JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 27

Subageetha

Well-known member
குழந்தை வளர வளர இந்த வாழ்க்கையில் இதுவே பெரிய சந்தோஷம் என்று மௌனமாகவே இருக்க பழகிக் கொண்டாள் உமா. ஸ்கந்தன் தனது விளையாட்டால், அறிவார்ந்த அவனது பேச்சால் வீட்டிலிருந்து பெரியவர்கள் எல்லோரையும் கட்டிப் போட்டான். பள்ளியிலும் நன்றாக படிப்பவன் என்பதால் அவன் மீது இதுவரை எந்த புகார்களும் பள்ளியிலிருந்து வரவில்லை. அரசியல் தொடர்பு கொண்ட குடும்பம் என்பதாலோ என்னமோ அவனுக்கு நண்பர்கள் மட்டும் அமையவில்லை. அதற்கும் சேர்த்து வீட்டில் அம்மா பாட்டி இருவரின் உடனேயே உரையாடுதல், விளையாட்டு என்று நேரத்தை போக்குதல்,பாட்டி தாத்தாவிடம் கதை கேட்டல் என்பது போன்ற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். தாத்தா அருணாச்சலம் இப்போது அடுத்த தேர்தல் வேலையில் மும்மரமாக இருப்பதாலோ என்னவோ பேரன் மீது அவ்வளவு தூரம் ஈடுபாட்டை காண்பிக்க முடியவில்லை. இவர்களது குடும்பம் இன்னும் சென்னை வரவில்லை. திருச்சியில் தான் ஸ்கந்தனின் படிப்பு. தினமும் ஸ்கந்தன் பள்ளி செல்லும் போது அம்மாவும் அவனுடன் காரில் சென்று விட்டு வருவாள். அம்மா பிள்ளை இருவருக்கிடையே பாசத்தின் முடிச்சு இறுகி இருந்தது. இவ்வளவு காலத்திற்கு பிறகும் கூட குரு திருந்துவதாக இல்லை. மனைவிடம் திரும்புவதாகவும் இல்லை. அவளிடம் தனிச்சிறப்பாக மற்ற பெண்களிடம் இல்லாதது எதுவும் இருப்பதாகவும் அவனுக்கு தோன்றவில்லை.
உமா ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கிறாள். ஆனால் பெயரளவுக்குத்தான். அவளுக்குள் இருக்கும் சுயத்தை தேடித்தேடி அவளும் களைத்து போனாள் . வெறும் அவளிடம் கொடுக்கப்படும் கோப்புகளில் மட்டும்தான் கையெழுத்து போட அவளுக்கு அனுமதி. மற்ற எல்லா விஷயங்களையும் கட்சி கவனித்துக் கொள்ளும். அவளுக்கு தன் மாமனார் சொன்ன படிக்கு இந்த தேர்தலில் நின்றிருக்கக்கூடாது என்று காலம் கடந்து தான் தோன்றியது. அருணாச்சலம் அவரது பதவியை தன் முழு அரசியல் செல்வாக்குக்குள் முடக்கி விட்டிருந்தார். உமாவால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. பல விஷயங்கள் அவள் கையை மீறி சென்றுகொண்டிருந்தது. அவளுக்கு தெரிந்திருந்தும் அவளால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை. வெறும் பொம்மை போல் இயங்கிக் கொண்டு இருந்தாள். அவள் தலையிடக் கூடிய ஒரே விஷயம் ஸ்கந்தன் தான். அன்னபூரணிக்கும் இப்போதெல்லாம் உடம்பு அவ்வளவாக சரியில்லை. கொஞ்ச நாளாக வெகுவாகவே மனதை அலட்டி கொள்கிறாள். காரணங்கள் யாருக்கும் விளங்கவில்லை.

