JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakkalin Vettai - Episode 20

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 20

When I cannot look at your face

I look at your feet.

Your feet of arched bone,

your hard little feet.

I know that they support you,

and that your sweet weight

rises upon them.


I love your feet

only because they walked

upon the earth and upon

the wind and upon the waters,

until they found me.

- Pablo Neruda [1914 - 1973]

*****************************************

வருணின் மூளை முழுவதையும் ஏன் சசிதரன் துர்காவை காட்டுக்குள் தூக்கி வந்தான் என்ற கேள்வி மட்டுமே ஆக்கிரமித்து இருக்க, அவனது கண்கள் என்னவோ துர்காவின் இரத்தத்தில் தோய்ந்திருக்கும் பாதங்களையே வெறித்துக் கொண்டிருந்தன.

அவனது நினைவு இங்கு இல்லை என்பதை உணர்ந்தவளாய் மெல்ல அவனது மடியில் இருந்து பாதங்களை அகற்ற, அவனுமே ஒன்றும் சொல்லாமல் மீண்டும் ஜன்னலின் வழியாய் தொலைந்து கொண்டிருக்கும் மரங்களின் மீது பார்வையைச் செலுத்த ஆரம்பித்தான்.

'ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருந்து வந்தவன் திடீரென்று மனம் மாறக் காரணம் என்ன?'

இக்கேள்வியிலேயே மனம் உழன்று கொண்டிருக்க, இதனில் கடந்த சில நாட்களுக்கு முன் அவனது குழந்தையின் நலமின்மை காரணமாக அவனைத் தன்னுடன் மும்பைக்கு அழைத்துச் சென்று பின் கூட்டி வந்ததும் வருணின் சந்தேகத்தீயிற்கு எண்ணெய் வார்த்துக் கொண்டிருந்தது.

வருணது உள்ளம் மட்டுமல்ல ஜாஃபரின் எண்ணங்களும் சசிதரனையே சுற்றிக் கொண்டிருக்க, ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குடிலை அடைந்தனர்.

அதற்குள் கானகத்திற்குள் துர்காவைத் தேடச் சென்ற அடியாட்களும் கூட்டாளிகளுடன் திரும்பி வர ஆரம்பித்திருந்ததில், வருணுடன் கூட அமர்ந்திருக்கும் துர்காவைக் கண்டதும் அவர்களுக்கும் பெருத்த நிம்மதித் தோன்றியது.

காரைவிட்டு இறங்கிய வருண் ஒரு முறை அவர்கள் அனைவரையும் ஊடுருவும் பார்வைப் பார்த்தவன் தன்னைத் தொடர்ந்து இறங்கிய ஜாஃபரிடம் குனிந்து எதுவோ இரகசியமாய்க் கூற, அவர்கள் இருவரும் என்ன பேசுவார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டவளாக மெதுவாகக் காரில் இருந்து இறங்க எத்தனித்தாள் துர்கா.

ஆனால் பாதங்கள் முழுவதிலும் முட்கள் குதறிக் கிழித்திருந்ததன் விளைவால் பெரும் வலி ஏற்பட, தடுமாறியவளை சட்டென்று பற்றினான் வருண்.

"நான் பார்த்துக்கிறேன் சார். நீங்க துர்காவைப் பாருங்க.."

கூறிய ஜாஃபர் அங்கிருந்து அகல, இரு கரங்களாலும் துர்காவைத் தூக்கிய வருணின் செய்கையில் திகைத்தவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்க்கும் தைரியமற்று, "நா.. நா.. நானே நடந்து வரேன்." என்றாள்.

"அதான் பார்த்தேனே நீ நடக்கிறதை.."

"இல்லை, பரவாயில்.." என்று மறுக்க முனைந்தவள் அவன் குனிந்துத் தன்னைப் பார்த்த பார்வையின் இறுக்கத்தைத் தாளாது வாயை மூடிக்கொண்டாள்.

அவளை ஏந்தியவாறே குடிலிற்குள் நுழைந்தவன் படுக்கையில் கிடத்தியதும் அவளின் பாதங்கள் அருகில் அமர்ந்தான்.

அடுத்து அவன் என்ன செய்யப் போகின்றான் என்பதை உணர்ந்தவளாய் எழுந்து அமர்ந்தவள், "எனக்கு ஒண்ணும் இல்லை, நான் பார்த்துக்கிறேன்." எனவும் அவளது வார்த்தைகளைக் காதில் கூட வாங்காதவனாய் அவளின் பாதங்கள் இரண்டையும் எடுத்து மீண்டும் தன் மடியில் வைத்துக் கொண்டான்.

'ஐயோ! திரும்பவுமா?'

ஆணவனின் பிடியில் பெரும் சலனத்தில் ஆழ்ந்துப் போனாள் பேதையவள்.

"ஆசிஃப்.."

உரக்கக் கத்திய அவனின் கூக்குரலுக்கு ஆசிஃப் என்பவன் ஓடி வந்தான்.

"சார்.."

"ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துட்டு வா. அதோட கொஞ்சம் தண்ணியும், சோப்பும், ஒரு துணியும் கொண்டு வா.."

'கடவுளே! இவர் என் காயத்துக்கு மருந்திடப் போறாரா?'

ஏற்கனவே ஆசிஃபின் முன் அவனது எஜமானனின் மடியில் கால்களை வைத்திருப்பதில் தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருப்பவள், இப்பொழுது அவனே தனக்கு வைத்தியம் செய்யப் போகின்றான் என்பதைப் புரிந்துக் கொண்டதில் கூச்சத்தில் சுருண்டவளாய் கால்களை அவனிடம் இருந்து எடுத்துக்கொள்ள விழைந்தாள்.

ஆனால் அவன் விட்டால் தானே??

அவளை நிதானமாகத் திரும்பிப் பார்த்து முறைத்த வருண்,

"நான் ஒண்ணும் டாக்டர் இல்லை. ஸோ, உனக்கு முழு ட்ரீட்மெண்டும் என்னால் கொடுக்க முடியாது. இங்க வேற டாக்டர்ஸையும் என்னால் உடனடியா வரவழைக்க முடியாது. பட், அட் லீஸ்ட் ஃபர்ஸ்ட் எய்டாவது செய்தாகணும். அதனால் கொஞ்சம் அமைதியா இருக்கியா?" என்று கடும் குரலில் அதட்டியவன் ஆசிஃபின் வரவை எதிர்நோக்கி வாயிலின் பக்கம் திரும்பினான்.

