JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 10

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 10


O’ Ignorant Moon! O’ Shining Moonlight!

O’ Endless Night! O’ Undiminishing darkness!

All of you torment only me;

Will you not question the uncaring Archer?

Kamba Ramayanam – 5338


கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே !

செல்லா இரவே ! சிறுகா இருளே !

எல்லாம் எனையேமுனிவீர்; நினையா

வில்லாளனை, யாதும் விளித்திலிரோ ?

கம்பராமாயணம் - 5338


பொருளுரை: கல்வி அறிவு இல்லாத மதியே! கதிரவனின் ஒளியை பெற்று வாழும் நிலவே! செல்லாமல் அப்படியே இருக்கும் இரவே! குறையாமல் (சிறியது ஆகாமல்) இருக்கும் இருளே! நீங்கள் எல்லோரும் என்னிடம் கோபம் கொள்வீர்! என்னைப் பற்றி நினைக்காத இராமனை எதனையும் கேட்க மறுப்பீரோ?

– அசோக வனத்தில் தனித்து இருக்கும் சீதை புலம்புகிறாள்.

*********************************************

உணவுத் தட்டினை துர்காவின் முன் இருந்த மேஜையில் வைத்துவிட்டுச் சாப்பிடுமாறு அவளிடம் கூறிய ஜாஃபர் அலைபேசியில் தகவல் அனுப்பியவாறே அறையைவிட்டு வெளியேறியவன், அவளது அறைக் கதவை மூடவில்லை.

'யார்கிட்ட பேசுறான்? என்னைத் தூக்கிட்டு வந்தானே, அவன்கிட்டயா?'

இன்னமும் முழுதாய் மயக்க மருந்தின் வீரியம் குறியவில்லை.

ஆயினும் கண்களில் நீர் திரண்டிருக்க மங்கலாய் தெரியும் விழிகளோடு உணவினைப் பார்த்தவாறே விநாடிகள் சில அமர்ந்திருந்த துர்கா, நெற்றிப்பொட்டை ஒரு கரத்தால் அழுந்திப் பிடித்தவாறே மெள்ள எழுந்து உணவு இருந்த சிறிய மேஜையைச் சுற்றிக் கொண்டு அறை வாயிலிற்கு வந்தாள்.

குடில்கள் போன்றமைப்பில் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் ஒருவருமே இல்லாதது வியப்பளித்தது.

‘இப்பத்தான அந்த ஆள் வெளியே போனான், அதுக்குள்ள எங்கப் போயிட்டான்?’

மனதிற்குள் நினைத்தவாறே அடிமேல் அடியெடுத்து அஞ்சியவாறே அறையைவிட்டு வெளியில் வந்தவளின் கண்களைக் கவர்ந்தது, ஜன்னலின் வழியே தெரிந்த, மிக அழகாய் அதே சமயம் ஆங்காங்கு அழகிய மலர் கொத்துக்களைச் சுமந்திருக்கும் மரங்கள்.

ஆனால் அனைத்துமே தானாய் வளரும் விருட்ஷங்கள்.

‘சிவப்பு பட்டு பருத்தி மரம்’ என்று அழைக்கப்படும் செமல் மரத்தில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் மலர்கள் மலரும். பல மரங்களுக்கு இடையில் வளர்ந்திருந்தாலும் இம்மரத்தின் அழகிய வண்ணப் பூக்கள் இதனைத் தனித்துக் காட்டும்.

அதே போல் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் சிகப்பு நிற அழகிய பூக்களுடனும் காணப்படும் நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம். வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று, தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மரம் நாகலிங்க மரம்.

மலர்களால் போர்வை விரித்தது போன்று அழகாய் பூத்துக் குலுங்கும் இம்மரங்களைச் சாளரத்தின் வழியே கண்டவளின் மீன்விழிகள் மேலும் விரிந்தன.

ஆயினும் மனிதவாடையே இல்லை என்பது போல் விரித்தோடிக் கிடந்த குடிலைச் சுற்றுமுற்றும் விழிகளால் துலாவியவளாய் நடந்து வந்தவள், அக்குடிலின் ஒரு மூலையில் இருந்த சிறிய திறந்தவெளி சமையலறையைப் [lounge kitchen/open kitchen] பார்த்தவாறே நடக்க, அதற்கு நேர்புறத்தில் இருந்தது மற்றுமொரு அறை.

ஆனால் அதன் கதவு மூடப்பட்டிருந்தது.

குடிலுக்கு வாயில் எங்கு இருக்கின்றது என்று தேடியவளாய் நடந்தவள் சமையல் அறையைக் கடக்க, சில அடிகள் தூரத்திற்கு நடைபாதைப் போன்று அமைத்து, அதன் முடிவில் திறந்திருந்த கதவின் வழியாய் தெரிந்த காட்சிகளைக் கண்டவளுக்கு அது தான் நுழைவாயில் என்று தெளிவாய்த் தெரிந்தது.

ஆனால் அதுவும் திறந்திருந்தது.

'நான் ஓடிப்போக மாட்டேங்கிற தைரியமா?'

நினைத்துக் கொண்டவளாக நுழைவாயிலை கடந்து வெளியில் அடி எடுத்து வைக்க, மீண்டும் அவளின் இதயம் வெகுவாய் இலயித்துப் போனது.

கதலி பூ, குயின்ஸ் ஃப்ளவர் அல்லது இந்தியாவின் பெருமை என்றழைக்கப்படும், மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ மலர் என்று வர்ணிக்கப்படும், ஜருல் மரம் [Jarul - maharashtra's official flower] ஊதா, இளஞ்சிவப்பு, வயலட் நிறங்களில் அழகான கவர்ச்சிகரமான பூக்களை உதிர்த்துக் கொண்டு நின்றது.

