JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 6

JLine

Moderator
Staff member
அத்தியாயம் 6



கல்லூரிக்குள் நுழையும் பொழுதே ஒரு பேராசிரியர் அவன் அலைபேசிக்கு அழைக்க, அழைப்பை எடுத்தவன் அவரிடம் பேசிக் கொண்டே வகுப்பிற்குச் சென்றவனுக்கு அன்று நாள் முழுவதும் வெகு பிஸியாகச் செல்ல, அவனால் கனிகாவைக் காண முடியவில்லை.

ஒவ்வொரு நிமிடமும் எப்பொழுதடா கல்லூரி முடியும் என்று இருந்தவன், ஒரு வழியாகத் தன் காரைக் கிளப்பி, கல்லூரி முடிந்து அவள் வழக்கமாக ஏறும் பேருந்து நிலையத்திகு வந்தான்.

கல்லூரியில் கூட்டத்தில் அவளைப் பார்க்க தவறினாலும் நிச்சயம் பேருந்து நிலையத்தில் அவளைத் தவற விட மாட்டோம் என்று நம்பிக்கை அவனுக்கு.

பேருந்து நிலையத்திற்கு எதிரில் தன் காரின் முன் கதவை திறந்து வைத்துக் கொண்டு, காருக்கு வெளியே கதவில் கை ஊன்றி நண்பர்களுடன் பேசுவதும், அவளின் வருகையை எதிர்பார்த்து பேருந்து நிலையத்தை நோக்குவதுமாக இருந்தவனுக்கு அவன் நம்பிக்கை பொய்க்காமல் கனிகா தன் தோழிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வர, அவளைப் பார்த்த அந்த நொடி உடல் சிலிர்த்து...

ஏதோ ஒரு பரவசம் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை ஓடுவதை உணர்ந்தவனுக்குப் புரிந்து போனது காதல் தன் உள்ளத்தில் எப்பொழுதோ அடி எடுத்து வைத்துவிட்டது என்று!

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, கனிகாவின் அருகில் அமர்ந்திருந்த ஆஷாவுக்கு எதுவோ உறுத்த வெளியில் பார்த்தவள் ஹர்ஷா தங்களையே பார்ப்பதைப் பார்த்தவளுக்கு நம்ப முடியவில்லை, "ஒரு வேளை கனிகா சொன்னது உண்மையாக இருக்குமோ?" என்று.

'ஆனாலும் ஹர்ஷாவிற்கும் இவளுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. அவரின் வசதியும் அழகும் எங்கே, கிராமத்தில் இருந்து வந்த கனிகா எங்கே, அப்படி இருக்கும் பொழுது எதற்கு இப்படிப் பார்க்கிறார்?' என்று யோசித்தவள், ஆனாலும் எத்தனை அழகாக இருக்கிறார், செஞ்சு வச்ச கிரேக்க சிலை மாதிரி... என்னா உயரம், ஜிம் பாடி, ஸ்டையிலான ஹேர்ஸ்டைல், ஷார்ப்பான பார்வை என்று ஜொள்ளுவிட்டவள், அவன் சட்டென்று தங்களை நோக்கி வர தூக்கி வாரிப் போட்டது...

அவளின் திடீர் பதற்றத்தை கண்ட கனிகா,

"என்னடி ஆஷா? என்னாச்சு? ஏன் உடம்பு இப்படித் திடீர்னு தூக்கி வாரிப் போடுது? என்று வினவ,

"அங்க பாருடி.." என்று ஹர்ஷாவை நோக்கி கைக் காட்டினாள்...

தலைய கோதி விட்டுக் கொண்டே பேருந்தை நோக்கி நடந்தவன் அவர்களைப் பார்க்காமல் இரு பக்கமும் சாலையைப் பார்த்து கடக்க, கனிகாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது...

"போச்சு, நிச்சயம் தன்னைப் பார்ப்பதற்குத் தான் வருகிறான், இத்தனை பேர் பஸ்ஸில் வேறு இருக்கிறார்கள். என்ன பண்ணப் போகிறானோ?" என்று நினைக்க அவளின் கைகள் நடுங்கியதைப் பார்த்த ஆஷா,

"ஏன் கனிகா? ஏன் இப்படிக் கை நடுங்குது"" என்று வினவ,

"ஏன்டி! அவரைப் பார்த்தவுடன் உனக்கு ஏன் தூக்கி வாரிப்போட்டது? அதே மாதிரி தான்... இந்த ட்ரைவர் வேறு இன்னமும் பஸ்ஸை எடுக்காமல் இருக்கிறார், சை.." என்று பயத்தில் சலித்துக் கொள்ள,

அவளின் நடுக்கத்தையும் பயத்தையும் உணராமல் தன் காரியத்தில் மட்டும் கவனமாக இருந்தவன், பேருந்தில் ஏறி, எல்லோரையும் தள்ளிக் கொண்டு வந்து அவள் அருகில் நின்றான்....

அந்தப் பேருந்து எப்பொழுதும் கல்லூரி விடும் நேரம் வருவதால் பேருந்து முழுவதும் பெரும்பாலும் கல்லூரி மாணவ மாணவிகளால் நிறைந்திருக்கும்.

அங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஹர்ஷாவைப் பற்றி நன்றாகத் தெரியும் ஆதலால், கல்லூரியில் படிக்கும் இந்தச் சின்ன வயதிலேயே ஒரு கோடிக்கு மேல் விலை பெறும் வெளிநாட்டுக் காரை வைத்திருப்பவன், என்றும் இல்லாமல் இன்று பேருந்தில் ஏன் ஏறுகிறான் என்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

அவனோ அவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி விட்டு நேரே கனிகாவிடம் சென்றவன், அவனையே ஆ என்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கும் ஆஷாவைப் பார்த்து,

"கேன் யூ கெட் அப்? ஐ ஹாவ் டு டாக் டு கனி [Can you get up? i have to talk to Kani]" என்றான் தனக்கே உரித்தான அதிகாரத் தொனியில்.

அவன் ஸ்டைலாகப் பேசிய ஆங்கிலம் புரிந்ததோ என்னவோ, அவன் கனி என்று தன் பேரை சுருக்கி அழைத்தது ஆயிரம் வாட்ஸ் கரண்ட்டை தன் தலையில் இறக்கியது போல் இருந்தது கனிகாவிற்கு.

