JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 14

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

Be wary around your enemy once, and your friend a thousand times. A double crossing friend knows more about what harms you.”

-Arabic Proverb

அத்தியாயம் 14

ஆர்ய விக்னேஷின் கருப்பு நிற லெக்ஸஸ் வீட்டு வளாகத்தைக் கடந்த நேரம் கலானி மிர்சாவிற்குத் தகவல் அனுப்பினாள் சஹானா.

அதே நேரம் ஆர்ய விக்னேஷின் அலைபேசிக்கு மற்றொரு தகவல் வர, ஒரு கையால் வாகனத்தைச் செலுத்தியவாறே அதனைப் படித்தவனின் நெற்றிச் சுருங்கியது.

"இங்கும் துர்கா இல்லை."

வருண் தேஸாய் துர்காவை மறைத்து வைத்திருக்கும் இடத்தினை இது வரை ஆர்யனுக்குத் தெரியப் படுத்திருக்கவில்லை. எவ்வளவோ முறைக் கேட்டும் அவ்விடத்தைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை வருண்.

‘உங்களோட ப்ரைவெஸியில் நான் தலையிட மாட்டேன் ஆர்யன். அதே மாதிரி என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நீங்க தலையிடாமல் இருக்கும் வரை நமக்குள் எந்தப் பிரச்சனைகளும் வராது.’

முகத்தில் அடித்தார் போன்று கூறியவனிடம் அதற்குப் பிறகு துர்காவின் இருப்பிடத்தைப் பற்றி விசாரிக்க ஆர்யன் முயற்சிக்கவில்லை.

ஆயினும் அதுவே அவனுடன் கைக்குலுக்கித் தன் நட்பைத் துவங்கிய நாளில் இருந்து வந்திராத சந்தேகத்தை முதல் முறை ஆர்யனுக்குள் எழுப்பியது.

அடுத்தச் சந்தேகம் ஷிவ நந்தனைப் பழிவாங்கவென்று துர்காவைக் கடத்தியிருந்தவன் ஏன் இத்தனை நாட்கள் அவளை அடைத்து வைத்திருக்கின்றான்?

அதற்குக் காரணமாய் அவன் கூறியிருந்த விஷயங்களிலும் துளி நம்பிக்கைக் கூட வரவில்லை ஆர்யனுக்கு.

ஆக, என் முதுகுக்குப் பின்னால் காரியங்களை ஆற்ற ஆரம்பித்துவிட்டிருக்கும் வருணை இனி நம்புவது ஆபத்தானது! அதுவும் அவனும் பங்காளராக இருக்கும் ஒரு நிறுவனத்தின் கீழ், அவனுக்கே தெரியாமல் இப்படி கொடிய ஆய்வினைகளைச் செய்து கொண்டிருக்கும் வேளையில்.

பல முறை இந்த ஆராய்ச்சிகள் ஒரு வேளை வருணுக்குத் தெரிய வந்தால் அவனுடைய எதிர்ப்புகளும், நடவடிக்கைகளும் எப்படி இருக்கும் என்று ஆர்யன் யோசித்திருக்கின்றான் தான். ஆனாலும் எப்படியாவது வருணைத் தன் கைகளுக்குள் அகப்படுத்திக் கொண்டு அவனைச் சமாதானப் படுத்திவிடலாம் என்று ஆர்யன் எண்ணியிருக்க, இப்பொழுது வருணின் செய்கை ஆர்யனின் திட்டங்களில் மண்ணை அள்ளிப் போட்டது போல் இருந்தது.

ஆக, துர்காவை வருண் எங்கு அடைத்து வைத்திருக்கின்றான் என்று அவனுக்கே தெரியாமல் தன் ஆட்களைவிட்டுத் தேடப் பணித்திருந்தான்.

அவர்களும் இரகசியமாகத் துப்புத்துலக்க ஆரம்பித்திருந்தனர்.

அப்படியான சூழ்நிலையில், ஆரம்பக்காலங்களில், ஆர்யனுடன் பழக்கம் ஏற்படுவதற்கு முன்னர் வருண் தேஸாய் நிழல் உலகத்திற்குள் அடி எடுத்து வைத்திருந்த தருணத்தில், தனது திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஒரே ஒரு முறைத் தேர்ந்தெடுத்திருந்த வெகு மர்மமான ஒரு இடத்தினைக் கண்டறிந்தார்கள்.

ஆர்யனின் கட்டளைப்படி அவனுடைய ஆட்கள் அவ்விடத்திற்குச் செல்ல, அங்குத் துர்கா இல்லாததால் அவர்களில் ஒருவன் அனுப்பிய தகவலே அது.

