JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaikal - Chapters 37 & 38

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 37 & 38

37

ஏட்டு மூன்றாவது பெண்ணை அறையினுள் அனுமதித்தார். அவள் பெயர் மாடத்தி, வயது ஐம்பத்தைந்து. முடி அவ்வளவாக நரைக்காவிட்டாலும் வயது தெரிந்தது. முகத்தில் சுருக்கங்கள் நன்றாகவே தெரிந்தன. காது வளர்த்திருந்தாள், ஆனால் பாம்படம் முடிச்சு ஏதும் போடாததால் கீழ்க்காது இரண்டும் சுருங்கி இருந்தாலும் பெரிய ஓட்டைகள் தெரிந்தன. பற்களின் எளிர் மேலேறிவிட்டதனால் பற்கள் நீளமாகத் தோன்றின, அவற்றின் இடுக்குகளில் வெற்றிலைக்கரை அடர்ந்து படிந்திருந்தது. தலைமுடியைக் கவனிக்கவில்லை என்பது தெரிந்தது, அதை அவள் பெயருக்கு அள்ளி முடிந்திருந்தாள்.

எஸ்.ஐ. “வாம்மா, உக்காரு,” என்றார் மாடத்தியைப் பார்த்து.

உட்கார்ந்தாள். எஸ்.ஐ., “ஒன் பேரு என்னம்மா?” என்றார்.

சிரித்தாள் மாடத்தி, “ஏம் பேரு தெரியாம எதுக்குக் கூப்பிட்டீகளோ. காரணம் இருக்கணுமில்லோ ராசா,” என்றாள்.

பயப்படாதவள் என்று புரிந்துகொண்ட எஸ்.ஐ., அவளின் குரல் கட்டையாக கிட்டத்தட்ட ஒரு ஆணின் குரல் போல் இருப்பதை மனதில் குறித்துக்கொண்டார், “ஏம்மா, சிகரட்டு சுருட்டு ஏதாவது குடிப்பியா? குரல் இவ்வளவு கரகரப்பா இருக்கேன்னு கேட்டேன்,” என்றார்.

தூக்கிவாரிப்போட்டது மாடத்திக்கு, தன் பெயரைச் சொல்லாமல் இருந்ததற்காவா இத்தனை கேவலப் படுத்துகிறார் இந்த அதிகாரி என்று நினைத்தவள், “அப்பிடிப் பழக்கமெல்லாம் கிடையாது அய்யா, சும்மா வெத்தல பாக்கு மட்டும் போடுவேன். கழுத வயசானா சத்தமும் மாறிப்போச்சு, என்ன செய்ய அய்யா. இன்னைக்கு நேத்தா பெறந்தேன்? அய்யா ஆத்தா போயி சேந்துட்டாக. புருசனும் போயிருச்சு. இனிமே இருந்து என்ன? சத்தம்போனா என்ன, ஒரே அடியா மேலேயே போய்ட்டாத்தான் என்ன,” என்று தான் ஒரு காவல்துறை அதிகாரியின் முன் விசாரணைக்கு வந்திருக்கிறோம் என்பதை மறந்தவளாகச் சொன்னாள்.

எஸ்.ஐ., “சரிம்மா, இன்னைக்கி வேலைக்குப் போகலையா?” என்றார்.

“போவணும். வேலைக்குப் போவாட்ட கஞ்சி எங்கயிரிந்து வரும். மத்தியானத்துக்கு மேல சாயங்காலமா போவணும். களத்தில வேல, சாயங்காலமாப் போய்ட்டு, கூடமாட பொலி(ல) (அறுவடை செய்த தானியம்) தூத்த அள்ள, மத்தபடி கீழ மேல கிடக்கத ஒழுங்கு படுத்தணும்,” என்றாள் மாடத்தி.

“அப்பிடி லேட்டாப் போனா எப்பம் முடியும் வேல?” என்றார் எஸ்.ஐ.

“நான் ராத்திரி வரைக்கும் வேலபாத்திட்டு அங்கேயே படுத்துக்கிடுவேன். காலம்பர மத்த ஆள்கள் வந்தபின்ன வீட்டுக்கு வந்திருவேன்,” என்றாள் மாடத்தி.

“களத்தில ராத்திரி தூங்க பயமா இருக்காதா?” என்றார் எஸ்.ஐ.

“நான் என்ன கன்னிப் பெண்ணா, இந்த வயசில என்ன எவன் கொண்டு போறான். எனக்கு இருட்டு ஒண்ணும் பயமில்ல அய்யா,” என்ற மாடத்தி, “அப்பிடி எவனும் தெரிஞ்சா சொல்லுங்க அய்யா,” என்றாள்.

