JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Episode 13

Subageetha

Well-known member
வீட்டில் சடங்குகள் எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் விழா முடிந்த பிறகு ரேணுவின் வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்கள். இப்பொழுது வீடு வழக்கம்போல் அமைதியாக இருந்தது. விழா முடிந்த அன்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் சரி செய்து விட்டு அமர்கையில் எல்லோருக்குமே களைப்பு ஓங்கியிருந்தது. மறுநாள் வெங்கடேசன் மாலதி லக்ஷ்மி தாமோதரன் நால்வரும் ஸ்ரீரங்கம் திரும்புவதாக ஏற்பாடாகியிருந்தது. மாலதியின் பிறந்தக உறவினர்களும் திருநெல்வேலிக்கு கிளம்பிச் சென்றாயிற்று.
ரேணுகா விற்கு மனதில்சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷம். அவளது பிறந்த வீட்டிலிருந்து இத்தனை வருஷங்களில் இப்படி யாரும் வந்து தங்கி இருந்தது எல்லாம் இல்லை. அவளுக்கு மனதில் அந்த சந்தோஷம்,சாதுர்யா உபயத்தில்.
பெண்களுக்கு எப்போதுமே பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் தனிதான். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எத்தனை வயதானாலும் பிறந்த வீட்டினர் உசத்தி தான்.

சாதுர்யாவுக்கும் உடல்நிலை இப்போது நன்றாகி விட்டது. இப்போதெல்லாம் ரங்கனின் பார்வைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள். பாட்டியும் தாத்தாவும் பேசிக்கொண்டிருந்தது அவள் மனதில் ஒருவித எண்ண அலைகளை உண்டு பண்ணி இருந்தது. டீன் ஏஜ் எனும் விடலை பருவத்தில் காண்பதில் எல்லாம் அழகு தேடும் மனம். தன்னை யாராவது கொஞ்சம் தாங்கினால் கூட பெருமையாக உணரும் பருவம். தாங்குபவன் நானாக இருந்துவிட்டால் பெண் அவளுக்கு தலைக்கு மேலே பெருமை வட்டம் இருக்கும். ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வை பட்டால் கூட ஏதோ இமயமலையை ஏறிச்சென்ற சந்தோஷம். ரங்கன் மனதிற்குள் யாரோ ஒருத்தி இருக்கிறாள் தான். அவள் யாரென்று ரங்கன் இப்பொழுது இருக்கும் நிலையில் யாரிடமும் சொல்ல போவதில்லை. அதேசமயம் சாதுர்யா மனதில் ரங்கன் இந்த ஒரு வாரத்தில் செய்தவைகள் அவன்மீது தனது அத்தான் என்ற உறவை மீறி, தனது தோழன் என்ற எல்லைக் கோட்டைத் தாண்டி அவளுக்குள் அவன் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான். இந்த விஷயங்கள் ரங்கனுக்கு தெரியுமோ தெரியாதோ அவன் மீதான பற்று பாவை அவளுக்கு வேற கோணத்தை நோக்கி பிரயாண படுவது எவ்வளவு தூரம் சரி? பொதுவாக இந்த வயதில் ஏற்படும் ஈர்ப்பு நிலைத்து நிற்பதில்லை. பப்பி லவ் என சொல்லப்படும் பாதையை சார்ந்ததாக இருக்கலாம். இவளது எத்தகையது என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படியே எல்லாம் சரியாக வந்தாலும் கூட மாலதி ஒத்துக் கொள்வாளா என்பதும் தெரியவில்லை.
காலம் வைத்திருக்கும் பரீட்சைகளில் சாதுர்யா எவ்வளவு சாதுர்யமாய் காய்களை நகர்த்தி விதியை தன்பக்கம் வளைக்க போகிறாள் என்பது போகப்போகத்தான் தெரியும். விழா என்ற நண்பனின் பார்வை என்பதனை மீறிய ரங்கனின் பார்வையில் ரசனை மிகுந்த பார்வை, அவன் அவசர அவசரமாய் அவளுக்காக ஆடைகளும் நகைகளும் வாங்கி வந்தது, எல்லோருக்கும் முன்பாக விஷயம் தெரிந்தவுடன் அவளை அவன் கையாண்ட விதம், அவனது அக்கறை, பாசம் என்று அவன் மீதான இந்த உணர்வுபூர்வமான நேசத்திற்கு வித்திட்டு
இருக்கலாம். விடுமுறை முடிந்த பிறகு அந்தப் பெண் மீண்டும் தில்லிக்கு சென்றாக வேண்டும். அங்கு போன பிறகு மேற்படிப்பு அது இதுவென்று எவ்வளவு இருக்கிறது. அவற்றையெல்லாம் சரியாக செய்து பிறகுதான் இது போன்ற விஷயங்களை யோசிக்க முடியும். அதற்குமுன் எவ்வளவோ மாறுதல்கள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ரங்கன் இப்பொழுதே படித்துக் கொண்டே தனது தந்தையுடன் தொழிலில் ஈடுபட ஆரம்பித்து விட்டான். அவனை அவனது தந்தை மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்புவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார். அவன் மனதில் உள்ளது வேறு யாருக்கும் தெரியாது. எல்லாவற்றையும் மீறி இருவருக்கும் திருமணம் முடியுமானால் அது தெய்வம் இட்ட முடிச்சு என்று தான் கொள்ள வேணும்.
சாதுர்யாவின் எண்ணம் மட்டுமல்ல...
எந்த பெண்ணுக்குமே ஆணின் அக்கறை, பிணவறை அவன்பால் சாய்க்க தான் செய்யும். இதில் மாற்றம் ஒன்றும் இல்லை.
சாதுர்யா, ஒருவேளை சாதிக்கப் பிறந்தவளாக இருக்கலாம். மற்ற பெண்களின் வாழ்க்கைக்கும் அவளது வாழ்க்கைக்கும் கூட நிறையவே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெண்களின் உணர்வு வரையறைக்குள் தான் அவளும் இருக்கிறாள். அவளுக்கும் இது போன்ற உணர்வுகள் வருவது இயல்புதான்.

