JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakkalin Vettai - Episode 28

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 28

சேலம் மாவட்டம், மல்லியக்குறிச்சி கிராமம்.

யார் கண்ணிலும் படக்கூடாது என்று பாரிஜாதச் செடிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்திருந்த துர்காவிற்கு இன்னமும் நெஞ்சம் பாராமாயிருப்பது போலவே தோன்றியது.

'என்னென்ன பேசிட்டாங்க இந்தச் சின்ன அத்தை? நானா என்னைத் தூக்கிட்டுப் போங்கன்னு அவர்கிட்ட சொன்னேன். மாமாவைப் பழிவாங்க என்னைத் தூக்கிட்டுப் போனால் அதுக்கு நான் என்ன பண்றது? ஒரு பொண்ணு நான் இன்னும் கெட்டுப் போகலைன்னு எத்தனை தடவைத் தான் கதறி அழுவது? இந்தச் சின்ன அத்தையும் பெண் தானே? எவ்வளவு அசிங்கமா கேள்விக் கேட்டுட்டாங்க.'

மனம் வெடித்துக் கொண்டிருக்க, திரண்டிருந்த விழி நீர் கன்னம் தாண்டி வழிந்து அணிந்திருந்த புடவையில் சிந்திக் கொண்டிருக்க, தலை வெடித்துவிடுவது போல் இருந்ததில் கால்களைக் கல் மேடையில் தூக்கி வைத்தவள் முழங்காலில் தலை சாய்த்தாள்.

'ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? நான் தானே சிதாராவைக் கல்யாணம் பண்ணிக்கங்கன்னு மாமாக்கிட்ட சொன்னேன். அதுக்கூட அவர் எவ்வளவு பிடிவாதமா முதலில் மறுத்தார், பிறகு ரொம்ப யோசிச்சதற்கு அப்புறம் எடுத்த முடிவு தானே அவருடைய கல்யாணம். அவரா என்னை வேணாமுன்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போனார்?'

தாரை தாரையாகக் கண்ணீர் வழிய அழுதுக் கொண்டிருந்தவளின் தலையில் சிதறத் துவங்கிய பாரிஜாத மலர்களைக் காணும் பொழுது, பெண்ணவளுக்கு ஆறுதல் சொல்வது போல் இருந்தது அக்காட்சி.

ஆனால் எதையும் உணரும் நிலையில் அவள் இல்லை.

மகளைத் தேடிக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்த ஸ்ரீமதியின் மனம், அங்குக் கல் மேடையில் தலையை முழங்காலில் சாய்த்து அவள் அமர்ந்திருந்த தோற்றத்தைக் கண்டதுமே வேதனையில் மூழ்கியது.

"சின்னப் பொண்ணுங்கிறது சரியாத்தான் இருக்கு."

திடுமெனத் தனக்கு அருகில் கேட்ட அன்னையின் குரலில் நிமிர்ந்தவள் கரிசனத்துடன் தன்னைப் பார்ப்பவரைக் கண்டு, "ம்மா.." என்றாள் அழுகுரலில்.

"இப்ப எதுக்குத் துர்கா இப்படி அழுது கறைஞ்சிட்டு இருக்கிற?"

"சின்ன அத்த.."

"ம்ப்ச், சரி.. அவங்களுக்குத் தெரிஞ்சதை அவங்க பேசுறாங்க. அதுக்கெல்லாம் இப்படி அழுதுட்டு இருந்தால் என்ன ஆகுறது?"

"என்னால அப்படி இலகுவா எடுத்துக்க முடியலைம்மா. ஒரு வேளை உண்மையில் மாமா என்னை விரும்பியிருந்தாருன்னாக் கூடப் பரவாயில்லை. அவருக்கும் சிதாராவை ரொம்பப் பிடிச்சிருந்ததும்மா. அது எனக்கு நல்லாத் தெரிஞ்சுது. அவளும் எவ்வளவு நல்ல பொண்ணுன்னு உனக்கு நான் சொல்லணுமா என்ன? மாமாகிட்ட அவளுடைய காதலை சொல்றதுக்கு முன்னாடி என்னிடம் தாம்மா சொன்னாள். எங்க என் வாழ்க்கையை அவள் பறிச்சிட்டான்னு நான் சொல்லிடக் கூடாதுன்னு அவ்வளவு யோசிச்சு என்கிட்ட பேசினா. அதுவும் இல்லாமல் ஏனோ என்னால் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்க முடியாதுன்னு தோணுச்சும்மா. அதான் நானும், அவ மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொன்னேன். அதுக்குப் பிறகு தான் அவ மாமாக்கிட்டயே பேசினா. இதெல்லாம் தெரிஞ்சும் திரும்பத் திரும்ப இப்படிப் பேசுனாங்கன்னா, என்ன அர்த்தம்?"

"இதுக்கெல்லாம் மனம் கலங்கினா எப்படித் துர்கா?"

அவரது கேள்விக்குப் பின் இருக்கும் வலி துர்காவிற்கும் புரிந்தது.

மூன்று வயதில் துர்கா தன் தந்தையை இழந்தக் காலம் தொட்டே தனித்து வாழ்ந்து வருபவர் ஸ்ரீமதி.

குறிப்பாக இதே இளைய அண்ணனின் மனைவி சுமதியின் குத்திக் கிழிக்கும் வார்த்தைகளைத் தாங்கும் சக்தியற்று, உடன் பிறந்தவர்களின் வற்புறுத்தல்களையும் மீறி தனியே வந்து வாழ்ந்துக் காட்டியவர்.

"அம்மா.. உங்க தைரியம் எனக்கில்லை மா.."

"அப்படின்னா ஷிவா மாப்பிள்ளையை நீ கல்யாணம் செய்திருக்கணும்."

"என்னம்மா நீங்களும் இப்படிப் பேசுறீங்க?"

மகளின் தழுதழுக்கும் குரலில் வேதனையடைந்தவராக அவளின் அருகில் கல் மேடையில் தானும் அமர்ந்தார்.

