JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 16

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

If it were done, when 'tis done, then 'twere well

It were done quickly. If th' assassination
Could trammel up the consequence, and catch
With his surcease, success: that but this blow
Might be the be-all and the end-all—here,
But here, upon this bank and shoal of time,
We'd jump the life to come.


- William Shakespeare

Shakespeare used this idiom in Macbeth (1:6), where Macbeth muses that “this blow might be the be-all and the end-all” for his replacing Duncan as king.



அத்தியாயம் 16

கடத்தப்பட்ட நாளும், அதற்கு மறுநாளும் அக்குடிலில் சில நிமிடங்களே இருந்த வருண், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு முறையும் நிமிடங்கள் மணி நேரங்களாகி, பிறகு இரவு முழுமையும் என்று உயர்ந்திருந்ததில், ஏனோ ஒருவித நிம்மதியில் துர்கா இருந்தாள் என்றே சொல்லலாம்.

கடத்தப்பட்டிருக்கின்றோம் தான்.. எப்படியும் தன் மாமன் தன்னைக் காப்பாற்றிவிடுவான்..

வருண் சொல்லிச் சென்றது போல் அவளது தலைக்கு மேல் எந்தக் கத்தியும் தொங்கவில்லை தான்.

ஆயினும் கடந்த சில நாட்களாக அவளின் அடி மனதில் இனம் புரியாத ஒரு சந்தேகமும் திகிலும் உழன்று கொண்டிருந்தது.

அது அவளுக்குப் பாதுகாப்பாக வருண் அமர்த்தியிருந்த அவனது அடியாட்கள் சிலரின் நடவடிக்கைகளினால் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன் வரை ஜாஃபரைத் தவிர வருணின் கடுமையான கட்டளைப்படி வேறு எவருமே அவள் இருக்கும் குடிலிற்குள் நுழைந்ததில்லை. ஆனால் தற்பொழுதைய சூழ்நிலையில் சிறு மாற்றம் தெரியத் துவங்கியது.

ஜாஃபருக்கு முடியாத வேளைகளில் அடியாட்களில் சிலர் அக்குடிலிற்குள் நுழைய ஆரம்பித்திருந்தனர், ஆனாலும் அதுவும் ஜாஃபரின் கட்டளைக்கு உட்பட்டு தான்.

அவளை அவர்கள் நெருங்க முயற்சிக்கவில்லை.. அவர்களின் உருவங்களைக் கண்டும் அவள் அஞ்சவில்லை. ஆனால் அவர்களில் ஓரிருவரின் பார்வையில் தெரிந்த வித்தியாசங்கள் அவளுக்குள் ஒரு நெருடலை விளைவித்திருந்தது.

சில சமயங்களில் குடிலிற்குள் அவர்கள் அடி எடுத்து வைக்காவிடினும், ஒவ்வொரு முறை அவள் குடிலைவிட்டு வெளியே வரும் போது அவர்களின் கண்களில் தோன்றும் கூர்மையிலும், பளபளப்பிலும் இனம் புரியாத ஒரு பயம் பேதையவளை ஆட்கொண்டுவிடும்.

அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று இனம் பார்க்க இயலாது.

ஏனெனில் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பணி அப்படிப்பட்டது.

வருமானத்திற்கு வேண்டி இருந்தாலும், ஒரு இளம்பெண்ணை ஒருவன் கடத்தி வந்து, இது போன்ற ஒரு காட்டிற்குள் அடைத்து வைத்திருக்கின்றான். அப்பெண்ணைப் பாதுகாப்பதற்காகப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் நல்லவர்களே ஆனாலும் அவர்கள் மேல் முழு நம்பிக்கை வைக்க இயலுமா?

அதுவும் அல்லாது ஷிவ நந்தனைப் பழிவாங்குவதற்காக அவளைத் திருமண மண்டபத்தில் இருந்து தூக்கி வரத் திட்டமிட்ட வருண், அவளை அடைத்து வைக்க எண்ணியது ஒரு சில நாட்களே.

ஆனால் இப்பொழுது மாதங்கள் கடந்தும் அவளை விடாது அவன் வைத்திருப்பதும், அவளுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டி அவர்களும் உலகத் தொடர்பே இல்லாதது போல் இந்தக் காட்டுக்குள் அடைப்பட்டுக் கிடப்பதும், அவள் மீது ஒரு வெறுப்பை உருவாக்கி இருக்கவும் வாய்ப்பிருக்கின்றதே.

ஆயினும் இதனைப் பற்றி அவள் ஜாஃபரிடமோ, வருணிடமோ சொல்லாது விட்டது அவளது கெட்ட நேரமே அன்றி வேறென்ன?

எந்நேரமும் ஒரு வித அச்சத்துடனே இருக்க, கடந்த ஒரு மாதமாக, இரவில் தான் என்றாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வரும் வருண் இச்சூழ்நிலையில் அவளுக்கு ஒரு வித நிம்மதியை அளித்திருந்தான் என்றால், அவளே வியப்புறும் ஒரு உணர்வு அது.

அதுவும் அல்லாது அவளின் பாதுகாப்பு பற்றி ஜாஃபரிடம் வருண் வலியுறுத்துவதைச் சில நேரங்களில் கேட்க நேர்ந்ததில்,

'என்ன தான் நாம சொல்றதை இவனுங்க மீற மாட்டானுங்க என்றாலும், இவங்க மீது ஒரு கண் எப்பவும் வச்சிக்க ஜாஃபர். எந்த மனுசனும் கெட்டவனா மாறுவதற்குச் சம்பவங்களும் சமயங்களும் தான் காரணம். நான் ஆரம்பத்தில் போட்ட திட்டம் இது இல்லை. அதனால் இப்போ இவர்களுடைய எண்ணங்களில் மாற்றம் வரவும் வாய்ப்பு இருக்கு. ஆனால் இப்போ இருக்கிற சூழ்நிலையில் துர்காவை என்னால் வேற எங்கேயும் shift [இடமாற்றம்] பண்ணவும் முடியாது. ஸோ, துர்காவுடைய பாதுகாப்பு உன் கையில் தான்.' என்று கூறியிருந்ததில், அவளையும் அறியாது வருணின் வருகையை அவள் எதிர்பார்த்திருந்தாள் என்றே கூறலாம்.

அப்படியான சூழலில் வருண் எதிர்பார்த்திருந்தது போல் ஒரு நாளும் வந்தது.


