JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 23 & 24

Uthaya

Member


23​

மைதிலி தன் புது சிவப்புக்கல் பதித்த தங்கச் சங்கிலியோடு ஊரை மீண்டும் வலம் வர ஆரம்பித்து ஒரு மாதம் இருக்கும். ஒரு புதன்கிழமை சூரியன் தலைக்குமேலே உச்சியில் இருக்கும்பொழுது, அவள் வீட்டு வாசல்படியில் அமர்ந்திருந்தாள், அப்போது அங்கே சங்கரலிங்கம் உதித்தான். ஒரு நொடி அவள் முகம் வாடிவிட்டது, ஒருவேளை சங்கிலியை வாங்க வந்துவிட்டானோ என்ற பயத்தால் முகம் வேர்த்துவிட்டது. மூச்சு வாங்க, சட்டென்று படியிலிருந்து எழுந்து நின்றுவிட்டாள். சங்கரலிங்கம், அவளுக்காகவே வைத்திருந்த முகம் மலர்ந்த புன்னகையை உதிர்த்தான். “என்ன புள்ள எப்பிடி இருக்க?” என்றான்.

மைதிலி சிரிப்பை வரவழைத்துக்கொண்டு தலையசைத்தாள். அவன் தன்னை முன்போல் பேர் சொல்லியோ, எப்பிடிம்மா என்றோ அழைக்காமல் புள்ள என்று அழைத்ததை அவள் கவனிக்காமல் இல்லை.

“சங்கிலி பிடிச்சிருக்கா?” என்றான் சிரித்துக்கொண்டே.

சங்கிலி நினைப்பு வந்ததும் சிரித்துக்கொண்டே, “ம்ம்..” என்றாள்.

அவளுக்கு உள்ளூரக் கிளம்பிய பயம் இன்னும் தணியவில்லை, எங்கே சங்கிலியைக் கேட்டுவிடுவானோ என்று.

“வெயிலு கொழுத்திது.. யப்பா..,” என்ற சங்கரலிங்கம், கெஞ்சும் குரலில், “கொஞ்சம் தண்ணி குடேம் பிள்ள,” என்றான். மைதிலி உள்ளே சென்று, அவள் சீராய்க் கொண்டு வந்திருந்த எவர்சில்வர் தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்தாள். சங்கரலிங்கம் தன் இரு கைகளாலும் வாங்கிக்கொண்டான். அவ்வாறு வாங்கும் பொழுது அவள் கையையும் தம்ளரோடு பிடித்து வைத்துக்கொண்டான் சங்கரலிங்கம். ஆனால் அவன் அவ்வாறு பிடித்து வைத்துக்கொண்டது ஓர் இரு வினாடிகள்தான் இருக்கும். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு வேளை சும்மா கை பட்டிருக்குமோ, நாம்தான் தவறாகப் பார்க்கிறோமோ, என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கையில், தண்ணீரைக் குடித்து முடித்து தம்ளரை நீட்டுனான். அவள் வாங்கிக்கொண்டாள். இம்முறை நகங்கள் உரசிக்கொள்ளவில்லை.

“நல்லது புள்ள,” என்று புன்முறுவலை அன்பாகத் தந்துவிட்டு வெளியேறினான் சங்கரலிங்கம்.

நல்லவேளை அவன் சங்கிலியைத் திரும்பக் கேட்கவில்லை என பெருமூச்சு விட்டாள், மைதிலி.

சங்கரலிங்கம் மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் உதித்தான். சிரித்தான். தண்ணீர்கேட்டான். அவள் விரல்களை மூன்று வினாடிகள் தன் கைக்குள் வைத்துகொண்டபின் விடுவித்தான். தண்ணீரைக் குடித்துவிட்டுப் போய்விட்டான்.

மைதிலிக்குப் புரிய ஆரம்பித்தது.

என்று அவள் தொழுவில் குடியேறினாளோ, இல்லையில்லை, என்று தங்கச்சாமி அவளைத் தொழுவில் குடிவைத்தானோ, அன்றிலிருந்து அவர்களுக்கிடையே இருந்த கணவன் மனைவி உறவு சுக்கு நூறாக உடைந்து போய்விட்டது. அவர்கள் இருவரும் ஒரே அறையில் படுத்து உறங்கினாலும் அவளுக்கும் தங்கச்சாமிக்கும் இடையில் குழந்தைகள் இருவரையும் படுக்கவைத்தாள். அவர்கள் தனிமையில் அந்த அறையில் இருக்க நேர்ந்தாலும், தங்கச்சாமியை அவள் தொட அனுமதிக்கவில்லை. அவனும் அவள் கோபமாய் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு எந்தவித எதிர்பார்ப்புமே இல்லாமல்தான் வாழ்ந்தான்.

