JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சதுரங்கம் 15

Subageetha

Well-known member
பண்ணிரண்டாம் வகுப்பின் வருஷம் முடியும் வரை பொறுமை காத்த சாதுர்யா கல்லூரி படிப்புக்கு ஸ்ரீ ரங்கம் செல்வதாக தேர்வு முடிந்த அன்றே தன் அம்மா மாலதியிடம் சொல்ல வீடு பூகம்பம் நடக்கும் இடமானது. இத்தனை வருஷங்களில் மன எண்ணங்களையும், புழுக்கங்களையும் மாலதியிடம் சாதுர்யா பகிர்ந்து கொண்டது இல்லை. எப்போதுமே மாலதியிடம் மற்ற குழந்தைகளுடன் தனது மகளை ஒப்பிட்டுப் பார்க்கும் குணமும், அதற்குத் தகுந்த மாதிரி அவளை செதுக்க வேண்டும் என்கின்ற பிடிவாதமும் உண்டு. மாலதியின் பிறந்த வீடும் பெரிய பணக்கார குடும்பம் தான். மாலதியின் ஒரு அண்ணன் திருநெல்வேலியில் பூர்வீக சொத்துக்களை பராமரிப்பதில் இருக்கிறார். இன்னொரு அண்ணனும் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில், நல்ல சம்பளத்தில் இருக்கிறார். புகுந்த வீட்டிலோ, ஏற்கனவே பெரிய அளவில் நிலம், சொத்து
என்று இருக்கும் போதே மாமனார் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். தன் கணவரும் ஐஏஎஸ் அதிகாரி. இதுபோன்று, பெரிய குடும்பத்தில் பிறந்ததும், அதைவிட பெரிய குடும்பத்தில் திருமணம் செய்து வந்ததும், மாலதிக்கு தலையில் கிரீடம் தான். அதை வெளிப்படையாகவும் காண்பிக்கும் வழக்கம் உண்டு.
திருமணமான புதிதில் மாலதி, சற்று தன் அகங்காரத்தை லக்ஷ்மி அம்மாள் இடமும் காட்ட, தாமோதரன் சிரித்தபடியே லட்சுமி அம்மாளை பார்த்துக்கொண்டிருந்தார். லஷ்மி அம்மாள் மாலதியிடம் வீட்டு நிர்வாக பொறுப்பு முழுவதையும் கொடுத்துவிட்டு, தனது கணவரை கூட்டிக்கொண்டு கோவில்களுக்கு சென்று வர ஆரம்பித்து விட்டார். இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாது மாலதி, மாமியாரிடம் சரணாகதி அடைந்து விட்டாள். அதற்குப் பிறகு இலட்சுமி அம்மாளுக்கு பயந்து மாலதி தனது குணங்களை வெளியே காண்பதில்லை, ரங்கனை தவிர. ஏனோ ரங்கனின், பெருமைகள் மாலதிக்கு ஒரு வித ஒவ்வாமையை கூட்டியிருக்கிறது.
மாலதியின் எவ்வித குணங்களாலோ என்னமோ மகள் சாதுர்யா சொல்வதை, காதுகொடுத்துக் கேட்கும் பழக்கம் ஒரு அம்மாவாக என்றுமே அவளுக்கு இல்லை. அத்துடன் குழந்தை சொல்வதைக் கேட்பதற்கு பெரிய அளவில் அவளுக்கு பொறுமை இருந்ததில்லை. வெங்கடேசன் ஆகும் இதிலெல்லாம் தலையிடும் நேரமில்லை.
சமயங்களில் மாலதிக்கு வெங்கடேசனுடன் விழாக்களுக்கு செல்லவேண்டியது வந்துவிடும். அப்போதெல்லாம் சாதுர்யா வீட்டில் தனியாகவே இருந்து விடுவாள். அம்மா -அப்பா இருவரும் வருவதற்கு இரவு நடுநிசி ஆகிவிடும். அதற்குள் மகள் தூங்கி விடுவாள். அந்த வயதிலேயே தன்னை தானே கவனித்துக் கொள்ளவும், செதுக்கி கொள்ளவுமான நிலைமையில் இருந்தாள் பெண்.

