JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 26

Subageetha

Well-known member
சாதுர்யா படிப்பில் தன்னை முழுமையாக நுழைத்துக் கொண்ட போதிலும், ரங்கனின் ஞாபகங்களில் இருந்து வெளிவந்த படிப்பை உள்ளே செலுத்துவது அவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. ரங்கன் இப்போதெல்லாம் அவளிடம் சுத்தமாகவே பேசுவதை தவிர்த்து வருவதன் பலனாக அவனது கோபத்தின் அளவு அவளுக்கு தெளிவாக புரிகிறது. இப்போது இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளும் ரங்கன் அந்தப் பெண்ணின் காதலனோ கணவனோ இல்லை. அவள் மீது ஆழமான பிரியம் வைத்திருக்கும் அவளது அத்தான். அவனுக்கு இந்த பெண் ஒழுங்காக படித்தாக வேண்டும். சமூகத்தில் அவளுக்கென்று ஒரு இடம் இருத்தல் வேண்டும். படிப்பதற்கு ஏதேனும் லடாய் செய்தால் சிறுவயதிலிருந்தே கணக்குப் பாடத்தை எடுத்துக் கொண்டு இவளுடன் அமர்ந்து விடுவான் ரங்கன். படிப்பு என்றும் அமர்ந்துவிட்டால் அவன் கடுமையான ஆசிரியன். இப்பொழுதும் இவளிடம் அதே கடுமையை காட்டுகிறான். பெண் உள்ளுக்குள் தவித்தாலும், அவன் அவள் மீது கொண்டிருக்கும் வாஞ்சையை நினைத்து பெருமை கொள்கிறாள். முதல் வருட பாடங்களிலிருந்து எடுத்து அவற்றை ஊன்றிப் படித்து விட்டு இரண்டாம் வருட பாட புத்தகங்களை எடுத்து வைத்தாள். இப்பொழுது படிக்கும்போது பாடங்கள் என்றால் புரிவது போல் இருந்தது. கூடவே தன் அருகிலேயே ஆஸ்தானம் அமர்ந்திருப்பது போல் யோசனை செய்து கொண்டே படித்ததனால் இன்னும் கொஞ்சம் சுலபமாகவே பாடங்கள் புரிந்தன. தன்னை நினைத்து தன் மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டாள் சாதுர்யா.

தில்லியில் இருந்தவரை நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை யாருக்கும் அஞ்சாத மனம் என்றெல்லாம் பாரதியின் புதுமைப் பெண்ணாக இருந்தவள், இன்று ஏன் இப்படி ஆகிவிட்டாள் என்பது அவளுக்கே புரியாத புதிராக இருக்கும் போது வெளியில் அவள் மாற்றத்தைப் பற்றி பேசுபவர்களை என்ன சொல்வது?
சாதுர்யாவிற்கு நிச்சயம் தெரியும் ரங்கன் விரும்பியது அந்தப் பெண்ணைத் தான். இப்படி காதலாகி கசிந்துருகி நிற்கும் பெண்ணை அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. தன்னைத் தொலைத்து வாங்கப்படும் காதலில் அவனுக்கு உடன்பாடு இல்லை. 'நீ நீயாக இருக்கணும் சாதுர்யா, எல்லாத்துக்கும் என்னோட முகத்தை பார்ப்பதை முதல்ல நிறுத்து ' என்று அவன் வெளிநாடு செல்லும் முன்பே சத்தம் போட்டு இருந்தான். அவள் தன் இலட்சியங்களை விட்டுவிட்டு தன்னுடன் வர வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் பார்த்து பிறந்த குழந்தை அவள். அவளை ரங்கன் முழுமையாக காதலிப்பதால் தான் அவள் மீதான பொறுப்பையும் அதிகமாக காட்டுகிறான். அவன் வெளிப்படுத்தும் விதம் வழக்கத்திற்கு மாறாக இருக்கலாம். ஆனால், காலம் எவ்வளவுதான் மாறினாலும் மனம் ஒரு முறை தடம் மாறிவிட்டால் வாழ்க்கைப் பாதையும் நிச்சயம் மாறிவிடும்.
காதலும் திருமணமும் நமக்கு எந்தவிதத்திலும் முன்னேற்றத்தை தடை படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது. ரத்னாவும் கூட திருமணத்திற்குப் பிறகுதான் தனது இளங்கலை பட்டப் படிப்பை முடித்து இன்று பல இளம் சேர்ந்து விட்டாள்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் மட்டும் பெண் இருந்து பயனில்லை. அவனுடனேயே அவளும் பிரயாண படவேண்டும். அதற்குப்பின் எப்பொழுதும் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ரங்கனின் அம்மா ரேணுகா தன் கணவனின் தொழிலுக்கு தன்னால் இயன்றவரை நிர்வாகத்தில் உதவி செய்கிறாள்.
ரங்கன் மற்றும் சாதுர்யாவின் பாட்டி லட்சுமி அம்மாள் கணவனுக்கு துணையாக தான் இருக்கிறாள். அவர் சிறந்த நிர்வாகி என்று தாமோதரன் நினைக்கும் அளவிற்கு.
இப்படி பெண்களை பார்த்தவனுக்கு மனதின் எதிர்பார்ப்புகள் எத்தகையதாக இருக்கக் கூடும்?
அவன் யோசிப்பதில் என்ன தவறு?அவள் மீது தீராக்காதலை கொண்டுள்ளவன் அவள் தனக்குக் கீழே இருக்கவேண்டும் என நினைப்பானா என்ன?

