JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 61 & 62

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 61 & 62

61

இரவைத் தூங்காமல் கழித்தாள் வேலம்மாள், அவளின் மனம் வெகு நேரம் கோபத்தால் வெந்து புகைந்தது. அவள் அருகில் அடுத்த பாயில் படுத்துக்கிடந்த அங்கயற்கண்ணி இன்னும் உறங்கவில்லை என்பதை அவள்விடும் மூச்சைவைத்தே அறிந்தாலும், அவளை எழுப்புவது நியாமாகப் படவில்லை வேலம்மாளுக்கு. எனவே புரண்டு புரண்டு படுத்தாள். ஊரையெல்லாம் கெடுத்துவிட்டு, பின் செத்துச் சுண்ணாம்பாகப் போன தன் கேடுகெட்ட கணவன் மேல் கோபம்கொண்டு தன் மனதை வேகவைப்பது தனக்குத்தானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என அவள் மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தாள். அவள் அதனை உணர்ந்ததால்தான் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றிருக்க வேண்டும். விரைவில் அவள் தன் மனதைக் கடிவாளமிட்டு இழுத்துக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டுப் படுத்தினாள்.

வேலம்மாளின் மனதில், சங்கரலிங்கத்தின்மேல் இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் தணிந்தது. இருப்பினும் அவளால் நிம்மதியாகத் உறங்க இயலவில்லை. அவள் என்றும் படுத்துத் தூங்கும் அதே கோரைப்பாயும், தலையணையும்தான், இருப்பினும் உறக்கம் வர மறுத்தது.

பாய் கொஞ்சம் பழையதுதான், ஏன் அதன் மஞ்சள் நிறம் சற்று மங்கியிருந்தாலும் இன்னும் ஒரு ஓரத்தில்கூடக் கிழியவில்லை. இன்னும் சில வருடமாவது அந்தப் பாய் உபயோகத்தில் இருக்கும். அவள் தலைவைத்து படுத்திருந்த தலையணையோ, அழுக்கேறிய உறையுடனும், கட்டியாய் இறுகிவிட்ட பஞ்சுமாய், என்றோ செத்து உறைந்துவிட்ட கன்றுக்குட்டியின் வயிறுபோல் இருந்தது. ஆனால், ஊரில் அவளைவிட வசதியாய் வாழ்ந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களும் அவளைவிடப் பணக்காரர்கள் என்று சொல்லிவிடமுடியாது, வேண்டுமென்றால் கொஞ்சம் படித்து உத்யோகம் பார்த்ததால் அவர்கள் தங்கள் வாழ்வில் சுகாதாரத்தைக் கொஞ்சம் கூடுதலாகக் கடைப்பிடித்திருப்பார்கள் எனலாம்.

அவளின் பொருளாதார நிலை எப்படியிருப்பினும், வேலம்மாள் என்றுமே அவளின் காசு பணத்தைத் தம்பட்டம் அடித்துக்கொண்டவள் இல்லை. மேலும், அவள் சொத்தை வைத்துப் போட்டி போடுவதைப் பற்றி நினைத்துப் பார்த்ததுகூடக் கிடையாது. படித்தவர்கள், உத்தியோகம் பார்ப்பவர்களை எப்பொழுதுமே அவள் தன்னைவிட ஒரு படி மேலாகவே நினைத்தாள்.

அவள் சங்கரலிங்கத்திற்கு வாழ்க்கைப்பட்டு வாழ்ந்த ஆரம்ப காலத்தில் அவன் மனதறிந்து நடக்க முற்பட்டாள். ஆனால் அவளால் அவனுடைய மனதில் ஓடியவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவற்றை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்குப் பணம், அந்தஸ்து, பெரிய மனிதன் என்ற பேர், போன்றவை மிக முக்கியமாய்த் தோன்றியதை அவள் அறிந்துகொண்டாள், அதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளவும் செய்தாள். ஆனால் அவன் பணத்தைச் சம்பாதிப்பதிலும், அவற்றைப் பெருக்குவதில் காட்டும் அக்கறையிலும் ஒரு வெறியனாக இருந்ததை அவளால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. அதைக்கூட அவள் சகித்துக்கொண்டாள். ஆனால் அவனுக்குள் இருந்த இன்னொரு மூர்க்கத்தனத்தை அவளால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளை அடைந்துவிடவேண்டும் என்ற அவனுடைய வெறியைத்தான் அவள் முற்றிலும் வெறுத்தாள். ஒருவேளை இவ்வெறி எல்லா ஆண்களுக்கும் இருக்கலாம், வயது ஏற ஏற அவன் வெறி தணிந்துவிடக்கூடும் என எண்ணி காலத்தைத் தள்ளியவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. காலம் செல்லச் செல்ல, அவனுடைய செல்வம் பெருகிக்கொண்டே போயிற்று, செல்வம் பெருகப் பெருக, அவனுடைய அந்த வெறி அதிகரித்துக்கொண்டே போயிற்று. ஒரு கட்டத்தில், எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் அவளை அனுபவிப்பதற்கு அவனுக்கு உரிமை இருப்பதாக அவன் எண்ணத் துவங்கிவிட்டான்.

வேலம்மாள் பிறந்தபொழுது பணம் பொருளோடு பிறக்கவில்லை என்றாலும், அவள் ஏழைக்குடும்பத்திலும் பிறக்கவில்லை. அவளுடைய பெற்றோர், தாத்தா, பாட்டி, எல்லோரும் சாதாரண விவசாயிகள். அம்பாசமுத்திரம் அருகில், கல்லிடைக்குறிச்சியில், காட்டு நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்தவர்கள். குடிக்கக் கஞ்சியும், உடுக்க உடையும் மட்டுமின்றி, இரவில் படுத்துறங்கக் கூரையும் எப்பொழுதும் அவர்களுக்கு இருந்தது. அதற்கு ஆதாரமாக அவர்களுக்கு இருந்தது பத்து ஏக்கர் காட்டு நிலமும், அதன் நடுவே வெட்டப்பட்ட கிணறும்தான்.

வேலம்மாளின் தகப்பன் வாயால் மட்டுமல்ல அவளுடைய முத்தையா என்றழைக்கப்பட்ட, அவளின் அய்யாவழித் தாத்தாவின் வாயாலும் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறாள், அவர்களின் பூர்விகம் பெரியாண்டபுரம் என்ற ஒரு சிறந்த ஊர் என்று. அவர்களின் பூர்வீகத்து ஊரில் ஒரு மாபெரும் கோவில் கட்டப் பட்டுள்ளது என்றும், அக்கோயிலை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனே பார்வையிட்டு அவ்வூர் அரசனைப் பாராட்டினான் என்றும்.