"துர்கா, உங்கப்பா என்னை விட்டுட்டுப் போனப்போது தான் வாழ்நாளில் முதன்முதலா நான் உடைஞ்சிப் போனேன். ஆனால் மூணு வயசே ஆன பச்சக்குழந்தை உன்னைப் பார்த்து என்னைத் தேற்றிக்கிட்டேன். ஒரு ஆம்பளை மாதிரி விவசாயம் பார்க்க களத்துல இறங்கினேன். ஒரு பொம்பளையால இது எல்லாம் தனிச்சுச் செய்ய முடியுமான்னு மத்தவங்க வியக்கிற காரியங்கள் எல்லாத்தையும் எந்த ஒரு ஆண் துணையும் இல்லாமல் நான் செய்து காட்டினேன். உன்னையும் வளர்த்தேன். ஆனால் நான் வாழ்நாளில் இரண்டாவது தடவையாக உடைஞ்சு போனது உன்னை அவனுங்க தூக்கிட்டுப் போன அன்னைக்குத்தான்."

கூறியவரின் உடல் அன்றைய நாளின் அதிர்ச்சியை இக்கணமும் உணர்ந்தது போல் படபடத்தது.

பெருமூச்சு விட்டுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர்,

"ஒரு அம்மாவா, ஒரு பெண்ணா உன்னை நான் சில கேள்விகள் கேட்டுருக்கலாம், அது உன் மேல சந்தேகப்பட்டு இல்லை. என்னைத் தெளிவுப்படுத்திக்க. பிறகு நீயும் ஷிவா மாப்பிள்ளையும் இதைப் பற்றிப் பேசும் போது இந்தச் சின்ன வயசிலேயே எவ்வளவு தெளிவான மனசோட இவங்க இருக்காங்க, ஆனா நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்தும் இன்னும் ஒரு சாதாரண மனுசியா யோசிக்கிறோமேன்னு நினைச்சு வருத்தப்பட்டு என்னை நானே மாற்றிக்கிட்டேன். பிறகு மாப்பிள்ளைக்குச் சிதாராவைப் பிடிக்குதும்மா, அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கட்டும்னு நீ சொன்னப்பவும் நான் உன்னை எதுவும் கேட்கலை. எப்பவும் நீ செய்யற எந்தக் காரியமும் நல்லா யோசிச்சு தான் செய்வங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதனால் உன்னை நான் எதுக்கும் வற்புறுத்த மாட்டேன்.

உனக்கு எப்போ கல்யாணம் செய்துக்க விருப்பமோ, அப்ப சொல்லு. உன்னை, உன் நிலைமையைப் புரிஞ்சுகிட்டு வர ஒருத்தரைக் கண்டிப்பா உனக்குப் பக்கத்தில மாப்பிள்ளையா நான் நிறுத்துவேன். அதுவரை அத்தைச் சொன்னாங்க மாமா சொன்னாங்கன்னு இப்படி வந்து மரத்தடியில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்காத.." என்றதில், அன்னையின் திடமான வார்த்தைகளில், துர்காவின் கண்ணீர் கூட நின்று போனது.

"சரிம்மா, இனி நான் அழலை..", கூறியவளாய் முகத்தை அழுந்த துடைத்தாள்.

மகளின் தலையில் கொட்டியிருக்கும் பாரிஜாத பூக்களை ஒவ்வொன்றாக எடுத்தவராய், "இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வந்துடுவாங்க. அதுவும் இப்படி அழுது சிவந்திருக்குற உன் முகத்தைப் பார்த்தால் மாப்பிள்ளை என்ன ஏதுன்னு குடைஞ்சு எடுத்துடுவார்.” என்றார்.

ஷிவாவையும் சிதாராவையும் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தார் ஸ்ரீமதி.

திருமணம் முடிந்தக் கையோடு மும்பைக்குச் சென்றிருந்த ஷிவா, சஹானாவின் கொலை வழக்கில் மூழ்கிப் போனான்.

மிர்சா சகோதரர்கள் தான் அவளின் படுகொலையின் பின்னணியில் இருந்தார்கள் என்று தெரிந்தும் அதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் இல்லாததால் அவர்களை நெருங்கவும் முடியவில்லை அவனால்.

இதில் நூறு சதவிகிதம் ஆர்யனுக்கும் மறைமுகமான பங்கு உண்டு என்பது தெரிந்தும் அதனை நிரூபிக்க இயலாததில் ஆத்திரத்தில் மூழ்கியிருந்தவன், அவ்வழக்கிற்குத் தீர்வு காணும் வரையிலும் மும்பையை விட்டு வெளியேறுவதில்லை என்று முடிவெடுத்திருந்தான்.

அதுவும் இல்லாது அவனே எதிர்பாராத வருணைப் பற்றிய ஒரு தகவல் போலிஸ் இன்ஃபார்மரின் மூலம் வந்ததில் ஐயுறவுக் கொண்டிருந்ததில் அவனைத் தீவிரமாகக் கண்காணிக்க [surveillance/ stakeout] காவலர்கள் சிலரை பணித்திருந்தான்.

ஆயினும் பெண்கள் என்ற ஒரு விஷயமே என் வாழ்க்கையில் எனக்குப் பெரிதாகப்பட்டதில்லை என்பது போல் பிரம்மச்சரியத்தைக் கெட்டிக்காரத்தனமாகக் கடைப்பிடித்து வந்ததும் அல்லாமல், ஒரு முறைக் கூட அவன் எந்த விதத்திலும் துர்காவைத் தொடர்பு கொள்ளாமல் இருந்ததில் வருணின் நடவடிக்கைகள் ஒரு விதத்தில் ஷிவாவிற்கு நிம்மதிக் கொடுத்தது.

ஆனாலும் எதனையும் ஆறவிட்டுப் பின் அடிப்பவனாயிற்றே இந்த வருண் என்று அனுபவப்பாடத்தில் கற்றுக் கொண்டதில், சில வேளைகளில் நேரடியாக அவனைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேண்டியதாயிருந்ததில் மும்பையை விட்டு வரும் எண்ணமே ஷிவாவிற்கு வரவில்லை.

அச்சூழ்நிலையில் தன்னை மனைவியுடன் வருமாறு ஸ்ரீமதி அழைத்திருந்ததில் வேறு வழியின்றி அத்தையின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு விருந்திற்கு வந்திருந்தான் மல்லியக்குறிச்சி கிராமத்திற்கு.

"போய் முகத்தைக் கழுவிட்டு நல்ல புடவையா கட்டு. சீக்கிரமா சமையலையும் முடிச்சிடணும்."