என்னிடமே மறைத்து அவளைப் பாதுகாத்து வருகின்றான் என்றால் எனக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் நட்பில் கோடு விழுகின்றது என்று தானே அர்த்தம்.

அந்தக் கோடு பெரும் பிளவாக மாறவும் வாய்ப்பிருக்கின்றது.

ஏன் அந்தப் பிளவிற்குத் துவக்கப்புள்ளி வைப்பதே துர்காவாக இருக்கலாம், அப்படி என்றால் துர்கா வருணுடன் இருக்கும் வரையில் எனக்கு ஆபத்து தான்.

இதனில் ஷிவ நந்தனை சிதாரா சந்தித்திருப்பதாக வருணுக்கு வந்த தகவலை அன்று ஆங்காரமாகத் தன்னிடம் கூறியிருந்தவன், அதற்குப் பிறகு சிதாராவை சந்திக்கக் கூட முயற்சிக்கவில்லை என்பதும் வெகு நாட்களாக நெருடலாகவே இருந்தது.

அப்படி என்றால் வருணுக்கு சிதாராவைத் திருமணம் செய்யும் எண்ணம் இனி இல்லை.

ஒரு வேளை வருணுக்கு துர்காவின் மீது காதல் வந்துவிட்டதோ? வருணைப் பற்றி அணு அளவும் தவறாது வெகு துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கின்றேன் என்றால், நிச்சயம் அவன் விரும்பும் பெண்ணை எக்காரணம் கொண்டும் அவன் ஒருவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான். அவள் யாராக இருந்தாலும் சரி!

இந்தத் தருணத்தில் ஒரு வேளை துர்காவிற்கும் வருண் மீது ஒரு ஈடுபாடு வந்தால்? அப்படியான சூழ்நிலையில் வேறு வழியின்றி ஷிவ நந்தனும் ஏற்றுக் கொண்டால், அதிநிச்சயமாக வருண் என் கையை விட்டுப் போய்விடுவான்.

ஆக, துர்கா வருணைவிட்டு அகல வேண்டும். அல்லது அவளை நான் அகற்ற வேண்டும். I have to take her out of the picture.

ஆர்யனின் நெஞ்சினில் அவன் பிடித்துக் கொண்டிருக்கும் குர்கா சிகாரில் தகித்து எரியும் கனல் போல் கோபம் கனன்று எழுந்தது.

Be wary around your enemy once, and your friend a thousand times. A double crossing friend knows more about what harms you. - Arabic Proverb

உண்மையில், நமது எதிரிகளை விட நாம் பாதிக்கப்படக்கூடிய பக்கங்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் நமது நண்பர்களே. எனவே, எதிரிகளையும் விட நண்பர்களைப் பற்றி மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் சில நேரங்களில் நண்பர்களும் எதிரிகளாக மாறுகிறார்கள்.

--அரேபிய பொன்மொழி

*******************************

கட்சிரோலிக் கானகம்.

இப்போது இங்கு வந்திருப்பது ஷிவ நந்தன் இல்லை என்று மறைமுகமாய்க் கூறியவனாய் குடிலிற்குள் சென்று மறைந்த வருண் தேஸாயின் வார்த்தைகள் பேரிடியாய் துர்காவின் தலை மீது இறங்கியது.

இவன் என்ன சொல்ல வருகின்றான்?

கொன்றை மரங்கள் பூத்துக்குலுங்கும் கார்காலத்தில் வருகின்றேன் என்று சொல்லி சென்ற தலைவன் வரவில்லை, ஆனால் நான் வந்திருக்கின்றேன் என்கிறானா?

'அப்படி என்றால் என் மாமா வரமாட்டாரா? இவன் அவரை எதுவும் செய்துவிட்டானா? என் மாமாவை யாராலும் எதுவும் செய்ய முடியுமா? ஆனால் அவர் வர மாட்டார் அப்படினுல்ல இவன் சொல்றான். ஐயோ! என் மாமாவுக்கு என்னாச்சு?’

மனம் குமுறத் துவங்க, கரைக்கடந்த வெள்ளமெனக் கண்களில் நீர் சுரக்க, விறுவிறுவென நடந்தவளாய் குடிலிற்குள் நுழைந்தவளின் கால்கள் திடுமென நின்றுப் போயின.

அங்கு அவளின் வரவினை எதிர்நோக்கி இருப்பது போல் வாயிலின் மீது வைத்த கண் வாங்காது பார்த்தவாறே ஆசனத்தில் அமர்ந்திருந்த வருணின் பார்வையைக் கண்டதில்.

