JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakkalin Vettai - Episode 29

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 29

‘மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷின் இரண்டு வயது மகன் ஆதவ் விக்னேஷ் கடத்தப்பட்டு ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களாகியும் அவனைப் பற்றிய ஒரு தகவலும் இல்லாத நிலையில் குழம்பிப் போய் நிற்கின்றனர் காவல் துறையினர்.’

‘உண்மையில் குழந்தைக் கடத்தப்பட்டிருக்கின்றானா என்ற கேள்விக்குப் 'பின் இரு வயது குழந்தைத் தானாக நடந்து வேறு எங்காவது சென்று ஒளிந்து கொண்டிருக்கின்றான் என்கிறீர்களா?' என்று நக்கலாகக் கூறிய அரசியல் தலைவர் ஒருவருக்குப் பெரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர், அமைச்சர் ஆர்ய விக்னேஷின் '--- ' கட்சியினர்’.

அனைத்துத் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் ‘breaking news’ - ஆக வந்து கொண்டிருந்த ஒரே செய்தி இது தான்.

நீர் மட்டும் கண்களில் இருந்து வழிந்து கொண்டு இருந்ததே ஒழிய, உயிருடன் தான் இருக்கின்றாளா இல்லை சிலையாகிப் போனாளா என்ற சந்தேகமே எழுமளவிற்குச் சுற்றம் மறந்து இடிந்துப் போனவளாக அமர்ந்திருந்த சீதாலட்சுமியின் புத்தி, நினைவுகள், மனம், அறிவு, இதயம் என்று அனைத்திலுமே நிறைந்திருந்தவன், மகன் ஆதவ் விக்னேஷ் மட்டும் தான்.

"எப்படியும் கண்டுப்பிடிச்சிடலாம் மேடம்.. நீங்க கவலைப்படாதீங்க."

மத்திய அமைச்சரின் மகன் காணாதுப் போயிருப்பதால் உயர் காவலதிகாரிகள் பலரும், பெரும் அரசியல்வாதிகளும் ஆர்யனின் வீட்டில் குழுமியிருந்தனர்.

ஆயினும் எவருடைய ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கை அளிக்கவில்லை சீதாலட்சுமிக்கு.

விநாடிகள் நிமிடங்களாகக் கரைய, சிமிட்டுவது கூட இத்தனை கனமாக இருக்குமா என்று வியப்பது போல் கண்களும் ஒரே இடத்தில் நிலைத்தனவாய் உரைந்து போயிருக்க, அசைவற்று உட்கார்ந்திருக்கும் மனைவியைப் பார்த்தவாறே முன்னறைக்குள் நுழைந்த ஆர்யன் அவளருகே அமர்ந்தான்.

"சீதா.."

அதுவரை பலர் அவளிடம் வந்து பேசியும் உணர்வற்று அமர்ந்திருந்தவள் கணவனின் ஒற்றை அழைப்பில் அவனைத் திரும்பிப் பார்க்க, மனைவியின் செய்கையில் உருகியவனாக அவளைத் தன் தோள் மேல் சாய்த்துக் கொண்டான் ஆர்யன்.

"இவ்வளவு பேர் தேடிட்டு இருக்காங்க, எப்படியும் நம்ம குழந்தையைக் கண்டுப்பிடிச்சிடுவாங்க சீதா, பயப்படாத.."

அவனது கூற்றுக்கு அவளிடம் எந்த ஒரு எதிர்வினையும் இல்லை.

அவளின் முகவாயை மென்மையாகப் பற்றியவன் அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தியவாறே, "நம்ம குழந்தையை நான் எப்படியும் பத்திரமா மீட்டெடுப்பேன் சீதா. என் மேல் நம்பிக்கை இருக்குல்ல உனக்கு?" என்றான்.

அவனது விழிகளையே உறுத்து நொடிகள் சில பார்த்தவள், கண்களை ஒரு முறை அழுந்த மூடித் திறந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவளாய், "எனக்கு ஷிவாக்கிட்ட பேசணும்.." என்றாள்.

அவளின் குரலில் தொனித்த அழுத்தம் கட்டளையாகவே தெரிய, உள்ளுக்குள் தன் மனைவி தன்னை நம்பாது தனது பரம எதிரியை நம்பும் விசித்திர சூழலை நினைத்து நகைத்துக் கொண்டவனாய் அலைபேசியை வெளியில் எடுத்தவன் மனைவியிடம் நீட்டினான்.

பேசியை வாங்கியவள் ஒலிப்பெருக்கியை [speakerphone] உயிர்ப்பித்தாள்.

"ஹலோ.."

"ஷிவா, நான் சீதா பேசுறேன்.."

"கேள்விப்பட்டேன். சொல்லு சீதா.."

"எனக்கு என் குழந்தை வேணும் ஷிவா.."

"நான் என்ன செய்யணும்னு சொல்லு.."

"என் குழந்தை மேல் ஒரு கீறல் விழுந்திருக்கக் கூடாது. தூக்கத்தில் இருந்து முழிக்கிறவன் மாதிரி எந்தப் பாதிப்பும் இல்லாமல் என்கிட்ட அவன் வந்து சேரணும். என் குழந்தையை என்கிட்ட பத்திரமா கொண்டு வந்து சேர்ப்பியா ஷிவா?"

தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைவிடப் பால்ய நண்பனின் மேல் அலாதி நம்பிக்கை வைத்திருக்கும் மனைவியை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தான் ஆர்யன்.

ஆயினும் இக்கணம் அவனுக்குமே அவன் குழந்தை எவ்வித ஆபத்துமின்றித் திரும்பி வர வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. எதிர்மறையான பிற எண்ணங்களும் இல்லை.

"சீதா, இன்னைக்கு நைட் உன் குழந்தை உன் கூடத் தான் தூங்குவான்."

வெகு உறுதியுடன் கூறிய ஷிவாவின் சாரீரத்தில் இருந்த ஒலி வாழ்க்கையில் முதன்முறை ஆர்யனின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் இரு வேறு உணர்வுகளை உருவாக்கியது.

இவன் என் எதிரி! வெகு சாமர்த்தியசாலி! என்னை எப்பொழுது வேண்டுமானாலும் அழித்துவிடும் சாதுர்யமும் அத்துடன் உக்கிரமும் இணைத்துப் பெற்றவன். இவன் முந்துவதற்கு முன் இவனை நான் அழித்துவிட வேண்டும்!!

இவன் என் எதிரி! வெகு சாமர்த்தியசாலி! என்னால் முடியாததைக் கூட அதிபுத்திசாலித்தனத்துடன் முடித்துக்காட்டக் கூடியவன் இவன். அதற்கு வழிவகுப்பது அளவிட முடியாதளவிற்கு இவனுடன் பிறந்திருக்கும் இவனது அலாதியான துணிச்சல். இவனைப் போன்ற நல்லவர்கள் இவ்வுலகத்திற்குத் தேவை. இவனை நான் எக்காரணம் கொண்டு அழித்துவிடக் கூடாது!!

