JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakkalin Vettai - Episode 22

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை

அத்தியாயம் 22

Be wary around your enemy once, and your friend a thousand times. A double crossing friend knows more about what harms you.

- Arabic Proverb

ஒமலூர், மல்லியக்குறிச்சி கிராமம்.

வெள்ளிக்கிழமை இரவு.

நேற்றைய நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை நடந்த சம்பவங்களையும், குறிப்பாகத் தன்னை எவ்விதக் காரணமும் கூறாது போகச் சொன்ன வருணின் நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாகத் துர்காவின் மனம் அசைப் போட்டுக் கொண்டிருக்க, வீட்டின் வாயிலில், அதீத வேகத்தில், வந்து நின்றது ஷிவ நந்தனின் கார்.

சென்னையில் இருந்து சேலத்தை நோக்கி பயணம் செய்யும் பொழுதே தந்தையை அழைத்துத் துர்காவைப் பற்றி விசாரித்து இருந்தான்.

அவள் பத்திரமாகத் திரும்பி வந்திருக்கின்றாள் என்று அவர் முதலில் கூறியதில் நிம்மதி அடைந்தவனின் கார் வேகம் எடுத்தது, அவள் உடலில் ஆங்காங்கு காயங்கள் இருப்பதாக அவர் சொன்னதைக் கேட்டதில்.

இதனில் அவள் கடத்தப்பட்ட நாளன்று உடுத்தி இருந்த திருமணப் பட்டுப்புடவையை இன்றும் அணிந்திருப்பதாக அவர் கூறியதும், வருண் துர்காவைத் திருப்பி அனுப்பும் பொழுது தன்னிடம் மறைமுகமாக அவன் பகிர நினைத்த விஷயமும் புரிவது போன்று தோன்றியது.

‘உன் அத்தை மகள் அப்படியே தான் இருக்கின்றாள் என்று கூற விழைகின்றானா? அப்படி என்றால் அவளின் உடலில் பட்டிருக்கும் காயங்களின் காரணம்?’

அறிவு விடைகளை ஆராய, ஆயினும் துர்காவை சந்திக்காத வரை எந்த ஒரு முடிவிற்கும் வர முடியாது என்று எண்ணியவன் மல்லியக்குறிச்சியை நோக்கி மின்னலெனக் காரை செலுத்த, சரியாகப் பதினொரு மணி போல் கிராமத்தை அடைந்தது அவனது வாகனம்.

கார் நின்ற நொடியே அசுர வேகத்தில் இறங்கியவன் படீரென்று கதவை சாத்தியவனாய் அதே துரிதத்தில் வீட்டிற்குள் நுழைய, அவனது வேகத்தையும் இறுகிக் கிடந்த முகத் தோற்றத்தையும் கண்ட தேவேந்திரன் எதுவும் பேசாது துர்காவின் அறையை நோக்கி கையை மட்டும் காட்டினார்.

விடுவிடுவென்று நடந்தவனாய் படிகளில் வேகமாய் ஏறி அவளின் அறையை அடைந்தவன், சில கணங்கள் நிதானித்துவிட்டுப் பின் அறைக்கதவைத் தட்டியவனாய் உள்ளே நுழைய, அவனது கல்வெட்டாய் இறுகிய தோரணை சில்லென்று வீசிக் கொண்டிருந்த காற்றின் சிலிர்ப்பையும் மீறி பெண்ணவளுக்கு வியர்க்கச் செய்தது.

"மா.. மா.. மாமா.."

ஷிவாவின் உள்ளமும், தன்னால், தன்னைப் பழிவாங்க தன் எதிரியால் கடத்தப்பட்டிருந்த தன் அத்தை மகளை எவ்வித ஆபத்துமின்றிப் பார்த்ததில் மலரத் தான் செய்தது.

அதே சமயம் திக்கித் திணறி தன்னை அழைப்பவளின் தோற்றமும், தன்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுவாள், அல்லது தப்பி வந்த சந்தோஷத்தை முகத்தில் காட்டுவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு அவள் மூளை ஸ்தம்பித்தது போல் நின்றது சந்தேகத்தைக் கொணர்ந்தது.

ஆனால் அவளின் நிலையோ வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாத அளவிற்குப் பரிதாபமாக இருந்தது.

இவன் எப்பொழுது வந்து தன்னைக் காப்பாற்றிச் செல்வான் என்று இரவு பகல் பாராது காத்திருந்தவளுக்கு இக்கணம் அவனை அருகில் பார்த்ததில், ஏனோ இனம்புரியாத பயமும் கலக்கமும் கலந்த விநோத உணர்ச்சிகள் ஏற்பட்டன.

கர்ஜிக்கும் சிங்கத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் கனவில் கண்டு கண் விழித்ததும் படபடக்குமே அதே போன்ற ஒரு உணர்வு.

ஒரு வேளை அவளையும் அறியாது அவளது இதயம் அவனது எதிரியின் பால் சாய்ந்திருந்ததில் ஏற்பட்ட அச்சமோ?

"எப்படி இருக்கத் துர்கா?"

வினாவுடன் அவளை நெருங்கியவனின் பார்வை காவலதிகாரியின் கண்களுடன் அவளை அளவெடுக்க, அவனின் பார்வையின் வீரியத்தைக் காண சகிக்காது நிலத்தை நோக்கி குனிந்தவள், "நல்லா இருக்கேன் மாமா.." என்று மட்டும் கூறினாள்.

"ஆச்சரியமா இருக்கு துர்கா?"

ஆச்சரியமா என்பது போல் அண்ணாந்து அவனை நோக்க, அவளை மேலும் நெருங்கி நின்றவன்,

"ஏன் இவ்வளவு நாள் என்னை அவனிடம் விட்டு வச்சீங்க? ஏன் இத்தனை நாள் என்னைக் காப்பாத்தாமல் விட்டுட்டீங்கன்னு கேட்பேன்னு நினைச்சேன்." என்றான், அவளின் ஆன்மாவையே துளைத்தெடுக்கும் பார்வையுடன்.

அவனின் ஊசி முனைப் பார்வை பெண்ணவளை மேலும் வெடவெடக்கச் செய்ததில் கீழே விழுந்துவிடுவமோ என்ற அச்சம் பிறந்தது.

