JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vetai - Episode 11

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 11

திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன் பிடிவாதமாய் அண்ணை ஸ்ரீமதி அருந்த கொடுத்த பாலே துர்கா தன் வயிற்றுக்கு அவள் கடைசியாய் இட்ட ஆகாரம்.

அதற்கு அடுத்து மறு நாள் காலை கண் விழித்ததற்குப் பிறகு ஜாஃபர் வைத்துச் சென்றிருந்த உணவை பார்வையால் கூட அவள் தொடவில்லை.

மயக்க மருந்தின் மிச்சமும், வெறும் வயிறும், நீர் கூட அருந்தாத தொண்டையும் ஏற்கனவே சோர்வினை அளித்திருக்க, இப்பொழுது வந்திருப்பது தன்னைக் காப்பாற்ற போகும் மாமன் அல்ல, தன்னைக் கடத்தி இங்கு அடைத்து வைத்திருக்கும் கொடியவனே என்பதை அறிந்த அக்கணம் நெஞ்சுக்கூட்டின் நடுப்பகுதிக் கூட நடுங்கியது.

இதனில் தன்னை அவன் திரும்பி நோக்கியதும் அவனது எடைபோடும் கூர்மையான பார்வையைக் கண்டு அரண்டு போன கண்கள் அகலவிரிந்துப் பார்க்க, சிலையென நிற்கும் தன்னை விநாடிகள் நேரம் பார்த்தவனின் பார்வையில் தெறித்த கணைகள் அவளின் இதயத்தை ஊடுருவி உலுக்கிப் போட்டது.

"சார், காலையில் தான் மயக்கத்தில் இருந்து தெளிஞ்சு எழுந்திருச்சா. நான் கொடுத்த சாப்பாட்டையும் சாப்பிடலை."

கூறிய ஜாஃபரை ஒரு முறைத் திரும்பிப் பார்த்த வருண் தேஸாய் நிதானமான வேகத்துடன் அவளை நோக்கி நடக்க, தன்னையும் அறியாது சட்டெனப் பாதங்களைப் பின்னுக்கு எடுத்து வைத்து நகர்ந்தவளின் போக்கில் அவனது விழிகளில் வியப்பு மண்டியது.

‘அப்பேற்பட்ட என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஷிவ நந்தனிற்கு இப்படிப் பயத்தில் நடுங்கும் மணமகளா?’

கடத்தப்பட்டிருக்கும் பெண்ணின் நிலை என்னவாக இருக்கும் என்று தெரிந்திருந்தாலும் ஏனோ அவளது அரண்டு ஒடுங்கும் தோற்றம் அவனுக்குள் இக்கேள்வியைத் தோற்றிவிக்கவே செய்தது.

மனத்திற்குள் எண்ணமிட்டவாறே நடக்க, தனது ஒவ்வொரு அடிக்கும் அவள் பல அடிகள் எடுத்து வைக்க வேண்டியதாய் இருக்கும் அளவிற்கு நீண்ட கால்கள் கொண்டு நடந்து வந்த வருண் அவள் கண்ணிமைத்து முடிப்பதற்குள் அவளை நெருங்கிவிட்டிருந்தான்.

தன்னை ஏன் கடத்தினார்கள் இவர்கள் என்ற கேள்விக்கு நேற்றில் இருந்து பதிலைக் கண்டறிய முயற்சித்துத் தோல்வியுற்றிருந்தவளுக்கு, இப்பொழுது விடைக்கூற தகுதியுடையவன் இவ்வளவு அருகில் இருந்தும் கேள்வி கேட்பதற்கான தைரியம் மட்டும் வரவே இல்லை.

அவ்வளவு கல்லாய் இறுகி இருந்தது அவனது முகம்.

ஷிவ நந்தனை சிறுவயது முதலே பார்த்திருந்தாலும் ஏனோ அவனைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு சிங்கத்தை அருகில் பார்க்கும் எண்ணம் தான் வரும் துர்காவிற்கு.

அதனிலும் அவன் தன் யூனிஃபார்மில் இருக்கும் நேரமெல்லாம் ஒரு விரைப்புடன் கடினமும் கலந்தே தோன்றும் அவனது முகமும், தோரணையும் அவளுக்குக் கிலியை ஏற்படுத்தும்.

திருமணத் தேதியை குறித்ததற்குப் பிறகு அவனிடம் அடிக்கடி பேசும் சந்தர்ப்பம் வாய்த்ததன் பலன், அதுவும் மருமகனிடம் பேச தயக்கம் கொண்டவராய் ஸ்ரீமதி மகளை அவனிடம் பேச பணிக்க, வேறு வழியின்றிச் சற்று உரையாடத் துவங்கியவளுக்குக் கடந்த ஒரு சில மாதங்களாய் தான் சிறிதே பயம் அகன்றிருந்தது என்று கூறலாம்.

ஆனால் இவன்?

அடர்ந்த விருட்ஷங்களின் கிளைகளை இடித்துவிடும் அளவிற்கான உயரத்தில், அவனது சிவந்த நிறத்திற்கு ஏற்றார் போன்று செதுக்கி வைத்ததைப் போன்ற அழகிய முகம் என்றாலும், சிரிப்பு என்பதே இல்லாத உதடுகளும், கனிவை மறந்திருக்கும் துளைத்தெடுக்கும் கண்களும் அநியாயத்திற்கு அச்சத்தைக் கொணர்ந்தது பெண்ணவளுக்கு.

முகம் திகிலில் வெளிறிப்போக, கீழ் உதட்டை கடித்துச் சமாளிக்க முயன்றவாறே தலை குனிந்தவளை அவனது ஆழ்குரல் கேள்வி மென்மேலும் திகிலுறச் செய்தது.

"ஜாஃபரிடம் ஏதோ கேட்டியாமே, அதை என் கிட்ட கேளு."

