JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 17

Subageetha

Well-known member
சங்கரனுக்கு உமா சொன்னவற்றைக் கேட்டபின்பு இரவு உறக்கம் வருவதாய் இல்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்று வளர்த்த பெண்ணை விற்பதை கூட அவன் கேள்வி பட்டு இருக்கிறான். சில இடங்களில் பெண்கள் இரண்டாம் தாரமாய் வசதியான வயது முதிர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். இன்னும் சில இடங்களில் வெளியூர்களுக்கு வேலைக்காக அனுப்பப்படும் பெண்கள் வேறு வழிகளில் கடத்தப்படுகிறார்கள் என்பதெல்லாம் அவனுக்கு கேள்வி ஞானமாய் தெரியும்.
ஆனால் தன் சொந்த மாமன், தன் மகளை வேறு ஏதோ மன கணக்கீடுகளை கொண்டு இது போன்ற ஒரு ஊரறிந்த பொறுக்கிக்கு அவர்களின் பணம், சமூக அந்தஸ்து முதலியவற்றை மனதில் கொண்டு, பணக்கார சம்பந்தம் என்ற பீற்றலோடு குருபரனுக்கு திருமணம் செய்து கொடுப்பது சங்கரனின் மனதில் பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியது. உமாவை விட சங்கரன் வெறும் மாதக்கணக்கில் தான் பெரியவன். ஒருவேளை, தனக்கு ரத்னாவை திருமணம் நிச்சயிக்கும் முன் உமா பற்றி கேட்டு இருந்தால் நிச்சயம் அவன் சரி என்றுதான் சொல்லி இருப்பான். பெரியவர்களாக பார்த்து இதுபோன்ற முடிவுகளை எடுத்து வைப்பதும், வயதில் சிறியவர்கள் இவர்களின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எந்த விதத்திலும் சரி இல்லையே! உமா எவ்வாறு குருவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டாள்? அவள் குரலிலேயே பிடித்த மின்மை தெளிவாக தெரியும் போது மேற்கொண்டு திருமணம் ஏற்பாடுகளை செய்யும் பெரியவர்களை என்னவென்று சொல்வது? உமாவின் மனம் என்னவென்று இத்தனை நாட்களுக்கு குருவுக்கும் கூட தெரிந்திருக்கும். இதுபோன்ற பெண்ணின் சம்மதமில்லாமல் நடக்கும் திருமணத்தில் அவனுக்கு என்ன பெரிய சந்தோஷம் கிடைத்துவிடும்?

