JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaikal - Chapters 39 & 40

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 39 & 40

39

சங்கரலிங்கம் கொலை வழக்கில் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் எஸ்.ஐ. இளங்கோ தவித்தார். அருவாள் வெள்ளச்சாமியுடைய அருவாள் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அவனுக்கு அக்கொலையைச் செய்யக் காரணம் இருந்தாலும் அவன் அக்கொலையைச் செய்திருக்க மாட்டான் என அவரின் உள் மனம் சொல்லியது. விரால்ராசுக்கு சங்கரலிங்கத்தை கொலை செய்யக் காரணம் இருக்கிறது என்று அவர் நம்பினாலும் அதை நிரூபிப்பது மிகக் கடினம் என்று எஸ்.ஐ.க்குத் தெரியும். கொலை நடந்த அன்று விரால்ராசு சுமார் 200 மைலுக்கு அப்பால் இருந்திருக்கிறான். அவன் படியாதவன், காசு அதிகம் இல்லாதவன். அவன் கொலை நடந்த வெள்ளிக்கிழமை மாலை நாலு மணிவரை எஸ்ட்டேட்டில் வேலை செய்ததாய் எஸ்ட்டேட் மேனேஜர் வைத்திருந்த ரெக்கார்ட் சொல்கிறது. மேலும் அடுத்த நாள், சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு முதலாளி வீட்டில் வேலை செய்யச் சென்றிருக்கிறான் என்று எஸ்ட்டேட் முதலாளி சொல்கிறார். விரால்ராசு முழுக்க முழுக்க நிரபராதி என்று முதலாளி நம்பினார் என்பது மட்டுமல்ல, அவர் அவனுக்காகத் தன் கம்பெனி வக்கீலை வைத்து வாதாடத் தயார் என்கிற அளவுக்கு அவர் அவனை நம்பினார். வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மலை உச்சியில் இருந்த எஸ்ட்டேட்டில் இருந்து கிளம்பி 200 மைல் தூரமுள்ள தன் ஊருக்கு வந்து சங்கரலிங்கத்தைக் கொலை செய்துவிட்டு, திரும்பவும் எஸ்ட்டேட் வந்து முதலாளி வீட்டில் அடுத்த நாள் காலை 9 மணிக்கு வேலைக்கு வந்து சேர்ந்தான் என நிரூபிப்பது முடியாத காரியம் என் அறிந்தும், விரால்ராசுதான் இந்தக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என எஸ்.ஐ.யின் ஆழ்மனம் திட்டவட்டமாகக் கூறியது.

அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதறியாமல் எஸ்.ஐ. குழம்பிப்போயிருந்தார். எனவே இன்ஸ்பெக்டர் ராஜாவைச் சந்திக்க சங்கரங்கோவிலுக்குச் சென்றார். இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சல்யுட் அடித்த எஸ்.ஐ.க்கு, பதில் சல்யுட் அடித்துவிட்டு, “சிட் சிட்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

எஸ்.ஐ. நாற்காலியில் அமர்ந்த உடன், இன்ஸ்பெக்டர் ராஜா, “எப்பிடி இருக்கீங்க இளங்கோ?” என்றார்.

“குட் சார். நான் அந்த சங்கரலிங்கம் கொலை சம்பந்தமா உங்ககிட்ட நேரடியா வந்து பேசிட்டு, முடிவு எடுக்கலாம்ன்னு இருக்கேன் சார்,” என்றார் எஸ்.ஐ.

“குட், சொல்லுங்க இளங்கோ,” என்றார் இன்ஸ்பெக்டர்.

எஸ்.ஐ., “சார் இருக்கிற எவிடன்ஸ் எல்லாமே வெள்ளச்சாமிதான் கொலையைச் செய்திருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லுது. ஆனால் அவன் ஒரு கோழை, ஒரு பயந்தாங்கொள்ளி. அவன் சங்கரலிங்கத்தைக் கொலை செய்யனும்மின்னா எப்பவோ செய்திருப்பான். ஆனால் இந்த விரால்ராசு கொலை செய்திருப்பான்னு புரூவ் பண்ணுறது முடியாத காரியம்ன்னாக்கூட எனக்கென்னமோ அவன்தான் இந்தக் கொலையச் செய்திருப்பான்னு தோணுது,” என்றார்.

