JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 10 & 11

JLine

Moderator
Staff member
அத்தியாயம் - 10

அர்ஜூன் காரின் கதவை திறந்தும் ஏறாமல் நின்ற திவ்யா ஒரு சில நிமிடங்கள் ஸ்ரீயின் முகத்தையும் காரையும் மாற்றி மாற்றிப் பார்க்க, அங்குப் பொறுமை இழந்து கொண்டு இருந்தான் அர்ஜூன்...

வழக்கமான அவனின் அகங்காரம் தலை தூக்க, லேசாக இடது பக்கமாகத் தலையைச் சாய்த்து திவ்யாவைப் பார்க்க அதில் அவள் நெஞ்சுக் கூடு சில்லிட சட்டென்று காரில் ஏறியவள் மறந்தும் தன் கணவனின் பக்கம் திரும்பவில்லை...

அர்ஜூன் கதவைத் திறக்கவும், பின் திவ்யா அதில் ஏறாமல் நிற்க அவளைக் கூர்ந்து பார்த்ததையும், அதில் மின்னல் போல் காரில் ஏறிய திவ்யா அர்ஜூன் அருகில் அமர்ந்ததையும் கண்ட மஹாவிற்கும் அருணிற்கும் நடப்பது கனவா? இல்லை நினைவா? என்று தோன்ற ஆச்சரியத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

அருண் மஹாவிடம் "இங்க என்ன நடக்குது?" எனவும்...

"ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா? இல்லை எல்லாம் என்னோட மேக்கப்போட மாயமா?" என்று மஹா அளக்க...

"அடியே... ஏதோ ஒரு நாள் அதுவும் ஏற்கனவே அழகா இருக்கிற அண்ணிக்கு மேக்கப் போட்டுவிட்டு ஏண்டி இப்படி அளப்பரை பண்ற" என்றான்...

"உங்களுக்குத் தான் என் திறமையைப் பார்த்துப் பொறாமை" என்று உதட்டை சுளித்தவாறே கிசுகிசுத்தவள் திரும்பிப் பார்க்க அங்கு வினோத் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, "ஐயோ! இவங்க இப்படிப் பார்ப்பதை யாராவது பார்த்தால் என்ன ஆகும்??" என்று மனதிற்குள் நினைத்தாலும் அதுவும் அவளுக்குப் பிடித்துத் தான் இருந்தது.

திவ்யா காரில் அமர்ந்ததும் அர்ஜூன் காரை கிளப்ப, மற்ற அனைவரும் வேறு வேறு காரில் கிளம்பினார்கள்...

தனித்த இரவு, சப்தமேதுமற்ற சூழ்நிலை, காதலுக்கும் காமத்திற்கும் ஏற்ற வயதுடைய இருவர், உரிமையுள்ள உறவு....

இயற்கையின் வேகம் மெள்ள ஆட்கொள்ள இம்சையும் இன்பமும் கலந்த உணர்வில் தாக்கப்பட்டு அர்ஜூன் இருந்தானென்றால் காரில் ஏறியதில் இருந்து ஒவ்வொரு நொடியும் திவ்யாவின் நிலை விவாரணத்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தது...

உணர்ச்சிகள் கரைக்கடக்கும் ஆவலில் திமிறிக் கொண்டு, இருக்கத் தன் வெகு அருகில் அமர்ந்து இருந்தவளை உரிமையுடன் திரும்பி பார்க்க, அழகெல்லாம் திரண்டது போலும் இருளைக் கிழித்துக் கொண்டு வந்த நிலவைப் போலும் அவன் மனைவி அவனை வசீகரிக்க, அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூக்களில் இருந்து வந்த சுகந்தம் அவன் நாசியைக் கவர்ந்து மயக்கத்தை விளைவிக்கத் திண்டாடிப் போனான் அர்ஜூன்...

வெளி உலகத்தில் அவன் அழுத்தமான காலடிச் சுவடுகளின் சத்தத்திற்கே எழுந்து நிற்கும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்....

தொழில் வட்டாரங்களில் எதற்கும் அஞ்சாத சிங்கம் என்றும், தன் கூரிய பார்வையிலேயே எதிராளியை வென்றுவிடுபவன் என்றும் பேர் எடுத்தவன்...

அப்பேற்பட்ட அர்ஜூனிற்கே இந்த நிலைமை என்றால் பத்தொன்பது வயதே ஆன, தன் கணவனின் ஒரு பார்வையிலேயே சகலமும் நடுங்கி நிற்கும் திவ்யாவின் நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்...

அவன் தன்னைத் திரும்பி பார்ப்பதை அவன் பக்கம் திரும்பாமலே தெரிந்துக் கொண்டவள் நாணத்தை மறைக்க முடிந்த அளவிற்கு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வர, அவளின் நாணத்தையும் சங்கடத்தையும் மிகைப் படுத்தி வேதனையை அளிக்கும் வகையில் அவன் தன் இடது கையைக் கியர் பாக்ஸில் வைத்து இருக்க, அதில் அவன் கரம் அவளின் தொடையில் லேசாக உரச, தன்னிச்சையாக நகர்ந்து கதவோரம் ஒட்டி அமர்ந்தாள்...

அவளின் செய்கையைச் சாலையில் பார்வையைப் பதிய வைத்துக் கொண்டே கண்டு கொண்டவன் இதழ்களில் தவழ்ந்த புன்னைகையுடன் கண்களில் விஷமச் சிரிப்புடன் காரை செலுத்திக் கொண்டு இருக்க அரவமேதும் இல்லாத அந்த நிசப்தமான சூழ்நிலையில் அர்ஜூனின் அலை பேசி அலறி திவ்யாவிற்குத் தூக்கி போட செய்தது...

தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அலை பேசியை எடுத்தவன் அதில் அழைத்திருந்தவரின் எண்ணைப் பார்க்க அவன் அன்னையே அழைத்திருந்தார்...

அவர் இந்தத் திருமண வரவேற்பை ஏற்பாடு செய்திருந்ததே அவனுக்கு விருப்பம் இல்லை... அதிலும் வாழ்த்துக்களும் கூச்சல்களும் இளவட்டங்களின் அட்டகாசங்களும் அவனுக்குக் கிட்டத்தட்ட ஒரு வித எரிச்சல் மனப்பான்மையே உருவாக்கியிருந்தது...

இதில் அவர் மீண்டும் அழைக்கவும் இன்னும் என்ன மிச்சம் வைத்திருக்கிறார் என்று எண்ணியவன் அழைப்பை எடுக்காமல் அலை பேசியை மீண்டும் பாக்கெட்டில் வைத்து காரை ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்த, மீண்டும் மீண்டும் அலறிக் கொண்டு இருந்த அலை பேசி சற்று நேரம் இடைவெளிவிட்டு சிணுங்கத் துவங்கியது...

ஆனால் இந்த முறை சிணுங்கியது அர்ஜூனின் அலை பேசியல்ல... திவ்யாவினுடையது.....

அர்ஜூனை திரும்பி பார்த்தவள் வேறு வழியில்லாமல் அழைப்பை எடுக்க.....

"என்னடா, அர்ஜுன் செல்லிற்குக் கூப்பிட்டேன்... அவன் எடுக்கல... யார்கிட்டயாவது பேசிட்டு இருக்கானா?" என்றார் ஸ்ரீ...

அவருக்கு நன்றாகத் தெரியும்... யாரிடமாவது அவன் பேசிக் கொண்டு இருந்தால் அலை பேசியில் அழைப்பு சென்று இருக்காது...

அவர் மகன் வேண்டும் என்றே தான் அலை பேசியை எடுக்கவில்லை என்று....

தெரிந்திருந்தும் அவர் திவ்யாவிற்கு அழைத்தவர்...

"திவ்யா... ஃபோன கொஞ்சம் அர்ஜூன் கிட்ட கொடுக்கிறியா? நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" எனவும்...

ஏற்கனவே அவனுக்கு அருகில் தனியாக அமர்ந்து வருவது அவளுக்குக் காரில் இருந்த ஏசியையும் மீறி வியர்த்துக் கொட்டுகிறது...

"இதுல இப்போ அவங்க கிட்ட போன வேற கொடுக்கனுமா.... ஐயோ!" என்றிருந்தது திவ்யாவிற்கு...

ஆனால் அர்ஜூனிற்கு நன்கு தெரியும் திவ்யாவின் அலை பேசியில் அழைத்ததும் தன் அன்னை தான் என்று...

அன்னைக்கும் மகனிற்கும் இடையில் நடக்கும் மௌன போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது இன்னமும்...

தன் மனைவியின் பால் அவன் உள்ளம் சரிந்திருந்தது உண்மை தான்... அதனை அவனும் உணர்ந்தே இருந்தான்...

அந்த ஒரு காரணத்தினால் தான் அவன் இந்தத் திருமண வரவேற்பை தடுத்து நிறுத்தவில்லை...

ஆனால் அதற்காக அவன் தன் அன்னையை மன்னித்துவிட்டான் என்று அர்த்தம் இல்லை... அவரின் மீது இன்னும் வெறுப்பும் கோபமும் இருக்கத் தான் செய்தது...

ஆதலால் இனி அவர் கேட்கப் போகும் அல்லது சொல்லப் போகும் எதனையும் தான் காதில் வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்து இருந்ததினாலேயே அவன் அவரின் அழைப்பை நிராகரித்து இருந்தான்...

ஆனால் அவர் திவ்யாவையும் அழைக்கவும், அவளிடம் என்ன சொன்னாரோ அவள் அவனைத் திரும்பி பார்க்கவும் அவனுக்குப் புரிந்து போனது...

தன்னிடம் காரியம் சாதிக்க நினைக்கும் தன் அன்னை இன்று தன் மனைவியைப் பயன்படுத்த பார்க்கிறார் என்று..

ஆனாலும் தன் நிலையில் இருந்து அவன் இனி சிறிதும் கீழ் இறங்கி வருவதாயில்லை....

தன் கணவனின் உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டத்தை அறியாமல் ஒரு வழியாகத் தனக்குள்ளே தைரியத்தை வர வழைத்துக் கொண்டவள் தயங்கியவாறே...

"அத்த உங்ககிட்ட பேசனும்னு சொல்றாங்க" என்று மெதுவாகக் கூற,

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் பார்வையைத் தாங்க இயலாமல் "பேசாமல் காரில் இருந்து குதித்து விடுவோமா?" என்றே இருந்தது அவளுக்கு.....

அவளைச் சில விநாடிகளே பார்த்தவன் மௌனமாக மீண்டும் சாலையில் கண்களைப் பதிக்க, இப்போழுது என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பிப் போனாள் திவ்யா....

மீண்டும் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவள்.....

"அத்தக்கிட்ட நான் என்ன சொல்லட்டும்? இன்னும் லைன்ல தான் இருக்காங்க" என்று மெல்லிய குரலில் கூற ஒன்றும் பேசாமல் அவளிடம் இருந்து அலை பேசியை வாங்கியவன் மீண்டும் சாலையில் கண் பதித்து "வாட் மாம்?" என்றான்.

ஸ்ரீக்கு அவனது கடினமான குரலில் இருந்தே தெரிந்தது அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று...

இதில் இந்த விஷயத்தை வேற சொல்லனுமா என்றிருக்க ஆனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இதை விட நல்ல ஒரு சந்தர்ப்பம் அமையாது என்று ஒரு நல்ல அன்னையாக, தன் மனம் கவர்ந்த மருமகளின் நலனிற்காக அவர் அதனைச் செய்தே ஆக வேண்டும் என்று முடிவோடு இருந்தார்...