பின் அதன் சுற்று வட்டாரத்தில் தன் ஆளுமைக்கு உட்பட்ட சில கிராமங்களை அவ்வரசனுக்குப் பரிசாகத் தந்தான் என்றும், அச்செய்தியை கல் ஒன்றில் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான் என்றும், பெருமைப் பட்டுக் கொள்வார்கள். ஆள் உயரம்கொண்ட அக்கல், இன்றும் பாதி புதையுண்டு அக்கோயில் மைதானத்தில் கிடக்கிறது என்றும், அடிக்கடி சொல்வார்கள். வேலம்மாளின் மூதாதையர்கள் மனதார விரும்பியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், தங்கள் குடும்பம் மறுபடியும் தங்களது பூர்வீகமான பெரியாண்டபுரத்திற்கே சென்று குடியேற வேண்டும் என்பதுதான் அது.

அவர்களுடைய முன்னோர்கள் ஏதோ ஒரு காலத்தில் வேலைதேடி, பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் கல்லிடைக்குறிச்சியிலேயே தங்கிவிட்டார்கள் என்றும் வேலம்மாளின் முன்னோர்கள் அவளுக்குச் சொன்னார்கள். இருப்பினும் வருடம் ஒரு முறை அவர்களின் பூர்வீக ஊருக்குச் சென்று பெரியாண்டசாமி கோவில் சாமியைத் தரிசித்துவிட்டு வருவார்கள். அக்கோவிலின் தெய்வத்திற்கு, மாசிமாதம் அவ்வூர்மக்கள் எடுக்கும் வருடாந்திர மூன்று நாள் விழாவான மாசிப்படைப்புக்கு, அவர்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்வார்கள். வாழ்வில் அம்மூன்று நாட்களை அனுபவிப்பதற்காகவே வருடத்தின் மிச்சம் முன்னூற்று அறுபத்தி இரண்டு நாட்களை அவர்கள் சகித்துக்கொள்வதாகச் சொல்வார்கள்.

வேலம்மாள் தாவணி போட்ட நாள்முதல், அவளுடைய முத்தையா (தாத்தா), “நம்ம வேல்தாய நம்ம பூர்வீகத்திலதான் கெட்டிக் குடுக்கணும்,” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

வேலம்மாளின் அய்யாவும், “ஆமாய்யா, நம்ம வேலுத்தாய பெரியாண்டபுரத்திலதான் கெட்டிக் குடுக்கணும். அவா முன்னால போட்டும், பின்னால் நம்ம போவோம். வேலம்மாள் நம்ம எல்லாரையும் அழைச்சுக்கிடுவாள்,” என்றார்.

அவளுடைய முத்தையா (தாத்தா) சொன்னார், “தாயி, வேல்தாயி, ஓம் புண்ணியத்திலதான் எனக்கு நல்ல சாவு கெடைக்கணும். நான் செத்தபின்ன என்ன பெரியாண்டபுரத்திலதான் பெதைக்கணும். ஒங்க முத்தாத்தாளுக்குத்தான் அந்த பாக்கியம் கெடைக்கல. எனக்குமின்ன போய்ச் சேந்திட்டா. என்ன இங்க நட்டாத்தில விட்டுட்டு போயிராத தாயி. ஏங் உடம்ப, அங்க நம்ம பூர்வீகத்து மண்ணுக்கு கொண்டு போயித்தான் பெதைக்கணும்,” என்று பன்னிரண்டு வயதுச் சிறுமியாய் இருக்கையிலேயே தன் மேல பாரத்தைப் போட்டுவிட்டு, இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கி கும்பிட்டது வேலம்மாளுக்கு இன்னும் நினைவு இருக்கிறது.

அவள் ஆளாகி மூன்றே வருடத்தில் சங்கரலிங்கம் அவளைப் பெண்கேட்டு வந்தான். பாய்கூடப் போடாமல் வெற்றுத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, “ஒங்களுக்குச் சொந்த ஊர் எதுவோ,” என்றார் வேலம்மாளின் தாத்தா, எங்கோ பார்த்தவாறே.

பணிவாய்த் தலை குனிந்து, “நமக்குச் சொந்த ஊர் பெரியாண்டபுரம். பிழைப்பத் தேடி எங்க மூதாதையர்கள் சாத்தூர்ப் பக்கம் போயி நூறு வருசம் இருக்கும்,” என்றவனை இடைமறித்தார் கிழவர்.

“இப்பம் நீங்க குடியிருக்கது எந்த ஊர்ல?” என்று கேட்டார் வேலம்மாளின் தாத்தா, வந்தவனைக் கூர்ந்து நோக்கியவண்ணம்.

சங்கரலிங்கம் சற்றும் அசராமல், “அதத்தான் சொல்ல வந்தேன் அய்யா. எங்க பெரியவுக எல்லாரும் நாம எப்பிடியாவது பூர்வீகத்துக்கே திருப்பிப் போயிரணும்ண்ணு சொல்லிக்கிட்டே இருப்பாக. அதனால் நான் சின்ன வயசிலேயே வைராக்கியமா இருந்தேன், எப்பிடியும் பெரியாண்டபுரத்தில வீடு கெட்டணும்ண்ணு. நான் அங்க வீடு வாங்கி ஒரு வருசம் ஆகுதய்யா.” என்றான்.

வேலம்மாளின் முத்தைய்யா, உடனே உள்பக்கம் குரல்கொடுத்து, “தாயி வேல்தாயி, பாயக்கொண்டா, வெறும் திண்ணையில் விருந்தாள உக்கார வைக்கலாமா?” என்று வேலம்மாளுக்கு அறிவுரை சொன்னார்.

வேலம்மாள் வாசலில் நின்றுகொண்டே சுருட்டிய பாயை நீட்ட, பாயை வாங்கி விரித்துப் போட்டவாறே, “ஒங்க பேர் என்ன சொன்னேக?” என்றார் பெரியவர்.

“எம் பேரு சங்கரலிங்கம்.”

“அப்பிடியா, எனக்கு ஒரு பேரன் இருக்கான். வேல்த்தாயோட அண்ணன். அவன்பேரும் சங்கரலிங்கம்தான். அவன் போன வருசம்தான் பட்டாளத்தில சேந்தான்,” என்ற பெரியவர், தொடர்ந்து, “அய்யா நீங்க மத்தியான வேளையில வந்திருக்கேகளே சாப்பிட்டேகளா?” என்றார்.

சங்கரலிங்கம், “நா...சாப்பிட்டேன் அய்யா,” என்றான்.

பெரியவர் அப்போதே முறைகொண்டாட ஆரம்பித்துவிட்டார், “அய்யா, அய்யாண்ணு அன்னியமாப் பேசலாமா? எங்க வேல்தாயிக்கு நான் முத்தையாண்ணா ஒங்களுக்கு நான் பொன்னையா. இல்ல தாத்தாண்ணு கூப்பிடுங்க,” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் அடுத்து நடக்கவேண்டிய காரியத்தில் இறங்கினார்.

