JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 27 & 28

JB

Administrator
Staff member

அத்தியாயம் - 27


அர்ஜூனும் திவ்யாவும் காதலோடு கூடிய கூடலும் மகிழ்ச்சியுமாகக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில் ஒரு நாள் காலையில் இருந்தே திவ்யாவிற்குத் தலை சுற்றுவது போல் இருந்தது....

ஒரு வேளை காலை டிஃபன் உண்டால் சரியாகி விடும் போல் என்று நினைத்தவள் அனைவரும் அவரவர் வேலையாக வெளியே செல்ல, தன் மாமியாருடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட விரும்ப ஆனால் அவரோ அவளை உண்ணச் சொன்னவர் தனக்குக் கொஞ்சம் அல்லியிடம் காஃபி மட்டும் போட்டுக் கொடுக்கச் சொல்ல, சரி என்றவள் தானே காபி போட்டுக் கொண்டு வந்தாள்...

காபியை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பியவளுக்கு மீண்டும் தலை சுற்றுவது போல் இருக்க ஸ்ரீயின் அருகிலேயே சட்டென்று தலையைப் பிடித்துக் கொண்டே அமர்ந்துவிட்டவளைப் பார்த்தவர் என்னவென்று கேட்க,

"கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்கு அத்தை.... பசியா என்னன்னு தெரியலை" எனவும்,

அவளை எழுப்பியவர் டைனிங் டேபிளில் அவளை அமர வைத்து பரிமாற ஆரம்பித்தார்...

ஒரு வாய் உணவை எடுத்து வைத்தவளுக்குக் குமட்டிக் கொண்டு வர, வாயை மூடிக் கொண்டே பின்கட்டிற்கு ஓடியவளை தொடர்ந்து அவள் பின்னேயே ஓடிய ஸ்ரீக்கு எதுவோ புரிவது போல் இருந்தது...

சில நாட்களாகவே திவ்யாவிடம் ஒரு அசதி தெரிந்திருந்தது....

முகத்தில் ஏதோ களைப்பும் சோர்வும் படர்ந்திருக்க ஒரு வேளை "அதுவாக" இருக்குமோ என்று சில நேரங்களில் ஸ்ரீக்கும் தோன்றியிருந்தாலும் அர்ஜூனும் திவ்யாவும் மனம் ஒத்து வாழ துவங்கியே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்ததால் அதற்குள் அர்ஜூன் இதற்குத் தயாராக இருப்பானா என்ற குழப்பமும் இருந்து வந்தது...

ஆனால் இன்று திவ்யாவின் மயக்கமும், களைப்பும், நிலையும் கிட்டத்தட்ட அவர் நினைத்திருந்ததை உறுதிப் படுத்த படபடக்கும் நெஞ்சத்துடன் மனதிற்குள் "முருகா... இது நான் எதிர்பார்க்கிற விஷயமாத் தான் இருக்கனும்" என்று மனம் உருக வேண்டிக் கொண்டு தவிப்புடன்....

"திவ்யா, நாள் எதுவும் தவறிப் போச்சா? என்றார்....

அவரின் கேள்வியில் சட்டென்று அவரை நிமிர்ந்துப் பார்த்தவளின் முகத்தில் யோசனையும் எதிர்பார்ப்பும் போட்டிப் போட...

"போன மாசம் பீரியட்ஸ் ஆகலை அத்தை.... இந்த மாதம் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழிந்தால் தான் தெரியும்" என்றாள் தளர்ந்த குரலில்...

மருமகளின் பதிலில் ஸ்ரீயின் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்க, உள்ளமும் மகிழ்ச்சியில் திளைக்க, அவரின் முகம் அக மகிழ்ந்து பூரித்துப் போனது...

மனமொத்த ஆத்மார்த்தமான நட்பு கொண்டிருந்த இரு தோழிகள் இருவரும் ஒரே நேரத்தில் பாட்டி ஆனால்?

அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளின் கரம் பற்றி அவள் எழ உதவி செய்தவர்...

"சரி திவ்யா, கிளம்பு... டாக்டரிடம் போகலாம்..." என்றார்.....

"வேண்டாம் அத்தை... இன்னும் இரண்டு மூன்று நாள் கழிச்சுப் போகலாமே" என்று தயங்கியவளை மீண்டும் வற்புறுத்தி அழைக்க, அவரின் பேச்சை மறுக்க முடியாமல் கிளம்பியவள் தெய்வானையிடமும் அல்லியிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்...

அவர்கள் இருவரும் சென்றது அவர்களின் குடும்ப மருத்துவரின் மருத்துவமனைக்கு... அவரின் மனைவி சென்னையிலேயே மிகப் பிரபலமான பெண்கள் மருத்துவர்...

மருத்துவமனையை அடைந்ததில் இருந்து திவ்யாவின் மனதில் ஏதோ கலக்கமாக இருக்க, நெஞ்சுத் துடிப்பும் அதிகரிக்க, அவளின் படபடப்பு அவள் முகத்திலும் அப்பட்டமாகத் தெரியவும், மாமியாரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வந்தவளை ஆறுதல் படுத்திக் கொண்டே சென்றவரின் மனதில் அப்படி ஒரு சந்தோஷம்...

திவ்யாவை பரிசோதித்த மருத்துவர் மாமியார் மருமகளின் மனம் குளிரும் வகையில் அவள் பொன்னான வயிற்றில் அவர்களின் வாரிசு உதித்திருக்கும் அந்தச் சந்தோசச் செய்தியைச் சொன்னவர் அவள் ஏழு வார கர்ப்பமாக இருப்பதை உறுதிப் படுத்த, உலகமே தன் கைக்குள் வந்துவிட்ட பூரிப்பில் ஆட்கொள்ளப்பட்ட திவ்யாவிற்கு அந்த நிமிடமே அர்ஜூனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது...

முதல் முறை கர்ப்பம் தரித்திருப்பதாலும், பத்தொன்பது வயதே ஆனவள் என்பதாலும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்று அறிவுரைகள் வழங்கிய மருத்துவர், ஊட்டசத்து மாத்திரைகள், அவளுடைய மாதாந்திர பரிசோதனைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.

ஒரு வழியாக அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து வெளியே இருவரும் வர, திவ்யா தயங்கியவாறே தன் மாமியாரைப் பார்த்தவள்....

"அத்தை, இந்த விஷயத்தை யாரிடமும் இப்போ சொல்ல வேண்டாம்..... தெய்வானைக்கா, அல்லியக்காவிடம் கூடச் சொல்ல வேண்டாம்" என்று கூற, ஏன் என்பது போல் ஸ்ரீ பார்க்கவும்,

"இல்லத்த... எனக்கு இந்த விஷயத்தை முதல்ல அவங்கக் கிட்ட தான் சொல்லனும்னு ஆசையா இருக்கு... அதுவும் ஃபோன்ல இல்லை... அவங்க இன்னைக்கு நைட் வீட்டிற்கு வந்தவுடன் நேரில் சொல்லனும் போல் இருக்கு" என்றாள் முகத்தில் அத்தனை நாணத்தைச் சுமந்து...

எந்த ஒரு பெண்ணிற்குமே தான் கர்ப்பமாயிருப்பதைத் தன் கணவனிடம் தானே முதன் முதலாகச் சொல்ல ஆசைப்படுவாள், "சரிம்மா" என்றவர் மனம் முழுக்கத் தங்கள் வீட்டில் விடி வெள்ளி போல் இன்னும் எட்டு மாதங்களில் தோன்ற போகும் குலக் கொழுந்தின் மீதே இருந்தது.

அன்று முழுவதும் தன் கணவன் எப்பொழுது வருவான் என்று திவ்யா ஏங்கி கொண்டிருக்க, ஸ்ரீயோ தன் கணவருக்கும், கலாவிற்கும் மற்ற அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியை எப்பொழுது சொல்வது என்று காத்துக் கொண்டிருந்தார்...

உள்ளம் முழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க, கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவள் தன் மாமியாரிடம் கேட்க, அவளைத் தனியாக அனுப்ப யோசித்தவர் அவளைத் தடுக்காமல் மஹாவையும் துணைக்கு அனுப்பினார்...

இன்று அதி காலையிலேயே தங்களின் தொழிற்சாலைகளைப் பார்வையிடுவதற்கென்று சென்ற அர்ஜூனிற்கு மதிய உணவு அருந்த கூட நேரம் கிடைக்காது சுற்றிக் கொண்டிருந்தவன், அலுவலகத்திலும் வேலைகள் தேங்கி இருப்பதை அறிந்து மதியத்திற்கு மேல் அலுவலகம் சென்றவனை வேலை கழுத்தை நெறிக்க, மனமும் உடலும் அசந்துப் போனதில் அந்த நிமிடமே திவ்யாவைக் காண வேண்டும் என்று தோன்ற வீட்டிற்குச் செல்ல முனைந்தவன் கதிரை அழைத்தான்....

"கதிர், வேறு ஏதாவது இன்னைக்கே முடிக்க வேண்டிய வொர்க்ஸ் பெண்டிங்கில இருக்கா?"

"இல்ல சார்... மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம் "

"ஓகே கதிர்... தென் லெட் மி லீவ் [Ok, then let me leave]" என்றவன் கிளம்பியதும் வீட்டிற்கு வரும் வழியில் திவ்யாவை அழைக்க, கணவனின் அழைப்பைக் கண்டவளுக்கு அவனின் நெஞ்சில் சாய்ந்து அவன் தந்தையாகப் போகும் தித்திப்பான செய்தியை சொல்ல மனமும் நாவும் துடித்தது....

ஆனால் இந்தப் பொன்னான செய்தியை நேரில் தான் சொல்ல வேண்டும், சொல்லும் பொழுது தன் கணவனின் முகத்தில் தோன்றும் மாறுதல்களைக் கண் கொண்டு பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்பியவள் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தான் மஹாவுடன் அஷ்டலெட்சுமி கோவிலில் இருப்பதாகக் கூறினாள்...

ஏனோ அர்ஜூனின் மனதில் அப்பொழுதே அவளைக் காண வேண்டும் போல் ஆவலாக இருக்க, அவன் உடலும் உள்ளமும் மனையாளின் அருகாமையைத் தேடித் தவித்து இருந்தது....

"கோவில் இருந்து வர எவ்வளவு நேரம் ஆகும்?" ....

"இப்போ தான் வந்தோம்ங்க.... இன்னும் அர்ச்சனையே செய்யலையே"

அர்ஜூனிற்கும் கடவுளுக்கும் எவ்வளவு தொலைவு என்பது அனைவருக்கும் தெரியும்... ஆனால் அவன் மனையாளோ கணவனுக்கு நேரெதிராக வாரத்தில் ஏழு நாட்களும் கோவிலுக்குச் செல்ல முடியாதா என்று ஏங்குபவள்...

வாழ்நாளில் எந்தக் கோவிலின் வாயிலையும் மிதிக்காதவன்..... விவரம் தெரிந்த நாளில் இருந்தே எவ்வளவு பெரிய சோதனைகளாகட்டும், எதிர்ப்புகளாகட்டும், அல்லது பிரச்சனைகளாகட்டும், அனைத்தையும் தனியாளாக எதிர்த்து நின்ற சமயங்களில் கூட அவன் தன்னுடைய புத்திக் கூர்மையையும், சாமர்த்தியத்தையும், அஞ்சா நெஞ்சத்தையும் மட்டுமே நம்பினானே ஒழிய, கடவுளின் பக்கம் மனதால் கூட ஒரு அடி எடுத்து வைத்ததில்லை...