கூறியவர் அவள் வீட்டிற்குள் புகுந்ததும் வேலைக்காரர்களை அழைத்து உணவு உண்பதற்கு வாழை இலைகளையும், அருந்துவதற்கு இளநீர்களையும் கொண்டு வருமாறு பணித்தவர் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளையும் கட்டளையிட்டுவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்.

மாமிசம் சாப்பிடுவதில் விருப்பம் உள்ள ஷிவாவிற்குப் பிடித்த மட்டன், கோழி, மீன் என்று வாங்கியிருந்தவர் துர்காவின் சமையல் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவளையே சமைக்கச் சொன்னார்.

அனைத்துமே மாமனுக்குப் பிடித்த வகையில் செய்தவள் சிதாராவிற்குப் பிடித்த காய்கறி பதார்த்தங்களையும் செய்து முடிக்கவும், ஷிவாவின் கார் மல்லியக்குறிச்சிக்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.

*************************************

வெகு நாட்களுக்குப் பிறகு அத்தையின் கிராமத்திற்கு வரும் ஷிவாவின் மனதிலோ பற்பல நினைவுகள்.

விடுமுறை நாட்களுக்குத் தேவேந்திரனின் சொந்த ஊரான தாமரைக்குளத்திற்குக் குடும்பத்துடன் வருபவன் சென்னைக்குச் செல்வதற்கு முன் சில நாட்கள் மல்லியக்குறிச்சியில் ஸ்ரீமதியின் இல்லத்தில் தங்குவதும் வழக்கம்.

அப்பொழுது எல்லாம் ஸ்ரீமதியின் கணவருக்குச் சொந்தமான வயல்வெளியிலும் தோப்புக்களிலும் துர்காவுடனும், தேவேந்திரனின் மற்ற உடன்பிறப்புகளின் குழந்தைகளுடனும் விளையாடிய தருணங்கள் இப்பொழுது அலை அலையாய் அவனது உள்ளத்தில் எழுந்து மோதியது.

காரை செலுத்திக் கொண்டு வருபவனின் சலனமற்ற முகத்தில் கண்களில் மட்டும் தோன்றும் சஞ்சலம், அருகில் அமர்ந்திருந்த சிதாராவிற்கு வியப்பாய் இருந்தது.

வழக்கமாய்த் தன் உணர்வுகளை, கோபத்தைத் தவிர, எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவன் அவளது கணவன்.

ஆனால் இன்று கண்கள் சுருங்குவதும், கூர்மையடைவதும், ஏதோ ஒரு இனம் புரியாத வலியை வெளிப்படுத்துவதும் என்று அவனது உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆச்சரியப்பட வைத்தது.

காரின் கியர் மீது கை வைத்திருந்தவனை மென்மையாகத் தொட்டவள், "என்ன ஆச்சு ஷிவா?" என்றாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவன் பதிலொன்றும் கூறாது மீண்டும் சாலையின் மீதே பார்வையைப் பதிக்க,

"உங்க மனசுக்குள்ள ஏதோ ஓடிட்டு இருக்கு, ஆனால் என்னன்னு தான் சொல்ல மாட்டேங்குறீங்க? கல்யாணம் ஆனதில் இருந்து இவ்வளவு நாளா உங்கக்கூட வாழ்ந்திருப்பதில் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு நல்லா புரியுது. ஒரு வட்டத்தை வரைஞ்சிக்கிட்டு அதுக்குள்ள நீங்க இருக்கிறீங்க. உங்க மனைவியாவே இருந்தாலும் என்னைக் கூட அதற்குள் நுழைய விட மாட்டேங்குறீங்க.." என்றாள் ஒரு ஆதங்கத்துடன்.

அவளின் புறம் திரும்பாமலேயே, "அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல." என்றான்.

அதனில் வருத்தத்தைவிடக் கசந்தத்தன்மை தான் தெரிந்தது.

"இதுக்கு மேல நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்."

கூறியவள் ஜன்னலின் புறம் திரும்ப, நிமிடங்கள் சில அமைதியாக வந்தவன் என்ன நினைத்தானோ திடீரென்று, "துர்கா.." என்றான்.

திருமணமாகிய முதல் நாளில் இருந்து ஏனோ துர்காவைப் பற்றிய பேச்சினை நாசுக்காகத் தவிர்த்துவிடுவான் ஷிவா.

தஞ்சைப் பெரிய கோவிலில் அவளைத் தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும், அன்றில் இருந்து தனக்கும் அவளுக்குமான அழகான நட்பைப் பற்றியும் பேச வேண்டும் என்ற ஆசையுடன் எவ்வளவோ முறை சிதாரா பேச்செடுத்தும், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்துவிடுபவன் அவன்.

இன்று அதிசயத்திலும் அதிசயமாய் அவனே துர்காவைப் பற்றிய பேச்சைத் துவங்கியிருக்கின்றான்.

"சொல்லுங்க."

மனைவி ஊக்குவிக்க,

"ஸ்ரீமதி அத்தைக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் சித்து, ஆனாலும் நான் சின்ன வயசிலேயே ரொம்ப அடாவடி. எதற்கும் அடங்க மாட்டேன். பிடிவாதமும் ரொம்பங்கிறதால என் மேல் கொஞ்சம் பயம். ஆனால் எனக்கு அப்படியே ஆப்போஸிட் துர்கா. ரொம்ப அமைதி, எதற்கெடுத்தாலும் ஒரு நடுக்கம். என்கிட்ட சத்தமா பேச கூடத் தயங்குறவ, நான் ஏதாவது கேட்டால் திக்கவே ஆரம்பிச்சிடுவா. என்னைக் கண்டாலே ஏதோ பேயைப் பார்த்தது போல் ஓடி ஒளிஞ்சுக்குவா. அதுதான் ஸ்ரீமதி அத்தைக்கும் ஒரு கலக்கமுன்னு சொல்லலாம். எப்படி என்கூட அவ வாழ்க்கை நடத்தப் போறா, இதுல இவன் போலீஸ் ஆபிஸர் வேற ஆகிட்டானே, சும்மாவே அடிதடியில் இறங்குறவன் இவன் கைக்குச் சிக்குகிற க்ரிமினஸ்லை என்ன பண்ணுவானோன்னு பயந்துப் போய் இருந்தவங்களை அதிரச் செய்தது என்னுடைய முதல் என்கவுண்டர். அதற்குப் பிறகு தொடர்ந்து நடந்த என்கவுண்டர்ஸைக் கேள்விப்பட்டு ஒரு நாள் என்னிடம் அதைப்பற்றி நேரிடையாகவே பேசினாங்க.