ஆயினும் பாதங்களை அழுந்த தரையில் ஊன்றி தன்னைத் திடப்படுத்திக் கொண்டவளாய், விழிகளில் நீர் தட்ட,

"எதிர்பார்த்தேன் மாமா. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? சல்லடைப் போட்டு சலிக்கிற மாதிரி என்னைத் தேடியிருப்பீங்க. அதனால் எப்படியும் நான் இருக்கிற இடத்தை நீங்க கண்டுப்பிடிச்சு என்னைக் கூட்டிட்டுப் போக வந்துடுவீங்கன்னு தினம் தினம் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்க வரலை. அதுக்கான காரணமும் எனக்குப் புரிஞ்சுது. அவங்க என்னை அடைச்சு வச்சிருந்தது ஒரு காட்டிற்குள். அந்தக் காட்டுக்குள்ள நான் இருப்பேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? அதான் எவ்வளவு நாளானாலும் நிச்சயமா ஒரு நாள் நீங்க என்னைத் தேடி வருவீங்கன்னு என்னை நானே சமாதானப் படுத்திக்கிட்டேன்." என்றாள் அழுகுரலில்.

அவளின் பதில் ஏனோ ஒரு விதத்தில் ஷிவாவை திருப்திப்படுத்தியது போல் இருந்தது, அவனது கண்களில் சட்டென வந்த கனிவைக் காணும் பொழுது.

"எவ்வளவோ முயற்சி பண்ணினோம் துர்கா. ஆனால் நீ எங்க இருக்கன்னு ஒரு க்ளுக் கூடக் கிடைக்கலை. ஒரு கட்டத்தில் போலீஸ் டிப்பார்ட்மெண்டும் கைவிட்டுட்டாங்க. பிறகு நானும் அஷோக்கும் மட்டும் தான் உன்னைத் தேடினோம். ஆனால் எதிர்பாராதவிதமா ஒரு இடத்தில் இருந்து எனக்கு உதவிக் கிடைச்சது. அவங்க கொடுத்த க்ளூவில் உன்னைக் கண்டுப்பிடிச்சிட முடியுங்கிற நம்பிக்கை வந்துச்சு, ஆனால் திடீர்னு ஒரு ஆக்ஸிடெண்டில் சிக்கிட்டதால நீ இருக்கிற இடத்துக்கு எங்களால வர முடியலை.." என்றதில் பதைபதைத்துப் போனாள்.

"ஆக்ஸிடெண்டா? என்ன மாமா சொல்றீங்க?"

பார்வையால் அவனது தேகத்தைத் துழாவ, காலையில் முதலுதவி செய்திருந்த மருத்துவர் போட்டிருந்த பேண்டேஜுக்களையும் கட்டுக்களையும் அவன் எடுத்துவிட்டிருந்தாலும், அவனது கரங்களில் பட்டிருந்த காயங்கள் இப்பொழுது உன்னிப்பாய் கவனித்ததில் தெரிய ஆரம்பித்தது.

"அச்சோ! மாமா? என்ன இது? இவ்வளவு காயம் பட்டிருக்கு?"

அவனது கரத்தைப் பிடித்தவள் காயங்களைத் தடவ, அவளின் விழிகளில் திரண்டிருந்த நீர் கொட்ட ஆரம்பித்தது.

அவளின் அழுகையும் கரிசனமும் அவனது மனதை குளிரச் செய்தது.

"ம்ப்ச், அதெல்லாம் ஒண்ணுமில்லை."

கூறியவனாய் அவளின் முன்னுச்சி முடியை செவிகளின் புறம் மிருதுவாய் ஒதுக்கியவாறே அவளை விநாடிகள் சில ஆழ்ந்துப் பார்த்தவன்,

"துர்கா, அந்த வருண் உன்கிட்ட தப்பா எதுவும் நட.." எனும் போதே மறுத்து தலையசைத்தவளாய்,

"இல்லை மாமா, இல்லை.. அவர் அப்படி எல்லாம் என்கிட்ட நடக்கவே இல்லை.." என்று படபடத்துக் கூறியதில் ஷிவாவின் புருவங்கள் சுருங்கின.

"அவரா? அவ்வளவு மரியாதையா அவனுக்கு?"

"அது.. அது.. அது வந்து, அங்க அப்படித்தான் நான் அவரைக் கூப்பிட வேண்டியதாயிடுச்சு. அதான் பழக்கத்துல.."

தட்டுத்தடுமாறும் குரலில் கூறுபவளை கண்கள் இடுங்கப் பார்த்தவனாய் சட்டைக் காலரை இழுத்தவாறே தலைசாய்த்து நிமிர, துர்காவின் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

“மாமா.. எ.. எ.. என்னாச்சு?”

"ஒன்னுமில்லை. சரி, நீ ரெஸ்ட் எடுத்துக்க, மற்றதை பிறகு பேசலாம்."

முடித்துவிட்டு அறை வாயிலை நோக்கி நடக்க, அவன் கதவைத் திறக்கும் சமயம் அவன் செல்வதைக் கண்டு நீண்ட மூச்செடுத்தவளின் செய்கையைக் குறித்துக் கொண்டது ஷிவாவின் ஐபிஎஸ் மூளை.

*****************************************************

"சார், சத்தியமா நான் சொல்றது உண்மை சார். நான் எங்கேயும் போகலை. துர்காவைத் தேடி இங்கத்தான் சுத்திட்டு இருந்தேன். உங்க ஹெலிகாப்டர் சத்தம் கேட்டப்போ நான் காட்டின் வேறு ஒரு இடத்தில் துர்காவை தேடிட்டு இருந்தேன். எப்படியும் நீங்க அவளைக் கண்டு பிடிச்சிடுவீங்கங்கிற நம்பிக்கையில் தான் குடிலிற்கே திரும்பினேன்.”

வருணின் கால்களுக்கு அருகில் மண்டியிட்டு மன்றாடிக் கொண்டிருந்தான் சசிதரன்.

ஏறக்குறைய பதினைந்திற்கும் மேற்பட்ட மனிதர்களை அடியாட்களாக அங்கு நியமித்திருந்ததில், துர்கா காணவில்லை என்றதுமே, ஜாஃபரைத் தவிர, அனைவருமே அந்தக் காட்டிற்குள் அவளைத் தேட கிளம்பி இருந்தனரே.