அப்பேற்பட்ட அர்ஜூன் இன்று தன் மனையாள் கோவிலில் இருப்பது தெரிந்ததும் அவளைக் காண்பதற்கு இதற்கு மேலும் காத்திருக்க முடியாமல் கோவிலுக்கே சென்று அவளைச் சந்திப்பதாக முடிவெடுத்தவன் தான் வருவதாக அவளிடம் சொல்வதைத் தவிர்க்க...

கணவன் மனைவி இருவரின் மனமும் எத்தனை ஆழமான அழுத்தமான காதலை, அன்பை, நேசத்தைச் சுமந்திருந்தால் வார்த்தைகளால் தங்களின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்திக் கொள்ளாமலே மனதோடு மனம் பேசிக் கொண்டதைப் போல் ஒரே முடிவை எடுத்திருந்தார்கள்....

தன் மனையாளை சந்திக்கும் ஆசையில் விரைவாகக் காரை செலுத்தியவன் அடுத்த அரை மணி நேரத்தில் கோவிலை அடைய, மீண்டும் தன்னை அழைத்த கணவனிடம் தானும் மஹாவும் மஹாலெட்சுமி சன்னதியில் இருப்பதாகச் சொல்ல, முதன் முறையாகத் கோவிலிற்குள் நுழைந்தான் "தி க்ரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட்" அர்ஜூன்...

கோவிலுக்குள் நுழைந்தவனுக்கு அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் வழக்கமான பாணியில்...

"இங்க வந்து இப்படி மொய்க்கிறதுக்குப் பதில் பேசாமல் அவங்க செய்ய வேண்டிய வேலைகளை சரியா செய்தாலே போதும்... எல்லாம் ஒழுங்காக நடக்கும்" என்று நினைக்கத் தோன்ற, ஏனோ தன் சிந்தனையை மாற்றிவிட்டுத் திவ்யா கூறிய சன்னதியை தேட....

கருப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும், வெளிர் சந்தன நிறத்தில் ஜீன்ஸும் அணிந்திருந்தவன், சட்டையை முட்டி வரை மடித்துவிட்டு, சன் க்ளாஸ் அணிந்து கம்பீரமாக நடக்க, திவ்யா இருந்த சன்னதிக்கு அருகிலேயே இருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்திருந்த நான்கு கல்லூரி மாணவிகள் இவனைப் பார்த்ததும் இவன் அழகில் மயங்கி வாயைப் பிளந்தவாறே...

"வாவ் அங்க பாருங்கடி... செம்மையா ஒருத்தன் வரான்" என்றார்கள்....

அதே நேரம் அவர்களைப் பார்த்திருந்தவன் அவர்களை நோக்கி நடக்க அவன் அழகில் லயித்து இருந்தவர்கள் அவன் சட்டென்று தங்களை நோக்கி நடக்கவும் வியந்தவர்கள் மகிழ்ச்சியில்....

"ஹேய்! அவன் இங்க தாண்டி வருகிறான்... ஓகே.... ஒரு டீல்.... யாரைப் பார்த்து அவன் முதல்ல பேசுகிறானோ, அவளுக்குத் தான் அவன்" என்று வெகுளித்தனமாக அவர்களுக்குள்ளாகவே முடிவெடுக்க,

அவர்களின் அருகே வந்தவன் "எக்ஸ்க்யூஸ் மீ.... மஹாலெட்சுமி சன்னதி எங்கிருக்கு?" என்றான்...

ஆனால் ஜொள்ளு விட்டு அவனையே பார்த்திருந்தவர்களின் செவிகளைச் சென்று அவன் கேள்வி அடையவில்லை...

தலையைக் குனிந்து சிரித்துக் கொண்டவன் சிறு புன்னகையுடன் நிமிர்ந்து,

"கேன் யூ கேர்ள்ஸ் கம் பேக் டு திஸ் இயர்த் ஃபார் அ மினிட் [Can you girls come back to this earth for a minute]" என்றான்...

அவனின் சிரிப்பில், பேச்சில் சுதாரித்தவர்கள் அசடு வழிந்து கொண்டே..

"நாங்களும் இந்த உலகத்திற்குத் திரும்பி வரனும்னு தான் பார்க்கிறோம்... ஆனால் நீங்க தான் வர விட மாட்டேங்கிறீங்களே" என்று சலித்துக் கொள்வது போல் கூறிக் கொண்டு ஒருவருக்கொருவர் பார்த்துக் கண் சிமிட்ட,

அவர்களின் விஷமம் புரிந்தவன் மீண்டும் சிரித்துக் கொண்டே....

"சரி, மஹாலெட்சுமி சன்னதி எங்கிருக்குன்னு சொல்லுங்க" என்றான்...

"சொல்றது என்னா? கூட்டிட்டே போறோம் வாங்க" என்றவர்கள் அவனுக்கு முன் செல்ல, புன் முறுவலுடன் தலையைக் கோதி விட்டுக் கொண்டவன், அவர்களைப் பின் தொடர்ந்தான்...

சன்னதியை அடைந்ததும்...

"இது தான் நீங்க கேட்ட சன்னதி" எனவும்...

அங்கு மஹா கூட்டத்தில் நிற்பதையும் அவளுக்கு அருகில் அடர்ந்த பாக்கு நிறத்தில் சன்னமான கரைப் போட்ட பட்டுப் புடவையில் தேவதையைப் போல் அழகு மிளிற நின்று கொண்டிருந்த தன் மனையாளின் எழில் அழகில் மயங்கியவன், அவள் இறுக்கத் தன் கண்களை மூடி வேண்டிக் கொண்டு இருப்பதைப் பார்க்கவும் அவள் நிச்சயம் தனக்காகத் தான் வேண்டிக் கொண்டிருப்பாள் என்று புரிய சிறு புன்னகையுடன் கல்லூரிப் பெண்களிடம் திரும்பியவன் "தேங்ஸ்" எனவும்...

"வேறு எங்கேயும் போக வேண்டுமா?" என்று அவர்கள் கிண்டலாகக் கேட்க,

"அதை என் வைஃப்பிடம் கேட்டு சொல்றேனே" என்றான்...

அவன் வைஃப் என்றதும் அவர்களின் முகம் மாறுவதைப் புன்னகையுடன் இரசித்தவன் கூட்டத்திற்கு இடையில் புகுந்து திவ்யாவின் அருகில் சென்று அவளை உரசியது போல் நிற்க,

அவனின் திடீர் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு சட்டென்று கண்களைத் திறந்தவளுக்குத் தன் கணவன் தன் அருகில் நிற்பதைக் கண்டதும் இது கனவா அல்லது நினைவா? என்றே தோன்றியது....

கோவில் என்றாலோ அல்லது பூஜை என்றாலோ தாம்தூமென்று குதிப்பவரா இன்று கோவிலுக்கு வந்திருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டவளின் அகன்ற விழிகளைப் பார்த்தவன் அவளின் கண்களுக்குள் தன்னைத் தொலைத்தவனாக அவளின் காதுகளுக்கருகில் குனிந்து....

"சாமியைப் பாருடி" என்று சிரித்துக் கொண்டே சொல்ல, புன்னகைத்தவள் மஹாவிடம் அவன் வந்திருப்பதைச் சொல்ல...

அவள் சொல்வதை நம்பாமல் மஹா எட்டி அவனைப் பார்க்கவும், தன் தங்கையைப் பார்த்து புன்னகைத்தவன்...

"இப்போ இரண்டு பேரும் சாமியக் கும்பிடப் போறீங்களா?, இல்லை என்னையவே பார்த்துட்டு இருக்கப் போறீங்களா?" என்றான்.

தன் அருகில் தன் கணவன் இருப்பது அதுவும் கோவிலில் என்று நினைத்தவளுக்கு அவனின் மார்புக்குள் புதைந்து அந்த நிமிடமே அவன் அப்பா ஆகப் போவதை சொல்லமாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது...

திருமணம் நடந்த நாளில் இருந்து இவர்கள் இருவரும் ஒன்றாக இணைவார்களா என்று அனைவரும் அஞ்சிக் காத்துக் கொண்டிருக்க, தன்னைப் போல் ஒரு ஏழைப் பெண்ணைத் தன் கணவன் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வழியே இல்லை என்று அவள் உள்ளம் தவித்துக் கொண்டிருக்க, இதோ அவளைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டது மட்டும் இல்லாமல், தன் காதலினால் அவளைத் திக்கு முக்காட செய்த கணவன் இன்று அவனின் வாரிசையே அவளுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறான்...

அகம் மகிழ மன நிறைவுடன் கண்களை மூடி தன் கணவனுக்காகவும், தான் பெறப் போகும் தங்களுடைய குழந்தைக்காகவும் மனதார வேண்டிக் கொண்டவள் மறுபடியும் தலை சுற்றுவது போல் உணர்ந்தாள்...

தான் கீழே விழுந்துவிடாமல் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளத் தன்னையும் அறியாமல் அர்ஜூனின் கரத்தைப் பற்ற, திரும்பி பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று புரிய....

"திவ்யா, ஆர் யூ ஆல்ரைட்?" என்றான்...

"இல்லைங்க... ஒன்னும் இல்லை" என்று சொன்னவளுக்குத் தலை சுற்றல் மேலும் அதிகரிக்கத் தன்னிலை இழந்து அவனின் மேல் லேசாகச் சாய்ந்தவளைக் கண்டு பதறிப் போனவன்...

"என்னாச்சு, திவி?" என்று பதறியவாறு மீண்டும் கேட்க,

அவன் சத்தத்தைக் கேட்டு மஹாவும் திரும்பி பார்க்க, திவ்யாவை தன் தோளிலேயே சாய்த்துக் கொண்டவன் அப்படியே அவளை நடத்தி அழைத்து வந்தான் அந்தக் கல்லூரி பெண்கள் அமர்ந்திருந்த அதே மண்டபத்திற்கு...

அவளை தன் தோளில் தாங்கியவாறே மரத்தின் கீழ் அந்த மண்டபத்தில் அமர செய்தவன் தானும் அவளின் அருகிலேயே அமர, முதன் முறையாக இவ்வாறு தரையில் தன் அண்ணன் அமர்வதைப் பார்த்த மஹாவிற்குக் கிட்டத்தட்ட மயக்கமே வந்தது.....

விழி விரிய அவனைப் பார்த்தவள் மீண்டும் திவ்யாவை நோக்க, அர்ஜூனின் தோளில் சாய்ந்திருந்தவளுக்கு இன்னமும் தன் தலையை நிமிர்த்த முடியாமல் போக அவளின் நிலைக் குறித்து அஞ்சியவனாக அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தி...

"திவி.... என்ன பண்ணுது?? சொல்லுடி" என்று மீண்டும் பரிதவிப்புடன் கேட்க,

திவ்யாவிற்கு மறுபடியும் குமட்டிக் கொண்டு வந்தது...

இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி தன் அனுபவத்தால் அவளின் நிலைமையை உணர்ந்து அவளின் அருகே நெருங்கி வந்தவர்...

"என்னம்மா, ரொம்ப மசக்கையா இருக்கா? எத்தனையாவது மாசம்மா??" என்றார்...

அவரின் கேள்வி அர்ஜூனிற்கும் மஹாவிற்கும் புரிய ஒரு சில விநாடிகள் பிடித்தது...

புரிந்ததும் சட்டென்று திவ்யாவை நோக்கி குனிந்தவன் முகத்திலும் மனதிலும் அத்தனை ஆவலையும் எதிர்பார்ப்பையும் தாங்கி....

"திவி…" என்றான்...

