JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள், அத்தியாயம் 31 & 32

Uthaya

Member
31

எஸ்.ஐ. ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, “அந்த மாட்டுக்காரனுக்கு நல்ல மோட்டிவ் இருக்கு, ஆனா அவனை கூண்டுல நிறுத்தினோம்னா ஒரு அப்பாவிப்பயல நாம நிறுத்தி கொடுமைப் படுத்திறதா எல்லாரும் நினைப்பாங்க சார். மேலும் நான் அவங்கிட்ட பேசினதிலிருந்து அவன் அருவாள தொடக்கூட பயப்படுவான்னு நினைக்கிறேன் சார். தொட்டாலும் அவனுக்கு ஒரு மனுசனோட தலைய வெட்டுறதுக்கு தைரியமோ, தெம்போ கிடையாது சார்,” என்றார்.

“சரி அவன் பொண்டாட்டி செய்திருக்க சாத்தியம் இருக்கா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“சார் அவ பளபளண்ணு பழம்மாதிரி அழகா இருப்பா சார். ஆனால் அவளுக்குக் கொலை செய்றதுக்கு தைரியமோ, பலமோ போதாது சார்,” என்றார் எஸ்.ஐ.

“வேற யார்மேல நமக்குச் சந்தேகம்?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அந்த அருவாள் வெள்ளச்சாமி ஒரு நபர். அவனுடைய அருவாள்தான் கொலைக்கு ஆயுதமாப் பயன் படுத்தப்பட்டிருக்கு. அவன் செய்தானா, அல்லது வேற எவனாவது செய்தானான்னு தெரியல,” என்றார் எஸ்.ஐ.

“அவன் தலைமறைவா ஆயிட்டான். அது அவன் மேல சந்தேகத்தை எழுப்புது ஆனால் அது ஒன்னுமட்டும் போதாது அவன நாம தண்டிக்கிறதுக்கு,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“ஆமா சார். அந்த அருவாள் வெள்ளச்சாமி கொலையான சங்கரலிங்கத்துக்குக் கையாளா, நெடுநாளா அவனுக்கு உண்மையா உழைச்சிருக்கான். அவன் அருவாள் வேற கொலைக்கு ஆயுதமாய் ஆகிருச்சு. ஆக நாம மொதல்ல அவனைத் தேடித்தான் வருவோம்ன்னு நெனைச்சுக்கூட அவன் ஒளிஞ்சிருக்கலாம்,” என்றார் எஸ்.ஐ.

“சரி அவன் ஆள் எப்படி,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அவன் ஆள் ஓங்கு தாங்குன்னு மீசையும் கீசையுமா இருப்பான். அருவாளோட பாத்தாப் பயத்தை ஏற்படுத்திற மாதிரி இருப்பான் சார். ஆனால் உண்மையில அவன் ஒரு பயந்தாங்கொள்ளின்னு ஊர்ல எல்லாருமே சொல்றாங்க சார்” என்றார் எஸ்.ஐ.

“அப்படி இருக்கிறவன் கொலை செய்ய மாட்டான்னு சொல்லமுடியாது. கோபம் வந்தா, காரணம் இருந்தா எவனும் கொலை செய்வான்னு நாம நம்பினால்தான், நாம் எல்லா நபர்களையும் ஒன்னு விடாம அலசி ஆராய முடியும்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“ஆமா சார், அவன ஒரு முக்கியமான சஸ்பெக்ட்டா வச்சிருக்கோம் சார். அவன் எங்க இருப்பான்னு ஓரளவுக்குத் தெரியும் சார். அவன் வீட்டுக்காரி உண்மையச் சொல்லிட்டா சார். ஒரு பக்கம் அவனையும் வலைவீசித் தேடிக்கிட்டு இருக்கோம் சார். அவன் பெண்டாட்டி சொன்ன ஊர்ல இருக்கானான்னு விசாரிச்சிட்டு வர ஆள் அனுப்பி இருக்கேன் சார். அவனைக் கண்டு பிடிச்சால் எப்படி அவன் அருவாள் கொலைக்கு உபயோகப்படுத்தப் பட்டதுன்னு தெரியும். பின்ன அது எப்படி மாட்டுக்குத் தண்ணி காட்டுர தொட்டிக்குள்ள போனதுங்கிற கேள்விகளுக்காவது அவன் பதில் சொல்லித்தான ஆகணும்,” என்றார் எஸ்.ஐ.

