JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 15 & 16

Uthaya

Member


15

முதலிரவில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று எவரும் புத்தகம் எழுதாத நாட்கள் அவை. எதை எதைச் செய்யக்கூடாது என்று, செல்லையா வாத்தியார்கூட எவரிடமும் சொல்லவில்லை. அதைப் பற்றி அவருக்கே தெரியுமோ என்னவோ, யார் கண்டார்கள்.

அப்படியே புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும் ஐந்தாம் வகுப்பைக்கூடத் தாண்டாத தங்கச்சாமி எப்படிப் புத்தகங்களைத் தேடிப் படித்துப் புரிந்து செயல் படப்போகிறான். சுருங்கச் சொன்னால் தங்கச்சாமி முதல் இரவில் பெயில்.

அதற்காகத் தங்கச்சாமியின் புத்தம் புது மனைவி மைதிலி அவனை மன்னிக்கவே இல்லை. அவள்தான் அழகியாயிற்றே. அவளை மணம் செய்ய தங்கச்சாமி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ஊரறியப் பெரியவர்களே சொல்லி விட்டனரே!

பல பவுன் நகைகளைக் கழுத்திலும் கையிலும் சுமந்து தன் அழகின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டு பெருமித்துடன் திரிந்த மைதிலியும் இளையவள்தான். அவளுக்கு எப்படித்தெரியும் வாழ்க்கையைப் பற்றி? ஆனாலும் அவள் தங்கச்சாமியைவிட புத்திசாலி. எப்படியோ அவனுக்குச் சொல்லிக் கொடுத்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டாள்.

ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது ஏதோ தெய்வ பாக்கியம்தான் எனக் கருதினான் தங்கச்சாமி. இல்லையேல் என்ன நடந்திருக்கும் என எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை அவனால். மூன்று வருடங்களில் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட தங்கச்சாமியின் அய்யா பூரித்துப் போனார். பேரன் பேத்தியை கொஞ்சி மகுத்துவப்பட்டார் (மகிழ்ந்தார்). அப்போதும் தான் வாங்கிய கடன் ஒரு பொருட்டாய்ப் படவில்லை அவருக்கு. ஆனால் அவரால் வட்டியைக்கூட முழுவதுமாகக் கட்ட முடியவில்லை. அவர் என்ன செய்வார், மூன்று வருடங்களாக வானம் பொய்த்துவிட்டது. ‘ஒரு வருசம் செழிச்சுருச்சிண்ணா இந்தக கடன் எம்மாத்திரம்,’ என்று அவருக்கு உறக்கம் வராத இரவுகளில் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வார்.

தன் மருமகளுக்குத் தன் மகனை அறவே பிடிக்கவில்லை என்பது சின்னச்சாமிக்குத் தெரியாது. அவ்வப்போது அவர் தங்கச்சாமியை, “என்னயா, ஒங்களுக்குள்ள, அதான் புருசன் பெண்டாட்டிக்குள்ள, சண்ட சச்சரவு ஒண்ணுமில்லயே,” என்று கேட்டதுண்டு.

தங்கச்சாமி அதுவரை எதையும் அவனுடைய அய்யாவிடமிருந்து மறைத்ததில்லை, ஆனால் இல்வாழ்க்கையில் தனக்கு எற்பட்டுள்ள படு தோல்வியை அவனால் தன் தந்தையிடம்கூடச் சொல்ல இயலவில்லை.

“ஒண்ணும் பிரச்சனை இல்லய்யா,” என்று தலையைக் கவிழ்த்தவாறு சொல்லி விடுவான்.

சின்னச்சாமி, மகன் ஏதோ கொஞ்சம் வெட்கப்பட்டுத்தான் அவ்வாறு தலை குனிகிறான் என்று எண்ணி சிரித்துக்கொள்வார். பகலில் மகனும் மருமகளும் அவ்வளவாகப் பேசிக்கொள்ளா விட்டாலும் இரவில் அவர்கள் அனுசரித்து நடந்துகொண்டால் சரிதான், என்று நினைத்துக்கொண்டார். படுக்கை அறைக்குள் நடப்பதை அவர் எவ்வாறு அறிவார்? சின்னச்சாமியைப் பொறுத்தவரை அவருடைய மருமகள் அவரைச் சரியாகத்தான் நடத்துவதாகப் பட்டது. சரி, மகனுக்கும் மருமகளுக்கும் இடையே ஏதோ சிறு சிறு பிணக்கு இருந்தாலும் போகப் போகச் சரியாகிவிடும் என்று எண்ணினார்.