மாப்பிள்ளை, உங்க பேரை சொல்லும் போதே குற்றவாளிகளைக் கோர்ட்டுக்கு கூடக் கொண்டு போகாமல் சுட்டுக் கொன்னுடுவாருன்னு கேள்விப்படறேன். அப்படின்னா உங்களுக்கு நிச்சயம் எதிரிங்க ரொம்பவே இருப்பாங்க. அவங்களால் உங்களுக்கு எதுவும் ஆபத்து வந்துடுமோன்னு பயமா இருக்குன்னு சொன்னாங்க. ஆனால் அவங்க பயத்திற்குப் பின்னால் இருந்தது என் உயிர் மட்டுமல்ல, அவங்களுக்குன்னு இந்த உலகத்தில் இருக்கிற ஒரே பந்தம் அவங்க பொண்ணு துர்காவுடைய வாழ்க்கையும் இருந்தது தான்.

எனக்கு ஏதாவது ஆனால் அவங்களுடைய திருமண வாழ்க்கை முடிஞ்ச மாதிரி துர்காவுடைய வாழ்க்கையும் முடிஞ்சிடுமோங்கிற பயம் தான் அவங்களுக்கு. ஆனாலும் எங்க கல்யாணத்துக்கு அவங்க சம்மதம் சொல்லி மணமேடை வரை போன கல்யாணம் அவங்க பயந்த மாதிரியே நின்னுப் போனது. ஆனால் ஆபத்து எனக்கில்லை. என்னால், அவங்க பொண்ணுக்கு. அன்னைக்கு அவங்க எப்படித் துடிச்சாங்கன்னு என்னால் இப்பவும் உணர முடியுது. அந்தக் குற்ற உணர்வு நான் சாகும் வரையிலும் என்னைவிட்டு போகாது சித்து.."

சட்டென்று பேச்சை நிறுத்தியதிலேயே தெரிந்தது அவன் உள்ளுக்குள் உடைந்து போயிருக்கின்றான் என்று.

"எனக்கு உங்க உணர்வுகளைப் புரிஞ்சிக்க முடியுதுங்க. இன் ஃபேக்ட் துர்காவிற்கு நடந்த அசம்பாவிதத்திற்கு ஈடுகட்ட நீங்க அவளைக் கல்யாணம் செய்திருக்கணும்னு நினைக்கிறீங்க.. அதுவும் எனக்குப் புரியுது."

மனைவியின் ஆதங்கம் இப்பொழுது அவனைத் தாக்கியது.

"அதுக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதில் நான் வருத்தப்படறேன்னு நினைக்கிறியா?"

"இல்லை, ஆனால் துர்காவுடைய வாழ்க்கையை நினைச்சு வேதனைப்படுறீங்கன்னு சொல்ல வர்றேன்."

அவளின் வார்த்தைகளில் இருக்கும் நிதர்சனத்தில் பெருமூச்சுவிட்டவன், "இதற்கெல்லாம் காரணம் அந்த வருண். ஆனால்.." என்று எதையோ கூற வந்தவன் சட்டென நிறுத்தி தன் கழுத்தின் பின்புறத்தை அழுந்த தேய்த்துக் கொள்ள, அவனின் செய்கை உணர்த்தியது, அவனது வருத்தத்தைப் பழிவாங்கும் உணர்ச்சி அடக்கிக் கொண்டிருக்கின்றது என்று.

அதற்குள் துர்காவின் வீடு இருக்கும் தெருவிற்குள் கார் நுழைந்தது.

வாயிலில் இவர்களுக்காகக் காத்திருந்த ஸ்ரீமதி, "துர்கா, வந்துட்டாங்க, சீக்கிரம் வா." என்று அழைக்க, கையில் ஆலம் கரைத்து எடுத்து வந்தவள் அழகிய புன்சிரிப்புடன் தன் மாமாவையும் அவனுக்கு மனைவியாகிப்போன தன் ஆஸ்தான தோழியையும் எதிர்கொண்டாள்.

"கல்யாணம் ஆகி இவ்வளவு நாளாச்சு, இன்னும் ஆரத்தி சுத்தணுமா?"

கேட்ட சிதாராவைக் கண்டு சிரித்த துர்கா பதிலேதும் கூறாது ஆரத்தியைச் சுற்ற, அவளின் முகத்தையே கூர்ந்து பார்த்திருந்த ஷிவாவிற்கு அவள் அழுதிருக்கிறாள் என்பது புரிந்துப்போனது.

அவனது பார்வையின் தீர்க்கம் தாங்காது விடுவிடுவென்று ஆரத்தியைச் சுற்றி முடித்தவள் அவர்களை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டு நீரை தெருவில் கொட்டச் செல்ல, நடந்து செல்லும் அவளை ஏதோ ஒரு யோசனையுடன் திரும்பிப் பார்த்த ஷிவா வீட்டினுள் நுழைந்தான்.

"கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆனாலும் என்னம்மா? கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் இப்பத்தான் நீங்க ரெண்டு பேரும் முதன் முதலா எங்க வீட்டுக்கு வர்றீங்க. அதுவும் சின்ன வயசுல இருந்தே சிதாரா சிதாரான்னு சொல்லி சுத்திட்டு இருப்பா துர்கா. அந்தச் சிதாரா எங்க வீட்டுக்கு வருவது இன்னும் எங்களுக்குச் சிறப்பு.."

கூறிய ஸ்ரீமதியை அவ்வளவு பிடித்துப் போனது சிதாராவிற்கு.

இருவரையும் இருக்கையில் அமரப் பணித்தவர் நலம் விசாரிக்க, அதற்குள் வீட்டிற்குத் திரும்பிய துர்கா தோழியிடம் நலம் விசாரித்தவள் மறந்தும் மாமனின் புறம் திரும்பவில்லை.

இதனில் ஷிவாவிற்குச் சந்தேகம் பிறந்தது.

"என்ன அத்தை, ஏதாவது பிரச்சனையா?"