ஆனால் அவளது இந்த உணர்வுகள், ஏதாவது ஒரு விதத்தில் ரங்கனை சுழற்றி அடிக்க போவது மட்டும் உறுதி. பெண்ணவள் ஆண் அவனை அன்பினால் கொல்ல போகிறாளா, இல்லை... கொல்ல போகிறாளா?
பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த சமயத்தில் இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்குமா என்ன?

விடுமுறை நாட்கள் முடிந்தது ரங்கன் சென்னை சென்று விட்டான். அவனுக்கு சி. ஏ தேர்வுக்கு அட்டவணை வந்துவிட்டது. அதனால் அவன் பரிட்சைக்கு முன்பாக வைக்கப்படும் சில கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றாக வேண்டும்.
'முதல்முறை எழுதும் தேர்விலேயே வெற்றி பெற்றாக வேண்டும். இதுவும் ஒருவகையில் முதலீடுதான்'என்று அவன் தந்தை பல முறை கூறிவிட்டார். அதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். தேவையில்லாமல் தனது வாய்ப்புகளை கெடுத்துக்கொள்ள அவனுக்கு எந்த பிடித்தமும் இல்லை.
புத்தக மூட்டையுடன் ரேணுகா சொல்லி அனுப்பியிருக்கும் நேரா நேரத்திற்கு சாப்பிடு,ஒழுங்காக தூங்கு போன்ற அறிவுரைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு சென்னை நோக்கி பிரயாண பட்டான் ரங்கன். கிளம்பும் முன் ஸ்ரீரங்கத்திற்கு சென்று பாட்டி தாத்தாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டவன் நேரே தனது மாமன் மகளிடமும் சென்று நான் கிளம்புகிறேன் என்று சொன்னதுதான் தாமதம். பெண் அவள் கண்கள் தனது வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது. பல வருடங்கள் கழித்து அவனை பார்த்ததும், அவன் தன்னுடனேயே இந்த விடுமுறை முழுவதும் இருப்பான் என்று நினைத்ததன் ஞாபகம் வந்தவளாக, இவ்வளவு சீக்கிரம் நீ போய் தான் ஆகணும் ரங்கா என்றவளை இமை கொட்டாமல் பார்த்தவன் தனது கைகள் கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
நீ நல்லா படிக்கணும் சது... திருப்பியும் அடுத்த எக்ஸாம் லீவுல மீட் பண்ணலாம். கொஞ்சமாவது மெச்சூரிட்டிய வளர்த்துக் கோ. உடம்பை பாத்துக்கோ, கோபத்தையும் ரவுடி மாதிரி நடந்துக்கறதையும் குறைச்சுக்கோ என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
'நான் உனக்காகத்தான் எங்க அப்பா அம்மா கூட ஊருக்கு போகலை' என்று சொன்னவளை வினோதமாக பார்த்தவன் அப்பா அம்மாவை விட நாம் முக்கியம் இல்ல சது என்றான். ஏனோ அவள் இவ்வாறு செய்தது அவனுக்கு பிடிக்கவில்லை.

