JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 11 & 12

Uthaya

Member


11



போலீஸ் ஜீப் பெரியாண்டபுரத்தை விட்டுச் சென்றபின் தெருக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாய்க் கூட ஆரம்பித்தனர். தங்கச்சாமியின் வீட்டின் முன்பும் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது.

வடக்குத்தெரு சுப்பையா, “போலுசு சும்மா விடாது. எப்பிடியும் தங்கச்சாமிக்கு இன்னொரு வாய்தாவாவது போடும். அப்பம் கூட்டிட்டுப் போயி நம்ம தங்கச்சாமிய சவள புரட்டி எடுத்துரும். கொலக்கேசா, சும்மாவா?” என்று ஆரம்பித்தார்.

கீழத்தெரு சீனிச்சாமி அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல், “ஆமா, இப்பிடித்தான் கொக்குகுளத்தில, எங்க சின்னையா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு ஆள, டேசனுக்கு கூட்டிட்டுப் போயி தலகீழ தொங்கவிட்டு அறை அறைண்ணு அரஞ்சு கொண்டாந்து இறக்கிட்டுப்போய்ட்டாங்க. அந்த ஆள் நடக்கதுக்கு ஒரு வாரம் ஆச்சு. பொரகு அடுத்த மாசம் வாய்தாவுக்கு வாண்ணு நோட்டீசு குடுத்திருந்தான். அடுத்த வாய்தாவுக்கு முந்தின தினம் மனுசன் என்ன செஞ்சாருன்னு நினைக்கீக?” என்று ஒரு கேள்விக் குறியோடு நிறுத்தினார்.

கூட்டம் மூச்சு விடவில்லை. சீனிச்சாமி ஒரு சிறு வெற்றிப் புன்முறுவலோடு தொடர்ந்தார், “மறுபடியும் நம்மள அப்பிடித்தான அடிப்பான். அதுக்குள்ள நாம உயிர விட்டுரணும் அப்பிடிண்ணு நினச்சு, மனுசன் நாண்டுக்கு நிண்ணுட்டார். அது கூடக் கொலக்கேசுதான். ஆனா நகைய கொள்ள அடிச்சுட்டு, ஒரு பொம்பளய கொண்ணு போட்டுட்டுப் போய்ட்டான். ஆனா கள்ளனக் கடசிவரைக்கும் கண்டே பிடிக்கலை,” என்று கதையை முடித்தார்.

வடக்குத்தெரு சுப்பையா தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டு, “சரியாச்சொன்னய்யா சீனிச்சாமி. ஆக நம்ம தங்கச்சாமிக்கு எப்பிடியும் இருக்கு,” என்று தலையையும் கையையும் ஆட்டி ஆட்டிப் பேசினார்.

அப்போது, வீட்டில் தன் கணவன் தங்கச்சாமிக்கு பழைய சோற்றில் மோர் ஊற்றி, பக்கத்தில் வெங்காயமும் வைத்து, சாப்பிடச் சொல்லிவிட்டு வெளியே எட்டிப்பார்த்தாள் மைதிலி.

மைதிலியைப் பார்த்ததும், சுப்பையா, “இன்னும் ரெண்டொரு நாள்ள நம்ம தங்கச்சாமிய கூட்டிட்டு போக நிச்சயம் வருவாமுத்தோ. விடமாட்டான். இல்ல, உண்மையச் சொல்லணுமில்ல,” என்று ஏதோ பெரும் நியாயத்தை உச்சரிப்பவர்போல் தன் வலது கரத்தை நீட்டி விரல்களை விரித்துச் சொன்னார்.

மைதிலிக்கு கண்ணீர் மாலை மாலையாக வடிந்தது. வீட்டுக்குள்ளே போகவும் விருப்பமில்லை. வடக்குத்தெரு சுப்பையா சொன்ன வார்த்தைகளும் பிடிக்கவில்லை. எங்கே தன்னையும் போலீஸ் சேர்த்துப் பிடித்துக் கொண்டு போய்விடுமோ என அவள் உள்ளம் பதைபதைத்தது.

அதற்குள் பழைய சோற்றையும் வெங்காயத்தையும் மோருடன் சேர்த்து உறிஞ்சி விட்டு வெளியே வந்தான் தங்கச்சாமி. கீழத்தெரு சீனிச்சாமி அவனுக்காக இன்னொருமுறை அந்த கொக்குகுளத்து கொலைக்கேஸ், வாய்தாக் கதையையும். அந்த மனுசன் எப்படி தூக்கில் தொங்கி உயிரை விட்டுவிட்டார் என்பதையும் சொன்னார்.

தங்கச்சாமிக்கு ஏனோ சிரிப்பு வந்தது. ஒரு முறை போலீஸ் ஸ்டேசன் சென்று அடி வாங்காமல் வந்துவிட்டானே என்று இவர்களுக்கு ஏனோ தாங்கவில்லை, என நினைத்துக்கொண்டான். இவர்களுக்கு தான் முன்னொரு நாள் கிணற்றில் விழுந்து கிட்டத்தட்ட உயிர் போகிற கட்டத்திற்கு வந்துவிட்டது தெரியாது. தெரிந்தால் ஒரு வேளை தன்னை தூக்கு மாட்டிச் சாகச்சொல்லாமல் கிணற்றில் விழுந்து சாகச்சொல்வார்களோ, என எண்ணியவனுக்கு, முன்பு அவன் கிணற்றில் விழுந்த அன்று நிகழ்ந்தவை, ஞாபகம் வந்தது.