இதில் எதனைத் தான் செயல்படுத்த வேண்டும்?

மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்த ஆர்யன் அலைபேசியை அணைத்துத் தன் கையில் கொடுத்த மனைவியை மீண்டும் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

ஆனால் அன்று தான் அளித்த வாக்கைக் காப்பாற்ற முடியாது மிகப்பெரிய அதிர்ச்சியிலும் வேதனையிலும் மூழ்கிப் போனான் ஷிவா.

எவ்வளவோ புத்திசாலித்தனமாகத் தேடியும் குழந்தையை உயிரற்ற சவமாகத் தான் கைப்பற்ற நேர்ந்தது.

அதுவும் இல்லாது குழந்தையின் முகம் அடையாளம் தெரியாத அளவிற்குச் சிதைக்கப்பட்டிருந்தது.

இறந்த பாலகனைக் கைகளில் சுமந்த ஷிவாவின் உள்ளம் ஆழ்ந்த வேதனையில் ஆழ்ந்துப் போனதென்றால், அவனிடம் இருந்து மாய்த்துப் போன மகனை கைகளில் வாங்கிய ஆர்யனின் இதயம் வாழ்க்கையில் முதன் முறையாகச் சுக்கு நூறாக உடைந்து போனது.

சோகத்திலும் பெருஞ்சோகம் புத்திர சோகம்.

அதனை அன்று அனுபவித்தான் ஆர்யன் என்றால், பார்க்காதே என்று எவ்வளவோ வற்புறுத்தியும் மீறி குழந்தையைப் பார்த்த சீதாலட்சுமியின் உயிர் மரிக்காமல் மரித்துப் போனது.

"இல்ல, இது என் குழந்தை இல்லை.. அவன் வேற எங்கயோ உயிரோடு இருக்கான். நான் நிச்சயமா சொல்றேன். இது என் குழந்தையே இல்லை.."

தொண்டை அடைக்க, நாக்கு உலற கத்திக் கொண்டிருந்தவளின் கூற்றைப் பொய்யாக்கினார் மருத்துவர் [medical examiner/pathologist].

"இது உங்க குழந்தை தான் மிஸ்டர் ஆர்ய விக்னேஷ்."

ஷிவாவின் மீது வழக்கத்திற்கு மாறாக முதன்முதலாகப் பிறந்திருந்த நம்பிக்கையும் பிறந்த அன்றே மரித்துப் போனது ஆர்யனின் மனதில்.

விதி அதன் போக்கில் தன் விளையாட்டை ஆடிக் கொண்டிருக்க, ஒரு நேரம் மதியால் அதனை வெல்ல முடியும் என்றும், மறு நேரம் விதியை வெல்ல எவராலும் முடியாது என்றும் அல்லாடிக் கொண்டிருந்த மனிதர்களை அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட வைத்துக் கொண்டிருந்தார் பிரம்மா [Vidhata].

************************************************************

யார்மீஸ் என்று அழைக்கப்படும் மலைக்கிராமம் அது.

அதன் மறு பெயர் 'Weep Ridge'

அதாவது அழுகை மேடு என்ற பெயர் பெறும், மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள அந்தக் கிராமம், நிலத்தில் இருந்து 10,600 அடிகள் உயரத்தில் இருந்தது. [Imaginary place friends]

வட இந்திய மாநிலமான இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவில் இருந்து ஏறக்குறைய இரு நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த அக்கிராமத்தில் ஒரு காலத்தில் மனிதர்கள் வசித்து வந்ததாகவும், பிரிட்டானியர்கள் காலத்தில் அங்கு ஒரு சிமெண்ட் தொழிற்சாலை கட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அந்தத் தொழிற்சாலையே அங்கு வாழ்ந்து வந்த மக்களின் பொருளாதாரத்திற்கு வழிவகுத்து வந்ததாகவும் பேசப்படுகின்றது.

ஆனால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்து கிட்டத்தட்ட முழு ஆலையையும் அழித்ததாகவும், ஆலைக்குள் அத்தருணம் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த பல பணியாளர்கள் இறந்துப் போனதாகவும் கூறப்படுகின்றது.

இரவு நேரங்களில் அவர்களின் கூக்குரல்களும், சிரிப்பும் அழுகையும் கலந்த சத்தங்களும், திடீர் திடீரென ஓங்கி ஒலிக்கும் இயந்திரங்களின் ஓசைகளும் கேட்பதாகப் புரளிகள் வெளிவரத் துவங்க, அதிர்ந்து அரண்டுப் போன மக்கள் அம்மலைக்கிராமத்தை விட்டு சிறிது சிறிதாக இடம்பெயர ஆரம்பித்தனர்.

இது நடந்து பல வருடங்கள் ஓடிவிட்ட பின்பும் அம்மலைக்கிராமத்திற்குச் செல்ல இன்று வரை ஒருவருக்கும் துணிவு வரவில்லை.

காலப்போக்கில் இருள் அடைந்த, அமானுஷ்யம் நிறைந்த, கைவிடப்பட்ட [abandoned] கிராமமாக அது மாறிப்போனது.

மனித அரவமே இல்லாத அம்மலைக்கிராமத்தின் ஒரு பகுதியில் இருந்தது 'ஹென்றி பார்லோவ் கோட்டை' [Henry Barlow's Fortress]

அத்தொழிற்சாலையின் முதலாளிகளில் ஒருவரான ஹென்றி பார்லோவின் வீடு அது, ஏறக்குறைய ஒரு கோட்டையைப் போன்றே தோற்றமளித்தது.

அக்காலத்திலேயே அது அமானுஷ்ய சக்திகள் நிறைந்த வீடு என்றழைக்கப்பட்டது. [haunted house]

காரணம் அத்தீவிபத்தில் அன்று ஆலைக்குள் இருந்த ஹென்றியும் அவரது மனைவியும் இறந்து போயிருக்க, அவர்களின் பேச்சுச் சப்தம் ஹென்றி பார்லோ கோட்டையிலும் கேட்பதாகப் புரளிக் கிளம்பியிருக்க, பல ஆண்டுகளாக மானிட வாடையே அற்ற வீடாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த அவ்வீட்டில் இன்று அதிசயமாக ஒருவன் அமர்ந்திருந்தான்.

ஒரு காலத்தில், பார்த்த கண்கள் பார்த்தது போல் இமைகளைச் சிமிட்டக்கூட மனிதர்களை மறக்கச் செய்யும் பேரெழிலோடு வீற்றிருந்த அந்தப் பரந்த கோட்டை, இப்போது சுற்றியுள்ள நிலப்பரப்பில் இருந்து பிரித்தறிய முடியாதளவிற்கான கொடுமையான தோற்றத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் மற்றும் இலை தழைகள் கோட்டை முழுவதுமே ஆக்கிரமித்திருந்தன.