அதனருகில் அடர் பச்சை நிற இலைகளும் அவற்றின் பின்னணியில் கொத்துக் கொத்தாகப் பூத்து ஒளிரும் செம்மஞ்சள் நிறப் பூக்களுமாய், உலகில் அழகிய மரங்களில் ஒன்றாகக் கருதப்படும், செம்மயிற்கொன்றை என்று அழைக்கப்படும் குல்மொஹர் மரமும் வசீகரிக்கும் வனப்புடன் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.

ஒரு சில விநாடிகள் தான் கடத்தி வரப் பட்டிருக்கின்றோம் என்பதையே மறந்து அப்பூக்களின் பேரழகில் மெய்மறந்து நின்றவள், சற்றுத் தொலைவில் தெரிந்த வேலியையும் அதன் நடுவில் அமைக்கப்பட்டிருந்த வாயிற்கதவையும் கண்டதில் சட்டெனத் தன்னிலை இழுத்துப் பிடித்தாள்.

அக்கணம் புரிந்து போனது.

தான் ஓடமாட்டோம் என்ற துணிவில் அவர்கள் குடிலை அடைக்கவில்லை. மாறாக அவள் அவ்விடத்தைவிட்டுச் செல்வதற்கு வழியே இல்லை என்பது போன்றான ஒரு இடத்தில் தான் சிக்குண்டு இருக்கின்றோம் என்று.

சுற்றிலும் மரங்கள் இருந்தாலும், ஒருவரின் கண்களிலும் படாமல் தப்பி ஓடவோ அல்லது மறைந்துக்கொள்ளவோ முடியாத அளவிற்கான பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்தன அந்தக்குடில்கள்.

அதுவும் இல்லாமல் அவ்விருட்ஷங்களுக்கு இடையில் பத்து அடிக்கு ஒருவன் என்கிற ரீதியில் அடியாட்கள் ஏதேதோ புதுவிதமான ஆயுதங்களுடன் நின்றிருந்தனர்.

அவர்களை எல்லாம் விட்டு சற்றுத் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஜீப்பிற்கு [jeep] அருகில் இருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தான் ஜாஃபர்.

அவனது இடுப்பில் சொருகப்பட்டிருந்த துப்பாக்கி பேதையவளின் நெஞ்சை அடைத்தது.

அச்சத்தில் ஆழ இழுத்து மூச்சினைவிட்டவளாக நின்ற இடத்தில் இருந்தே சுற்றுப்புறமும் முழுவதினையும் பார்க்க, காலையில் கடத்தப் பட்டிருந்தவளுக்குப் பிறகு அவர்கள் கொடுத்த மயக்க மருந்தின் வீரியம் அவளைப் பல மணி நேரங்களாக உறக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றது என்பது புரிந்து போனது.

காரணம் மீண்டும் வெளிவந்து கொண்டிருந்த கதிரவனின் காலை நேரத்து வெளிச்சம்.

நேத்துல இருந்து நான் தூக்கத்தில் இருந்தேன்னா? அப்படின்னா இவங்க என்னைத் தூக்கிட்டு வந்து ஒரு நாள் ஆகப்போகுதா?

கேள்விகள் தோன்ற திடுக்கிட்டவளாய் மீண்டும் ஜாஃபரின் புறம் திரும்ப, அவள் வெளிவந்ததில் இருந்து அவளையே பார்த்திருந்தவனுக்கு, அவள் அண்ணாந்து சூரியனைப் பார்த்துப் பின் தன்னைப் பார்த்ததும் அவளது நோக்கம் புரிந்தது.

கல் மேடையில் இருந்து எழுந்தவன் அவளை நோக்கி நிதானமாய் நடந்து வர, அமைதியாய் நின்றிருந்தவளின் கண்கள் மீண்டும் ஒரு முறை அவன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த துப்பாக்கியில் நிலைத்துப் பின் அவன் முகம் நோக்கியது.

"நீ நினைக்கிறது கரெக்ட்.. உன்னை நாங்க நேற்று காலையில் தூக்கிட்டு வந்தோம். வழக்கமா நாங்க கொடுக்கிற மயக்க மருந்து ஒரு ஏழெட்டு மணி நேரத்துக்கு ஒருத்தரை மயக்கத்தில் வச்சிருக்கும். ஆனால் நீ கொஞ்சம் வித்தியாசம். ஏறக்குறைய நாலு மணி நேரத்திலேயே உனக்கு லேசா முழிப்பு வந்துடுச்சு, அதான் திரும்பவும் மயக்க மருந்து கொடுக்க வேண்டியதா போயிடுச்சு. இப்போ மணி காலை ஏழு. ஸோ, நீ கடத்தப்பட்டுக் கிட்டத்தட்ட இருபத்தி மூணு மணி நேரம் ஆகிடுச்சு."

அவன் பேசப் பேச இமைக்க மறந்தது போல் பார்த்திருந்தவளுக்கு நேரம் பிடிபட்டதும் திரும்பவும் தலை சுற்றுவது போல் இருந்தது.

சட்டென ஒரு கையால் மீண்டும் தலையைத் தாங்கிப் பிடித்தவள், "தயவு செஞ்சு இப்பவாவது சொல்றீங்களா, நீங்க எல்லாம் யாரு? ஏன் என்னை இங்க தூக்கிட்டு வந்திருக்கீங்கன்னு?" என்றாள் அழுகுரலில் பரிதாபமாய்.

"அதைச் சொல்றதுக்கு எங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் வேற சில விஷயங்கள் உன்கிட்ட சொல்லணும்னு எங்களுக்குக் கட்டளைகள் இருக்கு.."

கூறியவனாய் தன்னைத் தொடரச் சொன்னவன் அக்குடில்களைச் சுற்றிலும் அவளை அழைத்துச் சென்றான்.