“எப்பிடி எவனும் தெரிஞ்சா?” என்று புரியாமல் கேட்டார் எஸ்.ஐ.

சிரித்துக்கொண்டே, “அய்யா நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். என்ன கொண்டுபோறவன் எவனும் தெரிஞ்சா சொல்லுங்கன்னு,” என்றாள்.

எஸ்.ஐ. கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கவலையில்லாமல் பதில் அளித்துக்கோண்டு வந்தாள் மாடத்தி. எஸ்.ஐ. ஏட்டைப் பார்த்துக் கண் அசைத்தார். ஏட்டு, எஸ்.ஐ. முன் இருந்த மேசைமேல் கிடந்த துண்டை எடுத்தார். அங்கே இருந்த ஆண் பனையின் கதிரைக் கண்ட மாத்திரத்தில் மாடத்தியின் முகம் மாறிவிட்டது. அவளுடைய கவலையற்ற பேச்சும் நின்றுவிட்டது.

எஸ்.ஐ. சாகவாசமாக, “இங்க அலையிறானே ஒரு திருடன். அதான் ஒருத்தன் அம்மணமா ராத்திரியில அலையிறானே, ஒரு திருடன். அவனுக்கும் சங்கரலிங்கம் கொலைக்கும் சம்பந்தம் இருக்கா?” என்றார்.

“இல்ல அய்யா,” கவனமாகப் பதில் சொன்னாள் மாடத்தி.

“அந்த அம்மணமா அலையிற திருடனைத் தெரியுமா?” என்றார் எஸ்.ஐ.

இதுவரை கவலைப் படாமல் பதில் சொல்லிவந்தவள் சட்டென்று உடைந்துவிட்டாள். நாற்காலியிலிருந்து எழுந்துவிட்டாள், “அய்யா, நான் ஒரு கேலிக்குதான் செஞ்சேன். நான் எதையும் களவாங்கல. யாரையும் அடிக்கல, பிடிக்கல. எனக்கும் இந்தக் கொலைக்கும் சம்மந்தம் இல்ல. ஒரு இம்மியும் சம்மந்தமில்ல. என்ன ஒண்ணும் செஞ்சிராதைக அய்யா,” என்று பரிதாபமாகக் கெஞ்சினாள் மாடத்தி.

எஸ்.ஐ. மெல்லச் சிரித்தார். ஏட்டு கண்கள் அகல விரிய தலையைத் தஞ்சாவூர் பொம்மை மாதிரி அசைத்துப் பாராட்டினார்.

“சரிம்மா, நீயோ அல்லது ஒனக்குச் சொந்தக்கரங்களோ அந்த சங்கரலிங்கத்திட்ட கடன் வாங்கியிருக்கீங்களா?” என்றார் எஸ்.ஐ.

“அவருட்ட இருந்து கடன் வாங்குத அளவுக்கு எனக்கு சக்தி இல்ல அய்யா. அவரு சொத்து பத்து உள்ள ஆளுக்குத்தான கடன் குடுப்பாரு,” என்றாள் மாடத்தி.

“கொஞ்சம் விளக்கமா சொல்லு,” என்றார் எஸ்.ஐ.

“அய்யா, அந்தச் சங்கரலிங்கம் சாதாரண மனுசருக்குக் கடன் குடுக்க மாட்டார். குடுத்த கடன வசூல் பண்ணுறதுக்கு ஏதாவது சொத்து, வீடு, கவுர்மெண்டு வேல, அல்லது தங்க நகை ஏதோ ஒண்ணு இருந்தாதான் அவரு கடன் குடுப்பார். இல்லண்ணா அவருட்ட துட்டு வாங்கமிடியாது. அதுவும் போக எனக்கு எதுக்கு கடன் ஒடன்னெல்லாம்.

எனக்குக் கடனுமில்ல ஒரு பைசா சொத்தும் இல்ல. சாப்பாடு ஒண்ணுதான் எனக்குத்தேவ. படுத்துத் தூங்கது கூட நான் அடுத்தவுக வீடு, மாட்டுத்தொழு, களம், கோயில்ன்னு எங்க வேணுமின்னாலும் படுத்து உறங்கிருவேன் அய்யா. எனக்கு எதுக்கு கடன்,” என்றாள் மாடத்தி.

“அம்மா, மாடத்தி, நீ கொலை செய்தயா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் கேள்விகேக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கு” என்றார் எஸ்.ஐ.

“சரிய்யா, நீங்க கேக்குத கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுதேன்,” என்றாள் மாடத்தி பவ்வியமாக.

“எப்படி ஆரம்பிச்ச?” என்றார் எஸ்.ஐ. ஏதோ துப்பறியும் கதை கேட்பவர் போல்.