“இவங்க தவிர வேற யார்மேலேயாவது சந்தேகம் இருக்கா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“சார், ஊர்ல பலபேர் அந்தச் சங்கரலிங்கத்திடம் கடன் வாங்கியிருக்காங்க. மேலும் அவனுக்கு பொம்பளைங்க விசயத்திலயும் கொஞ்சம் எதிரிகள் இருக்க வாய்ப்பு இருக்கு. அந்த கோணத்தில நமக்குத் தெரியாத ஆட்களும் இருக்கலாம். ஆனால் முக்கியமா அவன் அந்த மாட்டுக்காரன் பொண்டாட்டியத்தான் வச்சிருந்திருக்கான். அந்த விரால்ராசு பொண்டாட்டிகிட்டக் கூட பழக்கம் ஏற்பட்ட மாதிரி தெரியல. சங்கரலிங்கம் அவள்கிட்ட காண்டாக்ட் வச்சுக்கிட முயற்சி எடுத்திருக்கான்னு தெரியுது. ஆனா எவ்வளவு தூரம் அவன் முயற்சி சக்சஸ் ஆச்சுன்னு தெரியல சார். ஆக அவங்கிட்ட கடன் வாங்கின ஆள்கள் போக அருவாள் வெள்ளச்சாமி, விரால்ராசு, மாட்டுக்காரன் தங்கச்சாமி, கூடவே அந்த டுக்குத்திருடனையும் சேத்தா மொத்தம் நாலு பேர் சார்,” என்றார் எஸ்.ஐ.

“நமக்கு இதுவரைக்கும் தெரியாத நபர் இருக்காங்களான்னு யோசிச்சுப் பாருங்க. இன்னும் தீவிரமா விசாரிங்க. கொலை மட்டுமில்ல தீ ஏற்பட்டு பல வீடுகள் எரிஞ்சு போயிருக்கு. டீ.எஸ்.பி.ட்டயிருந்து மட்டும்மில்ல கலெக்டர் கிட்ட இருந்தும் பிரஷர் வந்துக்கிட்டு இருக்கு. மினிஸ்ட்டர்கிட்ட இருந்து கேள்வி சீக்கிரமா வரும்ன்னு பேசிக்கிறாங்க. நாம சீக்கிரமா குற்றவாளிய பிடிச்சுக் கேஸ் போட்டாத்தான் நம்மள நிம்மதியா நடமாட விடுவாங்க. சரி நான் நாளைக்கு திரும்பி வாரேன், மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்,” என்ற இன்ஸ்பெக்டர் அவரசமாகக் கிளம்பிப் போய்விட்டார்.




32

அடுத்த நாள் காலை 10 மணிக்கு இரண்டுபேர் அந்த பெரியவரைக் கைத்தாங்கலாக சத்திரம் காவல் நிலையத்திற்குள் அழைத்து வந்தனர். அவருக்கு இப்போதெல்லாம் நடக்கக் கொஞ்சம் சிரமம் என்பதற்காக மட்டுமல்ல, அவர் முக்கால்ச் செவிடு என்பதாலும்கூடத்தான். அவரை நடக்கவிட்டால் அவர் பாட்டுக்கு எங்கேயோ போய்க்கொண்டு இருந்தார். எனவே அவரைக் கையைப் பிடித்து இழுத்து வர வேண்டியதிருந்தது. ஊரில் அவரை முழுச்செவுட்டு மூக்கையா என்று அழைத்தது எஸ்.ஐ.க்குத்தெரியாது. இல்லையென்றால் அவரை அழைக்காமலே இருந்திருப்பார்.

எஸ்.ஐ.யின் முன் அந்தப் பெரியவர் அமர்ந்தபின், “உங்க பேர் என்ன பெரியவரே?” என்றார்.