12



சங்கரலிங்கம் கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன், தங்கச்சாமி மிகவும் மனம் நொந்து போய் இருந்தான். அழுது அழுது கண்கள் இரண்டும் சிவந்து காணப்பட்டன. யோசிக்க, யோசிக்க தன் முடிவு சரிதான் என்று பட்டது அவனுக்கு. காலம் காலமாக அவன் பட்ட துன்பங்களும் துயரங்களும் மீண்டும் மீண்டும் அவன் நினைவில் ஓடின. ஒரு புறம் அவன் மனைவி அவனை மிக மட்டமாகவும் கேவலமாகவும் நடத்துவது மட்டுமல்லாமல், பல மாதங்களாக இரவு நேரங்களில் வெளியேயும் போய்விட்டு வந்தாள். ஊரார் தன்னை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூட அவன் கவலைப் படவில்லை. அவனை ஒரு முழு ஆண் போன்று நடத்தாமல் ஒரு பொண்ணையனை நடத்துவதுபோல் நடத்தினர். ஏன், பெண்கள் கூட அவனைக் கேலி செய்தது மட்டுமல்லாமல், அவன் முன்னால் ஒண்ணுக்குப் போவதும், அப்பொழுது ஆண்கள் வந்தால் பார்த்துச் சொல் என்றும், எள்ளி நகையாடினர்.

அவன் மனது என்ன கல்லா? ஏன் கல்லை விடக் கடினமான மனதைக்கூட சுக்கு நூறாய் உடைத்திருக்கும் அவன் பட்டபாடு. எப்படியோ இத்தனை நாட்கள் பொறுத்துக்கொண்டான். ஆனால் இனி முடியாது. அவன் மனது சுட்ட சுண்ணாம்பாக நீத்துப்போன பின்தான் அம்முடிவை எடுத்தான்.

‘சரி செத்திர வேண்டியதுதான்,’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். ஆனால் பயமாகவும் இருந்தது. சரி சாவதுண்ணா, எப்படிச் சாவது? ‘தெக்குத்தெரு பாலமுருகன் மாதிரி உத்தரத்தில கயத்தைக் கட்டி நாண்டுக்கு நிக்கவா.’

‘சேச்ச, அப்பிடிச் செய்யக்கூடாது. அதுக்குப் பெரகு அந்த வீட்டில யாரும் குடி வர மாட்டேண்ணுட்டாக. அத இடிச்சு வேற வீடு கட்டின பெரகுதான் ஆள் குடி புகுந்திச்சு. அது வரைக்கும் வருசக்கணக்கா காலியாக்கெடந்தது.’

‘பூச்சி மருந்தை குடிச்சு செத்திறலாம், ஆனால் ரொம்ப கசக்குமே. நமக்கு பாவக்காகூட தொண்டயில இறங்காதே. நான் எப்பிடி விசத்த குடிக்கப் போறேன்.’

‘செத்த பெறகு நம்மள சாமி நரகத்தில போட்டுரிச்சுண்ணா, சே, நமக்கு நரகம் கெடைக்காது. நாம என்ன ஊரா குடும்பத்தைக் கெடுத்திருக்கோமா, யாருக்காவது வஞ்சகம் செய்திருக்கொமா, இல்ல களவாண்டிருக்கோமா? நமக்கு ஏன் சாமி நரகத்த தரப்போவுது.’ என்று பலவாறாக யோசித்தான்.

கடைசியாக, கிணற்றில் விழுந்து சாவது என்று முடிவு செய்தான். சரி, சாகும் போது வலிக்குமா. ரொம்ப வலிக்குமா. எவ்வளவு நேரம் வலிக்கும். வேறு ஏதாவது ஆகுமா. பாதி உயிர் போனபின் காப்பாற்றி விட்டால் என்ன ஆவது. அது வாழ்நாள் முழுவதும் வலிக்குமா. தற்போது தன்னைக் கேலி செய்த கூட்டம் அப்போதும் கேலி செய்யுமா.

‘சரி அதெல்லாம் பாக்கமுடியாது. செத்துர வேண்டியத்தான். வலியெல்லாம் பாத்தா மிடியுமா?’

அடுத்த நாள் விடியுமுன் எழுந்து மனைவி சொல்லாமலே தண்ணீர் எடுத்துக் கொடுத்துவிட்டு, “வெளிய போய்ட்டு வாரன்,” என்று சொல்லிவிட்டு நேராக கிழக்கு நோக்கி நடந்தான். அவன் முடிவு செய்துவிட்டிருந்தான், கிணற்றில் விழுந்து சாவது என்று.