பெண்ணை ஆண் அடிமையாக்கலாம்... அன்பால், காதலால்!அப்படி பார்த்தால் அவளும் அவனும் ஒருவருக்கொருவர் அடிமைகள்தான். இருவரின் உயிர் மூச்சு உள்ளவரை. அவர்கள் பிரிவை சந்தித்தாலும் காதல் குறையாது.

சாதுர்யா பிடிவாதமாக படித்தாள். அவனை, அவனது கோவத்தை வெற்றி கொண்டு தன்னுள் அவனை சிறை கொள்வதற்காக. நேற்றும் அவளுக்கு ரங்கனின் கோபத்தை கண்டால் பயம் தான். இன்றும் வரும் காலத்திலும் கூட அவனுக்கு கோபத்தைக் கண்டு அவளுக்குள் ஒரு நடுக்கம்தான். ரங்கனுக்கு எப்போதும் கோபம் வெளிவராது. வந்துவிட்டால்... அது வேறுதான்.

அந்த செமஸ்ட்டரில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் அவள் மனதிற்குள் நம்பிக்கை காலூன்றி விட்டது. தனது அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த சாதுர்யா தனது மதிப்பெண்களையும் ரங்கனுக்கு இமெயில் செய்துவிட்டாள் . தனிமையில் இருக்கும்போது ஆற்றங்கரையில் அவன் கொடுத்த முத்தத்தின் எச்சங்கள் அவளை தூங்கவிடாமல் செய்கிறது. தன்னை விட்டுவிட்டு அவன் எப்படி இருக்கிறான் எனக்கு மட்டும் ஏன் இப்படி... என் சுயத்தை தொலைத்து எப்படி அவனை மட்டும் யோசிப்பவள் ஆனேன் என்ற பெண்ணின் மனதில் எக்கச்சக்க கேள்விகள். காமனின் கணைகளை தனியாக என்று சமாளிக்க முடியாமல் திணறினாள் பாவை. இரவுகளில் அவனின் அணைப்புக்காக, பகல்களில் அவனின் அழைப்புக்காக ஏங்கினாள் அவள்.
நாளை வேலை முடித்து வந்தவனுக்கு அவளது இமெயில் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. யூ நாட்டி என்று கொஞ்சியவன் மதிப்பெண்களை பார்த்துவிட்டேன். இது தொடர வாழ்த்துக்கள் என்று மட்டும் பதிலுக்கு ஈமெயில் செய்துவிட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டான். அவனுக்கும் பரீட்சைகள் நெருங்கிக்கொண்டிருந்தது. இரவும் பகலும் அவன் படித்தாக வேண்டும். என்றடா தன் மனைவியை பார்ப்போம் என்று அவன் மனமும் பேயாட்டம் தான் போடுகிறது. இளமையின் வேகம், இரவிலும் பகலிலும் அவள் துணையை மனம் தேடுகிறது. அவளை தன்னுடன் இறுக்கிக் கொள்ள, அவளின் கழுத்தில் வாசம் பிடிக்க, அவளின் மடியில் கிறங்கி கிடக்க இளமை அவனை அலைக்கழிக்கிறது. முத்தத்தில் பெண்மை அவனை பாடாய் படுத்துகிறது.
ஆனால், படித்து முடித்துவிட்டு ஒரு வருடம் ஸ்பெயின் சென்று அத்தையிடம் கொஞ்சம் தொழில் கற்றுக் கொள்ளலாம் என்று அவன் யோசித்து இருக்கிறான். என்றும் ஏட்டுச்சுரைக்காய் மட்டும் கறிக்கு உதவப் போவதில்லை அனுபவ பாடமே ஒருவனை செதுக்கும் என்ற தீவிர நம்பிக்கை அவனுக்கு உண்டு. மேற்கத்திய நாடுகள் முழுவதும் தனது தொழிலை பரப்ப வேண்டும் என்ற வெறி அவனுக்குள். பெண்ணின் காதல் அவனை போராடி ஜெயிக்க தூண்டுகோள். யார் சொன்னது காதலில் விழுந்தவர் வாழ்க்கையிலும் விழுவார் என்று... 'நான் வெற்றிக்காக பிறந்தவன் என்று அடிக்கடி மனதிற்குள்ளும் சொல்லிக் கொள்வான்.
ஆனால், அவன் வாழ்க்கையில் அவன் சந்திக்க போகும் பெரிய தோல்வி அவனை எங்கு கொண்டு சேர்க்கும்... அவன் கரை சேர வேண்டுமென்று நான் யாசிக்கிறேன்.
**********************************************************