'இவனுக்கு எப்படி என் பெயர் தெரியும்? அப்படியே தெரிந்திருந்தாலும் இதென்ன இத்தனை பேர் பார்க்க, இப்படிச் சத்தமாகக் கனி என்பதா??' என்று குழம்பியவள் விலுக்கென்று அவனை நிமிர்ந்துப் பார்க்க, கண்களில் குறும்போடு அவளையே பார்த்திருந்தவன், ஆஷா ஆச்சரியத்தில் அசையாமல் உறைந்திருப்பதைப் பார்த்து அவளிடம் திரும்பி,

"உன்னைத்தான் சொன்னேன், கொஞ்சம் எழுந்திருக்கிறியா?" என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினான்...

அவனின் கோபமும் திமிரும் கல்லூரி முழுக்கப் பிரபலம் ஆனதால் விருட்டென்று எழுந்தவள் கனிகாவை ஒரு பரிதாப பார்வைப் பார்த்துவிட்டு அவனுக்கு வழி விட்டு நகர்ந்தாள்.

"டீ, ஆஷா எங்கடி போற?" என்று சன்னமான நடுங்கும் குரலில் கனிகா கேட்க,

அவனின் கூரிய பார்வை தன் மேல் மீண்டும் விழுவதைப் பார்த்த ஆஷா, ஒன்றும் பேசாமல் எழுந்து அவர்களின் பின்னால் நின்று கொள்ள, "க்கும்" என்று தொண்டையைச் செருமியவன் கனிகாவின் வெகு அருகில் நெருங்கி அமர்ந்தான்.

உள்ளங்கை வியர்க்க, உடல் முழுவதும் படபடப்பு வர, பேருந்தில் இருக்கும் அனைவரும் தங்களையே பார்ப்பதைக் கூடக் கண்டுகொள்ளாமல் தன் அருகில் நெருங்கி அமர்ந்திருந்தவனைத் திரும்பிப் பார்க்க கூடத் தைரியம் இல்லாமல் சில விநாடிகள் அமர்ந்திருந்தவள் விருட்டென்று எழ முயற்சிக்க, அவளின் கையைச் சட்டென்று இறுக்கிப் பற்றியவன் இழுத்து தன் அருகில் அமர வைத்தான்.

கண்கள் கலங்க, உதடுகள் துடிக்க, அவனை மெதுவாக ஏறெடுத்துப் பார்த்தவள்,

"தயவு செஞ்சு கைய விடுங்க, எல்லோரும் பார்க்கிறாங்க.." என்று தன் காதுகளுக்கே கேட்காத சத்தத்தில் கூற,

"ம்ம்ம்ம்ம், என்ன சொன்ன?" என்று அவளின் முகத்திற்கு வெகு அருகில் குனிந்து கேட்க, அவன் கன்னம் தன் காதில் உரச, அவள் இதயம் வெளியே வந்து விழுந்துவிடும் போல் துடிதுடித்தது அவளுக்கு மட்டும் கேட்கவில்லை, அவனுக்கும் தான்.

பதினெட்டு வயது இளம் சிட்டு, வெளி ஆண்களின் வாசமே அறிந்திராதவள், கிராமத்துப் பெண், திடீரென்று யாரோ ஒரு ஆண், அதுவும் இத்தனை அழகானவன், தைரியமாகத் தன் பக்கத்தில் இவ்வளவு நெருக்கமாக எல்லோரும் பார்க்குமாறு அமர்ந்திருக்கிறான் என்ற உணர்வு கிட்டதட்ட அவளின் புத்தியையே ஸ்தம்பிக்க வைத்திருந்தது.

அவனை மறுபடியும் நிமிர்ந்துப் பார்க்க தைரியம் இல்லாமல் மீண்டும் தலை குனிந்தவள், அவன் பிடித்திருந்த கையை அவனிடம் இருந்து விலக்க நினைக்க, அவன் விட்டால் தானே...

மேலும் இறுக்கியவன் மறுபடியும் அவளை நோக்கி குனிந்து,

"பரவாயில்லை, ட்ரெஸ் கலர் சூஸ் பண்ணுறதுல கூட நாம் இரண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்.." என்றவன் அவள் தாவணியைப் பார்க்க, மனம் கலங்கி தடுமாறியவள் மீண்டும் அவன் கையைத் தன் கையில் இருந்து விடுவித்துக் கொள்ள முயற்சித்தாள்....

அவள் முயற்சிக்கவும் தன் பிடியின் இறுக்கத்தை மேலும் அதிகரித்தவன் ஒரு பேருந்து நிலையத்தின் பெயரை சொல்லி,

"அங்கே இறங்கி விடு, நான் உனக்காக அங்கு வெயிட் பண்ணிக் கொண்டிருப்பேன்.." என்றவன் ஒன்றுமே நடவாதது போல் எழ, அவர்களின் பின்னால் நின்ற ஆஷா அவனையே பார்ப்பதைக் கண்டு,

"அவளை மட்டும் அனுப்பு, நீ கூடவே ஒட்டிக்கிட்டு வராத.." என்று அவள் அருகில் குனிந்து சொன்னவன், வந்த வழியே சென்று பேருந்திலிருந்து இறங்கினான்.
அவன் அருகாமை ஆஷாவிற்குத் தகிப்பை உண்டாக்கினாலும் அவன் திமிராகக் கூறியது கோபத்தையே கிளறியிருந்தது.

"எத்தனை திமிர்? எத்தனை ஆணவம்?"

கல்லூரி மாணவர்கள் அதிகம் ஏறுவதால் எப்பொழுதும் ஒரு இருபது நிமிடமாவது அந்தப் பேருந்து அந்த நிறுத்தத்தில் நிற்கும், வழக்கமாக ஏறும் மாணவர்கள் ஏறிய பின்னரே விசில் ஊதுவார் நடத்துனர்.

ஹர்ஷா இறங்கவும் நடத்துனர் விசில் ஊதவும் சரியாக இருந்தது..

அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டவள் வெளியே பார்க்க, அவசரம் அவசரமாகச் சாலையைக் கடந்தவன், வேகமாகத் தன் காரினுள் ஏறி அந்தப் பேருந்தை பின் தொடர, கதி கலங்கி போனாள் கனிகா.

