JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Alamarathu Paravaigal Chapters 41 & 42

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 41 & 42

41



எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், மேனேஜர் மூவரும் எஸ்ட்டேட் முதலாளி இராஜகோபாலின் அறையை விட்டு வெளியேறினர். அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த இராஜகோபால் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டார். தனக்கு ஏன் ஒரு சாதாரண கூலித்தொழிலாளியான விரால்ராசு மேல் இவ்வளவு பிரியமும் நம்பிகையும் ஏற்பட்டுவிட்டது, அதற்குக் காரணம் என்ன என்று தன்னையே கேட்டுக்கொண்டார்.

இரண்டு மூன்று வருடங்கள் இருக்கலாம், அவர் அலுவலகத்தில் முக்கியமான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் அறைக்கு வெளியே சின்ன சலசலப்புக்கேட்டது. பல நிமிடங்கள் கழித்தும் சலசலப்பு நிற்பதாய்த் தெரியவில்லை. “கிருஷ்ணா, என்ன அங்க?” என்றார் இராஜகோபால்.

அலுவலக வேலையாள் கிருஷ்ணன் வந்து, “அய்யா, தோட்ட வேலை செய்ற ஒரு தொழிலாளி ஒங்களக் கட்டாயம் பாக்கனுமிங்கிறான் சார். எவ்வளவோ சொல்லியும் முதலாளிய பாக்காம போகமாட்டேன் எங்கிறான் சார். ஆபீஸ் மேனேஜர் கேட்டுப்பாத்தாரு, அவன் ஒங்களத்தான் பாக்கனும்ன்னு பிடிவாதமா நிக்கிறான் சார்,” என்றான்.

“சரி வரச்சொல்,” என்றார் இராஜகோபால்.

இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க, சுமார் ஐந்தே முக்கால் அடி உயரத்தில் கொஞ்சம் மெலிந்த மனிதன் ஒருவன் உள்ளே நுழைந்தான். அவன் கூர்மையான நாசியுடன் மாநிறமாக இருந்தான். அவன் நடந்த விதமே அவன் ஒரு பெரிய பலசாலியாய் இருப்பான் என்று சொல்லிற்று. நல்ல சுருட்டை முடி, சரியாக வெட்டப் பட்டிருந்தது. சிறிய அழகான மீசையை சரியாக கத்தரித்து வைத்திருந்தான். பற்கள் பளிச்சென்று வெள்ளை வெளேர் என்று மின்னியது. அவன் உள்ளே நுழைந்ததும் அவனது துளைக்கும் கண்கள் இராஜகோபாலை நேராக நோக்கின.

அமைதியாய் வந்த அவன், “அய்யா வணக்கம்,” என்று பணிவாய்ச் சொன்னான்.

“என்னப்பா விசயம்,” என்றார் இராஜகோபால்.

உடனே தன் சட்டைக்குள் கையை விட்டு ஒரு பிளாஸ்டிக் கைப்பையை எடுத்து முதலாளியின் மேஜைமேல் வைத்தான்.

“இதை எங்க இருந்து எடுத்த?”

“அய்யா, வழியில கிடந்தது, ரொம்ப முக்கியமானதா தெரிஞ்சது. அதான் உங்ககிட்ட நேரடியா ஒப்படைச்சுட்டு போகலாமின்னு வந்தேன்,”

பையை எடுத்து ஜிப்பைத் திறந்தவர் அதிர்ந்தார், “நீ தெறந்து பாத்தயா?”

“ஆமா சார். அதுனாலதான் ஒங்க கையில ஒப்படைக்கனும்மின்னு வந்தேன்,”

“கிருஷ்ணா, போய் உடனே அக்கவுண்டன்ட், எஸ்ட்டேட் மேனேஜர் ரெண்டுபேரையும் கூட்டியாப்பா,” என்றார் இராஜகோபால்.

கிருஷ்ணன் போன பின், “இதுல எவ்வளவு காசு இருக்குன்னு தெரியுமா?” என்றார் இராஜகோபால்.

“தெரியாது சார். ஆனா ரொம்ப நெறையா இருக்குண்ணு புரிஞ்சுக்கிட்டேன். இவ்வளவு காசு இருக்கிற பை இங்க ஒங்க பையாத்தான் இருக்கணும்மின்னு கொண்டாந்திட்டேன் சார்,”

“ஒம் பேர் என்ன”

“விரால்ராசு சார்”

இராஜகோபால் தன் சொந்த கைப்பையை எடுத்து அதிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். “நல்லது விரால், நல்ல காரியம் பண்ணியிருக்க. ஒன்ன மாதிரி ஆட்கள் நம்ம எஸ்ட்டேட்டுக்கு ரொம்ப முக்கியம். நீ போய்ட்டு வா. என்ன விசயம்ண்ணாலும் இனி நீ நேரடியா எங்கிட்ட வா,” என்று வழி அனுப்பிவைத்தார்.

