JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 25

Subageetha

Well-known member
காலங்களின் ஓட்டத்தில் உமாவின் மகன் ஸ்கந்தனுக்கு இப்போது முழுதாக ஐந்து வயது ஆகிவிட்டது. அவனுக்கு அம்மாவின் மீது அளவு கடந்த பிரியம். அதைப் போன்று தந்தையை கண்டால் ஏனோ அவனுக்கு அந்த வயதிலேயே பிடிக்காமல் போய்விட்டது. குருவுக்கும் குழந்தை மீதோ மனைவி மீதோ எப்போதுமே பெரிய அளவில் பிடித்தம் எதுவும் இருப்பதில்லை. ஊரில் சொல்லிக் கொள்வதற்காக ஒரு குழந்தை பெற்று ஆயிற்று.
அருணாச்சலம் அன்னபூரணி இருவருக்கும் தன் பேரன் மேல் பிரியம் அதிகம். அதிலும் தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக அருணாச்சலம் தனது பேரனை தான் நினைத்து இருப்பதால் அவனுக்கு சலுகைகள் அதிகம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எவ்வளவுதான் சலுகைகள் கொடுத்தாலும் வீட்டில் இருக்கும் இரு பெண்களும் குழந்தைக்கு அப்போதே நல்லது கெட்டவைகளை சொல்லிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஐந்து வயது சிறுவனுக்கு வயதுக்கு மீறிய மனப்பக்குவம் உண்டு. தவறு நடந்தால் அதை பொறுத்துக் கொள்ளும் சக்தி அந்த வயதிலேயே அவன் மனதிற்கு இல்லை. தவறுகளுக்கு தண்டனை ஒன்று தான் சரியான தீர்வு என்று ஆழமாக நம்பினான் சிறுவன். இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட சிறுவனுக்கும், இதற்கு அப்படியே எதிராக குணங்களைக் கொண்ட அவன் தந்தைக்கும் ஒத்துப் போவது என்பது கனவிலும் நிகழப் போவதில்லை. ஒருவேளை 'இரணியகசிபுவுக்கு பிறந்த பிரகலாதன் இவனோ' என்ற எண்ணம் அடிக்கடி உமாவிற்கு வருவதுண்டு. அருணாச்சலத்திற்கும் ஸ்கந்தன் பிறந்தபிறகு அரசியல் வாழ்வில் பெரும் ஏற்றம். மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகிக்கும் அவர் தனது கட்சியில் இருந்து மூவரை மத்திய அமைச்சர்கள் ஆக்கியிருக்கிறார். கை சுத்தமானவர், நேர்மையானவர் என்ற பெயரை சம்பாதித்திருக்கும் அருணாசலத்திற்கு வரும் தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
அதற்காகவே குரு இப்போதெல்லாம் செய்யும் தவறுகள் வெளியுலகிற்கு தெரியாத அளவிற்கு செய்கிறான்.

குழந்தையை கைதேர்ந்த நிபுணனாகவும் சிறந்த மனிதனாகவும் வளர்ப்பதற்காக வீட்டிலுள்ள மூவரும் அயராது பாடு படுகிறார்கள். குருவின் விஷயத்தில் விட்ட கோட்டையை பிடிக்க பேரன்தான் துருப்புச் சீட்டு.