வயல் காட்டைக் கடந்து, கிழக்கே பார்த்து ஒரு உக்கிரத்துடன் நடந்தான். இன்னும் விடியவில்லையானாலும், நிலவு ஒளியில் வீடு, மரம், கரை எல்லாம் உருவங்களாய் தெரிந்தன. வழி தெரிந்தவர்களுக்கு பாதையைக் கண்டுபிடித்துப் போவது ஒன்றும் பிரச்சனையில்லை. தங்கச்சமிக்கு நிலவு ஒளியெல்லாம் தேவை இல்லை, அந்தப் பாதைகளும், திருப்பங்களும், மேடுபள்ளங்களும், பொளிக்கல்களும், பெரிய செடி புதர்களும் அவனுக்கு மனப்பாடமாய் தெரியும், கால் நிலத்தில் படும் உணர்ச்சியை வைத்தே அவன் வழியைக் கண்டுகொள்வான்.

பன்னீர் ஓடைக்குச் செல்லும் வண்டிப் பாதையில் இருபக்கமும் கத்தாழை தலைக்குமேல் வளர்ந்துகிடந்தது. தங்கச்சாமி நடந்துகொண்டே இருபுறமும் பார்த்தான், அந்த நேரத்தில் காட்டுவேலை, கிணற்றுவேலை செய்பவர்களைக்கூடக் காணவில்லை. அவனுக்கு உள்ளூர லேசாக பயம் தோன்றியது. தனக்குத் தானே சொல்லிக்கொண்டான், ‘சாகப்போறவனுக்கு எது வந்தா என்ன, பயம் எதுக்கு,’. திடீரென்று எதிரே பாதைக்குக் குறுக்காக ஏதோ கரிய உருவம் ஒன்று ஓடி மறைந்தது. ஒரு வினாடி உறைந்துவிட்டான் தங்கச்சாமி. மீண்டும் தனக்குத் தானே முன்பு சொன்னதையே சொல்லிக்கொண்டான். மேலும், ‘நரியா இருக்கும்,’ என்றும் முனுமுனுத்துக்கொண்டான். திடீரென்று கரிச்சான் கிச் கிச் கிச் என்று அலறியது, இம்முறை தங்கச்சாமி பயப்படவில்லை. கத்தாழைகளுக்கு இடையிலிருந்து முயல் ஒன்று எட்டிப் பார்த்தது, தங்கச்சாமி சி£¤த்துக்கொண்டான்.

சில நிமிடங்களில் வண்டிப்பாதை தெற்கே திரும்பவே, தங்கச்சாமி வண்டிப்பாதையை விட்டு விலகி சுண்டங்குருச்சி ரோட்டைத் தாண்டிக் கிழக்குநோக்கித் தொடர்ந்தான். இனி வருவது வரட்டும், இழப்பதற்கு என்ன இருக்கின்றது? அடிமை தளைகள் கூட இல்லை. மீளா உறக்கம். நிம்மதி. இனி எவளும் ‘ஆம்பள வந்தாச் சொல்லு,’ என சொல்லாத தேசம் பார்த்துப் போய்விடலாம், என நடந்தான்.

இது என்னே உலகம்-

நல்லவனை வஞ்சித்து,

கேலி புரிந்து, பொய்த்து,

களவாடி, பிறன் மனை புணர்ந்தவனை

பெரியமனுசன் என்பதுவும்

கணவனை ஏமாற்றி,

கேலிக் கூத்தாக்கி,

கள்ளக் காதல் புரிந்து,

குடும்பம் பல இன்பம்

என்பது போல் நாடகம் ஆடும்

பெண் வாழும் இப் புவியில்

வாழ்வதை விட சாதலே மேல்

எனப் பாடியிருப்பான் தங்கச்சாமி. ஆனால் செய்யுளும் வெண்பாவும், பாவேந்தர்களும், பகுத்தறிவாளர்களும் பாடிப் புகழ் பெறும் பொருட்டு உருவாக்கிய யுக்தியன்றோ?

சாதாரணன், ஏன் அதனினும் கீழானவன் போன்ற தங்கச்சாமி போன்றவர்கட்குச் செய்யுளும் வெண்பாவும் எப்படித்தெரியும்? அவன் நடந்தான் தன் சாவை நோக்கி, ஒரு முடிவைத் தேடி.

கிழக்கே வெளுக்கத் தொடங்கிவிட்டது, தங்கச்சமி அப்போது வண்ணான் ஊரணி அருகே இருந்த புளியந்தோப்பு ஓரமாக நடந்துகொண்டிருந்தான். பாதையின் குறுக்காக நரி ஒன்று ஓடியது, அவன் நடந்துவரும் சப்தம் கேட்டு கலைந்திருக்கவேண்டும். பயப்படாமல் அது போகும் திக்கைப் பார்த்தான், அது வல்லராமபுரத்துக் காசிப்பாண்டியின் விளையில் இருந்த ஒரு புதருக்குள் ஓடி மறைந்தது. அப்போது கொஞ்சம் வெளிச்சம் வர ஆரம்பம் ஆகி இருந்தது.