"*******"

"நான் இருக்கும் வரை இங்க என்னைத் தவிர வேற யாரும் உன்கிட்ட பேசப் போறதில்லை. ஸோ, எது பேசறதா இருந்தாலும் நீ என்கிட்ட மட்டும் தான் பேசணும்.. கமான், சொல்லு."

ஆளுமையுடன் அதிகாரமாய் அவன் கேட்டாலும் அப்பொழுதும் அவளிடம் பதிலில்லை.

சற்றே பார்வையைத் தாழ்த்திப் பார்க்க, இரு கர விரல்களையும் இரத்தம் தெறித்துவிடும் அளவிற்கு இறுக்கப் பிடித்துப் பிசைந்தவாறே நின்றவளை மேலும் நெருங்கியவன், அவளின் தாடையைப் பிடிப்பதற்குக் கரத்தைக் கொண்டு போன தருணம் மெல்லமாய் அலறியவளாய்ப் பின்னால் நகர்ந்தவள் சுவற்றில் மோதி நின்றாள்.

"நான் உன்னைத் தொடக் கூடாதுன்னா நான் பேசும் போது என்னைப் பாரு, என் கேள்விகளுக்குப் பதில் சொல்லு. இல்லைன்னா நான் உன்னைத் தொட்டுத்தான் ஆகணும்."

இதற்கு மேலும் பேசா மடைந்தயாய் நிற்க அவள் என்ன முட்டாளா?

நெஞ்சத்தின் அடி ஆழத்தில் இருந்து மூச்சினைக் கொண்டு வந்தவள் பெரு மூச்செறிந்து திடப்படுத்திக் கொண்டவளாய், மெல்ல உதடுகளைப் பிரித்தாள்.

"என்னை எதுக்குத் தூக்கி வந்தீங்க?"

அவளுக்கே கேட்காத சன்னமான குரலில் கூற, இதில் அவ்வப்பொழுது அடித்துக் கொண்டிருந்த காற்றில் அசைந்த மர இலை தழைகளின் ஓசை வேறு அவளது சாரீரத்தை அவனிடம் சரியாகக் கொண்டு சேர்க்கவில்லை.

ஆயினும் அவள் என்ன கேட்க வருகின்றாள் என்பதையும் அவன் அறிந்து தானே வைத்திருந்தான்.

இருந்தும் மெள்ள அவளை நோக்கி குனிந்தவனாய் தன் இடது கரத்தை சுவற்றில் பதிய வைத்தவாறே, "எனக்குப் புரியலை.." என்றான்.

அவனது உதடுகள் இப்பொழுது அவளது முகத்திற்கு வெகு அருகில் உரசிவிடும் தூரத்தில் இருக்க, சுவற்றைப் பிளந்து கொண்டு உள்ளே போய் விடமாட்டோமா என்று உள்ளுக்குள் கதறியவளாய் சுவற்றின் மீது மேலும் அழுந்த சாய்ந்தவள், "எ.. எ.. என்னை எதுக்குத் தூ.. தூ.. தூக்கி வந்தீங்க?" என்றாள்.

திடுமெனத் தடுமாறும் அவளது குரல் வருண் தேஸாய்க்குள் புன்னகையைக் கொண்டு வந்தது.

அதனை வெளியில் காட்ட விரும்பாதது போல் சட்டெனத் தலையை மறுபுறமாய்த் திருப்பி மறைத்தவன் மீண்டும் அவளை நோக்கினான்.

"இன்னுமா அது உனக்குத் தெரியலை?"

விழிகள் நீரை வெளியில் தள்ள, உதடுகள் துடிக்க அவனை ஏறெடுத்துப் பார்த்தவள், ஏதோ பேச வருவது போல் மீண்டும் உதடுகளைத் திறந்து பிறகு இறுக்க மூடியவளாய் மீண்டும் தலை குனிந்தாள்.

"கொஞ்ச நாளுக்கு முன்னாள் அடிக்கடி டிவியில் நியூஸுல, பேப்பர்ஸில் எல்லாம் என்னைப் பார்த்திருப்பியே. அதுவும் எல்லாச் சேனல்ஸிலும். உன் மாமன் மகனோட போட்டோவையும் என் போட்டோவையும் சேர்த்து தானே காட்டிட்டு இருந்தாங்க, பார்க்கலையா, என்ன?"

நேற்று ஹெலிகாப்டரில் தன்னை அலேக்காய் குழந்தையைப் போல் தூக்கி உள் திணித்த நேரத்தில் அவனைப் பார்த்திருந்தவளுக்கு அவனை வேறு எங்கேயோ பார்த்த நியாபகம் துளிர்த்தெழுந்திருந்தது.

பிறகு கூர்ந்து கவனிக்க, அப்பொழுது புரிந்து போனது.

SSP ஷிவ நந்தன் IPS-ஆல் கைது செய்யப்பட்டிருக்கும் பிரபல தொழிலதிபர், தேஸாய் குழுமங்களின் CEO, யங் பிஸ்னஸ் டைக்கூன், இந்தியாவின் தலையாய ஐந்து தொழிலதிபர்களின் வரிசையில் வகிப்பவன் என்று பலவிதமாய் வர்ணிக்கப்பட்டுக் கொண்டிருந்த வருண் தேஸாய் இவன் தான்.

"நான் யாருன்னு தெரியுதுதான? அப்ப நான் ஏன் உன்னைத் தூக்கிட்டு வந்திருக்கேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கணுமே? பிறகு எதுக்கு இதே கேள்வியைத் திரும்பத் திரும்ப எல்லார்கிட்டேயும் கேட்டுட்டே இருக்க?"

மிடுக்காய் வினவியனிடம் பதில் கூற வழியறியாதவளாய் நிலத்தில் புதைந்து கொள்ளும் அளவிற்கு மேலும் தலை கவிழ, என்ன நினைத்தானோ சட்டென்று அவளது கரம் பற்றினான்.