சிவனின் மகள் சாந்தா இப்போது கனடாவில் முழுமையாக தன்னை பொருத்திக் கொண்டு விட்டாள். தனது அம்மாவை திரும்பவும் இந்தியா அனுப்பி வைக்கும் எண்ணம் அவளுக்கு சற்றும் இல்லை. தனது வாழ் நாள் மட்டுமல்ல இனி தனது அம்மாவின் வாழ்நாளும் இறுதி வரை இந்து தான் என்று அவள் முடிவு எடுத்து விட்டாள். சிவனுக்கு இதற்கெல்லாம் என்ன சொல்வது என்பது தெரியவில்லை. சிவன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன் மனைவி மகளுடன் இருந்துவிட்டு திரும்பவும் வந்துவிடுகிறார். அவர் இல்லாத சமயங்களில் அருணாசலத்திற்கு கை உடைந்தது போல கஷ்டம் தான் ஆனாலும் சிவன் எத்தனை காலம் குடும்பத்தை விட்டு இருக்க முடியும்?
மருமகள் சொன்ன உண்மை புரிந்த காரணத்தினாலேயே அருணாச்சலம் வாயை திறக்க முடியவில்லை. சிவனும் கனடாவில் பத்து நாட்களுக்கு மேல் தங்குவதில்லை. அவரின் மன குற்ற உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். சாந்தாவிற்கு தனது தந்தை செய்த காரியம் எவ்வளவு ஆழமானது என அந்த வயதில் புரியவில்லை.ஆனால், வெளியுலகு புரிந்து, அந்நிய தேசத்தில் தனது எதிர்காலத்தை
ஊன்றியவளுக்கு விஷயத்தின் வீரியம் எவ்வளவு என்று தெரிந்த- -தனாலேயே அவள் மனதிலும் சிவன் மீது மரியாதை குறைந்துவிட்டது. அக்காவின் வாழ்வு இன்று கேள்வி குறியாக இருப்பதற்கு காரணம் தன் தந்தையே என்ற எண்ணம் அவளை அப்பாவிடமிருந்து தூர நிறுத்தியது. சிவனுக்கு இதெல்லாம் புரிந்திருந்தாலும் இதற்கு மேல் அவர் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. சாந்தா பொறியியல் முடித்துவிட்டு இப்பொழுது மேல் படிப்பிற்கு அமெரிக்கா செல்வது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறாள். கனடாவிலிருந்து அமெரிக்கா செல்வது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. இன்னொருபுறம் அவளுக்கு கனடாவை பிடித்துதான் இருக்கிறது. இங்கேயே படிக்கலாமா என்றும் யோசிக்கிறாள்.
இதுபோன்ற மேல்நாட்டு படிப்பெல்லாம் தனக்கு கிடைக்கக்கூடும் என்று அவள் கனவிலும் நினைத்தது இல்லை. தன்னையும் திருமணம் செய்து அனுப்பி வைக்காமல் உமா அக்கா தன்னை இவ்வளவு தூரம் படிக்க வைத்து இருப்பது சாந்தாவுக்கு அவள்மீது பன்மடங்கு மரியாதையை உண்டுபண்ணியது. உமா மெழுகாய் தன்னை உருக்கி தன்னையும் ரத்னா அக்காவையும் வார்த்திருக்கிறாள் என்று ஆத்மார்த்தமாய் உணர்ந்தாள் சாந்தா. பெற்றவர்கள் செய்ய வேண்டியவற்றை உடன்பிறப்பு செய்யும் பொழுது அவர்கள் நம்மை பெற்றவர்களை விட ஒரு படி உயர்ந்து தெரிகிறார்கள்.
அக்காவின் கணவன் எவ்வளவு மோசமானவன், அவனிடமிருந்து அக்கா தன்னையும் ரத்னா அக்காவையும் எப்படி காத்திருக்கிறாள் என்பதெல்லாம் அவளுக்கு நன்றி விசுவாசத்தை கூட்டியது. தாங்கள் அம்மாவுக்கும் தனது அக்காவின் முடிவுகள் பற்றி மெதுவாக புரிய வைக்க முயன்று கொண்டிருந்தாள். உமா பணம் அதிகம் வந்துவிட்டதால் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளவில்லை. அப்படி நடந்து கொள்வதாக இருந்திருந்தால் தனது புகுந்த வீட்டினரிடம் சொல்லி நமக்கு இவ்வளவு அகலமான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்க மாட்டாள் என்று மெதுமெதுவே சொல்ல சொல்ல பாறு குட்டிக்கும் உமாவின் மீதிருந்த வருத்தங்கள் குறையத்தான் தொடங்கியிருக்கிறது.

அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு என்று தொகுதிகள் ஒதுக்கப்பட உமாவை களமிறக்கிய அருணாச்சலம், சென்னையில் ராக்காயியையும் தேர்தலில் நிற்க வைத்தார்.
மகனால் நிரப்ப முடியாத இடத்தை மருமகள் மற்றும் பேரனால் நிரப்ப முடிவு செய்திருந்தார் அருணாச்சலம். இதில் தவறு ஏதும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.

ஆனால் இன்னொருபுறம் குருவின் மனதில் வண்ணம் அதிகரித்துக்கொண்டே சென்றது. மனைவியின் மீது அவனுக்கு பொறாமை. ஏற்கனவே அவள் உடம்பு மீது இருந்த பிடிப்பு நீங்கிவிட்டிருக்க, இப்போது அவள் மீதி இருப்பது வெறும்
காழ்புணர்ச்சி மட்டுமே!
மனைவி தன்னை விட முதல் நிலையில் இருப்பது ஒரு ஆணாக அவனுக்கு அடி என்று நினைத்தது ஒரு புறம் என்றால் தன்னை தன் அப்பா ஓரம் கட்டுவதாக அவனுக்கு புரியவாரம்பிக்க அடுத்து தான் காய்களை எப்படி நகர்த்தி கட்சியை தானதாக்கி கொள்வது என்று அவன் புத்தி யோசிக்க ஆரம்பித்தது.தீர்வுதான் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவன் செய்யும் மூன்றாம் ரக வேலைகள் தடையின்றி நடக்க கொஞ்ச காலம் அமைதியாய் இருக்க முடிவு செய்து கொண்டான். அடியாட்களை கொண்டு வேலை சாதிக்க பழகி இருந்ததால் வளரும் மாஃபியா தலைவன் அவன். சிவனின் கண்காணிப்புக்கெல்லாம் அவன் சிக்கவில்லை.