கதவுகளும் ஜன்னல்களும் இருந்த இடமே தெரியாதளவில் நொறுங்கியிருக்க, இடிந்த சுவர்கள் மற்றும் இடிபாடுகளின் குவியல்களுக்குள் இருந்து முளைத்திருந்த செடிகள் கொடிகளாய் உடைந்த கூரை நெடுக்கிலும் படர்ந்திருக்க, வண்ணப்பூச்சு மங்கிப் போய் அச்சமேற்படுத்தும் அளவில் காட்சியளித்துக் கொண்டிருந்த அக்கோட்டையின் படுக்கையறைக்கு மத்தியில் இருக்கை ஒன்று இருந்தது.

அதனில் அமர்ந்திருந்த அம்மனிதனின் கால்களும் கரங்களும் இருக்கையோடு சேர்த்துப் பிணைத்துக் கட்டப்பட்டிருக்க, அந்த இருக்கை அவனுக்குப் பின்னால் பிரம்மாண்டமாக இருந்த கட்டில் ஒன்றுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்தது.

மயக்கத்தில் இருப்பவன் போல் தலையைத் தொங்கவிட்டு அமர்ந்திருந்தவனின் உடல் முழுவதுமே காயங்கள் பட்டிருந்ததில் இரத்தம் சொட்டு சொட்டாக வழிந்து தரை முழுவதும் தெறித்துக் காய்ந்து கிடந்தது.

குறைந்தது நான்கைந்து நாட்களாகவாவது அவன் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றான் என்பது அவன் அணிந்திருந்த ஆடைகளின் அழுக்குக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

ஒரு காலத்தில் பல ஓசைகளால் நிரம்பியிருந்த அந்த மலைக்கிராமத்தில் இப்பொழுது வீசும் காற்றின் ஓசையையும், அதற்கு இடையில் மெல்லியதாய் ஒலித்துக் கொண்டிருக்கும் அவனின் மூச்சு சப்தத்தையும் தவிர வேறு ஓசையே இல்லை என்பது போல் விளங்கிய அத்தருணத்தில் வேறு ஒரு சப்தம் கேட்டது.

மயக்கத்தில் ஆழ்ந்திருந்தவன் போல் தலை தொங்க அமர்ந்திருந்தவனின் செவிகளில் துல்லியமாய் அவ்வொலி விழ, அரண்டவனாய் மெள்ள தலை நிமிர்த்தியவனின் முகம் திகிலில் வெளிரிப் போனது.

"ப்ளீஸ், எ..என்னை வி..விட்டுடு.. ஏன் இவ்வளவு நாளா இப்படி என்னை அடைச்சு வச்சு சி..சித்திரவதை செய்யற? எனக்குத் தான் ஒண்ணும் தெ..தெரியாதுன்னு சொல்லிட்டேனே."

தண்ணீர் பருகி பல நாட்கள் ஆனதில் தொண்டை வரண்டு போயிருக்க, அத்துடன் பெரும் கிலியும் இணைந்ததில் வார்த்தைகள் வெளிவரவில்லை.

ஆயினும் வெகு சிரமப்பட்டுத் திக்கித்திணறி பேசும் அவன் முன் தன் வலது கரத்தை பேண்ட் பாக்கெட்டினுள் விட்டவனாய், இடது கரத்தால் பிடித்திருந்த சிகாரின் புகாரை ஆழ இழுத்து வெளியிட்ட ஆர்யனின் உதடுகள் கசப்பான புன்னகையில் நெளிந்தன.

"இதையே எத்தனை தடவை சொல்லிட்டே இருக்கப் போற? உண்மையைச் சொல்லிடு.. உன்னை எதுவும் செய்யாமல் விட்டுடுறேன்."

"எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என் அண்ணன் சும்மா இருப்பாருன்னு நினைக்கிறியா ஆர்யன்?"

"ம்ப்ச். எதுக்கு இந்த மிரட்டல்? உன்னை நான் கடத்தி கிட்டத்தட்ட அஞ்சு நாள் முடிஞ்சிடுச்சு. நீ எங்க இருக்கன்னு கூடத் தெரியாமல் அவன் திண்டாடிட்டு இருக்கான். அவன் எப்போ உன்னைக் கண்டுப்பிடிக்கிறது, எப்போ என் மேல கையை வைக்கிறது?"

"அவர் எப்படியும் என்னைக் கண்டுப்பிடிச்சிடுவார். இல்லைன்னாலும் உன் உயிர் அவர் கையில் தான் இருக்குங்கிறதை மறந்துடாத."

அது வரை இறந்துவிட்டானோ என்று எண்ணும் அளவிற்குச் சடலம் போல் உட்கார்ந்திருந்தவனின் இந்த வேகம், தன் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் மனிதனின் இறுதி ஒலி என்பதால் அந்தக் கோட்டையே அதிரும் வகையில் ஓங்கி ஒலித்தது.

"என் உயிர் யார்கிட்ட இருக்குங்கிறதை பிறகு பார்க்கலாம். இப்போ உன்னை என்ன செய்யறதுங்கிறதை மட்டும் நாம் டிஸ்கஸ் பண்ணலாம். ஆனால் அதுக்கு முன்னாடி ஏன் அப்படிச் செஞ்சீங்க? எதுக்கு? அதை மட்டும் சொல்லு.."

கூறியவனாய் அறையின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலியை இழுத்த ஆர்யன் அதனை அம்மனிதனின் முன் போட்டவனாய் அதில் கால் மேல் கால் போட்டவாறே அமர்ந்தான்.

"ஆர்யன், நீ நினைக்கிற மாதிரி கிடையாது. சஹானாவை நான் தான் கொன்றேன். ஆனால் அதுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.”

மீண்டும் மீண்டும் இதே பதிலைக் கூறுபவனைக் கண்டு எரிச்சல் அடைந்தாலும் அதனை முகத்தில் வெளிப்படுத்தாது சிகாரை மட்டும் புகைத்தவாறே அமர்ந்திருந்த ஆர்யன், உன்னை நான் நம்பவில்லை என்பதைப் போல் தலையை மட்டும் இடம் வலமாய் அசைத்தான்.

ஆக, நான் என்ன சொன்னாலும் இவன் நம்பப் போவதில்லை.

எத்தனையோ உயிர்களைத் துச்சமென நினைத்துச் சூறையாடியிருந்த அம்மனிதனின் இதயம் இப்பொழுது பெருந்திகிலில் மூழ்கிப் போனது.

“சரி, உண்மையைச் சொல்லிடுறேன் ஆர்யன். ஆனால் அதற்குப் பிறகு நீ என்னைக் கொல்ல மாட்டன்னு என்ன நிச்சயம்? உன் உயிருக்கு உத்தரவாதம்?"

"நீ இப்படி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கிறதுக்கே நான் உன்னைக் கொல்லணும். எனிவேய்ஸ், நீ முதலில் சொல்லு, மற்றதைப் பிறகு பார்க்கலாம்."