இந்நிலையில் தன்னை நம்பி வருண் ஒப்படைத்துவிட்டு சென்ற துர்காவைக் காணவில்லை என்ற அதிர்ச்சியில் கட்டளைகளை இட்டுக் கொண்டிருந்த ஜாஃபரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அடுத்த நிமிடமே அவர்கள் கலைந்திருந்ததில் சசிதரன் அழகாய்த் தப்பினான்.

அதே போல் குடிலிற்கு அருகில் நிறுத்தப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ஆவேசமாய் இறங்கிய வருண், தனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜாஃபரை அழைத்துக் கொண்டு தனது ஜீப்பினில் ஏறியவன், மற்ற ஆட்கள் அனைவருமே அடவிக்குள் சென்றிருப்பதை அறிந்து அவர்களுக்குள் ஒருவனாய் சசிதரனும் சென்றிருப்பான் என்று தானே எண்ணியிருப்பான்.

அவனது கவலையெல்லாம் அந்த அர்த்த ராத்திரியில் துர்கா எந்த ஆபத்திலும் சிக்கிக் கொண்டிருக்கக் கூடாதே என்பதில் தான் நிலைத்து இருந்தது.

ஆக, வருணுடன் இணைந்து ஜாஃபரும் ஜீப்பில் கிளம்பிய மறு நிமிடமே மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளி வந்த சசிதரன் அவர்களுக்காகக் காத்திருந்தான்.

இப்பொழுது ஓரளவிற்கு அனைவருமே திரும்பி இருக்க, சாமர்த்தியமாய் ஒருவரும் அறியாதவண்ணம் கூட்டத்துடன் கலந்திருந்தான்.

ஆயினும் அவன் எவ்வளவோ கெஞ்சி மன்றாடியும் துர்காவின் மேல் இருந்த நம்பிக்கையால் சசிதரனை முழுமையாக நம்பவில்லை வருண்.

ஆனாலும் அதை அவனிடம் காட்ட விரும்பாதவனாக அவன் தோள் பற்றித் தூக்கினான்.

"சரி சசி, நான் உன்னை நம்புறேன். அப்படித் துர்கா என்னிடம் பொய் சொல்லி இருந்தால் இந்நேரம் ஷிவாவிடம் நம்மைப் பற்றி எல்லா விஷயத்தையும் சொல்லிருப்பாள். அவன் எப்ப வேண்டுமானாலும் நம்மைத் தேடி இங்க வருவதற்கு வாய்ப்பு இருக்கு. ஸோ, இனியும் நாம இங்க இருக்கக் கூடாது."

கூறியவன் மற்ற அடியாட்களை நோக்கித் திரும்பினான்.

“நாம யாரும் இங்க இருந்த சுவடே இருக்கக்கூடாது. இந்தக் குடில்கள் உட்பட எல்லாத்தையும் உருத்தெரியாது அழிச்சிடுங்க. ஹெலிகாப்டர் தரையிறங்கிய தடங்களோ, ஜீப்பின் டயர் ட்ராக்ஸோ எதுவுமே இருக்கக் கூடாது. குறிப்பா மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் ஒன்றுக்கூட இல்லாது அழிச்சிடுங்க.”

அதிகாரமாய்ப் பணித்தவன் அதற்குள் அங்கு வந்து சேர்ந்திருந்த மற்றொரு ஹெலிகாப்டரில் மும்பை நோக்கி பறந்தான்.

************************************

மிர்சா சகோதரர்களின் அரண்மனையைப் போன்ற வீடு.

முன்னறையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவனாய் இருக்கையின் கைப்பிடியில் கையை ஊன்றி நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருந்த யாதவ் மிர்சாவின் புத்தி பல திக்குகளில் சிந்தித்துக் கொண்டிருந்தது.

"நான் அப்பவே சொன்னேன், இந்தச் சசிதரனை நம்பாதீங்க, இந்தத் திட்டம் நீங்க நினைக்கிற மாதிரி நடக்காதுன்னு. கேட்டீங்களா? இப்போ வருணே அந்தத் துர்காவைப் பத்திரமா ஷிவ நந்தனிடம் சேர்க்க அனுப்பிச்சிட்டானாம். ஸோ, வருண் மேல் ஷிவ நந்தனின் கோபம் அதிகரிப்பதற்குப் பதில் இப்போ தணிஞ்சிருக்கும். அதே மாதிரி அந்த மினிஸ்டர் ஆர்யன் தான் துர்காவைக் கடத்த சொன்னான்னு சொல்றதுக்குப் பதில் நான் துர்காவைத் தூக்கிட்டே போகலை, அவளே தான் எப்படியோ தப்பிச்சு போனான்னு கதைக் கட்டுவிட்டு அந்த வருண்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி தப்பிச்சு வந்திருக்கான் அந்தச் சசிதரன். ஒரே கல்லில் மூணு மாங்காய்ன்னு எல்லாம் சொன்னீங்க. ஆனால் இங்க ஒரு மாங்காய் கூட நம்மால் அடிக்க முடியலை.. பார்க்கப் போனா அந்தக் கல்லை எறிஞ்ச நாம் தான் விழப் போறோம் போல?"

எரிச்சலும் கோபமுமாய் அடித்தொண்டையில் கத்திக் கொண்டிருந்த தம்பியை நிமிர்ந்து நோக்கிய யாதவ் மிர்சா,

"இப்போ அந்தச் சசிதரன் எங்க இருக்கான் கலானி? அவன் எனக்கு வேணும்.." என்றான் நெருப்பு உமிழும் கண்களுடன்.

"அவனைக் கண்டுப்பிடிக்கிறது ஒண்ணும் கஷ்டமில்லை. இன்னமும் அவனுடைய பொண்டாட்டியும் குழந்தையும் நம்மக்கிட்ட தான இருக்காங்க. அவங்களைத் தேடி அவனா எப்படியும் வருவான்."

“இல்லை கலானி. வருணைப் பற்றி நமக்குத் தெரியும். அவ்வளவு ஈஸியா அவன் சசிதரனை நம்பக் கூடியவன் இல்லை. ஆனால் அவனே சசிதரனை போக விட்டிருக்கான் அப்படின்னா, அவனுக்குப் பின்னால் யார் இருக்காங்கங்கிறதை கண்டுப்பிடிக்கிறது தான் அவனது நோக்கமா இருக்கும். ஸோ, இனி சசிதரனை கண்காணிக்க அவன் ஆட்களை ஏற்பாடு செய்திருப்பான். சசிதரன் நம்மைத் தேடி வந்தால் ஹண்ட்ரட் பெர்சண்ட் நாம மாட்டிக்குவோம். அதனால் என்கிட்ட சசிதரன் வரணும், ஆனால் வருணுக்கு தெரியாமல்.”

