JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 16

Subageetha

Well-known member
சாதுர்யா ஒரு வழியாக ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்தாள். மாலதிக்கு அவளை எப்படியாவது தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் இல்லை எனில் திருநெல்வேலியில் தன் பிறந்த வீட்டிலாவது விட வேண்டும் என்ற யோசனை. இதற்கெல்லாம் சாதுர்யா மசிந்தால்தானே!
யார் சொன்னாலும் கேட்டு நடக்கும் நிலையில் பெண் இல்லை. பரீட்சை முடிந்து இரு மாதங்கள் தில்லியில் இருந்த சாதுர்யா தனது அம்மா இத்தாலி கிளம்பும் வரை காத்திருந்தவள், மாலதி கிளம்பும் அதே நாளில் தானும் திருச்சிக்கு விமானம் ஏறி விட்டாள். மாலதியின் மனம் முழுவதும் வயது பெண்ணை இவ்வாறு தனியாக இந்தியாவில் விட்டுவிட்டு தான் மட்டும் வெளிநாடு செல்வது சரியா தவறா என்று மனதில் பட்டிமன்றம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. கணவன், மாமனார் -மாமியார் கொடுத்த தைரியத்தில் தான் அவள் ஒப்புக் கொண்டாள். ஆனாலும் இந்த பெண்ணிற்கு இவ்வளவு கர்வமும், பிடிவாதமும் திமிரும் ஆகாது என்ற எண்ணம் மாலதிக்கு ஒருபுறமிருந்தாலும், இதனால் இந்தப் பெண் ஏதாவது பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்ற பயமும்தான் இருந்தது.
ஒருவழியாக, சாது திருச்சி வந்தடைய இரவு எட்டு மணி ஆகிவிட, வயலூரிலிருந்து ரங்கன் தான் விமான நிலையம் வரை தனது காரை எடுத்துச் சென்று அவளை ஸ்ரீரங்கம் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தான். வரும் வழியில் அவளிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. பெண்ணிற்கு மனம் முழுவதும் வருத்தம்தான். ஆனால் என்ன,ஏது என்று எந்த காரணமும் தெரியாமல் அவனிடம் என்ன கேட்பது, சில விஷயங்களை விட்டுத்தான் பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் மீண்டும் படித்தபடி எப்படியோ வாயை இறுக்க மூடிக்கொண்டு அவளும் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தாள். ரங்கனுக்கு உள்ளூர மனதில் ஒரு வருத்தம். இந்தப் பெண் எதற்காக இவ்வளவு தூரம் தன் அப்பா -அம்மாவை வெளிநாட்டில் விட்டுவிட்டு இங்கே தனியாக பாட்டி வீட்டிலிருந்து படிக்கிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். என்னதான் பொருளாதார ரீதியில் ரங்கனின் வீட்டில் வசதியாக இருந்தாலும், மாலதிக்கு பிடிக்காதது ரங்கன் மற்றும் ரங்கனின் குடும்பம். வெளியில் பொதுவாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவன் நிறைய அனுபவ பாடம் படித்திருக்கிறான். அப்படி இருக்கும் பொழுது இந்தப் பெண் தன்னை நாடி வருவது ரங்கனது மனதிற்கு உவப்பாக இல்லை. மனதில் உள்ளவற்றை எல்லாம் வார்த்தைகளாக்கி அவளிடம் சொல்லவும் அவனுக்கு தயக்கம். அதைவிட அவளிடம் இருந்து தள்ளி நிற்பது இருவருக்குமே நல்லது என்ற முடிவுக்கு அவன் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என்று மாலதி அவனிடம் தனியாக கூப்பிட்டு பேசினாளோ, அந்த வார்த்தைகள் வேண்டுமானால் அவளது பெண்ணின் வருங்காலம் பற்றியதாக இருக்கலாம் ஆனால் அதன் சாராம்சம் விலகி நில் என்பது மட்டுமே!
பல பெண்களுக்கு, திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும் கூட தனது புகுந்த வீட்டு குடும்பத்தினர் என்றால் ஏனோ பிடிப்பதில்லை. மாலதியும் அதற்கெல்லாம் விதிவிலக்கல்ல. மாமியார் மாமனாரிடம் மற்றும் கணவரிடம் இருக்கும் ஒருவித பயத்தினால் மட்டுமே அவள் புகுந்த வீட்டினரை அனுசரிப்பது போல் ஒரு நாடகம் நடத்தி வந்தாளே தவிர உண்மையில் அவளின் மனம் முழுவதும் திருநெல்வேலி தான். திருமணமான புதிதில் வெங்கடேசனை தன் குடும்பத்தாருடன் மட்டும் ஒட்ட வைத்துவிட்டு, தான் புகுந்த வீட்டின் சொந்தங்களை கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் அவள் மனதில் இருந்தது தான். ஆனால் திருமணமாகி வந்த பெண் தாமோதரனின் குடும்ப செழிப்பையும், அந்தஸ்தையும், தன் குடும்பத்தை விட பன்மடங்கு அவர்களது சொத்து மதிப்பையும் கண்டவளுக்கு தனது எண்ணத்தில் சிறிது மாற்றம் வந்தது. அதைப்போன்றே மாமியாரை தட்டி வைக்க எண்ணினால், லக்ஷ்மி அம்மாள் பலே கில்லாடியாக இருந்துவிட்டார். அதனால் தனது எண்ணங்களையும் சுருட்டி மனதிற்குள் வைத்துக் கொண்டவளுக்கு, ரங்கனும் சாதுரியாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது கொஞ்சமும் இஷ்டமில்லை. தனது மனதில் இருக்கும் விஷத்தை எங்கே கக்குவது என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் சிறுவனிடம் கக்கிவிட்டாள் . அந்த வயதில் அவனுக்கு அவள் சொல்லுவது தெளிவாக புரியவில்லைதான். ஆனால் வயது ஏற ஏற தெளிவாக புரிந்துவிட்டது, தான் என்ன செய்ய வேண்டும் என்று. ஆனால் அதை மாமன் மகளுக்கு புரிய வைக்கும் வழி தான் அவனுக்கு புலப்படவில்லை. எவ்வளவு ஒதுங்கி போனாலும் இந்த பெண் இப்போது இங்கேயே வந்து நிற்கிறதே என்று அவனுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. பிறந்த அன்றிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் அந்த பெண்ணை. அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு நன்றாக அத்துபடி. அவள் பெரியவளான போதே அவளது கண்ணோட்டம் மாறிவிட்டதை அவன் அறிந்து கொண்டான். ஆனாலும் சில விஷயங்கள் சரிவராது. தன் போக்கில் யோசித்துக் கொண்டே, வீடுவரை வந்து சேர்ந்து விட்டான் ரங்கன். அவன் மனதில் அவள் மீண்டும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அன்று இரவே இலேசாக பாட்டி வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவு பதினோரு மணி அளவில் வயலூர் கிளம்பிவிட்டான். சாதுர்யா இன்று இல்லாவிட்டாலும் நாளை அத்தானுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் எண்ணம் புரிந்ததானாலயே நஅவன்
கிளம்புவதில் அவ்வளவு அவசரம் காட்டினான்.

