JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 9

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 9

திருமண மண்டபத்தில் இருந்து வெளிவந்த வருண் தேஸாயும் அவனது ஆட்களும் கட்டிடத்திற்குப் பின்புறமாக அப்பொழுது தான் வந்திறங்கித் தயாராக நின்றிருந்த மெட்டாலி க்ரே நிற [Metallic Grey H135] ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு விடுவிடுவென நடக்கத் துவங்க, அவர்களின் நோக்கம் புரிந்த துர்கா இயன்றவரை போராடத் துவங்கினாள்.

ஆயினும் வருண் தேஸாயின் வலுவான இறுக்கிய பிடியில் கன்றிப் போயிருந்த அவளின் மெல்லிய இடை ஒடிந்துவிடுமோ என்பது போல் வலியெடுக்க, அவனிடம் இருந்து விடுபட இயலாத நிலையில் திமிறியவாறே திரும்பிப் பார்த்தவளை என்ன நினைத்தானோ சட்டென்று தூக்கினான்.

அவள் சிறிதும் அவனது அதிரடியை எதிர்பார்க்கவில்லை.

"ஐயோ! விடுங்க, தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்க.."

கத்தி கதற மட்டுமே அவளால் முடிந்தது.

அதற்குள் இன்னமும் சுழலிகளைச் சுழற்றியவாறே கிளம்புவதற்குத் தயாராக இருக்கும் ஹெலிகாப்படரில் அவளைத் திணித்தவன் தானும் ஏறி அமர, சில அடிகள் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த ஷிவ நந்தனின் கண்ணெதிரிலேயே அவனது அத்தை மகள் தூக்கப்பட்டாள்.

தான் ஏறி அமர்ந்ததும் படீரென்று ஹெலிகாப்டரின் கதவை சாத்திய வருண் தேஸாய் அது மூடுவதற்குள் பல அடிகள் தொலைவில் ஓடி வந்து கொண்டிருக்கும் ஷிவ நந்தனைப் பார்த்ததில், அதுவரை இருந்து வந்த இறுக்கம் மறைந்து அவனது உதடுகளின் கடைக்கோடியில் இகழ்ச்சி புன்னகை நெளிந்தது.

தன் ஆட்காட்டி மற்றும் நடுவிரலால் நெற்றியில் லேசாகத் தட்டியவனாய் விடைபெறுவது போல் ‘பை’ என்று சைகை செய்தவன் சற்று நிறுத்தி, “Bye for now.. But will see you soon Shiva..” என்று கூறியதில், அவனது குரல் கேட்காவிடினும் அவனது சைகைப் புரிந்ததில் ஓடி வந்து கொண்டிருந்த ஷிவ நந்தனின் பாதங்கள் சரெட்டென நின்றன.

மறு விநாடியே கதவை அழுந்த சாத்திய வருண் தேஸாயின் கட்டளைக்குப் பணிந்து சரசரவென்று மேலும் வேகமாய்ச் சுழன்ற சுழலிகளுடன் ஹெலிகாப்டர் ஆகாயத்தை நோக்கிப் பறக்க, வாழ்க்கையில் இரண்டாவது முறை நொறுங்கிப் போனான் ஷிவ நந்தன்.

முதல் முறை அவனது குருவைப் போன்று வழிகாட்டியாய் இருந்த DGP நீரவ் பிரகாஷின் தற்கொலைச் செய்தியை அறிந்த அன்று அவன் உடைந்து போனான்.

இரண்டாவது முறையாக இன்று தன்னைக் கயிறு கொண்டு கட்டாமலேயே கட்டுப்பட்டவன் போல், தன் கையறுநிலையை ஸ்டையிலாகச் சைகை செய்தவாறே உணர்த்தியவனாய் தன் அத்தை மகளுடன் பறந்து செல்லும் பரம எதிரியான வருண் தேஸாயின் இராட்ஷச கடத்தலில் சுக்கு நூறாய் சிதறிப் போனான்.

ஆகாயத்தில் மேகங்களுக்குள் கலக்கும் ஹெலிகாப்டரை இமைக்க மறந்தது போல் பார்த்திருந்தவன் நிமிடங்களுக்குள் சுதாரித்துச் சுற்றிலும் கண்களைச் சுழற்ற, பாதுகாப்பிற்கு அங்கு வந்திருந்த அவனது நண்பர்கள் ஒருவர் கூடத் தென்படாததில் வருண் தேஸாயின் திட்டம் தெளிவாய்ப் புரிந்தது.

வெகு சாமர்த்தியமாய் அவர்களையும் சில மணித்துளிகளுக்கு முன் தங்களின் வாகனங்களுக்குள் அடைத்திருந்தவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்தினை அதற்குள்ளாகவே அடைந்திருந்தனர்.

எரிநெருப்பாய் மனம் காந்த, சீறிவரும் அரிமாவென மூச்சிறைக்க நின்றிருந்தவனுக்கு மீண்டும் கேட்ட ஹெலிகாப்டரின் சத்தத்தில் குழப்பம் மேலிட, ஓசைக் கேட்கும் திசையை நோக்கி திரும்பவும் ஓட ஆரம்பித்தான்.

ஆனால் துர்காவை கடத்திய அந்தச் சில விநாடிகளுக்காகவே ஷிவ நந்தனின் உறவினர்களைப் பிடித்திருந்த வருண் தேஸாயின் அடியாட்களும் மண்டபத்தின் மற்றொரு புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் ஏறியவர்கள், ஆகாயத்தை நொடிகளுக்குள் அடைந்திருந்தனர்.

ஆக, ஒற்றை ஆளாய் தனித்து நின்ற ஷிவ நந்தனால் வருணின் ஆட்களில் ஒருவனைக் கூடப் பிடிக்க இயலவில்லை.

காலையில் மண்டபத்திற்கு வந்த வேளையில் திருமணப் பட்டு வேஷ்டியில் அவன் சொருகி வைத்திருந்த பிஸ்டலை கவனித்துத் திகைத்துப் போனார் தேவேந்திரன்.