மாடத்தி ஆரம்பித்தாள், “இப்பிடித்தான் ஒரு நாள் ராத்திரி நான் களத்தில காவலுக்கு இருக்கையில, தள்ளி ஒரு ஆளு பாட்டுப் பாடிக்கிட்டுப் போச்சு. அந்தக் கொரலு எனக்குத் தெரியும், இன்னாரொடதுன்னு. எனக்கு இந்த ஊர்ல இருக்க அத்தன மனுசரோட சத்தமும் அத்துப்படி, கா(ல்)மயிலு அரை மயிலு தள்ளிப் போயிட்டு இருக்கயிலயே நான் சொல்லிப்புடுவேன் யார்ன்னு. அன்னைக்கிப் போன ஆளோட தோட்டத்தில நான் ரெம்ப நாள் வேலைபாத்திருக்கேன். கடுமையான ஆள், கடுமையா வேலை வாங்கும் அந்த ஆள். வேலைக்குக் குனிஞ்சிட்டா, வாட்டி வதக்கிருவாரு. தண்ணி குடிக்கப் போனாக்கூட கடுமையா வசவுல இறங்கிருவாரு. அது அவர் கொஞ்சம் இளமையா இருக்கையில.

“இந்தக் கதை நடக்கும் போது, அந்த ஆளுக்கு நல்ல வயசு ஆயிருச்சு. அன்னைக்குக் காவல் காத்திக்கிட்டு இருக்கும்போது, அவரு படுத்தின பாடு யாவகம் வந்தது. நம்ம போயி இவர மெரட்டினா என்னண்ணு மனசில தோணிச்சு. ஆனா பொம்பளையா போய் நின்னா கட்டாயம் பயப்படமாட்டாரு அந்த ஆளு. ஒரு நிமிசம் யோசிச்சென். கொஞ்ச நேரத்துக்கு ஆம்பளையா மாறிட்டா என்னண்ணு நெனைச்சென். ஆம்பளையா மாறணும்மிண்ணா என் சேல, தலைமுடி, என் மாறு எல்லாம் காட்டிக் குடுத்துரும். ஏங்கிட்ட வேட்டி இல்ல. குளிருக்குப் போட ஒரு கருப்பு பனியன் வச்சிருந்தேன். பனியன மேல போட்டுக்கிட்டு, சேலைய உருவி தலையில கெட்டிக்கிட்டேன். குனிஞ்சு காலுக்கு இடையில பாத்தென், காலியாக் கெடக்க மாதிரி தெரிஞ்சது. இருட்டுன்னாலும் கொஞ்சம் ஆளோட உருவம் தெரியத்தான் செய்யும். அந்த ஆளு கண்டுக்கிடுச்சிண்ணா, எங்கிர கேள்வி தோணுச்சு. அப்பந்தான் பக்கத்தில கிடந்த பனங்கதிரு யாவகத்துக்கு வந்தது. எடுத்து அடியில சொருகிக்கிட்டேன். இப்பம் கீழ பாத்துட்டு நானே பதறிப்போனேன்.

“வேகமா அந்த ஆளப் பாத்து போனேன். இருட்டா இருந்தாலும் வெள்ளி மானத்தில கோலம்போட்டாக்கில அள்ளித் தொளிச்சிருந்தது. எனக்கு உள்ளுக்க பயம் கேவு கேவுங்குது. ஒரு மனசு சொல்லுது, ஒன்னக்கண்டு அவரு பயப்பிடாட்டாலும் ஒன்னப் பிடிக்க மிடியாது, நீ ஒடியாந்திரலாம்ன்னு. இன்னொரு மனசு சொல்லுது, அவருக்கு மட்டும் நீ யாருன்னு தெரிஞ்சது ஒன்ன கூறு போட்டு கயத்தாத்துச் சந்தையில வித்திருவாருன்னு. இன்னொரு மனசு சொல்லுது, ‘ஏ தேவடியா நீ எதுக்கு உசிரக் கையில பிடிச்சிக்கிட்டு கெடக்க, ஓனக்கென்ன தாயா பிள்ளயா, அவன் ஒன்ன என்ன பாடுபடுத்தினான். நீ என்ன மறுபடியும் சமஞ்சு பொண்ணுக்கு இருக்க போறயா? ஒன்ன அவன் என்ன செஞ்சிர முடியும்? ஓன்ன நடுத்தெருவுல அம்மணமா இழுத்திக்கிட்டு போவானா? இல்ல நடுத்தெருவில ஓஞ்சேலய உருஞ்சி என்னமும் செஞ்சிருவானா? எதுக்கிட்டி பயப்படுத? இல்ல இதுக்கெல்லாம் நீ பயப்பட்ட பொம்பளயா? நிமிந்து நில்லிடி. எனக்குத் தெரியும் நீ உயிர விட தயாரா இருக்கண்ணு. பின்ன என்னடி? அவன் அப்பிடியே நடுத்தெருவில சேலய உருவி ஏதாவது செஞ்சா செய்யட்டுமிட்டி. ஊர்ல நாட்டாம, கிராமுசு, வெட்டியான், தலையாரி, ஏன் தப்பே செய்யமாட்டேன்னு சொல்லுத வாத்தியாரு செல்லையா, எல்லாரும் தடுத்து நிறுத்தட்டும், இல்ல வேடிக்க பாக்கட்டுமிட்டி. பெறகு பாப்போம் இந்த ஆளுக தலைதூக்கி நடமாடுதத’ எண்ணுச்சு.