வலதுபுறம் புளியமரங்கள் அந்த நேரத்தில் ஏதோ இராட்சசக் கழுகுகள்போல் தோன்றின. புளியமரங்களுக்குக் கீழே புல்பூண்டுகள் முளைக்காத மண் தரை, கரிசலும் இல்லாமல் செவலும் இல்லாமல் மஞ்சள் கலந்த மண் நிறமாய், வெட்டவீதியாகக் கிடந்தது. இடப்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் மேச்சல் நிலங்கள் கிடந்தன. ஆங்காங்கே உயர்ந்த பனைமரங்கள் வளர்ந்து நின்றன. அவற்றின் உச்சியில் ஓலைகளுக்கு இடையே மைனாக்கள் அப்போதுதான் தூங்கி விழித்துச் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தன. வடக்கே எட்டிப் பார்த்தான் அந்த பனைமரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் பனங்காடாகக் காட்சி அளித்தாலும் அவனுக்குத் தெரியும் நிலத்தின் நான்கு பொழிகளில் மட்டுமே பனைமரங்களை நட்டு இருப்பார்கள் என்று. நிலப்பரப்பில் புல்லும் சீவும் ஏகமாக வளர்ந்து கிடந்தன, ஊடே மஞ்சள் பூக்களுடன் ஆவரைச் செடிகள் காற்றில் ஆட, அதன் சீகைக்காய் போன்ற காய்கள் கிலுகிலுத்தன. ஆவரை இலையில் பொன்வண்டுகள் அந்த அரைகுறை வெளிச்சத்திலும் பளிச்சிட்டன. அந்நிலங்கள் தனியார் காவல் என்று, அவற்றின் நடுவில் நட்டு வைத்திருந்த பெரிய பெரிய பனை ஓலைகளைப் பார்பதற்கு முன்பே, தங்கச்சாமிக்குத் தெரியும். அந்நிலங்களில் அவன் ஊர்மாட்டை மேய்க்க அனுமதி இல்லை, நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் மாட்டை மேய்ப்பதற்காக ஒதுக்கிப் போடப்பட்டவை. அடுத்து நின்ற பனைகளில் கிளிகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தன, அவைகள் இரைதேடப் புறப்படத் தயாராய் இருப்பதுபோல் தோன்றின.

தங்கச்சாமி சிறிது நேரம் நடந்து பூல்தங்கம்மாவை எட்டி விட்டான். இருட்டு முற்றிலும் விலகவில்லை என்றாலும் எதிரே வருபவரை அடையாளம் கண்டுகொள்ளும் அளவுக்கு வெளிச்சம் வந்துவிட்டது. தெற்கே இரண்டு கிணறுகள் தென்பட்டன, கிணற்றின் அருகில் அடர்ந்த தென்னைமரங்களும் மாமரங்களும் சோலையாய்க் காட்சி அளித்தன. கிணற்றைச் சுற்றிக் கிடந்த புஞ்சைகளில் கடலை, பருத்தி, கேப்பை போன்ற பயிர்கள் அந்தக் காலை வேளையில் ஒரே கரும்பச்சையாகக் காட்சியளித்தன. தங்கச்சாமியின் கண்கள் அருகில் இருந்த கடலையின் மேல் விழுந்தன, அக்கடலைச் செடிகளின் இலைகளில் பனித்துளிகள் உருண்டை உருண்டையாக முத்துக்களைப் போல் மின்னின. இந்த இலைத் தண்ணீர் மட்டும் ஏன் இலைகளோடு ஒட்ட மறுக்கின்றது என அவன் இருந்த நிலையிலும் எண்ணி வியக்கத் தவறவில்லை. தற்போது நல்ல வெளிச்சம் வந்துவிட்டாலும் ஆதவன் கிழக்கே சமுத்திரத்துக்குக் கீழ் இன்னும் பதுங்கித்தான் கிடந்தான்.

ஒரு சில நிமிடங்களில் பூல்தங்கம்மாவைத் தாண்டி வெட்ட வீதியாகக் கிடந்த ஊர்மாடு மேய்க்கும் நிலங்களுக்கு வந்துவிட்டான். ஆள் அரவமில்லை. ஒரு காட்டுக்கிணறு மட்டும் தெரிந்தது. அவன் முன்பு பலமுறை அங்கு வந்திருக்கிறான். இதில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டியதுதான் எனத் தன் மனதைத் தயார் செய்துகொண்டான்.

சரி, இதுதான் தான் இப் பூமியில் கடைசியாகப் பார்க்கும் காட்சி, என எண்ணினான். தன் வாழ்வு முடியுமுன் ஒரு நிமிடம் உலகைப் பார்த்துக்கொள்ளலாம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தான்.

