தில் சென்றாலும் தனியாகப் போவதுபோல் நடித்து, இலஞ்சியில் இறங்கி அவர்களுக்குப் பின்னால் நல்ல இடைவழி விட்டு நடந்தார்.

எஸ்.ஐ.யும் இன்ஸ்பெக்டரும் வெள்ளச்சாமியின் உறவினரான தீனா.மூனா.ராமசாமியின் வீட்டை நோக்கிச் சென்றனர். அவர்கள் ஏற்கெனவே ஊரின் வரை படத்தை நன்கு பார்த்து வைத்துக்கொண்டிருந்தனர். தீனா.மூனா. என்றழைக்கப்படும் தீனா.மூனா.ராமசாமியின் வீடு எங்கே இருக்கிறது என்பது மட்டுமல்ல அந்த வீட்டின் வரைபடம், எத்தனை வாசல்கள், அவர் வீட்டில் எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் போன்ற அத்தனை விவரங்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தனர். அதற்குத் தேவையான தகவல்களை டீ.எஸ்.பி வந்து சென்ற அடுத்த சில தினங்களிலேயெ சேகரித்து வைத்திருந்தனர்.

தீனா.மூனா.ராமசாமியின் வீட்டை நெருங்கும் போது மதியம் ஒரு மணி இருக்கும். முன் வாசல் திறந்திருந்தது. நேராக எஸ்.ஐ.யும் இன்ஸ்பெக்டரும் உள்ளே நுழைந்தனர். அப்போதுதான் அங்கே தீனா.மூனா.ராமசாமி, அவர் மகன்கள் இரண்டுபேர், அருவாள் வெள்ளச்சாமி எல்லோரும் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அன்று விசேசம் போலும், கோழிக்கறியும் சோறும் தடபுடலாகப் பரிமாறப் பட்டுக்கொண்டிருந்தன.

உள்ளே நுழைந்த எஸ்.ஐ.யும் இன்ஸ்பெக்டரும், ஓரே பாய்ச்சலில் வெள்ளச்சாமியின் அருகில் சென்றனர். இமைக்குமுன் எஸ்.ஐ. கைது செய்யத்தயாராய் வைத்திருந்த விலங்கின் ஒரு வளையத்தை வெள்ளச்சாமியின் இடது கையில் மாட்டினார், அதனுடன் சங்கிலியால் இணைந்த மற்றொரு வளையத்தை தன்னுடைய வலது கையில் ஏற்கனவே மாட்டியிருந்தார் எஸ்.ஐ.

இன்ஸ்பெக்டர் அவர் பங்குக்குத் தன் கைத் துப்பாக்கியை நீட்டியவாறு, “யாரும் அசையாதீங்க. நாங்க வெள்ளச்சாமிய கைது செய்ய வந்திருக்கோம். அவரைக்கூட்டிட்டு போயிருவோம். அதற்குப் பின்னால நீங்க ஒங்க வாழ்க்கையத் தொடரலாம். தடுத்தால் எல்லாரையும் கைது செய்யவேண்டியதிருக்கும்,” என்றார்.

தீனா.மூனா.ராமசாமியின் மூத்த மகன், செல்லமுத்து எழுந்திருக்க முயன்றான். அவன் அருகில் அமர்ந்திருந்த தீனா.மூனா.ராமசாமி, சாப்பிட்டுக்கொண்டிருந்த தன் வலது கையால் அவனுடைய இடது கையைப்பிடித்து இழுத்து உட்கார வைத்தவாறே, “செல்லமுத்து ஒன் இடத்தில் உக்கார். யாரும் அசையாதீங்க. போலீசு வெள்ளச்சாமிய பிடிக்க வந்திருக்கு, பிடிச்சிட்டு போகட்டும். அவன் குத்தவாளியா இல்லயான்னு கோட்டு தீர்ப்பு சொல்லட்டும்,” என்றவர், இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “வெள்ளச்சாமிய நீங்க பிடிச்சிட்டு போங்கசார். நாங்க ஒண்ணும் தடுக்கல,” என்றார்.

பின் வெள்ளச்சாமியைப் பார்த்து, “வெள்ளச்சாமி அரசாங்கத்திடம் இருந்து தப்பிக்க முடியாது. அமைதியா அவங்ககூடப் போய்ட்டா அடி மிஞ்சும். இல்ல நீ மட்டுமில்ல, குடும்பமே கேவலப்பட்டு போயிரும். என்ன மன்னிச்சிக்கோ,” என்றார் தீனா.மூனா.

வெள்ளச்சாமி பதறிப்போனான். அவன் உடல் வெட வெட என்று ஆடியது. “சின்னையா, இது வரைக்கும் செஞ்ச உதவியே தெய்வாதீனம்,” என்று அழுதுகொண்டே சொன்னான்.

எஸ்.ஐ., அந்த அவசரத்திலும், “வெள்ளச்சாமி, தண்ணி குடிக்கணுமின்னா குடிச்சுக்கோ. கைய துண்டில தொடச்சுக்கோ,” என்றார்.

