JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 25 & 26

JB

Administrator
Staff member


அத்தியாயம் - 25

மனநிறைவுடன் கூடிய கூடல் இருவரின் உள்ளங்களிலும் பரவசத்தை ஏற்படுத்த, அவளும் அவனோடு ஒன்ற, தன்னோடு அவளை இறுக அணைத்துக் கொண்டவனுக்கு விடிந்தப் பின்னும் அவளை விட மனம் வரவில்லை...

அவன் மனையாளும் கணவனின் இந்த எதிர்பாராத அனுசரணையாலும், மென்மையான அணுகுமுறையாலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற பெண்ணிற்கே உரிய நான்கு குணங்களையும் தன் கணவனுக்காகத் தள்ளி வைத்தவள் அவனின் தேடலை பூர்த்திச் செய்ய, அவன் இத்தனை நாட்கள் பாதுகாத்திருந்த பிரம்மச்சரியம் அவனை விட்டு வெகு தூரம் போயிருந்தது...

களைத்து களைந்து போனவள் கணவனின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றி முடிக்கவும் அவன் அறையில் இருந்த கடிகாரம் மணி ஆறு என்பதை மெல்லிய ஒலியில் அடித்துக் காட்டவும் தன் கணவனை விட்டு வெட்க முகத்துடன் எழப் போனவளை அவன் சட்டென்று கரம் பற்றி இழுத்ததில் போர்வையை மட்டுமே ஆடையாகப் போர்த்தியிருந்தவளின் போர்வையும் முழுக்க விலக, நாணத்தால் துடித்துப் போனவளை கண்டு வாய்விட்டு சிரித்தவன்...

"எங்க போற?" என்றான்...

"லேட்டாகிடுச்சு... மாமாவுக்கு டிபன் செய்யனும்…" என்று மெதுவாகக் கூற....

அவளை இழுத்து தன் நெஞ்சின் மேல் போட்டுக் கொண்டவன்....

"பரவாயில்லை, படு…" என்று மேலும் அவளைத் தன்னுடன் இறுக்க, தன்னைக் களைத்தவனின் கைவளைவுக்குள் அகப்பட்டுக் கொண்டவள் அவனின் வெற்று மார்பில் தலை சாய்த்து முகம் புதைத்து தூங்கியும் போனாள்.

உடல் அசதியினால் வந்த உறக்கம் மட்டும் அல்ல அது...

திருமண நாளன்றிலிருந்து முன் பின் அறியாத இரு இளம் உள்ளங்களின் வாழ்க்கை பாதையை விதி தன் போக்கில் வளைத்து சூறாவளியாய் சுழற்றி அடித்ததில் துடித்துக் கசங்கி, கலங்கி போன மனது, மழை நாளில் மெல்லிய காற்று சில்லென்று முகத்தில் வீசும் பொழுது ஏற்படுமே ஒரு சிலிர்ப்பு அது போல் குளிர்ந்து அமைதியாய் உறங்கிய உறக்கம் அது...

தம்பதியர் இருவருக்குமே....

கணவனின் அணைப்பில், அவளை இனி ஒரு நொடி கூடப் பிரியக்கூடாது என்பது போல் அவளை இறுக்கியவாறே அவன் தூங்கிப் போக, உடல், மனக் களைப்பில் நன்றாக அசந்துத் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு விழிப்பு வந்ததும் நேற்று நடந்த அழகிய சங்கமம் நியாபகத்தில் வர கண் விழித்தவள் படுத்திருப்பது தன் கணவனின் அணைப்பில், அவன் நெஞ்சில் என்று உணர்ந்து பூரிப்பில் புன்னகைத்தவள் மெல்ல எழுந்தாள் அவன் விழிக்காத வண்ணம்....

வெட்கத்துடன் தலையைத் தூக்கிப் பார்த்தவளுக்கு அங்குத் தன் கணவன் தன்னை இன்னமும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, மெதுவாக எழுந்து கட்டிலுக்குக் கீழே கிடந்த தன் துணிகளை எடுத்தவள் எங்கே அவன் முழித்து விடுவானோ என்று பயந்து விரைந்து குளியல் அறைக்குள் நுழைந்து புடவையை அணிந்து கொண்டு பின் மஹாவின் அறைக்குள் சென்றாள்...

குளித்து முடித்து விரைவாகக் கீழே வந்தவள் அங்குத் தெய்வானையும் அல்லியும் சமையல் அறையில் இருக்க,

"அக்கா, எப்படி இருக்கீங்க?" என்ற குரலில் திரும்பி பார்த்தவர்கள் சந்தோஷத்தில் அவளைக் கட்டி பிடித்துக் கொண்டார்கள்....

"என்னடா திவ்யா இப்படிப் பண்ணிட்ட? இப்படியா சொல்லாம கொள்ளாம போவ??" என்று தெய்வானை கேட்க,

அன்று நடந்த களேபரத்தைக் கண் கொண்டு பார்த்திருந்த அல்லிக்குத் திவ்யா திரும்பி வந்ததே பிரமிப்பாக இருக்க...

"விடுக்கா, திவ்யாம்மா வந்ததே சந்தோஷம்…" என்று கூறியவளைக் கண்ட திவ்யாவிற்குத் தன் புகுந்த வீட்டில் மாமியார் முதல் சமையல் அறையில் வேலைப் பார்ப்பவர்கள் வரையில் அனைவருக்கும் தன் மேல் இத்தனை பாசமா என்று இருந்தது.....

இரு நாட்களுக்கு முன் வரை கணவனை மட்டும் அந்தப் பட்டியலில் சேர்க்காமல் இருந்திருந்தாள்....

ஆனால் அவனும் தன் காதலின் அளவை, தன் மனையாளின் மீது தான் வைத்திருந்த நேசத்தின் உச்சியை அவளுக்கு விடிய விடிய காட்டிவிட்டானே தன் ஆண்மையின் துடிப்போடு, ஆனால் வெறியில்லாத மென்மையான சங்கமத்திலும், இணக்கமான உறவிலும்....

காலை டிஃபனை செய்து முடித்தவர்கள் டைனிங் டேபிளில் உணவை வைக்க, தன் அறையில் இருந்து பாலாவும், அருணும் கீழ் இறங்கி வர, அவர்களுக்கு டிஃபனைப் பரிமாற ஆரம்பித்தவளை மாடியில் இருந்து ரசித்துக் கொண்டே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் அர்ஜூன்...

அவனின் அரவத்தில் திரும்பிப் பார்த்தவளைக் கண்ட அர்ஜூன் அவளைப் பார்த்து கண்ணடித்து, உதடுகள் குவித்துச் சைகையில் முத்தம் இட, அவனைப் பார்த்ததுமே கூச்சம் உடல் முழுவதும் பரவியிருக்க, இதில் அவனின் இந்தச் சைகைகள் அவளை நாணத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல, சட்டென்று செவ்வானமாய் முகம் சிவந்து தலைக் கவிழ்ந்தாள்...

அவளின் செய்கையில் இதழ் விரித்துச் சிரித்தவன் தந்தைக்கும் தம்பிக்கும் காலை வணக்கம் சொன்னவன் தன் மனையாளின் அருகில் போடப்பட்டிருந்த சேரில் அமர, தன்னருகே நெருங்கி நின்றுப் பரிமாறத் துவங்கியவளின் புடவையைத் தன் பாதத்தினால் இறுக்கி பிடிக்க, சட்டென்று தன் புடவை கீழே இழுக்கப் படுவதைக் கண்டவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றதில் கணவனை நிமிர்ந்து பார்த்து "ப்ளீஸ்" என்பது போல் கெஞ்சினாலும் அவன் விட்டால் தானே!!

நேற்று வரை அர்ஜூனின் அதிகாரத்தையும், ஆளுமையையும், கம்பீரத்தையும், கோபத்தையும் மட்டுமே பார்த்து பயந்திருந்தவளுக்கு அவனின் இந்தக் குறும்பு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்க, இதில் அவனை நிமிர்ந்துப் பார்க்க வெட்கம் தடைப் போட குனிந்தவாறே அவனுக்கும் பரிமாறிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனின் முகத்தில் அவளின் வெட்கத்தின் அர்த்தம் புரிந்து புன்னகை படர்ந்தது..

உணவு அருந்திக் கொண்டிருந்த மாமனாரின் தட்டில் உணவு தீர்ந்துப் போனதைக் கண்டவள் தன் கணவன் அவன் காலால் தன் புடவையை இன்னும் பிடித்திருப்பதை மறந்து நகர முனைந்தவள் சேலை தடுக்கி தடுமாறச் சட்டென்று தனது இடது கையால் அவளின் இடையைப் பிடித்துக் கீழே விழாமல் நிற்க வைத்தவனுக்கு முகம் கொள்ளாத பூரிப்பு...

"பாத்துடா திவ்யா" என்ற பாலாவின் குரலில் அவளை விடுவித்தவன் புன்னகைத்துக் கொண்டே சாப்பிட்டவாறே தந்தையிடமும் அருணுடனும் பேச துவங்கவும், உண்மையில் அவனின் இணக்கமான இந்த முகமும், புன்னகை தவழும் இதழ்களும் பாலாவிற்கும் அருணிற்குமே வியப்பாய் இருந்தது.

எப்பொழுதும் தொழில், தொழில் சம்பந்தப்பட்ட மீட்டிங்குகள், வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் கூட்டங்கள், தொழிற்சாலைகளைச் சந்திக்கும் பயணங்கள், தொழில் சம்பந்தமான வெளியூர் வெளிநாடு நீண்ட பிரயாணங்கள் என்று பரபரவென்று இருப்பவன், டைனின் டேபிளில் உணவருந்தும் பொழுது கூடக் கடுமையாகப் பேசும் மகனின் முகம் இன்று மகிழ்ச்சியில் திளைத்திருப்பதைக் கண்ட பாலாவிற்கு, மகனிற்கும் மருமகளிற்கும் இடையில் நடந்தேறியிருந்த சங்கமம் புரிந்தது....

ஸ்ரீயாவது இவர்களைப் பற்றிய தன் வேதனையை, கவலைகளை வாய்விட்டு சொல்லிவிடுவார்....

ஆனால் ஒரு ஆண்மகனாக, குடும்பத்தின் தலைவனாகத் தன் மனதில் இருக்கும் கவலையைச் சொல்லி மேலும் தன் மனைவியை வருத்தப்படுத்த விரும்பாமல் தனக்குள்ளே போட்டு பூட்டி வைத்திருந்தவராயிற்றே பாலா அத்தனை வருத்தங்களையும்....

இன்று இவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு ஒரு தகப்பனாக அவரும் உள்ளம் பூரித்துத் தான் போனார்...

மூவரும் உண்டு முடித்ததும் அர்ஜூன் நேரே ஹாலிற்குச் சென்றவன் டிவியை உயிர்பித்துப் பார்க்க துவங்கவும், வெளியே கிளம்பிய பாலா அவனைக் கண்டு அதிசயித்து....

"அர்ஜூன்... கிளம்பலையா?" எனவும்..

"நோ டாட்... நான் மாமை வந்து பார்த்துவிட்டு அப்புறம் ஆஃபிஸிற்குப் போறேன்... நீங்க கிளம்புங்க…" என்றவன் கண்களைத் தொலைக்காட்சியில் செலுத்த, மூன்று பிள்ளைகளைப் பெற்றவருக்குத் தெரியாதா ஏன் வேலை வேலை என்று எப்பொழுதும் காலில் வெந்நீர் ஊற்றியதைப் போல் பறந்து கொண்டிருந்த மகன் இன்று என்றும் இல்லாத அதிசயமாய் அலுவலகத்திற்குக் கிளம்பாமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று...

புன்னகைத்தவர் அருணையும் அழைத்துக் கொண்டு கிளம்ப, அவர்கள் கிளம்பும் வரை காத்து இருந்தவன் "திவ்யா" என்று அழைக்க அவன் சத்தத்தைக் கேட்டு வேகமாக வந்தவளை அவள் சுதாரிக்கும் முன் தன் கைகளில் ஏந்தியவன் மாடி ஏறினான்...

சட்டென்று அவனின் இந்தச் செய்கையில் தடுமாறியவள் அவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொள்ள...

"கவலைப் படாதே கீழே போட்டுற மாட்டேன்" என்றவன் சிரிக்க, எப்பொழுதும் அழுத்தமான முகத்துடனும் இறுக்கத்துடனும் இருப்பவன் இன்று மீண்டும் சத்தமாக சிரிக்கவும், அவனது சிரிப்பில் அசட்டுத்தனம் இல்லாது ஆண்மையோடு கம்பீரமும் கலந்து இருப்பதை கண்டு மனம் சிலிர்க்க ரசித்தவள், இருந்தும் பகலில் என்ன இது என்று....

"ஐயோ! மாமா, அருண் அத்தான் யாராவது வரப் போறாங்க, கீழே இறக்கி விடுங்க…" என்றாள் மெல்லிய குரலில்...

இலகுவாக அவளை இரு கரங்களிலும் சிறு பிள்ளையை தூக்குவதுப் போல் ஏந்தியவாறே மாடி படிகளில் ஏறியவன்,

"அவங்க யாரும் இல்லை... இருந்தாலும் என்ன, என் வைஃப்ப நான் தூக்கறேன்…" என்றான் தன்னவளுக்குள் மீண்டும் மீண்டும் மூழ்கத் துடித்துக் கொண்டிருக்கும் மனதின் பரவசத்துடன்...

வேகமாகப் படிகளில் ஏறி தன் அறைக்கு வந்தவன் அதே வேகத்தில் காலால் கதவை சாத்தியவன் அவளைப் படுக்கையில் கிடத்த, தயங்கியவாறே மெதுவாக....

"அத்தைக்குச் சாப்பாடு செஞ்சு ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துட்டு போகனும்…" என்றாள்...

"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்…" என்றவன் அவள் மேல் சரிய,

"இல்ல, மதிய சாப்பாடு செஞ்சுக் கொடுக்கிறேன்னு மாமாவிடம் சொல்லிட்டேன்…" என்று இழுத்தவளை ரசித்துப் பார்த்தவன்....

"இப்படி பேசிட்டே இருக்கும் வாயை எப்படி அடைக்கறது?" என்றவனின் பார்வை அழுத்தமாக அவளின் இதழில் படிய,

அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரிந்து அவள் வெட்கத்தில் முகம் சிவக்க, கணவனின் உரிமையை மீண்டும் மீண்டும் நிலை நாட்ட ஆரம்பித்தவன் அவளை விடுவிக்கும் பொழுது மதிய உணவு நேரமே வந்துவிட்டது..

ஒரு வழியாக அவளின் அசதிப் புரிந்து அவளை விடுவிக்க, அவனை விடுத்து வேகமாகப் புடவையைச் சுற்றிக் கொண்டு வெளியே செல்ல முற்பட்டவளைத் தடுத்தவன்,

"திவ்யா, உன் ட்ரெஸ் எல்லாத்தையும் இந்த ரூமிற்கு மூவ் பண்ணிடு" என்றான்...

வெட்க சிரிப்போடு சரி என்பது போல் தலையாட்டியவள் மஹாவின் அறைக்குள் நுழைந்தாள்.

மீண்டும் குளித்து முடித்துக் கீழே வர, அங்குத் தெய்வானையும் அல்லியும் மதிய சமையலை முடித்திருந்தார்கள்.

சமையல் அறைக்குள் நுழைந்த அவளை விஷம புன்னகையுடன் பார்த்த அல்லி,

"என்ன திவ்யாம்மா, மாயமா மறைஞ்சுப் போயிட்டீங்க... வேற புடவை வேறக் கட்டிருக்கீங்க... மறுபடியும் தலை குளிச்சிருப்பீங்க போல இருக்கு" என்று கிண்டல் செய்ய,

அவளின் சிவந்த முகத்தைப் பார்த்த தெய்வானைக்குக் கூட "அப்பாடி" என்று இருந்தது...

"ஒரு வழியாக ஸ்ரீம்மா ஆசைப் பட்ட மாதிரி இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் போல" என்று மனம் மகிழ,

"அக்கா, அத்தைக்குச் சாப்பாடு எடுத்துட்டு போகனும்.... கொஞ்சம் உதவி பண்ணுறீங்களா?" என்றாள்...

மூவரும் சேர்ந்து மதிய உணவை கட்டி முடிக்கவும் அர்ஜூன் கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது...

திவ்யாவிடம் வந்தவன்,

"நானே உன்னை ஹாஸ்பிட்டலில் ட்ராப் செய்துடுறேன்... வா…" என்றான்...

சரி என்றவள் அவனுடன் கிளம்பக் காரில் ஏறியதில் இருந்து தன் முகம் பார்க்க கூச்சப்பட்டுக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்க்கும் மனைவியைப் பார்த்தவன் காரில் நிலவிய அமைதியை கிழிப்பது போல்...