பெரியவர் பவ்வியமாக எஸ்.ஐ.க்கு சிரம் தாழ்த்தி, “தெரியாது,” என்று கனத்தகுரலில் உரக்கக் கூவினார். அவருடைய தலை ஒரு பக்கதிலிருந்து மறு பக்கத்திற்கு மாறி மாறி ஆடியது. அவருடைய கைகளும் தெரியாது என்ற செய்கையை ஆட்டி ஆட்டி உறுதி செய்தன.

அவரைக் கைத்தாங்கலா அழைத்து வந்த அவருடைய பேரன், கொஞ்சம் வெட்கத்துடன், அவருடைய வலது காதில், “பேரு. உங்க பேர் என்ன?” என்று இரைந்தான். அவன் தன் வலது கை ஆட்காட்டி விரலால் அவரைச்சுட்டிக்காட்டினான்.

பெரியவர், ஏதோ புரிந்தவர்போல், “ஓ.. அப்பிடிச் சொன்னாத்தான தெரியும்,” என்று இரைந்துவிட்டு, “இது எம் பேரன்,” என்று சொல்லிவிட்டு மெல்லச் சிரித்தார்.

அவருடைய பேரன் தலையில் அடித்துக்கொண்டான், பின், “ஐயோ தாத்தா அது இல்ல. ஓம் பேரு,” என்று அந்தக் காவல் நிலையமே இடிந்து விழும் அளவுக்கு கத்தினான்.

பெரியவர் சற்றும் அசராமல், “கூமுட்ட,” என்றார்.

அவருடைய பேரன், “ஏன்டா வந்தமின்னு இருக்கு,” என்று சாதாரணச் சத்தத்தில் சொல்லிவிட்டு, “பேரு...,” என்று இரைந்தான். ரோட்டில் போகின்றவர்கள் ஒரு நிமிடம் நின்று பின் ஓன்றும் ஆகவில்லை என அறிந்தவுடன் தொடர்ந்தனர்.

பெரியவர், “அப்பிடிக்கேட்டாத்தான தெரியும். எம்பேரா?” என்று சொன்னதுதான் தாமதம். எஸ்.ஐ., ஏட்டு, பேரன், ஏன் நாற்காலி மேஜைகூட நிம்மதிப்பெருமூச்சு விட்டது. பெரியவர் தொடர்ந்தார், “அப்பிடிக்கேட்டாத்தான தெரியும். கெக்க கே,” என்று சிரித்தார். “எங்க அய்யா ஆத்தா வச்ச பேரு சோமசுந்தரம். ஊர்ல எல்லாரும் கூப்பிடுத பேரு சோணாசலம்,” என்று சொல்லிவிட்டு கடகட என்று சிரித்தார்.

அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்த அவர் பேரன், கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினான்.

எஸ்.ஐ., தன் நாற்காலியை நகர்த்தி, சோணாசலத்தின் வலது காதின் பக்கம் போட்டுக்கோண்டார். பின், “திருடன் ஒங்கள எந்த இடத்தில வச்சு மரிச்சான்?” என்றார் சத்தமாக.

பெரியவர் முகம் சுழித்து, “நான் ஒரு சாமானையும் திருடல. நமக்கு அந்தப் பழக்கம் கெடயாதுல்லோ. சிறு வயசில இருந்தே களவு காச்சி நல்லது இல்லன்னு சொல்லிருக்காக. அத மீறப்பிடும்? என்ன சொல்லுதேக? நான் சொல்லது சரியா இல்லயா?” என்று எஸ்.ஐ.யைப் பார்த்தார்.

பேரன் தன் கைகளை ஒரு ஆண் ஒன்றுக்குப் போவதுபோல், இடுப்புக்குக் கீழ், கால்களுக்கு இடையில் பிடித்து, “கள்ளன் ஒம்ம கொள்ள அடிச்சாமுல்லோ, அத பத்தி கேக்காக, எஸ்.ஐ. சார்,” என்று ஒவ்வொரு வார்த்தையாக நடித்துக் காட்டினான்.