அவருக்கும் தன் மகனை நினைத்து அடி வயிற்றில் புளியை கரைக்கவே செய்தது... இருந்தும் மனதிற்குள் துணிவை வர வழைத்துக் கொண்டவர் மெல்ல...

"அர்ஜூன்... இன்றைக்குத் திவ்யாவோட சொந்தக்காரர்கள் சில பேரும், நம்ம சொந்தக்காரங்கள் சிலரும் நம் வீட்டிலேயே தங்குறாங்க..... ஏற்கனவே உங்க அத்தை அவ பொண்ண உனக்கு எடுக்கலையேன்னு கோபத்துல இருக்கா.... இதுல அவ நீயும் திவ்யாவும் தனித் தனியா படுக்கிறதப் பார்த்தா அதுக்குக் கண்ணு காது மூக்குன்னு வச்சு பேச ஆரம்பிச்சிடுவா..... அது நம்ம குடும்பத்திற்குக் கெட்ட பேரத் தான் கொண்டு வரும்...." என்றவர் சில விநாடிகள் தயங்கி ஊரில் உள்ள கடவுள்களிடம் எல்லாம் மன்றாடி மெதுவாக அதைக் கேட்டேவிட்டார்...

"அதனால ப்ளீஸ்... அவ இங்கிருந்து போற வரைக்கும் மட்டும் திவ்யாவை உன் ரூம்ல தங்க வச்சிக்கிறியா?"

இதனைக் கேட்பதற்குள் ஸ்ரீக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது....

இதைக் கேட்டதும் மறு பக்கதில் அர்ஜூன் கோபத்தில் கத்த போகிறான் என்று ஸ்ரீ நினைத்துக் கொண்டு இருக்க அவனோ எதுவும் பேசாமல் இருந்ததைப் பார்த்து குழம்பி போன ஸ்ரீ...

"அர்ஜூன், என்னப்பா? லைன்ல தான் இருக்கியா?" என்றார்.

"யெஸ் மாம்" என்றவனுக்கு அவரின் எண்ணம் புரிந்தது...

காதலோ, காமமோ, தாபமோ அவை ஒரு மனிதனின் சொந்த விஷயங்கள்... அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே உரிய அந்தரங்க உறவு.... தன்னவளுடன் தான் கூடும் தருணத்தைக் கூட அவனும் அவளும் மட்டும் தான் முடிவெடுக்க வேண்டும்...

இதில் தலையிட இவ்வுலகில் ஒருவருக்கும் அதிகாரம் கிடையாது என்று நினைத்திருந்தவனுக்கு அவன் அன்னையின் இப்போதைய வேண்டுகோள் மேலும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் கிளப்பியது....

அந்த இரவு அவர்கள் இருவரும் இணையும் இரவாகக் கூட இருந்திருக்கலாம்... அவர்களின் வாழ்கையின் காதல் கலந்த காம இன்பத்தையும், நேசம் கலந்த தாம்பத்தியத்தின் சுகத்தையும் சுமந்து வரும் முதல் இரவாக அமைந்திருக்கலாம்...

அவன் உடலில் மண்டியிருந்த உணர்ச்சிகளின் சுழற்சியை, தாபத்தின் தகிப்பை, காமத்தின் வேட்கையை, பெண்ணவளும் தனது இதய வாசலைத் திறந்து தனது லாவண்யத்தை அவனுக்கு அள்ளி வழங்கி கணவனின் தேடலைப் பூர்த்திச் செய்து அவன் பிரம்மச்சரியத்தை உடைத்த இரவாக இருந்திருக்கலாம்...

ஆனால் இந்த நிமிடம் அவனின் மனதில் மண்டியிருந்த விரக்தி எல்லாம் மீண்டும் மீண்டும் தன் வாழ்க்கையின் போக்கை, கணங்களை நிர்ணயிக்கும் தன் அன்னையை நினைத்து தான் இருந்தது...

அதில் அவனுக்குள் அடங்கியிருந்த வேதாளம் மெல்ல வெளி வர ஆரம்பித்தது....

சில நொடிகள் சிந்தித்தவன் மீண்டும் வார்தைகளைக் கொட்ட ஆரம்பித்தான்... ஆனால் தன் மனைவிக்குப் புரியக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில்.....

"மாம், என்ன ப்ளான் பண்றீங்க? எனக்கு ஒன்றும் புரியவில்லை... ப்ளீஸ் டோண்ட் ட்ரீட் மீ லைக் அச் சைல்ட்.... [Please don't treat me like a child]... லெட் மீ டேக் தோஸ் டிஷிஷன்ஸ் மாம்... let me take those decisions mom..." என்றான்....

அழுத்தமான குரலில் கிட்டதட்ட கர்ஜிக்கும் தோரணையில் அவன் ஒவ்வொரு வார்த்தையையும் பல்லைக் கடித்துக் கொண்டு பேசியதிலேயே ஸ்ரீக்குப் புரிந்தது அவனுக்குத் தன் மேல் இருக்கும் அடங்காத கோபத்தின் அளவை.....

ஒரு வேளை அவன் திவ்யாவைப் பார்க்கும் பார்வையின் அர்த்தத்தை நாம் தான் தவறாகப் புரிந்துக் கொண்டோமோ என்ற எண்ணம் கூடச் சடுதியில் தோன்றி மறைந்தது....

ஆனால் அதே சமயம் அவருக்கு நன்றாகத் தெரியும்...

அர்ஜூனிற்கு யாரும் அவன் அறைக்கு வருவது பிடிக்காது என்று...

அப்படிப்பட்டவன் திவ்யாவை எப்படித் தன்னுடன் தங்க அனுமதிப்பான்? ஆனால் திவ்யா அவன் மனைவி.... யாருக்கு உரிமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவன் மனைவிக்கு உரிமை இருக்கிறது... இப்பொழுது அதைச் சொன்னால் தாம் தூம் என்று குதிப்பான்....

ஆனால் அவர் ஒன்று மட்டும் மறந்து போனார்.... அவன் உண்மையில் அவரின் எதிர்பார்ப்பை வெறுத்திருந்தால் ஆங்கிலத்தில் பேசியிருக்க மாட்டான்....

தன்னவளின் மனம் புண்படுவதில் அவனுக்கு விருப்பம் இல்லை...

ஸ்ரீயும் இதோடு இந்த விவாத்தை விட்டு இருக்கலாம்... ஆனால் திவ்யாவிற்கு நல்லது செய்வதாக நினைத்து அவனது ஆத்திரத்தை கிளறிவிட்டுக் கொண்டு இருந்தார்...

"இல்ல அர்ஜூன்... நீ சொல்றது எனக்குப் புரியுது.... அவங்க எல்லோரும் இங்க தங்கப் போறாங்கன்னே எனக்கு இப்போ தான் தெரியும்.... இருக்கிறேன்னு சொல்றவங்கள போன்னு எப்படிச் சொல்றது?"

"பட் அதுக்கு நீங்க சொல்ற மாதிரி என்னால இருக்க முடியாது"

"அர்ஜூன் ப்ளீஸ்.... புரிஞ்சுக்க... இந்த ஒரே ஒரு உதவி மட்டும் செய்.... அப்புறம் உன் விருப்பப்படியே நான் எல்லாத்தையும் செய்றேன்" என்றார்....

அதற்கு மேல் அர்ஜூனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அவனுக்குத் தன் மனைவி தன்னுடன் ஒரே அறையில் தங்குவதில் விருப்பம் தான்...

ஆனால் அவளைத் தான் எடுத்துக் கொள்ளும் அந்த அழகிய கணம் அவனவள் அவளாக அவளை அவனிடம் ஒப்புவிக்கும் தருணமாகத் தான் இருக்க வேண்டும்...

அதனால் அவனின் கொந்தளிப்பு அதனை முடிவு செய்த அவன் அன்னையின் மீது தான்....

"ஓகே மாம்" என்று அழைப்பை துண்டித்தவன் திவ்யாவின் பக்கம் திரும்பாமலே அலை பேசியை நீட்ட, அமைதியாக அலை பேசியை வாங்கியவள் அவனின் ஆத்திரத்தில் கலங்கி போய் இருந்ததால் அதன் பிறகு மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை...

அமைதியாக ஆனால் மெதுவாகவே அவன் காரை செலுத்திக் கொண்டிருக்க வெகு நேரம் சென்றே வீட்டை அடைந்தவர்களுக்கு ஆரத்தி சுற்றுவதற்குச் சில பெண்கள் வாசலில் காத்திருக்க, அர்ஜூனுக்குத் தங்கள் திருமண நாள் நியாபகத்தில் வந்தது....

அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு எங்கே அவன் அன்று போல் ஆரத்தி தட்டை மீண்டும் தட்டி விடுவானோ என்று ஸ்ரீ அஞ்சிக் கொண்டிருந்தார்...

ஆனால் அதே சமயம் இத்தனை பேர் இருக்கும் போது அப்படிச் செய்ய மாட்டான் என்று சிறிது தைரியமும் இருந்தது...

ஆனால் அது அர்ஜூன் ஆகிற்றே....

அவன் எந்தக் காலத்தில் யாரைப் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறான்.....

ஆனால் அவர் பயந்ததற்கு மாறாகக் காரை விட்டு இறங்கியவுடன் ஸ்ரீ மற்றும் சில பெண்கள் ஆரத்தி எடுக்க ஒன்றும் பேசாமல் திவ்யாவுடன் உள்ளே சென்ற மகனை விழி விரிய ஆச்சரியத்துடன் பார்த்திருந்தார் ஸ்ரீ...

சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் கர்ஜித்த அர்ஜூனா இது என்று....

வீட்டிற்குள் நுழைந்த அர்ஜூன் நேரே தன் அறைக்குச் செல்ல, திவ்யா தன் உடைகளை மாற்றிவிட்டு தன் சுற்றத்திடனும் தன் அம்மாவுடனும் பேசிக் கொண்டிருக்க அவளருகே வந்த ஸ்ரீ சன்னமான குரலில்.....

"திவ்யா, நீ அர்ஜூனோட ரூமுக்கு போடா" என்றார்.... (ஆனால் இந்த அம்மாவுக்கு இவ்வளவு பிடிவாதம் இருக்கக் கூடாது)

"என்னது!!!! அவரோடு ரூமிற்கு நான் போறதா????" நினைத்த மாத்திரத்தில் திவ்யாவிற்கு மயக்கமே வந்தது....

அவள் திருதிருவென்று முழிக்க,

"நான் அர்ஜூன் கிட்ட பேசிட்டேண்டா..... இவங்க எல்லோரும் கிளம்பும் வரை நீ அவன் ரூம்ல தான் தங்கனும்" என்று அவள் காதில் கிசுகிசுக்க,

"ஐயோ!!! என்ன அத்த சொல்றீங்க?" என்று கிட்டதட்ட அலறினாள்....

இவள் இப்படி எல்லாம் சொன்னால் சரி பட்டு வரமாட்டாள் என்ற நினைத்தவர் சத்தமாக,

"சரிடா... நீ மாடிக்கு போ அர்ஜூன் காத்திட்டு இருப்பான்" என்று கூற...

அவர்களுக்கு அருகில் இருந்த அனைவரும் சிரிக்கத் திவ்யாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.......

ஸ்ரீ சத்தமாகச் சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் தன் மாமியாரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே மாடி ஏறிய திவ்யாவைப் பார்த்த ஸ்ரீ...