அதற்குள் முதலுதவிப் பெட்டியை தூக்கி வந்த ஆசிஃப் அதனைக் கட்டிலுக்கு அருகில் ஒரு மேஜையை இழுத்துப் போட்டு அதன் மேல் வைக்க, அவனை வெளியே போகுமாறு தலையசைத்துச் சைகை செய்து பணித்தான் வருண்.

வெளியேறிய ஆசிஃப் கதவை சாத்திவிட்டு செல்ல, மடிமேல் கிடந்த பாதங்களைச் சரியாகப் பார்க்க எண்ணி கணுக்கால் வரை மூடியிருந்த புடவையை விலக்க, பதறித் துடித்துப் போனாள்.

அவளின் பதைபதைப்பில், ஏற்கனவே சசிதரனின் மீது இருந்த கொலை வெறியையும், ஒருவேளை இவளுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ற அச்சத்தையும் இணைத்து ஏறியிருந்த ஆத்திரம் உச்சாணியைத் தொட்டது.

"ஏய், நான் என்ன உன்னை ரேப்பா பண்ணப் போறேன்."

கடத்திய நாளில் இருந்து வருணின் முகத்தில் ஒரு இறுக்கத்தையும் கடினத்தையும் கண்டிருந்த துர்காவிற்கு, அவ்வப்பொழுது எகிறும் அவனது கோபம் பயத்தை அளிக்கும்.

அதனிலும் அவன் வரும் ஹெலிகாப்டர் சத்தத்தைக் கேட்டதுமே செய்து கொண்டிருக்கும் வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டுக் குடில்களுக்கு முன் கூடி நிற்கும், ஜாஃபர் உட்பட, அடியாட்கள் அனைவரின் பயத்திலும் பணிவிலும் தெரியும் வருணது ஆளுமை அவளது மன தைரியத்தையும் குலைத்துப் போடும்.

ஆயினும் அவன் ஒரு நாளும் எவரிடமும் வார்த்தைகளைத் தவறவிட்டதில்லை.

வெறும் கண்ணசைவாலும் ஓரிரு வார்த்தைகளாலும் அவர்களை அடிபணியச் செய்து தான் ஒரு கைத்தேர்ந்த தொழிலதிபன் என்று பல முறை நிருபித்திருக்கின்றான்.

ஆனால் இன்று அவன் கூறிய சொற்கள் அவளின் சுவாசத்தைக் கூடத் தடை செய்வது போல் இருந்தது.

உறுமலாய் ஒலித்த அவனது குரலில் அரண்டடித்து நிமிர்ந்துப் பார்த்தவளுக்குப் பழுக்கக்காய்ச்சிய இரும்பாய்ச் சிவந்திருந்த அவனது கண்களின் வீரியத்தில் வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்கியது.

'நான் என்ன செய்தேன்? என்னைத் தூக்கிட்டுப் போனவன் அவன். என் மேல் ஏன் இவ்வளவு கோபம்?'

மனம் சடசடவென எண்ண, கணுக்காலில் புரண்ட புடவையை இறுக்கிப் பிடித்திருந்த கைகள் அதன் போக்கில் மெதுவாக விலக, புடவையைச் சற்றே உயர்த்தியவனின் நெஞ்சமோ அதனைவிட மென்மேலும் திகைப்பில் ஆழ்ந்தது.

கோதுமை நிறத்து மேனிக் கொண்டவளின் கால்களின் தோல் பகுதியே தெரியாதளவிற்குக் காயங்களுக்குள் மறைத்திருக்க, அதனில் அவள் அணிந்திருந்த கொலுசுகளும் இணைந்து கிழித்திருப்பதில் காயங்களில் இன்னமும் முத்து முத்தாக உறைந்திருந்தன இரத்தத்திட்டுகள்.

கண்கள் இடுங்க நெஞ்சமே கிழிந்துவிடும் அளவிற்கு இழுத்து மூச்சினைவிட்டவன், கொலுசுகளைச் சற்றே தள்ளிவிட்டு, அவளின் காயங்களைத் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய, அதுவரை தெரியாத வலி அவனது மெல்லிய தொடுகையில் தெரிந்தது.

"ஸ்ஸ்.." என்றவளின் முகத்தைக் கூட நிமிர்ந்து நோக்காது துணிக் கொண்டு துடைத்தவனாய் முதலுதவிப் பெட்டியில் இருந்து மருந்தினை எடுத்து பூசத் துவங்க, வெளியில் அமைதியாகத் தோன்றிக் கொண்டிருக்கும் அவனின் மனதில் மெல்லமாய் ஒரு பூகம்பம் வெடித்துக் கொண்டிருந்தது.

முழங்கை வரை மடித்துவிட்டிருந்த சட்டைக்குக் கீழ் நரம்புகள் புடைத்துத் திமிறின.

இறுகிப் போயிருக்கும் அவனது தாடை உணர்த்தியது அவன் எவ்வளவு அழுத்தமாய்ப் பற்களைக் கடித்துக் கொண்டிருக்கின்றான் என்று.

அவனது தோற்றத்தைக் கண்டவளுக்கு அவனது ஆங்காரம் ஒவ்வொரு நரம்பிலும் தசைகளிலும் விரவியிருக்கின்றதோ என்பது போல் தோன்றியது.

வலியின் வேதனையில் அவளின் கண்களில் ஏற்கனவே நீர் நிரம்பி இருக்க, ஏனோ புத்தம் புதியதாக அவனது கோபம் வேறு அவளை என்னவோ செய்தது.

ஏற்கனவே வலியில் துடித்திருப்பவளை இன்னமும் வேதனைக்கு உள்ளாக்கக்கூடாது என்பது போல், மயிலிறகைக் கொண்டு நீவும் விதத்தில் மருந்தினை இட்டுக் கொண்டிருந்தவனின் கையைப் பற்ற எண்ணியவளாய் தன் கைகளை உயர்த்தியவள் முதலில் தயங்கினாள்.

ஆயினும் அதற்கு மேலும் சும்மா இருக்க அவளால் முடியவில்லை.

மெதுவாக அவனது கரத்தைப் பிடித்தவள் சன்னமான குரலில், "இன்னும் என் மேல கோபமா?" என்றாள்.

ஆனால் அவன் நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

"என்னங்க.."

"****"

"அப்போ நான் சொன்னதை நீங்க நம்பலை, இல்ல?"

தன்னைப் பற்றியிருந்தவளின் மெல்லிய தளிர் கரத்தினைப் பார்த்தவன் அதனை இலேசாக உதறிவிட்டு மீண்டும் மருந்தினைத் தடவத் துவங்க, திரும்பவும் அவனது கையைப் பிடித்தாள்.