உமாவும் சரி,ராகாயியும் சரி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள். உமாவுக்கு வெளி உலகம் புதிதாய் தெரிகிறது.
ராகாயியிக்கு வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கும் நேரம் இது. உமாவின் வெற்றிக்கு அருணாச்சலம் காரணமென்றால் ராகாயிக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு தேடிக் கொடுத்தது சிவம்.
இப்போதெல்லாம் வீரனும் ராக்காயியும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டது. அவளின் பழைய வாழ்க்கை பற்றி அவனுக்கு எந்த கவலையும் இல்லை. அவளது இப்பொழுது வாழும் நேர்மையான வாழ்வு அவனுக்குள் மன திருப்தியை கொடுக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், கட்சிக்குள் நுழைந்த பிறகு அவளுக்கு வேறு விதமான தொந்தரவுகள் ஆரம்பமாகிவிட்டது. அவளது பெண்ணும் வளருகிறாள். ராக்காயி மனதுள் ஆயிரம் பயங்கள். அவளது வாழ்க்கை பற்றியும் தனது கடந்த காலத்தை பற்றியும் அவள் எண்ணி மருகாத நாட்களே இல்லை. அது மனதில் கலகத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ஒரு பெண்ணாக பெண்கள் சந்திக்கும் ஆயிரம் கொடூரங்கள் அவளுக்கு தெரியும். இப்பொழுது அவளுக்கும் அவள் பெண்ணுக்கும் தேவை தகுந்த துணை. வீரனை அவள் மனம் விரும்புகிறது தான். ஆனால் நிஜம் வேறு.

உமாவுக்கு தேர்தலில் கிடைத்த வெற்றி ஒரு பக்கம் குருவின் மனதில் அமிலத்தை ஊற்றினாலும் இன்னொரு பக்கம் மனைவியின் பதவியை வைத்து தான் பெறும் லாபங்கள் என்ன என்று அவன் மனது கணக்கிட தொடங்கிவிட்டது.
அவனால் முடிந்த அளவில் மனைவியின் பெயரை வைத்து எதை எதை சாதித்து கொள்ள முடியுமோ அதை எல்லாம் செய்ய தொடங்கி விட்டான். ஆற்றங்கரையில் மணல் கொள்ளை ஆரம்பித்து, கஞ்சா விற்பனை போதைப்பொருள்கள் கடத்துவது பெண்களைக் கூட சமயத்தில் வெளிநாடுகளுக்கு விற்பது என்று அவன் அக்கிரமங்கள் அரக்கனை விட மோசமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனைவியின் பதவி வைத்து இப்பொழுதெல்லாம் அவனை கட்டப்பஞ்சாயத்து செய்து வைக்கவும் அழைக்கிறார்கள். சமயத்தில் தனது அப்பா பங்கேற்கும் கூட்டங்களில் கல்லெறிதல் அழுகிய முட்டையை, தக்காளியை மேடை நோக்கி வீசுதல் போன்ற விஷயங்களையும் தனது ஆட்களை வைத்து செய்கிறான். இது அருணாசலத்திற்கு சிவனுக்கும் தெரியும் தான். இதை வைத்து ஆளும் கட்சி மீது வீண் பழிகளை சுமத்தி அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் அருணாச்சலம்.