******************************************


"சார், நீங்க சொல்றது எனக்குப் புரியுது. இதனால் எனக்கு என்ன லாபமுன்னும் எனக்குத் தெரியுது. ஆனால் நான் வருண் தேஸாய் சாருக்கிட்ட கிட்டத்தட்ட நாலு வருஷமா வேலைப் பார்க்கிறேன். அவருடைய நம்பிக்கைக்குரிய அடியாட்களில் நானும் ஒருத்தன். என்கிட்ட போய் இப்படிக் கேட்டீங்கன்னா நான் என்ன செய்யறது? அது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்."

"பரவாயில்லையே! செய்யறது கடத்தப்பட்டிருக்கும் ஒரு பொண்ணைப் பாதுகாக்கிற அடியாள் வேலை.. இதுல நியாயம் அநியாயம் எல்லாம் பார்க்கிற?"

தன்னிடம் கேள்விக் கேட்பவன் மட்டும் என்ன யோக்கியனா என்று தோன்றினாலும், கேட்பவன் சாமானியல்லனே என்ற யோசனையில் அமைதியாகிவிட்டான், வருணின் நம்பிக்கைப் பாத்திரமான அவனது அடியாள் சசிதரன்.

"ம்ம்ம், சரி, சொல்லு. நீ இப்போ இருக்கிற சூழ்நிலையில் உனக்கு எது தேவையோ அதைச் செய்யறதுக்கு நாங்க முன் வந்திருக்கோம். ஆனால் நீ வேண்டாமுன்னு சொல்ற. இதையும் விட வேற என்ன கொடுத்தால் நீ இதுக்கு ஒத்துக்குவ?"

தன் எதிரில் இருக்கைகளில் ஒய்யாரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சகோதரர்களைப் பார்க்கும் பொழுது, அடியாளாக வேலை செய்து கொண்டிருக்கும் அம்மனிதனிற்கும் கிலி கூடத்தான் செய்தது.

வருண் போன்ற தொழிலதிபர்கள் இந்தத் தேசத்தை, நம் அரசியலை, அரசாங்கத்தை மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றால், இவர்கள் இருவரின் அராஜகங்களுக்கும் அதிகாரத்திற்கும் அஞ்சி ஆடிக் கொண்டிருக்கும் பெரிய தலைகள் இந்நாட்டில் எண்ணிக்கையில் அடங்கா.

ஒரு பக்கம் தொழிலதிபர்கள், மறுபக்கம் இவர்களைப் போன்ற இருள் உலக மனிதர்கள்.

இவர்களுக்கு அடுத்து எப்பொழுது தவறு இழைப்பார்கள், இவர்களைப் போன்றோரைப் பிடித்து உள்ளே தள்ளலாம் அல்லது என்கௌன்டரில் கொன்று போடலாம் என்பது போல் கழுகாய்க் காத்திருக்கும் ஷிவ நந்தனைப் போன்ற அதிரடியான காவல் அதிகாரிகள்.

ஆக, என்னைப் போன்ற சாமான்ய மனிதர்களுக்கு என்ன தான் வழி?

தன் வாழ்க்கையை நினைத்து கலங்கிக் கொண்டிருந்த சசிதரனிற்கு, தற்பொழுது இந்தச் சகோதரர்கள் கொடுக்கும் பணம் அவன் ஆயுள் முழுமைக்கும் உட்கார்ந்து சாப்பிடுவதற்குப் போதுமானது.

ஆயினும் தனது எஜமானுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய அவன் மனம் விழையவில்லை.

காரணம் சசிதரனின் தந்தை, வருணின் தந்தை சஞ்சீவ் தேஸாயிடம் பல வருடங்கள் வேலைப் பார்த்தவர். அவரின் பொருட்டே சசிதரனை தன் அடியாட்களில் ஒருவனாய் சேர்த்துக் கொண்டான் வருண்.

அதுவும் அல்லாது, சசிதரனின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று வருணுக்கு வந்த தகவலின் பெயரில், கடந்த சில நாட்களுக்கு முன்னர்க் கட்சிரோலிக் கானகத்தின் குடில்களுக்குச் சென்றிருந்த தருணத்தில் திரும்பி வரும் பொழுது தன்னுடன் சசிதரனையும் அழைத்து வந்திருந்தான் வருண்.

பிறகு அவனை மும்பையிலேயே விட்டுச் செல்லலாம் என்ற எண்ணமும் வருணுக்கு வந்தது தான்.

ஆயினும் துர்காவின் இருப்பிடம் தெரிந்தவர்களை நகரத்தில் உலாவவிடுவது நல்லதல்ல என்ற திட்டத்தில் அடுத்த முறைக் கானகத்திற்குச் செல்லும் பொழுது சசிதரனையும் தன்னுடன் அழைத்துச் சென்ற வருண் மறுபடியும் துர்காவைப் பாதுகாக்கும் பணியில் விட்டுவிட்டான்.

ஆனால் இடைப்பட்ட நாட்களில் நடந்த சம்பவங்களே இவை!

ஆக, வருணின் ஆஸ்தான பணியாளான இவனைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க இயலாது.

அப்படி என்றால் இவனை எவ்வாறு தன் பக்கம் இழுப்பது என்று யோசித்தவர்கள் அடுத்துத் தேர்ந்தெடுத்தது ஒரு கீழ்த்தரமான திட்டம்.

அதனில் வேறு வழியின்றிப் பணிந்து போனான் சசிதரன்.

"இங்கப்பாரு சசி. உன்னை அடித்துத் துன்புறுத்தி வருண் தேஸாய் எங்க துர்காவை அடைச்சு வச்சிருக்கான்னு உண்மையை வரவழைக்க எங்களால் முடியும். ஆனால் எங்களுக்கு அது வேண்டாம். ஏன்னா உன்னை நாங்க அடிச்சி, அந்தக் காயங்களை வருண் பார்த்தான்னா, சொல்லவே வேண்டாம். அவனது ருத்ர தாண்டவத்துக்கு நாங்க ரெண்டு பேருமே பழியாகிடுவோம். ஸோ, நாங்க சொல்ற மாதிரி மட்டும் நீ செய்துட்டீன்னா போதும், உன் மனைவியையும் குழந்தையையும் எந்த ஆபத்தும் இல்லாமல், அவங்க மேல் ஒருத்தனுடைய கை விரல் கூடப் படாமல் உன் கிட்டேயே ஒப்படைச்சிடுறோம்.."

“சார்.. வேண்டாம் சார். என் மனைவியும் குழந்தையும் பாவம் சார். அவங்களுக்கு ஒன்னுமே தெரியாது. எல்லாமே அவங்களுக்கு நான் தான் சார்."