ஆனால் முன்பை விட இறுக்கமாக!

"நீங்க ஒண்ணும் எனக்கு மருந்துப் போட வேண்டாம். குடுங்க நானே போட்டுக்கிறேன். நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு இல்லை."

ஏனோ அந்த வாக்கியம் அவனது ஆத்திரத்திற்கு மேலும் எரியூட்டியது போல் இருந்ததில் சடாரென்று நிமிர்ந்தவன்,

"சின்னப் பொண்ணு இல்லைன்னு சொன்னா மட்டும் போதாது, அது மாதிரி நடந்துக்கவும் தெரிஞ்சிருக்கணும்." என்றான் அடிக்குரலில் சீறி.

அவனது பார்வையில் தெறித்த வெப்பக்கதிர் சொல்லாமல் சொல்லியது அவனது இதயத்திற்குள் ஏதோ ஒரு வெறி பெருங்கங்காய் கனன்று கொண்டிருக்கிறது என்று!

"நா.. நா.. நான் என்ன மாதிரி ந.. ந.. நடந்துக்கலை.."

வார்த்தைகள் வெளியில் வருவேனா என்றன.

தன் கையை நடுங்கும் விரல்களுடன் இறுக்கப்பற்றி இருப்பவளின் கரத்தைக் குனிந்துப் பார்த்தவன் வலுக்கட்டாயமாகத் தனது சினத்தைத் தனித்துக் கொண்டு,

"உன்னை ஒருத்தன் தூக்குறாங்கறதுக் கூடத் தெரியாமலா இருப்ப? அப்படிச் சாவதானமா ஒரு பொண்ணு இருப்பாளா? அப்படி என்ன தூக்கம்?" என்றான் தணிந்தக் குரலில்.

"நீங்க கூடத் தான் என்னைத் தூக்கிட்டு வந்தீங்க. அதுவும் என் கல்யாண மணமேடையில் இருந்து. அப்போ நான் என்ன தூங்கிட்டா இருந்தேன்? முழிச்சிட்டு இருக்கும் போது என்னைத் தூக்கிட்டுப் போன உங்கக்கிட்ட இருந்தே என்னால் தப்பிக்க முடியலையே? அதுக்கு என்ன பண்றது? தினமும் நம்மை யாராவது தூக்கிட்டுப் போவாங்கன்னு எதிர்பார்த்து எச்சரிக்கையாவே ஒரு பொண்ணால இருக்க முடியுமா?"

வெடுக்கென்று வந்தது பதில்.

அவளது வார்த்தைகள் சரியாக அவனது இதயத்தில் ஈட்டியைப் போன்று பாய்ந்தது, அதனில் உதிரம் வழிந்தது.

ஆனாலும் அதன் அர்த்தத்தைப் புரிந்த மாதிரிக் காட்டிக்கொள்ள அந்தப் புத்திசாலி தொழிலதிபனுக்கு அக்கணம் மனம் வரவில்லை.

"நான் கேள்வி கேட்கும் போது நா.. நா.. நான்னு வாய் திக்கும், அதே நீ என்னைக் கேள்விக் கேட்கும் போதும் மட்டும் தெளிவா எல்லா வார்த்தையும் வரும்.."

"ஆனாலும் நீங்க பதில் சொல்லலையே.."

அவளது வார்த்தைகளின் நிதர்சனம் அவனது திமிரையும் அகம்பாவத்தையும் அடித்து வீழ்த்தியது.

ஆனால் ஒப்புக்கொண்டால் அவன் வருண் தேஸாய் அல்லவே!

"ஏய், இப்போ மருந்துப் போடவா வேண்டாமாடி? ஏற்கனவே நான் பயங்கற டென்ஷனில் இருக்கேன், இதுல எரிச்சலைக் கிளப்பிக்கிட்டு? மூணு மணி நேரம் ஆளையே காணோமேன்னு பதறிப் போய்த் தேடி அலைஞ்சிட்டு இருந்திருக்கேன். இவ்வளவு பேர் காடு முழுக்கத் தேடுறோம், யார் கண்ணிலும் படலை. உயிரோட இருக்காளா செத்துப் போயிட்டாளான்னு தெரியாமல் நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும். இவ்வளவு பேர் தேடியும் ஒருத்தர் கண்ணிலும் படாதவச் சொல்லி வைச்ச மாதிரி என் கண்ணில் பட்ட. அப்பத்தான் போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்துச்சு. இதுல பெரிய இவளாட்டம் கேள்விக் கேட்டுட்டு இருக்கா."

அதுவரை அவனது கோபத்தில் தடதடத்த பெண்ணவளின் இதயம் அவனின் உரிமையான பேச்சிலும், தன்னைக் காணாது துடித்திருக்கின்றான் என்று அவன் வாயாலேயே வெளிப்பட்ட உண்மையிலும், அவளே எதிர்பாராத வகையில் சீரானது போல் தோன்றியது.

அக்கணம் வரை திணறிய சுவாசமும் சரியானது போல் தெரிந்தது.

தீயவர்களைக் கணப்பொழுதில் நல்லவர்களாக மாற்றக் கூடிய வல்லமை அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் உண்டு.

அவை அவர்களின் மேல் ஒரு நம்பிக்கையைக் கொணரும்.

அவ்வாறு புதிதாக உருவாகும் நம்பிக்கை நமக்கு ஒரு நிம்மதியையும் வரவழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது போன்ற ஒரு உணர்வில் தான் இருந்தாள் துர்கா.

"சரி போடுங்க."

மீண்டும் மருந்தினை இடத் துவங்கியவன் கணங்கள் கழித்து என்ன நினைத்தானோ திடீரென்று, "துர்கா.. அவன்.." என்று எதுவோ கூற வந்தவன் கூற முடியாது நிறுத்தினான்.

அவனது முகத்தை ஏறிட்டு நோக்கியவள் இன்னமும் அவனது கண்கள் தனது காயங்களின் மீதே இருப்பதைப் பார்த்தவாறே, "ம்ம். சொல்லுங்க.." என்று ஊக்குவித்தாள்.

"சசி.. உன்கிட்ட.."

இப்பவும் ஏனோ வார்த்தைகளைச் சரிவரக் கோர்க்க முடியாமல் தடுமாறினான்.

