JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 19

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் - 19

நேரம்: வெள்ளிக்கிழமை நள்ளிரவுக் கடந்து 3 மணி

கட்சிரோலி காடுகளுக்குள் கடந்த நான்கு ஆண்டுகளாகப் புலிகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகவும், இதுவரை ஏறக்குறையைப் பதினொரு மனிதர்களை அவை தாக்கிக் கொன்றிருப்பதாகவும் [human-tiger encounters] ஜாஃபர் தன் கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டிருப்பதைத் துர்கா கேட்டிருக்கின்றாள்.

2017 - ஆம் ஆண்டு வாக்கில் இரண்டோ அல்லது மூன்றோ புலிகள் இருந்ததாகவும், தற்பொழுது இனப்பெருக்கத்தின் காரணமாக முப்பதிற்கும் மேற்பட்ட புலிகள் இக்காட்டிற்குள் வலம் வந்து கொண்டிருப்பதாகவும், கட்சிரோலியின் வனவிலங்கு காப்பாளர் ‘மிலிந்த் உம்ரே’ தெரிவித்திருந்தார் என்று ஜாஃபர் ஒருமுறை தன் சகாக்களுக்குக் கூறிக் கொண்டிருந்தான்.

அச்சம்பவமும், அவனது வார்த்தைகளும் சொல்லி வைத்தார் போன்று நியாபகத்தில் வந்ததில் பேரதிர்ச்சி கொண்ட துர்கா பேச்சு மூச்சற்று மயங்கி சரிந்தாள்.

அந்த இருட்டிலும் தட்டுத்தடுமாறி வெகு தொலைவு ஏறக்குறைய மூன்று மணி நேரமாக ஓடி வந்து கொண்டிருந்தவளுக்கு ஏற்கனவே பெரும் அசதிப் படர்ந்திருந்தது.

இதனில் அந்தக் கொடிய வனவிலங்கைக் கண்டதில் இதற்கு மேல் எனக்குத் திராணி இல்லை என்பது போல் நினைவிழந்து விழுந்தாள்.

மயங்கிய நிலையில் கீழே கிடந்தவளை சில அடிகள் தூரத்தில் இருந்து பார்த்திருந்த புலி மெள்ள அடியெடுத்து வைத்து அவளிடம் வந்தது.

தனக்கு ஆபத்து நேரப் போகின்றது என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது பசியுடன் இருந்தால் மட்டுமோ மனிதர்களை வேட்டையாடும் வகையைச் சார்ந்தன புலிகள்.

மற்ற வேளைகளில், நீ என்னுடைய எல்லைக்குள் வராதே எனும் விதமாகத் தனது ஆக்ரோஷமான உறுமல் சத்தம் மூலம் எச்சரிக்க மட்டுமே செய்யும் இந்த விலங்குகள்.

தனக்கு எதிராக மயங்கி சரிந்துக் கிடப்பவளை நெருங்கிய புலி அவளின் முகத்தைச் சில நிமிடங்கள் கூர்ந்துப் பார்க்க, அதன் அடிச்சுவடுகள் கூட மூளைக்கு எட்டாதவண்ணம் சடலம் போல் படுத்துக் கிடந்தவளை எதுவும் செய்யாது அமைதியாக அவ்விடத்தைக் கடந்தது.

இது எதுவுமே தெரியாது மயக்கத்தில் கிடந்தவள் மணித்துளிகள் சில கடந்து அவளாகவே கண் விழிக்க, சில விநாடிகளுக்குள் தான் காட்டிற்குள் கிடக்கின்றோம் என்றும், சற்று நேரத்திற்கு முன் ஒரு புலியை நேருக்கு நேர் சந்தித்தோம் என்பதும் சம்மடியால் அடித்தது போல் புரிந்ததில் அரண்டடித்து எழுந்து நின்றாள்.

அந்தப் புலி என்னை எதுவும் பண்ணலையா என்பது போல் தன்னைக் குனிந்துப் பார்த்துக் கொண்டவள் சுற்றும் முற்றும் பார்க்க, தான் ஒரு வேளை கண்டது கனவா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு அங்கு எந்த ஒரு விலங்கினையும் காணவில்லை.

ஆயினும் நான் பார்த்தது நிஜம்!!

அதன் நீண்ட உருவமும், மூன்றடி உயரமும், இதயத்தைக் கீறிப் போடுமளவிற்கான ஊடுருவும் பார்வைக் கொண்ட அதன் கண்களும் கனவல்லவே!

அந்த ஜாஃபர் கூட அடிக்கடி இங்குப் புலிகள் உலாவுவதைப் பற்றிப் பேசியிருக்கின்றான். அப்படி என்றால் அந்தப் புலி இங்கு எங்கேயோ பதுங்கி இருக்கக் கூடும் என்ற எண்ணம் தோன்றியதுமே உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை உதற ஆரம்பித்தது.

‘ஐயோ! அது இங்க எங்கேயாவது மறைஞ்சிருந்து என் மேல் பாய்ஞ்சுடுச்சின்னா?’

மனதிற்குள் புலம்பியவளாக மருண்ட விழிகளால் அனைத்துப் பக்கங்களையும் துழாவ, நள்ளிரவு மூன்று மணிக்கு விளக்குகளோ, சரியான வெளிச்சமோ இல்லாத அடந்த காட்டிற்குள் என்ன தெரிந்துவிடும் என்று தன்னைத் தானே ஏசிக் கொண்டவளுக்கு அருகில் தெரிந்த பிரம்மாண்டமான அடர்ந்த புதர் ஒன்று அவ்வளவு பீதியைக் கிளப்பியது.

‘இங்க இருந்து தப்பிச்சே ஆகணும், வேற வழியே இல்லை.’

எண்ணியவளாக மீண்டும் நடக்கத் துவங்க, நேரம் கடந்ததே ஒழிய அவளைத் தூக்கி வந்த சசிதரனையும் காணவில்லை, அவள் பார்த்த அந்தப் புலி இருந்த சுவடும் இல்லை.

கானகத்தினை விட்டு வெளியே சென்றுவிடலாம் என்றால் அந்தக் காடு முடிவது போலவும் தெரியவில்லை.

இல்லை வட்டமாகச் சுற்றி சுற்றி வந்து துவங்கிய இடத்திலேயே முடிந்துக் கொண்டிருக்கின்றேனா என்றும் அவளுக்குப் புரியவில்லை.

நடக்க நடக்க இருளுக்குள் பதுங்கி இருக்கும் எந்த மிருகம் வேண்டுமானாலும் என்னைக் கடித்துக் குதறலாம் என்ற அதீத திகிலில் அவ்விரவு நேரத்திலும் உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

அணிந்திருக்கும் புடைவையின் முந்தானையை இழுத்துப் பிடித்து வியர்வையைத் துடைக்கலாம் என்று முயற்சிக்க, அப்பொழுதுதான் உணர்ந்தாள்.

முட்புதர்கள் செடிகொடிகள் மரக்கிளைகள் என்று எதனையும் சட்டை செய்யாது அடித்துப்பிடித்து ஓடி வந்ததில் புடவைக் கிழிந்துத் தொங்கிக் கொண்டிருந்தது.

‘இது என்ன இப்படிக் கிழிஞ்சிருக்கு.’

வாய்விட்டு முணுமுணுத்தவளாகக் காட்டின் அமானுஷ்யங்களில் இருந்து தப்பிக்க வியர்வையைத் துடைத்தவாறே மீண்டும் நடையில் வேகத்தைக் கூட்டினாள்.

ஆனால் நேரம் கடந்ததே ஒழிய, எவ்வளவு தொலைவு நடந்தும் காட்டின் எல்லை மட்டும் வரவே இல்லை.

தான் குடிலைவிட்டு வந்து எப்படியும் சில மணி நேரங்களாகவாவது ஆகியிருக்கும். அப்படி என்றால் இந்நேரம் விஷயம் கேள்விப்பட்டு வருண் வந்து கொண்டிருந்தாலும் இருக்கலாம்.

ஆனால் என் குடிலைக் காவல் காக்க வேண்டிய அந்த இருவர் கூட உறங்கிக் கொண்டிருந்தனரே.

சசிதரன் அவர்களுக்கு எதையோ கொடுத்து மயங்கச் செய்திருக்க வேண்டும். அப்படி என்றால் நான் குடிலிற்குள் இல்லை என்பதை மற்றவர்கள் எப்பொழுது தெரிந்துக் கொள்வார்கள்? காலையிலா? அது வரை என் நிலைமை?