"இந்தப் பெண்ணை ரூமுக்குள்ள என்ன பாடுபடுத்த போறானோ தெரியலையே?" என்று திகைக்கவும் செய்தார்....

ஆனால் அதே சமயம் அவங்க அப்பா அம்மா இங்க இருக்கிற வரை கொஞ்சம் பொறுமையாகத் தான் இருப்பான் என்ற நம்பிக்கையும் இருந்தது அவருக்கு..

"இந்த விஷயத்தைத் தான் அத்தை அவங்ககிட்ட கார்ல பேசினாங்களா? அவங்க பதிலுக்கு இங்கிலீஷில் தான பேசினாங்க.... அப்போ எனக்குப் புரியக் கூடாதுன்னு தான் பேசி இருப்பாங்க போல இருக்கு... போச்சு இப்போ எவ்வளவு கோபத்தில இருப்பாங்களோ?? நான் செத்தேன்.... அப்பா முருகா, ஏன்பா என்ன இப்படி மீண்டும் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்குற??" என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் அவன் அறையை அடைந்திருந்தாள்....

அறையின் வாயிலில் ஒரு சில நிமிடங்கள் நின்று இருந்தவளுக்கு இதில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு வழியும் தெரியவில்லை...

உள்ளே அறையில் சிம்ம சொப்பனமாகத் தன் கணவன்... கீழே அந்தச் சிங்கத்தைப் பெற்றெடுத்த அதை விட சக்தி வாய்ந்த மாமியார்...

"இவர்கள் இருவருக்கும் இடையில் என்னை மாட்டிவிட்டு விளையாடுறியே முருகா" என்று தயங்கி நின்று இருந்தவள் மெதுவாக அவன் அறைக் கதவைத் தட்ட உள்ளிருந்து ஒரு சத்தமும் வரவில்லை....

மீண்டும் தட்ட, "கம் இன் [Come in]" என்ற கம்பீரமான குரல் கேட்க, உச்சி முதல் உள்ளங்கால் வரை உதறல் எடுத்தது...

கலங்கி போனவளாக மெதுவாகவே கதவை திறந்தாள்.....

இப்பொழுது தான் அவள் தன் கணவனின் அறைக்குள் முதன் முதலாக நுழைவது.... அதுவும் அவன் அங்கு இருக்கும் பொழுது...

முதல் முறை அவள் அன்னை வந்திருந்த பொழுது கூட அவள் அவன் அறையின் வெளியே தான் நின்றிருந்தாள்...

மெல்ல அறைக்குள் வந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்கும் துணிவு இல்லாமல் தலை குனிந்தே நின்று இருக்க, கட்டிலில் கரங்கள் இரண்டையும் தன் தலைக்குப் பின் கொடுத்து படுத்திருந்தவனுக்கு அவள் தலை கவிழ்ந்து நிற்பதை பார்க்க, அவளின் அச்சத்தின் அளவு நன்கு புரிந்தது...

அவள் அவ்வாறு சிறு பெண் போல் நிற்பதைக் கண்டவனுக்குத் தன்னை அறியாமல் சிரிப்பு வர, சத்தம் இடாமல் இதழ் விரித்துச் சிறிதாகப் புன்னகைத்தவன் வேறு ஒன்றும் சொல்லாமல் கட்டிலில் இருந்து எழுந்து பால்கனிக்கு போய்விட,

"ஐயோ! இப்பொழுது என்ன செய்வது.... அவர் கட்டிலில் உட்கார்வதா? இல்லை அந்த ஸோஃபாவில் உட்கார்வதா?" என்று குழம்பிப் போய்க் கடைசியில் அந்த அறையின் மூலையில் தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தவாறு தன் முழங்காலில் தலையை வைத்து அவன் வருவதற்காகக் காத்திருந்தாள்....

அவள் எந்த அளவிற்குப் பயந்திருக்கிறாள் என்று ஒரு கணவனாக அவனுக்குப் புரிந்தே இருந்தது...

இப்பொழுது தான் அவளை நெருங்கினாலும் அச்சத்தினால் வேண்டுமானால் அவள் தன்னை அவனுக்குக் கொடுப்பாள்... ஆனால் அதில் நிச்சயம் காதல் இருக்காது...

அவளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு காதல் இல்லாது காமம் மட்டும் பிரவாகிக்கும் உறவில் ஈடுபட அவனுக்கு விருப்பமில்லை...

அதனாலேயே ஒரு நல்ல கணவனாக அவளுக்குத் தனிமைக் கொடுப்பதற்கே அவன் வெளியே சென்றது....

ஆனால் அவள் கவலை அவளுக்கு....

"ஏதாவது ஒரு பெட்ஷீட் கொடுத்துவிட்டு போயிருந்தாலாவது நாம பாட்டுக்கு சிவனேன்னு தரையில படுத்துத் தூங்கியிருக்கலாம்.... இப்போ என்ன பண்றது? ஆமா அப்படியே கொடுத்துட்டாலும்" என்று எண்ணியவள் சுவற்றில் தலை சாய்க்க....

சிறிது நேரத்தில் அசதியினால் அவளையும் அறியாமல் உறங்கிப் போனவள் தூக்கத்தில் வெற்று தரையிலேயே படுக்க அப்பொழுது தான் அர்ஜூன் உள்ளே வந்தான்..

உள்ளே வந்தவன் அவளைக் காணாமல் தேட அறையின் மூலையில் தரையில் படுத்திருப்பவளை, அவள் படுத்திருந்த விதத்தைப் பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் மனதில் என்னவோ செய்ய, அவளருகில் மண்டிப் போட்டு அமர்ந்தவன் அவளை உற்றுப் பார்த்தான்...

முதல் முறையாகத் தன் மனையாளை இவ்வளவு அருகில் இத்தனை நிதானமாக இப்பொழுது தான் பார்க்கிறான்.....

அழகான முகம், சின்ன நெற்றி, அதில் கீழே படுத்திருந்ததால் கற்றையாக முடி முகத்தில் விழுந்து அது கூட அவளுக்கு அழகாகத் தான் இருந்தது.

கூரிய சின்ன அழகான மூக்கு அதில் ஒற்றைக் கல் மூக்குத்தி, கீழே வரைந்து வைத்தது போல் செம்பவள அதரங்கள் என்று ஒரு பெண்ணோவியமாக இருந்தவள் அவனின் இதயத்தைப் பிளந்து உள்ளே நுழைந்தாள்......

அர்ஜூனைப் போன்ற மனிதர்களுக்கு, வாழ்கையில் தொழில், லட்சியம், பணம் என்று ஓடுபவர்களுக்குக் காதல் என்பது அர்த்தமற்ற ஒரு மூன்று எழுத்து சொல்...

காதலின் பின் ஒளிந்திருப்பது தன்னை வெளிப்படுத்த விரும்பாத இருட்டியதற்குப் பின் திருட்டுத்தனமாக வெளி வரும் காமம்...

அது மட்டுமே காதலின் அர்த்தம் என்று இருந்தவனின் உள்ளத்தில் கூடத் தன் அழகிய மனதால், அப்பழுக்கற்ற குணத்தால் காதலை ஊற்றெடுக்கச் செய்துவிட்டாள் இந்தச் சின்னப் பெண்...

அவனின் மனம் கவர்ந்த அவனுக்கு மட்டுமே உரிய அவனின் மனையாள்...

அர்ஜூனின் மனம் நிறைந்து இருந்தது....

அவளின் கலைந்த அவள் எழில் முகத்தில் புரண்டு கொண்டிருந்த முடிக் கற்றையை அவள் முகத்தில் இருந்து ஒதுக்க அவன் தன் கைக் கொண்டு போக,

தன் கணவன் தன் அருகில் மண்டியிட்டுத் தன்னை ரசித்துக் கொண்டு இருப்பதைத் தூக்கத்திலும் உணர்ந்தாளோ அல்லது பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் உள்ளுணர்வு உந்தியதாலோ அவள் திரும்பி படுக்க, அவள் தன்னைப் பார்த்து விடக் கூடாதே என்று எண்ணியவன் அவளைத் தொடாமல் வெடுக்கென்று எழுந்து கட்டிலில் போய்ச் சாய்ந்து அமர்ந்தான்.

அங்கிருந்தப்படியே அவளைப் பார்க்க அவள் குளிருக்கு குறுகிப் படுக்கப் போர்வை கொடுப்போமா என்று ஒரு விநாடி நேரம் நினைத்தவன் தன் மனதை மாற்றிக் கொண்டு எழுந்து அந்த அறையின் ஏஸியின் அளவை குறைத்தவன் அவளைப் பார்த்தபடியே சிறிது நேரத்தில் தானும் துங்கிப் போனான்.

பொழுது புலர்ந்தும் தன்னை அறியாமல் அசதியில் தூங்கிக் கொண்டிருந்த திவ்யா விழித்ததும் தான் எங்கு இருக்கிறோம் என்று யோசித்தவள் தான் படுத்திருப்பது தன் கணவனின் அறை என்று தெரிந்த அந்த விநாடியே விருட்டென்று அடித்துப் பிடித்து எழுந்தவள் கட்டிலில் பார்க்க, அங்கு அவளின் மணாளன் வலது கையைத் தலையில் வைத்துக் கண்களை மறைத்துக் கொண்டு அழகாகத் தூங்கி கொண்டு இருந்தான்.

அமைதியாக உறங்கி கொண்டிருந்த கணவனை ஆசையோடு பார்த்தவள் அவனைத் தன் கண்களின் வழியே ஆழ உள் வாங்கிக் கொண்டவள், பின் அவன் எழுந்து விடப் போகிறானோ என்ற பயத்தில் மெதுவாக வெளியெறினாள்.....

மஹாவின் அறைக்குள் சென்றவள் சிறிது நேரத்தில் குளித்து விட்டு கீழே இறங்க....

ஆனால் அதற்குள் ஏற்கனவே விழித்துவிட்டிருந்த தன் அன்னையும் மாமியாரும் ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் அருகில் போய்...

"காபி போடவா அத்தை?" என்றாள்...

நேற்று இரவு அவளை அர்ஜூனின் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் இந்தப் பெண்ணின் மனம் நோகும் படி எதுவும் பேசியிருப்பானோ? அல்லது அவளை வெளியில் விரட்டி அடித்திருப்பானோ என்று கலக்கத்தில் இருந்த ஸ்ரீ, திவ்யாவின் குரல் கேட்டதும் விலுக்கென்று அவளைத் திருப்பிப் பார்க்க அங்கு அமைதியான முகத்துடன் தலைக் குளித்து எழிலோடு நின்று கொண்டிருந்தாள் அவர் மருமகள்..

அவருக்குச் சடுதியில் இந்த எண்ணம் தோன்றி மறைந்தது... நேற்று தன் மகன் திவ்யாவை தன் மனைவியாக எடுத்துக் கொண்டு இருப்பானோ???

ஆனால் தோன்றிய வேகத்திலேயே அது மறைந்தும் போனது...

இவ்வளவு சீக்கிரமாவது தன் மகன் திருந்திவிடுவதாவது என்று நினைத்துக் கொண்டவர் அவளின் கரத்தைப் பற்றி அழைத்துத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்...

"காபி எல்லாம் கொஞ்ச நேரம் கழித்துக் குடிக்கலாம்.... நீ இப்போ இங்க உட்காரு" என்றவர் அவள் உட்கார்ந்தவுடன்,

"திவ்யா, நேத்தே சொல்லனும்னு நினைச்சேன்..... நேத்து நீ ரொம்ப ரொம்ப அழகா இருந்தடா.... அந்த மயில் கழுத்துக் கலர் புடவை உன் கலருக்கு ரொம்ப எடுப்பா இருந்தது.... என் கண்ணே பட்டுடும் போல இருந்தது" என்றார்...