அந்தக் கரத்தின் வலிமை, அதன் இறுக்கம், தன்னை வன்மையாய் பிடித்திருந்ததில் புடைத்திருந்த அவனது தசைகள் என்று அனைத்துமே துர்காவிற்குத் தான் இவனிடம் இருந்து எப்படியும் தப்பித்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையை அடியோடு அறுத்தெறிந்தது.

தன்னைச் சுற்றி துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களைச் சுமந்திருக்கும் ஆட்களைக் கண்டுக்கூட வராத ஒரு விதமான அபாயகரமான திகில் ஏன் இவனைக் கண்டதும் வர வேண்டும்?

யோசித்தவளுக்கு அவன் பிடித்திருந்த அவளது கரம் மட்டுமல்ல, உச்சி முதல் பாதம் வரை அவளின் தேகம் முழுவதிலுமே உதறல் எடுக்க, அவளின் நடுக்கத்தை உணர்ந்தவனாய் அவளைச் சட்டென்று இழுத்தவன் அப்படியே அக்குடிலுக்குள் அழைத்துச் சென்றான்.

*******************************************************

"ஷிவா, எனக்குத் தெரிஞ்சவரை சிதாராவுக்கு வருணைப் பற்றிய முழு விவரமும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னவோ அவளால் உதவ முடியும், அதுக்கு உன்னை நேரில பார்க்கணும்னு சொல்றான்னு சொல்ற. இதுல அவள் எப்ப, எங்க இருப்பா, யார் கூட என்ன பேசிட்டு இருப்பான்னு வருணுக்குத் தெரியும்னு வேற சொல்றான்னு சொல்ற? இவளை எப்படி நம்பறது?”

அஷோக்கின் சந்தேகம் ஷிவ நந்தனிற்கும் இருக்கத்தான் செய்தது.

ஆயினும் துர்கா கடத்தப்பட்டு ஒரு நாள் முழுதாகக் கடந்திருந்த பொழுதும் அவள் இருக்கும் இருப்பிடம் தெரியாது குழம்பியிருந்தவனுக்கு, சிதாராவின் அழைப்பு ஏனோ ஒரு சிறு துடுப்பு போல் நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.

"அஷோக், நேத்திலருந்து நாமளும் தேடுறோம். வருணுடைய ஆட்களை ஏத்திட்டுப் போன ஹெலிகாப்டர் மதுரைக்குப் பக்கத்தில இறங்கியதாகவும், அதில் இருந்தவர்கள் வேற கார்களில் ஏறிப் போயிட்டதாகவும், திரும்பவும் அந்த ஹெலிகாப்டர் கிளம்பிட்டதாகவும் சொன்னாங்க. ஆனால் நம்மால் அவங்களைப் பிடிக்க முடிஞ்சதா? இல்லை ஏதாவது ஒரு க்ளூவாவது [Clue/துப்பு] கண்டுப்பிடிக்க முடிஞ்சதா? பட், அந்த ஹெலிகாப்டரை ஃபாலோ பண்ணுறதைவிட வருண் துர்காவை தூக்கிட்டுப் போன ஹெலிகாப்டரைத் தேடலாம்னு பார்த்தால், அது மாயமாய் மறைஞ்சிட்ட மாதிரி இருக்கே. இதுல கிடைக்குற ஒரு வழியையும் சரியா தெரிஞ்சுக்காமல் அடைச்சிட முடியாது. அதனால் நான் சிதாராவை மீட் பண்ணியே ஆகணும்."

"இப்போ மட்டும் அந்தச் சிதாரா எங்க இருக்கான்னு வருணுக்குத் தெரியாமல் போயிடுமா?"

"கண்டிப்பா தெரியும், அதுக்குத் தான் எனக்கு உன் உதவி தேவைப்படுது. அவளை யாருக்கும் தெரியாம நான் சந்திக்கிறதுக்கு நீ தான் எனக்கு உதவி செய்யணும்."

"சரி, சொல்லு, என்ன செய்யலாம்?"

நண்பனை மேலும் நெருங்கிய ஷிவ நந்தன் தன் திட்டத்தைப் பகிர்ந்தான்.

நெற்றிப் பொட்டை சில விநாடிகள் தேய்தவாறே யோசித்த அஷோக்,

"சரி ஷிவா, ஆனால் அந்தப் பொண்ணு உன்னைத் திசை திருப்பாமல் இருந்தால் சரி. அதாவது அவளை நம்பி நீ வேற திசையில் துர்காவைத் தேடி நேரத்தை வீணடிச்சிடக் கூடாது. உனக்கே தெரியும் ஒவ்வொரு நொடியும் இப்போ நமக்கு எவ்வளவு முக்கியம்னு.." என்றவன் மருத்துவமனையில் இருந்து வெளிவர, அடுத்தச் சில மனி நேரங்களிலேயே தேவேந்திரனுக்குச் சொந்தமான பண்ணை வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் சிதாரா.

இளம் வயதிலேயே தொழில் விஷயமாகச் சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்த தேவேந்திரனுக்கு அழகிய வயல் வெளிகள், தென்னந்தோப்பு, பரந்து விரிந்துக் கிடக்கும் மாந்தோப்பு, கம்பீரமாக எழுந்து நிற்கும் தேக்கு மரங்கள் என்று பல நூறு ஏக்கர் நிலபரப்புகளும், தோப்பு துரவுகளும் சொந்தமாக இருந்தன.

தோப்புகளுக்கு நடுவில், நகரத்தின் சலசலப்புகளில் இருந்து விலகி ஓய்வெடுக்கவும், பசுமை நிறைந்த மரங்களுக்கு நடுவில் இயற்கையின் மடியில் அவ்வப்பொழுது தலை சாய்த்து இளைப்பாறவும் என்று பண்ணை வீட்டினைக் கட்டியிருந்தார் தேவேந்திரன்.