ஆதங்கம் மேலிட மகனைக் கண்டிக்க, வேறு வழியின்றி அதனை அவரிடமே கொடுத்துவிட்டு மணமேடையில் ஏறியதை நினைத்தவனுக்கு அவர் மேல் மட்டுமல்ல, இப்பொழுது தன் மீதும் தீராத கோபம் வந்தது.

விடுவிடுவென்று மண்டபத்தை நோக்கி நடந்தவன், விருந்தினர்களின் அதிர்ச்சிக் கலந்த பரிதாபப் பார்வையைக் காண விரும்பாது, திருமணத்தின் போது எந்தத் தடைகள் நேராமல் இருக்கவும், திருஷ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்காவும் கையில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் காப்புக் கயிற்றினை அறுத்து எரிந்தவனாக மணமகன் அறைக்குள் புகுந்தான்.

அவனைத் தொடர்ந்து வந்த தேவேந்திரன், கனலாய்க் கொதித்திருக்கும் அவனது முகத்தைக் கூடப் பார்க்க அஞ்சியவராய் சற்றுத் தள்ளியே நின்றவர் மெள்ளக் கேட்டார்.

"யாரு ஷிவா அவன்?"

“பிஸ்டலைக் கொடுங்க..”

“ஷிவா..”

“பிஸ்டலைக் கொடுங்க..”

நிதானமான குரலில் கண்களை மூடி அணிந்திருக்கும் பட்டுச்சட்டையின் இடப்பக்க காலரை லேசாக இழுத்துவிட்டவாறே கழுத்தை வலப்பக்கமாகச் சாய்த்துப் பின் நிமிர்ந்தவனது தோற்றம் தேவேந்திரனுக்குப் பெரும் திகிலை வரவழைத்தது.

“ஷி.. ஷிவா.”

தடுமாறும் குரலில் பேசுபவரை மெதுவாய் நிமிர்ந்துப் பார்த்தவன், "வருண் தேஸாய்.." என்றதில் மேலும் கலங்கிப் போனார் அவர்.

"எத்தனையோ தடவை சொன்னோமே அவனை மாதிரி ஆளுங்க விஷயத்தில் கொஞ்சம் கவனமா இருன்னு, கேட்டியா?"

அவரை முடிக்கவிடவில்லை மகன்.

"அப்பா, நான் பார்க்கிறது போலிஸ் வேலை. இவனை மாதிரி ஆளுங்களைப் பிடிக்கிறதுக்காகத் தான் நான் ஐ.பி.எஸ்-ஸே பாஸ் பண்ணினேன்னு மத்தவங்களை விட உங்களுக்குத் தான் நல்லாத் தெரியும்."

"உன் பக்கத்தில் இருக்கும் நியாயம் புரியுது ஷிவா. ஆனால் அதனுடைய பின் விளைவுகளைப் பார்த்தியா? இப்பப் பாரு உன்னைப் பழிவாங்குறேன்னு துர்காவைத் தூக்கிட்டுப் போயிட்டான்.." என்றதில், சுக்கு நூறாகிப் போயிருந்த ஷிவ நந்தனின் இதயம் இறுகிய பாறையாக மாறத் துவங்கியது.

"காலையில் பெரிய இவர் மாதிரி சொன்னீங்க, மணமேடைக்குப் போறவனுக்கு எதுக்குத் துப்பாக்கின்னு. என் கையில் வெப்பன்ஸ் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?"

"துப்பாக்கி இருந்திருந்தா மட்டும் அவனை எதுவும் பண்ணிருக்க முடியும்னு நினைக்கிறியா ஷிவா?"

அவர் கூறுவதில் நூறு சதவிகிதம் என்ன, அதற்கு மேலும் உண்மை இருக்கின்றது என்பது ஷிவ நந்தனிற்கும் புரியத்தான் செய்தது.

ஷிவ நந்தன் மணமேடையில் அமர்ந்த நேரமே வருண் தேஸாயின் ஹெலிகாப்டர் திருமண மண்டபத்தை நெருங்கி இருந்திருக்கின்றது.

அச்சத்தம் தான் ஷிவ நந்தனின் செவிகளிலும் விழுந்தது, ஆயினும் அந்நேரம் நுழைந்த சிதாராவின் மீது கவனம் சென்றதால் அவனது கவனம் சிதறியது.

ஆக இங்கு மணவறையில் எரியும் ஹோமத்திற்கு எதிரில் அமர்ந்து சடங்குகளிலும் சாங்கியங்களிலும் தான் மூழ்கி இருந்த நேரம், திருமண மண்டபத்திற்குள் வருண் தேஸாய் நுழையும் முன்னரே தனது நண்பர்களில் ஒவ்வொருத்தராய் அவனது ஆட்களிடம் பிடிபட்டிருக்கின்றனர்.

வருண் தேஸாய் மண்டபத்தினுள் நுழைந்த நிமிடம் மீதம் இருந்த அவனது அடியாட்கள் தனது உறவினர்களின் தலைக்குப் பின் துப்பாக்கிகளை வைத்துவிட்டனர்.

மணமேடையில் வருண் ஏறும் பொழுதே துர்காவின் அன்னையையும் தனது பெற்றோரையும் பிடித்துவிட்டனர் இன்னும் சிலர்.

ஆக, இதற்கு மேல் இவன் ஒருவனால் எத்தனை ஆயுதங்கள் வைத்திருந்தாலும் தனித்து என்ன செய்திருக்க முடியும்??

தந்தைக்குப் பதிலளிக்க இயலாத தன்னிலையை நினைத்து மேலும் அவமானத்தில் சுருண்டவன் மீண்டும் கையை நீட்ட, வேண்டா வெறுப்பாகத் தனது பெட்டியில் மறைத்து வைத்திருந்த அவனது பிஸ்டலை எடுத்து வந்த தேவேந்திரன் சலனமான மனத்துடன் அவனது கையில் வைத்தார்.

“ஷிவா. கொஞ்சம் பொறுமையா இருப்பா..”

“பொறுமையாவா? இதுக்கு மேலா? ஏன் அவன் துர்காவ..”

