JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சதுரங்கம் 9

Subageetha

Well-known member
சிவனின் நிர்பந்தத்தின் பெயரில் அவரது மொத்த குடும்பமும் குருபரனை ஏற்க தயாராகிவிட்டது. மணப்பெண் உமா முகத்தில் பெயரளவுக்கு கூட சிரிப்பில்லை . திருமணத்திற்காக அந்த வயதில் ஏற்படும் ஆயிரம் கனவுகள் வெறும் கானல் நீர்தான் என்பது எவ்வளவு பெரிய துக்கம். அவளால் அவளது ஏக்கங்கள் கடைசி வரை வெறும்
ஏக்கங்களாகவே இருக்க போகிறது என்பதில் ஜீரணிக்க இயலாத துன்ப சுழலில் சிக்கி தவித்தது அந்த சின்னபறவை.
மாமியார் அவளுக்காக கொண்டு வந்து கொடுத்த அந்த கற்கள் பதித்த ஆரமோ பட்டுப்புடவையோ அவளுக்கு சந்தோஷத்தை தர போதுமானதாக இல்லை. ஒழுக்கமும் உயர்ந்த குணமும் கொண்டவனைதான் கணவனாக ஏற்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு குரு வரம் அல்ல... நிச்சயம் சாபம்தான்.

தனது மூத்த மகள் வைத்த நிர்பந்தத்தின் பேரில் தனது இரண்டாவது மகள் ரத்னாவுக்கு மணமகனை தேடத் தொடங்கினார் சிவம்.
பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு தன்
அக்கா போல தானும் கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ரத்னாவுக்கு தந்தை திருமணத்திற்கு பார்ப்பதும், அதுவும் அக்கா வைத்திருக்கும் நிர்பந்தத்தின் பெயரில் என்பதும் மனதளவில் பெரிய அடியைக் கொடுத்தது. அது ஆசை நிராசையாக போகும்போது ஏற்படும் வலி அவளிடம். அதுவும் தன்னை நன்றாக அறிந்து கொண்டிருந்த அக்காவே தனது விருப்பத்தை மண்ணள்ளிப் போடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்?
கல்வி என்பதும் பெண்ணின் உரிமை அல்லவா?