சட்டென நடையின் வேகத்தைக் குறைத்ததில் விநாடி நேரம் தடுமாறியவள் திடப்படுத்திக் கொண்டு நிற்க, அவளின் தடுமாற்றத்தைக் கண்டு தலையை இடம் வலமாய் அசைத்துத் தோள்களைக் குலுக்கியவனாய் பார்வையின் திசையை மாற்றி ஜன்னலைப் பார்க்க, மெல்ல அவனை நெருங்கியவள், "நீங்க என்ன சொல்ல வர்றீங்க?" என்றாள்.

அவனது பதிலில் தான் தன் உயிரே இருக்கின்றது என்பது போல் மானசீகமாய் அவனை யாசித்தவளின் கெஞ்சும் குரல் வருணை என்னவோ செய்தது.

ஆயினும் இது தான் நான் என்பது போல் கால் மேல் கால் போட்டவாறே நாற்காலியின் கைப்பிடியில் கையை ஊன்றி முகவாயைத் தாங்கியவனாய் அவளின் முகம் பாராமலேயே, "என்ன சொன்னேன்?" என்றான்.

"மாமா வந்துடுவாருன்னு நான் சொன்னேன், அதுக்கு அவரால் எப்படி வர முடியும்னு நீங்க சொன்னீங்க."

"நான் அப்படிச் சொல்லை.."

"அ.. அப்போ நீங்க சொன்னதுக்கு எ..எ.. என்ன அர்த்தம்?"

"நீ எந்த அர்த்தத்தில அதைப் புரிஞ்சிக்கிட்ட?"

"மா மா மாமாவுக்கு எதுவும்.." என்றவள் சற்று நிறுத்தி நழுவிவிடுவது போல் இருக்கும் பாதங்களைத் தரையில் அழுந்த ஊன்றியவளாய், "ஆ.. ஆபத்து இல்லையே? அவரை நீங்க எதுவும் செஞ்சிடலையே? எப்படியும் என்னைக் கூட்டிட்டு போக அவர் வ.. வந்துடுவாரு தானே.." என்றாள்.

அவளது சிறு பிள்ளைத்தனமான கேள்வியில் அக்கணம் வரை ஜன்னலின் வழியாக வெளியே பார்த்திருந்தவன் வியப்புற்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவனாய் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

ஆயினும் அவன் பதிலெதுவும் கூறவில்லை.

நொடிகள் கரைய ஆனால் தனது வினாவிற்குப் பதிலுரைக்காது தன்னையே பார்த்திருப்பவனின் கண்களில் பளபளப்பு ஏறியதில் அதன் பொருள் புரியாது சமைந்துப் போய் நின்றிருந்தவளுக்கு அதற்கு மேல் அவனிடம் கேள்விக் கேட்கும் தைரியம் வரவில்லை.

அவளது அதிர்ச்சியில் மருண்டு விழித்த கண்களையும், நடுக்கத்தில் துடித்த உதடுகளையும், கன்னம் தாண்டி வழியும் விழிநீரையும், விடைத்திருக்கும் சிவந்த மூக்கையும் ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்தவனின் தீர்க்கமான பார்வை அவளின் வயலெட் நிற மூக்குத்தியில் நின்றது.

தனது வழக்கமான ஸ்டையிலில் கழுத்தை அழுந்த தடவியவனாய் உட்கன்னத்தை மெதுவாய் கடித்தவன் மெள்ள எழுந்து நின்றான்.

அவன் எழுந்ததுமே எங்கு அவன் தன்னை நெருங்கப் போகின்றானோ என்பது போல் இரு அடிகள் பின்னோக்கி நகர்ந்தவளைக் கண்டு புன்னகைத்தவன், அவளது எண்ணம் போல் அவளை நெருங்கி நின்றான், மிக அதிகமாய்.

தன் ஸ்வாசக் காற்று அவள் முகத்தில் வீச, அவளின் முகம் நோக்கி குனிந்தவன், "இன்னுமா உன் மாமா இங்க வருவான்னு நீ நம்பிட்டு இருக்க?" என்றான்.

பேசியவனின் கண்கள் என்னவோ அவளது உதடுகளைத் தொட்டு மீண்டது.

"அப்படின்னா அவருக்கு உங்களால் ஏதோ ஆபத்து வந்துடுச்சுன்னு அர்த்தம்? அப்படித்தானே?"

அழுதுவிடுபவள் போல் பேச, "ஏன், அவனை ஈஸியா அழிக்கிற அளவுக்கு அவ்வளவு சக்தி குறைந்தவனா உன் மாமன்?" என்றான் நக்கல் வழிய.

"இல்லை, அப்படி இல்லை. எங்க மாமாவை ஈஸியா யாராலும் நெருங்க கூட முடியாது."

"பின்ன, என்னால் அவனுக்கு ஏதோ ஆபத்துன்னு சொன்ன?"