நொடிகள் சில யோசித்த அந்த மனிதன் ஒரு நீண்ட மூச்சுவிட்டவன்,

"உன்னைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கத்தான் நாங்க அவளை உன் கூடப் பழகவிட்டோம் ஆர்யன். ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளால் உன்னைப் பற்றிய எந்தவித ரகசிய தகவலும் கண்டுப்பிடிக்க முடியலை. ஆனாலும் எங்களுக்கு அவ மேல சந்தேகம் இருந்துட்டே இருந்தது. ஒரு வேளை உன்னைப் பற்றி எல்லாமே தெரிஞ்சும் அவள் வேணும்னே எங்கக்கிட்ட இருந்து அதை எல்லாம் மறைக்கிறாளான்னு. அப்போ தான் நீயும் அவளும் பிரிஞ்சிட்டதா எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அடுத்த நாளே அவள் வெளிநாடு போகப் போறதா தகவலும் வந்தது.

அப்படின்னா உன்னைப் பற்றிய ஏதோ ஒரு முக்கியமான ரகசியம் அவளுக்குத் தெரிய வந்திருக்கு. அதை எங்கக்கிட்ட இருந்து மறைக்கத்தான் நீ அவளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு செஞ்சிருக்க. நீயும் அவளும் பிரிஞ்சது வெறும் கண் துடைப்புக்காகத் தான்னு நான் தவறா நினைச்சிட்டேன். அதனால் உன் இரகசியத்தை அவளிடம் இருந்து வரவழைப்பதுக்குத் தான் நான் அவளை அடைச்சு வச்சு சித்திரவதை செஞ்சேன். ஆனால் நீ நிஜமாகவே அவளிடம் இருந்து பிரிஞ்சிட்டன்னும், அதுக்குக் காரணம் அவளுக்கு என் கூட இருந்த தொடர்புதான்னும் திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருந்தாள். அவள் பொய் சொல்றான்னு நினைச்சு ஆத்திரம் வந்து அவளைக் கத்தியால் குத்தினேன், அதில் அவள் செத்துத் தொலைச்சிட்டாள்..” என்று முடிக்க, அது வரை மறுத்தவன் இப்பொழுது கூறுவதில் ஒருவிதத்தில் ஏதோ ஒரு நிதர்சனம் இருக்கின்றது என்பது ஆர்யனுக்குப் புரிந்தது.

ஆயினும் அவனைக் கடத்தி வந்து இங்கு அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொண்டிருப்பது சஹானாவிற்காக அல்லவே.

“ஸோ, அதுக்காகத் தான் என்னுடைய குழந்தையைக் கடத்தின..”

“ம்ம்ம்..”

“அதாவது சஹானாக்கிட்ட கேட்ட அதே கேள்வியை என்னிடமும் கேட்க நினைச்ச. அதற்காக என் குழந்தையைக் கடத்தி என்னைப் பிளாக் மெயில் பண்ண முயற்சி செஞ்ச, ஆனால் அதற்குள் குழந்தை..” என்று முடிக்காது விட்ட ஆர்யனின் கண்களில் சட்டென நீர் திரள ஆரம்பித்தது.

ஆனால் சடுதியில் தன்னை நிலைப்படுத்தியவனாய் தலையைச் சிலுப்பிக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன், சிகாரைப் புகைத்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டவனாய், “அதற்குள் என் குழந்தையைக் கொன்னுட்ட..” என்றான், அமைதியாய் ஆனால் அழுத்தமாய்.

ஆர்யனின் கண்களில் வெறி பரவுவதையும், அவனது தாடை இறுகுவதையும், சிகாரைப் பிடித்திருக்கும் அவன் கை நரம்புகள் தெறிக்கும் அளவிற்குப் புடைப்பதையும் கண்ட அம்மனிதனுக்கு, பீதியில் இரத்தமே திட்டுதிட்டாய் வியர்வைப் போன்று வழிவதைப் போல் இருந்தது.

“ஆர்யன்...”

“நீ முழு உண்மையையும் சொல்லாமல் உன்னை எப்படியும் நான் விடப் போவதில்லை. இப்படிப் பயத்துலேயே சாவதற்குப் பதில் உண்மையைச் சொல்லிடு. உன்னை எதுவும் செய்யாமல் நான் விடுவதற்கும் வாய்ப்பிருக்கு.”

ஆர்யனை நம்புவதைவிட ஊண் உறக்கம் இன்றி இங்கேயே செத்துப் போய்விடலாம் என்பதே அத்தருணத்தில் அம்மனிதனின் உள்ளத்தில் தோன்றிய எண்ணம்.

ஆயினும் மரணப் பயம் யாரை விட்டது??

மெள்ள வாயைத் திறந்தான் அனைத்து விஷயங்களையும் பகர்வதற்கு.

“இல்லை ஆர்யன். நாங்க எதுவும் செய்யலை. உன் குழந்தையைக் கடத்தியது மட்டும் தான் நான். ஆனால் நான் அவனைக் கொலை செய்யலை..”

“அப்படின்னா எப்படி என் குழந்தை இறந்தான்? இதுக்கும் மேல மறைக்காத, அது உனக்கும் நல்லது இல்லை, உங்க அண்ணனுக்கும் நல்லது இல்லை.”

கூறிய ஆர்யன் முன்னோக்கி சாய்ந்தவனாய் கால்கள் இரண்டையும் சற்றே அகலவிரித்து அமர்ந்தவனாய் அம்மனிதனை துளைத்துவிடும் நோக்கோடு பார்க்க, அடைத்திருந்த எச்சிலை விழுங்கியவன் வேறு வழியின்றி நடந்தவற்றை மெய்யாய் கூற விழைந்தான்.

“சரி ஆர்யன், சொல்லிடுறேன். சஹானாவை கொலை செய்யற வரைக்கும் எங்களுக்கு அந்த ரகசியம் தெரியாது. ஆனால்..”

“ஆனால்??”

“நீ யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சிட்டு செஞ்சிட்டு வர ஆராய்ச்சிகளை நாங்க ஒரு வழியா கண்டுப்பிடிச்சோம். அதில் ஒண்ணு, உலகத்திலேயே இது வரை இல்லாதளவுக்குப் பவர்ஃபுல்லான ஒரு போதை மருந்தைக் கண்டு பிடிக்கிறதுக்கான ஆராய்ச்சி. ஆனால் மிர்சா பிரதர்ஸுக்கு அது தெரியாமல் போகாதுன்னு நீ நினைச்சப் பாரு, அங்க தான் நீ சறுக்கிட்ட. அந்தத் தாவூத் இப்ராகிமையே தோற்கடிக்கும் சக்தி படைத்தவர் என் அண்ணன். அவருக்குத் தெரியாமல் இந்த நாட்டில் எதுவும் நடக்குமா என்ன?

ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் உன்னை நாங்க பாராட்டணும். எங்களால் உன்னுடைய ஆராய்ச்சிகளைப் பற்றித் தான் தெரிஞ்சுக்க முடிஞ்சுதே ஒழிய, அதை நீ எந்த இடத்தில் செய்யற, அதில் யார் யார் ஈடுபட்டிருக்காங்க அப்படிங்கிற எந்தத் தகவலையும் எங்களால் கண்டுப்பிடிக்க முடியலை. அது எங்களுக்குத் தேவையும் இல்லை. பட், அந்தத் திட்டத்தை உன் கிட்ட இருந்த தெரிஞ்சிக்கறதுக்கும், அந்தப் போதை மருந்திற்கான ஃபார்முலாவைக் கண்டுப்பிடிக்கிறதுக்கும் மட்டும் தான் குழந்தையை நான் கடத்தினேன். அவனை வச்சு உன்னை மிரட்டனுங்கிறது மட்டும் தான் எங்க ப்ளான். ஆனால் நாங்களே எதிர்பாராதவிதமா அந்த S.S.P ஷிவ நந்தன் உன் குழந்தையைக் கண்டுப்பிடிக்கும் விசாரணையில் இறங்கிட்டான். இதுல பெரிய அதிர்ச்சி சில மணி நேரங்களிலேயே எங்க இருப்பிடத்தையும் கண்டுப்பிடிச்சிட்டான். உன் குழந்தையை எங்களிடம் இருந்து எடுத்துட்டும் போயிட்டான். சரி விட்டுடு, ஆர்யனை மடக்க வேற வழிப் பார்க்கலாமுன்னு அண்ணா சொன்னதும் நாங்களும் விட்டுட்டோம். ஆனால் அதற்குப் பிறகு தான் உன் குழந்தை இறந்துட்டதாக வெளி வந்த நியூஸை நாங்கப் பார்த்தோம். உயிரோட அந்த ஷிவ நந்தன் மீட்ட குழந்தை எப்படிச் செத்துப் போனான்னு எங்களுக்குத் தெரியாது."

அவன் கூற கூற நிறுத்தாது சிகாரைப் பிடித்துக் கொண்டிருந்த ஆர்யனின் முகம் கொடூரமாய் மாறியது.

காரணம் இரண்டு.

ஒன்று அவனை நம்ப மறுத்ததால் அல்ல, அவனை நம்பாமல் இருக்கவும் இயலாததால்.

குழந்தை இறந்ததற்குக் காரணம் அதன் மூச்சுக் குழாய் அடைப்பட்டது தான் என்பது அனைவருக்குமே தெரியும்.

பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டும் அதனையே கூறியது.

ஆனால் குழந்தை அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை ஷிவா அடைவதற்கும், குழந்தை இறந்திருக்கும் நேரத்திற்கும் இடையில் ஒரு சில நிமிடங்களே இருக்க, குழந்தையின் மரணம் எவர் கையினால் வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம்.

அது இவனுடைய கூட்டாளிகளின் கரங்களினாலோ அல்லது ஷிவாவின் கைகளினாலோ இருக்கலாம்.

ஆனால் குழந்தையின் உருவம் சகிக்க இயலாதளவிற்குச் சிதைக்கப்பட்டிருந்தது.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் எடுத்திருக்கும் ஷிவா தன் பரம எதிரியே. ஆனால் தன்னைப் பழிவாங்க ஒரு குழந்தையை அப்படிச் சிதைக்கும் அளவிற்குக் கொடியவனா அவன்?

இரண்டாவது காரணம், தன்னைத் தவிர வேறு எவருக்கும் கடுகளவுக் கூடத் தெரியாத தன் போதை மருந்து கண்டுப்பிடிப்பு இவனுக்குத் தெரிய வந்திருக்கின்றது.

அக்கணம் ஆர்யனை மூழ்கடித்திருந்த ஆங்காரமும் ஆத்திரமும் அவனது புத்தியை சற்று மழுங்கடித்திருந்தது என்றே கூறலாம்.

தனக்கு எதிரில் இருந்த இருக்கையை அசுரன் போல் ஆர்யன் வேகமாய் எட்டி உதைத்ததில் அம்மனிதனும் இருக்கையோடு சேர்ந்துக் கீழே விழுந்தான்.

மெள்ள எழுந்து நின்ற ஆர்யனின் கண்களில் தெரிந்த ரௌத்திரம் அவனை நடுநடுங்கச் செய்ய,

"ஆர்யன், நான் சொல்றது நிஜம். அந்த ஷிவ நந்தன் தான் உன் குழந்தை இறந்ததற்கு.." என்றவனை முடிக்கவிடாது, அவனது குரல்வளையில் தனது காலை வைத்தவன் ஷூவின் நுனிக் கொண்டு அழுத்த ஆரம்பித்தான்.

அதனில் பேச இயலாது தடுமாறிய அம்மனிதனின் உடல் வலியால் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.

ஒரு சில விநாடிகள் அவனைக் கூர்ந்து நோக்கிய ஆர்யன் காலை சட்டென எடுக்க, மூச்சிற்குத் துடித்துக் கொண்டிருந்தவன் தடைப்பட்ட ஸ்வாசம் வெளியேறத் துவங்கியதும் தடுமாற்றத்துடன் மூச்சைவிட ஆரம்பித்தான்.

கடந்த நான்கைந்து நாட்களாக எவ்வளவோ அடிகள் வாங்கியும் பதிலளிக்காதவன் இப்பொழுது வேறு வழியின்றி உண்மையைக் கூறியதில் இதற்கு மேல் இவனைவிட்டால் பெரும் ஆபத்து என்று முடிவு செய்த ஆர்யன், மீண்டும் அவனது கழுத்தில் கால் வைக்க வரவும், அரண்டு போனான் அம்மனிதன்.

அவனது துடிப்பை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனின் நினைவலைகளில் இறந்துப் போன குழந்தை ஆதவ் விக்னேஷின் முகம் படர, விடுவிடுவென அறையைவிட்டு வெளியேறவும், போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது அம்மனிதனுக்கு.

ஆர்யன் வருவதற்குள் எழுந்துவிட வேண்டும் என்று முயற்சித்தவன் இருக்கையோடு பிணைக்கப்பட்டிருந்த உடலை அங்குமிங்கும் அசைக்க, அவனது ஆசை நப்பாசையாகும் அளவிற்கு, வெட்டுப்பட்ட மிருகம் போல் துடித்துக் கொண்டிருப்பவனின் மீது பார்வையைப் பதித்தவாறே மீண்டும் அறைக்குள் நுழைந்தான் ஆர்யன்.

அவனது கரங்களில் மதுபாட்டில் ஒன்று இருந்தது.

அதனைச் சில விநாடிகள் கூர்ந்துப் பார்த்த அம்மனிதன் என்ன நினைத்தானோ முன்பை விட வேகமாக உடலை அசைத்தவனாய், "ஆ.. ஆ.. ஆர்யன்.. உன் குழந்தையை நான் தான் கொன்று இருப்பேன்னு நீ நினைச்சின்னா என்னைக் கோர்ட்டுக்குக் கொண்டு போ. அங்க நான் நிரபராதின்னு நிரூபிக்கிறேன். அல்லது உன் குழந்தையைக் கொன்றது அந்த ஷிவ நந்தன் தான்னு அவன் வாயாலேயே சொல்ல வைக்கிறேன். ஆனால் என் முடிவை நீ உன் கையில் எடுக்காதே." என்றான், அலறித் துடித்தவனாய்.