அவளுக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை. கூடிப்போனால் இருப்தெட்டு முப்பது வயதிருக்கலாம். சங்கரலிங்கம் அவள் கைகளைத்தொட்டுப் பேசியதில் அவளுக்கு அருவருப்புத் தோன்றவில்லை. அவள் அருவருப்பெல்லாம் அவள் கணவன் தங்கச்சாமியின் மீதுதான். அவன்தான் தன் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டான் என்று எண்ணினாள். கணவன் மேல் கோபமிருந்தாலும் அவனை விட்டு, முக்கியமாக அவன் ஸ்பரிசங்களை விட்டு, பிரிந்து இருந்தது அவளை என்னவோ செய்தது. அந்த இனம்புரியாத ஏக்கம் அவளை அவன்மேல் மேலும் கோபம் கொள்ளச்செய்தது. முழுக்க முழுக்கக் கையாலாகாதவன் தன் கணவன். ஆகவே அவனைத் தன் கணவன் என்றே மதிக்கத்தேவையில்லை என்றும் எண்ண ஆரம்பித்து விட்டாள்.

போகப் போக அவளுக்குச் சங்கரலிங்கம் தன் மேல் காட்டும் பிரியம் பிடித்திருந்தது. சங்கரலிங்கம் அடிக்கடி வந்தான், தண்ணீர் குடித்தான், எப்போதும் போல. ஒரு சில வாரங்கள் கடந்தபின் சங்கரலிங்கம் பேச்சுக்கு அவள் சிரித்தாள். அவன் அவளின் மணிக்கட்டைப் பிடித்துப் பேசும் அளவுக்கு அவர்கள் நெருங்கிவிட்டார்கள்.

ஒரு நாள், தண்ணீர் குடித்துவிட்டு, “வலம்புரிச் சங்குமாதிரி இருக்கிற உன் அழகான கழுத்துக்குச் சங்கிலி போட்டது மாதிரி, இந்தப் பொன்னான கைகளுக்கு கல்லுவளையல் போட்டா எப்பிடி இருக்கும்,” என்றான் சங்கரலிங்கம்.

மைதிலி சிரித்தாள்.

“வேணுமா, வேண்டாமா?” புன்னகைத்தான் சங்கரலிங்கம்.

சிரித்துக்கொண்டே, சரி என்பதுபோல் தலை அசைத்தாள் மைதிலி.

“என் கையால போட்டு விடவா?” என்று மைதிலியைப் பார்த்தான் சங்கரலிங்கம்.

மைதிலி சிரித்துக்கொண்டே தலை அசைத்தாள். சங்கரலிங்கம் தன் இடுப்பு வேட்டியில் செருகி வைத்திருந்த ஒரு சிறு பையை எடுத்து, அதன் உள்ளிருந்து மூன்று ஜோடிச் சிகப்புக்கற்கள் பதித்த வளையல்களை எடுத்தான். மைதிலிக்குத் தெரிந்துவிட்டது, அவை தான் அணிந்திருக்கும் சங்கிலியோடு சேந்தவைதான் என்று. அவளுடைய கண்கள் இமைக்க மறுத்தன. அவள் சிரித்தவாறே அவனாகத் தன் கைகளை எடுத்து வளையல்களை அணிவிக்கட்டும் என்று நின்றாள்.

மைதிலியின் வலக்கரத்தைத் தன் கைகளில் எடுத்த சங்கரலிங்கம் ஒரு வினாடி தயங்கிவிட்டு, “இப்பிடி வெளிய நிண்ணு போட்டா யாராவது பாத்திரப் போறாக. உள்ள போயிப் போடட்டுமா?” என்றான்.

அவ்வாறு சொன்ன சங்கரலிங்கம், மைதிலியின் பதிலுக்காகக் காத்திராமல் படியேறி அவள் வலக் கையைப் பற்றி மெல்ல இழுத்து அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். சங்கரலிங்கமும் மைதிலியும் வீட்டுக்குள் நுழைந்த பின் பூட்டில்லா அக் கதவு சாத்திகொண்டது.






24

மைதிலி சங்கரலிங்கம், இருவரின் சந்திப்பு வாரம் தவறாமல் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. மைதிலிக்கும் திருப்திதான், தற்போதுதான் அவளுக்கு வாழ்க்கையில் அர்த்தம் இருப்பதாகப் பட்டது. அவள், தன் கணவனுக்குத் துரோகம் செய்வதாகவே கருதவில்லை. மாறாக, தனக்குத் தங்கச்சாமியும் சமுதாயமும் செய்துவிட்ட துரோகத்திற்குப் பழி வாங்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்றே நினைத்தாள். முதலில் அவ்வாறு நினைத்தாலும் நாட்கள் செல்லச் செல்ல, சங்கரலிங்கத்தின் அன்பில் திளைத்த மைதிலியின் மனம் நெகிழ்ந்தது, அவளுக்கு தங்கச்சாமியின் மேல் இருந்த கோபம் குறைந்து அவன் மேல் பரிதாபம் தலையெடுக்க ஆரம்பித்தது.

