JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakkalin Vettai - Episode 21

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 21


வேய் எனத் திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்,

மா வென்ற மட நோக்கின், மயில் இயல் தளர்பு ஒல்கி,

ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்பக்,

கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்

தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட,

வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்

இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள் இனி!

--கலித்தொகை 57

பொருளுரை:

மூங்கில் போல் திரண்டிருக்கும் தோள்.

மணத்தால் வெறியூட்டும் கூந்தல் ( ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட கூந்தல்)

மான் பார்வையை வென்ற மருண்ட பார்வை.

மயிலை வென்ற நடையியல்பு.

தளர்வுடன் ஒசிந்தது நடக்கும் நடை.

நடக்கும்போது கேட்கும் சிலம்பொலி.

நடக்கும் போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்கள்.

கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படி தோன்றித் தோன்றாத இடை (கொடியென கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை கண்கள் நாடி செல்கின்றன)

இவற்றுடன் எறிந்து தட்டும் பந்துடன் துள்ளித் திரிகிறாயே (இகத்தந்தாய்)

இளமையோடு இகத்தந்தாயே!

அழகியே,

நான் சொல்வதை கேள்!



*******************************************************

நேரம்: வெள்ளிக்கிழமை மாலை 4 மணி

"என்ன அஷோக் சொல்ற?"

"யெஸ் ஷிவா. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு ஃபோன் வந்தது. உங்க அப்பா தான் கால் பண்ணியிருந்தார். நீ எங்க இருக்கன்னு தெரியலை, உன் செல்ஃபோனையும் ரீச் பண்ண முடியலைன்னு சொன்னார். விஷயத்தைக் கேட்கும் போது தான் துர்கா கிடைச்சிட்டான்னு தெரிய வந்தது."

"எப்படி அஷோக்?"

"தெரியலை ஷிவா. டீட்டெய்லா பேசலை, ஆனால் துர்கா சேலம் ஏர்போர்ட்டிற்கு வருவதாகவும், அவளை அங்க வந்து பிக்கப் செய்துக்கணும்னு ஃபோன் வந்திருக்கு. இப்போ அவங்க எல்லாரும் சேலத்துக்குப் போயிட்டு இருக்காங்களாம். உன்னை எப்படியாவது காண்டாக்ட் பண்ணி உன்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லச் சொன்னார் உங்க அப்பா. நீ சென்னை ஃப்ளைட்டில் ஏறுகிற வரைக்கும் கூட எனக்கும் இந்த விஷயம் தெரியாது ஷிவா. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கூப்பிட்டார்."

அஷோக் கூற கூற பேச்சற்று கல் தூண் போல் நின்ற ஷிவாவின் மூளை பலக்கோணங்களில் சிந்திக்க ஆரம்பித்தது.

‘அது எப்படிச் சொல்லி வைத்தார் போல் நான் கட்சிரோலிக்கு போன நேரத்தில் துர்கா திரும்பி வந்திருக்கா? அப்படின்னா சிதாரா சொன்னது போல வருண் துர்காவை கட்சிரோலியில் தான் அடைத்து வச்சிருந்தானா? நானும் சிதாராவும் கட்சிரோலிக்குப் போனது வருணுக்கு தெரிய வந்திருக்குமோ? அவன் தான் அவ எங்கப் போறா, எங்க இருக்கான்னு ஆளை வைச்சு கண்காணிச்சிட்டே இருக்கான்னு அவளே சொன்னாளே. அப்படின்னா நாங்க வந்தது தெரிந்து தான் துர்காவை திருப்பி அனுப்பிட்டானா?

ஆயினும் துர்கா திரும்பி வருவதற்கான காரணம் தனது கட்சிரோலி பயணமாக இருக்காது என்று ஷிவாவின் காவல்துறை மூளை அடித்துக் கூறியது.

ஏனெனில் இதற்கெல்லாம் அசருகிறவன் இல்லையே அந்த வருண் தேஸாய். அப்படி என்றால் என்ன நடந்திருக்கும்?

தாறுமாறாகப் புத்தி யோசிக்க, தலையை நன்றாகச் சாய்த்துக் கண்களை மூடி ஒரு சில விநாடிகள் நின்றவன் என்ன நினைத்தானோ சட்டென அஷோக்கின் அலைபேசியை வாங்கிச் சிதாராவை அழைத்தான்.

“Oh my God! நிஜமாவா ஷிவா? துர்கா கிடைச்சிட்டாளா?”

துர்கா கிடைத்துவிட்டாள் என்ற செய்தி சிதாராவை அளவிட முடியா மகிழ்ச்சியில் ஆழ்த்தியது தான்.

ஆனால் அதே சமயம் இரத்த நாளங்களுடன் சேர்த்து எவரோ தன் இதயத்தைப் பிடுங்கி எடுத்து தூர வீசியது போன்ற பெரு வலியும் பெண்ணவளுக்குள் தோன்றியது.

“யெஸ் சிதாரா..”

“நீங்க துர்காவைப் பார்த்தீங்களா?”

“இல்லை. நான் இன்னும் சென்னையில் தான் இருக்கேன். இப்ப சேலம் கிளம்பப் போறேன்.”

"துர்காவைப் பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க ஷிவா. நான் உங்க ஃபோன் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்."

அத்துடன் முடித்துக் கொண்டவள் இனி அவன் என்னைத் தேடி வருவானா அல்லது இன்றுடன் தன்னை மறந்துவிடப் போகின்றானா என்ற கலக்கத்தில் பாரமான நெஞ்சத்துடன் அலைபேசியைத் துண்டிக்க, அவளின் சாரீரத்தில் மகிழ்ச்சிக்குப் பதில் ஒரு சோகம் இழையோடியது போல் இருந்ததில் அவளின் அச்சமும் ஏக்கமும் ஷிவாவிற்கும் புரிந்தது.

ஆனால் முதலில் துர்காவை சந்திக்க வேண்டும்.

எவ்வித ஆபத்தோ பங்கமோ இல்லாது அவள் தங்களிடம் வந்து சேர்ந்துவிட்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிறகு தான் மற்றதெல்லாம் என்று முடிவெடுத்தவன் துர்காவை காண சேலம் விரைந்தான்.