வெடித்துவிடுபவன் போல் பேசத் துவங்கியவன் சட்டென நிறுத்தி பிஸ்டலை தனது வேஷ்டியில் சொருகியவாறே மணமகன் அறையை விட்டு வெளியேற, அங்கு விருந்தினர்களின் மத்தியில் நின்றிருந்த சிதாராவின் பார்வை அவனையே துளைத்தெடுத்தது.

‘பழிக்குப் பழி! ஆனால் இவர்களுடைய விபரீத விளையாட்டில் பகடையாய் மாறிப்போனது, நானும் துர்காவும் தானே! நிச்சயதார்த்தம் அன்று கைது செய்யப்பட்ட வருண், மறுநாளே நல்லவன் என்ற போர்வையுடன் வெளியில் வந்துவிட்டாலும், ஏனோ இந்தத் திருமணத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை என்று கூறி திருமணத்தை அவனே நிறுத்திவிட்டான்.’

அதற்கான காரணம் என்ன என்று இன்றுவரைக் குழம்பி இருந்தவளுக்கு, இப்பொழுது ஏதோ புரிவது போல் இருந்தது.

வாழ்க்கையில் அவன் சந்தித்த பெருத்த அவமானம் அவனது கைதாகவே இருந்திருக்கும். அப்பேற்பட்ட சூழ்நிலையில் தன்னைப் பார்த்துவிட்டு சிதாராவை அவன் மணமுடிக்க விரும்பாது இருந்திருக்கலாம்.

அல்லது வேறு ஏதாவது காரணமா???

எதனையோ நினைத்தவளாக ஷிவ நந்தனை நோக்கி நடக்கத் துவங்க, அதற்குள் ஆங்காங்கு நின்றிருந்த விருந்தினர்கள் ஸ்ரீமதியையும் சாவித்திரியையும் நெருங்கி துக்கம் விசாரிப்பது போல் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்.

அந்நிமிடம் வரை எப்படியோ தாக்குப்பிடித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி அதற்கு மேலும் தாங்க இயலாதவராக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிய, மீண்டும் அல்லோல கல்லோலப் பட்டுபோனது அத்திருமண மண்டபம்.

"ஐயோ! என்ன ஸ்ரீமதி? என்ன ஆச்சு?"

சாவித்திரியின் குரலில் அத்தையின் நிலையைக் கண்ட ஷிவ நந்தன் விருந்தினர்களைத் தள்ளி நிற்கச் சொன்னவன் அவருக்கு முதலுதவி செய்து கொண்டே ஆம்புலன்ஸிற்கு அழைக்குமாறு சத்தமிட்டான்.

அதற்குள் தானும் ஸ்ரீமதியை நெருங்கியிருந்த சிதாரா சட்டென்று தன் அலைபேசியை எடுத்து மருத்துவமனைக்கு அழைத்தவள், தன் தந்தையின் பெயரையும் பதவியையும் உபயோகித்து, சமயோசிதமாய் மடமடவென உத்தரவுகளைப் பிறப்பித்தாள்.

அவளது குரலில் ஒரு முறை அவளை ஏறிட்டு பார்த்த ஷிவ நந்தன் விழிகள் சுருங்க அவளை ஒரு விநாடிப் பார்த்துவிட்டு மீண்டும் முதலுதவியில் ஈடுபட்டான்.

நிமிடங்கள் கரைந்தாலும், ஊரைவிட்டுச் சற்றுத் தொலைவில் இருந்த அத்திருமண மண்டபத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதற்குச் சற்று நேரம் பிடித்தாலும், ஸ்ரீமதியின் நல்ல நேரம் தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

********************************************

அதே நேரம் அங்கு ஹெலிகாப்டரில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஆண்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் இருந்த நவீன ஆயுதங்களையும், புருவங்கள் இடுங்க எதனையோ தீவிரமாக யோசிக்கும் வண்ணம் இறுகிய முகத்துடன் வரும் வருண் தேஸாயையும் கண்டு விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்திடப் பார்த்திருந்த துர்காவின் மேனி அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

பைலட்டையும் சேர்த்து ஆறு பேரை சுமக்கும் அளவிற்கான அந்த ஹெலிகாப்டரில், பின் பகுதியில் நால்வர் அமரும் அளவில் இருக்கைகள் இருந்தன.

அதன் ஒரு வரிசையில் துர்காவை இறுக்கப் பிடித்தவாறே ஒருவன் அமர்ந்திருக்க, மற்றொரு இருக்கையில் இன்னொருவன் அமர்ந்திருந்தான்.

அவர்களுக்கு நேர் எதிரில் இருந்த இருக்கைகளில் கதவினை ஒட்டியவாறே அமர்ந்திருந்த வருணுக்கு ஏனோ பெண்ணவளின் தோற்றம் சற்று அமைதியின்மையைத்தான் கொணர்ந்தது.

ஆயினும் அவளைப் பாராதவன் போல் வெளியே தங்களுக்குப் போட்டியிடுவது போன்று தோன்றி மறைந்து கொண்டிருக்கும் மேகங்களில் நிலைத்திருந்தது அவனது ஆழ்ந்தப் பார்வை.

அவனுக்கு அருகில் இருந்தவனின் கண்களோ துர்காவை விட்டு அங்குமிங்கும் நகரவில்லை.

அவன் ஜாஃபர்.. வருண் தேஸாயின் வலது கரம்.. அவனது தளபதி!

ஆறு அந்நிய ஆண்களின் மத்தியில் சிக்கிக் கொண்டவளாக உதடுகள் துடிக்க அமர்ந்திருந்த துர்கா ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவளாக முதன் முறையாக அவர்களிடம் பேசினாள்.

"நீங்க யாரு? ஏன் என்னை இப்படித் தூக்கிட்டுப் போறிங்க?"