“அவர் இந்நேரம் நிச்சயமா என்னைத் தேடி வந்திருப்பார். ஆனால் இவ்வளவு நாளாகியும் அவர் வரலைன்னா எப்படி?”

“எப்படின்னு என்னைக் கேட்டால்?”

“உங்களுக்குத் தான தெரியும். நீங்க தான் இங்க வந்திருப்பது உன் மாமா இல்லை, நான்னு சொன்னீங்க.”

"யெஸ், ஆனால் அதுக்கு.." என்று எதுவோ கூற வந்தவன் சற்று நிறுத்தி, "சரி, உன் மாமா வரும் போது வரட்டும், எனக்கு இப்போ பசிக்குது. நீயே சில நேரங்களில் இங்க சமைக்கவும் செய்யறன்னு ஜாஃபர் சொன்னான். இப்ப சாப்பிடறதுக்கு எதுவும் இருக்கா?" என்றான்.

அவன் என்னவோ கூற வந்து, பிறகு கூறாமல் விட்டது குழப்பத்தை அளித்தது.

ஆயினும் அவன் பசிக்குது என்றதில் தன்னை அவன் கடத்தி வந்தவன் என்பதைக் கூட நொடி நேரம் மறந்தவளாய், பெண்மையாய் தாய்மையை உணர்ந்தவள் தன்னிச்சையாய் சமையல் அறையை நோக்கித் திரும்பியவள் தன்னையே நினைத்து திகைத்துப் போனாள்.

அவளது செய்கைகளைக் கூர்ந்துக் கவனித்து வந்திருந்தவன் அவளது தடுமாற்றத்தை உணர்ந்து குடிலிற்கு வெளியே நின்றிருக்கும் ஜாஃபரை அழைத்து உணவினை எடுத்து வைக்கச் சொல்ல, அவளும் அதுவரை சாப்பிடாததைக் கூறிய ஜாஃபர் இருவருக்கும் சேர்த்துமாக உண்டிகளை எடுத்து வந்தான்.

குடிலின் நடுவில் இருந்த அறையில் மேஜையை இழுத்துப் போட்ட ஜாஃபர் உணவினை இரு தட்டுகளில் பரிமாற, மேஜைக்கு ஒரு புறமாய் நாற்காலி ஒன்றினை இழுத்துப் போட்ட வருண் அதனில் தான் அமர்ந்தவன் எதிரே இருந்த நாற்காலியை துர்காவிடம் சைகையால் காட்டினான்.

ஆனால் அவனுடன் அமர்ந்து உணவு உண்ணுவதா என்று திகைத்தவள், "எனக்குப் பசியில்லை." என்று மட்டும் கூறிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கதவினை சாத்திவிட்டதில் ஜாஃபருக்குத் தான் திக்கென்று இருந்தது.

அவளது இத்தகைய செயல் எங்கு வருணுக்குக் கோபத்தை அளித்துவிடுமோ என்று அதிர்ந்து நிமிர்ந்துப் பார்த்த ஜாஃபருக்கு முதன் முறையாய் வருணின் முகத்தில் பார்த்த புன்முறுவல் வியப்பை அளித்தது.

அதனில் அவனுக்கும் சிறு திடம் வந்தது.

“சார். துர்கா எல்லா நேரமும் சாப்பிடுறதில்லை. ரொம்பப் பசி எடுக்கும் போது மட்டும் தான் வெளியில் வரா.”

பதில் கூறாது கண்களாலேயே தனக்குப் பரிமாறுமாறு வருண் சைகையால் கட்டளையிட, அவனுக்கு உணவைப் பரிமாறி முடித்த ஜாஃபர் குடிலைவிட்டு வெளியேறியதும் தனக்கு முன் இருந்த தட்டினில் வைக்கப்பட்டிருந்த சப்பாத்தியில் கை வைக்கப்போன வருணுக்கு ஏனோ அதை உண்ண மனம் வரவில்லை.

சட்டென்று எழுந்தவன் தாழிடப்படாத கதவினை தள்ளிவிட்டு உள்ளே நுழைய, கன்னத்திற்குக் கீழ் கரங்களைக் கொடுத்துக் கட்டிலில் சுருண்டு ஒருக்களித்துப் படுத்திருந்த துர்கா, கதவு திறக்கும் அரவத்தில் ஜாஃபர் தான் வந்திருக்கின்றானோ என்று எண்ணிப் பார்த்தவள் வந்திருப்பவனைக் கண்டு பீதியடைந்தவளாய் அரண்டடித்து எழுந்து அமர்ந்தாள்.

"எ.. எ.. எனக்கு நிஜமாவே ப.. ப.. பசியில்லை."