“எதை வச்சுச் சொல்றீங்க,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அதான் சார் பிரச்சனை. என்னால நிரூபிக்க முடியாது. ரொம்ப கஷ்டம். முதல்ல இருந்தே என்னோட ஆழ் மனசு சொல்லுச்சு இந்தக் கொலைய விரால்ராசுதான் செய்திருப்பான்னு. அப்பிடிச் சொல்றத விட, வெள்ளச்சாமியா விரால்ராசான்னு கேட்டா எம்மனசு விரால்ராசுதான்னு அடிச்சுச் சொல்லுது. அதுவும் விராலை நேர்ல பாத்தபின்ன அவன்தான் செய்திருக்கனும்ன்னு என் மனசு ஆணித்தரமாச் சொல்லுது. அவனைப் பாத்த உடனே அவன் ரொம்ப பலமானவன், தைரியமானவன், ரோசக்காரன்னு புரிஞ்சுக்கிட்டேன். அதுமட்டுமல்ல அவன் படிக்காட்டலும், சூழ்நிலையைத் தனக்கு சாதகமாப் பயன்படுத்திக்கிற ஒரு அறிவாளி. அவன் எஸ்டேட் முதலாளி கால்ல விழுந்து, அவரோட சப்போட்ட எவ்வளவு எளிதா சம்பாதிச்சுத் தப்பிச்சுட்டான்ங்கிறதைப் பாத்தப்போ நான் புரிஞ்சுக்கிட்டேன். நினைச்சுப் பாத்தா, அவன் நொடியில சூழ்நிலையப் புரிஞ்சுக்கிறவன்னு நினைக்கேன், அவனோட திறமை அவனுக்கே தெரியாது. அப்படிப் பட்டவன், தன் பெண்டாட்டிமேல எவனாவது கை வச்சா அவனை நிச்சயமாக் கொல்லாம விடமாட்டான்னு தோணுது. அந்த விரால்ராசு எதுக்கோ, எப்படியோ சொந்த ஊருக்கு வந்திருக்கனும், அந்த வெள்ளச்சாமி தன் வீட்டுக்காரிய கூப்பிட்டதைப் பாத்திருக்கனும். உடனே கோபம் வந்து அந்த வெள்ளச்சாமிய அடிச்சுப் போட்டுட்டு, அவன் அருவாளை எடுத்திட்டு ஓடிப்போய் இருக்கணும். அவனுக்கு சங்கரலிங்கம் எங்க இருப்பாங்கிறது மட்டுமில்ல அவனோட நடவடிக்கைகளும் அவனுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கணும். அங்க வேகமா ஓடிப் போய் சங்கரலிங்கத்தைக் கொலை செய்திட்டு, எஸ்ட்டேட்டுக்கு எப்படியோ திரும்பிப் போய்ச் சேந்திட்டான்னு என்னால உணர முடியுது. லாரிதான் எந்த நேரமும் போய்க்கிட்டேதான இருக்கு. அவன் இந்தக் கொலையத் திட்டமிட்டுச் செய்யலை. இது தற்செயலா நடந்திருக்கு. அவன் சொந்த ஊருக்கு வந்த காரணமே வேற. வந்த இடத்தில ஏதோ நிகழ்ந்திருக்கணும். அப்பிடித் தற்செயலா நடக்கிற காரியங்களுக்கு அவ்வளவா தடயங்கள் கிடைக்கிறதில்லை. திட்டம் தீட்டினா அவங்க தடையங்கள விட வாய்ப்பு இருக்கு. திட்டம் போட்டா, ஒன்னுக்கு மேற்பட்டவங்க செயல் பட்டிருக்கலாம், கடிதம் எழுதி இருக்கலாம், டாக்ஸிய உபயோகிச்சிருக்கலாம். அப்படிப் போட்ட திட்டம்கூட திடீர்ன்னு எதிர்படுற சூழ்நிலையச் சமாளிக்க முடியாம பிரச்சனைகள் வந்து தோல்வியில முடியாட்டாலும், பல ஓட்டைகள் விழுந்துவிடுவது உண்டு. அது நமக்கு தடயங்களாகக் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனால் இந்தக் கொலைக்கு தடயங்கள் ரொம்பக் குறைவு. ராவோட ராவா வந்திட்டுப் போன விரால்ராசுவைச் சொந்த ஊர்ல பாத்த யாராவது, நம்மட்ட வந்து சொன்னாத்தான். எஸ்ட்டேட்ல அவனை யாரும் காட்டிக்கொடுக்க மாட்டாங்கன்னு தோணுது. பெரியாண்டபுரத்திலேயும் யாரும் சங்கரலிங்கத்துக்குச் சாதகமாச் சாட்சி சொல்வாங்கன்னு எனக்குத் தோனல. அவன் பெண்டாட்டியே அவனுக்குச் சாதகமா சாட்சிசொல்வாளான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு சார். அதனால என்னால் இப்போதைக்கு எதையும் நிரூபிக்க முடியாது சார்,” என்றார் எஸ்.ஐ.