“இன்னா வந்திருதேன்,” என்று சொன்ன பெரியவர், தெருவில் இறங்கி அடுத்தவீட்டு மாரியம்மாளிடம் சென்று, “பெரியாண்டபுரத்தில இருந்து சம்பந்தம் பேச ஆள் வந்திருக்குண்ணு சொல்லி, எம்மகனையும் மருமகளையும் கூட்டிக்கிட்டு வா. சீக்கிரம்மிண்ணு சொல்லு,” என்று அனுப்பிவைத்த கையோடு திரும்பினார்.

வேலம்மாள் என்ற வேலுத்தாய் தன் தாத்தாவின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையையும் மட்டுமல்லாமல், அதற்கு வந்திருப்பவன் அளித்த பதிலையும் கூர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். அவள் மனது சிலிர்த்துக்கொண்டது. பூர்வீகத்திலிருந்து தன்னை பெண் கேட்க வந்திருப்பதாய்த் தெரிந்தவுடன், சடசட என்று காரியங்களில் இறங்கினாள். பின்கதவு வழியே சென்று முகம் கழுவி பொட்டு வைத்து, இருந்ததிலேயே நல்ல பாவாடை தாவணியைக் கட்டிக்கொண்டாள். பின் அவளுடைய அய்யா ஆத்தா வரும்வரை காத்திராமல், அடுப்பைப் பற்றவைத்துக் காப்பி போட்டாள்.

வேலம்மாள் காப்பியை இறக்கவுதற்கும், அவளுடைய அய்யா மாடசாமியும், ஆத்தா சீனித்தாயும் தோட்டத்தில் இருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. பின் கதவு வழியே நுழைந்த வேலம்மாளின் ஆத்தா சீனித்தாய், சட்டுப்புட்டென்று காரியத்தில் இறங்கினாள்.

வேலம்மாளைப் பார்த்து, “தாயி காப்பி போட்டது நல்லதுதான். அத பால ஊத்தி, ஆத்திக் குடுக்கலாம் முதல்ல. ஆனால், அதோட நம்ம ஒரு சோத்த பொங்கி ஒரு கோழிய அருத்து, கொழம்பு வச்சு சாப்பாடு போட்டுருவோம். அதான் பெரும,” என்றாள்.

ஆத்தா சொன்னது போல் வேலம்மாள், தான் போட்ட காப்பியை பால் சேர்த்து ஆற்றி தன் அய்யா, முத்தையா, வந்திருந்த விருந்தாளி, மூவருக்கும் கொடுத்தாள். காப்பியை வாங்கும் போது சங்கரலிங்கம் தன்னையே வைத்தகண் வாங்காமல் பார்ப்பதாய் உணர்ந்த வேலம்மாள் தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். அதற்குள் தன் சேலையை மாற்றியிருந்த வேலம்மாளின் ஆத்தா சீனித்தாய், முன் வாசல் பக்கம் இருந்த திண்ணையில் அமர்ந்திருந்த விருந்தாளி சங்கரலிங்கத்தை வரவேற்றாள்.

பின், “அய்யா, பெண் கேக்க வந்தவுக, தனியா வந்திருக்கேகளே,” என்று நாசுக்காகக் கேள்வியைத் தொடுத்தாள்.

சங்கரலிங்கம், “நீங்க கேக்கிறது ஞாயந்தான். நான் இங்க பொண்கேக்கண்ணு வரல. ஒரு வியாபார சம்பந்தமா வந்தேன். ஆனா எங்க அத்தை எப்பவும் சொல்லுவா, அம்பாசமுத்திரத்துக்குப் பக்கத்தில கல்லிடைக்குறிச்சியில நம்ம தாய்பிள்ளைகள் (சொந்தக்காரர்கள்) இருக்கு. அவுகளுக்கும் நம்மளமாறி பெரியாண்டபுரம்தான் பூர்வீகம். அவுக குடும்பத் தலைவர் பேரு பெரியபாண்டி, அவருக்குப் பேத்தி ஒருத்தி இருக்காள். அவளத்தான் நீ கெட்டணும். நீ அவளக்கெட்டி நம்ம பூர்விகமான பெரியாண்டபுரத்துக்கு கொண்டுபோய் குடும்பம் நடத்துன்னு சொன்னாள். வியாபர விசயமா நான் இந்த ஊருக்கு வந்ததேன், ஒங்க ஞாபகம் வந்தது. அதான் வேலய முடிச்ச கையோட தாத்தா பேரச் சொல்லி வழி கண்டுபிடிச்சு வந்தேன்,” என்றான்.

தாத்தா பெரியபாண்டி, “ஒங்க அத்தை பேர் என்ன?” என்றார்.

“அவ பேரு சுந்தரத்தாய்,”.

தாத்தா பெரியபாண்டி கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்துவிட்டு, “சுந்தரத்தாய்ண்ணு எனக்கு ஒரு அத்தை, எங்க அய்யாவுக்குத் தங்கச்சி, ஒருத்தி இருந்தா. எங்க அய்யா தெக்க வரயில எங்க அம்மானும் (மாமாவும்) அத்தையும் வடக்க சாத்தூர்ப் பக்கம் போனாக. கடுமையான பஞ்சம். கெணத்தில தண்ணி ஒரு சொட்டு இல்ல. காடெல்லாம் குரண்டிகூடக் காஞ்சு போச்சு. ஆடு மாடெல்லாங்கூடச் செத்துப் போச்சு. புழுதிக் காத்து அடிச்சது. பெரிய வீடுகாரங்கூட கஷ்டப் பட்டான். எங்க பொன்னையா, அம்மாவழித் தாத்தா, பெரிய ஆளு. அவரு வெள்ளாடு வச்சிருந்தாரு. காட்டுல அம்புட்டு புல்பூண்டும் செத்துப் போனாலும் எருக்கல மட்டும் வாடல. வெள்ளாடு எருக்கலய மேஞ்சிட்டு வரும். அவருடைய முன்னோர்கள் மாட்டுத்தொழுவுக்கு மண் சுவரு கட்டும் போது வரகு தானியத்தை சேத்து குழைச்சு கட்டியிருந்தாங்களாம். அந்த சுவரில வெள்ளாடு உராயும் போது வரகு விழுமாம். அந்த வரகு தானியத்த அள்ளி தெளிச்சு குத்தி, வெள்ளாட்டுப் பால்ல வேகவச்சு சாப்பிட்டாகளாம். எங்க அய்யாவப் பெத்த அய்யாவான, முத்தையாவுக்கு அவ்வளவு வசதி இல்ல, அதனால் நாங்க இங்க பிழைக்க வந்தோம்” என்று நிறுத்தினார் பெரியபாண்டி.

தன் முத்தைய்யா சொல்வதை வேலம்மாள் கூர்ந்து கவனித்தாள். தன் முன்னோர்கள் வாழ்ந்த பூமியைப் பற்றிப் பேசியபோதெல்லாம் அவளுக்கு அந்தப் பூமியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்ட பெரியபாண்டி, மீண்டும் தொடர்ந்தார், “நீங்க சொல்லுத சுந்தரத்தாய் எங்க அத்தையா இருக்காது. அவள் போன இடம் புல்லு மொளச்சிருக்கும். இந்தச் சுந்தரத்தாய் அவளோட பேத்தியா இருக்கும். அவதான் ஒங்க அத்தை. நீங்க சொல்லுததெல்லாம் சரியாத்தான் இருக்கு. வேல்தாயிக்கும் ஒங்களுக்கும் பொருத்தந்தான். கடைசியா ஒரு கேள்வி. நீங்க என்ன கிளை,” என்றார்.