அவள் கலங்கிப் போன அதே வேளையில் அக்கானகத்தின் எங்கோ ஒரு மூலையில் ஆகாயத்தில் இருந்து ஓசை கேட்க, செவிகளைக் கூர்மையாக்கிவளுக்கு அவள் நினைத்தது போல் கேட்டது ஹெலிகாப்டரின் சத்தம்.

அந்நாள்வரை இவ்வாறு சப்தம் கேட்டதும் தன்னைக் காப்பாற்ற மாமன் வந்துவிட்டானா என்று ஏக்கத்துடன் எதிர்பார்ப்பவளுக்கு ஏனோ இன்று வருவது வருணாக இருக்க மாட்டானா என்றே விசித்திரமாகத் தோன்றியது.

சுற்றும் முற்றும் பார்த்தவாறே மீண்டும் நடக்க ஆரம்பித்தவளுக்குக் கிளைகளுக்கும் தழைகளுக்கும் இடையில், சின்னஞ்சிறு வெளிச்சமாகச் சந்திரன் அவ்வப்பொழுது வழிகாட்ட, ஹெலிகாப்டரின் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஆயினும் காலணிகள் இல்லாத பாதங்களில் மட்டுமல்லாது, உடல் முழுவதுமாய் முட்களும் கொப்புகளும் குத்தியதில் உதிரம் வழிந்ததில் தெம்பு அனைத்தும் வடிந்தது போல் இருக்க, ஒரு கட்டத்தில் அடுத்த அடி கூட எடுத்து வைக்க இயலாது என்ற திடமற்ற நிலை ஏற்பட, தடுமாறியவளாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தாள்.

'அம்மா, உங்களை எல்லாம் நான் பார்க்காமலே போயிடுவேன் போலம்மா. நான் எங்க இருக்கேன்னு கூடத் தெரியாம இவ்வளவு நாளா எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க. எப்படியாவது ஒரு நாள் நான் திரும்பப் பத்திரமா வந்துடுவேன்னு மாமா உங்களுக்கு நம்பிக்கை கொடுத்திருப்பாங்க. ஆனால் என் நிலையைப் பார்த்தீங்களா. நடுக்காட்டுக்குள்ள மிருகங்களுக்கு மத்தியில் இப்படி அனாதை மாதிரி சாகப் போறேன். ஏம்மா எனக்கு இந்த நிலைமை? நான் அப்படி யாருக்கு என்ன கெடுதல் செஞ்சேன்?'

யோசிக்க யோசிக்கச் சுயவிரக்கத்தில், இரவு முழுவதும் அழுதிருந்தாலும், இன்னமும் நிற்காது கண்ணீர் வழிந்தோடியது.

என்ன நடந்தாலும் சரி, இனி என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற எண்ணியவளாய் அம்மரத்தின் மேல் சாய்ந்தவாறே விழிகளை மூடியவளை அவளே விரும்பாவிடினும் உடல் அசதியாலோ அல்லது மன அசதியோலோ அவளை உறக்கம் தழுவியது.

***********************************************

நேரம்: வெள்ளிக்கிழமை நள்ளிரவுக் கடந்து 3 மணி

விமான விபத்து நடந்து ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் முடிந்தும், அவர்கள் மூவரையும் தேடி ஒருவரும் வந்ததாகத் தெரியவில்லை.

ஆபத்தில் சிக்கி இருக்கின்றோம் என்று பொருள்பட, ‘May day! May day!’ என்று விமானிக் கூறியதை விமானக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த எவரும் கேட்டனரா என்று கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.

காரணம் அவர்களுடனான தொடர்பு அதற்கு முன்னரே கூடத் துண்டிக்கப் பட்டிருக்கலாம்.

மூன்று பேரின் அலைபேசிகளும் விதியோ என்று அக்கானகத்தின் பல மூலைகளுக்கு விசிறியடிக்கப் பட்டிருந்தன.

அப்படி என்றால் இரவு முழுவதும் இவ்வாறு வன விலங்குகளுக்குப் பயந்து மரத்தின் மீது தான் அமர்ந்திருக்க வேண்டுமா?

சிதாராவின் மனத்திற்குள் ஓடிய ஆராய்ச்சிகளை அவளின் இடுங்கிய விழிகளும் சுருங்கிய புருவங்களும் உணர்த்த, தன் கரத்தினை அவளின் இரு கரங்களாலும் வளைத்து அமர்ந்திருப்பவளின் முகம் நோக்கிக் குனிந்தான் ஷிவா.

"நீ நினைக்கிறது கரெக்ட். நம்முடைய ஜெட் ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு அப்படிங்கிறது கூட அவங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நமக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையில் தொடர்பு அறுபட்டதுமே அவங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கும். நம்மைத் தேடும் முயற்சியை இந்நேரம் துவங்கியும் இருப்பாங்க. பட், அவங்க எப்போ நம்மைத் தேடி வருவாங்கன்னு நமக்குத் தெரியாது. ஸோ, நீ நினைக்கிற மாதிரி நாம இப்படியே தான் காலை வரை உட்கார்ந்திருக்கணும்."

இவன் என்ன என் மனதைப் படிக்கும் மாயத்தைக் கற்று வைத்திருக்கிறானா?

நினைத்தவள் இருந்தும் வழக்கம் போல் தன்னைவிட்டுக் கொடுக்க மனம் வராது,

"நான் அதைத்தான் நினைக்கிறேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் ஒண்ணும் அதை நினைக்கலை." என்றாள் பட்டென்று.

அவளின் சமாளிப்பைக் கண்டு இலேசாகச் சிரித்து வைத்தவன் மெள்ள தலையை இடமும் வலதுமாக அசைத்தவனாய் பதில் கூறாது இருந்துவிட, பல மணித்துளிகள் துளி அளவுக் கூட ஓசையில்லாத அமைதியே அவர்களைச் சூழ்ந்திருந்தது.

அந்த நிசப்தமான சூழ்நிலை, 'ஒரு வேளை தங்களைக் காப்பாற்ற ஒருவருமே வராமல் போனால் என்ன செய்வது? பகலில் மட்டும் புலிகளோ அல்லது ஓநாய் போன்ற மிருகங்களோ எதிர்பட்டால் நம்மை ஒன்றும் செய்யாது விட்டுவிடுமா? அவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது? மிச்சமிருக்கும் இந்தத் தோட்டாக்கள் போதுமா?' என்ற யோசனையில் ஆழ ஷிவாவிற்கு உறுதுணையாக இருந்தது.

அதே நேரம் அவளின் தளிர் மேனி திடுக்கிட்டு தூக்கிவாரிப் போட, "என்ன ஆச்சு? கீழ விழுந்துடாத." என்றவனாய் அவளைத் தன் பக்கம் இழுத்தவன் வாகாய் வைத்துக்கொள்ள,

"நாம கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிப் பார்த்தோமே ஒரு உருக்குலைஞ்ச டெட் பாடி, அந்த மனுசனை இந்த ஓநாய்கள் தான் கடிச்சிருக்குமோ?" என்றாள், அத்தருணம் அந்த இறந்த மனிதனின் அவலமான நிலையை நினைத்து அதிர்ச்சியில் உறைந்திருக்கும் வதனத்துடன்.

"இல்லை, ஓநாய்கள் எந்த மிருகத்தையாவது வேட்டையாடுச்சுன்னா முழுசா அதைச் சாப்பிட்டுட்டு தான் போகும், இது மாதிரி விட்டுட்டுப் போகாது."

ஏற்கனவே பயத்தில் தூக்கிப் போட்டது அவளது மேனி!

இப்பொழுது ஷிவா கூறிய விளக்கத்தில் பெருந்திகில் ஆட்கொள்ள, அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் பார்வையில் தெரிந்த கலக்கத்தில் மானசீகமாகத் தன் தலையில் அடித்துக் கொண்டான், அந்த உயர் காவல் அதிகாரி.

‘ஏற்கனவே அரண்டுப் போயிருக்கா, இதுல நீ வேறடா.’

மனதிற்குள் தன்னையே வைதவன்,

"பட், எல்லா ஓநாய்களும் அப்படி இல்லை. ஒருவேளை அந்த மனிதனை கொன்றது ஓநாய்களா கூட இருக்கலாம்." என்று மழுப்பியவாறே அவளுக்குத் தைரியத்தை ஊட்டவிழைந்தான்.