'போச்சு, எல்லாம் போச்சு, படிப்பதற்கு என்று தன் தந்தையை அத்தனை கஷ்டப்பட்டுச் சமாதானம் செய்து சென்னைக்கு வந்தால், இங்கு யாரென்றே தெரியாத ஒருவனால் இப்படி ஒரு புதுப் பிரச்சனை. பஸ்ஸில் இருக்கும் அனைவரின் பார்வையும் இப்பொழுது தன் மீது தான். தன்னைப் பற்றி இந்த ஊரில் யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது தான், ஆனால் யாராவது அகில் அத்தானுக்குத் தெரிந்தவர்கள் தன்னைப் பற்றியும் தெரிந்திருந்து இதனை அவரிடம் சொல்லிவிட்டால், படித்துப் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற கனவு முளையிலேயே கிள்ளி எறியப்படும்... இப்பொழுது என்ன செய்வது. அவன் என்னமோ ரொம்ப உரிமை உள்ளவன் போல் உனக்காக வெயிட் பண்ணுகிறேன், அந்தப் பஸ் ஸ்டாப்பில் இறங்கு என்று சொல்லிவிட்டு போய்விட்டான், இறங்கினால் என்ன ஆகும்? இறங்காவிட்டால் என்ன ஆகும்?' என்று குழம்பியவள் பரிதாமாக ஆஷாவைப் பார்க்க, இது வரை நடந்ததையே நம்ப முடியாமல் அதே அதிர்ச்சி பார்வையுடன் ஆஷாவும் அவளையே பார்த்திருந்தாள்.....

கனிகாவிற்குத் தெரியும் ஏன் அனைவரும் தன்னை இப்படிப் பார்க்கிறார்கள் என்று, ஆஷா உட்பட,

'ஆனால் இதற்குத் தான் எப்படிப் பொறுப்பாக முடியும்? இத்தனை புகழ் வாய்ந்த ஒருவன், வசதிப் படைத்தவன் போல் தெரிகிறது, அவன் எதற்குத் தன்னிடம் இப்படி நெருங்கி பழக வேண்டும், தன்னிடம் பேச என்ன இருக்கிறது?' என்று மூளை சூடாகும் வரை குழம்பியவள் ஆஷாவிடம்,

"டீ, ஆஷா, ஏதாவது பேசேண்டி.... என்னடி இவர் இப்படிப் பண்ணிட்டார்? என் கிட்ட என்ன பேசணும்? ஏன் என்னைய அந்தப் பஸ் ஸ்டாப்பில் இறங்க சொல்றார்? எனக்குப் பயமா இருக்குடி.." என்றவளின் குரலிலும் பதற்றம் தெரிய, அவன் தன்னை அப்படி இழிவு படுத்திய எரிச்சலில் ஆஷா இருந்தாலும் தோழியின் நிலைமையும் பரிதாபமாகத் தான் இருந்தது.

"கனிகா, ஏற்கனவே உனக்கு அவரைத் தெரியுமா? அவர் பேசியதை பார்க்கும் பொழுது என்னமோ ஏற்கனவே நன்கு பழகியவர் போல் அத்தனை உரிமை தெரிந்தது" என்று கூற,

பதற்றத்தில் ஆஷாவின் கையை இறுகிப் பற்றியவள்,

"என்னடி, என்ன பற்றி நல்லா தெரிந்து இருந்தும் இப்படிக் கேட்கிறாய். நீங்க தான எனக்கு அவர் யாரென்று சொன்னீர்கள். அப்படி இருக்கும் பொழுது ஏன்டி இப்படிக் கேட்கிறாய்? சத்தியமாக அவர எனக்கு இதற்கு முன்னர்த் தெரியாதுடி. காலேஜில் தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். அதற்கு முன் பார்த்ததே இல்லைடி" என்று கூற,

கண்களில் நீரோடு உதடுகள் நடுங்க தன் தோழி பேசுவதைப் பார்த்தவள், "சாரிடி, சரி அத விடு. இப்போ என்ன செய்யப் போகிறாய்? என்றாள்...

சில விநாடிகள் மௌனமாக இருந்தவள்,

"இல்லை ஆஷா, நான் அவர் சொன்ன பஸ்டாப்பில் இறங்க போவது இல்லை. எனக்கு ஏற்கனவே வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் போதும். இப்பொழுது தான் என் அம்மாவைப் பறி கொடுத்து விட்டு, இங்கு மாமாவின் வீட்டில் வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறேன். எனக்குப் படிப்பு ரொம்ப முக்கியம். அதற்கு எதுவும், யாரும் தடையாக இருப்பதை நான் விரும்பவில்லை.." என்றாள்.

கனிகாவின் அருகில் நெருங்கி அமர்ந்த ஆஷா அவளின் காதுகளில் மெல்லிய கிசுகிசுப்பான குரலில்,

"கனிகா, உனக்கு அவனைப் பற்றித் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. ஆனால் அவன் ரொம்பத் திமிர் பிடிச்சவன்... பெரிய கோடீஸ்வரன் என்கிற திமிரும், தான் ரொம்ப அழகு என்ற ஆணவமும் உள்ளவன். காலேஜில் பிரின்ஸி முதற்கொண்டு அவன் சொல்வதைக் கேட்பார்கள் என்ற திமிர் வேறு. இப்ப எல்லோர் முன்னிலும் வந்து உன் கூடத் தனியா பேசணும் வா என்கிறான் என்றால், எத்தனை தைரியம் பாரு. அதனால் அவனை எரிச்சல் படுத்தாமல் பேசாமல் என்ன தான் சொல்கிறான் என்று பார்த்துவிடு.." என்று கூற, விழிகளில் கோர்த்து இருந்து நீரோடு மறுத்து தலை அசைத்தாள்...

"சரி அப்புறம் கடவுள் தான் உன்னை அவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.." என்றவள் தன் தோழிக்காகத் தானும் கலங்கித் தான் போனாள்.

அவர்கள் சென்ற பேருந்தை பின் தொடர்ந்தவன், அந்தப் பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிற்க, கடுப்பானவன், வேகமாகக் காரை செலுத்தி, தான் கனிகாவை இறங்க சொன்ன நிறுத்தத்திற்கு வெகு நேரத்திற்கு முன்பே சென்று சேர்ந்திருந்தான்.

ஒரு வழியாகப் பேருந்தும் வர, கனிகாவை சந்திப்பதற்கு ஆவலாகக் காத்திருக்க, அங்குப் பதற்றத்துடன் அவன் கண்களில் படாமல் எழுந்து கூட்டத்திற்குள் புகுந்தவள் பேருந்து கிளம்பும் வரை வெளியே எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

என்ன தான் பயந்து இருந்தாலும் நிச்சயம் தன் பேச்சை அவள் தட்ட மாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருந்தவனுக்குப் பேருந்து கிளம்ப, அவள் இறங்காதைக் கண்டவனுக்கு அவளின் இந்த உதாசீனம் அவமானத்தைத் தர மனதிற்குள் கோபக் கனல் கொழுந்துவிட்டு எறிய ஆரம்பித்து இருந்தது.
கிராமத்துப் பெண், அதுவும் சிறிய வயதுடையவள் அவனைக் கண்டாலே நடுங்குகிறாள், அப்படி இருக்கும் பொழுது எப்படித் தான் அழைத்தவுடனே வருவாள் என்று கொஞ்சம் கூடச் சிந்திக்காமல், தான் அழைத்தால் அவள் உடனே வர வேண்டும் என்று பிடிவாதத்துடன் காரை காலால் வேகமாக உதைத்தவன், வெகு வேகமாகக் காரை கிளப்பிச் சென்றான்.