சோணாசலம் அவருடைய பேரனின் நடிப்பைப் புரிந்துகொண்டாரோ அல்லது அவருடைய காது திடீரென்று அரைகுறையாகக் கேட்க ஆரம்பித்துவிட்டதோ என்னவோ, “அய்யா இது எம் பேரன்,” என்று எஸ்.ஐ.க்கு தன் பேரனை அறிமுகம் செய்துவிட்டு, குரலை உயர்த்தி சத்தமாகத் தொடர்ந்தார், “அது நடந்து, ரெண்டு மூணு வருசம் இருக்கும்,” என்றார்.

பெருமூச்சுவிட்ட எஸ்.ஐ., “திருடன் எப்படி இருந்தான்?” என்றார்.

சோணாசலம் தன் வலது கையைத் தலைக்கு மேல் தூக்கி, “உசரமா, பெரிய தலைப்பாக் கட்டிக்கிட்டுருந்தான்,” என்றவர் சற்று நிறுத்தினார். பின், தொடர்ந்தார், “அது மாதிரி பெரிய சாமான என் எம்பது வயதில பாத்ததில்ல. இம்புட்டு நீளம் இருக்கும்,” என்றவர், தன் வலது கையை நீட்டி இடது கையால் வலது முழங்கையைத் தொட்டுக் காட்டினார்.

அருகில் இருந்த ஆண்கள் மட்டுமல்லாமல், பெண் காவலர்களும், அங்கே இருந்த மற்றப் பெண்களும் வாய்விட்டுச் சிரித்தனர். அதோடு போதும் என்று சோணாசலத்தை அனுப்பிவிட்டார் எஸ்.ஐ.

அடுத்ததாக எஸ்.ஐ., சுப்பையா என்பவரை விசாரணைக்கு அழைத்தார்.

“ஒங்க பேர் என்ன?” என்றார் எஸ்.ஐ.

“சுப்பையா, எல்லாரும் மேட்டுத்தெரு சுப்பையாண்ணுதான் கூப்பிடுவாக,” என்றார் அமைதியாக.

எஸ்.ஐ., “அந்த அம்மணக்குண்டி திருடன் உங்கள எங்க

வழிமறிச்சான்,” என்றார்.

மேட்டுத்தெரு சுப்பையா எஸ்.ஐ.யைப் பார்த்து, “நான் தோட்டத்துக்கு சாப்பாட்டுத் தூக்கும் கையுமா ராத்திரி ஒரு எட்டு ஒம்பது மணிக்குப் போயிக்கிட்டு இருந்தேன். ஒரே இருட்டுக் கசமா இருந்துச்சு. அப்பம் பாத்து, ‘ஏவ் நில்லுய்யா’ன்னு சத்தம் கேட்டது. நம்மளக் கூப்பிடல வேற யாரையோ கூப்பிடுதாம்ன்னு நினைச்சுக்கிட்டு நாம்பாட்டுக்குப் போனேன். உடனே, ‘ஏவ் மேட்டுத்தெரு ஒன்னத்தான். நிக்கயா இல்லையா?’

“நான் நின்னேன். ‘யார் அங்க?’ன்னு கேட்டன். ‘ஒம் பேரன். யார்ன்னா என்ன, நில்லுன்னா நிப்பயா?’ன்னு சொல்லிக்கிட்டே பக்கதில வந்திட்டான். ஆறு அடி உயரத்துக்கு கூடத்தான் இருப்பான். தலையில பெரிய தலைப்பா கட்டியிருந்தான். கையில்லாத முண்டா பனியன் போட்டிருந்தான், அது இடுப்பு வரைய்க்கும்தான் வந்தது. அதுக்குக் கீழ அம்மணமா இருந்தான்,” என்று நிறுத்தினார் மேட்டுத்தெரு.

எஸ்.ஐ., “இடுப்புக்கு கீழ பாத்தீங்களா?” என்றார்.

மேட்டுத்தெரு சுப்பையா, அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, “பெரீசாத் தொங்குச்சு சார்,” என்று பெரீசு என்றதை இழுத்தார்.