"இல்லை, அது ஓநாய்கள் இல்லை. நீங்க சொல்ற மாதிரி அதுங்களோட இரையை அதுங்க விட்டுட்டுப் போகாதுன்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன். அப்படின்னா இன்னும் ஏதோ கொடிய மிருகம் இங்க நம்ம பக்கத்திலேயே இருக்கு.."

"இப்போ தான் பாதுகாப்பா இப்படி மரத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கோமே. பிறகு என்ன?"

"மரத்து மேல ஏறுகின்ற மிருகங்களும் இருக்குத் தெரியுமா? ஏன் ஒநாய்கள் கூட மரங்கள் மேல ஏறும்."

"தெரியும், ஆனால் இந்த மரத்து மேல ஏறாது?"

"ஏன்?"

"அது அப்படித்தான்."

"இந்த மாதிரி நேரத்திலேயும் ஏன் இப்படிப் பேசுறீங்க?"

“பின்ன இப்படிக் கேள்வி மேல கேள்விக் கேட்டுட்டு இருந்தா நான் என்ன பண்றது? நாம சிக்கி இருக்கிறது கட்சிரோலி காட்டுக்குள்ள. அப்புறம் என்னென்ன மிருகங்க இந்தக் காட்டுக்குள்ள இருக்குன்னு statistics [புள்ளிவிவரம்] எடுத்துட்டு இருக்க?”

“அப்பப்ப நான் பொண்ணுங்கிறதையே நீங்க மறந்துடுறீங்க.”

அவள் கூறியதன் அர்த்தம் இயற்கையிலேயே இது போன்ற சூழ்நிலைகளில் ஆண்களைவிடப் பெண்கள் சற்றுப் பயந்துதான் போயிருப்பார்கள் என்பதே.

ஆனால் அவனது பார்வையோ தன் மேல் சாய்ந்திருக்கும் அவளின் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் ஆடைகளுக்கு இடையில் வெளிப்பட்ட மேனியில் நிலைத்தவாறே, “நான் மறக்கலை..” என்றான் இன்முகமாய்.

அவனது பார்வையின் பொருள் புரிய, ஏற்கனவே நாணத்தில் சுருண்டிருந்தவளுக்கு இப்பொழுது கூச்சமும் பிடுங்கித் தின்றது.

இதனில் அவனை விட்டு விலகி அமரவும் வழியில்லாத இக்கட்டான நிலைமை.

“இதுக்கு ஓநாய் கடிச்சு குதறினாலும் பரவாயில்லை, நீங்க கீழ போய் உங்க ஷர்ட்டை எடுத்துட்டு வாங்கன்னு சொல்லிருக்கலாம்..”

கூறியவளாய் அவனை விட்டு சிறிதே விலக எத்தனிக்க, “ஷ்ஷ்.. கொஞ்சம் பேசாம இரு.." என்ற ஷிவாவின் கண்கள் இப்பொழுது வேறு ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றன.

திரும்பவுமா?

அரண்டுப் போனவள் அவன் பார்வை போன இடத்தை நோக்கி முகத்தைத் திருப்ப போக, சட்டென அவளைத் திரும்பவிடாது தலையைப் பிடித்து மீண்டும் தன் மார்புக்குள் பொத்தி வைத்தவன், “பைலட்..” என்று இரகசிய குரலில் கிசுகிசுத்தான்.

அவனது அழைப்பில் கண் திறந்தவரைக் கண்டு தான் பார்த்துக் கொண்டிருந்த இடத்தை நோக்கி தலையசைத்துச் சைகை செய்தான்.

இந்த மரத்தின் மேல் மிருகங்கள் எதுவும் ஏறாது என்று அவன் விளையாட்டாய் கூற, அதற்கு நேர்மாறாக நான் ஏறுவேன் என்பது போல் உடலை வளைத்து நெளித்து ஊர்ந்து கொண்டிருந்தது பெரும் நாகம் ஒன்று.

"என்ன ஷிவா, ப்ளீஸ் சொல்லுங்க. மிருகங்கள் எதுவும் வந்திருக்கா?"

"ஒண்ணும் இல்லை சிதாரா. இப்படியே இரு.."

கூறியவனாய் மீண்டும் விமானியை நோக்கி ஏதோ சைகை செய்ய, அவனது மௌனக் கட்டளையைப் புரிந்துக் கொண்டவராய் அசைவற்று இருந்த விமானியும் நாகத்தின் அடுத்த நடவடிக்கையைக் கண்காணித்தார்.

அவரால் தனக்கு எதுவும் ஆபத்து இல்லை என்பதை உணர்ந்து கொண்டது போல் அவருக்கு அடுத்து இருக்கும் கிளைக்கு நிதானமாக ஊர்ந்த அப்பாம்பு விநாடிகளில் ஷிவாவும் சிதாராவும் அமர்ந்திருந்த கிளைமேல் தாவியது.

சில அடிகள் தொலைவில் அது ஊர்ந்து வரும் பொழுதே,

"சிதாரா, நான் சொல்ற வரைக்கும் உடம்பில் எந்த அசைவும் இல்லாமல் இரு.." என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் இரகசிய சாரீரத்தில்.

ஆனால் என்று அவனது பேச்சை அவள் கேட்டிருக்கின்றாள் இன்றும் கேட்பதற்கு?

சந்தித்த நாளில் இருந்தே ஏட்டிக்குப் போட்டியாகப் பேசிக் கொண்டிருப்பவள், என்ன என்பது போல் தலையை மட்டும் உயர்த்தி அவனை நோக்க, அவளை விடாது அழுத்தியவன், "அப்படியே இருன்னு சொன்னாப் புரியாதாடி?" என்று அடிக்குரலில் சன்னமாய்ச் சீறினான்.

அதற்குள் அந்த நீண்ட பருத்த பாம்பு அவர்களை நெருங்கி இருந்தது.

மெள்ள அவளின் கிழிந்த சுடிதார் துணியின் மேல் அது ஏற, ஏதோ ஒன்று தன் மேல் ஊருகின்றது என்பதை உணர்ந்ததுமே, பீதியின் உச்சத்தினை அவ்விரவில் நூறாவது முறையாக அடைந்தாள் பேதையவள்.

'ஐயோ! என்னவோ ஊர்ந்து போகுதே! பாம்பா இருக்குமோ?'

மனம் அரற்ற, கண்களை இறுக்க மூடிக் கொண்டவளாய் ஷிவாவின் அகன்ற நெஞ்சுக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ள, கண்ணின் இமைக்கூட அசையாது அதனையே பார்த்திருந்த ஆனானப்பட்ட ஷிவாவையே அச்சுறுத்துவது போல், வெகு நிதானமாகக் கன்னியவளின் வழவழப்பான தேகத்தைத் தானும் அனுபவித்து ரசிக்கும் ஆசையுடன், அவளின் உடல் மேல் அங்குலம் அங்குலமாய் நகர்ந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது, இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் தன்மை கொண்ட, கிட்டத்தட்ட 5 அடிக்குக் குறையாமல் இருந்த கட்டுவிரியன் பாம்பு [Indian Common krait]

‘சிவ சிவ சிவ சிவ’

மனம் வேண்ட அவன் மார்பு ரோமங்களை விரல்களால் இறுக்கப் பிடித்துக் கொண்டவள் கற்சிலை போல் அமர்ந்திருக்க, எனக்கு ஒன்றும் இப்போது அவசரமில்லை என்பது போல் அவள் மேல் ஏறி பின் சற்று இறங்கி, ஷிவாவின் தொடைகள் மேல் ஊர்ந்து மறு கிளைக்குத் தாவியது அந்தச் சர்ப்பம்.

ஆனாலும் அம்மூவரில் எவருமே அசையவே இல்லை.

சில நிமிடங்களுக்கு அப்படியே அமர்ந்திருந்த ஷிவா ஒரு வழியாய் அது அம்மரத்தினைவிட்டு வேறு ஒரு மரத்திற்கு தாவிச் சென்றதை ஊன்றிக் கவனித்து, பின், "போயிடுச்சு சிதாரா.." என்றாலும், அவனை விட்டு நகர்ந்தாள் இல்லை அந்தப் பேதை.

"சிதாரா.."