திக்கித் திணறிக் கூறுபவளின் அருகில் வந்து நின்றவனாய் அவளை நோக்க, அவனது துளைத்துவிடும் பார்வையில் தலை கவிழ்ந்தவளைப் பார்த்தவாறே, "பசியில்லையா, இல்லை என் கூட உட்கார்ந்து சாப்பிடறதுக்குப் பிடிக்கலையா?" என்றான்.

அப்பொழுதும் தலையை நிமிர்த்தாது அமர்ந்திருந்தவளைக் கண்டு, "துர்கா, நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்." என்றான் சற்றுக் கடுமையை வரவழைத்துக் கொண்ட குரலில்.

அவனது நெடிய கால்கள் கட்டிலை உரசிக் கொண்டு இருக்க, எழுந்து நிற்கவும் வழியில்லாது அமர்ந்திருந்தவள் அப்பொழுதும் அவனை ஏறிட்டு நோக்கும் துணிவற்று, "நான் பொய் சொல்லலை. எனக்கு நிஜமாவே பசிக்கலை." என்றாள்.

"பசிக்காமல் போனாலும் பரவாயில்லை, இப்போ நீ, என் கூட உட்கார்ந்து சாப்பிடற.."

ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமான குரலில் அதிகாரத்துடன் கூற, அணை உடைந்தது போல் நிற்காது வழிந்து கொண்டிருந்த அவளின் கண்ணீர் அவள் அணிந்திருந்த மாராப்பினை நனைத்தது.

புடவையில் படிந்த ஈரம், இதுவரை எதற்குமே உருகியிராத அவனது ஈயம் பாய்ந்த இதயத்தையும் உருக்கியதோ, நேசத்தினை ஒருவரிடமும் காட்டியிராதவனின் இறுகிய நெஞ்சத்தில் கரிசனமான சீற்றம் எழுந்தது.

"ம்ப்ச், இப்போ எதுக்குடி இந்த அழுகை?"

அடித்துவிடுவது போல் ஆங்காரத்துடன் கூறியவனின் சத்தத்தை விட, அவன் 'டி' போட்டு பேசியது பெருந்திகிலை பெண்ணவளுக்குக் கொணர்ந்தது.

படக்கென அவனை நிமிர்ந்து நோக்க, "நானே வேணாம்னு நினைச்சாலும் நீ விடமாட்ட.." என்றவனாய் அவள் நிதானமாய் எழுவதற்குக் கூட அவகாசம் அளிக்காது அவளின் கரம் பற்றி இழுத்ததில் அரக்கப்பரக்க எழுந்தவள் அவன் மீதே மோதி நின்றாள்.

வருணும் அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் இதனை எதிர்பார்க்கவில்லை.

அவளும் இப்படி அவன் முரட்டுத்தனமாய்த் தன்னை இழுப்பான் என்று நினைத்திருக்கவில்லை.

நிலைத்தடுமாறி கீழே விழப் போனவளை விழவொட்டாது இருக்க அவன் இறுக்கப்பற்ற, அணிந்திருந்த புடவைக்கு இடையில் வெளிப்பட்ட வெற்று இடையில் அழுந்தப் பற்றியிருந்த அவனது வலியக் கரத்தின் வீரியத்தில் தேகம் தழலாய் தகித்ததில், பேதையவளின் நெஞ்சத்தில் பயம் அள்ளி வீசப்பட்டது.

திகிலுடன் அவனைவிட்டு விலக எத்தனிக்க, ஆயினும் அவளால் முடியவில்லை.

எஃகு போல் இரும்பாய் பிடித்திருந்தவன்,

“உன்னைத் தொடக் கூடாதுன்னு சொன்ன. நானும் முயற்சி பண்ணினேன். ஆனால் நீ விடலை. இனி என்னால் அப்படி இருக்க முடியாது..” என்று அமர்த்தலாய் கூறியவன் அதே நிலையில் அவளை வெளியே அழைத்துச் சென்றான்.

அவனது மன இறுக்கத்திற்கு ஈடாவது போல் கன்றிப் போகுமளவிற்கு இறுக்கமாய்த் தன் இடையைப் பிடித்திருந்த அவனது கை விரல்களை அகற்றப் பெரும்பாடுப்பட்டவளை பொருட்படுத்தாவனாய் உணவு மேஜையை ஒட்டி இருந்த நாற்காலியின் அருகில் நிறுத்தினான்.

"சாப்பிடு.."

வேண்டாம் என்பது போல் மறுப்பாய் தலையசைத்தவளைக் கண்டு, "துர்கா, என்னுடைய பொறுமையைச் சோதிக்காத, சாப்பிடு.." என்றவனாய் இடையை விட்டு கையை அகற்றியவன் அவளின் இரு தோள்களையும் அழுந்த பற்றி அமரச் செய்தான்.