தலைசாய்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு விரால்ராசு வெளியே வந்தான். அவன் வெளியே வருவதற்கும் அக்கவுண்டண்ட் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“வணக்கம் சார்,” என்றார் அக்கவுண்டண்ட்.

“இந்தாங்க, இப்பிடி உக்காந்துகிட்டு எண்ணிப் பாத்து சொல்லுங்க,” என்று சற்றுமுன் விரால்ராசு கொடுத்துவிட்டுச் சென்ற பையைக் கொடுத்தார்.

அக்கவுண்டண்ட் முதலாளியின் எதிரே அமர்ந்து, பணத்தை எண்ணினார். அவர் எண்ணி முடிக்கும் வரை இராஜகோபால் யோசனையில் ஈடுபட்டிருந்தார்.

சில நிமிடங்களில் எண்ணி முடித்த அக்கவுண்டண்ட், “இருபத்தாறாயிரத்து முன்னூத்தி ஐம்பது சார்,” என்றார்.

இராஜகோபால், சிரித்துக்கொண்டே, “ஒரு பைசாக்கூட கொறையல. நல்லவந்தான். நான்தான் தப்புப் பண்ணியிருக்கேன். இதுதான் டிரைவர் இல்லாம பேங்க்குக்கு, அதுவும் தனியா, போகக்கூடாதுங்கறது,” என்றார்.

அக்கவுண்டண்ட் புரியாமல் விழித்தார்.

இராஜகோபால், “ஒங்களுக்கு விளக்கமாச் சொன்னாத்தான் புரியும். இந்தப் பைய கொண்டு வந்து கொடுத்திட்டுப் போனது யாருன்னு தெரியுமா?” என்றார்.

அக்கவுண்டண்ட் ஓரளவு புரிந்தவர் போல், “அப்பிடியா சார். அவன் இதுக்குத்தான் வந்தானா? நல்லவனா இருக்கப்போய் குடுத்திட்டான் சார்,” என்றார்.

“அவன் மட்டும் இத ஒளிச்சு வச்சிட்டு கொஞ்ச நாள் கழிச்சு ஊருக்கு எடுத்திட்டு போயிருந்தாண்ணா அவன் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டியது இருக்காது. அவன் தெறந்து பாத்திட்டுத்தான் கொண்டு வந்திருக்கான். ரொம்ப நல்லவனா இருக்கணும்,” என்றார் இராஜகோபால்.

“ஐயோ சார், அப்பிடி ஆயிருந்தா நாளைக்கி நாம எப்பிடி நூத்தி ஐம்பது பேருக்கு சம்பளம் போடுறது. சரி அவன் கைக்கு எப்பிடி இது போச்சு,” என்றார் அக்கவுண்டண்ட்.

“ஜீப்பில நான் கடைக்குப் போய்ட்டு வரும் வழியில, பாங்குக்குப் போயி பணத்த எடுத்திட்டு வந்திரலாம்ன்னு போனேன். பணத்த எடுத்துப் பைய பக்கத்து சீட்டில வச்சிருந்தேன். யோசிச்சுக்கிட்டே ஜீப்ப ஓட்டிக்கிட்டு வந்ததுல பை சீட்டில இருந்ததை மறந்திட்டேன். நாம்பாட்டுக்கு ஓட்டிக்கிட்டு வந்தப்ப திரும்பும் போது வழுக்கி விழுந்திருக்கணும். நல்ல வேளை நம்ம எஸ்ட்டேட்டுக்குள்ள வந்த அப்புறம் விழுந்திருக்கு, அதுவும் நல்லவன் கண்ணுல பட்டிருக்கு,” என்றார் இராஜகோபால்.

அப்போது தோட்ட வேலை செய்யும் தொழிலாளிகளை மேற்பார்வையிடும் மேனேஜர் மோகன் வந்தார். இராஜகோபால், அக்கவுண்டண்ட் இருவருக்கும் வணக்கம் சொன்னார்.

இராஜகோபால், “உங்களுக்கு விரால்ராசுங்கிறவனைத் தெரியுமா?” என்றார்.

மோகன் அவசரமாக, “ஆங் தெரியும் சார். ரொம்ப கடினமான உழைப்பாளி சார். ஏதாவது தப்புக்கிப்புப் பண்ணி மாட்டிக்கிட்டானா சார்? பெரிசா ஒன்னும் இல்லன்னா மன்னிச்சி விட்டுருங்க சார். ரெண்டு பேர் பாக்கிற வேலைய அவன் தனியாப் பாத்திருவான் சார். அவன் போய்ட்டா எனக்கு ஒரு கையே ஒடிஞ்சது மாதிரி இருக்கும் சார்,” என்று தொடக்கம் முதல் முடிவுவரை அவசரமாக பேசினார்.