ஒரு கையில் பிடித்திருந்த மதுபான பாட்டிலுடன் அருகில் இருந்த நாற்காலியை காலால் இழுத்து அம்மனிதனுக்கு வெகு அருகில் போட்ட ஆர்யன் அதனில் அமர்ந்தவனாய், அவனது தலையை இறுக்கிப் பிடித்தவாறே கூறிய வார்த்தைகளில் மரணப் பயத்தை எய்தினான்.

"I am the judge, jury and the executioner! நீ கேள்விப்பட்டதில்லையா கலானி? இன் ஃபேக்ட் இதே டயலாக்கை நீ அடிக்கடி சொல்வன்னுக் கேள்விப்பட்டிருக்கேன். அதை இப்போ அடுத்தவங்க சொல்லும் போது பயம் வருதோ??"

கூறியவனாய்ப் பிடித்திருந்த மதுவை கலானியின் வாயில் ஊற்ற, ஆர்யனின் இடது கரம் சிகாரைப் பிடித்தவாறே கலானியின் தலையை அசைக்க முடியாதவண்ணம் பிடித்திருந்ததில் அவன் திமிற திமிற மது உள்ளே செல்ல ஆரம்பித்தது.

சில மணித்துளிகளில் மதுபானம் மூச்சுக் குழாயை அடைத்துவிட்டதில் ஸ்வாசம் தடைபட, துடிதுடித்தவாறே இவ்வுலகத்தையும், தனது நிழல் உலகத்தையும் விட்டு வெளியேறியது கலானியின் உயிர்.

யாதவ் மிர்சாவின் தம்பி, அவனது வலதுக் கரம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தவன் கலானி மிர்சா.

ஆர்யனின் ஆராய்ச்சிகளைப் பற்றி [Vermilion Bird project] தனது நீண்ட நாள் வேட்டையில் அரசல் புரசலாக அறிந்து கொண்டிருந்த கலானி, அதனைப் பற்றி முற்றிலுமாக அறிந்துக்கொள்ளவே குழந்தை ஆதவ் விக்னேஷைக் கடத்தினான்.

ஆனால் அவன் செய்த பெரும் முட்டாள்தனம் அவனது அண்ணனான யாதவ் மிர்சாவிடம் கலந்தாலோசிக்காது இதனைச் செய்தது.

அவனது அறிவீலித்தனமான செயலால் கடுங்கோபம் கொண்ட யாதவ் மிர்சா, ஆராய்ச்சிகள் நடக்கும் இடத்தைக் கண்களால் பார்க்கும் வரை எதனையும் நம்பக் கூடாது என்று தம்பியை கடிந்துக் கொண்டவன் குழந்தையை விட்டுவிடச் சொல்ல, மறுத்த கலானி அண்ணனுக்கும் தெரியாமல் வேறு ஒரு இடத்தில் குழந்தையை மாற்ற ஏற்பாடு செய்தான்.

ஆனால் அவனது கெட்ட நேரம் அந்தச் சுற்றுபுறத்தை ஏற்கனவே கண்காணித்துக் கொண்டிருந்த ஷிவாவின் துறையைச் சேர்ந்த காவலர்கள் அங்குச் சந்தேகப்படும் படி மிர்சாவின் ஆட்களில் சிலர் குழுமத் துவங்கி இருப்பதைத் தெரிவிக்க, அங்குக் குழந்தையுடன் வந்த கலானி, அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் குர்காவைக் கண்டவன், ஷிவாவிடம் மாட்டினால் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுவிடுவான் என்று அரண்டுப் போனவனாய் வேறு வழியின்றிக் குழந்தையை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தன் ஆட்களுடன் தலைமறைவானான்.

கலானியை பிடிக்குமாறு காவலதிகாரிகளிடம் உரக்கக் கத்தியவாறே கட்டளையிட்டவனாய் குழந்தையை மீட்பதே தனது முதன்மையான காரியம் என்ற எண்ணத்தில் அவ்விடத்தை அடைந்த ஷிவாவின் கைகளுக்குக் கிடைத்தது, உருக்குலைந்த நிலையில் கிடந்த இரு வயது குழந்தையின் பிரேதமே.

அன்று காவலதிகாரிகளிடம் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்த கலானி மிர்சா கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஆர்யனிடம் சிக்கினான்.

ஒருவரும் அறியாத வகையில் அவனைக் கடத்தி வந்த ஆர்யன் அவனை இங்கு அடைத்து வைத்து ஏறக்குறைய ஐந்து நாட்களாகச் சித்திரவதை செய்தவன் இறுதியாக அகோர கோபத்தில் அவனைக் கொன்றுப் போட்டான்.

ஆனால் ஆர்யனே அறியவில்லை, இறந்துக் கிடந்த குழந்தையைக் கொன்றது கலானி மிர்சா அல்ல என்று!

உண்மைத் தெரிய வரும் பொழுது??

*******************************

கொலை நடந்து சரியாக ஏழு நாட்கள் கடந்து தீப்பொறியெனப் பரவியது, கலானி மிர்சாவின் படுகொலை.

அந்தேரி என்பது மும்பை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

மகாகாளி குகைகளுக்கு அருகில் உள்ள மலையின் பெயரான உதயநகரியைக் கொண்டு இந்தப் புறநகர்ப் பகுதிக்கு அந்தேரி என்ற பெயரிடப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன.

அப்பகுதியில் பெருமாளிகைத் தோற்றம் கொண்ட மிர்சா சகோதரர்களின் வீட்டின் முன்வாயிலில், இரும்புக் கோட்டையைப் பாதுகாப்பது போல் கட்டியிருந்த சுற்று சுவருக்கு அருகில் கிடந்த கலானி மிர்சாவின் சிதைந்த உடல் அந்தேரியை மட்டும் அல்ல, மும்பையையே கிடுகிடுக்கச் செய்தது.

உச்சந்தலையில் இருந்து பாதங்கள் வரை படுகாயங்கள் பட்டு காய்ந்துப் போன இரத்தத்துடன் இறந்துக் கிடந்த கலானி மிர்சாவின் சடலத்தைப் பல விதங்களில் புகைப்படங்கள் எடுத்திருந்த நிருபர்கள் பத்திரிக்கைகளில் அவற்றை வெளியிட, அதற்குள் எப்படி ஊடகங்களுக்குத் தகவல் போனது என்று தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருந்தனர் காவலதிகாரிகள்.

இதனை எப்படி யாதவ் மிர்சா அனுமதித்தான் என்று அவர்கள் குழம்பிப் போயிருந்தனர் என்றால், தம்பியின் உருக்குலைந்த பிரேதத்தைக் கண்டும் சிறிதும் அதிர்ச்சியுறாது மிகச் சாதாரணமாகத் தோன்றியவனின் தோற்றம் கண்டு திகைத்துப் போயினர்.

ஆனால் யாதவ் மிர்சாவின் உள்ளமோ உலைகளமெனக் கொதித்துக் கொண்டிருந்தது.

ஆகக் கலானி கூறியது உண்மை தான்!