தன் கணவன் தன்னை நோக்கி குனிந்து தன் முகம் பார்க்கவும், அவனின் எதிர்ப்பார்ப்புடனான குரலிலும் நாணம் அடைந்தவளின் முகம் அந்தி வானச் சிவப்பாய் சிவக்க கணவனின் தோளில் சாய்ந்திருந்தவள் அவனைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு மேலும் அவன் நெஞ்சில் முகத்தை ஆழ புதைக்க, இங்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகளுக்கு இது ஏதோ சினிமாவில் நடக்கும் காட்சியைப் போல் தோன்றியது....

தன்னவளின் நாணத்தில், தன் மேல் புதைந்து இருக்கும் அவளின் செய்கையில் சிலிர்த்தவன் மீண்டும் தன் வலது கையால் அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தி....

"என்னடி, கேட்டுட்டே இருக்கேன்... ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிற" என்று ஆசையுடன் வினவ....

இன்னமும் கூச்சம் விலகாத முகத்துடனும் புன்னகையுடனும் தன் கணவனின் காதிற்கு அருகில் எம்பி மெல்லிய குரலில்....

"ம்ம், நீங்க அப்பா ஆகப் போறீங்க" என்றாள்...


தன் காதல் மனைவியின் வாயில் இருந்து வந்த "அப்பா ஆகப் போறீங்க" என்ற வார்த்தைகளில் உடலும் உள்ளமும் சிலிர்த்தவனுக்குப் பெருமகிழ்ச்சியும் பிரமிப்பும் போட்டிப் போட, தங்களின் காதலுக்கு, அன்னியோன்யமான தாம்பத்தியத்திற்குச் சாட்சியாகத் தன் பிள்ளை தன் மனைவியின் மணி வயிற்றில் உதித்திருக்கிறான் என்ற கர்வம் தோன்ற, சுற்றம் பார்க்காமல் தனக்குத் தந்தையென்ற ஸ்தானத்தை அளிக்கப் போகும் தன்னவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தான் அந்தக் காதல் கணவன்...

ஏற்கனவே சினிமா காட்சி போல் அங்கு நடப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அந்தக் கல்லூரி மாணவிகளுக்கு இந்தக் காட்சி இன்னும் உற்சாகத்தைக் கொடுக்க,

"ஸோஓஓஓஒ ஸ்வீட்... திஸ் பியூட்டிஃபுல் மொமண்ட்ஸ் நீட் டு பி கேப்ச்சர்ட் [Sooooo sweet.... this beautiful moment needs to be captured] " என்றவர்கள்,

அர்ஜூன் திவ்யாவின் நெற்றியில் முத்தமிடுவதையும், அதனால் அவள் வெட்கத்தால் முகம் சிவந்து மீண்டும் அவனின் நெஞ்சிற்குள் ஆழ தன் முகத்தைப் புதைப்பதையும் அழகாகத் தங்களின் அலை பேசியில் படம் பிடித்துக் கொண்டார்கள்....

வழக்கமாகத் தன்னை இவ்வாறு புகைப் படம் எடுப்பவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுபவன் இன்றைய நாள் தன் வாழ்நாளில் ஒரு பொன்னான நாள் என்பதாலும் மனமுழுவதும் மகிழ்ச்சி நிரம்பி வழிந்ததாலும் அவர்களின் செயலில் சிரித்தவன் இந்த வாண்டுகள் இதற்கு மேல் எதுவும் செய்வதற்குள் இங்கிருந்து கிளம்பிட வேண்டும் என்று எண்ணி....

"கார் வரைக்கும் நடக்க முடியுமா திவி?" என்றான்...

"ம்ம்" என்றவளை மெல்ல எழுப்பித் தன்னுடைய தோள் வளைவிற்குள் வைத்துக் கொண்டவன் கோயிலின் வாயிலை நோக்கி நடக்க, கணவனின் இந்த உரிமையான ஆனால் கோவில் என்று கூடப் பாராமல் தன்னைத் தன்னருகில் வைத்துக் கொண்டு நடக்கும் செயலில் சங்கோஜப்பட்டவள் அவனை விட்டு மெல்ல நகர..

"ஏன், இப்ப என்ன? திரும்பியும் கீழே விழறதுக்கா... பேசாம இப்படியே நட" என்றான் வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டி...

அதில் கோபம் தெரியவில்லை... அவனுடையை அக்கறை தான் தெரிந்தது...

மௌனமாக அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பிக்க, அந்தக் கல்லூரி பெண்களிடம் தன் அலை பேசி எண்ணைக் கொடுத்து அர்ஜூனையும் திவ்யாவையும் அவர்கள் எடுத்த அந்த அழகிய புகைப் படத்தைத் தன்னுடைய அலை பேசிக்கு அனுப்பச் சொன்னாள் மஹா.

வாழ்க்கையில் சில நிமிடங்கள் பதிக்கப் படுவதற்குரியது அல்லவா!!!!!

கோவிலை விட்டு வெளியே வந்தவர்கள் நேரே தங்கள் காருக்கு செல்ல, அர்ஜூன் டிரைவர் முருகனை வீட்டிற்குப் போகச் சொன்னவன் மஹாவையும் திவ்யாவையும் தன் காரில் ஏறச் சொல்ல, அவர்களுக்குத் தனிமை கொடுக்க விரும்பிய மஹா...

"அண்ணா... நான் முருகன் அண்ணாவுடன் போறேன்... நீங்களும் அண்ணியும் ஒன்னா வாங்க" எனவும்..

அவளைத் திரும்பிப் பார்த்தவன்....

"ஏன்? நீயும் என் கூடவே வா" என்றான்...

அவன் வார்த்தைகளை மறுக்க முடியாமல் திவ்யாவை அர்ஜூனிற்கு அருகில் காரின் முன் பக்க இருக்கையில் அமரச் சொன்ன மஹா பின் பக்க இருக்கையில் அமர,

"திவி... நீ மஹா கூட உட்காரு" என்றவன் திவ்யா காரில் ஏறியதும் அவளின் பக்கக் கதவை சாத்தியவன் தான் ஏறி காரை கிளப்ப, ஏறியதில் இருந்து வீட்டிற்கு வரும் வழி முழுவதும் தன் கணவனின் கண்கள் ரியர் வியூ கண்ணாடி வழியாகத் தன் மேலேயே படர்ந்திருந்ததைக் கண்ட திவ்யாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது..

இது என்ன தங்கை கூட இருக்கும் போதே இந்தப் பார்வை என்று நினைத்தவள் தலை குனிய, வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகளை வென்றிருந்தாலும், எவ்வளவு மிகப் பெரிய பதவியில் வகித்து இருந்தாலும், முதல் முறை தந்தை என்ற அற்புதமான அழகான பதவியைத் தனக்குத் தந்த தன் மனைவியைப் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் காதலும் கர்வமுமே வழிந்து கொண்டிருந்தது....

இவர்களின் பார்வை பரிமாற்றங்களை கண்டும் காணாதது போல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த மஹாவிற்குத் தன்னையும் மீறி தன் இதயத்தில் குடியிருந்த, ஆனால் தன்னுடயை அவசரத்தினால் அவளின் மனதைக் காயப்படுத்தியிருந்த வினோத்தின் நியாபகம் வந்தது...

அன்று மொட்டை மாடியில் அவளை முத்தமிட்டு தன் காதலை சொன்னவன் அதற்குப் பிறகு அவளிடம் பேச கூட முயற்சிக்கவில்லை..

மறு நாள் அவன் தங்கள் ஊருக்கு திரும்பி செல்லும் பொழுது எவ்வளவு ஆர்வத்துடன் தன்னை எதிர்பார்த்திருப்பான் என்று தெரிந்தும் தான் அவனைப் பார்க்க கீழே இறங்கி வராததில் அவனுக்கு நிச்சயம் தன் மீது கோபமும் வருத்தமும் இருக்கும்...

ஆனால் அதற்காக இத்தனை நாட்களில் ஒரு முறைக் கூடத் தன்னை அழைக்கவோ அல்லது ஒரு குறுந்தகவல் கூட அனுப்பவோ அவன் முயற்சிக்கவில்லையே என்று கலங்கியிருந்தவளுக்கு ஒரு பெண்ணாகத் தானே வலியச் சென்று அவனிடம் பேசவும் தைரியம் வரவில்லை....

ஆனால் அவளுக்கு எங்குத் தெரியும்? வினோத் தன் மனம் கவர்ந்தவளை, தன் இதயத்தில் வீற்றிருக்கும் தன்னவளைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் தவியாய் தவித்துக் கொண்டிருப்பதும்,

ஆனால் அர்ஜூனின் அந்தஸ்திற்கு முன்னும், அவனின் அதிகாரத்திற்கு முன்னும் தங்களின் காதல் ஒரு செல்லாத காசாகத் தான் கருதப்படும் என்று கலங்கிக் கொணடிருப்பதும்....

தன் மனதில் பூத்திருக்கும் காதல் ஒரு வேளை அர்ஜூனிற்குத் தெரிய நேர்ந்தால் நிச்சயம் அவன் எதிர்ப்புப் பலமாக இருக்கும்... அவனின் கோபாவேஷத்தில் இப்பொழுது தான் அரும்பியிருக்கும் தன் காதல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விடுமோ என்று பயந்து தான் அவன் மஹாவின் அலை பேசி எண்ணைக் கூடத் திவ்யாவிடம் இருந்து வாங்கவில்லை என்பதும்...

ஏனெனில் அர்ஜுன் ஊருக்கு வந்த பொழுது அவன் வினோத்தின் வாகனத்தைப் பார்த்த பார்வையும், அதைத் தொடர்ந்து தன் காரை செலுத்த முடியாது என்று தன் காரில் ஏறச் சொன்னதும் வினோத்திற்கு உரைக்க வைத்தது...

தங்கள் வீட்டு இளவரசியை அவன் நிச்சயம் தன்னைப் போல் ஒரு ஏழையின் கரங்களில் ஒப்படைக்கவே மாட்டான் என்று...

காரில் இருந்த மூவரும் ஒவ்வொரு மனநிலையில் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் திகைப்பையும் கர்வத்தையும் சுமந்து கொண்டு வர, வீட்டிற்கு நுழைந்தவர்களை அதிசயத்தோடு பார்த்த ஸ்ரீ..

"நீ எங்க இவங்களைப் பார்த்த அர்ஜூன்?" என்று கேட்க,

அர்ஜூன் பதில் சொல்வதற்குள் ஓடிச் சென்று தன் அன்னையை இறுக்க அணைத்துக் கொண்ட மஹா....

"என்ன மாம்? எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி மறைச்சிட்டீங்களே???" என்றாள்...

மஹாவின் சந்தோஷ அலறல் திவ்யாவிற்குக் கூச்சத்தையே கொடுக்க அர்ஜுனோடு சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்தவள் தன்னையும் அறியாமல் அவனுக்குப் பின்னால் மறைந்து கொள்ள,

வரும் வழியில் திவ்யா மஹாவிடம் சொல்வதைப் போல் அர்ஜூனிடம் தானும் ஸ்ரீயும் காலையில் மருத்துவமனை போனது, பின் பரிசோதனை செய்தது என்று அனைத்தையும் கூறி இருந்தாலும்....

காலையிலேயே தெரிந்த இந்த இனிப்பான செய்தியை திவ்யா ஏன் இத்தனை நேரம் தன்னிடம் இருந்து மறைத்திருந்தாள் என்ற அர்ஜூனின் குழப்பத்திற்கு விடையளிக்கும் வகையில்...