மாமியாரின் புகழ்ச்சியில் வெட்கம் கொண்டவள் தலை குனிந்து சிரிக்க, அங்கு வந்த அல்லி கோல மாவுடன் வர,

"இங்க குடு அல்லி, நானே போடுறேன்" என்றாள்....

'இல்லம்மா, நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்க..... அதனால தான் உங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு.."

"பரவாயில்ல அல்லி, கொடு... நானே போடுறேன்" என்று கோலப் பொடியை வாங்கியவள் வாசல் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்தவளின் மனம் முழுவதும் அவள் கணவனே ஆக்கிரமித்து இருந்தான்...

நேற்று தன் கணவன் அவளைத் தன் அறையில் உறங்க அனுமதிப்பான் என்று அவள் கனவிலும் நினைத்து இருக்கவில்லை...

அவன் ரிஷப்ஷன் முடிந்து காரில் தன் அன்னையிடம் சினத்துடன் பேசிக் கொண்டு வந்ததைக் கவனித்துக் கொண்டு வந்ததில் இருந்து, ஸ்ரீயின் அலை பேசி அழைப்புக்குப் பின் அவன் திவ்யாவை திரும்பியும் பார்க்காது எரிச்சல் கலந்த முகத்துடன் வேண்டும் என்றே நிதானமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்றதில் இருந்து அவளைத் தன் அறையில் படுக்க வைப்பதில் அவனுக்கு எத்தனை வெறுப்பு என்று நினைத்திருந்தாள்...

ஆனால் நேற்று இரவு அவன் அவளை வெளியில் அனுப்பாதது மட்டும் இல்லை தான் உள்ளே நுழைந்ததும் அவன் ஒன்றும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறியதும் அவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது....

அதனை நினைத்துக் கொண்டே இதயம் முழுவதும் சிலிர்த்து இருக்க மனதின் பூரிப்புக் கைகளில் அழகிய கோலமாக உருமாறியிருந்தது....

கண்களைக் கவரும் வகையில் அழகிய பெரிய கோலத்தை அவள் கிட்டத்தட்ட போட்டு முடிக்கவும், ட்ராக் சூட் போட்டுக் கொண்டு ஜாக்கிங் போக அர்ஜூன் வெளியே வரவும் சரியாக இருந்தது.....

வேகமாக வெளியில் வந்தவனின் கால்கள் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மனையாளைக் கண்டதும் தாமாகத் தயங்கி நின்றது....

காலையில் தலை குளித்துத் தலையில் இன்னும் அவிழ்க்கப் படாத துண்டுடன் அந்தக் காலை வேளையிலிலும் சூரியன் சுட்டுக் கொண்டு இருந்ததால் நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பியிருக்க, வியர்வை லேசாக வழிந்து உச்சி வகிட்டில் வைத்து இருந்த குங்குமம் சிறிதாகக் கலைந்து வியர்வையோடு வழிந்து இருக்க அர்ஜூனின் கரங்கள் அதற்கு மேல் குங்குமத்தை வழியவிடாது துடைக்கப் பேராவல் கொண்டது.....

எளிமையான பருத்தி புடவையிலும் எழிலோடு அழகிய சிற்பம் போல் குனிந்து கோலம் போட்டுக் கொண்டு இருந்ததால் கழுத்தில் ஆடிய தாலிக் கயிறு வெளியில் வந்து விழுந்து அவள் மார்பில் தவழ்ந்து கொண்டிருக்கக் கோலத்தைப் போட்டவள் திருப்தியோடு புன்னகைக்க அவளின் செழித்த கன்னங்களில் அவள் முறுவல் காட்டிய பொழுது விழுந்த குழிகள் அவனை மயக்கத்தில் ஆழ்த்த தன்னை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றான் அர்ஜூன்......

தன் கணவன் வீட்டின் வாயில் கதவிற்கு அருகில் நின்று தன்னை அங்குலம் அங்குலமாக ரசித்து, சிலிர்த்து எழும் தன் தாபத்தை இறுக்கி பிடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்பதை உணராமல் கர்ம சிரத்தையாகக் கோலத்தைப் போட்டுக் கொண்டிருந்தவள் அவன் வாயிலைத் தாண்டி நடக்கவும் தன் ஷூ லேஸ் அவிழ்ந்திருந்தப்பதை கவனித்து ஒரு காலை குத்துக்காலிட்டு மறு காலின் லேஸை கட்ட....

அவனின் அசைவில் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவள் எதிர்பாராதவிதமாகத் தன் கணவனைக் கண்டவுடன் விருட்டென்று வேகமாக எழ, அப்பொழுது தான் கவனித்தான் அர்ஜூன்.....

கோலம் போடுவதற்கு ஏதுவாகத் தன்னுடைய புடவையைத் தூக்கி அவள் இடுப்பில் சொறுகியிருந்ததை...

கீழே அமர்ந்து இருந்தவனின் கண்களுக்கு நேராக வெகு அருகில் அவள் கால்கள் இரண்டும் வாழைத் தண்டு போல் அழகாகப் பளிச்சென்று தெரிய அதில் மெல்லிதான வெள்ளி கொலுசுகள் பளபளக்க, அவன் பார்வை போகும் இடத்தைக் கண்டவள் பட்டென்று புடவையை இழுத்து விட்டவளின் கண்களில் வெட்கம் பொங்கி வழிந்தாலும் அதில் அச்சமும் கலந்து நின்றது...

அவளின் அபாரமான அழகு விழிகளில் தன் விஷம விழிகளைப் படரவிட்டவன் ஒரு நொடி நேரம் தயங்கி பின் எழுந்து தன்னுடைய ஜாக்கிங் வேலையைத் தொடர்ந்தான்....

"ஐயோ! கடவுளே! இப்படியா புடவையை இழுத்து சொறுகிட்டு அதுவும் அவங்க கீழ உட்கார்ந்துக்கிட்டு நான் நின்னுக்கிட்டு... சே.... ஒரு வேளை நம்மளை தப்பா நினைத்திருப்பாங்களோ? சிட்டில பொண்ணுங்கல்லாம் இப்படியா புடவைய தூக்கிக் கட்டிட்டு ரோட்டுல நிக்கிறாங்க திவ்யா.... சே, சரியான பட்டிக்காடு டி நீ??" என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்...

"நான் எங்க ரோட்டுலயா நிக்கிறேன்.... இங்க வீட்டுக்கு முன்னாடி தான் நிக்கிறேன்..... ஆனால் அவங்க பார்த்த பார்வையே சரியில்லை... இன்னிக்கு என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ? இல்லை எல்லாரும் போனப்புறம் வச்சிக்கலாம்னு இருக்கிறாங்களான்னு தெரியலையே" என்று ஒருவழியாக முடிந்தவரை தன்னைக் குழப்பி உள்ளே சென்றாள்.

தொடரும்..
 

JLine

Moderator
Staff member




அத்தியாயம் - 11

வீட்டிற்குள் நுழைந்த திவ்யாவிடம் நேரே வந்த அர்ஜூனின் அத்தை பாக்கியம் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு,

"இங்க வாம்மா, கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டு இருக்கலாம்" என்றாள்..

இது வரை பாக்யத்தைப் பற்றி ஸ்ரீயோ மஹாவோ எதுவும் சொன்னத்தில்லையாதலால் திவ்யாவிற்கு அவளின் சுயரூபம் தெரிந்திருக்கவில்லை.

மௌனமாகப் பாக்கியத்தைத் தொடர்ந்தவள் அவளின் அருகே அமர, அந்தச் சின்னப் பெண்ணிடம் தன்னுடைய விஷத்தை கக்க ஆரம்பித்தாள் பாக்கியம்....

"ஏம்மா, நேற்று தான் கேள்விப்பட்டேன்.... வேற யாரையோ உனக்குக் கல்யாணம் பேசி அவன் கல்யாணத்திற்கு அன்னைக்குக் காலையில மணமேடையிலேயே உன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டு போய்விட்டானாமே? ஏம்மா கல்யாணம் பேசி அத்தனை நாட்கள் பேசாம இருந்தவன் திடீர்னு மணமேடைக்கு வந்தப்புறம் அவனுக்கு உன்னைப் பிடிக்காம போனதுக்கு என்ன காரணம்?" என்று கேட்க,

திவ்யாவிற்கு அவளின் கேள்வியின் நோக்கம் புரியவே சில நொடிகள் பிடித்தது....

புரிந்தவுடன் விழிகளில் விழிநீர் கோர்க்க ஆரம்பிக்க அவர்களின் உரையாடல்களைக் கவனித்துக் கொண்டு இருந்த கலா ஸ்ரீயைப் பார்த்தார்.

பாக்யம் திவ்யாவிடம் பேச வேண்டும் என்று அவள் கைப் பிடித்து அழைத்து வந்ததுமே சுதாரித்த ஸ்ரீ அவள் திவ்யாவின் திருமணத்தைப் பற்றிக் கேட்கவும் வெகுண்டு எழுந்தவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக.....

"பாக்யம், வீட்டில் எவ்வளவு வேலை இருக்கிறது... கொஞ்சம் வந்து எனக்குச் சமையல்ல உதவி செய்யக் கூடாது?" என்று அழைக்க,

"இல்லை அண்ணி, உங்க மருமகளிடம் நேற்று ரிஷப்ஷனில் ஒன்றும் பேச முடியவில்லை.... அதான் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு....." என்று இளித்தாள் அந்த வினைப் பிடித்தவள்...

"சரி எல்லாத்தையும் கிட்சனில் போய்ப் பேசலாம்... இங்க ஆம்பளைங்க எல்லோரும் இருக்காங்கல்ல" என்று அவளின் கையைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்து சென்றார்..

சமையல் அறைக்குள் சென்றவர்,

"பாக்யம், இவ்வளவு வயசாயிடுச்ச... என்ன பேசுறோம் யார்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சுத் தான் பேசிறியா? அவ என் மருமக... உனக்கு அவகிட்ட அந்த மாதிரி பேசுறதுக்கு எந்த உரிமையும் கிடையாது... அதுவும் அர்ஜூனிற்கு நீ இப்படிப் பேசுறது தெரிஞ்சா அவ்வளவு தான்" என்றவுடன் பாக்கியம் எகிற ஆரம்பித்தார்.

"என்ன அண்ணி? எனக்கு உரிமை இல்ல அப்படி இப்படின்னு சொல்றீங்க.... இது எங்க அண்ணன் வீடு... இங்க எனக்கு முழு உரிமை இருக்கு... அது மட்டும் இல்லாமல் நீங்க எப்படியும் என் பொண்ண அர்ஜூனுக்கு எடுப்பீங்கன்னு ரொம்ப ஆசையா எதிர்பார்த்திட்டு இருந்தேன்... இப்போ யாரோ ஊர் பேர் தெரியாத ஒருத்திய கூட்டிட்டு வந்து இவ தான் என் மருமகள்னு அறிமுகப் படுத்திறீங்க" என்று பொறியவே,

அவ்வளவு தான் ஸ்ரீக்கு எங்கிருந்து தான் இவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை..