சிவனை கூட்டிக்கொண்டு எப்பொழுதும் கணக்கு பார்க்க தோப்புகளுக்கு சென்று பார்வையிடுவது அனுப்புவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இதையெல்லாம் செய்வதற்கு சிவனால் அவளுடன் கூட வர முடிவதில்லை. முன்பெல்லாம்
உமாவையாவது கூட கூட்டி செல்ல முடியும். இப்போதெல்லாம் அலுவலகம் செல்வது அத்துடன் குழந்தையின் பொறுப்பு என்று உமாவை நேரம் தனக்குள் இழுத்துக் கொண்டது.

இதுபோல், இந்த முறையும் தான் மட்டுமே டிரைவரை அழைத்து கொண்டு மாந்தோப்புக்கு கணக்கு வழக்குகள் பார்க்கவந்த அன்னபூரணி கண்டது குருபரன் மது -மாது என்ற இருவித போதைகளுடன் தன்னை மறந்து லயித்திருந்தது தான். எப்பொழுதும் குரு இங்கு வரும் பொழுதெல்லாம் தோட்டத்திற்கு காவல் இருக்கும் காவலாளியை விடுப்பு கொடுத்து அனுப்பி விடுவான். வெளி உலகத்திற்கு தெரியாமல் செய்ய வேண்டிய பல விஷயங்களை அவன் செய்வது இங்கிருந்துதான்.
பெற்ற மகனை எந்த கோலத்தில் காணக்கூடாதோ அந்த கோலத்தில் கண்ட தாய்க்கு, இத்தனை வருஷங்கள் ஆகியும் மகன் திருந்தவில்லை என்பது அடி ஆழம்வரை ரணமாக தாக்கியது. ஏற்கனவே உடல் சோர்வு, காரணம் தெரியா மனச்சோர்வு... இத்துடன் இதனைக் கண்டவளுக்கு படபடப்பாய் இருக்க ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு காரில் வீடு திரும்பி விட்டாள்.

உமாவும் குருபரனும் ஒற்றுமையாக குடும்பம் செய்யவில்லை என்பது அன்னத்திற்கு தெரியும். ஆனால் மருமகள் என்றுமே எதையுமே காட்டிக் கொண்டதில்லை. குருவை இதுவரை உமா குறை சொல்லி யாரும் கேட்டிருக்க முடியாது. அப்படி என்றால் மருமகளின் சம்மதத்தின் பேரில் தான் இத்தனையும் நடக்கின்றது என்ற யோசனைக்கு சென்றுவிட்டாள் அன்னம். பிறகு தன்னைத்தானே தேற்றியவாறு தன் கணவன் மற்ற பெண்களுடன் கூத்தடிப்பது எந்த பெண்ணாலும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தவளாய், வெகு காலம் கழித்து, தன் மருமகளுக்கு இந்தத் திருமணத்தின் மூலம் தான் பெரிய துரோகம் இழைத்து விட்டோம் என்ற எண்ணமே அன்னத்திற்கு நெஞ்சு வலியை வர வைத்து விட்டது. ஒருவாரம் குழப்பத்துடனேயே சுற்றிக்கொண்டிருந்த அன்னம் துக்கம் தாங்காமல் தூங்கும் பொழுது உயிர் உடலை விட்டு சென்றுவிட்டது. மனதில் நினைப்பவற்றை எல்லாம் முன்புபோல் அருணாசலத்திடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது கூட இன்னொரு காரணமாக இருக்கலாம். அரசியலுக்காக அருணாச்சலம் இதுவரை இரண்டு விஷயங்களை பலி கொடுத்துவிட்டார். ஒன்று குருவின் வாழ்க்கை. இதோ இப்பொழுது அன்னத்தின் உயிர்.
என்றுமே அன்னபூரணி தன் மருமகளிடம் மனம் விட்டு பேசியது கிடையாது. 'அவள் அடிமனதில் 'தான்'மாமியார், அதிலிருந்து கீழே இறங்கி வர கூடாது என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது'. அன்னபூரணி எவ்வளவோ நல்லவள் தான். ஆனாலும், அவள் முடிவு கணவன்- மகன்- மருமகள் -பேரன் பணம்- நகைகள் சொத்து அந்தஸ்து -எல்லாமும் இருந்துகூட மன நிம்மதியின்றி துயரத்தில் தனிமையில். அவ்வளவு சொத்துக்களையும் கட்டி ஆளத் தெரிந்த அந்த பெண்மணிக்கு மகனை திருத்தி கொண்டுவரும் திறமை மட்டும்
வாய்த்திருக்கவில்லை. அதில் அவளது உயிர் பறிபோய் விட்டது.