வானம் பொய்த்ததற்கா கடன் கொடுத்தவன் வட்டியைத் தள்ளுபடி செய்வானா என்ன? சங்கரலிங்கத்தைப் பொறுத்தவரை ஒரு வருடம் வட்டி கட்ட முடியாவிட்டால் அவன் ஒன்றும் குறை பட்டுக்கொள்ள மாட்டான். கட்டவேண்டிய வட்டியையும் முதலோடு சேர்த்துக் கொள்வான். அதற்கு அத்தாட்சியாக அவ்வப்போது கையெழுத்தோ கை ரேகையோ வாங்கிக்கொள்வான். கடன் வாங்கியவர்கள் பேரில் நிலம் கரை இருந்தால் போதும். சங்கரலிங்கம் சின்ன வயதிலிருந்தே கணக்கில் படு சுட்டி. வளர வளர அவன் வட்டியைக் கணக்கிட பேனா பேப்பர் எல்லாம் தேவைப் படவில்லை.

தங்கச்சாமியின் அய்யா, சின்னச்சாமி சிறுவனாய் இருக்கும்பொழுது, அவருடைய அம்மாவைப் பெற்ற சின்னத்தாய்ப் பாட்டி, “ஏ.. சின்னச்சாமி, கடனை மட்டும் லேசா நெனையாத. மோர்க் கடன் முகடு முட்டும்,” என்று கூரையைக் காட்டிச் சொன்னதை அறவே மறந்துவிட்டார் சின்னச்சாமி.

சின்னச்சாமிக்குத் தான் வாங்கிய கடன் இந்த நான்கு வருடங்களில் இரட்டிப்பாகி பத்தாயிரம் ஆகிவிட்டது தெரியாது. அவர் ஏதோ கூட ஐநூறு அறுநூறு கூடியிருக்கும் கட்டிவிடலாம் என்று லேசாக நினைத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரை மகனுக்கு நல்ல பெண்ணைக் கட்டி வைத்துவிட்டார். பேரன், பேத்தி பெற்றுக்கொடுத்து விட்டாள் மருமகள். மகனும் மருமகளும் செம்மையாய்க் குடும்பம் நடத்துகிறார்கள். இந்தச் சுண்டைக்காய்க் கடன் என்ன பெரிசு. ஒரு தடவை பூமி செழித்தால் போதும், வெள்ளாமை நல்லபடி விளைந்தால் ஒரே அடியில் கடனை அடைத்துவிட்டு நிம்மதியாய் இருக்கலாம் என்று நினைத்தார்.

பூமி செழிக்கட்டும் எனக் காத்திருந்த சின்னச்சாமியை அது செழிக்கும் முன்பே, ஒரு மையிடுட்டு வேளையில், அவர் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில், அதே பூமியில் இருந்து வந்த நல்ல பாம்பு ஒன்று கொத்தி விட்டது. தோட்டத்திற்குச் சென்ற தன் அய்யா, இரவு சாப்பிடும் நேரம் கடந்தபின்னும் வராததால், ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எண்ணி, தோட்டத்திற்கு வேகமாய் நடந்தான் தங்கச்சாமி. பாதி வழியில், பாதையை விட்டு இரண்டு பாகங்கள் தள்ளி எதோ கிடப்பதக் கண்ட தங்கச்சாமி, பக்கத்தில் போனவன் அவனுடைய அய்யாவின் பிரேதத்தைக் கண்டான்.

“நல்ல பாம்பு சட்டய களத்தி இருக்குய்யா. இருட்டுல பாத்துப் போய்யா,” என்று தனக்கு அறிவுரை சொன்ன தன் அய்யா, எப்படி இரண்டே நாளில் அவரே பலியானார், என்று விளங்காமல் விம்மி விம்மி அழுதான் தங்கச்சாமி.