குடில்களின் பின்புறத்தில் மரங்கள் அல்லாது மலர்கள் மலர்ந்திருக்கும் செடிகள் வரிசையாய் வளர்க்கப்பட்டிருக்க, பல வர்ணங்களில் பூத்திருந்த காட்டுப்பூக்கள் வழக்கமாய் மனதைத் தித்திக்கச் செய்ய வேண்டும். ஆனால் அச்சூழ்நிலையில் அதனை ரசிக்கும் நிலையிலா அவள் இருந்தாள்?

மெள்ள ஜாஃபரைத் திரும்பிப் பார்க்க, "இந்தக் குடில்கள் எங்கக் கட்டப்பட்டிருக்குன்னு உனக்குத் தெரியுதா?" எனும் போது தான் சற்று ஊன்றிக் கவனித்தாள்.

அந்தக் காலை வேலையிலும் பார்ப்பவர்களைத் திடுக்கிடச் செய்யும் பெரும் கிளைகள் கொண்ட விருட்ஷங்களுக்கும், ஆகாயமே தெரியாதளவிற்குப் பூதாகரமாய் வளர்ந்திருக்கும் கொடிகளுக்கும் இடையில், மறைவான சூழலில் கட்டப்பட்டிருந்தன அந்தக் குடில்கள்.

"நம்ம நாட்டிலேயே மனித நடமாட்டம் இல்லாத ஆனால் ஏகப்பட்ட கொடிய மிருகங்கள் சுத்திட்டு இருக்கிற ஒரு காடு இது. இந்தக் காட்டைச் சுற்றியும் முக்கால்வாசி ஆறுகள் தான் இருக்கு. இது எல்லாத்துக்கும் நடுவில கட்டப்பட்டிருக்கிறது தான் இந்த வீடு. ஐ மீன் இந்தக் குடில்களை ஒன்னாச் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இந்த இடம். இங்க வர்றதுக்குச் சொல்லிக்கிற மாதிரி சரியான பாதையே இல்லை. உன்னைக் கொண்டு வந்தோமே ஹெலிகாப்டர், அதுல மட்டும் தான் இங்க வர முடியும். அது மட்டும் இல்லை, இதோ இங்க சுற்றிலும் போட்டிருக்காங்களே மெட்டல் ஃபென்ஸ், அதுல கரண்ட் பாஸாயிட்டு இருக்கு. சுண்டு விரல் பட்டால் கூடப் போதும், அடுத்தச் செக்கெண்ட் உயிர் போயிடும். அதனால் நீ நினைச்சாலும் உன்னால் இங்க இருந்து போக முடியாது."

கூறியவன் அவளது முகத்தையே பார்த்திருக்க, தான் எங்கு இருக்கின்றோம் என்ற நிதர்சனம் மூளையில் பதியவே நேரம் பிடித்ததில் ஜடம் போல் நின்றிருந்தவளின் அச்சம், மின்சார வேலியைப் பற்றிக் கேட்டதுமே அந்தக் கானகம் முழுவதுமே மௌனமாய் அலறத் துவங்கியது.

"நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?"

வினாவினைத் தொடுத்தவன் அவளது பதிலுக்குக் காத்திருக்க, விடை கூறாது விழிகளில் திரண்ட நீர் கன்னங்களில் வழிய, மெள்ளத் தலை கவிழ்ந்தவளை விட்டுவிட்டு நடந்தவன் முன் இருந்த அதே கல்மேடைக்குச் சென்று அமர்ந்தான்.

'ஐயோ! என்னை எப்படிக் கண்டுப்பிடிப்பாங்க? அதுவும் இந்தக் காட்டுக்குள்ள. மாமா, சீக்கிரம் வாங்க மாமா, எனக்கு ரொம்பப் பயமாயிருக்க..'

உள்ளம் கதறி வீறிட கீழே விழுந்து விடுவோமோ என்று அஞ்சியவளாய் வலு முழுவதையும் பாதங்களுக்குக் கொடுத்தவள் மீண்டும் குடிலை நோக்கி நடக்க, அவளைப் பார்த்ததும் அலைபேசியில் தகவல் அனுப்பினான் ஜாஃபர்.

"She is completely awake.. I just explained to her about the fence."

[அவள் முழுவதுமாக விழித்துவிட்டாள். நான் அவளுக்கு வேலியைப் பற்றி விளக்கினேன்.]

தகவலொலி வந்ததும், அலைபேசியை எடுத்துப் பார்த்த வருண் தேஸாயின் முகத்தில் ஏனோ நிம்மதிப் படர்வது போல் தெரிந்தது.

"என்ன வருண், ஏதாவது ஹேப்பி நியூஸா? முகம் சட்டுன்னு தெளிவான மாதிரி தெரியுது."

புன்னகையுடன் கேட்கும் ஆர்ய விக்னேஷை நிமிர்ந்தும் பார்க்காது பதில் தகவல் அனுப்பிய வருண், சட்டென்று எழுந்தான்.

"நான் போகணும் ஆர்யன். I will call you later."

"நீ எங்கப் போறன்னு தெரியுது வருண். But be careful. அவன் உன்னைக் கண்டிப்பா வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பான்."

"எனக்குத் தெரியாதா ஆர்யன்?"

"தெரியும். இருந்தும் நான் சொன்னதைக் கேட்காமல் நீயே நேரில் போய் அவன் கல்யாணத்தை நிறுத்தணும்னு பிடிவாதம் பிடிச்ச. இப்போ அவனுக்கு எல்லாத்துக்கும் காரணம் நீ, நீ மட்டும் தான்னு தெரிஞ்சுப் போச்சு. இல்லைன்னா ஒரு வேளை இந்தக் கடத்தலுக்கு நானும் காரணமா இருக்கலாம்னு அவன் ரெண்டு பக்கமும் கண்காணிச்சிட்டு இருந்திருப்பான். இப்போ பாரு தெளிவா உன்னை மட்டும் தான் அவன் வாட்ச் பண்ணிட்டு இருப்பான். ஸோ, உன் ஃபுட் ஸ்டெப்ஸை ஃபாலோ பண்றதவை தவிர வேற வழியில்லைன்னு உன்னை ஸ்டாக் [stalk] பண்ண ஆளுங்களை வைச்சிருப்பான். ஏன் அவனே நேரடியா வந்து காத்துட்டு இருந்தாலும் இருக்கலாம். இப்ப எப்படி அவனுக்குத் தெரியாம நீ துர்கா இருக்கிற இடத்துக்குப் போகப் போற? தேவை இல்லாத ரிஸ்க் எடுக்குறியோன்னு தோணுது வருண்."