“ஷுயூர் அண்ணா..”

“கலானி..”

“ம்ம்..”

“சசிதரன் வந்ததும் அவனை ஒண்ணும் செய்திடாதீங்க. நான் இப்போ சொல்ற மாதிரி மட்டும் செய்யுங்க. போதும்.."

தனது திட்டத்தை யாதவ் மிர்சா விளக்க துவங்க, ஏனோ இம்முறை தன் தமையனின் திட்டம் தேர்ச்சிப் பெற்றுவிடும் என்றே கலானி மிர்சாவிற்கும் தோன்றியது.

அன்று முதல் சசிதரனை கண்காணித்து வந்தவர்கள் வெகு சாமர்த்தியமாய்த் திட்டமிட்டு, வருணின் அடியாட்களை ஏய்த்துவிட்டு அவனைத் தூக்கி வந்தார்கள்.

"சார், ப்ளீஸ் சார். என்னை நம்புங்க.. அந்த நேரத்துல நான் துர்காவைக் கடத்தினேன், ஆனால் அது ஆர்ய விக்னேஷ் சார் சொல்லித்தான்னு சொல்லிருந்தேனா அந்த நிமிசமே வருண் சார் என்னைக் கண்டத்துண்டமா வெட்டிப் போட்டிருப்பாரு."

"ஏன், இது உனக்கு முன்னாடியே தெரியாதா? தெரிஞ்சுத்தான எங்க திட்டத்துக்கு ஒத்துக்கிட்ட?"

"ஆமா சார். ஆனால் நானே எதிர்பாராத ஒரு விஷயம் அன்னைக்கு அங்க நடந்தது. அது வரை வருண் சாருக்கு துர்கா மேல் ஏதோ ஒரு ஈடுபாடு இருக்குமோன்னு மட்டும் தான் நான் நினைச்சிருந்தேன். ஆனால் அன்னைக்கு அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய வேகத்தைப் பார்க்கும் போதும், துர்காவைக் காணோம்னு அவர் பதட்டப்பட்டதைப் பார்க்கும் போதும், அந்த ஜாஃபருடன் சேர்ந்து அவரே ஜீப்பை அசுரத்தனமா கிளப்பிய வேகத்தைப் பார்க்கும் போதும், அது வெறும் ஈடுபாடா மட்டும் இருக்க வாய்ப்பில்லைன்னு எனக்குப் புரிஞ்சுது. அப்போ அந்த நேரத்துல நான் அவரிடம் பார்த்த கொந்தளிப்பையும் ஆக்ரோஷத்தைம் அது வரை நான் அவரிடம் பார்த்ததே இல்லைன்னுக் கூடச் சொல்லலாம் சார்.."

"எது? வருணுக்குக் கோபம் வந்து நீ பார்த்ததே இல்லை? கோபம் மட்டும் தான் அவனுடைய குணம்னு இந்த உலகத்துல இருக்கிற எல்லாத்துக்குமே தெரியுமே. இதுல நீ அவனுடைய நம்பிக்கைக்குரிய அடியாள், உனக்குத் தெரியாதா?"

"தெரியும் சார். கோபத்துக்கு மறு பேரே அவர் தான்னு எங்க அப்பாக்கூட அடிக்கடி சொல்வார். நானும் நிறையத் தடவைப் பார்த்திருக்கேன். ஆனால் துர்காவைக் காணோம்னு தேடுன அன்னைக்கு நான் பார்த்த வருண் தேஸாய் வேற சார்."

"அப்படின்னா அவனுக்குத் துர்கா மேல, நீ நினைச்ச ஈடுபாடுக்கும் மேலே, ஏதோ ஒண்ணு இருக்குன்னு சொல்ல வர்ற?"

"ஆமா சார்"

"ஏன் அது உனக்கு முன்னாடியே தெரியாதா?"

"சத்தியமா தெரியாது சார். அவர் அங்க குடிலுக்கு வரும் போதெல்லாம் ஜாஃபரிடம் மட்டும் தான் பேசுவார். அதுவும் தனியா. அவர் அங்க இருக்கும் நேரம், துர்காவை அடைச்சு வச்சிருந்த குடிலில், அவருக்குன்னு ஒதுக்கி வச்ச ரூமில் தான் அவரும் தங்குவார். ஆனால் அன்றைக்கு அந்தக் குடிலிற்குப் பாதுகாப்பாக இருக்கும் ரெண்டு பேரைத் தவிர வேற யாரையும் அந்தக் குடில் பக்கம் கூட நெருங்க விட மாட்டார். எங்களில் சிலருக்கும் அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்துச் சந்தேகம் வந்திருக்கு, ஆனால் அதை அவர்கிட்ட கூட இல்ல, அந்த ஜாஃபரிடம் கூடக் கேட்க முடியாது. அதனால் நாங்களும் அதைக் கண்டுக்காமல் விட்டுட்டோம். அதனால் துர்கா மேல அவருக்கு ஏதாவது அபிப்பிராயம் இருந்திருந்தா அது ஜாஃபருக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு."

அவன் பேச பேச எதுவோ புரிவது போல் இருந்ததில் இப்பொழுது தானிட்ட புதுத்திட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றே யாதவ் மிர்சாவிற்குத் தோன்றியது.

நிமிட நேரம் பேசாது அமைதிக் காத்தவன்,

“நீ திரும்பி வந்த உடனேயே உன் மனைவியையும் குழந்தையையும் தேடி வருவன்னு எதிர்பார்த்தேன். ஆனால் ஏன் வரலை?” என்றான்.

“வருண் சார் என்னை முழுசா நம்பினாரான்னு எனக்குத் தெரியலை சார். அதான் கொ...”

அவனை முடிக்கவிடவில்லை யாதவ்,

"சரி, கடைசியா ஒண்ணு செஞ்சிட்டு போயிடு. அதோட உன்னையும் உன் குடும்பத்தையும் விட்டுடுறேன்." என்றதில் மீண்டும் திடுக்கிட்டுப் போனது சசிதரனின் மனம்.