சங்கரலிங்கமும் துட்டி கேட்க வந்தான். வீட்டு முற்றத்தில், முன் ஒரு நாள் எல்லோரும் பாய் விரித்து இலை போட்டுச் சாப்பிட்டார்களே, அதே இடத்தில் ஆண்கள் பெரிய கூட்டமாகக் கூடியிருந்தார்கள். முதல் காரியமாக சங்கரலிங்கம் தன் தோளில் கிடந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டான். ஐந்தாறு ஆண்களோடு சிறு வட்டத்தில் அவனும் நின்று, இரண்டு கைகளையும் பக்கத்திலிருந்தவர்களின் தோள்மீது போட்டு, குனிந்து தலையோடு தலை சேர்த்து, “என் அய்யா, என் அய்யா,” என்று அழுதான். அவர்கள் சில நிமிடங்கள் அழுதபின் பார்த்துக்கொண்டு நின்ற ஊர் நாவிதர் அழுபவர்களின் கைகளைத் தொட்டு விலக்கிவிட, அவர்கள் அழும் கடமை முடியவே கைகளை விலக்கிப் பிரிந்தனர். பின் சங்கரலிங்கம், தங்கச்சாமியிடம் வந்து, “அய்யா குடுத்து வைக்கலயே... மிந்தா நேத்துதான் பேசிக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு மனுசர் இல்லையே. என்னத்தப் பேச,” என்ற பேச்சினூடே தன் இரு கைகளையும் தங்கச்சாமியை நோக்கி நீட்ட, தங்கச்சாமியும் அவ்வாறே நீட்ட, இருவரின் கரங்களும் மற்றவரின் கரங்களை இரு வினாடிகள் பற்றிக்கொண்டபின் பிரிந்தன. பின் கண்ணீரைத் தன் துண்டால் துடைத்து விட்டு ஐந்து நிமிடம் கழித்து சங்கரலிங்கம் எல்லோரையும்போல் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டான்.




16



தங்கச்சாமியின் அய்யா இறந்து பத்து நாள் ஆகிவிட்டாலும் அதை இன்னும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை. அவனுடைய ஆத்தாள் இன்னும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.

ஊரார் சின்னச்சாமி இறந்த அடுத்த நாளே பிரேதத்தை மயானத்தில் புதைத்துவிட்டனர். மூன்றாம் நாள் குழிமுழுகிவிட்டு வந்தனர். தங்கச்சாமியை எல்லாச் சடங்குகளுக்கும் முன் நிறுத்தினர் என்றாலும், பொறுப்பை அவனுடைய உறவினர்கள் பார்த்துக்கொண்டனர். சும்மா சொல்லக்கூடாது, தங்கச்சாமியின் மனைவி மைதிலி பொறுப்பாய் நடந்துகொண்டாள். அவள் அவனை அவ்வளவாக அவமதிக்கவோ திட்டவோ இல்லை.

தங்கச்சாமி விரக்தி அடைந்து காணப்பட்டான். அவன் மனைவியும், மற்ற அக்கம் பக்கத்து வீட்டார், உறவினர் என்று பலரும் அவனைத் தேற்றி, அவன் அய்யா விட்ட இடத்திலிருந்து இனி அவன் தொடர்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சொல்லி விளக்கியதில் பயன் இருந்தது. பதினாறாம் நாள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டு வந்த தங்கச்சாமி, அடுத்த நாள் முதல் தன் தோட்டத்திற்குச் சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

அவன் இருந்த சோகத்தில், மாதம் ஒன்று கடந்தோடிவிட்டது கூட அவனுக்குத் தெரியவில்லை. ஒரு நிமிடம் தன் அய்யா இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்று நினைப்பான். பின் அவனை நம்பி இருக்கும் அவன் குழந்தைகளைப் பார்த்ததும் எப்படியாவது வாழ்ந்துதான் ஆகவேண்டும் என எண்ணுவான்.

சரி, எஞ்சிய நாட்களைத் தன் குழந்தைகளுக்காகவாவது எப்படியேனும் வாழ்ந்து விடவேண்டும் என்ற வைராக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்தவனுக்கு ஒரு மாபெரும் பிரச்சனை, சங்கரலிங்கத்தின் வடிவில், காத்திருக்கின்றது என்பது தெரியாது.