*****************************
ரத்னா தன் தங்கை சாந்தாவிடனும் அம்மாவுடனும் வாரம் ஒரு முறை பேசுவது அவள் வழக்கம். சமயத்தில் சங்கரனும் அவர்களுடன் பேசுவான். அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது ரத்னா குழந்தை மீதான தனது ஏக்கத்தை பற்றி சொல்லிக்கொண்டே அழுது விட்டாள். அவள் அழுவதைப் பார்த்த சங்கரனுக்கும் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்துவிட்டது. இதை ஸ்கைப்பில் பார்த்துக் கொண்டிருந்த சாந்தாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.ரத்னாவை விட சிறியவள். திருமணம் முடிக்காதவள் அவர்களுக்கு என்ன சொல்லிவிட முடியும். அந்தரங்கத்தையும் பேசுவதற்கு அவளால் முடியாது. இருந்தாலும் ஒருவாறு தன்னை தயார்படுத்திக்கொண்டு
"அக்கா நா சொல்றத கேளுங்க. குழந்தை எப்போ பிறக்குமோ அப்ப பிறக்கட்டும். உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் இளமை இருக்கு. மனசு போட்டு அலட்டிக்காதீங்க. ரெண்டுபேரும் ரிலாக்ஸா இருங்க. பீச்சுக்கு போயிட்டு வாங்க. ரெண்டு பேரும் நிறைய ஒண்ணா நேரத்தை செலவு பண்ணுங்க. குழந்தைய பத்தி பேசாதீங்க. நீங்க ரெண்டு பேரும் குழந்தை பெத்துக்க கல்யாணம் பண்ணிக்கல. ஒண்ணா வாழ்க்கை வாழ கல்யாணம் பண்ணி இருக்கீங்க. புரிஞ்சுக்கோங்க கா"
என்றுவிட்டு அலைபேசியை வைத்துவிட்டாள். அவள் சொல்வதில் இருப்பதில் இருக்கும் நியாயம் இருவருக்குமே புரிந்தது. கொஞ்ச நாட்களாய் குழந்தை ஏக்கத்தில் அவர்கள் செய்ய விட்டிருந்தது என்ன என்பதும் புரிந்துவிட்டது. ஊர் உலகத்துல
இருக்குறவங்களுக்காக நாம வாழ முடியாது. காதலை விட்டு கல்யாண வாழ்க்கை ஜெயிக்காது, இனிமே நாம காதல தொடர்வோம் ரத்னா என்றான் சங்கரன்.
அதன் பிறகு இருவரும் புதிதாய் திருமணமான ஜோடி போல தங்களை பாவித்துக் கொண்டார்கள். வாழ்க்கை அவர்களுக்கு ஆனந்தமாய் போய்க்கொண்டிருந்தது. கணவனது அன்பில் மூழ்கி எழுந்தாள் ரத்னா. குழந்தை பற்றி இருவருமே யோசிப்பதில்லை. திலகாவும் திலகாவின் கணவரும் அப்ப போது சங்கரனின் மனதை மாற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் அவன் மனைவி விட்டு நகர்வதற்கு கூட தயாராக இல்லை. இவையெல்லாம் சேர்ந்து திலகாவின் மீதான வன்மையை கூட்டி விட்டது திலகாவின் குடும்பத்தினருக்கு. சங்கரன் இவர்களுடன் வந்து தன் மனைவியுடன் வாழ்வதற்கு தயாராக இல்லை. ரத்னாவிற்கு நல்ல சம்பளம் வருகிறது தான். ஆனால் அவளும் தனது சம்பளம் பற்றி எல்லாம் திலகா குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில்லை . மொத்தத்தில் திலகா குடும்பத்தைப் பொறுத்தவரை ரத்னாவை சங்கரனிடமிருந்து பிரிப்பது தான் முக்கிய தேவை என்றாகிவிட்டது.
இரண்டாம் திருமணம் பற்றி வீட்டிற்கு வந்திருந்த திலகாவும் திலகா கணவரும் பேசப் பேச ரத்னாவுக்கு கண்களில் கண்ணீர். இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சங்கரனுக்கு டென்ஷன் அதிகமாகி வீட்டில் பெரிய சண்டை. இப்பொழுதுதான் ரத்னாவும் சங்கரனும் மனதிற்கு துன்பம் தரும் விஷயங்களை தூர ஒதுக்கிவிட்டு இன்பமாக வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். அது பொறுக்காதது இப்படி ஒரு சண்டை. எப்படியும் சங்கரன் மறுப்பான் என்று தெரிந்தே, வீடு தேடி வந்து சங்கரனிடம் திலகா இந்த பிரச்சனையை ஆரம்பிக்கிறாள். கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருப்பது அவளுக்கு சற்றும் பொறுக்கவில்லை. குழந்தையை மையமாக வைத்து பேசும் போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் இருக்கும் சந்தோஷமான நிலை மாறிவிடும் என்பது அவளின் கணக்கு. இது அடிக்கடி நடப்பதுதான். என்றும் அதுதான் நடந்தது.
தமிழ்நாட்டிற்கு லோடு ஏற்றி செல்ல வேண்டிய டிரைவர் வராத காரணத்தினால் இன்று சங்கரனே வண்டியை எடுப்பதாக இருந்தது. திலகா தான் வந்த வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு கணவருடன் கிளம்பிவிட்டாள். சங்கரனுக்கு தான் உள்ளூர பதட்டம். ரத்னா எவ்வளவு சொல்லியும் தானேதான் போயாக வேண்டும் வேறு யாரையும் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டு சங்கரன் கிளம்புவதற்கு தயாராகிறான் முதன் முறையாக தன் மனைவியின் பேச்சை மிரி கொண்டு அவன் எடுக்கும் முடிவு இது .
ரத்னா விற்கு ஏனோ கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. வயிற்றில் ஏதோ பிசையும் உணர்வு. அவளை மெல்ல மெல்ல சமாதானம் செய்ய முற்படுகிறான் கணவன். அவன் கிளம்பி ஆகவேண்டும். இருவரும் இரவு உணவு சாப்பிட உட்காருகிறார்கள். வழக்கம்போல தன் தட்டில் சோற்றைப் பிசைந்து கவளங்களாக்கி மனைவியின் வாயில் ஊட்டி விடுகிறான் கணவன். ரத்னாவினால் அதை விழுங்க முடியவில்லை. திலகா வந்து செல்லும் நேரங்களில் இப்படித்தான். சங்கரனால் பெற்றவளை வராதே என்று சொல்ல முடியாது. வாயை திறக்காமல் இருந்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டான்.