இந்த முறை நுழைவு தேர்வில் வெற்றி பெற்று, வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிடவேண்டும், அப்போதுதான் இந்த பெண்ணிற்கும் படிப்பில் நாட்டம் செல்லும். காலம் மனிதனின் எண்ணங்களை மாற்றும் சக்தி கொண்டது. அவள் நினைப்பும் மாறிவிடும், என்று யோசித்தவனாக வீட்டிற்கு சென்று சேர்ந்தான்.

சாதுர்யாவின் மதிப்பெண்கள் நன்றாக இருக்கவே, அவளுக்கு பொறியியல் படிக்க திருச்சியிலேயே பெரிய கல்லூரியில் இருந்து வாய்ப்பு கிடைத்தும், சாதுர்யா அதில் சேர மறுத்துவிட்டாள். தாமோதரன் திரும்பத் திரும்ப அவளை வற்புறுத்தி பார்த்ததும் கூட, நான் பொருளாதாரமும், அரசியல் அறிவியலும்தான் எடுத்து படிக்க போகிறேன். தாத்தா அப்பா வழியில் நானும் ஐஏஎஸ் அதிகாரி ஆகப்போகிறேன் என்று பிடிவாதம் பிடித்தவளை என்ன சொல்லி மாற்றுவது என்பது வீட்டிலுள்ள யாருக்குமே புரியவில்லை. ரங்கனும் கூட சொல்லிப் பார்த்து களைத்து விட்டான். கடைசியில் அவள் எண்ணத்தை மாற்ற முடியாமல், வெங்கடேசனுக்கு அழைத்து பேச, அவரிடம் பெண் தீர்மானமாகச் சொல்லி விட்டாள்,'இதற்காகத்தான் நான் வெளிநாடு வராமல் இங்கேயே தங்கி விட்டேன் என்று'. அடிக்கடி வேலை மாற்றம் வந்தால் திருமண வாழ்விற்கு சரியாக வராது சாது என்று பாட்டி சொன்னதற்கு ' அப்படி என்றால் எனக்கு திருமண வாழ்வே வேண்டாமென்று விட்டாள் பெண்.