திடீரென்று கேட்ட மருமகனின் புறம் திரும்பிய ஸ்ரீமதி பதிலொன்றும் கூறாது துர்காவை நோக்க, "ம்ம்ம் சொல்லு துர்கா.. என்ன பிரச்சனை?" என்றான் ஷிவா.

அவனது குரலில் அவ்வளவு இறுக்கம் இருந்தது.

அழுத்தமான முகத்துடன் சற்றே அதட்டும் குரலில் கேட்பவனின் கேள்விக்கு உண்மையும் கூற முடியாமல், பொய்யும் கூற முடியாமல் தவித்தவள் கீழுதட்டைக் கடித்துக் கொண்டு நின்றாள்.

"துர்கா உன்னைத் தான் கேட்குறேன்."

மீண்டும் கேட்பவனின் தொனியில் அரண்டவள் நிமிர, அவளின் கண்களில் கண்ணீர் திரண்டிருந்ததைக் கண்டதில் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து விருட்டென்று எழுந்தான்.

அவன் எழுந்த வேகத்தில் அதிர்ந்த சிதாரா தானும் எழ, துர்காவை நெருங்கியவன் அவளின் தோளை இறுக்கப் பற்றியவாறே சற்று உரத்தக் குரலில், "யாரும் எதுவும் சொன்னாங்களா துர்கா?" என்று கத்தியதில் துர்காவிற்குத் தூக்கிவாரிப் போட்டது.

"ம்ம்ம்.."

"யார்?"

அவனது வினாவிற்குப் பதிலுரைக்காது அன்னையைத் திரும்பிப் பார்க்க, அவளின் தாடையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவன், "யாருன்னு கேட்டேன்.." என்றான்.

"மாமா, அது வந்து.."

"ம்ம்.. சொல்லு.."

"அத்த.."

"சுமதி சித்தியா?"

"ம்ம்ம்.."

"என்ன சொன்னாங்க?"

"கொஞ்சம் தப்பா பேசிட்டாங்க மாமா."

அவர் என்ன பேசியிருப்பார் என்பதைப் புரிந்து கொண்டது போல் காலரை இழுத்துவிட்டு தலைசாய்ந்து நிமிர்ந்து தன்னைச் சமன்படுத்தியவன் ஸ்ரீமதியின் புறம் திரும்பினான்.

"நீங்க எப்போ சித்தியைப் பார்த்தீங்க?"

"நாங்க பார்க்கலைப்பா. அவங்க தான் ஃபோன் பண்ணினாங்க?"

"எதுக்கு?"

"சும்மா தான் துர்கா எப்படி இருக்கான்னு கேட்குறதுக்குக் கூப்பிட்டேன்னு சொன்னாங்க."

"நல்லா இருக்கான்னு சொல்லிட்டு ஃபோனை கட் பண்ண வேண்டியது தான?"

"எப்படிப்பா, வயசுல பெரியவங்க. மூஞ்சியில் அடிச்ச மாதிரி ஃபோனை வைக்கறது?"

"நீங்க முகத்தாட்சிணியம் பார்த்தீங்க, ஆனால் அவங்க பார்த்தாங்களா? இப்போ யார் மனசு காயப்பட்டிருக்கு, உங்க பொண்ணு மனசுதானே? எங்க, யாருக்கு, எப்ப இடம் கொடுக்கணும்னு நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சுக்கணுமா அத்த?"

இருவருக்கும் இடையில் நடக்கும் விவாதங்களைப் பார்த்த துர்காவிற்கு ஷிவாவின் குரல் மென்மேலும் உயரத் துவங்கியதில் திடுக்கிட்டது.

இதற்கு மேல் பேசவிட்டால் அவனது ஆத்திரம் அதிகமாகி சுமதி அத்தையை அழைத்துக் கிழிகிழியென்று கிழித்துவிடுவான் என்று அஞ்சியவளாக,

"மா.. மா.. மாமா, கல்யாணம் ஆகி முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க.. இ.. இ.. இப்ப போய் எதுக்கு மாமா அவங்களைப் பத்திப் பேசிக்கிட்டு. உங்களுக்கும் சிதாராவுக்கும் பிடிச்ச மாதிரி நானே என் கையால் சமைச்சி இருக்கேன். வாங்க மாமா, வா சிதாரா.." என்று அவர்களின் உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

தன்னைக் கண்டு அஞ்சியே அவள் திக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதை உணர்ந்து சட்டென்று இறங்கி வந்தவன், "சரி, சித்தியை நான் பார்த்துக்குறேன். எனக்கும் பசிக்குது, நீங்க சாப்பாடு எடுத்து வைங்க.." என்றான்.

சிதாராவின் கைப்பற்றிய துர்கா,

"வா சிதாரா, நீயும் வா. நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிச்சதும் இந்தக் கிராமத்தை சுற்றிப் பார்ப்போம். எங்க வயலையும் தோப்பையும் பத்தி எத்தனை தடவை பேசியிருப்போம், அதை எல்லாத்தையும் நேரிலேயே உனக்குக் காட்டுறேன்.." என்றாள் உண்மையான மகிழ்ச்சியுடன்.

அவளின் இளகிய மனசும், வெகுளித்தனமான குணமும், பேரழகிய முகத்தில் வாடியிருக்கும் கண்களும் சிதாராவின் மனதைக் கரைத்தது.

'ஏன் வருண் இப்படிச் செஞ்சீங்க? பாவம் இவ, உங்க ரெண்டு பேருக்கு இடையில் மாட்டிக்கிட்டு என்ன வதைப்படுறா பாருங்க..'

உள்ளத்திற்குள் வைதவளாக உணவருந்த செல்ல, பதார்த்தங்களை ஒவ்வொன்றாக இலையில் அடுக்கி வைத்ததில், அதன் அழகில் இலயித்ததில் அதுவரை இருந்து வந்த இறுக்கம் தளர்ந்து பசி பிறந்ததில், சிதாராவின் நாக்கில் எச்சி ஊற ஆரம்பித்தது.

"ஆஹா! இவ்வளவு ஐட்டங்களா?"