எஸ்.ஐ., “எவ்வளவு நீளம் இருக்கும்?” என்றார்.

மேட்டுத்தெரு சுப்பையா எச்சிலை முழுங்கிவிட்டு, தலைகுனிந்தவாறே, “ஒரு அடிக்கு கூடத்தான் இருக்கும்,” என்றார்.

எஸ்.ஐ., “மீச தாடி வச்சிருந்தானா?” என்றார்.

“இல்ல சார்,” என்றார் மேட்டுத்தெரு சுப்பையா.

“அவனோட முகம் எப்பிடி சுத்தமா வழிச்சமாதிரி இருந்ததா? அல்லது தாடி மீச கொஞ்சமாது வளந்து இருந்ததா?” என்று கேட்டார் எஸ்.ஐ.

“முகம் சுத்தமா வழிச்சமாதிரிதான் இருந்தது சார்,” என்றார் மேட்டுத்தெரு சுப்பையா.

எஸ்.ஐ., “அவன் உங்கள என்ன செய்தான்?” என்றார்.

மேட்டுத்தெரு சுப்பையா, அவசரமாக, “என்ன ஒண்ணும் செய்யல.. எங்க போறன்னு கேட்டான். பயமாத்தான் இருந்தது. நான் கெணத்துக்குப் போரேன்னு சொன்னேன். தூக்குல என்ன இருக்குன்னான். நான், காவலுக்கு இருக்க ஆளுகளுக்கு சாப்பாடு இருக்குன்னேன். அவன், இங்க கொண்டான்னான். தூக்க அவன் கையில குடுத்தேன். நான் தலையில கெட்டியிருந்த துண்டக் கேட்டான். குடுத்தேன்,” என்ற சுப்பையா தொடருமுன், இடைமறித்தார் எஸ்.ஐ.

சுப்பையாவைப் பார்த்து, “நீங்க அவன எதித்து பேசலையா?” என்றார்.

மேட்டுத்தெரு சுப்பையா, “அவனைப் பாக்கவே பயமா இருந்தது. அம்மணமா, பெரீசா.. இருந்தானா. எதித்துப் பேச நா எழல,” என்றார்.

“சரி மேல சொல்லுங்க,” என்றார் எஸ்.ஐ.

மேட்டுத்தெரு சுப்பையா தொடர்ந்தார், “துண்டக்கேட்டான், குடுத்தேன். பெறகு வேட்டிய அவுருன்னான். துண்ட வாங்கிகிட்ட இப்பம் வேட்டியையும் கேக்கையே நான் என்னத்தை உடுத்த, அப்பம் துண்டையாது குடுன்னேன். ‘ஏய் அவுருய்யா,’ன்னான். அவுத்துக் குடுத்தேன். சாப்பாட்டுத் தூக்கைத் தொறந்து ரெண்டு வாய் சாப்பிட்டான். ‘ஏவ் என்ன சாப்பாடுய்யா இது, நீயே திண்ணுய்யா’ன்னு, திட்டினான். தூக்க என் கையில குடுத்தான். பெறகு என்னப்பாத்து, ‘போ’ன்னான். துண்ட வச்சாலும் வச்சுக்கோ, வேட்டியக்குடுண்ணு கேட்டேன். கட கடன்னு சிரிச்சுக்கிட்டெ ஒடுனான். நான் அம்மணமா நிக்கேன். கையில தூக்கு. அவன் சாப்பிட்ட எச்சிச் சோறு. வேட்டியயும் துண்டையும் கொண்டுக்கிட்டு போனவன் திரும்பியே வரல. இருட்டுக்குள்ள காணாமலே போய்ட்டான்,” என்று மூச்சு விட்டார்.

மேட்டுத்தெரு சுப்பையா தொடர்ந்தார், “இனி ஊருக்குப் போகமுடியாது, வேட்டியில்ல, துண்டுகூட இல்ல. தோட்டத்துக்குப் போனேன். என் மகங்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன். அவன் குலுங்கி குலுங்கிச் சிரிச்சான். நானும் சேந்து சிரிச்சேன்,” என்றார்.