"என்னங்க... நம்ம திவ்யா கன்ஸீவ் ஆகியிருக்கா.... இன்னைக்குக் காலையில தான் செக் பண்ணிட்டு வந்தோம்... அர்ஜூன் கிட்ட தான் முதல்ல சொல்லனும், அதுவும் அவன் வந்த பிறகு அவளே அவனிடம் நேரில் சொல்லனும்... அது வரைக்கும் யாருக்கிட்டேயும் சொல்லாதீங்கன்னு சொல்லியிருந்தா... அதனால் தான் நான் உங்கக்கிட்ட கூடச் சொல்லலை" என்றார் கணவனிற்குப் பின் வெட்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கும் மருமகளைப் பார்த்தவாறே......

இப்பொழுது அர்ஜூனிற்குப் புரிந்து போனது தன் மனைவி ஏன் காலையிலேயே இந்த மகிழ்ச்சிகரமான விஷயத்தைத் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று...

தன் பின்னால் தன் முதுகினை பிடித்தவாறு மறைந்து நிற்கும் அழகு மனைவியைத் திரும்பி பாத்தவன் தன் வலதுக் கரத்தைக் கொண்டு அவளைத் தன்னருகில் இழுக்க, அவனின் செய்கையில் மேலும் நாணம் அடைந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க, பார்வையாலே தன்னை விழுங்கி விடுவது போல் பார்த்திருக்கும் கணவனைக் கண்டவள் சட்டென்று ஓடி தன் மாமியாரின் அருகில் நின்றுக் கொண்டாள்...

அந்த இல்லமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது....

திவ்யாவின் அருகில் வந்த பாலா அவளின் தலையைக் கோதிவிட்டவர்,

"ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மா" என்று கனிவுடன் கூற,

அவளின் கையைக் குலுக்கிய அருண் "கங்கிராட்ஸ் அண்ணி" என்றான்...

இவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்த அர்ஜூனின் உள்ளம் பெருமையாலும் சந்தோஷத்தாலும் திணறிக் கொண்டிருந்தாலும் ஒருவரும் தன்னைக் கவனியாததைக் கண்டவன் அருணின் பக்கம் திரும்பி சிறு புன் முறுவலுடன்...

"ஸோ கங்கிராட்ஸ் எல்லாம் உன் அண்ணிக்கு மட்டும் தானா?" என்றான்...

முதல் முறையாகத் தன் மனம் விட்டு பேசும் அண்ணனைக் கண்டவன் மனமெல்லாம் பூரிப்புடன் அவன் அருகில் வந்து அவனைக் கட்டி அணைத்துக் கொண்டவன்...

"இரண்டு பேருக்கும் தான் அண்ணா" என்றான்...

அந்த வீட்டின் குட்டி வாரிசை, அடுத்தத் தலைமுறையின் முதல் கொளுந்தை ஆர்ப்பாட்டமாக வரவேற்க அந்த வீட்டில் இருந்த அனைவரும் ஆத்மார்த்தமாகத் தயாராகிவிட்டிருந்தனர்....

ஆனால் ஒருவரும் எதிர்பார்க்காத வகையில் தங்களின் வாரிசு இந்தப் பூவுலகில் தோன்றப் போகும் நாளில் தன் மனைவியின் கதறலைக் கேட்க தான் அருகில் இருக்கப் போவதில்லை என்று அர்ஜூனிற்கோ அல்லது தங்களின் குலக் கொளுந்து பிறக்கப் போகும் நேரத்தில் தங்கள் வீட்டு மருமகள் உயிர் போகும் வலியில் தனித்துத் துடித்து இருப்பாள் என்று மற்றவகளுக்கோ இல்லை இதற்கெல்லாம் காரணம் தான் தன் குடும்பத்திடம் இருந்து மறைத்த அந்த ஒற்றை விஷயமே என்று மஹாவிற்கோ தெரிந்திருந்தாலோ பின்னாளில் நடக்க இருக்கும் அசம்பாவிதத்தைத் தடுத்து இருக்கலாமோ?????

"திவ்யா, நீ உங்க அம்மா அப்பாக்கிட்ட ஃபோன் செய்து சொல்லுமா.." என்று ஸ்ரீ சொல்ல,

"இல்லத்த.... நீங்களே சொல்லுங்க" என்றாள்.

சோபாவில் அமர்ந்த ஸ்ரீ கலாவின் அலை பேசிக்கு அழைக்க, அவர்களின் எதிரில் அர்ஜூன் அமர, ஸ்ரீயின் அருகிலேயே அமர்ந்த திவ்யா மறந்தும் தன் கணவனை ஏறெடுத்து பார்க்கவில்லை...

ஸ்ரீயின் அழைப்பை எடுத்த கலாவிடம் நலம் விசாரித்தவர் பின் அந்த மகிழ்ச்சிகரமான விஷயத்தைச் சொல்ல துவங்கினார்.....

"கலா, நாம் இரண்டு பேரும் பாட்டி ஆகப் போறோம் டீ..."

ஸ்ரீயின் கூற்றில் மகிழ்ச்சியில் உறைந்துப் போன கலாவிற்குச் சந்தோஷ மிகுதியால் கண்களில் நீரே வந்துவிட...

"நிஜமாவாடி... ஸ்ரீ என்னால சந்தோஷத்தில பேசவே முடியலைடி... டாக்டரிடம் போனீங்களா?"

"ஆமாம் கலா.... காலையில் நானும் திவ்யாவும் ரெண்டு பேரும் தான் போனோம்... ஏழு வாரம்னு சொன்னாங்க கலா"

"ஸ்ரீ... நான் திவ்யாக்கிட்ட பேசனும்... கொஞ்சம் அவகிட்ட ஃபோன கொடுக்கிறியா?"

சரி என்றவர் திவ்யாவிடம் தொலை பேசியைக் கொடுக்க...

கருத்தரித்திருக்கும் தங்களின் செல்ல மகளை இந்த நிமிடமே பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மேலிட....

"திவ்யா, ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மா.... எனக்கு இப்போவே உன்ன பார்க்கனும்னு போல இருக்கு" என்றார் கலா...

ஸோஃபாவில் தன் எதிரே தன் அன்னைக்கு அருகில் ஒண்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் தன் மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் பூரிப்பையும், அங்கு இருந்த அனைவரும் அவளையே பார்த்திருப்பதை உணர்ந்து அவளின் முகத்தில் படர்ந்திருந்த வெட்கத்தையும் கண்ட அர்ஜூனிற்கு அவளைத் தனிமையில் தங்கள் அறையில் எப்பொழுதடா சந்திப்போம் என்று இருந்தது...

சிரிப்பும் கலகலப்புமாக நேரம் செல்ல மதியம் வேறு அவன் உணவு அருந்தாததில் பசியில் உயிர் போகத் தன் அன்னையைப் பார்த்தவன்...

"மாம்... டின்னர் ரெடியா... லஞ்ச் வேற சாப்பிடலை" என்று கூறி முடிக்கும் முன்னரே வெடுக்கென்று எழுந்த மருமகளைப் பார்த்த ஸ்ரீ...

"என்ன திவ்யா... ஏன் இப்படி வெடுக்குனு எழுந்திரிக்கிற... இனி இந்த மாதிரியெல்லாம் செய்யக் கூடாது" என்று பரிவுடன் கூற...

தன் கணவனின் களைத்த முகத்தைப் பார்த்தவள்...

"இல்லைத்த... அவங்க மதியம் சாப்பிடலைன்னு சொன்னாங்களே.... அது தான் சாப்பாடு எடுத்து வைக்கலாம்னு" என்று அவள் கூறியதில் தன் குழந்தைக்குத் தாயாகும் முன்னரே தனக்குத் தாயாக மாறியிருந்த தன் மனையாளை நினைத்து அர்ஜூனின் மனம் சிலிர்த்தது...

அவளுடன் எழுந்தவன் டைனிங் டேபிளை நோக்கி நடக்கத் துவங்க அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் அமர்ந்ததும் சமையல் அறையில் இருந்து உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து பரிமாறத் துவங்கவும், அவளின் கரம் பற்றியவன் பின் திரும்பி தங்களை ஒருவரும் கவனிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டு அவளின் பஞ்சு போன்ற கரத்தில் மென்மையாக முத்தமிட்டான்....

தன் கணவனின் முத்தத்தில் சிலிர்த்தவள் இனிமையாகப் புன் முறுவலிக்க,

"திவி... நீயும் உட்காரு... என் கூடச் சேர்ந்து சாப்பிடு" என்றான்....

"இல்ல.... நான் அத்தக்கூடச் சேர்ந்து சாப்பிடுறேன்... நீங்க சாப்பிடுங்க" என்றவுடன் விருட்டென்று எழப் போனவனின் கரத்தைப் பற்றி இழுத்தவள் அவனின் கோபம் புரிந்து...

"அப்பா, எதுக்கு இப்ப இவ்வளவு கோபம்?" என்றவாறே தானும் அவனுடன் அமர....

அவளுக்குத் தட்டை எடுத்து வைத்தவன் தானே முதல் முறை அவளுக்குப் பரிமாறினான்...

கணவன் மனைவி இருவரின் மனமும் நிறைந்திருந்தினாலோ என்னவோ உணவு சரியாக இறங்காமல் ஏனோதானோ என்று கொறித்துவிட்டு எழுந்தவன் அவளின் கரம் பற்றி...

"சீக்கிரம் ரூமிற்கு வா திவி" என்று விட்டு மாடி ஏறினான்...

சரி என்று தலை அசைத்தவள் மற்றவர்களும் உணவு அருந்தி முடிக்கவும் தங்களின் அறைக்குச் செல்ல, தன்னவளுடனான தனிமையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கட்டிலில் படுத்திருந்த அர்ஜூன் அவளைக் கண்டவுடன் எழுந்து அவளை நோக்கி வந்தவன் இறுக்கக் கட்டி அணைத்து...

"திவி... எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்றவனின் குரலில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

கணவனின் அணைப்பிற்குள் அடங்கி இருந்தவளுக்குக் காலையில் மருத்துவர் தான் தாயாகப் போவதை உறுதி செய்யும் பொழுது வந்த சந்தோஷத்தை விட, தான் தந்தையாகப் போவதை அறிந்ததில் இருந்து என்றுமே உணர்வுகளை வெளிக்கொணறாத தன் கணவன் இன்று தன்னையும் அறியாமல் வெளிப்படுத்திக் கொண்டிருந்த மகிழ்ச்சி அவளுக்குப் பேரின்பத்தைக் கொடுக்க, அவனின் நெஞ்சில் ஆழ புதைந்துக் கொண்டவளின் முகத்தைத் தன் ஒற்றை விரலால் தன்னை நோக்கி நிமிர்த்தியவன்....

"காலையிலேயே சொல்லியிருந்தா நானும் உங்க கூட டாக்டரிடம் வந்திருப்பேனே" என்று ஏக்கத்துடன் கூற.

"இல்லங்க, எனக்குச் சரியா தெரியலை.... அதான் டாக்டர் உறுதியா சொன்னவுடனே சொல்லலாம்ன்னு அத்தக் கிட்ட சொல்லிட்டேன்" என்றாள்.

அவளின் கரம் பற்றி அழைத்துச் சென்று கட்டிலில் அமர்ந்தவன் அவளைத் தன் கால்களுக்கு இடையில் நிற்க வைத்து அவளின் மாராப்பு சேலையை விலக்கி அவளின் வயிற்றில் முகம் புதைக்க, அவனின் ஸ்பரிசத்தில், செய்கையில் சிலிர்த்தவள் அவனின் தலை முடியை கோத,

மென்மையாகத் தன்னவளின் வயிற்றில் முத்தமிட்டவன் தன் முகத்தை எடுக்காமலே..