வருடத்திற்கு ஒரு முறை பண்ணை வீட்டிற்கு மனைவியுடன் விஜயம் செய்பவரைக் கவனிப்பதற்கு என்று காளி, பொன்னி என்று வேலையாட்களும் உண்டு,

அந்தப் பண்ணை வீட்டில் தான் சிதாராவை சந்திக்க ஏற்பாடுகள் செய்திருந்தான் ஷிவ நந்தன்.

பல வருடங்களாகப் பண்ணையில் வேலைப் பார்க்கும் நம்பகமான காளியிடம் அவ்வீட்டினை கவனித்துக் கொள்ளும் பொறுப்பினையும் சேர்த்துக் கொடுத்திருந்தார் தேவேந்திரன்.

அவர்கள் வரும் பொழுது அவர்களைப் பசியாற்றுவது காளியின் மனைவியான பொன்னியின் பொறுப்பு.

"காளி, நான் சொன்னப் பொண்ணு இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவா. ஏற்கனவே சொன்னது மாதிரி இந்த விஷயம் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் தெரியக் கூடாது.."

"நீங்க சொல்லணுமாய்யா. பொன்னிக்கிட்ட சொல்லிட்டேன், அந்தப் பொண்ணு நம்ம பண்ணைய விட்டு போற வரைக்கும் யாரும் இந்தப்பக்கம் வந்துடாம பார்த்துக்கன்னு. பொன்னி பண்ணை வீட்டுக்குப் பின்பக்கம் காவல் காக்குறா, நான் முன்பக்கமா இருக்கேன். ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க.."

கூறிய காளி பண்ணை வீட்டை விட்டு வெளியேற, நேரம் கடந்ததே ஒழிய சிதாராவை அழைத்து வரச் சென்ற அஷோக் வருவதாய்த் தெரியவில்லை.

தனது அலைபேசியில் மூழ்கிய ஷிவா, அவ்வப்பொழுது கண்களை மூடி பொறுமையை இழுத்துப்பிடிக்க முயற்சிக்க, ஒரு வழியாய் சற்றுத் தொலைவில் ஒரு கார் வரும் சத்தம் கேட்டது.

விடுவிடுவென்று வீட்டின் முன் வாயிலிற்கு அருகில் இருக்கும் ஜன்னலை நோக்கி நடந்தவன் அதன் திரையை இலேசாக விலக்கிப் பார்க்க, பண்ணை வீட்டின் புறவாயிலிற்குள் நுழைந்த காரைக் கண்டதும் அவனது விழிகள் சுருங்கின.

இது அஷோக் தானா என்று அவன் யோசித்து முடிக்கும் முன், காரின் ஓட்டுநர் பகுதியில் இருந்து இறங்கிய அஷோக் ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தலையசைக்க, காரின் பின் பகுதியில் இருந்து இறங்கிய சிதாராவின் கண்களில் தெரிந்த கலக்கம், வருணின் அதிகாரத்தையும் ஆளுகையும் லட்சமாவது முறையாக ஷிவ நந்தனுக்குப் புரியச் செய்தது.

மெல்ல இறங்கியவள் தானும் ஒரு முறை அனைத்துப்புறமும் விழிகளால் துலாவிவிட்டு அஷோக்கைப் பின் தொடர, அவர்கள் நெருங்கியதுமே திறந்த கதவிற்கு அருகில் நின்றிருந்த ஷிவ நந்தனைக் கண்டவளுக்கு ஏனோ கலக்கம் குறைவதற்குப் பதில் அதிகரிப்பது போன்று தான் இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்தவளின் பார்வையில் அச்சம் வழிய, அவளைத் துளைப்பது போல் ஒரு விநாடிப் பார்த்த ஷிவ நந்தன், "அஷோக், உங்களை யாரும் ஃபாலோ பண்ணலையே.." என்றவாறே கதவை மூடியவன் கரத்தை சற்றே நீட்டி உள்ளே செல்லுமாறு சைகை செய்தான்.

அஷோக்கைத் தொடர்ந்து உள்ளே சென்ற சிதாரா, அதுவரை தலையைச் சுற்றிப் போர்த்தியிருந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்தவள், "நான் உங்கக்கிட்ட தனியா பேசணும் சார்.." என்றாள்.

"ஏன்? இது வரை அஷோக்குடன் தானே வந்தீங்க, பிறகு என்ன?"

"யெஸ் சார். ஆனாலும்.."

முடிக்காமல் இழுத்தவளை கோபத்துடன் அஷோக் முறைத்துப் பார்க்க, "இட்ஸ் ஒகே அஷோக், நீ கொஞ்சம் வெளிய இரு.." என்றவனாய் அருகில் இருக்கும் ஸோஃபாவில் அவளை அமரப் பணித்தான்.

அஷோக் வெளியில் செல்லும் வரை அசையாது நின்றவள் அவன் வெளியேறியதும் ஸோஃபாவின் நுனியில் அமர, அவ்வறையின் ஒரு ஓரத்தில் இருந்த நாற்காலியை இழுத்தவனாய் அவளுக்கு எதிரே போட்டவன், அதன் முதுகின் மேல் [chair backrest] இரு கைகளையும் ஊன்றி நின்றவாறே சொல் என்பது பார்க்க, அவனது அழுத்தமான அளவெடுக்கும் பார்வையில் சிதாராவின் நெற்றிப்பொட்டில் வியர்வை துளிர்க்க ஆரம்பித்தது.

'இது தேவையா சித்து உனக்கு? பெரிய இவ மாதிரி வந்த. இதுல அந்த வருணுக்கு சரியான எதிரி நான்னு இவனோட போலீஸ் பார்வையே கொல்லுதே.'

மனம் புலம்ப, என்ன சொல்வதென்று புரியாதது போல் குழப்பத்துடன் பார்த்திருந்தவளைக் கண்டவனுக்கு எரிச்சல் மூளத் துவங்கியது.

"இப்படி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு இருக்கிறதுக்குத் தான் என்னை மீட் பண்ணனும்னு சொன்னிங்களா?"

படீரென்று கேட்டவனைக் கண்டு அவளுக்கும் கோபம் வந்தது.