"பாக்யம்... நான் மறுபடியும் சொல்றேன் கொஞ்சம் வார்த்தைகளை அளந்து பேசு... இல்லைன்னா அர்ஜூன் கிட்ட இது பற்றிச் சொல்ல வேண்டி வரும்" என்று கூற,

அர்ஜூனின் பெயரைக் கேட்டாலே கேட்டவர்கள் அனைவருக்குமே இதயம் வாய் வழியாக வெளியில் வந்து விழுந்துவிடும் அளவிற்கு அத்தனை பயம்...

அதிலும் அவர்களின் உறவுக்காரர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டாம்... அவன் வீட்டிற்குள் நுழைந்ததுமே மெதுவாக அவரவர் அவர்களுக்குக் கொடுத்திருந்த விருந்தினர் அறைக்குச் சென்று பதுங்கி கொள்வார்கள்....

அந்த வீடே நிதப்தத்தில் ஆழ்ந்திருக்கும்....

ஏனேனில் அவனின் பேச்சு, பார்வை, செயல் அத்தனையிலும் அவன் தாத்தா ருத்ரமூர்த்தியின் ஆணவம், அகங்காரம், சீற்றம் என்று ஒருங்கே ஒரே கலவையாகக் கலந்திருக்கும்...

அதிலும் அவன் இப்பொழுது திவ்யாவை தன் மனைவியாக மனதார ஏற்றுக் கொண்டுவிட்டான்... இது யாருக்கு புரியுமோ இல்லை ஆனால் நமக்கு நன்றாகவே புரியும்...

இப்படி ஒரு சூழலில் பாக்யம் அவன் மனையாளின் மனம் நோகும் வகையில் ஏதாவது பேசினால் அவளின் தலைவிதி அன்றே மாற்றி எழுதப்பட்டிருக்கும்...

ஸ்ரீ "அர்ஜூன்" என்று சொன்னதுமே சட்டென்று அடங்கியவள்,

"அண்ணி, அட்லீஸ்ட் மஹாவையாவது என் பையனுக்குக் கொடுப்பீங்களா?" என்று இழுக்க,

சே இவ திருந்தவே மாட்டாளா என்றிருந்தது ஸ்ரீக்கு....

"பாக்யம்... தயவு செஞ்சு இப்போதைக்கு எந்தக் கல்யாணத்தைப் பற்றியும் பேசாதே.... எனக்கு இங்க தலைக்கு மேல் வேலை இருக்கு... உன்னால எனக்கு உதவி செய்ய முடிஞ்சா செய்... இல்லன்னா போய் ரெஸ்ட் எடு" என்று அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார்....

அவள் எப்படியும் இன்று ஊருக்கு கிளம்பிவிடுவாள் என்று தெரியும்.... அது வரை திவ்யாவை இவளின் கொடிய வார்த்தைகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவருக்குப் பாக்யத்தின் உள் இருந்த அழுக்கான மனம் புரிந்து இருந்ததால் அவள் திவ்யாவிடம் அநாகரிகமாகப் பேசும் பொழுது அர்ஜூன் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்று கலக்கமாக இருந்தது....

ஏனெனில் நேற்று அவன் என்னதான் தன்னிடம் எகிறி இருந்தாலும் இது வரையில் ஒருவரையும் தன் அறைக்குள் அனுமதிக்காதவன் திவ்யாவை அனுமதித்து இருந்தான்...

அது மட்டும் இல்லாமல் அவர்கள் இருவருக்கும் இடையில் எதுவும் நடந்ததா இல்லையா என்று தெரியாவிட்டாலும் திவ்யாவின் முகத்தில் இருந்த பூரிப்பை பார்த்தால் அவன் அவளிடம் கோபத்தை எதுவும் காட்டவில்லை என்பது நன்கு புரிந்து இருந்தது....

அதனால் அவன் எதிரில் இவள் திவ்யாவிடம் இது போன்று பேசினால் அது பெரிய விளைவுகளைக் கொண்டு வரும் என்றே தோன்றியது...

காலை உணவு அருந்த அனைவரும் டைனிங் டேபிளில் அமர, திவ்யாவும் மற்றும் சிலரும் பரிமாற, ஸ்ரீ...

"கலா, நாம எல்லோரும் இன்றைக்கே ஷாப்பிங் வேலை எல்லாம் முடிச்சிரலாம்" என்றார்..

கலாவிற்குத் தன் மகளின் வரவேற்பிற்கு அவளுக்கு ஏதவது செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.... நிச்சயம் ஸ்ரீயின் வசதிக்கு ஏற்ப ஒன்றும் செய்ய முடியாது..

ஆனால் இருந்தாலும் நம்ம பொண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஸ்ரீயிடம் சொல்ல, அவர் நகையோ இல்லை பாத்திர பண்டங்களோ வேண்டாம்..... உனக்கு இஷ்டமென்றால் அவளுக்கும் சரி என்றால் புடவை வாங்கிக் கொடு என்றிருந்தார்,

பெண்களுக்கு எத்தனை புடவை எடுத்துக் கொடுத்தாலும் பத்தாதே. "சரி" என்றவர்,

"திவ்யா நீயும், மஹா நீயும் வாங்கம்மா..... எல்லோரும் போவோம்" என்றார்.

"அர்ஜூன்... இன்னைக்கு எங்க கூட நீயும் வாப்பா" என்று ஸ்ரீ கூற..

"நான் எதுக்கு மாம்? நேற்றே ரிஷப்ஷன்னு ஆஃபீஸுக்கு போகலை.... நிறைய வொர்க்ஸ் பெண்டிங்ல இருக்கு... கதிரே எல்லாவற்றையும் பார்க்க முடியாது, அதனால் நீங்க லேடீஸ் எல்லாரும் போய்ட்டு வாங்க" என்றான்...

"இல்லை மாப்பிள்ளை, உங்களுக்கும் ட்ரெஸ் எடுக்கனும்.... நாங்க ரிஷப்ஷனுக்கு எங்க முறைய இன்னும் செய்யலை.... நீங்க கூட வந்தீங்கன்னா உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ட்ரெஸ் எடுத்திரலாம்" என்றார் கலா.

திவ்யாவிற்கோ மறுபடியும் "அடக் கடவுளே" என்றிருந்தது.

"அவரோட வசதிக்கு நாம கால் தூசி பெறமாட்டோம்.... அவங்க போடுற ட்ரெஸ் எல்லாம் பார்த்தா அவங்களுக்கு நாம கர்சீஃப் கூட வாங்க முடியாது... இதுல அம்மா ஏன் அவங்கள கடைக்குக் கூப்பிடறாங்க" என்று மனதுக்குள் நினைத்தவள் அர்ஜூனை பார்க்க, அவனும் அதே சமயம் அவளைத் திரும்பி பார்க்க, அவளுக்குத் தான் அவமானத்தில் தலை குனிய வேண்டியதாகப் போய்விட்டது...

அவனுக்கும் அவள் ஏன் தலை குனிகிறாள் என்று தெரியும்.... தன்னவளுக்காக அவள் மனம் குளிர்வதற்காகச் சிறு புன்சிரிப்புடன்...

"சரி ஆன்ட்டி, நானும் வருகிறேன்" என்றவனைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரியவே இல்லை...

ஸ்ரீக்கும் கலாவிற்கும் அவன் பதில் மிகவும் சந்தோஷத்தை அளிக்க, திவ்யாவிற்கோ கலக்கமாக இருந்தது...

"இவர் இப்படி டக்குன்னு இறங்கி வரமாட்டாரே? என்னமோ நடக்கப் போகுது?" என்று நினைத்தவளுக்கு மறுபடியும் அவன் முகம் பார்க்க தைரியமில்லை.

அனைவரும் ஷாப்பிங்கிற்கு உற்சாகமாகக் கிளம்பப் பாக்யத்திற்கு இதற்கு மேல் அங்கிருப்பது பிடிக்கவில்லை.....

தன் கணவனையும் பிள்ளைகளையும் அழைத்தவள் இப்பொழுதே ஊருக்கு திரும்புவது நல்லது என்று சொல்ல கணேசனுக்கும் தன் மனைவியை அங்கிருந்து அப்புறப் படுத்துவதே நல்லது என்று தோன்றியது..

அவர்கள் கிளம்பியதும், மற்ற அனைவரும் ஷாப்பிங் கிளம்ப, தானும் கிளம்புவதற்குத் திவ்யா மஹாவுடன் அவள் அறைக்குச் செல்ல, அவளைப் பார்த்த கலா....

"என்ன திவ்யா, கிளம்பப் போகலையா?" என்றார்..

அவர் தன் மகள் கணவனுடைய அறையில் தான் இப்பொழுது இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருக்க, அவளோ கிளம்பத் தன் நாத்தனாரின் அறைக்குள் செல்வது வித்தியாசமாகப் பட்டது...

அது தன் அறைக்குள் இருந்த அர்ஜூனின் காதுகளுக்கும் கேட்டது.

"இல்லம்மா, ஒன்றும் இல்ல.... அண்ணிக் கிட்ட என்ன புடவைக் கட்டுறதுன்னு கேட்கலாம்னு நினைச்சேன்" என்று தயங்கியவாறே கூறினாள்....

"இவங்க ஊருக்கு போற வரைக்கும் எப்படிச் சமாளிக்கப் போறோமோ????" என்று அஞ்சியவளாகத் தன் அன்னைத் தன் அருகிலேயே நிற்கவும் வேறு வழியில்லாமல் அர்ஜுனின் அறைக்குள் நுழைய முற்பட்டவள் கதவைத் தட்ட போக,

"கதவை வேற தட்டினால் அதற்கும் அம்மா ஏதாவது கேள்விக் கேட்பார்... கணவன் அறைக்குள் போக எதுக்குடி கதவை தட்டனும் என்று" என்று சடுதியில் யோசித்தவள் கதவைத் தட்டாமலே நுழைந்தாள்...

ஆனால் தன் அன்னையை மட்டுமே நினைத்துக் கொண்டு தன் கணவனின் அறைக்குள் நுழைந்தவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை..... அங்குத் தன் கணவன் அந்த நிலையில் இருப்பான் என்று....

ஷாப்பிங் கிளம்ப என்று உடை மாற்ற அர்ஜூன் தன் சட்டையைக் கழட்டியவன் வேறு சட்டை மாற்றுவதற்குள் அவள் சட்டென்று நுழைந்து விடக் கண்ணாடிக்கு முன் நின்ற அவனின் வெற்று முதுகைக் கண்டவளின் இதயம் திக்கென்றதில் அதிகமாகத் துடித்து, உடலில் ஒரு படபடப்பு வர, கால்கள் அதன் போக்கில் தடுமாற ஆரம்பித்து இருந்தது.....

அர்ஜூன்..... ஆளை அசத்தும் உயரம், வெண்மையும் செந்நிறமும் கலந்த நிறம், நாள் தோறும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சிகளின் பலனாகப் புஜங்கள் இறுக்கி உருண்டு திரண்டிருக்க, கண்ணாடியில் அவனின் பிம்பத்தில் தெரிந்த மார்பு படர்ந்து விரிந்து, ஒட்டிய வயிறு, குறுகிய இடை என்று ஆளையே மயக்கும் பேரழகனாக நின்றிருந்த கணவனைக் கண்டவளின் உடல் முழுவதும் மின்னல் தாக்கியது போல் இருந்ததில் அவளின் சின்ன இதயம் தாளம் தப்பியது...

ஆனால் அவள் மேலும் எதிர்பார்க்காதது ஒன்று இன்றைய நாள் முடிவதற்குள் நடக்கவிருக்க இருந்தது...