கிழக்கே வெகுதொலைவில் மூர்தீஸ்புரத்துத் தோட்டங்கள் தெரிந்தன, அத்தோட்டங்களில் தென்னை மரங்கள் வானைமுட்டி நின்றன. ஒரு தோட்டத்தின் வரப்புகளில் வேப்பமரங்கள் செழித்து வளர்ந்துகிடந்தன. பூவரசு மரங்களும் புளியமரங்களும் ஆங்காங்கே காணப்பட்டன. மேற்கே திரும்பினான், புளியந்தோப்பும் பூல்த்தங்கம்மாயும் காடுபோல் தெரிந்தன. வடக்கே, பரந்து கிடந்த மேய்ச்சல் நிலங்களுக்கிடையில் சின்னப் பறும்பும் பெரிய பறும்பும் மருது சகோதரர்கள் போல் கிழக்கும் மேற்குமாய் நின்றன. மரங்களே இல்லாத பறும்புகளில் புல் பூண்டுகள்கூட அவ்வளவாக இல்லையாதலால் அவற்றில் எவரும் ஏறுவதில்லை. தங்கச்சாமிக்கு, அவன் பறும்புகளுக்கு இடையில் மாடு மேய்க்கும் பொழுது, அவற்றில் ஏறியது நினைவுக்கு வந்தது. தெற்கே குளத்து நீரும், நீருக்கு அப்பால் குளக்கரையும் தெரிந்தன, அதுதான் உசிலங்குளம் என்று அறிவான் தங்கச்சாமி. அக்குளத்திற்குத் தெற்கே கிடந்த வயல்வெளிகளைக் குளக்கரை மறைத்து விட்டாலும், கிராமத்து வீடுகளின் கூரைகள் குளத்தின் கிழக்குக் கரைக்கு மேல் தெரிந்தன. ஒரு சில மலையாள ஓட்டு வீடுகளும் ஒன்றிரண்டு காரைவீடுகளையும் தவிர மற்றவையெல்லாம் பனை ஓலையால் வெய்யப்பட்ட கூரைகளாகத் தெரிந்தன. தங்கச்சாமி தன் அருகில் நின்ற பூவரசு மரத்தைப் பார்த்தான், அம்மரத்தின் பெரிய கிளைகள் நாலாபுறமும் நீண்டு வளர்ந்திருந்தாலும், அவற்றிலிருந்து முளைத்திருந்த சிறு கிளைகள் வருச்சுப் போல் நேராக விண்ணை நோக்கி வளர்ந்திருந்தன. அக்கிளைகளில் மஞ்சள் நிறப்பூக்கள் நிறைந்து இருந்தன. சிவப்பேறி முதிர்ந்த பூக்கள் தரை எங்கும் உதிர்ந்து கிடந்தன. அம்மரத்தின் காய்களும் ஏராளமாய்க் கீழே விழுந்து கிடந்தன. சிறு வயதில் அந்தக் காயின் நடுவில் குச்சு ஒன்றைக் குத்திப் பம்பரம் ஆடியது நினைவுக்கு வந்தது, அந்நிலையிலும் லேசாகச் சிரித்துக்கொண்டான் தங்கச்சாமி. அவ்வயதில் பூவரசு இலையை சுருட்டிக் குழல் ஊதியதும் ஞாபகம் வந்தது. சரி, அந்த மகிழ்ச்சியான நினைவோடு தன் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என் எண்ணி தன் கால்களை நோக்கினான். அப்போது முற்றிலும் விடிந்து விட்டிருந்தது.

தேய்ந்து நாராய்ப்போய், பல ஒட்டுக்கள் போட்டு தடித்து, ஆங்காங்கு தோல் துருத்திக்கொண்டிருந்த தன் பழைய செருப்பைக் கழற்றினான். ஒரு ஆத்ம நண்பன்போல் தன்னோடு தான் சென்ற இடமெல்லாம் வந்த அச்செருப்புகளையும் கடைசியாக ஒரு முறை பார்த்துக்கோண்டான். தன் தோளில் கிடந்த அழுக்கேறி நைந்துபோன துண்டையும் கீழே போட்டான்.

கிணற்றை எட்டிப் பார்த்தான். தண்ணீர் இருபது அடிக்குக் கீழ் தெரிந்தது. ‘இவ்வளவு கீழ கெடக்கே இன்னைக்கி,’ என்று சற்று மலைத்தான்.

இரண்டடி பின் வாங்கி வானத்தைப் பார்த்தான், “சாமி, எம் பொண்டாட்டி பிள்ளைகளக் காப்பாத்து. உனக்கு தேங்கா பழம் வச்சு கும்பிடுதேன்,” என்று வாய்விட்டுச் சொன்னவன், தான் இறந்தபின் எப்படித் தேங்காய் பழம் வைத்துக் கும்பிட முடியும் என எண்ணி, ‘இல்ல சாமி, இல்ல. என்னால தேங்கா பழம் வச்சி கும்பிட முடியாது. நாந்தான் இருக்க மாட்டேமுல்லோ. ஒன்னய கெஞ்சி கேட்டுக்கிடுதேன். ஒங்கால்ல விழுந்து கும்பிடுதேன். எம் பொண்டாட்டி பிள்ளைகளக் காப்பாத்து,’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, தரையில் விழுந்து கும்பிட்டான்.