அவள் ஒன்றும் சாதாரணப் பெண்ணல்லவே. அரசியலில் கோலோச்சி கொண்டிருக்கும் அமைச்சர் முகேஷ் சௌஹானின் ஒரே மகள்.

உனக்கு மட்டும் தான் கோபம் வருமா, எனக்கும் தான் வரும் என்று பெண்ணவளது உள்ளம் பொருமத் துவங்கியது.

"எனக்கு மட்டும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டே இருக்கணுங்கிற ஆசையா என்ன? உங்களைப் பார்க்கிறதுக்காக நான் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கணும்னு அவசியம் இல்லை.."

நெற்றிச் சுருங்க கூறியவள் புருவங்களை இடுக்கியவாறே அவனைப் பார்க்க, "ம்ப்ச்." என்று சலித்துக் கொண்டவனாய், "சரி சொல்லுங்க, என்ன உதவி உங்களால் செய்ய முடியும்?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

"எனக்கும் துர்காவிற்கும் என்ன பழக்கம்னு உங்களுக்குத் தெரியும் தானே?"

"ம்ம்ம்..."

"அவக் கூப்பிட்டதால் தான் நான் உங்க கல்யாணத்துக்கே வந்தேன்."

"சரி, அதுக்கும் நீங்க செய்யப் போறதா சொல்ற உதவிக்கும் என்ன சம்பந்தம்?"

"எனக்குத் துர்காவை ரொம்பப் பிடிக்கும், அதனால் தான் உதவி செய்யலாம்னு வந்தேன். மற்றபடி உங்களுக்காக இல்லை.."

சற்று நேரம் முன் 'இப்படி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு இருக்கிறதுக்குத் தான் என்னை மீட் பண்ணனும்னு சொன்னிங்களா?' என்ற தனது கேள்விக்கே அவள் பதில் கொடுக்கிறாள் என்பது புரிய, ஷிவ நந்தனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் எல்லையைக் கடக்க ஆரம்பித்தது.

"ஆக, நீங்க என்ன உதவி செய்ய முடியும்னு சொல்றதா இல்லை."

"என்னை எங்க சொல்ல விடுறீங்க?"

ஏதோ திட்டுவதற்கு வாயெடுத்தவன் மிகவும் கடினப்பட்டுப் பற்களைக் கடித்துத் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே, "சரி மேடம், சொல்லுங்க," என்றான்.

ஆழ இழுத்து மூச்சினைவிட்டவளாய்,

"நான் ஏற்கனவே சொன்னது மாதிரி எனக்கு வருணுக்கும் மேரேஜ் செய்யறதுன்னு எங்க வீட்டுல முன்னாடியே முடிவு செய்துட்டாங்க. அப்போ இருந்தே எங்க அப்பாவுக்கு வருண் மேல எப்பவும் ஒரு கண் இருக்கும். அதாவது வருண் எங்கப் போறாரு, எங்க இருப்பாரு, அவருக்கு யார் கூட எல்லாம் தொடர்பு இருக்குன்னு எங்க அப்பா கண்காணிச்சிட்டே இருப்பாரு.." என்றதும் ஷிவ நந்தனின் கோபம் மீண்டும் கட்டவிழ்க்கத் துவங்கியது.

பிடித்திருந்த நாற்காலியில் இருந்து வெடுக்கெனக் கைகளை எடுத்தவன் அவனது வழக்கமான மேனரிசமாகச் சட்டைக் காலரை இழுத்தவாறே வலது புறம் இலேசாய் தலைசாய்க்க, அவளுக்குத் திடுக்கிட்டது.

இருந்தும் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவளாய்,"அதானே சொல்லிட்டு இருக்கேனே, பின்ன என்ன?" என்றாள் விடாப்பிடியாக.

"அதாவது உங்களை வருண் ஃபாலோ பண்ணிட்டே இருப்பான், உங்க அப்பா அவனை ஃபாலோ பண்ணிட்டே இருப்பாரு. ஆக உங்க ரெண்டு குடும்பத்துக்கும் வேற வேலையே இல்லைன்னு சொல்லிட்டு இருக்கீங்களே, அதைச் சொல்றிங்களே?"

"வேற வேலை இல்லையா? ஏன் சொல்ல மாட்டீங்க? வேற வேலை இல்லாமலா இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து உங்களைப் பார்க்க வந்திருக்கேன்."

"ஏய், திரும்பத் திரும்ப ரிஸ்க் ரஸ்குன்னு சொல்லி என் பொறுமையைச் சோதிக்காத."

அதுவரை மரியாதையாகப் பண்மையில் அழைத்திருந்தவனுக்குச் சட்டெனப் பண்மை மறந்து போனது.

“என்னது திடீர்னு போ வா-ன்னு பேசுறீங்க?”

அமர்ந்திருந்த ஸோஃபாவில் இருந்து வெடுக்கென்று எழுந்தவளாய் கேட்க, “வூஃப்..” என்று ஊதியவனாய் தன்னை அடக்கிக் கொண்டவன், “ என்னைவிடச் சின்னவ தானே நீ. அதனால் நீ வா போ-ன்னு சொல்லலாம், தப்பே இல்லை. நீ முதலில் உட்கார்..” என்றான் அமர்த்தலான குரலில்.

என்னது சின்னவளா?? அடப்பாவி ஒரு செக்கண்டுக்குள்ள போடி வாடின்னு கூப்பிடுவான் போலருக்கே.

மனம் எண்ணியது, ஆயினும் அவனை அவ்வாறு மரியாதைக் குறைவாய் பேச அவனது வயதும் விடவில்லை, அவனது உயரிய பதவியும் அவளை அனுமதிக்கவில்லை.