அவன் அழைத்தும் அவள் நிமிரவில்லை.

அவளின் அச்சம் புரிந்து அவளுக்கு அவகாசம் கொடுக்க, கணங்கள் சில கழித்துத்தான் அவனுமே உணர்ந்தான், தன் வெற்று மார்பின் மீது ஈரம் படர்வதை.

அழுகின்றாளா?

சட்டென்று அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்திப் பார்க்க, கன்னங்கள் கடந்து வழியும் பெண்ணவளின் கண்ணீரைக் கண்டு ஆண்மகனின் உள்ளமும் கனிந்தது.

"அதான் போயிடுச்சே, பிறகு என்ன?"

“அ.. அ.. அது பாம்பு தானே??”

“ம்ம்..”

"இந்த ஒரு நைட்டுக்குள்ள இன்னும் என்னென்ன பார்க்கப் போறோமோன்னு ரொம்பப் பயமாயிருக்கு ஷிவா.."

அவளின் கூற்றில் அவளைத் தன் மகள் போல் பாவித்து வந்திருந்த விமானியின் மனமும் வேதனையுற்றது.

சின்னப்பெண்... வாழ்கையில் இது போன்ற சம்பவங்களை ஒரு போதும் பார்த்தறியாதவள்.

அவராவது பரவாயில்லை, விமானப் பயிற்சிகளின் போது விபத்து நேர்ந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று பயிற்சியளிக்கப் பட்டிருக்கின்றார்.

அதே போல் ஷிவாவும் காவல் துறையின் அதிகாரி!

பணியின் நிமித்தம் எவ்வளவு அதிர்ச்சிகரமான அசம்பாவிதங்களையும், ஆபத்தான சூழ்நிலைகளையும் அவன் எதிர்கொண்டிருப்பான்.

ஆனால் இவளோ, Born with silver spoon என்பதை விட golden spoon என்ற வாக்கியத்திற்குப் பொருத்தமான, ராஜபுத்தின வம்சாவளியில் பிறந்த, பரம்பரை பரம்பரையாகப் பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தைச் சார்ந்த இளம் பெண்!

வாழ்நாளில் இதுவே அவள் கண்டிருந்த பெருத்த அதிர்ச்சி என்ற எண்னத்துடன் கனிவாய் விமானி ஷிவாவைப் பார்க்க, அவரின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் அவளை மீண்டும் தனக்குள் அகப்படுத்திக் கொண்டவனுக்கு அப்போதைய முதல் குறிக்கோள் அவளை எவ்வித ஆபத்துமின்றிப் பத்திரமாய் அவளது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்பது தான்.

பின், அவள் இவ்வளவு பெரிய இக்கட்டுக்களைச் சந்தித்துக் கொண்டிருப்பது அவனுக்காகவும், அவனது அத்தை பெண்ணிற்காகவும் அல்லவா!

உள்ளம் வருந்த முதலில் அவளது அச்சத்தைப் போக்குவது தான் சரி என்ற முடிவிற்கு வந்தவன் மீண்டும் தன் இயல்பான பண்பில் இருந்து மாறியவனாய் அவளைக் கிண்டல் செய்யத் துவங்கினான்.

ஆனால் அதன் முடிவில், தான் வாழ்நாளில் உணர்ந்திராத ஒரு அழகிய உணர்வை, தன் வருங்கால மனைவியாகச் சிறு வயது முதலே பார்த்துப் பழகிய, வடித்தெடுத்த சிலை போல் எழிலுருவம் கொண்ட துர்காவிடம் நெருங்கி நிற்கும் சமயம் கூடத் தோன்றாத உணர்ச்சிகளைச் சந்திக்கப் போகின்றோம் என்பதை அறியாமலேயே!

"சிதாரா.”

“ம்ம்..”

“ஷேல் ஐ ஆஸ்க் யு சம்திங்க்.”

"என்கிட்டவா? என்ன கேள்வி?"

"என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்த க்ரிமினல்ஸிலேயே மோசமானவர்களுடைய லிஸ்டில் அந்த வருண் தேஸாயும் ஒருத்தன். அவனைப் பற்றி உன் அப்பா மூலமாய் உனக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. இருந்தும் நீ எப்படி அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச?"

அவனது நோக்கம் அவளுக்குத் தெள்ளெனப் புரிந்தது.

ஆயினும் அவனது நெஞ்சைவிட்டு அகலாதவளாய் பார்வையை மட்டும் உயர்த்தி, "எதுக்குத் திடீர்னு இப்ப இந்தக் கேள்வி?" என்றாள்.

"எதிர் கேள்வி கேட்காம பதில் சொல்லு."

“எதுக்குன்னு தெரிஞ்சால் அதுக்கு ஏத்த மாதிரி பதில் சொல்லலாமே. அதான்"

"நீ ஒரு போலிஸ் ஆஃபிசரிடம் பேசிட்டு இருக்கன்னு அப்பப்போ மறந்துடற."

"ஸோ, உண்மைய மட்டும் சொல்லுடின்னு சொல்றீங்க."

"யெஸ்."

"வருணுடைய குடும்பத்திற்கும் எங்களுடைய குடும்பத்திற்கும் நெடுநாளையத் தொடர்பு உண்டு. அதாவது வருணுடைய அப்பா சஞ்சீவ் தேஸாய் இருக்காருல்ல, அவருடைய அப்பா காஷ்யப் தேஸாய். அவரும் எங்க தாத்தாவும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸாம். அதாவது இவங்க ரெண்டு பேருமே வளர்ந்தது தென்னிந்தியாவில் தானாம். எங்க தாத்தா இறந்ததற்கு அப்புறம் தான் எங்க அப்பா வட நாட்டிற்கே குடிபெயர்ந்தாராம். ஆனாலும் காஷ்யப் தேஸாய் அவங்களோட நட்பைப் பற்றி எங்க தாத்தா, என் அப்பாவிடம் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாராம். அதன் பெயரில் தான் நான் ஒரு நாள் எங்க அப்பாவோட சேர்ந்து வருணுடைய வீட்டிற்குப் போனேன். அங்க தான் வருணுடைய அப்பா சஞ்சீவ் அங்கிளைப் பார்த்தேன். எவ்வளவு நல்ல மனுசர் தெரியுமா அவர்?

என்னவோ தெரியலை, அவருக்கு என்னை ரொம்பப் பிடிச்சிப் போயிடுச்சு. வருணுடைய அம்மா இறந்ததற்கு அப்புறம் அந்த வீடே களை இழந்துப் போயிடுச்சுன்னும், அவருக்கும் அவர் பையனுக்கும் இடையில் நிறைய இடைவெளிகள் ஏற்பட்டுடுச்சுன்னும் சொன்னார். என்ன தான் வாழ்க்கையில் பெரிய அளவில் வருண் முன்னேறி வந்தாலும், வருணுக்கு இதுவரை யார் மேலேயும் ஒரு ஈடுபாடு வரவில்லை. அதே போல் தொழில் உலகத்தைத் தவிர அப்பப்ப பிஸ்னஸ் சம்பந்தமா போகிற பார்ட்டிகளைத் தவிர வருணுக்கு வேறு எதிலும் பிடிப்பும் இல்லைன்னு சொன்னார். என்னைப் போல ஒரு மருமகள் வந்தால் நிச்சயம் அவர் வீடு முன்னை மாதிரி லட்சுமி கடாட்சமா மாறும். அதே போல் அவர் மகனுக்கும் ஒரு பிடிப்பு வரும். அதனால் வருணைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு என்னைக் கேட்டார். அவருடைய ஆசையை நிராகரிக்க எனக்கு மனசு வரலை. ஸோ, என் அப்பாவிடம் சொன்னேன். அவருக்கு வருணை ரொம்பப் பிடிச்சது. அதுக்குப் பின்னாடி இருந்தது வருணால் அவருக்கு இருந்த அனுகூலம் தான், இல்லைன்னு சொல்லலை. பட் நானே ஒகேன்னு சொன்னதும் அப்பாவுக்கும் சந்தோஷம். கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க."

அவளின் நீண்ட விளக்கத்தைக் கேட்டவன் குறுஞ்சிரிப்புடன், "லட்சுமி கடாட்சம்.. அதாவது உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா." என்றதில் கிறுகிறுவெனக் கோபம் பெண்ணவளின் தலைக்கு ஏறியது.