பேருந்து அங்கிருந்து கிளம்பிய பின் தான் கனிகாவிற்கு மூச்சு வந்தது. மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தவளுக்கு அவன் உருவமோ காரோ தெரியவில்லை, ஆனால் எப்படியும் தன் மேல் அளவுக் கடந்த கோபமாக இருப்பான் என்று மட்டும் தெரிந்தது.

நாளை நிச்சயம் கல்லூரியில் நம்மைச் சந்திக்க வருவார், அப்பொழுது என்ன செய்வது, பேசாமல் அகில் அத்தானிடம் சொல்லிவிடுவோமா என்று கூடத் தோன்றியது.

ஆனால் அவருக்கு இருக்கும் வசதியைப் பார்த்தால் அவரால் அகில் அத்தானுக்குத் தான் பிரச்சனை வரும் என்று தோன்ற, ஒரு வித பீதியுடன் நின்ற தோழியைப் பார்த்த ஆஷா ரகசியமாக,

"கனிகா, எனக்கு என்னமோ ரொம்பப் பயமா இருக்குடி, நாளைக்கு நிச்சயம் உன்னைப் பார்க்க எப்படியும் அவன் வருவான், என்ன செய்யக் காத்திருக்கானோ தெரியலையே?' என்று அவளின் பயத்திற்கு வேறு தூபம் போட, பேசாமல் ஊருக்கே திரும்பி போய்விடலாமா என்று இருந்தது கனிகாவிற்கு.
கலக்கத்துடன் வீட்டிற்கு வந்தவளுக்கு அன்று இரவு தூக்கம் தூரப் போய் இருந்தது.

சினத்தினாலும் அவமானத்தினாலும் முகம் முழுவதும் சிவந்திருக்க வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு அன்னையின் குரல் காதில் விழவில்லை.

வெகு வேகமாக வேங்கையைப் போல் உள்ளே நுழைந்தவன், அதே வேகத்தில் மாடிப் படிகளில் ஏறி தன் அறையை அடைந்தவன் கதவை படாரென்று சாத்திய விதத்திலேயே சங்கீதாவிற்குத் தெரிந்து போனது அவனைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது என்று.

ஏனெனில் அவனின் கோபம் அப்படிப் பட்டது. கோபம் வந்தால் அவனை யாரும் நெருங்காமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது. அத்தனை ரௌத்திரம் தெரியும் அவனின் முகத்திலும் செயல்களிலும்.

"இன்று யாரால் இந்தக் கோபம்? பாவம் அவர்கள்" என்று நினைத்துக் கொண்டவர் எல்லோரும் சேர்ந்து செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டு இப்பொழுது வருந்தி பயன் என்ன என்று நொந்துக் கொண்டவர் தன் வேலையைத் தொடர்ந்தார்.

இரவு வெகு நேரம் ஆகியும் உணவு அருந்த அவன் கீழே வராதிருக்க, மெதுவாக அவன் அறைக் கதவை தட்டினார்...

"ஹர்ஷா, டைம் ஆகிடுச்சு, சாப்பிட வருகிறாயா?"

"மாம், ப்ளீஸ் லீவ் மீ அலோன் [Mom, Please leave me alone] " என்று கத்தியவன் கட்டிலை விட்டு அசையவில்லை... தலையை இரு கைகளால் தாங்கி பிடித்திருந்தவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

"ஏன் வரவில்லை? நான் அவளுக்காக அங்கு வெய்ட் பண்ணிக் கொண்டு இருப்பேன் என்று தெரிந்தும் வரவில்லை என்றால், என்னை, என் வார்த்தைகளை மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.....எத்தனை திமிர்..

என் பார்வை ஒரு முறை தங்கள் மேல் படாதா என்று அவளவள் ஏங்கிக் கொண்டு இருக்க, இவளுக்கு என்ன இத்தனை திமிர்? ஒரு வேளை நானாகச் சென்று அவளிடம் பேசியதால் என்னை அவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொண்டாளோ?" என்று உள்ளுக்குள் கொதித்த மனதை அடக்கத் தெரியாமல் வெகு நேரம் விழித்திருந்தவன் 'இனி நான் உன் பின் வரமாட்டேன்டி, ஆனால் நீயாக என் பின்னால் வருகிற மாதிரி செய்யவில்லை என்றால் நான் ஹர்ஷா இல்லை..' என்று தனக்குள்ளே சத்தியம் செய்தவன் ஒரு வழியாக வெகு நேரம் சென்று உறங்கிப் போனான்.

*********************************

கனிகாவிற்குக் காலையில் எழுந்த அந்த நொடியே ஹர்ஷாவின் முகம் ஞாபகத்தில் வர 'ஐயோ! இன்று என்ன செய்யக் காத்திருக்கிறாரோ, தெரியவில்லையே... எரிமலையாக வெடிக்கப் போகிறார். எனக்கு இது தேவையா? என்ன மடத்தனம் பண்ணிவிட்டேன். பேசாமல் அவர் சொன்னது போல் இறங்கி இருந்திருக்கலாமோ... அப்படி என்ன, என்னை அவர் கடிச்சா தின்று இருக்கப் போகிறார். அன்று கோவிலில் அத்தனை பேர் இருக்கும் பொழுது கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாமல் குங்குமம் வைத்து விட்டவர், நேற்று பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் தெரிஞ்ச காலேஜ் பசங்க, அவங்க மத்தியில கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல் அவ்வளவு அருகில் அமர்ந்ததும் இல்லாமல், கையை வேற இழுத்து பிடித்து வச்சிக்கிட்டு உனக்காக வெயிட் பண்றேன், வா என்கிறார்.
இவ்வளவு தைரியம் உள்ளவர் நிச்சயம் இன்றைக்கு வேற ஏதாவது விவகாரமாகச் செய்யப் போகிறார். ஏன் இப்படி நாம் முட்டாள் தனம் செய்தோம்? இப்போ இப்படிப் புலம்பிக்கிட்டு....செத்தோம்..' என்று வெகுவாகக் குழம்பியவள் வெளிறிய முகத்துடன் கீழே இறங்கி வர அதே சமயம் எழுந்து வந்த அகிலும் அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்தவன்,

"என்ன கனிகா? எதுவும் பிரச்சனையா? " என்று வினவ,

"இல்லை, அத்தான், அதெல்லாம் ஒன்றும் இல்லை.." என்று சமாளித்தவள் வேகமாகத் துடைப்பத்தையும் கோலப் பொடியையும் எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள்.