அவனது கேள்விப் புரிந்து மெல்லிய நகையை உதடுகளுக்குக் கொணர்ந்தவள்,

"என்னை அவன் தூக்கிட்டு தான் போனான், அதுவும் என் கை, கால் எல்லாத்தையும் கயிறு போட்டு கட்டிட்டு. ஆனாலும் அவன்கிட்ட இருந்து நான் தப்பிக்கலையா? அதுல இருந்தே தெரிய வேண்டாமா? கற்புக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சா பொண்ணுங்க எந்த எல்லைக்கும் போய் அவங்களைக் காப்பாத்திக்குவாங்கன்னு.. ஒரு வேளை அப்படிப் பொண்ணுங்களால் அவங்க மானத்தைக் காப்பாத்திக்க முடியலைன்னா தங்களுக்கு ஆபத்து விளைவிக்கிறவனுடைய உயிரை எடுக்கக்கூடத் தயங்க மாட்டாங்க.. அதுவும் முடியலைன்னா நிச்சயம் அவங்க உயிரையும் மாய்ச்சுக்குவாங்கன்னு. நீங்க என்னை இங்க தூக்கிட்டு வந்தீங்க, ஆனால் என்னிடம் எப்பவுமே தப்பா நடந்துக்க முயற்சி பண்ணலை. அதே போல் தான் மற்றவர்களும். சசிதரன் என்னைத் தூக்கிட்டு போகும் வரை எனக்கு இங்க இருந்தவங்களால் எந்தப் பிரச்சனைகளும் வந்ததில்லை, அப்படி வந்திருந்தால் நான் நிச்சயமா உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்." என்றதில் ஆடவனுக்குப் புரிந்து போனது.

இவள் தான் படித்த மஹாபாராத குருக்ஷேத்திரத்தில் வரும் திரௌபதியை ஒத்தவள் என்று!

அவள் அன்று தன்னைக் காப்பாற்ற கிருஷ்ணனை அழைத்தாள்! அவரும் அவள் கூக்குரலுக்குச் செவிமடுத்து அவளைக் காப்பாற்றினார்.

ஒரு வேளை கிருஷ்ணன் வரவில்லை என்றால், தன்னைத் துகிலுரித்த துச்சாதனனின் முன்னும், அச்சபையில் வீற்றிருந்த அனைவரின் முன்னும் நிர்வாணமாக நின்றிருப்பாளா அந்தத் திரௌபதி?

ஒன்று மனிதாபமின்றித் தன்னைப் பார்த்திருப்பவர்கள் அனைவரையும் அழித்திருப்பாளோ? அல்லது தன்னையே எரித்துக் கொண்டு மாண்டிருப்பாளோ!

அவளுக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?

என்னவோ உருகி கரைந்தது அந்தக் கல்நெஞ்சக்காரனின் இதயத்திலும்!

அதுவரை இருந்து வந்த கடுமை மறைந்து சற்றே சாந்தியடைந்தவனாய் பாதங்களுக்கு மருந்திட்டு முடித்தவன், "வேற எங்கெல்லாம் காயம் பட்டிருக்கோ அங்க நீயே இந்த மருந்தைப் போட்டுக்க. முடிஞ்சதும் கூப்பிடு?" என்றவனாய் எழுந்தான்.

மற்ற இடத்திலேயும் இவரே மருந்துப் போட்டால் என்னவாம் என்ற கேள்வித் தோன்றியதில் கன்னியவளின் மனம் பதைபதைத்துப் போனது.

‘சே, இது என்ன வெட்கங்கெட்ட தனமாய் ஒரு ஆசை!’

மனதிற்குள் குற்றவுணர்வில் துடித்தவள் அவனிடம் மருந்தினை வாங்க கையை நீட்ட, அவளது கரங்களிலும் இரத்தத் துளிகளைக் கண்டு தானே மருந்திட அவன் முனைந்தான்.

"இல்லை, நானே போட்டுக்கிறேன்."

ஆறியிருந்த கோபம் மீண்டும் முளைக்கத் துவங்க, அவளின் கையை இழுத்து பற்றி உள்ளங்கைக்குள் மருந்தினைத் திணித்தவன் அறையை விட்டு வேகமாய் வெளியேற, இப்பொழுது ஆசுவாசமூச்சுவிடுவது பெண்ணவளின் முறையாயிற்று.

************************************************************

Ever has it been that love knows not its own depth until the hour of separation.

- Khalil Gibran [1883-1931]

கட்சிரோலி காட்டின் மறு பக்கம்.

இரவைக் கடந்து கானகத்தில் ஆங்காங்கு விலகியிருக்கும் மரக் கொப்புகளுக்கு இடையிலும் இலை தழைகளுக்கு ஊடவும் ஒளியைப் பரப்பும் விதமாக உதயமாகிக் கொண்டிருந்தான் மஞ்சளும் சிகப்புமாய்க் கலந்த செங்கதிரோன்.

ஒரு மணித்துளி கூடக் கண் அயராது காவல்காத்து வந்தவனாய் சிறு குழந்தையெனத் தன் மார்பில் தஞ்சம் புகுந்துத் தூங்குபவளை மெள்ள எழுப்ப, அவனின் சில்லிட்ட கரம் தோளில் பட்டதுமே துள்ளி எழுந்தாள் சிதாரா.

"ம்ப்ச், இப்ப எதுக்கு இந்தப் பயம்?"

தணிந்த குரலில் கடிந்தவனாய் அவளைத் தன்னைவிட்டு விலக்கினான்.

அவனது முகம் நோக்கி அண்ணாந்துப் பார்த்தவள் எங்கு இருக்கின்றோம் என்று உணர்ந்ததுமே அவனது கரங்களை மீண்டும் பற்றிக் கொண்டவளாய்,

"இருக்கிறது காட்டுக்குள்ள. இதுல பாம்பும், ஓநாயுமா அலைஞ்சி திரியுதுங்க. இதுல திடீர்னு இப்படி உடம்பு மேல எதுவோ பட்டால் பயப்படாம என்ன செய்றதாம்?" என்றாள்.

“எதுவோ இல்லை. என் கை தான்..”

“அது தூக்கத்துல இருக்கிறவளுக்கு எப்படித் தெரியும்?”

"காலங்காத்தாலேயே ஆரம்பிச்சிடாத.."

கூறியவனாய் கணங்கள் சில சுற்றும் முற்றும் ஒரு முறைப் பார்த்தவாறே மரத்தைவிட்டு கீழே குதித்து இறங்க, மறுபக்கமாய் அவளும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்ததில் திடுமெனக் குதித்த அவனின் அதிரடியான செய்கையில் ஒரு கணம் பெண்ணவளின் மேனியும் திடுக்கிட்டது.

"ஏன் இப்படிக் குதிச்சு இறங்குறீங்க? மெதுவா இறங்கக் கூடாதா?"