பக்கத்தில போனதும் ஆம்பள மாதிரி பெரிய குரல்ல, சத்தமா, “ஏலே, எவமுல அது. நிக்கையா இல்ல பெடதில போடட்டா,”ன்னு சத்தமா ஏசுனேன்.

அந்த ஆளுக்கு அறுவது வயசு இருக்கும், கூடயும் இருக்கும். உடம்பு தளந்துபோனாலும் வேலபாக்கணும் சம்பாதிக்கனுன்னு ஆசை. அதான் அந்த ஆள் அந்த இருட்டுல தோட்டத்தில வேல பாக்கித ஆள்களுக்கு சாப்பாடு கொண்டுக்கிட்டு போச்சு. நாம் போட்ட சத்தத்தில அந்த ஆள் டக்குணு நின்னுருச்சு.

“யாரு...?”ன்னு கொஞ்சம் கனிவா கேட்டுச்சு.

“யாரா? என் எல்லைக்குள்ள வந்திக்கிட்டு என்னையே யார்ன்னு கேக்கயா? நீ யார்ல?”ன்னு கோவமா விட்டேன்.

என்ன மேலயும் கீழயும் பாத்தது. கீழ நான் அம்மணமா இருந்ததயும், அங்க பனங்கதிரயும் பாத்து அவருக்கு உடம்பு குலுங்குச்சு. அந்த ஆள், பயந்துக்கிட்டே பேரச் சொல்லிச்சு.

“வயசாளியா இருக்க, காட்டுக்குள்ள ஏன் வந்த, அதும் இருட்டுக்குள்ள?”ன்னே அதே கோவத்தில.

“வேல செய்யுத ஆள்களுக்கு சாப்பாடு கொண்டுட்டு போறேன்,” ன்னாரு.

“கொண்டா நான் சாப்பிட்டுக்கிடுவேன்,” ன்னேன்.

அந்த ஆள் தயங்கிச்சி. “குடுக்கயா ஓன்னோட வேட்டிய அவுத்துக்கிட்டு வெரட்டவா?” ன்னேன் கோவமா.

சாப்பாட்டுத் தூக்க நீட்டுச்சு. “சரி போ,” ன்னேன். தயங்கித் தயங்கிப் போச்சு. நாலு எட்டுத்தான் போயிருக்கும், “ஏய் நில்லு,” ன்னேன்.

நின்னுச்சு. “என்ன துண்ட குடுக்காம போர? எனக்குக் குளுராதா? துண்ட குடுத்திட்டு போ,” ன்னேன்.

தயங்கிச்சு.

“தோள்ல கிடக்க துண்டத்தாரயா, இல்ல இடுப்பில கெட்டிருக்க வேட்டியத்தாரயா?” ண்ணேன்.

துண்ட எடுத்து குடுத்திட்டுப் போயிருச்சு.

கட்டாயம் அந்த ஆள் போயி, வேற ஆள்கள கூட்டிக்கிட்டு வரும்மின்னு எனக்குத் தெரியும். அதனால் ஒடனே பக்கத்துச் சோளக்காட்டுக்குள்ள போயி தூக்க தொரந்து, சாப்பாட்ட அள்ளி அள்ளி வாயில போட்டு முளிங்கிட்டு அங்கேயே தூக்கு துண்டு ரெண்டையும் போட்டுட்டு, நேர களத்தில போயி படுத்துக்கிட்டேன்.

மறு நாள் ஊருல ஒரே பேச்சு. இப்பிடி இன்னாரை ஒரு திருடன் சாப்பாட்டுத் தூக்கு துண்டு ரெண்டையும் புடிங்கிட்டு வெறட்டிட்டானாம்மின்னு. ஆம்பளையும் பொம்பளயும் கூடிக்கூடிப் பேச்சு. எல்லாரும் ரகசியமா, “அம்மணமா வந்தானாம்,” அப்பிடி இப்பிடி, நீளத்த பத்தி வேற ஒரே பேச்சு. நானும் கூடச் சேந்து பேசினேன்.