சிறிது சிறிதாக நடந்தேறியிருக்கும் நிதர்சனங்கள் புரிபட, அதற்குள் மீண்டும் கலானியின் கொலை வழக்கினை தானே விரும்பி தன் கையில் எடுத்த ஷிவ நந்தனின் செய்கை யாதவ் மிர்சாவிற்குப் பெரும் விலங்காய் [cuff] மாறிப்போனது.

அப்படி என்றாய் கலானி கூறிய ஆர்யனின் ஆராய்ச்சிகளைப் பற்றி இனி தான் ஆராய்ச்சிகள் செய்வது சில காலங்களுக்குச் சாத்தியமல்ல!

காரணம், கலானியின் கொடூர மரணத்திற்குப் பழி எடுக்க வேண்டும்.

அதே போல் கலானி கூறியது போன்று உலகத்திலேயே இது வரை எந்த ஒரு மாஃபியா கூட்டத்திற்கும் [drug cartels] தெரியாத, புது அறிய வகைப் போதை மருந்துக்கான ஃபார்முலா தன் கைக்கு வந்து சேர வேண்டும்.

யாதவ் மிர்சா அமைதியானான்.

ஆனால் அவனுக்கு எதிர்மறையான உள்ளப் போராட்டத்திற்கு ஆளானான் ஷிவா.

இந்தக் கொலைக்கான காரணமும், அதனைச் செய்தவன் யாரென்றும் ஏற்கனவே யூகித்து இருந்ததால் இந்த வழக்கை வேறு எவரிடமும் கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினான் ஷிவா.

அவனது வேண்டுகோளும் காவல்துறையின் பெரும் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஷிவ நந்தன், ஆர்ய விக்னேஷ் - அரிமாக்களின் வேட்டை மீண்டும் துவங்கியது!

****************************

மிகுந்த யோசனைகளுடன் வீட்டிற்குத் திரும்பிய கணவனை வரவேற்ற சிதாராவிற்கும் புரிந்திருந்தது அவனது நிலைமை.

இரவு உணவு அருந்தும் நேரம் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும் கணவனின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்க, அவனை இலகுவாக்கும் பொருட்டு அவனது தலையை மென்மையாய் கோதியவாறே, "என்ன ஷிவா, மறுபடியும் அந்த மினிஸ்டர் ஆர்யனுடைய கேஸில் சம்பந்தப்பட வேண்டியிருக்குதேன்னு யோசிக்கிறீங்களா?" என்றாள்.

"இல்ல சித்து, இந்தக் கேசை நானே விரும்பி ஏத்துக்கிட்டேன்."

"ஆனாலும் அவர் இவ்வளவு கொடூரமா ஒருத்தனை கொன்று போட்டிருக்க வேண்டாம்."

"தன் குழந்தையை ஒருத்தன் கொன்னுட்டான்னு தெரிஞ்சப் பிறகு, கொலை செய்தவனை விட்டு வைக்க எந்தத் தகப்பனாலும் முடியாது சித்து. நல்லவங்களே அப்படி இருக்க, ஆர்யன் மாதிரியான ஆளுங்க எப்படிச் சும்மா விட்டு வைப்பாங்க? அதான் தான் யாருன்னு ரொம்ப அகோரமா காட்டிட்டான் அவன்."

கூறியவனின் தலை வெகு அருகில் நின்று கொண்டிருந்த மனையாளின் மணி வயிற்றில் ஆதூரத்துடன் சாய்ந்து கொண்டது.

பிறக்கும் முன்னரே என் குழந்தையின் மீது இவ்வளவு பாசம் வருகின்றதே. அப்படி என்றால் எவ்வளவு தான் அவன் கெட்டவன் என்றாலும் ஆர்யனுக்கும் அவன் குழந்தை மீது இதே பாசம் தானே இருந்திருக்கும்.

அதுவும் அவனது குழந்தையை அவ்வளவு உருக்குலைந்த நிலையில் கையில் ஏந்தி நிற்கும் வேளையில் ஒரு தந்தையாக அவனது மனம் எவ்வளவு துடி துடித்திருக்கும்??

"எனக்கு என்னவோ அந்த ஆர்யனை விட அவருடைய மனைவியை நினைச்சா தான் பாவமா இருக்குங்க."

"யெஸ் சித்து, எனக்கும் சீதாவை நினைச்சு தான் ரொம்ப வருத்தமா இருக்கு. பாவம் அவ, பிறந்ததில் இருந்தே பெருசா எந்தச் சந்தோசத்தையும் பார்க்காதவ. ஆர்யனைப் பற்றித் தெரிஞ்சிருந்தும் அவள் அவனுடனான வாழ்க்கையை ஏத்துக்கிட்டு அமைதியா வாழ்ந்தாள் அப்படின்னா அதுக்குக் காரணம் அவளுடைய தம்பி, தங்கைகளின் நல்ல வாழ்க்கைக்குத் தான். ஏறக்குறைய தன்னையே உளிக் கொண்டு செதுக்கிக்கிட்ட சிலைப்போல் அவ. அவளை அழிச்சு அவ குடும்பத்தை வாழ வச்சவ. அப்படிப்பட்டவள், அட் லீஸ்ட், அவளுடைய குழந்தையைப் பார்த்தாலாவது சந்தோஷமா வாழ்ந்திடுவான்னு நினைச்சேன். அதுலேயும் இடி விழுந்த மாதிரி இருந்துச்சு அவ குழந்தைக் கடத்தப்பட்ட செய்தி என் காதுல விழுந்த நேரம். அதனால் தான் எப்படியாவது அவ குழந்தையைக் காப்பாற்றி அவளிடம் பத்திரமா ஒப்படைச்சிடணும்னு போராடினேன். ம்ப்ச், சில நிமிடங்கள் இடைவெளியில் குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் போயிடுச்சு."

"இப்ப என்னங்க செய்யப் போறிங்க?"

"குழந்தையைக் கலானி மிர்சா கடத்தினதுக்கும் ஒரு காரணம் இருக்கணும். இந்த அளவிற்குக் கலானியை கொடூரமா ஆர்யன் கொன்றுப் போட்டதற்கும் ஒரு காரணம் இருக்கணும். குழந்தையோட கொலை மட்டும் அதற்குக் காரணம் இல்லைன்னு என்னுடைய தனிப்பட்ட அனுபவம் சொல்லுது. அதை நான் கண்டுப்பிடிக்கணும். ஆர்யனிடம் ஏதோ ஒரு பயங்கரமான இரகசியம் இருக்கணும். அதைத் தெரிஞ்சிக்கிட்டதினாலேயே அவனுடைய மகனை கலானி கடத்தியிருக்கான். இன் ஃபேக்ட் சஹானா பாக்ஷியின் கொலைக்குப் பின் இருக்கும் காரணமும், கலானியும் மரணத்திற்கும், ஆர்யனின் மகன் கடத்தலுக்குப் பின் இருக்கும் காரணமும் ஒன்றாகத் தான் இருக்கணுங்கிறது என் சந்தேகம். இதை நான் கண்டுப்பிடிச்சே ஆகணும். ஆனால்..”