"அப்படியே நூறு அடி உயர மரத்துல உட்கார்ந்திருக்கோம், மெதுவா இறங்குறதுக்கு?"

"ம்ம், ஏதாவது அடிகிடி பட்டுடுச்சுன்னா அப்புறம் எங்களை யார் பாதுகாக்கிறது? யாரு எங்களை இந்தக் காட்டைவிட்டு வெளியில் அழைச்சிட்டுப் போறது?"

"அதானே பார்த்தேன். எனக்கு அடிபடக் கூடாதுங்கிற ஆதங்கத்தில் கேட்குறியோன்னு நினைச்சேன்."

கூறியவனாய் அவள் இறங்குவதற்கு உதவ, மெள்ள ஒவ்வொரு கிளையாய் கால்களை வைத்தவாறே சிறிது இறங்கியதும் கீழே பார்க்க, அவளைப் பற்றுவதற்கு ஏதுவாய் கரங்களை உயர்த்தி நின்றான்.

"எப்படி இவ்வளவு பெரிய மரத்துல ஏறினேன்னே தெரியலையே? இதுல பெரிய நூறு அடி மரமான்னு கிண்டல் வேற?"

"அது திடீர்னு ஏதாவது மிருகங்கள் வந்து கடிச்சிடுச்சுன்னா என்ன பண்றதுங்கிற பயத்துல வேகமா ஏறிட்ட. அதான்."

“ஆனால் இறங்குறதுக்கும் பயமா இருக்கே..”

“அதுக்குக் காரணம் மரத்து மேல மிருகங்களோ பாம்போ எதுவும் இல்லை, அதான்.”

"ஏன்? இப்போ மட்டும் பாம்புங்க மரத்து மேல இருக்காதா? மிருகங்க மரத்து மேல ஏறாதுங்களா?"

"அதுங்க நைட் மட்டும் தான் வெளியே சுற்றும். பகல் நேரத்துல ரெஸ்ட் எடுக்கப் போயிடும்."

“ஆனால் பகல் நேரத்துலேயேயும் மிருகங்கள் வரும், அதான் உங்க துப்பாக்கியாட தோட்டாக்களை எல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்னு சொன்னீங்க.”

“அடியே! சரி, அப்படின்னா நீ இந்த மரத்து மேலேயே உட்கார்ந்திரு.. நான் போய் ஏதாவது உதவிக் கிடைக்குதான்னு பார்த்துட்டு பிறகு வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.”

“உங்களை..” என்று தொடங்கியவள் முடிக்காது முறைத்துக் கொண்டே இருக்க, அவளின் சுடிதாரின் கீழ் பாகத்தை அவன் பிடித்து இழுத்ததில் தடுமாறியவள் விழப் போக, அவளின் இடையை எட்டிப் பற்றியவன் கீழே இறக்கினான்.

“ஐயோ! ஏன் இப்படிப் பண்றீங்க?”

“விட்டால் நீ பேசிட்டே இருப்ப. அப்புறம் எப்படி இந்தக் காட்டை விட்டு போகுறது?”

“அதுக்காக இப்படியா முரட்டுத்தனமா இழுக்கிறது?”

“நீ இன்னும் என் முரட்டுத்தனத்தை முழுசா பார்க்கலை..”

“ம்ப்ச். இது வேற..”

அச்சூழ்நிலையிலும் அவனுடன் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டிருந்தவள் அப்பொழுதும் தன்னிலை உணராது அச்சத்தில் நான்கு பக்கங்ளையும் பார்த்துக் கொண்டிருக்க, அவளின் மேல் போர்த்தினான், கீழே கிடந்த அவனது சட்டையைக் கொண்டு.

அந்நேரம் தான் இருந்த நிலை புரிய, "கடவுளே!" என்றவளாய் தலைக் கவிழ்ந்தவளின் அசந்தர்ப்பமான நிலை ஷிவாவிற்கும் புரிந்தது.

"ஒரு நைட் முழுசும் இப்படித்தானே இருந்த. பிறகு ஏன் இந்த வெட்கம்?”

“அதுக்காக வெட்கமே படக் கூடாதுன்னு சொல்றீங்களா?”

“எப்போ வெட்கப்படணுமோ அப்போ படு..”

குறுஞ்சிரிப்புடன் கூறுபவனை ஏறிட்டு நோக்கியவளுக்கு அவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“ம்ப்ச்.. நானே பகல் நேரத்துல கூட இப்படி எல்லாத்தையும் மறந்துட்டு நிற்கிறேனேன்னு சங்கடப்பட்டுட்டு இருக்கேன்.”

“சிதாரா, நான் நேத்து நைட்டே சொன்னேன், நீ இருக்கிற சூழலில் வேற எந்தப் பொண்ணு இருந்தாலும் இவ்வளவு துணிச்சலுடன் இருந்திருப்பாளாங்கிறது சந்தேகம் தான். பின்ன என்ன?"

"நான் நானாவே இல்லையோன்னு தோணுது.. அதான்.."

முடிக்க முடியாது தவிக்க,

"நாம முதலில் இங்க இருந்து வெளியேறணும், அது தான் இப்போ முக்கியம், மற்றதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம்.. வா.." என்று கூறியவனாய் விமானியும் கீழே இறங்குவதற்கு உதவி செய்யத் துவங்கினான் ஷிவா.

ஒரு வழியாய் அனைவரும் நடக்கத் துவங்க, "நைட் முழுசும் நம்மைத் தேடி ஏன் யாருமே வரலை?" என்றாள்.

அதே கேள்வி தான் ஆண்களுக்கும். ஆனால் பதில் தான் இல்லை.

"இது ரொம்பப் பெரிய காடு மாதிரி இருக்கு.. நாம் எங்க விழுந்தோம், எவ்வளவு தூரம் நடந்தோம், இப்போ எங்க இருக்கோம்னு எதுவுமே புரியலையே."

தனக்குத்தானே புலம்புவது போல் அவள் சத்தமாகப் பேச, ஷிவாவிற்கும் அதே சந்தேகம் தான் என்பதால்,

"நாம் வந்த பாதையை ஓரளவுக்கு நியாபகத்துக்குக் கொண்டு வர முடியுமான்னு பார்க்கணும்.. அதே போல் ஏதாவது trail [செல்தடம்] இருக்கான்னுத் தேடணும்." என்றவனைத் தொடர்ந்து,

"ஜெட் வேற ரொம்ப உருக்குலைந்துப் போயிடுச்சு. அதில் இருந்து எந்தப் பொருளையும் எடுக்க இயலாதளவிற்கு எல்லாமே நொறுங்கிடுச்சு." என்றார் விமானியும் கவலையுடன்.