"தேவை இல்லாத ரிஸ்க்கா? அதை அந்த ஷிவா தான் முதல்ல யோசிச்சிருக்கணும் ஆர்யன். என்னை அரெஸ்ட் செய்யறதுக்கு முன்னாடி இந்த ரிஸ்க் தேவையான்னு அவன் சிந்திச்சிருக்கணும். அவனே வந்து என் வழியில் சிக்கிக்கிட்டான், இனி எனக்கு வேற வழியில்லை."

"சரி, ஒரு வேளை அவன் உன்னைத் தொடர்ந்து இப்போ வந்தான்னா? ஏன், இங்கக்கூட வந்திருக்கலாம், உனக்காக வெளிய காத்துட்டும் இருக்கலாம்."

"ஆர்யன், look-alike impersonate.. இதெல்லாம் நீங்க கேள்விப்பட்டதில்லையா? எத்தனையோ பாலிட்டிஷன்ஸ், ஹிட்லர், ஜாஃபர் அராஃபட் உட்பட அவங்களை மாதிரியே உருவ ஒற்றுமை உள்ள பலரை அவங்கக்கூடவே வச்சிருந்திருக்கலாமுன்னு நாம் எல்லாருமே கேள்விப்பட்டிருக்கோமே. அதனால் அவங்க உயிருக்கு ஆபத்து விளைவிக்க நினைக்கிறவங்களுக்கு உண்மையில் யார் நிஜம், யார் போலியானவங்கன்னு தெரியாமல் போய்விடும். ஏறக்குறைய ஓல்ட் ஸ்டையில் தான், ஆனால் குட் ஒன். ஸோ, அதையே நான் இப்போ ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். ஐ மீன் என்னை ஃபாலோ பண்றதா நினைச்சு, என்னுடைய impersonator-ஐ அந்த ஷிவா ஃபாலோ பண்ணிட்டு இருக்கவும் வாய்ப்பு இருக்கு.."

"உன்னுடைய புத்திசாலித்தனத்தை நான் குறை கூறணும்னு சொல்லலை வருண். எனக்கு என் மேல் இருக்கிறதை விட உன் மேல அதிக நம்பிக்கை இருக்கு. அதனால் தான் என்னை விட வயசில சின்னவன்னாலும் உன்னை நம்பி என் அரசியல் கோட்டையையே கட்டியிருக்கேன். ஆனாலும் திரும்பவும் சொல்றேன். நீயே சொன்னது போல நாம் இருபது அடி பாய்ந்தால் அவன் இருபதாயிரம் அடி பாயும் எமகாதகன். ஜஸ்ட் பி எக்ஸ்ட்ரா கேர்ஃபுல்."

"அப்போ நாம ரெண்டு இலட்சம் அடி பாயலாம் ஆர்யன்."

மிகவும் திமிருடன் கூறியவனாய் வெளி வந்த வருண் வாகனத்தைச் சீறிக் கிளப்ப, என்ன தான் எச்சரிக்கையாய் இருந்தாலும் ஆர்யன் சொல்வது போல் தன்னுடைய எதிரி சாமான்யமானவன் அல்ல என்பதையும் நன்கு அறிந்திருந்தவனின் கண்கள் அனைத்து திசைகளையும் எச்சரிக்கை உணர்வுடன் பார்த்துக் கொள்ளவும் தவறவில்லை.

நிமிடங்கள் பல கடந்து தன்னை ஒருவரும் தொடரவில்லை என்பதை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொண்டவனின் சிகப்பு நிற மாசராட்டிக் கார் பறந்தது, அவனுக்காகக் காத்திருந்த ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஹெலிப்பேடை நோக்கி.

**************************************************

"மாப்பிள்ளை, ஒரு நாள் முடிஞ்சுப் போச்சு, ஆனாலும் இன்னும் என் பொண்ணு இருக்கிற இடம் கூடத் தெரியலையே."

மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீமதிக்குத் துர்காக் கடத்தப்பட்டு ஒரு நாள் கடந்துவிட்டிருந்ததில், அதுவும் இரவு முழுவதும் தேடி அலைந்தும் அவள் கண்டுப்பிடிக்கப் படாதிருந்ததில், பெருந்திகில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

தனக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் ஷிவ நந்தனிடம் கேட்க, மெள்ளக் குனிந்து அவரது கரத்தின் மீது தன் கையை வைத்தவன்,

"அத்தை, துர்காவை எந்த ஆபத்தும் இல்லாமல் உங்கிட்ட கொண்டு வந்து சேர்க்கிறது என் பொறுப்பு. நீங்க தைரியமா இருங்க, நான் பார்த்துக்கிறேன்." என்றான் ஆறுதலாய்.

ஆனால் அவனது மனமோ, பெருங்கடலின் அலை மோதலில் மறைந்துவிட்ட புள்ளிக்கோலமாய், காணாமல் போயிருப்பவளை கண்டறிய இவ்வளவு பெரிய படையே அல்லாடும் போது, உன்னால் என்ன செய்ய முடியும் ஷிவா என்று கத்திக் கொண்டிருந்தது.

காரணம் அவனுக்கு வந்த தகவல் அப்படி.