***********************************

ஷிவாவின் பெற்றோர் தேவேந்திரனும் சாவித்திரியும் ஸ்ரீமதியின் கிராமமான மல்லியக்குறிச்சிக்கே சென்றுவிடலாம் என்று கூறியிருந்ததில் தனது வீட்டிற்குக் காரில் சென்று கொண்டிருந்த துர்கா, தன் அன்னையின் நெஞ்சில் புதைந்து அழுதுக் கரைந்துக் கொண்டிருந்தாள்.

கணவனை இழந்த அந்நிமிடத்தில் இருந்தே இந்த உலகமே எனக்கு என் மகள் தான் என்று வாழ்ந்து கொண்டிருந்த ஸ்ரீமதியும் மகளை ஆறுதலாக அணைத்துக் கொண்டு அழ, இரு பெண்களையும் தேற்றுவதற்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தனர் ஷிவாவின் பெற்றோர்.

"ஸ்ரீமதி, நீயும் அழுது அவளையும் ஏன் அழ வைக்கிற? பெரியவ நீ தான் அவளுக்கு ஆறுதல் சொல்லணும். நீயே இப்படி அழுதுட்டு இருந்தால் எப்படி?"

ஷிவாவின் அன்னை சாவித்திரி கூற,

"எப்படி அண்ணி அழாம இருக்க முடியும்? எவ்வளவு நாளைக்கு அப்புறம் என் பொண்ணை நான் பார்க்குறேன். அவ உயிரோடு இருக்காளா இ.." என்ற ஸ்ரீமதியின் வாயை அடக்கினார் தேவேந்திரன்.

"ம்ப்ச், என்ன பேச்சு இது ஸ்ரீமதி? துர்கா பத்திரமா திரும்பி வந்திருக்கா, அதுக்குச் சந்தோஷப் படாமல் இது என்ன அபத்தமான பேச்சு?"

தேவேந்திரன் அப்படிக் கடிந்துக் கொண்டதற்குக் காரணம், என்னதான் அவர்கள் சென்று கொண்டிருக்கும் காரை செலுத்திக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரிந்த ஓட்டுநராக இருந்தாலும், மூன்றாவது மனிதனுக்கு முன் தேவையில்லாத பேச்சு இது என்று மனதிற்குப் பட்டதே.

ஷிவ நந்தன் துர்கா, இருவரின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களில் பெரும்பான்மையானோர் அவர்களின் உறவினர்கள்.

அவர்களுடன் நெருங்கிய நண்பர்களும், தாமரைக்குளம் மற்றும் மல்லியக்குறிச்சியைச் சேர்ந்த ஊர்மக்கள் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் துர்கா கடத்தப்பட்டது பலருக்குத் தெரிந்து தான் போயிருந்தது.

ஆனால் அதற்காக மீண்டும் மீண்டும் ஊராரின் வெறும் வாய்க்கு அவல் கொடுப்பது போல் துர்காவைப் பற்றிய பேச்சிற்குத் தூபம் போட வேண்டுமா என்பதே அக்குடும்பத்தின் மூத்தவரான தேவேந்திரனின் கோபத்திற்குக் காரணம்.

அதுவும் இல்லாது துர்கா சேலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றாள் என்று கேள்விப்பட்டதுமே, அவர் தங்களின் கார் ஓட்டுநரைக் கூட வேண்டாம் என்று கூறிவிட்டு வேறு ஒரு ஓட்டுநரைக் கொண்டு தங்களின் காரில் சேலம் வந்திருந்தார்.

துர்காவைப் பற்றிய எந்த வித தவறான தகவலும் வெளியேறிவிடக் கூடாதே என்ற கவலை தான் அவருக்கும்.

அண்ணனின் அதட்டலில் ஸ்ரீமதியும் அமைதியாகிவிட, மல்லியக்குறிச்சியை அடைந்தவர்கள் வீட்டினுள் நுழைந்ததுமே திரும்பவும் கதறி அழத் துவங்கினார் ஸ்ரீமதி.

ஒரு பக்கம் மகள் பத்திரமாகத் திரும்பி கிடைத்துவிட்டாள் என்ற நிம்மதி.

ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்நியன் ஒருவனால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகள் எந்தக் கேடும் நேராது திரும்பி தன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறாளா என்ற வேதனை மறுபக்கம்.

இதை எல்லாம் மீறி, ‘என்ன தான் எனக்கு ஒன்றும் இல்லை, நான் எப்படிப் போனேனோ அதே போல் தான் திரும்பி வந்திருக்கின்றேன்’ என்று துர்கா கூறினாலும், அவளது உடலில் ஆங்காங்கு பட்டிருக்கும் கீறல்களும், நடக்க இயலாது முதலில் தவித்துப் பின் சமாளித்துக் கொண்டு ஓடி வந்து தன்னைக் கட்டி அணைத்துக் கொண்டவளின் கால்களில் இருந்த காயங்களும் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது.

ஒரு அன்னையாக அவரின் கவலையையும் கலக்கத்தையும் புரிந்து கொண்ட தேவேந்திரன் பெண்கள் மூவருக்கும் தனிமையைக் கொடுக்க எண்ணி வீட்டின் வரவேற்பு அறைக்குச் சென்றுவிட, அவர் தலை மறைந்ததுமே கடத்தப்பட்ட நாளில் இருந்து இன்று திரும்பி வந்திருக்கும் நாள் வரை நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாது கூறி முடித்தாள் துர்கா, ஒரே ஒரு விஷயத்தைத் தவிர.

அது சசிதரனால் தான் தூக்கிச் செல்லப்பட்டதையும், இரவு வேளையில், நான்கு மணி நேரங்களுக்கு மேலாகக் காட்டிற்குள் தன்னந்தனியாய் தவித்துத் தத்தளித்ததையும்.

மகள் கூறுவதைக் கண்ணீர் வழிய உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீமதியின் முகம் பல உணர்ச்சிகளையும் பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்க, சில வேளைகளில் தாங்க இயலாத வேதனையில் துடித்தவர் அருகில் அமர்ந்திருந்த, அண்ணி சாவித்திரியின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டார்.