‘காட்டு விலங்குகளுக்குப் பகல் என்றால் என்ன, இரவு என்றால் என்ன? எப்பொழுது அவற்றின் பார்வையில் நாம் படுகின்றமோ அப்பொழுதே நமக்கு ஆபத்து தானே. அதுவும் ஒரு வேளை அவை மிகுந்த பசியுடன் இருந்துவிட்டால், தொலைந்தோம்.’

எண்ணமிட்டவாறே விமானிக்கும் ஷிவாவிற்கும் இடையில் நடந்தவளாய் எச்சரிக்கையுடன் பக்கம் பார்த்து நடக்க, அவளின் அச்சம் புரிந்ததற்கு அடையாளமாக அவளை நெருங்கி நடந்தான் ஷிவா.

"ஓடும் நீர்நிலை மாதிரி ஏதாவது சத்தம் கேட்குதான்னு பாருங்க. வேற ஏதாவது பழக்கமான ஒலிகள் கேட்டாலும் கேட்கலாம். ஒரு வேளை மனிதர்கள் நடந்த பாதையோ அல்லது ஆறு, ஏரி மாதிரியான நீர்நிலைகள் இருந்தாலோ அதை அப்படியே ஃபாலோ செய்துட்டுப் போனால் காட்டில் இருந்து வெளியேறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அதே போல் திரும்பவும் ஒரே இடத்துக்கு வாரமல் இருக்க, ஏதாவது அடையாளம் வைத்துவிட்டே போகலாம். சரியா இரண்டு மணி நேரங்கள் கணக்கிட்டு அப்பவும் காட்டுக்குள்ளேயே போறது மாதிரி தெரிஞ்சால் நாம் தவறான பாதையில் போயிட்டு இருக்கோம்னு அர்த்தம், அப்போ திரும்பவும் இதே புள்ளிக்கு நாம திரும்பித்தான் ஆகணும். அது கஷ்டம் தான், ஆனாலும் வேற வழியில்லை".

ஆதவனின் ஒளிப்பட்டுப் புள்ளி புள்ளியாய் அள்ளித்தெளிக்கும் கதிர்களின் துணையோடு ஷிவா விடுவிடுவென்று நடக்க, அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவளாய் நடந்தவளின் பாதங்களில் சிக்கிய கொடிகளும் அடி மரத்தண்டுகளும் அவளைத் தடுமாறச் செய்தன.

"பார்த்து வா சிதாரா."

"நீங்க இப்படி ஒலிம்பிக்ஸ்ல கலந்துக்கிட்ட மாதிரி வேகமா போனால் நான் என்ன பண்றது? உங்க வேகத்துக்கு ஈடு கொடுக்க என்னால் முடியலை."

திரும்பவும் தடுமாறியவாறே கூறவும் அவளை நோக்கித் திரும்பிப் பார்த்தவாறே நின்றவன் அவள் நெருங்கியதும் அவளது கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டான்.

என்னத்தான் மரங்களின் மேல் இருந்து சிலீரென்று பனித்துளிகள் மேனியில் விழுந்துச் சிதறியதில் சிலிர்த்தாலும், பறவைகளின் இடைவிடா சத்தமும், காட்டுப்பூக்களின் விசித்திரமான நறுமணமும் மனதிற்குத் தெம்பூட்டினாலும், காட்டின் அமானுஷ்யம் என்னை இன்னமும் அச்சுறுத்துகின்றது என்பது போல் அவனது விரல்களைத் தன் விரல்களால் பின்னி பிணைந்துக் கொண்டாள் பாவையவள்.

ஏனோ அவளின் செய்கை ஷிவாவிற்குப் புன்னகையை வரவழைத்தது.

"நான் கராத்தே-ல ப்ளாக் பெல்ட் வாங்கியிருந்தாலும், பசியுடன் இருக்கும் மிருகங்களுடன் எல்லாம் என்னால் போராடி ஜெயிக்க முடியாது. ஒரு வேளை உன்னை அம்போன்னு விட்டுட்டு ஓடினாலும் ஓடிடுவேன். அதனால் இப்படிக் கையை இறுக்கப் பற்றி ஒண்ணும் பிரயோஜனமில்லை."

"அதாவது நீங்க அப்படிச் செஞ்சாலும் செய்வீங்கன்னு சந்தேகப்பட்டுத் தான் நான் இப்படி உங்க கையை இறுக்கிப் பிடிச்சிக்கிறேன்னு சொல்ல வர்றீங்க, அப்படித்தானே?"

"வாவ், ப்ரில்லியண்ட்.."

“அப்படின்னா அந்த மிச்ச தோட்டாக்களை வீட்டுக்கு பத்திரமா எடுத்துட்டுப் போயே தீருவேன்னு முடிவே பண்ணிட்டீங்க..”

“யெஸ். எப்படி இவ்வளவு கரெக்டா சொல்ற?”

"உங்களைப் பார்த்ததில் இருந்தே உங்களை நல்லாப் படிக்க ஆரம்பிச்சிட்டேனே, அதான்.."

முறுவலுடன் கூறியவளுக்குத் திடீரென்று கேட்ட பறவைகளின் சப்தமும், இறக்கைகளின் ஓசையும் இதயத்தைப் பிடுங்கிக்கொண்டு போனது போல் பீதியில் தூக்கிவாரிப் போட செய்தது.

"ஐயோ! ஏன் இப்படித் திடீர்னு பறவைகள் சத்தம் போடுது. நேற்று மாதிரி ஓநாய்கள் வந்துடுச்சா?"

"இது Frigatebird வகையைச் சார்ந்த பறவைகள்.. Lesser Frigatebird -ன்னு சொல்வாங்க."

"அப்படின்னா?"

"இந்தப் பறவைகள் ஏதாவது நீர் நிலைகள் இருக்கிற இடத்துக்கு அருகில் தான் வசிக்கும்.."

"அப்ப இங்க பக்கத்தில் ஏதாவது river இருக்குமா?"

"யெஸ், வாய்ப்பிருக்கு.."

கூறியவனாய் நடையில் வேகத்தை அதிகப்படுத்தியவன் அவளின் கரத்தை இழுத்தவாறே நடக்க,

"ஏற்கனவே நீங்க நடக்கிற வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம தட்டுத்தடுமாறி நடந்துட்டு வரேன், இதுல இன்னும் வேகமா நடந்தா நான் என்ன பண்றது?" என்று சலித்துக் கொண்டாள்.