"உண்ணும் உணவு, பருகும் நீர்,சுவாசிக்கும் காற்று, மனிதன் நடமாடும் பூமி,வசிக்கும் கூரை இது போல் அல்லவா கல்வி". அந்தக் கல்வியைப் பயில தடுப்பது எவ்வளவு பெரிய பாவம்?
பெண்கல்வி என்பதை சமீப காலங்களில் தான் முன்னெடுத்து மிக முக்கிய ஒன்றாக யோசிக்க பட்டு வருகிறது. இந்த காலத்தில் பெரும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மரியாதை இல்லை. அப்படி இருக்கும் பொழுது வெறும் பனிரெண்டாம் வகுப்பு தனது வருங்கால வாழ்க்கைக்கு எவ்வாறு போதும்?
பெண் வேலைக்கு செல்கிறாளா இல்லையா என்பது வேறு. ஒரு பெண் கற்கும் கல்வி அவளை மட்டுமல்ல, அவளுக்கு பிறக்கும் குழந்தைகள், அவர்களது வருங்காலவாழ்க்கை, அவர்களுக்கு பிறக்கும் சந்திதி என்று தலைமுறை தலைமுறையாய் முன்னேற்றும் அற்புத மருந்து. அப்பேர்ப்பட்ட கல்வியை கற்க விடாமல் தடுத்தது அவள் மனதில் பெரும் புயலை கிளப்பி விட்டிருந்தது. நேரே தன்
அக்காவிடம் போய், அதான் உனக்கு பெரிய இடத்து சம்பந்தம் அமஞ்சு வந்திருக்குல்ல?
நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே ? என் வாழ்க்கையை எதுக்கு கெடுக்குற? உனக்கு மட்டும் டிகிரி வேணும்... பெரிய பணம் வேணும். நாங்க எல்லாம் அன்னக்காவடியாவே இருக்கணுமா என்று சண்டை பிடித்தாள். மிகவும் பொறுமையாக, தான் ஏன் இவ்வாறு யோசித்தோம், இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று தன் தங்கைக்கு எடுத்துச் சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் உமா. சொல்லும் எதையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை ரத்னா. தன் வாழ்க்கை தனது இஷ்டப்படி செல்லாமல் இன்னொருவர் ஆட்டி வைக்கும் கைபொம்மை ஆகிப் போனோமே என்று அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த உமா,' எனக்கு பாத்திருக்குறவன் பச்சப் பொறுக்கி. என்னய கல்யாணம் பண்ணி உன் மேல கைய
வெச்சுருவானோன்னு
தான் இந்த மாதிரி முடிவு செஞ்சேன். உன்னை காப்பாத்த வேற என்ன வழின்னு எனக்கு புரியலடி என்று அழ தொடங்கிவிட்டாள் உமா.
அக்கா சொல்வது மனதிற்குள் சாட்டை போல் வேகமாக அடிக்க, தன்னுணர்வு மரத்த நிலையில் சிலையாகிப் போனாள் ரத்னா. சின்னப் பெண்ணுக்கு இதற்கு மேல் எப்படி புரிய வைப்பது என்பது உமாவுக்கு தெரியவில்லை. அவள் கண்கள் உள்ளுக்குள் இருக்கும் ரணத்தை கண்ணீர் மூலம் காட்டியது.வேறு வழி இன்றி சூழ்நிலை கைதியாகி தானும் சிக்கி தன் தங்கையையும் இவ்வளவு விரைவாக புது வாழ்க்கை முறைக்கு தயார் செய்வது அவளுக்கு வருத்தம் உண்டு.
படிக்கும்போது ரத்னாவுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுவது உமாவுக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால் பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதை விட கற்பு முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
'ஏழை வர்க்கத்தின் பெண்களுக்கு இருக்கும் ஒரே பெரிய சொத்தும் இது ஒன்றுதான். இங்க பெண்களுக்கு ஏதாவது ஒரு குற்றம் நடந்து விட்டால் குற்றம் புரிந்த ஆணை யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. பெரும்பாலும் அந்த ஆணை மயக்கியவள் பெண் என்ற பாவத்தில் தான் இந்த சமூகம் பார்க்கிறது. அதிலும் ஆண் பணக்காரனாக இருந்து, பெண் பணஅளவில் பெரிதாக இல்லை என்றால் பணத்திற்காக தான் இவ்வளவு தூரம் நடந்து கொண்டது இந்த பெண் என்ற முத்திரையை குத்தி விடுவார்கள். ஏழையின் சொல் அம்பலம் ஏறாது. யுக யுகமாய் நடந்து கொண்டிருப்பவை இவைதான். ஆணின் தவறுகளுக்கு சிலுவை சுமப்பவள் பெண். நாளையே குருவினால் ரத்னாவிற்கு ஏதேனும் ஆகிவிட்டால் அந்த பாவ சுமை கண்டிப்பாக ரத்னாவின் மீது ஏறும். இதற்கு தான் என்றும் அனுமதிக்கப்போவதில்லை,என்றெல்லாம் தன் மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தாள் உமா.

ஒருவாறு அக்கா சொன்னதை உள்ளுக்குள் கிரகித்து அவள் சொல்லில் இருக்கும் நியாயம் புரிந்து, தன்னுணர்வு பெற்றவாளாய்,' சரிக்கா நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். அப்பாவை மேற்கொண்டு மாப்பிள்ளை சொல்லு ' அடுப்படியில் வேலையை செய்ய சென்றுவிட்டாள். திருமணம் என்ற ஒன்று நிச்சயம் ஆகிவிட்டால் திடீரென்று வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து பழக முடியாது. அக்காவின் அது போல் தனக்கும் பெரிய இடத்தில் அமையும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அக்கா சொல்வதை பார்த்தால், பணம் இருக்கும் அளவிற்கு அக்கா திருமணம் செய்துகொள்ள போகும் அந்த நபருக்கு குணம் இருக்காது.
தன்னை கல்யாணம் செய்து கொள்ள வரும் மனிதனாவது நல்ல குணத்துடன் இருக்கவேண்டும். பணம் இன்று வரும் நாளை போகும். குணம் இல்லாமல், பெரும் வருமானம் மட்டும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாது என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு தன் மனதை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் ரத்னா.