வழக்கம்போல் சாந்தாவும் பாறு குட்டியும் இந்தியா வரவேண்டாம் என்று உமா சிவன் மூலம் கண்டிப்பாக சொல்லிவிட்டாள். உமா அவள் மனதில் ரத்னா சென்னை வந்திருப்பது பற்றிய க்லேசம் உண்டு. தன் அப்பாவுடன் ரத்னா இங்கு வந்துவிட வேண்டாம் என்று உமாவுக்கு ஆயிரம் பிரார்த்தனைகள் மனதில். ஆனால் அவற்றையெல்லாம் வாய்விட்டு சொல்வதற்கு அவளுக்கு இஷ்டமில்லை. மகனை கையிலேயே பிடித்துக் கொண்டு மாமியாருக்காக கடமைகளை நிறைவேற்றினாள் அந்த பெண். குரு அவன் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு எப்படி அம்மாவின் இறப்பு பற்றி தகவல் தெரிவிப்பது?
மனைவியின் இழப்பில் தன்னை மறந்து அமர்ந்துவிட்டார் அருணாச்சலம். இறுதிக் காரியங்களை யார் செய்வது என்ற சலசலப்புக்கு நடுவே தானே தனது மாமியாருக்கு கொள்ளி இடுவதாக சொல்லிவிட்டாள் உமா. சிவன் ஸ்தம்பித்து போனார். சிவனுடன் வந்திருந்த ரத்னாவுக்கு தன் அக்காவைப் பார்த்து உடம்பு சிலிர்த்தது. உமா எவ்வளவு சொல்லியும் ரத்னா இந்த விஷயங்களில் இதற்குமேல் விட்டுக்கொடுக்க முடியாது என்றுவிட்டு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கு வந்து இருந்தாள். இரண்டு பெண்களிடமுமே மறுத்துக் கூறும் தைரியம் சிவன் அவருக்கு இல்லை. அவருக்கு மட்டுமல்ல...அங்கு இருக்கும் யாருக்குமே அருணாச்சலத்தின் மருமகளிடம் பேசும் தைரியம் இல்லை.
தர்ம சாத்திரம் உறவுகளில் முப்பத்து ஆறு பேருக்கு கொள்ளியிடும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. நெருங்கிய உறவுகளான மகன், மகள், கணவன், மனைவி,மகன் அருகில் இல்லாவிட்டால் மருமகளும் கூட கொள்ளியிடலாம். காலமாற்றத்தில் பல விஷயங்கள் மாறியது போல, பெண்ணுக்கான இந்த அதிகாரமும் மறுக்கப்பட்டு விட்டது. இதுபோல் நடக்கும் விஷயங்கள் தர்மத்திற்கு புறம்பானதாகவும், புரட்சிகரமான விஷயங்களாகவும்
சித்தரிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டது. சமூகம் ஆணை மட்டுமே சார்ந்ததாகி விட்டது. உலகம் முழுவதும் இப்படித்தான். இனம், மதம், நாடு எந்த பாகுபாடும் இன்றி பெண் ஆணுக்கு கீழேதான். போகப்பொருள் பெண் என்று விதைக்கப்பட்டு இன்று இவ்வாறு...

வந்திருந்த அனைத்து கட்சிக்காரர்களுக்கும் உமா செய்வது சரியா தவறா என்ற குழப்பம். அவர்கள் வீட்டு விஷயத்தில் வாயை விட முடியாது என்ற எண்ணம். எதிர்கட்சியில் இருந்து வந்திருந்தவர்களுக்கு குரு எங்கே போனான் என்பது பற்றி அறியும் ஆர்வம்... இப்படியாக, ஸ்கந்தன் நெய் பந்தம் தூக்க, உமா என்னும் நெருப்பு தன் மாமியாருக்காக இடுகாடு சென்றது.