சங்கரலிங்கம், “மறுவீடு கிளை” என்றான்.

தாத்தா பெரியபாண்டி முகம்மலர வாய்திறந்து சிரித்தார், “பிராமணர்கள் அவங்க கோத்திரத்தை அவங்க தகப்பங்கிட்ட இருந்து பெற்றுக்கிடுவாங்க. ஆனால் நம்ம சமூகத்தில தாய் வழியா கிளையப் பெற்றுக்கொள்கிற வழக்கம் உள்ளதனால், நானும் எம் பேத்தியும் அகத்தீசர் கிளை. எம் மகனுக்கு அவுக ஆத்தா கிளை, அதாவது மறுவீடு கிளை. எம் பேத்தி வேலுத்தாய்க்கு அவுக ஆத்தாவோட கிளை, அகத்தீசர் கிளை. மறுவீடு கிளையும் அகத்தீசர் கிளையும் நல்லா திருமணம் செய்யலாம்,” என்று தலையை ஆட்டி முற்றத்தில் இறங்கி ஆனந்தத் தெருக்கூதே ஆடிவிட்டார்.

தன் தாத்தா சொன்னதைக் கேட்ட வேலம்மாளுக்கும் மிக்க மகிழ்ச்சி. வேலம்மாளின் ஆத்தா சீனித்தாய் அவளுடைய செயல்பாட்டிலேயே தன் எண்ணங்களையும் முடிவுகளையும் தெரியப் படுத்திவிட்டாள். விறகு அடுப்பில் சமைத்த அந்தக் காலத்தில் அவ்வளவு வேகமாக சோறு சமைத்து, கோழிக்குழம்பு வைத்து அதற்கு மாற்று ருசிக்காக ரசமும் கத்தரிக்காய் பொரியலும் செய்துவிட்டாள்.

சங்கரலிங்கம், “நாலுமணி பஸ்ச நான் பிடிச்சாத்தான் ராத்திரி பத்து மணிபோல வீட்டுக்குப் போய் சேர முடியும்,” என்றவனிடம்.

சீனித்தாய், “நான் மூணு மணிக்குள்ள சமைச்சு முடிச்சிருதேன்,” என்று சொன்னதை நிருபித்து விட்டாள்.

சங்கரலிங்கத்திற்கு விருந்து படைத்து நான்கு மணி பஸ்சில் அனுப்பிவைத்தார்கள். வேலம்மாளின் அய்யா மாடசாமியும், முத்தையா பெரியபாண்டியும் அடுத்த வாரமே தங்களின் பூர்வீகமான பெரியாண்டபுரத்திற்குப் போய், சங்கரலிங்கத்தின் வீட்டைப் பார்வையிட்டார்கள். மேலும் அக்கம் பக்கத்தில் சங்கரலிங்கத்தைப் பற்றி விசாரித்தார்கள். எல்லோரும் அவனைப் பற்றி நல்லதையே சொன்னார்கள். சங்கரலிங்கத்தின் முன்னோர்கள் பெரியாண்டபுரத்திலிருந்துதான் போனவர்கள் என்றும், அவன் சில வருடங்களாக ஊருக்கு வந்துபோய் இருந்தானென்றும், தற்போது வீடு ஒன்றும் வாங்கியுள்ளான் என்றும் சொன்னார்கள்.

மாடசாமியும் பெரியபாண்டியும் சங்கரலிங்கத்தோடு கூடச் சென்று சாத்தூர் அருகில் இருந்த சாமியாபுரம் சென்றனர். அங்கே சங்கரலிங்கத்தின் அத்தை சுந்தரத்தாயைச் சந்தித்தனர். சுந்தரத்தாய்க்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம். அவள் மூலம் பெரியபாண்டி, தன் அத்தை சுந்தரத்தாய் பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டாள் என அறிந்துகொண்டார். தன்னுடைய அத்தை சுந்தரத்தாயின் பேத்திதான் சங்கரலிங்கத்தின் அத்தை, அவள் பெயரும் சுந்தரத்தாய் எனத் தெரிந்துகொண்டார். சொந்தங்கள் புதுப்பிக்கப்பட்டு அடுத்தமாதமே சங்கரலிங்கத்திற்கும் வேலம்மாளுக்கும் திருமணம் பெரியபாண்டியின் தலைமையில், பெரியாண்டசாமிகோவிலில் வைத்து சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அடுத்த நாளே வேலம்மாள் பெரியாண்டபுரத்தில், சங்கரலிங்கம் வாங்கிவைத்திருந்த கூரை வீட்டில் குடியேறிவிட்டாள். மூன்று நாள் வேலம்மாளின் கூடவே தங்கிவிட்டு அவளுடைய அய்யா ஆத்தா கல்லிடைக்குறிச்சிக்குப் போய்விட்டார்கள். ஆனால் வேலம்மாளின் தாத்தா பெரியபாண்டி மட்டும், பேத்திகூடவே தங்கிவிட்டார்.

சங்கரலிங்கமும் தாத்தா பெரியபாண்டி தங்களுடன் தங்குவதை விரும்பினான். அவன், “தாத்தா, நீங்க தாராளமா எங்களோட தங்குங்க. நான் வியாபார விசயமா அடிக்கடி வெளியூர் போகவேண்டியதிருக்கும். நீங்க இங்க தங்கினா வேலம்மாளுக்குத் துணையா இருக்கும்,” என்றான்.

வேலம்மாளும் தன் தாத்தா தன்னுடன் தங்குவதை மிகவும் விரும்பினாள். தாத்தா பெரியபாண்டி, ஒரு வருடம் இளம் தம்பதிகளின் வீட்டில் தங்கி அவர்களுக்கு உதவியாய் இருந்தார். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர் தன் பூர்வீகத்து ஊர் மக்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்வதிலேயே செலவிட்டார். நூறு வருடத்திற்கு முன் தன்னுடைய தாத்தா அவ்வூரைவிட்டுச் சென்றதாகவும், தான் இப்போது திரும்பி வந்து தன் பூர்வீகத்தில் வாழ வந்திருப்பதாகவும் சொன்னார். ஊரில் பல பெரியவர்கள் அவருடைய தாத்தா மூத்த பெரியபாண்டியைப் பற்றி தங்களின் முன்னோர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டதாகச் சொன்னார்கள்.