வெங்கடேசனுக்கோ, அலுவலக பணிகள் அதிகம். மகளுடன் இரண்டு வார்த்தை சிரித்து பேசுவதற்குள் பத்து முறை அவரது அலைபேசி அழைக்கும். அதேபோல்,சாதுர்யா படிக்கும் இடமும் வேறுவகை.
கண்மூடித் திறப்பதற்குள், கொஞ்சம் அசந்து இருந்தால்,கூட படிப்பவர்கள் இவளை ஏதாவது விபரீதத்தில் மாட்டிவிடும் நிலைமை. போதை மருந்து நல்ல புழக்கத்தில் இருந்தது அவளது பள்ளியில்.ஆனாலும் அங்கு உடன் பயிலும் யாரும் இவற்றை கண்டுகொள்ளவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் சொல்லவும் இல்லை. சாதுர்யா உட்பட.

இவளுக்கும் நடப்பவையெல்லாம் தெரிந்திருந்தாலும் அப்பாவிடம் கூட சொல்ல முடியாது. சொன்னாலும் பெரிய அளவில் எதுவும் மாற்றம் இருக்காது. மாறாக அவள் அப்பா, இதிலிருந்தெல்லாம் ஒதுங்கியிருக்க பழகு என்று ஒருவேளை உபதேசம் செய்யக் கூடும். இங்கு இதெல்லாம் சகஜம் என்ற மனோ நிலைக்கு வந்து விட்டாள் சாதுர்யா.பெரிய பெரிய அரசியல்வாதிகளின் வாரிசுகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் குழந்தைகள் என்று அந்தப் பள்ளிக்கூட சூழ்நிலையே வேறு மாதிரி. வெளி நபர்களுக்கு அந்த நிலையை பற்றி சொன்னால்
புரிய போவதில்லை.
கல்லூரி வரை வந்துவிட்டோம்! இத்தனை வருஷங்களாக அப்பா அம்மாவிற்காக என்று இங்கு தில்லியில் இருந்தது போதும். இனியாவது எனது வாழ்க்கையை எனது இஷ்டப்படி வாழ்கிறேனே என்று அவள் மனம் அடம்பிடித்தது. இன்னொரு விஷயம்,ஏதோ அமெரிக்கா போன்ற நாடாக இருந்தாலும் தைரியமாக கிளம்பி விடுவாள். இத்தாலி என்பது அவளுக்கு வேற்று கிரகம் போல் தோன்றியது. சுத்தமாக அங்கு செல்ல அவளுக்கு இஷ்டமில்லை. அப்பா சென்றிருக்கிறார் என்றால் அது அவர் பதவியின் கட்டாயம். எனக்குத்தான் இங்கு ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீடு இருக்கிறதே என்னும் அவ்வளவு யோசனை ஓடியது. அந்த யோசனை நீண்டு வயலூரில் வீட்டில் ரேழியில் போய் நின்றது. அங்குத் தூணில் ரங்கன் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

மாலதியோ, 'உன்னை இங்கு விடவே மாட்டேன். நீ கட்டாயம் என்னுடனும் அப்பாவுடனும்தான் இருக்க வேண்டும். கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டு மரியாதையாக கிளம்பும் வேலையை பார் என்ற ஒற்றைக் காலில் நின்றாள்.