"கொஞ்சம் இந்தப் பக்கமும் பார்க்கறது…" என்றான்...

அவனின் திடிர் பேச்சில் சட்டென்று அவனைப் பார்க்க, சிரித்தவன் அவளை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொள்ளச் சரியாக அந்த நிமிடம் அலை பேசியில் அர்ஜூனை அழைத்த கதிர் ஏதோ முக்கிய அலுவல் விஷயமாகப் பேசியவன் அர்ஜூனை உடனே வரச் சொல்லி அழைத்தான்....

மருத்துவமனை வாயிலில் காரை நிறுத்தியவன்...

"திவ்யா... நீ போ... எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு... நைட் வந்து மாம பாக்குறேன்னு சொல்லிடு" என்றவன் அவள் இறங்க முற்பட,

சட்டென்று அவளின் கைப் பிடித்து அருகே இழுத்தவன், காரின் டேஷ்போர்டில் இருந்து அவளுக்கு ஒரு சின்னப் பெட்டியை எடுத்துக் கொடுத்தான்...

என்ன என்று திருதிருவென்று விழித்தவளைப் பார்த்தவன்...

"பிரிச்சுப் பாரு" எனவும்..

அவனைப் பார்த்தவாறே அவளும் அதனைப் பிரிச்சுப் பார்க்க அங்கு ஒரு புத்தம் புதிய தற்போதைய மாடல் அலைபேசி இருந்தது...

"ஙே" என்று அவனை விழித்துப் பார்த்தவளை ரசித்துப் பார்த்தவன்....

"அருண் வந்த பிறகு அவனிடம் இதை எப்படி ஆப்பரேட் பண்றதுன்னு கத்துக்க" என்றான்...

ஒரு மழை நாளில் அவளுக்கு முதல் முறை புடவை எடுத்த அன்று ஒரு கடையின் வாசலில் நிற்கச் சொன்னதே அவளுக்கு ஒரு அலை பேசி வாங்கித் தருவதற்காகத் தான்...

பின் ரிஷப்ஷன் அன்று அர்ஜூனின் அலை பேசிக்கு அழைத்த ஸ்ரீ, கோபத்தில் அவரின் அழைப்பை அவன் எடுக்காததைத் தெரிந்து திவ்யாவை அழைத்தவர் அர்ஜூனிடம் அவளின் அலை பேசியைக் கொடுக்கச் சொன்னாரே, அப்பொழுதே பார்த்திருந்தான் அது எவ்வளவு பழைய மாடல் அலை பேசியென்று...

அதனால் தான் மறுநாள் அவளுக்கு இந்தப் புது அலை பேசியை வாங்கியிருந்தான்...

ஒரு வேளை அவளின் புடவை அன்று நனைந்திருக்கவில்லை என்றால் அவளையும் கடைக்குள்ளே அழைத்துப் போய் வாங்கிக் கொடுத்திருப்பான்... அப்பொழுதாவது அவனின் அன்பைப் புரிந்து கொண்டு இருந்திருப்பாளோ??

எதற்கும் ஒரு நேரம் காலம் இருக்கிறது என்று விதி நினைத்துவிட்டால் அதனை மாற்றும் வல்லமை யாருக்கு இருக்கிறது இந்த உலகத்தில்??

"எதுக்குங்க இது? என்கிட்ட தான் வேற போன் இருக்கே.." என்று அவள் தயங்க...

"அது வேண்டாம்... இனி இதில் தான் நான் உன்னைக் கூப்பிடுவேன்" என்றவன் அவள் சரி என்று தலை அசைத்துவிட்டுக் காரில் இருந்து இறங்க முற்பட மீண்டும் அவளின் கரம் பற்றி இழுத்தவன்...

"திவ்யா.... இன்னையிலிருந்து நீ என் ரூமில் தான் தங்கனும்.... என் கூடத் தான் தூங்கனும்... ஆனால் நேத்து நைட் மாதிரி வெயிட் பண்ணிட்டு இருக்க மாட்டேன்.... வந்து தூக்கிட்டு போய் விடுவேன்" என்றான்...

விழிகளில் நாணம் படர்ந்திருக்க, சிறு புன்சிரிப்புடன் சரி என்று காரில் இருந்து இறங்கியவள் அவன் கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்....

அவனும் அவள் மறையும் வரை கார் ரியர் வியூ கண்ணாடியில் பார்த்திருந்தவனின் மனம் நிறைந்து இருந்தது... மகிழ்ச்சியில் திளைத்திருந்தது...

ஆனால் திவ்யாவிற்கோ என்ன தான் அவன் அவளை நேற்று முதல் காதலில் திக்கு முக்காட வைத்திருந்த போதிலும், மன நிறைவுடன் ஈருடல் ஓருயிராகக் கூடியிருந்த போதிலும், அவன் தன்னை விவாகரத்து பண்ணப் போவதில்லை என்று சொல்லியிருந்தாலும் விவாகரத்துப் பத்திரத்தில் அவளிடம் கையெழுத்து வாங்கியிருந்தது மனதில் இன்னமும் உறுத்திக் கொண்டே இருக்க, உள்ளத்தில் சிறு கலக்கமும் வரத் தான் செய்தது...

"ஆனால் நிச்சயம் இனி அவர் என்னை விட்டு இருக்க மாட்டார்" என்றும் அவளின் ஆழ் மனதில் குரல் ஒன்று எழும்ப அதில் சிறிதே நிம்மதி அடைந்தவள் நேரே தன் மாமியாரின் அறைக்குள் நுழைந்தவாறே...

"மன்னிச்சிடுங்க அத்த, வர லேட்டாகிட்டுது" எனவும்,

அவளின் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்த்திருந்தது ஸ்ரீயின் கண்கள்...

அவரின் பார்வையைப் புரிந்து கொள்ளாமல் மதிய உணவை எடுத்து வைக்க ஆரம்பிக்க, அவளை அருகே அழைத்த ஸ்ரீ...

"திவ்யா, அர்ஜூன் நேத்து உன் கிட்ட கோபப் படலேயே?" என்றார்.

"அர்ஜூன்" என்றதும் அவளையும் அறியாமல் நேற்று நடந்ததை முகம் காட்டிக் கொடுக்க வெட்கத்தில் சிவந்த மருமகளின் முகத்தைப் பார்த்த ஸ்ரீயின் உள்ளம் குளிர்ந்தது...

அவளின் கரம் பற்றித் தன் அருகில் அமர்த்திக் கொண்டவர் சன்னமான குரலில்...

"திவ்யா... இது உங்க அம்மா கேட்க வேண்டியது... அவளுக்குப் பதிலா நான் கேட்குறேன்... அர்ஜூன் உன்னிடம் ரொம்ப முரட்டுத் தனமாய் நடந்து கொள்ளவில்லையே" என்று அவளின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தவாறே கேட்க...

தன் மாமியார் என்ன கேட்க வருகிறார் என்பதைப் புரிந்துக் கொண்டவள் இளம் முறுவலுடனும் வெட்க முகத்துடனும் தலை கவிழ்ந்தவாறே "இல்லை" என்பது போல் மெதுவாகத் தலை அசைக்க...

ஒரு அன்னையாகத் தன் மகனின் பரிவில், மனையாளுடனான அவனின் அனுசரணையில் மனம் நிறைந்துப் போனவர்...

"அப்பா முருகா, சீக்கிரம் ஒரு பேரப் பிள்ளைய கொடுப்பா" என்று வேண்ட, முருகனோ,

"அடப் போம்மா, இதுங்க இரெண்டையும் சேர்த்து வைக்கிறதுகுள்ள எனக்கே மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கிடுச்சு... இதில நீ அதுக்குள்ள பேரப்பிள்ளை கேட்கிற" என்றார்...

அங்கு திவ்யாவை இறக்கி விட்டு தன் அலுவலகத்தில் நுழைந்த அர்ஜூனின் முகத்தில் என்றும் இல்லாத ஒரு மகிழ்ச்சியும் பூரிப்பும் தெரிய அவனின் முகம் மாற்றத்தை கண்டு வித்தியாசமாக உணர்ந்த அலுவலர்களும் அர்ஜுனின் செயலாளர்களும் ஒருவருக்கொருவரின் முகத்தை திரும்பிப் பார்த்துக் கொள்ள அவர்களின் அறைக்குள் நுழைந்த கதிரைக் கண்டவர்கள்...

"என்ன சார்? இன்னைக்கு MD முகம் செம்ம க்ளோ [Glow] ஆகுது??" என்று நக்கல் அடித்தார்கள்...

சற்று நேரத்திற்கு முன் அர்ஜூனை அழைத்துப் பேசியிருந்த கதிருக்குக் கூட அவனின் குரலில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சிக் கலந்திருந்ததாகவே பட்டிருந்தது... அதற்கு காரணம் இந்த இரண்டு நாட்களாக அர்ஜூனின் திட்டத்தின் படி தான் செய்து முடித்திருந்த வேலைகள் என்றே கதிர் நினைத்திருந்தான்...

ஏனெனில் அர்ஜூனின் காரியத்திட்டங்களும் அதனை செயல்படுத்திய முறைகளும் கதிருக்கே வியப்பையும் சிறிதே அச்சத்தையும் கொடுத்திருந்தது...

தன் MD -யின் அறைக்குள் அவனின் அனுமதிப் பெற்று கதிர் நுழைய, அங்கு கணினியில் ஆழ்ந்து வேலை செய்துக் கொண்டிருந்த அர்ஜூனைக் கண்டவனுக்கு "அப்பா, இந்த சின்ன வயசில் என்னா தைரியம் இவருக்கு?" என்றே தோன்ற,

அவனை "சார்" என்று அழைத்தவனை நிமிர்ந்து பார்த்த அர்ஜூன்..

"என்ன கதிர்... ப்ளான் படி எல்லாத்தையும் பெர்ஃபெக்டா முடிச்சிட்டீங்க போல" என்றான் இதழ்களில் வழியும் புன்னகையுடன் ஆனால் கண்களில் அதே கடுமை...

"ஆமாம் சார்... அநேகமாக இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு அவன்கிட்ட இருந்து ஃபோன் வரும்" என்று அவன் சொல்லி முடிக்கவில்லை.... அர்ஜூனின் அலை பேசி அலறியது....

எடுத்து காதில் வைத்தவன் மௌனமாக இருக்க...

எதிர் முனையில் இருந்தவனின் உலைப் போல் கொதித்த மனம் மேலும் எரிமலையாக வெடிக்க துவங்க...

"என்ன அர்ஜூன்... நினைச்சதை செஞ்சு முடிச்சிட்டன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல?" என்றான் எதிர் முனையில் இருப்பவன் பல்லைக் கடித்துக் கொண்டு...

அர்ஜூனின் அலுவலகத்திற்கு வருமான வரிச் சோதனையின் காரணகர்த்தாவான ராம் இண்டஸ்ட்ரிஸின் வாரிசு சம்பத்...

அவன் காட்டுக் கூச்சல் போட்டும் சேரில் தணிவாக சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜூன் மேலும் நன்றாக சாய்ந்து தன் தலை முடியை கோதிவிட்டுக் கொண்டே ஸ்டையிலாக சிரிக்க...

அவனின் சிரிப்பில் அதிர்ந்தது சம்பத் மட்டும் அல்ல... கதிரும் கூடத் தான்...

அது ஒரு ஆர்ப்பாட்டமான சிரிப்பு அல்ல... ஆனால் எதிராளியின் நெஞ்சுக் கூட்டை சில்லிட வைக்கும் அழுத்தமான சிரிப்பு...

முகத்தில் சிரிப்பு படர்ந்திருந்தாலும் அர்ஜூனின் உள்ளத்தில் தெறித்துக் கொண்டிருந்த கோபத்தை எதிர்முனையில் இருந்த சம்பத் மட்டும் பார்த்திருந்தால் கதி கலங்கிப்போயிருப்பான்...

கோபத்தை முகத்திலேயோ அல்லது வார்த்தைகள் வழியாகவோ வெளிப்படுத்திவிடும் மனிதர்கள் சாதாரணமானவர்களே...

ஆனால் அத்தனை சினத்தையும் ஆங்காரத்தையும் மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டு முகத்தில் முறுவலை தவழவிட்டுக் கொண்டிருந்த அர்ஜூனைக் கண்டிருந்த கதிரின் மனதில் கூட, இவரை எதிர்ப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் வீழ்ச்சியைக் காணக் கூட அவர்கள் இருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது...

தான் இத்தனை பேசியும் இன்னும் ஒரு வார்த்தைக் கூட பேசாத அர்ஜூனின் மௌனத்தையும், தன் கோபத்திற்கு பதிலாக வெறும் சிரிப்பை மட்டுமே உதிர்க்கும் அர்ஜூனின் ஆணவத்தையும் கண்டு மேலும் கொந்தளித்துப் போன சம்பத்...

"அர்ஜூன்... நீ தைரியமானவனா இருந்தால் என்னுடன் நேரில் மோதியிருக்கனும்... அத விட்டுட்டு இப்படி கோழை மாதிரி எங்கள் முதுகில் குத்தியிருக்கக் கூடாது" என்று கொதிக்க...

மனதில் அலைமோதிக் கொண்டிருக்கும் கோபம் எப்பொழுதாவது தன் எல்லையைக் கடக்கும் பொழுது அதன் பிடியில் இருந்து வெளி வருவதற்காகவோ, அல்லது மன உளைச்சல்களிலிருந்து தன் உள்ளத்தை நிதானப்படுத்த முயற்சிக்கும் பொழுதோ, உடற்பயிற்ச்சிக்கு அடுத்து அர்ஜூன் தேர்ந்தெடுக்கும் வழி சதுரங்க விளையாட்டு...

அவன் அறையில் அவனுக்கு எதிராக இருக்கும் மேஜையில் எப்பொழுதும் சதுரங்க பலகை காய்களுடன் இருக்கும்...

தன்னைத் தானே எதிர்த்து விளையாடுவதில் அவனுக்கு அத்தனை விருப்பம்... நமது எதிரி நமக்கு எதிராக தன் ஆட்டத்தை துவங்கும் முன் அவனின் அடுத்த மூவ் (நடவடிக்கை) என்னவாக இருக்கும் என்பதை எதிரியின் இடத்தில் இருந்து நாம் பகுப்பாய்வு செய்யும் பொழுது அவனுக்கே தெரியாமல் அவனை அடித்து வீழ்த்துவது எளிது...

“To know your enemy, you must become your enemy” என்பதுப் போல்...

சாய்ந்து அமர்ந்திருந்த தன் சேரில் இருந்து லேசாக முன்னோக்கி சாய்ந்த அர்ஜூன் தன் மேஜையின் மீதிருந்த சதுரங்க பலகையில் [Chess Board] காய்களை நகர்த்தியவாறே பேசத் துவங்கினான்...

"சம்பத்... இதுவரைக்கும் உங்க அப்பா மட்டும் தான் அடி முட்டாளுன்னு நினைச்சிருந்தேன்... ஆனால் இப்ப தான் தெரியுது... உங்கள் குடும்பத்தில் மத்தவங்களைக் கம்பேர் பண்ணும் போது அவர் எவ்வளவோ புத்திசாலிப் போலருக்கே..." என்று சிரிக்க...

அர்ஜூனின் பதிலில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற சம்பத் பேசத் துவங்கும் முன்...

"சம்பத்... நீ பேசிட்டு இருக்கும் போது நான் பேசாமக் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்... ஸோ திஸ் இஸ் மை டேர்ன்... [So this my turn]" என்றவன் சதுரங்க பலகையில் அடுத்த காயை நகர்த்தியபடியே மேலும் தொடர்ந்தான்...

"டு யூ லைக் டு ப்ளே செஸ் சம்பத்? [Do you like to play Chess Sampath?] லைஃப் இஸ் லைக் எ செஸ் கேம் [Life is like a chess game] செஸ்ஸில் ஒவ்வொரு மூவிற்கும் ஒரு காரணம் இருக்கு... அதேப் போல் நாம் கொஞ்சம் அசந்தோம்னா நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை நம் எதிராளி எடுத்துவிடுவான்... அது மாதிரி எதிராளியோட பார்வையில் நாம் செய்யப் போறது ஒரு விதமா தெரியனும்... ஆனால் நாம் செய்றது வேற விதமாக இருக்கனும்.. எதிராளிக்கே தெரியாமல் அவனுடைய பானில் [Pawn] இருந்து க்வீன் [Queen] வரை அழிக்கனும்... அப்போதான் கிங்க [King] நிராயுதபாணியா நிக்க வச்சு செக் வைக்க முடியும்... இப்போ நீ அந்த நிலையில் இருக்கன்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்..." என்றவன் கதிரைப் பார்த்து புன்னகைத்தான்...