"திவி ஏழு வாரம்ன்னு சொன்னா ஒரு வேளை அன்று பார்ட்டி முடிந்ததும் உன் கிட்ட என்னோட லவ்வ சொன்னேனே, அன்று தான் இருக்குமா? என்றான் குரலில் கிரக்கத்தையும் களிப்பையும் கூட்டி....

கணவனின் கேள்வியில் நாணத்தின் உச்சிக்கே, கூச்சத்தின் எல்லைக்கே சென்றவள் இது என்ன கேள்வி என்பது போல் பதில் சொல்லாது இருக்க, கேள்வி கேட்டவன் பதில் வராமல் போகவே நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க, அவளுக்குத் தான் அவனின் பார்வையில் வெட்கம் பிடுங்கி தின்றது...

அவன் தன்னை நிமிர்ந்து பார்க்கவும் கூச்சத்தில் அவனிடம் இருந்து அவள் விலக முற்பட அவளை இழுத்து தன் மேல் சரித்துக் கொண்டவனின் மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது...

அவனின் மேல் சாய்ந்திருந்தவளை மெல்ல தூக்கியவன் கட்டிலில் படுக்க வைத்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு...

"டுடேய் இஸ் தி மோஸ்ட் ஹாப்பியஸ்ட் டே இன் மை லைஃப் திவி [Today is the most happiest day in my life Dhivi]" என்றான்...

எந்த ஒரு ஆண்மகனுக்கும் தான் தந்தையாகப் போவது ஆணாக ஒரு கர்வத்தைக் கொடுக்கும்...

சில சமயங்களில் தோன்றும் கர்வமும் பெருமை தான்...

மீண்டும் அவளின் வயிற்றில் கை வைத்தவன்...

"வேற என்ன சொன்னாங்க டாக்டர்?" என்றான்...

"கார்ல வரும் போது சொன்னேனே அதான்.... மத்த படி செக்கப் வருவது பத்தி சொன்னாங்க" என்றவளுக்கு அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரியவில்லை...

"இல்ல, வேற ஏதாவது சொன்னாங்களா?" என்று மீண்டும் கேட்க,

அவனை நிமிர்ந்து பார்த்து "ஙே" என்று திருதிருவென்று விழித்தவளைக் கண்டவன் புன் சிரிப்புடன்...

"ம்ம்ம், ஒரு சின்னப் பொண்ண என் கழுத்தில் கட்டி வச்சு படுத்திறாங்கப்பா" என்றவன்,

அவளின் வயிற்றில் வைத்த தன் கையை மேலும் முன்னேற்ற கணவனின் அத்து மீறலை உணர்ந்தவளின் உணர்வுகளும் தாபத்தில் சிலிர்த்து எழ ஏற்கனவே அவன் மேல் படுத்திருந்தவள் மேலும் அவனுடன் ஒன்றவும்...

"இதத் தாண்டி கேட்டேன்...." என்றான் தவிப்புடனும் இளம் மனைவியின் அருகாமை தந்த கிளர்ச்சியுடனும்...

இப்பொழுது கணவனின் கேள்வியின் அர்த்தம் புரிந்தவளாக கூச்சத்துடன் அவனைப் பார்த்தவாறே...

"தெரியலைங்க, டாக்டர் ஒன்னும் சொல்லலையே.. ஒரு வேளை அத்தைக் கிட்ட எதுவும் சொல்லியிருப்பாங்களோ" என்று குழந்தைத் தனமாகக் கேட்ட தன் மனையாளைக் கண்டு புன்னகைத்தவன் அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து...

"சரி, நீ தூங்கு" என்றான்.

அவனின் அணைப்பைத் தேடி அவனுடன் ஒண்டிக் கொண்டிருந்தவளுக்கு அவன் தூங்கச் சொல்லவும் ஏமாற்றமும் பரிதவிப்பும் போட்டிபோட சில நிமிடங்கள் வரை அமைதியாகப் படுத்திருந்தவள் மேலும் பொறுக்க முடியாமல் சன்னமான குரலில்...

"எனக்குத் தூக்கம் வரலையே" எனக் கூற...

மனைவியின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் புரிந்திருந்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தி...

"திவி... இது நமக்கு ஃபர்ஸ்ட் டைம் ப்ரெக்னன்ஸி... முதல்ல நான் எப்படி உன் கிட்ட நடந்துக்கனும், உன்னை எப்படிப் பார்த்துக்கனும் அப்படின்னு எனக்குத் தெரியனும்... அதுக்கு நான் நாளைக்கே டாக்டர் ஆன்டிக்கு கால் பண்ணி விசாரிச்சுக்கிறேன்... அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னவன்,

அவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டு கண்களை மூட,

தன் மேல் தன் கணவனுக்கு இருந்த கரிசனத்தில் விழிகளில் கண்ணீர் துளிகள் பனிக்க, அவன் முகத்தை நோக்கி எம்பியவள் முதன் முறை தானாகத் தன்னவனின் இதழ்களில் மென்மையாக முத்தம் பதித்தாள்....

தன்னவளின் முதல் இதழொற்றலில் சிலிர்த்தவனின் உடல் உணர்ச்சிகளின் பிரவாகத்தால் துடிக்க, தாபத்தைத் தட்டி எழுப்பும் தன் மனையாளின் எழில் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தியவன் மென் குரலில்....

"ப்ளீஸ்டி, என்ன ரொம்பச் சோதிக்காதடி" என்றான்...

அப்பொழுது தான் தான் செய்த செயலை உணர்ந்தவள் சட்டென முகம் சிவக்க அவனை விட்டு விலகப் போக, அவளைத் தன் பக்கம் இழுத்தவன் அவளை மூச்சு முட்ட இறுகக் கட்டி பிடித்துப் பின் விடுவிக்க மனமில்லாமல் விடுவித்துத் தூங்க சொன்னவன் அவளைத் தன் கையணைப்பிலேயே வைத்துக் கொண்டு சடுதியில் தூங்கிப் போனான்.

கணவனின் அரவணைப்பில் படுத்து இருந்தவளுக்கு ஏனோ சந்தோஷத்தில் உறக்கம் வரவில்லை...

அவனின் இடது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்துக் கொண்டு இன்னும் அவனை நெருங்கி படுத்தவளின் மனம் முழுக்க வரப் போகும் அந்தக் குட்டி பொக்கிஷத்தின் நினைவிலேயே இருந்தது... மனம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது...

தொடரும்..
 

JB

Administrator
Staff member




அத்தியாயம் - 28

திவ்யாவிடம் இருந்து வந்த சந்தோஷ செய்தியை கேட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களிற்கும் மேல் ஆக ஒரு அன்னையாகத் தன் மகளைக் காணாமல் கலாவிற்குக் கடலூரில் இருப்பு கொள்ளவில்லை...

தன் கணவனையும் வினோத்தையும் நச்சரித்து ஒரு வழியாக ஒரு விடியற்காலை கடலூரில் இருந்து சென்னை வரும் "சென்னை எக்ஸ்ப்ரெசில்" பயணிக்க, ரயிலில் ஏறியதில் இருந்து வழி எல்லாம் தங்கள் மகளின் வளைகாப்பு, பேறு காலம், என்ன குழந்தை என்பது பற்றியே கலா பேசி வரவும்,

பெற்றோர்களின் மனம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தாலும் வினோத்திற்கோ எண்ணங்கள் வேறு விதத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தது...

ஒரு பக்கம் தன் செல்லத் தங்கை தாயாகப் போவதை நினைத்து மகிழ்ந்திருந்தாலும் மறு பக்கம் தன்னவளை காணப் போகிறோம் என்று உள்ளம் சந்தோஷத்தில் நிறைந்து வழிந்திருந்தாலும், தான் செய்த தவறினால் கோபம்
கொண்டிருந்தவளின் மனதைப் பற்றி இன்னமும் முழுமையாக அறிய முடியாமல் குழம்பிப் போய் இருக்க,

ஒரு வேளை அவள் தன் காதலை நிராகரித்துவிட்டால் என்ற பயம் வேறு உள்ளத்தைக் கவ்வி இருக்க, வெவ்வேறு உணர்வுகளின் பிடியில் ஆழ்ந்திருந்தவனுக்குச் சென்னைக்கு வந்து சேர்ந்ததே தெரியவில்லை...

ரயில் நிலையத்தில் தங்களுக்காகக் காத்திருந்த ட்ரைவர் முருகனைக் கண்டவர்கள் ஓட்டமும் நடையுமாகக் காரை நோக்கி நடக்க, அவர்களின் அவசரம் புரிந்த முருகனும் விரைவாகக் காரை செலுத்த, வீட்டை அடைந்தவர்களை வரவேற்ற ஸ்ரீ திவ்யாவை அழைக்கவும், தன் அறையில் இருந்தவளுக்குத் தன் மாமியாரின் குரல் கேட்டதும் கீழே பார்த்தவளின் முகம் தன் அன்னையையும், தந்தையையும், தமையனையும் பார்த்ததில் மகிழ்ச்சியில் ஆழவும் ...

அவர்களைக் கண்ட சந்தோஷத்தில் மாடிப் படிகளில் வேகமாக இறங்கி வந்து கொண்டிருந்தவளின் நடையைத் தடுத்து நிறுத்தியது அவள் கணவனின் குரல்....

"திவ்யா, உனக்கு எத்தனை தடவை சொல்றது... கேட்க மாட்டியா? எதுக்கு இப்ப இவ்வளவு வேகமா படி இறங்கற???" என்று கத்தினான் அர்ஜூன்...

அவனின் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்த திவ்யாவிற்கு அப்பொழுது தான் தெரிந்தது அவன் அவளைப் பின் தொடர்ந்து வந்தது...

"ஸாரிங்க" என்றவள் தன் அன்னையிடம் சென்று அவரைக் கட்டி அணைத்துக் கொள்ள, அவளின் நெற்றியில் முத்தமிட்டவர்...

"மாப்பிள்ளை சொல்றாரு இல்ல திவ்யா... இந்த மாதிரி சமயத்தில் இப்படி வேகமாக ஓடி வரவோ, மாடி படியில் இப்படி வேகமாக ஏறவோ இறங்க கூடாது" என்றவர்...

"டாக்டர் என்ன சொன்னாங்க திவ்யா?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்..

சிவ சுப்ரமணியத்திற்கோ தன் மகளே ஒரு குழந்தை, அவளுக்கு ஒரு குழந்தையா என்று இருக்க இவர்களின் பின்னரே வீட்டிற்குள் நுழைந்திருந்த வினோத்தின் கண்கள் தன் செல்ல தங்கையைக் கண்டதும் பூரிப்பில் வியந்தது...

அத்தனை அழகாக இருந்தாள் திவ்யா...

கர்ப்பம் தரித்திருந்ததை அறிந்த நாளில் இருந்து கணவனின் காதல் மழையின் வேகம் அதிகரித்தத்தினாலோ அல்லது அவனின் வாரிசை தான் சுமந்திருப்பதை நினைத்து உள்ளம் முழுவதும் பெருமை உணர்ச்சியினால் நிறைந்திருந்ததினாலேயோ, அவளின் முக அழகும் பல மடங்கு அதிகரித்து இருந்தது...

அவளை நெருங்கிய வினோத் அவளின் கரம் பற்றி, தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டு..

"திவ்யா.... அம்மா சொன்னதில் இருந்து உன்னைப் பார்க்கனும் போல் இருந்துச்சு... ரொம்பச் சந்தோஷமா இருக்கு திவ்யா" என்று மனதார சொல்ல, தன் அண்ணனைப் பார்த்தவளுக்குக் கணவனின் கொடிய வார்த்தைகளால் மனமுடைந்து தன்னந்தனியே தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற அன்று அவன் நெஞ்சில் புதைந்து கதறி அழுதது நினைவிற்கு வந்தது...