மெதுவாய் அமர்ந்தவாறே,

"சரி, எப்படியோ கூப்பிடுங்க. ஆனால் நான் ஒன்னும் உங்களைச் சோதிக்கலை, நீங்க தா.." என்றவள் முடிக்கவில்லை, தன் முன் இருந்த நாற்காலியை ஒரு காலால் வேகமாய் நகர்த்தியவனாய் அவளை நோக்கி நடந்தவன் அவளுக்கு வெகு அருகில் அமர்ந்தான்.

விநாடிக்கும் கீழ் தனக்கு அருகில் வந்து உட்கார்ந்தவனின் வேகமும், அவனது வலிமையான தேகத்தின் நெருக்கமும், சிதாராவை அதிரச் செய்தது.

"சரி சொல்லிடுறேன். வருணை எப்பவும் எங்க அப்பாவுடைய ஆட்கள் ஃபாலோ பண்ணிட்டு இருந்ததால் எங்க அப்பாவுக்கு அவருடைய எல்லா ரகசிய இடங்களும் தெரியும். அதுல ஏதாவது ஒரு இடத்துல தான் துர்காவை அடைச்சு வச்சிருப்பார். அதான் எங்க அப்பா கிட்ட கேட்டேன், அவர் சில இடங்களை எனக்குச் சொன்னார். அதை உங்களுக்குச் சொன்னால் துர்காவைக் கண்டுப்பிடிக்கிறதுக்கு ஈஸியா இருக்கும். அதைச் சொல்லலாம்னு தான் வந்தேன்."

“வருணுக்கு உங்க அப்பா ஆட்களைக் கொண்டு அவனை ஃபாலோ பண்றது தெரியாமல் போயிருக்குமா?”

“அது எனக்குத் தெரியாது.. ஆனால் எங்க அப்பாவும் ஒன்னும் சாதாரணமானவர் இல்லை. பெரிய மினிஸ்டர். வருணுக்குத் தெரியாமல் அவரை ரகசியமா ஃபாலோ பண்ற அளவுக்கு அவருக்குச் சாமர்த்தியமும் இருக்கு.. ஏன் வருண் மட்டும் தான் ஸ்மார்ட்டா? எங்கப்பாவும் தான். நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா அப்புறம் நான் எதுவும் பேச மாட்டேன்"

படபடவென்று பேசியவள் அவனையே உறுத்துப் பார்த்தவாறே அமைதியானாள்.

"சரி, சொல்லு.."

“நீங்க கொஞ்சம் தள்ளி உட்காருங்க, சொல்றேன்.”

“ஏன், பயமா இருக்கா?”

அதுவரை இருந்து வந்த இறுக்கம் சற்று தளர, கண்களில் இளநகைத் தெரிய கேட்டவனைக் கண்டு,

“பயமெல்லாம் இல்லை. இது வரைக்கும் நான் எங்கப்பாவைத் தவிர வேற எந்த ஆண்கள் பக்கத்திலேயும் இவ்வளவு நெருக்கமா உட்கார்ந்தது இல்லை.. அதான்..” என்றாள்.

“அந்த வருண் கிட்ட கூடவா..”

“நீங்க எங்க அவர் பக்கத்தில என்னை உட்காரவிட்டீங்க. அதுக்குள்ள தான் எங்கேஜ்மென்டை நிறுத்திட்டீங்களே.”

“அதனால் ரொம்ப மன வருத்தமோ?”

“ம்ப்ச்.. அதல்லாம் இல்லை..”

இப்பொழுது நிஜமாகவே ஷிவ நந்தனுக்குப் புன்னகை வந்தது.

“சரி, அதான் பயமில்லைன்னு சொல்லிட்டியே, அப்புறம் என்ன? மேலே சொல்லு..”

அப்படியும் நகர்ந்து அமராது குறுநகையுடன் கூற, வேறு வழியின்றிப் பேச துவங்கிய சிதாரா வருண் தேஸாயும் ஆர்ய விக்னேஷும் இரகசியமாய்ச் சந்திக்கும் இடங்களையும், நிழல் காரியங்களை ஆற்றுவதற்குத் தனியாய் வருண் தேஸாய்ச் செல்லும் இடங்களையும் ஷிவ நந்தனிடம் தெரிவித்தாள்.

அவள் சொல்வதைக் கூர்ந்து செவிமடுத்தவனாய் அஷோக்கை அழைத்தவன் தன் நண்பர்கள் அனைவரையும் உடனடியாகச் சந்திக்க ஏற்பாடு செய்யச் சொன்னான்.

"சிதாரா, அஷோக் உன்னை ட்ராப் பண்ணிடுவான்."

என்று மட்டும் கூறியவன் பண்ணை வீட்டுக் கதவினைத் திறந்து போ என்பது போல் தலையசைக்க, "யு ஆர் வெல்கம்.." என்று கூறியவள் விடுவிடுவென்று காரினை நோக்கி நடந்தாள்.

தான் நன்றி உரைக்காததைத் தான் அவள் மறைமுகமாகக் கூறிச் செல்கின்றாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன், தலையசைத்து "வூஃப்.." என்று மீண்டும் ஊதியவனாய் வீட்டிற்குள் செல்ல, அடுத்தச் சில நிமிடங்களில் ஷிவ நந்தனின் நண்பர்கள் அங்குக் கூடினர்.

“வருண் தேஸாய் பற்றி ஆதி முதல் அந்தம் வரைக்கும் நமக்குத் தெரியும். இப்பேற்பட்ட பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவன் ஒரு சாதாரண மினிஸ்டர் தன்னை ஆட்களைக் கொண்டு ஃபாலோ பண்றதை தெரிஞ்சிக்காமலா இருப்பான் ஷிவா?”

“கண்டிப்பா அவனுக்குத் தெரிஞ்சிருக்கும், ஆனாலும் இவ சொல்ற இடங்களையும் நாம நம்ம ஆட்கள் கொண்டு தேடச் செய்வோம். எந்த ஒரு உதவியையும் நிராகரிக்கிற நிலைமையிலோ அல்லது புறக்கணிக்கிற சூழ்நிலையிலோ நாம இப்போ இல்லை..”