சாப்பிட்டுவிட்டு சங்கரன் கிளம்ப, தலையில் பல்லி வேகமாக விழுகிறது. அது என்னவென்று கூட பார்க்காமல் வேகமாக வெளியே செல்கிறான். பின்னாடியே வந்த ரத்னாவுக்கும் கால் தடுக்கி நகம் பெயர்ந்து அங்கேயே அமர்ந்து விடுகிறாள்.

விடிகாலையில், அவளது அலைபேசி மணி எழுப்ப சங்கரன் தான் அழைக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவசரமாக அலைபேசியை காதில் வைக்கிறாள்.
மறுநாள் காலையில், சங்கரன் உடம்பு முழுக்க கட்டுகளுடன் நடுவீட்டில் படுக்க வைக்கப்படுகிறான். தலைமாட்டில் யாரோ விளக்கு ஏற்றி வைக்கிறார்கள். விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டு தாங்கள் இருவரும் சாப்பிட இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள் ரத்னா. நடந்தது எதுவும் அவளுக்கு புரியவில்லை. திலகா எல்லாவற்றுக்கும் காரணம் ரகுநாதனின் என்று பழி சுமத்துகிறார்கள். அது எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெண் இல்லை. அவள் அழவில்லை. சிலைகள் என்றும் அழுவதில்லை. அவள் அலுவலகத்திலிருந்து உடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அவளை அணைத்துக் கொண்டு அழ வைக்க முயற்சி செய்கிறார்கள். சிவனும் கூட வந்துவிட்டார். அவருடன் உமாவும் கூட வந்து இருக்கிறாள். ரத்னா என்ன தான் அதிர்ச்சியில் உறைந்து இருந்தாலும், அவள் உடலோ தன் வேலையை செவ்வனே செய்தது. அவள் வயிற்றில் பூத்திருந்த சிறு மொட்டு ரத்தமாய் கீழே. ஆனால் அதை உணரும் நிலையிலும் கூட அவள் இல்லை. அதைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. எல்லோரும் கண்ணீரில் கரைய, உயிரை உருக்கி விட்ட நிலையில் ரத்னா.