பின் எழுந்து கிணற்றோரம் சென்றான். தண்ணீர் அதல பாதாளத்தில் கிடப்பது போன்றிருந்தது. அவ்வளவு உயரத்திலிருந்து குதிக்க பயமாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான், ஒரு சுடு குஞ்சி கூட இல்லை. ‘பேசாமல் வீட்டுக்குப் போய்விடலாமா,’ என்று யோசித்தான். ‘சேச்சே, இவ்வளவு தூரம் நடந்து வந்திட்டா,’ என்று நினைத்தவன், யோசித்தான். சட்டென்று ஒரு எண்ணம் தோன்றவே, படி வழியாக கிணற்றுக்குள் இறங்க ஆரம்பித்தான். சடசட என புறா ஒன்று பறந்து வெளியேறும் ஓசை கேட்டு ஒரு கணம் பயந்துவிட்டான். அக்கிணற்றின் சுவர்ப்பொந்தில் வசித்த புறா தன்னைக் கண்டு பயந்து ஓடுகின்றது என அறிந்தவுடன் சுதாரித்துக்கொண்டு தொடர்ந்தான். மெல்ல ஒவ்வொரு படியாக இறங்கி தண்ணீருக்கு நாலு படி இருக்கும்போது உள்ளே குதித்தான்.

குளிர்ந்த நீர் நரம்புமண்டலத்தைத் தட்டி எழுப்ப, தான் தவறு செய்து விட்டோமோ என உணர்ந்தான். படியைப் பார்த்து ஒரு கையை நீட்டினான், அடுத்த கையால் நீரை அலம்பினான், கால்களால் அங்கும் இங்கும் நீரை உதைத்துத் தள்ளினான். படியைப்பார்த்து உடல் நகருவது போல் அவன் உணர்ந்தாலும், உண்மையில் அவன் உடல் எள்ளளவும் நகர வில்லை. சில நொடிகளில் அவன் உடல் நீருக்குள் மூழ்க ஆரம்பிக்க, அவன் தலையும் நீரில் மூழ்கியது. வாயை மூடிக்கொண்டான். எப்படியோ காலையும் கையையும் உதைத்ததில் வாய் ஒரு இமைப் பொழுது நீருக்கு மேல் வர, ‘க்..ஆ..’ என, வாயைப் பிளந்து காற்றைப் முடிந்தமட்டும் பெரும் பாடுபட்டு ‘ஆஆஞ்க்’ என உள் இழுத்தான். கொஞ்சம் தெம்பு வர காலையும் கையையும் ஓங்கி ஓங்கி அறைந்தான். எப்படியோ சில சமையம் தலை வெளியே வந்தது. அப்போதெல்லாம் அவசர அவசரமாக மூச்சை இழுத்துக்கொண்டான்.

இரண்டு மூன்று முறை அப்படி மேலும் கீழும் சென்றான். நேரம் நகர்ந்தது, மெல்ல மெல்ல தங்கச்சாமிக்கு கிலி பிடித்துக்கோண்டது. இதயம் குதிரையைப் போல் கெலி எடுத்து ஓட, பயம் நெஞ்சில் ஒரு பாரமாய் ஏறி அமர்ந்து கொண்டது. ‘அய்யய்யோ போச்சே,’ என்று மனம் ஏங்கித் தவித்தது. கடைசியாக “சாமி காப்பாத்து, தேங்கா பழம் வச்சு கும்பிடுதேன்,” என்று சொல்ல முற்பட்டான். தலை மேலே வருவது போல் உணர்ந்தவன், அவசரமாக மூச்சை இழுத்தான். ஆனால் அவன் வாய்க்குள் நிறைந்தது நீர்தான். தண்ணீர் நெஞ்சுக்குள் செல்ல அதை வெளியேற்றும் பொருட்டு அவன் உடல் அவன் அனுமதி இன்றி ஒரு பெரும் தும்மல் போட்டது. ஆனால், நீர் வெளியேரவில்லை, நேர் எதிர்விரோதமானதுதான் நடந்தது. அவன் வாய்க்குள் மேலும் மேலும் நீர் இறங்கி அவனுடைய நுரையீரல் நிரம்பியது.

இனி அவ்வளவுதான், தன் வாழ்வின் கடைசி வினாடிகள் இவைதான் என எண்ணியவாறே மெல்ல மெல்ல நீரில் மூழ்க ஆரம்பித்தான். சரி நம் பாடு அவ்வளவுதான் எனத் தங்கச்சாமியும் ஏற்றுக்கொண்டான்.

என்ன ஆச்சரியம், இது கனவா நனவா? அல்லது நாம் செத்து சாமி இடம் போய்விட்டோமா என யோசிக்க முனைந்தான்.

“நாமட்டும் வந்திருக்காட்ட என்ன ஆயிருக்கும்? ஏதோ வெறகு பெரக்க இந்தப்பக்கம் வந்தவ, கிணத்துகுள்ள எட்டிப் பாக்கப்போய் உயிர் பௌச்சீக. இல்லாட்ட என்ன ஆயிருக்கும்? நீஞ்சத்தெரியாத மனுசன் இப்பிடியா தனியா காட்டுக் கிணத்துக்குக் குளிக்க வருவாக?” என்று புலம்பினாள் தண்ணிக்காரி.