கூறிய ஷிவா பல மணித்துளிகள் தங்களுக்கு முன் இருக்கும் வரைப்படத்தில் கோடுகளையும், வட்டங்களையும் வரைந்தவன் அடுத்துச் செய்ய வேண்டியதை தீவிரமாகத் திட்டமிட ஆரம்பிக்க, அங்கு அடர்ந்த கட்சிரோலிக் கானகத்தின் நடுவே அடைக்கப்பட்டிருந்த துர்காவின் நிலையோ மிகப் பரிதாபமாக இருந்தது.

**************************************

துர்காவின் கரத்தை இறுக்கப் பற்றியவனாய் நடந்த வருண் தேஸாய் குடிலுக்குள் நுழைந்தான்.

அவனிடம் இருந்து விடுப்படப் போராடியவாறே மெல்லிய அழுகுரலில், "நீங்க கேட்குற கேள்விக்குப் பதில் சொன்னா என்னைத் தொட மாட்டேன்னு சொன்னீங்க?" என்றாள் இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"உன் பாஷையில் சொன்னால் உன்னைத் தூக்கிட்டு வந்தவன் நான்.. ஆனால் நான் சொல்றதைக் கூட நீ அப்படியே நம்புவியா, என்ன?"

அவன் கூற வருவது புரிய, உன்னைத் தொட மாட்டேன் என்று சற்று முன் அவன் கூறியப் பொழுது அரும்பாய் துளிர்த்த சிறு நம்பிக்கை பனியில் நனைந்த சுடராய் மாயமாய் மறைந்து போனது போல் இருந்தது பேதையவளுக்கு.

இனி என் நிலைமை?

பதில் தெரியாத கேள்வியில் மனம் தாங்க இயலாத வேதனையில் உழல, அணிந்திருந்த திருமணப் புடவையின் முந்தானையைக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டவள் வெடித்துக் கதறத் துவங்கினாள்.

"ம்ப்ச். இப்போ அழறதை நிறுத்த போறியா இல்லையா?"

அவன் சத்தமிட்டு அதட்டினாலும் அவளது அழுகை நின்றபாடில்லை.

"துர்கா.. நீ இங்க இருக்கப் போறது ஒரு நாள், ரெண்டு நாள் மட்டும் இல்லை. அதனால் இன்னைக்கே இவ்வளவு அழுதிட்டினா பிறகு நாளைக்கும் அதற்கு மறுநாளும் யார் அழறது?"

இன்னும் உரக்க அவன் கூறினாலும் அவனது வார்த்தைகளைச் சரிவரக் கவனிக்காதவளாய் முகத்தை மூடிக் கொண்டு அழுதுக் கரைந்துக் கொண்டிருந்தவள் அவனை ஏறிட்டு நோக்கவே இல்லை.

சட்டென அவளை வெகுவாய் நெருங்கியவன் மூச்சுக் காற்று அவள் மீது படுமளவிற்கு உரசியவாறே,

"அப்போ உன்னைத் தொடுறதைத் தவிர எனக்கு வேற வழியே இல்லை.." என்றதுமே ஸ்விட்ச் போட்டது போல் அவளது அழுகை நின்று போனது.

மெல்ல புடவையை விலக்கியவாறே பார்க்க, இப்பொழுது அவன் தன்னை உரசியவாறே மீண்டும் நெருங்கி நின்றதில் மூச்சடைத்துப் போனது பெண்ணவளுக்கு.

"என்ன நான் தொடட்டுமா, வேண்டாமா?"

‘ம்ஹூம்’ என்பது போல் மறுப்பாய் தலையசைக்க,

"அப்படின்னா இனி நான் இங்க இருக்கும் போது அழாத, புரியுதா? எனக்கு அழறது பிடிக்காது.. அழறவங்களையும் பிடிக்காது.." என்றான்.

ஆயினும் அப்பொழுதும் அவன் அவளது கரத்தை விட்டான் இல்லை.

அதனை உணராது அகன்ற விழிகளை மேலும் அகல விரித்துச் சற்றே முகத்தை உயர்த்தி அவனை ஏறிட்டு நோக்க, அவளின் செய்கையில் அந்நிமிடம் வரை அரண்டுப் போயிருந்தவளின் இதயத்தை விட, வேகமாய்த் துடிக்கத் துவங்கியது ஆண்மகனின் இதயம்.

‘Strength doesn't come from muscles, it comes from your gut’ என்ற வாக்கியத்திற்கு இணங்க, வாழ்க்கையில் பற்பல கஷ்டங்களைச் சந்தித்திருந்ததில், எரி நெருப்பின் மேல் பல சூழ்நிலைகளில் வைக்கப்பட்டிருந்தாலும் வெடிக்காமல் வெற்றியோடு வந்திருந்ததில், எண்ணற்ற பாடங்களைக் கற்றிருந்தவனின் அழுத்தமான இதயம் என்றுமில்லாதது போல் இன்று அதிரடியாய் துடித்ததில், வருணுக்கே அதன் சத்தம் கேட்பது போல் இருந்தது.

கோதுமை நிறத்திலான தேகம், மாசுமருவில்லாத முழு நிலவினைப் போன்று அழகிய வட்ட முகம்.

இயற்கையிலேயே வளைந்திருந்த புருவங்கள், இரகசியம் பேசும் தோரணையில் அகன்று விரியும் விழிகள், கண்ணாடிப் போன்று தகதகக்கும் இதழ்கள்.

இதனில் அழுதுக் கரைந்துக் கொண்டிருந்ததில் சிவந்து போயிருக்கும் கூர்மையான மூக்கு நுனியும், அதனில் மினுமினுத்த வயலெட் நிற கல் மூக்குத்தியும், அணிந்திருந்த அவளது ஆரஞ்சு நிற பட்டாடையின் பிரதிபலிப்பில் மேலும் பளபளத்துக் கொண்டிருந்தது.