அன்றில் இருந்து இன்றைய நாள் வரை தன் வாழ்வில் எத்தனை எத்தனை மாற்றங்கள்...

ஒவ்வொரு நிமிடமும் காதலில், அரவணைப்பில் திக்குமுக்காடச் செய்யும் கணவன், பகல் நேரங்களில் தன் உள்ளம் மலரச் செய்யும் வகையில் தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதில் பிரமிக்க வைக்கிறான் என்றால் இரவு
நேரங்களில் தன் மனையாளிடம் தன்னை இழக்கும் வேளையில், உணர்ச்சிகளின் பிடியில் அவனின் ஒவ்வொரு அணுவும் சிக்கி இருந்தாலும், உணர்ச்சிகளின் பெருக்கால் கொந்தளிப்பால் தன்னவளே தடுமாறி சில சமயங்களில் தன் கணவனின் மென்மையற்ற தாம்பத்தியத்தை எதிர்பார்த்திருந்தாலும்,

அவளின் தற்போதைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, தங்களின் மகவை மனதில் நிறுத்தி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கூடலில் மென்மையிலும் மென்மையாக அவளைக் கையாள்வதும் என்று தன் மனைவியை அவன் மெய் சிலிர்க்க வைத்திருந்தான்...

தங்கையின் மகிழ்ச்சியில் தானும் பங்கு கொண்ட வினோத், அர்ஜூனிடம் வாழ்த்துக்களைத் தெரிவித்துச் சில நிமிடங்கள் மற்ற விஷயங்கள் பேசிவிட்டுச் சுற்றம் பார்க்க, அவன் கண்கள் தன்னவளை தேடித் தேடி சளைத்துப் போக...

"நாங்க எல்லாரும் வருவது தெரிஞ்சும் என்னைப் பார்க்கும் ஆர்வம் இருந்திருந்தால் நிச்சயம் அந்த ரௌடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி எனக்காகக் கல்லூரிக்கு மட்டம் அடிச்சு வீட்டில் இருந்திருப்பாள்... ஒரு வேளை அவளுக்கு என் மேல் இன்னும் கோபம் போகவில்லையோ?" என்று நினைத்தவன் கவலையுடன் அவள் வரும் நேரத்தை எதிர்ப்பார்த்திருந்தான்...

கலாவும் அவர் வீட்டினரும் வருவதாக ஸ்ரீ அனைவருக்கும் தெரியப் படுத்தியிருக்கத் தன்னவனைப் பார்க்க போகிறோம் என்ற ஆசை மஹாவிற்கு இருந்தாலும், அவளிடம் அவன் நடந்து கொண்ட விதம் இன்னும் மனதில் உள்ள கோபத்தை முற்றும் அழிக்கவில்லை...

கல்லூரியை மட்டம் போடுவது என்பது அவளுக்கு ஒன்றும் புதிதில்லை என்றாலும் தன்னைத் தேடி அவன் களைத்து போக வேண்டும், அப்பொழுது அவனுக்கு முன் தான் வந்து நிற்க வேண்டும்... அந்த நிமிடம் அவனின் கண்களில்
தெரியும் காதலை இரசிக்க வேண்டும் என்று எண்ணியவள் மாலை நேரம் வரை வீட்டிற்கு வரவில்லை.

ஸ்ரீயின் குடும்பத்தினரும், கலாவின் குடும்பத்தினரும் ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருக்க மஹாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துத் தவித்துச் சலித்துப் போயிருந்த வினோத்தின் முகம் இருளடைந்த அறையில் விளக்கைப் போட்டதும் சட்டென்று வெளிச்சம் பரவியது போல் பளீரென்று மாறியது அவனின் அழகான ராட்சஷியின் தரிசனத்தில்...

வந்தவள் அனைவரையும் வரவேற்றுவிட்டு அவர்களுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஆனால் தன் எதிரில் டன் டன்னாகக் காதலையும், அதே சமயத்தில் அவளின் புறக்கணிப்பால் வந்த அச்சத்தையும் தேக்கி வைத்து தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தன் மனம் கவர்ந்தவனைக் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தவளைப் பார்த்த வினோத்திற்கு மனம் குமுற துவங்கியது....

"ஒரு வேளை அவள் உண்மையில் தன்னை நேசிக்கவில்லையோ? நான் தான் தப்புக் கணக்கு போட்டுவிட்டு என் மனசில் நிறைவேறாத ஆசையை வீணாக வளர்த்துக் கொண்டேனோ? கண்ணெதிரே இருந்தும் தான் ஒருவன் அங்கு இருப்பது போல் அவள் கொஞ்சம் கூடக் காட்டிக் கொள்ளவில்லையே" என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு மனதில் சுருக்கென்று ஒரு வலி தோன்றியது போல் இருக்க....

அதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்கப் பிடிக்காமல் ஸோஃபாவில் இருந்து எழுந்தவன் அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று கதவை வேகமாகச் சாத்தினான்.

ஹாலில் அமர்ந்து இன்னமும் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவளுக்கு அவனின் கோபமும் ஆங்காரமும் கொஞ்சம் அச்சத்தையே கொடுத்திருந்தாலும், அவனை விட்டுப் பிடிக்க நினைத்தவளுக்கு அவனின் ஆத்திரத்திலும் ஒரு சின்ன
மகிழ்ச்சியே தெரிந்தது...

ஏனேனில் இத்தனை நாட்கள் அவன் தன்னை அழைக்காததையும், ஒரு குறுந்தகவல் கூட அனுப்பாததையும் கண்டு ஒரு வேளை அவன் தன் செயலால் தன்னை வெறுத்துவிட்டானோ என்று பயந்திருந்தவளுக்கு இன்று அவனின் செய்கை நிம்மதியையும், பெருமையையுமே கொடுத்தது...

அங்கு அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்த வினோத்திற்கோ மனம் ஒரு நிலையில் இல்லை...

என்ன தான் மஹா தன்னைத் திரும்பியும் பார்க்கவில்லை என்றாலும், அவள் தன்னை ஒதுக்குவது போல் தோன்றினாலும் மனம் என்னவோ அவளையே சுற்றி வர எதற்கும் ஊருக்கு திரும்பி செல்வதற்குள் அவளிடம் மீண்டும் ஒரு முறை
மன்னிப்புக் கேட்டுவிட்டு அவள் மனதில் தன்னைப் பற்றி இருக்கும் அபிப்ராயங்களைத் தெரிந்துக் கொண்டுவிடுவது நல்லது என்று நினைத்திருந்த வினோத் இரவு உணவு அருந்த அனைவருடன் சேர்ந்து தானும் டைனிங் டேபிளில் அமர,

மஹாவை எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்குத் திக்கென்று இருந்தது தன் அருகில் இருந்த சேரில் அர்ஜூன் அமரவும்...

அவனிடம் குடிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் ஒட்டு மொத்தமாக அவனை விட்டுத் தூரம் செல்ல உள்ளுக்குள் உதறலெடுக்கத் துவங்க, ஒயிலாக நடந்து வந்து தன் தந்தைக்கு அருகில் அமர்ந்த மஹாவை அவள் வந்தது தெரிந்தும் அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான் இல்லை...

அனைவரும் அமர்ந்ததும் பரிமாறத் துவங்கிய திவ்யாவின் கை பிடித்துத் தன் அருகே அமரச் செய்த அர்ஜூன்,

"அதான் பரிமாற இத்தனை பேர் இருக்காங்கல்ல.. நீ உட்கார்ந்து சாப்பிடு" என்றான்...

"இல்லைங்க நானும்...." என்று இழுத்த படியே அவள் எழ, திவ்யாவின் அருகில் நின்றிருந்த கலா,

"நீ உட்காரு திவ்யா... நான் பரிமாறுகிறேன்" என்றார்...

அவளை நிமிர்ந்து பார்த்த அர்ஜூன் "இப்போ உட்காறியா?" என்று கேட்க, வேறு வழியில்லாமல் அவனுக்கு அருகில் அமர்ந்தவள் உண்ண துவங்கவும், தங்களின் மகள் மேல் மருமகன் கொண்டிருக்கும் அக்கறையைப் பார்த்த கலாவிற்கும்
சிவசுப்ரமணியத்திற்கும் மனம் நிம்மதியில் திளைத்தது...

அங்கு அமர்ந்திருந்த அனைவருடைய முகத்திலும் மகிழ்ச்சியின் களைத் தாண்டவமாடியது.... ஒருவனைத் தவிர...

தன் தந்தைக்கு அருகில் அமர்ந்து உணவு அருந்த ஆரம்பித்தவள் சகஜமாகக் கலாவிடமும் திவ்யாவிடமும் பேசிக் கொண்டே சாப்பிட...

"இருடி.... இருக்குடி உனக்கு..... பார்த்தும் பார்க்காதது மாதிரியா நடந்துக்கிற..." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் ஒரு வழியாக ஏதோ பெயருக்கு உணவு அருந்திவிட்டு ஹாலில் சென்று டிவி பார்க்க ஆரம்பித்தான்...

அவனின் பார்வை, கோபத்தில் மாறிய முகம், சரியாக உண்ணாமல் வேகமாக எழுந்த விதம் என்று அவனின் ஒவ்வொரு செயற்களையும் கவனித்து வந்தவளுக்குத் தான் அவனை ரொம்பச் சீண்டுகிறோமோ என்று இருந்தது...

அண்ணனுக்குத் தப்பாத தங்கை...

ஒரு வழியாக அனைவரும் உணவு அருந்திவிட்டு அவரவர் அறைகளுக்குச் செல்ல, தன் மனையாளை எதிர்பார்த்திருந்த அர்ஜூனிற்கு அவள் இப்பொழுதைக்கு வருவது போல் தெரியாததால் தன் அறையை விட்டு வெளியே வந்தவன் "திவ்யா" என்று சிறிது சத்தமாகவே அழைக்க,

தன் அன்னையுடன் அமர்ந்து அவர்களின் அறையில் பேசிக் கொண்டிருந்தவளுக்குத் தன் கணவன் தன்னைச் சத்தமாக அழைத்தது சிறிதே அதிர்ச்சியைக் கொடுக்கவும் விருட்டென்று எழுந்தவள் திரும்பி தன் அன்னையின் முகத்தைப் பார்க்கவும்...

"நீ போம்மா, நாளைக்குப் பேசிக்கலாம்" என்று அவர் அமைதிப் படுத்தவும் வேகமாக அடிகள் எடுத்து வைத்து மாடி ஏற..

அவளின் வேகத்தைத் தங்களின் அறை வாயிலில் இருந்து பார்த்துச் சலித்துக் கொண்டவன்..

"ம்ப்ச்... மெதுவா..." என்றபடியே தங்கள் அறைக்குள் நுழைந்தான்...

திவ்யாவிடம் அவளின் கர்ப்பத்தைப் பற்றியும், பரிசோதனைகளைப் பற்றியும் கலா பேசிக் கொண்டிருந்ததால் கணவனிடம் சொல்லாமல் மணி இரவு பதினொன்றைத் தாண்டியும் தங்களின் அறைக்குத் திரும்பாமல் கீழேயே தங்கிவிட்டதால்,

தன்னை எதிர்பார்த்து ஏமாந்துப் போகவும் தான் அவனுக்கு இந்தக் கோபம் என்பதை அறிந்தவள் "கொஞ்ச நேரம் எங்க அம்மா அப்பாக்கிட்ட பேசிட்டு இருந்தா அதுக்குள்ள இவ்வளவு கோபம்" என்று சன்னமான குரலில் வாய்விட்டு
கூறியவள் தங்களின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்த...