அந்த ஆள்கிட்டயே போயி, “அய்யோ இப்பிடி ஆயிருச்சே ஒங்களுக்கு,”ன்னு சாந்தமான குரலுல பேசுனேன். அவருக்கு நான்தான்னு கொஞ்சம்கூட சந்தேகம் வரல. வெக்கிப்போய் உக்காந்திட்டாரு. அதுக்கு பின்ன அவரு இருட்டில தனியா வெளிய போறதே இல்ல.” என்று சொல்லி முடித்தாள்.

எஸ்.ஐ., “நல்ல தமாசு போ. சரி வேற என்ன செய்த. வேற என்ன திருடுனே,” என்றார்.

மாடத்தி, “அய்யா நான் ஒரு வெளையாட்டாத்தான் செஞ்சேன். திருடல,” என்றாள்.

“சரி வேற என்ன என்ன செஞ்சண்ணு சொல்லு நான் ஒன்ன விட்டுடுரேன்,” என்றார் எஸ்.ஐ.

“வேற என்ன, சமையம் கிடக்கும் போதெல்லாம் இப்பிடி கோமாளித்தனம் பண்ணினேன்,” என்றாள் மாடத்தி.

“அந்தப் பனங்கதிர எல்லாத் தடவையும் உபயோகிச்சயா?” என்றார் எஸ்.ஐ.

“ஆமா அய்யா, அந்த பனங்கதிருதான் இந்த ஆம்பளைகள என்னக்கண்டு பயப்படவச்சது. அடுத்த தடவ நான், ‘ஏய், நில்லுல,’ன்னு சொன்னவொடனே ரெண்டாவது ஆளும் அங்கதான் பாத்துச்சி. அதுலயிருந்து நான் பனங்கதிரு இல்லாம போனா என்ன வேற திருடம்மின்னு நினைச்சு எதித்து அடிச்சிட்டா நான் என்ன செய்ய. அதுனால நான் அந்த கோமாளித்தனம் செய்யும் போதெல்லாம் ஒரே மாதிரித்தான் போனேன். அதான் எனக்கு, எனக்கென்ன, அந்தத் திருடனுக்கு அடையாளம்,” என்றாள் மாடத்தி.

சுவாரசியமாய்க் கேட்டார் எஸ்.ஐ. ஏட்டு தன் வாழ்நாளில் இப்படி ஒரு பெண்ணைப் பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை, என்று வாய்திறந்து பாராட்டினார்.

“நாம் போகலாமா அய்யா?” என்றாள் மாடத்தி.

“ஒரு நிமிசம். உனக்குப் பிள்ளைகள் இல்லையாம்மா?” என்றார் எஸ்.ஐ.

“பிள்ளைக இருந்தா என்ன இல்லாட்ட என்ன? நம்ம வாழ்க்க நம்மோட,” என்றாள் மாடத்தி.

“ஒனக்கு பிள்ளைக இருக்கா இல்லையா?” என்று குறிப்பாக கேட்டார் எஸ்.ஐ.

“ஒரு மகன் இருக்கான். படிச்சிட்டு போலீசா இருக்கான்,” என்றாள்.

அதிர்ந்தார் எஸ்.ஐ., “என்ன போலீசா?”

“ஆமா அய்யா, என் மகன் எஸ்.ஐ. யா இருக்கான். கோயமுத்தூர்ல இருக்கான். அவுக அய்யா செத்ததுக்கு வந்தது. நாலு வருசமாச்சு, வரத்தில்ல போக்கில்ல. அவன் நல்ல இடத்தில கலியாணம் முடிச்சுக்கிட்டான். நாங்க ஏழ. அதுனால அவன் வீட்டுக்காரி வரப்பிடாதுன்னுட்டா. நான் துட்டு கிட்டு ஒன்னும் வேண்டாமிய்யா சும்மா வந்து பாத்திட்டு போ, மனசுக்கு ஒரு நிம்மதியா இருக்கும். பேரன் பேத்திய கொண்டாந்து காட்டமிடியாட்டயும் நீ மட்டுமாவது ஒரு வருசத்துக்கு ஒரு தடவயாச்சும் வந்திட்டுப் போன்னேன். நாலு வருசமாச்சு. அவுகளுக்கென்ன வேலயோ. நான் நடமாடிக்கிட்டுத் திரியிரேன் அய்யா,” என்றாள் மாடத்தி.

எஸ்.ஐ. யோசித்தவாறே உட்கார்ந்திருந்தார்.

“நாம் போகலாமா அய்யா?” என்றாள் மாடத்தி.