“அப்படின்னா நாங்க சொல்றதை கேட்கிறதை தவிர உனக்கு வேற வழியே இல்லை.”

நிமிடங்கள் நேரம் தீவிரமாய் யோசித்த சசிதரனுக்கு உண்மையில் தான் பலமாய் இவர்களிடம் சிக்குண்டு இருக்கின்றோம் என்றே அக்கணம் தோன்றியது. பெருந்துயரத்துடன் நெடுமூச்சுவிட்டவன் வழியற்றவனாய் அந்தப் பாதகர்களின் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டவனுக்கு அவர்களின் சதியைக் கேட்டதும் நெஞ்சே அடைப்பட்டது போல் இருந்தது.

"சா.. சார், இதுல நான் மா.. மாட்டிக்கிட்டால்?

"மாட்டாமல் தப்பிக்கிறது உன் திறமை சசி.”

“ஒரு வேளை என்னால் தப்பிக்க முடியலைன்னா..”

“அப்படியும் மாட்டிக்கிட்டால் உன்னை இப்படிச் செய்யச் சொன்னது மினிஸ்டர் ஆர்ய விக்னேஷ் தான்னு நீ அடிச்சு சொல்லிடு. அதாவது வருண் தேஸாய் நம்புற அளவுக்கு."

“ஆர்ய விக்னேஷ் சார் தான் என்னை அப்படிச் செய்யச் சொன்னாருன்னு சொன்னால் வருண் சார் நம்ப மாட்டாரே..”

“நம்புற மாதிரி நீ தான் நடிக்கணும்.”

“சார்.. அப்படியே வருண் சார் அதை நம்பினாலும் என்னை அதற்குப் பிறகு அவர் சும்மா விடப் போறதில்லையே."

"அதுக்குத் தான் சொன்னேன், துர்கா தானாக அங்க இருந்து தப்பிச்சு போன மாதிரியும், வழியில் மிருகங்கள் எதனாலேயோ கடிபட்டு இறந்துப் போற மாதிரியும், அவளுடைய மரணம் இயற்கையா தெரியற மாதிரியும் செட்டப் செய்துட்டு, பிறகு எப்படியாவது திரும்பி வந்து உங்க ஆட்களுடன் சேர்ந்துடு.. ஸோ, வருணுக்கு உன் மேல் சந்தேகம் வராது.”

"சார், அது வந்து.."

"இன்னும் என்ன?"

“துர்காவை அடைச்சு வச்சிருக்கிற இடத்தைச் சுற்றிலும் எலெக்ட்ரிக் பாஸ் ஆகுற மாதிரி மின்சாரி வேலிப் போட்டிருக்காங்க சார். அதனால் துர்கா அங்க இருந்து தப்பிச்சுப் போறாள் அப்படின்னா, கண்டிப்பா அவளுக்கு யாராவது உதவியிருக்கணும்னு அவங்க முடிவு செய்வாங்க, அப்பவும் நான் மாட்டறதுக்கு வழியிருக்கே சார்.."

"என்ன சசி, இதெல்லாம் கூடவா உனக்குச் சொல்லித் தரணும். ஏதோ ஒரு காரணத்துல அன்னைக்கு நைட் அந்த ஃபென்ஸில கரண்ட் பாஸ் ஆகலைன்னு ஒரு சீன் கிரியேட் பண்ணு, அதாவது உன் பேரில சந்தேகம் வராதளவுக்கு."

"சார்.."

மீண்டும் இழுத்தவனைக் கண்டு பொறுமை இழக்கத் துவங்கினான் யாதவ் மிர்சா.

மிர்சா சகோதரர்களில் மூத்தவன். மும்பையில் தலைவிரித்தாடும் போதை மருந்து புழக்கத்தின் மூலகர்த்தா. மிர்சா மாஃபியா கூட்டத்தின் தலைவன், ‘Don’ யாதவ் மிர்சா.

"இதுக்கு மேல உன்கிட்ட பேசறதுக்கு எங்களுக்கு நேரம் இல்லை சசி. நீ இதுக்குச் சம்மதிச்சுத்தான் ஆகணும்."

விடாப்பிடியாய் அவனைச் சம்மதிக்க வைத்தவர்கள் தங்களின் திட்டத்தின் மீதிப்பாகங்களைக் கூற, யாதவ் மிர்சாவின் மீதே பார்வையைப் பதித்திருந்த அவனது தம்பி கலானி மிர்சாவிற்கு ஏனோ இத்திட்டத்தின் பின்விளைவுகளைக் கண்டு சற்று அச்சமாகத் தான் இருந்தது.

ஒரு வழியாக அரைமனத்துடன் சம்மதித்த சசிதரன் வெளியே செல்லவும், தமையனை நோக்கிய கலானி மிர்சா,

"வருண் தேஸாய்கிட்டயாவது ஒரு வித டீஸன்ஸியை எதிர்பார்க்கலாம். ஆனால் அந்த மினிஸ்டர் ஆர்யன் பெரிய பாதகன். எதுக்கு இதுல அவனையும் சேர்க்குறீங்க?" என்றான் குழப்பம் தோய்ந்த முகத்துடன்.

“வருண், ஷிவ நந்தன், ஆர்யன். இவனுங்க மூணு பேராலேயும் நமக்கு எப்பவும் ஆபத்து தான் கலானி..”

“ஆனால் அந்த DGP நீரவ் பிரகாஷ் விஷயத்தில் நீங்களே ஆர்யனுக்கு உதவி செய்ய முன் வந்தீங்களே..”

“ஆமா. ஆனால் அதுக்குக் காரணம் ஆர்யனின் மேல் உள்ள பாசமா என்ன? First and last. Be-all and end-all.”

அண்ணனின் கூற்றிற்கான விளக்கம் கலானிக்கும் புரிந்தது தான்.

மிர்சா சகோதரர்களின் மேல் எப்பொழுதோ குறி வைத்துவிட்ட ஷிவ நந்தன், மும்பைக்கு மாற்றலாகி வரக் காரணமே நீரவ் பிரகாஷ் தானே.

ஆக, ஷிவ நந்தனைக் கைது செய்து சிறையில் அடைப்பது மட்டுமல்ல, நீரவ் பிரகாஷையும் அழித்தால் தான், தங்களை அழிக்கத் திட்டமிட்டிருக்கும் ஷிவ நந்தன் எழ முடியாத அளவிற்கு அவனை அதள பாதாளத்தில் தள்ள முடியும்.