"சார், நீங்க சொன்னது போல வருண் தேஸாயோட வீடு, ஆஃபிஸஸ், பேங்க்-ன்னு எல்லா இடத்தையும் கண்காணிக்க ஆளுங்களைப் போட்டிருக்கோம். ஆனால் நாங்களே எதிர்பாராத மாதிரி அவன் ஒரே நேரத்தில் ரெண்டு மூணு இடத்திலேயும் இருக்கான்னு தகவல் வந்திருக்கு சார். ஏறக்குறைய அவனை மாதிரியே ஆட்களை ஏற்பாடு செய்து வச்சிருக்க மாதிரி தெரியுது. அவன் தான் போறான்னு நினைச்சால் அவனை மாதிரியே வேறொருத்தன் அவனுடைய ஆஃபிஸில் இருக்கிறதா தகவல் சொல்றாங்க சார். அவங்களும் குழம்பி எங்களையும் குழப்புறாங்க சார்."

“அவன் எல்லாரையும் குழப்புறான்னு சொல்லுங்க.”

“யெஸ் சார். அப்படித்தான் தெரியுது.”

“Sometimes celebrities hire look-alike people to impersonate them.. அதாவது பிரபலங்கள் ஆள்மாறாட்டம் செய்ய ஒரே மாதிரியான நபர்களை நியமிப்பார்கள்-ன்னு கேள்விப்பட்டிருக்கோமே. அது மாதிரியான செட் அப் தான் இதுன்னு நினைக்கிறேன்.”

“இருக்கலாம் சார்.”

"சரி, அவனுடைய ஃபேவரைட் கார் தான் தெரியுமே. ஆயிரம் கார்ஸ் வச்சிருந்தாலும் அவன் எங்கேயும் அதே ரெட் கலர் மாசராட்டில தான் போவானே, அது.."

"ஒரே நம்பர் ப்ளேட்டை வச்சிக்கிட்டு ஏகப்பட்ட கார் அதே கலரில் வச்சிருக்கான் சார்."

"அது எப்படிச் சாத்தியம்? அந்தக்கார் டீலரைக் காண்டாக்ட் செய்தீங்களா?"

"யெஸ் சார், ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடியே அவன் ஒரே மாதிரி கார் 5 வாங்கி இருக்கான். அதுவும் அல்லாமல் அவனுடைய கார் மாதிரியே மாடலில் இருக்கும் வேற சில காரையும் வாங்கி இருக்கான். எப்ப எந்தக் காரில் அவன் போவான்னே யாருக்கும் தெரியாதளவுக்கு எல்லாக் கார்களிலும் இப்போ மாற்றி மாற்றிப் போயிட்டு இருக்கான் சார். ஆனால் எல்லாமே ஒரே கலர், அதாவது ஒரே விதமான ரெட் ஷேட்ஸ் சார் [Red Shades]."

ஆக அவனைப் போன்றே உருவ அமைப்புள்ள மனிதர்களை வேலைக்கு அமர்த்தித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றான்.

ஒரு காலத்தில் இதே போன்று அடால்ஃப் ஹிட்லரும் ஆள்மாறட்டம் செய்யத் தன்னைப் போன்றே ஆட்களை நியமித்திருந்தார் என்று ஷிவ நந்தனும் படித்திருக்கின்றான்.

ஆனால் அது இப்பொழுது சாத்தியமா? ஆம், இப்பொழுது இந்தச் சூழ்நிலையில் வருண் தேஸாயிக்கு அது ஏகமாய் உதவுகின்றது.

அப்படி என்றால் அவனை நான் கைது செய்து இரு மாதங்களுக்கும் மேலாய் என்னை எதுவும் செய்யாமல் அவன் அமைதியாய் இருந்ததற்கான காரணம், இதனைப் போன்ற ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தானா?

இந்நிலையில் அவன் உண்மையில் எங்கு இருக்கின்றான் என்று எப்படிக் கண்டுப்பிடிப்பது?

யோசனையில் ஆழ்ந்த அந்நேரம் அவனது அலைபேசி சிணுங்கியது.

"SSP மிஸ்டர் ஷிவ நந்தன்?"

"யெஸ்?"

"சார், என் பெயர் சிதாரா.”

“ஹூ?”

“சிதாரா. என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கான்னு எனக்குத் தெரியலை சார். ஆனால் உங்களை எனக்குத் தெரியும். அதுவும் நீங்க இப்போ இருக்கிற சூழ்நிலை எனக்கு நல்லாவே தெரியும். உங்களுக்கு என்னால் உதவ முடியும். அதான் உங்களுக்குக் கால் பண்ணினேன்."

"சிதாரா சௌஹான்?"

"யெஸ், வருண் தேஸாயின் ஃபியான்ஸி. ஐ மீன் கொஞ்ச நாள் முன்னாடி அப்படித்தான் நான் அழைக்கப்பட்டேன். ஆனால் இப்போ அப்படி இல்லை."

திருமண மண்டபத்தில் துர்காவின் சிறு வயது தோழி என்று அறிந்த அக்கணமே அவளின் மீது ஷிவ நந்தனிற்கு ஒரு கவனம் சென்றிருந்தது.

அதுவும் அத்தனை பேர் இருந்த இடத்தில், தான் ஆம்புலன்ஸை அழைக்குமாறு கத்தியவுடனே அவளது அலைபேசியில் மருத்துவமனைக்கு அழைத்தவள், அவளது தந்தையின் அரசியல் செல்வாக்கை உபயோகித்து உடனடியாக ஸ்ரீமதிக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்ததில் அவளின் மீது ஒரு மதிப்பும் வந்திருந்தது.

இப்பொழுது அவளே தன்னை அழைத்து அறிமுகப்படுத்திக் கொண்டதும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன், "சொல்லுங்க, உங்களால் எனக்கு என்ன உதவி செய்ய முடியும்?" என்றான் கொஞ்சம் ஆர்வத்துடன்.