“அவன் வேலைக்கு வந்து எவ்வளவு நாள் ஆகிறது?” என்றார் இராஜகோபால்.

“ரெண்டு வருசம் இருக்கும் சார். நல்ல பையன் சார். நல்ல உழைப்பாளி சார். தப்பு ஏதாவது பண்ணிட்டானா சார்?” என்றார் மோகன் அவசரமாக.

இராஜகோபால், “தப்பு ஒன்னும் பண்ணல. நல்லதுதான் செய்திருக்கான். விரால் மாதிரி ஆள்களை நாம விட்டிரக்கூடாது. நான் கீழே போட்ட கேஷ் பைய பத்திரமாக் கொண்டுவந்து கொடுத்திட்டான். நீங்க நல்ல உழைப்பாளிண்ணு வேற சொல்றீங்க. அவன நல்லா பாத்துக்கோங்க. முடிஞ்சா அவன என்ன வீட்டில வந்து பாக்கச் சொல்லுங்க,” என்றார்.

“சரி சார், இன்னைக்குச் சாயங்காலமே வந்து பாக்கச்சொல்றேன் சார்,” என்ற மோகன் விடைபெற்றார்.




42

அன்று மாலை விரால்ராசு முதலாளியின் வீட்டுக்குச் சென்றான். இராஜகோபால் அவனை மகிழ்ச்சியோடு வரவேற்றார். “வா விரால். நீ நல்ல உழைப்பாளின்னு மோகன் சொன்னார். நான் ஒன்ன இங்க கூப்பிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. எனக்கு உதவிக்கு அப்ப அப்ப ஒரு ஆள் தேவைப்படும். ஒன்ன மாதிரி நம்பகரமான ஆள்தான் நல்லது. எஸ்ட்டேட் வேலைய முடிச்சிட்டு வந்தாப் போதும். நீ பாக்கிற வேலைக்கு நான் தனியா சம்பளம் குடுத்திடுறேன். சமையல், சுத்தம் பண்ற வேலைக்கெல்லாம் ஆள் இருக்காங்க. நீ எனக்கு வேணுங்கிறத செய்து கொடுத்து உதவி செய்யதாப் போதும்,” என்றார்.

“கட்டாயம் வாரேன் சார்,” என்றான் விரால்ராசு. அவனுக்கு முதலாளி தன்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசியதில் பெரும் மகிழ்ச்சி.

முதலாளி சொன்னதுபோல் அவர் வீட்டில் எல்லா வேலைக்கும் ஆள் வைத்திருந்தார். விரால்ராசு முதலாளியின் தனிப்பட்ட உதவியாளாய் நடந்துகொண்டான். அவருடைய அறையைச் சுத்தம் செய்வான், அவருக்குக் கைகால் பிடித்து விடுவான். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் கூட வாக்கிங் போவான், போகுமுன்னமே சமையலாளிடம் சொல்லி பிளாஸ்க்கில் சூடாக டீ கொடுக்கச் சொல்லி எடுத்துச் செல்வான். அவர் களைத்துப்போய் உட்கார்ந்தால் டீ ஊற்றிக்கொடுப்பான்.

பல சமயம் அவர் கேட்காமலேயே அவர் மனதை அறிந்தவன் போல் அவருக்கு எது தேவையோ அதைச் செய்வான், விரால்ராசு. அவர் மனைவி சிலசமயம் எஸ்ட்டேட்டுக்கு வந்து தங்குவது உண்டு, அப்போதெல்லாம் அந்த அம்மாவுக்கு தேவைப்பட்ட எல்லா உதவிகளையும் செய்தான். விரால்ராசு தன் கணவனைக் கவனித்துக்கொள்ளும் விதத்தைப் பார்த்துவிட்டு, “இனி நீங்க எப்பிடி இருக்கீங்களோண்ணு நான் கவலைப் படுறதை விட்டுரலாம். இந்தப் பையன் உங்கள பெத்தபிள்ளையாக் கவனிச்சுக்கிடுறான்,” என்றாள் முதலாளியின் மனைவி.

ஒரு நாள் இரவு இராஜகோபால் விஸ்கி அதிகம் குடித்துவிட்டு அவர் அறையில் வாந்தி எடுத்துவிட்டார். தற்செயலாய் அங்கு வந்த விரால்ராசு இரவோடு இரவாக அவர் வேட்டி சட்டையையும், அறையையும் சுத்தம் செய்து விட்டான். விடிந்தபின் வந்தவர்கள் எவருக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ஏன் இராஜகோபாலுக்கே அங்கே, அவர் அறையில், எல்லாம் சரியாகத்தான் தோன்றின. ஆனால் இராஜகோபால், மற்ற முதலாளிகளைப்போல் அல்ல, மனிதனை மதிக்கத் தெரிந்தவர், அதைவிட, அறிவுப்பூர்வமானவர், சிந்திக்கக்கூடியவர்.