ஆயினும் அவளது கேள்விக்குப் பதிலளிக்காது உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தவாறே தன்னைப் பிடித்திருந்தவனின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போராட,

"நாங்க யாருன்னு உனக்குத் தெரியணும், அவ்வளவு தானே. கொஞ்ச நேரத்தில எல்லாத்தையும் தெரிஞ்சுப்ப.. அதுவரை கொஞ்சம் அமைதியா வா.." என்றான் வருணின் ஆட்களில் ஒருவன், அழுத்தமான தொனியுடன்.

அவர்களில் வருண் தேஸாயின் முகத்தை மட்டும் தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிக்கையிலோ பார்த்த நியாபகம் இருந்தது, ஆயினும் அந்த அதிர்ச்சியான தருணத்தில் அவளால் நிச்சயமாய்க் கணிக்க இயலவில்லை.

"எ.. எ.. என்னை எங்கத் தூ.. தூ.. தூக்கிட்டுப் போறிங்கன்னாவது சொல்லுங்க.."

அவளது தடுமாறும் குரலில் அவளை ஒரு முறைத் திரும்பிப் பார்த்த வருண் மீண்டும் வெளியே பார்க்க, "ஏன், சொன்னாத்தான் எங்க கூட வருவியா? இல்லைன்னா இப்படியே குதிச்சிடுவியா?" என்றான் மற்றொருவன்.

அவனது இகழ்ச்சியான பதிலில் ஏற்கனவே அரண்டுப் போயிருந்தவள் மேலும் அதிர்ந்தவளாய் மீண்டும் கதறி அழத் துவங்க, தனது கைக்கடிகாரத்தைக் குனிந்துப் பார்த்த வருண், ஹெலிகாப்டரின் பைலட்டை நோக்கித் திரும்பியவனாய், "கொஞ்ச ஸ்பீடை அதிகப்படுத்து.." என்றதிலேயே அவளுக்குப் புரிந்து போனது, தனது அழுகை அவனுக்குப் பிடிக்கவில்லை என்று.

ஆயினும் அழாமல் இருக்க இயலவில்லை அவளால்.

ஏறக்குறைய அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் வேறு ஒரு இடத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டரின் சுழலியின் [rotor blades] வேகம் அடங்குமுன், கதவைத் திறந்து குதித்திறங்கிய வருண், சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்படரை நோக்கி நடந்தான்.

அதற்குள் துர்காவை இறுக்கப் பிடித்தவர்களாய் மற்றவர்களும் இறங்க, எங்கு இருக்கின்றோம் என்றே தெரியாதவளாய் சுற்றும் முற்றும் பார்த்த துர்காவிற்கு, மற்றொரு ஹெலிகாப்டரைக் கண்டதும், அடிவயிற்றில் பக்கென்று இருந்தது.

'இன்னும் வேற எங்கேயோ என்னைத் தூக்கிட்டுப் போகப் போறாங்களா? அப்படின்னா மாமா எப்படி என்னைக் கண்டுப்பிடிப்பாங்க? கடவுளே, இவங்க எல்லாம் யாரு? எங்கத் தூக்கிட்டுப் போறாங்க? என்னை என்ன பண்ணப் போறாங்க? ஒரு வேளை..’ என்று எண்ணியவளுக்கு ஏதேதோ காட்சிகள் கற்பனைகளில் ஓட, கிறுகிறுவென்று தலை சுற்றத் துவங்கியது.

தாங்க இயலாதவளாய் தலையைப் பிடித்தவள் மயக்கத்தைத் தழுவ, அவளுக்கு வெகு அருகிலேயே நடந்து கொண்டிருந்த ஜாஃபர், மெள்ள சரிந்தவளை சட்டெனப் பிடித்தவன் அலேக்காகக் குழந்தைப் போல் இரு கரங்களில் தூக்கினான்.

அதற்குள் அந்தப் புதிய பைலட்டிடம் பேசி முடித்த வருண் திரும்பிப் பார்க்க, ஜாஃபரின் கையில் மயக்கமுற்று கிடந்தவளைக் கண்டு விழிகளைச் சுருக்கியவன், "என்ன ஆச்சு?" என்றான்.

"மயங்கிட்டா சார்."

"அதிர்ச்சியில தான் மயங்கி இருக்கணும். இவ இவ்வளவு நேரம் தாக்குப் பிடிச்சதே பெருசு. இவளை ஹெலிகாப்படரில் ஏத்துங்க. கொஞ்ச நேரத்துல இவளே மயக்கத்தில் இருந்து தெளிஞ்சிடுவா, இல்லைன்னா பிறகு பார்க்கலாம்."

உத்தரவிடும் குரலில் கூறியவன் துர்காவை அந்தப் புதிய ஹெலிகாப்டரில் ஏற்றும் வரையில் காத்திருந்து, பிறகு தான் ஏறியவுடன் கதவை மூட, ஹெலிகாப்டர் பறக்கத் துவங்கிய சில நிமிடங்களில் அவன் கூறியது போல் தானாக விழிகளைத் திறந்தாள் துர்கா.

ஒரு சில விநாடிகள் திருதிருவென்று விழித்தவளுக்கு நிதர்சனம் புரிபட, "ஐயோ! என்னை விடுங்க.." என்று அலறியவாறே முழிக்கவும், வருணின் முகத்தில் சலிப்பு படரத் துவங்கியது.

"ஜாஃபர், நாம் போறதுக்கு எப்படியும் இன்னும் நாலு மணி நேரம் கூட ஆகலாம், அதுவரைக்கும் இப்படியே போறதா?"

அவன் கூறி முடிக்கவில்லை.

துர்காவை அமர்த்தியிருக்கும் இருக்கைக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த ஜாஃபர், சட்டென்று தனது பாக்கெட்டில் இருந்து எதனையோ எடுத்தவன் துர்காவிற்கு அருகில் அமர்ந்திருந்தவனைப் பார்த்துத் தலையசைத்தான்.

அவனது உத்தரவின் பேரில் துர்காவை இறுக்கப் பற்றிக் கொள்ள, அவள் என்ன ஏதென்று சுதாரிக்கும் முன், அவளின் கரம் பற்றிய ஜாஃபர் கையில் இருந்த ஊசியினை நரம்பினுள் செலுத்த, அவளது உடலுக்குள் செலுத்தப்பட்டது அந்த மயக்க மருந்து.