தாத்தா பெரியபாண்டி தன் பழைய உறவுகளைப் புதுப்பித்ததோடு, பூர்வீகத்திற்கு திரும்பவேண்டும் என்ற தன் வாழ்வின் நெடு நாளையக் கனவையும் நனவாக்கிக்கொண்டார். அந்தத் திருப்தியினாலோ என்னவோ ஒரு நாள் இரவு படுத்தவர், கோழி கூவியபின்னும் எழுந்திருக்கவேயில்லை, தொட்டுப் பார்த்த வேலம்மாள் தன் தாத்தா இறந்து விட்டதை உணர்ந்தாள். அவர் விரும்பியபடியே அவரை அவரது பூர்வீகத்திலேயே, அவருடைய மூதாதையரின் கல்லறைக்கு அருகிலேயே, அடக்கம் செய்துவிட்டனர்.

ஆரம்ப காலத்தில் வேலம்மாளின் மண வாழ்க்கை நன்றாகத்தான் போயிற்று. சங்கரலிங்கம் அவளை விட பத்து வயதுக்கு மேல் பெரியவன் என்பதை அவள் பெரிது படுத்தவில்லை. ஆனால் நாள் ஆக ஆக தன் கணவனுக்கு மற்ற பெண்களிடம் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகப்பட ஆரம்பித்தாள். நல்லவேளை அதற்குள் அவளுடைய தாத்தா இறந்துவிட்டார், இல்லையேல் அவர் சங்கரலிங்கத்தைச் சும்மா விட்டிருக்க மாட்டார்.

திருமணம் முடிந்து ஐந்து வருடம் ஆகியும் தனக்குக் குழந்தை இல்லையே என்பதை நினைத்து வேலம்மாள் கவலைப் பட ஆரம்பித்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல சங்கரலிங்கத்திற்கு வேறு மனைவி, அல்லது குடும்பம் இருக்கலாம் என்பது அவளுக்குப் புலப்படலாயிற்று. அவன் வருவதும் போவதும், செயல்படும் விதங்களும் வினோதமாகப் போய்க்கொண்டே இருந்தன.

ஒரு நாள் கேட்டே விட்டாள், “ஒங்களுக்கு வேற குடும்பம் இருக்கா? இல்ல நாமட்டும்தான் ஒங்க பெண்டாட்டியா,” என்று.

சங்கரலிங்கம் அந்தக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவன் ஒரு சில வினாடிகள் யோசிக்க வேண்டியதிருந்தது. பின், “சே சே அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்ல,” என்றான்.

அவன் பேச்சை வேலம்மாள் நம்பவில்லை. அப்படியே அவன் ஒத்துக்கொண்டாலும் அவளால் ஒன்றும் செய்ய இயலாது. ஆகவே அவன் பதிலை ஏற்றுக்கொண்டு அதற்குமேல் கேட்கவில்லை. சங்கரலிங்கம் வேலம்மாளின் இயலாமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவன் விருப்பப்படியெல்லாம் ஆடினான்.

அப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் தண்ணிக்காரி என்று அழைக்கப்பட்ட அங்கயற்கண்ணியை ஊருக்கே கூட்டிவந்தான். “பாவம் அவளுக்கு போக்கிடம் இல்ல,” என்றான். அது நாள் வரை வேலம்மாளின் கண்ணுக்கும் காதுக்கும் தெரியாமல் தப்புச் செய்த சங்கரலிங்கம், அதன்பின் ஊர் அறியவே செயல் பட்டான்.

வேலம்மாளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனால் சில காலத்திற்குள்ளாகவே சங்கரலிங்கம் அங்கயற்கண்ணியின் வீட்டுக்குப் போவதைத் தானாகவே குறைத்துக்கோண்டான். அதற்குள் அவன் ஏராளமாய்ச் சம்பாதித்து விட்டான், பொன், பொருள், வீடு, நிலம் என்று. அவன் செல்வாக்குப் பெருகிவிடவே, அவனை அடக்க அவனாலேயே முடியவில்லை.

சங்கரலிங்கத்தின் கண்கள் அப்போதுதான் மைதிலியின் மேல் பட்டன. ஆனால் அவள் எளிதில் அவன் கைகளில் சிக்கவில்லை. ஆகவே வீடு நிலம் எல்லாம் இழந்து நின்ற பொழுது, அவளுடைய நகைகளையும் கொள்ளை அடித்து, அவளை பலகீனப் படுத்திவிட்டான். வேலம்மாள் தன் கணவன் சங்கரலிங்கம் செய்த செயல்களிலேயே மிகவும் ஈனத்தனமானது மைதிலியின் நகைகளைக் கொள்ளை அடித்ததுதான் என நினைத்தாள்.

அதைத் தெரிந்த மாத்திரத்தில் அவள் அவன்மீது அளவுக்கடங்காத கோபம் கொண்டாள். ஆனால் அதை அவன் மீது காட்டுவதற்கு இடம்கொடாமல் அவன்தான் இறந்து விட்டானே. இப்படி, தன் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைத்தவறே தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்து இரவைக் கழித்தவளுக்கு, முதற் சேவலின் கூவல் இனிமையான கீதம் போன்று இனித்தது. வேலம்மாள் எழுந்து பாயில் உட்கார்ந்தாள். அவள் விழிப்பதற்காகவே காத்திருந்தவள்போல் அங்கயற்கண்ணியும் எழுந்து உட்கார்ந்தாள்.

அங்கயற்கண்ணி வேலம்மாளைப் பார்த்து, “எனக்கும் தூக்கமே இல்லக்கா. நீ ஒண்ணும் கவலப் படாதே. நான் ஒரு நல்ல யோசனை வச்சிருக்கேன்,” என்றாள்.

அவள் ஏதாவது நல்ல முடிவோடுத்தான் எழுந்திருப்பாள் என எதிர்பார்த்த வேலம்மாள், அங்கயற்கண்ணி சொன்னதைக் கேட்டு திருப்தி அடைந்தவளாய், “நீ சொன்னாச் சரி. ஆனால் மொதல்ல காலயில ஆகவேண்டியத கவனிச்சிட்டுதான் மத்ததெல்லாம்,” என்று சிரித்தாள்.




62

காவல்துறை அதிகாரிகள், வெள்ளச்சாமியை இலஞ்சி சென்று பிடித்து வந்து அவனை அடித்து அவனிடமிருந்து அவன்தான் கொலை செய்தான் என வாக்குமூலம் வாங்கியபின் அவன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பின் அரசாங்கம் அவனைப் பாளையங்கோட்டை பெரிய சிறையில் அடைத்து, அவன் மேல் கொலை வழக்குப் பதிவுசெய்து, அவன் மேல் வழக்குத் தொடர்ந்தனர்.