சிவன் இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு உள்ளூர தான் செய்வது மிகப்பெரிய தவறு என்ற எண்ணம் முதன்முறையாக காலம் கடந்து உதித்தது. ஆனால் அவ்வளவு பெரிய இடத்தில் இருந்து வந்து ஒப்பு தாம்பூலம் வரை சென்று விட்ட பிறகு பின்வாங்க முடியாது என்பது நிதர்சனம். ஏற்கனவே பெண்ணை பெற்றவராகவும், இன்னொருபுறம் உண்மை விசுவாசியாகவும் தவித்துக்கொண்டிருந்த மனம் இப்பொழுது நொந்து போய்க் கிடந்தது. அவர் ஏதோ ஒன்றை நினைத்து இந்த முடிவு எடுத்து விட்டார். இனி நடக்கப் போவதையாராலும் தடுக்க முடியாது. இதுபோன்ற ஒரு அவசர முடிவுக்கு, பின்னாளில் அவர் எவற்றையெல்லாம் விலையாக கொடுக்கப் போகிறார் என்பதுபடைத்தவனுக்கே வெளிச்சம்.

திருச்சூரில் இருக்கும் தன் தங்கையின் மகன் சங்கரன் பத்தாம் வகுப்பு மட்டும் முடித்துவிட்டு இப்போது லாரி ஓட்டி கொண்டிருப்பதாகவும், சொந்தமாக மூன்று
லாரிகள் வைத்திருப்பதாகவும் போன முறை அவரது தங்கை திலகம் பேசும்போது கூறியிருந்தாள். கூடவே கொசுறாக அவனுக்கு வரன் பார்ப்பதாகவும் கூறியிருந்தாள். இருபத்தி மூன்று வயது ஆகும் தனது தங்கை மகன் சங்கரனுக்கு ரத்னாவை கொடுப்பதற்கு பேசலாம் என்று யோசித்து வைத்திருந்தார் சிவம். சங்கரனுக்கும் உமாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் இல்லை. இந்த வயது பிரச்சனை மட்டும் இல்லை என்றால் முதலிலேயே உமாவிற்கு சங்கரனை மணமுடிப்பது பற்றி பேசி இருந்திருக்கக்கூடும். உமாவின் தலையெழுத்து அவளை விடவில்லை என்று தான் கூற வேண்டும்.


ரத்னாவை தன் திருமணத்திற்கு முன்னதாகவே திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி விடும் அவசரத்தில் இருக்கிறாள் உமா. எப்படியும் மற்ற இரு பெண்களுக்கும் ஆகும் கல்யாண செலவை கூட அருணாச்சலம் வீட்டில் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளதால் திருமண செலவு பற்றிய பிரச்சனை ஒன்றுமில்லை. திருமண ஏற்பாடுகளை விரைவாகவே செய்யலாம். மாப்பிள்ளை அமைவது மட்டும் தான் இங்கு பிரதானம். சங்கரன் தவிரவும் நிறைய வரன்களை சிவன் சுற்றுவட்டாரத்தில் பார்த்து வைத்திருக்கிறார். ஒன்று இல்லை என்றால் வேறொன்று அமைய வேண்டும். ரத்னாவின் பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து, விடுமுறையில் திருமணத்தை வைத்துக் கொண்டால், உமா விற்கும் அதேசமயம் திருமணத்தை முடித்து அனுப்பி விடலாம். சாந்தாவிற்கும் பள்ளிவிடுமுறை சமயம் ஆதலால் இரண்டு திருமணங்களில் மகிழ்ச்சியாக கலந்து கொள்ளவும் முடியும். அதிக விடுப்பு எடுக்கும் தேவை இராது.திருமணத்திற்கு தேவையான சமயம் உதவி புரியவும் முடியும், என்றெல்லாம் கணக்கிட்டு வைத்திருக்கிறார் சிவன்.