திரும்பவுமா என்று எண்ணியவனாய் திருதிருவென்று விழித்தவாறே சகோதரர்கள் இருவரையும் பார்க்க,

"இது ரொம்பக் கஷ்டமான காரியம் இல்லை சசிதரன். ஏன்னா இது நீயா செய்யலை, உனக்குப் பின்னால் யாரோ இருக்காங்க, அவங்க சொல்படி தான் நீ துர்காவைத் தூக்கிட்டுப் போனங்கிறது நிச்சயமாய் வருணுக்கு தெரியும். இருந்தும் அவன் உன்னைச் சும்மா விட்டுட்டான்னா, உன்னை ஆட்டுவிச்சது யாருன்னு கண்டிப்பிடிக்க அவன் ஆரம்பிச்சிட்டான்னு அர்த்தம். ஸோ, நாங்க சொல்றதை நீ கேட்டின்னா, நீயும் உன் மனைவி குழந்தையும் எந்த வித ஆபத்தும் இல்லாமல் தப்பிச்சு எங்கேயாவது தலைமறைவா போறதுக்கு நான் உதவி செய்யறேன்..” என்றதில் சசிதரனுக்கும் சற்று நம்பிக்கை வந்தது.

ஏனெனில் தன்னை ஒன்றும் செய்யாது விட்டுவிட்டு அமைதியாகக் கட்சிரோலிக் காட்டைவிட்டு கிளம்பிய வருண், ஹெலிகாப்டரில் ஏறும் முன் ஒரே ஒரு விநாடி திரும்பி தன்னைப் பார்த்த பார்வையில் சசிதரனுக்குப் புரிந்து போனது, தனது தலை எழுத்தை இவன் நிர்ணயித்துவிட்டான் என்று.

இந்நிலையில் இதோ இப்பொழுது இவர்கள் குடும்பத்துடன் தான் தப்பிச் செல்ல உதவ முன் வருவது தான் தனக்கு இருக்கும் ஒரே பிடி.

இதனையும் விட்டுவிட்டால் தன்னை இருந்த சுவடே தெரியாதளவிற்கு அழித்துவிடுவான் அந்த வருண்.

முடிவெடுத்தவனாய், “சரி சார், சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?” என்றான்.

“எப்படியாவது அந்த ஆர்யன் தான் உன்னிடம் துர்காவைக் கடத்தச் சொன்னதா வருணுக்கு நாங்க தெரியப்படுத்துறோம். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் நிச்சயம் வருண் ஆர்யனைத் தேடி அவன் இடத்துக்குப் போவான். அப்போ நீ ஆர்யனுடன் இருப்பது மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்றோம். அதற்குப் பிறகு நீ எப்படியாவது அங்க இருந்து தப்பிச்சு நான் சொல்ற இடத்துக்குப் போய் விடு. நாங்க சொன்னது போல் உன் குடும்பமும் அங்க வந்து சேர்ந்துடும். பிறகு நீ தலைமறைவு ஆகுறதுக்கு என்ன செய்யணுமோ அதை நாங்க செய்றோம்.."

இப்பொழுது சசிதரனுக்குக் குழப்பத்தில் தலை சுற்றத் துவங்கியது.

எங்கனம் வருணை இவர்கள் நம்ப வைக்கப் போகின்றார்கள்?

கேள்வித் தோன்றினாலும் இத்தருணத்தில் இது எனக்குத் தேவை இல்லாத விஷயம் என்று முடிவெடுத்தவனாய் சம்மதமாய்த் தலையாட்ட, மிர்சா சகோதரர்களின் திட்டப்படி, துர்காவை நடுக்காட்டில் கொலை செய்து போட்டுவிடுமாறு பணித்தது ஆர்ய விக்னேஷ் தான் என்ற தகவல் வருணை ஒரு அலைபேசி தகவல் மூலம் சென்றடைந்தது.

தகவல் வந்தது சசிதரனின் அலைபேசியில் இருந்து.

"SSP ஷிவ நந்தன் சாரை பழிவாங்கத்தான் நீங்க துர்காவைக் கடத்தியதாகவும், ஆனால் அவளை எதுவும் செய்யாமல் பத்திரமா வைத்திருப்பது சந்தேகம் கொடுப்பதாகவும் மத்திய அமைச்சர் ஆர்யன் சொன்னார். ‘வருணுக்கும் ஷிவ நந்தனுக்கும் இடையில் இருக்கிற பகையை வளர்க்கணுமே ஒழிய அணைஞ்சிட விடக் கூடாது. துர்காவை தொடாமல் கூட வருண் இருக்கான்னா, நிச்சயமா அவளைப் பத்திரமா திருப்பி அனுப்பவும் தயங்கமாட்டான். அது நல்லதில்லை.

அப்படியான சூழ்நிலையில் வருண் மேல் ஷிவ நந்தனிற்கு ஒரு நல்ல மதிப்பு வரவும் வாய்ப்பிருக்கு. அந்த நிலை வருணுக்கும் எனக்கும் இடையிலேயே கூட ஒரு பிரிவை உருவாக்கச் செய்யும். ஷிவ நந்தன் எங்களை நெருங்க நெருங்க எங்களுக்கு ஆபத்து தான், குறிப்பா எனக்கு. நாங்க எப்பவும் ஷிவ நந்தனுக்கு ஆகாதவர்களா இருப்பது தான் நல்லது. அதைத் தவிர அவன் வேற எந்த விதத்திலேயும் எங்களை நெருங்கக் கூடாது.

அதனால் ஏற்கனவே துர்காவைக் காணாமல் தேடிட்டு இருக்கிற ஷிவ நந்தனுக்கு இன்னும் வெறியைத் தூண்டுற வகையில் துர்காவைக் கடத்திட்டு வந்துடு. முடிந்தால் அவளது உயிரை எடுக்கவும் நீ தயங்க வேண்டாம். ஒரு வேளை நீ பிடிபட்டால் எக்காரணம் கொண்டும் என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தன்னு தெரிஞ்சால் உன் குடும்பத்தின் அழிவைத் தான் நீ பார்க்க நேரிடும்.’ அப்படின்னு அமைச்சர் ஆர்யன் என்னை மிரட்டினார் சார். அதனால்தான் நான் துர்காவைக் கடத்தினேன். அவளை ஆர்யனிடம் கொண்டு வந்து சேர்த்திடணும்னு தான் நினைச்சேன், ஆனால் அதற்குள் துர்கா என்னிடம் இருந்து தப்பித்துவிட்டாள். எப்படியும் துர்கா என்னைக் காட்டிக் கொடுத்துடுவான்னு எனக்குத் தெரியும், ஆனால் அதே சமயம் இப்போ என் குடும்பம் ஆர்யனின் பிடியில் இருக்கு.