வெறும் பணத்தைக் காட்டி பெண் வீட்டாரை விலைக்கு வாங்கி விட்ட அருணாச்சலம் குடும்பத்தினரை என்னவென்று சொல்லுவது?
இல்லை தன் பெண்ணின் வாழ்வு இது என்றும் பாராமல் வெறும் பணத்திற்காக தன் பெண்ணை விலை பேசும் தன் மாமனை என்னவென்று திட்டுவது... நினைக்க நினைக்க சங்கரனுக்கு மனது பொறுக்கவில்லை. அவனுக்கு உமாவின் தியாகத்தை எண்ணி அவள் மீது எந்த பரிதாபமும் வரவில்லை. மாறாக இந்தப் பெண் தன் வாழ்க்கை பற்றி எண்ணிப் பாராமல் குடும்பத்திற்காக இந்த தியாகங்களை செய்யவில்லை என்றால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கோபம் தான் நிலைத்து நின்றது. ரத்னா உடனான திருமணம் மட்டும் நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக உமாவை கட்டாயப்படுத்தி சங்கரன் தன்னுடன் கூட்டிச் சென்றிருந்திருப்பான். அவசரப்பட்டு, வீட்டில் ஒரு பெண்ணை விற்று கொண்டு வரும் சீர் பொருட்களை கொண்டு தன் திருமணம் நடப்பது என்றால் நான் எல்லாம் என்ன ஆண் பிள்ளை என்று அவன் மனம் அவனை எகத்தாளம் செய்ய இதில் தான் என்ன செய்ய முடியும் எவ்வாறு இந்த சீர் பொருட்களை வாங்காமல் மறுப்பது, இதனால் ரத்னாவுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் என்ன, வரும் காலத்தில் தன் அம்மாவும் தங்கையும் ரத்னாவை எவ்வாறு நடத்தக்கூடும் என்றெல்லாம் எண்ணி அவனுக்கு தலைசுற்றல் வந்தது தான் மிச்சம். எப்படியும் திருச்சியில் ஒரு கிளை திறப்பதாக அவன் முடிவு செய்திருக்கிறான். அதற்கு மிகுந்த பணம் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும்போது ரத்னாவுக்கு கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு தேவைப்படும் திருமண சீர் பொருட்களை வாங்கும் நிலையில் அவன் இல்லை. அவர்கள் இனத்தில் பெண்ணுக்கு குறைந்தது ஐம்பது சவரன்களாவது நகைகள் வேண்டும். சிவன் தன் பெருமை காட்டுவதற்கு என்று 70 சவரன் போடுவதாக வேறு சொல்லிவிட்டார். இதைத் தவிர பெண்ணுக்கு ஆகும் இன்னபிற செலவுகள். திருமண செலவு பாதி பாதி என்று விட்டாள் திலகா. எப்படியும் நகை தவிர்த்தும் ஐந்து லட்சம் ரூபாய்கள் தேவைப்படும். யோசித்தவனுக்கு சட்டென்று ஒரு முடிவு புலப்பட சந்தோஷம் அவனைக் கட்டிக் கொண்டது. பிறகு நிம்மதியாக உறங்க தொடங்கிவிட்டான்.
மறுநாள் சங்கரன் திருச்சூரிலிருந்து திருச்சிக்கு கிளம்பிவிட்டான். இனி மூன்று மாதங்களுக்கு அவன் அங்குதான்.
உமா அவனிடம் இன்னொரு பெரிய பொறுப்பை கட்டியிருக்கிறாள்.எந்தவித காரணத்தைக் கொண்டும் திருமணம் முடிந்த பிறகு ரத்னாவை கூட்டி கொண்டு தமிழ்நாட்டுக்கு அவன் வந்துவிடக்கூடாது என்பது தான் அது. இந்த பெண்களுக்கு தான் பிறந்த வீட்டு பாசத்துடன் கூட பிறந்தவர்கள் மீதும், அவர்கள் நல்வாழ்க்கை மீதும் எவ்வளவு அக்கறை, பாதுகாப்பு உணர்வு வைத்திருக்கிறார்கள் என்று வெகுவாக வியந்தான்.

ராக்காயி தன் சதை விற்கும் தொழிலை விட்டு நான்கு வருஷங்கள் ஆகிவிட்டது. அவளை கர்ப்பவதியாக ஒரு முறை திருச்சியில் கண்ட சிவன், ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்று, அவளிடம் விசாரித்தார். அவள் வயிற்றில் இருப்பது ஒருவேளை குருவின் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஒரு காரணம். ஆனால் ராக்காயி இல்லை இது குருவின் குழந்தை இல்லை என்று மறுத்துவிட்டாள். வேறு யாருடைய குழந்தை இது என்று கேட்டதற்கு அது சிவனுக்கு தேவையில்லாத வேலை என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டாள். நிம்மதி பெருமூச்சு விட்ட சிவன் அவள் கைகளில் கொஞ்சம் பணத்தை மட்டும் திணித்து அனுப்பி வைத்தார். முதலில் மறுத்த ராக்காயி பின்னர் பணத்தை வாங்கிக் கொண்டாள். அவள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டதும் அவளது அண்ணன்கள் அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள். மேலூரிலிருந்து அவள் திருச்சிக்கு இடம் பெயர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இங்கு அவள் பழைய தொழிலை பற்றி அறிந்தவர்கள் எவரும் இல்லை. இவளின் சதையையும் இரத்தத்தையும் உறிஞ்சிக்கொண்டு இவளை வெறும் கூடாக விட்டுவிட்ட உடன் பிறந்தோருக்க்கும் ராக்காயி உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றிய கவலை கூட இல்லை. ராக்காயியின் மூலம் அவர்கள் பெற்ற பணமும் சொத்தும் அளவில் அடங்காதவை. அவர்களது மிச்ச வாழ்நாளை கழிப்பதற்கு அது போதும். அத்துடன் இனி போலி பந்தாவுடன் சுற்றவும் தோது. காலப்போக்கில் ராகாயி இந்த குடும்பத்தை சேர்ந்தவள் என்பது பற்றி யாருக்கும் நினைவில் இருக்கப் போவதில்லை. என்னதான் அவள் குடும்பத்திற்காக என்று செய்த விஷயங்கள் மன தர்மத்தின் படி ஒப்புக் கொள்ளும் படியாக இருந்தாலும், சமூக நிலையில் அது ஒரு இழிந்த தொழில்தான்.