இராஜகோபால், விராலைப் பார்த்து, “ஏன் விராலு, நேத்து நான் வாந்தி கீந்தி எடுத்தேனா?” என்றார்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலயே சார்,”

“பின்ன கனவுதான் கண்டேனோ,”

“ஆமா சார், கனவாத்தான் இருக்கும்,”

இராஜகோபால் சிரித்துக்கொண்டே, “சரி, சரி, கனவுல சட்டையக்கூட மாத்திட்டேன் போல இருக்கு,” என்றார்.

விரால்ராசு உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் மௌனம் சாதித்தான்.

“ஏன் விராலு உண்மையச்சொல்லு, நீ ஒம் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டதான?” என்றார் இராஜகோபால்.

அமைதியாக பதில் சொன்னான், “ஆமா சார். ஆனா அய்யா மனச வருத்தப்பட வைக்கக்கூடாதுன்னு நான் சிரிக்கல. தமாசான விசயத்தக்கேட்டா சிரிப்பு வரும், ஆனாலும் இடம், பொருள் ஏவலுன்னு சொல்லுவாங்க எங்க ஊர்ல,” என்றான் விரால்ராசு.

“அது என்னய்யா ஒங்க ஊர். இப்படி எல்லாத்தையும் சொல்லிக்குடுத்த ஊர்,”

உண்மையிலேயே மௌனம் சாதித்தான் விரால்ராசு.

இராஜகோபால் சத்தமாக இரைந்தார், “டேய் நீ மட்டும் படிச்சிருந்தேன்னு வச்சுக்கோ, நீ எங்க இருப்பன்னு சொல்லவே முடியாதுடா,” என்றார்.

சிரித்துக்கோண்டே, “எனக்குத்தெரியும் சார், நான் படிச்சிருந்தேன்னா எங்க இருப்பேன்னு,” என்றான்.

“எங்கடா இருப்ப?”

“ஏழாம் வகுப்பு வாத்தியாராய்.”

“ஏண்டா ஏழாம் வகுப்பு வாத்தியாருன்னா அவ்வளவு கேவலமா?” என்று கோபித்துக்கொண்டார் இராஜகோபால்.

விரால் சற்றும் அசராமல், “இல்ல சார், எங்க ஊர்லயே புத்திசாலிண்ணு பேர் எடுத்தவர் ஏழாம் வகுப்பு வாத்தியாராய் இருக்கிறார். நான் அவரை விட மேலானவன் என்று சொல்ல முடியாது,” என்று வசனம் பேசினான்.

இராஜகோபால் சிரித்தார். பின், “விரால், நல்லதுப்பா. நீ தோட்டத்தில வேல செய்திட்டு, நேரம் இருந்தா வா. நீ நல்லா இருப்ப. போய்ட்டு வா,” என்று வாழ்த்தி அனுப்பினார்.

இராஜகோபால் சொன்ன மாத்திரத்தில் ஓடினான் விரால்ராசு வேலைக்கு. நான் சாப்பிடவில்லை, குளிக்கவில்லை என்ற எந்தப் புகாரும் தொடுக்காமல் நேரடியாக வேலைக்கு ஓடினான். எதையோ உண்டு, எதையோ அருந்தி உயிர் வாழ்ந்தான் இந்த விரால்ராசு.

இராஜகோபால் விரால் சென்றபின் நினைத்துப் பார்த்தார், விரால் அவருக்காக மட்டும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவில்லை. அவர் குடும்பத்துக்காகவும் அவன் தன்னால் இயன்றமட்டும் பாடுபட்டிருக்கிறான் என்று உணர்ந்தார். அவருடைய பிள்ளைகள், பேரன், பேத்தி, யார் வந்தாலும், மிகப் பொறுமையாய், அன்பாய், அவர் அவர் வயதுக்கு ஏற்றாற்போல், ஒரு பாதுகாவலனாய், ஒரு சேவகனாய், ஒரு நண்பனாய், ஒரு அன்னையாய், ஒரு தகப்பனாய், ஏன் ஒரு ஆசிரியனாய்க்கூட நடந்துகொண்டிருக்கிறான் இந்த விராலுப்பயல். எப்படி முடிந்தது அவனால், என்று எண்ணி எண்ணி வியந்ததுண்டு அவர்.

சொல்றேன் சார்,” என்றார் எஸ்.ஐ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top