வெள்ளச்சாமியின் மீது தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரிக்க, அவனைத் திருநெல்வேலி குற்றப்பிரிவு நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி காதர்பாஷாவின் முன் ஆஜர் படுத்தினார்கள். காவல்துறை தரப்பில் அவர்கள் சொல்லவேண்டியதை எல்லாம் வாய்ப்பாடு போல் ஒப்பித்தார்கள். அவர்கள் வழக்குக்குச் சான்றாக, காவல்துறையிடம் வெள்ளச்சாமி எழுதிக்கொடுத்த வாக்குமூலம், கொலைக்கு உபயோகப் படுத்தப் பட்ட அவனுடைய அருவாள், அவனுடைய ரத்தக்கறை படிந்த வேட்டி சட்டை, எல்லாவற்றையும் சாட்சிப் பொருளாக வைத்தனர். மேலும் அவன் கொலை நடந்த நேரத்தில் அதே இடத்தில் இருந்ததாகவும், கொலை செய்யப்பட்ட சங்கரலிங்கத்தோடுதான் இருந்ததாகவும் அவனே ஒப்புகொண்டதாகவும் கூறினார்கள். அது தவிர, அவன் சங்கரலிங்கத்திடம் கடன் வாங்கி இருப்பதாக அவன் மனைவியே ஒப்புக்கொண்டதாகவும், அதற்குச் சாட்சிகளோ, அத்தாட்சிகளோ எதுவும் கிடையாது என்றும் கூறினார்கள். ஆகவே வெள்ளச்சாமிதான் கொலை செய்திருக்கவேண்டும், இது ஒரு திட்டமிட்ட கொலை, எனவே அவனுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

வெள்ளச்சாமிக்குப் பாதிதான் புரிந்தது. அவற்றில் ‘திட்டமிட்ட கொலை,’ என்பது ஒன்று. ‘அடப்பாவி, கொலைய நான் செய்யவே இல்ல, ஆனா திட்டமிட்டுக் கொலை செய்தேன்னு இப்படி வாய்கூசாமல் சொல்றானே’ என்று நினைத்தான். ஆனால் அவன் வாய் திறந்து பேசவில்லை. பேசாதவரைக்கும் உடம்பில் அடி விழாது என்பது அவனுக்குப் புரிந்தது.

காவல்துறையினர் பேசிமுடித்தவுடன் தலைமை நீதிபதி காதர்பாஷா வெள்ளச்சாமியைப் பார்த்து ஒரே ஒரு கேள்விதான் கேட்டார், “ஏம்பா ஒனக்கு வக்கீல் வச்சு வாதாட காசு இருக்கா?” என்பதுதான் அது.

வெள்ளச்சாமி இரு கரங்களையும் கூப்பி, “இல்ல அய்யா..,” என்றான்.

தலைமை நீதிபதி அருகில் இருந்தவரைப் பார்த்து, “அப்பம் இவனுக்கு அரசு வக்கீல் ஒருத்தரை நியமனம் பண்ணுங்க,” என்று உத்தரவிட்டார். பின் வெள்ளச்சாமியைப் பார்த்து, “அரசு வக்கீல் உன்னை வந்து பாப்பார். அவரு சொல்றபடி கேட்டயிண்ணா ஒனக்கு நல்லது,” என்று அன்றைக்குத் தன் கோட்டை முடித்துக்கொண்டார் தலைமை நீதிபதி காதர்பாஷா.

வெள்ளச்சாமியை மீண்டும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்தார்கள். தலைமை நீதிபதி காதர்பாஷா சொன்னது போலவே, இரண்டே நாட்களில் அரசு அமர்த்திய வக்கீல் முத்துராமன் வந்து, சிறைக் காவலர்களிடம் அனுமதி பெற்று, வெள்ளச்சாமியைப் பார்க்கவந்தார். அவர்கள் இருவரையும் அறையில் விட்டுவிட்டு, கம்பிக் கதவை அடைத்துவிட்டு, வெளியே நின்றான் காவலாளி. வக்கீல் முத்துராமன், வக்கீல்கள் அணியும் கருப்பு அங்கியெல்லாம் போட்டிருக்கவில்லை. வெள்ளைக் கதர்ச் சட்டை, காக்கி பேண்ட் போட்டிருந்தார். நறுக்கு மீசையுடன் காணப்பட்ட அவரின் உயரம் ஐந்தரை அடிக்குமேல் இருக்காது, சற்று ஒல்லியாக இருந்தார். அவர் எவ்வளவு மோசமாக வழக்காடினாலும் அரசாங்கம் அவருக்கு சன்மானம் வழங்குமென்றாலும், நியாயமாக வாதாடவேண்டும் என்ற எண்ணம்கொண்டவர்.

வெள்ளச்சாமியைப் பார்த்து வக்கீல் முத்துராமன் பேச ஆரம்பித்தார், “வெள்ளச்சாமி, எம் பேரு முத்துராமன். நான்தான் உனக்காக வாதாட வந்திருக்கேன். அதுக்காக அரசாங்கம் என்ன நியமிச்சிருக்கு. நான் ஒன்னோட கேசப் படிச்சேன். அதப் பத்தி பேசத்தான் வந்திருக்கேன்,” என்றார்.

வெள்ளச்சாமிக்கு சந்தோஷம்தான் என்றாலும் அவன் ஒன்றும் பேசவில்லை. வக்கீல் முத்துராமனே தொடர்ந்தார், “நான் ஒண்ணு கேக்கிறேன். உண்மையச் சொல்லு,” என்றார்.

வெள்ளச்சாமி சரி என்பதுபோல் தலையை ஆட்டினான்.

வக்கீல் முத்துராமன், “நீ இந்தக் கொலையைச் செய்தயாப்பா?” என்றார்.

அவர் கேள்வி கேட்ட மாத்திரத்திலேயே, வெள்ளச்சாமியின் கண்களில் கண்ணீர் திரண்டு, எந்நேரமும் குளம் உடைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடலாம் என்பதுபோல் இருந்தது. அவனால் பேச இயலவில்லை, அவனது நாக்கு எழ மறுத்தது. எனவே அவன் தலையை மட்டும் பலமாக இல்லை என்பதுபோல் ஆட்டினான். பின் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நீங்களே என்ன நம்பலைண்ணா எப்பிடி,” என்றான். இல்லை, அவ்வாறு பேச முற்பட்டான் என்பதே சரி. அவன் பேச எத்தனிக்கையில், அவன் வார்த்தைகள் உடைந்து சிதறின. அதற்கு மேல் பேச முடியாமல் அவன் மனமுடைந்து ஓரு சிறு பிள்ளைபோல அழுது விட்டான்.

முத்துராமன், “அழாதப்பா, நான் கேட்டு தெரிஞ்சுகிட வேண்டாமா? சரி, கொலை நடந்தப்பம் நீ எங்க இருந்த,” என்றார்.

எங்கு ஆரம்பிப்பது என்று தெரியாமல் வெள்ளச்சாமி பேசாமல் இருந்தான். மீண்டும் முத்துராமன், “சங்கரலிங்கம் கொலை செய்யப் படுவதை நீ பாத்தயா?” என்றார்.

வெள்ளச்சாமி, ஆம் என்று தலை அசைத்தான்.

“அவனைக் கொலை செய்தது யார்?” என்றார் முத்துராமன்.