ராக்காயி அரசு மருத்துவமனையின் வாசலில் கையில் குழந்தையுடன் கண்ட சிவன், இனி அவள் வாழ்க்கையில் குழந்தையை வளர்ப்பது மட்டும்தான் அவளது முடிவான நோக்கமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து, அவளுக்கு வாழையிலை மண்டி வைத்துக் கொடுத்தார். அருணாச்சலத்தின் வாழைத்தோப்பில் இருக்கும் வாழை மரங்கள் குத்தகை எடுப்பதற்கு வழியும் செய்து கொடுத்தார்.
இவற்றின் மூலம் அருணாச்சலம் குடும்பம் ஒரு உண்மை விசுவாசியை ஏற்படுத்திக்கொண்டது. சிவன் மீதும் ராக்காயிக்கு நன்றி உணர்ச்சி மிகுந்தது. நேர்மையான வழியில் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த சிவன் அவள் கண்களுக்கு நிஜமாக சிவனாக தெரிந்தார்.

அருணாச்சலம் அரசியல் ரீதியில் இப்போது நன்றாக காலையும் ஊன்றி கொண்டு விட்டதால், சிவனின் வழிகாட்டலில் ராக்காயி அவரது கட்சியில் மகளிர் அணியில் சேர்ந்து கொண்டு விட்டாள். அவளுக்கும் அவளது பெண்ணுக்கும் இது ஒரு வழியில் பாதுகாப்பாக இருந்தது.

ராக்காயியின் பெண் குழந்தைக்கு இப்போது நான்கு வயது. முன் நாற்பதுகளில் நின்று கொண்டிருக்கிறாள் ராக்காயி. அவள் வாழ்வில் இந்த நொடி ஒரே பிடித்தம் என்றால் அவரது மகள் சௌமியா தான்.
பெற்ற பெண்ணை பாதுகாப்பதற்காக அவள் இப்போது 'சொர்ணாக்கா' போன்று தன்னை மாற்றிக்கொண்டாள். அவளின் அருகே வருவதற்கு மற்றவர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஒவ்வொரு முறை பிரச்சனைகளை சந்திக்கும் போதும் அவள் கை கால்கள் நடுங்குவதும், மனம் உதறல் எடுப்பதும் அவளுக்கு மட்டும்தான் தெரிந்த ரகசியம். ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை. தன்னைப் பற்றி அவள் ஒன்றும் கவலைப்படவில்லை இன்றும் சரி நேற்றும் சரி. நாளை என்ற ஒன்று பற்றி தெளிவாக அவளுக்குப் தெரியாவிட்டாலும் குழந்தை, அவளின் பாதுகாப்பு முக்கியம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஓரளவுக்கு வருமானமும் இருப்பதால் வாழ்க்கை கொஞ்சம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. அருணாச்சலம் தான் கலந்து கொள்ளும் திருமண நிகழ்வுகளுக்கு, பொது விழாக்களுக்கு வாழை மரம்,தோரணங்கள் கட்டும் வேலையை சிவன் மூலம் ராக்காயிக்கு கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஒரு காலத்தில் அந்த பெண்ணை தன் மகனுடன் கண்டதாக வீரன் மூலம் அறிந்து கொண்டு இருந்தவர், இப்போது அந்தப் பெண்ணின் நிலை சரி இல்லாத சமயத்தில், நேர்மையாக ஒரு வாழ்க்கை வாழ என்னால் ஏதேனும் செய்ய முடிந்தால், அந்த புண்ணியம் குருபரனை சேரட்டும் என்று அவருக்கு சமாதனம் சொல்லியது அருணாச்சலத்தின் மனம்.