"சரிண்ணா, ஆனால் இந்தத் திட்டம் சரியா வருமான்னு தான் எனக்குச் சந்தேகம்."

"கண்டிப்பா வரும் கலானி. அதாவது அந்த மாடுகளும் சிங்கமும் கதை தான்."

"ம்ஹூம்.. எனக்கு அப்படித் தோணலை."

"புரியுது, நீ என்ன சொல்ல வரன்னுப் புரியுது. அதாவது அந்தக் கதையில் அந்த மாடுங்க ஒண்ணா சுத்திட்டு இருந்தது, அதனால் சிங்கத்தால் அதுங்களைக் கொல்ல முடியலை.. ஆனால் இங்க வருணும் ஆர்யனும் எதிரிகளா இல்லாவிட்டாலும், ஷிவ நந்தன் அவங்களுக்கு எதிரி தானே. அப்படின்னா அவனுங்க ஒவ்வொருத்தனையும் தனித்தனியா அடிச்சிடலாமுன்னு சொல்ற, அப்படித்தானே?"

"ஆமா."

"எத்தனை தடவை நாம முயற்சி செய்து தோற்றுப் போயிருக்கோம். இவங்க யாரையும் நம்மால் அழிக்க முடியாது கலானி. ஒவ்வொருத்தனும் அவனுங்க தொழிலில் ஏகத்துக்கும் சக்தி வாய்ந்தவங்களா இருக்கானுங்க. ஏறக்குறைய நம்முடைய மூணு பக்கங்களும் சூழ்ந்திருக்கும் எதிரிங்க இவனுங்க. இனியும் தாமதிச்சோம்னா இவனுங்களில் எவன் வேணாலும் நம்மளை போட்டுத்தள்ள வாய்ப்பு இருக்கு. அதனால் தான் இந்தத் திட்டத்தை நான் தேர்ந்தெடுத்தேன்."

"சரிண்ணா"

இன்னமும் தெளிவில்லாதவகையில் ஆமோதிக்கும் தம்பியை சமாதானப்படுத்தும் வகையில்,

"கலானி.. இவனுங்களுக்கு இடையில் நாம் இப்போ புகுந்தோம்னா நம்முடைய தொழிலை அடியோட அழிக்கக் கூடத் தயங்கமாட்டானுங்க இந்த மூணு பேரும், குறிப்பா அந்த ஆர்யன். ஆக மறைமுகமா தான் நாம் நம்ம காய்களை நகர்த்த வேண்டியதா இருக்கு. அதாவது ஒரு கல்லில் இரு மாங்காய் மாதிரி, இங்க ஒரே கல்லில் மூணு மாங்காய்களை அடிக்கத் திட்டமிட்டிருக்கேன்.

“இந்த சசிசதரன் தான் அந்தக் கல், ரைட்?”

“ஆமா. நாம் சொல்றபடி சசி இப்ப செய்தே ஆகணும். அவன் அந்தத் துர்காவை வருண் அடைச்சு வச்சிருக்கிற இடத்தில் இருந்து வெளியில் கொண்டு வரணும். வழியில் ஏதோ விபத்து நடந்த மாதிரி சசி அவளைக் கொல்லணும், ஆனால் ஒரு வேளை அவன் வருணின் கையில் சிக்கிக்கிட்டானா, ஆர்யன் தான் அப்படிச் செய்யச் சொன்னான்னு அவன் சொல்லியே ஆகணும். அப்பத்தான் அவனுடைய மனைவியும் குழந்தையும் எந்த வித ஆபத்தும் இல்லாமல் அவன் கைக்குப் போய்ச் சேருவாங்க. புரியுதா?”

“யெஸ், ஆனா ஷிவ நந்தன்?”

“கடைசியில் துர்காவின் மரணச் செய்தி நிச்சயம் ஷிவ நந்தனுக்குப் போய்ச் சேரும். அப்போ வருண் மேலே தீராத ஆத்திரம் ஷிவ நந்தனுக்கு வரும். அதனால் அவனுங்க ரெண்டு பேருக்கும் இடையில் பெரும் போர் வெடிக்கும், கண்டிப்பா அதில் ஒருத்தன் செத்து ஒழிவான்."

“இது நடக்குமுன்னு நம்புறீங்களா?

"ம்ம்ம்.. அதாவது எனக்குத் தெரிஞ்சு ஷிவ நந்தனைப் பழிவாங்க துர்காவைக் கடத்திட்டுப் போனான் வருண். ஆனால் அவன் இன்னமும் அவளை விடுவிக்கலை. அதுக்குக் காரணம் நிச்சயம் அவள் மேல் அவனுக்கு ஒரு ஈடுபாடு வந்திருக்கணும். ஏன்னா பொண்ணுங்க விஷயத்தில் வருண் எவ்வளவு கட்டுக்கோப்பான ஆளுன்னு நமக்குத் தெரியும். எவ்வளவோ முறை மாடல் அழகிகளையும், சினிமா நடிகைகளையும், வெளிநாட்டு பெண்களையும் அவனுக்குச் செட் செய்ய முயற்சி பண்ணினோம். ஆனால் அவனை நம்ம வழிக்குக் கொண்டு வர முடியலையே. அப்படி இருந்த வருண் ஏன் ஒரு பொண்ணைக் கடத்திட்டுப் போய், அதுவும் அவளை மாசக் கணக்கில் அடைச்சு வச்சிருக்கான்? இது ஏற்கனவே ஷிவ நந்தனுக்குப் பெரும் பயத்தை உண்டு பண்ணிருக்கும். இந்தச் சூழ்நிலையில் துர்கா செத்துட்டான்னு தெரிஞ்சா ஷிவ நந்தன் எரிமலையா வெடிச்சுப் போவான். அந்த எரிமலைக் குழம்பில் சிக்கி சிதறப் போவது ஒண்ணு வருணா இருக்கும், அல்லது ஷிவ நந்தனா இருக்கும்.”

“இதுல ஆர்யன் எப்படிச் சிக்குவான்?"