எஸ்.ஐ., “அப்புறம்?” என்றார்.

மேட்டுத்தெரு சுப்பையா, “அடுத்த நாள் ஊருக்குத் தெக்க, சுடுகாட்டுக்குப் பக்கத்தில வேட்டி துண்டு கெடக்குன்னு சொன்னாக. போய்ப் பாத்தா, அது ரெண்டுமே என்னோடதுதான். களவு போனது ஊருக்கு வடக்க, வடக்கு கம்மாயில, ஆனால் வேட்டியக் கண்டது ஊருக்குத்தெக்க, சுடுகாட்டுக்குப் பக்கத்தில. எப்பிடித்தான் அங்க வந்ததோ,” என்றார்.

“கையில அருவாள், பாலாக்கம்பு, கத்தி ஏதாவது வச்சிருந்தானா?” என்றார் எஸ்.ஐ.

“இல்ல சார். அவங்கிட்ட ஆயிதம் ஒண்ணும் இல்ல சார்,” என்றார் மேட்டுத்தெரு சுப்பையா.

“அவனோட குரல் எப்படி இருந்தது?” என்று கேட்டார் எஸ்.ஐ.

“அவன் இருந்த ஒயரத்துக்கு அவன் சத்தம் தணிஞ்சிதான் இருந்ததுதன்னு சொல்லணும். ரொம்ப முரட்டுச் சத்தம் இல்ல சார்,” என்றார் மேட்டுத்தெரு சுப்பையா.

எஸ்.ஐ. இடை இடையே குறிப்புகள் எடுத்துக்கொண்டார். குறிப்புக்கள் அடங்கிய தன் நோட்டுப் புத்தகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, மேட்டுத்தெரு சுப்பையாவைப் பார்த்து, “நீங்க போகலாம். வேணுமின்னா கூப்பிடுறோம்,” என்றார்.

“சரி சார்,” என்று எழுந்து சென்றார் மேட்டுத்தெரு சுப்பையா.

அடுத்து ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் நாற்காலியில் அமர்ந்ததும், “உங்க பேர் என்ன?” என்றார் எஸ்.ஐ.

“வெள்ளப்பாண்டி, நான் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர்,” என்றார்.

எஸ்.ஐ., “தெரியும் சார். அந்தத் திருடன் உங்கள எங்க நிறுத்தினான்? என்ன சொன்னான்? என்ன கேட்டான் என்றதெல்லாம் பற்றி விளக்கமாச் சொல்லுங்க,” என்றார். வெள்ளப்பாண்டி வாத்தியார் ஆரம்பித்தார், “ஒரு நாள் தனியா காட்டுக்கு காவலுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். ஒன்பது மணி இருக்கலாம். ஓரே இருட்டு. திடீர்ன்னு ஒரு உருவம் முன்னால் வந்து நின்னது. “வாத்தியாரே நில்லுங்க,”ன்னு சொன்ன பிறகுதான் நான் அவனப் பாத்தேன். நான் நின்னேன்,” என்றார்

“அவன் என்ன உடை போட்டிருந்தான்?” என்றார் எஸ்.ஐ.

“ஊர்ல எல்லாரும் சொல்றது போலத்தான் வந்தான். உயரமா இருந்தான், ஆறடிண்ணு சொல்லலாம். தலையில தலைப்பா, உடம்புல கைவைக்காத பனியன். இடுப்புக்கு கீழ அம்மணமா இருந்தான் சார்,” என்றார் வாத்தியார்.

எஸ்.ஐ., “இடுப்புக்குக் கீழ பாத்தீங்களா?” என்றார்.

வாத்தியார் அமைதியாக, “பாத்தேன். உண்மையிலேயே அவனுடைய அந்தரங்க உறுப்பு ரொம்ப பெரிசாத்தான் இருந்தது. ஏன் விறைப்பா இருந்ததுன்னு சொன்னா மிகையாகாது,” என்றார்.