அது கிட்டதட்ட தன் கணவனைத் தான் பார்த்த அதே கோலத்தில் அவன் இன்று தன்னைக் காணப் போகிறான் என்று!!!!!

தன் கணவனை மேல் சட்டையில்லாத உருவத்தில் பார்த்ததில் ஏற்பட்ட அச்சத்திலிருந்து, வெட்கத்திலிருந்து, தவிப்பிலிருந்து அவளால் தன்னை மீட்க இயலவில்லை...

இதில் தான் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்ததற்கு என்ன சொல்லப் போகிறாரோ என்ற கலக்கம் வேறு....

அவள் தன்னையே பார்க்கிறாள் என்பதனை தன் முன்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பம் வழியாகப் பார்த்தவன் மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டவன் பின் சட்டென்று அவளைத் திரும்பி பார்க்க, அது வரை தான் இமைகள் மூடாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருப்பது அப்பொழுது தான் புரிந்தது திவ்யாவிற்கு...

அதற்கு மேல் அங்கு நிற்க தெம்பில்லாமல் முகம் சிவந்து உடல் துவள வெடுக்கென்று திரும்பியவள் அறையை விட்டு வெளியே செல்ல எத்தனிக்க...

"உங்க அம்மா இன்னும் வெளியில் தான் நிற்கிறாங்க" என்றான் இதழ் விரித்துச் சிரித்து....

தன் கணவன் வாய்விட்டு சிரித்து இன்று தான் முதல் முறை பார்க்கிறாள்...

அவன் தன் குடும்பத்தாரோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் பொழுதோ அல்லது எந்தச் சந்தர்பத்திலேயாவது அவன் சிரிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தாலோ அவன் இதழ் பிரிக்காமல் ஒரு சிறு கோடு போல் தான் புன்னகைத்து இருந்தான்...

ஆனால் இன்று இதழ்கள் விரித்துக் கலகலவென்று அவன் சிரித்தது அத்தனை கவர்ச்சியாக இருந்தது.... அவனை நோக்கி நிமிர்ந்து ஒரு சில விநாடிகள் அவன் சிரிப்பை பார்த்து ரசித்தவள் மீண்டும் படக்கெனத் தலைக் கவிழ...

அவள் நிலைக்குலைந்து தலைக் குனிந்து நின்ற தோரணையைக் கண்டவனுக்கு அவளின் உருவம் ஏதோ கை தேர்ந்த சிற்பி செதுக்கிய சிற்பம் போல் இருந்தது....

மெல்ல அவளருகில் அழுத்தமான காலடிகளுடன் நிதானமாக அவளை நோக்கி நடந்து வந்தவன் நெருக்கமாக அவளுக்கு அருகே நிற்க அவளுக்குத் தான் மூச்சு முட்டியது.

ஒரு விநாடி தாமதித்தவன் அவள் முகத்தை உற்று பார்த்தவாறே....

"அவங்க எல்லோரும் ஊருக்கு போற வரைக்கும் நீ இந்த ரூமிலேயே இரு" என்றான்.....

தன் கணவனா இவ்வாறு சொல்வது என்று அவன் பேசியதில் வியந்து கண்களை அகல விரித்து அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவள் அருகில் இன்னும் நெருங்கி வந்தான்...

ஏற்கனவே அவனை அந்த நிலையில் கண்டதில் இருந்து ஏதோ கயிறு கொண்டு தன் கால்களைக் கட்டியது போல் இருந்தவளுக்கு அவன் நெருங்கி வந்ததும் பின்னால் நகர முடியவில்லை... கால்கள் இரண்டும் தரையோடு ஆழ புதைந்து போனது போல் மரத்து போயிருந்தது.....

"ஐயோ!... எதுக்கு இப்படி இவ்வளவு க்ளோஸ வராங்க" என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது....

"நீ போய் உன் ட்ரெஸ் எடுத்துட்டு வந்து இங்க வச்சுக்கோ" என்று கூறிவிட்டு திரும்பியவன் என்ன நினைத்தானோ மறுபடியும் அவள் அருகில் வந்து...

"அவங்க எல்லோரும் ஊருக்கு போற வரைக்கும் தான்....அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி நீ மஹா ரூமிலேயே இருந்துக்கலாம்" என்று கூறிவிட்டு நகர, அவளுக்குத் தான் மனதிற்குள் எதுவோ நொறுங்கியது போல் இருந்தது...

அவனுக்குத் தன்னவளுடன் தனித்து இருப்பதில், அதுவும் நேற்று இரவு தன்னுடைய அறையில் தனக்கு அருகில் கீழே படுத்து இருந்தவளின் மலர் முகத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டே உறங்கியதில் அவன் மனம் சிலிர்த்து தான் இருந்தது...

ஆனால் அதே சமயம் தன்னருகாமையிலும், தன்னுடன் தனித்து இருக்கும் சூழ்நிலையிலும் அவள் மனதில் ஓடிய சஞ்சலங்களையும், அச்சத்தையும் அவன் அறிந்தே இருந்தான்...

தன் மனையாளுக்குத் தன் மீது இன்னும் காதல் வரவில்லை... அதற்குத் தடையாக இருப்பது அவளுக்குத் தன் மீது இருக்கும் பயமே... அவளின் நிலை அறிந்து அவன் யோசித்துத் தான் இவ்வாறு சொன்னது...

ஆனால் பாவம் அவளுக்குத் தான் அவன் சொன்னதன் நோக்கம் புரியவில்லை...

இன்று காலையில் கண் விழிக்கும் பொழுது அவன் தூங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தது அவளின் மனதிற்கு அத்தனை இதமாக இருந்தது.

திருமணம் எப்படி நடந்திருந்தாலும் திருமணம் திருமணமே..... அவன் அவள் கழுத்தில் கட்டிய தாலி நிஜம் தானே.....

அதுவும் முதல் முறையாகத் தரையில் தான் என்றாலும் அவன் அறையில் அவனோடு நேற்று தூங்கியது அவளுக்கு ஒரு பூரிப்பை கொடுத்திருந்தது...

இது இப்படியே நீடிக்காதா?? என்றும் அவளின் பெண் மனம் ஏங்கி இருக்க, அதனை அவள் கணவன் இவ்வாறு கலைக்க வேண்டுமோ?...

அவளுக்கும் நன்றாகத் தெரியும்... சொந்த பந்தங்கள் எல்லோரும் இங்கு இருக்கும் வரைக்கும் தான் அவரோடு இருக்க முடியும் என்று..... அதை அவர் ஞாபக படுத்த வேண்டும் என்று இல்லையே.... இதைச் சொல்லிக் காட்ட அவசியம் என்ன?

மனதிற்குள் துடிதுடித்துப் போனவளின் முகமும் கலவரத்தை அப்பட்டமாக வெளிக்காட்ட அவன் பால்கனிக்கு சென்றும் அசையாமல் சில நொடிகள் அங்கேயே நின்றவள் வேதனை அதிகமாகவே ஏமாற்றத்துடன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேறினாள்.....

தன் அன்னை பார்க்கும் முன் போய் மஹாவின் அறையில் இருந்து ஒரு இரண்டு நாட்களுக்காவது ஆடைகளை எடுத்து இங்குக் கொண்டு வர வேண்டும்....

அவர்கள் கண்ணில் பட்டோமோ தொலைந்தோம் என்று நினைத்தவள் வெகு வேகமாக மஹாவின் அறையில் இருந்த தன் ஆடைகளைப் பெட்டியில் எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்...

தன்னுடைய மற்ற பொருட்களையும் பார்த்தவள் "இதனையும் எடுத்திட்டுப் போய்விடலாம்... அப்புறம் தலை சீவ இங்க வந்தாக் கூட ஏன் வரன்னு அம்மா கேட்டாலும் கேட்பாங்க" என்று வாய் விட்டு கூறியவள் அனைத்தையும் எடுத்துக் கொண்டாள்.

இந்த முறை தன் கணவனிற்கும் தன் அன்னைக்கும் இடையில் தவிக்க வேண்டியதாகிப் போனது.....

பெருமூச்செறிந்தவள் சிறிது நேரத்தில் அவன் அறையின் கதவை தட்டியவள் சத்தம் ஏதும் கேட்காததால் அவர் இன்னும் பால்கனியில் தான் இருக்கிறாரோ என்று நினைத்து மெதுவாக அவன் அறைக்குள் நுழைந்தாள்..

அவள் எதிர்பார்த்தது போலே அவன் பால்கனியில் இருக்கவே, பெட்டியை ஒரு ஓரமாக வைத்தவள் அதில் இருந்து இளம் ரோஜா நிற ஷிஃபான் புடவையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்...

விடியற் காலையிலேயே குளித்து முடித்துவிட்டதால் புடவையை மட்டும் தான் அவள் மாற்ற வேண்டும்.

"இப்பொழுது எங்குச் சென்று புடவையை மாற்றுவது? அதுவும் அவர் எப்பொழுது அறைக்குள் வருகிறாரோ தெரியவில்லையே? ஐயோ! அவர் ட்ரெஸ் மாத்தினாரான்னு கூடப் பார்க்காமல் திரும்பியும் அவர் ரூமிற்கு வந்து சே... இம்சை டா"...

என்று வெளிப்படையாகத் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் பொழுதே சரியாக உள்ளே வந்தான் அர்ஜூன்...

அடர்ந்த அரக்கு வண்ண முழுக்கை சட்டையும், அதனை அவன் முட்டி வரை மடித்திருந்ததும், அதற்கு வெளிர் நீல நிற லெவிஸ் ஜீன்ஸும் அணிந்திருந்ததும் அவனுடைய நிறத்திற்கும், உயரத்திற்கும், உடல்வாகிற்கும் அத்தனை கவர்ச்சியாக இருந்தது....

இதில் வெளியே பால்கனியில் இருந்து வந்த சூரிய வெளிச்சத்தின் கதிர்கள் அவன் தலை முடியில் பட்டு மின்ன, அவனுடைய பேரழகு அவளின் உள்ளத்தை வசீகரிக்க முதன் முறையாகத் தன் கணவனை மனைவியின் கண்களோடு ரசிக்க ஆரம்பித்தாள்...

அவளின் பார்வையில் தெரிந்த மயக்கத்தில் அவள் சிலையெனத் தன்னை ரசித்துக் கொன்டு இருப்பதைத் தானும் ரசித்தவன் தொண்டையைச் செரும இந்த உலகத்திற்கு வந்தவளுக்குத் தனக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை....

முதன் முறையாகத் தன் மனைவி தன்னைக் கணவனாக இரசிப்பதை அர்ஜூன் உணர்ந்து கொண்ட அழகிய தருணம் அது...

தடுமாறிக் கொண்டு இருப்பவளை ஆழ்ந்து நோக்கியவன் அவள் சட்டென்று தலை கவிழவும் அவள் இன்னும் புடவையைக் கையில் வைத்திருந்ததைப் பார்த்து அவள் தேவையை உணர்ந்தவனாக அவளுக்குத் தனிமை கொடுக்க அவன் அறையை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறியதும் இத்தனை நேரம் இறுக்கி பிடித்து வைத்திருந்த மூச்சை ஆழ விட்டவள் மடமடவென்று புடவை மாற்ற ஆரம்பித்தாள்...

எளிமையான அலங்காரத்தில் தலையை மீண்டும் நன்றாகச் சீவி தளர பின்னலைப் போட்டவள் கீழே வர கதவை திறக்க, அது வரை அவர்கள் அறையின் வாயிலிலேயே தன்னுடைய அலை பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க, பார்த்தவன் ஸ்தம்பித்து நின்றான்.....