என்னதான் கைகள் அதன் வேலைகளைத் தானாகச் செய்தாலும் கவனம் என்னவோ ஹர்ஷாவின் மேலேயே இருந்தது. அவனைப் பற்றிய நினைப்பு ஒவ்வொரு நிமிடமும் அச்சத்தை அதிகரிக்க விறுவிறுவென்று கோலத்தைப் போட்டு முடித்தவள் காலை உணவைக் கூட உண்ண முடியாமல் மனம் ஒரு இடத்தில் இருக்காமல் தடுமாறியவாறே கல்லூரிக்கு கிளம்பினாள்.

கல்லூரிக்கு வந்து சேரும் வரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, சுற்று முற்றும் பார்த்தவாறே மெதுவாக நடந்து வர, அவளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தவன் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் மறந்தும் அவள் எதிரில் வரவில்லை.

மனம் முழுவதும் கோபத்தில் அனலாகக் கொதித்துக் கொண்டிருக்க அவளாகத் தான் இனி தன்னைத் தேடி வர வேண்டும் என்று இறுமாப்புடன் இருந்தவன் அது வரை அவள் கண்களில் தான் படக்கூடாது என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தான்.

அவனாக வந்து கோபத்தில் நான்கு வார்த்தைகள் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை, ஆனால் அவளைத் தேடியும் வராமல், அவள் கண்களிலேயே படாமல் இருந்தவனை நினைத்து அவளுக்குத் திகில் அதிகாமானதே தவிரக் குறையவில்லை.

அன்று முழுவதும் இது போல் நாடகம் ஆடியவன் அதனைத் தொடர்ந்த பல நாட்கள் இவ்வாறே செய்தான்...

என்னதான் அவனை நினைத்துப் பயம் கொண்டு இருந்தாலும் அவன் இன்னமும் அவளைக் காண வராததை நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு ஒரே குழப்பமாகவும், ஆயாசமாகவும் இருந்தது.

'நிச்சயம் நான் அன்று அவர் சொன்னது போல் அந்தப் பஸ் ஸ்டாப்பில் இறங்காதது எனக்குத் தெரிந்தவரை அவருக்கு என் மேல் தீராத கோபத்தை உண்டு பண்ணியிருக்க இருக்க வேண்டும். கண்டிப்பாக என்னைப் பார்த்து ஏன் வரவில்லை? என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அதன் பிறகு என் கண்ணிலேயே படவில்லையே. ஏன்? எங்கே போனார்... ஒரு வேளை காலேஜிற்கே வரவில்லையோ, மண்டு மண்டு, நீ பேசவில்லை என்றால் அவர் காலேஜிற்கே வராமல் போய்விடுவாரா. நீ என்ன அத்தனை முக்கியமானவளா அவருக்கு. உன்னிடம் என்ன பேசக் காத்திருந்தார் என்று கூட உனக்குத் தெரியாது, ஆனால் அதற்குள் நீயே அவருக்கு ரொம்ப முக்கியமானவள் மாதிரி முட்டாள்தனமாக நினைக்காதே..' என்று மானசீகமாகத் தன் தலையில் கொட்டிக் கொண்டவள், 'பின் ஏன் வரவில்லை? ஒரு வேளை நாம் தான் ஏதேதோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்கோமோ? அவர் ஏதோ சும்மாதான் சொல்லியிருப்பாரோ?' என்று இன்னமும் குழம்பி போனாள்.

ஆனால் விதி யாரை விட்டது. சரியாக ஒரு மாதம் கழித்து ஒரு நாள் வகுப்பில் அமர்ந்திருந்தவளுக்குத் தலை எல்லாம் ஏனோ பாரமாக இருக்க, காய்ச்சலும் வரும் போல் இருக்க, பேராசியரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.

மிகவும் அசதியுடன் 'எப்படிப் பஸ்ஸில் ஏறி, எப்பொழுது வீட்டிற்குச் செல்வோமோ......' என்று நினைத்துக் கொண்டு வெளியே வர, சரியாகச் சொல்லி வைத்தால் போல் வெளியே ஏதோ வேலையாகச் சென்று இருந்த ஹர்ஷா அவள் நேர் எதிரில் வந்து கொண்டு இருந்தான்.

பாரமாக இருந்த தலையைக் குனிந்தவாறே அழுந்த கோதி விட்டுக் கொண்டு மெதுவாக நடந்து வந்து கொண்டு இருந்தவள் எதேச்சையாக நிமிர்ந்து பார்க்க, அதே சமயம் அவனும் அவளைப் பார்க்க, இரு துருவங்கள் எதிர் எதிரில் வருவது போல் இருந்தது அந்தக் காட்சி.

ஏற்கனவே காய்ச்சலில் இருந்தவளுக்கு அவனை அங்கு எதிர்பாராதவிதமாகக் கண்டதில் உடல் தன்னை அறியாமல் தூக்கிவாரிப் போட்டது. எல்லோரும் வகுப்பில் இருந்ததால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டு இருந்த சில மாணவ மாணவிகளைத் தவிரக் கல்லூரி வளாகம் வெறிச்சோடிக் கிடந்ததால் அவனைத் தவிர்ப்பதற்கும் வழியே இல்லாமல் போனது.

'போச்சு, செத்தோம், இப்போ என்ன செய்வது, நாம் தொலைந்தோம்' என்று உள்ளும் புறமும் நடுங்க மெதுவாக அவனை நோக்கி நடந்தாள்.
அவள் குனிந்தவாறே தலையை அழுந்த கோதிக் கொண்டு மெதுவாக நடந்து வந்ததிலேயே தெரிந்தது உடல் நலம் இல்லாமல் இருக்கிறாள் என்று, ஆனாலும் தன் கோபத்தை அவனால் குறைக்கவோ, தடுக்கவோ முடியவில்லை.

அழுத்தமான காலடிகளுடன் அவள் அருகே வந்தவன், அவளின் விழிகளுக்கு உள்ளே ஊடுருவதைப் போல் அவளைக் கூர்மையாகப் பார்த்தவாறே ஒன்றும் பேசாமல் கடந்து செல்ல, கனிகாவிற்கு இதயம் துடிப்பதை நிறுத்திவிடும் போல் இருந்தது.