எஸ்.ஐ., “மீச தாடி வச்சிருந்தானா?” என்றார்.

“இல்ல சார்,” என்றார் வாத்தியார்.

“அவனோட முகம் எப்பிடி சுத்தமா வழிச்சமாதிரி இருந்ததா? அல்லது தாடி மீச கொஞ்சமாது வளந்து இருந்ததா?” என்று கேட்டார் எஸ்.ஐ.

“முகம் சுத்தமா வழிச்சமாதிரிதான் இருந்தது சார்,” என்றார் வாத்தியார்.

எஸ்.ஐ., “ஒங்கள என்ன செய்தான்?” என்றார்.

வாத்தியார், “என்னப் பாத்துச் சிரிச்சான். என்ன சொல்றதுண்ணு தெரியாம சிரிச்சாம்மின்னு நினைக்கிறேன். பின்ன, ‘வாத்தியாரே ஆனா ஆவன்னா சொல்லுங்க,’ன்னான். நான் பயப்படாம சொன்னேன். பிறகு, ‘வாத்தியாரே, எட்டாம் வாய்ப்பாட்டை ஒரு தப்பில்லாமச் சொல்லுங்க,’ன்னான். நான் சொன்னேன். ‘வாத்தியாரே, அதுலதான் நான் பட்டுக்கிட்டேன்,’ ன்னான். என்ன சொல்றன்னேன். அதுலதான் வாத்தியாரே நாம் பெயிலாப்போனேன்னு சொன்னவன், சிரிச்சான்,” என்றார்.

எஸ்.ஐ., “உங்ககிட்ட இருந்து ஏதாவது புடுங்கப் பாத்தானா?” என்றார்.

வாத்தியார், “எங்கிட்ட, ‘வாத்தியாரே, பொடி இருந்தாக் குடுங்கன்னு கேட்டான். குடுத்தேன் வாங்கி மூக்கில போட்டுக்கிட்டான். பொடிடப்பாவ திருப்பிக் குடுத்தான். நீ வேணுமின்னா வச்சுக்கோன்னு சொன்னேன். ‘சரி’ன்னு பொடிடப்பாவ திருப்பிக் குடுக்கவேண்டி நீட்டன கைய இழுத்துக்கிட்டான். ரெண்டு மூணு செக்கண்டுதான் இருக்கும், ‘நீங்களே வச்சுக்கோங்க, நான் வாரேன்,’ன்னு சொல்லிட்டு, டப்பாவக் குடித்திட்டு வந்தமாதிரியே விரு விருன்னு நடந்து இருட்டில மறஞ்சு போய்ட்டான்,” என்றார்.

“அவன் குரல் எப்பிடி இருந்தது,” என்றார் எஸ்.ஐ.

“கொஞ்சம் கீச்சுக் குரல்தான். வயசானால் சில பொம்பளைங்களுக்கு குரல் மாறி பாதி ஆம்பளக் குரல் வந்திருமே அது மாதிரி இருந்தது,” என்றார் வாத்தியார்.

எஸ்.ஐ. குறிப்பு எடுத்துக்கொண்டார். “சார் நீங்க போகலாம். உங்க ஒத்துழைப்புக்கு நன்றி,” என்றார்.

இன்னும் மூன்று பேரை விசாரித்தார் எஸ்.ஐ. அவர்கள் எல்லோரும் இரவில் வந்த இடுப்புக்குக் கீழ் ஆடை அணியாத அந்த மர்மத் திருடனால் பாதிக்கப் பட்டவர்கள்.

எல்லோரிடமும் கேள்வி கேட்டார் எஸ்.ஐ. அவ்வப்போது குறிப்புகள் எடுத்துக்கொண்டார். எல்லோரும் போனபின், அமைதியாகத் தன் மேஜையில் தன் குறிப்பு எழுதிய நோட்டு, எழுதுவதற்குச் சில வெற்றுக் காகிதங்கள், மற்றும் பென்சில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடு பட்டார் எஸ்.ஐ.