அமர்ந்தாளே ஒழிய அவள் சாப்பிடவில்லை.

"ஏண்டி என்னை இப்படிப் படுத்துற?"

உரிமையாய் அவன் தன்னை வளைத்துப் பிடித்தது மட்டுமன்றி மீண்டும் அவளை 'டி' போட்டு பேசியது அவளுக்கும் கோபத்தைத் துளிர்க்கச் செய்தது.

"தலைக்கு மேல கத்தியை தொங்கவிட்டுட்டு சாப்பிடச் சொன்னால் எப்படி?"

"தலைக்கு மேல கத்தியா? எங்க?"

"ம்ப்ச்.. என்னைக் கடத்திட்டு வந்திருக்கீங்க. இப்படி அந்நிய ஆம்பளைங்களுக்கு மத்தியில தனியா சுத்திட்டு இருக்கேன். எப்போ எனக்கு என்ன நடக்குமோங்கிற பயத்தில நடுங்கிட்டு இருக்கேன். இது தலைக்கு மேல கத்திய தொங்கவிட்டுருக்க மாதிரி இல்லையா?"

"ஆனால் நீ ஏதோ முதல் ரெண்டு மூணு நாளு தான் சாப்பிடலை, பிறகு சாப்பிட ஆரம்பிச்சிட்டன்னு சொன்னாங்களே."

கிண்டல் வழியும் குரலில் கூறியவன் அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து சப்பாத்தியை பிட்டு வாயில் வைக்க, ஒரு சில விநாடிகள் அவனை உறுத்துப் பார்த்தவள், "அது என்னுடைய தற்காப்புக்காகத்தான்.." என்றாள்.

"தற்காப்புக்கா?"

"பின்ன என்ன செய்யச் சொல்றீங்க? சாப்பிடாம பசியில மயங்கிக் கிடக்கச் சொல்றீங்களா? அதுவும் இத்தனை ஆம்பளைங்களுக்கு மத்தியில?"

"சரி, அப்படின்னா இப்பவும் சாப்பிட வேண்டியது தானே. கத்தி கிட்டத்தட்ட ஒரு மாசமா உன் தலைக்கு மேல தொங்கிட்டு தானே இருக்கு?"

வழக்கமாய் அதிகம் பேசாது ஓரிரு வார்த்தைகளிலேயே அங்கு இருக்கும் அடியாட்கள் அனைவரையும் தன் வழிக்குக் கொண்டு வருபவன் இன்று வார்த்தைக்கு வார்த்தை பேசுவதில் பெண்ணவளின் மனம் பெரும் வியப்பை அடைந்தது.

இருந்தும், விடாது பேசிக் கொண்டிருப்பவனிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்பது போல் அமர்ந்திருந்தவளுக்கு, அதற்கு மேல் எவ்வாறு மறுப்புக் கூறுவது என்றும் தெரியவில்லை.

இருந்தும் உண்ணவும் மனம் வரவில்லை.

அவளின் பேச்சிலும், இப்பொழுது பிடிவாதமாய் அமைதியாக அவள் அமர்ந்திருக்கும் தோரணையிலும் வருணிற்குப் புன்சிரிப்பு வந்தது. ஆயினும் அவன் அதனை வெளிகாட்டிக் கொள்ளவில்லை.

இரு கைகளையும் ஒன்றாய் இணைத்து பிசைந்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன் அவளது தட்டினை அவள் புறம் நகர்த்தியவனாய் உண்ணாது சட்டென எழுந்து நிற்க, இப்பொழுது என்ன செய்யப் போகின்றானோ என்ற கேள்வியுடன் அவளும் எழுந்து நின்றாள்.

"என் கூட உட்கார்ந்து உனக்குச் சாப்பிட பிடிக்கலைன்னு எனக்குத் தெரியுது, ஆனால் இப்ப தான் நான் எழுந்துட்டேனே, நீ சாப்பிடு.."

கூறியவன் உணவினை உண்ணாது கை அலம்பியவனாய் குடிலைவிட்டு வெளியேறப் போனவனை, "நீ.. நீங்க சாப்பிடலை.." என்றவளின் மென்மையான குரல் தடுத்து நிறுத்தியது.

நின்றவன் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க,

“நா உண்மையத் தான் சொன்னேன். எனக்கு நிஜமாவே பசிக்கலை. ஆனா உங்களுக்குப் பசிச்சதுன்னால தான சாப்பாடு வேணும்னு கேட்டீங்க. இப்ப நீங்க சாப்பிடாம பாதியில எழுந்துப் போறீங்க, அது என்னால தான்னு எனக்குத் தெரியும்.. சாப்பிடாம போகாதீங்க.. வாங்க...” என்றவளின் அக்கறையான வார்த்தைகள் பசியாறாமலேயே பசியாறியது போல் வருணுக்குள் ஒரு சிலிர்ப்பை உருவாக்கியது.