வெள்ளச்சாமி கண்ணீர்மல்க வேண்டாம் என்று தலை அசைத்தான். எஸ்.ஐ. வெள்ளச்சாமியைத் தன் வலது பக்கத்தில் நடக்கவிட்டு அவனுக்கு சற்றுகொஞ்சம் பின்னால் நடந்தார். இன்ஸ்பெக்டர் தன் கைத்துப்பாக்கியை இறக்காமல் தீனா.மூனா.ராமசாமியின் குடும்பத்தின்மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே மெல்ல திரும்பி எஸ்.ஐ.யைத் தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியேறினார்.

அந்த தெருவின் முக்கில் தெருவைக் கண்காணித்தவாறே நின்ற 107, அவர்கள் வெளியே வருவதைக்கண்டவுடன் அவர்களை நோக்கி விரைந்தார். எஸ்.ஐ. 107ஐப் பார்த்து ஒரு சிறு கண் அசைவால் சைகைசெய்தார். உடனே 107 அவர்களைத் தெரியாதவர் போல் அவர்களைக் கடந்து சென்றார். பின் நூறு அடி தூரத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தார்.

எஸ்.ஐ. வெள்ளச்சாமியைக் கூட்டிக்கொண்டு முன்னால் நடந்தார். அவர்களுக்குப் பின் பத்தடி தூரத்தில் இன்ஸ்பெக்டரும், அவருக்குப் பின் நூறு அடி இடைவெளி விட்டு 107ம் நடந்து இலஞ்சிக்குக் கிழக்கே, தெங்காசி செல்லும் மெயின் ரோட்டை அடைந்தனர். அவர்களுக்காகக் காத்திருந்த ஏட்டு ஜீப்பை ஓட்டி வந்து அவர்கள் அருகில் நிறுத்தினார். சில நொடிகளில் நாலுபேரையும் ஏற்றிக்கொண்டு ஜீப் விரைந்தது.




60

எஸ்.ஐ.யும் இன்ஸ்பெக்டரும், வெள்ளச்சாமியை நேராக சத்திரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவனை அங்கிருந்த சிறு சிறையில் அடைத்தபின் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

இன்ஸ்பெக்டர், “ஏட்டு, எல்லாருக்கும் டீயும், டிபனும் ஏற்பாடு செய்ங்க. எல்லாருக்கும் ஒரே பசி,” என்றார்.

டீயும் டிபனும் வந்தபின் எல்லோரும் அவரவர் பங்கை அவசரமாகத் தின்று முடித்தனர். வெள்ளச்சாமி அந்தச் சிறிய சிறையில் சுவரில் சாய்ந்தவறே அமர்ந்திருந்தான்.

டிபன் முடித்தகையோடு எஸ்.ஐ. வெள்ளச்சாமியை அடைத்திருந்த சிறையின் முன் வந்தார். வெள்ளச்சாமி சுவரில் சாய்ந்து இருந்தவாறே எஸ்.ஐ.யைப் பார்த்தான். திடீரென்று கடும் கோபத்தோடு கத்தினார் எஸ்.ஐ., “எந்திரிலெ ராஸ்கல்,” என்று.

அதிர்ந்தான் வெள்ளச்சாமி. அவன் எஸ்.ஐ.யிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அதுவரை அன்பாக, தன்னை ஒரு மனிதனாக, நடத்திய இந்த மனிதன், ஏன் இப்படித் திடீரென்று மகாகோபம் கொண்டு தன்னைத் திட்டுகிறான் எனப் புரியாமல் அதிர்ச்சி அடைந்தான். அடித்துப் பிரண்டு கைகளைக் கூப்பியவண்ணம் எழுந்து நின்றான் வெள்ளச்சாமி. அவன் ஒரு சிறைப்பட்ட விலங்கைப்போல் பயந்து ஒடுங்கி கூனிக்குறுகி நின்றான்.

எஸ்.ஐ. அதே கோபாவேசம்கொண்ட குரலில், “ஒரு கொலையச் செஞ்சிட்டு ஓடிப்போய் ஒளிஞ்சிக்கிட்டா ஒன்னைப் பிடிக்க முடியாதுன்னு நெனைச்சயோ?” என்றார்.

வெள்ளச்சாமிக்கு எஸ்.ஐ. தன்மேல் ஏன் இவ்வளவு கோபம்கொள்கிறார் எனப் புரியவில்லை. தான் கொலை செய்ததாக அவர் நம்புவதாலா, அல்லது ஓடி ஒளிந்ததற்காகவா? அவன் கொலை செய்யவில்லை என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவர்கள் நம்பவில்லை என அவன் அறிவான். இருப்பினும் ஏன் இவ்வளவு கோபம் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அதை அவன் மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டான், ‘இன்னைக்கு நம்மள தொவச்சு எடுத்திட்டுத்தான் மறு வேலை பாப்பாங்க,’ என்று.