ஏனெனில் ராம் இண்டஸ்ட்ரீஸின் தொழிற்சாலைகளின் முக்கிய பகுதிகளை இரவோடு இரவாக தீக்கு இரையாக்கியதும், வெளி மாநிலங்களில் இருந்து வந்துக் கொண்டிருந்த அவர்களின் கண்டெயினர்களில் முக்கியமானவைகளை விபத்துக்குள்ளாக்கியதும், இவை இரண்டு விபத்துக்களிலிருந்தும் அவர்கள் காப்பீட்டுத் தொகை வாங்கமுடியாத அளவிற்கு விபத்துக்களை காப்பீட்டுத் தொகைக்காக ராம் இண்டஸ்ட்ரீஸே செய்தது போல் அவர்களின் ஊழியர்களை வைத்தே சித்தரித்திருந்தது அர்ஜூன் என்றால் அதனை சாமார்த்தியமாக செயலாற்றியது கதிராயிற்றே.....

அதைப் போலவே தொழிற்களின் முதுகெலும்பான தொழிலாளர்களுக்குள்ளும், ஊழியர்களுக்குள்ளும் அவர்களின் யூனியன் தலைவரை வைத்தே மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கி கிட்டத்தட்ட இன்னும் சில நாட்களில் ராம் இண்டஸ்ட்ரிஸின் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையும் அர்ஜூன் ஏற்பாடு செய்திருக்க, தொழிற்சாலைகளும் கண்டெயினர்களின் விபத்துக்களை மட்டுமே அறிந்திருந்த சம்பத்திற்கு அவன் கம்பெனியின் உள்ளுக்குள்ளே சிலந்தி வலைப் போல தொழிலாளர்களை கொண்டு அர்ஜூன் பின்னியிருந்த அபாயகரமான திட்டம் தெரியாமல் போனது அவனின் கொடுமையே...

மீண்டும் தொண்டையைக் கனைத்தவன்..

"என்ன சம்பத் லைனில் தான் இருக்கியா? லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... செஸ் விளையாடுறதுல இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா?? என்ஜாய் யுவர்செஃப் [Enjoy yourself]... ஆண்ட் ஐ டு என் ஜாய் யுவர் டிஃபீட்... [And i do enjoy your defeat]" என்றவன் அலை பேசியை துண்டிக்க...

எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்துடன் அமர்ந்திருந்த சம்பத்தின் அருகில் வந்த ராமச்சந்திரன்...

"சம்பத்... இதத் தான் நான் முன்னேயே சொன்னேன்.... அவனோட மோதுறது எரிமலையோட மோதுறதுன்னு... இத இப்படியே விட்டுட்டு முதல்ல அவனால ஏற்பட்ட பிரச்சனைகளை சரி பண்ணுவது எப்படின்னு யோசி.... அர்ஜூனை தொழில் ரீதீயாக அடிக்க முடியுமான்னு பாரு... இல்லைன்னா இந்த பிரச்சனைகளை இதோடு விட்டுடு..." என்று அறிவுரைக் கூற...

அர்ஜூனின் இந்த அதிரடி ஆட்டங்களும் அதனால் ஏற்பட்ட நஷ்டங்களும் ஏற்கனவே சம்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்ததால் இனி அர்ஜூனை எதிர்த்து எந்த பயனும் இல்லை, அவனை எதிர்க்கவும் தெம்பில்லை என்று முடிவுக்கே சம்பத்தும் வர வேண்டியதாக இருந்தது...

கதிரை திரும்பிப் பார்த்த அர்ஜூன்...

"இஸ் தேர் எனிதிங்க் எல்ஸ் கதிர்? [Is there anything else Kathir?] " எனவும்...

"சார்... அமெரிக்க ஷிப்மெண்டும் கிளியராகிடுச்சு" என்றவன் சில நொடிகள் தயங்கி...

"சாரி சார்... நம்ம பசங்கக்கிட்ட எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கொஞ்சம் அதிகமாகவே காட்டிட்டாங்க போலிருக்கு... ஒரே நாளில் ஷிப்மெண்ட் கிளியர் பண்ணியாச்சு..." எனவும்...

"இட்ஸ் ஓகே... கதிர்... தட்டுற எடுத்துல தட்டியே ஆகனும்..." என்றவன் அவன் செல்லலாம் என்பது போல் மீண்டும் கணினியில் கண்களைப் பதிக்க...

வெளியே செல்ல எத்தனித்த கதிரை...

"கதிர்... பட் கஸ்டம்ஸ் எல்லாம் ஒழுங்கா பே (Pay) பண்ணிட்டீங்கள்ள?"

"யெஸ் சார்... நாம் பே பண்ண வேண்டியதெல்லாம் கரெக்டா செட்டில்மண்ட் பண்ணியாச்சு"

"ஹான்... தென் பேங்களூர் விஷயம் என்னாச்சு?"

"சார், இன்னைக்கு ஈவ்னிங் நான் பேங்களூர் போறேன் சார்..." என்று இழுக்க...

"கதிர்.. நீங்க போக வேண்டாம்... நானே போறேன்... இத இன்னும் இழுக்கக் கூடாது…" என்றவன் திவ்யாவிற்கு அழைத்தான்...

மாமியாருக்கு உணவு பரிமாறியவள் இரவு முழுவதும் சுத்தமாக உறக்கம் இல்லாததாலும் மதியம் வரை தன் கணவனின் வலுவான அணைப்பில் திணறி இருந்ததால் வந்த களைப்பிலும் சிறிதே உறங்க முற்பட அர்ஜூன் வாங்கிக் கொடுத்திருந்த அலை பேசி சிணுங்கியது...

அலை பேசியைப் பார்த்தவள் அதில் தன் கணவனின் எண் ஒளிரவும் சில நொடிகள் அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று தடுமாறி ஒரு வழியாக கண்டுப் பிடித்து, வெட்கத்துடன் பேச துவங்க மறுமுனையில் என்ன சொன்னானோ அவள் முகம் வாடியதை பார்த்த ஸ்ரீக்கு திக்கென்றது...

அவள் பேசி முடித்ததும் என்ன என்று கேட்க,

"இல்லை அத்த, அவங்களுக்குத் திடீர்னு பெங்களூர் போகனுமாம்.... (மறுபடியுமாஆஆஆ? என்று வாசகர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது... என்ன செய்ய பெரிய பிஸ்னஸ்மேனிற்கு இதெல்லாம் சகஜமப்பா.. ஆனால் இந்த முறை அவன் கோபத்தில் போகவில்லையே!!!!).... ஏதோ பிஸினஸ் விஷயமா... வர மூன்று நாளாகுமாம்" என்றவள் அலை பேசியை அவரிடம் கொடுக்க, அவன் பேசியதை கேட்டவர்,

"சரிப்பா, நீ பத்திரமா போய்ட்டுவா" என்றார்...

அர்ஜூன் பெங்களூர் சென்றதும் தன் கணவன் இல்லாத வீட்டிற்க்கு போகப் பிடிக்காமல் திவ்யா ஸ்ரீயுடன் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டாள்.

அவன் பெங்களூர் சென்ற மூன்று நாட்களுக்குள் ஸ்ரீக்கும் உடல் நிலை தேறியதால் அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்...

இதற்கிடையில் கலாவும் பேசி ஸ்ரீயின் உடல் நிலையை விசாரித்தவர், திவ்யாவின் செயலுக்கு மன்னிப்பு கேட்கவும் தவறவில்லை..

ஒரு வழியாக வீட்டிற்கு வந்த ஸ்ரீக்கு நிம்மதியாக இருக்க ஆனால் தன் கணவன் இல்லாமல் திவ்யாவிற்குத் தான் வீடே வெறிச்சோடி இருந்தது...

ஆனால் அவன் சொன்னது போல் முன்று நாட்களுக்குள் அவனின் வேலை முடியவில்லை...

அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததை அறிந்தவன் ஓர் இரவு ஸ்ரீயை அழைத்தவன் அவரின் நலம் விசாரித்த பிறகு திவ்யாவை கேட்க, திவ்யாவை அழைத்த ஸ்ரீ அலை பேசியைக் கொடுத்தவர்...

"உங்க ரூமிற்க்கு போய்ப் பேசும்மா…" என்றார்...

தன் கணவனின் குரல் கேட்க ஆவலுடன் இருந்தவள் அலை பேசியை எடுத்துக் கொண்டு மாடி படிகளில் வேகமாக ஏற...

"பாத்து, அவன் லைனில் தான் இருப்பான்... மெதுவாகப் போ.... நீ விழுந்திடாத" என்று ஸ்ரீ சொல்ல,

சிரித்துக் கொண்டே அவனின் அறையை அடைந்தவள் கதவை சாத்திவிட்டுக் கட்டிலில் அமர்ந்து மெல்ல "என்னங்க" என்றாள்...

"சொல்லுங்க…" என்று அவன் மறுமுனையில் கிண்டல் செய்ய, அவளுக்கும் வெட்கத்தில் அதற்கு மேல் பேச்சு வரவில்லை...

சிரித்தவன் "உன்னைப் பார்க்கனும் போல இருக்குடி... அதுவும் இப்பவே…" எனவும், அவள் ஏதும் பேசாமல் போகவே "திவி, லைன்ல இருக்கியா?" என்றான்...

கணவன் தன் பெயரை முதன் முறை திவி என்று சுருக்கி அழைத்ததில் மனதிலும் உடலிலும் சிலிர்ப்பு உண்டாக அவன் நெஞ்சில் அந்த நிமிடமே சாய்ந்து கொள்ள மனம் அவனைத் தேடியது...

ஆனால் அர்ஜூன் அன்று கூடலின் போதே அவளை அவ்வாறே அழைத்திருந்தான்... அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் அவள் தான் இல்லை...

ஆனால் இன்றும் அதே போல் அழைக்க முதன்முறை அவனின் செல்ல அழைப்பைக் கேட்டு சிலிர்த்தவள் "ம்ம்ம், இருக்கேன்" என்றாள்...

"த்ரீ டேய்ஸ்ல முடியும்னு நினைச்ச வேலை முடிய இன்னும் த்ரீ ஃபோர் டேய்ஸ் ஆகும் போல இருக்குடி... எப்படா வருவேன்னு இருக்கு, உனக்கு?" என்று கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை....

மனது முழுவதும் தன் கணவன் எப்பொழுது வருவான் என்று ஏங்கி கிடக்க, ஆனால் வெட்கத்தை விட்டு அவனிடம் அதை எப்படிச் சொல்வது என்று தடுமாறியவள் மீண்டும் அமைதியாக இருக்க, அது அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது...

"என்னடி, எனக்கும் உங்களைப் பார்க்கனும் போல் இருக்குன்னு சொல்லுவன்னு எதிர் பார்த்தா ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற.... உனக்கு அப்படி எதுவும் இல்லையா என்ன?"

"ஐயோ! என்னங்க??" என்று அவள் அலற, சிரித்தவன் இந்த நிமிடம் அவள் முகம் எப்படி இருக்கும் என்று அவளின் முக மாற்றத்தை தன் கண் முன் கொண்டு வந்தவன், மனம் முழுவதும் தன் மனையாளின் முகமே நிரம்பியிருக்க, குதூகலத்துடன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

ஒரு வழியாகச் சென்ற வேலை வெற்றிகரமாக முடிய சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவனின் நினைவில் தன் மனையாளின் நினைவே இருக்க, அவளைப் பார்க்க ஆவலுடன் வீட்டிற்கு விரைந்து வந்தவன், அங்கு வீட்டில் எல்லோரும் ஒன்றாகக் கூடி இருக்க அவன் காத்திருந்த மனைவியுடனான தனிமை வெகு நேரம் கிடைக்கவே இல்லை...

அவளும் முடிந்தவரை நாணத்தால் அவனைப் பார்ப்பதை தவிர்த்தவள் சமையல் அறையிலேயே முடங்கிக் கிடக்க, எப்படியும் இரவு ரூமிற்கு வந்து தானே ஆகனும் என்று நினைத்துக் கொண்டான்...

இரவு உணவு முடித்து, இன்னமும் திவ்யா மாடிக்குச் செல்லாமல் இருந்ததைப் பார்த்த ஸ்ரீ,

"என்னம்மா, இவ்வளவு நேரமாச்சு.... இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க... போ" எனவும்,

"தோ முடிச்சுட்டேன் அத்தே" என்றவள் இதற்கு மேலும் கீழே இருக்க வழியில்லை என்று நினைத்து மாடி ஏறினாள்...

அவளுக்காகக் காத்திருந்தவன் அவள் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய, அங்குப் புன் சிரிப்புடன் கட்டிலில் சாய்ந்து படுத்திருந்த கணவனைப் பார்த்தவள் கூச்சத்தில் தலை கவிழ,

"அங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி? இங்க வா" என்றான்...

அருகில் சென்றவள் நின்று கொண்டே இருக்க, அவன் அவளின் கையைப் பிடித்து இழுக்கவும் தடுமாறி அவனின் மேலே விழுந்தாள்...

பூந்தளிர் மேனியவள் அவனின் மேல் மல்லிகைக் கொடி போல் படர்ந்திருக்க, ஒரு வாரம் அவளைப் பிரிந்திருந்த ஏக்கம் அவனின் தாபத்தைக் கட்டவிழ்க்க, கைகள் அவளின் இடையை இறுக்கமாகத் தழுவியது...

அவனின் செயலில் மனம் மயங்கியவளாய் அவளும் அவன் இழுத்த இழுப்பிற்கு உடன் பட, அவளைத் தூக்கியவன் கீழே சரித்து அவளின் மேலே படர்ந்தவன் தன்னுடைய ஒரு வாரப் பிரிவை, பிரிந்திருந்ததால் தன் மனைவியுடனான கூடலை இழந்து தவித்து இருந்த மனதின் புழுக்கத்தைத் தீர்த்துக் கொள்ளும் வரை அவளை விடவில்லை...



நாட்கள் அதன் போக்கில் செல்ல அர்ஜூன் திவ்யாவின் இணக்கத்தையும் மகிழ்ச்சியையும் பார்த்திருந்த பெரியோர்களுக்கு அத்தனை பூரிப்பாகவும் நிம்மதியாகவும் இருந்தது....

வீட்டில் ஏற்கனவே இருந்திருந்த உற்சாகத்திற்கு மேலும் சந்தோஷம் கூட்டும் வகையில் மஹாவின் பிறந்த நாளும் வர, வழக்கமாகப் பிறந்த நாளை பெரிதாகக் கொண்டாடுவதெல்லாம் ஸ்ரீயிடம் செல்லாது என்றாலும் அன்று ஏனோ அவள் தன் தோழிகளுடன் சேர்ந்து கொண்டாட அனுமதி வழங்கியிருந்தார்...

தன் தோழிகளுடன் ஹோட்டலுக்கு அன்று இரவு செல்வதாகத் தன் அன்னையிடம் கேட்க எங்குச் சென்றாலும் இரவு சீக்கிரம் வர வேண்டும் என்றும், அதுவும் அர்ஜூன் வருவதற்கு முன் வீடு வந்து சேர வேண்டும் என்று ஸ்ரீ கட்டளை இட்டிருந்தார்...

சரி என்றவள் முதன் முறை தன் தோழிகளின் நச்சரிப்பால் உணவகம் [Restaurant], பார், நடன அரங்கம் என்ற அனைத்தும் உள்ள அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குள் நுழைய, மஹாவிற்கு வினோத்தின் மீது இருந்த காதலை தன் நெருங்கிய தோழிகளிடம் மட்டும் அவள் சொல்லியிருந்தாலும் அந்த விஷயம் எப்படியோ கோகுலின் காதுகளுக்குப் போக, உலையாகக் கொதித்துக் கொண்டிருந்தவன் தன் வேட்டையைத் துவங்க நேரம் பார்த்துக் காத்திருந்தவனுக்கு இன்று அவள் தன் தோழிகளுடன் இந்த ஹோட்டலிற்குச் செல்லப்போவதை அறிந்ததும் இன்றைய நாளையே குறித்திருந்தான் தன்னவளாக அவளை எடுத்துக் கொள்வதற்கு.....

இது தெரியாத மஹா தன் தோழிகளுடன் ஹோட்டலின் உணவகம் இருந்த பகுதிக்கு சென்றவள் அவர்களின் விருப்பம் போல் உணவு பதார்த்தங்களை ஆர்டர் செய்துவிட்டு கலகலவென்று பேசி சிரித்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்திலேயே அங்கு இருந்த நடன அரங்கில்/தளத்தில் [Dance Floor] நடனம் ஆட ஆரம்பித்து இருந்தார்கள்...