கட்டிலில் படுத்து தன்னையே பார்த்திருந்த கணவனின் முகத்தில் ஏனோ ஒரு பரிதவிப்பு தெரிவது போல் இருந்தது...

"என்ன? உங்க அம்மா அப்பாவைப் பார்த்ததும் ஹஸ்பண்ட் ஞாபகமே இல்லை போலருக்கு??" என்றவனின் கோபத்தைக் கண்டு மனம் கனிந்தவள் சிறு புன்னகையுடன் அவன் அருகில் அமர்ந்து....

"இல்லங்க.... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... சும்மா தான் அம்மாக்கிட்ட பேசிட்டு இருந்தேன்" எனவும்,

வழக்கமாகக் காதலும் தாபமும் கோபமும் மட்டுமே நிறைந்திருக்கும் தன் கணவனின் பார்வையில் இன்று விவரிக்க முடியாத ஏக்கமும் எதிர்பார்ப்பும் வழிய,

அவன் தலை முடியைக் கோதியவாறே...

"என்னங்க? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?" என்றவளைக் கூர்ந்து பார்த்தவன்...

"திவி... ஐ நோ உனக்கு உங்க அம்மாவைப் பார்த்ததும் சந்தோஷமா இருக்கும்... அவங்கக்கிட்ட உன் ப்ரெக்னென்ஸி பத்தி பேசனும்னு ஆசையா இருக்கும்... ஐ அண்டர்ஸ்டாண்ட்.... நீ அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண வேணாம்னு
சொல்லலை..." என்றவன் சில நொடிகள் தயங்கி பின் தொடர்ந்தான்...

"நான் இங்க இல்லாத போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர்களுடன் ஸ்பெண்ட் பண்ணு... ஐ ஹாவ் நோ ப்ராப்ளம்.. [I have no problem]... நான் இங்க வீட்டில் இருக்கும் போது நீ என் கூடவே, என் பக்கத்திலேயே இருக்கனும்னு
தோனுதுடி... ப்ளீஸ்..." என்று தன்னவளின் விழிகளுக்குள் ஊடுருவும் தன் ஏக்கம் வழியும் கண்களைக் கலக்க விட,

தன் கணவனின் தோள் சாய்ந்தவள், அவனின் அக்கறையில், "தனக்கு மட்டுமே அவள்" என்ற உரிமையில் கர்வம் கொண்டவளாய் மனம் சிலிர்த்தவள் அவனை நெருங்கிப் படுக்க, அவளின் மார்பின் மென்மையில் முகம் புதைத்தவனின் எதிர்ப்பார்ப்பையும் தேடலையும் ஒரு மனைவியாகப் புரிந்துக் கொண்டவளுக்குத் தன்னை இறுக்கி பிடித்திருக்கும் அவனின் வலுவான கரங்களின் இறுக்கத்தில் அவனின் மனதில் ஓடும் எண்ணங்களும் புரிபட்டது...

அவனின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தியவள்...

"இனி நான் எப்ப்ப்ப்ப்ப்ப்வும் உங்களோட தான் இருப்பேன்" என்று அழுத்தமாகக் கூறிய மனைவியின் வெள்ளை மனதில், "எப்பவும்" என்று சொல்லின் போது உதடுகளைக் குவித்து அழுத்தி சொன்ன விதத்தில் மதி மயங்கி புன்னகைத்தவன், மீண்டும் அவளின் மார்பில் ஆழ முகம் புதைக்க, கணவனின் ஸ்பரிசத்தில் என்றும் போல் மனம் லயித்தவள் கண் மூடி மோகனத்தில் ஆழ மார்புக் குழியில் துவங்கிய முத்தங்கள் அத்து மீறவும், தாங்க இயலாதவளாய் தன் கணவனை ஆரத்தழுவிக்கொண்டவளுக்குப் புரிந்தது...

தன் கணவனின் பரிதவிப்பும், கோபமும், தேடுதலும் என்னவள் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற உரிமையின் வெளிப்பாடே என்று....

ஆனால் அவள் வாயிலிருந்து உதிர்த்த "எப்பவும்" என்ற வார்த்தையில் இருந்த அழுத்தமும் உண்மையும் நிஜத்திலும் நிலைத்து நிற்குமா? என்ற கேள்விக்குக் காலம் என்ன விடை வைத்துக் காத்திருக்கிறது என்பதனைக் காலம் தான்
சொல்ல வேண்டும்..

அங்குக் கீழே தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் படுத்திருந்த வினோத்திற்கோ தன்னவளின் ஒதுக்கமும், பாராமுகமும் அவளுக்குத் தன் மேல் இருந்த கோபத்தை மட்டும் விளக்கவில்லை... தன் மீது அவளுக்கு இருக்கும்
அக்கறையின்மையையும் தானே தெளிவுப்படுத்தியது... அவளின் இந்த ஒதுக்கல், புறக்கணிப்பு தன் மீது இல்லாத காதலையும், தனக்குள் இருக்கும் தவிப்பு அவளுக்குள் துளி அளவு கூட இல்லை என்பதனைத் தானே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது என்ற சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தவனுக்குத் தூக்கம் எட்டாத தூரத்திற்குப் போய் இருந்தது...

"உண்மையில் என்னை மறந்துவிட்டாளா? அல்லது மறந்தது போல் நடிக்கிறாளா? நான் இன்று வருகிறேன் என்று தெரிந்து இருந்தும் காலேஜில் இருந்து மிகவும் லேட்டாகத் தான் வந்தாள்... சரி அதற்குக் கூட வேறு காரணங்கள்
இருந்திருக்கலாம்... ஆனால் அவள் வீட்டிற்கு வரும் பொழுது அனைவருடன் சேர்ந்து நானும் தானே ஹாலில் அமர்ந்திருந்தேன்... என் அம்மாவை அப்பாவைப் பார்த்து வாயெல்லாம் பல்லாகச் சிரித்தவள் மறந்துக் கூட என்னைத் திரும்பி
பார்க்கவில்லையே?? அதன் பின்னரும் நான் ஒருவன் அங்கு இருப்பது போலவே காட்டிக்கொள்ளவும் இல்லையே.... சரி அட் லீஸ்ட் சாப்பிடும் பொழுதாவது என்னைப் பார்த்திருக்கலாமே.. ஒரு பார்வைக் கூடப் பார்க்காத அளவிற்கு என்
மேல் கோபமா?..."

குழம்பித் தவித்தவனின் மனது இதற்கு விடைத் தெரியாமல் இந்த வீட்டில் இருந்து கிளம்பப் போவதில்லை என்று முடிவெடுக்க,

மறு நாள் காலையில் வீட்டில் உள்ள அனைவரும் தோட்டத்தில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு மஹாவைத் தேட, அழகிய பூந்தோட்டத்திற்கு நடுவில் ரோஜாப்பூச் செடிகளுக்கு இடையில் அன்று அலர்ந்த மலராக அமர்ந்து
சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளை கண்டவனின் இதயத்தில் அவனையும் அறியாமல் மீண்டும் காதல் துள்ளி துளிர்த்தெழுந்தது...

வினோத் தங்களுக்கு இடையில் வந்து அமரவும், சட்டென்று எழுந்த மஹா வீட்டை நோக்கி நடக்கவும் ஒருவரும் தங்களைக் கவனியாததை உறுதிப் படுத்திக் கொண்டவன் அவளைப் பின் தொடர, அவள் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அருகில் செல்லும் பொழுது வெடுக்கென்று அவளைத் தங்களின் அறைக்குள் இழுத்தவன், இழுத்த வேகத்தில் கதவையும் சாத்தினான்....

அவன் தன்னை இழுத்த வேகத்தையும், படீரென்று கதவை சாத்திய வேகத்தையும் கண்டவள் தன்னையும் அறியாமல் பயத்தில் "ஐயோ!" என்று அலற....

அவளின் அலறலில் திடுக்கிட்டவன் அவள் வாயை இறுகப் பொத்தியவாறு அவளை ஆழ்ந்துப் பார்க்க, பயத்தில் கண்களை அகல விரித்துத் தன்னைப் பார்த்திருப்பவளைக் கண்டவனுக்குத் தான் எடுத்திருந்த உறுதி சிறிது சிறிதாகக்
குலைவது போல் இருந்தது...

ஏனெனில் அவளுக்குத் தன் மேல் காதல் இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே அவளிடம் பேச நினைத்தவனிற்கு அச்சத்தில் உறைந்து, விழிகளில் திகிலை தேக்கி வைத்து, தன் வாயை மூடியிருந்த அவனின் கரத்தில் மேல் தன்
இரண்டு பஞ்சு கைகளையும் வைத்துக் கொண்டு தன்னைப் பார்த்திருக்கும் தன் அழகிய ராட்சசியைக் கண்டவனின் உணர்ச்சிகள் மீண்டும் கட்டவிழ்க்க, தன் மனதினை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறியவனின் நிலையைக் கண்டவள்
"ம்ம்ம் ம்ம்ம்" என்று பேச முயற்சிக்க,

தன்னிலை இழுத்துப் பிடித்துத் தன்னை வெகுவாகக் கட்டுப் படுத்திக் கொண்டவன் கிசுகிசுப்பான குரலில்...

"ஏண்டி இப்படிக் கத்துற? நான் உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்... ஒரே ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசிட்டு போயிடுறேன்" என்றான் அவளின் வாயை மூடியிருந்த தன் கரத்தை மெல்ல எடுத்தவாறே....

அவன் கரத்தை தன் முகத்தில் இருந்து எடுத்ததைக் கூட உணராமல் பேயறைந்ததைப் போல் இருந்தவள் சில விநாடிகளில் தன்னிலைக்கு வந்து மெல்லிய குரலில்...

"வீட்டுல எல்லாரும் இருக்கிறாங்க... யார் கண்ணிலையாவது பட்டா என்ன நடக்கும்னு தெரியும்ல" என்றாள் இன்னும் அச்சம் விலகா முகத்துடன்....

"தெரியும்... ஆனால் உன் மனசில் என்ன இருக்குன்னு தெரியாம நான் அன்னைக்கு நடந்துக்கிட்டதுக்கு மன்னிப்பு கேட்கனும் தான் உன்னைத் தேடி வந்தேன்... வேற எதுக்கும் இல்லை" என்றான் தன் மனதில் அடங்காமல் தவித்துக் கொண்டிருக்கும் தன்னவளின் மேல் உள்ள காதலை மறைத்து...

ஏனெனில் நேற்றில் இருந்தே அவளின் செய்கைகள் அவளுக்குத் தன் மேல் காதல் இல்லை என்ற சந்தேகத்தைக் கிளறிவிட்டு இருந்தது.... இருந்தும் மனம் கேட்காமல் அவளிடம் நேரில் பேசித் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று
நினைத்ததினால் தான் அவன் அவளைப் பின் தொடர்ந்து வந்து தன் அறைக்குள் இழுத்தது...

ஆனால் தான் இழுத்ததும், அவள் சத்தம் போட்டுக் கத்தியது மட்டும் இல்லாமல் இதோ விழிகளில் நீர் கோர்த்து அஞ்சியவாறே தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்பவளைக் கண்டதும் அவனது சந்தேகம் நிவர்த்தியானது....

என் மேல் காதல் கொண்டு இருந்தால் நிச்சயம் இப்படிக் கத்தியிருக்கமாட்டாள்... இப்படிச் சத்தமாகக் கத்தினால் யார் காதிலேயாவது விழுந்து பெரிய பிரச்சனையாகி விடும் என்று கூடத் தெரியாதவளா என்ன? என்று மனதில் தோன்ற, இதற்கு மேலும் தன் காதலை வளர்க்க விரும்பாதவன்...