“உனக்கு எந்த வித ஆபத்தும் இல்லாமல் திரும்பி வந்துட்டேன்னு சொல்ற. அங்க இருந்தவங்க உன்கிட்ட கூட நெருங்கலைன்னும் சொல்ற. ஆனால் உன் உடம்பில் நிறையக் காயம் பட்டிருக்கே துர்கா.”

இக்கேள்வியை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவள் அதற்கான பதிலையும் தயார் படுத்தி வைத்திருந்தாள்.

“ஆமாம்மா. அவங்களால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை தான். ஆனாலும் இன்னும் எவ்வளவு நாள் அவங்க என்னை அடைச்சு வச்சிருப்பாங்க, எவ்வளவு நாள் என்னை யாராவது வந்து காப்பாற்ற மாட்டாங்களான்னு ஏக்கத்தோட எதிர்பார்த்துட்டே இருக்கிறதுன்னு ரொம்பப் பயத்துலேயே இருந்தேம்மா. இவ்வளவு நாளா நல்லவர்களா இருந்தவங்க திடீர்னு மனசு மாறி என்னை ஏதாவது செஞ்சிட்டால் என்ன பண்றதுங்கிற பயத்துல தான் அவங்கக்கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி பண்ணினேன். என்னை அவங்க அடைச்சு வச்சிருந்தது ஒரு காட்டுக்குள்ள. அங்க இருந்த தப்பிக்க முயற்சி செய்தப்ப தான் இந்தக் காயங்கள் பட்டுச்சு..”

மகளின் காயங்களை மிருதுவாக வருடியவராக, மெல்லிய சாரீரத்தில்,

“இதைப் பார்த்துட்டு தான் அவனே மனம் மாறி உன்னைப் போகவிட்டானா?" என்ற வினாவில் வருணின் முகம் நிழலாடியதில், பெண்ணவளின் மென்மையான முகம் இருளடைந்தது.

"ஆமாம்மா.. உன் அம்மா வந்து உன்னைக் கூட்டிட்டுப் போவாங்கன்னு மட்டும் சொல்லிட்டு ஏர்போர்டில் இறக்கி விட்டுட்டாங்க.."

ஆகத் தன் பெண் இன்னமும் தூய்மையாகத் தான் இருக்கின்றாள். கடத்தியவனின் கை கூட அவள் மேல் படாது அவளைப் பத்திரமாக அனுப்பிவிட்டான்.

ஆயினும் தன் ஐயுறவுத் தீரும் வரை மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்ட ஸ்ரீமதியை சமாதானப்படுத்திய சாவித்திரி துர்காவின் கரம் பற்றி அவளை எழுப்பியவர், “வா துர்கா. முதலில் தலைக்குளிச்சிட்டு பூஜை ரூமில் விளக்கு ஏத்தி வை.. மற்றதை பிறகு பார்ப்போம்..” என்றவாறே உள்ளே அழைத்துச் சென்றார்.

மகளின் மேல் இருந்த அபார நம்பிக்கையில் அதன் பிறகு அந்த விஷயத்தைப் பற்றிக் கேள்விக் கேட்காத ஸ்ரீமதிக்கு ஷிவ நந்தனை பழிவாங்க அவனது மணப்பெண்ணைக் கடத்தியவன் ஏன் இத்தனை நாட்கள் அவளை விடுவிக்காது வைத்திருந்தான் என்ற வினாவிற்கு மட்டும் விடைத் தெரியவில்லை.

அவரது புதல்வியும் அதற்கான விளக்கத்தைக் கொடுக்கவில்லை.

சேலத்தினை வந்தடைந்து சில மணி நேரங்கள் ஆகியிருக்க, குளித்து முடித்தவளாய் ஈரக் கூந்தலுடன் பூஜை அறையில் வீற்றிருக்கும் தெய்வங்களின் படங்களுக்கும், சாமியாய் தான் தொழும் தந்தையின் புகைப்படத்திற்கும் விளக்கேற்றி முடித்தவள் தன் அறையின் ஜன்னல் வழியாய் வெளிப்புறத்தை வெறித்துக் கொண்டிருக்க, அவள் மனம் மட்டும் எவ்விடத்திலும் நிலைக்க மறுத்து போராடிக் கொண்டிருந்தது.

திறந்திருந்த ஜன்னல் வழியாய் அந்தி நேரத்து காற்று சில்லென்று முகத்தில் மோதியதில் தேகமும் குளிர்ந்தது தான்.

ஆயினும் அது எதையும் உணராது வதங்கிய மனதுடன் வாடிப் போயிருந்தவளின் வெளுத்த முகம் வெறிச்சோடிக் கிடந்த வானத்தையும் மிஞ்சியது.

'நான் அவ்வளவு சொல்லியும் என் மேல் நம்பிக்கை இல்லையா? ஒரு வேளை அந்தச் சசிதரன் திரும்பி வராமல் வேறு எங்காவது ஓடியிருந்தானா என்னை நம்பியிருப்பாரா?'

கரையைத்தொட ஏங்கும் அலைகளைப் போல் வருணைப் பற்றிய எண்ணங்களே ஆழ் மனதில் அடித்து மோதிக் கொண்டிருந்ததில் அவளது உள்ளமும் கசந்து ஓய்ந்து போயிருந்தது.

***********************************

"சார், அப்போ துர்கா சொன்னது உண்மையா இருக்கலாம் அப்படீங்கிறீங்களா?"

"ஆமா ஜாஃபர். நமக்குத் தெரிஞ்சு துர்கா தனியா அதுவும் ராத்திரி நேரத்துல காட்டுக்குள்ள ஓடுற பொண்ணு இல்லையே. அந்த அளவுக்கு அவளுக்குத் தைரியமும் இல்லை."

"அப்படின்னா ஏன் துர்காவைப் போகச் சொன்னீங்க?"

பதில் தெரிந்தும் வேண்டுமென்றே கேட்கும் ஜாஃபரின் கேள்விக்குப் பதிலாய் வருணின் சிந்தனை அன்றைய காலையில் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றது.

கட்சிரோலி கானகம்.

நேரம்: வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி

பேதையவளின் பாதங்களையும் கால்களையும் கிழித்திருந்த காயங்களுக்கு மருந்திட்ட வருண் மேற்கொண்டு அவளே மற்ற காயங்களுக்கு மருந்துப் போட்டுக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு குடிலை விட்டு வெளியே வர, அவன் எதிர்பாராதவண்ணம் குடிலிற்குப் பின்னால் இருந்து வந்து கொண்டிருந்தான் சசிதரன்.