“இளங்கோ, எனக்குப் புரியுது. ஆனால் எத புரூவ் பண்ண முடியுமோ அதத்தான் நாம புரூவ் பண்ண முயற்சி செய்யணும். அதுக்கு வேண்டிய ஆதாரங்களை நாம தேடணும். நம்மளோட ஆழ் மனசு சொல்லிச்சுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. ஆனால், அதுக்கு முன்னால வேணும்மின்னா அந்த எஸ்ட்டேட்டுக்குப் போய், திரும்பவும் ஒரு தடவை என்குயரி பண்ணிட்டு வாங்க. நாம குமுளி போலீஸ் ஸ்டேஷன்ல உதவி கேக்கலாம். எஸ்ட்டேட் முதலாளி மிரட்டலுக்கெல்லாம் நாம பயப்படத்தேவையில்ல. நமக்கு வேண்டியது குற்றவாளி, எவிடன்ஸ்சோட. எவிடன்ஸ் இல்லாட்ட குற்றவாளி இல்ல. எவிடன்ஸ் இல்லாம நாம ஒருத்தனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தினோம்ன்னா, அது நம்ம எண்ணம், நம்ம விருப்பம் என்றாயிடும். ஏன் எவிடன்ஸ் இல்லாட்ட அது நாம விருப்பு வெறுப்பு இல்லாமல் உண்மையத்தான் தேடுகிறோம் என்பத விட்டுட்டு, ஒரு பக்கம் சாயிறோம் என்றாயிடும். எவிடன்ஸ்தான் எல்லாமே. நான் உடனே உங்களுக்கு எஸ்ட்டேட் போக ஏற்பாடு பண்றேன், அங்க இருக்கிற லோக்கல் இன்ஸ்பெக்டர் சண்முகவேல்கிட்ட உங்களுக்கு உதவி செய்ய சொல்றேன், அவர் எனக்கு ரொம்ப வேண்டியவர்தான்,” என்றார் இன்ஸ்பெக்டர் ராஜா.

“சரி சார்,” என்றார் எஸ்.ஐ.

“ஆமா அந்த அம்மணத் திருடனக் கண்டுபிடிச்சீங்களா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

முகமலர்ந்த எஸ்.ஐ., “ஆமா சார். அந்த ஆங்கிள்ல நல்ல ரிசல்ட் சார். யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம் ஆனா அவனுக்கும், சாரி, அவளுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்ல சார்,” என்றார்.

“வெரி குட். உங்களுக்கு முன்னாலேயே நான் அது ஒரு ஆண் இல்லை, அது ஒரு பெண்ணுன்னு முடிவு பண்ணிட்டேன். அவ கொலையாளியா இல்லாட்ட பரவாயில்ல. ஒரு முடிவுக்கு வந்திட்டோம் இல்லையா? ஆனா அந்த பொம்பளைய மீட் பண்ணணும். வெரி இன்ட்டரஸ்டிங் உமன்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

எஸ்.ஐ. சிரித்துக்கொண்டே, “குட் சார். அதுக்கு ஏற்பாடு பண்ணிரலாம் சார்,” என்றார்.

“அப்புறம், வேற என்ன இளங்கோ?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“வேற ஓண்ணும் இல்ல சார், ரொம்ப நன்றி சார்,” என்றார் எஸ்.ஐ.

அலுவல் முடிய இருவரும் நண்பர்களாய் ஒரு மணி நேரம் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். மசாலா தோசை, வடை உண்டு, டீ குடித்தபின் எஸ்.ஐ. இளங்கோ விடை பெற்றார்.