அன்று இரவே சாதுர்யா, தன் அப்பாவிடம் பேச அவரோ, இரண்டொறு நாளில் யோசித்து சொல்வதாக சொல்லி வைத்து விட்டார். அவருக்கு மகள் பக்க ஞாயங்கள் புரியாமல் இல்லை. ஆனால், ஒருமுறை மகளை இங்கே கூட்டி கொண்டு வந்து விட்டால், அவளை எப்படியாவது ஐரோப்பிய நாடுகள் எதிலாவது நிரந்தரமாக தங்க வைத்து விடலாம் என்ற மாலதியின் யோசனையையும் மறுப்பதற்கில்லை. இரண்டாம் நாள் தனது தந்தைக்கு அழைத்துப் பேசிய வெங்கடேசனிடம், தாமோதரன்,' உன் மகள் வளர்ந்து விட்டாள். அவள் கூற்றுக்கும் மதிப்பு கொடுக்க பழகு வெங்கடேசா' என்றார்.
சரி எப்படியாவது மாலதியை சமாளிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் வெங்கடேசன். மூன்று வருடம் இங்கேயே இருந்து விட்டு, பிறகு பணி நீட்டிப்பு கிடைத்தால் தொடர்ந்து பணி செய்வது இல்லை என்றால், வேலையை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று விடலாம். இருக்கவே இருக்கிறது பூர்வீகத் தொழில் விவசாயம். அப்பாவுக்கு பிறகு, தம்பி விவசாயத்துறைக்கு வருவான் என்ற நம்பிக்கை வெங்கடேசனுக்கு இல்லை. வெங்கடேசன் படித்ததும் எம்எஸ்சி விவசாயம்தான். அவருக்கு அப்பா வழியில் தானும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் பரிட்சை எழுதி வெற்றி பெற்று இந்த வேலைக்கு வந்துவிட்டார். அன்று தாமோதரன் தன் மகனின் ஆசைகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. அதே நிலையை இன்று உன் மகளிடம் நீ காட்டு என்கிறார் தாமோதரன். யோசித்து பார்த்தால் மகள் எங்கும் ஹாஸ்டல் செல்வதாக எல்லாம் சொல்லவில்லையே, தாத்தா பாட்டியுடன் இருக்கிறேன் என்றுதான் சொல்கிறாள் என்று, தன்னை தானே சமாதானம் செய்து கொண்டார் வெங்கடேசன். ஆனால் பின்னாளில் அவரது இந்த முடிவுக்காக, அவர் வருந்தி அழ வேண்டியது வரும் என்றோ, மாலதி வெங்கடேசனின்
சட்டையை பிடித்து கேள்வி கேட்பாள் என்றோ தெரிந்திருந்தால் நிச்சயம் அவர் தனது மகளின் பிடிவாதத்திற்கு செவிமடுத்து இருக்கமாட்டார். யார் எவ்வளவு சொன்னாலும் எழுதியது விதி. அதை அழித்து எழுதும் எவராலும் முடியாது.

ஒருவழியாக, மாலதி கிளம்பும் நாள் வரை சாதுர்யாவின் முடிவை எதிர்த்து பார்த்தாள். மாமியார் மாமனாரிடம் சாதுர்யாவுக்கு புத்தி சொல்லுமாறும் கேட்க அவர்கள் இருவரும் மறுத்து விட்டார்கள். பேத்தியின் முடிவுக்கு அவர்கள் இருவரின் ஆதரவு பரிபூரணமாக இருந்தது.
மாலதியின் அமெரிக்காவில் இருக்கும் அண்ணனும் சாதுர்யாவுக்கு அழைத்து,
வேண்டுமானால் அமெரிக்காவில் வந்து படிக்கிறாயா, ஏற்பாடுகள் செய்யவா என்றும் கேட்டு பார்த்து விட்டார். ஆனால்,சாதுர்யா எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. முதன்முதலில் பிடிவாதத்துடன், தான் நினைத்ததை சாதிக்க தனது முதல் அடி எடுத்து வைத்தாள் சாதுர்யா. இந்த அடிகள் அவளை எதுவரை கொண்டு சென்று அமர செய்யப்போகிறது என்பதெல்லாம் போகப்போக தெரியும். ரங்கனும் தனது அடுத்த நிலைகளுக்காக தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறான்.

பெண் நினைப்பதெல்லாம் நடக்குமா? இல்லை ஆண் மனதினை நம்மால் பூத கண்ணாடி வைத்துப் பார்க்க முடியுமா?
***************************************************************************************

உமா சொன்ன விஷயங்களை யோசித்து பார்த்த ரத்னாவுக்கு 'தான்'எப்படி சங்கரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் ஷங்கர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதும் தெளிவாகப் புரிந்தது.
நல்லவேளை இன்று உணவு பரிமாறும்போது சாந்தா கை கொடுத்து உதவினாள்.
இல்லாவிட்டால் சாப்பாட்டு பாத்திரத்தை கீழே போட்டு இருந்திருப்பேன். அத்தான் தான் என்ன நினைத்திருப்பார், என்று ஒவ்வொன்றாய் நினைத்து வருந்தினாள்.

கண் மூடி கிடந்தாள் உமா. ஆனால் அவளது மூளை உறங்கவில்லை. அவளது என்ன அலைகள் முழுவதும் குருபரன் மட்டுமே!