“இட்ஸ் ஒகே.. நீ சாப்பிடு..”

என்று மட்டும் கூறியவன் வெளியேற, ஆழ இழுத்து மூச்சினைவிட்டவள் வேறு வழியின்றிக் கொஞ்சம் கொறித்துவிட்டு எழுந்து தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அது தனக்காக உண்டாளா? அல்லது அவனுக்காகவா என்று அவளே அன்று அறியவில்லை!

குடிலிற்கு வெளியே இருந்தாலும் அவள் வேகவேகமாய் உணவினை அருந்தியது வருணின் கண்களில் இருந்து தப்பவில்லை.

மனம், ‘எப்படியோ சாப்பிட்டால் சரி..’ என்று நிம்மதியடைய, சில மணித்துளிகள் தனது ஆட்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவன் ஜாஃபரிடம் சில விஷயங்களைப் பற்றி இரகசியமாய்ப் பகிர்ந்துவிட்டு ஆகாயத்தைப் பார்க்க, சொல்லி வைத்தார் போன்று அவனது ஹெலிகாப்டரும் குடிலை நோக்கி வந்து கொண்டிருந்தது.

மீண்டும் சுழலிகளின் சத்தம் துர்காவையும் எட்டியதில் அவன் கிளம்புகின்றான் என்பது புரிய, ஒரு பக்கம் அவன் உண்ணவில்லை என்ற வருத்தமும், மறுபக்கம் அவன் செல்கின்றான் என்ற நிம்மதியும் படர்ந்ததில் குடிலின் வாயிலிற்கு வர, அவளது அரவத்தில் திரும்பிப் பார்த்தவன் அவளுக்கு அருகில் வந்தான்.

“சாப்பிட்டப் போலருக்கு..?”

“ம்ம். ஆனால் நீங்க சாப்பிடலை..”

“இட்ஸ் ஒகே.. நீ சாப்பிட்டால் என்ன, நான் சாப்பிட்டால் என்ன?”

“யாருக்கு பசிக்குதோ அவங்க தானே சாப்பிடணும்.”

“எல்லா நேரமும் அப்படி இருக்க முடியாது துர்கா..”

“புரியலை..”

கூறியவளின் முகத்தின் ஒவ்வொரு பாகங்களையும் அளவிடுவது போல் விநாடிகள் சில இரசித்துப் பார்த்தவன் அவளின் கரத்தை மெதுவாய் பற்ற, பெண்ணவளோ அவனின் தொடுகையைக் கூட உணராது கண் இமைக்காது அவனையே பார்த்திருந்தாள்.

"துர்கா. எனக்குத் தெரிஞ்ச சங்க இலக்கியப் பாட்டை நான் சொன்னேன்.. அதுக்கும் ஷிவாவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமான்னு கேட்டால் எனக்குத் தெரியாது. ஏதோ இந்த மரங்களில் பூக்கும் பூக்களைப் பார்த்ததும் எனக்குக் கொன்றைப் பூக்கள் நியாபகம் வந்தது, அதனால் அந்தப் பாட்டைச் சொல்லணும்னு தோனுச்சு. ஆனால் அதற்கும் நாம இருக்கும் சூழ்நிலைக்கும் ஏதோ coincidence [தற்செயல்] போல் அமைஞ்சிருக்கு. அவ்வளவு தான். என்னால் உன் மாமாவுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. அதே போல் உனக்கும் இங்க எதுவும் ஆகாது. ஐ மீன், உன் தலைக்கு மேல் கத்தி தொங்குதுன்னு சொன்ன, அது மாதிரி கத்தி உன் தலைக்கும் மேல் எப்பவும், எங்கேயும் தொங்காது. அப்படியான ஆபத்தான சூழ்நிலை உனக்கு எப்பவும் வர நான் விடமாட்டேன். நான் இந்த உலகத்தில் இருக்கும் வரை..”

பிடித்திருந்த பிடியில் அழுத்தத்தைக் கூட்டியவனாய் கடிய தொனியில் கூறியவன் சட்டென அவளது கரத்தை விட்டு ஹெலிகாப்டரில் ஏற, சற்று நேரத்தில் அவளது கண்களில் இருந்து ஹெலிகாப்டர் மறைந்தாலும் அவன் கூறிய வார்த்தைகள் அவளது செவிகளில் இருந்து மட்டுமல்ல, மூளையில் இருந்தும் கூட மறையவில்லை.