40

எஸ். ஐ. இளங்கோ இரண்டாவது தடவையாக நீலாம்பரி எஸ்ட்டேட்டுக்குச் சென்று விரால்ராசுவுக்கும் சங்கரலிங்கத்தின் கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்பது பற்றி விசாரிக்க முதலில் குமுளி சென்றார். அங்கு குமுளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலோடு அவரின் ஜீப்பில் எஸ்ட்டேட்டுக்கு வந்தார். நேராக முதலாளியின் அலுவலகத்திற்குச் சென்றனர்.

எஸ்.ஐ. இளங்கோவை மீண்டும் பார்த்த முதலாளி இராஜகோபால், எஸ்.ஐ. யைப்பார்த்து, “எஃப்ஐஆர் போட்டுட்டீங்களா,” என்றார்.

“இன்னும் போடல சார்,”

“ஏன், எவனாவது ஏமாந்தவன் மாட்டுவான்னு காத்திட்டிருக்கீங்களா?”

குமுளி இன்ஸ்பெக்டர் சண்முகவேல் இடையில் புகுந்து, “சார் நீங்க கோவிச்சுக்கிடக் கூடாது. அவர் யாரையும் அரஸ்ட் பண்ணவோ, அடிக்கவோ வரல. நாங்க எங்க டிப்பாட்மென்ட் வேலைய செய்யணும். இவர கொஞ்சம் என்கொயரி பண்ண விட்டீங்கண்ணா, அவர் வேலைய முடிச்சிட்டுப் போயிருவார். இந்த எஸ்ட்டேட்ல இருக்ககிறவங்க யாருமேலேயும் தப்பு இல்லண்ணு தெரிஞ்சால் போதும். அதை கிளியர் பண்ணிட்டா அவர் மத்த சஸ்பெக்ட்டுகள் மேல கவனத்த திருப்பலாம். இல்லையிண்ணா இந்த ஒரு ஆள பற்றி என்ன தெரியும், ஏன் என்கொயரி பண்ணலண்ணு கேள்வி வரும். ஒன்னும் இல்ல சார், இங்க வேலை செய்றவங்ககிட்ட கேள்வி கேக்கணும் அவ்வளவுதான்,” என்றார் பவ்வியமாக முதலாளியைப் பார்த்து.

எஸ்.ஐ. இளங்கோவும், “ஆமா சார். விரால்ராசு பெயரைக் கிளியர் பண்ணுறதுக்கும் என்கொயரி பண்ணித்தானே ஆகணும்,” என்றார்.

ஒரு நிமிடம் யோசித்த எஸ்ட்டேட் முதலாளி, “நான் சட்டத்தை மதிச்சு நடக்கிறவன். சப் இன்ஸ்பெக்டர், நான் ஒங்க என்குயரிய தடுக்கமாட்டேன். நீங்க இந்த எஸ்ட்டேட்டில எங்க வேணாலும் போகலாம், யார வேணுமின்னாலும் கேள்விகேக்கலாம். ஆனால் நீங்க யாரையும் அடிக்கவோ மிரட்டவோ கூடாது. நான் சட்டத்த மதிக்கிற மாதிரி நீங்களும் மதிக்கணும், அவ்வளவுதான். யாரையும் அரஸ்ட் பண்ணனும்னா அரஸ்ட்டு வாரண்டோட வாங்க,” என்றார்.

எஸ்.ஐ. மன நிம்மதியோடு, “எஸ் சார், என்கொயரி பண்ணிட்டுப் போயிடுறேன் சார்,” என்றார்.

எஸ்ட்டேட் முதலாளி, மேனேஜர் மோகனைப் பார்த்து, “நீங்க இவரு கூடப் போங்க. இவர் யார் யார்கிட்ட கேள்வி கேக்கணும்ங்காரோ அவங்ககிட்ட கூட்டிட்டுப் போங்க,” என்றார்.

எஸ்.ஐ. இளங்கோ, இன்ஸ்பெக்டர் சண்முகவேல், மேனேஜர் மோகன் மூவரும் முதலாளி இராஜகோபாலின் அறையைவிட்டு வெளியே போகத் திரும்பினர், அவர்கள் போவதற்குள், முதலாளி, எஸ்.ஐயை பார்த்து, “சார் நீங்க ஏங்கிட்ட கேள்வி கேக்கணும்மின்னாலும் கேளுங்க,” என்றார்.

“இப்போதைக்கு இல்ல சார், தேவன்னாச் சொல்றேன் சார்,” என்றார் எஸ்.ஐ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top