குரு திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து கண்ட பழக்கவழக்கங்களையும் சற்றே தூர நிறுத்தியிருந்தான். அவனுக்கு உமா என்ற பெண்ணின் மீதான போதை இறங்கினால் தான் மற்றவை பற்றி யோசிக்கக் கூடும். ஆனால், அதிசயத்தக்க வகையில் அவன் நினைவு அடுக்குகளில் ரத்னா பற்றியோ சாந்தா பற்றியோ எந்த யோசனையும் ஓடவில்லை. அவன் உமா பக்தனாகி விட்டிருந்தான். அவளை உரசி பார்த்த தருணங்கள், அவள் ****அழகை லேசாக பட்டும் படாமலும் தடவிய பொழுது அவள் நெளிந்து நகர்ந்து அமர்ந்ததும் அவளின் முக கோவச் சிவப்பு அவளின் சந்தனநிறத்திற்கு இன்னும் நிறத்தைக் கூட்டி காட்டியதும், அவன் இரவுகள் முழுவதும் நரகமாக்கின. இரண்டு முறை வேறு பெண்களுடன் கூடி களித்திட முயன்ற போதும் உமாவின் கன்னத்தில் இவள் எனக்கே சொந்தம் என்று முத்தமிட்டு அமர்ந்திருக்கும் கன்னப் பருக்கள் அவனை பார்த்து கேலி செய்வது போல் தோன்றும் உணர்வு, அவனை கோபம் கொள்ளச் செய்ய, காம உணர்வுகள் வடிந்தவனாக
மீண்டும் வேறு பெண்களிடம் போவதை தவிர்த்தான். அவன் உடலின் அணுக்கள் ஒவ்வொரு நொடியும் உமாவை தேட,
வீட்டில் இன்று திருமணம் ஏன் இவ்வளவு தள்ளிப் போடுகிறீர்கள்? நீங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள சொன்னதனால் தானே ஒப்புக்கொண்டேன். அப்படி என்றால் உங்கள் பொறுப்பு என்ன, விரைந்து திருமணத்தை நடத்துவது தானே? என்று தன் அம்மாவிடம் சென்று சண்டை போட்டான்.
அருணாச்சலம் அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றுவிட்டார். மகனுக்கு திருமணம் செய்து வைப்பது என்ற பேச்சு அவருக்கு உவப்பாக இல்லை. அன்னபூரணியின் பிடிவாதம் தானே அவனுக்கான இந்த திருமணம். மற்றபடி அருணாச்சலத்தை பொருத்தவரை, குருவுடன் செய்து கொள்ளும் திருமணமானது அந்த பெண்ணிற்கு நரக வாழ்வு தான். இதிலெல்லாம் அவருக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இன்றுவரை அன்னபூரணியை தவிர அருணாச்சலம் வேறு ஒரு பெண்ணை ஏறெடுத்து பார்த்தது கிடையாது. ஆனால் மகனோ அதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறான்.
குருக்கு கல்யாண யோகம் கூடி வர இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று ஜோசியர் சொன்னதாக சொன்னாள் அன்னபூரணி. இல்லாவிட்டால் திருமணம் முடிந்தவுடன் குருவின் உயிருக்கு ஆபத்தாம். அத்தோடு, 'வேறு பெண் சேர்க்கை வேண்டாம் குரு... ஏடாக்கூடமாய் ஏதாவது ஆகப்போகுது 'என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்று விட்டாள் அன்னபூரணி.

தாய் அறியா சூல் ஏது? மகனைப் பற்றி நன்கு அறிந்ததானால் தான் இப்படி சொல்ல வேண்டியதாயிற்று. குருவாக தன் தாய் இவ்வாறு சொன்னதிலிருந்து உயிர் பயம் வந்துவிட்டது. அதனாலும் வேறு பெண்களை நாடிச் செல்வதில்லை.
இன்னும் உமா வைத்திருக்கும் வேண்டுகோளா இல்லை நிர்பந்தமா என்று சொல்லத் தெரியவில்லை, ரத்னாவின் திருமணம் முடிந்தால் தான் என் திருமணம் என்று அவள் சொன்னதையோ ரத்னாவின் திருமணம் இன்னும் நான்கு மாதங்கள் கழித்துதான், என்றோ குருவிடம் வீட்டினர் யாரும் சொல்லவில்லை. சிவனும் கூட தினமும் வேலைக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். அவரது நடத்தையில் கூட எந்த வித்தியாசமும் இல்லை. வழக்கம் போல அந்த வீட்டின் கணக்குப்பிள்ளைதான் அவர்.