“இதுல ஆர்யன் சிக்கினாலும் சிக்குவான். அல்லது அவன் தப்பிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. பட், துர்காவைக் கொலை செய்யற முயற்சியில் தோற்றுப் போய் சசிதரன் வருண்கிட்ட சிக்கினான்னா, அவளைக் கொலை செய்ய ஆள் அனுப்பியது ஆர்யன் தான்னு சொல்வான். அப்படி நடந்ததுன்னா ஷிவ நந்தன் கையால் சாகப் போறது ஆர்யன் தான். ஒரு வேளை நான் நினைச்சிருக்கிற மாதிரி வருணுக்கு துர்கா மேல ஏதாவது ஒரு ஈடுபாடு இருந்ததுன்னால், கண்டிப்பா வருணுடைய கோபமும் ஆர்யன் மேலேயும் திரும்பும். ஆக இவனுங்களில் ஒருத்தன் அல்லது ரெண்டு பேர் இந்தப் போரில் அழியப் போறது நிச்சயம். மீதம் இருக்கிறவனைப் பிறகு நாம பார்க்கலாம்”

"நீங்க சொல்ல வரது எனக்குப் புரியுது, ஆனால் இந்தத் திட்டம் சரியா வேலை செய்யாமல் போறதுக்கு நிறையச் சான்ஸஸ் இருக்கே. முதலில் சசி நாம சொன்னதைக் கரெக்டா செய்யணும். அதில் துர்கா சாகணும். எனக்குத் தெரிஞ்சவரை அவன் கொஞ்சம் சாமார்த்தியசாலி, அதனால் யார்கிட்டேயும் மாட்டாமல் எப்படியும் அவன் அதில் இருந்து தப்பிச்சிடுவான். ஆனால்.”

முடிக்காது இழுத்த தம்பியின் சந்தேகம் யாதவ் மிர்சாவிற்கும் இல்லாமல் இல்லை.

“ஒரு வேளை சசி மாட்டிக்கிட்டால் வருணிடம் இதற்குக் காரணம் நாம் தான்னு சொல்றதுக்கும் வாய்ப்பிருக்கு. ஏன்னா நம்ம விடப் பல ஆயிரம் மடங்கு சக்தியும் வலிமையும் அந்தஸ்தும் உள்ளவன் வருண். அதே போல் அவன்கிட்ட இருக்கிற பணத்தில் ஒரு தூசி அளவுக்குக் கூட நம்மிடம் இல்லை. நம்மை சசிதரன் மாட்டிவிடற சூழல் வந்ததுன்னா அவனை நான் பார்த்துக்குறேன்.”

“இது எதையுமே செய்யாமல் சசிதரன் நேரா வருணிடம் போய் நம்மைப் பற்றி சொல்லிட்டா?”

“அவனுடைய குடும்பம் நம்மிடம் இருக்கு கலானி.”

“அப்படின்னா அவனுடைய மனைவியையும் குழந்தையையும் போட்டுத்தள்ளுற பொறுப்பை நான் எடுத்துக்குறேன்.”

கூறிய கலானி மிர்சா நாற்காலியில் இருந்து எழுந்தவன் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வாயிலை நோக்கி செல்ல, சற்றே தொண்டையைச் செறுமிய யாதவ் மிர்சா, “கலானி. நீயா எதையும் செஞ்சுடாதே. நான் உத்தரவு கொடுக்கும் வரை பொறுமையா இரு..” என்றதில் கலானி மிர்சாவின் உதடுகளின் கடைக்கோடியில் புன்னகை தோன்றியது. [malicious smile]

போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் தொழில் வட்டாரத்தில் மிர்சா சகோதரர்களின் மீது அளவிட முடியாத ஒரு திகில் இருக்கும்.

அதற்குக் காரணம் யாதவ் மிர்சாவின் கரங்களால் படுகொலை செய்யப்பட்ட மனிதர்களின் பட்டியல் மட்டுமல்ல. சாமர்த்தியமான முறையில் வியூகங்கள் அமைத்து, நூல் தவறாது அனைத்து கொலைகளையும் கனகச்சிதமாய்ச் செய்து வரும் அவனது புத்திசாலித்தனமும் கூட.

அத்துடன் அவனுக்கு உறுதுணையாய் தளபதி போன்று இருக்கும் அவன் தம்பி கலானி மிர்சாவின் பக்கப்பலமும், யாதவ் மிர்சாவை மும்பை மாஃபியா கூட்டங்களிலேயே தலைமையான ‘டான்’ - ஆக உயர்த்தியும் இருந்தது.

அண்ணனைப் போன்று சாமர்த்தியசாலி இல்லாவிடினும் கொடூரத்திற்கும் குரூரமான கொலைகளுக்கும் பெயர் போன கலானி மிர்சாவைக் கண்டால் மும்பை மாநகரத்தின் ஒவ்வொரு வீதியும் நடுங்கும். ஆனால் அவனும் தடுமாறும் சமயங்களும் உண்டு தான்.

அந்நேரங்களில் எல்லாம் அவற்றைச் சரி செய்வது தமையனின் வேலை. அப்படிப்பட்ட கலானி மிர்சாவிற்கே ஏனோ இந்த ஒரு திட்டத்தில் அண்ணனின் மீது நம்பிக்கை வைக்க இயலவில்லை.

இது நிச்சயம் தோற்றுவிடும் திட்டம் போல் தான் தோன்றியது.

ஏனெனில் ஒருவேளை சசிதரன் தங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டால், இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்குப் பதில், அவர்கள் ஒன்றாய் இணைந்து தங்களை அழித்துவிட நிறையச் சாத்தியங்கள் இருக்கின்றன.

அதாவது மாடுகள் ஒன்றாகக்கூடி சிங்கத்தை அழிப்பது போல்.

வக்கிரம் படைத்தவனே ஒழிய அந்தளவிற்கு அறிவுக்கூர்மை இல்லாத கலானி மிர்சாக் கூடத் தடுத்துப் பார்த்தும் யாதவ் மிர்சா கேட்காது விட்டுவிட்டான்.

எவ்வளவு சொல்லியும் செவி கொடுக்காது சசிதரனின் இளம் மனைவியைக் கடத்தி வந்து அடைத்து வைத்து, அவளைப் பகடைக்காயாய் உபயோகப்படுத்தி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தான் யாதவ் மிர்சா.

விதி யாரைவிட்டது?

*****************************

கட்சிரோலி கானகம்.

சசிதரனும் அவனது திட்டப்படி தனது வேலையை இம்மி அளவுக் கூடப் பிசகாது துவங்கினான்.

இரு அடியாட்கள் துர்கா படுத்துறங்கும் குடிலை இரவு முழுவதும் விழித்திருந்து பாதுகாக்க வேண்டும். மற்றவர்கள் ஓய்வு எடுக்கலாம் என்பது அவளைக் கடத்தி வந்த முதல் நாளில் இருந்தே ஜாஃபர் இட்டிருந்த கட்டளை.