“சரி,” என்றார் எஸ்.ஐ.

எஸ்.ஐ. போகச் சொல்லியும் போகாமல் மெல்லத் தயங்கிவாறே நின்றாள் மாடத்தி. “என்ன?” என்றார் எஸ்.ஐ.

“நான் சொன்னத வெளிய யாருட்டையும் சொல்லிராதீக,” என்று கெஞ்சினாள்.

“சரி நான் சொன்னா என்ன ஆகும்,” என்றார் எஸ்.ஐ.

“நீங்க மட்டும் சொன்னீகண்ணா, நான் இந்த ஊர்ல நிச்சயம் இருக்க முடியாது. என்ன ஊரைவிட்டே வெரட்டிருவாங்க அந்த ஆள்களெலாம் சேந்து. ஒரு பொம்பளையிட்ட போயி பயந்திட்டோமேண்ணு அவங்களுக்கு கோவம் பொத்துக்குட்டு வரும். ஊர்ல மத்த ஆள்களும் அந்த ஆள்களை கேலி செய்யும். இவளாலதானண்ணு என்ன இருக்க விடமாட்டாக. இந்த ஒரு தடவ மட்டும் என்ன விட்டுருங்க அய்யா, நான் சத்தியமா இனி ஒரு தப்பும் செய்யவே மாட்டேன்,” என்றாள் பயந்துகொண்டே.

எஸ்.ஐ., சிரித்துக்கொண்டே, “இந்தக் கொலையச் செய்தவன் பிடிபட்டுட்டான்னா உன் ரகசியத்த வெளிய விடமாட்டோம்மா,” என்றார்.

தலை கவிழ்ந்தவாறே படியிறங்கிச் சென்றுவிட்டாள் மாடத்தி.

அதற்குள் வெளியே ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது.

கடைசியாக வந்த பெண்ணிடம் பாவனைக்கு ஒரு சில கேள்விகள் கேட்டுவிட்டு அனுப்பிவிட்டார் எஸ்.ஐ.

“சார் இன்ஸ்பெக்டர் கேட்டா ரொம்ப ரசிப்பார் சார்,” என்றார் ஏட்டு.

எஸ்.ஐ., ஏட்டு இருவரும் வெளியே வந்தனர். “107 ஏறும்மய்யா வண்டியில,” என்றார் எஸ்.ஐ.

எங்கிருந்தோ ஒரு சத்தம், “107,” என்று பலமாகக் கேட்டது.

107 திடுக்கிட்டார். சுற்றி நின்ற மக்கள் கப்சிப் என்று அமைதி காத்தனர்.

107 அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, கோபத்தோடு ஜீப்பில் ஏறப்போனார்.

திரும்பவும் அதே குரல் முன்னைவிட சத்தமாய், “107,” என்றது.

இம்முறை 107 கோபமாக அங்கும் இங்கும் பார்த்தார். வேகமாக பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பின்னால் ஓடிப்போய் பார்த்தார். யாரும் இல்லாததால் கோபமாக வந்து ஜீப்பில் அவர் ஏறவும் மறுபடியும் “107” என்று அந்தக் குரல் ஒலித்தது. ஏட்டு வாய்விட்டு சிரித்துவிட்டார். எஸ்.ஐ. சிரிப்பை அடக்கிக்கோண்டு, “போயிட்டுப்போறான், விடும்,” என்றார்.

சில நிமிடங்களில் ஜீப் கிளம்பி போய் விட்டது.




38

எஸ். ஐ. இளங்கோவும் இன்ஸ்பெக்டர் ராஜாவும் சத்திரம் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி மாதவன் நாயரின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். சொன்ன நேரத்திற்கு முன்னமே ஜீப்பில் வந்து இறங்கினார் டி.எஸ்.பி. காவல் நிலையத்தில் வேலை செய்த அனைத்து ஊழியர்களும் நிலையத்திற்கு முன் வரிசையில் நின்று விறைப்பாகச் சல்யூட் அடித்தார்கள். டி.எஸ்.பி பதில் சல்யூட் அடித்துவிட்டு நிலையத்தின் உள்ளே சென்று அமர்ந்தார். டி.எஸ்.பி மாதவன் நாயர் நேராக விசயத்திற்கு வந்தார்.

டி.எஸ்.பி, “ஒரு கொலை மட்டுமில்ல, இருபத்தியோரு வீடுகளும் எரிஞ்சு ஷாம்பலாயிருக்கு. கலக்ட்டர் என்னை நேரடிப் பார்வை செய்யச் சொல்லி ஆர்டர் போட்டிருக்கார்,” என்று மலையாளம் கலந்த தமிழிலும், பின் அதையே மலையாளம் கலந்த ஆங்கிலத்திலும் சொன்னார்.