சிறு பெண் போல் கூவுபவளைக் கண்டு முறுவலித்தவளாய் பரிமாற, உண்டியை வாயில் வைத்த சிதாரா, "சேன்ஸே இல்லை துர்கா. செம்ம டேஸ்டா இருக்கு. நல்ல வேளை இவரை நீ கல்யாணம் செய்துக்கலை, இல்லைன்னா இப்படி டேஸ்டியான ஃபுட் சமைச்சு சமைச்சே நீ டயர்டா ஆகிருப்ப.." என்றதில் துர்காவின் சிரிப்பு மறைந்து போனது.

அவளின் ஒவ்வொரு முக மாறுதல்களையும் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்த ஷிவாவிற்கு இப்பொழுது சிரிப்பை தொலைத்தவளைக் கண்டதும் மீண்டும் கோபம் தலைதூக்கியது.

"சாப்பிடும் போது பேசாதன்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிருக்கேன். பேசாம சாப்பிடுடி.."

வெடுக்கென்று கூறியவனைத் திரும்பிப் பார்த்த சிதாரா, "நீங்க மட்டும் சாப்பிடும் போது பேசுறீங்க.." என்றுவிட்டு உணவருந்துவதைத் தொடர, இப்பொழுது அவளின் செய்கையில் ஸ்ரீமதிக்கும் சிரிப்பு வந்தது.

"துர்கா நீயும் உட்கார், அத்த நீங்களும் உட்காருங்க.."

"இல்ல மாமா, நீங்க சா.."

அவள் முடிக்கவில்லை, "நீ உட்கார் துர்கா.." என்ற அதட்டலில் தானாக அமர்ந்தவள் அன்னையையும் தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டவள்.

சிதாராவுக்கும் ஷிவாவிற்கும் பரிமாறியவாறே தானும் உணவருந்த, "ஹப்பா! எல்லாமே ரொம்ப டேஸ்டா இருக்கு.. எதைச் சாப்பிடறது, எதை விட்டு வைக்கிறதுன்னே தெரியலை. கண்டிப்பா சொல்றேன் துர்கா, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவரு ரொம்பக் குடுத்தவச்சவரு.." என்றதில் உணவருந்திக் கொண்டிருந்த ஷிவாவிற்குப் புரை ஏறியது.

அவனுக்கு அருந்த தண்ணீரை வேகமாக எடுத்துக் கொடுத்த சிதாரா, அவன் தலையில் தட்ட வர்ற, "ஒண்ணும் வேண்டாம், நீ எதுவும் பேசாமல் அமைதியா சாப்பிட்டாலே போதும்.." என்றவனாய் நீரை அருந்த, அதே நேரம் மும்பையில் மதிய உணவுடன் சேர்த்து மீட்டிங்கை டாஜ் ஹோட்டலின் ஜப்பானியர் ரெஸ்டாரண்ட் வாசாபியில் [Wasabi by Morimoto, The Taj Mahal Palace, Colaba, Mumbai] கூட்டியிருந்த வருணிற்கும் புரை ஏறியது.

"ஆர் யு ஒகே?"

"ஐ ஆம் ஆல்ரைட்.."

கூறியவனாய் அருகில் இருந்த கண்ணாடி கோப்பையில் வைத்திருந்த நீரை அருந்த, ஏனோ தன்னையும் அறியாது அவனது இதயம் தன்னால் சிறை செய்யப்பட்டுப் பிறகு தன்னாலேயே விடுதலை செய்யப்பட்ட பேதையின் நினைவுகளைத் தன் நியாபகப் பெட்டியில் அவசரம் அவசரமாய்த் தேடியது.

ஆனால் சடுதியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் மீட்டிங்கில் கவனத்தைச் செலுத்த, இங்கு மல்லியக்குறிச்சியில் சிதாராவின் வார்த்தைகளில் துர்காவின் எண்ணம் வருணையே சுற்றி சுற்று வந்து கொண்டிருந்தது.

'என்ன முரனான நினைப்பு? அவர் யார்? நான் யார்? அவரைப் பற்றி நான் நினைக்க என்ன இருக்கின்றது? என்னை அவர் மறந்துக் கூடப் போயிருக்கலாம்.'

எண்ணியவளாய் அவனது நினைப்பையே துடைத்து எடுக்க முயற்சித்தவாறே உணவருந்துவதில் மீண்டும் கவனத்தைச் செலுத்தினாள்.

ஒரு வழியாக அனைத்து பதார்த்தங்களையும் ரசித்து ருசித்து உண்டு முடித்த சிதாரா கை அழம்ப வீட்டிற்குப் பின்புறத்திற்குச் செல்ல, அவளைப் பின் தொடர்ந்து வந்த ஷிவா, "சித்து, ப்ளீஸ் இங்க இருந்து போற வரைக்கும் துர்காவோட கல்யாணத்தைப் பற்றிப் பேசாத.." என்றான் கண்டிப்புடன்.

"சாரிங்க, அதையே மறந்துட்டுத் திரும்பத் திரும்ப அதைப் பற்றியே பேசிட்டே இருக்கேன்."

கூறியவள் வீட்டினுள் நுழைய, எதிர்பட்ட ஸ்ரீமதி தங்களின் தோப்பு துரவுகளைச் சிதாராவிற்குக் காட்டுமாறு துர்காவிடம் பணித்தார்.

ஸ்ரீமதி கூறியதைத் தொடர்ந்து வெளிவந்த இளையவர்களில் கணவனின் காரில் முன்னால் ஏறப்போன சிதாரா சட்டென்று நின்றவள் பின்னால் துர்காவிற்கு அருகில் அமர்ந்தாள்.

"இப்ப எதுக்கு என் பக்கத்துல உட்காருர. மாமா பக்கத்துல உட்கார் போ.."

"அவர் பக்கத்துல தான் இவ்வளவு நேரமும் உட்கார்ந்து வந்தேன். இன்னைக்கு என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்டுடன் உட்காரப் போறேன்."

கூறியவள் துர்காவின் கரத்தை இறுக்கப் பற்றியவளாகக் காரை கிளப்புமாறு கணவனிடம் தலையசைத்துச் சைகை செய்ய, வயல்வெளியை நோக்கி அவர்களின் வாகனம் பறந்தது.

பச்சை நிற பட்டுப்புடவையைப் போர்த்தியது போல் பளபளத்துக் கொண்டிருந்தது வயல்வெளி.