எஸ்.ஐ. தன் ஆராய்ச்சியின் முடிவில், அந்த நிர்வாணத் திருடனைப் பற்றி அறிந்தவைகளைத் தனிக் காகிதத்தில் எழுதிக்கொண்டார். அதைப் பற்றி மறுபடியும் மனதுக்குள்ளேயே யோசித்தார். அவனிடம் மாட்டிக்கொண்டவர்கள் எல்லோரும் கொஞ்சம் வயதானவர்கள், தனியே இருட்டில் சென்றவர்கள். கையில் ஆயுதம் ஒன்றும் இல்லாதவர்கள்.

இரவு எட்டு மணி முதல் பத்து மணிக்குள் நடந்திருக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அவனுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறது. அவர்களைப் பட்டப் பெயர் சொல்லி ஊரில் எப்படி அழைப்பார்களோ அப்படியே அழைத்திருக்கிறான். சாப்பாட்டைத் தவிர எதையுமே அவன் திருடவில்லை. பிடுங்கிக்கொண்ட வேட்டி துண்டை தூரத்தில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டான். ஏன், வாத்தியார் நீ வைத்துக்கொள் என்று சொல்லியும் கூட அவருடைய பொடி டப்பாவைக்கூட அவன் வைத்துக்கொள்ளவில்லை.

மற்றப்படி, அவன் எல்லோரையும் கேலி செய்திருக்கிறான். அவர்களைப் பார்த்துச் சிரித்திருக்கிறான். ஆனால் அவனால் யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை, மற்றவர்களின் கேலிக்கு ஆளானதைத் தவிர.

அவன் செய்கைகளினால் ஊரில் பெண்கள் ஆண்களைக் கேலி செய்ய வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கிறது. ஆண் யாராவது இருட்டில் போனால், “ராத்திரியில தனியாப் போகாதீங்க, திருடன் வந்திரப்போறான்,” என்று கேலி செய்வது வழக்கமாகிவிட்டது. அவர்கள் அச்சமயம் திருடன் என்ற சொல்லை ஒரு விதமாக இழுத்து அவன் சாதாரணத் திருடன் இல்லை என்பதை நினைவு படுத்தத் தவறவில்லை.

எஸ்.ஐ. அத்திருடனைப் பற்றிய தன் கணிப்புகளை இன்னொரு தாளில் எழுதினார், அவை பின்வருமாறு... அவன் அதே ஊரைச் சேர்ந்தவன். அதனால்தான் அவனுக்கு அவர்களுடைய பேர், அழைப்புப் பேர், பட்டப் பேர் எல்லாம் தெரிந்திருக்கிறது. அவன் பகலில் அந்த ஊர் மக்களுடன் நெருங்கி பழகியிருக்க வேண்டும் அதனால்தான் பொடிடப்பாவைக்கூட வைத்துக்கொள்ளவில்லை. ஏன் என்றால் அந்த மாதிரி சிறிய ஊரில் வேட்டி, துண்டு, ஏன் பொடி டப்பாவைக்கூட யாருடையது என்று ஊர் மக்கள் சொல்லிவிடுவார்கள். வாத்தியார் பொடி டப்பா இன்னாரிடம் இருந்தது என்று யாராவது சொன்னால் உடனே இரவில் வந்த அம்மணத்திருடன் யார் என்பது அம்பலம் ஆகிவிடும். அந்தத் திருடனின் குரல் கொஞ்சம் கீச்சுக் குரலாய் இருந்தது. சாதாரணமாக அரசாங்க வேலைக்குச் செல்லும் ஆசிரியர் போன்றவர்கள்கூட வாரம் ஒரு முறை அல்லது இருமுறைதான் முகம் வழித்துக்கொள்வார்கள். ஆனால் அவனுடைய முகம், அவன் மற்றவர்களை மிரட்டிய சமயமெல்லாம் சுத்தமாக மழிக்கப்பட்டிருந்தது. அவனுடைய உடல் பாகம் ஒன்று பெரிதெனினும் மற்றவைகளைப் பார்த்தால், அவன் ஒரு அவளாகக்கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது என எஸ்.ஐ. எழுதிக்கொண்டார்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top