பத்து நாட்கள் சடங்கில் கூட கலந்து கொள்ள விடாமல் ரத்னாவை விரட்டியடித்தார்கள் திலகாவின் குடும்பத்தினர். சங்கரனின் உடல் எடுத்த உடனேயே கிளம்பி விட்டாள் உமா. அவளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்ப வருவதாக சொல்லிவிட்டு சென்ற சிவனுக்கும் திருச்சி செல்லும் போது உடலுக்கு சற்று முடியாமல் போக வரும் வழியிலேயே சிவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள் உமா. ரத்னாவின் வாழ்க்கை இப்படி முடிந்து விடும் என்று உமா கனவில் கூட நினைக்கவில்லை. இதற்காகவா இந்த பெண்ணுக்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து அனுப்பி வைத்தோம் என்ற எண்ணம் அவளை கூறு போட்டது. இந்த சிறுவயதில் அடுத்து இந்த பெண் என்ன செய்யப்போகிறாள் என்று துடித்தது உமாவின் மனம்.

பத்து நாட்கள் எப்படியோ அங்கு சமாளித்து இருந்தவளுக்கு, சங்கரன் உடன் வாழ்ந்த வீட்டிற்குள், நுழைவதே பெரும் பாடாகி போயிற்று. கணவனுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கை அவளை அணு அணுவாக கொன்றது. அவன் கொடுத்து விட்டுச் சென்ற ஈர முத்தங்களும் காதல் மொழிகளும் அவளை மூச்சுத் திணற வைத்தது.
திலகாவின் வீட்டினர் சங்கரனின் சொத்துக்கள் எதிலும் ரத்னாவுக்கு பங்கு கிடையாது என்று அவளை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். சங்கரனும் அதற்கு ஏற்றார்போல் தொழில் எல்லாவற்றிலும் திலகாவின் பெயரில்தான் தொடங்கியிருந்தான். சிவமும் உமா குடும்பத்தினரும் தமிழ்நாட்டில் அவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் அவர்களாலும் கூட ஒன்னும் செய்ய முடியாது.

கணவனே போயாயிற்று. அவன் கொடுத்திருந்த கருவும் போயிட்டு. இனி இந்த சொத்துக்களை வைத்துக்கொண்டு மட்டும் என்ன செய்வது என்ற மனநிலையில் இருந்தாள் ரத்னா . அவளுக்கு போராட சுத்தமாக இஷ்டமில்லை.

கணவனுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த திருச்சூரில் இருப்பதற்கும் ரத்னாவால் முடியவில்லை.

அம்மாவும் தங்கையும் கனடாவிலிருந்து வர இயலாத சூழ்நிலை. சிவனுக்கும் திருச்சூர் வருவதற்கு அந்த சமயத்தில் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சங்கரனின் மரணம் அவர் தலையில் பெரிய இடியை இறக்கி இருந்தது. ரத்னா அவருக்கு துணையாக இருக்க வேண்டியவர் மருத்துவமனையில். இந்த சமயம் நிஜமாகவே அனாதையாகி போனாள் ரத்னா.

அடுத்து என்ன என்று ரத்னா யோசித்துக் கொண்டிருக்கும்போது, சென்னைக்கு மாற்றலாகி உத்தரவு வந்தது.

இந்த உத்தரவு தானாக வந்ததா... இல்லை தடிகொண்டு கனிய வைக்கப்பட்டதா?

தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று உமா இவளை சங்கரன் என்னும் காதலை வைத்து பூட்டி இருந்தாள். ஆனால் இனி அந்த பூட்டி இல்லை.

இனி ரத்னா நிலை... நெஞ்சு நடுங்குகிறது.






















 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top