குருபரனின் திருமணத்திற்காக வாழைத் தோரணங்கள் கட்டும் காண்ட்ராக்ட் ரா க்காயிக்குதான் கொடுத்துள்ளார் அருணாச்சலம்.

சங்கரன் திருச்சி வந்த மூன்று மாதங்களுக்குள் தன் இல்லாமல் ரத்னா அவள் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று நிலைக்கு கொண்டு வந்து விட்டான். அவன் காதல் ரத்னாவையும் தொற்றிக்கொண்டது. சங்கரனின் உயிருக்கும் மேலாக நேசிக்க தொடங்கிவிட்டாள் ரத்னா. பிறகு இருவருமாய் முடிவெடுத்து அவளை ரகசியமாய் பதிவு திருமணம் செய்து கொண்டு, அவள் கழுத்தில் தான் அணிந்திருக்கும் செயினை கழற்றி அணிவித்தான். அவள் தன்மான உணர்வு
அவனுக்கு நன்றி சொன்னது. ஒருவேளை குருபரன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சீருடன் இருவரின் திருமணமும் நடந்திருந்தால் காலம் முழுமைக்கும் அவர்களுக்கு சுமை யாகத்தான் இருந்திருக்குமே தவிர சுகமாக இருந்திருக்கபோவது வில்லை.
கையோடு கொண்டு வந்திருந்த கல்லூரியின் விண்ணப்ப படிவத்திலும் பூர்த்தி செய்து அவளது கையெழுத்துக்களை வாங்கியவன், யாருக்கும் இவை பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்று ரத்னாவை எச்சரித்துவிட்டு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அன்று இரவு திருச்சூருக்கு சென்றான். கல்லூரியில் விண்ணப்பத்தை சேர்த்தவன், அங்கே அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு தேர்ந்தெடுத்தான். ரத்னாவை கூட்டிக்கொண்டு வந்து கல்லூரியில் சேர்த்துவிட்டு, இருவரும் இங்கேயே தனிக்குடித்தனம் ஆரம்பிப்பதுதான் அவனது திட்டம். மற்றவர்களிடமிருந்து ரத்னாவை காக்கும் வழி அவனுக்கு வேறு புலப்படவில்லை.
வேலைகளை முடித்து விட்டு நேராக தன் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் இருந்தவன் ஒரு வழியாக தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு வீட்டில் தனக்கும் ரத்னாவுக்குமான திருமண உறவைப் பற்றியும் சொல்லிவிட்டான்.
திலகாவிற்கோ பிரம்மாண்டமாய் நடக்க வேண்டிய திருமணத்தை தன் மகன் இப்படி செய்து விட்டானே என்ற ஆதங்கம்தான்.
ஆனால் அடுத்து ரத்னாவிடம் இருந்து எந்த சீரும் கேட்கக்கூடாது என்று சங்கரன் சொன்னதும் தான் அவளுக்கு ஆங்காரம் வந்தது. ரத்னாவின் மேல் படிப்பு பற்றியும் தனிக்குடித்தனம் பற்றியும் சங்கரன் சொல்லும்போது சங்கரனின் அப்பா அவனை அடிக்க வந்துவிட்டார். சங்கரனின் தங்கை சங்கரனின் மீது வெறுப்பு பார்வையை வீசினாள்.
இப்படி சங்கரன் -ரத்னா இருவரும் சங்கரன் வீட்டில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு விட்டார்கள். ஆனால் பின்விளைவுகளும் முழுவதும் ரத்னா மட்டுமே அனுபவிக்கப் போகிறாள் என்பது முன்னமே தெரிந்திருந்தால் வேறு ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து வைத்திருப்பான் சங்கரன்... ஆனால் நிஜம் வேறு ஆயிற்றே!

தான் செய்வது சரிதான் என்ற நம்பிக்கை சங்கரனுக்கு இருந்ததால் அவன் யாரை பற்றியும் கவலை கொள்ளவில்லை. எப்படியும் அவன் வைத்திருக்கும் லாரிகளும் தொழிலும் அவனுடையதுதான். பொருளாதார நிலையிலும் அவன் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. இதுவே அவனுக்கு தனி கம்பீரத்தை சேர்த்தது. தான் சொல்லவேண்டியவற்றை வீட்டுல் சொல்லி முடித்தாயிற்று என்ற தோரணையில் சங்கரன் திருச்சிக்கு கிளம்பி வந்துவிட்டான்.