வசதி படைத்த மேல் தட்டு வர்க்க இளைஞர்களுக்குத் தங்கள் தாய் தந்தை சேர்த்து வைத்த சொத்தை செலவழிக்க இது ஒரு பிடித்தமான வழி...

ஆரம்பத்தில் லேசாக ஆரம்பிக்கும் இசை நேரம் ஆக ஆகக் காதுகள் கிழிய அலற துவங்க, இளவட்டங்கள் அருந்தியிருந்த வெவ்வேறு வகையான வெளிநாட்டு மது, அவர்களின் ஒவ்வொரு நரம்பிலும் சூடேற்ற, வெறித்தனமான நடனம் ஆரம்பிக்கும்...

நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கதிகமான ஆபாச ஆடை அணிந்து, வாழ்க்கையில் நாளை என்ற ஒன்றே கிடையாது இன்றே முடியுமளவு அனுபவித்து விட வேண்டும் என்பது போல் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பிக்க முதன் முறையாக இது போன்ற இடத்திற்கு வந்திருந்த மஹாவிற்கு "ஏண்டா இங்கு வந்தோம்" என்று கதிகலங்கிப் போனது...

அத்தனை ஆபாசமாகவும், வெறித்தனத்தோடும், கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டு நடனம் என்ற பெயரில் உடல்கள் பின்னி பிணைந்து கொண்டு நடனத் தளத்தில் கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள் இளவட்டங்கள்...

நமது இந்தியாவின் வருங்காலத் தூண்களில் ஒரு பகுதி!!!!!

முகத்தைச் சுளிக்க வைக்கும் அவர்களின் நடன அசைவுகளும், குமட்டிக் கொண்டு வந்த மதுக்களின் வாடையும், காதே கிழியும் அளவிற்குக் கேட்டுக் கொண்டிருந்த இசையின் கூச்சலும் அவளுக்குத் தலைவலியை உண்டு பண்ண இப்படியா தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவள் தன் அருகில் அமர்ந்து இருந்த தன் நெருங்கிய தோழியான நிருபமாவின் காதை கடித்தாள்....

"நிரு, என்னடி இது? ஒழுங்கா எப்போவும் போற ஹோட்டலுக்குப் போய் இருக்கலாம் இல்ல... எனக்கு இங்க இருக்கக் கொஞ்சம் கூடப் பிடிக்கலைடி.... எங்க அம்மாவுக்கோ அல்ல அர்ஜூன் அண்ணாவுக்கோ இது தெரிஞ்சது நான் செத்தேண்டி"

"மஹா... ஜஸ்ட் ஒன் டே தானடி.... நீ சொல்லாட்டி எப்படி உங்க வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியும்.... நான் தான உன்னை ட்ராப் பண்ணப் போறேன்.... கண்டிப்பா சீக்கிரம் உங்க அண்ணா வரதுக்குள்ள உன்னைக் கொண்டு விட்டுடறேன்" என்று நிருபமா அவளைச் சமாதானப்படுத்த முயல...

எத்தனை தான் அவளின் கலக்கத்தை அகற்றவும், அவளை அமைதிப்படுத்தவும் நிருபமா முயன்றாலும், அங்கு ஆடிக் கொண்டிருந்தவர்களின் கூத்தும் கும்மாளமும், கூட நடனம் ஆடிய பெண்களின் மேல் ஆண்களின் வரைமுறையற்ற அசிங்கமான தொடுகைகளும் அவளின் அச்சத்தை நொடிக்கொரு தடவை அதிகரிக்கச் செய்ய,

இதில் அவளின் உள்ளத்தில் மூலையில் இன்று ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதை போல் உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருக்க மஹாவின் மனதிலும் உடலிலும் உதறல் எடுக்க ஆரம்பித்தது....

ஆர்டர் செய்திருந்த உணவும் வந்துவிடத் தோழிகளுடன் சேர்ந்து அருந்த துவங்கியவளுக்கு உணவும் உள்ளே இறங்காமல் போகவும், ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் இருப்பது போல் மனம் உலையாகக் கொதித்து இருக்க, இதில் ஏற்கனவே எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றி விட்டதைப் பல மடங்கு அதிகரிக்க செய்வதுப் போல் டான்ஸ் ஃப்ளோரில் ஏறினான் கோகுல்...


தொடரும்..

 

JB

Administrator
Staff member


அத்தியாயம் - 26

உள்ளம் ஹோட்டலில் நடந்துக் கொண்டிருந்த நடனத்திலேயோ, உணவிலேயோ அல்லது தோழிகளின் அரட்டையிலேயோ ஈடுபடமுடியாமல் தவித்து அது வரை தோழிகளுக்காக தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பொறுமையாக இருந்தவளுக்கு திடீரென்று எதிர்பாராமல் அங்கு கோகுலை கண்டதும் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கியது....

கடந்த சில நாட்களாக தான் எங்கு சென்றாலும் அவன் தன்னைப் பின் தொடர்வதைப் போலவே உணர்ந்து இருந்தவளுக்கு இன்று தன் கண்முன்னே அதுவும் முதல் முறை இதை போன்ற ஹோட்டலிற்கு வந்திருந்ததை கழுகிற்கு மூக்கில் வியர்த்தது போல் தெரிந்துக் கொண்டு வந்து தன் முன்னே நின்றவனைக் காணவும் இதயம் ஜில்லிட இனி இங்கு இருப்பதே ஆபத்து என்று உள்ளுணர்வு கூற,

"நிரு, ப்ளீஸ் கிளம்பலாம்டி" என்றாள் குரலிலும் நடுக்கத்தைக் கொண்டு வந்து...

அங்கு ஹோட்டலில் நடந்துக் கொண்டிருந்த கூத்தை முதன் முதலாக தானும் பார்ப்பதால் வாயைப் பிளந்துக் கொண்டு பார்த்திருந்த நிருபமாவின் காதில் இது விழுந்தால் தானே.

ஆனால் மஹாவிற்கே தெரியாத ஒன்றைக் கோகுல் செய்திருந்தான் அவளை வீழ்த்துவதற்கு...

மஹா தன் தோழிகளுடன் வருவதற்கு முன்பே ஹோட்டலிற்கு வந்திருந்தவன் அவர்கள் அமர்வதற்கு முன் பதிவு செய்திருந்த மேஜையைத் தெரிந்துக் கொண்டு வெயிட்டரை அழைத்தவன் மஹாவின் புகைப் படத்தைக் காட்டி அவளுக்கு பரிமாறப்படும் குளிர் பானத்தில் "டேட் ரேப் ட்ரக்" அல்லது "க்ளப் ட்ரக் எக்ஸ்டஸி" [club drug "ecstasy" ] எனப்படும் பாலியல் வன்முறைகளுக்கென்றே கண்டுப்பிடிக்கப்பட்ட ஒரு மருந்தைக் கலக்க சொன்னான்...

அது குடிப்பவர்களை மெய்மறந்த நிலைக்கு கொண்டு சென்று களிவெறிப் பரவசத்தில் ஆழ்த்தும் ஒரு வித கொடிய மருந்து...

கோகுலிடம் இருந்து வெயிட்டர் பெற்றுக் கொண்ட கத்தைப் பணம் சரியாக வேலை செய்ய எந்த பானத்திலும் கலக்கப்படக் கூடிய அதற்கென்று ஒரு தனி நிறமோ, வாசனையோ அல்லது சுவையோ எதுவும் இல்லாத அந்த கொடிய மருந்தை மஹா வரவழைத்திருந்த பானத்தில் கலந்த வெயிட்டர் அவளின் மேஜையில் வைக்கவும்,

மஹா அந்த பானத்தைக் குடிக்க கையில் எடுத்தவளுக்கு மனதில் ஏற்பட்டிருந்த கலக்கம் ஏனோ திடீரென்று அதிகரித்ததைப் போலத் தோன்ற, மெல்ல மேஜையில் பானத்தை வைத்தவளின் மனம் அந்த நிமிடம் உணவோ பானமோ எதுவும் அருந்தும் நிலையில் இல்லை...

டான்ஸ் ஃப்ளோரில் ஆட ஆரம்பித்திருந்த கோகுலின் கைகள் தன்னுடன் ஆடிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் மேல் படக்கூடாத இடத்தில் எல்லாம் அருவருப்பாகப் பட்டுக் கொண்டிருந்தாலும் அவனின் காமம் வழியும் வேட்கை மிகுந்த கண்கள் மஹாவிடமே நிலைத்து இருந்தது...

வெயிட்டர் பானத்தையும் உணவையும் அவளின் மேஜையில் வைத்ததில் இருந்தே அவளைக் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் அந்த பானத்தைக் குடிப்பதுப் போலவே தெரியவில்லை ஆதலால் எரிச்சல் அடைந்தவனுக்கு இன்று எப்படியும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறிமட்டும் உடல் முழுவதும் ஊறிக் கொண்டிருந்தது...

சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவனின் ஒவ்வொரு நரம்பிலும் அவன் குடித்திருந்த மதுவினால் போதை ஏறியிருக்க, அதற்கு மேல் தாங்கமாட்டாது ஒரு கையால் தன்னுடன் ஆடிய பெண்ணை அணைத்துக் கொண்டே மறு கையால் மஹாவைப் பார்த்து ஏதோ சைகை செய்தவன் அவள் தன்னைக் கண்டதும் விழிகளில் அச்சத்தைத் தேக்கி வைத்து தலை கவிழ்ந்ததைக் கண்டவனுக்கு வேட்டையாடும் புலியின் கண்களுக்கு தெரியும் மானைப் போலேவே தெரிந்தாள் மஹா...

அவனின் பார்வையில் அப்படி ஒரு வெறி தெரிந்தது...

அதற்கு பின் அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காதைக் கண்டவன் கீழே இறங்கி அவளை நோக்கி நடந்து வர அவன் டேன்ஸ் ஃப்ளோரில் ஏறியதில் இருந்து தன்னை விழுங்கி விடுவதைப் போல் பார்த்திருந்ததைப் பார்த்திருந்தவளுக்கு அவன் தன்னை நோக்கி வருவது தெரிய, அச்சத்தில் நாக்கு உலற தன் தோழியின் கையை இறுக்கி பிடித்தவள்....

"நிரு... தயவு செய்து நான் சொல்றத கேளுடி... ப்ளீஸ், வாடி போகலாம்" என்று கெஞ்சினாள்...

ஒரு வேளை இது பகலாக இருந்திருந்தாலோ அல்லது கல்லூரிப் போன்ற வெளியிடமாக இருந்திருந்தாலோ கூட அவள் இந்த அளவிற்கு பயந்திருக்க மாட்டாள்... ஆனால் இப்பொழுது இருப்பதோ குடும்ப பெண்கள் வரக் கூடாத நாகரிகம் என்ற பெயரில் மிருகங்களாக மாறி இருந்த இளவட்டங்கள் கூத்தடிக்கும் இடம்...

அவள் கெஞ்சியும் அவளின் தோழிகளின் காதுகளுக்கு அவளின் குரல் கேட்கவில்லை... அப்படி லயித்து இருந்தார்கள் அரட்டையிலும் நடனத்தை வேடிக்கைப் பார்ப்பதிலும்...

இதில் கோகுலின் அட்டகாசம் கல்லூரி முழுக்க பிரபலமாகி இருந்தும் ஏனோ மாணவிகளில் சிலருக்கு அவன் மேல் ஒரு க்ரேஸ் இருக்கத் தான் செய்தது...

அவனின் பணமோ இல்லை அவனுக்கு கல்லூரியில் இருந்த பிரபலமோ எதுவோ ஒன்று அவன் மேல் அவர்களுக்கு ஒரு ஈடுபாடு வரச் செய்து இருந்தது...

அவன் தங்களை நோக்கி வருவதை பார்த்த தோழிகளில் ஒருத்தி,

"ஏய், கோகுல் இங்க தாண்டி வரான்" என்று ஜொள்ளுவிட, அவளை முறைத்த மஹா,

"நிரு இப்போ நீ என்ன கூட்டிட்டு போறியா இல்ல நானே ஏதாவது டேக்ஸி பிடித்து போகட்டுமா?" என்றாள்...

அவள் நிருபமாவிடம் கண்டித்துக் கூறவும் கோகுல் அவளை நெருங்கி வரவும் நேரம் சரியாக இருந்தது....

அது வரை கேலிப் பேச்சும் அரட்டையுமாக இருந்த நிருபமாவிற்கு அப்பொழுது தான் சுரீரென்று இருந்தது கோகுலைக் கண்டதும்... ஏனெனில் தோழிகளுடனான அரட்டையிலும் உணவு உண்பதில் இருந்த ஆர்வத்திலும் அவள் கண்களுக்கு கோகுல் தென் படவே இல்லை...

ஐயோ! இவன் எப்பொழுது இங்கு வந்தான்? என்று அவள் யோசிப்பதற்குள் மஹாவின் அருகில் வந்திருந்தவன்...

"வுட் யூ லைக் டு டேன்ஸ் வித் மி மஹா? [“Would you like to dance with me Maha?]" என்று கேட்க,

சுட்டெரித்துவிடுவதுப் போல் அவளின் பார்வையை பார்த்தவன் மஹாவின் மேஜைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு மேஜையின் நாற்காலியை அவளுக்கு அருகில் இழுத்து போட்டு அமர்ந்தான்...

அவனின் நோக்கம் மஹாவை எப்படியாவது அந்த பானத்தை அருந்த செய்ய வேண்டும் என்பதே...

ஆனால் அவன் அத்தனை நெருக்கத்தில் அமரவும் அவன் மேல் இருந்து வந்த மது வாடை வேறு குமட்டிக் கொண்டு வர, சட்டென்று எழுந்தவள் தன்னையும் அறியாமல் "எக்ஸ்டஸி" மருந்து கலந்திருந்த அந்த பானத்தைத் தட்டிவிட தன் திட்டம் கீழே இவ்வாறு சிதறிக் கொண்டு இருப்பதைக் கண்ட கோகுலின் மனம் அடங்காத ஆங்காரத்தால் கொந்தளித்துக் கொண்டிருக்க,

பானம் தன் மேல் சிந்தியிருந்ததால்....

"நிரு, ஐ ஹேவ் டு கோ டு ரெஸ்ட் ரூம் [Niru, I have to go to restroom]" என்ற மஹா ரெஸ்ட் ரூமை நோக்கி நடக்க,

சட்டென்று சேரில் இருந்து எழுந்தவன் புள்ளி மானை வேட்டையாடும் வெறியோடு அவளை பின் தொடர்ந்தான்....

அவன் தன் பின்னால் தன்னை தொடர்ந்து வருவதை உணர்ந்தவள் வேகமாக நடக்க அவனும் தன் வேகத்தை அதிகரிக்க, ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தவள் தன் முட்டாள் தனத்தை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள்...

"முதலில் இந்த மாதிரி ஹோட்டலுக்கு வந்ததே தப்பு.... இதுல அவன் என் பக்கத்துல உட்கார்த்திட்டு இருக்கும் போது ஃப்ரெண்ட்ஸ் ஒருத்தியையும் கூட்டி வராமல் தனியாக ரெஸ்ட் ரூம் வந்தது அத விடப் பெரிய தப்பு... இப்போ அவன் வெளியில் தான் நிப்பான்... எப்படி அவன்கிட்ட இருந்து தப்பிகிறது" என்று சிந்தித்தவளுக்கு கை கால்களில் நடுக்கம் எடுக்க என்ன செய்வது என்று தடுமாறி உள்ளேயே நின்றாள்...

மஹாவின் அதிர்ந்த முகத்தையும் தங்கள் அருகில் வந்து கோகுல் அமர்ந்ததையும், பின் தடுமாற்றத்தில் மஹா பானத்தை தட்டிவிட்டதையும் பார்த்திருந்த நிருபமாவிற்கு மஹா "ரெஸ்ட் ரூம் போகிறேன்" என்று சொல்லவும் அவனும் அவளைப் பின் தொடர்ந்து செல்வதைப் பார்த்ததும் பயம் அப்பிக் கொள்ள, ஒருவேளை இதற்காகத் தான் மஹா போகலாம் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாளோ என்று வெகுத் தாமதமாக புத்தியில் உரைக்க தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு வேகமாக ரெஸ்ட் ரூமை நோக்கி நடந்தாள்..

அங்கு மஹா வெளியே வர கழுகுக் கோழிக் குஞ்சை தனக்கு இரையாக்க காத்திருப்பது போல் ஒரு வித வெறிக் கண்களில் படர கோகுல் காத்திருக்கவும், அவன் அருகில் சென்றவள்...

"ஹாய் கோகுல்.... லேடிஸ் ரெஸ்ட் ரூமுக்கிட்ட என்ன பண்றீங்க?" என்று வேறு வழியில்லாமல் புன்னகைத்தவாறேக் கேட்க...