ஒன்றும் செய்வதறியாது தடதடக்கும் இதயத்துடன் உதடுகளைக் கடித்தபடி, கண்கள் கலங்க அழுது விடும் குரலில் "என்னங்க" என்று அழைக்க அவன் தன் காதுகளில் அவள் அழைத்தது விழுந்தும் கேட்காததைப் போல் நடக்க, அவனின் பின்னாலேயே ஓடியவள் அவனுக்கு முன் சென்று, அவன் முகத்தையே பரிதாபமாகப் பார்க்க, அவளைக் கடந்து சென்றவன் திரும்பி பார்த்தானில்லை.

மனதிற்குள் பூகம்பமே வெடிக்கும் போல் இருந்தது ஹர்ஷாவிற்கு. அவளின் கலங்கிய கண்களும், கலைந்த தோற்றமும் அவனின் மனதை அசைத்துதான் பார்த்தது, ஆனால் உடனே இறங்கி வந்துவிட்டால் அவன் ஹர்ஷா இல்லையே.

ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் எதுவுமே நடக்காதது போல் அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள் சுய நினைவிற்கு வர சில நிமிடங்கள் பிடித்தது.

அவனைக் கண்டாலே பயந்தவளுக்கு அவனின் இந்தப் புறக்கணிப்பு அவளையும் அறியாமல் மிகுந்த வலியைக் கொடுக்க, 'ஏன் இந்தத் தடுமாற்றம்? அவர் பேசாவிட்டால் என் மனதில் இத்தனை வேதனை? இரண்டு மூன்று தடவையே பார்த்திருக்கும் எனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்தக் கலக்கம்?' என்று தடுமாறியவள் அவன் தன் கண்களில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்று விட்டுப் பின் மெதுவாகக் கல்லூரியை விட்டு வெளியே வந்தாள்.

எப்படித் தன்னுடைய பேருந்து நிலையத்திற்கு வந்தோம், எப்படிப் பேருந்தில் ஏறினோம், எப்பொழுது வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் என்று கூட அவள் நினைவில் இல்லை.

கல்லூரிக்குச் சென்ற பெண் திடீரென்று மதியமே வீட்டிற்கு வரவும் பதறிய மாலதி கனிகாவின் அருகில் வந்தவர்,

"என்னடா, ஒரு மாதிரியா இருக்க, உடம்பு சரியில்லையா?" என்றவாறே அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தவர், உடம்பு நெருப்பாகக் கொதிப்பதைப் பார்த்து,
"ஐயோ! என்ன கனிகா, இப்படி உடம்பு கொதிக்குது, என்னாச்சு, ஏன் திடீரென்று காய்ச்சல் அடிக்குது?" என்று பதறியவர், "ஒரு நிமிஷம் இரு, அடுப்பை ஆஃ பண்ணிவிட்டு வருகிறேன், ஹாஸ்பிட்டல் போகலாம்.." என்றார்...

"இல்லை அத்தை, அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா போதும்" என்றவள் அவர் எவ்வளவோ எடுத்து கூறியும் பேசாமல் மாடி ஏறியவள் அமைதியாகக் கட்டிலில் படுத்தாள்.

மூடியிருந்த கண்களின் வழியே நீர் பெருக்கெடுக்க அதனைத் துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் படுத்து இருந்தவள் மனம் முழுவதும் அவனின் நினைவுகளே.
என்ன தான் புத்தி "அவன் ஒரு மலை, நீ ஒரு மடு, அவன் எதற்கு உன்னிடம் பேச வேண்டும் என்றான் என்று கூட இன்னும் உனக்குத் தெரியாது, அதற்குள் ஏன் இத்தனை கலக்கம், அவன் மீது எதற்கு இத்தனை ஈடுபாடு" என்று கூறினாலும், மனது என்னவோ கேட்க மாட்டேன் என்றது.

தன் அன்னையின் காதல் எவ்வாறு அவரின் வாழ்க்கையைச் சூறையாடியது என்பதனைத் தன் கண்களாலேயே கண்டவள்...

படிக்கும் ஆர்வம் அத்தனை இருந்தும் பெற்றோரும், தமையனும் அத்தனை எடுத்து சொல்லியும் காதல் அவரின் கண்ணை மறைக்க, எல்லோரையும் தூக்கி எறிந்து தன் காதலின் பின்னால் போனதால் வாழ்க்கையின் இறுதி வரை அவர் ஒரு நாள் கூடக் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை.

தன் அன்னைக்கு அவரைப் பற்றிய கவலையை விடத் தன்னைப் பற்றிய கவலை தான் ஏராளம். இத்தனையும் அறிந்து இருந்தும் அருகில் இருந்தே பார்த்திருந்தும் இன்னும் ஏன் மனம் ஹர்ஷாவை சுற்றியே திரிகிறது? அவனின் அழகா? கல்லூரியில் இத்தனை பெண்கள் இருந்தும் தன்னைத் தேடி அவனாக வந்ததால் ஏற்பட்ட பெருமையா? எதுவுமே புரியவில்லை.. ஆனால் அவனின் இந்தப் புறக்கணிப்பு இதயத்தை ஈட்டியால் குத்தி கிழிப்பதைப் போல் மட்டும் இருந்தது.

தன் போக்கில் அழுது கரைந்தவள், படபடவென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, மெதுவாகக் கட்டிலில் இருந்து எழுந்து வந்தவள் கதவை திறக்க, அவளின் களைத்த முகமும் கலங்கிய தோற்றமும் அகிலுக்குக் கலக்கத்தை உண்டாக்க,

"என்னாச்சு, கனிகா? காலையிலேயே கேட்டேனே, ஏன் ஒரு மாதிரியா இருக்கன்னு, அப்பவே சொல்லியிருக்கக் கூடாதா உடம்பு சரியில்லை என்று.. சரி வா, ஹாஸ்பிட்டல் போகலாம்.." என்றான்.

"இல்லை அத்தான், அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியா போய்விடும். நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்.." என்று மறுத்தவளை மல்லுக் கட்டி கீழே இழுத்து வந்தவன் மாலதியிடம் சொல்லிவிட்டு தன் பைக்கில் அமர செய்து அருகில் உள்ள மருத்துவரிடம் கூட்டி சென்றான்.

செல்லும் வழியெல்லாம், அமைதியாக வந்த அவளைக் கண்ணாடியில் பார்த்தவனுக்கு எதுவோ சரியில்லை என்று பட்டது...

"கனிகா, நாளையில் இருந்து நானே உன்னைக் காலேஜில் ட்ராப் செய்து விட்டுப் பின் ஈவ்னிங் பிக்கப் செய்கிறேன்.." என்றான்.