அவனின் அரவத்தில் வருணும் ஜாஃபரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க, சசிதரனைக் கண்ட ஜாஃபரின் கண்களும் புருவங்களும் இடுங்கின.

"சார், சசி?"

இரகசியமாய் வருணின் செவிகளில் கிசுகிசுக்க, ஊடுருவும் விழிகளுடன் ஆய்ந்து ஆராயும் பார்வையுடன் சசிதரனைப் பார்த்திருந்த வருண், "இவ்வளவு நேரம் அவன் எங்கிருந்தான்னு மட்டும் கேளு ஜாஃபர். வேற எதுவும் கேட்காத." என்றான், தெளிவாய் உணர்ச்சிகளைத் துடைத்தெடுத்த முகத்துடன்.

ஜாஃபரின் கேள்விக்கு அழகாய் பதிலளித்தான் சசிதரன்.

துர்கா காணாமல் போன நேரம் தானும் அங்குத் தான் இருந்ததாகவும், ஜாஃபரின் கட்டளைப்படி துர்காவைத் தேடத் தானும் காட்டுக்குள் சென்றதாகவும், ஆயினும் மற்ற அடியாட்களுடன் இணைந்து செல்லாது தனியாய் சென்று அவளைத் தேடிக் கொண்டிருந்தாகவும் அடித்துக் கூறினான்.

காரணம் காட்டிற்குள் தனியாகச் செல்வதற்குப் பயந்தவன், இவ்வாறு கடத்தப்பட்டு அடர்ந்த அடவிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்ணிற்குப் பாதுகாவலாக வரத் தகுதி இல்லாதவன் என்று பெருமை வேறு பேசினான்.

அவனின் பேச்சில் வருணின் அறிவு சில விஷயங்களைக் கணக்கிடத் துவங்கியது.

துர்காவைக் காணவில்லை என்று ஜாஃபர் கண்டறிந்த பொழுது நள்ளிரவைக் கடந்து 1 மணி.

குடிலிற்குக் காவல் காத்து வந்த இரு அடியாட்களும் தாங்கள் உணவு அருந்திய பொழுது ஏறக்குறைய நள்ளிரவை நெருங்கியிருந்தது என்று ஜாஃபரிடம் கூறியிருந்தார்கள்.

அதற்குப் பிறகு தான் தங்களையும் அறியாது உறங்கிவிட்டிருக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆக, துர்காவை இரவு பன்னிரெண்டு மணி போல் சசிதரன் தூக்கி சென்று இருக்கின்றான்.

ஆனால் அவன் எதிர்பாராத வகையில் அவள் அவனிடம் இருந்து தப்பித்துச் சென்றிருக்கின்றாள்.

இச்சூழலில், ஒன்று, அவளைத் தொடர்ந்து அவனும் செல்ல வேண்டும். இல்லை அவளை விடுத்து அவன் மட்டும் குடிலிற்கு வந்துவிட வேண்டும்.

ஏனெனில் இந்த இரவு நேரத்தில் இப்படித் தன்னந்தனியாக அடர்ந்த, ஆபத்தான கட்சிரோலி காட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பெண் எந்த ஒரு மிருகத்திடமும் அகப்படாது பத்திரமாகத் திரும்பி வருவது சாத்தியமே இல்லை என்று அவனது அனுபவ அறிவு அவனுக்கு உணர்த்தியிருக்கும்.

திரும்பி குடிலிற்கு வந்தவன் அதற்குள் விழித்துவிட்ட ஜாஃபரைக் கண்டு ஒளிந்திருந்தவாறே, துர்காவைத் தேடுமாறு மற்றவர்களுக்கு அவன் கட்டளையிடுவதைக் கேட்டிருக்க வேண்டும்.

அல்லது அவன் திரும்பி வந்த நேரம் ஜாஃபரை தவிர மற்றவர்கள் அனைவரும் துர்காவைத் தேடிக் காட்டிற்குள் சென்று இருந்ததைக் கவனித்து மறைந்திருக்க வேண்டும்.

நான் வந்ததும், ஜாஃபருடன் இணைந்து நானும் துர்காவைத் தேடி சென்றதையும் பார்த்திருக்கக் கூடும்.

அவனது நல்ல நேரம் உண்மையில் அவன் அங்கு இல்லாததை ஒருவரும், ஜாஃபர் உட்பட, பதற்றத்தில் சரியாகக் கவனித்திருக்கவில்லை.

ஆக, நான் திரும்பி வரும் நேரம் மறைவில் இருந்து வெளிப்பட்டு, தானும் துர்காவைத் தேடும் பணியில் ஈடுப்பட்டிருந்தேன் என்று சொல்லிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவனின் திட்டத்தில் மண் அள்ளிப் போட்டது போல் இருந்திருக்கும், நான் துர்காவைக் கண்டுபிடித்துப் பத்திரமாக அழைத்து வந்திருந்ததைப் பார்த்ததில்.

இதனைச் சசிதரன் அதி நிச்சயமாய் எதிர்பார்த்திருக்க முடியாது.

ஆயினும் இந்நிமிடம் வரை மறைந்திருந்து, இப்பொழுது நடந்திருப்பதைத் துல்லியமாய்க் கணித்தவனாய் தனது அதிர்ச்சியை மறைத்தவாறே, சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொய் உரைத்துக் கொண்டிருக்கின்றான்.

“இவ்வளவு நேரம் நானும் துர்காவைத் தேடிட்டு தான் சார் இருந்தேன். ஆனால் இந்த இருட்டுக்குள் அவளை என்னால் கண்டுப்பிடிக்க முடியலை. அப்பத்தான் உங்க ஹெலிகாப்டர் சத்தம் கேட்டது. நீங்களும் கண்டிப்பா அவளைத் தேட துவங்கி இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அதான் திரும்பி வந்தேன். துர்காவை உங்க கூடப் பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு சார்.”

என்னதான் அவன் விளக்கம் கொடுத்தாலும் அவனை நம்புவதற்கு வருண் என்ன முட்டாளா?