தெரியாது என்று தலை அசைத்து உதட்டைப் பிதுக்கினான்.

“கொலையைப் பார்த்தால் ஏன் யார்ண்ணு தெரியாது?” என்றார் முத்துராமன்.

வெள்ளச்சாமி, “இருட்டா இருந்தது,” என்று ஈனஸ்வரத்தில் முனகினான், அதற்குமேல் அவன் வாயிலிருந்து பேச்சு வர மறுத்தது.

முத்துராமன், “கொலை செய்தவனைப் பத்தி ஏதாவது தெரியுமா?” என்றார்.

“தெரியாது,” என்றான் வெள்ளச்சாமி.

“அன்னைக்கு என்ன நடந்தது,” என்று முத்துராமன் கேட்டார்.

வெள்ளச்சாமி ஆரம்பித்தான், “சார் நான் செஞ்சது தப்புத்தான். அன்னைக்கு சங்கரலிங்கம் என்னை அந்த விரால்ராசு பெண்டாட்டி பொன்னுத்தாயப் போயி கூட்டிட்டு வான்னான். நான் அவ வீட்டுக்குப் போனேன். அவ, என்ன கேவலமா வஞ்சு அனுப்பிட்டா. நான் அவ காம்பவுண்டுக் கதவ திறக்கயில எவனோ என்ன மண்டையில பெலமா அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான். நான் குப்புற விழுந்து கிடந்தேன். ஒரு நிமிசம்தான் இருக்கும் நான் கீழ கெடந்தது. ஒடனே எழுந்திருச்சேன். அருவா எங்கையில இல்ல. எனக்கு உள்ள கிலி பிடிச்சிருச்சு. நம்மள மண்டையில அடிச்சுப் போட்டுட்டு அருவாளை எடுத்துக்கிட்டு எவனோ போயிட்டான். எனக்கு ஏன் எதுக்குன்னு புரியதுக்கு முன்னாலேயே நான் சங்கரலிங்கம் இருந்த தொழுவப் பாத்து ஓட ஆரம்பிச்சேன். குறுக்கு வழியில வீட்டுக் கோடி வழியா ஓடுனேன். தொழுவுக் கதவத் தொறந்து சங்கரலிங்கம் இருந்த ரூமப் பாத்துப் ஓடிக்கிட்டே இருக்கேன். ஒருத்தன் இன்னொருத்தனோட தலைய அப்பந்தான் வெட்டிக்கிட்டு இருக்கான். யார் யார வெட்டுராம்மின்னு தெரியல. ஒரே இருட்டுக் கசம். நான் ஓடுன வேகத்தில வெட்டிக்கிட்டு இருந்தவன் முன்னேயே போய் நிண்ணிருப்பேன். கஸ்ட்டப் பட்டு நாலடி முன்னால் நிண்ணுட்டேன். வெட்டுப் பட்டவன் தலை துண்டாத் தெரிச்சு, என் வயித்தில வந்து மோதுச்சு. என்னக் கண்ட ஒடனே வெட்டுனவன் அருவாளை ஓங்கிக்கிட்டு என்னப் பாத்து வந்தான்.

“ஆத்தாடி நம்மள போட்டுத் தள்ளத்தான வாராமின்னுதப்பிக்க வழியப் பாத்தேன். அந்த தொழு எனக்கு அத்துப்படி. அந்த ரூம் வாசல் எங்க இருக்குன்னு இருட்டிலயும் நல்லாவே தெரியும். ஓடி ரூமுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டேன். ரூமுக்குள்ள இருட்டு கசம். ஒண்ணுமே தெரியல. அவன் உள்ள வரத் தயங்கினான். சரி போயிருவான்னு நினைக்கையில, கூர எரிய ஆரம்பிச்சிட்டுது. இனி இங்க இருந்தா வெந்து செத்துப் போவோமின்னு நெனைச்சு வெளிய வந்தேன். ஒருத்தன் தொழுவ விட்டு ஓடிக்கிட்டு இருந்தான். நான் அவன் பின்னால போகணுமின்னி ஓடினேன். ஒருபக்கம் கூரையில தீ எரிஞ்சாலும் கீழ கெடக்கிறது தெரியல. ஓடுர வேகத்தில கீழ கிடந்த ஏதோ ஒண்ணு தட்டி விழுந்திட்டேன். தொட்டுப் பாக்கேன், நான் தலையில்லா முண்டத்து மேல கேடக்கேன். நான் எந்திருச்சு போகமின்ன அவன் எங்கேயோ போயிட்டான்.

“என் உடம்பெல்லாம் ரத்தம். இனி வேற எங்கேயும் போனா பிடிச்சுக்கிடுவானுகன்னு என் வீட்டுக்கு ஓடுனேன். வீட்டுல போய், துணிய மாத்திக்கிட்டு, என் வீட்டுக்காரிகிட்ட இருந்த துட்ட வாங்கிகிட்டு, எங்க ஊருக்குத் தெக்கு ஊர் சுண்டங்குறிச்சிக்குப் போய், அர்த்த ராத்திரியில எங்க மாமா வீட்டுக் கதவைத் தட்டுனேன். செய்தியக் கேட்டுப்புட்டு எங்க மாமா இங்க தங்கினா தேடி வந்துருவான், அதிகாலையில கீளப்பாரைக்கு ஓடிப் போயிருண்ணு சொன்னாக. அடுத்தநாள் கோழி கூப்பிட தேவர்குளம் போய், அங்க இருந்து பஸ்ச பிடிச்சு எங்க சொந்தக்காரங்க கீளப்பாரையில் இருக்காங்க, அங்க போய் இருந்தேன். அதுக்குப் பிறகு நடந்ததுதான் ஒங்களுக்குத் தெரியுமே,” என்று முடித்தான் வெள்ளச்சாமி. சொல்லி முடித்தவனுக்கு ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான், அன்று நடந்தவற்றை தன் மனைவியைத் தவிர இதுதான் முதல் முறையாக இன்னொருவருடன் பகிர்ந்துகொள்கிறான் என்று.

வெள்ளச்சாமி சொன்னவற்றைக் கேட்ட முத்துராமன், சற்று யோசித்துவிட்டு, “சரி நீ விரால்ராசு வீட்டுக்குப் போனபோது, ஒன்ன யாரோ மண்டையில அடுச்சுப் போட்டுட்டு போய்ட்டான்னு சொல்ற. அந்த காயத்துக்கு டாக்ட்டர்ட்ட இருந்து குறிப்பு வாங்கி வச்சிருக்கையா?” என்றார்.

இல்லை என்று தலை அசைத்தான் வெள்ளச்சாமி. பின் ஞாபகம் வந்தவனாய், “மண்டையில தழும்பு இருக்கு சார்,” என்றான்.

“மண்டையில தழும்பு எல்லாருக்கும் இருக்கும். அத வச்சு அடி எப்பம் ஏற்பட்டதுன்னு நிருபிக்கமுடியாதே,” என்றார் முத்துராமன்.