அவன் என்ன செய்கின்றான் என்பதை உணர்ந்தவளாய் போராடத் துவங்கியவளின் கண்கள் அதிர்ச்சியுடன் அகல விரிய, அடுத்த ஐந்து நிமிடங்களில் மீண்டும் மெள்ள மயக்கத்தைத் தழுவியவளாய் இருக்கையில் சாய்ந்தாள்.

அவளது கதறல் ஒலி நின்றதுமே நிம்மதியுற்றவனாய் ஆழ்ந்த பெருமூச்சு விட்ட வருண் தன் இருக்கைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த மடி கணினியை எடுத்தவன் அதனை உயிர்ப்பிக்க, ஏறக்குறைய நான்கு மணி நேரங்கள் கழித்து அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியது, பகல் நேரத்திலேயே காண்பவர்களின் நெஞ்சில் பயப்பந்தை உருளச் செய்யும் அடர்ந்த ஒரு கானகத்தின் நடுவில்.

மகாராஷ்டிராவின் தூரக்கிழக்கில் அமைந்த கட்சிரோலி [Gadchiroli] மாவட்டத்தில் உள்ள கட்சிரோலி நகரத்தின் மொத்த மக்கள் தொகையின் அளவே எழுபத்தி நாலாயிரம் தான்.

கட்சிரோலி மாவட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டோர் எவருக்குமே அங்கு அமைந்திருக்கும் அடர்த்தியான, வெகு அபாயகரமான காடுகளைப் பற்றியும் தெரிந்திருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் விறகு சேகரிக்கவும், பழங்களைப் பறிக்கவும் காடுகளுக்குள் செல்ல அஞ்சியதில்லை.

ஆனால் இப்போது நிலைமைகள் கடுமையாக மாறிவிட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்திருந்தது.

கட்சிரோலி தாலுக்காவைச் சார்ந்த பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் கதிரவன் மறைந்ததற்குப் பிறகு வீடுகளை விட்டு வெளியே வரவும் அச்சப்பட்டுக் கதவுகளைத் தாழிட்டு அடைந்துக் கிடந்தனர்.

காரணம் அக்காடுகளுக்குள் கழுதை புலிகள், நரிகள், கரடிகள் [sloth bear], காட்டு நாய்கள், காட்டுப்பன்றிகள் போன்ற வனமிருகங்கள் நடமாடத் துவங்கியிருந்தன.

இவற்றுடன் கடந்த சில மாதங்களாகக் கட்சிரோலியில் புலிகளும் சிறுத்தைகளும் தென்படுவதைக் கேள்விப்பட்டதில் பொதுமக்கள் பீதியடைந்து, அக்காட்டினை எட்டிக் கூடப் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.

அம்மாதிரியான, பார்த்தாலே ஈரக்குலை நடுங்கச் செய்யும் கானகத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு.

ஏறக்குறைய மூன்று குடில்களை ஒன்றாக இணைத்தது போன்று கட்டப்பட்டிருந்த அந்த வீட்டினை சுற்றியும் அமைக்கட்டிருந்த மின்சார வேலியில் சிக்கும் மிருகங்களும் மனிதர்களும் சுதாரிக்கும் முன்னரே உயிரை விட்டிருப்பர்.

அத்தகைய பாதுகாப்பான வீட்டிற்கும் மின்சார வேலிக்கும் இடையில் இருக்கும் இடத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து வெளி வந்த வருண் தேஸாயின் அடியாள் ஒருவனின் கண்கள் ஒரு முறை அவ்விடத்தைச் சுற்றிலும் வலம் வந்தன.

இப்படி ஒரு வீடு இந்த அடர்ந்த கானகத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் என்று அதிநிச்சயமாய் எவராலும் கணிக்க முடியாது தான்.

ஆயினும் எச்சரிக்கையுடன் அவனது விழிகள் சுற்றுப்புறத்தை அலச தவறவில்லை.

சந்தேகத்திற்கு இடமாய் அங்கு எதுவும் தென்படாததால் ஹெலிகாப்டரை நோக்கித் திரும்பியவன் கையை அசைக்க, அதனைத் தொடர்ந்து இறங்கிய வருணின் கழுகு கண்களும் அவ்விடத்தை ஒரு முறை ஆய்வு செய்தது.

“அவளைத் தூக்கிட்டு வா ஜாஃபர்..”

கூறியவன் மூன்றுக்குடில்களை இணைத்துக் கட்டப்பட்டிருந்த அவ்வீட்டின் ஒரு பக்கக் குடிலில் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கை அறையை நோக்கிச் செல்ல, அவனைத் தொடர்ந்து வந்த ஜாஃபர் இன்னமும் மயக்கம் தெளியாமல் இருக்கும் துர்காவைத் தூக்கி வந்தவன் அங்குப் போடப்பட்டிருந்த படுக்கையில் அவளைக் கிடத்தினான்.

அடுத்த விநாடியே பாதுகாப்புத் திட்டங்களை மீண்டும் அவர்களுக்குச் சுருக்கமாய் எடுத்துரைத்த வருண்,

"ஜாஃபர், என்னுடைய எதிரி இவள் அல்ல, அந்த ஷிவா தான்னு உனக்குத் தெரியும். இவளை வைத்து தான் நான் அவனை நெருங்க முடியும். அதனால் இவளுக்கு இங்க எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. முக்கியமா நம்ம எலக்ட்ரிக் ஃபென்ஸ் பற்றி இவளுக்குத் தெளிவா சொல்லிடு. முடிஞ்சால் ஏதாவது மிருகத்தைப் பிடிச்சி அந்த ஃபென்ஸில் போட்டு அதுங்களுக்கு என்னாகும்னு ப்ராக்டிக்கலா காட்டிடு. அப்பத்தான் இவள் இந்த வீட்டை விட்டு வெளியே போறதுக்குப் பயப்பட ஆரம்பிப்பா. வேற ஏதாவது முக்கியமான பிரச்சனைன்னா மட்டும் எனக்குக் கால் பண்ணு. மற்றப்படி நானாக இங்க வரும் வரை என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்காத.."