அன்று அலர்ந்த ரோஜாப் பூவைப் போல் இளம் ரோஜா நிற புடவையில் பளிச்சென்று இருந்த தன்னுடைய மனைவியை ரசனையோடு ரசித்துப் பார்க்க, கண்கள் சிமிட்டாமல் சுற்றம் அறியாமல் தன்னையே பார்த்திருந்தவனின் பார்வையில் தன்னை இழந்தாள் திவ்யா.....

முதன் முறை தன் கணவன் தன்னை மனைவியாக இரசிப்பதை அவள் உணர்ந்து கொண்ட தருணம் இது...

ஆகக் கணவன் மனைவி இருவருமே தங்களின் இதயத்தில் அரும்பியிருந்த காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்காவிட்டாலும் விழிகளின் வழிகளிலே தங்களுடைய உணர்வுகளை உணர்த்திய நிமிடங்கள் அது....

திவ்யா படிகளில் முன் இறங்க அர்ஜூன் அவளைப் பின் தொடற, அவர்கள் இருவரும் ஒன்றாகக் கிளம்பி வருவது ஸ்ரீக்கும் பாலாவிற்கும் வியப்பாக இருந்தது....

ஒரு முறை தன் மனைவியை அவன் வெறுப்பதைப் போலவும், மறு முறை அவளை விரும்புவதைப் போலவும் நடந்து கொள்ளும் மகனுடைய எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அவனுடைய பெற்றோர் குழம்பித்தான் போனார்கள்.....

திவ்யாவின் அருகில் வந்த ஸ்ரீ...

"இந்தப் பேபி பிங்க ஸாரியில் ஃப்ரெஷ் ரோஸ் மாதிரியே இருக்கத் திவ்யா" என்றவர் அவளைத் திருப்பி நன்றாக இறுக்கித் தொடுத்த மல்லிகையை நான்கு சரங்களாகத் தலையில் வைத்தார்.

மஹாவின் தலையிலும் பூவை வைக்கப் போக....

"மாம், ஜீன்ஸ் டாப்ஸ் போட்டிருக்கேன்.... இப்போ போய்ப் பூ வைக்கிறீங்களே.... இந்த ட்ரெஸுக்கு இது எடுக்காது" என்றவள் எதேச்சையாக வினோத்தைப் பார்க்க.

அவளின் வார்தைகளில் வினோத்தின் முகம் வாடியதைக் கண்டவள் தானும் வாடினாள்...

சட்டென்று... "சரி நீங்க எல்லாம் காரில் ஏறுங்க... மாம்... நீங்க பூவைக் குடுங்க" என்றவள்,

விறுவிறுவென்று தன் அறைக்குள் சென்று தன் மனம் விரும்பியவனின் முக வாட்டத்தை நீக்கவே அழகான சிகப்புக் கலரில் அனார்கலி சுடிதாரைப் போட்டுக் கொண்டவள் மல்லிகைச் சரத்தையும் தன் தலையில் சூடி மகிழ்ச்சி தர வந்து காரில் அமர்ந்தாள்.

அனைவரும் காரில் ஏறப்போகப் பாலா முன் இருக்கையில் அமர, திவ்யா பின் இருக்கையில் ஸ்ரீயுடனும் மஹாவுடனும் அமர்ந்து கொள்ள அர்ஜூன் காரை செலுத்தினான்...

ஸ்ரீ வழக்கமாகச் செல்லும் ஒரு மிகப் பெரிய டெக்ஸ்டைல் ஷோரூமின் வாசலில் அர்ஜூன் காரை நிறுத்த, அவர்களின் பின்னால் இன்னொரு காரை அருண் ஓட்ட, அவனுடன் வந்த கலாவிற்குத் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை....

அவர் கொண்டு வந்திருந்த பணத்தில் நிச்சயம் இது போல் இடத்தில் எதுவுமே வாங்க முடியாது..

ஸ்ரீக்கு அலை பேசியில் அழைத்தவர்...

"ஸ்ரீ, இது ரொம்பப் பெரிய கடை மாதிரி இருக்குடி.... என் கிட்ட அவ்வளவு பணம் கிடையாது" என்று தயங்கிவாறே சொல்ல அவரும் உடனே...

"அர்ஜூன்... இந்தக் கடைக்கு அப்புறம் வருவோம். இப்போ (வேறு ஒரு கடை பெயர் சொல்லி) அங்குப் போலாம்" என்றார்..

அர்ஜூன் தன் வாழ்நாளில் அது போன்ற கடைகளுக்குச் சென்றதில்லை.... இருந்தும் ஒன்றும் சொல்லாமல் காரை எடுத்தவன் நேரே அந்தக் கடையில் போய் நிறுத்தினான்.

அனைவரும் உள்ளே செல்ல, திவ்யாவின் மனதில் மட்டும் சொல்ல முடியாத வலி ஏற்பட்டது... அது தன் ஏழ்மையினால் ஏற்பட்ட கழிவிரக்கத்தினால் வந்த வலி...

"இவங்க வசதிக்கும் நமக்கும் ஏணி வச்சாக் கூட எட்டாது... இப்போ அம்மாவும் அப்பாவும் எவ்வளவு அசிங்கப் படப் போகிறார்களோ தெரியலையே" என்று நினைத்தவளின் மனம் வழக்கம் போல் தன் இஷ்ட தெய்வமான முருகனிடமே சரணடைந்தது....

"முருகா, நீதான்பா இன்னைக்கு யார் மனசும் கஷ்டப்படாம பார்த்துக்கனும்"

கடையின் உள்ளே நுழைந்த அர்ஜூனிற்கு நன்றாகத் தெரிந்துப் போனது இங்கு எந்த உடை எடுத்தாலும் தான் அதைப் போட போவது இல்லை என்று...

ஆனால் அவர்கள் மனம் கோணாமல் நடக்க முடிவு செய்தவன் அமைதியாக இருந்து விட, பெண்கள் அனைவரும் புடவைப் பிரிவைத் தேடிப் போக, சிவசுப்ரமணியமும், அருணும், வினோத்தும் அர்ஜூனோடு சேர்ந்து ஆண்களின் பிரிவைத் தேடி போனார்கள்..

ஒரு வழியாக அவர்களுக்கு வேண்டியதை எடுத்துவிட்டுப் பெண்கள் பிரிவுக்கு வர, அப்போழுது தான் ஸ்ரீ....

"திவ்யா.... நீ அன்னைக்கு மஹா போட்டிருந்த சுடிதார் நல்லா இருந்துச்சுன்னு சொன்னல்ல.... அது அர்ஜூன் முன்னாடி கார நிறுத்தினான்ல.... அந்தக் கடைல தான் வாங்கியது.... நீ வேண்டும் ஆனால் அர்ஜுன் கூடப் போய் அங்க அதே மாதிரி இன்னொரு சுடிதார் இருக்கான்னு பார்த்திட்டு வா" என்றார்...

ஸ்ரீயின் பேச்சில் அதிர்ந்தவள் படபடப்புடன் அர்ஜூனை நிமிர்ந்துப் பார்த்து...

"இ... இல்ல அத்த... பரவாயில்லை... அதான் இங்க புடவை எடுக்கிறோம் இல்ல.... அது போதும்" என்றாள் வார்த்தைகள் தடுமாறியவாறே...

"அர்ஜுன்... நீ கூட்டிட்டுப் போப்பா" என்று ஸ்ரீ கூற, அங்கு அத்தனை பேர் இருப்பதைப் பார்த்தவன் வேறு வழியில்லாமல் "ஓகே மாம் என்றான்...

திவ்யாவைப் பார்த்து தலையை அசைத்து வா என்பது போல் சைகை செய்தவன் நடக்க ஆரம்பிக்க ஒரு விநாடி மனதிற்குள் தடுமாறிய திவ்யா அவனைப் பார்த்தவாறே தன்னை மறந்தவாறு நின்றிருக்க, அவன் அதற்குள் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்...

ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொடர்ந்தவள் அவனை அடையும் முன் அவன் காரை அடைந்திருந்தான்.

"முன்னாடி உட்காருவதா? பின்னாடி உட்காருவதா? முன்னாடின்னா கடவுளே திரும்பவும் அவர் கூடத் தனியா உட்காரனுமா?" என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் எட்டி அவளின் பக்க கதவை திறந்து விட, சட்டென்று ஏறி அமர்ந்தாள்.

அது ஒரு மிகப் பிரமாண்டமான டெக்ஸ்டையில்ஸ் ஷோரூம்.....

உள்ளே நுழைந்தவுடன் அர்ஜூன் யாருக்கோ அலை பேசியில் அழைக்கச் சில நிமிடங்களில் ஒரு இளைஞன் அவர்களை நோக்கி வந்தவன்....

"ஹாய் அர்ஜூன்... லாங் டைம் நோ ஸீ [Long time no see] " என்றான்...

ராகேஷ்.... அந்தக் கடையின் முதலாளி, அர்ஜூனின் நண்பன்.....

வந்தவன் அர்ஜூனின் கரத்தை குலுக்கியவாறே திவ்யாவை பார்க்க அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அர்ஜூன் புன் சிரிப்புடன்.....

"ஹாய் ராகேஷ்... மீட் மை வைஃப் திவ்யா [Meet my wife, Dhivya]" என்றான்.

அர்ஜூனின் சொற்களைக் கேட்ட திவ்யாவிற்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை... தன் கணவன் தன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டானா என்று?

ஆனால் அதே சமயம் "மனைவி என்று அறிமுகப் படுத்தவில்லை என்றால் என்ன என்று அறிமுகப்படுத்துவார்? அவர் வேறு வழியில்லாமல் சொல்கிறார்... அதை நினைத்துக் கொண்டு நீ உடனே மனதில் ஒரு பெரிய கோட்டையைக் கட்டாதே" என்று அவள் இளகிய மனம் இரு தலைக் கொள்ளியாய்த் தவித்தது...

ராகேஷ் அவளைப் பார்த்து "ஹாய்" என்று கரம் நீட்ட, அவள் இரு கரம் கூப்பி வணக்கம் என்றாள்....

அவள் தன் கரம் பற்றாமல் வணக்கம் கூறியதில் புன்னகை புரிந்த ராகேஷ் "ஓகே அர்ஜூன், என்ன பார்க்கிறீங்க?" என்றான்..

"பட்டு புடவை செக்க்ஷனுக்குக் கூட்டிட்டு போ ராகேஷ்" என்று அர்ஜூன் கூற,

"அத்தை சுடிதார் தான பார்க்க சொன்னாங்க... இவங்க என்ன புடவை செக்க்ஷனுக்குப் போ என்கிறாங்க..... சரி அத்தைக்கும் மஹாவுக்கும் எதுவும் வாங்கனும்னு நினைக்கிறாங்க போல் இருக்கு" என்று நினைத்தவள் அவர்களைப் பின் தொடர, அந்தப் பிரமாண்டமான பட்டு புடவைகளின் பிரிவைப் பார்த்தவள் வாயைப் பிளந்து கொண்டு நின்றாள்..

அவர்கள் கிராமத்தில் அங்கொன்று இங்கொன்றுமாக ஒரு சில துணி கடைகள் தான் இருக்கும்...... ஆனால் நல்ல புடவைகள் வாங்க வேண்டும் என்றால் வெளியூருக்கு தான் போக வேண்டும்...