மீதமிருந்த விடுமுறை நாட்கள் முழுவதும் அவள் ஸ்ரீரங்கத்தில் தான் இருந்தாள். ரங்கன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள்ளே சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதிகம் வெளியே போவதையும், படபடவென்று எப்பொழுதும் பேசிக் கொண்டே இருப்பதையும் குறைத்து கொண்டு விட்டாள். லட்சுமி அம்மாளுக்கும் தாமோதரனுக்கும் அவள் நடத்திய ஆச்சரியத்தை உண்டு பண்ணாலும், வயதுக்கு வந்துவிட்ட பெண் இதற்கு மேலும் குழந்தை தனமாகவே நடந்துகொண்டால் சரிவராது என்று யோசித்ததால் மேற்கொண்ட அவளிடம் எதுவும் பேசவில்லை கேட்கவில்லை. இதோ அதோ என்று மூன்று மாத விடுப்பு காலம் முடிந்து விட்டது. அவள் மீண்டும் தில்லி கிளம்பிவிட்டாள். நடுவில் இரண்டு முறை ரங்கன் அழைத்திருந்தான். ஒரு முறை இவளை போன் செய்து பேசினாள் அவனுடன்.
தான் அதிகமாக வகுப்புகளுக்கு சென்று கொண்டிருப்பதால் நேரம் கிடைக்கும்போது நானே அழைக்கிறேன் நீ போன் செய்ய வேண்டாம் என்று விட்டான் ரங்கன். அவன் சொன்னது மனதிற்கு தைத்தாலும் அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்ததால் அமைதியாகி விட்டாள். ஆனால் ரங்கனிடம் ஏதோ மாற்றங்கள் என்பது அவளுக்குத் தோன்றியது. வழக்கமான ரங்கன் இல்லை அவன். தனது அத்தான் ரங்கனுக்கு இவ்வளவு கூர்மையாக பேச தெரியுமா என்று சாத்துர்யா இந்த மூன்று மாதங்களில் ஆச்சரியப்பட்டு போனாள்.

பதினொன்றாம் வகுப்பில் கணிப்பொறி மற்றும் அறிவியல் பிரிவை எடுத்தாள். படிப்பு அவ்வளவு வைத்துக் கொண்டதால் வேறு எதைப்பற்றியும் அவளால் மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை. தன் மனதில் விதைக்கப் பட்டு இருந்த விதை... அதன் நிலை என்ன?
**********************************************************

ரத்னாவின் நிச்சயதார்த்த விழா இனிமையாக முடிந்துவிட்டது.

மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் சீரையும் பணத்தையும் கொடுக்க பெண்வீட்டார் தயாராக இருக்கும்போது மனக்கசப்பு இருக்க இடம் ஏது? அவர்கள் கேட்கும் நகை தொகை பற்றி ஆழ்ந்த யோசனை ஒன்றும் ரத்னாவுக்கு இல்லை. பள்ளி சென்று கொண்டிருந்த சிறுமிக்கு அடுத்தது கல்லூரி படிப்பிற்கு மட்டும் தான் கனவு இருந்திருக்க முடியும். மற்றவற்றைப் பற்றி எல்லாம் அவளுக்கு ஒன்றும் யோசனையில்லை.
நான்கு மாதங்களுக்கு பிறகுதான் ரத்னாவின் ஜாதக அமைப்பின்படி திருமணம் செய்ய முடியும் என்று ஜோதிடர் சொல்லிவிட, சங்கரனுக்கு அந்த நான்கு மாதங்களும் நான்கு யுகங்களாய் தோன்றியது. ரத்னாவுக்கு அதுபோன்ற எந்த எண்ணங்களும் ஏனோ வரவில்லை. அவளைப் பொறுத்தவரை அத்தை மகனுடன் திருமணம் ஏற்பாடு ஆகி இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் அவளுக்கு பூரண சம்மதமே. அத்தை மகனையும் நிரம்பவே பிடித்திருக்கிறது. ஆனால் சங்கரன் போல் பிரிவுத்துயர் எல்லாம் அவளுக்கு இல்லை. இந்த நான்கு மாதங்களுக்குள் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வந்து விடும். குறைந்தபட்சம் திருமண சமயத்தில் அவள் பன்னிரண்டாவது வகுப்பு முடித்து இருப்பாள்.
எப்படியாவது அப்பாவிடம் கெஞ்சி, தபாலில் படித்தாவதுஏதாவது ஒரு டிகிரி வாங்குவதற்கு முயல வேண்டும் என்று மனதிற்குள் உறுதி செய்துகொண்டாள்.