"ஏன்? என்னைப் பார்த்தா மகாலெட்சுமி மாதிரி இல்லையா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா வீடு எப்பொழும் மங்களகரமாக இருக்காதா?"

"நோ நோ. நான் அப்படிச் சொல்லலை.."

"பின்ன, அதுக்கு வேற என்ன அர்த்தம்?"

"சரி அதை விடு.. இன்னொரு கேள்வி."

"அதுக்கும் உண்மையாத் தான் பதில் சொல்லணும்னு சொல்வீங்க. ஆனால் சொன்னால் கிண்டல் பண்ணுவீங்க?"

"சலிச்சிக்காத. சரி, அவனுடைய அப்பாவைப் பிடிக்கும்னு மகனைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சியா?"

விடாது மீண்டும் குத்தலாகக் கேட்கும் அவனை ஈரக் கண்களுடன் முறைத்தவள்,

"மாமனார் மாமியார் நல்லவங்களா இருந்தால் ஒரு பொண்ணுக்கு புகுந்த வீட்டில் எப்பவும் சந்தோஷம் நிலைச்சு இருக்கும். இதை என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. வருணுடைய அப்பாவைப் பார்க்கும் போது அவர் என் அப்பாவைப் போல் என்னைப் பார்த்துக்குவாருன்னு தோணுச்சு. ஸோ, இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிச்சேன். அவ்வளவு தான். போதுமா?" என்று கிட்டத்தட்ட ஆக்ரோஷமாகவே பதிலுரைத்தாள்.

அவள் கூறுவதும் உண்மை தான்!

ஷிவா கேள்விப்பட்டவரை வருணின் தந்தை மிகவும் உயர்ந்த குணம் படைத்தவர். தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் புகழ் பெற்றதற்குக் காரணமே அவரது நேர்மையான தொழில் வர்த்தகங்களும், தொழிலாளர்களிடமும் மற்றவர்களிடமும் அன்பாகப் பழகும் அவரது குணம், உண்மைக்கு மாறாத அவரது நடவடிக்கைகளும் தான்.

ஆனால் அப்படிப்பட்டவரின் மகனோ??

சில நிமிடங்கள் அமைதிக் காத்தவன் என்ன நினைத்தானோ திடுமென அக்கேள்வியை அவள் முன் வைத்தான்.

"Sithara.. Do you really love Varun?"

அவனது கேள்வியில் குழம்பியவள் அவனது மார்பின் மீது இருந்து முகத்தைச் சற்று நகர்த்தித் தாடையை மட்டும் நெஞ்சில் பதித்தவளாக, “அதான் இவ்வளவு நேரம் விளக்கம் கொடுத்தேனே?” என்றாள்.

“யெஸ், ஆனால் நான் கேட்ட கேள்வியின் அர்த்தம் வேற.”

"பெரியவங்களால் நிச்சயிக்கப்பட்ட எல்லாத் திருமணங்களும் காதலில் துவங்குவதில்லை."

மீண்டும் ஏதேதோ வினாக்கள் ஷிவாவின் உள்ளத்திற்குள் மின்மினிப்பூச்சிகள் போன்று தோன்றி மறைந்தன.

ஆனால் அவை நல்லதா கெட்டதா, இவ்வாறு நினைப்பது உகந்ததா தவறானதா என்றெல்லாம் அறிய அவன் புத்தி அக்கணம் விரும்பவில்லை.

இதயமும் புத்தியும் என்று தான் ஒரே நேர்கொட்டில் பயணித்திருக்கின்றது?

சரி என்று இதயத்திற்குப் பட்டது தவறு என்று புத்திக்கு பட்டால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை எதனை ஒத்ததாக இருக்கும்? பல நேரங்களில் நாம் இதயத்திற்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

தான் மணமுடிக்க இருந்தவள் தன் பரம எதிரியினால் கடத்தப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருக்கின்றாள். அவளைத் தேடி வந்திருக்கும் வேளையில், இம்மாதிரியான ஆபத்தான காட்டிற்குள் சிக்கி தவித்திருக்கும் அசந்தர்ப்பமான நிலையில் ஆடவனின் மனம் இன்னொருத்தியின் பக்கம் சாய்கின்றது!

இது எவ்விதத்தில் நியாயம்?

ஆனாலும் இத்தருணம் நியாயம் அநியாயம் என்ற இரு நிலைப்பாடுகளையும் மறந்தது போல் இதயம் வேறு ஒன்று சொல்கின்றதே!!

அவ்வேளையில் ஷிவாவின் புத்திக்குக் கடிவாளம் போட்டது அவனது இதயம்.

ஆழப்பெருமூச்செடுக்க, அவனின் மார்பு ஏறி பின் இறங்கியதை நெஞ்சில் பதிந்திருக்கும் தன் தாடையில் உணர்ந்தவள் அவனது கண்களையே பார்த்திருக்க, பிசிரற்ற குரலில் அடுத்த வினாவை எடுத்து வைத்தான்.

"ஒரு வேளை உனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகியிருந்தால், அதற்குப் பிறகு அவனை லவ் பண்ணிருப்பன்னு நினைக்கிறியா?"

இவன் என்ன பதில் எதிர்பார்த்து இக்கேள்வியை என்னிடம் கேட்கின்றான்.

புரிந்த மாதிரியும் இருந்தது.. புரியாத மாதிரியும் இருந்தது.

சற்று நேரம் அமைதியாக இருந்தவளுக்கு அவனது ஆழ்ந்து ஆராயும் பார்வை பதில் கூறாது தன்னை விடமாட்டான் என்பதை உணர்த்த, அவன் வெற்று நெஞ்சில் அழுத்தியிருந்த தாடையின் மேல் அழுத்தத்தைக் கூட்டியவள், "இல்லை." என்று பதிலளித்தாள்.

"ஏன்?"

"எனக்கு அவரைப் பிடிக்காது?"

"ஏன்?"

"ம்ப்ச்.. அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?"

"தெரியும், அதான் கேட்கிறேன்.."

"எனக்குச் சட்டவிரோதமா செயல்படுறவங்களைப் பிடிக்காது. வாழ்கையில் எதுலேயும் ஒரு ethic [நெறிமுறை] இருக்கணும்னு நினைக்கிறவ நான்."

"வாட்?"

"எதுக்கு இப்போ இந்த அதிர்ச்சி?"

"உங்க அப்பா.." என்று முடிக்காது இழுத்தவனின் வார்த்தைகளில் கடுகு இட்டால் பொறியும் எண்ணெய் பதத்திற்கு வந்தது பெண்ணவளின் கோபம்.

"எப்பவும் எங்க அப்பாவைத் தப்பா பேசுறதே உங்களுக்கு வேலையாப் போயிடுச்சு."

"அவர் மஹாத்மாகாந்தி தான். சரி, அவரைவிடு. வருணைப் பற்றிச் சொல்லு.."

"சேன்ஸே இல்லை.. உங்களை மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை."

"அதான் பார்த்துட்ட இல்ல, என் கேள்விக்குப் பதில் சொல்லு.."

"இன்னும் என்ன இருக்கு சொல்றதுக்கு?"

அவனுக்கு வேண்டிய பதில் இன்னமும் அவளிடம் இருந்து வந்து சேரவில்லையே. எங்கனம் பாதியில் விடுவான்?

"அவனைக் கல்யாணம் செஞ்சிருக்க இருந்தவள். ஒரு வேளை உங்க நிச்சயதார்த்தம் அன்னைக்கு நான் அவனை அரெஸ்ட் பண்ணலைன்னா இந்நேரம் நீ அவனுடைய வைஃப்.."

"அதான் நடக்கலை இல்ல?"

"ஆனால், நான் கேட்டதுக்குப் பதில் இது இல்லையே."

விநாடிகள் சில மௌனம் காத்தவள், சலனமற்ற அவனது ஈட்டிக் கண்களைக் கூர்ந்துப் பார்த்தவளாய்,

"வருணை அன்னைக்கு நீங்க அரெஸ்ட் பண்ணியதால் மட்டுமே எங்க கல்யாணம் நின்னுப் போனதுன்னு நீங்க நினைக்கிறீங்க. எனிவேய்ஸ், எங்க நிச்சயதார்த்தம் நின்ற அன்னைக்கு உண்மையில் நான் சந்தோஷம் தான் பட்டேன். ஏன்னா, அவருக்கும் எனக்கும் கல்யாணமுன்னு பேசி முடிச்சு சில மாசங்களிலேயே எங்க கல்யாணத்தை ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிறுத்தலாமான்னு நானே சில சமயங்களில் யோச்சிச்சு இருக்கேன்.