ஆனால் அதற்கு மேல் அவனை அங்கு வைத்து விசாரிக்க விரும்பாத வருண் ஜாஃபரிடம் அத்துடன் அவனை விட்டுவிடுமாறு கண்களாலேயே சைகை செய்தவன், தன்னைப் பின் தொடருமாறு ஜாஃபரிடம் கூறிவிட்டு குடிலின் மறுபுறத்திற்குச் சென்றான்.

ஒரு முறை சசிதரனை முறைத்துப் பார்த்த ஜாஃபர் வருணைப் பின் தொடர, வருண் தன்னை நம்பவில்லை என்பதை உணர்ந்து கொண்ட சசிதரனுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்கியது.

அரண்டுப் போனவனாய் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருக்க, குடிலின் பின் புறம் சென்றதும் தன்னை நெருங்கி நின்ற ஜாஃபரின் முகம் நோக்கித் திரும்பிய வருண்,

"ஜாஃபர், இனியும் துர்கா இங்க இருப்பது நல்லது இல்லை. அவளை வேற எங்கேயும் கூட்டிட்டும் போக முடியாது. அதே போல் அவளை இனி நம்முடன் வைத்திருப்பதும் அவளுக்கு ஆபத்து. இவன் யாருக்காக வேலை செய்தான், ஏன் துர்காவைக் கடத்தினான்னு முதலில் கண்டுப்பிடிக்கணும். ஆனால் அதற்கு முன் துர்காவை பத்திரமா அவ ஊருக்கு அனுப்பிடணும்."

கடத்திய நாளில் இருந்தே வருண் வழக்கத்திற்கு மாறாகத் துர்காவிடம் ஒரு தனிப்பட்ட கரிசனத்தைக் காட்டுவதைப் பார்த்திருந்தவன் ஜாஃபர்.

எப்பவுமே உணர்ச்சிகள் வரண்ட முகமும், கடினமான தோரணையும், புன்சிரிப்பு என்பதையே மறந்து இறுகிப் போன உதடுகளுமாய் இருப்பவன், கடந்த சில நாட்களாக மட்டும் குறுஞ்சிரிப்பு அவ்வப்பொழுது வந்து ஒட்டிக்கொள்ள நடமாடிக் கொண்டிருந்தான்.

தன் எஜமானின் மாற்றம் ஜாஃபரின் கண்களில் இருந்து தவறவில்லை.

வாரம் ஒரு முறையேனும் குடிலிற்கு வரும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்ட வருண், இரவில் தன்னுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அடிக்கடி துர்காவின் அறைப்பக்கம் அவன் பார்வைப் போவதை ஜாஃபரும் கவனித்திருக்கின்றான்.

அப்பொழுது துர்காவையும், அவளை மணமுடிக்க இருக்கும் ஷிவ நந்தனையும் இணைத்து எதேச்சையாகப் பேச்சுக் கொடுத்தால், விநாடிகள் நேரம் பேச்சற்று சிலையாகிப் போவான்.

அப்பொழுது அதுவரை அவனது உதட்டோரத்தில் உட்கார்ந்திருக்கும் இளஞ்சிரிப்பும் காணாதுப் போய் விடும்.

இறுகித் திரண்டிருக்கும் அவன் தேகம் மேலும் இறுகுவதையும், அவன் கரங்களில் நரம்புகளும் தசைகளும் வெடித்துவிடுவது போல் திமிறுவதையும் கண்கொண்டு பார்த்திருக்கின்றான் ஜாஃபர்.

அதற்குப் பிறகு அவன் பேசும் ஒவ்வொரு பேச்சும் எரிநெருப்பைக் கொட்டினார் போன்று சிதறத் துவங்குவதில், இருண்டுக் கிடக்கும் கானகத்தின் சூழலை இன்னும் கனப்படுத்தியது போலவே ஜாஃபருக்குத் தோன்றும்.

இவை அனைத்துமே துர்கா மேல் அவனையும் அறியாது வருணிற்கு வந்திருக்கும் ஈடுபாட்டைக் குறிக்கிறது என்று அறிந்திருந்தான் ஜாஃபர்.

அதனாலேயே இந்தக் கேள்வியையும் இப்பொழுது எழுப்பினான்.

"சார், ஒரு வேளை துர்கா ஊருக்கு போனவுடனே அந்த ஷிவ நந்தன் திரும்பவும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தானா?"

அவனது வினாவிற்கு ஏற்ற விடையில் துலங்கும் நிதர்சனமும், நிர்தாட்சண்யமான உண்மையும் வருணுக்குப் புரியாமல் இல்லை.

“அதைப் பிறகு பார்த்துக்கலாம் ஜாஃபர். சசிக்குப் பின்னால் யார் இருப்பதுன்னு தெரியாதவரை துர்காவுக்கு ஆபத்து. எனக்கு அவள் உயிர் தான் முக்கியம், மற்றதை நான் பிறகு பார்த்துக்கிறேன். முதலில் அவ இங்கிருந்து கிளம்பறதுக்கு ஏற்பாடு செய்.. ”

உத்தரவிட்டவனாய் விடுவிடுவென்று நடந்தவன் குடிலிற்குள் செல்ல, அவனது மனதில் கனன்று கொண்டிருக்கும் அக்னியின் வீச்சு ஜாஃபருக்கும் புரிந்தது.

ஆயினும் அதைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் நாம் எவருமே இல்லை என்பதையும் உணர்ந்தவனாய் துர்காவை அனுப்ப ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்க, அதே நேரம் துர்காவின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வருணின் சிந்தனைகள் வேறு இடத்தில் இலயித்திருந்ததில் சத்தமிடாது அவளின் அறைக்குள் நுழைந்தவன் அங்குக் கண்ட காட்சியில் நிலைத்தடுமாறிப் போனான்.

சசிதரன் கட்டியிருந்த கயிற்றின் இறுக்கத்தில் கன்றிப் போயிருந்த அவளின் மணிக்கட்டுகளைக் கண்டுதான் அவளுக்கு மருந்திட எத்தனித்தான்.

ஆனால் அவள் தானே மருந்துக்களைப் போட்டுக்கொள்வதாகச் சொல்லவும் கோபத்தில் அவளின் உள்ளங்கையில் மருந்தை திணித்துவிட்டு வெளியேறி இருந்தான்.