அன்னபூரணி சிவனிடம் எவ்வளவோ முறை வேலையை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டாலும் கூட, திருமணம் முடிந்து உமா இங்கு வந்துவிட்டால் தன் மகளை தினமும் பார்க்கலாமே, என்ற தவிப்பு சிவனின் மனதிற்குள்.
ஆனால் இவற்றையெல்லாம் அவர் வாய்விட்டு அன்னபூரணியிடம் கூட சொல்ல முடியாது. குருபரனோ, சிவனிடமே உமா பற்றி விசாரிக்கிறான். ஆனால் அவரிடம் அவனுக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆனாலும் சிவனுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இதெல்லாம் அவருக்கு பல வருஷங்கள் பழகிப்போன ஒன்று தான்.ஒருவகையில் அவன் நடவடிக்கைகள் கொஞ்சம் ஒழுங்கு பட்டிருப்பதாக தான் சிவனுக்கும் தோன்றுகிறது.
உமா திருமணம் முடித்து விட்டு வந்து விட்டால் முழுமையாக திருந்தி விடுவான் என்றும் அவர் மனம் கணக்குப் போடுகிறது.
சென்னை சென்றுவிட்டு வந்த பிறகு அருணாச்சலத்தின் போக்கு இன்னும் சற்று மாறி இருக்கிறது. அவருக்கு இந்த முறை எம்எல்ஏ சீட்டு தருவதாக மேலிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறது. ஒருவேளை அவர் எம்எல்ஏ பதவியில் வென்றால் அவருக்கு அமைச்சர் பதவியும் உறுதி. அந்த அளவிற்கு செல்வாக்கான மனிதர் ஆகிவிட்டார் அருணாச்சலம். மிக குறுகிய காலத்தில் இத்தனை பெரிய நிலைக்கு வருவது அவ்வளவு சாதாரணம் அல்ல. இவருடன் நண்பராக பழகி வந்த ராமேஸ்வரத்திற்கு கூட இவரைப் பார்த்து சற்று பொறாமை வந்துவிட்டது. அதேபோல் அருணாச்சலம் தனது தொகுதியில் மட்டும் இல்லாமல், சுற்றியுள்ள தொகுதிகளிலும் செல்வாக்கானவராக இருக்கிறார். காரணம் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் அவருக்கு நிலங்கள் இருக்கிறது. தோப்புகளும் உண்டு. அவரது கை தாராளம். என்னதான் குரு தவறுகள் செய்து கொண்டிருந்தாலும் கூட, இப்போதெல்லாம் அந்த தவறுகளை மூடிமறைக்கும் விஷயங்களையும் அருணாச்சலம் சிவனை கொண்டே செய்கிறார். பெண்ணைப் பெற்றவறும் பணிந்து போகிறார்.
தனது மகள் வாழப்போகும் இடமென்று சிவனும் வாயை திறக்காமல் எல்லாவற்றுக்கும் உடன்படுகிறார். ஆனால் அவர் அறியாதது ஒன்று உண்டு. அவர் இன்று மூடி மறைக்கும் பல விஷயங்கள், பின்னாளில் அவருக்கு பூதாகாரமான ஒன்றாக முடியக் கூடும். இப்போது செய்யும் பாவ கணக்கை எப்போது அவர் நேர் செய்ய முடியும் என்று தெரியவில்லை.
கடவுள் மிகவும் கண்டிப்பானவர். சிவனுக்கு மட்டுமல்ல, இவ்வாறான செயல்களில் ஈடுபடும் எவருக்குமே கடுமையான தண்டனைகள் உண்டு. தவறுகள் செய்பவரை விட அதை மூடிமறைக்க பார்ப்பவர்க்கு தான் பங்கு அதிகம். இன்று குரு மூலம் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்-
-கிறார்கள். அவர்களுக்கு செட்டில்மெண்ட் செய்வது அதுவும் வெளி உலகத்திற்கு தெரியாமல், சிவனது பொறுப்பாகி விட்டது. நாளை இவரது சொந்த மகளே இவரது இந்த செய்கைகளை ஒப்புவாளா? என்றேனும் உமாவினால் தனது அப்பாவை மன்னிக்க இயலுமா?
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top