அதன் படி முதல் வேலையாக அன்று இரவு காவல் காக்க வேண்டிய இருவரிடமும் சந்தேகத்திற்கு இடமின்றி வழவழாவென்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்த சசிதரன், மற்றவர்கள் அனைவரும் உணவு அருந்திவிட்டு உறங்க ஆரம்பிக்கும் வரை அவர்கள் இருவரையும் உணவருந்த விடவில்லை.

பிறகு ஜாஃபர் உட்பட எல்லோருமே உறக்கத்தில் ஆழ்ந்ததும், தானும் பாதுகாப்பாளர்களாக இருக்க வேண்டிய அந்த இரு அடியாட்களுடன் இணைந்து உணவினை உண்ணத் துவங்கியவன், அவர்கள் இருவரின் உணவினில் அவர்களே அறியாது தூக்க மருந்தைக் கலந்தான்.

முதலில் துர்காவின் உணவிலும் மயக்க மருந்து போன்று எதனையாவது கலப்பது தான் அவன் திட்டம்.

ஆனால் ஏனோ அவளைக் கடத்தி வந்த நாளில் இருந்து அவளுக்கு உணவளிக்கும் வேலையை ஜாஃபர் மட்டுமே செய்திருந்ததால், அவனால் அவளை மயக்கத்தில் ஆழ்த்த முடியவில்லை.

ஆக, பாதுகாவலர்கள் இருவரும் தூக்க மருந்துக் கலந்த உணவினை உண்டு முடித்ததை உறுதிப் படுத்தியவனாய், மற்றவர்களையும் ஒரு முறை சத்தமின்றிச் சோதித்து முடித்த பின் குடில்களைச் சுற்றியும் அமைக்கப்படிருந்த வேலியில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சார இணைப்பை துண்டித்தான்.

நேரம்: வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி

குடிலிற்குள் இரவு உணவை முடித்துவிட்டு தன் அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த துர்காவின் மேல் சசிதரன் கை வைக்க, திடுக்கிட்டு விழித்தாள் பேதையவள்.

அருகில் நிழல் உருவமாய்ச் சசிதரன் நிற்பதைக் கண்டதுமே எது நடந்துவிடுமோ என்று கானகத்திற்குள் அடைத்து வைக்கப்பட்ட நிமிடத்தில் இருந்தே அஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு அது அக்கணம் நடப்பதில் அண்ட சராசரமே நடுங்கியது போல் இருந்தது.

“ஐயோ!”

அவள் கத்தியது அவளுக்கே கேட்காதளவிற்கு அவளது வாயை பொத்தியவன் கொண்டு வந்திருந்த துணியைக் கொண்டு இறுக்க அவளது வாயைக் கட்டினான்.

‘கடவுளே! நான் எதை நினைச்சு இவ்வளவு நாளா பயந்து நடுங்கிட்டு இருந்தேனோ அது நடந்துடும் போல இருக்கே.’

மனம் பதைபதைக்க, அரண்டுப் போனவளாக அவனிடம் போராடத் துவங்கினாள்.

அவளது போராட்டத்தை விநாடிகளில் சமாளித்தவன் அவளது கைகள் மற்றும் கால்கள் இரண்டினையும் கயிறைக் கொண்டு கட்டியவனாக அவளை வெகு இலகுவாகத் தூக்கி தோளில் போட்டவன் குழந்தையை ஏந்துவதைப் போல் ஏந்தியவாறே வெளியில் வர, அங்கு அன்றைய இரவில் தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் அடியாட்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதில் துர்காவிற்குப் புரிந்து போனது.

ஆக, இவன் ஏதோ திட்டமிட்டு தான் இவ்வாறு செய்கின்றான் என்று உணர்ந்த வேளையில் உச்சி முதல் பாதங்கள் வரை பெரும் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

தன்னால் இயன்றவரை துடித்துப் போராடியவள் அவன் தோளில் இருந்து கீழே இறங்க முயற்சிக்க, அவளைக் கெட்டியாகப் பிடித்தவாறே வெகு அமைதியாய் ஓசையின்றிக் குடிலைவிட்டு வெளியேறிய சசிதரன் சிறிது தொலைவு சென்றதுமே ஓட்டமும் நடையுமாக நடந்தவன் காட்டிற்குள் சென்று கலந்தான்.

சுற்றிலும் அடர்ந்த இருட்டு.

பார்ப்பவர்களின் நெஞ்சத்தை அடியோடு அமுக்கி மூச்சுத் திணற வைக்கும் அந்தகாரமான சூழல்.

சில்வண்டுகள் இரைய ஆரம்பித்திருக்க, மரங்கள் அனைத்தும் கொடிகளைப் போல் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருந்ததில் அவற்றின் தோற்றம் அச்சூழலை இன்னும் கனக்க செய்து கொண்டிருந்தது.

சுற்றிலும் கேட்கும் புதுவிதமான ஓசைகளும் காற்றில் எதிரொலிக்க, நரம்புகளைக் கூட உறையச் செய்யும் இடமாகத் தோன்றிய அக்கானகத்திற்குள் அவளைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தான் சசிதரன்.

அவனது வலியத் தோளில் கிடத்தப்பட்டிருந்த துர்காவின் மூளை எப்படியும் அவனிடம் இருந்து தப்பித்துவிடு என்று மட்டும் கூறிக் கொண்டே இருந்தது, இருப்பினும் என்ன பயன்?

இம்மாதிரியான அசம்பாவிதம் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்பட நேரிடலாம்.

அப்படியான சந்தர்ப்பங்களில் பசிக்கொண்டு மயங்கிவிட்டால் தனது பெண்மையைக் காப்பாற்ற முடியாது போய்விடும் என்ற ஒரே நோக்கில் தான், இத்தனை நாட்கள் அவள் மறுக்காது ஜாஃபர் கொடுத்த உண்டிகளை உண்டிருந்தாள்.

இவ்வளவு மெனக்கெட்டும், ஒவ்வொரு நொடியும் வெகு எச்சரிக்கையுடன் இருந்தும், நான் அஞ்சியது நடந்துவிட்டதே! என்னால் இவனை எதிர்த்து விடுதலையடைய முடியவில்லையே என்ற ஆதங்கம் பெண்ணவளின் உள்ளத்தில் பீறிடத் துவங்கியது.