அதனால் உங்கக்கிட்ட மாட்டிக்கிறதை விட அவரின் கோபத்துக்கு நான் ஆளாகக் கூடாதுங்கிறது தான் என் மனசுல அப்போ முக்கியமா பட்டுச்சு, அதான் நான் துர்காவைத் தூக்கிட்டுப் போகலைன்னு பொய் சொன்னேன். ஆனால் இப்போ என் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. ஆர்யன் செய்யச் சொன்னதை நான் சரியா செய்யலைன்னு என்னையும் என் குடும்பத்தையும் அழிச்சிடுவேன்னு மிரட்டறாரு சார். நீங்க தான் என்னைக் காப்பாற்றணும். எனக்கு வேற வழியில்லை சார். ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க.."

தனது புத்தம் புதிய சிகப்பு நிற ஃபிஸ்கர் ரோனின் ஸ்போர்ட்ஸ் காரை செலுத்திக் கொண்டிருந்த வருண் அந்த நீண்டத் தகவலைப் படித்து முடித்ததும் அலைபேசியை அருகில் இருந்த இருக்கையில் வீச, அவனது எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப அவனது காரின் வேகமும் ஆவேசமாய் அதிகரித்தது.

‘ஆர்யன் அப்படிச் செய்பவரா? இது உண்மையா? என்னிடம் இருந்து துர்காவைப் பிரிப்பதில் அவருக்கு என்ன லாபம்? ஷிவாவிற்கும் எனக்கும் இடையேயான பகையை மேலும் வளர்ப்பதில் அவருக்கு என்ன அனுகூலம்? அதனால் தான் அன்று Stockholm syndrome, Lima syndrome என்றெல்லாம் பேசினாரா?'

ஏதோ ஒரு கட்டவிழ்வது போல் தோன்றியதில் அடுத்த நிமிடம் காரை மேலும் சீறவிட, அவனது வேகத்தைப் போல் அவன் மனமும் அதிவேகமாய்ச் சிந்திக்கத் துவங்கியதில் அவ்வப்பொழுது ஆர்யன் கூறும் அரேபிய பொன்மொழி நியாபகத்திற்கு வந்ததில், காரின் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த வருணின் கரங்களிலும் முறுக்கேறியது.

Be wary around your enemy once, and your friend a thousand times. A double crossing friend knows more about what harms you.

- Arabic Proverb

ஆர்யனின் அலுவலகத்தை வருண் அடையும் அதே நேரம் அவனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான் சசிதரன்.

சாலையில் செலுத்திய அதே வேகத்தில் ஆர்யனின் ஓடுபாதையில் காரை செலுத்திய வருண் கிறீச்சென்ற சத்தத்துடன் டயர்களில் இருந்து நெருப்பு பொறிப் பறக்க ப்ரேக்கிட்டு நிறுத்த, அதன் சத்தத்தில் திடுக்கிட்டவனாய் திரும்பிய சசிதரன் பேரதிர்ச்சியில் மூழ்கினான்.

அங்கு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த வருணைக் கண்டதும் தன் இரு சக்கர வாகனத்தை நோக்கி பாய, அப்பொழுதும் காரை விட்டு இறங்காது ஜன்னலின் கண்ணாடியை மட்டும் மெதுவாய் கீழிறக்கியவனாய் சசிதரனின் மீதே பார்வையைப் பதிக்க, அடுத்த நொடிகளில் அவனது பைக் சாலையில் கலந்தது.

சசிதரனுக்கும் ஆர்யனுக்கும் உண்மையில் சம்பந்தம் இருக்கின்றதா?

சந்தேக மனதுடன் காரை விட்டு இறங்கிய வருண் அலுவலகத்திற்குள் நுழைய, அங்குத் தன் அறையில் தனக்குப் பிடித்தமான குர்கா சிகாரை இடது கையில் பிடித்தவாறே வலது கரத்தால் தலையைக் கோதியவனாய் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவாறே அமர்ந்திருந்த ஆர்யனின் பார்வை அறைக்குள் நுழையும் வருணின் மேல் நிலைத்தது.

"வா வருண்."

சலனமற்ற முகம். தெளிவான பார்வையுடன் கூடிய தீட்சண்யமான கண்கள்.

அரசியல்வாதிக்குரிய எந்த வித ஜாடையும் இல்லாது ஒரு பெரும் தொழிலதிபனை போன்ற வெகு ஸ்டையிலான நளினமும் நேர்த்தியுமான தோற்றம்.

இவனைக் கண்டால் எவருக்குமே சந்தேகம் வராது என்பது போல் சாதுரியமான [suaveness] உடல்மொழிகள் வேறு.

ஆயினும் இவனது அலுவலகத்தில் சசிதரனுக்கு என்ன வேலை?

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!

எல்லா வித சந்தேகங்களையும் தீர்த்துவிடும் நேரம் இது என்பது போல் இந்த முதுமொழிக்கு இணங்கச் செயல்படுவதே இத்தருணத்தில் சிறந்த வழி என்பதை உணர்ந்தவனாய் ஆர்யனிடம் வினாக்களைத் தொடுத்தான் வருண்.

"ம்ம், சொல்லுங்க ஆர்யன். துர்காவைப் பற்றி எது சொல்லணும்னாலும் என்னிடம் நேரிடையாகவே சொல்லலாம்?"

வருணின் கூற்றில் ஆர்யனின் உதடுகளின் ஓரத்தில் ஒரு இளஞ்சிரிப்பு வந்து உட்கார்ந்து கொண்டது.

அந்தச் சிரிப்பிற்கு அர்த்தம் வேறு. ஆனால் வருண் புரிந்து கொண்ட காரணமோ வேறு.

“தனிப்பட்ட விஷயங்களில் தலையிடறது எனக்குத் தெரிஞ்ச வருண் தேஸாய்க்கு பிடிக்காதே.”

“ஆனாலும் தலையிட்டுட்டு தான் இருக்காங்களே..”