ஆனால், மைதிலி சங்கரலிங்கம், இருவரின் கூடா நட்பு எதிர்பாராத அளவுக்கு வளர்ந்து வந்தது. மைதிலியைத் தடுத்துக் கேட்கும் துணிவை அறவே இழந்துவிட்டான் தங்கச்சாமி. இருப்பினும் தங்கச்சாமி தன் மனைவியின் செயலால் மிகவும் பாதிக்கப்பட்டான், வெட்கப் பட்டான், உறக்கம் கெட்டான், நிம்மதி இழந்தான், ஏன் அணு அணுவாய் கரைந்து கொண்டிருந்தான். ஆனால் சங்கரலிங்கத்தின் மனைவி வேலம்மாளோ சங்கரலிங்கத்தின் நடத்தைக்கும் தனக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டாள். ஒருவேளை அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது சங்கரலிங்கம் அவன் மனைவிக்கு இட்ட கட்டளைகளில் ஒன்றாக இருக்கலாம். எது எப்படி இருப்பினும், மைதிலி சங்கரலிங்கம் உறவைத் தடுக்க எவரும் இல்லை. எனவே அவர்கள் உறவு சங்கரலிங்கமே எதிபாராத அளவுக்கு ஆலவிருட்சம் போல் செழித்து வளரத் தொடங்கிவிட்டது.

ஆரம்பத்தில் மைதிலியை வசப்படுத்தச் சங்கரலிங்கம் பெரும் முயற்சிகள் எடுக்க வேண்டியதிருந்தது. அதற்காக அவன் யோசித்தான், திட்டம் தீட்டினான், அவளுக்கு நகை நட்டு என்று வாங்கிக் கொடுத்தான். ஆனால் போகப் போக அவன் திட்டம் எதுவும் போடத் தேவையில்லாமல் போய் விட்டது. மைதிலியே தனக்கு என்ன என்ன தேவை எனச் சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

அவன் அவளுக்கு ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி, மை, சீப்பு, துணிமணி போன்றவையெல்லாம் வாங்கித் தந்தாலும் அவள் திருப்தி அடையவில்லை.

“இதெல்லாம் வாங்கியாந்தாப் போதுமா? கண்ணாடியும் சீப்பும் எத்தன நாளைக்கு இருக்கும்? இத வாங்கிக் குடுத்தாத்தானா நான் ஒங்க கண்ணுக்கு நல்லா இருப்பேன்? சரி ஒங்க விருப்பம், வாங்கியாங்க, நான் சீவிச் சிங்காரிச்சுக்கிடுதேன், ஒங்களுக்காக. ஆனால், எனக்குண்ணு ஒண்ணும் தரவேண்டாமா?” என்றாள் மைதிலி.

ஊரையே ஏமாற்றிய, சங்கரலிங்கத்திற்கு மைதிலியின் மனதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை. “சரி, ஒனக்கு என்ன வேணும்,” எண்று கேட்டான்.

“கேட்டா மட்டும் போதுமா. கேட்டா தருவீகளா?” என்றாள் மைதிலி.

பீடிகை பலமாக இருப்பதைப் பார்த்த சங்கரலிங்கம் யோசித்தான்.

“எனக்குத் தெரியும். என் மேல ஒங்களுக்கு உண்மையிலேயே பிரியம் இல்லண்ணு. இல்லாட்ட இப்பிடி ஒரு மாட்டுத்தொழுவில, ஓலைக் குடுசையில, அதுவும் ஒரே ஒரு ரூம்புதான் இருக்கு, அதுல இருந்துக்கோண்ணு சொல்விகளா?” என்றாள் மைதிலி.

சங்கரலிங்கத்திற்கு அவள் எதற்கு அடிப் போடுகிறாள் எனப் புரிந்தது. எனவே அவன் சில நாட்கள் யோசித்தான். அதன்பின் மைதிலியை அவள் கணவனின் மூதாதையர்களின் வீட்டிலேயே குடிவைப்பது என்று அவன் முடிவு எடுத்தான். ஆனால் சங்கரலிங்கத்திற்கு வீட்டை இலவசமாகத் தர விருப்பம் இல்லை. அவன் கல்லில் நார் உறிப்பவனாயிற்றே. ஆகவே தங்கச்சாமி ஐந்தாயிரம் ரூபாய்க் கடனுக்கு வீட்டை வாங்கிக்கொள்வதாக பத்திரம் எழுதிக் கொடுத்தால் அவன் வீட்டைத் தருவதாகச் சொன்னான்.