வெளியில் நிருபமாவின் பேச்சுக் குரல் கேட்டதும் சட்டென்று கதவை திறந்து வெளியில் வந்த மஹாவிற்கு நிருபமா அவளுக்காக வெளியில் காத்திருப்பதை பார்த்து சிறிது நிம்மதி வர, அவள் கையைப் பிடித்து இழுத்தவள் வேகமாக வெளியேறினாள்...

ஆனால் இதற்கெல்லாம் அயர்ந்து போகுபவனா கோகுல்?

"ஏற்கனவே போட்டிருந்த திட்டம் தான் பலிக்கவில்லை... இப்பொழுது தனியாக வேறு மாட்டியிருக்கிறாள்.... இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது... எப்படியாவது இந்த நிருபமாவை இங்கு இருந்து அப்புறப் படுத்திவிட்டால் பின் மஹாவை அடைவது சுலபம்" என்று தப்புக் கணக்கு போட்டவன் வேகமாக மஹாவைத் தாண்டி சென்று அவளின் வழியில் குறுக்கே நின்றவன்,

"என்னடி, இன்னும் என் மனச புரிஞ்சிக்காத மாதிரி நடிக்கிற? இத்தனை மாசமா உன் பின்னாடி நாய் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன்... என்ன விட்டுட்டு எவனோ ஒரு கிராமத்தான லவ் பண்றியாமே? அப்படி என்னடி என் கிட்ட இல்லாதத அவன் கிட்ட பார்த்த?" என்று அசிங்கமாக கேட்க...

அவனின் கேள்வியில் அருவருப்பு அடைந்தவள்...

"கோகுல்... மைண்ட் யுவர் டங்க் [Gokul.. Mind your tongue] " என்று சத்தமாகக் கேட்டவளுக்கு அதற்கு மேல் அவனிடம் பேச விருப்பமில்லாமல் அந்த இடத்தை விட்டு நகரப் போக,

அவள் எதிர்பார்க்காத நேரம் அவளின் கையைப் பிடித்து சட்டென்று இழுத்தான் அந்த ஓநாய்...

அவன் திடீரென்று இழுத்ததும் நிலைத் தடுமாறியவள் தன்னை சுதாரித்துக் கொண்டு அவன் கன்னத்தில் பளாரென்று அறைய, மஹாவின் அமைதியான குணத்தையும், எப்பொழுதும் தன் தோழிகளுடன் சிரித்த முகமாகவே இருப்பவளை மட்டுமே கண்டிருந்தவனுக்கு அவளின் இந்த புதிய முகம் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது...

அவளின் கோபத்தையும், அவள் இவ்வாறு தன்னை அறைவாள் என்பதனையும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கோகுல் அதிர்ந்தவன் உடலும் உள்ளமும் எரிமலையாய் கொதிக்க, முகத்திலும் அவனின் சீற்றம் தெரிய அவளை இன்னும் நெருங்கி....

"இத்தனை நாள் உன்ன சும்மா விட்டதே தப்பாப் போச்சுடி... அதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" என்றவன் மஹாவின் கரத்தைப் பிடித்து தர தரவென்று இழுத்து போக,

அவனது வலுவான கரத்தை தன் பலம் கொண்ட மட்டும் வேகமாக உதறி தள்ளியவள் நிருபமாவுடன் சேர்ந்து மீண்டும் பளார் பளாரென்று அறைய, ஏற்கனவே மதுவின் தாக்கத்தால் தள்ளாடிக் கொண்டிருந்தவனை இப்பொழுது இரு பெண்களின் ஆக்ரோஷமான தாக்குதல்கள் வேறு நிலைகுலையச் செய்யவும், கீழே விழப் போனவன் இருந்தும் தன்னை சமன் படுத்திக்கொண்டு நிமிர்ந்து பார்த்தவனின் முகம் அவமானத்தில் செக்கச் சிவந்துப் போயிருந்தது....

இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அதற்குள் ஹோட்டல் ஊழியர்கள் வேகமாக ஓடி வர ஆனால் அவர்களுக்கு கோகுல் ஏற்கனவே நன்கு பரிச்சயமானவன் என்பதால் அவனை ஒன்றும் செய்ய இயலாமல் கையை பிசைந்தவாறு ஒருவொருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க,

அவர்களின் தடுமாற்றத்தைக் கண்டு சுதாரித்த நிருபமா பட்டென்று...

"இவ எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் ஓனரோட தங்கை" என்று கத்தினாள்...

எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயரைக் கேட்டவுடனே அதிர்ந்தவர்கள் வேகமாக கோகுலிடம் வந்து...

"சார், நீங்க இரண்டு பேருமே பெரிய இடம்... இப்போ என்ன நடந்தாலும் அது எங்க ஹோட்டல தான் பாதிக்கும்...... ப்ளீஸ் சார், அவங்களைப் போக விடுங்க சார்..." என்று அவளை விடச் சொல்லி கெஞ்ச....

கோகுலிடம் அவர்கள் கெஞ்சிக் கொண்டு இருக்கும் பொழுது அவன் கவனம் அவர்களிடம் இருக்க, அது தான் சமயம் என்று மஹாவின் கையைப் பிடித்து அவளை தன்னுடன் இழுத்த நிருபமா,

"சார், ப்ளீஸ் நீங்க எல்லோரும் எங்க கூட பார்க்கிங் வரைக்கும் வர முடியுமா?" என்றவள் ஒரு விநாடிக் கூட தாமதிக்காமல் ஓட்டமும் நடையுமாக ஊழியர்களுடன் சேர்ந்து கார் நிறுத்தும் இடத்திற்கு வந்தாள்..

ஊழியர்களுக்கு முன் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்த கோகுலிற்கு பெண்களின் கைகளில் அடி வாங்கியதும், பின் தான் எப்பொழுதும் பந்தா விட்டு திரியும் ஹோட்டலின் ஊழியர்களுக்கு முன் இப்படி ஒரு அவமானம் நேர்ந்ததினாலேயும், சமயம் பார்த்து நிருபமா மஹாவை தன்னிடம் இருந்து பிரித்து இழுத்து சென்றதாலேயும் அளவிட முடியாத ஆத்திரம் கிளம்ப....

கோபத்தில் " ****** " என்று தகாத வார்த்தைகள் சொல்லி கத்தியவன் ஆங்காரமாக.....

"இருடி... ஒரு நாள் உன்னை நான் தூக்குறேண்டி... அப்புறம் தெரியும் இந்த கோகுல் யாரென்று" என்று தொண்டைக் கிழிய கர்ஜித்தான்....

ஊழியர்களின் துணையுடன் கார் நிறுத்தும் இடத்திற்கு வந்த நிருபமா அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத மஹாவை காரினுள் தள்ளியவள் காரை செலுத்திக் கொண்டே மற்ற தோழிகளுக்கு அழைத்து மஹாவிற்கு உடல் நிலை சரி இல்லை என்றும் அவளை வீட்டில் விடப்போவதாகவும் சொன்னவள் கோகுலின் பொறுக்கித் தனத்தை சொல்லாமல் மறைத்துவிட்டாள்....

ஒரு வழியாக போக்குவரத்து அதிகமாக இருந்த ஒரு பிரதான சாலைக்கு அவர்கள் வரவும், இனி கோகுல் தங்களை தொடர மாட்டான் என்று நம்பிக்கையில் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை ஆழ விட்ட நிருபமா திரும்பி மஹாவைப் பார்க்க இன்னமும் உடலில் இருந்த படபடப்பு குறையாமல் அவள் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவள் அவள் தோள் தொட்டு அழைக்க, அவளின் தொடுகையில் திடுக்கிட்டு தூக்கிவாரிப்போட ஐயோ என்று கத்தினாள் மஹா...

மஹாவிற்கு கோகுலின் தகாத நடவடிக்கை அதிர்ச்சியாக இருந்தது என்றால் அவன் கடைசியாக "ஒரு நாள் உன்னை நான் தூக்குறேண்டி" என்று கர்ஜித்த வார்த்தைகள் அதை விட பேரதிர்ச்சியாக இருந்தது...

இதில் நிருபமா வேறு தப்பித்துக் கொள்ள வேறு வழியில்லாமல் எ.கெ க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் ஓனருடைய தங்கை என்று கூறிவிட்டாள்... இது அர்ஜூன் அண்ணா காதிற்கு சென்றால் என்னவாகும் என்று கதிகலங்கி இருக்க அவளின் கலக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் நிருபமா...

"மஹா, இத உன் அண்ணனிடம் சொல்லி ஏதாவது பண்ணச் சொல்லுடி... அவன் கத்தியத நினைச்சா எனக்கு குலையே நடுங்குது.... ஏற்கனவே அவன் சரியான பொம்பளைப் பொறுக்கி.... இப்போ இதில் அவன் அடிப் பட்ட பாம்பு வேற... நிச்சயம் கடிக்காம விடமாட்டான்" என்றாள் அச்சத்துடன்....

நிருபமாவைத் திரும்பி பார்த்த மஹா....

"நிரு, ப்ளீஸ்.... இதை யாரிடமும் சொல்லாதடி.... எங்க வீட்டிற்கு இப்போ தெரிய வேண்டாம்... இப்போ தான் எங்க அண்ணா ஒரு பிரச்சனையில் இருந்து வெளி வந்திருக்காங்க... எங்க மாமும் இப்போ தான் குணமாகிட்டு வராங்க.... அதனால ஐ ஹேவ் டு கீப் கொயட் ஃபார் சம் டைம் [I have to keep quiet for sometime]" என்றாள் இன்னமும் நடுக்கம் குறையாத குரலில்....

ஏனெனில் மஹாவிற்கு நன்றாக தெரியும்... இந்த விஷயம் அர்ஜூனின் காதுகளுக்கு போனால் அது நிச்சயம் கோகுலின் உயிருக்கே ஆபத்தாகத் தான் முடியும்...

"அது மட்டும் அல்ல... இப்பொழுது தான் அண்ணாவும் திவ்யா அண்ணியும் சந்தோஷமா இருக்கிறாங்க... இது நானே இழுத்துவிட்டுக் கொண்ட பிரச்சனை.... இதில் அண்ணாவை இழுத்தால் அது அவருக்கும் ஏதாவது பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்த்தால் என்ன ஆவது" என்று நினைத்து மௌனமாக இருந்து விட முடிவு செய்ய.....

சில நேரங்களில் பிரச்சனைகளின் வீரியத்தையும் அதனால் விளையக்கூடிய விபரீதங்களையும் சரியாக ஆராயாமல் அதனை எதிர்கொள்வதை தவிர்க்க நாம் நமக்குத் தானே சில காரணங்களைக் கற்பித்துக் கொள்கிறோம்... ஆனால் பிரச்சினைகளை தவிர்த்தல் ஒரு தீய சுழற்சியை வழிவகுத்து அதன் பலனை, பாதையை மிகவும் கடினமாக கடக்க செய்கிறது....

ஒரு வேளை இதனை அன்றே மஹா உணர்ந்து தன் அன்னையிடமோ அல்லது அர்ஜூனிடமோ நடந்த அனைத்தையும் மறைக்காமல் சொல்லியிருந்தால் பின்னாளில் கோகுல் என்ற வெறிப் பிடித்த ஓநாயால், தனக்கு வேண்டும் பெண்களை எந்த எல்லைக்கும் சென்றடைய நினைக்கும் காமுகனால், தனக்கு மட்டும் அல்ல, தன் அண்ணியான திவ்யாவிற்கும் வரப் போகும் அசம்பாவிதங்களில் இருந்து தப்பித்திருக்கலாமோ!!!!

விதி யாரை தன் விளையாட்டில் இருந்து ஒதுக்கி இருக்கிறது!!!!



நாட்கள் அதன் போக்கில் நகர அர்ஜூனும் திவ்யாவும் ஒன்று சேர்ந்து இதற்குள் ஒரு மாதம் ஆகிறது...

இந்த ஒரு மாதமும் தன் மனையாளின் மென்மையான அரவணைப்பிலும், கணவனின் மனம் புரிந்து அவன் விரும்பும் நேரத்தில் அச்சமும், நாணமும் தவிர்த்த இணக்கமான தாம்பத்தியத்திலும், கணவனை உயிராக நேசித்து இருந்த அவளின் கரிசனத்திலும் திளைந்திருந்த அர்ஜூனின் மனம் முழுக்க தன் மனைவியே நிறைந்திருக்க, அவனுக்கு தன் வாழ்க்கையே அழகிய பூங்காவனமாக தோன்றியது...

தொழில் தொழில் என்று புதைந்துப் போயிருந்தவன், குடும்பத்திற்கு என்று இது வரை தனியாக நேரம் ஒதுக்காதிருந்தவன் இன்று தன் மனைவிக்காக பொன்னான நேரத்தை ஒதுக்கி வைத்து அவளை மகிழ்ச்சியில் குளிப்பாட்ட, கணவனின் ஆழ்ந்த நெருக்கத்திலும், அவன் தன்னை தாங்கிய விதத்திலும் தன் மனதை, உடலை, ஆத்மாவை அவனின் பாதத்தில் சமர்ப்பித்து இருந்தவளுக்கு, இருந்தும் மனதில் அடி மூலையில் ஒரு சிறு வருத்தம்...

என்ன தான் தன் கணவன் தன்னை விவாகரத்து செய்யப் போவதில்லை என்று கூறியிருந்தாலும், தன்னை அணைப்பாலும், முத்தத்தாலும், கரிசனத்தாலும் குளிப்பாட்டிருந்தாலும் அவ்வப்பொழுது வேண்டாத சிந்தனையாக அவன் கையெழுத்து வாங்கியிருந்த விவாகரத்துப் பத்திரத்தைப் பற்றிய எண்ணங்கள் அலைமோதும்...

பாவம் சின்ன பெண்.... விவாகரத்தைப் பற்றிய ஞானம் எதுவுமே இல்லாதவள்....

"விவாகரத்துப் பண்ணப் போவதில்லை என்றால் பின் ஏன் என்னிடம் கையெழுத்து வாங்கினார்??" என்று சில சமயங்களில் நியாபகம் வரும் பொழுதெல்லாம் கலங்கிப் போனாலும் வாய்விட்டு தன் கணவனிடம் அதனைப் பற்றி கேள்வி கேட்கும் தைரியம் மட்டும் அவளுக்கு இன்னும் வரவில்லை...

"இத்தனை நாட்கள் என்னைக் காத்த முருகன் இனியும் என்னைக் கைவிட மாட்டார்" என்ற நம்பிக்கையில் தான் விரும்பி வணங்கும் முருகனின் பாதத்தில் தன் கவலையைப் போட்டுவிட்டவள் கணவனுடனான இல்லற வாழ்க்கையில் அவனுக்கு குறையேதும் வைக்காமல் அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்திருந்தாள்...

அலுவலகத்திற்கு வந்த அர்ஜூன் வழக்கம் போல் அன்றைய வேலைகளில் மூழ்க, காலையில் இருந்தே கதிர் அர்ஜூனை சந்திக்க முயற்சி செய்ய, அர்ஜூனின் வேலை பளுவின் காரணமாக அவனைப் பிடிக்க முடியவில்லை...

ஒரு வழியாக MD ஐ சந்தித்த கதிர்..

"சார்... ஸவுத் இன்டியன் அஸோசியேஷன் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ் அன்ட் பிஸினஸஸ் ஒரு கெட் டு கெதர் மாதிரி அரேஞ்ச் பண்ணியிருக்காங்க சார்... சீஃப் கெஸ்டா உங்களை செலக்ட் பண்ணியிருக்காங்க.. உங்களிடம் பேச ட்ரை பண்ணிக்கிட்டே இருக்காங்க... ஆனால் உங்கள ரீச் பண்ண முடியலைன்னு சொன்னாங்க" எனவும்...

அவனை நிமிர்ந்துப் பார்த்தவன்...

"சரி, நான் பேசிக்கிறேன்" என்று மறுபடியும் கணினியில் கண்களைப் பதித்தான்...

அர்ஜூனின் மேஜையில் விழாவின் அழைப்பிதழை வைத்துவிட்டு கதிர் வெளியேற மிகப் பெரிய தொழில் அதிபர்கள் அனைவரும் வருடம் ஒரு முறைக் கூடும் அந்த விழாவின் அழைப்பிதழைப் பார்த்தவன் அவர்களை அழைக்க, விழாவைப் பற்றியும் அது நடக்கவிருக்கும் நாளைப் பற்றியும் பேசியவர்கள் இறுதியில் அவன் மனைவியையும் விழாவிற்கு அழைத்து வரச் சொன்னார்கள்...

புன் முறுவலுடன் சரி என்றவன் திவ்யாவையும் தன்னுடன் விழாவிற்கு அழைத்துப் போக முடிவு செய்தான்...