ஆனால் அங்குக் கூட இது போன்ற அளவில் பெரிய கடைகள் இல்லை.

"அம்மாடி! கடையே இவ்வளவு அழகா இருக்குன்னா அப்போ புடவைங்க எவ்வளவு அழகு அழகா இருக்கும்?" என்று நினைத்துக் கொண்டு சிலை போல் அசையாமல் நிற்க, தன்னுடைய கண்களை அகல விரித்து ஆச்சரியத்துடன் கடையைப் பார்த்த தன் மனையாளின் பாந்தமான அழகில் மயங்கியவனுக்கு அவளின் குழந்தைத்தனமான முகமாறுதல்கள் அத்தனை பிடித்திருந்தது...

"மனசில அவளை அங்குலம் அங்குலமாக ரசிக்கிற அர்ஜூன்.... அவள் பேரில் உனக்கு எப்பவோ ஒரு ஈடுபாடு வந்திருச்சு.... ஆனால் அதை அவகிட்ட எப்போ வாய்விட்டு சொல்லப் போற?" என்றது அவன் மனசாட்சி...

ஆனால் அதை எல்லாம் காது கொடுத்து கேட்க அவனுக்கு எங்கே நேரம்? அவன் தான் தன் மனைவியைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டு இருக்கிறானே.

தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து தன்னிலைக்குக் கொண்டு வந்தவன் இன்னமும் சிலை போன்று நின்று கொண்டு இருந்தவளை பார்த்து,

"ஆச்சர்யமா பார்த்தது போதும், வா" என்ற அழைக்க,

அவன் குரலில் சுய நினைவுக்கு வந்தவள் கடையைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள்.

அவளைப் பொறுத்தவரை அந்த நிமிடம் அந்தக் கடையின் அழகு தான் அவள் கண்களைப் பறித்து இருந்தது... கணவனின் பார்வையோ அல்ல அவனின் தவிப்போ அவளுக்குத் தெரியவில்லை....

அங்கு இருந்த விற்பனையாளர்களிடம் ராகேஷ்...

"இவங்களுக்கு நல்லா காஸ்ட்லி சாரீஸ் காமீங்க" என்றவன் திரும்பி...

"அர்ஜூன்... டு யூ வாண்டு டு ஹாவ் சம்திங் டு ட்ரிங்க்? [Arjun, do you want to have something to drink?]" என்றான்.

"இட்ஸ் ஓகே ராகேஷ்" என்ற அர்ஜூன் திவ்யாவிடம் திரும்பியவன் அவள் இன்னமும் கடையை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருக்க விற்பனையாளர்களிடம் திரும்பி புடவைகளைக் காட்ட சொல்ல....

"ஓகே, அர்ஜூன்.... ஸாரீஸ் எடுத்தவுடன் என்னைக் கூப்பிடு" என்று கூறி விட்டு ராகேஷ் விடைப் பெற அர்ஜூன் புடவைகளில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தான்.....

ஆனால் இன்னமும் யாருக்கு வச்ச விருந்தோ என்று திருதிருவென்று விழித்தவாறே திவ்யா நிற்க அவளைத் திரும்பி பார்த்தவன்,

"ஸாரி [saree] எனக்கா எடுக்க வந்தேன்... நீ பாட்டுக்கு அங்கேயே நின்னுக்கிட்டு இருக்க.... வந்து செலக்ட் பண்ணு" என்றான்.

"யாருக்குங்க? அத்தைக்கா? மஹா அண்ணிக்கா?" என்று சிறு பிள்ளை போல் கேட்க.....

"ஏன்? நீ ஸாரி [saree] கட்ட மாட்டியா?" என்று அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்க அவன் கோபம் புரியாமல் "இதென்ன கேள்வி... இப்போ கூடப் புடவைத் தான கட்டியிருக்கேன்" என்று குழந்தைத் தனமாக நினைத்தவள்,

"ம்ம்... ம்ம்...கட்டுவேன்" எனவும்,

"அப்ப சரி, முதல்ல உனக்கு ஒன்னு எடு" என்றான்.

எனக்கா? என்று வியப்பும் கலக்கமுமாக அவனைப் பார்த்தவள் தயங்கியவாறே...

"இ.. இல்லைங்க... எ.. எனக்குப் புடவை எல்லாம் வேண்டாம்" எனவும்,

சலிப்படைந்தவன் அவளை நெருங்கி வந்து அவள் காதிற்கு அருகில் குனிந்து...

"எல்லாரும் பார்க்கிறாங்க... சும்மா பேசிட்டு இருக்காம ஸாரிய [saree] எடுக்கிற வழியப் பாரு..... எடுத்துட்டு கூப்பிடு" என்றவன் தள்ளி சென்று தன்னுடைய அலை பேசியில் யாருக்கோ அழைத்துப் பேச துவங்கினான்...

"இவ்வளவு பெரிய கடையையே இப்பொழுது தான் வாழ்க்கையில் முதன் முதலில் பார்க்கிறேன்... இதுல புடவை அதுவும் தனியா எடுன்னா எப்படி எடுக்கிறது.... சே அம்மாவும் கூட வந்திருக்கலாம்" என்று நினைத்தவள் தயக்கத்துடனே பார்க்க ஆரம்பித்தாள்...

சிறிது நேரத்திலேயே மெஜந்தா நிறத்தில் முந்தானையில் தங்க ஜரிகையில் அழகான பூச்செண்டுகள் விரிந்து இருப்பது போல் நெய்யப்பட்டிருந்த பட்டுப் புடவையை எடுத்தவள் அதன் அழகில் லயித்து இருந்ததால் அதன் விலையைப் பார்க்க கூட யோசனையில்லாமல் அவனைத் திரும்பி பார்க்க, அவள் அருகில் வந்தவனின் கண்களையும் அந்தப் புடவையின் அழகு கவர இளம் புன்முறுவலுடன் "குட் செலக்க்ஷன்" என்றான்.

"சார்... நீங்க பில் போடுங்க.... நாங்க புடவைக்குக் குஞ்சங்கள் (Tassels) போடுறோம்" என்று விற்பனையாளர் கூற பணத்தைச் செலுத்த சென்றவனின் பின்னால் சென்ற திவ்யா அவன் பணம் கொடுக்கும் பொழுது தான் கவனித்தாள் அவள் எடுத்த புடவையின் விலையை...

பார்த்தவளுக்குக் கிட்டத்தட்ட மயக்கமே வந்தது....

அவள் வாழ்நாளில் இவ்வளவு விலை உயர்ந்த புடவைகளைக் கண்களால் பார்த்தது கூட இல்லை...

"புடவைகள் இவ்வளவு விலையில் கூட விற்குமா? அச்சச்சோ!!! விலையைக் கூடப் பார்க்காமல் யாராவது புடவை எடுப்பாங்களா திவ்யா?" என்று மனதிற்குள்ளே அரண்டவள் அவன் அருகில் தயங்கிவாறே வந்து....

"தப்பா நினைச்சிக்காதீங்க..... நான் விலையைப் பார்க்கல.... இவ்வளவு விலையில எனக்குப் புடவை வேண்டாம்" என்றாள் கண்களில் கலக்கத்துடன் மெல்லிய குரலில்....

அவளைத் திரும்பி பார்த்தவன் எதுவும் பேசாமல் பணத்தைச் செலுத்திவிட்டு "சுடிதார் செக்ஷன் எங்கு இருக்கு?" என்று கேட்க...

"ஏற்கனவே இவ்வளவு விலையில் புடவை எடுத்தாச்சு... இப்போ சுடிதார் வேற எதற்கு?" என்று நினைத்தவள் அதை அவனிடம் மெதுவாகச் சொல்ல,

"கொஞ்சம் பேசாமல் வர்றியா?" என்றான்...

சுடிதார் பிரிவுக்குப் போனவளுக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை...

"மஹா எந்த மாதிரி போட்டிருந்தா தெரியுமா? ஞாபகம் இருக்கா" என்று அர்ஜூன் கேட்க திருதிருவென்று விழித்த திவ்யாவைப் பார்த்தவன் மஹாவை அழைத்தான்.....

அவள் "அந்தச் சுடிதார் போட்டு எடுத்த ஃபோட்டோ ஒன்னு இருக்கு" என்றவள் அதனை அவன் அலை பேசிக்கு அனுப்ப, புகைப்படத்தைத் திவ்யாவிடம் காட்டியவன்.....

"இதே மாதிரி தான் வேண்டுமா? இல்லை வேற லேட்டஸ்ட் டிசைன் ஏதாவது பார்க்கிறியா?" என்றான்...

அவளுக்கோ ஏற்கனவே எப்பொழுதடா வீட்டிற்குப் போவோம் என்றிருந்தது... இதில் இது வேறா? என்று நினைத்தவள்,

"எப்படி இருந்தாலும் பரவாயில்லை.... சுடிதார் இல்லாட்டிக் கூடப் பரவாயில்லை" என்றவளை மீண்டும் ஒரு பார்வை பார்த்தவன் அங்கிருந்த விற்பனையாளரை அணுகி புகைப்படத்தைக் காண்பித்து..

"இந்த ஃபோட்டோவில் இருக்கிற மாதிரி சுடிதார் இருக்கா?" என்றான்...

"அதே மாதிரி கிடைக்கறது கஷ்டம் சார்... இருந்தாலும் பார்க்கிறேன்... ஆனால் இதை விடப் புது டிசைன்ஸ் இப்போ வந்திருக்கு அதையும் பார்க்கிறீங்களா?" எனவும்...

"யா ஷ்யூர்" என்றான்.

மஹா அணிந்திருந்த அதே மாடல் சுடிதார் கிடைக்கவில்லை என்பதால் அதனை விட விலை அதிகமாக நல்ல டிசைனில் அவனே அவளுக்கு ஒரு சுடிதாரை தேர்ந்தெடுத்தான்...

ஒரு வழியாக வேண்டியதை வாங்கியவர்கள் காரில் ஏற அவளுக்குத் தான் ரொம்பச் செலவு ஆகிவிட்டதோ? என்று கலக்கமாக இருந்தது.

காரில் அமர்ந்தவள் அவனிடம் தயங்கியவாறே மெதுவே...

"எங்க ஊரில நல்ல புடவை கடைங்க அவ்வளவு கிடையாது... பக்கத்து ஊரில தான் நல்ல கடைங்க இருக்கு..... ஆனால் எனக்குத் தனியா போகப் பயம்.... எப்போதும் எங்க அம்மா தான் எனக்கு ட்ரெஸ் எடுப்பாங்க.... அதனால தான் இன்னைக்குப் புடவை எடுக்கும் போது நா அது விலைய பார்க்கல..... நீங்க பேசாம அதை அத்தைக்கு, இல்லன்னா மஹா அண்ணிக்கு கொடுத்திடுங்க" என்று கண்களை அகல விரித்துத் தலையை ஆட்டி ஆட்டி சின்னப் பெண் போல் பேசும் மனைவியைக் கூர்ந்து பார்த்தவன்,

"ஏன் உனக்குப் பிடிக்கலையா?" என்றான்...

இதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் தலை குனிய,

"பிடிக்காம தான் அந்த ஸாரிய [saree] எடுத்தியா? கேட்டா பதில் சொல்லனும்... உனக்குப் பிடிச்சிருக்கா? பிடிக்கலையா?" என்றான்.

அவள் தலையைக் குனிந்தவாறே மெதுவாக ஆம் என்று தலை அசைக்க,

"அப்போ பேசாம வா" என்றவன் காரை கிளப்பினான்.

தொடரும்...
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top