ரத்னாவின் பெற்றோருக்கோ திருமணம் ஏற்பாடு செய்வதற்கு நான்கு மாதம் அவகாசம் இருக்கிறது என்ற ஆசுவாசம். திருமணமும் இங்கு திருச்சூரில் தான் என்று விட்டாள் திலகம். இப்பொழுதெல்லாம் திலகம் சிவனின் தங்கையாக நடந்து கொள்வது இல்லை. மணமகனின் அம்மா என்ற ரீதியில்தான் அவளது அதிகாரம் தூள் பறக்கிறது. முடிந்தவரை கெத்து காண்பித்து விட வேண்டும் என்று பையன் வீட்டார் என்ற கம்பீரத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் திலகமும் அவள் கணவர் சேகரனும். சங்கரனின் தங்கை கூட அத்தை மகளிடம் பழகுவது போல் அல்லாமல் நாத்தனார் முறையில் பழக ஆரம்பித்து விட்டாள்.
திலகம் சொல்வதை வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் சிவன். அவருக்கு அருணாச்சலம் பற்றிய கவலை எல்லாம் இப்போது இல்லை. அன்னபூரணி மீது அவருக்கு பூரண நம்பிக்கை உண்டு.
யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அன்னபூரணி நமது மகளை நல்லபடியாக வைத்துக் கொள்வாள் என்ற ஆணித்தரமான எண்ணம் அவருக்கு. ஆனால் ரத்னாவின் வாழ்க்கையை நினைத்து தான் சிவனுக்கு பயம் அதிகமாகி விட்டது. தனது சின்ன மகளை வேறு எங்காவது நல்ல இடம் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கலாம். அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் நிச்சயதார்த்தம் நடக்கும் இந்த நாட்களிலேயே அவருக்கு வந்துவிட்டது. ஆனால் இவ்வளவு நடந்த பிறகு வேற என்ன செய்ய முடியும் மேற்கொண்டு திருமணத்தை நடத்த வேண்டியது தான். அவர் மனதுக்குள் ஒரு சலிப்பும் ஆயாசமும். ஏற்கனவே பாறுவை கண்டால் திலகத்திற்கு ஆகாது. ரத்னா கொஞ்சம் கொஞ்சம் அம்மாவின் சாயலை கொண்டு இருந்தாள். அது வேறு திலகத்திற்கு ரத்னாவை மருமகளாக ஏற்க அவ்வளவு தூரம் பிரியமாக இல்லை. ஆனால் சங்கரனுக்கு ரத்னாவை பிடித்திருந்தது. சிவன் தனது மூத்த மகளுக்கு நல்ல பெரிய இடத்தில் திருமணம் நிச்சயம் செய்திருந்தார். ரத்னாவுக்கு அண்ணன் மணமகன் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்று இன்னும் ஏதேதோ கணக்குகள் போட்டு இந்த திருமணத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டாள் திலகம். ஆனால் தனது அண்ணியின் மீது உண்டான வெறுப்பு, ரத்னாவை தனது அண்ணன் மகளாக பார்க்கவிடாமல் வெறுப்பு என்னும் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்க வைத்துவிட்டது.
சங்கரன் ரத்னாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எவ்வளவுதான் யோசித்தாலும், திலகம் அதற்கெல்லாம் விடுவாளா என்பது எனக்கு சந்தேகம் தான்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்க உமாவின் மனதிலோ குருபரன் பற்றிய பயம்
ஆட்கொண்டது. அவனுக்காக பயந்துதான் ரத்னா விற்காக இவ்வளவு சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யச்சொல்லி தந்தையை வற்புறுத்தியது . ஆனால் ஜாதகம் ஜோசியம் என்று ஏதேதோ காரணங்களால் ரத்னாவின் திருமணம் நான்கு மாதத்திற்கு தள்ளி போனது உமாவிற்கு பெருத்த ஏமாற்றத்தையும் பயத்தையும் கொடுத்தது. அவள் பயம் அர்த்தம் அற்றது அல்ல. அவன் வீட்டிற்கு வந்து இருந்தபோது ரத்னாவை பார்த்த பார்வை, இப்பொழுதும் உமாவிற்கு நடுங்குகிறது. அவன் ரத்னாவின் ஆடைகளை மீறி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சிறுமியின் உடல் அழகை அந்த பொறுக்கியின் கண்கள் லேசர்பார்வை கொண்டு அளவிட்டு கொண்டிருந்தது. வீட்டில் இதைப்பற்றி எல்லாம் முழுமையாக உமா சொல்லவில்லை. சொன்னாலும், வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவார்கள் தவிர வேறு பயணம் ஏதும் கிடையாது. ரத்னாவின் மனதில் அச்சம் தலை தூக்கிவிடும். இதெல்லாம் நடைபெற விடாமல் அந்த பெண்ணிற்கு நல்ல சிறந்த ஒரு வழியை கொடுத்து அவளை நகர்த்தி விட வேண்டும் என்றுதானே உன்னை இவ்வளவு பிரயத்தன பட்டது.

இந்த நான்கு மாதங்களிலும் குருபரனின் கண்களில் தன் தங்கை விழாமல் இருக்க வேண்டுமே, அம்மே பகவதி, அவள் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டுமே என்று அவள் மனதில் ஓயாமல் தங்கை பற்றிய பிரார்த்தனைகள்.
சொன்னாலும் சொல்லாவிட்டாலும், தன் தங்கையின் நல்வாழ்விற்காக இவ்வளவு யோசிக்கும் உமா , நல்லா அக்கா தான்! பெற்றோருக்காக, குடும்பத்துக்காக தன்னைத்தானே தியாகம் செய்யும் அந்தப் பெண் நல்ல மகளும் தான்.

இவள் போன்று பெண்களின் தியாகத்தில்தான் பல குடும்பங்கள் வாழ்கின்றன.
ராகாயியின் தியாகம் ஒரு வகை என்றால் உமாவின் தியாகம் இன்னொரு வகை. இவற்றுக்கு நிச்சயம் விலை இல்லை.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top