ஊரில் அவளை எல்லோரும் தண்ணிக்காரி என்று அழைத்தனர், ஏன் என்று எவருக்கும் தெரியாது. அவள் வீடு ஊரில் ஒதுக்குப் புறமாய் இருந்தது. அவள் வீட்டுக்கு அந்தி மயங்கியபின் ஆண்கள் மட்டும் சென்று வருவார்கள் என்பதை அறிவான் தங்கச்சாமி. சாராயம் குடிக்கச் செல்வதாகச் சொல்லிச் சிலர் செல்வார்கள். அதனால்தான் அவளைத் தண்னிக்காரி என்று அழைத்தார்களோ என்னவோ. ‘இருட்டில தனியாப் போரவன் சாராயம் மட்டுமா குடிச்சிட்டு வருவான்?’ என்று ஒரு சிலர் கேட்க, நமட்டுச்சிரிப்போடு தலை அசைத்தவர்கள் ஏராளம்.

அவளைத் தேடி, பெரும்பாலும் காசு உள்ளவர்கள்தான் போவார்கள். சில சமயம் அவள் வெளியூருக்கும் செல்வாள் என்பார்கள். தங்கச்சாமிக்கு காசும் இல்லை தைரியமும் இல்லை என்பது மட்டுமல்ல, அவன் அப்படிப்பட்ட ஆளும் இல்லை. அவளை எப்போதாவது பார்த்தால் கூட அவன் தன் வழியே போய் விடுவான். ஆனால் அவள் ஒரு பசு வைத்திருந்தாள், அப் பசுவை மேய்க்கும் பொறுப்பை தங்கச்சாமியிடம் விட்டிருந்தாள். ஆகவே மாதம் ஒரு முறை அவள் வீட்டுமுன் நிற்பான், அவள் கொடுக்கும் ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டு பேச்சில்லாமல் வந்துவிடுவான். அவளும் அவனைக் கண்டால் ஒதுங்கி வழிவிடுவாள். அன்று வரை அவ்வளவுதான் பழக்கம், அவர்களிடையே.

தங்கச்சாமிக்குப் பேச்சு வரவில்லை. எப்படி இவளிடம் வந்து, அதுவும் தனியாக மாட்டிக்கோண்டோம், ஒருவேளை எல்லாமே கனவோ என்று யோசித்தவனை, “சரி எழுந்திருங்க வெளிய போவலாம்,” என்ற அவளின் சொற்கள் உலுக்கின. அப்பொழுதுதான் அவன் இன்னும் கிணற்றினுள் படியில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான். மெல்ல மெல்ல என்ன நடந்திருக்கக்கூடும் என்பது அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. ஒருபுறம் தன் உயிரைக் காப்பாற்றிய தேவதையாக அவள் தோன்றினாலும், மறுபுறம் அவள் ஒரு வேசி என்ற உணர்வு அவனைத் தாக்கத்தான் செய்தது. அவள் நீட்டிய கையைப் பிடித்து எழுந்து நின்றான். கிணற்றுச் சுவரினைப் பிடித்தவாறு மெல்ல படி ஏறி வெளியே வந்தான்.

கிழக்கே சூரியன் உதித்து, தூரத்தே பெரிய பூப்போல ஓலைகளை விரித்துத் தரையைவிட்டு மேல் வராத குட்டிப்பனைக்கு, மேல் வந்து விட்டிருந்தது. மைனாக்கள் இரை தேடப் பறந்து சென்றன. அவன் அருகில் ஒரு மைனா குதித்துக் குதித்து நடந்து வந்தது. அம் மைனா தலையைச் சாய்த்து, அதன் மஞ்சள் அலகைக் திறந்து மூடிய விதம், தண்ணிக்காரியையும் தன்னையும் ஒரு சேரப்பார்த்துச் சிரிப்பது போல் தோன்றியது தங்கச்சாமிக்கு.

தான் வெளியே விட்டுச் சென்றிருந்த பிய்ந்த செருப்பைப் பார்த்தவனுக்கு சற்றுமுன் நடந்தவை முழுவதுமாக நினைவுக்கு வந்தன. தக்கசமயத்தில் தண்ணிக்காரி காப்பாற்றியிரா விட்டால், தான் தற்போது சவமாயிருப்போம் என்று உணர்ந்தான். தன் வேண்டுதலுக்கு இணங்க தெய்வம்தான் இவளை அனுப்பியதோ என்று ஒரு வினாடி எண்ணியவன், அவளை ஏரிட்டுப் பார்த்தான். தங்கச்சாமியின் கண்களில் கண்ணீர் கொட்டியது.

“நான்.. நான்.. குளிக்க வரல. சா.. சாவத்தான் வந்தேன்,” என்று குழறினான் தங்கச்சாமி.

அதிர்ந்தவள் அவனை விரைத்துப் பார்த்தாள், “நீங்க எதுக்கு ஐயா சாவணும்? கேடுகெட்ட தொழிலச் செஞ்சிகிட்டு இருக்கிற நானே பூமியில நடமாடயில, உண்மையா தொழில் பாத்து கஞ்சி குடிக்கிற நீங்க ஏன்யா சாவணும்,” என்றாள் தண்ணிக்காரி.

கண்ணீரை மட்டும் பதிலாய் அளித்து அவள் முன் குறுகி நின்றான் தங்கச்சாமி.