“சில வேளைகளில் தள்ளி நிற்க முடியாது வருண்..”

ஆர்யன் கூறியது வேறு நோக்கத்தில், ஆனால் அச்சூழ்நிலைக்கு அது தவறாகிப் போனது.

"ஸோ, எனக்கு வந்த தகவல் உண்மையானது, ரைட் ஆர்யன்?"

"என்ன தகவல் வருண்?"

"உங்களுக்கு நிச்சயமா தெரியாது?"

"நீ தான் சொல்லேன்.."

"துர்காவைக் கடத்தச் சொன்னது.."

ஓர் விநாடியில் ஆர்யனின் உதட்டோரத்தில் அமர்ந்திருந்த மெல்லிய சிரிப்பு முழுமை கொள்ளாமல் வேகமாக முடிந்தது.

ஏற்கனவே நெடுநெடுவென உயரமும், திரண்டு விரிந்திருந்த தோள்களும், கம்பீரத்தைப் பறைசாற்றும் உடல் அமைப்பையும் கொண்டிருந்த ஆர்யனின் தேகம் இப்பொழுது விறைத்ததில், வருணின் புருவங்களைச் சுருங்கச் செய்தது.

"அப்படின்னா துர்கா இப்ப உன்னிடம் இல்லை."

"ஆர்யன், ப்ளீஸ், எதுக்கு இந்த வார்த்தை விளையாட்டு. எதுக்காகத் துர்காவைக் கடத்தச் சொன்னீங்க?"

திடுமென வருணின் அடியாட்களில் ஒருவனான சசிதரன் தன் அலுவலகத்திற்கு வந்ததும், பிறகு தேவையற்ற சில விஷயங்களைப் பற்றிப் பேசியதிலுமே ஐயுறவு கொண்டிருந்தான் ஆர்யன்.

அவனது ஐயப்பாட்டிற்குத் தீனிப் போடுவது போல், இப்பொழுது அமைதியாக நிற்பது போல் தோற்றம் கொண்டாலும் உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்து நிற்கும் வருணின் தோரணை சசிதரனின் திடீர் வரவிற்கான அர்த்தத்தை ஆர்யனுக்கு விளக்கியது.

“ஸோ, உன் கேள்விக்கும் இப்போ வந்துட்டு போற சசிதரனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு, ரைட்?”

வெகு புத்திசாலியான ஆர்யன் விநாடிகளுக்குள் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிட்டுச் சசிதரனை வருணின் கேள்விகளுடன் முடிச்சிட்டுவிட்டான்.

“யெஸ்..”

"அப்படின்னா இந்தச் சசிதரன் துர்காவைக் கடத்தி இருக்கான். இப்போ அதே சசிதரன் என் ஆஃபிஸில் இருந்து நீ வரும் நேரம் வெளியே போறான். அப்படின்னா அந்தச் சசிதரனை வச்சு நான் துர்காவை கடத்தினேன், அல்லது கடத்த முயற்சித்தேன். அப்படித்தான சொல்ல வர்ற வருண்?"

"உங்களுடைய அரசியல் விளையாட்டை என்னிடம் விளையாடாதீங்க ஆர்யன்."

"நான் ஏன் வருண் உன்னிடம் விளையாடப் போறேன். முதலில் என் மேல் உனக்கு எப்படிச் சந்தேகம் வந்தது?"

இதற்கு மேல் இவனிடம் பேசிப் பயனில்லை என்பது போல் ஓர் விநாடி ஆர்யனின் உள்ளத்தையே ஊடுருவி அதனுள் இருக்கும் தப்பான ஆட்டத்தை அறிந்துக்கொள்ள முயற்சிப்பது போல் பார்த்த வருண் அறையைவிட்டு வெளியே செல்ல முனைய, சட்டெனத் தன் இருக்கையில் இருந்து எழுந்தான் ஆர்யன்.

"வருண், காதல் கடினமானவனை மென்மையாக்கி மென்மையானவனைக் கடினமாக்கும். அதே போல் குருடனாகவும் மாற்றும்.. "

"வாட்?"

"ஏன் வருண் கேள்விப்பட்டதில்லையா? ஷேக்ஸ்பியரின் பிரபலமான பாடலை..

But love is blind, and lovers cannot see..

The pretty follies that themselves commit,

For if they could Cupid himself would blush

To see me thus transformed to a boy."

வாய்விட்டு சிறிது சத்தமாகச் சிரித்தவன் இடது கையில் பிடித்திருந்த சிகாரை உதடுகளுக்கு இடையில் கொடுத்து ஆழமாக இழுத்து புகையைவிட, அவனின் ஒவ்வொரு செய்கையும் வருணின் தேகத்திற்குள் ஒரு வெப்பக்கதிரை பரவச் செய்தது போல் இருந்தது.

"எனக்குத் தெரியும் ஆர்யன், ஆனால் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தான் எனக்கு இன்னும் புரியலை."

"நான் ஏற்கனவே கேட்டது தான். அப்போ நீ பதில் சொல்லலை. பட், இப்போ நேரிடையாவே கேளுங்கன்னு நீ சொன்னதால் நான் கேட்கிறேன். துர்காவை ஏன் இவ்வளவு நாள் அடைச்சு வச்சிருந்த வருண்?"

கேள்வியைக் கேட்டவனின் கண்கள் எரி கங்காய் மாற, அவனுள்ளே ஏதோ அணையாத வெறி ஒன்று உழன்று கொண்டிருக்கிறது என்பதை அக்கணம் புரிந்து கொண்டான் வருண்.

"அதைப் பற்றி உங்களுக்கு என்ன ஆர்யன்? It’s ok. நான் சொன்னதால் நீங்க கேட்குறீங்கன்னு தெரியுது. எனிவேய்ஸ், உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் நான் என்னைக்குமே தலையிட்டது இல்லை. தலையிடப் போறதும் இல்லை. அது நம்ம பிஸ்னஸஸை பாதிக்காத வரை. அதே போல் நீங்களும் என் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.."

கசந்த புன்னகை ஒன்றை கசியச் செய்தவன் விருட்டென வெளியேற, அவனின் அகன்ற முதுகையே பார்த்திருந்த ஆர்யனின் புத்தி தன் அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தீவிரமாக ஆலோசிக்கத் துவங்கியது.