அப்பொழுது அவனும் கதவை தாழிடவில்லை.

அதே போல் கைகளுக்கு மருந்துப் பூசி முடித்தவள், உடம்பு முழுவதிலும் பட்டிருந்தக் காயங்கள் தாங்க இயலாத அளவிற்கு வேதனையையும் எரிச்சலையும் கொடுத்திருந்ததில் மருந்து பூசுவதற்கு ஏதுவாகப் புடவையைத் தளர்த்தியவாறே கட்டிலில் அமர்ந்தாள்.

அவளும் கதவினை சாத்த மறந்துப் போயிருந்தாள்.

அங்கு ஜாஃபர் கேட்ட கேள்வியின் தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவனாய் மின்னலென வந்தவன் கதவினை தட்ட மறந்து உள் நுழைய, தான் இருக்கும் நிலையையே மறந்து தாழ்பாளிட மறந்த அறைக்குள் புடவையை நன்றாக விலக்கியவளாய் மருந்துக்களை இட்டுக் கொண்டிருந்த பெண்ணவளின் வசீகரிக்கும் தோற்றம், ஆடவனின் இதயத்தைத் தாறுமாறாய் எகிரச் செய்தது.

கடந்த வாரம் அவன் இங்கு வந்திருந்த பொழுது அவளுக்கு என்று எடுத்து வந்திருந்தான், கறுப்பு நிறத்தில் இளம் மஞ்சள் நிற கரைக் கொண்ட பருத்திப் புடவையை.

புடவையை நன்றாக மேலே ஏற்றியிருந்தவளாய் கால்களின் மேல்பகுதியில் பட்டிருந்த காயத்திற்கு மருந்திட, சற்றும் நினையாதவண்ணம் திறந்து கொண்ட கதவினைக் கண்டு அரண்டுப் போனவள் திரும்பிப் பார்க்க, பெண்ணவளின் அழகைக் கண்டு பிரமிப்பில் மூச்சடைத்து நின்றிருந்தவனின் தோற்றம் தாங்க இயலாத கூச்சத்தைக் கொணர்ந்தது.

சட்டெனப் புடவையை முடிந்தவரை இழுத்து மூடியவள் அவனுக்கு முதுகுக் காட்டி அமர்ந்தாள்.

ஆனால் ஏற்கனவே அவளின் தோற்றத்தில் சமைந்துப் போயிருந்தவன் இப்பொழுது அவள் அவசரமாய்த் திரும்பி அமர்ந்ததில் பின்புறம் புடவை நன்றாகவே விலகியிருக்க, கறுப்பு நிறப் புடவைக்கு இடையில் வெளிப்போந்த மெல்லிடையைக் கண்டதில் மோக மயக்கத்தில் மூழ்கிப் போனான்.

பாவையவளிடம் குவிந்து கிடந்த எழிலிற்கு மேலும் மெருகூட்டிய இடையில் நெளிந்திருந்த சிறு கோட்டின் வளைவுதனில் இவ்வளவு சௌந்தரியமா?

மறைப்பதற்கு மெனக்கெட்டவளின் மறைக்கப்படாத அங்கலாவண்யங்கள் அவளின் அழகை இரட்டிப்பு ஆக்கியது.

அவளைப் பார்வையாலேயே விழுங்கிவிடுவது போல் இமைதட்ட மறந்தவனாய் பார்த்திருந்தவனைப் பித்தனாக்கிக் கொண்டிருந்ததை அறியவில்லை அப்பேதை.

நெஞ்சம் படபடத்து அடித்துக் கொள்ள உள்ளத்திற்குள் ஏற்பட்ட பிரமிப்பை மறைக்கப் பெரும்பாடுபட்டவனாய் கழுத்தை அழுந்த தேய்த்தவனின் அரவத்தில், இன்னமும் அவன் இங்குத் தான் நின்று கொண்டிருக்கின்றான், ஆனால் எதுவும் கூறாது என்பதை உணர்ந்துக் கொண்டவள் தவித்துப் போனாள்.

இது அவளின் நிலை!

தனியாக இருக்கும் பெண்ணின் அறைக்கதவை தட்டாமல் திறந்துவிட்டு, பிறகு என் தவறுக்கு என்ன கூறி மன்னிப்பு யாசிப்பது?

இது அவனது நிலை!

மெல்லத் திரும்பிப் பார்த்தவளின் கண்களின் கதிருக்குள் பனித்துளியாய் கறைந்தவனாய், "ம்ப்ச், ஏதோ ஒரு அவசரத்தில்.." என்று மட்டும் கூறி வெளியேற எத்தனித்தவன் சட்டென நின்றான்.

அவனது தடுமாற்றம் புரிந்து, "பரவாயில்லை.. ஏதோ சொல்ல வந்தீங்கன்னு நினைக்கிறேன்.. சொல்லுங்க.." என்று அவளுக்கே கேட்காத மெல்லிய குரலில் கூற,

ஆயினும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தையில் வித்தகன் என்று அந்த இளம் வயதிலேயே பெயர் எடுத்திருந்தவன், முதன் முறை பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் மனதிற்குக் கடிவாளமிட முடியாது தடுமாறி போயிருந்ததில் பேச்சு மறந்து போனது.

அவனின் பார்வை தன் மேனி முழுவதையும் ஊர்வதைக் கண்டு கட்டிலில் இருந்து மெள்ள எழுந்தவள் நாணத்துடன் தன்னைச் சரி செய்து கொள்ள, அவளின் செய்கையில் மோகம் அறுபட்டதில் உன்மத்தம் தீர்ந்த மனம் மீண்டும் பழைய நிலைக்குப் பயணிக்க ஆரம்பித்தது.

ஆழப் பெருமூச்செடுத்துத் தன்னைச் சமன்படுத்தியவனாய் சஞ்சலமற்று அவளைப் பார்த்தவாறே, "நீ கிளம்பணும்." என்றான்.

"கிளம்பணுமா?"

"யெஸ்"

"எங்க?"

"உன் வீட்டுக்கு.."

"வீ.. வீ.. வீட்டுக்கா?"

இப்பொழுது தடுமாறுவது அவளது முறையாயிற்று.

"ம்ம்ம்"

"ஏன்?"