சுற்றும் முற்றும் விழிகளால் அலசியவளுக்கு ஆங்காங்கு குன்றுகள் போன்று உயர்ந்து நிற்கும் புதர்களில் பட்டு சிதறியக் காற்றினில் கூட ஆபத்துக் கலந்திருப்பதைப் புத்தி உணர்ந்ததில், இருட்டு அறையில் தனக்குப் பின்னால் கதவு மூடப்பட்டதைப் போன்றும், உள்ளே சுவாசிப்பதற்கான பிராண வாயுக் கூட இல்லாது மூச்சடைப்பது போன்றும் தோன்றியது.

‘கடவுளே! நீ தான் என்னை எப்படியாவது இவன்கிட்ட இருந்து காப்பாத்தணும்.’

மனம் பிரார்த்தனை செய்ய, அவளையும் அறியாது அவளது இதயத்தில் அக்கணம் தோன்றியது வருணின் முகம்.

எங்காவது கடத்தியவன் காப்பாற்றுவானா? ஆனால் பெண்ணவளின் மனம் அவ்வாறு நினைக்க மறுத்து அடம்பிடித்தது.

கத்துவதற்கும் வழியில்லை, காப்பாற்றவும் ஒரு ஜீவன் கூட இல்லை..

எப்படித் தப்பிப்பது என்று கலங்கியவளாக அப்பொழுதும் கட்டப்பட்டிருக்கும் கால்களை வேகமாய் உதறியவாறே முரண்டு பிடித்துக் கொண்டே வர, அவளது நல்ல நேரம் சசிதரன் அவளது கால்கள் இரண்டினையும் சேர்த்து கட்டிய கயிறு இலகுவாக ஆரம்பித்தது.

அதனை உணர்ந்தவளுக்கு எங்கிருந்தோ பெரும் தெம்பு வர, இன்னும் தனது போராட்டத்தை வலுப்படுத்தியதில் கால் கட்டுகள் அவிழ்ந்து விழ, அதே நேரத்தில் அவனது இறுக்கிய பிடியும் நழுவியது.

அவனது தோளில் இருந்து வழுக்கி இறங்கியவள் அவன் சுதாரிக்கும் முன் அவனது மார்பைப் பிடித்துத் தள்ளியவளாய் அவன் தடுமாறும் நேரம் அது தான் சமயம் என்று ஓட்டம் பிடித்தாள்.

கீழே விழாது தன்னைச் சடுதியில் நிலைநிறுத்திக் கொண்டவன் அவளைத் துரத்த, கண்கள் இரண்டையும் கருப்புத் துணி கொண்டு கட்டியது போன்று இருட்டாக இருந்தாலும் அசட்டை செய்தவளாக அடித்துப் பிடித்து ஓடியவள் நிமிடங்களில் அவனது பார்வையில் இருந்து மறைந்தாள்.

இதுவே பகல் நேரமாக இருந்திருந்தால் அவளால் அவனிடம் இருந்து தப்பித்து இருக்க முடியாது.

ஆனால் அவனுமே அந்த இருட்டிற்குள் தடுமாறித்தான் அவளைத் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான்.

ஆனால் தன் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற ஓடும் பெண்ணின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை அவனால்.

எதிரில் வழிமறித்த செடிகளையும் புதர்களையும் மோதினாலும் கீழே விழாது தன்னைத் திடப்படுத்திக் கொண்டவள், கால்களில் ஊசியாய் குத்தும் முட்களையும் கண்டுக்கொள்ளாது அசுர வேகத்தில் ஓடியதில் அவனிடம் இருந்து நிமிடங்களில் விடுதலை அடைந்தாள்.

அதனில் பெருநிம்மதி தோன்றியது.

ஆயினும் அந்த நிம்மதி நிமிட நேரம் கூட நிலைக்கவில்லை.

‘அவன் எங்க இருக்கான்? இங்கு எனக்குப் பக்கத்துல கூட நிற்பதற்கு வாய்ப்பிருக்கு, இருட்டுல எதுவுமே தெரியலையே. இதுல இந்தக் கைகளும் வாயும் வேற கட்டப்பட்டிருக்கே.’

அப்பொழுதுதான் அவளது அறிவிற்கு எட்டியது, இன்னமும் தான் முழுமையாகக் கட்டுக்களில் இருந்து விடுபடவில்லை என்பது.

கரங்கள் கொண்டு வாயில் கட்டியிருந்த துணியை அகற்றியவள் பற்களால் பரபரவென்று கடித்துக் கைகட்டிற்கும் விடுதலை அளிக்க, சத்தமாக மூச்சுக் கூட விடாது ஓசையின்றி நடந்தவள் ஒரு பெரிய மரத்தை அடைந்தாள்.

கண்களை உறுத்து அந்த மரத்தைப் பார்க்க, துவக்கத்தில் இராட்ஷசி போன்று பல கரங்களையும் விரித்து, தலைமுடியை அவிழ்த்து கொட்டி, படுபயங்கரமாய் நின்று கொண்டிருந்த மரம் அவளைத் திடுக்கிட்டுத் தூக்கிவாரிப் போட செய்தது.

ஆனால் அதனை உற்றுப் பார்த்தவளுக்கு அதன் நடுவில் சிறு கூடு போல் தெரிய, அருகே நெருங்கியதும் அது இயற்கையாகவே ஒரு குகைப் போன்ற அமைப்பில் வளர்ந்திருக்கும் மரம் என்பதைப் புரிந்துக் கொண்டதில் நொடி நேரம் கூடத் தாமதிக்காது அதனுள் சென்று அடைந்தவள் தன்னை மறைத்துக் கொண்டாள்.

நேரம் கடந்தது. ஆயினும் சசிதரன் அவ்வழியில் வரும் வழியைக் காணோம்.

அவன் வேறு ஏதோ ஒரு பாதையில் பயணித்திருக்கக் கூடும் என்ற முடிவிற்கு வந்தவளாகக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்து வெளிவந்தவளுக்கு அக்காடு எண்ண முடியா பீதியைக் கொணர்ந்தது.

எப்படி இங்க இருந்து போவது? எந்தப்பக்கம் போவது?

யோசித்தவள் ஏதோ முடிவெடுத்தவளாக மெள்ள அடியெடுத்து வைத்து நடக்க, அவளது கால்களுக்குக் கூட மூளையிருப்பது போல் அதுவே நகர்ந்தன.

அவளது ஒவ்வொரு அடியும் லேசான ஒலி எழுப்ப, தொலைதூரத்தில் திடுமெனக் கேட்ட ஊளைச் சத்தங்களில் அவளது இதயம் பெருமளவு அதிர்ந்து துடிக்க, செவிகளில் விழுந்த அனைத்து ஓசைகளையும் முறியடிப்பது போல் இருந்தது இதயத்தின் துடிப்புச் சப்தம்.