வீட்டிற்கு செல்லும் வழியில் அவளை பற்றியே சிந்தித்துக் கொண்டு வந்தவனுக்கு சட்டென்று அவளுக்கு புடவை வாங்கும் ஆசை வர, நேரே தன்னுடைய நண்பனின் டெக்ஸ்டையில் ஷோரூமிற்கு காரை செலுத்தியவன் கடைக்குள் நுழைந்ததும் அன்று திவ்யாவுடன் அதே கடையில் புடவை எடுத்த சம்பவம் நியாபகத்தில் வந்தது...

வாழ்க்கையில் முதன் முறை இத்தனை பெரிய துணிக் கடையைப் பார்த்தவள் பார்த்ததும் வியப்பில் வாய் பிளந்து சிலை போன்று நின்றது மனக் கண்ணின் முன் தோன்றி சிரிப்பை வரவழைக்க, நேரே டிசைனர் புடவைகள் விற்கும் இடத்தை தேடி சென்றான்....

அர்ஜூனிற்கு வாழ்க்கையில் இதற்கெல்லாம் நேரமோ அல்லது பொறுமையோ அல்லது விருப்பமோ இருந்ததில்லை.... ஆனால் இன்று முதல் முறை தனித்து புடவைக் கடைக்கு வந்தவன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலசி ஆராய்ந்து தன் மனைவிக்கு பொருத்தமாக அந்த விலை உயர்ந்த அழகான டிசைனர் புடவை எடுத்தான்...

வெள்ளை நிறத்தில் அடர்ந்த அரக்கு நிற கரையும், வெள்ளை நிற புடவையின் மேல் பாகத்தில் அரக்கு நிறத்தில் கற்களும், அரக்கு நிற கரையில் வெள்ளை முத்துக்களும் உடல் முழுவதும் அலங்கரிக்க கண்களை கவருவதாக இருந்தது அந்த அழகிய புடவை...

திவ்யாவிடம் புடவையைக் காட்டும் பொழுது அவள் அதிசயித்து கண்களை அகல விரித்து, வாய் பிளந்து பார்க்கும் தோரணையை மனக்கண் முன் கொண்டு வந்தவன் அதே நினைவில் வீட்டை அடைய, அங்கு தன் அன்னையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவளைத் தலை அசைத்து வா என்பது போல் அழைக்க...

"இப்பொழுது தான் வீட்டிற்கு வந்தார்... அதற்குள் என்னை தனியாக அழைக்கும் இவரை என்ன செய்வது?" என்று புரியாமல் பார்த்தவளின் அருகில் வந்தவன் தன் அன்னை தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கூட சட்டை செய்யாமல்....

"இப்படி பார்த்துட்டே இருந்தா போதுமா? வா என் கூட" என்று அவள் கரம் பற்றி தங்கள் அறைக்கு அழைத்து போனான்....

கணவனின் இந்த அடாவடிச் செயலில் தடுமாறி நாணத்துடன் தன் மாமியாரை திரும்பி பார்த்தவள் வேறு வழியின்றி அவன் இழுத்த இழுப்பிற்கு அவனை பின் தொடர....

தங்களின் அறைக்குள் நுழைந்தவன் கதவை சாத்தவும்...

கணவனின் கரத்தில் இருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டவள் அவன் நெஞ்சில் லேசாக அடித்து...

"ஏங்க இந்த மாதிரி பண்றீங்க? அத்த என்ன நினைப்பாங்க?" என்று கொஞ்சம் சத்தமாகவேக் கேட்க,

அவளின் இடைப் பற்றி தன்னருகில் இழுத்தவன்...

"ம்ம்ம்... புதுசா கல்யாணம் ஆனவங்க ரூமுக்குள்ள என்ன பண்ணுவாங்களோ அதத் தான் நாம் இரெண்டு பேரும் பண்ணப் போறோம்னு நினைப்பாங்க" என்றவாறே அவளின் கழுத்தில் முகம் புதைக்க,

அவனைப் பிடித்து தள்ளியவள்...

"அதுக்கு எல்லாம் நேரம் காலம் இருக்கு" என்றாலும் கணவனின் கூற்றில், செயலில் முகம் செவ்வானமாய் சிவந்து நின்றவளின் அருகில் வந்தவன் புடவை இருந்த பையைக் கொடுக்க, என்ன ஏது என்று பிரித்து பார்த்தவளின் கண்கள் அகன்று விரிந்தது....

அவன் கனவு கண்டிருந்ததைப் போல்.....

ஆசையோடு தன் கணவன் முதன் முதலாக தானாக சென்று எடுத்து வந்திருந்த கண்களைப் பறிக்கும் விதத்தில் அழகான முத்துக்களும் கற்களும் கோர்த்திருந்த புடவையை குழந்தையைப் போன்று தன் விரல்களால் தடவிப் பார்த்தவள் அதன் விலையைப் பார்க்க, அதே வெள்ளை மனதுடன்...

"ஐயோ! என்னங்க இது? எதுக்கு இவ்வளவு விலையில இப்ப புதுப் புடவை?" என்றாள்...

அவளின் குழந்தைத்தனமான பேச்சிலும், முக பாவத்திலும் மயங்கி சிரித்தவன் அவளின் இடைப்பற்றி இழுத்து தன்னுடன் இறுக்கி அணைத்தவாறே...

"அடுத்த வாரம் ஒரு ஃபங்ஷன் இருக்கு... பெரிய பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ், பிஸினஸ்மென் எல்லாம் வருவாங்க..... நீயும் என் கூட வர.... வரும் போது இத கட்டிட்டு வர" என்றான்...

"ஐயோ! நானா? உங்க கூடவா? நான் எதுக்குங்க அந்த மாதிரி இடத்துக்கெல்லாம்? நீங்க எல்லாம் இங்கிலீஷ்ல பேசிக்குவீங்க... எனக்கு ஒன்னும் புரியாது... அப்புறம் உங்களுக்குத் தான் கஷ்டம்" என்றவளின் கழுத்தில் அழுந்த முகம் புதைத்து அவளின் வாசத்தை ஆழ சுவாசித்தவன்....

"திவி.... யார் என்ன சொன்னாலும் நீ என்னோட வைஃப்... அதனால நீ என் கூட வர..." என்றான்.

விழா நாளும் வர, மஹா திவ்யாவை அவர்கள் திருமண வரவேற்பு அன்று அலங்கரித்தது போல் அலங்கரிக்க, அர்ஜூன் எடுத்து கொடுத்த புடவையில் தேவதை போல் இருந்த அண்ணியை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தவள்,

"எனக்கே உங்கள பார்க்கும் பொழுது என்னென்னவோ பண்ணனும்னு தோனுது... அண்ணன் என்ன பண்ணப் போறாரோ?" என்றாள் கொஞ்சலுடன்...

அத்தனைப் பாந்தமாக இருந்ததாள் திவ்யா அந்தப் புடவையில்....

டிசைனர் புடவை என்பதால் மஹா முந்தானையை மடிப்பு வைத்துக் கட்டாமல் தளர்த்தி [Free] விட்டவாறு புடவையை அணியச் சொல்ல திவ்யாவிற்கு அப்படிப் புடவைக் கட்டி பழக்கம் இல்லாததாலும், அதிலும் டிசைனர் புடவை என்பதால் மிகவும் மெல்லியதாகவும் இருக்க, கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தவள் விடாப்பிடியாக வேண்டாம் என்று மறுக்க, வேறு வழியில்லாமல் அர்ஜனை அழைத்த மஹாவை அதிர்ச்சியுடன் பார்த்த திவ்யா...

"ஐயோ! அண்ணி.... இப்ப எதுக்கு அவங்களைக் கூப்புடுறீங்க?" என்று அலறினாள்...

தன் மனைவியின் வரவிற்காகக் கீழே ஹாலில் அமர்ந்துக் காத்திருந்தவன் மஹாவின் அழைப்பில் என்ன என்பது போல் மேலே பார்க்க, மஹா....

"அண்ணா, இங்க கொஞ்சம் வாங்களேன்" என்றாள்...

"நான் எதுக்கு?" என்று கேட்டுக் கொண்டே அவன் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மேலே ஏறி வரவும்...

"இங்க பாருங்கண்ணா... இந்த ஸாரிய இப்படித் தான் கட்டனும்னு சொன்னா அண்ணி கேட்க மாட்டேங்கிறாங்க" என்று போட்டுக் கொடுக்க,

என்ன தான் தன் கணவனுடன் இத்தனை நாட்கள் இல்லற வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் இயற்கையில் பெண்களுக்கே உரிய வெட்கம் தோன்ற, தன்னிச்சையாக மஹாவிற்குப் பின் மறைந்துக் கொண்டவளைக் கண்டவனுக்குத் தன் மனைவியின் நாணம் அத்தனை இன்பமாக இருக்க இளம் முறுவலித்தவாறே அறைக்குள் நுழைந்தவனுக்குத் தனிமை கொடுத்து வெளியே சென்றாள் மஹா...

வெள்ளையும் அரக்கு நிறமுமாகக் கற்களும் முத்துக்களும் பதித்த புடவையில் அழகுற ஜொலித்த தன்னவளை ஆர்வத்துடன் பார்க்க, என்றும் இருப்பது போல் இல்லாமல் மஹா அவளின் தலை முடியை நேராக்கி தளர்த்தி விட்டிருந்தவள், ஒரு கேட்ச் க்ளிப் மட்டும் போட்டு விரித்து விட்டிருக்க...

அவளின் அருகே வந்தவன் மலர்ந்த முகத்துடன்...

"வாவ், பியூட்டிஃபுல்" எனவும்....

அவனின் பேச்சில் தலை கவிழ்ந்தவளை தன் ஒற்றை விரலைக் கொண்டு நிமிர்த்தியவன்....

"சொல்லு, என்ன பிரச்சனை? நல்லா தான இருக்கு?" என்றான்...

"இல்ல, இப்படிப் புடவை முந்தானைய கீழே விட்டு எனக்குப் பழக்கம் இல்லை. அதான்" முகத்தில் கூச்சத்தைச் சுமந்து அவள் சொல்ல....

அவளைக் கூர்ந்து பார்த்தவன்....

"அதனால என்ன?" எனவும்..

வெட்கமும் அச்சமும் போட்டிப் போட்டுக் கொண்டு வர சன்னமான குரலில்...

"புடவை ரொம்ப மெலிசா இருக்கு" என்றாள் தயங்கியவாறே....

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தவன், இருந்தும் புரியாதது போல் அவளின் மார்பை உற்றுப் பார்த்து....

"எனக்கு ஒன்னும் தெரியலையே... இன்னும் சொல்லப் போனால் சூப்பராகத் தான் இருக்கு" என்று அவளின் இடையில் இரு கரங்களையும் கொடுத்துத் தன்னை நோக்கி இழுக்க....

தன் கணவனின் சில்மிஷம் புரிந்தவள்,

"பாத்தீங்களா, உங்களுக்கே தெரியுது... அசிங்கமா இருக்குதுன்னு" என்று கலங்கினாள்...

சிரித்தவன்....

"ப்ராமிஸா ஒன்னும் தெரியலை... உத்துப் பார்த்தா தான் தெரியுது?" என்று கண் சிமிட்ட,

"அப்ப, உத்துப் பார்த்தா தெரியுதா?" என்று பதறிய மனைவியை மேலும் இறுக்கியவன்...

"என் வைஃப்ப உத்துப் பார்க்க எவனுக்குடி இங்க தைரியம் இருக்கு..... அப்படி உத்துப் பார்த்தான்னா என்ன நடக்கும்ன்னு எல்லாருக்கும் தெரியும்" என்று அழுத்தமாகச் சொன்னவன்,

குனிந்து அவளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு,

"ட்ரெஸ்ஸிங் எல்லாம் முடிஞ்சதுன்னா வா..... ஐ ஹாவ் சம்திங் ஃபார் யூ [I have something for you] " என்றான்..

"ஙே" என்று விழித்தவளைப் பார்த்து புன்னகைத்து கொண்டவன், வா என்று அவளின் கைப் பிடித்து அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஆளுயற கண்ணாடிக்கு முன் அவளை நிறுத்தியவன் பீரோவில் இருந்து அவளுக்காக அவன் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த வைர கற்களும் ரூபியும் பதித்த அந்த நகை செட்டை எடுத்தான்...

எப்பொழுதோ கொடுக்க வேண்டிய காதல் பரிசு.... இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகு ஆனால் இந்தச் சந்தோஷமான சூழ்நிலையில் கொடுப்பதிலும் அவனுக்கு மகிழ்ச்சியே...

விழிகளை அகல விரித்து ஆச்சர்யத்துடன் நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முதுகின் புறம் வந்து முடியை ஒதுக்கி அவனே அவளுக்கு நெக்லஸை அணிவித்து விட்டான்...

வளையல்களையும் மோதிரத்தையும் அணிவித்து விட்டவன், தோடுகளைப் போட சொல்ல, அவள் அணிந்ததும் கண்ணாடியில் இருவரையும் பார்த்தவன்...

"வி லுக் லைக் வி ஆர் மேட் ஃபார் ஈச் அதர் திவி, ரைட்? [We look like we are made for each other Dhivi... Right?]" என்றான்...

பெரியவர்களால் ஜாதகம் பார்த்து ஆடம்பரமாக நடந்தேறிய திருமணங்களாகட்டும் அல்லது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத காதல் திருமணங்கள் ஆகட்டும்...

திருமணத்தில் இணையும் இரு உள்ளங்களின் மனம் ஒற்றுதலைப் பொறுத்து தான் அவர்களின் வாழ்க்கை வெற்றி பெரும்...

முன் பின் அறியாத அர்ஜூனும் திவ்யாவும் விதி வசத்தால் ஒரே இடத்தில் சந்திக்க நேர்ந்திட பெரியோர்களின் கட்டளைக்காகத் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்திருந்தாலும், அவர்களுக்குள் ஒரு புரிதல் வரும் முன் எத்தனை எத்தனையோ இன்னல்களையும் சிக்கல்களையும் சந்தித்திருந்தாலும் இதோ இன்று மனம் ஒத்த தம்பதியர்களாக வாழும் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமே...

திவ்யா உடுத்தியிருந்த புடவையின் நிறங்களும் அவள் அணிந்திருந்த நகைகளின் நிறமும் ஒத்தது போல் இருக்க, "இது எப்ப வாங்குனீங்க?" என்று ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க....

மனைவியின் காதல் வழியும் விழிகளை ரசித்தவன்....

"அத அப்புறம் சொல்றேன்... இப்ப வா, டைம் ஆச்சு" என்றவன் அழைத்துச் சென்றது சென்னையிலேயே மிகப் பெரிய அந்த நட்சத்திர ஹோட்டலிற்கு...

அங்கு தான் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் காரில் இருந்து அர்ஜூன் இறங்கியதும் அவனைத் தொடர்ந்து திவ்யாவும் இறங்க, அங்கு நின்றிருந்த வேலட்டிடம் காரின் சாவியைக் கொடுக்கவும் அவர் காரை நிறுத்துமிடத்திற்கு எடுத்து சென்றார்....

காரை விட்டு இறங்கிய திவ்யாவிற்கு அந்த நட்சத்திர ஹோட்டலை பார்த்தவுடனேயே திக்கென்று இருந்தது....

ஜகஜ்ஜோதியாய் அலங்கார விளக்குகள் பளிச்சிட ஹோட்டலின் வாயிலில் இருந்தே பணக்கார தோரணையுடன் ஆண்களும் பெண்களும் குழுமியிருக்க, தான் ஏதோ வரக் கூடாத இடத்திற்கு வந்துவிட்டதைப் போன்று உணர்ந்தவள் திரும்பி தன் கணவனைப் பார்க்கவும்...

அவளின் கலக்கத்தையும், அச்சத்துடன் தன்னை நோக்கி பரிதாபமாகப் பார்ப்பதையும் கண்ட அர்ஜூன் அவள் அருகில் சென்றவன் இடைப் பிடித்து அழைத்துச் செல்ல, அவளின் இடையைப் பிடிக்கும் பொழுதே அவள் உடலில் ஓடிய சிறு நடுக்கத்தில் இருந்து தெரிந்தது அவள் எத்தனை பயந்திருக்கிறாள் என்று...

காதிற்கருகில் குனிந்தவன்...

"என்ன திவி, பயமா இருக்கா?" எனவும், ஆமாம் என்பது போல் தலை அசைத்தவளை இன்னும் இறுக்கப் பற்றியவன்....

"அதான் நான் உன் கூடவே இருக்கேன்ல... அப்புறம் என்ன பயம்?" என்றான்...

ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்த அந்த நிமிடமே அவனைச் சுற்றி மற்ற தொழிலதிபர்கள் அனைவரும் கூடி விட, கூட்டத்தில் அர்ஜூனின் கரம் திவ்யாவின் இடையில் இருந்த மெல்ல அகல, அந்த நொடியே தான் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்த திவ்யாவின் முகத்தில் தோன்றிய கலக்கத்தை அத்தனை கூட்டத்திற்கும் இடையில் கண்டு கொண்டவன் அவளைச் சட்டென்று எட்டி பிடித்து அவளை மீண்டும் இழுத்து தன் அருகே வைத்துக் கொண்டு அனைவரிடமும் அறிமுகப்படுத்த, திவ்யாவிற்குத் தான் தயக்கமாக இருந்தது...

பார்ட்டி களைக் கட்ட துவங்க மாம்பழத்தை மொய்க்கும் ஈக்களைப் போல அர்ஜூனை ஏகப்பட்ட இளம் பெண்கள சூழ்ந்து கொள்ளத் திவ்யாவிற்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வரவும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வெகு பிரயாசைப் பட்டவள் அமைதியாகத் தனியே ஒரு சேரில் போய் அமர்ந்தவளின் இதயத்திற்குள் தன்னையும் அறியாமல் பயம் படர ஆரம்பித்தது...

நுனி நாக்கு ஆங்கிலம், அபாயகரமான உடைகள், பளிங்கு போல் மேனி, அடர்த்தியான மேக்கப், அனைவரின் கைகளிலும் ஏதோ ஒரு மதுக் கோப்பை என்று தன் கணவனைச் சுற்றியே இளம் பெண்களின் கூட்டம் இருக்க,

பெண்களுக்கே உரிய "என் புருஷன் எனக்கு மட்டும் தான்" என்ற உணர்வு மேலிட, தன் கண்களை அவனை விட்டு ஒரு நொடி கூடத் திருப்பாமல் அமர்ந்திருந்தவளை விட்டுத் தன்னைச் சுற்றிக் குழுமியிருந்த தொழில் அதிபர்களிடமும், மற்றவர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்த அர்ஜூனின் கண்கள் மறந்தும் ஒரு விநாடி கூட அகலவில்லை...

"முருகா, இந்தப் பெண்களிடம் இருந்து என் கணவனைக் காப்பாத்து... அவர் எனக்கு மட்டுமே சொந்தம்" என்று முருகனிடம் விழிகள் கலங்க, மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தாலும், அந்த அடர் நீல நிற கோட் சூட்டில் உயரமாக, வட நாட்டு இளைஞன் போல் சிவந்த நிறத்துடன், கம்பீரமாக, எல்லோரையும் வசீகரித்த தன் கணவனைக் கர்வத்துடனே பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனையாள்...

அவன் ஆங்கிலத்தில் உரையாற்றிய பொழுது அவன் பேசிய பேச்சுப் புரியாவிட்டாலும் அவனின் ஒவ்வொரு பேச்சிற்கும் கூடியிருந்தவர்கள் கைத் தட்டுவது இவன் என் கணவன், எனக்கு மட்டுமே உரியவன் என்ற கர்வத்தைக் கொடுத்தது...

என்ன தான் தன் எதிரில் அமர்ந்திருப்பவர்களை நோக்கி பேசிக் கொண்டிருந்தாலும், அர்ஜூனின் கண்கள் அவ்வப்பொழுது தன்னவளின் மேலேயே மொய்த்துக் கொண்டிருக்க, அத்தனை தூரத்தில் இருந்து தன்னவளின் விழிகள் கலங்கியிருப்பது அவனுக்குத் தெரியாவிட்டாலும், அவள் முகம் கலங்கியிருப்பதைக் கண்டவனுக்கு அப்பொழுதே அவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது...

அவளின் அமைதியும், அவள் தனித்து அமர்ந்திருப்பதையும் பார்ப்பதற்கு மனதிற்குள் என்னவோ செய்ய, அவளின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவனாகத் தன்னுடையை உரையை வெகுவாக முடித்துவிட்டு அவளிடம் வந்தவன் "போகலாமா?" என்றான்...

இந்த இடத்தில் இருந்து எப்பொழுதடா கிளம்புவோம் என்று திவ்யாவிற்கு இருந்தாலும் தன் கணவன் இன்னும் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்தவள்...

"நீங்க ஒன்னும் சாப்பிடலேயே" என்றாள் தயங்கியவாறே...

சிரித்தவன் "சரி வா" என்று அவளையும் உணவு வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று உணவை எடுத்துக் கொள்ள உதவி செய்தான்...

வழக்கம் போல் "பஃபே" அமைப்பில் அங்கு உணவு பதார்த்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்க, இதில் எல்லாம் பழக்கம் இல்லாதவள் இத்தனை வகைப் பதார்த்தங்களையும், அதனை நாமே எடுத்து வைத்துக் கொண்டு உண்ண வேண்டிய நாகரிக முறையும் கண்டவள் அசந்து போனாள்...

விழி விரிய உணவு வகைகளை வியந்து பார்த்திருந்தவளை கண்டவன் புன் முறுவலுடன் முகம் சுளிக்காமல் அவளுக்கு உதவி செய்தவன், அவளுக்கு ஸ்பூனில் எடுத்து சாப்பிட வரவில்லை என்பதால் கையிலேயே எடுத்து சாப்பிடு என்றான்...

ஒரு ஆறு ஏழு மாதங்களிற்கு முன் உள்ள அர்ஜூன் என்றால் திவ்யாவைப் போன்ற பெண்களை இப்படிப் பார்த்திருந்தால் "இதுங்களை எல்லாம் யார் இந்த மாதிரி பார்ட்டிக்கு வரச் சொன்னது?" என்று கடிந்து இருப்பான்... இன்னும் சொல்ல போனால் "இவளை போன்றவர்கள் ஹோட்டலுக்கு உள்ளேயே அனுமதிக்கப் படக்கூடாது" என்று தாம் தூம் என்று குதித்திருப்பான்...

ஆனால் ஒரு சின்னப் பெண்ணின் தூய, மென்மையான, அழகான காதல் அவனைத் தலை கீழாக மாற்றிவிட்டிருந்தது...

அவனின் அகம்பாவத்தையும் ஆணவத்தையும் அடியோடு வீழ்த்தி இருந்தது.... ஆனால் அவனுக்குமே இந்த மாற்றம் மிகவும் பிடித்துத் தான் இருந்தது...

ஏனோ தானோ என்று கொறித்துவிட்டு அவர்கள் கிளம்ப, மீண்டும் பெண்கள் கூட்டம் அவனை மொய்த்துக் கொள்ள ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தவனுக்கு மனைவியின் கலங்கிய முகம் பறை சாற்றியது அவளின் மனதில் தோன்றியிருக்கும் கலக்கத்தை...

வேலட்டிடம் காரை எடுத்துக் கொண்டு வர சொன்னவன் கார் வந்ததும் அவளை அந்த இடத்தில் இருந்து விரைவாகக் கூட்டி செல்ல வேண்டும் என்று எண்ணத்தில் காரை வேகமாகச் செலுத்தியவன் சிறிது தூரம் வரை எதுவும் பேசவில்லை...

ஏற்கனவே விவாகரத்துப் பத்திரத்தில் அவன் கையெழுத்து வாங்கியிருப்பதை நினைத்து அவ்வப்பொழுது அஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு அவனின் இந்த மேல்தட்டு இளம் பெண்களின் நட்பு அதிக அச்சத்தைக் கொடுக்க, அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்குக் காரில் இருந்த அமைதி உறுத்தவில்லை..

ஆனால் அவளின் மௌனமே கலக்கத்தினால் வந்தது தான் என்பதை உணர்ந்தவன் காரை ஒரு ஓரமாக ஆள் அரவமற்ற இடமாகப் பார்த்து நிறுத்த சட்டென்று கார் நிறுத்தப்பட்டதில் சுய நினைவிற்க்கு வந்து அவனைத் திரும்பி பார்த்தவளை முகத்தில் சிறு புன்சிரிப்புடன் பார்த்திருந்தவன் என்ன? என்பது போல் புருவத்தை உயர்த்திக் கேட்க, ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தவள் தலையைக் கவிழ்ந்துக் கொண்டாள்.

அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவளின் வருத்தம் புரிந்தவனாக அவளின் கைப் பிடித்து..

"திவி.... இன்னைக்குத் தான் நீ வாழ்க்கையில் இந்த மாதிரி பார்ட்டிய பார்த்திருக்கிற.... ஆனால் நான் என்னோட டீன் ஏஜிலேயே இதெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்..... அந்த இளம் வயதிலேயே எனக்குப் பெண்களோட பழகுவதற்கு நிறைய சேன்ஸஸ் இருந்தது..... அது மட்டும் இல்ல நான் என்னோட மாஸ்டர்ஸ் பண்ணினது லண்டனில்... எத்தனையோ பெண்கள் என் வழியில் க்ராஸ் பண்ணியிருக்காங்க... ஆனால் எல்லோரிடமும் நட்பு மட்டும் தான்... எங்கேயும் எப்போதும் என்னோட நான் செல்ஃப் கண்ட்ரோல்ல இழந்தது இல்ல... எந்த நேரமும் என் லிமிட் என்னன்னு எனக்குத் தெரியும்..." என்றவன் முகத்தில் பூரிப்புடன், இதழ்களில் இள முறுவலுடன் தொடர்ந்தான்....

"ஆனால், நான் விரும்பிய முதல் பெண் நீ தான்... நான் தொட்ட, கடைசியா தொடப் போற பொண்ணும் நீ தான்... நீ மட்டும் தாண்டி எனக்கு வேணும்... புரியுதா?" எனவும்...

கணவனின் கூற்றில் நிம்மதி அடைந்தவள் சிறிதே புன்னகைக்க, தான் இத்தனை எடுத்துச் சொல்லியும் அவளின் முகத்தில் தெளிவில்லாததைப் பார்த்தவன் அவளின் கலக்கத்தைப் போக்கும் விதமாக அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளின் இதழ்களைத் தன் இதழ்களுக்குள் அழுத்தமாகச் சிறை செய்ய,

அவளுக்கும் அந்த இதழொற்றல் அந்த நிமிடம் தேவையாக இருந்ததோ என்னவோ தன்னையும் அறியாமல் தன் கணவனின் கழுத்தைப் பிடித்துத் தன் அருகில் இழுக்க, அவளின் உணர்வுகள் புரிந்தவன் தன்னுடைய முத்தத்தை அவளின் இதழில் வன்மையாக ஆரம்பிக்க, கணவனின் அழுத்தமான நீண்ட முத்தம் அவளின் அப்போதைய மன நிலைக்கு மருந்தாகவே ஆனது...

எத்தனை நேரம் இதழ்களுக்குள் இதழ்களைப் புதைத்து தன்னிலை மறந்து இதழ்களின் சுவையில் மூழ்கி இருந்தார்களோ, முதலில் அர்ஜூன் தான் தன் நிலைக்கு வந்து சுதாரித்து அவளை விடுவித்தான்...

தான் எப்போது நெருங்கினாலும் வெட்கப்பட்டுக் கொண்டு தன்னை விலக்குவதிலேயே குறியாக இருப்பவள் இன்று இத்தனை நேரம் தனக்குள் மூழ்கி இருப்பது, தான் அவளுக்கு மட்டும் தான் என்று உணர்த்தவே என்று புரிந்தவன் மென்னகையுடன் காரை கிளப்ப, வழக்கம் போல் அவனின் முகம் பார்க்க கூச்சப்பட்டுக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அவனின் மனையாள்.

வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் உறங்கி இருப்பதைக் கண்டு நேரே தங்களின் அறைக்குச் செல்ல, அவன் அணிவித்திருந்த நெக்லஸை அவள் கழட்டப் போக, அவளின் பின் வந்து நின்றவன் அவளின் தோளில் கை வைத்து அவள் மென் கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான்...

கணவனின் மென்மையான முத்தத்தில் மனம் கிறங்கினாலும் மௌனமாக இருக்கும் மனைவியைத் தன்னை நோக்கி திருப்பிப் பார்த்தவன் அவளின் கண்களில் இன்னும் தென்பட்டிருந்த கலக்கத்தைக் கண்டு குழம்பியவனாகப் புருவத்தைச் சுருக்கி கூர்ந்துப் பார்த்தவன் ஒரு நல்ல கணவனாய் மனைவியின் முகமாறுதல்களை வைத்தே அவளின் மனதில் தோன்றியிருக்கும் கவலையை யூகித்து....

"திவி..... என்ன கேட்கனுமோ அத கேளு... மனசுக்குள்ளயே எதையும் வச்சுக்காத" என்றான்...

தயக்கத்துடன் மெல்லிய குரலில்...

"நான் ஒன்னு கேட்கட்டுமா?" எனவும்...

"ம்ம்ம்" என்றவன் அவளின் விழிகளையே ஆழ நோக்கியிருக்க, தடுமாறும் குரலில் விழிகளில் நீர் ததும்பி இருக்க...

"நீங்க என்னை விவாகரத்து பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க.... எனக்குத் தெரியும்... ஆனா அப்ப ஏன் அன்னைக்கு என்கிட்ட எங்க வீட்டுல கையெழுத்து வாங்கினீங்க?" என்றாள் தன் ஒட்டு மொத்த தைரியத்தையும் வரவழைத்து..

அவளின் தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ரசித்தவன் தன்னை முழுவதுமாக வெளிபடுத்துவிடும் நோக்கத்தில் அவளின் தோள்களைப் பிடித்தவாறே....

"திவி..... இந்த ஜ்வெல்ஸ் செட்டை நான் எங்க, எப்ப வாங்கினேன் தெரியுமா?” என்றான்....

தெரியாது என்பது போல் அவள் தலை அசைக்க அவளின் தோள்களைப் பற்றியிருந்த தன் கரங்களில் இறுக்கத்தைக் கூட்டியவாறே....

"யூ.எஸ் ஸில்" என்றான்...

அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாகக் கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தவளின் கண்களுக்குள் ஊடுருவி பார்த்தவன்...

"இப்போ புரியுதா என்னோட லவ்????" என்றான் இளம் முறுவலுடன்...

"யூ எஸ் ஸில் இருந்து வரும் பொழுது எல்லோருக்கும் ஏதோ வாங்கியிருந்தேன்... உனக்கு மட்டும் என்ன வாங்குறதுன்னே தெரியலை... மஹாவை கூப்பிட்டு கேட்டா, அவளுக்கும் உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரியலை... பட் நான் என்ன வாங்கிட்டு வந்தாலும் நீ ரொம்பச் சந்தோஷப் படுவன்னு மட்டும் சொன்னாள்... அதனால் அவளிடம் இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் உன்னிடம் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டேன்... இந்த ஜ்வெல்ஸ் செட்டை பார்த்த உடனேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது... நிச்சயம் உனக்கும் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்.... ஆனால் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் உனக்குச் சொல்லலை...." என்றவன் அவளின் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தி...

"தாலி பெருக்கன்னைக்கே இத நான் உனக்குக் கிஃப்டா கொடுக்கனும்னு நினைச்சிருந்தேண்டி..... ஆனால் எல்லோருக்கும் முன்னாடி கொடுக்கப் பிடிக்கலை.... உன் கழுத்தில் இதை நானே போட்டுவிடனும்னு தான் அன்னைக்கு உன்னை நம்ம ரூமுக்கு வரச் சொன்னேன்... அதுக்குப் பிறகு தான் உன்னை என்னோட வைஃப்பா எடுத்துக்கனும்னு ஆசைப்பட்டேன்...." என்றவன் சில விநாடிகள் தயங்கி...

"ஆனால் நீ அன்னைக்கு என்ன ரொம்ப ஏமாத்திட்ட... பட் நிச்சயமா உன்னை மட்டும் குறை சொல்ல முடியாது... நிறையத் தப்பு என் மேலேயும் இருக்கு... ஒழுங்கா என் மனசில் இருப்பதைச் சொல்லாமல் சட்டென்று கட்டி பிடிச்சு ரூமிற்க்கு வான்னு சொன்னவுடனே நீ பயந்திருப்ப... அது எனக்குப் புரியறதுக்குள்ள ஆஃபிஸில் ரெய்ட், வேற வேற பிரச்சனைகள்னு வந்திருச்சு... அந்தக் கோபத்தை எல்லாம் உன்னிடம் காட்டிட்டேன்" என்றான் முதன் முறை தன் மனையாளிடம் தன் மனம் திறந்து......

தன் கணவனுக்கு எப்பொழுதோ தன் மீது காதல் வந்திருக்கிறது... ஆனால் அவரின் இயற்கையான, இயல்பான, யாரிடமும் மனம் விட்டுப் பழகாத குணம் அவர் காதலையும் வெளிப்படுத்த விடவில்லை...

அதற்குத் தானும் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கவில்லை என்று குற்ற உணர்வு வர, அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவள்....

"அப்புறம் ஏன் என்னிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்குனீங்க?" என்றாள்....