என்ன அபத்தமான ஒரு கேள்வி என்று புரிந்தும் கேட்டுவிட்டாள்.

"ஏன்னு கேட்டால் என்ன அர்த்தம்? நான் உன்னை இங்க தூக்கிட்டு வந்தேன். நியாபகம் இருக்கா?"

காரணமின்றி வெடித்தான்!

அப்படித்தான் அவள் நினைத்துக் கொண்டாள், ஆனால் அவனது நிலையோ அல்லல்பட்டுக் கொண்டிருந்தது அவளுக்கு எப்படித் தெரியும்??

இனியும் இவளை இங்கு வைத்திருந்தேன் சசிதரன் போல் மனித மிருகங்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிப் போவாள். இது அவனே அவனுக்குக் கொடுத்துக் கொண்ட விளக்கம். ஆனால் அதுவா உண்மையான காரணம்?

தன் பரம எதிரியைப் பழிவாங்கவென்று அவளைக் கடத்திக் கொண்டு வந்தவன், ஒரு நாள் இரு நாட்கள் இல்லை, பல வாரங்கள் அவளைத் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தன் காரணம் என்ன?

அப்பொழுது எல்லாம் அந்தச் சசிதரனா அவளுக்கு ஆபத்து விளைவிக்கும் பகைஞனாக இருந்தான்?

அதே போல் என்ன அசம்பாவிதம் நடந்தால் என்ன, அதற்குப் பிறகு அவளைப் பாதுகாக்கும் திறனற்றவனா வருண் தேஸாய்??

"நீங்க என்னைத் தூக்கிட்டு தான் வந்தீங்க.. எனக்கு நியாபகம் இருக்கு. எப்படி மறந்துப் போகும்?"

அதுவரை இருந்து வந்த நாணம் மறந்து விசனம் பிறந்ததில் விழிகளில் நீர் திரள ஆரம்பித்தது.

இவனது கோபம் எனக்கு வலிக்கின்றதா அல்லது இவனது பிரிவு என்னைத் துக்கத்தில் ஆழ்த்துகின்றதா?

"நியாபகம் இருக்குல்ல? அப்பக் கிளம்பு?"

"எப்போ போகணும்."

"இப்பவே."

"இப்பவேவா?"

"ம்ம். உன்னை உடனடியா பாதுகாப்பா உன் வீட்டில் சேர்க்கணும்.."

அவன் தான் தூக்கி வந்தான், இப்பொழுது அவனே பத்திரமாகக் கொண்டு போய் விடுகின்றேன் என்கிறான்.

இவனிடம் வேறு என்ன பேசுவது என்று யோசித்தவளாய் நிற்க,

"துர்கா.. நான் உன்னை இங்க தூக்கிட்டு வரும் போது, நீ கட்டி இருந்தது அந்த ஷிவா உனக்கு வாங்கிக் கொடுத்த கல்யாணப் புடவையை. அதையே கட்டிட்டு கிளம்பு.." என்றதில் கன்னியவளின் இதயம் சில்லு சில்லாக உடைந்து போனது.

அதாவது உன்னை எப்படி இங்கு அழைத்து வந்தேனோ அப்படியே தான் உன்னை அனுப்பி வைக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்கின்றானா?

வலி கோபமாய் உருவாக, வெடுக்கென்று அவனைவிட்டு மறுபுறம் நடந்தவளின் கால்களில் பட்டிருந்தக் காயங்கள் அவளைத் தடுமாறி விழச் செய்தது.

அறைக்கதவின் அருகில் நின்றிருந்தவன் ஒரே எட்டில் அவளைப் பிடித்து நிற்கச் செய்ய, தற்செயலாகவோ அல்லது அவன் விரும்பியோ அவளின் இடை வளைவை இறுக்கப்பற்றி இருந்தவனின் கைகள் அவளைச் சிலிர்க்கச் செய்தது.

ஆனால் அனைத்தும் ஒரு சில விநாடிகள் தான்.

தன்னைத் திடுமெனப் போகச் சொன்னவனின் மீதான கோபம் மீண்டும் துளிர்த்தெழ அவனைவிட்டு பட்டனெ நகர்ந்து நின்றாள்.

ஒரு வேளை தான் அவளைத் தொடுவதை அவள் விரும்பவில்லையோ என்று தெள்ளத்தெளிவாய் தவறாகக் கணித்தவன்,

"சீக்கிரம் புடவையைக் கட்டிட்டு வா. எனக்கு நேரமில்லை" என்று கடிந்து கொள்ள, அவனின் உதாசீனத்தில் அவமானப்பட்டவள்,

"இங்கேயே நின்னுட்டு இருந்தால் எப்படிப் புடவை மாத்துறதாம்.." என்றவளை ஒரு முறை ஆழ்ந்துப் பார்த்தவன் மறு நொடியே விருட்டென வெளியேறினான்.

அவன் கதவை அறைந்து சாத்திய விதத்தில் திரண்டிருந்த விழி நீர் கன்னங்களில் வழிய, கல்லாக்கிக் கொண்ட மனதுடன் தன் கல்யாணப் புடவையை எடுத்தவள் அதனை உடுத்திக் கொண்டு வெளிவர, அங்கு ஹெலிகாப்டர் தயாராக நின்றிருந்தது.

ஆனால் அதனுள்ளே வருண் இல்லை.

"ஜாஃபர். இன்னைக்கு ஈவ்னிங்குள்ள துர்கா சேலத்துக்குப் போகணும். அவ சேலம் ஏர்போர்ட்டில் வந்து இறங்கப் போவதா அவங்க வீட்டுக்கு.." என்றவன் சற்று நிறுத்தி, "அவ வீட்டுக்கு வேண்டாம், அந்த ஷிவாவுக்குத் தெரியப் படுத்திடு. ஒரு வேளை அவனை ரீச் பண்ண முடியலைன்னா ஷிவாவோட அப்பாவுக்குக் கால் பண்ணி சொல்லிடு. துர்கா ஏர்போர்ட்டை விட்டு வெளியேறியதும் அவளைப் பிக்கப் செய்யக் காரை நான் ஏற்பாடு செய்துடுறேன். ஆனால் அவளுடைய ஃபேமிலியில் இருந்து யாராவது வந்து அவளைக் கூட்டிட்டுப் போகும் வரை நீ அவளைக் கண்காணிச்சிட்டு இரு. மறந்தும் கூட அவளைத் தனியா விட்டுடாத. அதே சமயம் தள்ளி இருந்தே அவளை வாட்ச் பண்ணு. பி கேர்ஃபுல். நீயும் மாட்டிவிடக் கூடாது, அவளுக்கும் எந்த ஆபத்தும் வந்துடக் கூடாது.. பத்திரமா கொண்டு போய் அவளை அவள் வீட்டில் சேர்ப்பது உன் கடமை. முடிஞ்சதும் நீ உடனடியா கிளம்பி வந்துடு.”