எஸ்.ஐ. இளங்கோவும், இன்ஸ்பெக்டர் ராஜாவும் மாறி மாறி சங்கரலிங்கம் கொலைக் கேசைப் பற்றி விளக்கினார்கள். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டார் டி.எஸ்.பி மாதவன் நாயர்.

“இந்த விரால்ராசு மேல நமக்கு என்ன எவிடன்ஸ் இறிக்கு?” என்று கேட்டார் டி.எஸ்.பி.

எஸ்.ஐ. இளங்கோவும், இன்ஸ்பெக்டர் ராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் இன்ஸ்பெக்டர் ராஜா பேசினார், “விரால்ராசுதான் கொலை செய்தான்னு பாத்த சாட்சி இல்ல சார். கொலை நடந்த நாள்ல அவன ஊர்ல பாத்ததாவும் சாட்சி இல்ல சார்,” என்றார்.

“அப்போ அன்னைக்கி அவன் எங்கதான் இருந்தான்னு உங்களுக்குத் தெரியுமா? அத நிருபிக்க முடியுமா?” என்றார் டி.எஸ்.பி.

தாடையைத் தடவியவாறே எஸ்.ஐ. இளங்கோ சொன்னார், “சார் நான்தான் அவன் வேலை செய்ர எஸ்ட்டேட் வரைக்கும் போய் விசாரணை நடத்தினேன். எஸ்ட்டேட்ல பதிவேடுப்படி அவன் சாயங்காலம் நாலு மணி வரை அங்க வேலை செய்திருக்கான். அடுத்தநாள் காலையில ஒன்பது மணிக்கு எஸ்ட்டேட் ஓனர் வீட்டில வேலைக்குப் போனான்னு முதலாளியே சொல்றார்,” என்றார்.

எஸ்.ஐ. முடிக்குமுன்பே, “அப்படின்னா ஒங்க கேஸ் டீ.ஓ.ஏ. அதோட அர்த்தம், டெட் ஆன் அறைவல், அதாவது ஆரம்பத்திலேயே கேஸ் சத்துபோச்சுண்ணு அர்த்தம்,” என்றார் டி.எஸ்.பி மாதவன் நாயர். அவரே மேலும் தொடர்ந்தார், “உங்க பேச்சை ஜட்ஜ் நம்பமாட்டார். ஒரு பதினேழு மணிக்கூரு இடை வேளையில இந்த விரால்ராசா மாதிரி ஒரு பெல்லோ மலைமேல இருந்து இவ்வளவு தூரம் வந்து கொலை பண்ணிட்டு, தீ வச்சிட்டு, ஒருத்தர் கண்ணிலயும் படாமல், திரும்பபோய் வேலையில சேந்தான்னு சொன்னால் எப்படி ஜட்ஜ் நம்பும். சரி அவன் வக்கீல் ஏதும் பிடிச்சிருக்கா?” என்றார்.

இன்ஸ்பெக்டர், “நாம விரால்ராசு மேல ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எஸ்ட்டேட் முதலாளி நிச்சயம் கம்பெனி வக்கீல வச்சு முன் ஜாமின் வாங்கிடுவார்ன்னு சொல்றாங்க சார். நான் விசாரிச்சிட்டேன் சார், அந்த வக்கீல் பெரிய ஆள் சார், அவருக்கு பல ஊர்ல கிளை அலுவலகங்கள் இருக்கு. அவர் இந்தக் கேஸ்ல வாதாடவும் ரெடியா இருப்பார்ன்னு, எஸ்ட்டேட்ல எல்லாரும் சொல்றாங்க சார்,” என்றார்.

டி.எஸ்.பி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே, “ஆ வக்கீல் உன் கேசில ஓட்டை ஓட்டையாப் போட்டு, பிச்சுபோடும்,” என்று மலையாளநெடி அதிகமாகவே கலந்து பேசினார்.

டி.எஸ்.பி சொன்னதில் அர்த்தம் இருப்பதை உணர்ந்தாலும், தன் ஆள்மனதின் நம்பிக்கைகளை அவ்வளவு சீக்கிரம் உதறித்தள்ள முடியவில்லை எஸ்.ஐ. இளங்கோவால். இருப்பினும் வேறு வழி இல்லை போல் தோன்றியது அவருக்கு.

“வேற யாரும் சஸ்ப்பெக்ட் இல்லையா உங்களுக்கு?” என்றார் டி.எஸ்.பி.

இன்ஸ்பெக்டர் ராஜா அருவாள் வெள்ளச்சாமியைப் பற்றி விளக்கினார். இடை இடையே எஸ்.ஐ.யும் சேர்ந்து விளக்கங்கள் கொடுத்தார். தலையை ஆட்டி ஆட்டி உன்னிப்பாகக் கேட்டார் டி.எஸ்.பி.