கூறியவனாய் வாயிலை நோக்கி நடந்தவன் ஏதோ உந்த சட்டென நின்று ஒரு முறைத் துர்காவைத் திரும்பிப் பார்க்க,

கட்டியிருந்த அடர் ஆரஞ்சு வர்ண கல்யாணப் புடவை இலேசாக விலகியிருப்பது கூடத் தெரியாது உணர்வற்று படுத்திருப்பவளின் தோற்றம் வித்தியாசமான உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அவனுள் தோற்றுவித்தது.

வழக்கமான அவனது மேனரிசமாய் வலது கரத்தால் கழுத்தை அழுத்தமாய்த் தடவி இடது உள்கன்னத்தைப் பற்களால் கடித்தவாறே நொடி நேரம் நின்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க இயலாமல் விருட்டென்று விட்டு வெளியேறினான்.


************************************************


சில மணி நேரங்களுக்கு முன்..

திருமண மண்டபத்தில் இருந்து சீறிக் கொண்டு கிளம்பிய வருண் தேஸாயின் அடியாட்கள் செலுத்திய வாகனங்கள் ஆட்களின் அரவமே இல்லாத ஒரு இடத்தில் நின்றதுமே, அவற்றுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஷிவ நந்தனின் நண்பர்கள் வெளியே தள்ளப்பட்டனர்.

அவர்கள் அனைவருமே சாதாரணமானவர்கள் அல்ல.

அஷோக்கைத் தவிர மற்றவர்கள் அனைவரும், ஷிவ நந்தனைப் போன்று உயர்ந்த பதவியில் இல்லாவிடினும், அவர்களும் சாமர்த்தியமான காவலதிகாரிகளே.

ஆயினும் வெகு புத்திசாலித்தனமாய் நிதானமாக வியூகங்களும் திட்டங்களும் அமைத்து, அதிநவீன ஆயுதங்களின் துணையோடு வருணின் ஆட்கள் அவர்களைப் பிடித்திருந்தனர்.

எல்லாருடைய கைகளையும் கால்களையும் அதனுடன் வாயையும் இறுக்கக் கட்டியிருந்த வருணின் ஆட்கள் அவர்களைத் தரையில் தள்ளியே மறுவிநாடியே விரைவாய் சென்று மறைந்துவிட, ஒருவர் மற்றவருக்கு உதவத் துவங்கியதில் சில நிமிடங்களில் அனைவரின் கட்டுகளும் அவிழ்க்கப்பட்டிருந்தன.

ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆங்காரமும் ஆக்ரோஷமும் தெறித்துக் கொண்டிருக்க, பற்களைக் கடித்தவனாய்,

"என்னுடைய செல்ஃபோனைப் பிடுங்கித் தூக்கிப் போட்டுட்டானுங்க அந்த ******. உங்க யார்க்கிட்டேயாவது செல்ஃபோன் இருக்கா?" என்றான் அஷோக் அடிக்குரலில்.

அவனது கேள்விக்கு அனைவருமே இல்லை என்று பதிலளிக்க, “ஷிட்..” என்று கத்தியவன் வேறு வழியின்றிச் சில அடிகள் தொலைவில் தெரிந்த சாலையை நோக்க விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தான்.

மற்றவர்களும் அவனைத் தொடர, நெருங்கி நடந்த நண்பன் ஒருவன்,

"அஷோக், ஏதாவது வெஹிக்கில் வந்தால் முதலில் அதுல வர்றவங்கக்கிட்ட ஃபோன் வாங்கி ஷிவாக்கிட்ட பேசு. அங்க என்ன நடந்ததுன்னு முதல்ல நமக்குத் தெரியணும், பிறகு ஷிவா என்ன சொல்றானோ அதுப்படி செய்வோம்." என்றான்.

“ம்ம்..” என்று மட்டும் பதிலளித்த அஷோக் சாலையை அடைய, அவர்கள் எதிர்பார்த்ததைப் போல் மணித்துளிகள் சில கடந்து வந்த வாகனத்தின் ஓட்டுநரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் ஷிவ நந்தனை அழைத்தனர்.

மருத்துவமனைக்கு ஸ்ரீமதியை ஆம்புலன்ஸில் அனுப்பியவனாய் பெற்றோரையும் அவருடன் செல்லுமாறு கூறிவிட்டு இன்னமும் திருமண மண்டபத்திலேயே இருந்த ஷிவ நந்தன் அலைப்பேசியை எடுத்தவன் மறுமுனையில் வெடிக்கத் துவங்கினான்.

“எங்க இருக்கீங்க எல்லாரும்?”

“ஷிவா. எங்கே இருந்து தான் வந்தானுங்கன்னே தெரியலை ஷிவா. அதுவும் ஒரே நேரத்தில அவனுங்க எல்லாருமே வரலை. பார்ட்னர்ஸ் போல் செட் செட்டா வந்திருக்கானுங்க. எங்க ஒவ்வொருத்தரையும் தனித்தனியா டார்கெட் பண்ணிருக்கானுங்க. They captured and acquired us even before we sensed them.”

அஷோக்கின் மனக்குமுறல் ஷிவ நந்தனுக்கும் புரிந்தது.

மண்டபத்திற்குள் வருண் தேஸாயோடு நுழைந்தவர்களே கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அப்படி என்றால் வெளியில் எத்தனை பேர் இருந்திருப்பர். ஆனால் இவர்களோ வெகு சிலர்.

மீண்டும் மீண்டும் தன் தவறினால் ஏற்பட்டிருக்கும் அசம்பாவிதங்களை நினைத்து குற்ற உணர்வில் சிக்கியவன் வழக்கமான மேனரிசமாய்ச் காலரை இழுத்து தலையைச் சாய்த்து நிமிர்ந்தவனின் தோற்றம் வீடியோ கால் மூலம் பார்த்துக் கொண்டிருந்த அஷோக்கிற்கு வேதனையானது.