“நான் சொல்லுதமிண்ணு வருத்தப் பட்டுகிடாதிக ஐயா. நீங்க செத்துப் போய்ட்டா ஒங்க பொண்டாட்டி பிள்ளய யாரு காப்பாத்துவா? எம் புருசன் ஒங்களப்போல மகராசனா இருந்தா நான் ஏன் இந்த தொழிலுக்கு போவப்போறேன். நீங்க போய்ட்டா ஒங்க பொண்டாட்டி நெலமய நெனைச்சு பாத்தியளா? அந்த மகராசி என் தொழிலுக்கு வரலாமா! நீங்களே சொல்லுங்க ராசா,” என்று கேள்வி கேட்டாள் தண்ணிக்காரி.

‘அவளாலதான் நான் இந்த முடிவையே எடுத்தேன்,’ என்று அவனால் சொல்ல இயலவில்லை.

“சரி, சரி. வாங்க போவம். இனி எனக்கு வெறகு பெரக்க மனமில்ல. ஒங்கள வீட்டுல கூட்டிட்டு போய் விட்டாத்தான் எனக்கு மனசாறும்” என்ற தண்ணிக்காரி வழியைப் பார்த்தாள்.

துண்டால் தலையைத் துவட்டி, பின் அதையே தலையில் கட்டிக்கொண்டு, தன் நாராய்ப் போன பழைய செருப்பை காலில் அணிந்த வாறு, ஈர வேட்டியிலிருந்து நீர் கால்களில் வடிய, முன்னால் நடந்தான் தங்கச்சாமி. அவனை முன்னால் விட்டு, பின்னால் அவள் நடந்தது அவள் வேண்டுமென்றே எடுத்த முடிவு. ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணின் பின்னால் சென்றால் அவனுக்கு மரியாதை அல்ல, என்று நினைத்தாளோ. அல்லது தன்னைப் போன்ற ஒரு பெண்ணின் பின்னால் சென்றால் அவனைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள் என நினைத்தாளோ என்னவோ, அவனைத் தனக்கு முன் போகச் சொன்னாள். அவளின் முன் யோசனையையும் அறிவுத்திறனையும் தங்கச்சாமி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அன்று அவன் தண்ணிக்காரியின் கட்டளைக்கு உடன்பட்டான். அவன் முன்னே நடக்க, அவள் அவன் பின்னால் அவனுக்குப் பாதுகாவலாக நடந்தாள். இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஊருக்குள் இருவரும் ஒருவர் பின் ஒருவர் வருவதைப் பார்த்தவர்கள் ஆச்சர்யப் பட்டார்கள். இவனுக்கும் இவளுக்கும் என்ன என்பதுபோல். திடீர் என்று எதிரே வந்த அமலி அவர்களைப் பார்த்துச் சிரித்தாள். பின் தங்கச்சாமியின் அருகில் வந்ததும் அவன் மட்டும் பார்க்கும் வகையில் கண்ணடித்தாள். தான் செத்துப் பிழைத்தது இவளுக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டு அவளைச் சட்டை செய்யாமல் வீட்டை நோக்கி நடந்தான் தங்கச்சாமி.

தன் வீட்டை அடைந்த தங்கச்சாமி உள்ளே நுழைந்தான், தண்ணிக்காரி படியோரம் நின்றாள். அவளைப் பார்த்ததும் அவன் மனைவி மைதிலி அதிர்ந்தாள். இவனுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று நினைத்தவள், இது என்ன என்பதைப்போல் தண்ணிக்காரியைப் பார்த்தாள்

தண்ணிக்காரி, “அய்யா, கிணத்தில தவறி விழுந்திட்டாக. முங்கிரப்பாத்தாக. நான் காப்பாத்திட்டேன். சரி வீட்டு வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு போலாம்மிண்ணு வந்தேன்,” என்றாள்.

இது என்ன கூத்து, என்று மைதிலி பார்க்க, தங்கச்சாமி தலைகுனிந்து நின்றான். தண்ணிக்காரி தொடர்ந்தாள், “இந்த மனுசனுக்கு மனசு நொடிஞ்சு போயிருக்கு, ஆகையினால இன்ணைக்கு ஒரு நாள் மட்டும் ஊர் மாடு மேய்க்க வேண்டாம். வீட்டுல இருக்கட்டும்,” என்றாள்.

“அப்பம் ஊர் மாட்ட யார் மேக்கது? இந்த மனுசனை நம்பி மாடு வச்சிருக்கவுக கெதி என்ன ஆகும்,” என்றாள் மைதிலி முறைப்பாக.

“நான் மேய்க்கேன், இண்ணைக்கி மட்டும். மனுசர் செத்துப் பௌச்சிருக்காக. மனசு ஆடிப் போயிருக்கும்ல்ல,” என்று பரிவோடு தங்கச்சாமியைப் பார்த்தாள் தண்ணிக்காரி.

‘அதுவும் சரிதான்,’ என்று நினத்த மைதிலி, “சரிசரி, நீ மேச்சா சரி. ஆனா வீட்டுக்குள்ள வரப்பிடாது,” என்றாள்.

“வரலம்மா, வரல,” என்று சொல்லியவாறே தெருவில் இறங்கி நடந்து சென்றாள் தண்ணிக்காரி.

அன்றிலிருந்து தனக்கும் தங்கச்சாமிக்கும் இடையே ஒரு பந்தம் எற்படும் என்று அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top