அடுத்த நாள் மாலை தங்கச்சாமி காட்டிலிருந்து ஊர்மாட்டை ஊருக்குப் பத்திக்கொண்டு வந்து சேர்த்துவிட்டு, சாப்பிட்ட பின், “ஒரு காரியம் பேசணும்,” என்றாள் மைதிலி.

‘என்னடா இது, எப்பவும் இல்லாம நம்மகிட்ட காரியம் பேசணுமிங்காளே,’ என்று நினைத்த தங்கச்சாமி, மைதிலியைப் பார்த்தான்.

“எல்லாம் ஒங்க நல்லதுக்குத்தான்,” என்றாள் மைதிலி.

‘எத்தன நாளா நம்ம நல்லத பத்தி கவலப்பட்டா இவ,’ என்று நினைத்தவன் பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.

மைதிலிக்குத் தெரியும், தங்கச்சாமி பேசாமல் கேட்டுக்கோண்டிருந்தால் பிரச்சனை இல்லை என்று அர்த்தம்.

தங்கச்சாமி நினைத்தான், தான் பேசாமல் இருந்தால் பிரச்சனை இல்லாமல் போய்விடலாம் என்று.

“எல்லாம் ஒங்க நல்லதுக்குத்தான்,” என்றாள் மைதிலி திரும்பவும்.

‘சரி,’ என்பதுபோல் தலை அசைத்தான்.

“நீங்க நெனச்சா நாம நம்ம பழைய வீட்டுக்கே போயிரலாம்,” என்றாள் மைதிலி.

“பழைய வீடுண்ணா,” என்று நெற்றியைச் சுருக்கினான் தங்கச்சாமி.

“அதான், நம்ம முந்தி இருந்த வீடு. ஒங்க பூர்வீக வீடு.”

“அதான் சங்கரலிங்கம் எழுதி வாங்கிட்டானே.”

“இப்பம் அவரு ஒங்க பேருக்கு எழுதிக் குடுக்கமிண்ணு சொல்லுதாரு,” என்றாள் மைதிலி.

“குடுத்தா வாங்கிக்கோ,” என்றான் தங்கச்சாமி விருப்பமில்லாதவன் போல்.

“அதுக்கு ஒங்க கையெழுத்து வேணும்,” என்று சிணுங்கினாள் மைதிலி.

“அவன் குடுத்தா நீ வாங்கிக்கோ. அதுக்கு என் கையெழுத்து எதுக்கு?”

“அவர் வீட்ட, சும்மா எப்புடி எழுதிக்குடுப்பாரு? நீங்க ஐயாயிரம் கடன் வாங்கினதா கையெழுத்துப் போட்டா வீடு நமக்குச் சொந்தம். இல்ல இதே மாட்டுத் தொழுவில மாட்டோட மாடா கிடக்க வேண்டியதுதான்,” என்றாள் மைதிலி சற்றுக் கோபமாக.

“அவன நம்பி எங்க அய்யா கையெழுத்துப் போட்டுத்தான் நாம இந்தத் தொழுவுக்கே வந்தோம்,” என்றான் தங்கச்சாமி.

“சரி இப்பம் ஒங்ககிட்ட என்ன இருக்கு? கையெழுத்துப் போட்டா வீடு. அப்பிடி நாளைக்குப் பிரச்சனைண்ணா மாட்டுத்தொழு. அவரு நம்மள என்ன செய்ய முடியும்? நான் சொல்லத கேளுங்க. பேசாம கையெழுத்துப் போடுங்க. நாம நம்ம வீட்டுக்குப் போயி குடியிருப்போம். அங்க போனபின்ன, வேணுமிண்ணா நீங்க எம் பக்கத்தில படுத்துக்கோங்க,” என்றாள் மைதிலி.

“குடிய கெடுத்தவனே அந்தச் சங்கரலிங்கம்தான். அவன நம்பி ஒரு நாளும் கையெழுத்துப் போட மாட்டேன். இந்த வீட்ட விட்டு வெரட்டினா பஞ்சாயத்து கட்டடத்துலயோ, இல்ல செல்லையா வாத்தியார் மாமா திண்ணையிலயோ படுக்கப் போயிருவேன். கஞ்சிக்கு, மாட்ட மேய்க்கப் பத்துத ஆள்ககிட்ட கொஞ்சம் கஞ்சி ஊத்துங்கண்ணா ஊத்தாமலா போவாக. கையெழுத்து மட்டும் போட மாட்டேன். அந்தச் சங்கரலிங்கத்தால முடிஞ்சதப் பாத்துக்கிடச் சொல்லு,” என்றான் தங்கச்சாமி கோபமாக.

அதற்கு மேல் தங்கச்சமியை வழிக்குக் கொண்டுவருவது இயலாத காரியம் என மைதிலி தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டாள்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top