“ஆனால் என்னங்க?”

“ஆர்யன் மாதிரியான அரசியல்வாதிகளுக்கும், மிர்சா கேங்க் மாதிரியான மாஃபியா கூட்டத்திற்கும் இருக்கும் பவர் நம்ம நாட்டில் போலிஸ் டிப்பார்ட்மெண்டுக்கு இல்ல. அதுவும் என்னை மாதிரியான ஒரு நேர்மையான அதிகாரிகளுக்கு நிச்சயமா கிடையவே கிடையாது. அதான் முதலில் குழப்பமாயிருந்தது. ஆனாலும் இந்தக் கேசில் நானே இறங்கிறதா முடிவு பண்ணிட்டேன்."

"எனக்குப் புரியுதுங்க, ஆனால் ஏற்கனவே ஆர்யனை நீங்க அரெஸ்ட் பண்ணினதால் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்ததுன்னு எங்க அப்பா சொல்லி நான் கேட்டிருக்கேன். இப்போ மறுபடியும்.."

முடிக்காது நிறுத்தியவளின் வயிற்றில் இருந்து அகன்றவனாய் நிமிர்ந்துப் பார்த்தவன், "அது ஆர்யனால் மட்டும் இல்லை சித்து." என்றான் பனிக்கட்டியாய் இறுகிப் போன குரலில்.

அவன் யாரைக் குறிப்பிடுகின்றான் என்று அவனது மனைவிக்குத் தெரிந்தது.

இருந்தும் அவனுக்கும் ஆர்யனின் குழந்தையின் மரணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று அவளுக்குச் சந்தேகம் தோன்றியது.

"வருணைச் சொல்றீங்களா?"

"யெஸ்.. இந்த நாட்டுக்கே தெரியுமே ஆர்யனுக்குப் பின்னால் நின்று அவனை ஆட்டுவிக்கிறது யாருன்னு. நம்ம ஊர் பாஷைப்படி சொல்றதுன்னா ஆர்யன் சந்திரகுப்த மௌரியான்னா வருண் தான் சாணக்கியன்னு சொல்லலாம். ஆக, சஹானா, ஆர்யனின் குழந்தை, கலானி மிர்சா, இந்த மூணு கொலைகளுக்கான காரணம் வருணா இருக்கவும் வாய்ப்பு இருக்கலாம். அல்லது அவன் காரணகர்த்தாவா இல்லாமலும் இருக்கலாம். ஆனால் முதலில் நான் வருணைப் பிடிக்கணும். பிறகு ஆர்யன் தானாகவே சிக்குவான்."

கணவனின் குரலில் தெரிந்த கடினமும், அவன் முகத்தில் ஒளிர்ந்த அக்னியும், கண்களில் தெரிந்த தீர்க்கமும் தெளிவற்று உரைத்தது.

தன் அத்தை மகளைக் கடத்தி இரு மாதங்கள் அவளை அடைத்து வைத்து இன்று நடைப்பிணமாக அவளை நடமாட வைத்திருக்கும் வருணை வதைக்காது இவன் விடமாட்டான் என்று.

அதற்கு ஆர்ய விக்னேஷ் ஒரு தூண்டில்.

ஆக ஒரு மீனைத் தூண்டிலாகப் போட்டுத்தான் இன்னொரு மீனை பிடிப்பார்கள்.

ஆனால் இவை அனைத்துக்கும் பின் இருப்பது உண்மையில் வருணா?

அல்லது வருண் தான் எல்லாத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும் என்பது இவனது விருப்பமா?

இதனில் இரண்டாவதே சரியென்று பெண்ணவளுக்குப் பட்டது.

ஆக, ஆர்யனைப் போன்ற மீன்கள் தான் வருண் தேஸாய் போன்ற மிகப்பெரிய மீன்களைப் பிடிக்க உதவும் என்பதை நன்கு புரிந்திருந்து அதன் படி திட்டங்கள் அமைக்கும் இவன் யார்?

சாணக்கியனுக்கும் குருவா?

Chanakya vs Aristotle vs Confucius

ஆனால் சில மீன்கள் அவ்வாறு மற்ற மீன்களுக்கு அகப்படாது.

Big Fish! Big Bait!

அரிமாக்களின் வேட்டை

தொடரும்.
 
Last edited:
Aryan kulanthaya konnathu yaaru? Kalani illaina avunga annan yadhav ah? Shiva kalanicase la irangina ellathukkum vidai kedaikkuma? Illa mudichugal thodaruma? Varun vandha ellame solve ayiduma? Waiting for the next epi mam.
 
Aryan kulanthaya konnathu yaaru? Kalani illaina avunga annan yadhav ah? Shiva kalanicase la irangina ellathukkum vidai kedaikkuma? Illa mudichugal thodaruma? Varun vandha ellame solve ayiduma? Waiting for the next epi mam.
 
Aryan kulanthaya konnathu yaaru? Kalani illaina avunga annan yadhav ah? Shiva kalanicase la irangina ellathukkum vidai kedaikkuma? Illa mudichugal thodaruma? Varun vandha ellame solve ayiduma? Waiting for the next epi mam.
 

Vidhushini

Member
Something/someone is missing or hiding behind everything happened till now, but not Varun.

ஆர்யன் ஆழமா யோசிக்காம நிதானமிழந்து கலானியைக் கொன்ன நேரத்தில், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்கத் தவிரவிட்டுட்டான்.

சீதா-ஆர்யன் குழந்தை உயிரோடுதான் இருக்கணும். Something is happened between Adhav's (body?!) rescuing by Shiva and Kalani's escaping.
inbound7069207997255904229.jpg

வருண் தேஸாய் இவ்வளவு நாள் களத்தில் வராமல் இருந்தாலும், மற்றவர்களின் கண் மறைவில் அவனது moves இருக்கலாம்னு தோணுது, like his doppelganger play in Durga's kidnapping.
inbound2525204211883034902.jpg

Still there is an invisible player out there in the field.

மூன்று அரிமாக்களையும் வேட்டைக்கு இணைக்கும் காலம் வருகிறதோ @JB sis?

யாதவ் மிர்சா, எந்த போதைமருந்து தன் கைக்கு வரணும்னு நினைக்கிறானோ, அந்த போதை மருந்தாலேயே அழியப்போகிறான்.

Very interesting @JB @JLine sis🔥🔥🔥🔥
 

saru

Member
Lovely update
Aryan oda kzhandai unmaila eh irandurucha
Aryan konjam nithanam irunda kandrukalamo edo miss agutho anga
Hoom
VArun ah iruka vaipilanu thonudu
Enna Varun ke triyama tan ah pandran
Ivangalukulla innum yar irukanga siva Anga porathukulla enna nadandrukum
Siva ennauvadu ellam sariya irukade
Oru sila meengal enda valaium sikkadu
Aga motham police ke velai ilama ivanungale adichikitu saga poranunga
 

Chellam

Member
சீதா சொன்னது போல் ஆர்யன் குழந்தை பத்திரமாக இருப்பான் என்றே தோன்றுகிறது.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top