அங்குதான் ரங்கனும் தாமோதரனும் கூட அமர்ந்திருந்தார்கள். அவள் சொன்ன பதிலில் திடுக்கிட்டு நிமிர்ந்தான் ரங்கன். முதலில் இந்த பெண்ணிற்கு தன்னிடம் ஈடுபாடு இருக்கிறது என்று தான் நினைத்தது தவறாக இருக்குமோ என்று குழம்பினான் ரங்கன்.

இவ்வளவு தீர்மானமாக செயல்படுபவர்களை லேசில் மாற்ற முடியாது என்பது புரிந்தவர்களாக வீட்டினரும் அவள் போக்கில் விட்டுவிட்டார்கள்.

ஆனால் அவள் சொன்ன பதிலில், மனது தாளாமல், அவளது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அடுத்த நாளே ஜோதிடர் வீட்டிற்கு படையெடுத்தாள் லக்ஷ்மி அம்மாள். இந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை சிந்தித்தால் லக்ஷ்மி அம்மாவுக்கு எதுவும் சரியாகப் புலப்படவில்லை. எளிதாக , வீட்டினரின் சொல்லுக்கோ,
வெளியிலும் மற்றவர்களின் எண்ணங்களுக்குக்கோ வளைந்து கொடுக்கும் சாதாரண பெண்ணாக அவள் இல்லை. ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு விரோதிகளும் அதிகம். சண்டைகளும் அதிகம்.
நேற்று அவள் சொன்ன பதிலில், ரங்கனுடன் அவளை முடிச்சு போடும் எண்ணத்தைப் பற்றி லஷ்மி அம்மாள் சந்தேகம் வந்துவிட்டது.
பெண்ணின் ஜாதகத்தை பார்த்து ஜோசியர்,' அவளது ஜாதக அமைப்பு பரிபூரணமாக அமைந்துள்ளது என்றும், யாரும் கிட்டே நெருங்க முடியாத அளவிற்கு பெரிய நிலையில் இருக்கப் போகிறாள் என்றும் சொன்னவர், திருமண வாழ்வு அவளுக்கு சரியாக அமைய போவதில்லை என்ற பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அவளது ஜாதக அமைப்பு அவ்வளவு சாதகமாக இல்லை. வெகு ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். அதேசமயம், நான்காவது ஆண்டின் ஆரம்பத்தில் அவ்வளவு திருமணம் முடிவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று முடித்துவிட்டார். அவரது முகத்தில், இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் உள்ள ஒற்றை பற்றி அதிக குழப்பம். அதை லக்ஷ்மி அம்மாளிடம் சொல்வதற்கு அவருக்கு மனம் இல்லை. ஏற்கனவே சொன்ன விஷயங்களே லட்சுமி அம்மாளை புரட்டிப்போட போதுமானது என்பதாக அவர் யோசிப்பதும் இன்னொரு காரணம். ஆனாலும், அந்தப் பெண்ணின் நன்மைக்காக, லக்ஷ்மி அம்மாளிடம் வீட்டிலேயே வெள்ளிக்கிழமைகளில், லக்ஷ்மி பூஜை செய்யுமாறும், ராகு காலத்தில் துர்க்கைக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுமாறும் திரும்பத் திரும்ப சொன்னார்.
பெண்ணால் ஏற்ற முடியவில்லை என்றாலும் கூட நீங்கள் இதை விட்டு விடாதீர்கள், அவளுக்கான சக்தி வாய்ந்த பரிகாரம் இதுதான் என்று முடித்துவிட்டு தியானத்திற்கு சென்றுவிட்டார். மனம் முழுவதும் சஞ்சலங்கள் துடன் வீடு வந்து சேர்ந்தாள் அந்த முதியவள்.
***********************************************************
*சங்கரன் சென்றபிறகு இரவெல்லாம், ரத்னாவுக்கு மட்டுமல்ல உமாவுக்கும் கூட உறங்காத இரவாகி போயிற்று. குருவை பற்றிய சிந்தனைகள் ரத்னா, சாந்தா இருவரின் வாழ்க்கை நிலை பற்றி எல்லாம் அவளுக்கு கவலை அப்பிக் கொண்டது. ரத்னாவுக்கு திருமணம் ஆகிவிடும். அவள் திருச்சூர் சென்று விடுவாள்.
வளரும் பருவத்தில் இருக்கும் சாந்தாவின் நிலை என்ன... இப்போதுதான் அவள் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறு பெண். அவளை எப்படி அவன் பார்வையிலிருந்து காப்பாற்றுவது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு விடியும் சமயம் தான் தூக்கமே வந்தது.