"துர்காவை கடத்தினது வருண் தேஸாய் தான்னு இந்நேரம் நீங்க கண்டு பிடிச்சிருப்பீங்க."

"நீங்களும் அன்னைக்கு மண்டபத்தில தானே இருந்தீங்க?"

“ஆமா, ஆனால் அவர் மாஸ்க் போட்டிருந்தாரே..”

“பிறகு எப்படி அது வருண் தேஸாய்ன்னு தெரிந்தது.”

“நான் தூரத்தில் தான் இருந்தேன், ஆனாலும் அவர் மேடையைவிட்டு இறங்கினப்போ அவருடைய கண்ணை என்னால் பார்க்க முடிந்தது.”

அந்தளவுக்கு அவன் முகம் இவள் மனதில் பதிந்திருக்கின்றது என்று அந்நேரத்திலும் ஷிவ நந்தனின் உள்ளம் எண்ணத் தவறவில்லை.

ஆயினும் ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு, அந்த நிலையில் தான் இருந்தான் ஷிவ நந்தன். அச்சூழ்நிலையில் திடுமென அழைத்து உதவ முன்வரும் சிதாராவை விட்டுவிடவும் அவனுக்கு விருப்பம் இல்லை.

“சரி சொல்லுங்க..”

"உங்கக்கிட்ட பேசணும்னு நான் ட்ரைப் பண்ணும் போது தான் துர்காவுடைய அம்மா மயங்கி விழுந்திட்டாங்க. அவங்களை இப்போ அட்மிட் பண்ணிருக்கிற ஹாஸ்பிட்டலுக்கு வந்து உங்களைச் சந்திக்கலாம்னு பார்த்தால், என்னால் உங்களை நெருங்கவே முடியலை. அதான் வேறு வழியில்லாமல் கால் பண்ணினேன்."

"என்ன உதவி உங்களால் செய்ய முடியும்?"

"அதை நேரில தான் சொல்ல முடியும்?"

"ஏன், ஃபோன்ல சொல்ல முடியாதா?"

வெடுக்கென்று கேட்டவனின் கேள்வியில் சிதாராவிற்கும் சற்றுக் கோபம் வரத்தான் செய்தது.

ஆயினும் அவன் வகிக்கும் பதவி அப்படி என்ற எண்ணம் தோன்ற, பெருமூச்செடுத்துத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவளாய் தொடர்ந்தாள்.

"வருணுக்கும் எனக்கும் கல்யாணம் செய்யறதுன்னு ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு முன்னாடியே எங்க பேரண்ட்ஸ் முடிவு செஞ்சுட்டாங்க. அன்னையில் இருந்து நான் எங்க இருப்பேன், எங்கெங்கப் போறேன்னு வருணுக்கு அத்துபடி. அவரது ஆட்களைக் கொண்டு என்னை ஃபாலோ செய்வாரான்னு கேட்டால் எனக்குத் தெரியாது, ஆனால் நான் எங்க இருந்தாலும் அவருக்குத் தெரியாமல் இருக்காதுங்கிறது எனக்கு நல்லாத் தெரியும்.

ஆனால் துர்காவுடைய கல்யாணத்துக்கு வரணும்னு நான் திடீர்னு தான் முடிவு பண்ணினேன். அதாவது உங்களுடைய கல்யாண நாளுக்கு முந்தைய இரவு தான் நான் முடிவு செய்தேன். அதனால் நான் அங்க கல்யாண மண்டபத்தில் இருப்பேன்னு வருண் எதிர்பார்த்திருக்க மாட்டாருன்னு தான் எனக்குத் தோணுது. ஆனாலும் அவர் எதை, எப்போ செய்வாருன்னு யாராலேயும் கணிக்க முடியாது.

ஸோ, இப்போ நான் ஃபோனில் என்ன பேசினாலும் அவருடைய காதுக்கும் அது போறதுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தான் நேரில் பேசணும்னு சொன்னேன். பட், உங்களுக்குக் கஷ்டமா இருந்தால் விடுங்க, நீங்களே உங்க துர்காவைக் கண்டு பிடிச்சிக்கோங்க."

உனக்குச் சளைத்தவள் அல்ல நான் என்பது போல் பேசுபவளைக் கண்டு மறுமுனையில் அதுவரை இருந்து வந்த இறுக்கம் தளர, சத்தமின்றிச் சற்றே புன்னகைத்தவன், "ஃபோன்ல பேசுறதே வருணுக்கு தெரிஞ்சுடும்னா, நேரில் என்னைப் பார்க்க வந்தால் மட்டும் அவனுக்குத் தெரிஞ்சுப் போகாதா?" என்றான்.

"நீங்க சீனியர் சூப்பிரண்ட் ஆஃப் போலீஸ் தானே. வருணுக்கு தெரியாதளவுக்கு உங்களை நான் சந்திக்கிறதுக்கு நீங்களே ஏற்பாடு பண்ணுங்க."

விநாடிகள் நேரம் மௌனம் காத்தவன், "இப்போ எங்க இருக்கீங்க?" என்றான், அருகில் நிற்கும் நண்பன் அஷோக்கை சைகை செய்து அழைத்தவனாய்.

"அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம்."

பட்டென்று கூறுபவளின் கூற்றில் ஒரு விநாடி கோபம் மூண்டாலும் அவளால் உனக்கு உதவ முடியும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதில் வழக்கத்திற்கு மாறாய் பொறுமைக் காத்தவனாய்,

"உங்க செல்ஃபோன் காலை ட்ராக் பண்ணினா நீங்க எங்க இருக்கீங்கன்னு என்னால் கண்டுப்பிடிக்க முடியும்னு உங்களுக்கும் தெரியும். பட், நீங்க சொல்ற மாதிரி அது எனக்குத் தேவை இல்லாத விஷயம் தான். அதுக்கு இப்போ எனக்கு நேரமும் இல்லை. எனிவேய்ஸ், உங்களைச் சந்திக்கிறதுக்கான ஏற்பாடுகளை முடிச்சிட்டு உங்களைக் கூப்பிடுறேன்.." என்றவன் பேசியது போதும் என்பது போல் அலைபேசியைப் படக்கென்று அணைத்தான்.