அவளின் கஷ்டம் புரிந்து வேகத்தைக் குறைத்தவனின் மனம் முழுவதும் அருகில் ஏதாவது ஆறோ அல்லது ஏரியோ இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் மூழ்கியது.

ஃபிரிகேட் பறவைகளின் தடத்தைப் பின்பற்றி மூவரும் நடக்க, ஏறக்குறைய அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அலை அலையாய் அசைந்து இசைக்கும் ஆற்று நீர் பளீரென்று தோன்றி மூவரின் மனங்களிலும் இதமாய்க் குளிர்பரப்பச் செய்தது.

"அங்க பாருங்க.."

கத்தியவளாய் ஷிவாவின் கரத்தை உதறிவிட்டு ஆற்றை நோக்கி ஓட, அவளின் மகிழ்ச்சியைக் கண்டு தானும் புன்னகைத்தவனாக நடக்க, காற்றைத் தோற்கடித்துவிடும் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவளின் கால்கள் சரக்கென்று நின்றன, ஆற்றின் ஒரு பக்கத்தில் நின்று நீரைப் பருகிக் கொண்டிருந்த யானைக் கூட்டத்தைப் பார்த்து.

"ஐயோ! எலிஃபெண்ட்ஸ்!!"

அலறியவளாய் அசையாது நின்றுவிட, அதற்குள் அவளை நெருங்கியவன்,

"தண்ணீர் குடிக்க வந்திருக்குங்க. நாம் அதை எதுவும் செய்யாமல் இருந்தால் அதுங்களும் நம்மை ஒண்ணும் செய்யாது.. வா.." என்றவனாய் ஆற்றை நெருங்கினான்.

"ஷிவா, அங்க எங்க போறீங்க?"

"நான் தண்ணீர் குடிச்சு ஏறக்குறைய ஆறு மணி நேரம் ஆச்சும்மா.."

கூறியவனாய் குளிர்ந்த நீரில் கைகளை அலம்பிப் பின் குவித்துத் தண்ணீரை அள்ளிக் குடிக்க, தாகத்தால் வரண்டு போயிருந்த பெண்ணவளின் தொண்டையும் ஆற்றைக் கண்டதும் நீருக்கு ஏங்கியது.

யானைகளைக் கண்டதில் ஏற்பட்ட அச்சத்தை மெள்ள விலக்கியவளாகத் துணிவை வரவழைத்துக் கொண்டவளாய் ஷிவாவின் அருகே அமர்ந்து அவளும் நீரைப் பருக,

"பைலட், இப்படியே இந்த ஆற்றை ஒட்டியே போனால் கண்டிப்பா ஏதாவது ஊர் வரும். அங்க போய் உதவிக் கேட்கலாம்.." என்றான்.

ஆமோதித்தவராய் விமானியும் தாகம் தணித்துக் கொள்ள, மீண்டும் ஷிவாவின் கரங்களைச் சிதாரா பற்றிக் கொள்ள, தண்ணீர் கொடுத்த தெம்பில் விரைவாக நடக்க ஆரம்பித்தவர்களை எதிர்கொண்டது ஒரு சிறு வாகனம்.

“Thank God..”

சிதாரா முனக, வாகனத்தை நெருங்கிய ஷிவா அதனைச் செலுத்தி வந்த மனிதனிடம் தங்களின் நிலையை எடுத்துக் கூறியவனாய் அருகில் இருக்கும் ஊரைப் பற்றி விசாரித்தான்.

அந்த மனிதனும் அவர்களுக்கு உதவ முன்வர, அவனின் உதவியோடு அடுத்தச் சில மணி நேரங்களில் கட்சிரோலி ஊரை அடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் தேவையான மருத்துவமும் செய்து கொண்ட பிறகு அம்மாவட்டத்தின் காவல்துறை தலைமையகத்தைச் சென்று சேர்ந்தனர்.

தாங்கள் வந்த காரியத்தைப் பற்றியும் தலைமை காவல் கண்காணிப்பாளரிடம் ஷிவா எடுத்துரைத்ததில் தங்களால் முடிந்ததைச் செய்வதாக அவரும் வாக்குக் கொடுத்தார்.

அவரிடம் விடை பெற்ற ஷிவா, தங்களுக்காகக் காத்திருக்கும் வாகனத்தில் ஏற,

“ஏன் ஷிவா இப்போ மும்பைப் போறோம்? நாம் இங்க வந்ததே துர்காவைக் கண்டுப்பிடிக்கத் தானே. இவ்வளவு தூரம் வந்துட்டு ஏன் இப்படி ஒண்ணுமே செய்யாமல் திரும்பப் போறோம்?” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

ஷிவாவிற்குமே அவ்வாறான கவலை தான், ஆயினும் தன்னால் விமானியின் உயிரும் இந்தப் பெண்ணின் உயிரும் பலியாக இருந்ததே என்ற வருத்தமும் அவனை ஆட்கொண்டிருந்தது.

வருண் தங்கி இருக்கும் இடமும் சிதாராவிற்குத் தெரியும்.

இப்பொழுது கட்சிரோலிக் கானகத்தையும், தங்களுக்கு உதவும் வகையில் வாக்குறுதிக் கொடுத்திருக்கும் அம்மாவட்டத்தின் தலைமை காவல் கண்காணிப்பாளரையும் பார்த்தாகிவிட்டது.

முதலில் இவளை பத்திரமாக அவள் வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டு பிறகு தனியாகத் துர்காவைத் தேடும் படலத்தில் இறங்கலாம் என்று முடிவெடுத்தவனாக அவளைச் சமதானப்படுத்தத் துவங்கினான்.

“கண்டிப்பா துர்காவை தேடி நான் திரும்ப இங்க வருவேன் சிதாரா. ஆனால் இப்போ நீ பத்திரமா உன் வீட்டுக்குப் போய்ச் சேரணும். அது தான் எனக்கு முக்கியம்.”

அவன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவளின் மனம் சமாதானம் அடையவில்லை.

ஆயினும் அவனை எதிர்த்துப் பேசும் சந்தர்ப்பத்தையும் அவன் அதற்குப் பிறகு அவளுக்குக் கொடுக்கவே இல்லை.

சிதாராவும் விமானியும் தற்பொழுது மும்பைக்குத் திரும்பி செல்வதே உசிதம் என்று தலைமை காவல் கண்காணிப்பாளரும் வலியுறுத்தியவர் அவர்கள் பத்திரமாக மும்பைக்குச் செல்ல உதவினார்.