அருணாச்சலத்தை, சிவனும் வீரனும் கைத்தாங்கலாக கூட்டி சென்றார்கள்.
அவர் மனம் முழுவதும் அன்னபூரணிக்காக கதறிக் கொண்டிருந்தது. முதன்முறையாக இனி வாழ்வில் தனிமையை எப்படி எதிர்கொள்வது என்று பயந்தார்.

உமாவின் அந்த செய்கை அரசியல் அளவில் பெரும் பரபரப்புகான விஷயம் ஆகிவிட்டது. எல்லாம் முடிந்து பதினாறு நாட்கள் ஆன பிறகு, நிதானமாய் தம்மை தேற்றிக்கொண்டு அருணாச்சலம், இனி மகனை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற தீர்க்க முடிவுக்கு வந்திருந்தார். நடந்த விஷயங்கள் அவருக்கு தன் மகனைப் பற்றிய நன்றாகவே புரிய வைத்து விட்டது. ஒரு மாதம் கழித்து வந்த குருவுக்கு தாயின் மறைவு பெரிய தாக்கத்தை ஒன்றும் ஏற்படுத்திவிடவில்லை. பத்தோடு பதினொன்று போல அப்படியா... என்று விட்டு சென்றுவிட்டான். இது அருணாசலத்திற்கு அதிர்ச்சியாகிவிட்டது. உமா வழக்கம் போல் விழுங்கிக்கொண்டாள்.

மனைவி மறைந்த பிறகு இனி அங்கு இருக்க முடியாது என்று முடிவு செய்து அருணாச்சலம் மொத்த குடும்பத்தையும் சென்னைக்கு மாற்றிவிட்டார். இந்த புதிய சூழல் உமாவுக்குமே தேவையாகத்தான் இருக்கிறது. ஆனால் உவப்பாக இல்லை. ரத்னா என்ன... குருவின் கண்களிலா படப் போகிறாள் என்று கொஞ்சம் தைரியத்தை வரவைக்க முயற்சி செய்தாள். அதற்கு ஒரு காரணமும் உண்டு. ரத்னா சிவனுடன் அவரது வீட்டில் வசிக்கவில்லை. சிவன் இருப்பது தென்சென்னையில். ரத்னா இருப்பது வடசென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறாள். அப்பாவுடன் இருப்பதற்கு அவள் ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் உமாவின் நினைப்பையே பொய்யாக்கும் படியாக கணவன் இறந்த பிறகு பிறகு ரத்னா சென்னை வந்திருப்பதை பற்றி அறிந்துகொண்ட குரு ரத்னாவை பற்றிய மீதி விவரங்களை தனது கூலிப்படை ஆட்கள் மூலம் தெரிந்து கொண்டான். அவசரப்பட்டு எதுவும் செய்துவிட வேண்டாம் என்று கொஞ்ச காலம் தள்ளி போட்டான். அம்மாவின் இறப்பு அன்று யார் யார் வந்தார்கள் என்று வீட்டில் இருக்கும் சிசி டிவி மூலம் பார்த்தவனுக்கு ரத்னாவின் அழகு பித்தம் கொள்ள செய்வதாய் இருந்தது. குரு உமாவை திருமணம் நிச்சயம் செய்து கொள்ளும்போது ரத்னா சிறு பெண்ணாக பள்ளி சென்று கொண்டிருந்தாள். பிறகு ஏனோ அவளுக்கு முதலில் திருமணம் செய்வித்து கேரளா அனுப்பி விட்டார்கள்.இத்தனை வருட திருமண வாழ்க்கையும், வயதும் கேரள மண்ணும் அவளின் வனப்பை மெருக்கேற்றி விட்டிருந்தது. கணவன் மறைந்து ஒரு வருஷம் முடிந்த பிறகும் அவளால் சங்கரனின் இழப்பை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவள் சோகத்தை அவள் கண்களும் வாடிய முகமும் களை இழந்த நெற்றியும் பறை அறிவித்தது. அவற்றை எல்லாம் ஆராயும் நிலையில் குரு இல்லை. அவன் கண்கள் முழுவதும் அவளது இளமை அழகை ஸ்கேன் எடுத்து ரசித்தது. அவளை என்று சுகிப்போம் என்றே யோசனை.