சங்கரலிங்கம் கறாராய் வட்டி வாங்குபவன்தான் என்றாலும் உள்ளூர அவனிடம் கொஞ்சம் ஈரம் இருந்திருக்க வேண்டும். இல்லையேல் சின்னச்சாமி செத்த அடுத்த நாளே அவர் தன்னிடம் எழுதிக்கொடுத்த பத்திரங்களோடு அவன் வந்து நின்றிருக்க இயலும். அவன் இறந்தவரின் ஈமைக்கிரியைகள் அனைத்தையும் முடியும் வரை காத்திருந்ததோடு மட்டுமல்லாமல், மேலும் இரண்டு வாரங்கள் காத்திருந்துவிட்டான். இனி அவனை யார் குற்றம் சொல்ல இயலும்?

பத்திரங்களைக் கண்டு வியந்து நின்ற தங்கச்சாமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “என்ன, பத்தாயிரமா?” என்று கண்கள் விரிய அங்கும் இங்கும் பார்த்தவன், மயக்கம் வந்தவன் போல் தரையில் உட்கார்ந்து விட்டான்.

சனிக்கிழமையானதால் செல்லையா வாத்தியார் அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தார். அவரை மைதிலி வழி மறித்து, “சித்தப்பா, ஒரு நிமிசம் எங்க வீட்டுக்குள்ள வந்திட்டுப் போங்க,” என்றாள்.

என்றைக்கும் இல்லாமல் வீட்டுக்குள் அழைக்கிறாளே, சின்னச்சாமி வேறு இறந்துவிட்டாரே, என்று எண்ணியவாறே தங்கச்சாமியின் வீட்டிற்குள் தயங்கிக் தயங்கி நுழைந்த செல்லையா வாத்தியாரை, “வாங்க அண்ணே,” என்ற தங்கச்சாமியின் தாயாரின் வார்த்தைகள் ஏறெடுத்துப் பார்க்க வைத்தன. சுற்றுமுற்றும் பார்த்த செல்லையா வாத்தியார், அங்கே சங்கரலிங்கத்தைக் கண்ட மாத்திரத்திலேயே திடுக்கிட்டார்.

பத்திரங்களைக் கையில் வாங்கிப் பார்த்த செல்லையா வாத்தியார் கண்களைத் துடைத்துக் கொண்டார். சங்கரலிங்கம் கொடுத்த காகிதத்தில் வட்டி, முதல் என்று பிரித்துக் கொடுத்துள்ள தொகைகளை மனதுக்குள்ளாகவே கூட்டினார். “கூட்டிப் பாத்தா பத்துக்கும் மேல வருது,” என்றார்.

சங்கரலிங்கம் அசையாது நின்றான்.

தங்கச்சாமியின் தாயார் அழுகையினூடே சொன்னாள், “கை எழுத்துப் போட வேண்டாம். வாத்தியார் அண்ணங்கிட்ட கேட்டுக்கிடுவோமின்னு சொன்னேன், அவுக கேக்கலயே அய்யா,” என்று தன் கணவனைக் குற்றம் சாட்டினாள்.

‘ஏன் உங்க மகனை அன்னைக்குப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி இருந்தால் என்னை ஏன் கூப்பிடனும்,’ என்று நினைத்ததைச் சொல்ல இயலவில்லை செல்லையா வாத்தியாரால்.

செல்லையா வாத்தியார் பேப்பரும் பென்சிலும் கொண்டு வரச்சொல்லி கணக்குப்போட்டுப் பார்த்தார். வட்டி கூடுதலாக வசூலித்தாலும், சங்கரலிங்கம் ஏமாற்று வேலை ஒன்றிலும் ஈடுபடவில்லை. தப்பாகக் கணக்குப்போட்டோ, அவனுக்குச் சேர வேண்டிய தொகைக்கு அதிகமாகவோ அவன் நோட்டு எழுதி வாங்கவில்லை.