கல்யாணம் முடிந்து ஏழு வருஷங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்னும் தவிப்பு சங்கரன் ரத்னா தம்பதிக்கு உண்டு. ரத்னாவுக்கு இப்போது எரிச்சலும் கோவமும் அதிகமாகிவிட்டது. காண்பிக்க இடம் இன்றி சங்கரனை உலுக்கி எடுக்கிறாள். அவனுக்கும் புரிகிறது அவள் நிலை. என்ன செய்ய என்று புரியாமல் அமைதி காக்கிறான். திலகாவோ வேறு திருமண உறவுக்கு அவனை வற்புறுத்தி பார்க்கிறாள். அது வேறு ரத்னாவுக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தி விட்டது.குழந்தை பிறக்க வேண்டுமானால் தவிப்பு இருந்தாலும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? இதுதான் அவர்கள் இருவருக்கும் புரியவில்லை. சங்கரனுமே அம்மாவின் பேச்சுகளில் மிகவும் சோர்ந்து போனான். அவனால் மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவில் பந்தாக உருள முடியவில்லை. அவனுக்கு மன உளைச்சல் தான். ரத்னாவுக்கோ எங்காவது தன்னையும் சங்கரனின் பிரித்து விடுவார்களோ என்ற பயம், அதை யாரிடம் காண்பிப்பது என்று தெரியாமல் அவனிடமே சண்டை. இருவருக்கும் அமைதியாக இருக்க உதவி செய்யும் இடம் வேலை செய்யும் இடமே!
இருவரும் சந்திக்கும் நேரங்களை குறைத்து கொண்டு இரவில் மட்டுமே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்ற நிலைமையில் வந்து நின்றது அவர்களது பந்தம்.இருவருக்குமே இந்த மையப் புள்ளியில் சலிப்பு தட்டியது. காதல் எனும் உணர்வில் தான் இருவரும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே தேவைப்படுவது புரிதல். அது வாய்த்து விட்டால் குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும் என்று பக்குவம் வந்து விடுமே!
*****************************

சாதுர்யா அடிக்கடி தன் பெற்றோரிடம் பேசினாலும் கூட முன்பு இருந்த அளவிற்கு அவளால் ஈடுபாட்டுடன் அவர்களுடன் பேச முடியவில்லை. எங்காவது தனக்கும் ரங்கனுக்கும் இடையேயான காதலைப் பற்றி பேசி விடுவோமோ என்ற பயம் அவளுக்குள். மாலதியின் எண்ணம் அவளுக்கு தெரியும். இரண்டு மூன்று முறை மாலதியும் மகளை திருநெல்வேலி சென்று விட்டு வருமாறு வற்புறுத்தி பார்த்தும் கூட பெண் அசைந்து கொடுத்தாளில்லை.
அங்கிருந்துகொண்டு எதுவும் செய்ய முடியாமல் மாலதி தன் மாமியாரிடம் சொல்ல, அனுப்பி வைப்பதாக லக்ஷ்மி அம்மாளும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெண்ணோ ஏதோ ஒரு காரணம் காட்டி போவதை தவிர்த்துக் கொண்டே இருந்தாள்.
இவளது மதிப்பெண்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்த ரங்கனும் அவளை வெகுவாக திட்டிவிட்டான்.
' இப்படி எல்லாம் மார்க் வாங்குவது உனக்கு இது படிப்புல எண்ணம் குறைஞ்சுட போகுதுன்னு சொல்லிட்டுத்தான் நான் விலகி விலகி போனேன். இங்க படிச்சுகிட்டே என்னோட பொண்டாட்டி செலவெல்லாம் நானு பார்த்துக்கணும்னு வேலைக்குப் போயி உனக்கு பணம் அனுப்புறேன். நீ... பொறுப்பில்லாம இப்படி இருக்க' என்று.அவன் சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்ததாலேயே சாதுர்யா அமைதியாக இருந்தாள்.