நான் சொன்ன மாதிரி எனக்கு வருணுடைய அப்பாவைப் பிடிக்கும். அதுவும் இல்லாமல் வருணால் எங்க அப்பாவுக்கும் நிறைய ஆதாயங்கள். அவங்களுக்காக மட்டும் தான் நான் எங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன். ஆனால் அதற்குப் பிறகு பல நாள் நான் அதைப்பற்றி யோசிச்சிருக்கேன். ரொம்ப முட்டாள்தனமா ஒரு முடிவு எடுத்துட்டோமான்னு. ஆனால் நிச்சயதார்த்தம் வரை போயிடுச்சு, இதுக்கு மேல என்ன செய்யறதுன்னு நான் நினைச்சிட்டு இருந்தப்ப தான் நீங்க வந்தீங்க. அதனால் எனக்கு லாபம் தான்." என்று தெளிவான விளக்கம் கொடுத்து முடித்தவளின் காந்தமென்று இழுக்கும் கண்களுக்குள் அவனையும் அறியாது தன்னைத் தொலைத்துப் போனான் ஷிவ நந்தன்.

அதன் விளைவு அவனது இறுகிக் கிடந்த இதயமும் நிம்மதியில் விம்மியது, பெண்ணவளை கழுகு போல் ஆராய்ந்து கொண்டிருந்த கண்களும் மலர்ச்சியில் விரிந்தது, முகத்திலும் சின்னப் புன்னகை நெளிந்தது.

********************************************

இதயம் இடம் மாறியதே

விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே

இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ

என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ

மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

ஓஓ... மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்

கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ!


****************************************************

நேரம்: வெள்ளிக்கிழமை விடியற்காலை மணி 4

மரத்தின் மீது அசதியாய் சாய்ந்தவாறே அவளையும் அறியாது அவளைத் தழுவியிருந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த துர்காவை தட்டி எழுப்பியது போல் இருந்தது தொலைவில் கேட்ட சத்தம்.

படக்கென்று கண்களைத் திறந்துப் பார்த்தவள் உண்ணிப்பாகக் கவனித்துக் கேட்க, ஓசை தான், ஆனால் இது அவள் முன்னர்க் கேட்ட ஹெலிகாப்டரின் ஓசை அல்ல.

வேறு ஏதோ ஒரு சத்தம்!

இன்னதென்று அறிந்திராத வகையில் இது உளவியல் சத்தமா, உடலியல் சத்தமா, உடல் சத்தமா [Psychological Noise, Physiological Noise, Physical Noise] என்று திகைத்தவளிற்கு, மறு நிமிடம் ஓசை மறைந்து மயான அமைதி நிலவியதில் திக்திக்கென்று இருந்தது.

ஏதோ சத்தம் கேட்டதே. இல்ல அது வெறு பிரமையா?

கேள்வி எழும்ப, ஆனால் இது வெறும் மனத்தோற்றம் அல்ல நிஜம் தான் என்பதை உறுதிப்படுத்தும் அளவிற்கு அந்த ஓசை மீண்டும் கேட்டது, முன்பைவிட வெகுத்தெளிவாய்.

ஆனால் இது அதிநிச்சயமாய் ஹெலிகாப்டரோ அல்லது விமானமோ பறக்கும் ஓசையல்ல!

என்ன அது? ஏதாவது கார் வருதா? இந்தக் காட்டுக்குள்ளேயா?

நிச்சயமாக அது வாகனம் வரும் ஓசை போன்று தோன்றியதில் ஒரு கணம் சசிதரனோ என்ற அச்சம் மீண்டும் எழுந்தது.

ஆனால் ஒரு வேளை இது வருணாக இருந்தால் என்ற நப்பாசைத் தோன்ற மெல்ல கைகளைத் தரையில் ஊன்றி எழுந்தவள் சப்தம் வந்த திசையை நோக்கி நடக்க, தூரத்தில் இரு சிறு புள்ளிகளாகத் தோன்றிய வெளிச்சம் அவளை நெருங்க நெருங்க பளீரென்று ஒளிர ஆரம்பித்தது.

வந்தது வருண்!

ஜாஃபர் அருகில் அமர்ந்திருக்க, சிகப்பும் கருப்பும் கலந்த மஹிந்திர தார் [Red and Black Mahindra Thar] ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்த வருணின் முகம் அச்சத்திலும் அதே சமயம் ஆத்திரத்திலும் ஆங்காரத்திலும் சிவந்து போயிருந்தது.

நிச்சயமாகத் துர்கா தானாகக் குடிலைவிட்டுச் சென்றிருக்க முடியாது. அவளை யாரேனும் தூக்கித் தான் சென்றிருக்க வேண்டும்.

இல்லை அவளாகத் துணிவுடன் தன்னந்தனியாக வெளியேறினாளா?

சென்ற வாரம் நான் இங்கு வந்தப்பொழுது கூட நன்றாகத்தானே இருந்தாள். தனது மாமா எப்படியும் அவளை வந்து காப்பாற்றிவிடுவான் என்று நம்பிக்கையுடன் என்னிடம் கூறினாளே! பிறகு என்னவாயிற்று?

ஒரு வேளை அந்த ஷிவ நந்தன் இனி வரமாட்டான் என்று அவன் மீது நம்பிகை இழந்துவிட்டாளா? ஆகையால் அவளே தப்பித்தால் ஒழிய என்னிடம் இருந்து அவளுக்கு விடுதலைக் கிடைக்காது என்று எண்ணியதால் இவ்வாறு இரவோடு இரவாகக் குடிலைவிட்டு வெளியேறிவிட்டாளா?

ஆனால் குடிலைவிட ஆபத்தானது ஆயிற்றே இந்தக் காடு.

அடியாட்கள் என்றாலும் அவளுக்கு எவ்வித கெடுதலும் செய்யாது அவளைப் பாதுகாத்து வந்த மனிதர்களைவிடக் கொடிய மிருகங்கள் உலாவும் இந்தக் காட்டிற்குள் இருந்து எப்படித் தப்பிக்க முடியும் என்று கூட அறியாத பேதையா அவள்?

மனம் பல திக்குகளில் சிந்தித்துக் கொண்டிருக்க, கரடுமுரடான அடவிக்குள் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனின் புருவங்கள், தூரத்தில் தெரிந்த உருவத்தினைக் கண்டதில் சுருங்கின.

"சார்.. அது.."

ஜாஃபரும் அந்த உருவத்தைக் கண்டுவிட்டான் என்பது போல் சத்தமாகக் கூக்குரலிட, விநாடிகள் சில அந்தப் பிம்பத்தை ஆழ்ந்துப் பார்த்த வருணுக்கு அது என்ன என்பது போன்றான சந்தேகமே தோன்றியது.

முதலில் ஏதோ வன மிருகமாக இருக்கலாம் என்று தான் இருவருமே எண்ணினர், ஆனால் சிறிது நெருங்கியதுமே அது மனித உருவம் என்று புரிபட்டது.

அக்கணமே புதர்களும் செடிகளும் மண்டிக்கிடக்கும் கரடுமுரடான பாதையில் கூட அசுர வேகத்தில் ஜீப்பை செலுத்திய வருண் வேகமாய் அவ்வுருவத்தை நெருங்கியவன், நலுங்கிய தோற்றத்துடன் நடக்க முடியாது நடந்து வந்து கொண்டிருந்தவளைப் பார்த்தவாறே அவளுக்குச் சில அடிகள் விட்டு காரை நிறுத்தினான்.

"துர்கா.."

சத்தமாகக் கத்தியவனின் சாரீரத்தில் அது வருண் என்று புரிபட்டதும், கடந்த நான்கு மணி நேரங்களாக நரகத்தில் இருப்பது போல் கொடிய வேதனையில் தவியாய் தவித்து வந்தவளுக்கு அவனது சத்தம் வார்த்தைகளில் வடிக்க முடியாத ஆசுவாசத்தைக் கொணர்ந்தது.

ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலாது என்று சற்று நேரத்திற்கு முன் சாய்ந்தவள் இப்பொழுது புதுத்தெம்பு பிறந்தது போல் மொத்த திடத்தையும் வரவழைத்துக் கொண்டவளாய் அவனை நோக்கி ஓடி வந்தாள்.