ஒரு வழியாக உயிருக்கு எவ்வித ஆபத்துமின்றித் தப்பித்த நிம்மதியுடன் மும்பைக்குப் பயணத்தைத் துவங்க, இவ்வளவு கஷ்டப்பட்டும் துர்காவைக் கண்டு பிடிக்க இயலாதுப் போனதே என்ற நிதர்சனம் ஷிவாவின் இதயத்தை அரித்துக் கொண்டிருந்தது.

நேரம்: வெள்ளிக்கிழமை நற்பகல் 12:00

சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்

விமானியின் கரங்களை இறுக்கப்பற்றிக் குலுக்கி நன்றி நவிழ்ந்த ஷிவா அவர் சென்றதும் தங்களுக்காகக் காத்திருந்த சிதாராவின் காருக்கு அருகில் செல்ல, தனக்கருகில் ஏமாற்றத்தை சுமந்து நின்றிருந்தவனின் முகத்தில் இழையோடிய வேதனையைக் கண்டு அவனது கரத்தின் மேல் கையை வைத்தாள் சிதாரா.

திரும்பி அவளைப் பார்த்தவன் கண்களுக்கு எட்டாத கசந்த புன்னகை ஒன்றை உதடுகளுக்குக் கொணர, அவனின் வலிப் புரிந்தவளாய், "கண்டிப்பா உங்க துர்கா பத்திரமா உங்கக்கிட்ட வந்து சேர்ந்துடுவா, கவலைப்படாதீங்க." என்றாள் ஆறுதலாய்.

“ம்ம்ம்”

வேறு எதுவும் அவன் பேசவில்லை.

“ஷிவா. நீங்க திரும்பவும் கட்சிரோலி போவீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனால் ஒரு வேளை துர்கா அங்க இல்லைன்னா எனக்குக் கால் பண்ணுங்க. வருண் இருக்கிற வீட்டுக்கு நாம ரெண்டு பேருமே போவோம்..”

என்னது மறுபடியுமா?

ஆழ இழுத்து நெடுமூச்சுவிட்டவன் காரின் கதவைத் திறந்து அவளை அமரப் பணித்தவாறே,

“அதை நான் பார்த்துக்கிறேன் சிதாரா. நீ முதலில் உன் வீட்டுக்குப் போ. இனி உன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் எங்கேயும் போகாதே.. இந்த டிடெக்டிவ் வேலை எல்லாம் இதோட விட்டுடு. ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது. அவர்களை உண்மையில் நீ ரெஸ்பெக்ட் பண்ணினா அவர்களிடம் சொல்லாமல் இனி எங்கேயும் போகாத.” என்று அறிவுரைக் கூற, ஆமோதிப்பாய் தலை அசைத்தவளின் கண்களில் ஏனோ அவளையும் அறியாது சட்டென நீர் புரளத் துவங்கியது.

“நீங்களும் என் கூட வர்றீங்களா?”

அவளின் ஏக்கம் புரியாதவனா ஷிவ நந்தன்?

“இல்லை சிதாரா. நான் இப்போ உடனடியா சென்னைக்குப் போகணும்.”

“சென்னைக்கா?”

“யெஸ்.”

“அப்போ திரும்பவும் மும்பை வந்ததும் எங்க வீட்டுக்கு வர்றீங்களா?”

"சிதாரா, நான் உன் வீட்டுக்கு வந்தால் நிச்சயம் எல்லா விஷயமும் உங்க அப்பாவுக்குத் தெரிய வரும். அது உனக்கு நல்லது இல்லை. மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் போது நிச்சயமா நான் உன்னைச் சந்திக்கிறேன்."

"எப்போ?"

குரல் தழுதழுக்கக் கேட்டவளின் முகத்தைக் கண்கள் இடுங்கப் பார்த்தவன்,

"தெரியலை. பட் கண்டிப்பா உன்னைத் திரும்பவும் பார்ப்பேன்..Trust me.." என்றான் சற்று அழுத்தமான தொனியில்.

ஏனோ நெஞ்சே வெடித்துவிடுவது போல் வலித்தது கன்னியவளுக்கு.

இவன் தேடி வந்தது இவனை மணமுடிக்கக் காத்திருக்கும் பெண்ணை.

ஆனால் ஏன் என் மனம் இவனது பிரிவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?

இதற்கு மேலும் இவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வெடித்து அழுதாலும் அழுதுவிடுவேன் என்று எண்ணியவளாய் காரைக் கிளப்ப, கார் நகரத் துவங்கிய விநாடியே அவளின் பிரிவு ஷிவாவின் இதயத்தின் அடி ஆழம் வரை சென்று சுட்டது.

அவனது புத்தியையும் சாடிக் கொண்டிருந்தது அவள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த அதே ஏக்கங்கள் தான்.

சட்டைக் காலரை இழுத்தவாறே கழுத்தை சாய்த்து நிமிர்ந்தவனாய் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் தனது வரவை நண்பன் அஷோக்கிடம் தெரியப் படுத்திவிட்டு சென்னையை நோக்கிப் பயணத்தைத் துவங்கினான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் விமானம் சென்னையில் தரை இறங்க, விமான நிலையத்தில் அவனுக்காகக் காத்திருந்த அஷோக் நண்பனைக் கண்டதும் ஓடி வந்தவன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

வழக்கத்திற்கு மாறாகத் தழுவும் தன் நண்பனைக் கண்டு சிரித்தவனாய்,

"என்ன அஷோக், கட்டி எல்லாம் பிடிச்சிக்கிற?" என்று வினவ, "துர்கா கிடைச்சிட்டாள் ஷிவா.." என்றவனின் கூற்றில் ஒரு முறை ஷிவாவின் வலியத் தேகம் கூடப் படபடத்தது.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்
 
Last edited:
Love ah unaranum na pirivi avashyam… 👏🏻👏🏻👏🏻
2 jodiyum pirinjittanga… eppo seruranga nu parppom…
For sure, Varun than Durga va kondu vandhu vittirukkanum… Inimel ava ange iruntha aabathu nu… Hope he might have smelled about Mirza brothers
 

Vidhushini

New member
துர்கா, இனி வருண் நினைவிலேயே உழல்வாளோ? அதை உணர்வாளா?

தற்காலிகப் பிரிவும் காதலில் நல்லதே...

Interesting @JB sis.
 

Lucky Chittu

New member
Super Varun Durga VA thedinathum Durga varunah thedinathum sithara Shiva piriva nenaichu varunthurathum shiva sithara va pirinchu varunthurathum eppo mudivukku varum. Sekiram oruvarai oruvar purinchi seranum waiting for the next epi mam.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top