“ஷிவா, இப்போ என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு.”

நெடுமூச்சுவிட்ட ஷிவ நந்தன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவனாய் சில கட்டளைகளை இட, அவனின் சொற்படி துர்காவைத் தேடும் படலம் தீவிரமாக ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த வருண், நேரடியாகச் செல்லாது இடையில் ‘புறாத்தீவு’ என்றழைக்கப்படும், கர்நாடாக மாநிலத்தின் கடற்கரையில் அடர்த்தியான மரங்கள் மற்றும் வளைந்த பாறைகள் நிறைந்த 'நேத்ராணி' தீவில் இரண்டாவது ஹெலிகாப்டரை நிறுத்தி வைத்திருக்கப் பணித்திருந்தான்.

அவனது திட்டத்தின் படி துர்காவையும் சுமந்து கொண்டு பறந்த இரண்டாவது ஹெலிகாப்டர், அடுத்து இறங்கியது கட்சிரோலி காட்டில் தான்.

பெற்றோரின் பாதுகாப்பில் துர்காவின் அன்னையை ஒப்படைத்துவிட்டு தேனி காவல்துறை தலைமை அலுவலத்தில் டி.எஸ்.பி-யிடம் நடந்த அசம்பாவிதங்களை விவரித்திருந்த ஷிவ நந்தன் அவர்களின் உதவியை நாட, அவர்களுடன் இணைந்த சென்னை காவல் ஆணையரும் துர்காவின் தேடும் படலத்தைத் தீவிரமாக்கினார்.

ஆயினும் நேரம் கடந்ததே ஒழிய தேனியில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர்களைக் கண்டுப்பிடிக்க முடியாமல் தடுமாறிப் போனதில் எதற்கும் அஞ்சாத ஷிவ நந்தனின் இதயம் கூடக் கலங்க ஆரம்பித்தது.

*******************************

எவ்வளவு நேரம் தான் மயக்கத்தில் இருந்தாளோ, ஒரு கட்டத்தில் மெள்ள விழிப்புத் தட்டியது துர்காவிற்கு.

அறுவை சிகிச்சையோ அல்லது பிற மருத்துவ நடைமுறைகளுக்கோ முன் நோயாளிகள் உறங்குவதற்கு என்று கொடுக்கப்படும் மயக்க மருந்து அவளுக்கு அளிக்கப்பட்டிருந்ததால், விழிப்பு வந்தாலும் ஒருவித சோர்வையே அவளுக்கு அளித்திருந்தது.

ஆயினும் நிமிடங்களில் தனக்கு நேர்ந்த அனர்த்தங்கள் புரிபட, விருட்டென்று எழுந்து அமர்ந்தவளின் தலை வின்வின்னென்று வலியில் தெறித்தது.

"கடவுளே! நான் எங்க இருக்கேன்..”

மெல்லிய குரலில் புலம்பியவளாய் மெள்ளக் கட்டிலின் கீழ் கால் பதித்த நேரம், அவளின் அரவத்தைக் கேட்டிருந்த ஜாஃபர் அவளைக் கிடத்தியிருந்த அறைக் கதவைத் திறந்தான்.

"வழக்கம் போல எல்லாருக்கும் தோனும் அதே கேள்வி தான் உனக்கும் தோனியிருக்கும். அதாவது யாரு இவங்க, எதுக்காக என்னைத் தூக்கிட்டு வந்தாங்க, இப்போ நான் எங்க இருக்கேன். இந்தக் கேள்விகள் தானே இப்ப உன் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்கு? எல்லாத்துக்கும் கண்டிப்பா உனக்குப் பதில் கிடைக்கும், ஆனால் அதைச் சொல்ல வேண்டியவர் இப்போ இங்க இல்லை. அதனால் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, உனக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் அவர் வந்து தெளிவா உனக்குப் புரிய வைப்பார்."

அமைதியாய் கூறியவனின் கூற்றில் எது புரிந்ததோ இல்லையோ, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ என்ற வாக்கியம் தெளிவாகவே புரிந்தது.

அண்டசராசரமே வெடித்துப் பிளந்தது போல் உணர்ந்ததில் மீண்டும் நடுநடுங்கிப் போனாள் பேதை.

"இ.. இ.. இன்னும் கொஞ்ச நாளா? என்ன சொ..சொ..சொல்றீங்க?"

"வேற வழியே இல்லை, நீ இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்து தான் ஆகணும்.."

"த.. த.. தயவுசெஞ்சு என்னைப் போக விடுங்க, எ.. எ.. எல்லாரும் என்னைத் தேடிட்டு இருப்பாங்க. எ.. எங்க அம்மாவை நான் பார்க்கணும்.."

திக்கித் திணறிப் பேசுபவளைப் பார்த்தவாறே அறைக்கு வெளியே நிற்பவனைச் சைகை செய்து அழைத்தவன் அவளுக்கு உணவு அளிக்கச் சொல்ல,

அவர்கள் கொடுத்திருந்த மயக்க மருந்தின் வீரியம் இன்னமும் உடலில் இருப்பதால் அசதியுற்றவளாய் அவர்களை எதிர்க்கும் தெம்பு இல்லாது இரு கரங்களாலும் தலையைத் தாங்கியவாறே மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள்.

அவளுக்கு எதிரில் ஒரு சிறிய மேஜையை இழுத்துப் போட்ட மற்றவன், அதன் மேல் அவளுக்கு வேண்டிய உணவினை வைத்தவன், அருந்துவதற்குத் தண்ணீரையும் வைத்துவிட்டு வெளியேற, அமைதியாக அவள் அமர்ந்திருக்கும் காட்சியைப் புகைப்படமாக எடுத்த ஜாஃபர் அதனை வருணுக்கு அனுப்பி வைத்தான்.

"இப்பத்தான் முழிக்கிறாள் சார். ஆனால் எதிர்பார்த்தது மாதிரி போராட்டம் எல்லாம் செய்யலை. அமைதியா இருக்காள். இன்னும் மயக்க மருந்தோட வீரியம் குறையலைன்னு நினைக்கிறேன். சாப்பாடு வைச்சிருக்கோம். சாப்பிட்டவுடன் உங்களுக்குத் தகவல் அனுப்புறோம்."