"மன்னிச்சுட்டேன்னு சொல்லு மஹா... ப்ளீஸ்... அதுக்கப்புறம் உன்னைய நான் தொந்தரவு பண்ண மாட்டேன்..." என்றவன் அவள் பதில் எதுவும் பேசாததைக் கண்டு மேலும் கலங்கியவன்...

"சரி... இனி நான் உன் லைஃபில் க்ராஸ் பண்ண மாட்டேன்" என்றவன் கதவைத் திறக்க எத்தனிக்க... அவனின் கலங்கிய முகமும், கலக்கத்தைச் சுமந்திருந்த விழிகளும் பறைசாற்றியது தனது பாராமுகத்தால் அவனது இதயத்தில்
ஏற்பட்டிருந்த காயத்தின் வடுவை....

அவன் வலியை தன் வலி போல் உணர்ந்தவள் மெல்லிய குரலில் தலை கவிழ்ந்தவாறே தன்னவனின் இதயமும் மனமும் சிலிர்க்கும் வகையில்...

"பிடிக்காமத் தான் நீங்க நடந்துக்கிட்டதைத் திவ்யா அண்ணிக் கிட்ட கூடச் சொல்லாம இருந்தேனா?" என்றாள் அவனின் அழகிய ரௌடி....

தன்னவளின் வார்த்தைகளில் குளிர்ந்து சிலிர்த்தவன் அவளைத் திரும்பிப் பார்க்க, அவனின் பார்வையில் செவ்வானமாக முகம் சிவந்தவள் மறுபடியும் தலை கவிழ, அவளின் வெட்கத்தில் காதலனாகக் கர்வம் கொண்டவன் அவளை நெருங்கவும், மொட்டை மாடியில் அவன் தன்னிடம் நடந்து கொண்டது கண்முன் தோன்றியதில் சட்டென்று கதவை நோக்கி நகர முனைந்தவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை...

அவ்வளவு இறுக்கிப் பிடித்திருந்தான் அந்தக் கள்வன்...

வீட்டில் இத்தனை பேர் இருக்கும் போது இதென்ன இப்படி நடந்துக்கிறாங்க என்று கதிகலங்கியவள் மெதுவாக...

"யாராவது வந்திரப் போறாங்க, ப்ளீஸ் விடுங்க" என்று கூற,

அவளை உறுத்து பார்த்தவன் தன் பிடியை மேலும் இறுக்கி,

"இவ்வளவு ஆசை மனதில் இருக்கும் போது அது என்ன என்னைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி போறதும்... இப்படி ஒரு ஜீவன் இருக்கிற மாதிரியே காட்டிக்காததும்" எனவும்...

தலைக் கவிழ்ந்தவாறே இளம் புன்னகையைச் சிந்தியவளைக் கண்டவனுக்கு நேற்றில் இருந்து என்னை எப்படித் தவிக்கவிட்டாள்... நாமும் கொஞ்ச நேரம் விளையாடிப் பார்க்கலாமே என்று குறும்பாகத் தோன்ற அவளைச் சீண்டுவதற்காக...

"சரி, ஒரே ஒரு டவுட் எனக்கு... அத மட்டும் க்ளியர் பண்ண ஹெல் பண்ணு... அப்புறம் உன்னை விட்டுடறேன்" என்றான்....

என்ன என்பது போல் மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்க்க, அவளின் நாணப் பார்வையில் தன் குறும்புப் பார்வையைக் கலக்கவிட்டவன்...

"அது ஒன்னும் இல்லை... என்னோட காலேஜ் ஜூனியர் ஒருத்தி என்னை ரொம்ப லவ் பண்றதா தொல்லை பண்றா... ஆனால் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை... ஏன்னா, அன்னைக்கு உன்னைக் கிஸ் பண்ணினதுக்கு அப்புறம் நீ எதுவும் பேசல... ஊருக்கு கிளம்பும் போதும் கூட ரொம்ப எதிர்ப்பார்த்திருந்தேன், நீ ஏதாவது சொல்லுவன்னு... பட் நீ வெளியே வரவே இல்லை... அஃப்கோர்ஸ் இப்ப உன மனசில என்ன இருக்குன்னு சொல்லிட்ட... பட் நீ இன்னும் அத ப்ரூவ் பண்ணலையே... அதனால் இப்ப உனக்கு ஓகே சொல்றதா இல்ல அவளுக்கு ஓகே சொல்றதான்னு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு?" எனவும்...

அது வரை தன்னவனின் நெருக்கத்தில், அவனின் ஸ்பரிசத்தில் உடல் கூச உணர்ச்சிவசப்பட்டு நடுங்கி கொண்டிருந்தவள், அவனின் பேச்சில் சிலிர்த்து எழுந்தாள்...

"டேய், என்னடா நினைச்சிக்கிட்டிருக்க உன் மனசில... நீ பாட்டுக்கு வருவ... யாருக்கும் தெரியாம கிஸ் பண்ணுவ... அப்புறம் உன்னைய எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லுவ... பின்னால யாரோ ஜூனியர் லவ் பண்றான்னு சொல்லுவ... கேட்கறதுக்கு நான் என்ன கேனச்சியா" என்று தன்னையும் அறியாமல் பொங்கி எழ...

அவளின் இந்த அதிரடித்தனத்தைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காதவன்...

"டீ ரௌடி.. ஏண்டி நீயே இப்படிக் கத்தி காட்டிக் கொடுத்துருவ போல இருக்கு... சத்தம் போடாதடி" என்றான் முகத்தில் அத்தனை பூரிப்புடன் அவளின் பொறாமையை இரசித்தவாறே...

தன்னையும் அறியாமல் சத்தமாகக் கத்தியதை அப்பொழுது தான் உணர்ந்தவளுக்கு எங்கே தாங்கள் இருவரும் தனி அறையில் இருப்பதை யாராவது பார்த்துவிடப் போகிறார்களோ என்று பயம் கவ்வ,

தன் கண்களை அகல விரித்து அவனைப் பார்க்கவும், உதட்டில் நெளிந்த புன்னகையைத் தனக்குள் அடக்கியவனுக்கு அவள் கோபத்தில் தன்னை டேய் என்று அழைத்தது சட்டென்று தோன்ற...

"அதுக்குன்னு இப்படிச் சட்டுன்னு மரியாதை இல்லாம டேய்னு சொல்லிட்டியேடி" என்றான் முகத்தில் போலியான சோகத்தைத் தாங்கி...

கோபத்தில் தான் அப்படி அழைத்ததை அது வரையிலும் உணராதவள் அவன் கூறியதும் நாக்கை கடித்து வெட்கப்பட, அவளின் வெட்கத்தில் கவிழ்ந்தவன் மேலும் அவளை நெருங்க, அன்றைப் போல் இன்றும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவளை இழுத்து சுவற்றில் சாய்த்தவன் தன்னவளின் மேல் படரவும்,

மூச்சுக் காற்று முகத்தில் படும் அளவிற்குத் தன் மீது சாய்ந்திருந்தவனைக் கண்டவளின் இதயம் தாளம் தப்ப துவங்கியது...

"ஐயோ! என்ன பண்றீங்க... எல்லோரும் இங்க தான் இருக்காங்க... தெரியும் இல்லை?" என்று கலக்கத்துடன் கூறியவளைக் கண்டவனின் மன உறுதி கொஞ்சம் கொஞ்சமாக உடைய அவளை அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்தவனுக்கு அர்ஜூனின் கோபம், அவனின் அந்தஸ்து, தன்னுடைய ஏழ்மை நிலைமை, தங்கள் இருவரின் எதார்த்தம் அனைத்தும் மறந்து போனது...

அவனின் பார்வையின் வீரியத்தைத் தாங்காதவளுக்கு ஏற்கனவே அவனின் வலிமையான இதழ் அணைப்பை உணர்ந்திருந்தவளுக்கு அச்சமும் நாணமும் கிளர்ந்தெழுந்ததில் கண்கள் தானாக இறுக்கி மூட, தன்னவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை ஆழ்ந்து படித்தவன் அவள் மெல்லிடையை இறுக்கிய வண்ணம் காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்த மனதை அடக்கத் தெரியாமல் அவள் இதழ் நோக்கி குனிந்தவன் அன்றை விட இன்று அதிகமான முரட்டுத்தனத்தோடு
தன்னவளின் இதழ்களைத் தன் இதழ்களுக்குள் புதைத்துக் கொண்டான்...

அன்று தன் மனதில் குடிக் கொண்டிருந்தவளின் உள்ளத்தில் தன் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்பதை அறியாமல் முதல் முறை புடவையில் அவளைக் கண்டதும் அவளில் எழிலில் மயங்கி தாபத்தாலும் விரகத்தாலும் கொடுத்த இதழொற்றல் அது...

ஆனால் இன்றோ தன்னவளின் இதயத்தில் தான் காதலனாக ஆழ குடிக்கொண்டிருப்பதை அறிந்து தன் காதலியாக, தனக்கு மட்டுமே உரியவளாக எண்ணிய உரிமையின் பெருமையில் ஏற்பட்ட பிரமிப்பில் காதல் வழிய கொடுக்கும் இதழொற்றல் இது....

தன்னவனின் ஆழ்ந்த முத்தத்தில் உணர்வுகள் சிலிர்த்து பூவுடல் நடுங்க அவனின் வலுவான பரந்த உடலிற்குள் பாந்தமாக அடங்கியிருந்தவளைக் கண்டவன் மேலும் முன்னேறத் துவங்க அவளின் பூ இதழ்களை இறுக்க மூடியிருந்த தன்
முரட்டு இதழ்களைக் கழுத்திற்கு இறக்கியவன் தன்னைக் கட்டுப்படுத்தும் வழித் தெரியாமல் மேலும் இறங்க....

பெண்ணவளின் பெண்மை விழித்துக் கொண்டது...

"ப்ளீஸ்ங்க, இது சரியில்லை, கல்யாணத்திற்கு முன்னாடி இது ரொம்பத் தப்புங்க... விடுங்க" என்று தவிப்புடன் கூறியவளின் வார்த்தைகள் காதலிலும் மோகத்திலும் மூழ்கியிருந்தவனின் காதுகளில் எட்டினால் தானே...

"ஐயோ! விடுங்க" என்று கூறியவள் தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ள சுய நினைவிற்கு வந்தவன்...

தனக்கு முழுவதுமாக உரிமையாகாதவளை இந்தளவிற்கு நெருங்கியதே தவறு என்பது புத்தியில் உரைக்க, சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளின் நெற்றியில் சிலும்பி படர்ந்திருந்த தலை முடியை ஒதுக்கியவன் கள்ளச்
சிரிப்புடன் குறும்பாக....

"இதுக்கே இப்படின்னா, இன்னும் என்னென்னவோ இருக்கே... அதுவும் தினமும்" என்றான்...

"அதெல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்... முதல்ல என்னைய விடுங்க... யாராவது பார்த்துடப் போறாங்க" என்றவள் நாணத்துடன் அவனைத் தள்ளி விட்டு கதவை திறக்க முயல,

சிரித்துக் கொண்டே அவளுக்கு வழி விட்டவன் அறைக்கு வெளியில் தலைக் கவிழ்ந்தவாறே ஓடியவளின் பின்னயே தொடர்ந்து தானும் சிரித்துக் கொண்டே போக, அவர்கள் இருவரின் கெட்ட நேரமோ என்னவோ தன் அறையில் இருந்து
வெளியே வந்த அர்ஜூனின் கண்களில் பட்டனர் இருவரும்.


தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top