வெள்ளச்சாமி, “நான் பயந்துபோய் ஒளிஞ்சுக்கிட்டேன் சார்,” என்றான்.

“கொலை செய்ய பயன் படுத்தப் பட்ட ஆயுதம் உன்னுடைய அருவாள்ன்னு நிரூபணம் ஆகியிருக்கு, தெரியுமா?” என்றார் முத்துராமன்.

“ஆமா சார், என்ன யார் அடிச்சுப் போட்டாங்களோ அவங்க என் அருவாள எடுத்துகிட்டு போயிருக்கணும்,” என்றான்.

“உண்மைதாம்ப்பா. ஆனா ஒனக்கு மண்டையில அடிபட்டதுக்கும் நம்மகிட்ட டாக்டர் குறிப்பு இல்ல. அப்பிடி இருக்க, ஒன்ன ஒருத்தன் அடிச்சுப் போட்டுட்டு ஒன்னோட அருவாள எடுத்துக் கொண்டுபோய் அவனைக் கொலை செய்திட்டான்னு சொன்னா நம்பணுமே,” என்றார் முத்துராமன்.

வெள்ளச்சாமி பரிதாபமாக, “நீங்க நம்புறீகளா சார்?” என்றான்.

முத்துராமன், “நான் உன்ன நம்புறேன்ப்பா. ஆனா அது போதாதுப்பா. நீதிபதி நம்பணும். இல்லண்ணா தண்டனதான் கெடைக்கும்,” என்றார்.

வெள்ளச்சாமி பரிதாபமாக விளித்தான்.

அவ்வாறு விளித்த வெள்ளச்சாமி, சில வினாடிகளில், முத்துராமனைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே, “நீங்க நம்புறீகல்ல சார், எனக்கு அது போதும் சார். நீங்க ஒரு ஆள் என்ன நம்பினாப் போதும் சார்,” என்றான்.

முத்துராமன், “நான் நம்புனா அது போதாதுப்பா. நீதிபதி நம்பணும். இல்லன்னா ஒரு நன்மையும் இல்லப்பா. ஒனக்குத் தண்டனை கிடைக்கும்ப்பா” என்றார்.

முத்துராமன் மீண்டும், “சரி நீ சங்கரலிங்கத்திட்ட எவ்வளவு நாளா வேல செய்த?” என்றார்.

“பல வருசமா வேலை செய்றேன் சார்.”

“அவங்கிட்ட கடன் ஏதும் வாங்கினயா?”

“ஆமா சார்.”

“எவ்வளவு?”

“வாங்கினது மூவாயிரம், ஆனால் வட்டியச் சேத்து நான் கெட்டவேண்டிய பாக்கி அஞ்சாயிரம் இருக்கும் சார்,” என்றான் வெள்ளச்சாமி.

“நீ வாங்கின கடனுக்கு அத்தாட்சி இருக்கா?”

“இல்ல சார், கொஞ்சம் கொஞ்சமா வாங்கின கடன் சார். என் வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்ல அவள வைத்தியர்கிட்ட கூட்டிட்டு போக வாங்கின கடன் சார்,” என்றான் வெள்ளச்சாமி.

“எப்போ, எதுக்கு வாங்கின கடனுங்கிறது முக்கியமில்ல. கடன் வாங்கினதுக்கு பத்திரம் எழுதிக் குடுத்திருக்கையா, அல்லது தங்கநகைய அடகா குடுத்திருக்கையா, அப்பிடிங்கிறதுதான் முக்கியம். நீ சொல்றதைப் பாத்தா நீ வாங்கின கடனுக்கு ஒரு சாட்சியும் இல்லங்கிற,” என்றார் முத்துராமன்.

வெள்ளச்சாமி அமைதியாய் இருந்தான்.

முத்துராமன், “நான் இன்னும் கேள்வி கேக்கவேண்டியதிருக்கு பரவாயில்லையா?” என்றார்.

வெள்ளச்சாமி சரி என்று தலை அசைத்தான்.

“போலீஸ் அடிச்சாங்களா?” என்றார் முத்துராமன்.

அந்தக் கேள்வியைக் கேட்ட உடனே வெள்ளச்சாமிக்கு மீண்டும் அழுகை வந்துவிடும்போல் இருந்தது, கடுமையாகப் பிரயசப் பட்டு அழுகையை அடக்கிக்கொண்டான். ஆமா என்று அவன் தலை அசைத்த விதத்திலிருந்தே அவன் பயங்கரமான அடி வாங்கியிருக்க வேண்டும் என அறிந்துகொண்டார் முத்துராமன்.

முத்துராமன், “சரி என்ன செய்ய. உங்கிட்ட வாக்குமூலம் வாங்கினாங்களா?” என்றார் முத்துராமன்.

ஆமா என்று தலை அசைத்தான்.

“என்ன வாக்குமூலம் கொடுத்த,” என்றார் முத்துராமன்.

“எஸ்.ஐ. சொன்னத எழுதி, கையெழுத்துப் போட்டேன்.”

“என்ன எழுதின.”

“நாந்தான் கொலை செய்தேன். சங்கரலிங்கம் கடனைத் திருப்பிக் கேட்டுத் தொல்லை குடுத்தான். நான் வாங்கின கடனை இல்லைண்ணு ஆக்குறதுக்காக கொலை பண்ணினேன், அப்பிடின்னு,” என்றான் வெள்ளச்சாமி.

முத்துராமன், “அந்த விசயத்தில அவங்க சொல்றதை முழுவதும் நம்ப மாட்டாங்க. ஆனால் மத்த ஆதாரங்கள் எல்லாம் அவங்க சொல்லுவதற்கு சாட்சியாய் அமைஞ்சதுன்னா அதையும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கு,” என்றார்.

வெள்ளச்சாமி அமைதியாய் இருந்தான்.

முத்துராமன், “சரி இன்னைக்குப் போதும்ன்னு நெனைக்கிறேன். வேற எதாவது சொல்லனுமாப்பா,” என்றார்.

“ஒண்ணும் இல்ல சார்.”

“சரி நாலு நாள் கழிச்சு திரும்ப வாரேன். ஒன் வீட்டம்மாவுக்கு கடிதம் நேற்றே போட்டுட்டேன். இன்னும் நாலு நாளுக்குள்ள வரச்சொல்லியிருக்கேன். அவங்க வந்த உடனே இங்க கூட்டிக்கொண்டு வரட்டுமா? அவங்ககிட்டயும் பேசி முடிவு எடுப்போம், சரிதானா?” என்றார் அரசாங்கம் வெள்ளச்சாமிக்கு நியமித்த வக்கீல் முத்துராமன்.

வெள்ளச்சாமிக்கு மனைவியைப் பற்றிப் பேச்சு வந்தவுடன் முத்துமுத்தாய்க் கண்ணீர் வடிந்தது. அழுகையினூடே, “சரி சார்,” என்றான்.

வக்கீல் முத்துராமன் நடந்து வெளியேறினார்.




 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top