சங்கரலிங்கம், தங்கச்சாமியின் அய்யா தனக்குப் பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று சொன்னதில் தவறு ஏதும் இல்லை. சொல்லப்போனால் தொகை பத்தாயிரத்து நூற்று ஏழு. அவன் ஒரு குத்து மதிப்பான தொகையைச் சொல்லியிருக்கிறான்.

அதைவிட முக்கியமான விசயத்தைப் பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. படித்துப் பார்த்த செல்லையா வாத்தியார் அதன் அர்த்தத்தைப் புரிந்தவுடன் என்ன செய்வது என்று அறியாமல் மௌனமானார்.

சின்னச்சாமி அந்தப் பத்திரதில், ‘நான் வாங்கிய ஐயாயிரம் ரூபாய் கடனுக்கான வட்டியை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டாவிட்டால், வருடா வருடம் அதை முதலோடு சேர்த்துக் கொள்ளலாம். அப்படிக் கூட்டப்பட்ட தொகை, ரூபாய் பத்தாயிரத்தை தாண்டிவிட்டால் என் கிணறு தோட்டம் அனைத்தும் சங்கரலிங்கத்துக்குச் சொந்தமாகும்,’ என்று எழுதி இருந்தது. அதன் கீழ் தன் கையெழுத்தைப் பதித்திருந்தார் சின்னச்சாமி. அதேபோல் இன்னொன்றில் தன் வீட்டை இரண்டாயிரத்திற்கு எழுதிக் கொடுத்திருந்தார்.

முன்போல் வட்டியும் முதலும் நான்காயிரத்தைத் தாண்டிவிட்டால் வீடு சங்கரலிங்கத்திற்குச் சொந்தமாகும் என எழுதிக் கொடுத்திருந்தார். அவருக்குக் கையெழுத்து மட்டுமே போடத் தெரியும், இல்லை எழுதத் தெரியும். அவர் பெருமையாக, “எனக்குக் கையெழுத்துப் போடத் தெரியும். உனக்குப் போடத் தெரியுமா? கையெழுத்துக்கூடப் போடத்தெரியாத முட்டாப் பயல,” என்று மற்றவர்களைக் கேலி செய்வார்.

அவர்தான் இறந்துவிட்டாரே, இனி அவரைப்பற்றிப் பேசி என்ன பயன், ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம் என நினைத்த செல்லையா வாத்தியாருக்கு, என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“சொல்லுங்க சார். படிச்சிகள்ளொ. பத்திரத்தில என்ன எழுதிக் குடுத்திருக்காரு சின்னச்சாமிண்ணு. அவுக குடும்பத்துக்குச் சொல்லுங்க அய்யா. நீங்க எப்பவும் உம்மையத்தான சொல்லுவிய,” என்று செல்லையா வாத்தியாரைப் பார்த்துச் சொன்னான் சங்கரலிங்கம்.

தன் விதியை நொந்து கொண்டார் செல்லையா வாத்தியார். இன்று எப்படி உண்மையைச் சொல்வது? பேசாமல் எழுந்து போய் விடலாமா என்றால், சங்கரலிங்கம் மட்டுமல்லாமல், தங்கச்சாமியோடு, அவன் தாய், அவன் மனைவி மூவரும், ஏதோ செல்லையா வாத்தியார் அவர்களுடைய பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி, அவர்களைக் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில், அவரையே பார்த்தபடி நின்றனர். இவர்கள் பிரச்சனையைத் தீர்க்க மனு நீதிச் சோழன் வந்தால் மட்டுமே முடியும் என எண்ணிய செல்லையா வாத்தியார் திகைத்துப் போனார்.

“என்ன வாத்தியாரய்யா, படிச்சீகளே புரிஞ்சதா, இல்லையா?” என்று செல்லையா வத்தியாரைக் கிண்டல் செய்தான் சங்கரலிங்கம்.

“புரிஞ்சது, புரிஞ்சது. ஓன் திறமைய ஏங்கிட்ட காட்டாத. நீயே சொல்லு,” என்றார் செல்லையா வாத்தியார் காரமாக.

சங்கரலிங்கம் விளக்கிச் சொன்னான். தங்கச்சாமியின் தாயார் மயங்கி விழுந்தாள். விழுந்தவள் எழுந்திருக்கவே இல்லை.