அவன் பட்டென்று இவ்வாறு சொன்னதும் என்ன சொல்வதென்று கனிகாவிற்குத் தெரியவில்லை.

இவர் மட்டும் காலேஜிற்கு வந்தால் அவ்வளவு தான், இருக்கும் பிரச்சனையில் இது வேறு என்று எண்ணியவள்,

"இல்லை அத்தான், உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்? எனக்குக் காலேஜில் ஒன்றும் பிரச்சனையில்லை. திடீரென்று ஏதோ உடம்பு முடியாமல் போய் விட்டது. நான் சொன்னது போல் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகப் போய் விடும். நீங்கள் தான் இதற்குப் போய் டாக்டரிடம் கூட்டி செல்கிறீர்கள்.."

"முதல்ல, டாக்டரிடம் காண்பித்து எதனால் ஃபீவர் என்று பார்ப்போம், அப்புறம் முடிவு செய்வோம்" என்றான்.

**********************************

மறு நாள் காலையில் கண் விழிக்கும் பொழுதே மனி ஏழு ஆகியிருக்க, பரபரவென்று எழுந்து குளித்து முடித்துக் கல்லூரிக்கு கிளம்பி வந்தவளை பார்த்த நிகிலாவிற்கும் மாலதிக்கும் ஆச்சரியம்...

"என்ன கனிகா, நேற்று தான் அப்படி உடம்பிற்கு முடியவில்லை என்று பாதியில் காலேஜில் இருந்து வந்தாய், ஏன் ஒருஇரண்டு நாள் லீவு போட்டு ரெஸ்ட் எடுக்கக் கூடாதா??"

"இல்லை அத்தை, ஏற்கனவே காலேஜ் துவங்கி ரொம்ப நாள் கழித்துத் தான் நான் காலேஜிலேயே சேர்ந்தேன். இப்பொழுதுநேற்று மதியம் வேறு இரண்டு முக்கியமான வகுப்புகளை விட்டு விட்டு வந்துவிட்டேன். இன்றும் லீவு எடுத்தால் எனக்குத் தான் கஷ்டம். இப்பொழுது உடம்பு கூடப் பரவாயில்லை...." என்றவள் சாப்பிட அமர,

"அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது, அதற்காக இப்படி உடம்பு முடியாமல் இருக்கும் பொழுது அவசியம் காலேஜிற்குப் போக வேண்டுமா, ஆனால் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எங்கிருந்து தான் இத்தனை பிடிவாதம் வருகிறதோ" என்று மனதிற்குள் நினைத்தவாறே ஒன்றும் பேசாமல் அவளுக்கும் நிகிலாவிற்கும் டிபன் எடுத்து வைக்க அகில் வந்து சேர்ந்தான்.

அவனும் மாலதியைப் போன்று கூறவே, அவனுக்கும் மாலதிக்கு கூறிய பதிலை கூறியவள், முன் ஜாக்கிரதையாக,

"அத்தான், நானே வழக்கம் போல் காலேஜிற்குப் போய்க் கொள்கிறேன், எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நிச்சயம் உங்களிடம் தான் முதலில் சொல்லுவேன்.." என்று சிரிப்புடன் கூற, அவனும் தலை அசைத்தான், ஆனால் எதுவோ சரியில்லை என்று மட்டும் அவன் உள்மனது கூறிக்கொண்டே இருந்தது.

கல்லூரிக்கு வந்து சேர்ந்தவளுக்கு மனம் தன்னையும் அறியாமல் ஹர்ஷாவைத் தேட, மனதிற்குக் கடிவாளம் இட்டவள் வகுப்பிற்குள் நுழைந்தாள்.

நாள் அதன் போக்கில் செல்ல, அவளின் சோர்ந்த முகத்தைப் பார்த்த ஆஷாவும், இளாவும், மாலையில் வீட்டிற்குச் செல்லும்பொழுது விசாரிக்கலாம் என்று இருக்க, வகுப்புகள் முடிந்து பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தவளின் கண்களில் பட்டான் ஹர்ஷா.

தன் நண்பர்களுடன் சேர்ந்து தன் காருக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தவன், அவளைப் பார்த்ததும், ஸ்டைலாகக் காரில் சாய்ந்து அவளைப் கூர்ந்துப் பார்க்க, அவனின் பார்வையில் இருந்த வீரியம் தாங்காமல் உடம்பில் உதறெலெடுக்க, தன்னையும் அறியாமல் இளாவின் கையை இறுக்கப் பிடித்திருந்தாள் கனிகா.
அவளின் இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்ட இளா, கனிகாவின் கண்கள் போன இடத்தைப் பார்த்தவளுக்குக் கனிகாவின் மனதும் உடம்பும் சரியில்லாமல் போனதன் காரணம் புரிந்து போனது.

"என்னடி, இன்னும் அவரைப் பற்றியே நினைச்சிட்டு இருக்கியா?" என்று கேட்க, ஒன்றும் பேசாமல் மருண்ட விழிகளுடன் இளாவை நோக்கியவள் எதுவும் சொல்லாமல் தலை குனிய,

"கனிகா, ஏற்கனவே இதைப் பற்றி உன்கிட்ட பேசணும் என்று இருந்தேன். ஆனால் அதற்கு அப்புறம் அவர் உன்னைச் சந்திக்கவில்லை என்பதால் அதோடு அந்த விஷயம் முடிந்து விட்டதாகத் தான் நினைத்திருந்தேன். இதென்னடி, மறுபடியும்..." என்றாள்.

இதற்கும் கனிகாவிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே அதற்குள்ளாக அவர்கள் ஹர்ஷா இருந்த இடத்தை நெருங்கி இருந்தார்கள். அது வரை அவளைப் பார்த்து இருந்தவன் அவர்கள் அவன் அருகில் வரவும் ஒன்றும் தெரியாதது போல் தன் நண்பர்களை நோக்கி திரும்பியவன் வேறு ஏதோ பேசியபடியே சிரித்துக் கொண்டிருக்க, கனிகாவிற்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது அவன் செய்கை.

இளாவின் கையை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொள்ள, அவளின் கை நடுக்கத்தை உணர்ந்த இளா, வேக வேகமாக அவளைக் கிட்ட தட்ட இழுத்து சென்றவள், கல்லூரி வளாகத்தைத் தாண்டியதும், கனிகாவின் தாடையில் ஒற்றை விரல் வைத்து முகத்தைத் தூக்கியவள், "கனிகா, இது என்னடி?" என்றாள்.

இதற்கும் நிச்சயம் கனிகா பதில் சொல்வது போல் தெரியவில்லை, ஆதலால் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு நிழற்குடையின் கீழ் அமர்ந்தவர்கள், பேசத் தொடங்கினார்கள்.