அதற்குள் அவளை நெருங்கிய வருணும் அந்த ஒரு சில விநாடிகளுக்குள் அவள் உடல் முழுவதுமாய் மரங்களின் கிளைகளும் கொப்புகளும், செடிகளின் கொம்புகளும் கிழித்திருந்ததில் தோய்ந்திருந்த இரத்தத்தைப் பார்த்ததில் பதறிப் போனான்.

நெஞ்சுக் கூடு படபடக்க, மீண்டும் "துர்கா.." என்று உரக்கக் கத்தியவன் அவளை நோக்கி ஓட, அச்சப்தம் பல மைல்கள் பரந்து விரிந்திருக்கும் அக்கானகத்தின் மற்றொரு மூளையில் மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஷிவாவின் செவிகளை எட்டியதோ, அவனது வலிய தேகம் திடுக்கிட்டது.

'துர்கா..'

சற்றே தெரிந்த வெளிச்சத்தில் தன் அத்தை மகளைத் தேடி அனைத்துப் பக்கங்களையும் பார்வையால் அலசி ஷிவா அங்குத் தங்களைத் தவிர ஒருவரும் இல்லாததில் விசித்திர உணர்வை அடைந்தான்.

நான் கண்டது கனவா? அது எப்படிச் சாத்தியம்? நான் தான் உறங்கவே இல்லையே?

புத்தி சிந்திக்க, இன்னமும் தன் மார்பில் புதைந்து அசந்துப் போனவளாய் உறங்கும் சிதாராவைக் குனிந்துப் பார்த்தவனுக்கு ஏனோ அவளை எழுப்பவும் மனம் வரவில்லை.

விடிந்தும் விடியாததுமான சூழலில் இன்னும் தங்களைவிட்டு ஆபத்து முழுமையாக விலகவில்லை என்பதால் சிறிது நேரம் சென்றே அவளை எழுப்பலாம் என்ற முடிவிற்கு வர, அதே கணம் காட்டின் மறுதிசையில் துர்காவை மோதிவிடுவது போல் நெருங்கி வந்து நின்றான் வருண்.

அவன் தன்னிடம் வந்ததுமே அவனைக் கண்ட அளப்பறிய சந்தோஷத்தில் இன்னது செய்கின்றோம் என்ற உணர்வே அற்றவளாய் அவனை இறுக்கக் கட்டியணைத்தாள் பேதையவள்.

உடம்பு முழுவதும் உதறலெடுத்துக் கொண்டிருக்க, நடுக்கத்துடன் தன்னை இறுக்க அணைத்திருப்பவளை ஒரு சில நொடிகள் குனிந்துப் பார்த்தவன், அப்படியே இருக்கரங்களாலும் ஏந்தியவனாய் தன் ஜீப்பினுள் கிடத்தினான்.

"ஜாஃபர், நிறையக் காயம் பட்டிருக்கு. ரத்தம் வேற வழிஞ்சிட்டே இருக்கு, உடனடியா ட்ரீட்மெண்ட் செய்யணும். சீக்கிரம் ஜீப்பை எடு.."

உத்தரவிட்டவாறே தானும் ஜீப்பின் பின் பகுதியில் ஏறியவன் அவளை அணைத்தவாறே அமர, தன்னைக் கடத்தியவனை விட்டு இன்னமும் காப்பாற்ற படவில்லை என்றாலும், சசிதரன் போன்ற மனித மிருங்கங்களிடம் இருந்தும், காட்டை ஆளும் கொடிய வனவிலங்குகளிடம் இருந்தும் காப்பாற்ற பட்டுவிட்டோம் என்ற நிம்மதியில் அவனது வலிய அணைப்பிற்குள் சுகமாய் அடங்கியவளைக் கண்டு வருணின் உள்ளமும் அமைதிக் கொண்டது.

ஜாஃபரும் ஜீப்பினை கிளப்ப, ஓய்வும் விடுதலையும் கிடைத்த சாந்தியுடன் ஆழ இழுத்து மூச்சுவிட்டவள் அப்படியே கண்களை மூடி அவன் பரந்த மார்பில் சாய, வருணின் பார்வையில் அவளின் சின்னப் பாதங்கள் பட்டன.

முட்கள் குத்தியிருந்ததில் இரத்ததோடு அடிப்பாதங்கள் ஆங்காங்கு கிழிந்தும் போயிருந்தது.

அது வரை அவளைக் காணாது அதிர்ந்து போயிருந்த அவனது மனதிற்கு அக்காட்சி ஏனோ வருத்தத்திற்குப் பதில் சினத்தைத் தான் கொணர்ந்தது.

அங்கும் புத்தியின் அறிவுரைகளை இதயத்தின் வலி வென்றது!

கழுத்தை அழுந்த தேய்த்தவன் மெதுவாக உட்கன்னத்தைக் கடித்தவாறே சில நொடிகள் வெளியே பார்த்துவிட்டு மீண்டும் அவளின் பாதங்களில் பார்வையைப் பதித்தான்.

"துர்கா.."

அவன் அழைத்தும் அவள் அவனது மார்பினில் இருந்து விலகவில்லை.

"ம்ம்ம்.."

"எனக்கு ஜாஃபர் போன் பண்ணும் போது மணி கிட்டத்தட்ட ஒண்ணு. அப்படின்னா அதுக்கு முன்னாடியே நீ குடிலைவிட்டு வெளியே போயிருக்கணும்."

அவன் என்ன கேட்க வருகின்றான் என்று அப்பேதைக்கு அந்நேரம் புரியவில்லை.

"இருக்கலாம்.. ஆனால் தெரியலைங்க."

அவள் நான் அந்தக் குடிலைவிட்டு போகவில்லை என்று கூறுவாள் என்று எதிர்பார்த்திருந்த அந்தப் படித்த மேதை, பல தொழில்களை கடவுள் போல் ஆட்சிப் புரிந்துக் கொண்டிருப்பவன், அத்தருணம் அந்தளவிற்கு யோசிக்கும் நிலையில் அவள் இல்லை என்பதை உணரவில்லை.

"இட்ஸ் ஒகே. ஆனால் நீயா அங்க இருந்து தப்பிச்சுப் போனியா, இல்லை உன்னை யாராவது அங்க இருந்து தூக்கிட்டு வந்தாங்களா?"

சினம் அனைத்தையும் ஒன்றுக்கூட்டி அழுத்தமாகக் கேட்ட அவனின் தொனியில் மெள்ள கண்களை விழித்தவளுக்கு, தன் முகத்தையே பார்த்திருக்கும் அவனின் உணர்வுகளற்ற வதனத்தில் பனிக்கட்டி போல் உறைந்து கிடந்த கண்களைக் கண்டதில் நிம்மதி பறந்துப் போய் அதிர்ச்சி வந்து சேர்ந்தது.

"நா... நா... நான் குடிலில் இருந்து த.. த.. தப்பிச்சு வந்தேனா?"

திக்கித் திணறிக் கூறியவளாய் மெதுவாக எழுந்து அமர்ந்தவள் அவனையே பார்த்தவாறே விலக எத்தனிக்க, அவளை வளைத்துப் பிடித்திருந்தவனின் கரங்கள் தன்னைவிட்டு அவளை நகரவொட்டாது மேலும் கெட்டியாக இறுக்கியது.

ஆயினும் பதில் பேசாது வாகனத்தின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தவனைக் கண்டு அவளுக்கு உள்ளூரக் குளிரெடுத்தது.

நிமிடங்கள் மௌனமாய்க் கரைய, "ஏன் அப்படி நினைச்சீங்க?" என்றால் அழுதுவிடும் குரலில்.

அப்பொழுதும் பதில் கூறாது உணர்வற்ற கண்களுடன் வெளியில் தெரியும் காட்சிகளையே அவன் பார்த்துக் கொண்டு வர,

"தப்பிச்சு போறதுக்கு வழி தெரிஞ்சிருந்தால் நான் இவ்வளவு நாள் காத்துட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை." என்றாள் விடாது.

அவனது கோபத்திற்கான காரணம், கடந்த மூன்று மணி நேரங்களாக அவளுக்கு எதுவும் கேடு நேர்ந்திருக்குமோ, அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற அச்சத்தில் அவனும் கதிகலங்கிப் போயிருந்ததன் விளைவே என்பதைப் பெண்ணவளும் புரிந்துக் கொள்ளவில்லை.