விஷயத்தை ஏற்கனவே அலைபேசியின் மூலம் திலகா சொல்ல கேட்டு இருந்த சிவனின் முகம் சிவந்துவிட்டது. வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வாயா என்று ரத்னாவை அவர் புரட்டி எடுத்து விட்டார். என்னதான் தன் தங்கை மகன் என்றாலும் திருமணம் அவனுடன் தான் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது என்ற நிலையிலும் கூட இதுபோல் ரத்னா செய்தது திருட்டு கல்யாணம் தான் என்பது அவர் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
இந்தச் சின்ன குட்டி இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்தால் ஊரறிய திருமணம் செய்து வைத்திருக்கலாமே என்று அவர் மனம் அடித்துக் கொண்டது. 'இதுக்குத்தான் முன்னமே சொன்னேனே அந்த பையன இங்க தங்க வைக்க வேணாம்னு' என்று பாறுக்குட்டி சமயம் பார்த்து சிவனிடம் கேள்வி கேட்டாள். தன் மகளின் திருமணத்தை தான் காண முடியவில்லையே என்ற ஏக்கம் அந்த தாயின் கேள்வியில் நிரம்ப காணப்பட்டது.
மறுநாள் காலை சங்கரனுக்கு சிவனுடன் பேச எந்த விருப்பமும் இல்லை. உமாவின் திருமணத்தை சிவன் நிச்சயித்திருந்ததன் மூலம் சங்கரனின் மதிப்பை இழந்து விட்டார் அவர். போதாத குறைக்கு ரத்னாவின் முகம் முழுவதும் அழுது வீக்கம் கண்டிருந்தது. அவள் கண்ணங்களில் சிவனின் கைகள் தடம். ரத்னாவின் கண்கள் சிவந்திருந்தது. இவற்றை எல்லாம் கண்டு சங்கரனின் மனம் ஊழிக்காலத்தில் இருக்கும் மஹா சிவனின் மனதை போல் கடுமையாக மாறிவிட்டது. அவன் உடம்பிலிருந்து ஏற்பட்ட உஷ்ணத்தில் அவன் அருகில் செல்வதற்கு கூட மற்றவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அறைக்குள்ளிருந்து உமா, சங்கரனின் நோக்கி தன் இரு கைகளையும் கூப்பி கொண்டாள். சங்கரன் இருந்த இந்த மூன்று மாதங்களில் குருபரன் ஒருமுறைகூட வீட்டு பக்கம் வரவில்லை. சங்கரனை பார்க்கும்போது ஒருவர் எனக்கு ஒரு விதகிலி பிடித்து கொண்டிருந்தது. அதனால் குருபரன் மூலம் உமாவுக்கும் கூட எந்த தொந்தரவும் இல்லை. தங்கையின் திருமணத்தின் மூலம் சங்கரனின் சுயமரியாதையை புரிந்து கொண்டாள் உமா.
மௌனமாக ஒரு சிறு பையில் ரத்னாவுக்கு தேவையானவற்றையும், அவளது பள்ளி சான்றிதழ்களையும் எடுத்து வைத்து இனி உன் வாழ்வு சங்கரனுடன் தான், இனிமேல் உனக்கு இங்கு திருச்சியில் வேலை இல்லை கிளம்பு என்று வேகமாக ரத்னாவை கிளப்பி விட்டாள் உமா. சந்தோஷமாகவே தன் அக்காவையும் சாந்தா வையும் கட்டிக்கொண்டு முத்தமிட்டு தன் அம்மாவின் கால்களில் பணிந்து வாழ்க்கை பிரயாணத்தின் முதல் அடியை எடுத்து வைத்தாள் ரத்னா.
வரும் காலம் நிஜமாகவே ரத்னாவுக்கு திருச்சூரில் செழிக்குமா?
இனி உமாவின் திருமண நிகழ்வில் சந்திப்போம்!
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top