இவற்றை எல்லாம் அறியாத ரத்னாவும் சரி, உமாவும் சரி வாழ்க்கை பாதை நேராக செல்வதாகவே உணர்ந்தார்கள்.
அன்னபூரணியின் இறுதிக்கு வந்திருந்த ராகாயியும் ரத்னாவும் தோழிகள் ஆகிவிட்டார்கள். வாழ வேண்டிய வயதில் ரத்னாவின் இழப்பு நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் ராகாயிக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. சிவன் மீதும் அவளுக்கு வருத்தம் உண்டு. இப்போது உமா நிமிர்ந்து விட்டதை பார்த்து சந்தோஷிக்கும் ஒரு ஜீவன் அவள்.
அருணாச்சலம் மீதும் சிவன் மீதும் உள்ள விஸ்வாசத்தை மீறி, அந்த பெண்களிடம் இவளுக்கு ஒரு உணர்வு, பரிவு உண்டாகிவிட்டிருந்தது. ரத்னாவை பார்க்கும் போது தன் மகளின் ஞாபகம் ராக்காயி மனதில்.
--------------------------------------------------

சாதுர்யா ரங்கனின் மிரட்டலில் இப்போது நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்து விட்டாள். காதல் வாழ வைக்க... வீழ வைக்க அல்ல என்று அவளுக்கு ஒருவாறாக புரிய ஆரம்பித்துவிட்டது. அத்தானின் பாரா முகம் மனதுக்குள் பாரமாய் அழுத்தினாலும் அவனுக்கும் இதே பிரிவு தானே... அவன் மட்டும் என்னை விட்டு நிம்மதியாக இருக்கிறானா என்ன என்று தனக்குள்ளே கேள்வி பதில் நடத்திக்கொண்டாள்.
இருவருக்குமே மனதில் வெறுமை பரவும் பொழுது அவர்களுக்கே உரிதான அந்தரங்க சீந்தல்கள், காயாத முத்தத்தின் எஞ்சியிருக்கும் எச்சில் ஈரம் தான் ஆறுதல். அவற்றை நினைத்து மனதில் உற்சாகம் எழ மெல்லிய நகையுடன் அடுத்த விஷயம் நோக்கி பிராயாணம். சாதுர்யா சொன்னபடிக்கு சிவில் சர்வீஸ் எழுத தன்னை தயார் செய்ய ஆரம்பித்தாள். மனம் கொஞ்சம்
சஞ்சலத்திலிருந்து மீண்டது. பெரும்பாலும் கல்லூரி நூலகம் அவளை விழுங்கி கொண்டது. இத்தனை பொக்கிஷங்கள் படிக்க என்று மலைத்துபோனாள்.

பொருளாதாரமும் அரசியல் சார்ந்த சமூகமும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று பிணைந்து செல்கிறது, இந்தியாவின் தற்போது உள்ள அரசியல் நிலைக்கும் முந்தைய நிலைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் படிக்க தொடங்கியவளுக்கு உலக அளவிலான பொருளாதாரமும் அரசியல் சூழ்நிலைகளும் இந்தியாவுடனான ஒப்பீடுகளும் இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டின.
சமூகம் என்பதில் பெண் ஒதுக்க பட முடியாது. பெண்களின் நிலை பற்றிய தொகுப்புகளையும் அவள் விட்டு வைக்கவில்லை.

அவள் எங்கோ இழுத்துபட அவற்றின் போக்கில் நீந்துகிறாள். தான் ஆட்சியில் இருந்தால், இவற்றை சரி செய்வேன். அப்படி இப்படி என ஆயிரம் யோசனைகள்.

ஆட்சிகட்டிலில் அமர்வது அவ்வளவு சுலபமா?ஆனால்...














 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top