நேசத்தைச் சரியாகக் காட்டத் தெரியாத மனிதனிடம் இருந்து அது சீற்றமாய் வெளிப்பட்டது.

அவளின் கூற்றில் அவள் புறம் திரும்பியவன், "இப்போ வழித் தெரிஞ்சிடுச்சு, அதான் தப்பிக்கப் பார்த்திருக்க, அப்படித்தானே.." என்றான் அதே கடினமான தொனியில்.

"ம்ப்ச்."

சலித்துக் கொண்டவள் இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்பது போல் தானும் ஜன்னலின் பக்கம் திரும்ப, "நான் இன்னும் பேசி முடிக்கலை." என்றான், இப்பொழுது அவன் விடாது.

"நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சித்தான் பேசுறீங்களா? யாரு உன்னைத் தூக்கிட்டு வந்ததுன்னு கேட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் அதைவிட்டுட்டு நான் ஏதோ தனியா ஓடி வந்துட்ட மாதிரிக் கேட்டால் நான் என்ன பேசுறது?"

அவளின் பேச்சில் சற்றுக் கோபம் தெளிய, விநாடிகள் நேரம் சிந்தித்தவனாய் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்த ஜாஃபரின் புறம் நோக்கினான்.

"ஜாஃபர், நம்ம ஆளுங்க எல்லாரும் அங்க தான இருக்காங்கன்னு சொன்ன. ஆனா துர்கா சொல்றதைப் பார்த்தால்.." என்று முடிக்கவில்லை.

"அந்த சசிதரன் தான் என்னைத் தூக்கிட்டு வந்தான்.."

அவளது கூற்றில் அதிர்ந்து போனான் வருண்.

அவனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் சசிதரனும் ஒருவன்.

அவனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு வேலைக் கேட்டு வந்தவனை ஏனோ பிடித்துப்போய் விட, தன் தந்தையின் வேண்டுதலின்படி அவனை வேலைக்குச் சேர்ந்து கொண்டான் வருண்.

நாட்கள் செல்ல செல்ல அவன் மீது நம்பிக்கை அதிகரித்ததில் இது போன்ற நிழல் உலக வேலைகளுக்கும், அடியாட்கள் தேவைப்படும் நேரத்திலும் அவனை உபயோகப்படுத்தி வந்தான்.

ஆனால் அவன் இது போன்று செய்வான் என்று வருண் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை.

"அங்க சசி உங்கக்கூட இல்லையா ஜாஃபர்?"

"சார், துர்கா குடிலுக்குள் இல்லைன்னு எனக்குத் தெரிஞ்சதும் முதலில் உங்களுக்குத் தான் ஃபோன் பண்ணினேன். உங்கக்கிட்ட பேசிய உடனேயே நம்ம ஆளுங்களைக் காட்டுக்குள்ள போய்த் துர்காவைத் தேட சொன்னேன். ஆனால் நைட் நேரம், இருட்டு வேற, மிருகங்கள் சுத்திட்டு இருந்தாலும் சரியா கண்ணுக்கு தெரியாதுன்னு முதலில் பயந்தாங்க. அதனால் அவங்க யாரும் தனியா போக வேண்டாம்னு சொல்லி, ரெண்டு அல்லது மூன்று பேரா சேர்ந்து காட்டுக்குள் போங்கன்னு சொல்லி அனுப்பினேன். நான் இருந்த பதற்றத்தில், அந்தச் சமயத்துல சசிதரன் அங்க இருந்தானா இல்லையான்னு சரியா கவனிக்கலை சார்."

வாகனத்தைச் செலுத்தியவாறே மிகுந்த அச்சத்துடன் கூறியவனை அமைதியாகப் பார்த்த வருண் மீண்டும் துர்காவின் புறம் திரும்ப, 'இப்ப புரியுதா?' என்பது போன்ற பார்வையை வீசியவள் மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

இப்பொழுது அவளின் நிலை தெள்ளத்தெளிவாகப் புரிந்ததில் வருணின் மனதில் அவள் மேல் ஒரு இரக்கம் சுரந்தது.

மீண்டும் அவளின் பாதங்களைப் பார்த்தவன் என்ன நினைத்தானே சற்றே குனிந்தவனாய் அவளின் கால்களைப் பிடிக்க, பதறிப் போனாள் சின்னவள்.

"என்ன பண்றீங்க?"

"எதுக்கு இப்போ இந்தப் பதட்டம்? காலைக் காட்டு.."

அவனது பதிலில் ஒரு முறை ஜாஃபரை நோக்கிவிட்டு மீண்டும் அவன் புறம் திரும்பியவள் திருதிருவென்று விழிக்க, அவளின் அறியாப்பெண் போன்ற செய்கையில் மொத்தமாய் வீழ்ந்தவனின் உள்ளம் அந்தச் சசிதரனின் மீது கொலை வெறியைக் கொணர்ந்தது.

"இல்லை வேணாம்.."

"துர்கா.."

மறுத்தவளைக் கண்டு மீண்டும் கழுத்தை அழுந்த தேய்க்க, அவளுக்குப் புரிந்து போனது.

ஆயினும் அவனிடம் காலைக் கொடுப்பதா என்பது போல் மௌனமாய் அமர்ந்திருக்க, உன் அனுமதி எனக்குத் தேவை இல்லை என்பது போல் அவளின் பாதங்களைக் குனிந்துப் பற்றியவன் எடுத்து தன் மடியில் வைத்தான்.

அவ்வளவு தான்!

பெண்ணவளின் நாடி நரம்பெல்லாம் அதற்கு முன் அறியாத புதுச் சிலிர்ப்பும், சொல்லொண்ணா தவிப்பும் பரவ, தலைக் கவிழ்ந்தவளைப் பார்த்தவாறே அவளது கொலுசுகளை சற்று வருடிவிட்டு பின் விலக்கியவனுக்கு, இன்னமும் காயாமல் திட்டு திட்டாய் வழிந்து கொண்டிருக்கும் ரத்தக் காயங்களைக் கண்டு பரிவு பிறந்தது.

அத்துடன் வாழ்கையில் முதன்முறையாக அவன் மனதில் அதுவரை அவன் உணர்ந்திராத ஒரு அச்சமும் உருவாகியது.

ஆனால் அது ஏன் என்று அதனைப் பற்றி ஆலோசிப்பதற்கான அவகாசமும் அன்று அவனுக்கு இல்லை!!

*********************************

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா..

மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா..

காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்..

உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா..


அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.

References:

Human - Tiger Encounters in Gadchiroli : - Sitabai Salame from Chandrapur district’s Torgaon village in Maharashtra, died after being attacked by a tiger. “She was in the field, quite far away from the forest areas, when a tiger attacked her,” Sitabai’s son, Vilas said, about the incident on December 31, 2022. Sitabai is one among the nine people in Chandrapur who have been killed in attacks by wild animals, particularly tigers, in the past four months (as of end-April 2023).


 
Last edited:
Wow… Both Lions are in order to rescue their queens ❣️❣️❣️

Shiv unnoda doubt ellam clear aah??? Inime unnoda route um clear aagidichi.. ❣️❣️❣️

Varun ‘Durga’ nu kooptathu Shiv ku kettirukku… So, they are nearer…

Kandippa antha dead body Sasidharan than…

Next epi Varun Shiv face off irukkuma?
 

Vidhushini

Member
வருண்-துர்கா, ஷிவா-சிதாரா இந்நால்வர்க்கும் நடந்த காரணகாரியங்கள் அனைத்தும் புரிபடும் நேரம், மீண்டும் இவர்களின் பிரிவு நேருமோ?

Interesting @JB sis❤️
 

saru

Member
Lovely and super dear
Varun kooptathu sivu ku kekuthuna pakathula tan irukanga
Inga tan Varun sivu meet irukapodu
Sasitharan tan deadbody pola hoom
 
Shiva question raise panni panni Sithara oda answers ah collect panni thannoda love ah purinchittaan. Similarly Varun um Durga eppadi veliya pona thannai vittu pirinchiduvaalonu oru vitha bhayathula Ava kita question raise panni thannoda love purinchittaan. Nice epi mam. Enakku Varun ah pidichirkku. Waiting for the next epi mam.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top