திலகாவும் அவரது கணவரும் நாலைந்து நாட்கள் திருச்சூரில் இருந்து பூங்குவளை வந்து தங்கியிருந்துவிட்டு ரத்னாவை பற்றி அறிந்துகொண்டு சென்றார்கள். ரத்னாவின் நடத்தை அவர்கள் இருவருக்கும் பரம திருப்தி. நிச்சயம் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தன் மகன் நிம்மதியாக வாழ்வான் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து இருந்தாள் ரத்னா.

பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து திருச்சிக்கு லாரியில் லோடு எடுத்துக்கொண்டு வந்த சங்கரன் அப்படியே பூங்குவளையில் உள்ள தனது மாமன்- அத்தை வீட்டுக்கும் சென்று ரத்னா வையும் பெண் பார்த்துவிட்டு வந்தான். அவன் தோள் வளைவு அளவிற்கு வளர்ந்திருக்கும் அந்த சிறு பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவளுடன் தனியே பேசும்போது ' இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமா? படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கல்யாணம் செஞ்சுக்க வருத்தமாக இல்லையா?' என்று தன் மனதில் தோன்றியவற்றை
எல்லாம் கேட்டான்.
அவன் அக்கறையாக கேட்டவை ரத்னாவின் மனதிற்கு இதமாக தான் இருந்தது. அவனின் கண்கள் பார்த்து அவனை மணக்க சம்மதம் என்று விட்டாள்.

சங்கரன் வந்து சென்ற பிறகு, உமாவின் மனதிலும் தன்னை திருமணம் செய்து கொள்ள போகும் மனிதன் ஏன் இன்னும் இங்கு வந்து என்னைக் பார்க்கவில்லை? அவனுக்கு இந்த திருமணத்தில் சம்மதமா? இல்லை மறுத்துவிட்டானா?
என் வாழ்க்கை அவனிடமிருந்து தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? தெய்வம் எனக்கு உதவி செய்யுமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், நாம் எதை நினைக்கிறோமோ அதற்கு எதிராகத் தானே நடப்பவையெல்லாம் அமைகிறது!
ஒப்பு தாம்பூலம் முடிந்தபிறகு, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்த அருணாச்சலம் தம்பதியர், மிகவும் பயந்து கொண்டே பதினைந்து நாட்கள் கழித்து ஒருவாராக தன் மகனிடம் உமாவின் புகைப்படத்தை காட்ட உமாவின் அழகில் வாயில் பேசுவதற்கு வார்த்தை இன்றி உறைந்து நின்றான் குருபரன். இதே பெண்ணை பேருந்து நிறுத்தத்தில் பார்க்கும்போது இவள் ஒரு நாளாவது தனது படுக்கையை அலங்கரித்தால் எப்படி இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது நிஜம்தான்.இவ்வளவு சீக்கிரம் அவன் எண்ணம் நிறைவேறும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைவதற்கு அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லை தான். ஆனால் சிவனின் மகளை அனுபவிப்பதற்கு திருமணம் என்ற ஒரு சம்பிரதாயம் அவசியம். முதலில் கல்யாணம் வேண்டாம் என்று ஒப்புக்கு சொல்லிப் பார்த்தவன், பிறகு திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுவிட்டான். தன் அம்மாவிடம் கேட்டு உமாவின் புகைப்படத்தை தன்னுடன் எடுத்துச் சென்று விட்டான். இரண்டு நாட்கள் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், இரவும் பகலும் உமா ஆக்கிரமித்து இருந்தாள்.
மூன்றாம் நாள் காலை உமாவின் வீட்டிற்கு சென்று, வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சிவனிடம் நான் உங்க மகளோட தனியா பேசணும் அவள வெளில கூட்டிட்டு போயிட்டு வரேன் என்று அதிகாரத் தோரணையில் சொல்லிவிட்டு உமாவிடம் திரும்பி நான் வெளியில் நிக்கிறேன். சீக்கிரம் ரெடியாயிட்டு வா என்று விட்டு யாரின் பதிலையும் எதிர்பார்க்காமல் வாயிலில் சென்று நின்று கொண்டு விட்டான். அவன் நடத்தையில் சுத்தமாக மரியாதை இல்லை. சிவனிடம் பேசும்போது, வருங்கால மாமனார் என்ற மரியாதை கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. இத்தனை வருடங்களாக அவர்கள் வீட்டில் வேலை செய்து வரும் ஒரு வயதான மனிதருக்கு கொடுக்கக்கூடிய சாதாரண மரியாதையை கூட அவன் கொடுக்கவில்லை. அவனின் நடத்தையைப் பார்த்து உமாவிற்கு தாங்கொணா வேதனை. இந்த வேதனையை தான் காலம் முழுக்கவும் சுமக்க வேண்டுமே என்பது அவள் மனதைக் குத்திக் கிழித்தது. நினைவு தெரிந்த நாட்கள் முதலாக இந்த நொடி வரை சிவன் அவளைப் பொருத்தவரை ஹீரோதான். அவர் தன் மனைவியிடம் நடந்து கொள்வதைப் பார்த்து தனக்கும் அமையும் கணவன் தன் அப்பாவை போல இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்படித் தன் அப்பாவை கொஞ்சம் கூட மரியாதையாக நடத்தாத ஒரு நபர் கணவனாக அமையக்கூடும் என்பது அவள் கனவில் கூட இல்லை. மனம் நொந்து கொண்டே, அப்பாவின் முகத்தைப் பார்த்தவள் அவர் சம்மதத்தை அவர் பார்வையில் புரிந்து கொண்டவளாக அவனுடன் வெளியே செல்ல கிளம்பினாள். இத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த சிவனின் மனைவி பாறுவுக்கு மூன்றாமவர் தன் கணவனை மதிக்காமல் நடந்து கொண்டிருப்பது, அதிலும் அவன் வருங்கால மாப்பிள்ளையாக வர இருக்கிறவன் எனும்போது வெகுவாக பிடிக்காமல் போயிற்று. இதெல்லாம் தேவையா...என்று தன் கணவனை நோக்கி குற்ற பார்வை செலுத்தினாள் பாறு.

பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த ரத்னா மற்றம் சாந்தா இருவரும் புத்தக பையுடன் வேகமாக வெளியே வர, வாயிலில் நின்று கொண்டிருந்த குருவின் கண்களில் தப்பாமல் விழுந்தார்கள். இருவரையும் கண்ணை நகர்த்தாமல் பார்த்துக் கொண்டிருந்தான் குரு. நின்று கொண்டிருப்பது யாரென்று தெரியாத ரத்னா எப்படி முழுங்குற மாதிரி பாக்குறான் பாரு பொறுக்கிபய என்ற தன் தங்கையிடம் முணுமுணுத்துக் கொண்டே செல்ல அந்த வார்த்தைகள் தப்பாமல் குருவின் காதில் விழுந்தது.
ரத்னாவின் உருவம் மட்டும் அல்ல அவள் சொன்ன வார்த்தைகளும் கூட ஒருவேளை அவளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும், குரு இந்த சம்பவத்தை மறக்கப் போவதில்லை என்பதை அந்த நேரம் அறிந்து கொள்ளவில்லை அந்த பேதை.

வழக்கம்போல, சிறு பெண் சாந்தாவிற்கு அக்கா கூறுவது ஒன்றும் புரியாமல் திரும்பித் திரும்பி குருவை பார்த்துக்கொண்டே சென்றாள்.

ரத்னா விற்கு இறுதி தேர்வுகள் முடிவு பெற, அதற்குள் சங்கரன் இரண்டு முறை வந்து அவளைப் பார்த்து சென்று விட்டான். அவரது தேர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே அந்த அவளுக்கு பார்க்கர் பென் பரிசளித்து விட்டு ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு சென்றவனின் முகத்தை மனதில் இருத்திக் கொண்டே தேர்வுகளை எழுதி முடித்தாள் ரத்னா.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top