அவனே தொடர்ந்தான்... நா ஆசை பட்டது இந்த சாதுர்யாவ இல்ல. நிமிர்ந்து பாத்து பேசும், கல்யாணம் இல்லன்னாலும் அப்பா மாதிரி சிவில் சர்வீஸ் எழுதி கலெக்டர் ஆகிடுவேன்னு சொன்னவளை தான்.அதுக்கு வழிய பாரு. நா அங்கே வர வரைக்கும் உன்கிட்ட பேச மாட்டேன். உன்னியல்பை தொலைக்க நா விரும்பல. பை என்று வைத்து விட்டான். அலைபேசியை வெகுநேரம் வெறித்து பார்த்தவளுக்கு புரிந்து போயிற்று அவன் மிகவும் தீர்மானமாக தான் சொல்கிறான் என்று. உள்ளூர அழுகை வந்தபோதும் அடக்கி கொண்டவளாக, இனியாவது நன்றாக
படிப்போம் என்று முடிவு செய்து கொண்டவளுக்கு அவள் அத்தான் இனி நினைவுகளிலிருந்து தன்னை மீட்டு எடுத்துக் கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை. முதல் வருடம் முழுவதும் மார்க்குகள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், இரண்டாம் வருடத்தில் முதல் செமஸ்டர் முடிந்துவிட்டது. அடுத்த செமஸ்டரிலும் விட்டுவிட்டால் கண்டிப்பாக மூன்று வருட மதிப்பெண்களை கூட்டும்போது இரண்டாம் வகுப்பு தான் கிடைக்கும். எப்படியோ தன்னை கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்து படிப்பிற்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள். தாமோதரன் மூலம் ரங்கன் அவளைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்கிறான். இருவழி பாட்டி தாத்தா அத்தை மாமா இன்று எல்லோருடனும் சந்தோசமாக வாரம் ஒருமுறை பேசும் ரங்கன் அவளிடம் மற்றும் பேசுவதை அறவே நிறுத்திவிட்டான். அவளை நிலை அவனுக்கு புரியாமல் இல்லை. இது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற தெரியாமலேயே பல வருடங்களாக மனதில் அவள் மீதான காதலை பொத்தி பொத்தி வைத்திருந்தவன் அவன். அவனுக்கு இல்லாத மன வலியா? அவள் சொல்வதற்கெல்லாம் அசைந்து கொடுத்தது தவறு என்பது ரங்கனின் இப்போதைய எண்ணம். படிக்க வேண்டிய வயதில் இதெல்லாம் தேவையா என்று கூட அவனுக்கு சலிப்பு வந்துவிட்டது. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காது போல இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து தன் மனதில் இருப்பதைச் சொல்லி இருக்கலாம். இப்போதைய சொன்னதுதான் அவளது இந்த மாற்றத்திற்கு பெரிய காரணமாகிப் போயிற்று என்ற எண்ணம் அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்டது.

அவளது மனம் போல் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவது எல்லா பெரிய விஷயமாக இதற்கு இவ்வளவு அழுத்தம் கொடுத்து யோசிக்க வேண்டாமா என்று யோசித்தாலும்,இன்னொரு பக்கம் கணவன் மனைவி உறவை உறுதி செய்வது கணவன் மனைவியின் நெற்றியில் குங்குமம் தானே, தாலிக்கயிறு என்ற ஒன்று வெளி உலகத்தில் பெண்ணின் திருமணத்தை அறிவிக்க தானே, குங்குமம் தானே இருவரது உறவையும் உறுதிப்படுத்துகிறது. இந்த உறவு எவ்வளவு தூரம் சரியானது என்றெல்லாம் தனிமையில் அவனுக்கு குழப்பம்தான் அதிகரித்தது. மனதளவில் இருவரும் கணவன் மனைவி தான். அதற்கு ஊரை கூட்டி சாட்சி சொல்ல வேண்டியதில்லை. ஆனால், படிக்கும் நேரத்தில் எல்லோரும் இந்தப் பெண் என்னையே நினைத்துக் கொண்டிருந்தால், கல்வி என்றானாலும் முக்கியம் ஆயிட்டே... என்று மனதினுள் மருகினான்.
ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் கூட இவர்களது காதல் தோற்கக் கூடும் என்று தெரிந்திருந்தால், காந்தர்வ திருமணம் செய்து கொண்டதை அவளே மறுக்கக் கூடும் என்று வருங்காலத்தில் அறியும் சக்தி அவனுக்கு இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை பாதை முள்ளால் இல்லாமல் மலரினால் அலங்கரிக்க பட்டிருக்கலாம். இவர்கள் வாழ்க்கையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறதா இல்லை நரகத்திலா...


















 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top