அங்குத் தனது சிகப்பு நிற மாசாராட்டியை செலுத்திக் கொண்டிருந்த வருணின் அலைபேசி தகவல் வந்ததை அறிவிக்க, எடுத்துப் பார்த்தவனுக்கு, இரு கரங்களாலும் தலையைப் பிடித்தவளாய் அமர்ந்திருக்கும் துர்காவின் நலுங்கிய தோற்றம் ஏனோ வாழ்க்கையில் முதன் முறை இதுவரை அவன் அறியா ஒரு உணர்வினைக் கொணர்ந்தது.

'உன்னை வைத்து உன் மாமன் மகனை என் வழிக்குக் கொண்டு வந்துடுறேன் துர்கா. அது வரை கொஞ்சம் பொறுமையா இரு..’

நினைத்தவனாய் அலைபேசியை அருகில் இருந்த இருக்கையில் எறிந்தவனின் சிந்தனை ஷிவ நந்தனை நோக்கிச் சென்றது.

‘நான் சொல்றதை மட்டும் கேட்டு நான் ஆட்டுவிக்கிற பொம்மையா நீ மாறனும்.. Once you hand your strings I become the narrator of your life Shiva. I’ll be the one who pulls the strings and makes you dance. I’m your writer. I am your fierce puppeteer. அதற்குப் பிறகு உன் துர்காவை நான் விட்டுடுறேன். அதுவரை வேறு வழியில்லை, அவள் என்கூடத் தான் இருக்கணும்..'

ஆங்காரமாய் வருணின் மனம் எண்ணியது.

ஆனால் அவன் புத்தி எங்கோ ஒரு மூளையில் அடித்துக் கூறிக் கொண்டே இருந்தது.

ஷிவ நந்தன் உன் வழிக்கு வருவான் என்று நினைக்கின்றாயா?

அக்கேள்வி தோன்றிய போதே ஆர்ய விக்னேஷிடம் தான் சில மாதங்களுக்கு முன் கூறியது மனக்கண்ணில் தோன்றியது.

‘’If the mother (a tigress) leaps/jumps eight feet forward, its cub would leap/jump sixteen feet ahead’

ஆக, நான் ஓரடி பாய்ந்தால் அவன் ஓராயிரம் அடி பாயும் அரிமா என்று நானே கூறியிருக்கின்றேனே.

அப்படி என்றால் அவன் ஒருவேளை என் வழிக்கு வரவில்லை என்றால்? இவளைத் திரும்ப அவள் வீட்டிற்கு அனுப்பாமல் என் கூடவே வைத்துக் கொள்ளப் போகிறேனா?

புத்தி கேட்ட கேள்வி ஏனோ வருணின் இதயத்திற்குள் ஒரு அதிர்வைக் கொணர்ந்தது.

காலையில் ஷிவ நந்தனுக்குப் பின்னால் மணப்பெண்ணாய் அஞ்சி நடுங்கி நின்றவளை முதல்முறை பார்த்த பொழுது தோன்றாத உணர்வு!

அவள் கதற கதற அவளைக் குழந்தையைப் போல் கரங்களில் ஏந்தியவனாய் கடத்திய போது இல்லாத உணர்வு!

ஹெலிகாப்டரில் அவள் தன்னை விட்டுவிடுமாறு அழுது அரற்றிய போது தோன்றாத ஒரு உணர்வு!

ஆனால் கானகத்தின் நடுவில் படுக்கையறையில் அவளைக் கட்டிலில் ஜாஃபர் கிடத்திய வேளையில், அவளை நின்றுத் திரும்பிப் பார்த்த பொழுது தோன்றிய அதே வித்தியாசமான உணர்வு!

மெத்த படித்த அந்த மேதாவிக்கு, டைக்கூன், ஜாம்பவான் என்று பெயரெடுத்திருந்த அந்த இளம் தொழிலதிபனுக்கு அக்கணம் என்னவிதமான உணர்வு அது என்று தெரியவில்லை.

ஏன்?

தெரிய வரும் பொழுது?

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..

References:
Gadchiroli: Gadchiroli is a city and a municipal council in Gadchiroli district in the state of Maharashtra


https://www.hindustantimes.com/india-news/3-killed-in-tiger-attack-in-gadchiroli-in-last-two-weeks-officials-101705751268540.html

Why are some helicopters not on flight radar?
Not all helicopters are equipped with transponders, which are devices that transmit information about the aircraft's location, altitude, and speed to air traffic control and other aircraft. Without a transponder, the helicopter's flight cannot be tracked by flight radar or other tracking systems.
Some helicopters may have their transponders turned off or set to a mode that does not transmit information. This is often done for security or operational reasons.


Rising tiger population is said to aggravate human-tiger conflict in Gadchiroli:​

https://india.mongabay.com/2023/05/rising-tiger-population-is-said-to-aggravate-human-tiger-conflict-in-chandrapur-gadchiroli/
 
Last edited:

Wasee

New member
Sitara oda marriage aa stop pannitaana?

Varun ku durga mela love varutha?

Durga ithukku sammathikkanumae..
 

saru

Member
Deii Varun ha ha nee nenaipadu sari
Siv un vazhiki varave atan
Ana nee sikkita
Avan vazhiku varuvanu thonudu pakalam
Inda jabor sari ila konjam kavanicha nalla irukum
 

Selvi

Member
Maam, I love your writing. You do a lot of research and share the knowledge with us. Thanks, maam.
 

Lucky Chittu

New member
Shiva ematha pattalum Varun oda paarvai Durga mela ninaikkum bothu happy and at the same time Shiva ku sithara mela concern varum nu namburen. Sithara ku ivunga rendu peroda game la allada porathu avalum durgavum theliva purinchiduchu. Waiting for the next epi mam. Shiva Durga kandupidippana illa time eduthu Varun na virumbina aprom parpaananu eagerly waiting mam.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top