அதே சமயம் வருண் கூறிவிட்டுச் சென்ற துர்காவின் கடத்தல் தகவலும் அவனுடைய மூளையைச் சூடேறச் செய்தது.

வெளியே தன் சிகப்பு நிற ஃபிஸ்கர் ரோனின் காரில் ஏறிய வருண் அழைத்தது ஜாஃபரை.

"சொல்லுங்க சார்."

"ஜாஃபர், எதுக்கும் நீ ஆர்யன் மேல ஒரு கண் வச்சிக்க. அவர் எங்கப் போறார், யாரை எல்லாம் மீட் பண்றாருங்கிற விஷயத்தை எனக்கு அடிக்கடி தெரியப்படுத்து.."

"ஷ்யூர் சார்.. அந்தச் சசி?"

"இப்போ தான் அவன் ஆர்யனின் வீட்டில் இருந்து வெளியே போனதைப் பார்த்தேன் ஜாஃபர்."

"அப்படின்னா ஆர்யன் சாருக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்குன்னு தானே சார் அர்த்தம்.."

"தெரியலை ஜாஃபர். எனக்குத் தெரிஞ்சு ஆர்யன் இது மாதிரி முட்டாள்தனமான வேலையைச் செய்யற ஆள் இல்லை. அதே சமயம் நான் துர்காவை இவ்வளவு நாள் வச்சிருந்தது ஏனோ ஆர்யனுக்குப் பிடிக்கலை. ஸோ, என்னால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியலை. அதனால் தான் சொன்னேன், ஆர்யனை கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்."

"ஒகே சார்.."

ஆமோதித்த ஜாஃபர் ஆட்களைத் தயார்படுத்த, ஆனால் வருணே அதிர்ச்சியடையும் வண்ணம் சில மணி நேரங்களுக்குள்ளாகவே சசிதரன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டான் என்று தகவல் காதுகளுக்கு எட்டியது.

பிஸ்னஸ் டைக்கூன் என்று அந்த இருபத்தி எட்டு வயதிலேயே பெயர் பெற்றிருந்த வருணாலும், இச்சிறிய வயதிலேயே கேபினட் மினிஸ்டர் என்ற பெரும் பதவியில் இருந்த ஆர்யனாலும் கூடச் சசிதரனின் தற்கொலைக்குப் பின்னால் இருந்தது யார் என்று கண்டுப்பிடிக்க முடியவில்லை.

அவ்வளவு அழகாய் தெளிவாய் திட்டமிட்டு சசிதரனின் வாழ்க்கையை முடித்திருந்தார்கள் மிர்சா சகோதரர்கள்.

இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஓப்பியம், ஹெராயின், ஹாஷிஷ், கோகைன் போன்ற பலவகைப் போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாஃபியா கூட்டமாயிற்றே, அவர்களுடையது.

சர்வதேச அளவில், குறிப்பாக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் தாவூத் இப்ராகிமை, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பிடிக்க நம் தேசம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. ஆயினும் பிடிக்க முடியவில்லை.

அதற்குக் காரணம் அவனுக்குப் பின்னால் வலுவான அரணாய் இருக்கும் நிழல் உலக மனிதர்களும், அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் அவனுக்கு அனுதாபிகளாய் இருப்பதே.

அது மட்டும் அல்லாது, அவனுக்கு வேற்று நாட்டவர்களின் உதவியும் அவனைப் பலத்த பாதுகாப்புடன் வாழ செய்து கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய அந்தளவிற்கு சக்திக் கொண்ட மாஃபியா கூட்டமான மிர்சா சகோதரர்களின் சதுரங்க வேட்டையில், அவர்களுக்கு எதிராய், அவர்களே அறியாது ஆடிக் கொண்டிருக்கும் நாயகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது சசிதரனின் அகால மரணம்.

காவல்துறையையும், பெரும் பதவியில் இருக்கும் அலுவலர்களையும், போதைப் பொருள் துறை அதிகாரிகளையும் [narcotics department] ஏய்த்துக் கொண்டு வருபவர்களைக் கண்டுப்பிடிக்க முடியாது போனது நம் நாயகர்களின் நல்ல நேரமா?

அல்லது கெட்ட நேரமா???

“Through you we learn to be invisible, through you inaudible; and hence we can hold the enemy's fate in our hands.”

― Sun Tzu, The Art of War

Meaning - When you use camouflage, secrecy and other ways of cloaking your positions and intent, you can act at will, even from within enemy territory.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.
 
Last edited:
Shiv ku doubt vandhuttu Durga mela… Avalukku Varun mele soft corner irukkum nu…

It’s good Varun Aryan kitta direct ah kettathu… Ippo Aryan kum doubt vandhirukkum Varun and Aryan ah pirikka yaro sadhi pannuranga nu…

Mirza brothers 😱😱😱 ninaichathai vida mosama irukkanga… Sasi yoda fate ah ninaicha pawam irukku… Avan mattumillama avan family um konnuttanga 😒😒😒
 

saru

Member
Lovely update dear
Nenachadu pola siv ku Durga nizhai doubt varudu
Deii mirsha brothers ellarum onnu serndu vaipanunga
Varun ku doubt vadruchi Aryan mela
Nerla eh kettathu nallathutan
Ipo Aryan yosipan
 

Vidhushini

New member
நடந்ததையும், இனி நடக்கப்போவதையும் (மன மாற்றங்கள்) நினைத்துக் கலக்கம் சூழ்ந்த நிலையில் உள்ளனரோ, துர்கரூபிணியும்-சிதாராவும்...

inbound7301236059390008748.jpg

மிர்சா சகோதரர்கள் பற்றவைத்த நெருப்பு, புகைய ஆரம்பித்துவிட்டது. அந்நெருப்பு இலக்கு நோக்கிப்போகுமா? அல்லது அவர்களையே அழிக்குமா?
inbound6702399371606373309.jpg

Very interesting @JB sis.
 

Lucky Chittu

New member
Very nice update mam. Shiv nandhan theliva identify pannittaan. Durga loves Varun nu. Mirza brothers kudave irundhu kuzhi parichittaanga sasi vaazhkaila. Aryanukkum varunukkum sandaiya kelappi avanunga mothi athula Shiva divert ana ivanunga endha pressure um illama happy ah iruppaanga. Ithula ivangalukku velai seiya vandha sasi plus family um Bali ayiduchu. Waiting for the next update mam.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top