பல ஏக்கர்கள் கணக்கில் விரிந்திருந்த வளம் கொழிக்கும் உழவு நிலங்களையும், நெஞ்சை அள்ளும் நெற்கதிர்களையும், அவற்றுக்கு அரண் போல் சுற்றிலும் ஓங்கி உயர்ந்திருந்த மலைகளையும் பார்க்க பார்க்க திகட்டவே இல்லை, அந்த ராஜபுத்தின அழகிக்கு.

"வாவ். நீ அடிக்கடி உங்க நிலத்தைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் என்கிட்ட பேசியிருக்கத் துர்கா. அப்ப எல்லாம் அது எப்படி இருக்கும்னு கூகுலில் போய்த் தேடி தேடிப் பார்ப்பேன். ஃபோட்டோஸிலேயே அவ்வளவு அழகா இருக்கும் அந்த இடங்கள் எல்லாம். ஆனால் அதை இப்போ நேராவே பார்க்கிறப்போ இன்னும் சிலிர்க்குது."

கூறியவளாய் காரின் இரு பக்க ஜன்னல்களின் வழியாய் கண்கள் அகல விரிய வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தவளுக்குத் திடுமெனக் கிறுகிறுத்தது போல் இருந்தது.

நெற்றியின் இருபக்கங்களையும் இரு கரங்களால் பிடித்தவள் லேசாய் தேய்த்துவிட, அவளின் செய்கையைக் கண்டு சற்றே பதறினாள் துர்கா.

"என்ன ஆச்சு சிதாரா, தலை வலிக்குதா?"

"மாறி மாறி தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்துட்டு வந்தா அப்படித்தான் இருக்கும்."

ஷிவாவின் கூற்றில் நிமிர்ந்தவள்,

"மிஸ்டர் ஷிவ நந்தன், நீங்க காரை ஓட்டுறதுல மட்டும் கவனம் செலுத்துங்க, போதும். என்ன பத்திக் கவலை வேண்டாம்." என்றவளாய் மீண்டும் வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள் அவனது மனையாள்.

அவளின் பேச்சில் சிரித்த துர்கா, தங்களின் விளை நிலங்களையும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு தங்களின் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வர, சற்றுத் தொலைவில் இரு மலைமுகட்டிற்கு இடையில் வளைந்து நெளிந்துக் கொட்டிக் கொண்டிருந்த நீர்வீழ்ச்சியானது சிதாராவின் கண்களைப் பறித்தது.

"ஆஹா, வாட்டர் ஃபால்ஸ்!"

ஆச்சரியத்துடன் கூறியவள் ஷிவாவின் தோள் பற்றி, "அங்க போகலாமா ஷிவா?" என்றாள்.

பார்ப்பதற்கு அருகில் இருப்பது போல் தோன்றினாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் அந்த மலைகளிற்கும் இடையில் வெகு தூரம் இருந்தது.

ஆயினும் அவளின் ஆவலை மறுக்க இயலாதவனாக மலைகளை நோக்கிக் காரை செலுத்த, மீண்டும் தலைசுற்றுவது போல் இருந்தது சிதாராவிற்கு.

ஆனால் இப்பொழுது கூறினால் மீண்டும் கிண்டல் செய்யத் துவங்கிவிடுவான் என்று சமாளித்துக் கொண்டவளாக அமைதியாக வர, ஏறக்குறைய முப்பது நிமிடங்களுக்குப் பிறகு அந்த மலைகளின் அடிவாரத்தை அடைந்தனர்.

நீர்வீழ்ச்சியில் குளிக்கும் ஆசையைக் கணவனிடம் பகிர, 'வேண்டாம்' என்று ஒரே வார்த்தையில் மறுத்தவனைக் கண்டு அடிவாரத்தில் அழகாய் படுக்கையைப் போல் விரித்திருந்த புற்களின் மேல், இருகால்களையும் கட்டிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

"சித்து. ஏதோ ஃபால்ஸ் பார்க்கணும்னு சொன்ன, அதான் கூட்டிட்டு வந்தேன். கொஞ்ச நேரம் பார்த்துட்டு கிளம்பணும். அப்பத்தான் நைட் ஃப்ளைட் பிடிக்க முடியும். நாளைக்குக் காலையில் எனக்கு முக்கிய வேலை இருக்குன்னு ஏற்கனவே சொன்னேனுல்ல."

அருகில் நின்று கொண்டு சற்றே அதட்டும் குரலில் கூறிய கணவனை அமர்ந்தவாக்கிலேயே ஏறிட்டு நோக்கியவள்,

"சேன்ஸே இல்லைங்க. இயற்கையுடன் இணைக்க நம்முடைய ஐந்து புலன்களையும் பயன்படுத்தணும்னு சொல்லுவாங்க, பார்வை, சுவை, தொடுதல், வாசனை, ஒலி.[Use your five senses to connect with nature, sight, sound, touch, smell and taste ] ஆனால் சத்தியமா உங்களுக்கும் இயற்கைக்கும் சம்பந்தமே இல்லைங்க. இங்க பாருங்களேன், பச்சைபசேலுன்னு இருக்குற இந்த இடத்தைச் சுற்றிலும் இவ்வளவு மலைகள். அதுக்கு நடுவுல குட்டியா ஒரு நீர்வீழ்ச்சி. பார்க்குறதுக்கு அவ்வளவு திரில்லா இருக்கு. அதோட சத்தம் காதுக்கு எவ்வளவு குளிர்ச்சியா இருக்கு தெரியுமா? இந்த ஈர புல்லுங்க மேல உட்கார்ந்திருக்கிறது மனசுக்கு அவ்வளவு இதமா இருக்கு. அதுவும் இங்க பூத்திருக்கிற தாழம் பூக்களோட கலந்து மண்வாசனையும் சேர்ந்து வருகின்ற நறுமணம் மனசுக்கு எவ்வளவு ரம்மியமா இருக்குத் தெரியுமா?" என்றவள் முடிக்கும் முன், மீண்டும் தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

மறுபடியும் அவளின் இந்தச் செய்கை துர்காவின் புருவங்களை இடுங்கச் செய்தது.

அவளின் அருகில் அமர்ந்தவள், "சிதாரா, ஏதாவது பண்ணுதா?" என்பதற்குள் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்ததில் குமட்டினாள்.