தன்னைக் கலக்கமும் அச்சமும் கலந்துப் பார்த்துக் கொண்டிருப்பவளை விநாடிகள் நேரம் இமைக்காது பார்த்தவனின் உள்ளம் அவனையும் அறியாத ஒரு உணர்வை உணர்ந்தது.

வாழ்க்கையில் இரண்டாம் முறை அவன் உணரும் உணர்வு இது.

மெல்லமாய் அதிர்ந்து திடுக்கிட்ட இதயத்தை நிமிட நேரத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வந்தவன், ஒரு கையால் கழுத்தை அழுந்தத்தடவி சமன்படுத்தியவாறே அவளை விட்டு அகன்றவனாய் கட்டிலின் அருகில் போடப்பட்டிருந்த சிறிய மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த உணவினைப் பார்த்தான்.

"எத்தனை நாள் இப்படிப் பட்டினிக் கிடக்கப் போற?"

கன்னங்கள் தாண்டி கண்ணீர் வழிய அவனைப் பார்த்திருந்தவள் பதில் கூறாது நிற்க,

“ம்ப்ச்.. அதான் உன்னை இப்ப தொடலை இல்ல? இன்னும் ஏன் அழற?” என்றதில் சட்டெனக் கண்ணீரைத் துடைத்தாள்.

அக்கணம் அவனது அலைபேசி சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தவனின் முகம் அதன் தகவலைப் படித்ததும் இளக்கம் மறந்து கோபத்தில் தெரிக்க, கொஞ்சம் தனியத் துவங்கிய துர்காவின் பயம் திரும்பவும் தலைதூக்கியது.

அறைக்குள் இருந்தவாறே, "ஜாஃபர்.." என்று அவன் அந்தக் குடிலே அதிருமாறு உரக்க கத்த, ஓடி வந்த ஜாஃபரிடம், "வேற சாப்பாடு கொண்டு வா.." என்றான்.

அலைபேசி தகவலுக்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று சிறு பிள்ளையாய் அவள் யோசித்துக் கொண்டிருக்க, சில நிமிடங்களில் மீண்டும் உணவினைக் கொண்டு வந்த ஜாஃபர் அதே மேஜையில் வைத்தவனாய் பழைய உண்டியை கையில் எடுத்துக் கொள்ள, "எனக்குப் பசியில்லை." என்றாள்.

"எப்போ பசிக்குதோ அப்ப சாப்பிடு.. சாப்பிடாமல் இருந்தாலும் சரி, உன் இஷ்டம்.."

அதற்கு மேலும் ஏனோ அவ்வறையில் இருக்க அவனால் முடியவில்லை.

காரணத்தை அலசி ஆராய அவன் மனமும் விரும்பவில்லை.

விருட்டென்று வெளியில் வந்தவன், மீண்டும் தன் ஆட்களிடம் தகவலைக் காட்டியவாறே உரையாடல்களைத் துவங்க, அறைக்குள் இருக்கும் ஜன்னல் வழியாய் சற்றுத் தூரத்தில் தெரிந்த அவனது உருவத்தை அப்படி என்ன தகவல் வந்திருக்கும் என்ற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, சினத்தில் சிவந்திருந்த அவனது முகத்தைக் கண்டதில் படபடப்புக் கூடியது.

"Sithara met Shiva privately at his farm house"

இதுவே வருணின் அலைபேசிக்கு வந்த தகவல்.

“ஷிட்.. ஷிட்..”

கத்தியவனாய் அங்குமிங்கும் நடக்க, அவனது ஆங்காரத்தைக் கண்டு ஜன்னலை விட்டு வெடுக்கென்று விலகிய துர்கா, ‘கடவுளே!’ என்று அரற்றியவளாய் படுக்கையில் பொத்தென்று அமர்ந்தாள்.

அடுத்தச் சில நிமிடங்களிலேயே வருணை சுமந்து கொண்டு சுழலிகள் விசிறியடிக்கப் பறந்துச் சென்ற ஹெலிகாப்டர் கானகத்தின் அடர்ந்த மரங்களின் சுவடுக்குள் மறைந்துவிட, அறைக்குள் வைக்கப்பட்டிருந்த உணவினை சட்டை செய்யாதவளாய் மீண்டும் கட்டிலில் சுருண்டுப் படுத்துக் கொண்ட துர்காவின் எண்ணமோ ஷிவ நந்தனையே சுற்றி சுழன்று கொண்டிருந்தது.

‘எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறவரு மாமா நீங்க, உங்களாலேயே என்னைக் கண்டுப்பிடிக்க முடியலைன்னா வேறு யாரால் என்னைக் கண்டுப்பிடிக்க முடியும்? இதுல என்ன தகவல் வந்ததோ இவர் இப்படி ஆங்காரத்துடன் போறாரு. திரும்ப வருவாரா, வந்தால் என்ன நடக்கும்னு நினைக்கும் போது ரொம்பப் பயமா இருக்கு மாமா...’

புலம்பியவாறே படுத்துக் கொண்டிருந்தவளின் விழிநீர் தலையனையை நனைத்துக் கொண்டிருந்தது தான் மிச்சம்.

ஆனால் அவளின் கண்ணீரைத் துடைக்க அவள் மாமன் மகன் வந்தபாடில்லை.

அரிமாவின் வேட்டை!

தொடரும்..
 
Last edited:
Omg…. 💥💥💥
One Lion is desperately hunting…
Another on is decamping…

Sithara Shiv ah meet pannathu Varun ku therinjittu… I expected this… Varun is enraged… Durga vai shift pannuwana??? Shiv landu pidippana? 😎😎😎
 

saru

Member
Lovely update
Aaaruan tan main nu Paratha Avan apo apo thala kaaaturaan
Varunu avala siv thukitu pogum Munna unakul Vanda unarvu enna nu kanduidichiru ila Naa kastama pa
Undra maman Karanam ila rasathi ellam inda jb dear tan
Maathi korthu vititanga enna tha jolla ha ha
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top