எஸ்.ஐ., தன் கோபத்தைச் சற்றும் குறைக்காமல், “என்னலே பாத்துக்கிட்டே இருக்க. ஏம்ல கொல செஞ்ச?” என்றார்.

வெள்ளச்சாமி, “ஐயா, நான்... நான் கொல பண்ணலய்யா,” என்றான் தட்டுத்தடுமாறி.

எஸ்.ஐ., “ஒன் அருவாள் எங்களுக்கு கெடைச்சிருச்சுலெ. ஒம் பாச்சா இங்க பலிக்காது, தெரிஞ்சுக்கோ,” என்றார்.

“நான் எதுக்கு ஐயா அவரக் கொல செய்யணும்,” என்றான் வெள்ளச்சாமி.

எஸ்.ஐ., “அதத்தாமில நானும் கேக்கேன். எதுக்குலே அவன கொண்ண?” என்று அந்த கட்டிடமே அதிரும் அளவுக்கு கத்தினார்.

வெள்ளச்சாமி அழும் குரலில், “என் கெட்ட காலம். நான் ஒண்ணும் செய்யலயே,” என்று அழுதான்.

எஸ்.ஐ., “ஒனக்கு காலம் எப்பிடி இருக்குன்னு பெறகு சோசியம் பாப்போம். இப்பம் சொல்லு, ஏன் அவனை கொல சொஞ்ச?” என்றார் சத்தமாக.

வெள்ளச்சாமி, “அய்யா நான் கொல செய்யல அய்யா. என்ன நம்புங்கய்யா,” என்றான்.

எஸ்.ஐ., “ஏட்டு,” என்றார்.

ஏட்டு வந்தார், கூடவே 107ம் வந்தார். ஏட்டு லாக்கப் அறையின் பூட்டைத் திறந்தார். வெள்ளச்சாமியின் கைகளை பின்னால் இழுத்து விலங்கு மாட்டினர். அடுத்து அவனைப் பின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த அறைக்குள் என்ன நடந்தது என்று வெளியே நின்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் சற்று நேரத்திற்கு முன் வெள்ளச்சாமி நினைத்தானே, ‘இன்னைக்கு நம்மள தொவச்சு எடுத்திட்டுத்தான் மறு வேலை பாப்பாங்க,’ என்று. அதுதான் நடந்திருக்க வேண்டும் என யூகிப்பதற்கு எவரும் பெரிய புத்திமானாக இருக்கத் தேவை இல்லை.

சற்று நேரத்திற்குப் பின் ஏட்டும் 107ம் வெள்ளச்சாமியைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அவன் உடம்பிலிருந்து எங்கும் ரத்தம் சொட்டவில்லை. ஆனால் அவன் உடம்பில் பல பாகங்கள் வீங்கியும், கன்னியும் காணப்பட்டன. முக்கியமாக அவன் மனம் முற்றிலுமாக உடைந்துபோய் இருந்தது. அவனுடைய தன்னம்பிக்கை முற்றிலும் அவனை விட்டு விடைபெற்று விட்டிருந்தது. அவனுடைய தன்மான உணர்வும் இப்போது அவனிடம் இல்லை. அவன் தன்னை ஒரு மனிதன் என்றே நம்பவில்லை. வெள்ளைச்சாமி என்ற மனிதனின் உள் மனம் முற்றிலும் உடை பட்டுவிட்டது. இனி அவன் எஸ்.ஐ. சொன்னபடி எல்லாம் ஆடுவான். கையெழுத்துப் போடச்சொன்ன இடத்திலெல்லாம் போடுவான்.

இத்தனைக்கும், இன்ஸ்பெக்டர் பின் அறைக்குப் போகவே இல்லை. காவல்துறையின் படிவங்கள் நிரப்பப்பட்டன. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டது. முறைப்படி வெள்ளைச்சாமியைச் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் பின் அவனை அதே லாக்கப்பில் அடைத்தனர். குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார் 107. பின் நாலு இட்டிலியும் சட்டினியும் வாங்கிவந்து கொடுத்தார். வெள்ளச்சாமி தண்ணீரைக் குடித்தான். இட்டிலியைச் சாப்பிடவில்லை. அவனுக்குப் பசி இல்லை.

107 வெள்ளைச்சாமியைப் பார்த்தார், அவனும் திரும்பிப் பார்த்தான், “மரியாதையாச் சாப்பிட்டிரு, இல்ல எஸ்.ஐ. இட்டிலிய வாயில அமுக்கி குச்சை வச்சு திணிச்சிருவாரு,” என்றார்.

வெள்ளச்சாமி அவசர அவசரமாய் இட்டிலியை விழுங்கினான். அவன் தொண்டையில் இட்டிலி சிக்கி அவனுக்கு வாந்தி வருவதுபோல் இருந்தது. 107 ‘ஏய்’ என்றார். எப்படியோ இட்டிலிகளை விழுங்கிவிட்டான்.

இரண்டு நாட்களித்துக் காவல்துறையினர் வெள்ளைசாமியைப் பாளையங்கோட்டைப் பெரிய சிறையில் அடைத்தார்கள்.
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top