ஆயினும் ஏதாவது மிருகம் ஒன்று தன்மீது பாய்ந்துவிடுமோ அல்லது மனித ரூபத்தில் அலையும் சசிதரன் தன்மேல் பாய்ந்துவிடுவானோ என்ற அச்சத்தில் நடந்து கொண்டிருக்க, அனைத்துக்கும் உச்சமென, இலை தழைகளின் இடையில் மறைந்த ஆந்தைப் பறவையின் பளபளக்கும் கண்களைக் கண்டதில் மீண்டும் தூக்கிவாரிப்போட்டது.

தன்னையும் மீறி "ஆ"வென அலறியவள் சட்டெனத் தன் கரங்கள் கொண்டு வாயை மூடிக் கொண்டாள்.

'நீயே உன்னைக் காட்டிக் கொடுத்துடுவ துர்கா..’

தனக்குத்தானே எண்ணிக்கொண்டவள் சில மணித்துளிகள் அமைதியாக அவ்விடத்திலேயே நிற்க, ஆயினும் அவளது சத்தம் சசிதரனிற்கு எட்டவில்லையோ என்பது போல் அவன் அங்கு வரவில்லை.

ஆழ இழுத்து பெருமூச்சுவிட்டவள், மேலும் நடக்கத் துவங்க, அடர்ந்த மரங்கள் கடந்து சில இடங்களில் ஓங்கி உயர்ந்து அடர்த்திக் குறைவாய் வளர்ந்திருக்கும் மரங்களுக்கு இடையில் தென்பட்ட விண்மீன்களின் ஒளி, ஆபத்பாந்தவர்களாக அவளுக்கு உதவ முன்வந்தன.

பாதை நெடுக்கக் கிடந்த காய்ந்த குச்சிகளும், முட்செடிகள் உதிர்த்திருக்கும் கூரிய முட்கள் குத்துவதையும் கண்டுகொள்ளாது வேக அடி எடுத்து வைத்தவள் வழியறியாவிட்டாலும் இந்தக் காட்டைவிட்டு வெளியேறினாள் போதும் என்பது போல் நடக்க, சிறிது நேரத்தில் முன்பைவிடப் பாதங்களுக்கு அடியில் அடர்த்தியான கம்பளம் போல் கிடந்த இலைகளின் தோற்றம் அவளின் காலடிச் சுவடுகளை முடக்கியது.

‘ஐயோ! என்னது இது? காட்டைவிட்டு வெளிய போயிடனும்னு நினைச்சால், இந்த இலைகளைப் பார்த்தான் காட்டுக்குள் ஆழமாகப் போயிட்டது போல் தெரியுதே. எந்தப் பக்கம் போறன்னு உனக்கே தெரியலை துர்கா. திரும்பவும் உன்னையே அறியாம அவன் இருக்கிற பாதைக்கே போயிடாத.’

சிந்தனைத் தோன்றியதுமே அந்நிமிடம் வரை இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் அவளை விட்டு ஓடிப் போனது.

அதே நேரம், அந்நள்ளிரவில் கூட உறங்காது தன் அறையின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கணினியில் ஒளிர்ந்த தொழில் சம்பந்தப்பட்ட கணக்குகளில் தீவிரமாய் மூழ்கியிருந்த வருணின் அலைபேசி அலறியது.

எடுத்துப் பார்த்தவன் மறுமுனையில் வந்த தகவலில் அதிர்ந்து வேகமாய் எழுந்ததில், மேஜையில் வைக்கப்பட்டிருந்த காகிதங்கள் கூடச் சிதறி பறந்தன.

"துர்காவைக் காணோமா?"

"ஆமா சார். எல்லாக் குடில்களிலும் தேடிப் பார்த்துட்டோம். எங்க போனான்னு தெரியலை.”

“ஜாஃபர் என்ன இது? எப்படி அவ வெளியப் போயிருக்க முடியும்? ஃபென்ஸில் கரண்ட் வேற பாசா.."

வருணால் அவன் துவங்கிய வாக்கியத்தையே கூட முடிக்க முடியவில்லை.

மின்சார வேலியை நினைத்ததுமே அவனது இதயமே தொண்டை வரை வந்து துடிப்பது போல் பேச்சும் பாதியிலேயே நின்று போனது.

அவன் அன்று கூறிய வார்த்தைகள் இன்று கண் முன் தோன்றியதில் இரும்பு போல் இருந்த அவனது இருதயம் தரையில் தூக்கி வீசப்பட்ட கண்ணாடியாய் நொறுங்கி சிதறியது!

'உன் தலைக்கு மேல் கத்தி தொங்குதுன்னு சொன்ன, அது மாதிரி கத்தி உன் தலைக்கும் மேல் எப்பவும், எங்கேயும் தொங்காது. அப்படியான ஆபத்தான சூழ்நிலை உனக்கு எப்பவும் வர நான் விடமாட்டேன். நான் இந்த உலகத்தில் இருக்கும் வரை..'

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.
 
Last edited:
Omg..!!!
Mirza brothers 😒😒😒
Varun kaiyala than saa….vu ungalukku…
Ellarume Durga vai target panna epdi da… 😖😖😖
Sasidharan… ne ellam scapegoat… Varun kitta solli irukkalam… Senjalum unakku aappu… seiyalanalum unakku aappu…

Hope Varun saved her. Appuram avalai anuppi vaippan nu ninaikkiren
 

Vidhushini

New member
திக்...திக்... நிமிடங்கள்...

துர்கா காப்பாற்றப்பட்ட (?!) பிறகு, ஷிவா (அ) வருண் கோபம் யார்மீது திரும்பும்? யாதவ் மிர்சா திட்டப்படியா? அல்லது விதி வகுக்கும் வியூகமா?

Interesting epi @JB sis.
 

Lucky Chittu

New member
Sasidaran Mirza brothers ku velai poittaan. Ivunga moonu perum onnu sernthiduvaanga Pola. Varun unnai thaan theduraa Durga maamanoda kuda second ah vechutta. Sekiram vandhu avala kaapathu. Waiting for the next epi mam.
 

saru

Member
Wooow sivu Varun meet pannaporanga la ore idathula ore nerathil adum durgava thedi
Deii mirsha pakkingala ungaluku neengale aaapu vachikiteenga
Siv mattum ila neenga senjavelaiku Varun eranga poran
Sasi chepter close nu nenaikuren
Deii sasi Ida nee Varun kita solli visuvasam katrinda un family ah Avan kapathirupan
Ipo motham pochu
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top