"அஞ்சு சென்ஸும் வேணும்னு சொன்னல்ல, அதுல டேஸ்ட் சென்ஸ் மட்டும் உனக்கு வர வர ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு. அதான் துர்கா செய்த எல்லாத்தையும் ஒண்ணுவிடாமல் சாப்பிட்ட. இதோ இப்பப் பாரு, வயிற்றைக் குமுட்டுது."

அவன் பேசிக் கொண்டே இருக்கும் பொழுதே கட்டுப்படுத்த முடியாது வாந்தியும் எடுத்துவிட்டாள்.

சட்டெனத் தானும் அவளுக்கு அருகில் மண்டியிட்டவன், "ஹேய் சித்து.. ஆர் யு ஆல்ரைட்?" என்றவாறே அவளின் முதுகைத் தடவ ஆரம்பிக்க, "ம்ம்.. இப்பக் கேளுங்க" என்றவளாய் மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாள்.

"மாமா.. இருங்க நான் தண்ணி எடுத்துட்டு வர்றேன்.."

கூறியவளாய் காரை நோக்கி துர்கா ஓட, மனைவியின் தலையை இரு கரங்களால் இறுக்கப்பற்றிக் கொண்ட ஷிவா, "சித்து என்ன ஆச்சு? சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா?" என்றான் கவலைத் தொனிக்கும் குரலில்.

அதற்குள் தனக்குள் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை உணர ஆரம்பித்திருந்தாள் பெண்ணவள்.

"பொண்ணுங்க வாமிட் பண்ணினா எப்பவுமே நிறையச் சாப்பாடு சாப்பிட்டு இருக்காக்கங்கிறது மட்டும் தான் உங்களுக்குத் தோனுமா? வேற எதுவும் காரணம் இருக்கும்னு தோனவே தோனாதா?"

மூச்சு வாங்கத் திணறும் குரலில் கூறுபவளை விநாடி நேரம் உற்று நோக்கியவனின் கண்கள் மலர்ந்தது.

'சித்து, ஆர் யூ?"

அவன் முடிக்கவில்லை அதற்குள் அவர்களுக்கு அருகில் வந்து கொண்டிருந்த துர்காவைக் கண்டு, "நாம் இதைப் பற்றிப் பிறகு பேசுவோமா ஷிவா?" என்றவள் அவள் நீட்டிய தண்ணீர் பாட்டிலை வாங்கி வாய் கழுவி நீரை அருந்தினாள்.

"துர்கா, இங்க பக்கத்தில் ஏதாவது க்ளினிக் இருக்கா?"

"இருக்கு மாமா."

"சரி போகலாம் வா.."

கூறியவனாய் சிதாராவின் கரம் பற்றி மெள்ள அவளை எழுப்ப, "நாம் மும்பைக்குப் போய்ச் செக் பண்ணிக்கலாமே.." என்று மெதுவாய் அவனது காதுகளில் கிசுகிசுத்தவளின் எண்ணம் அவனுக்கும் புரிந்தது.

துர்காவின் நிலைப் புரிந்தே மருத்துவரை பார்க்க அவள் மறுக்கிறாள் என்று உணர்ந்தவனாய் சரி எனவும், ஆனால் மீண்டும் மீண்டும் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததில் தொய்ந்துப் போனாள்.

சிதாராவின் நிலையைக் கண்டு வருந்தியவளாய் விடாப்பிடியாய் அவள் மறுக்க மறுக்க மருத்துவரிடம் அவர்களைத் துர்கா அழைத்துச் செல்ல, அதற்குள் விசயம் கேள்விப்பட்டு ஸ்ரீமதியும் வந்துவிட, சிதாராவின் மணி வயிற்றில் கரு உருவாகியிருப்பதை அறிந்துக் கொண்டதில் மனமார மகிழ்ந்தனர் பெண்கள் இருவருமே.

"ரொம்பச் சந்தோஷமா இருக்கு சிதாரா. நல்ல விஷயம் சொன்ன, அதுவும் எங்க ஊருக்கு வந்திருக்கும் போது."

முகம் மலர கூறிய ஸ்ரீமதியின் வார்த்தைகள் ஷிவாவின் உள்ளத்தில் சில்லென்று இறங்க, தந்தையாகப் போகும் சந்தோஷத்தில் மூழ்கி இருந்தவனுக்கு, அத்தையின் பெருந்தன்மையும் உண்மையான பாசமும் மேலும் நெகிழச் செய்தது.

கூடிய விரைவில் துர்காவின் வாழ்விலும் நல்ல காரியங்கள் நிகழ வேண்டும் என்று எண்ணிக் கொண்டவனாய் மும்பை விமானத்தில் அன்று இரவே பயணம் செய்ய, மறு நாள் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக விடிந்தது சிதாராவிற்கு.

ஆனால் அவளது கணவனுக்கு அதற்கு மாறாக அமைந்தது அந்நாள்.

**************************************

காரணம் தேசம் முழுவதும் அலறிய செய்தி.

மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷின் இரண்டு வயது மகன் ஆதவ் விக்னேஷ் கடத்தல்.

ஜுஹூ கடற்கரையில் அமைந்திருக்கும் ஆர்ய விக்னேஷின் வீட்டின் பின் புறம் உள்ளத் தோட்டத்தில் அமைச்சர் ஆர்ய விக்னேஷின் மனைவியின் கண்பார்வையில் இருந்த குழந்தை நிமிடங்களில் கடத்தப்பட்டது எப்படி?

அலறியது தேசம் முழுவதிலுமான மீடியாக்கள்!

அரிமாக்களின் வேட்டை

தொடரும்
 
Last edited:

Vidhushini

Member
Appo Aryan-ku vandha phone call, Avan son kidnap pathidhaan irukkanum.

Maybe it is Varun or Mirza brothers.... But Varun-ku idhula enna benefit irukkum-nu thonala.

Interesting @JLine @JB sis🔥
 
Wow… Congratulations Shiva and Sithu 💐💐💐 Young parents to be…

Aww… Ange Durga to be husband pathi kadhaicha unakku inge purai eruthu… 🤭🤭🤭

Aryan pillaiyai avan idathile vechi kanoma??? Kandippa Varun oda velaiya irukkumo
 
Aryan paiyana kadathinathu Mirza brothers ah? Shiva and sithu ku baby Vara pogutha? Varun ah ninaicha puraieruthu? Super. Varunum Durga um eppo seruvaanga nu waiting mam.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top