கூறியவன் குடிலின் புறம் திரும்பினான்.

நிலநடுக்கத்தை ஒத்தளவில் ஏக்கமும் கோபமும் ஆங்காரமும் ஏமாற்றமும் ஒருங்கே சேர்ந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவன், அங்கு வாயிலின் அருகே ஆரஞ்சு நிறத்தில் வயலெட் கரையிட்ட திருமணப் பட்டுப்புடவையில் அச்சூழ்நிலையிலும் தேவதையென எழிலோடு நின்றிருந்தவளை ஆழ்ந்துப் பார்த்தவாறே அவளை நெருங்கினான்.

"ஜாஃபர் உன்னை உன் வீட்டில் சேர்த்துடுவான் துர்கா."

"நீ.. நீ.. நீங்க வரலை?"

"இல்லை.. எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு.. நான் இங்க இருந்து தான் அந்த வேலைகளை முடிக்கணும்."

கூறியவனாய் அவ்விடத்தில் இருந்து நகர எத்தனிக்க, அவனுக்கு வெகு அருகில் நின்றிருந்தவள் ஏதோ தோன்றியதில் சுற்றம் பார்க்காது பட்டென்று அவனது கரத்தை எட்டிப் பற்றினாள்.

என்னவென்பது போல் அவன் திரும்பிப் பார்க்க,

"திடீர்னு என்னைப் போகச் சொல்றீங்கன்னா இன்னும் என் மேல் நம்பிக்கை வரலைன்னு தான அர்த்தம்? அப்படித்தானே?" என்று மறுமுறையும் அதே கேள்வியைக் கேட்டாள்.

ஆனால் அவன் பதில் கூறவில்லை.

ஜாஃபரின் புறம் திரும்பியவன்,

"முடிஞ்சதும் நீ கிளம்புறதுக்கு முன்னாடி எனக்குத் தகவல் அனுப்பு.." என்று மட்டும் கூறிவிட்டு அவளின் கரத்தை தன் கரம் மேலிருந்து பிரித்தெடுத்தவனாய் குடிலிற்குள் நுழைந்துவிட, துக்கத்தில் தொண்டை அடைக்கச் சுற்றி நிற்பவர்களை ஒரு முறைப் பார்த்தவளின் கண்கள் சசிதரனின் மீது நிலைத்ததில் அதிர்ந்து விரிந்தது.

'இவன் எப்படி இங்க வந்தான்? இன்னும் இவன் இங்க இருக்கான்னா, இவர் என்னை இன்னும் நம்பலைன்னு தானே அர்த்தம். ஆக, இவன் மேல் வைச்ச நம்பிக்கையை இவர் என் மேல் வைக்க விரும்பலை.'

இறுகிய நெஞ்சத்துடன் மீண்டும் குடிலின் புறம் திரும்பியவள் வருணை எதிர்பார்த்து நிமிட நேரம் நின்றவளாய் ஏக்கத்துடன் பார்த்துவிட்டுப் பின் ஹெலிகாப்டரில் ஏற, அக்கணம் வரை அவளையே பார்த்திருந்த ஜாஃபருக்கு புரிந்து போனது, அவளது மனம் இப்பொழுது ஷிவ நந்தனிடம் இல்லை என்று.

*********************************************

I didn’t love you to seek revenge.

I didn’t love you out of loneliness or unhappiness.

I didn’t love you for any of the misguided reasons that time might convince you I did.

I just loved you because you’re you.

I think perhaps I will always hold a candle for you – even until it burns my hand.

And when the light has long since gone.

I will be there in the darkness holding what remains, quite simply because I cannot let go.

― Ranata Suzuki

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..
 
Last edited:

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,
கொஞ்சம் பேருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு. துர்கா எப்படி அதற்குள் வீட்டுக்குத் திரும்பி வந்திருக்க முடியும் என்று.
கட்சிரோலி- சேலம் - 758 மைல்கள். On an average a helicopter can fly at the max of 150 miles per hour. Which means it will take approximately 5.30 hours to reach Salem, from Gadchiroli. Please do the math :)
Thanks

Jb
 

Vidhushini

New member
தன் மனதில் மாற்றத்தை/தாக்கத்தை ஏற்படுத்தியவரைப்பற்றி, தனது யூகங்களில் கணித்து முடிவெடுத்த இந்த நால்வரும் தங்கள் உள்ளுணர்வினை உணர்ந்துகொண்டு செயலாற்றக் காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.... அதற்குள் என்னென்ன twists and turns வரப்போகுதோ🤷‍♀️...

Interesting @JB sis.
 

saru

Member
Lovely and super dear
Adeiii Varun enna da ithu
Durga pakrapa Ana shiv kandupidika vaipiruku nu thonuthu
Ini enna nadakumo
 
Wow… Varun is disturbed.. Durga avanukku kidaikkama poiduwalo nu… Shiv peyaroda ava peyar serthu vechi pesurathe pidikkala…
Same as Sithara… Durga vai Shiv meet panna poran nu theriyavume she broke…
Durga eppo avaloda love ah feel pannuwalo…

Antha dead body Sasi illana appo yaru???
Oru velai Sasi ya spy panna vandha Mirza brothers oda henchman ah iruppano??? 🤔🤔🤔

Anyhow, Sasi ku aapu on its way 🤨🤨🤨
 

Lucky Chittu

New member
Varun piriyurathu Durga Kum varukkume varutham thaan. Sekiram thirumba onnu seranum ivunga rendu perum. Shiv nanthan ah piriyurathu sithara Kum varutham. Onnu serntha Mirza brothers ku adhiradi saravedikkaga waiting mam.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top