"கனிகா, தயவு செய்து நான் சொல்வதைப் பொறுமையாகக் கேளுடி..." என்றவள், ஒரு பெருமூச்சை விட்டுத் தொடர்ந்தாள்.

"ஆஷா எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாள். நீயே கொஞ்சம் யோசிடி, நீ மட்டும் இல்லை, எங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன், ஹர்ஷா மலை என்றால், நாமெல்லாம் மடு... அவர் பரம்பரை கோடீஸ்வரர்... எனக்குத் தெரிந்த வரை சென்னையிலும் மும்பையிலும் அவங்களுக்கு ஏகப்பட்ட கம்பெனீஸ், ஃபேக்டரிஸ் எல்லாம் இருக்காம்... அவங்க பரம்பரைக்கே இவர் ஒருவர் தான் வாரிசாம்... அப்படி இருக்கும் பொழுது ஏதோ கிண்டலுக்காகக் கூட உன் கிட்ட அப்படி வந்து அவர் பேசியிருக்கலாம்... ஏன்னா, எங்களுக்குத் தெரிஞ்ச வரை ஹர்ஷா அவ்வளவு ஈஸியா எந்தப் பெண்ணிடமும் பேசி விட மாட்டார். தான் ரொம்ப அழகென்றும், கோடீஸ்வரர் என்றும் திமிர் பிடித்தவர்.." என்றவள் ஆனாலும் ஹர்ஷா பேரழகு தான் என்று நினைத்துக் கொள்ளத் தவறவில்லை...

தன் மனம் போன போக்கை உணர்ந்த இளா, 'சே, என்ன இது இவளுக்கு அறிவுரை கூற வந்து விட்டு நாம் இப்படி நினைப்பது அசிங்கம், சென்னையிலே பிறந்து வளர்ந்த நமக்கே இப்படி என்றால், கிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்த இவளுக்கு எப்படி இருக்கும்' என்று நினைத்தவள் தன் பேச்சை தொடர்ந்தாள்..

"அது மட்டும் இல்லைடி. அவர் ஃப்ரெண்ட்ஷிப் வச்சிக்கிறது கூட அவர் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி தான் வச்சிப்பார்னு கேள்வி பட்டிருக்கிறோம்... அப்படி இருக்கையில் நீ நினைக்கிற மாதிரி கண்டிப்பாக எதுவும் இருக்காது, அதனால் தயவு செய்து இனி மனதில் எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் உடம்பையும் மனதையும் பார்த்துக் கொள்.." என்று முடிக்க,

"சரி இளா" என்று இரு வார்த்தைகளை மட்டும் கூறிய தோழியை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளுக்காகக் கடவுளிடம் மனதிற்குள் வேண்டிக் கொள்ள மட்டும் தான் முடிந்தது தோழிகள் இருவருக்கும்.

இளா சொன்ன விஷயங்களையே திரும்பி திரும்பி சிந்தித்தவளுக்குத் திடீரென்று ஒன்று தோன்றியது, 'ஒரு வேளை அன்று கோவிலில் எதேச்சையாகத் தான் தன் அருகில் நின்றிருப்பாரோ? குருக்கள் திருநீறும், குங்குமமும் கொடுக்கும் பொழுது நான் கண்களை மூடியிருந்ததால், அவர் குங்குமம் கொடுக்க முயற்சி செய்ய, நான் வேண்டாம் என்றதால் கோபம் கொண்டு அப்படி நெற்றியில் குங்கமம் வைத்துவிட்டு சென்றிருப்பாரோ? நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ?' என்று தலையில் அடித்துக் கொண்டவள் ஒன்று மட்டும் மறந்து போனாள்.

அது அன்று கோவிலில் அவள் அருகில், வெகு அருகில் நெருங்கி நின்றவன் என்னை ஞாபகம் இல்லையா? என்று கேட்டதை....

எதேச்சையாக இத்தனையும் அவன் செய்திருந்தால், ஒரு முறை பார்த்த, அதுவும் அவள் முதன் முதலாகக் கல்லூரிக்கு வந்த நாள் அன்று கீழே விழுந்தவளை தூக்க முயற்சித்தவன், எப்படி அத்தனை நாட்களுக்குப் பிறகும் அவளை ஞாபகத்தில் வைத்திருந்தான் என்பதை...

சரி இனி அவரைப் பற்றி நினைக்கக் கூடாது, இனி அவரைப் பார்க்கவும் கூடாது, பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டும் அவரைப் போல் என்று அன்று மட்டும் நூறாவது தடவையாக நினைத்தவள் நிலையில்லாத ஒரு உறுதி மொழி எடுத்துக் கொண்டாள்..

ஆனால் அவள் நினைத்தும் பார்க்கவில்லை மறு நாள் அவளே அவனைத் தேடி செல்லும் சூழ்நிலை அமையும் என்று.

வழியெல்லாம் கலக்கத்துடனே வந்தவளுக்குத் தெரியாதா, தன் உடம்புக்கு ஏன் முடியாமல் போனது என்று. அவளைப் பரிசோதித்த மருத்துவரும் ஒன்றும் பெரிதாக இல்லை என்றும், சாதாரணக் காய்ச்சல் தான் என்றும் மருந்துகள் கொடுக்க, வீட்டிற்கு வந்தவளுக்கு மாலதி கஞ்சி கொடுத்து மருந்துகளையும் உண்ண செய்த பின்பே படுக்க வைத்தாள்.

அவர்கள் அனைவரின் அன்பும் கவனிப்பும் மனதை சிலிர்க்க வைத்தது என்றால், ஹர்ஷாவின் நினைப்பு மனதை கலங்க அடித்தது.

'இது தேவையா, நாம் ஏன் இப்படி இருக்கிறோம், இத்தனை நல்லவர்கள் நம்மைச் சுற்றி இருக்கும் பொழுது தேவையில்லாத எண்ணங்கள் கவலைகள் எதற்கு, அவர் யார், அவரைப் பற்றி ஏன் இவ்வளவு சிந்தனைகள், அவரே நம்மைக் கண்டுக்கொள்ளாத பொழுது, எதற்கு நாம் நம் உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டும்? அம்மா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஏன் இந்த வேண்டாத ஆசைகள் விருப்பங்கள்' என்று தெளிவாகச் சிந்தித்தவளுக்கு, மருந்தினாலோ அல்லது கடந்த பல நாட்களாக ஒழுங்காகத் தூக்கம் இல்லாததாலோ என்னவோ, தூக்கம் தழுவியது.

தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top