ரத்னாவின் திருமண நிகழ்வு இன்னும் நான்கு மாதங்கள் மீதம். பேசாமல் சங்கரன் அத்தானிடம் குரு பற்றி பேசிவிடலாம் என்று எண்ணியவள் மதிய நேரத்தில் சங்கரனுக்கு அலைபேசியில் அழைத்துவிட்டாள். முதலில் என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கியவள், பொதுவான விசாரிப்புகளுடன் ஆரம்பித்து தானாகவே பேச்சின்போக்கு உமாவுக்கும் - குருவுக்கு மான திருமணத்தில் வந்து நின்றது. இனி,சங்கரன் தான் ஏதாவது ஒரு வழியில் ரத்னாவை இந்த நான்கு மாதங்களும் கூட காபந்து பண்ண வேண்டும் என்று தீர்மானித்து குருவின் நடத்தைகள் குறித்து ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லி விட்டாள் .
அதிர்ந்த சங்கரன் முதலில் கேட்ட கேள்வி,பிறகு இவ்வளவும் தெரிந்தும் ஏன் உன்னை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் உன் வீட்டில் என்று தான். அந்த கேள்வியை
கேட்டவளுக்கு கண்கள் நீரைப் பொழிந்தன.
'சில கேள்விகளுக்கு எல்லாம் எப்பொழுதுமே பதில் கிடையாது அத்தான்' என்று முடித்து விட்டாள். மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கோ இவளது மனோநிலை புரியாமல் இல்லை.

மனதில் ஒரு முடிவுக்கு வந்தவனாக தனது அம்மாவிடம் சென்று,
' உமாவுக்கு பாத்திருக்க இடம் ரொம்ப பெரிய இடமாம். சிவன் மாமாவும் அவங்ககிட்ட தான் வேலை செய்யுறாராமே... கல்யாணத்துக்கு முன்னாடியே திருச்சியில் சிவன் மாமாகிட்ட சொல்லி திருச்சியில் ஒரு பிரான்ச் ஆரம்பிக்கலாம்னு யோசிக்கிறேன்மா. அதனால ஒரு மூணு மாசம் நான் திருச்சியில் போயிருக்க போறேன். இப்பவே வேலையை ஆரம்பிச்சா தான் கல்யாணத்துக்கு சீரா இதையும் சேர்க்க முடியும் ' என்று திலகாவின் மனம் குளிரும்படி பேசியவன், திருச்சியில் சிவன் வீட்டிலேயே மூன்று மாதம் தங்கி கொள்வதற்கும் தன் அம்மா வாய் வழியாகவே வார்த்தைகளை வரவழைத்தான். திலகாவே சிவனுக்கு அழைத்து, 'அண்ணே உன் வீட்டிலேயே மூணு மாசமும் சங்கரன் தங்கிக்க மாடில ரூம் ரெடி பண்ணிடு. அவனுக்கு தொழிலுக்கு என்ன உதவி வேணும்னு பாத்து செய்யு... உங்க வருங்கால மாப்பிள்ளைக்கு நீங்கதான் பார்த்து செய்ய வேண்டும் என்று திலகா முடித்துவிட,
பாறுவோ, என்னதான் சிவனின் சொந்த தங்கையின் மகனாக இருந்தாலும் கூட எவ்வாறு திருமணத்திற்கு முன்னதாக இங்கே தங்க வைக்க முடியும்? என்று ஆட்சேபம் தெரிவிக்க, சங்கரனின் யோசனை புரிந்தவளாக உமாவோ எப்படியாவது சங்கரன் அத்தானை இங்கேயே தங்க வைப்பதில் உறுதியாக இருந்தாள். ரத்னாவின் முகத்தை பார்த்த சிவனும், 'திலகா சொல்றத மறுக்க முடியாது பாறு 'என்றுவிட்டார். உமாவுக்கும் ரத்னாவுக்க்கும் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

சங்கரன் மனதில் இன்னொரு திட்டம் உண்டு. தொலைவில் இருந்து கொண்டு
அலைபேசியில் பேசி ரத்னாவின் எண்ணங்களை தன்பால் ஈர்ப்பதைவிட மூன்று நான்கு மாதங்கள் திருமணத்திற்கு முன்னால் உடனேயே தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவளது தன் மீதான பயம் குறைய வாய்ப்புண்டு என்றும் யோசித்திருந்தான்.
ரத்னாவுக்கும் மனதிற்குள் உற்சாக குமிழி தான். திருமணம் எனும் பயத்தை மீறி, அவள் இதயம் அவளது சங்கரன் அத்தானுக்காக துடிக்க தொடங்கியிருந்தது.

"சில சமயங்களில் போர்க்களத்திலும் காதல் பூக்கள் பூக்கும். அவை குறிஞ்சி மலரை விட உன்னதமானவை".
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top