எஸ்.ஐ. இளங்கோவும், இன்ஸ்பெக்டர் ராஜாவும் முடித்தபின், “வெண்ணைய கையில வச்சுகிட்டு ஏன் கொக்கு தலையில என்ன இருக்குன்னு அலையணும்? இந்த வெள்ளச்சாமி கூடவே இருந்திருக்கான், அவனோட அருவாள்தான் மர்டர் வெப்பன். அவன் விக்டிம்கிட்ட கடன் வாங்கியிருக்கு. கொலைய செய்திட்டு ஒடிப்போய்ட்டான். அவனை விட்டுட்டு ஊர்லயே இல்லாதவனை ஏன் தேடுது. வெள்ளச்சாமி இப்பொம் எங்க இருக்கான்?” என்றார் டி.எஸ்.பி.

“அவன் இலஞ்சிப் பக்கத்தில கீழப்பாறைங்கிற ஊர்ல, அவன் சொந்தக்காரன் வீட்டில இருக்கான் சார். நாங்க அவன் இருக்கிற இடத்தைப் பற்றியும், அந்த வீடு, அங்க இருக்கிற ஆள்க்கள் எல்லாம் பற்றியும் விபரம் சேகரிச்சிட்டோம் சார். அவனைப் பிடிக்கணும்ன்னா ஒடனே பிடிச்சிரலாம் சார்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அவனுக்கு வக்கீல் முன்ஜாமின் எல்லாம் இருக்கா?” என்றார் டி.எஸ்.பி.

“அவனுக்கு அதுக்கெல்லாம் வழியில்ல சார்,” என்றார் எஸ்.ஐ.

டி.எஸ்.பி தன் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டே, “நான் சொல்றத சொல்லிட்டன். மேல, மந்திரி வரைக்கும் கேப்பாங்க. இவ்வளவு பெரிய கேஸில் தண்டன வாங்கிகுடுக்காம விடுதல கிட்டிபோச்சுண்ணா நம்ம டிப்பார்ட்மெண்டுக்கு ரொம்ப கெட்ட பேர். உங்களுக்கு வேண்டிய ஆள் எங்க இருக்குன்னு தெரிஞ்சா போய் பிடிச்சிக்கிட்டு வந்து எஃப்.ஐ.ஆர் போடுங்க,” என்றவர் காவல் நிலையத்தை விட்டு வெளியேறி ஜீப்பை நோக்கி நடந்தார்.

அவர் எழுந்தவுடன் கூடவே எழுந்த எஸ்.ஐ. இளங்கோவும், இன்ஸ்பெக்டர் ராஜாவும், அவரைப் பின்தொடர்ந்தனர். ஜீப்பில் ஏறு முன் நின்று திரும்பி அவர்களைப் பார்த்தார் டி.எஸ்.பி. இருவரும் சல்யூட் அடித்தார்கள்.

“சீக்கிரம் அரஸ்ட் பண்ணுங்க,” என்றார் டி.எஸ்.பி சல்யூட் அடித்துக்கொண்டே.

“எஸ் சார்,” என்றனர் எஸ்.ஐ.யும், இன்ஸ்பெக்டரும் ஒரே குரலில்.

டி.எஸ்.பியின் ஜீப் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றது.

டி.எஸ்.பி போனபின் எஸ்.ஐ.யும் இன்ஸ்பெக்டரும், ஏட்டையும் உடன் சேர்த்துக்கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார், “டி.எஸ்.பி. நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளு, அவரே சொல்ரார் விராலு மேல நாம் கேஸ் போட்டா அது ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சத்துபோயுரும்மிண்ணு. சாரி, செத்துப்போயுருமின்னு சொன்னார். அவரு கூட பேசி பேசி நானும் அவர் மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டேன்,” என்றவர் எஸ்.ஐ. இளங்கோவைப் பார்த்தார்.

எஸ்.ஐ., “சரி சார். டீ.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ரெண்டுபேரும் சொல்லீட்டீங்க. ம்ம்... எனக்கு கொஞ்சம் டைம் குடுத்தீங்கண்ணா நல்லது சார்,” என்றார்.

இன்ஸ்பெக்டர் ராஜா, “சரி இளங்கோ, உங்களுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தாறேன். உங்க மனசில என்ன இருக்குண்ணு எனக்குத் தெரியும். நல்லா யோசிச்சிட்டு எங்கிட்ட சொல்லுங்க,” என்று சொல்லிவிட்டு சங்கரங்கோவிலுக்கு புறப்பட்டுப் போய்விட்டார்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top