அதனில் எதிர்புறம் இலேசான ஆங்காரம் துளிர்த்தது, ஆயினும் தனது சிறு வயது தோழிக்காக விட்டுக்கொடுத்தாள் பெண்ணவள்.

“என்ன ஷிவா? யார் ஃபோன்ல?”

“சிதாரா சௌஹான்.”

“யு மீன் வருண் தேஸாயோட ஃபியான்சி..”

“யெஸ், ஆனால் இப்போ இல்லைங்கிறா.”

“என்ன விஷயமாம்? ஏன் திடீர்னு உன்னைக் கூப்பிட்டிருக்கா.”

வினவிய அஷோக்கிடம் விவரத்தைத் தெரியப்படுத்த, நிமிடங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுத்தவர்கள் சிதாராவை அழைத்தார்கள்.

ஷிவ நந்தன் கூறுவதை உன்னிப்பாய் கவனித்துக் கேட்டுக் கொண்டவள், “சரி, ஆனால் இப்படிப் பேசிட்டு இருக்கும் போதே ஃபோனைக் கட் பண்ணாதீங்க..” என்றாள் சிறு கோபத்துடன்.

“ம்ப்ச்..” என்று சலித்துக் கொண்டவனாய், “உங்களுக்கும் இவ்வளவு கோபம் ஆகாது..” என்று வார்த்தைக்கு வார்த்தை பதில் பேச, “சேன்ஸே இல்லை..” என்று மட்டும் கூறியவள் அவன் சொன்னது போல் அன்றே அவனைச் சந்திக்கச் செல்ல, அதே நேரம் துர்கா வைக்கப்பட்டிருந்த, கானகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த குடிலை நோக்கி வருண் தேஸாயின் ஹெலிகாப்டர் பறந்தது.

************************

அடர்ந்த காடு! வீசும் காற்றின் வேகத்தால் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் இலை தழைகளின் ஓசையும், அவ்வப்பொழுதுக் கேட்கும் பறவைகளின் சத்தமும், பூச்சிகளின் ரீங்காரமும் மட்டுமே அவ்விடத்தினை ஆக்கிரமித்திருந்தது,

இவற்றைத் தவிர அவ்வப்பொழுது கேட்ட ஒரே ஒலி குடில்களைச் சுற்றியிருந்த ஆட்களின் அரவம்.

நேரம் செல்ல செல்ல, எத்தகைய ஆபத்தான இடத்தில் தான் சிக்குண்டு இருக்கின்றோம் என்பது தெளிவாய் புரிய துவங்க, வாழ்நாளில் அதுவரை கண்டிராத பெருங்கிலி துர்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

மெல்ல உதடுகளை விரித்து, "மாமா, எப்படியாவது என்னை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுங்க மாமா.." என்று அழுதுக் கரைந்து புலம்பியவளாய் கட்டிலில் சுருண்டு படுத்திருக்க, மெல்லமாய் வெகுதூரத்தில் கேட்ட ஓசை பெண்ணவளைத் திடுக்கிட்டு எழுந்து அமரச் செய்தது.

"மாமா."

இரகசியமாய் முணுமுணுத்தவாறே அமர்ந்தவளாய் மூடியிருந்த கதவின் புறம் திரும்ப, விநாடிகளுக்குள் தூரத்தில் கேட்ட சத்தம் படிப்படியாய் அதிகரிப்பது போன்று தோன்றியதில் வெடுக்கென்று கட்டிலில் இருந்து எழுந்தாள்.

'’மாமா நான் எங்க இருக்கேன்னு கண்டு பிடிச்சாட்டங்களோ? கடவுளே நான் எப்படியாவது இங்க இருந்து போயிடணும்.'

மனதிற்குள் வேண்டியவாறே அறைக்கதவைத் திறந்தவள் தான் இருக்கும் குடிலுக்குள் ஒருவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவாறே வெளியே வர, எங்களுக்கும் அச்சத்தம் கேட்டது என்பது போல் ஆகாயத்தைப் பார்த்தவர்களாய் நின்றிருந்தனர், வருண் தேஸாயின் ஆட்கள், ஜாஃபர் உட்பட.

‘ஏதோ சத்தம் கேக்குது, வரது கண்டிப்பா மாமாவாத்தான் இருக்கும். இருந்தும் ஏன் எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல் இவங்க தைரியமா இருக்காங்க.’

சிறு பிள்ளையாய் எண்ணியவாறே குடிலைவிட்டு வெளியில் வந்தவளாய் தானும் ஆகாயத்தைப் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, நிமிடங்கள் சில கடந்ததும் இப்பொழுது அதே சத்தம் வெகு அருகில் கேட்டதில் பேதையவளின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் துவங்கியது.

‘மாமா, இங்க கிட்டத்தட்ட பதினைஞ்சு இருபது பேர் இருக்காங்க. எப்படி உங்களால இவங்களை எதிர்த்துப் போராட முடியும்? உங்கக்கூட எத்தனை பேரு வந்திருக்காங்களோ. கடவுளே மாமாவுக்கு எதுவும் ஆகிடக் கூடாது.’

அந்நிமிடம் வரை தனக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்று கலங்கியிருந்தவளின் உள்ளம் இப்பொழுது தன் மாமனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று பதைபதைத்தது.

அணிந்திருந்த புடவையின் முந்தானையை இறுக்கிப் பிடித்தவளாய் விரல்களை அவற்றுக்குள் நுழைத்து முறுக்கியவாறே அச்சத்துடன் நின்றுக் கொண்டிருந்தவளின் கால்கள் பூமிக்குள் புதைந்துவிடுவது போல் தடதடக்கத் துவங்கியது.