தகப்பனை இழந்த தங்கச்சாமி தாயையும் இழந்தான். வீடு கிணறு நிலம், எனச் சொத்து அனைத்தையும் இழந்தான். இப்படி அனைத்தையும் இழந்தவன், தான் ஏன் உயிர் வாழ வேண்டும் என நினைக்கும் பொழுது அவன் மகன் வீரபாண்டி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “அய்யா... வவுறு பசிக்குதைய்யா,” என்றான்.

தங்கச்சாமி அந்த நொடியில், தன் தொல்லைகள், துயரங்கள் அனைத்தையும் மறந்தான். எப்படி தன் அய்யா தனக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டாரோ, அதுபோல் தானும் தன் குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டான். இனி அவனைப் படைத்த கடவுளே வந்தாலும் அவனை மாற்ற முடியாது.

அன்று முதல் தங்கச்சாமி தன் குழந்தைகளுக்காக வாழ்ந்தான். ‘எத்துன்பம் வரினும். எவ்வளவு அவமானம் வரினும், எத்தனை சோதனைகள் வரினும், என் குழந்தைகளுக்காக நான் உயிர் வாழ்வேன். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வேன்,’ என்று ஒரு சபதம் செய்தான். வார்த்தைகள் அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ, அதன் உள் அர்த்தங்களை அவன் புரிந்து கொண்டான்.

வீடும் கிணறும் நிலமும் தங்கச்சாமியை விட்டு கைமாறிப் போய்விட்டன. அவன் தாயார் அவள் கணவனுடன் போய்ச் சேர்ந்து விட்டாள். அவன் மனைவி மைதிலி தன் நகைகளை ஒரு போதும் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டாள், இல்லையேல் வீட்டை மட்டுமாவது மீட்டிருக்கலாம்.

எல்லாம் இழந்தாலும் அவன் குழந்தைகள், “அய்யா, என்னய்யா நம்மள வீட்ட விட்டு போச்சொல்லுதாக,” என்று அவனைத்தான் கேட்டன.

சங்கரலிங்கம் ஏதோ பெரிய மனதோடு நடந்து கொள்வது போல், “குழந்தைகள் எல்லாம் இருக்கதால, உடனே காலிபண்ணணும்மிண்ணு இல்லை. ஒரு மாதத்துக்குள்ள வீட்ட காலி பண்ணினால் போதும்,” என்றான்.

நிலம் தோட்டம் கிணறு எதுவும் இல்லையே, இனி வேலைக்கு என்ன செய்வது. சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் போய்விடுமோ என்று தங்கச்சாமி பதறிக்கொடிருந்தபோது, ஊர்மாட்டை இருபது வருடத்துக்கும் மேலாக மேய்த்து வந்த அறுபத்து இரண்டு வயதான ஊர்க்காலன் திடீர் என இறந்துவிட்டான்.

ஊர்ப்பெரியவர்கள் கூடிப் பேசியபின், வேலுச்சாமி என்ற பெரியவர் தங்கச்சாமியிடம், “ஊர்க்காலன் இறந்துட்டான். ஊர்மாட்டை மேய்க்க ஆள் தேவைப்படுது. உனக்குப் பிரியம்மிண்ணா நீ அந்த வேலைய ஏத்துக்கிடலாம். எப்பவும் உள்ள சம்பளந்தான். ஓம் முடிவ சீக்கிரமாய் சொன்னால் நல்லது. ஏண்ணா அனேகம் பேருக்கு அவங்க மாட்ட மேய்க்க ஆள் இல்ல, ஆகையினால்தான்,” என்றார்.

தங்கச்சாமி ஒரு நிமிடம் தன் குழந்தைகளைப் பார்த்தான். உடனே வேலுச்சாமியைப் பார்த்து, “நான் இந்த வேலைய ஏத்துக்கிடுதேன். நாளைக்கு காலையில இருந்து ஊர் மாட்டை நான் மேய்க்கென்,” என்று உறுதி கூறினான்.

அன்றிலிருந்து தங்கச்சாமி ஊர் மாட்டை மேய்க்கும் மாட்டுக்காரன் ஆனான்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top