வெள்ளை உள்ளத்துடனும் குழந்தை மனதுடனும், இன்னும் கலக்கம் மாறாத குரலுடனும் அவள் மீண்டும் அதனைப் பற்றியே கேட்டதும் சத்தமாகச் சிரித்தவன்,

"அது ஒரிஜினல் பேப்பர்ஸ் இல்லைடி... உன்னைப் பார்க்கறதுக்காக உங்க ஊருக்கு வந்தப்ப உன்னைச் சும்மா மிரட்டுறதுக்காக அங்க இருந்த ஒரு கடையில் ப்ரிண்ட் பண்ணினது" என்றான்...

சட்டென்று அவன் நெஞ்சில் இருந்து முகத்தை நிமிர்த்தி அவனின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து...

"அப்போ அது நிஜம் இல்லையே??" என்று தவிப்புடன் மீண்டும் கேட்க,

"ஏண்டி.... இன்னுமா என் மேல சந்தேகம்?? அப்போ இன்னைக்கே சந்தேகத்தை நல்லா க்ளியர் பண்ணிட வேண்டியது தான்" என்றவன் அவளை இரு கரங்களில் தூக்கி அணைத்துக் கட்டிலில் கிடத்தி சடுதியில் அவள் மேல் படர்ந்து தன் மனையாளின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்கான முயற்சியில் முழு மூச்சாக இறங்கினான்...

என்ன தான் கணவனுடன் இத்தனை நாள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவன் தன் மனதில் உள்ள காதலை தன்னிடம் வெளிப்படுத்திய பின் கூடும் கூடல் இது...

ஒவ்வொரு முறையும் அவனின் தொடுகையில் மனமும் உடலும் சிலிர்த்து கிறங்கி இருந்தாலும், அவனோடு ஈருடல் ஓருயிராகத் தாம்பத்தியத்தில் உருகி இணைந்து இழைந்திருந்தாலும், அவளின் ஆழ்மனதில் மெல்லியதாக ஒரு குரல் அவனுடைய அந்தஸ்தையும், அவன் அன்று கூறிய "வேலைக்காரியா வச்சுக்க வேண்டியவ" போன்ற வார்த்தைகளையும் அவ்வப்பொழுது எழுப்பிக் கொண்டே இருக்கும்...

பல நாட்களில் தன்னுடைய மென்மையான அணுகுமுறையாலும், சில நாட்களில் தன்னுடைய வன்மையான கூடலாலும் தன்னவளை அவன் காதலினால் திக்குமுக்காட செய்திருந்தாலும் ஆழ் மனதில் தன் கணவனுடைய வார்த்தைகளால் காயப்பட்டிருந்தவளுக்குச் சில நேரங்களில் தன்னையும் அறியாமல் தாம்பத்தியத்தின் சொர்க்கத்தை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் அந்தக் கொடிய வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்...

ஆனால் இன்று தன்னுள் ஆழப் புதைத்திருந்த தன் காதலை முதல் முறையாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்த தன் கணவனின் செயலில், தன்னை மறந்து மனம் நெகிழ்ந்துப் போய் முழு மனதோடு தன்னை ஒப்புவித்தாள்.

பல மணி நேரங்கள் நீடித்து நடந்து முடிந்த கூடலின் விளைவால் அவள் களைத்துப் போய் அசதியில் படுத்திருக்க, அவளின் இடைப் பற்றித் தூக்கியவன் அவளைத் தன் மேல் போட்டுக் கொண்டு....

"திவி.... நீ மேற் கொண்டு படிக்கிறியா?" என்றான்...

அந்தக் காலத்தில் சினிமாக்களில் வருமே.... பறவைகள் வானத்தில் பறந்து கொண்டிருக்கும்... திடீரென்று ஏதோ அதிர்வான காட்சி திரைப்படத்தில் தோன்ற பறவைகள் அப்படியே ஸ்டில்லாக நின்று விடும்...

அதே போல் கடலலைகளும், புயல் காற்றினால் விசிறி அடித்துக் கொண்டிருக்கும் மரங்களும், ரசித்து ருசித்து இலை தழைகளைத் தின்று கொண்டிருக்கும் மாடுகளும் அப்படியே ப்ரீஸாகி விடும்...

அது போல் தன்னைப் படிக்கிறயா என்று கணவன் கேட்டதும், மூளையும் உணர்வுகளும் உறைந்துப் போய் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும் மனைவியை லேசாக மேலே தூக்கியவன் தன் முகத்தின் மேல் அவளின் முகத்தை வைத்து, அவளின் செவ்விதழ்களில் மென்மையாகத் தன் இதழை ஒற்றி எடுத்தவன் மேலே சொன்ன வார்த்தைகளில் அந்த இளம் தளிரின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது....

"திவி.... ரியல் டிவோர்ஸ் பேப்பருக்கும் பொய்யா நான் விளையாட்டுக்குத் தயாரித்த ஃபேக் பேப்பர்ஸுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் இத்தனை நாட்கள் மனசில போட்டு புழுங்கிக்கிட்டு இருந்திருக்க.... இது ரொம்பத் தப்பு... சொல்லு... படிக்கிறியா? சரின்னா நம்ம மஹாவோட காலேஜிலேயே உன்னைச் சேர்த்துவிடுறேன்" எனவும்...

தன் கணவனின் மேல் தன் உடல் முழுவதும் படர்ந்திருக்குமாறு படுத்திருந்தவள் தன் மனதைக் கட்டுப்படுத்தும் வழித் தெரியாமல் அவன் கழுத்தில் தன் இதழ்களை ஆழ புதைக்க,

தன் மனையாளின் மனதில் ஏற்பட்டிருந்த பிரம்மையை, பிரமிப்பைத் தனக்கு வெளிப்படுத்தவே அவள் தன்னுடன் இழைகிறாள் என்பதனை புரிந்துக் கொண்டவன் தன் மேல் கொடிப் போல் கிடந்தவளை இறுக்க அணைத்தவாறே...

"திவி" எனவும்,

கணவனின் கழுத்தில் புதைத்திருந்த தன் இதழ்களை எடுக்காமலே அவனுக்குள் மேலும் புதைந்தவள் "ம்ம்ம்" என்று மட்டும் சொல்ல,

அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் முதல் முறை தாபமும் மோகமும் போட்டிப் போட்டு வழியும் தன் மனையாளின் விழிகளில் தன் காதல் கொண்ட விழிகளைப் படரவிட்டவன் மெல்லிய குரலில்....

"ஐ லவ் யூ திவி... ஐ லவ் யூ சோஓஓஓ மச்டி [I love you dhivi... I love you soooooooo much di ] " என்றான்....

முதன் முறை வாய் விட்டு தன் மனைவியிடம் காதலை சொன்ன அர்ஜூனின் குரல் காதலும், ஆசையும், ஆவலும், தாபமும், வேட்கையும் கலந்து கிசுகிசுப்பாக ஒலிக்க...

விழிகள் கலங்க கணவனின் காதல் வார்த்தைகளில் தன்னை மறந்து லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு இதழ் விரித்து சிரித்தவன்...

"ம்ஹூம்.... இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது" என்றவன் அவளைக் கீழே சரித்து வார்த்தைகளில் சொன்ன தன் காதலை மீண்டும் மீண்டும் செயலில் நிருபிக்க துவங்கினான்...

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருந்தால் விதியின் கரங்களும் அவர்களை அரவணைத்துக் கொள்ளும்...

அது செய்யும் காரியங்களில் நல்லதும் இருக்கும், தீயதும் இருக்கும்.....

விதி விட்ட வழி என்று அமைதியாக இருந்துவிடுவதை விட நம் மனதின் எண்ணங்களுக்கு ஏற்ப தான் விதியின் பாதைகளும் பலன்களும் இருக்கும் என்று நம்ப வேண்டும்....

நம்பினால் நம் குணங்களைப் பொறுத்து அது நல்ல வினையாகவும் மாறும் தீய வினையாகவும் மாறும்... அர்ஜூன் திவ்யாவின் தாம்பத்தியத்தைப் போல...


இரவு திவ்யாவிடம் அவளின் மேற்படிப்பைத் தொடர்வதற்குச் சம்மதம் பெற்ற அர்ஜூன் மறுநாள் காலையில் உணவு அருந்தும் வேளையில் குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்க, அதனைப் பற்றிப் பேசத் துவங்கவும் ஏற்கனவே மற்றவர்களுக்கும் அதே கருத்து இருந்ததால் உடனடியாக ஒத்துக் கொள்ள...

"ஆனா அண்ணா, இயர் எண்ட் ஆல்ரெடி வந்துட்டதுனால அண்ணிய அடுத்த வருஷம் தான் காலேஜில் சேர்க்க முடியும்... அதுவும் இல்லாம இது என்னோட ஸீனியர் இயர்ங்கறதனால அண்ணி தனியாத் தான் போகனும்" என்று மஹா கூற,

இந்த சென்னையில் காலேஜிற்குத் தனித்துப் போவதா என்று பக்கென்று இருந்தது திவ்யாவிற்கு... தடுமாறியவாறே..

"இ.. இல்ல, அப்ப நான் காலேஜிற்குப் போகல" என்று அச்சத்துடன் கூறியவளை சட்டென்று திரும்பி பார்த்த அர்ஜூனின் கூர்ய பார்வையில் தன் கணவனை அதே பழைய அச்சத்துடன் பார்த்தவாறே நடுங்கி நிற்க அவளின் பயத்தை அதிகரிக்கும் வகையில்...

"ஏன் போகலை?" என்றான் கடினமான குரலில்...

"இல்லை.... எனக்குத் தனியா போகப் பயமாயிருக்கு"

"ஏன்? மஹா இல்லன்னா உன்னைய காலேஜில் யாரும் கடிச்சு தின்னப் போறாங்களா என்ன?"

கணவனின் கோபம் தெறிக்கும் குரலில் சகலமும் நடுங்கி தலைக் கவிழ்ந்தவளைக் கண்டதும் அவளின் பயத்தைப் புரிந்துக் கொண்டவனாக மனம் இளகி அவளின் கரத்தை மென்மையாக பற்றிக் கனிவுடன்...

"திவி... நானே உன்னைக் காலேஜில் கொண்டு போய் ட்ராப் பண்ணிட்டு ஈவ்னிங் பிக்கப் பண்றேன்... இன் கேஸ் என்னால முடியலைன்னா ட்ரைவர் முருகனோ அல்லது அருணோ உன்னைப் பார்த்துப்பாங்க..." என்றவன் அத்துடன் இந்தப் பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்பது போல் எழுந்து கைக் கழுவ செல்ல,

திவ்யாவிற்குக் கணவனை எதிர்த்துப் பேச நாவெழவில்லை... அதே திகிலான மன நிலையுடன் தன் மாமியாரைத் திரும்பி பார்க்க அவர் புன்னகையுடன்...

"திவ்யா... நாங்க எல்லாம் இருக்கோம்ல.. அப்புறம் ஏன் இந்தப் பயம்? போகப் போகப் பழகிடும்டா... என்ன?" என்று ஆறுதலாகக் கூற,

படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தும் வசதியற்ற காரணத்தால் தன் அன்னை தன்னைக் கல்லூரிக்கு அனுப்ப இயலாது என்று கூறிய அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கும் தெரியாமல் தனிமையில் அழுது கரைந்தது அவளின் நியாபகத்திற்கு வர இத்தனை அன்பான கணவனும், புகுந்த வீட்டாரும் தன்னைச் சுற்றி வளையம் போல் பாதுகாப்பாக இருப்பதில் இனி என்ன கவலை என்றே தோன்ற சரி என்பது போல் இளமுறுவலுடன் தலை அசைத்தாள்...

அங்கு அலுவலகத்திற்கு வந்து வேலைகளில் புதைந்துப் போன அர்ஜூனிற்கோ காலையில் தனது கோபத்தில் அஞ்சி நடுங்கி நின்ற மனைவியைப் பார்த்ததும் பழைய திவ்யாவைப் பார்த்தது போலவே இருக்க, மனம் உருகியவன் தன்னை மூழ்கடித்திருந்த வேலைகளை விரைவில் முடித்து மாலை வீட்டிற்குத் திரும்ப,

கணவன் வந்தும் அவனைச் சட்டை செய்யாமல் சமையல் அறையே கதி என்று கிடந்த மனைவியின் கோபம் புரிந்தவன் உணவு அருந்தும் பொழுது அவளின் முகத்தையே பார்த்திருக்க, ஆனால் அவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தால் தானே...

எப்படியும் அறைக்கு வந்து தானே ஆக வேண்டும் என்று சிரித்துக் கொண்டவன், இரவு அவளின் வருகைக்காக தங்களின் கட்டிலில் சாய்ந்து காத்திருந்தவன் தொலைக் காட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றியவாறே எந்த நிகழ்ச்சியிலும் மனதை செலுத்த முடியாமல் இறுதியில் தனது மடி கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அலுவலக வேலையைத் தொடர, நீண்ட நேரம் கணவனைக் காத்திருக்க வைத்தவள் ஒரு வழியாக அறைக்குள் நுழைய,

கணவனின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளை கண்டு புன்னகைத்தவன் கணினியை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு அவளின் முதுகு புறமாக நெருங்கிப் படுத்து, அவளின் கூந்தலை ஒதுக்கி தனது இதழ்களை அவளின் கழுத்தில் பொறுத்த, வெடுக்கென்று எழுந்தவள் அவனின் கண்களை உறுத்துப் பார்த்து...

"எனக்கு இன்னைக்குத் தூக்கம் வருது" என்றாள்...

அவளின் கோபத்திலும், அவள் தன்னைப் பார்த்திருந்த விதத்திலும் குழந்தைத் தனத்தையே கண்டவன் அடக்க மாட்டாமல் சிரித்தவாறே..

"சரி தூங்கு... எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு... முடிச்சுட்டு உன்னை எழுப்பிவிடறேன்...என்ன?" என்றான் கண் சிமிட்டியவாறே கல்மிஷத்துடனும் விஷமம் வழியும் கண்களுடனும்...

மீண்டும் மௌனியானவள் ஒருக்களித்துப் படுக்க, மடி கணினியை எடுத்து வைத்துக் கொண்டவன் வேலையில் மூழ்க, கணவனிடம் தன்னைத் தொட தடை விதித்தவளின் மனமோ தன்னையும் அறியாமல் அவனின் அருகாமையை, அணைப்பைத் தேட, அவனின் புறம் திரும்பிப் படுத்தவளைக் கணினியில் கண்களைப் பதித்துக் கொண்டே உணர்ந்தவன் இள நகையுடன் தன் வேலையைத் தொடர...

"எனக்கு இந்த வெளிச்சத்தில் தூங்க முடியலை" என்று செல்லமாகச் சிணுங்கியவளைக் கண்டவனிற்கு அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவும் வாய் விட்டு சிரித்தவன் கணினியை தூர வைத்து அவளைத் தன் அருகில் இழுத்தவன் அவளின் பூந்தளிர் மேனி முழுவதும் தன் வலுவான உடல் படருமாறு சரிய,

தன்னால் இயன்ற அளவிற்கு அவனைத் தள்ள முயன்றவளின் போராட்டங்களைச் சடுதியில் அடக்கியவன் அவளுக்குள் மூழ்க துவங்க,

கணவனின் முரட்டு இதழ் ஒற்றல்களிலும், வன்மையான அத்து மீறல்களிலும் அவளின் பெண்மையும் சிலிர்த்து எழ, கட்டவிழ்ந்த தாபம் சீறிக் கொண்டு வெளி வந்ததில் தனது வலிமையான அணைப்பால், தனது மென்மையற்ற தொடுகையால் தன் மனையாளின் உணர்வுகளும் கிளர்ந்தெழுந்தததில் அவளின் கோபம் வெகு தூரம் சென்று விட்டதை அறிந்தவனுக்கு ஏனோ இன்று மிருதுவான தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாது போனது...

கணவனின் எதிர்பார்ப்புகளை, தேடல்களைப் புரிந்துக் கொண்டவளுக்கு அவனின் நெகிழ்வற்ற செய்கைகளும் உடல் கன்னிப்போகும் அளவிற்கு அவனின் வலிமையான பிடியும் தன் மலர் போன்ற உடலை வலிக்கச் செய்தாலும் அந்த வலியும் இன்ப அவஸ்தையாக இருக்க,

உணர்ச்சிகள் தடுமாறி இருந்தவள் தன்னை தன் கணவனிடம் அடியோடு இழக்க, ஊடலிற்கு பின் வரும் கூடலின் சுவையையும் தன் மனையாளுக்கு காட்டினான் அவளின் காதல் கணவன்...

தொடரும்

(அடுத்த அத்தியாயம் திங்கட்கிழமை)
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top