எங்கும் சூழ்ந்திருக்கும் இருளும், கொடிகளைப் போன்று ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருக்கும் மரங்களும், காற்றில் ஆடும் இலைகளுக்கு நடுவில் தெரியும் விண்மீன்கள் அல்லாத கருப்பு திரைப் போர்த்திய வானமும் ஏற்கனவே துர்காவினை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது என்றால்,

பெருஞ்சத்தத்துடன் கீழே கிடக்கும் காய்ந்த சருகுகளைச் சிதறடிக்கும் விதமாய்ச் சுழன்று கொண்டிருக்கும் சுழலிகளின் வீரியம் குறைவதற்கு முன், ஹெலிகாப்டரின் கதவினைத் திறந்து குதித்து இறங்கியவனைக் கண்டதில் பெண்ணவளின் தண்டுவடமே சில்லிட்டுப் போனது.

ஐயோ! இவனா? அப்போ மாமா வரலையா?

அதற்குள் சூழ்ந்துக்கொண்ட கண்ணீரோடு இமைகளையும் சிமிட்டாது முந்தானையை இறுக்கப்பிடித்துக் கொண்டவளாய் நின்றவளுக்கு வந்திருப்பவனைக் கண்டதும், அதிர்ச்சியில் மீண்டும் மயக்கம் வருவது போன்று தோன்றியது.

ஆனால் அக்கணம் இன்று காலை ஜாஃபர் கூறிய வாக்கியமும் நினைவில் படர்ந்தது.

'வழக்கமா நாங்க கொடுக்கிற மயக்க மருந்து ஒரு ஏழெட்டு மணி நேரத்துக்கு ஒருத்தரை மயக்கத்தில் வச்சிருக்கும், ஆனால் நீ கொஞ்சம் வித்தியாசம். ஏறக்குறைய நாலு மணி நேரத்திலேயே உனக்கு லேசா முழிப்பு வந்துடுச்சு. அதான் திரும்பவும் மயக்க மருந்து கொடுக்க வேண்டியதா போயிடுச்சு. இப்போ மணி காலை ஏழு. ஸோ, நீ கடத்தப்பட்டுக் கிட்டத்தட்ட இருபத்தி மூணு மணி நேரம் ஆகிடுச்சு.'

துர்கா, உன்னைக் கட்டுப்படுத்திக்கோ. இப்ப மயங்கின, திரும்பவும் எழுந்திரிக்கிறதுக்குள்ள என்னென்னவோ நடந்துடலாம்.

இதுல இவன் வேற வந்திருக்கான். ஜாக்கிரதை!

தனக்குத்தானே திடமூட்டிக் கொண்டவளாய் தொண்டையில் அடைத்திருக்கும் எச்சிலைக் கூட விழுங்க மறந்தவளாய் நின்று கொண்டிருக்க, அக்கணம் வருணின் முகம் அவளை நோக்கித் திரும்பியது.

அவனது உள்ளத்தில் மீண்டும் தோன்றிய வார்த்தைகள்.

‘I’ll be the one who pulls the strings and makes you dance Shiva. I’m your writer. I am your fierce puppeteer!’

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..

References:

Doppelgänger: A doppelgänger sometimes spelled as doppelgaenger or doppelganger, is a biologically unrelated look-alike, or a double, of a living person.

Semal - Bombax ceiba - சிவப்பு பட்டு-பருத்தி - இதற்கு முள்ளிலவு மரம் என்பது தற்காலத்தியப் பெயராகும், ஆனால் சங்க இலக்கியத்தில் செந்நிற பூக்களையுடைய இலவமரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈங்கை இலவம் தூங்கு இணர்க்கொன்றை” எனக் குறிஞ்சிப் பாட்டிலும், “களிறு புலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்” என அகநானூற்றிலும் வரும்.

‘I’ll be the one who pulls the strings and makes you dance Shiva. I’m your writer. I am your fierce puppeteer!’ - நானே உனது கயிற்றை இழுத்து உன்னை ஆடச் செய்பவன் ஷிவா. நானே உனது எழுத்தாளன். நானே உன்னை ஆட்டுவிக்கும் கொடுமையான பொம்மலாட்டக்காரன்.
 
Last edited:
Aww.. next couple aaramba convo ve Tom & Jerry pola irukke… modhalin pin kadhal ah?? 🙈🙈🙈

Intha Aarya pathi than ennala calculate panna mudiyala Jayanthi Sudhakar 😖😖😖 avanoda wife ore oru scene la than vantha… and that model also… avanai namma deal la vitralam…
Namma focus full ah Shiv and Varun mela than 💥💥💥
Next epi layachum antha feeling ku artham kandu pidippiya rasa 🤣🤣
ww.. next couple aaramba convo ve Tom & Jerry pola irukke… modhalin pin kadhal ah?? 🙈🙈🙈

Intha Aarya pathi than ennala calculate panna mudiyala Jayanthi Sudhakar 😖😖😖 avanoda wife ore oru scene la than vantha… and that model also… avanai namma deal la vitralam…
Namma focus full ah Shiv and Varun mela than 💥💥💥

Next epi layachum antha feeling ku artham kandu pidippiya rasa 🤣🤣
 

Vidhushini

New member
வருணுக்கு துர்காவிடம் தோன்றிய ஈர்ப்பு காதல் என்பதை, அவளைப் பிரியப்போகும் தருணம் உணர்வானோ?

ஷிவாவின் வியூகம் வருணை சிக்கவைக்குமா?

Meanwhile, Shiva will roar like this 🔥🔥

5088980-Nydia-Velazquez-Quote-Let-me-tell-you-I-am-nobody-s-puppet.jpg

Interesting @JB sis.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top