குறிப்பாக, 'என்னால் உன் மாமாவுடைய உயிருக்கு எதுவும் ஆபத்து வராது' என்ற வார்த்தைகளும், அதே போல் 'ஆபத்தான சூழ்நிலை உனக்கு எப்பவும் வர நான் விடமாட்டேன். நான் இந்த உலகத்தில் இருக்கும் வரை..' என்ற சொற்களும்.

‘அப்படி என்றால் இவன் நம்பத் தகுந்தவனா? என்னையே கடத்திய ஒருவனை நான் எவ்வாறு நம்ப முடியும்? இவன் உயிரோடு இருக்கும் வரை எனக்கு ஆபத்து எதுவும் நேரிடாது என்று கூறுகின்றான் என்றால் நான் எத்தகைய நம்பிக்கையை இவன் பெயரில் வைக்க வேண்டும்?’

ஆயினும் அவள் நம்பித்தான் ஆக வேண்டும் என்ற வகையில் அதற்குப் பின் வருண் தேஸாயின் ஹெலிகாப்டர் பல முறை அந்தக் கானகப்பகுதியில் வந்து இறங்கியது.

துர்காவின் மனதில் தன்னை ஒரு பணயக் கைதியைப் போல் வருணின் ஆட்கள் நடத்தாததில் அவர்களின் மேல் ஒரு மதிப்பை பல நாட்களுக்கு முன்னரே கொணர்ந்திருந்தது.

இதனில் இக்கணம் வரை தான் அந்தக் கானகத்திற்குள் அடைபட்டுக் கொண்டிருந்தாலும், அவ்வப்பொழுது வந்து போகும் வருணின் நடவடிக்கைகளும், பிடிவாதமாகத் தன்னைக் கரம் பிடித்து இழுத்துச் சென்று உணவருந்த வைக்கும் அவனது கோபத்திற்குப் பின் இருக்கும் அக்கறையும், அவன் மேல் ஒரு அச்சமின்மையைக் கொணர்ந்தது.

அது மட்டுமா அல்லது வேறு எதுவுமா என்று அவளே அன்று அறிந்திருக்கவில்லை.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.
 
Last edited:

Vidhushini

New member
வருண் தன்னிடம் ஏற்படும் மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமா உணர்ந்துட்டு வர்றான். இதைத் துர்காவும் உணர்வாளா? இல்லை மேலும் குழம்பிக்கொள்வாளா?

துர்காவிற்குத் தந்த வாக்கு ஷிவா-வருணை இணைக்கப்போகும் விதியின் முதல் சமிக்ஞையோ?

ஆர்ய விக்னேஷ் இனி தனித்துச் செயல்பட்டால், அவனின் மொத்தக் குரூரமும் வெளிப்படுமோ?

Waiting for the next epi @JB sis.
 

Innaikku Shiv varala…
Me sogam… 😒😒😒

If you start to dig a grave to anyone,
Someone will do the same to you…
If Aryan betrays Varun, he gets the betrayal twice as much from Sahana… 🫤🫤🫤

Adadada…
Ange ennada na Shivu Sithara va parthu ‘Di’ nu solluran….
Inge ennada na Varun Durga va parthu ‘Di’ nu solluran…
Ketkave aanandhama irukku… 🥰🥰

Aww.. Varun Durga moments are heart drenching ❣️❣️❣️
Lifetime protection guaranteed by Varun to Durga…
Ithai ava unarvala???

Hope Varun Shiva bond gets stronger and they walk in same way against Aryan…

As per Aryan and Varun encounters,
Aryan will try to make Durga’s life miserable to get Varun trapped… 😑😑😑
Durga’s life would be in danger. Then the Lion Varun would bounce back to protect his lioness…
Seetha might help Varun against Aryan…

Aryan’s destiny will be written by Seetha
 

Lucky Chittu

New member
Sema Varun and Durga love ne puriyama oru vitha purithal irukku paarunga sema. Varun unarnthuttaan. Sekiram unaruva. Enakku pidicha varigal ennana en uyir irukkum varai unakku entha vitha prechanaiyum varama irukkum nu solli plus un mamavukkum entha issues um varathunu solli avalod muzhu nambikkaiya sambathichuttaan namma Varun. Shiva sithara love track eppo varum nu waiting. Aaryan eppo thirunthuvaan. Avan guess pannitaan Varun Durga VA vida mattaan. Ini enna nadakkum waiting mam.
 

saru

Member
Lovely update Aaryan konjama smell pandran
Durga irukakoodathu nu aari ninaikrathu matum Varun ku triyanum apo iruku
Varun ennam konjam konjama Durga ku purium
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top